பயம் தொலைத்த பயணம்

டிசம்பர் 28, 2019

“இவருக்கும் எனக்கும் பத்து வயசு வித்தியாசம். ஓல்டா இருக்கிறார் எண்டு யோசிக்காதை. கொப்பாக்கும் எனக்கும் பதினைஞ்சு வயசு வித்தியாசம். என்னைவிட இப்ப அவர்தான் இளமையாயிருக்கிறார். அதோடை வயசுகூடின ஆம்பிளையள் மனிசிமாரைப் பிள்ளைமாதிரிக் கவனமாய்ப் பாப்பினம். போருக்கை பட்ட, ஏன் இப்பகூட நாங்க படுகிற கஷ்டங்களைப் பத்தி நான் உனக்கு விளங்கப்படுத்தத் தேவையில்லை. எந்தநேரம் என்ன நடக்குமோ எண்ட பயத்தோடை, இங்கையிருந்து நீ சீரழியத் தேவையில்லை. உனக்கொரு நல்ல வாழ்க்கை வந்திருக்கு. உன்ரை பிள்ளையள் கனடாவிலை, ஒரு நல்ல நாட்டிலை துவேஷமில்லாமல் வளருங்கள், நீ நிம்மதியாய் நித்திரை கொள்ளலாம், யோசிச்சுப்பார், எண்டெல்லாம் அம்மா என்னை ஒரே நச்சரித்துக் கொண்டிருந்தா. அப்பாவும் மூஞ்சையைத் தூக்கிவைச்சுக்கொண்டு திரிஞ்சார். சரி, முப்பத்திரண்டு வயசாச்சு, இனி எங்கை மாப்பிளை தேடுறதெண்டு முடிவிலை நானும் ஓமெண்டன். ஆனா, ஆனா … இப்ப இப்பிடியாப் போச்சு.”

“அப்ப கலியாணம் கட்டுறவரைக்கும் உங்களுக்கு அவரைத் தெரியாதா?”

“இல்லை, இங்கை கனடாவிலிருந்த மாமாதான் எல்லாத்தையும் ஒழுங்குபடுத்தினவர். எங்கடை கலியாணம் இந்தியாவிலைதான் நடந்தது. மூண்டு கிழமை லீவிலை வந்து இவர் என்னோடை இந்தியாவிலை நிண்டவர். அதுக்குள்ளை எனக்கு பிள்ளையும் தங்கியிட்டுது. பிறகு பிள்ளைக்கு ஒண்டரை வயசானப் பிறகுதான் நான் இங்கை வந்தனான். வந்தகையோடை அடுத்த பிள்ளையும் தரிச்சிட்டுது. இப்ப திரும்பவும் நான் கர்ப்பமாயிருக்கிறன்”

“ஓ, வாழ்த்துக்கள், எத்தனை கிழமை இப்ப?”

“மூண்டு மாசமாகுது”

“வெள்ளிக்கிழமை இரவு என்ன நடந்ததெண்டு சொல்லேலுமா?”

“வழமையிலை இவர் காலைமை போனால் இரவுதான் வருவார். வந்தவுடனை ரீவியை உச்சத்திலை போட்டிட்டு எதையோ புகைப்பார். பிறகு படுத்திடுவார். போனகிழமை கிறிஸ்மஸ் லீவிலை நிண்டவர். வீட்டிலை நிண்டால் பகல் இரவெண்டில்லாமல் எந்த நேரமும் அந்தப் புகையோடைதான். அது ஒரு புழுத்த மணம். பிள்ளையும் சின்னப் பிள்ளை, நானும் பிள்ளைத்தாச்சி. என்னப்பா பத்துகிறியள், மூச்சு முட்டுது, எங்களுக்குக் கூடாதெல்லோ எண்டு நான் எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டார். வாயை மூடிக்கொண்டிரு எண்டு கத்துவார். அண்டைக்குக் காலைமை எழும்பின நேரத்திலையிருந்து எனக்கு ஒரே சத்தி. சரியான களைப்பாயும் இருந்துது. அந்த மணம் வேறை ஒரே அரியண்டமாயிருந்தது. பிள்ளையும் சினந்துகொண்டிருந்தான். சோபாவிலை படுத்திருந்த நான் எழும்பி ரீவியை நிப்பாட்டிப் போட்டு, விடிய வெள்ளனவே உதோடை இருக்கிறியள், என்னாலை ஏலாமல் இருக்கு, பிள்ளையைக் கொஞ்சம் பாருங்களன் எண்டு சத்தம் போட்டன். அவ்வளவுதான் எழும்பின வீச்சுக்கு அவர் என்னை உதைஞ்சார். நான் அப்படியே விழுந்துபோனன். தலை சுவரிலை அடிபட்டு இரத்தம் கசிஞ்சுது. பிள்ளை பெரிசாய்க் கத்தி அழத்தொடங்கினான். ஆனால், எதைப் பற்றியும் அக்கறையில்லாமல் அதுக்குப் பிறகும் கெட்ட வார்த்தைகளாலை அவர் என்னைத் திட்டிக்கொண்டிருந்தார். நான் கோவத்திலை சத்தம்போட்டுப் பெரிசாய்க் குழறி அழுதன். அடுத்த வீட்டு அன்ரிதான் பொலிசுக்குப் போன் பண்ணியிருக்கிறா. பொலிஸ் வந்து இவரைக் கொண்டுபோட்டுது. பிறகு நான் பக்கத்து வீட்டு அன்ரியோடை ஆஸ்பத்திரிக்கும் போனனான். நாலு தையல் போட்டிருக்கினம்.”

“உங்கடை கணவர் கஞ்சா புகைக்கிறவரா?”

“அது என்னெண்டு எனக்குத் தெரியாது… இப்ப என்ன செய்யிறதெண்டும் எனக்குத் தெரியேல்லை. இங்கை நான் தனிய, எனக்கொருத்தரும் இல்லை. பிள்ளையோடை இந்த நாட்டிலை நான் தனியச் சமாளிக்கமாட்டான். எனக்கு அவர் வேணும். அவருக்கு என்ன நடக்குது எண்டதைப் பத்தி அறிஞ்சு சொல்லுவியளோ.”

“ம்ம், பாதிக்கப்பட்டவைக்கு உதவுகிறதுக்கெண்டு ஒரு அமைப்பு இருக்கு. கோர்ட்டில என்ன நடந்ததெண்டு அவை உங்களுக்குக் கோல் பண்ணிச் சொல்லுவினம். அனேகமாக இண்டைக்கு அவை உங்களுக்குக் கோல் பண்ணக்கூடும். குடும்ப வன்முறை தொடர்பான வழக்குகளிலை முதல் முறையா சம்பந்தப்படுற ஆக்கள் தங்கடை பிழையை ஒத்துக்கொண்டால், பொதுவில சில நிபந்தனைகளோடை விடுவிக்கப்படுறதுதான் வழக்கம். யாராவது பிணையிலை எடுக்க வேண்டியிருக்கும். பிறகு நீங்க அனுமதி கொடுத்தால் அவர் இங்கை வந்து உங்களோடை இருக்கலாம்.”

“அதுக்கு நான் என்ன செய்யவேணும்?”

“அது உங்கடை கணவர் எடுக்கிற முடிவைப் பொறுத்திருக்கு. கோல் பண்ணேக்கே அவை விளக்கமாகச் சொல்லுவினம். நீங்க எப்ப கனடாவுக்கு வந்தனீங்கள்? உங்கடை சொந்தக்காரர் எண்டு ஒருத்தரும் இங்கை இல்லையா?”

“வந்து நாலு மாசமாச்சு, போன ஆவணியிலைதான் வந்தனான். மாமா ஒராள் இருக்கிறார். ஆனா அவரிட்டை உதவியை எதிர்பாக்கேலாது.”

“கலியாணம் கட்டின நாளிலை இருந்தே உங்களுக்குள்ளை பிரச்சினை இருந்ததோ, அல்லது இங்கை வந்தாப் போலைதான் தொடங்கினதோ?”

“கட்டின புதுசிலை பரவாயில்லாமல்தான் இருந்தவர். இல்லை, இல்லை, ஒரு நாள் இந்தியாவிலை வைச்சும் எனக்கும் அடிச்சிருக்கிறார். இரண்டு பேரும் அண்ணா சாலையிலை நடந்து போய்க்கொண்டிருக்கேக்கை நான் சொன்னது ஏதோ பிடிக்கேல்லை எண்டு ரோட்டிலை வைச்சு அடிச்சிருக்கிறார்.”

“இங்கை வந்தாப் பிறகு, இந்த சம்பவத்துக்கு முதல் எப்பவாவது இப்படி உங்களைத் தாக்கியிருக்கிறாரா?

“சும்மா சின்னச் சின்னச் சண்டைகள் வரும். ஒரு நாள் அவருக்குத் தெரியாமல் பக்கத்து வீட்டு அன்ரிக்கு 50 டொலர் குடுத்திட்டன் எண்டு என்ரை போனைத் தூக்கி எனக்கு வீசியிருக்கிறார். அதுதான் முதல் நடந்த ஒரு பெரிய சண்டை எண்டு சொல்லலாம். அது என்ரை பிழையாலை வந்தது. அவர்தானே உழைக்கிறார், அவற்ரை காசை அவருக்குத் தெரியாமல் வேறை ஆட்களுக்கு நான் குடுக்கிறது பிழைதானே. ஆள் சரியான முன்கோவக்காரன். மற்றும்படி பிரச்சினையில்லை. எங்களை நல்ல வடிவாய்ப் பாக்கிறார். தேவையான எல்லாச் சாமானும் வாங்கித் தாறார். வீட்டிலை நிண்டால் மொப் பண்ணுவார். சிலவேளை சமைப்பார். ஆனால், பிள்ளையோடை இருக்கிறதுக்குத்தான் அவருக்குப் பொறுமையில்லை. ஆம்பிளைதானே, தெரியாதே!”

“பிள்ளைக்கு எப்பவாவது அடிச்சிருக்கிறாரா?”

“பிள்ளைக்கு ஒரு நாளும் அடிச்சதில்லை. நான் செய்யிறது பிடிக்கேல்லை எண்டால் அதைச் சொல்லலாம்தானே, அதுக்கேன் அடிக்கிறியள் எண்டு நான் அவரைல் கேட்டிருக்கிறன். நான்தான் தனக்குக் அப்பிடிக் கோவம் வரச்செய்யிறன் எண்டு அவர் சொல்லுவார். என்ன செய்யிறது, நான்தான் பொறுத்துப் போகோணும் எண்டு அம்மாவும் சொல்லுறா. முன்கோவம்தான் அவற்ரை பிரச்சினை. குடும்பத்தைக் குலைக்காமல் இருக்க வேணுமெண்டு அவர் கோவிச்சாலும் நான் வழமையிலை சமாளிச்சுக்கொண்டுதான் போறனான். ஸ்பொன்சர் வரும்வரைக்கும் நான் இந்தியாவிலை இருக்கேக்கையும், இப்பிடித்தான். கதையோடை கதையாக அவருக்குப் பிடிக்காத விஷயம் ஒண்டை நான் சொல்லிப்போட்டன் எண்டால் போச்சு. பெரிசாய்க் கத்துவார். உடனை போனையும் வைச்சிடுவார். பிறகு நான்தான் திரும்பத்திரும்பக் கோல்பண்ணிச் சொறி சொல்லி அவரைக் கதைக்கப் பண்ணுறது. தன்ரை சொல்லுக் கேட்காட்டில் கனடாவுக்குக் கூப்பிட மாட்டன் எண்டும் சொல்லியிருக்கிறார். ஆனால் அடிக்கேக்கைதான் பிரச்சினை பெரிசாகுது!”

“ஒவ்வொருத்தரும் தங்கடை நடத்தைக்கு தாங்கதான் பொறுப்பெடுக்கோணும். உங்கடை கணவருக்குக் கோவம் வருதெண்டு அவர் உங்களைக் காயப்படுத்தேலாது. அவற்ர கோவத்தை எப்பிடிக் கட்டுப்படுத்தலாமெண்டு அவர்தான் கற்றுக்கொள்ளோணும். உங்கடை மகனும் இதுகளைப் பாத்துக்கொண்டிருக்கிறது நல்லமில்லை. சின்னப் பிள்ளையள் மனசாலை சரியாய் பாதிக்கப்படுவினம். போனிலை கதைக்கேக்கே ஏற்கனவே உங்களுக்கு நான் விளங்கப்படுத்தினமாதிரி, சிறுவர் பராமரிப்புச் சபையிலை நான் வேலைசெய்யிறன். பிள்ளையள் சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கினம் எண்டதை உறுதிப்படுத்துகிறதுதான் எங்கடை வேலை. நான் அவரோடும் கதைக்கோணும்.

X X X


ஆகஸ்ட் 25, 2021

“கொரோனா பிரச்சினைகளாலை அடிக்கடி நேர வரமுடியேல்லை. போனிலை கதைக்கேக்கை பிரச்சினை இல்லாமல் போகுதெண்டு சொன்னியள். முரண்பாடுகள் வரேக்கை நீங்கள் என்ன செய்யிறனியள், உங்கடை கணவர் அதுகளை எப்பிடிக் கையாளுறார்?”

“அவர் பெரிசா மாறுறமாதிரித் தெரியேல்லை. நீங்க அடிக்கடி கதைக்கிறதும் அவருக்குப் பிடிக்கேல்லை. வீட்டிலை இருக்கேக்கை அப்பிடி இப்பிடித்தான். இப்ப திரும்பவும் அவர் வேலைக்குப் போகத் தொடங்கியிருக்கிறதாலை கொஞ்சம் மூச்சு விடக்கூடியதாய் இருக்கு.”

“நான் போன் எடுத்தால் அவர் எடுக்கிறார் இல்லை. என்ன செய்யலாமெண்டு நீங்க நினைக்கிறியள்?

“எனக்குத் தெரியேல்லை. ஆராவது அவரோடை கதைச்சு விளங்கப்படுத்துறது நல்லம். அவர் செய்யிறதெல்லாம் எங்களையுமெல்லே பாதிக்குது. அவருக்கு எப்ப கோவம் வருமோ எண்டு பயப்படுறதிலேயே இப்ப சீவியம் போகுது. எங்கட நாட்டுக்கும் இனித் திரும்பிப் போகேலாது, வாழாவெட்டியா நான் இருந்தால் தங்கைச்சிக்குக் கலியாணம் நடக்கிறது பெரிய பிரச்சினையாயிருக்கும். அதோடை அம்மா, அப்பா எனக்காகக் கனக்கச் செலவழிச்சிட்டினம். இருக்கிற காணியைக் ஈடுவைச்சுத்தான் என்ரை கலியாணத்துக்குச் செலவழிச்சது. அதாலை எனக்கு ஒரே குழப்பமாயிருக்கு.”

“ம்ம், உங்களுக்கு ஏதாவது ஆபத்தெண்டு நீங்க உணர்ந்தால் என்ன செய்யலாமெண்டதைப் பற்றி நாங்க கதைச்சது உங்களுக்கு ஞாபகமிருக்கா?

“ஓம், ஓம், 911ஐக் கூப்பிடுவன் அல்லது பக்கத்து வீட்டுக்கு ஓடிப்போவன்.”

“ம், குட். ஏர்லிஓன் சைல்ட் அண்ட் ஃபமிலி சென்ரருக்கு உங்கடை மகனைக் கூட்டிக்கொண்டு போறது நல்லதெண்டு விபரங்கள் தந்தனான், அங்கை போகத் தொடங்கீட்டீங்களா?”

“ஓம், இப்ப ரண்டு கிழமையாய்ப் போறனாங்கள். மகனுக்குப் பிடிச்சிருக்கு. அவர் இப்ப கொஞ்சம் இங்கிலிஸ் கதைப்பார், அதோடை அங்கை சொல்லிக்கொடுக்கிற பாட்டுகள் எல்லாம் பாடுவார். நானும் இப்பிடி ஒரு நேர்சரியிலைதான் இலங்கையிலை வேலை செய்தனான்.”

“ஓ, நல்ல விஷயம். தொடர்ந்து போங்கோ. பிள்ளைக்கு நல்லது. நெடுக வீட்டுக்கை இருக்காமல் உங்களுக்கும் அது ஒரு அவுட்டிங் ஆக இருக்கும். உங்கடை பிள்ளைன்ரை வயசில பிள்ளையள் இருக்கிற அம்மாமாரோடை சினேகிகத்தையும் உருவாக்கக் கூடியதாயிருக்கும்.”

“ஓம், எனக்கும் பிடிச்சிருக்கு.”

“வாற முறை நான் வரேக்கை உங்கடை கணவரையும் சந்திக்கோணும். எந்த நாளிலை எத்தனை மணிக்கு வந்தால் அவரையும் சேத்துச் சந்திக்கலாமெண்டு நீங்க கேட்டுச் சொல்லேலுமா?”

“நான் கேட்டுப்பாக்கிறன். ஆனால், இரவு 8, 9 மணிக்கு முதல் ஒரு நாளும் அவர் வீட்டை வாறதில்லை. காலைமையும் 7 மணிக்கெல்லாம் போயிடுவார்.”

“ம்ம். நீங்க சொல்லிப்பாருங்கோ, என்ரை போன் நம்பரைத் தாறன். அவரைக் கோல் பண்ணச் சொல்லி நான் சொன்னான் எண்டு சொல்லுங்கோ. நானும் திரும்பவும் கோல் பண்ணிப்பாக்கிறன்.”


X X X

மார்ச் 8, 2022

“அவசரமா வரச்சொல்லி மெசேஸ் வைச்சிருந்தீங்க. ஏதாவது பிரச்சினையா? நான் என்ன உதவிசெய்யலாம்?”

“ஒரு இளம் பொம்பிளையை அவவின்ர முன்னாள் கணவர் கத்தியாலை வெட்டிக் கொலைசெய்தவராம், இன்னொரு மனிசன் ஒரு ஆளைச் செற்றப் பண்ணிவைச்சு அவற்ரை மனிசியை அவையின்ரை வீட்டிலை வைச்சு சுடுவித்தவராம் எண்டெல்லாம் நேற்றைக்குக் கேள்விப்பட்டன். இதெல்லாத்தையும் கேட்டாப் பிறகு எனக்குச் சரியான பயமாயிருக்கு. இதெல்லாம் தமிழ் ஆக்கள் எண்டு என்னாலை நம்பவும் ஏலாமல் இருக்குது… இராத்தியும் உடலுறவுக்கு நான் சம்மதிக்கேல்லை எண்ட கோவத்திலை கண்டதையெல்லாம் எடுத்து எறிஞ்சார். இப்படியெல்லாம் அவர் எறியேக்கை பிள்ளையிலை பட்டால் என்ன செய்யிறது எண்டு துடிச்சுப்போறன். போதாதுக்குத் தூஷணத்தாலை பேசுறார். எனக்கு ஆரோடையோ தொடர்பிருக்கெண்டு திட்டுறார். இனி வீட்டுக்குப் பொலிஸ் வந்தால் என்னை உயிரோடை விடமாட்டாராம் எண்டெல்லாம் வெருட்டுறார். ராத்திரிப் படுக்கமுதல் கத்தியெல்லாத்தையும் எடுத்து ஒளிச்சு வைச்சிட்டுத்தான் படுத்தனான். நித்திரை கொள்ளுறதுக்கே பயமாயிருக்கு.”

“ம்ம், உங்கடை கணவர் உங்களை இப்பிடிப் பயப்படுத்துறதைப் பற்றி நீங்க பொலிசிலை சொல்லலாம். சொல்ல விருப்பமா”

“ஏதாவது ஒரு செல்ரறிலை கொண்டுபோய் என்னை விட்டுவிடுறியளோ?”

“அப்பிடிப் போறதெண்டு நீங்க உறுதியாய் முடிவெடுத்திட்டீங்களா?”

“ஓம், ஓம், நிறைய யோசிச்சுப் பாத்திட்டன். எனக்கு வேறை வழியில்லை.”

“அப்பிடியெண்டால் பொலிசுக்கு கோல்பண்ணி, இப்ப நீங்க எனக்குச் சொன்ன எல்லாத்தையும் அவைக்கும் சொல்லுங்கோ. அவை உங்களைக் கூட்டிக்கொண்டு போய் ஒரு செல்ரறிலை விடுவினம். பயப்படாதேயுங்கோ. பொலிஸ் வரும்வரைக்கும் உங்களோடை இங்கை நான் இருக்கிறன், நீங்க கோல்பண்ணுங்கோ.”

“என்ரை கணவருக்கு இது தெரியவருமோ?”

“இல்லை, நீங்க எங்கை இருக்கிறீங்க எண்டது அவருக்குத் தெரியவராது. நீங்க அங்கை பாதுகாப்பாக இருக்கலாம். அங்கை இருந்துகொண்டு ஏதாவது படிக்கலாம், அல்லது வேலைக்கு முயற்சிக்கலாம். உங்களுக்கெண்டு ஒரு இருப்பிடம் எடுக்கிறதுக்கும் அவை உதவிசெய்வினம். நீங்க பட்ட துன்பங்களைப் பற்றிச் சொல்லி ஆறுகிறதுக்கும் கவுன்சலிங்கும் கிடைக்கும்.”

“ம்ம், ஓகே”

“சரி, அழாதேயுங்கோ. உங்கடை பிள்ளையளும் நீங்களும் பாதுகாப்பாக இருக்கிறதுக்காக இப்படி ஒரு முடிவை நீங்க துணிஞ்சு எடுத்ததைப் பற்றி நீங்க பெருமைப்பட வேணும். இது லேசான விஷயமில்லை. இனி எல்லாம் நல்லா நடக்குமெண்டு நம்புங்கோ.”

மார்ச் 8, செவ்வாய்க்கிழமை, 2022 எனத் திகதியிட்டு விட்டு முறைப்பாட்டைப் பதிய ஆரம்பித்தார் அந்தப் பொலிஸ் அதிகாரி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.