- சொல்லாத கதைகள்
- தனியாய் ஒரு போராட்டம்
- பிரபஞ்சமே சோதனைக்கூடமாய்: சாந்தூ குர்னானி
- முன்னணிப் பெண் விஞ்ஞானிகள்
- நாங்களும் படைத்தோம் வரலாறு
- ஊர்மிளா பவாரின் இரண்டு சிறுகதைகள்
- நடவுகால உரையாடல் – சக்குபாய்
- நெஞ்சில் துயில்கொள்ளும் ஒரு கவிதை – ஜமீலா நிஷாத்
- ஜமீலா நிஷாத்தின் தலைப்பிடாத சில கவிதைகள்
- இனக்கலவர நினைவுகள்: குமுறும் குரல்கள்
ஊர்மிளா பவார்

©

Sound & Picture Archives for Research on Women
ஒரு விதவைப் பெண் தன் வீட்டின் முன் முற்றத்திலுள்ள ஒரு சிறு மரத்தின் கீழ் உட்கார்ந்தபடி கூடைகள் முடைந்து கொண்டிருக்கிறாள். பள்ளிக்கு அடிக்கடி மட்டம் போடும் அவளது சிறிய பெண் தன் அம்மா சிரிக்க மாட்டாளா, பிற அம்மாக்களைப் போல நல்ல உடை உடுத்த மாட்டாளா என்று ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறாள். தன்னை அம்மா இவ்வளவு மோசமாக அடிக்கக்கூடாது, ஒரு பெரிய தண்டனை தருவதுபோல் குளிப்பாட்டக்கூடாது என்றெல்லாம் விரும்புகிறாள். அந்தச் சிறுமி தன் அம்மா முடையும் கூடைகளை வீடுகளுக்குக் கொண்டு கொடுப்பது, சில நேரம் எதிர் வரிசையிலிருக்கும் பிராமண வீட்டிற்கு அம்மாவிற்காக இரண்டு பைசாவுக்கு ஊறுகாய் வாங்கப் போவது போன்ற குற்றேவல்களும் செய்வாள். இறந்துபோன அப்பாவின் கனவைப் பூர்த்தி செய்வதற்காகப் பள்ளிப் படிப்பை முடித்த அந்தப் பெண் ஒரு வேலையையும் தேடிக் கொண்டாள். ஒரு நாள் அந்தப் பெண் தானும் தன்னைச் சுற்றியுள்ளவர்களும் பெறும் அனுபவங்களைக் கதைகளாக எழுதவேண்டும் என்று முடிவு செய்தாள். அந்தப் பெண்தான் தலித்களின் வாழ்வனுபவங்களை பிரதிபலிக்கும் கதைகளை எழுதும் மராத்தி எழுத்தாளரான ஊர்மிளா பவார். ஊர்மிளாவின் வாழ்க்கை விவரணையில் பல கதைகள் தெரிவதுபோல அவரது கதைகளில் அவரது வாழ்க்கையும் தெரிகிறது.
முன்னுரை
மராட்டி எழுத்தாளரான ஊர்மிளா பவாரின் கதைகள் தலித்தாக வாழும், வேலை செய்யும், ஜீவிக்கும் மக்களின் வாழ்வனுபவங்களைச் சொல்பவை. பெண்ணாகவும், தலித்தாகவும் வாழ்வதிலுள்ள வலிகள், வேதனைகள், துயரங்கள் இவற்றிலிருந்து வருபவை இவருடைய பல கதைகள். அவரது கதைகளின் ஒளிவுமறைவற்ற நேரடித்தன்மையும் அலங்காரங்கள் அற்ற மொழியும் மராட்டியில் அவரை விவாதத்திற்குரிய எழுத்தாளராக ஆக்கியுள்ளன. ஆனால் இக்கதைகள் ஏற்படுத்தியுள்ள விவாதங்களை மீறிய ஆளுமை உடையவர் ஊர்மிளா பவார்.
ஊர்மிளா பவார் சுயமுயற்சியில் வளர்ந்தவர். ரத்னகிரி மாவட்டத்திலுள்ள பனஸ்வலே கிராமத்தில் பிறந்த அவரது குடும்பம் பின்னர் ரத்னகிரிக்குக் குடிபெயர்ந்தது. ஆறு குழந்தைகளìல் கடைசிப் பெண் அவர். பள்ளி ஆசிரியராக இருந்த அவரது தந்தை, ஊர்மிளா மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதே இறந்துவிட்டார். படிப்பறிவில்லாத அவரது தாய்தான் கூடைகள் முடைந்து விற்றுக் குழந்தைகளை வளர்த்து படிக்க வைத்தார். 1964ல் பள்ளி இறுதி வகுப்பை முடித்த ஊர்மிளா பொதுப்பணித்துறையில் வேலைக்குச் சேர்ந்தார். 1966இல் அவர் திரு. ஹரிஷ் சந்திர பவாரைத் திருமணம் செய்து கொண்டார். இரு பெண்களின் தாய் இவர். 1976ல் மும்பை வந்தபின் பட்டப் படிப்பையும் முதுகலைப் படிப்பையும் முடித்தார்.
1998 ஜனவரி 18ல் ஸ்பாரோ ஏற்பாடு செய்திருந்த வாய்மொழி வரலாற்றுப் பயிலரங்கில் ரூயா, ஜெய்ஹிந்த், நேஷனல் கல்லூரி மாணவியரும், மாணவர்களும், எஸ். என். டி. ட்டி. கல்லூரி மகளிர் ஆய்வு பட்டப் படிப்பு மாணவியரும் பங்கேற்றனர். ஆசிரியர்களும் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட சிலரும் கலந்து கொண்டனர். சமூகசேவகியும் ஆராய்ச்சியாளருமான லதா பிரதிபா மதுகர், ஊர்மிளா பவாருடன் இந்தியில் உரையாடினார். இந்த உரையாடலிலிருந்தும் பின்னர் நடந்த கலந்துரையாடலிலிருந்தும் சில பகுதிகள் தொகுக்கப்பட்டு இந்த புத்தகம் உருவாகியுள்ளது. வாசிப்பிற்கு ஏற்றவகையில் இப்பகுதிகள் விஷயவாரியாக ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன. இந்தி மொழியின் சுவையும் தோரணையும் குன்றாமல் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. பேசும்போது பலநேரங்களில் ஒரு பார்வையோ சைகையோ வாக்கியங்களை முடிக்கப் போதுமானவையாக உள்ளன. நடக்கும் விவாதத்தின் பின்னணியில் இவை அர்த்தம் கொள்கின்றன. பேச்சு எழுத்து வடிவம் பெறும்போது சில வார்த்தைகளைச் சேர்ந்து வாக்கியங்களை முழுமை பெறவும் அர்த்தம் கொள்ளவும் செய்ய நேர்கிறது. அத்தகைய மாற்றங்களுடன் இப்பிரதி உருவாக்கப்பட்டுள்ளது.
1990இல் சம்போதி ப்ரகாஷன் பதிப்பகம் வெளியிட்ட `சௌதி பிந்த’ என்ற ஊர்மிளா பவாரின் சிறுகதைத் தொகுதியிலிருந்து இரண்டு கதைகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஜுலை 1998 சி. எஸ். லக்ஷ்மி
ஊர்மிளா பவார்
குழந்தைப் பருவமும் வளர்ப்பும்
ஊர்மிளா:
லதா என் கதையைச் சொல்லும்படி கேட்டாள். என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும். தலித் சமூகத்தைச் சேர்ந்தவள் நான். என் அம்மாவுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. கொங்கண் பகுதியைச் சேர்ந்த ஒரு கிராமம்தான் என் பூர்வீகம். என் அப்பா ஆறாம் வகுப்பு வரைதான் படித்திருந்தார். என் கிராமத்திலிருந்தவர்களோ அவர் பெரிய படிப்பு படித்திருப்பதாக எண்ணிக்கொண்டிருந்தார்கள். அந்தக் காலத்தில் ஆறாம் வகுப்பு படித்திருந்தாலே போதும், வேலை கிடைத்துவிடும். எனவே அவர் ஓர் ஆசிரியராக இருந்தார். அத்துடன் எங்கள் இனத்தில் நடைபெறும் திருமணங்களை முறைப்படி நடத்திவைப்பார். பிராமணர்கள் எங்கள் திருமணங்களை நடத்திவைக்க வரமாட்டார்கள். எனவே படித்தவர் யாராவதுதான் முன்னின்று அதைச் செய்ய வேண்டும். என் அப்பாவின் முன்னோர்களும் திருமணங்களை நடத்திவைத்தவர்களே. எனவே எங்கள் இனத்து மக்கள் தங்கள் திருமணங்களை எங்கள் வீட்டிலேயே நடத்தி வந்தனர். எங்களுக்கு அதில் கொஞ்சம் பணமும் அரிசியும் கிடைக்கும். எங்கள் பாடு இவ்வாறு கழிந்தது.
நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது என் தந்தை காலமானார். ஆசிரியராக இருந்ததால் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்குக் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்திருந்தார். ஒரு மனிதனின் முன்னேற்றத்துக்குக் கல்வி அவசியம். நாங்கள் ஒரு சிறு கிராமத்தில் வசித்து வந்தோம். ரத்னகிரி நகரில் அவர் குடிசை போன்ற சிறு வீடு ஒன்றைக் கட்டி எங்களை அங்கே கூட்டிக்கொண்டு சென்றார். இப்படித்தான் நாங்கள் பள்ளி செல்ல ஆரம்பித்தது. இதன் பின்னர்தான் அவர் காலமானார். அவர் என் அம்மாவிடம், “என்ன வேணுமானாலும் செய்து கொள், ஆனால் குழந்தைகள் படிப்பை மட்டும் நிறுத்தி விடாதே. அவர்கள் தொடர்ந்து படிக்கட்டும்” என்று கூறியிருந்தார். எனவே நாங்கள் படித்தே தீரவேண்டும் என்பது எங்கள் அம்மாவின் மனத்தில் நன்கு பதிந்திருந்தது. அவளுக்குத் தெரிந்தது இந்த ஒரு விஷயம் மட்டுமே. நாங்கள் படிக்காவிட்டால் எங்களை அடிப்பாள். எங்களை எப்படி அடிப்பது என்று அவளுக்கு நன்றாகத் தெரியும். அப்பா இறந்ததும் எங்கள் ஆறு பேரையும் கவனிக்கும் பொறுப்பு அவளுக்கு ஏற்பட்டது. என் சகோதரர்களில் ஒருவன் இறந்துவிட்டான். எனவே நாங்கள் ஐந்து பேர் உயர்நிலைப் பள்ளியில் படித்தோம்.
நான் பள்ளிக்கூடம் போய் வந்தேன். எங்களுக்கு வயிறாரச் சாப்பிட உணவு கிடையாது. அதனால் அம்மா கூடைகள் பின்னி விற்பாள். நாள் முழுவதும் பின்னிக்கொண்டே இருப்பாள். அதுதான் அவள் வேலை. ஓர் அண்ணன் முதலில் பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணினான். ஆனால் டைபாய்டு வந்து இறந்துவிட்டான். அவன் மரணமும் அப்பாவின் மரணமும் அம்மாவை சதா வருத்தி அழ வைத்துக்கொண்டிருந்தன. நினைத்து நினைத்து அழுதபடியே கூடை பின்னிக்கொண்டிருப்பாள். நாங்கள் படிக்கவேண்டும் என்பது மட்டும்தான் அவள் மனதிலிருந்தது. வேறெதுவுமே இல்லை. எங்கள் உணவின் தரத்தை பற்றிச் சொல்லவே வேண்டாம். உடைகள் அதற்கு மேல். நான்கு நாள் ஐந்துநாள் நான் குளிக்காமலேயே இருப்பேன். விளையாட்டெல்லாம் தெருப்புழுதியில்தான். தலை முழுவதும் பேன் ஓடும். கொதிக்கும் நீரில் கொஞ்சம் சோடா காரத்தைக் கலந்து தலையில் தேய்த்து, அந்தக் கொதிக்கும் வெந்நீரில் எங்களைக் குளிப்பாட்டுவாள் அம்மா. பிறகு சீப்பினால் அழுத்தமாகச் சீவிப் பேன் எடுப்பாள். அவள் சுடச்சுட வென்னீரைத் தலையில் ஊற்றும் போதும், தலையை வாரும் போதும் மின்னல் வீச்சுபோல் கண் முன்னால் பூச்சி பறக்கும். போதாக்குறைக்கு அம்மாவிடமிருந்து அடிகளும் கிடைக்கும். எங்கள் வாழ்க்கை இப்படித்தான் ஓடிக்கொண்டிருந்தது.
எங்களைச் சுற்றிலும் மராட்டர்கள், பிராமணர்கள் மற்றும் வேறு சாதி ஆட்கள் வசித்து வந்தனர். அம்மாவிடம் கூடைகள் செய்துதரும்படி கேட்பார்கள். நான்தான் கடைக்குட்டி என்பதால் கூடைகளைக் கொண்டுபோய் ஒவ்வொருவர் வீட்டிலும் கொடுத்துவிட்டு வரும்படி என்னிடம் சொல்லுவாள். நான் அங்கே போனால் அவர்கள் என்னை வீட்டுக்கு வெளியே நிற்கச் சொல்லுவார்கள். தண்ணீரைக் கூடைமேல் தெளிப்பார்கள். பைசாவை உயரே தூக்கி என் கைமேல் போடுவார்கள். எனக்கு மனக்கஷ்டமாக இருக்கும். போக மாட்டேன் என்று அம்மாவிடம் சொல்வேன். நான் என் கதையில் எழுதியிருப்பதுபோல் படிப்புக்கு மட்டம் போட்டேன். வகுப்புக்குப் போகாததால் வாத்தியாரும் என்னை அடிப்பார். அவரும் சாதி வித்தியாசம் எல்லாம் பார்ப்பார். என்னைக் கடைசி வரிசையில் உட்கார வைப்பார்.
எனக்கு அக்கா ஒருத்தி இருந்தாள். அப்பா இருக்கும்போதே அவளுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. அவள் வீட்டு நிலைமை எப்படி தெரியுமா? ஒரே தட்டில் உணவை அளந்து போட்டுச் சாப்பிடும் அளவுக்கு ஏழ்மை அவர்கள் வீட்டில். மூன்று நான்கு சகோதரர்கள், வட்டமாக உட்கார்ந்து சாப்பிடுவார்கள். `எத்தனை வாய் சாப்பிட்டாய் ? எத்தனை உருண்டை தின்னாய்? திருட்டுத்தனமாய் எடுத்துக்கொண்டாய்’ என்று சண்டையிட்டுக்கொள்வார்கள். யாராவது ஒருவன் கொஞ்சம் அதிகமாகச் சாப்பிட்டு விட்டால் ஒரே ரகளைதான். `அளந்து சாப்பிடுகிறவர்கள்’ என்று அவர்களைப் பற்றிச் சொல்வார்கள். யார் அந்த வீட்டுக்குப் பெண் கொடுப்பார்கள்? ஆனால் என் அத்தான் அந்த வீட்டைச் சேர்ந்தவர். ஏழாவது வகுப்பு பாஸ் செய்திருப்பதால் அவர் ஓர் ஆசிரியராகிவிடுவார்; நம் பெண்ணைக் கொடுக்கலாம் என்று என் அப்பா நினைத்தார். அத்தான் நல்ல கறுப்பு-கறுப்பன்தான். இப்படி என் அக்காவுக்குக் கல்யாணம் ஆயிற்று. அவர்களைப் பற்றி நிறையச் சொல்லுவாள். “சப்பாத்தியைத் திருடி பரணில் ஒளித்து வைத்து விட்டு அடுத்தவருடைய சப்பாத்தியை எடுத்துத் தின்றுவிடுவார்கள்” என்பாள். சாப்பிடுவதற்குக்கூட சண்டைதான். எங்களிடையே ஒரு சொல் வழக்கு உண்டு. எங்காவது சண்டைச் சத்தம் கேட்டு, என்ன சண்டை என்று விசாரித்தால், “அந்த மஹர்கள்தான், வேறு யார்? சாப்பாடு நடக்கிறது” என்றுதான் பதில் வரும். இந்த வழக்கு வந்ததன் காரணம் நிஜமாகவே சாப்பாட்டுக்காகப் பெரிய சண்டையே நடக்கும் என்பதால்தான்.
அக்காவிடம் ஏதாவது வேலை பார்க்கும்படி அப்பா சொன்னார். நாலு அல்லது ஐந்தாவது வகுப்போடு அவள் படிப்பை நிறுத்திவிட்டாள். இங்கும் அங்கும் வேலைக்காக அலைந்தாள். கடைசியில் ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் ஆயா வேலை கிடைத்தது. அந்த ஆஸ்பத்திரி மேடம் கூட சாதி வித்தியாசம் பார்ப்பாள். எனவே அக்கா அந்த வேலை பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். “என்னைத் தொடக்கூட விட மாட்டார்கள். நான் சமைத்த உணவைச் சாப்பிட மாட்டார்கள்” என்பாள். “அதையெல்லாம் கண்டுகொள்ளக் கூடாது. அவர்களுக்குப் பைத்தியம். அவர்கள் சொல்வதை ஏன் கேட்கிறாய்?’ என்பார் அப்பா. நாள் செல்லச்செல்ல எப்படியோ சமாளித்து அந்த வேலையிலேயே இருந்துகொண்டாள். அவள் கணவருக்கும் ஆசிரியர் வேலை கிடைத்தது.
அப்பா செய்த நல்ல காரியம் எங்களை டவுனுக்குக் கொண்டுவந்ததுதான். அது எவ்வளவோ நல்லதாயிற்று. நடைமுறைகள், பழக்கவழக்கங்கள், சாப்பிடுவது எப்படி, துணிமணிகளைச் சுத்தமாக வைப்பது எப்படி என்பதையெல்லாம் எங்கள் வகுப்பு பிராமண, மாராட்டா பிள்ளைகளிடம் இருந்து தெரிந்துகொண்டோம். அவர்களைப்போல் நடக்கத்தொடங்கினோம். அவர்களுடைய உணவு போல எங்கள் வீட்டில் இல்லைதான். சமையல் முறையும் எங்களுக்குத் தெரியாது. கொங்கணிலிருந்து வந்ததால் நாங்கள் ரொட்டியும் மீனும் சாப்பிட்டோம். மீனும் ரொம்ப மோசமான மீன். ஹல்வா, போம்ஃப்ரெட் போன்ற மீன்களைப் பற்றி எங்களுக்கு ஒன்றுமே தெரியாது. அவர்கள் வீடுகளுக்குச் சென்று தீபாவளிக்கு லட்டுவும் மற்ற பலகாரங்களும் செய்யக் கற்றுக் கொண்டோம். வீட்டில் அவற்றைச் செய்ய விரும்பினால் எவ்வளவு எண்ணெய் வேண்டும், எவ்வளவு மாவு வேண்டும் என்று அம்மா திட்டுவாள். எனவே என்னைச் செய்யவிடமாட்டாள். துக்கம் வேறு மனத்தில். அழுவாள்.
வீட்டில் ஆண்கள் இல்லாவிட்டால் நல்ல உணவு சமைக்கக்கூடாது, மட்டமான உணவைத்தான் சாப்பிட வேண்டும். இதுதான் வழக்கம். இப்போதுகூட சில குடும்பங்களில், ஆண்கள் இல்லாத நேரங்களில் – பெண்கள் மட்டுமே இருக்கும் நாட்களில் – என்ன சமையல் என்பதைப் பற்றியே கவலைப்படமாட்டார்கள். ஆகவே அந்த வருடங்களில், நாங்கள் எதைச் சாப்பிடுவது என்பது பற்றிக் கவலைப்பட்டதேயில்லை. அம்ஸுல் புளி இருக்கும். அதைத் தண்ணீரில் ஊற வைத்துக் கறி செய்வோம். கடல் சிப்பிகளைச் சமைப்போம். சிப்பிகளின் உள்ளே நீர் இருக்கும். அதையும் கறியாக்குவோம். அப்புறம் கருவாடு கிடைக்கும். மட்டமான மீனைத்தான் கறி வைப்போம். அதைத் தின்றால் வயிற்றால் போகும். ஆனால் ஏழைப் பெண்கள் அதைத் தின்னத்தான் செய்தார்கள். . .
அம்மா என்னை அடித்துக் கொடுமைப்படுத்துவாள். ஆகவே அவளை என் விரோதியாகப் பாவித்தேன். அந்த நாட்களில் அவளை மிகவும் வெறுத்தேன். இப்போது, திரும்பிப் பார்க்கையில், அவளது நோக்கம் என்ன என்பது புரிகிறது. அவள் இல்லாவிட்டால் நாங்களும் இருந்திருக்க மாட்டோம் என்பது எங்களுக்குத் தெரிகிறது. எங்களுக்காக எவ்வளவு செய்திருக்கிறாள் என்று இப்போதுதான் தெரிகிறது. பாருங்கள், இப்போது கூட என் கண்ணீரை அடக்க முடியவில்லை.* அவளுடைய சிறப்பை, முக்கியத்துவத்தை இப்போதுதான் உணர்கிறேன். அப்போது அது தெரியவில்லை. வினோத் காம்ப்ளியைப் பற்றிச் சொல்ல மறந்து விட்டேனே. வினோத் காம்ப்ளியின் அப்பா ஒரு சிறந்த கபடி விளையாட்டுக்காரர். நன்றாக விளையாடுவார். ரனோத்தார் சங்கத்தில் ஓர் உறுப்பினர். ரத்னகிரியில் ஒரு போட்டி நடக்கும்; பரிசும் கொடுப்பார்கள். அவர் அதற்கு வருவார். பார்ப்பதற்குப் பெரிய கூட்டம் கூடும். நானும் ஓடிப் போய்ப் பார்ப்பேன். ஆட்களை இடித்துத் தள்ளிக்கொண்டு முன்வரிசையில் போய் நிற்பேன். அவர் எனக்கு தூரத்து உறவு. என்னிடம் மிகவும் பாசம் உள்ளவர். என்னைக் கையில் தூக்கி வைத்துக்கொள்வார். பலகாரம் ஏதாவது வைத்திருந்தால் எனக்குத் தருவார். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். எங்கள் ஸ்கூலிலிருந்து யாராவது அங்கு நின்றால் எனக்கு ரொம்பப் பெருமையாக இருக்கும். அப்போது எல்லாம் அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை. வீட்டிலேயே இருந்தாள். நான் அவளைக் கவனிக்கவே மாட்டேன். அவ்வளவு மோசம் நான். அம்மா சரியாகச் சாப்பிடமாட்டாள். ஒரு தடவை என்னிடம் மீன் வாங்கி வரச் சொன்னாள். “சந்தைக்குப் போய் மீன் வாங்கிக் கொண்டு வா” என்றாள். எனக்கு மிகச் சந்தோஷம். ஏனென்றால் போட்டி நடக்கும் இடம் அந்தப் பக்கத்தில்தான் இருந்தது. எங்கள் வீடு மார்க்கெட்டிலிருந்து வெகு தொலைவில் இருந்தது. எனவே எங்கள் வீட்டில் மீன் வாங்கச் சந்தைக்குப் போக யாரும் முன் வரமாட்டார்கள். நான் பணத்தைச் சட்டென்று எடுத்துக் கொண்டு “நான் வாங்கி வருகிறேன்” என்று சொல்லிவிட்டு, பையை எடுத்துச் சென்றேன். “விரல்களால் நன்றாக அழுத்தி பார்த்துவிட்டு வாங்கு” என்றாள் அம்மா. எனக்குப் போட்டியைப் பார்க்கவேண்டும். அதுதான் முக்கியம். ஆனால் போட்டியைப் பார்த்துக்கொண்டே நின்றால் மீன் எல்லாம் விற்றுப் போய்விடும். முதலில் மீனை வாங்கிவிட்டு அப்புறம் போட்டியைப் பார்க்கலாம் என்று நினைத்தேன். மீன்காரன் தந்த மீனை வாங்கிக்கொண்டு விளையாட்டு மைதானம் சென்று போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் ஜெயித்து விட்டார்கள். ஓரே ஆரவாரம். எனக்கு எல்லாமே மறந்துவிட்டது. அப்புறம்தான் வீடு, அம்மா, மீன் எல்லாம் நினைவுக்கு வந்தது. வீட்டுக்குத் திரும்பினேன். மீன் அழுகியிருந்தது. அம்மா சாப்பிடாமலே படுத்துக் கொண்டாள். என் மனம் கஷ்டப்பட்டது. அவள் என்னைத் திட்டினாள். துளிக்கூட கருணை இல்லாமல் அப்போது நான் நடந்து கொண்டேன். இப்போது நினைத்து பார்க்கும்போதுதான் அம்மா எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருப்பாள் என்று தெரிகிறது. என் மகன் இறந்து போனதைப் பற்றி உங்களிடம் சொன்னேன். முன்பு என் அம்மா அழும்போது எல்லாம் எனக்குத் தின்பதற்கு எதுவும் செய்து தராமல் அழுது கொண்டிருக்கிறாளே என்று எனக்குக் கோபம் கோபமாக வரும். இப்போதுதான் அவள் உணர்ச்சிகள் எப்படியிருந்திருக்கும் என்று உணர்ந்து கொள்கிறேன்.
லக்ஷ்மி: உங்கள் குழந்தைப் பருவத்தில் உங்களைச் சுற்றியிருந்த பெண்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்ல முடியுமா – அவர்கள் வாழ்க்கை பற்றி . . .?
ஊர்மிளா: அப்பா எங்களை டவுனுக்குக் கொண்டு வந்ததைச் சொன்னேன் அல்லவா? எங்கள் கிராமத்திலிருந்து யாராவது பெண்கள் எங்கள் வீட்டுக்கு வந்தால் எனக்கு வெறுப்பாக இருக்கும். அவர்கள் சேலையை முழங்காலுக்கு மேலாக உடுத்தியிருப்பார்கள். அவர்களைக் கண்டதும், யாரிடமும் இவர்கள் எங்களுக்குச் சொந்தம் என்று சொல்லிவிடக்கூடாது என்று தோன்றும். சிறுவயதில் நான் அப்படித்தான் நினைப்பேன். யாராவது `இவங்க யார்?’ என்று கேட்டு விட்டால், அது எங்கள் அத்தையாக இருந்தாலும், “எங்கள் கிராமத்தில் இருந்து யாரோ” என்றே பதில் சொல்வேன். அந்தக் காலத்தில் மக்கள் பின்தங்கியவர்கள். நல்ல சாப்பாடு கிடைக்காது. எனவே பெண்களின் ஆயுளும் குறைவுதான். ஐம்பது வயது ஆவதற்குள் எந்தப் பெண்ணும் கிழவியாகி விடுவாள். 35, 40 வயதுப் பெண்களைப் பாட்டி என்றே கூப்பிடலாம். `கிழட்டுப் பன்றி’ என்று அழைப்பார்கள். இப்போதெல்லாம் எழுபது எண்பது வயதான பெண்களையே பாட்டி என்று அழைக்க முடியாது. ஆன்டி என்றோ மௌஸி (சித்தி) என்றோதான் அழைக்கவேண்டும். மேல்நாடுகளில் ஆன்டி என்றுகூட கூப்பிடமுடியாது. கிழவியாகலாம் என்பதை நினைத்துக்கூட நாம் பார்ப்பதில்லை இப்போது. ஆனால் முன்பு அப்படித்தான் இருந்தது. இளமையிலேயே இறந்து போவார்கள். கர்ப்பமாக இருக்கும் போதும் அவர்கள் நிலைமை மோசம்தான். யாரும் அவளைக் கவனிக்க மாட்டார்கள். உதவி ஒன்றும் செய்ய மாட்டார்கள். இப்போதெல்லாம் பெண்கள் பிரசவித்தால், எத்தனை தையல் போட்டார்கள் என்றெல்லாம் கேட்கிறோம். அந்த நாட்களிலெல்லாம், ஒரு பெண்ணுக்கு பிரசவத்தின் போது உறுப்பு கிழிந்து போனால், ஒரு துணியை எடுத்து, நிறைய உப்பு நீரையும் கொஞ்சம் எண்ணெயையும் அதில் விட்டு, துணியை மடித்து அவளிடம் கொடுத்து வைத்துக் கொள்ளச் சொல்வார்கள். உப்புத் தண்ணீருக்குக் காயத்தைக் குணப்படுத்தும் சக்தி உண்டு. நல்ல சூடான ஒத்தடம் கொடுப்பார்கள். கரி அடுப்பில் சிவந்த தீக்கங்குகளைப் போட்டு அந்தப் புகையைச் சுவாசிக்கச் செய்வார்கள். முடிந்தவரை அந்தச் சூட்டை ஏற்றுக் கொண்டே தூங்க வேண்டும். இல்லாவிட்டால் உடம்பில் வாயு பிரியும் சத்தம் கேட்டுவிடும். அவளிடமிருந்து எந்த சத்தமும் வரக்கூடாதே? கொதிக்கக் கொதிக்க வெந்நீரை இடுப்பில் ஊற்றுவார்கள். ஒரு குழந்தை பெறுவதென்பது அத்தனை கஷ்டம். பிரசவத்தின்போது சிலசமயம் முதலில் குழந்தையின் கால் வெளியே வந்துவிடும். சில சமயம் கை வந்துவிடும். டாக்டர் யாரும் கிடையாது. பெண் இறந்தும் போய் விடலாம். பெண்களின் நிலைமை அவ்வளவு மோசம். நான் வளரும்போது என் உறவினர்களில் பெண்களின் ஆயுள் ரொம்பக் கம்மிதான். என் பெரியம்மா கூட அப்போது உயிருடன் இல்லை. நிறைய பேருக்கு டி.பி.யோ, ஆஸ்துமாவோ இருக்கும். காலரா, வைசூரி போன்றவையும் பரவி நிறையப் பெண்களைப் பலி வாங்கும். பெண் இறந்தால் என்ன – அடுத்த கல்யாணம்தான். என்னுடைய உறவினர்களில் நிறைய ஆண்கள் இரண்டு தடவை மூன்று தடவை கல்யாணம் செய்திருக்கிறார்கள். இந்தப் பெண்களுக்கு சுகாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது. மூக்கைச் சிந்திக்கொண்டு அதே கையால் சப்பாத்தியைக் கொடுப்பார்கள். என் தங்கையின் மாமியார் காலைச் சொறிந்துவிட்டு அந்தக் கையால் சப்பாத்தி பரிமாறுவார். “வேண்டாம், அதில் கிருமிகள் இருக்கும்” என்று நான் சொன்னால், “கிருமியா? என்ன கிருமி? எங்கே பார்த்தாய் அந்தக் கிருமியை?” என்று கேட்பாள். எனக்கு வயிற்றில் நாக்குப் பூச்சி இருந்தது. அதைத்தான் கிருமி என்று அவள் நினைத்தாள். கிருமிகளையோ அதனால் ஏற்படும் நோய்களைப் பற்றியோ அவர்களுக்குத் தெரியாது.
என் அம்மாவின் சித்தி ஒருத்தி இருந்தாள். அம்மாவிடம் அவளுக்கு ரொம்பப் பிரியம். சித்தி வரும்போது அம்மாவும் தன் அன்பைக் காட்டுவாள். சித்தி தனியாகத்தான் வசித்து வந்தாள். அவள் வந்தால் குளியல் ஒரு சடங்காகவே நடக்கும். அவளைக் குளிக்கச்செய்து, உடுக்க நல்ல உடை கொடுப்பார்கள். நல்ல உடை என்றால் என் அம்மாவின் அகராதிப்படி நல்ல உடை. அதாவது சோப்பு போட்டுத் துவைத்தது. அவளுடைய குளியல்தான் எப்படியிருக்கும்! அதில் அன்பு மிளிரும். பாசம் துளிர்க்கும். அவள் கீழே அமர்ந்திருப்பாள். தண்ணீரைச் சூடாக்கி, தேங்காய் – சோப்பு அல்ல தேங்காய்த் துண்டு – ஒன்றை நறுக்கி, அம்மா அதை வாயில் இட்டுச் சவைத்து கையில் துப்பி உடம்பிலும் கைகளிலும் தேய்ப்பாள். நாங்கள் சின்னப் பிள்ளைகள். இந்தத் தேங்காய் மகிமை பற்றி ஒன்றும் தெரியாது. சித்தி சொந்தக் கிராமத்துக்கு போனதும் சொல்வாள்: “நான் என் மகள் வீட்டுக்குப் போயிருந்தேன். என்னைச் சவைத்த தேங்காய் கொண்டு தேச்சு விட்டாளே” என்பாள். நாங்கள் தேநீரில் சர்க்கரை சேர்ப்பதில்லை. வெல்லம்தான். பால் கிடையவே கிடையாது. பால் இல்லாத டீதான். நகரத்தில் இருந்தபோது கொஞ்சம் சர்க்கரை கிடைக்கும். அவளுக்குச் சர்க்கரை சேர்த்த டீ கொடுப்போம். எவ்வளவு பெருமையாக இருக்கும் அவளுக்கு! எனவே அவள் என் அம்மாவை ரொம்பவும் நேசித்ததில் அதிசயமில்லை. அம்மாவைப் பற்றிச் சொன்னேன் இல்லையா? அவள் பாடு மிகவும் கஷ்டம்தான். மகன் இறந்து போனான், எங்கள் அப்பா போய்விட்டார். அழுதபடியே அவள் அந்த நகரத்தில் கூடைகள் முடைந்துகொண்டிருப்பாள்.
எங்கள் கிராமத்தில் பெண்கள் தாங்கள் அறுத்த புல்லையோ விறகையோ விற்க நகரத்திற்கு வருவார்கள். எங்கள் வீடு தெருவை ஒட்டி இருந்தது. வீட்டில் அப்பா ஒரு கிணறு வெட்டியிருந்தார். இந்தக் கிராமத்துப் பெண்களுக்குக் கடைத் தெருவில் யாரும் குடிக்கத் தண்ணீர் கொடுக்க மாட்டார்கள். மிகவும் கஷ்டப்படுவார்கள். காலை நான்கு மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி, வெறும் கால்நடையாக எட்டு பத்து மைல்கள் நடப்பார்கள். பாதங்கள் வெடித்திருக்கும். அழுக்கு சேர்ந்திருக்கும். தலைமுடியில் முடிச்சு விழுந்திருக்கும். நல்ல உடை கிடையாது. குடிக்கத் தண்ணீர் கிடையாது. அந்தப் பெண்கள் எங்கள் கிணற்று நீரை எடுத்துக் கொள்ளட்டும் என்று அப்பா அம்மாவிடம் சொல்லியிருந்தார். அவர்கள் தண்ணீர் எடுக்க வசதியாகக் கயிறும் வாளியும் தயாராக இருக்கும்.
வீட்டில் ஏழ்மை. அம்மா கஞ்சப் பிசினி. கயிற்றை அங்கே கிணற்றடியில் வைத்துவிட்டுப்போக அவளுக்குப் பயம். அடிக்கடி உபயோகிப்பதால் அது அறுந்து போகுமே? வேறு கயிறு வாங்கவேண்டுமே? எனவே அதை எடுத்து எங்காவது பத்திரப்படுத்தி வைப்பாள். அப்பாவுக்குக் கோபம் வரும். தண்ணீர் குடிக்க வரும் பெண்கள் அங்கே அமர்ந்து சப்பாத்தியும் சட்னியும் சாப்பிடுவார்கள். வீட்டிலிருந்து கொஞ்சம் வெங்காயத்தைத் திருடி நான் அவர்களுக்குக் கொடுப்பேன். அதற்காக அம்மா என்னைக் கோபிப்பாள். அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்ததும் கிராமத்துச்சங்கதி எல்லாவற்றையும் அம்மாவிடம் சொல்வார்கள். அம்மா கூடை முடைந்துகொண்டே கேட்டுக் கொண்டிருப்பாள். அம்மாவிடம் ஒரு குணம் – யாரிடமிருந்தாவது ஒரு விஷயம் கேட்டால் அதை அடுத்த ஆளிடம் சொல்லவே மாட்டாள். ஒரு தினசரி அச்சகம் மாதிரி. நிறைய விஷயம் வரும் : ஆனால் எல்லாம் அச்சாகாது. அவள் வழக்கம் அப்படி. பெண்கள் வந்து – `என் கணவன் இதைச் செய்தான். என் மாமியார் இதைச் செய்தாள்’ என்று கைகளை ஆட்டி ஆட்டி அபிநயத்துடன் சொல்வார்கள். வெற்றிலைச் சாற்றைத் துப்பிக்கொண்டே ஊர்க் கதைகளைக் கூறுவார்கள். அம்மா முற்றத்தில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கூடை முடைந்துகொண்டிருப்பாள். அம்மா முடைந்த கூடைகள் என்னிடமிருந்து, அதில் கிராமபோன் ஊசியை வைத்துச் சுழலவிட்டால், அவர்களின் கதைகளைச் சொல்லக்கூடும் என்று எனக்குச் சிலநேரம் தோன்றும். நாங்களும் கேட்டிருக்கலாம் அந்தக் கதைகளை.
என் அக்காவை பற்றிச் சொன்னேனே. அவளுக்குப் பைத்தியக்கார ஆஸ்பத்திரி ஒன்றில் வேலை கிடைத்தது. இடைக்கிடையே வீட்டுக்கு வந்து குழந்தைகளுக்கு பாலூட்டிவிட்டுச் செல்வாள். அப்போது என் அம்மாவிற்கும் குழந்தைகள் பிறந்துகொண்டிருந்தன. இரண்டு பேருக்கும் ஒரே சமயத்தில் பிரசவமாகும். நாங்களும் சிறுசுகள். எங்கள் அக்கா பிள்ளைகளும் சிறுசுகள். அவர்கள் மூன்று பேர், நாங்கள் அக்கா தம்பி மூன்றுபேர், எல்லோரும் அடுத்தடுத்துப் பிறந்தவர்கள். ஒரு குழந்தை இந்த வருடம், அடுத்த குழந்தை மறு வருடம், இப்படி. அக்காவிடம் நிறையப் பால் இருந்தது. வீட்டுக்கு வந்து குழந்தைகளுக்குப் பால் ஊட்டுவாள். அவள் பிள்ளைகள் பச்சைக் குழந்தைகள். ஆதலால் சீக்கிரமே பால் குடித்துவிடும். பிறகு எங்களை அழைப்பாள். “வந்து குடியுங்கள்” என்பாள். கொஞ்சம் பெரியவர்கள்தான் என்றாலும் நாங்களும் அக்காவிடம் பால் குடிப்போம். நான் ஏழு வயது வரை அம்மாவிடம் பால் குடித்தேன். அவள் கூடை முடைந்துகொண்டிருப்பாள். நான் ஒரு பக்கமாக பால் குடித்துக்கொண்டிருப்பேன். அதனால்தான் இப்படிப் பலசாலி ஆனேனோ என்னமோ!
மேல் சாதிப் பெண்கள் எங்களை நல்ல முறையில் நடத்தினார்கள். என் சுயசரிதையில் அவர்களுக்கு நான் பட்ட கடனைப் பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். அம்மாவுக்கு நோய்வரும். உடம்பெல்லாம் கொப்புளம் தோன்றும். வயிற்றில் வாயு நிரம்பிக் கடுமையான வலி ஏற்படும். அவள் உடம்பில் எத்தனையோ நோய்கள். நோயில்லாத நாளே இல்லை. உடம்புக்கு என்னவாயிருந்தால் என்ன, கூடை முடைவதை மட்டும் நிறுத்தவே மாட் டாள். இனிமேல் முடியாது என்றால்தான் உறங்கச் செல்வாள். அப்பாவுக்கு ஒரு நண்பர் இருந்தார். பொற்கொல்லர் சாதி. மாம்பழ வியாபாரம் செய்து வந்தார். வசதி உள்ள குடும்பம். அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லாதபோது சமைக்க மாட்டாள். அந்த நேரங்களில் எங்களை அவர்கள் வீட்டில் சாப்பிடச் சொல்வார்கள். நான் சாப்பிடப்போவேன். நான் போகும்போதெல்லாம் அந்த வீட்டிலுள்ளவர்கள் என்னை மிகவும் நன்றாகவே நடத்தினார்கள். ஒருபோதும் என்னை ஒரு பிச்சைக்காரியைப்போல் நடத்தவில்லை. “வா சின்னப்பெண்ணே, சும்மா இங்கே வந்து இரேன்” என்பார்கள். நல்ல உணவு தருவார்கள். மீந்த உணவோ தூரப்போடுவதோ அல்ல. சோறு, பருப்பு, தயிர், மோர் எல்லாம் தருவார்கள். வீட்டுக்கும் எடுத்து வருவேன். அம்மா அதிகம் சாப்பிடமாட்டாள். நான் சாப்பிடுவேன். அது ஒரு காலம்.
எங்கள் வீட்டுக்கு எதிரே ஒரு பிராமணக் குடும்பம் இருந்தது. நடுவே ரோடு. அந்தப் பக்கம் அவர்கள் வீடு. அவர்கள் ஊறுகாய் போடுவார்கள். எங்கள் வீட்டில் என்ன இருக்கும். . . வெறும் கருவாடுதான். வீட்டுக்குள் நுழைந்தாலே ஒரே நாற்றம். அம்மாவுக்குச் சாப்பிட முடியாமலிருக்கும் சமயங்களில் என்னிடம் ஒன்றிரண்டு பைசா தந்து “போய் அவர்கள் வீட்டிலிருந்து ஊறுகாய் வாங்கி வா” என்பாள். நான் போவேன். பெரிய ஜாடிகளில் ஊறுகாய் வைத்திருப்பார்கள். ஜாடியின் வாய் துணியால் மூடப்பட்டிருக்கும். ஒவ்வொரு தடவையும் அந்த ஜாடியைத் திறப்பது ஒரு சடங்குதான். நான் போவேன். “ஊறுகாய் வேணும். . . யார் இருக்காங்க?. . . ஊறுகாய் வேணும்” என்பேன். “இரண்டு பைசாவுக்கு ஊறுகாய்” என்பேன் – ஏதோ திருடவோ யாசிக்கவோ வந்திருக்கிறேன் என்று நினைத்துவிடக் கூடாதே என்று. யாராவது எட்டிப் பார்ப்பார்கள். மீண்டும் மீண்டும் பார்ப்பார்கள். சற்று நேரம் கழித்து வேறு யாரோ ஒரு பெண் வந்து எட்டிப் பார்ப்பாள். அப்புறம் வெளியே வருவாள். ஊறுகாயை எடுக்க ரொம்ப நேரம் பிடிக்கும். அப்புறம் பைசாவை வாங்கிக் கொள்வாள். எப்போதும் இப்படித்தான். என் அண்ணா சொல்வான்: “முட்டாள், மட சாம்பிராணி, கிறுக்கு. பேசாமல் பின் பக்கமாகப் போய் `ஊறுகாய் எங்கே இருக்கிறது?’ என்று கேட்க வேண்டும். கையை உள்ளே விட்டு நீயே எடுத்துக் கொள்ள வேண்டும். உடனே எல்லாவற்றையும் உனக்கே தந்து விடுவாள். ஜாடி முழுதும் உனக்கேதான். இப்படித்தான் செய்ய வேண்டும்” என்பான். இப்படி எல்லாம் வேடிக்கையாய்ப் பேசுவோம்.
மேடை நடிப்பும் திருமணமும் :
லக்ஷ்மி: உயர்நிலைப்பள்ளி படிப்பு முடிந்ததும், வேறு எங்கு படித்தீர்கள்? திருமணம் எப்படி நடந்தது?
ஊர்மிளா: ரத்னகிரியில் உள்ள ஒரு பள்ளியில்தான் ஹைஸ்கூல் படிப்பை முடித்தேன். அங்குள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன். தலித்துகளை ஊக்குவிக்கவேண்டும், அவர்கள் பிரச்சினைகளை அலசவேண்டும், அவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணுபவர்கள் இன்றுபோல் அன்றும் இருந்தார்கள். ஒரு பிற்பட்ட வகுப்புப் பெண்ணுக்கு நன்றாக நடனம் ஆடவோ, பாட்டுப்பாடவோ வேறு ஏதோ தெரிந்திருந்தால் அவளை உற்சாகப்படுத்தி ஊக்குவிக்க வேண்டும் என்ற உணர்வும் இருந்தது. சில ஆசிரியர்களுக்கு இந்த எண்ணம் இருந்தது. நான் பேச்சுப்போட்டியிலும் நாடகத்திலும் பங்கு பெறுவேன். அப்போது எட்டோ ஒன்பதோ படித்துக்கொண்டிருந்தேன். நாங்கள் ஒரு நாடகம் போட்டோம். எனக்கு ராஜா வேஷம். நான் அப்போது சற்றுக் குண்டாக இருந்தேன். கண்டதையெல்லாம் தின்பேன். நிறையச் சாப்பிடுவேன். எனவே எனக்கு ராஜா வேஷம் கிடைத்தது. அது ஒரு ஹாஸ்ய நாடகம். எங்களுக்கு ஒரு இங்கிலீஷ் வாத்தியார் இருந்தார். கோவிந்த ராவ் நானே. ரொம்பக் கட்டுப்பெட்டி. அவர் பெண்ணும் என் வகுப்பில்தான் படித்தாள். அவளுக்குச் சேவகன் பாத்திரம். அவர் எனக்குச் சேவகன் வேஷத்தையும் அவர் மகளுக்கு ராஜா வேஷத்தையும் கொடுக்கவேண்டும் என்றார். எங்கள் டீச்சர்களுடன் சண்டையிட்டார். ஆனால் நாடகத்தை நடத்துகிற டீச்சர், `இந்தப் பெண்ணுக்கு இந்த வேஷம் மிகவும் பொருத்தமாக இருக்கிறது. இவள்தான் ராஜாவாக நடிக்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டார். இதன் பலன் அந்த ஆங்கில ஆசிரியர் என்னை மிகவும் விமர்சனம் செய்துகொண்டேயிருப்பார்.
அது ஒரு ஹாஸ்ய நாடகமாயிருந்ததால் நான் ஒரு மாதிரி கீச்சுக் குரலில் பேச வேண்டியிருந்தது. அப்படிப் பேசிப்பேசி தொண்டை கரகரப்பாகி விட்டது. எங்கள் ஆசிரியர் ஒரு லேடி டாக்டரை காதலித்து வந்தார். அவள் அவரை வந்து சந்திப்பது வழக்கம். “இவளுக்குத் தொண்டை கட்டியிருக்கிறதா? கொஞ்சம் ஸ்ப்ரே பண்ணுகிறேன்” என்பாள். தொண்டையில் ஸ்ப்ரே செய்ததும் குரல் சரியாகிவிடும். இது அடிக்கடி நடந்தது. ஏனெனில் ரத்னகிரியில் பல இடங்களில் எங்கள் நாடகம் நடைபெற்றது. அதற்காக எனக்கு ஒரு மெடல்கூட கிடைத்தது. என்னுடைய போட்டோ பள்ளியில் தொங்கவிடப்பட்டது. என்னுடைய தொண்டை கரகரப்பாகத் தொடங்கியது. அப்போது அது எனக்குத் தெரியவில்லை. பின்னர் அடிக்கடி இருமலும் ஜலதோஷமும் வரத்தொடங்கின. தொண்டைப் புண்ணும் வந்து கொண்டி ருந்தது. ENT ஸ்பெஷலிஸ்ட் என்னிடம், “சிறுவயதில் உனக்குத் தொண்டையில் ஆபரேஷன் செய்யப்பட்டதா?” என்று கேட்டார். ஆபரேஷன் இல்லை, ஆபரேஷன் எதுவும் நடக்கவில்லை என்று கூறிவிட்டு, சிறுவயதில் நடந்ததைச் சொன்னேன். எனது குரல் நரம்புகள் சேதமடைந்துள்ளதாகக் கூறினார். நேனேயின் மகள் ராஜா வேஷம் தரித்திருந்தால் அவர் அவளுடைய தொண்டைக்கு ஸ்ப்ரே செய்ய அனுமதித்திருப்பாரா என்று யோசித்துப் பார்க்கிறேன். அவர் படித்தவர். விஷயம் தெரிந்தவர். என்னைப் பற்றிக் கவலைப்பட யார் இருந்தார்கள் என் வீட்டில்? என் குரல் கரகரத்துப் போயிற்றா அல்லது ஒரேயடியாக போயிற்றா என்று யாரும் கவலைப்படவில்லை. எனது ஹைஸ்கூல் நாடக வாழ்க்கை இது. ஷாந்தா பாய் ஜோக் வந்திருந்தார். அவரும் ஒரு நாடகத்தைத் தயாரித்தார். அதிலும் நான் நடித்தேன். பத்தாம் வகுப்பு வரை இதுமாதிரி விஷயங்களில் பங்கெடுத்தேன்.
அப்பா அம்மாவிடம் சொல்வார் : `குழந்தைகள் படிக்க வேண்டும். அவர்களுக்கு வேலை கிடைக்கவேண்டும்.’ அப்பாவின் இன்னொரு ஆசை – அவரது பெண் குழந்தைகளும் வேலைபார்க்க வேண்டும். வேலை பார்க்கும் அளவுக்குத் திறமை படைத்தவர்களாக இருக்கவேண்டும். எனக்கு வேலை கிடைத்தபோது படிப்பை நிறுத்த வேண்டியதாயிற்று. வேலையும் கிடைத்தது, திருமணமும் நடந்தது. ஏதாவது காலேஜில் சேர்ந்து மேலே படிக்கவேண்டும் என்று விரும்பினேன். எனக்கு மூன்று குழந்தைகள் பிறந்த பிறகு நான் காலேஜில் சேர்ந்தேன். எம்.ஏ. வரை படித்தேன். ஆனால் அம்மா என்ற நிலையில் தோற்றுவிட்டேன். வேலை பார்த்தேன், காலேஜுக்கு போனேன், ஆனால் பாடத்தில்தான் என் கவனம் முழுவதுமிருந்தது; குழந்தைகளைக் கைவிட்டுவிட்டேன். அவர்களிடம் அதிகக் கவனம் செலுத்தவில்லை. அவர்களைப் படிக்க வைத்தேன், சாப்பாடு போட்டேன் – என் அம்மா செய்தது மாதிரி. ஆனால் மனவளர்ச்சி, தாயின் அன்பு, நல்ல பயிற்சி அளித்தல், பின்னால் தங்கள் வாழ்க்கையில் என்ன ஆகலாம் என்ற சிந்தனை இவையெல்லாம் ஒரு குறிப்பிட்ட வயதில் அவர்களுக்குக் கொடுத்திருக்கலாம். செய்யவில்லை. எனது கணவரைப் பொறுத்தமட்டில், அதிகம் செலவழிக்கக்கூடாது என்பதுதான் அவர் கொள்கை. ஆகவே என் குழந்தைகள் முனிசிபல் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். அந்த பள்ளியில் ஏழாம் வகுப்புவரை படித்தார்கள். முனிசிபல் பள்ளி இருக்கும் நிலையை நீங்கள் போய்ப் பார்க்க வேண்டும்! ஆசிரியர்கள் உட்கார்ந்துகொண்டு தையல் வேலையிலும் எம்ப்ராய்டரியிலும் மூழ்கியிருப்பார்கள். குழந்தைகள் அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஆசிரியர்கள் வம்பு பேசிக் கொண்டிருப்பார்கள். “இந்தப் பிள்ளைகள் சேரியில் இருந்து வருகிறார்கள். இவர்கள் உடம்பு நாற்றமடிக்கிறது. அழுக்கில் பிறந்து அழுக்கில் உருளுகிறார்கள். இவர்களை விட்டு விலகியே நிற்போம்; தொடக்கூடாது” – இதுதான் அவர்களின் மனப்பான்மை. எனவே பிள்ளைகளின் படிப்பு கவனிக்கப்படுவதில்லை. இந்த மாதிரி பள்ளியில்தான் அவர்கள் படித்தார்கள். இந்த இடத்தில்தான் நான் ஒரு தாய் என்ற நிலையில் தோற்றுப் போனேன். என் பிள்ளைகள் இப்போது எப்படி இருக்கிறார்கள், அவர்கள் என்ன பாடுபட்டார்கள், அவர்களிடம் உள்ள குறைபாடுகள் என்ன – அந்தக் குறைபாடுகளுக்குக் காரணம் நான்தான் என்று இப்போது உணர்கிறேன்.
என் திருமணத்தைப் பற்றிச் சொல்வதென்றால் – நாங்கள் மூன்று சகோதரிகள். அப்பா இருக்கும்போதே மூத்தவளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. அடுத்தவள் மிகவும் கறுப்பு, ஒல்லி; பற்கள் துருத்திக்கொண்டிருக்கும். அவளுக்குத் திருமணம் நடப்பதென்பது ஒரு பெரிய பிரச்சினை. அவளைத் திருமணம் செய்து கொடுப்பது சிரமமாக இருந்தது. என் அண்ணாவுக்கு பம்பாயில் ஒரு வேலை கிடைத்தது. பல் காரணமாகத்தானே அவளுக்குத் திருமணம் நடக்கவில்லை, அவற்றைப் பிடுங்கிவிட்டால் என்ன என்று நினைத்தான். பம்பாய்க்கு அழைத்துச்சென்று, நிஜமாகவே பற்களைப் பிடுங்கி வேறு பற்கள் கட்டிவிட்டான். அது நன்றாக இருந்தது. பற்களைப் பிடுங்கியபின் அவளுக்குக் கல்யாணம் நடந்தது. அவள் வீடு BIT காலனியில் இருக்கிறது. அவளும் வேலை பார்க்கிறாள். அவளுடைய வேலை ஏர் ஃபோர்ஸ் ஆபிஸில். காலை ஏழு மணிக்குத் தொடங்கும். அவள் மாமனார் மாமியார் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள். `அவள் ஆபீசுக்குப் போகிறாள், ஒரு நாற்காலியில் உட்காருகிறாள். பின் ஏன் அவள் களைப்படைய வேண்டும்?’ என்று அவர்கள் நினைத்தனர். ஏதோ நாற்காலியில் உட்கார்ந்து ஓய்வெடுத்துக் கொண்டு வீட்டுக்கு வருவதாக நினைப்பு. எனவே எல்லா வீட்டு வேலைகளையும் – பாத்திரங்கள் கழுவுவதுவரை – அவளையே செய்யச் சொன்னார்கள். எப்படி அவளுக்குக் களைப்பு ஏற்படும் என்று நினைத்தனர். இப்படியே பாடுபடுத்தினர். அவள் கணவன் ஒரு பி. ஏ. பட்டதாரி. இருந்தும் அவளை அடிப்பான். அவள் உண்டாகியிருந்தபோது, அவளைச் சீக்கிரம் எழுந்திருக்கச் சொல்வான். எழாவிட்டால் உதைப்பான். தலித் மக்கள் மனிதாபிமானத்துக்காகப் போராடுகிறார்கள். ஆனால் மனிதாபிமானம் என்றால் என்ன என்று அவர்களால் நிர்ணயிக்க முடியவில்லை. தங்கள் மனைவிமார்களிடம் அவர்களுக்கு மனிதாபிமானம் இருப்பதாகத் தெரியவில்லை. அதற்கு உதாரணமாகத்தான் உங்களுக்கு நான் இதைக் கூறினேன்.
நான் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போதே எனக்குக் கல்யாணம் நடந்துவிட்டது. என் அம்மா வீட்டில் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருந்தாள். ஒரு குடும்பம் அங்கு இருந்தது. அந்த வீட்டுக்காரருக்கு நண்பர் என் கணவர். அவர் ஓர் ஆபீஸில் வேலை பார்த்து வந்தார். அங்கு வருவார். வரும்போது என்னைப் பார்த்து, இந்தப் பெண் கெட்டிக்காரி, சாமர்த்தியமாக இருக்கிறாளே என்று நினைத்து ஆசைப்பட்டார். நாங்கள் பேசிப் பழகினோம். பழக்கம் நெருக்கமாகி, கல்யாணத்தில் முடிந்தது.
எழுத்தும் வாழ்க்கையும் :
லதா: ஊர்மிளாஜியிடம் எப்போது அவர் எழுத ஆரம்பித்தார், அவரது எழுத்து அனுபவங்கள் இவை பற்றிக் கேட்கப் போகிறேன். அவர் எழுத்து அவரது வாழ்க்கையோடு இணைந்து இருக்கிறது. அவரது சமூகத்தின் வாழ்க்கை முறை பற்றிப் பலருக்கும் தெரியாது. உங்கள் கதைகள் மூலமாக இதை பிறரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று ஏன் கருதினீர்கள்? உங்களைத் தூண்டியது எது?
ஊர்மிளா: நான் 1975 முதல் எழுதிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய சாதி மக்கள், நான் பிறந்த குடும்பத்து ஆட்கள் யாருக்கும் கல்வி பற்றி அதிகம் தெரியாது. என் அப்பா ஓர் ஆசிரியர். அவர் அந்த நாள் ஆறாம் வகுப்பு வரை படித்திருந்தார். ஆசிரியர் ஆகிவிட்டார். ஆனால் நான் சிறுமியாகயிருக்கும்போதே இறந்துவிட்டார். எனவே அவர் மூலம் நான் ஏதும் பயன்பெற வாய்ப்பிருக்கவில்லை. அம்மாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. என்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் அனைவருமே படிப்பை அறியாதவர்கள். எழுத வேண்டும் என்ற ஆர்வம் என் மூதாதையரிடமிருந்து வரவில்லை. நான் பார்த்துக் கற்றுக்கொள்ளும்படியான எழுத்தாளரும் யாருமில்லை. பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது கட்டுரைகள் எழுதுவேன். அந்தக் கட்டுரைகளுக்கு ஆசிரியரிடமிருந்து, `நன்று, மிக நன்று, பிரமாதம்’ என்றெல்லாம் குறிப்புகள் கிடைக்கும். எனவே அந்தக் காலத்தில் நான் நன்றாகவே எழுதுவதாக நினைத்துக் கொள்வேன். அது எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் எனக்கு அப்போதே திருமணம் நடந்துவிட்டது. வீட்டுப் பொறுப்பு ஏற்பட்டுவிட்டது. உங்களுக்குத் தெரியுமே, இந்நிலையில் ஒரு பெண் தன் கற்பனைகளையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிடவேண்டும். அவளுடைய கனவுகள் அடக்கி வைக்கப்பட்டுவிடும். எனக்கும் அவ்விதமே நடந்தது. நாட்கள் சென்றபின் குழந்தைகள் பெரியவர்கள் ஆனபின் எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. எனக்கு ஒரு தோழி இருந்தாள். அவளுக்குப் பிள்ளைகள் இல்லை. எப்போதும் அழுது கொண்டிருப்பாள். நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் தனக்குக் குழந்தைகள் இல்லை என்ற ஒரே ஒரு விஷயத்தை மட்டும் மறக்காமல் சொல்லுவாள். அவளது துயரம் என்னை வதைத்தது. எனது சகோதரன் மனைவிக்கு ஐந்து பெண் குழந்தைகள். ஆண் குழந்தைகள் இல்லையே என்ற ஏக்கம் இருந்தது. அடிக்கடி அழுவாள். இந்தப் பெண்களிடம் குடும்ப வேதனையைக் கண்டிருக்கிறேன். இவற்றால் சற்று பாதிக்கப்பட்டு எழுதத் துவங்கினேன். நான் நன்றாக எழுதியிருக்கிறேனா என்று எனக்குத் தெரியாது. பெண்கள் பிரச்சினைகளைச் சரியாகக் கையாண்டிருக்கிறேனா என்று எனக்குத் தெரியாது. நான் இந்த மாதிரி யோசிக்கவில்லை. என்னை எவை பாதித்ததோ அவற்றை எழுதினேன்.
லதா: அந்த அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளலாமே?
ஊர்மிளா: எனது இரண்டாவது கதையின் பெயர் ’நியாயம்’. எங்கள் ஊரில் ஒரு விதவை கர்ப்பமாகிவிட்டாள். எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம், விதவைக்கு எப்படி குழந்தை உண்டானது என்று. எனவே பஞ்சாயத்து கூட்டி அவளையே கேட்டுவிடுவதென்று தீர்மானித்தார்கள். அப்போது அவளுக்கு ஐந்து மாதம். அவளிடம் அவள் கர்ப்பத்துக்குக் காரணம் யார் என்று கேட்டார்கள். அவளால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவள் யாரைக் குறிப்பிட்டுச் சொல்லுவாள்? அவளுக்குத் தெரியும். அதற்குக் காரணமானவனும் கூட்டத்தோடு சேர்ந்து அவளைக் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறான். எனவே அவள் எதுவும் சொல்லவில்லை. அவளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இரண்டு பெண்கள் அவளைப் பிடித்துக் குனியவைத்து ரத்தம் வரும்வரை மிதித்தார்கள். கருச்சிதைவு ஏற்பட்டது. இந்தக் கொடுமையைப் பற்றி நான் கேள்விப்பட்டேன். உண்மையில் அப்போது நான் அந்த இடத்தில் இல்லை. பதினொன்றாவது படித்துக்கொண்டிருந் தேன். நடந்ததையெல்லாம் பெண்கள் வந்து என் அம்மாவிடம் சொன்னார்கள். “விதவை போய் இப்படி நடந்திருக்காளே. . .” ஏதோ தாங்கள் ஒரு வீரச்செயல் புரிந்ததைப் போல் அவர்கள் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்தப் பேச்சை நான் கேட்டுக்கொண்டிருந்தேன். எப்படி இந்தப் பெண்களால் அதைச் செய்ய முடிந்தது? நியாயத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு ரத்தம் சிந்தும் வரை அந்தப் பெண்ணை மிதித்திருக்கிறார் களே! கொஞ்ச காலத்திற்குப் பின் என் நினைவில் பதிந்திருந்த இந்தச் சம்பவம் ’நியாயம்’ என்ற சிறுகதையாக வெளிவந்தது.
லதா: தலித் குடும்பத்திலோ பகுஜன் சமாஜிலோ பிறந்த பெண்களின் அனுபவங்கள் இலக்கியத்தில் அதிகம் இடம் பெறுவதில்லை என்பதை இந்தக் கதை எனக்கு நினைவூட்டியது. நான் சிறுமியாயிருக்கும்போது நடந்த ஒரு சம்பவம் : ஒரு தலித் பையனின் கையில் சகோதர பந்தத்திற்கான ராக்கி கயிறு கட்டினேன். இதைப் பற்றி ஊரே பேசத் தொடங்கிவிட்டது. நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். நடத்திய ஒரு பள்ளிக்கூடத்தில் நான் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு தலித் பையனின் கையில் ராக்கி கட்டுவது ஒரு பெரிய குற்றம். நிறைய விரல்கள் என்னைச் சுட்டிக் காட்டிக் குற்றம் சுமத்தின. நான் OBC ஆக இருந்தாலும் தலித்தைவிட உயர்ந்தவள், ஒரு தலித்தை சகோதரனாகக் கொள்ளக்கூடாது என்று நினைத்தார்கள். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது எனக்கேற்பட்ட இந்த அனுபவமும், கர்ப்பிணியான விதவை மிதிபட்டதால் உங்களுக்கேற்பட்ட விழிப்புணர்வும், ஜோதிபா புலே பிராமண விதவைகளைப் பற்றி எழுதியதை நினைவுக்குக் கொண்டு வருகிறது. கர்ப்பிணியாகிவிட்ட பிராமண விதவைகள் கொடூர முறையில் கருச்சிதைவு செய்விக்கப்பட்டனர். உங்கள் எழுத்தில் இருந்து உருவாகும் இந்தச் சித்திரம் உங்கள் சமகால தலித் இலக்கியத்திலும் வெளிப்படுவதாக நினைக் கிறீர்களா?
ஊர்மிளா: ஆம். இப்போது வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஹரி நாராயண் ஆப்தே இந்த விஷயங்களைப் பற்றி எழுதத் தொடங்கினார். நாளடைவில் மராட்டி நவகதா (நவீன கதை) உருவானது. இந்தக் கதைகள் மனித உள்ளக் கருத்துகளை பிரதிபலிப்பதாக இருந்தன. கங்காதர் காட்கில், அரவிந்த் கோகலே, [கஜானன் திகம்பர்] மட்குல்கர் போன்றோர் ஃபிராய்டின் கருத்துகளைக் கையாண்டனர். எழுச்சி பெற்ற பிரக்ஞையின் தளத்திலிருந்து எழுதத் தொடங்கியவர்கள் இவர்கள். ஆனால் அவர்கள் எழுத்து சமூகத்தின் மேல்தட்டு மக்களின் மகிழ்ச்சியையும் துயரத்தையும் பிரதிபலிப்பனவாக இருந்தன. சமூகத்தில் பின்தங்கியவர்களான தலித்துகளை அவர்கள் தொடவில்லை. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இவற்றையும் பிரதிபலிக்கத் தொடங்கினர். ஆனால் அது `ஐயோ பாவம், இந்தத் தாழ்த்தப்பட்ட ஏழை மக்கள், இவர்களுடைய கஷ்டத்தையும் நாம் கவனிப்போமே’ என்ற இரக்க உணர்வினால் ஏற்பட்டதுதான். டாக்டர் அம்பேத்கர் தலித் மக்களை வழிநடத்தியபோது அவர் தெளிவாகச் சொல்லிவிட்டார் : உங்கள் இரக்கமோ தயவோ தலித்துகளுக்கு வேண்டியதில்லை. எங்களுக்காக நீங்கள் இரக்கப்பட வேண்டாம். இந்திய மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரிய உரிமையைக் கேட்கப்போகிறோம்.
இந்த நியாயமான உரிமைக் குரல் இலக்கியத்திலோ, சிறுகதைகளிலோ, கவிதைகளிலோ இன்னும் கேட்கவில்லை.
தலித் மேம்பாட்டுக்கான இயக்கத்தை அம்பேத்கர் முன்னின்று நடத்தியபோது அவர் முகநாயக், ஜனதா, பிரபுத் பாரத் (எழுச்சி பெற்ற பாரதம்) போன்ற இதழ்களை வெளியிட்டு வந்தார். இவை தலித்துகளின் மொழியைப் பிரதிபலித்தன. இந்த இதழ்களுக்காக எழுதிய எழுத்தாளர்களும் தலித் உரிமைகள் பற்றி எழுத ஆரம்பித்தனர். `நமக்கு இந்த உரிமைகள் உண்டு, அவற்றை நாம் பெற வேண்டும்’ என்பதை வலியுறுத்தி எழுதினர். காலப்போக்கில் இவ்வகை எழுத்து இலக்கியத்தின் ஒரு பகுதியாகக் காணப்பட்டது. முழுச் சமூகமும் முன்னோக்கி எழுந்தபோது அங்கே ஒரு பரபரப்பு ஏற்பட்டது. தங்கள் சுயமரியாதையைப் பற்றி அவர்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்தனர். `மேல் சாதியினருக்கு மட்டும்தானா சுயமரியாதை இருக்கிறது? நாங்களும் மனிதர்கள்தாம். எங்களுக்கும் உரிமைகள் இருக்கின்றன’ – இது அவர்கள் எழுத்தில் பிரதிபலித்தது. தலித் இலக்கியங்கள் தலித்துவம், அதன் தாழ்வு, துயரம், வேதனை இவற்றைப் பேசத் தலைப்பட்டன. பெண்ணிற்கும் வேதனைகள் இருக்கின்றன; இவற்றிற்குக் காரணம் ஆண்கள்தாம். ஆனால் இந்த விஷயத்தைப் பற்றி இவர்கள் சிந்திக்கவில்லை. தங்கள் சுயசரிதைகளில் தங்கள் தாய் மற்றும் சகோதரிகள் எவ்வளவு நல்லவர்கள், ஆண்களுக்காக தங்கள் சந்தோஷத்தை எப்படித் தியாகம் செய்தார்கள், துன்பத்தையும் வேதனையையும் எப்படித் தாங்கிக்கொண்டார்கள் என்பதையெல்லாம் எழுதியிருக்கிறார்கள். மனைவி செய்வது அவளது கடமையாகக் கருதப்படுகிறது, ஆனாலும் அது பற்றிக் குறிப்பிடுவதில்லை. ஏன் இதைப்பற்றி அவர்கள் எழுதுவதில்லை என்று எனக்கு வியப்பாக இருக்கிறது. நீங்கள் உங்கள் மனைவியை அடித்திருக்கலாம். அதை ஏன் எழுதக்கூடாது? உங்கள் வாழ்க்கையின் உண்மையை எழுதப் புறப்பட்டிருக்கிறீர்கள். அதில் ஓர் அம்சத்தைப் பற்றி மட்டுமே எழுதுவது எப்படி நியாயமாகும்? ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வாழ்க்கை எழுதப்பட வேண்டும். உங்கள் தவறுகளைப் பற்றியும் நீங்கள் எழுதவேண்டும்.
என் கதைகள் எவ்வாறு வித்தியாசமானவை என்று லதா கேட்டாள். நான் வித்தியாசமானவளா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் மனைவிமார்களுக்கு அநியாயம் செய்யும் தலித் கணவன்மார்களைப் பற்றி நான் நினைத்துப் பார்த்திருக்கிறேன். ஆனால் தலித் எழுத்தாளர்கள், நான் ஏன் அவர்களைப் போல் எழுதுவதில்லை, என் இனத்தைப் பற்றியே நான் ஏன் எழுதவேண்டும் என்று என்னிடம் சில வேளைகளில் கேட்கிறார்கள். “ நீங்கள் இப்படி எழுதக்கூடாது, நீங்கள் மேல்சாதியினருக்கு நமக்கெதிராகப் பயன்படும் ஆயுதத்தைக் கொடுக்கிறீர்கள்” என்பது பல விமர்சகர்களின் குற்றச்சாட்டு. எனது பதில் : “ஏன் இதை ஓர் ஆயுதம் என்று சொல்கிறீர்கள்? இதையே எங்களுக்கு எதிராகப் பயன்படுத்தும்போது அது நியாயமாகி விடுகிறதா? இனியும் பெண்களாகிய எங்களுக்கு எதிராக நீங்கள் அதைப் பயன்படுத்த முடியாது.” சிலசமயம் அவர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துவிட்டு என்னைப் பேச அழைக்கிறார்கள். என் கதையை அவர்கள் கேட்கும்போது நான் அவர்களைக் கேட்கிறேன் : “உங்கள் மனைவி எங்கே? அவளையும் அழைத்து வாருங்கள். அப்போதுதான் நான் வருவேன்.” எனது கணவர் கூட, “என் மனைவியை அழைக்க ஏன் நீங்கள் மட்டும் வந்திருக்கிறீர்கள்? உங்கள் மனைவி எங்கே? அவளையும் உடன் அழைத்து வாருங்கள்,” என்பார். தங்கள் மனைவிமார் வீட்டிலேயே தங்கி, சமையல் செய்து, குழந்தைகளைக் கவனித்து, வீட்டைப் பார்த்துக் கொள்ளவேண்டும். இவர்கள் மட்டும் நகரத்தைச் சுற்றி அலைந்து வேலை செய்துவிட்டு வீடு வந்து சாப்பிட்டு ஓய்வு எடுத்து விட்டு, பிற பெண்களை மேடைக்கு வந்து பேச அழைப்பார்கள்.
லதா: அண்மையில் நாக்பூரில் தலித் பெண்கள் மாநாடு ஒன்று நடைபெற்றது. அப்போது ஒரு பிரசுரம் வெளியிடப்பட்டது. அது உண்மையில் தலித் பெண்களால் தயாரிக்கப்படவில்லை. தலித் ஆண்கள்தாம் தயாரித்தார்கள். அதில் மார்க்ஸ், லெனின், அம்பேத்கர் போன்றவர்கள் தங்கள் மனைவியரின் தியாகத்தாலேயே வளர்ச்சியடைந்தார்கள் என அவர்கள் எழுதியிருக்கின்றனர். ஆண்கள் அமரத்வம் பெற தலித் பெண்கள் தங்களைத் தியாகம் செய்யவேண்டும் என்று இந்த தலித் ஆண்கள் விரும்பினார்கள். தலித் ஆண்கள் தலித்துவம் தங்களுக்கு ஓர் அடையாளம் ஆனதைப் போல தங்கள் பெண்களுக்கும் ஓர் அடையாளம் ஆக வேண்டும் என்பதை ஒப்புக் கொள்வதில்லை. தலித் பெண்களின் சுய அடையாளம் (Self Image) என்ன? சாதியத்துக்கு எதிரான போராட்டம் அவர்கள் சுய அடையாளத்தின் ஒரு பகுதியே என்பதில் ஐயமில்லை. ஆனால் ஆண்வழிச் சமூகத்திற்கு எதிராகப் போராடுவது என்பது தலித் ஆண்களைக் கேள்வி கேட்பதாகிவிடும். அவர்களைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியின் முன் நிற்பது போன்றது இது. ஊர்மிளா எழுதிய இன்னொரு புத்தகம் மராத்தி இலக்கியத்தைப் பற்றி மிக அழகாக மராத்தியில் எழுதப்பட்டது. நாங்களும் சரித்திரம்படைத்தோம் புத்தகத்தில் ஊர்மிளாவும் மீனாதாயும் தலித் பெண்களின் பங்களிப்புக்கு அங்கீகாரம் அளித்துள்ளனர். நீங்கள் இந்தப் பணியைத் தொடங்கிய போது தலித் பெண்களின் எதிர்வினை எ ப்படி இருந்தது? தலித் ஆண்களின் எதிர்வினை எப்படி இருந்தது? இரண்டிலும் ஏதாவது வேறுபாடு இருந்ததா?
ஊர்மிளா: உங்கள் முதல் கேள்விக்குப் பதில் சொல்கிறேன். தயா பவாரின் ‘பலூத்தா’** (ஊதியமில்லா ஊழியன்) நாவலிலிருந்து உதாரணம் தருகிறேன். ‘பலூத்தா’ பற்றி நமக்குத் தெரியும். அடுத்த வீட்டில் சல்மா என்ற ஒரு பெண் இருந்தாள். அவளிடம் அவருக்குத் தொடர்பு இருந்தது. ஆனால் ஏற்கனவே சாயி என்ற பெண்ணை மணந்திருந்தார். அவள் ஒரு முஸ்லிம் பையனிடம் ஆசை வைத்திருந்தாள். தயா பவார் இதை விரும்பவில்லை. எனவே அவளைத் தள்ளிவைத்துவிட்டார். அப்போது அவள் கர்ப்பிணி. ஒரு பெண் குழந்தையும் இருந்தது. இருவரையும் வீட்டை விட்டே துரத்திவிட்டார். பிறகு நஜ்மா என்ற பெண்ணுடன் இருந்தார். அதைப் பற்றி எழுதியிருக்கிறார். இப்போது கேள்வி இதுதான். உங்கள் மனைவி செய்த தவறை நீங்கள் பொறுக்க முடியாது. ஆனால் அதே தவறைத்தான் நீங்களும் செய்திருக்கிறீர்கள். . . உபதேசிப்பது ஒன்று, செய்வது ஒன்று, அப்படித்தானே? இது எப்படி? நீங்கள் செய்தால் சரி, அடுத்தவர் செய்தால் குற்றமா? தயா பவாரிடம் இதைச் சொன்னேன். பெரிய விவாதமே நிகழ்ந்தது. அண்மையில் நான் எழுதிய ஆம்ஹீஹி இதிஹாஸ் கடவல (நாங்களும் சரித்திரம் படைத்தோம்) நூலில் பாபா சாகேப் அம்பேத்கர் தலித் இயக்கத்தைத் தொடங்கியபோது அதில் தலித் ஆண்களைப் போலவே தலித் பெண்களும் பங்கேற்றனர் என்பதைக் குறிப்பிட்டிருக்கிறேன். மஹத் என்ற இடத்தில் தண்ணீருக்காக நடந்த போராட்டம் ஓர் உதாரணம். அன்றைய சமூகத்தில் தண்ணீர்கூட பிரித்து வைக்கப்பட்டிருந்தது. இது பிராமணக் கிணறு, இது மராத்தர்களுக்கு, இது பின்தங்கிய வகுப்பினருக்கு என்று. சிலருக்குக் கிணறே கிடையாது. தலையில் குடத்துடன் பத்து மைல் நடந்துதான் தண்ணீர் கொண்டுவர வேண்டும். தண்ணீரைப் போலவே கடவுளும் பிரித்து வைக்கப்பட்டிருந்தார் – `இந்தக் கோயில் பிராமணருடையது. பிராமணர் மட்டுமே இங்கே தொழ முடியும், தலித்துகள் போக முடியாது’ – இந்த நியாயத்தைத்தான் சமூகம் பின்பற்றியது. இதற்கு எதிரான இயக்கத்தை அம்பேத்கர் நடத்தினார். நான் எம். ஏ. பாஸ் செய்த பிறகு பிஎச். டி பண்ணலாம் என்று நினைத்தேன். அம்பேத்கர் நடத்திய இயக்கத்தில் பங்குபெற்ற பெண்களைப் பற்றி எழுத விரும்பினேன். அதற்காக பம்பாய் யுனிவர்சிட்டிக்குச் சென்றேன். அவர்கள், மராத்தியில்தான் நான் எம். ஏ. என்பதால் சமூகவியலில் இன்னொரு எம். ஏ. முடிக்க வேண்டும்; அப்போதுதான் இயக்கம் பற்றிய என் வேலையைத் தொடங்கமுடியும் என்றனர். சாயா தத்தாரிடம் கேட்டபோது, பிஎச்.டிக்கு என்ன அவசியம் வந்தது என்று சொல்லிவிட்டாள். ஆராய்ச்சி செய்து ஒரு புத்தகம் எழுதேன் என்றாள். எஸ். என். டி. ட்டி யுனிவர்சிட்டியில் நான் விரும்பியபடி செய்திருக்க முடியும் என்று அப்போது எனக்குத் தெரியாது. அந்த புத்தகத்துக்காகவே நான் ஒரு டாக்டர் பட்டம் பெற்றிருக்க முடியும்.
என் தோழி மீனாட்சி மூன் என்னுடன் சேர்ந்துகொண்டாள். எங்கள் ஆராய்ச்சியைத் தொடங்கியபோது பலர் எங்களைக் கேலி செய்தனர். “அம்பேத்கர் இயக்கத்தில் பெண்களே கிடையாதே; நீங்கள் யாரைப் போய் பார்க்கப் போகிறீர்கள்?” என்றனர். “அது எப்படி இருக்க முடியும்? சாந்தா பாய் தானீ, தாதா சாகேப் கெயிக்வாடின் மனைவி கீதாபாய் கெயிக்வாட் இவர்கள் இருக்கிறார்களே?” என்றேன். நாலைந்து பெண்களுக்கு மேல் இராது என்றார்கள். இருப்பினும் தேடலைத் தொடர வேண்டும் என்று நினைத்தேன். நாக்பூருக்குச் செல்ல விரும்பினோம். உண்மையில் பாபா சாகேப் அம்பேத்கர் பிறந்தது கொங்கணில். அது ஒரு பின் தங்கிய பிரதேசம் என்று அவர் கண்டுகொண்டார். அங்குள்ள தலித்துகள் ஏழைகள். படிப்பு இல்லை, பணம் இல்லை. ஒரு இயக்கம் தொடங்குவதற்குப் பணம் தேவை. எனவே நாக்பூரைத் தமது பணியிடமாக அமைத்துக் கொண்டு அங்கிருந்தே இயக்கத்தை ஆரம்பித்தார். அதன் காரணமாக நாக்பூரில் பெண்கள் அந்த இயக்கத்துக்காக நிறைய உழைத்தனர். மீனாட்சியும் நானும் நாக்பூர் சென்றோம். அவள் நாக்பூரைச் சேர்ந்தவள். நாங்கள் ஒவ்வொரு இடமாகச் செல்லும்போது, “இயக்கத்துக்காகப் பாடுபட்ட பெண் ஒருத்தி இருக்கிறாள். நீங்கள் போய் பேசிப் பார்க்கலாமே?” என்று யாராவது சொல்வார்கள். அந்தப் பெண்ணைப் போய் பார்த்தால் அவளோ, “யாரு? அம்பேத்கரா? எந்த அம்பேத்கர்?” என்று கேட்பாள். வேறு சிலர் இன்னொரு பெண்ணைப் பற்றிக் கூறுவார்கள். “அவள் வீட்டில் நிறைய ஆவணங்கள்கூடக் கிடைக்கும்” என்பார்கள். நாங்கள் சந்திக்கும் பெண்களிடம் விசாரிப்போம். இப்போதெல்லாம் பெண்களுக்குத் தைரியம் வந்துவிட்டது. உண்மையைச் சொல்ல முடியும். பொய் சொல்லத் தேவையில்லை. ஆனால் முன்பெல்லாம் பொய் சொல்லியே ஆக வேண்டும். வாழ வேண்டுமே! தாங்கள் விரும்பியபோது ஆண்கள் மனைவிகளைப் பற்றி உயர்வாகவே பேசுவார்கள். ஆண்களிடம் அடிபட்டால்கூட – அடித்த அடையாளம் வெளியே தெரிந்தால்கூட – பெண்கள் அடிபட்டதைச் சொல்வதில்லை. பொறுத்துக் கொள்வார்கள். அந்தக் காலத்தில் அப்படித்தான். கணவரைப் பற்றிப் பெருமையாகவே பேசிக் கொள்வார்கள் :
“ஆமாம். அவர் என்னை இயக்கத்தில் சேரும்படிச் சொன்னார். கூட்டங்களுக்குப் போகும்படி சொன்னார்.”
“நீங்கள் இல்லாதபோது பிறகு யார் சமைத்தார்கள்?”
“நான்தான் சமைத்தேன்.”
“குழந்தைகளை யார் பார்த்துக் கொண்டார்கள்?”
“நான்தான் பார்த்துக் கொண்டேன்.”
“வயலையும் பயிரையும்?”
“அதுவும் நான்தான்.”
“அப்போ இயக்கத்துக்கு வேலை செய்ய நேரம் எங்கிருந்து கிடைத்தது?”
கடைசியாக அவர்கள் சொல்லிவிடுவார்கள். “ஆமாம், நாங்கள் கூட்டத்திற்குப் போகவில்லை. நான் போய்விட்டு வந்து அதை பற்றிச் சொல்கிறேன் என்று அவர் சொல்லிவிட்டார்.” பங்கெடுப்பின் அளவு எவ்வளவு என்று நாங்கள் புரிந்து கொண்டோம். சில பெண்கள் பேசத்தான் செய்தார்கள். ஒரு பெண் சொன்னாள்: “என் கணவர் அடிப்பார். இயக்கத்தின் ஊழியர்கள் என்னைப் பார்க்க வரும்போது, `உன் கணவன்மார் வந்துவிட்டார்கள்’ என்று சொல்லுவார். `அவர்களுடன் போய் ஜாலியாக இரு’ என்பார். “இயக்கத்தில் பங்கேற்றவர்கள்கூட மற்ற பெண்களை அடிப்பதுண்டு. டாக்டர் அம்பேத்கர், தனது கட்டுரைகள் சிலவற்றிலும், சொற்பொழிவுகளிலும், ஊழியர்கள் மனைவியரையும், தாய்மார்களையும், சகோதரிகளையும் அழைத்து வரவேண்டும், இயக்கத்தின் கருத்துகள் அவர்களையும் போய்ச் சேர வேண்டும் என்று வற்புறுத்தினார். டாக்டர் அம்பேத்கர் ஏதாவது நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருக்கும்போது சில பெண்கள் சமையல் வேலையில் ஈடுபட்டிருப்பார்கள். அவர்களிடம் அம்பேத்கர், “இதில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்” என்பார். அவருக்கென்று விசேஷமாக இனிப்புகள் ஏதாவது செய்தால் “எல்லோருடன் சேர்ந்துதான் நானும் சாப்பிடப் போகிறேன். எனக்கென்று தனியாக எதுவும் வேண்டாம்” என்பார். ஊழியர்களிடம் அவர்கள் மனைவிமார்களையும் அழைத்துவரச் சொல்வார். ஆனால் அவர்கள் அதற்குச் செவிமடுத்ததில்லை.
நாக்பூரில் சில பெண் பயில்வான்கள் இருந்தார்கள். அவர்களில் இரண்டு மூன்று பேர்களை நாங்கள் சந்தித்தோம். கழைக்கூத்தாடிகளின் பெண்கள் அவர்கள். கழைக்கூத்தாட்டுக் கம்புகளுடன் ஊர்ஊராகச் சுற்றுவார்கள். இந்தப் பெண்கள் உடற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றவர்கள். ஒருத்தி சந்திரிகா ராம்டேகே. இன்னொருத்தி சாந்தாபாய் பலராம். எங்கள் கைகளை அவர்கள் பிடித்துக் கொண்டபோது எங்களால் அவற்றை விடுவிக்கவே முடியவில்லை. அவர்களுக்கு அவ்வளவு பலம். நாக்பூரில் இந்து முஸ்லீம் கலவரம் நடந்தபோது, இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் அவர்கள் ஆதரவு அளித்ததாகக் குறிப்பிட்டார்கள். இயக்கத்தில் இருந்த பெண்களிடம் இந்த நல்ல அம்சமிருந்தது. மேலும், இயக்கத்தில் சேர்ந்ததால் அவர்களும் சமூகத்தில் அதிக அளவு பங்கு கொள்ள முடிந்தது என்றும் எண்ணினார்கள். வீட்டிலேயே அடைந்து கிடக்கும் பெண்களோடு ஒப்பிடும்போது இயக்கத்தில் சேர்ந்த பெண்கள் தங்கள் நிலையை நன்கு உணர்ந்தவர்களாகக் காணப்பட்டனர்.
லதா: பெண் நிலைவாத பிரச்சினைகளும் பெண்ணிய ஆராய்ச்சிகளும் அதிகக் கவனத்தை இப்போது பெறுகின்றன. சில நேரங்களில் இவை பரபரப்பை உண்டாக்குபவையாக ஆகிவிடுகின்றன. மீனாட்சிதாயினுடைய புத்தகம் இதுவரை மறைக்கப்பட்டிருந்த பெண்களின் வாழ்க்கையை எந்தப் பரபரப்பான அம்சமும் இன்றி வெளிப்படுத்தியிருக்கிறது. மேலும் அவர் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் சென்று, பெண்களுடன் கலந்துரையாடுவது என்று ஏராளமாகச் சிரமப்பட்டிருக்கிறார். ஆகவே அவர் முயற்சி இந்த வரலாற்றுக்கு நிறையப் பங்களித்திருக்கிறது. பெண்ணிய வரலாற்று ஆராய்ச்சிக்கு ஊர்மிளாவையும் அவர் கதைகளையும் பிராந்திய அளவில் எழுதும் பெண்களைப் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. உதாரணமாக, தாரா பவால்கரையும், இம்மாதிரி பணியில் ஈடுபட்டிருக்கும் அவர் போன்ற பெண்களையும் கூறலாம். பெண்ணிய ஆராய்ச்சிக்கு அவர்களையும் சேர்க்க வேண்டும். இலக்கியத்துக்காகத் தான் என்ன செய்தோம் என்று தனக்கே தெரியாது என ஊர்மிளா கூறும்போது அது அவருடைய அடக்கத்தையே காட்டுகிறது என்று நினைக்கிறேன். பெண்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்படாதவர்கள் பட்டியலில் ஊர்மிளாவும் ஒருவர்.
நானும் அந்த இயக்கத்தின் ஒரு பகுதியே. நளினிதாயி (சோம்குவார்), சாந்தாபாயி, சுகந்தாதாயி ஷெண்டே, குமுத்தாயி பாவ்டே போன்ற பெண்களைச் சந்தித்திருக்கிறேன். இவர்கள் அனைவருமே தலைமையேற்று வழிநடத்தக்கூடியவர்கள். ஆர்வமுள்ளவர்கள். போராடுபவர்கள். இன்று பெண்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும்போது நாம் நம்மைப் போராடும் பெண்கள் என்றே அழைத்துக் கொள்கிறோம். ஊர்மிளாவின் புத்தகத்திலிருந்துதான் போர்க்குணமிக்க பெண்ணியம் வெளிப்படுகிறது. ஏனெனில் இதிலுள்ள தலித் பெண் போராட வேண்டியிருந்தது. உதாரணமாக, ஊர்மிளா எண்பது வயதான விமலாதாயி பாகலைச் சந்திக்கச் சென்றிருந்தார். அவர் ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தார். பாபா சாகிப் அம்பேத்கர் பாராளுமன்றத்தில் இந்து சட்ட மசோதாவைக் கொண்டுவந்தபோது, சபையில் கூச்சலும் குழப்பமும் எழுந்தன. ஏனென்றால் அந்த மசோதா அதே வடிவில் நிறைவேற்றப்பட்டால் அது இந்துக்களுக்கும் ஆண்களுக்கும் (பெண்கள் மற்றும் பிறரைப் பற்றிய அவர்கள் மனோபாவத்தைப் பொறுத்தவரை) சாதகமாக இருந்திருக்காது. இந்த மசோதாவிற்காக நேரு, சர்தார் பட்டேல், ராஜேந்திர பிரசாத் போன்றோரிடமிருந்து பலத்த எதிர்ப்புகளை அம்பேத்கருக்கு சந்திக்க வேண்டி வந்தது. இதன் காரணமாக பாபா சாகேப் அரசியலிலிருந்தே விலகி விட்டார். பின் கோல்ஹாப்பூர் சென்றார். யாரையும் சந்திக்கத் தனக்கு விருப்பமில்லை என்று கூறி ஓர் ஓய்வு விடுதியில் தங்கிவிட்டார். அப்போது விமலா பாகலும் அகில இந்திய மகிளா சங்கத்தைச் சேர்ந்த சில பெண்களும் அவரைப் பார்க்கச் சென்றனர். இவர்கள் அனைவருமே தலித்துகள் மற்றும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள். நிறையப் பெண்கள் இந்த மசோதாவை எதிர்க்கிறார்கள் என்றும் இதை நிறைவேற்ற வேண்டாம் என்று தங்களிடம் வேண்டிக் கொண்டதாகவும் நேருஜியும் பட்டேலும் தமக்கு எழுதியிருப்பதாக பாபா சாகேப் அந்தப் பெண்களிடம் கூறினார். அந்த மசோதாவிற்கு எதிராகப் பெண்களின் கையெழுத்து இயக்கம் ஒன்றும் நடந்தது. பாபாவை பார்க்கச் சென்ற அந்தப் பெண்கள் ‘இவர்கள் வெறும் மூன்று சதவிகிதம்தானே?’ என்றனர். “உங்கள் ராஜினாமாவால் மன வருத்தம் அடைந்தவர்கள் நாங்கள் 97 சதவிகிதத்தினர் இருக்கிறோம். நீங்கள் ராஜினாமா செய்யாமல் மசோதாவை வெற்றிபெறச் செய்துவிட்டால் நாங்கள் எங்கள் உரிமைகளை பெற்றுவிடுவோமே?” என்றனர். விமலாதாயி இதைக் கூறியபோது சரித்திரத்தில் எவ்வளவு பகுதி மூடி மறைக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கத் தோன்றியது. அம்பேத்கர் மீண்டும் முயன்று இந்து சட்ட மசோதாவை வெற்றி பெறச்செய்தார். அது ஒரு மாபெரும் சாதனை. அதற்காக மேல்சாதிப் பெண்கள்கூட அவருக்குக் கடன்பட்டிருக்கிறார்கள். எனவே ஊர்மிளாவின் எழுத்து, சாந்தாபாயின் இருப்பு, பேபி காம்ப்ளே போன்றோரின் எழுத்துகள் மிக முக்கியமானவை என நான் கருதுகிறேன். ஊர்மிளா தனது வாழ்க்கை சுயசரிதையை எழுதிக்கொண்டிருக்கிறார். இயக்கத்தில் ஈடுபட்டதால் அவரது நிறைய அனுபவங்களை அதில் எதிர்பார்க்கலாம். அந்த அனுபவங்கள் சிலவற்றை இப்போது நம்முடன் பகிர்ந்து கொண்டால் நல்லது என்று நினைக்கிறேன்.
ஊர்மிளா: தலித் இயக்கத்தின் முதல் சுயசரிதை தயா பவாரின் ’பலூத்தா‘. அதைத் தொடர்ந்து லக்ஷ்மண் மானேயின் ’உப்ரா’ (அந்நியன்), லக்ஷ்மண் காயக்வாடின் ’உச்லியா’ (உதவாக்கரை) போன்றவை வந்தன. மும்பை மராத்தி க்ரந்த சங்க்ரஹாலயா மும்பையில் ஒரு சாகித்திய சம்மேளனத்தை நடத்தியது. சரோஜினி வைத்யா தலைமை தாங்கினார். தலித் எழுத்தாளர்களையும் தலித் இலக்கியத்தையும் அவர் தாக்கிப் பேசியதாக இன்றைய பத்திரிகையில் படித்தேன். அவர்கள் சாதியைப் பற்றி மட்டும் எழுதுவதாகவும், இந்த இலக்கியம் இந்த சாதிக்குரியது, அது அந்த சாதிக்குரியது என்று பிரிப்பதாகவும் குறை கூறினார். இலக்கியம் இந்தப் போக்கில் வளர்ச்சி பெறாது. இலக்கியத்திற்கும் ஒரு சாதி அமைந்துவிடும் அது நல்லதல்ல என்று அவர் கருதுகிறார். எனக்கு இது உடன்பாடல்ல. இந்திய சமூகம் நிறைய சாதிகளாகச் சிதறப்பட்டிருக்கிறது. உதாரணமாக மஹர் சாதியில் ஐம்பது உட்பிரிவுகள் உண்டு. ஒரு சாதியில் மட்டுமே ஐம்பது உபசாதிகள். அப்படியானால் ஆயிரக்கணக்கில். . .
ஒவ்வொரு சாதிக்கும் அதற்கே உரித்தான கலாச்சாரம், உணவு, வாழ்வுமுறை உண்டு. ஒவ்வொரு கலாச்சாரத்துக்கும் தனித்தனி அனுபவங்கள். இந்த அனுபவங்கள் சமுதாயத்தோடு தொடர்பு கொண்டிருக்கின்றன. ஆகவே இலக்கியத்திற்கும் சாதி இருக்கட்டும். அதைத் தடை செய்ய முடியாது. பிற்பாடு வருங்காலத்தில் அதை விமர்சனம் செய்து கொள்ளட்டும். ஆனால் அது தோன்றுவதற்கு முன்பே அது வரக்கூடாது என்று சொல்வது சரியல்ல. இதேபோல், தலித் ஆண்கள்தாம் சில பிரச்சினைகளை முன்வைத்து எழுதி விட்டார்களே, இனி தலித் பெண்கள் எதற்காக எழுதவேண்டும், அவர்கள் எழுத என்ன இருக்கிறது என்று கேட்கலாம். இப்படிக் கேட்க முடியாது. பெண்களின் அனுபவங்கள் வேறானவை. தலித் இலக்கியத்துக்கு பெண்களும் சிறப்பான பங்காற்றியிருக்கிறார்கள். பேபி காம்ப்ளே ‘ஜீனா ஆம்சி’ (நாங்கள் வாழும் விதம்), சாந்தாபாய் காம்ப்ளே ‘மாஜ்யா ஜன்மாச்சி சித்தர்கதா’ (என் வாழ்க்கைக் கதை), குமுத் பாவ்டே ‘அந்தாஸ்போட்’ (மனத்தினுள்ளே ஒரு வெடியோசை) போன்ற புத்தகங்களை எழுதியுள்ளனர். நாம்தேவ் தஸாலின் மனைவி மல்லிகா அமர்ஷேக் கலப்புத் திருமணம் செய்துகொண்ட தலித் ஆண்களின் அனுபவங்களை ‘மாலா உத்வஸ்தா வாய்சேய்’ (நான் அழிந்து போக விரும்புகிறேன்) என்ற நூலில் குறிப்பிடுகிறார். முக்தா சர்வகோட் ‘மிதாலி கவாடே’ (மூடிய கதவு) என்ற நூலை எழுதியுள்ளார். இப்படி நாலைந்து சுயசரிதைகள் வெளிவந்திருக்கின்றன. அவை ஆணாதிக்கச் சமூகத்தைப் பிரதிபலிக்கின்றன.
பேபிதாயி காம்ப்ளேயின் சுயசரிதை சமூகத்தையும் பெண்களையும் நன்கு படம்பிடிக்கிறது. ஒரு வேடிக்கையான பார்வையில் பிற்பட்ட வகுப்புப் பெண்களையும் அவர்கள் மூட நம்பிக்கைகளையும் அலசுகிறார். ஏன் அவர்கள் மூட நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்? பழைய காலத்தில் பெண்களுக்குச் சிறுவயதிலேயே திருமணம் நடந்துவிடும். கணவன் வீட்டில் மாமியார், மருமகள் இருவரும் கீரியும் பாம்பும்தாம். மாமியார் மருமகளைக் கொடுமைப்படுத்திக்கொண்டே இருப்பாள். பலன் கணவன் மனைவியை வெறுக்கத் தொடங்குவான். மாமியார் என்னவெல்லாம் செய்வாள் தெரியுமா? காலை நான்கு மணிக்கே மருமகளை எழுப்பிவிடுவாள். எழுந்ததும் மாவு அரைக்க வேண்டும்; தண்ணீர் எடுக்க வேண்டும். மாவு அரைத்துக் கொண்டிருக்கும்போதே அவளைச் சற்று நேரம் எங்காவது அனுப்பி விட்டு மாவில் கண்ணாடி வளையல் துண்டுகளைப் போட்டு விடுவாள். பின் ரொட்டி சுடச் சொல்வாள். பாவம், மருமகள்! ரொட்டி சுடுவாள். மாமியார் ஒரு துண்டு எடுத்துச் சாப்பிட்டுப் பார்ப்பாள். அவளுக்குத்தான் தெரியுமே அதில் என்ன இருக்கும் என்று. சாப்பிடும்போது, “அட கடவுளே, இவள் செய்திருக்கிற வேலையைப் பார். கண்ணாடித் துண்டைப் போட்டு நம்மையெல்லாம் கொல்லப் பார்க்கிறாள்” என்று கூச்சலிடுவாள். அக்கம்பக்கத்திலுள்ளவர்களை அழைத்துக் காட்டுவாள். அந்தப் பெண்களும், “இவள் என்ன மருமகளா, எமனா?. . . துரத்து வீட்டை விட்டு” என்பார்கள். மகனிடமும், “உன் பெண்சாதி செய்த வேலையைப் பார். கண்ணாடித் துண்டைப் போட்டு கொல்லப் பார்க்கிறாள்” என்பாள். அவன் மனைவியைப் போட்டு அடிப்பான், மிதிப்பான். கஷ்டம் பொறுக்காமல் அவள் அம்மா வீட்டுக்கு ஓட நினைப்பாள். ஆனால் அவள் காலில் ஒரு மரக்கட்டையைக் கட்டி விடுவார்கள். ஓடட்டும் பார்க்கலாம்! அந்தக் கட்டையை இழுத்தபடியே அவள் நடக்க வேண்டும். ஓடவும் முடியாது, வேகமாக நடக்கவும் முடியாது. கொடுமை தாங்காமல் சில பெண்கள் காலில் கட்டிய கட்டையுடன் ஓடவும் செய்திருக்கிறார்கள். அம்மா வீட்டுக்குப்போனால் அவர்களும் இவளை அடித்து கணவன் வீட்டுக்குத் திருப்பி இழுத்து வந்துவிடுவார்கள்.
இப்படிச் சித்திரவதைப்பட்ட பெண்கள் தங்களுக்குக் கடவுள் அனுக்கிரகம் இருப்பதாக நினைத்தனர். சாமி வந்துவிட்டால் அவர்கள் அவளை நடமாட விடுகிறார்கள், காலில் விழுகிறார்கள். எனவே இப்படிப்பட்டப் பெண்களுக்கு, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் சாமி வந்துவிடுகிறது. உண்மையில் அப்படியொன்றும் இல்லை என்று அவளுக்குத் தெரியும். சாமி வந்துவிட்டதாக நடிப்பாள். கணவன், மாமனாரை பார்த்துச் சொல்லுவாள் : “என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய் அங்கே? முட்டாளே, காணிக்கை கொண்டு வா தேவிக்கு.” உடனே என்ன வேண்டும் என்றும் சொல்லிவிடுவாள். ஆனால் நல்ல புடவையோ நகையோ கேட்கத் தோன்றாது அவளுக்கு. “குங்குமம் கொண்டு வா, வளையல் கொண்டு வா” என்றுதான் கேட்பாள். கணவன் அவள் சொல்வதைக் கேட்கத்தான் வேண்டும். சாமி வந்திருக்கிறதே! பிறகு அது அவளை விட்டுப் போய்விடும். அவளே தன் தோழிகளிடம், “என்ன நடந்தது? நான் என்ன செய்தேன்?” என்று கேட்பாள். “என்ன செய்தாயா? சின்னக் கூத்தா பண்ணியிருக்கிறாய்! உன் கணவன், மாமியார், மாமனார் எல்லோரும் உன் காலில் விழுந்து அழுதிருக்கிறார்கள்” என்பார்கள். இப்படி மூட நம்பிக்கையின் உதவியால் அவள் தன் ஆளுமையை மாற்றிக்கொள்ள முடிகிறது.
பேபிதாயி காம்ப்ளே அந்நாளைய வாழ்க்கை பற்றி நிறையவே எழுதியிருக்கிறார். பெண்களுக்குச் சரியான உணவோ உடையோ கிடைப்பதில்லை. ஒரே அழுக்கு மயம். அவர்கள் எப்படிக் குளிப்பார்கள்? தலையில் எப்படிப் பேன் எடுப்பார்கள்? பேபிதாயி இதைப் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார். இப்போது அது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும். சாந்தாபாய் காம்ப்ளே கணவர் தன்னை அடித்தது, இரண்டாவதாக ஒரு மனைவியைக் கொண்டு வந்தது, அவளது வீட்டிலேயே தாங்களும் தங்குவோம் என்று கட்டாயப்படுத்தியது பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார். நாங்கள் சில நண்பர்கள் சேர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது பேபிதாயி பெண்கள் பொதுவாக தங்கள் குழந்தைப் பருவத்தை பற்றி மட்டுமே எழுதுகிறார்கள் என்று சொன்னார். சாந்தாபாயின் புத்தகம் மட்டுமே கணவர் அவரை எவ்வளவு கொடுமைப்படுத்தினார் என்பதை ஓரளவு குறிப்பிடுகிறது. மற்றவர்களெல்லாம் இயக்கத்தைப் பற்றி மட்டுமே எழுதியிருக்கிறார்கள். பேபிதாயி காம்ப்ளே தன் இளம் வயது அனுபவம் ஒன்றைக் கூறினார். [அந்த அனுபவத்தைக் கூறும்போது பேபிதாயியை ஒருமையிலேயே குறிப்பிட்டு ஊர்மிளா பவார் பேசினார்.] அப்போது அவள் புனாவில் வசித்து வந்தாள். கணவனுக்கு வேலை இல்லை. அவள் சகோதரி பம்பாயில் வசித்து வந்தாள். பம்பாய் சென்று அங்கு வேலை கிடைக்கிறதா பார்ப்போம் என்றாள் தன் கணவனிடம். பஸ்ஸில் அமர்ந்து இருவரும் பம்பாய்க்கு வந்துகொண்டிருந்தனர். தன் முகத்தை முக்காடிட்டு மறைத்திருந்தாள் பேபிதாயி. அவர்களுக்கு எதிரே சில காலேஜ் மாணவர்கள் அமர்ந்து தங்களுக்குள்ளே சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தனர். லோனாவாலாவில் அவர்கள் இறங்கினர். அவள் கணவனும் இறங்கி ஒரு பெரிய கல்லை எடுத்துவந்து பேபிதாயி மேல் எறிந்தான். அவளுக்கு ரத்தம் கொட்டியது. “ஏன் இப்படிச் செய்கிறாய்?” என்று கேட்டாள். “பஸ்ஸில் உன்னைச் சுற்றி அமர்ந்திருந்த பையன்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள் அல்லவா? அதற்காகத்தான்” என்றான் அவன். பேபிதாயியின் காயம் வீங்கிப்போய் விட்டது. நிற்க முடியவில்லை. இந்த நிலையில் பம்பாய் சென்று அக்கா வீட்டுக்கு போனார்கள். இவர்களைப் பார்த்ததும் அக்காவுக்குத் திகைப்பாக இருந்தது. அக்காவின் கணவன், “ நீங்கள் இங்கு தங்க முடியாது, வேலை ஒன்றும் கிடைக்காது. இந்தா, இந்த ரூபாயை வாங்கிக் கொண்டு புனாவுக்கே போய்விடுங்கள்” என்று கூறி பேபிதாயின் கையில் பத்து ரூபாயைக் கொடுத்தான். வெளியே வந்ததும் அவள் கணவன் காலிலிருந்த செருப்பைக் கழற்றி அவளை அடிக்கத் தொடங்கினான். “ஏன் அடிக்கிறாய்?” என்று கேட்டதற்கு, “உன் அத்தான் உனக்கு ஏன் பத்து ரூபாய் கொடுத்தான்?” என்றான் அவன். பாருங்கள், எவ்வளவு அற்பக் காரணங்களுக்காக இந்தப் பெண்கள் அடிபடுகிறார்கள்! இந்த மாதிரிக் கொடுமைகள் எல்லாம் அவர்கள் சுயசரிதைகளின் மூலமாக வெளியே தெரியவேண்டும்.
லதா: பெண்ணியவாதிகளிடம் கீழ்மட்டப் பெண்களைப் பற்றி ஒரு கற்பனை இருக்கிறது. நாரி கேந்த்ராவில் நான் ஒரு பட்டறை தொடங்கியபோது, மேல்தட்டு, மேல்சாதிப் பெண்கள் என்னிடம் வந்து, “எங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வருவது எவ்வளவோ கஷ்டமாக இருக்கிறது. இந்த அடித்தட்டுப் பெண்களின் நிலை பரவாயில்லை. அவர்கள் குரல்கள் தெளிவாகக் கேட்கிறது. தெருவில் அவர்கள் போடும் சண்டையைப் பார்க்கலாம். வீட்டை விட்டு வெளியேறுவது அவர்களுக்கு எளிது” என்பார்கள்.
ஆனால் ஊர்மிளா, பேபிதாயி, சாந்தாபாய் காம்ப்ளே போன்றவர்களின் அனுபவத்தைப் பார்க்கும்போது தலித் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது அப்படியொன்றும் சுலபமல்ல, மேல் தட்டுப் பெண்களைப்போல்தான் இவர்களும் என்று தெரிகிறது. உண்மையில் அதைவிடக் கஷ்டம் என்றே சொல்லவேண்டும். கால்களில் மரக்கட்டைகள் கட்டப்பட்டிருக்கையில் எவ்வளவோ சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே தலித் பெண்கள் அடக்குமுறையை எளிதாக அகற்றிவிட்டு வெளியே வரமுடிகிறது என்பது உண்மையல்ல. விவாகரத்து விரைவாகப் பெற்றுவிடுகிறார்கள், வீட்டை விட்டு ஓடிவிட முடிகிறது என்பதெல்லாம் சரியல்ல. அந்தச் சுதந்திரம் அவர்களுக்கு இல்லை. அதற்கான துணிவும் இல்லை. ஊர்மிளா சொல்வதைப் பார்க்கும்போது, பெண்ணியம் மற்றும் பெண்ணிய இலக்கியங்கள் தங்கள் விமர்சனத்தில் மேல்சாதிப் பெண்களின் பார்வையைத் தவிர்க்க வேண்டும் என்று எனக்குப் படுகிறது. இந்த விஷயத்தில் ஊர்மிளாவை எனக்குப் பிடித்திருக்கிறது. அவர் எழுதிய மாம்பழம் விற்பவள் பற்றிய ‘கவச்’ (கவசம்) என்ற கதையைப் பற்றிக் கேட்க விரும்புகிறேன். தலித் ஆண்களிடமிருந்து எந்த விதமான எதிர்வினை கிடைத்தது? அந்தக் கதை ஆபாசமானது என்று சொல்லப்பட்டதே . . . அதற்கு நீங்கள் என்ன பதில் அளித்தீர்கள்?
ஊர்மிளா: தலித் சமூகத்தில் வசைகள் என்பது புதிதல்ல. காலையில் ஆரம்பிப்பது இரவில்தான் அடங்கும். அவர்களுக்கு வசையே ஒரு மொழியாகிவிட்டது. என் கதையில் வரும் கெட்ட வார்த்தைகள் அவர்களுக்குத் தெரியாததல்ல. நாம்தேவ் தஸால் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர் எழுத்தில் எவ்வளவோ வசைகள் இடம்பெறுகின்றன. தலித் இலக்கியத்தின் மொழி என்றே அது கருதப்படுகிறது. ஆனால் எனது கதையில் ஆண்கள் எப்படிப் பெண்களைப் பார்க்கிறார்கள் என்பதைச் சொல்லியிருக்கிறேன். பெண்கள் மீது வீசப்படும் வசைகளைத் தாங்கள் எவ்வளவு பிரயாசையின்றி கையாளுகிறோம் என்று அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. இந்த வசைகள் எல்லோரும் அறிந்தவை. எனவே, இவர்களின் தாக்குதல் எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. நான் இப்படி எழுதியது சரிதான் என்று யாரும் சொல்லவில்லை. மாறாக, தலித் சமூகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் என்னிடம் “ நீங்கள் எழுதுங்கள்; உயர்சாதிக்காரர்கள் நம்மிடம் எப்படி மோசமாக நடக்கிறார்கள் என்பதைப் பற்றி எழுதுங்கள். ஆனால் நம் ஆண்களின் குற்றங்குறைகளைச் சுட்டிக்காட்டுவது நல்லதல்ல” என்பார்கள்.
லதா: பெண்ணியவாதிகளிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைத்ததா?
ஊர்மிளா: நிறையவே கிடைத்தது.
லதா: எந்த விதத்தில்? அந்தக் கதை ஆபாசமாக இருக்கிறது என்ற மத அடிப்படைவாதிகளின் குற்றச்சாட்டை நீங்கள் எப்படித் தவிர்த்தீர்கள்? அந்த போராட்டம் எப்படியிருந்தது?
ஊர்மிளா: என்னைப் பொறுத்தமட்டில் அது ஒரு போராட்டமல்ல. உண்மையில் நான் மிகப் பிரபலமாகிவிட்டேன். பத்திரிகைகள் இந்தக் கதையைக் குறிப்பிட்டு, “அதைப் படித்துப் பாருங்கள். அது நல்ல கதையல்ல. ஏன் நல்ல கதை அல்ல என அறிவதற்காகப் படித்து பாருங்கள்” என்று எழுதின. இப்போதெல்லாம் நீங்கள் பிரபலமாகவேண்டும் என்றால், பொதுவாக எல்லோரும் செய்வதற்கு மாறாக எதையாவது செய்யவேண்டும். ஆகவே எல்லோரும் என்னைக் கவனிக்கத் தொடங்கினர். ஏதோ ஒரு மூலையில் இருந்த நான் சற்று வெளியே வர முடிந்தது.
லதா: இலக்கியத்திலிருந்து வெளிப்படும் இந்த மொழிநடை, குறிப்பாக தலித் அல்லது மற்றப் பிற்படுத்தப்பட்ட இனத்து எழுத்தாளர்களிடமிருந்து வெளிப்படுவது, மராட்டி இலக்கியத்தை வளப்படுத்துவதாக நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லது அதைக் கட்டுப்படுத்துகிறதா? உங்கள் அனுபவத்தைப் பற்றிக் கூறுங்கள்.
ஊர்மிளா: எந்த மொழியுமே அழகானதுதான். அது அழகாயிருப்பதற்குக் காரணம் அது மனித மனதைப் பிரதிபலிப்பதால்தான். சமுதாய வாழ்வின் ஒரு முக்கிய பகுதி மொழி. எனவே எல்லா பேச்சு மொழிகளும் இலக்கியத்தின் ஒரு பகுதியே. பண்படுத்தப்பட்ட மொழிதான் இலக்கியத்தின் தனிப்பட்ட மொழி என்பது உண்மையல்ல. சமூகம் மொழிகளாலும் சாதிகளாலும் பிரிக்கப்பட்டிருக்கிறது; ஒவ்வொரு பகுதிக்கும் தனிப்பட்ட அனுபவங்கள் இருக்கின்றன. அவை வரவேற்கப்பட வேண்டியவையே.
வேறுபாடுகளும் ஒதுக்கீடுகளும் :
லதா: சாதி எதிர்ப்பில் பல நிலைகளைக் காண்கிறோம். என் கணவர் ஆர். பி. ரவீந்திரா ஒரு பெண்ணியவாதி – அவரை உங்கள் அனைவருக்கும் தெரியும். ஏனென்றால் அவர் இங்கேதான் எஸ். என். டி. ட்டியில் பணிபுரிகிறார். நான் பராய் சாதியைச் சேர்ந்தவள் – அதாவது வெற்றிலை பயிரிடும் சாதி. பாங்லா, கான்புரி போன்ற இன வெற்றிலைகளை பயிரிடுபவர் பராய் இனத்தைச் சேர்ந்தவர்கள். மும்பாயில் இந்த இனத்தைப் பற்றி நிறைய பேருக்குத் தெரியாது. இந்தத் தொழில் மும்பையில் இல்லை. ஒரு ஆற்றின் கரையிலோ ஏரிக்கரையிலோதான் இந்தத் தொழில் மேற்கொள்ளப்படும். என் மாமியாருக்கு இந்தச் சாதி பற்றித் தெரியாது. எனவே என்னைத் தாழ்த்தப்பட்ட சாதியினரைவிடக் கீழாக நடத்தினார். இப்போது அதைப்பற்றி உங்களிடம் சொல்வதில் எனக்கு எந்தவிதத் தயக்கமுமில்லை. ரொம்ப நாளைக்கு அப்புறம்தான் அவருடைய தவறை அவர் ஏற்றுக் கொண்டார். அதற்கு இருபது வருடம் பிடித்தது. அதுவரை நானும் அந்தக் கஷ்டத்தை அனுபவித்தேன். எனது சாப்பாட்டுத் தட்டு தனியாக இருக்கும். எனக்குச் சரியாக உணவு கிடைக்காது. என் நாத்தனார் VJTIயில் பொறியியல் துறையில் பேராசிரியர். இருந்தால் என்ன, வீட்டில் என் நிலை அப்படித்தான். மும்பாயில் அல்லது நன்கு படித்த இனத்தினரிடையே இந்த மாதிரி நடப்பது சாத்தியமில்லை என்று கூற முடியாது. உண்மையில் நான் பலமாக எதிர்த்தேன், ரவியும் எனது எதிர்ப்புக்கான காரணத்தை புரிந்துகொண்டதால் அவரது வீட்டை விட்டு வெளியேறினார். இதனால்தான் நான் இன்னும் மணவாழ்க்கையில் இருக்கிறேன். ரவி மட்டும் அவர்களின் பேச்சைக் கேட்டிருந்தாரானால் நான் என் பெண்ணுடன் தனியாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்திருப்பேன். தலித் ஆண்கள் கூட, “எனக்கு ஒரு பிராமண மனைவி வேண்டும். ஆனால் அவள் என் சாதி பெயரை வைத்துக் கொள்ள வேண்டும்” என்றே விரும்புகின்றனர். மனைவிமேல் அதிகம் உரிமை இருப்பதாகக் கருதுவதால் இவ்விதம் நினைக்கிறார்கள். கணவரின் சாதிப் பெயரை நான் இணைத்துக் கொள்ள மறுத்துவிட்டேன். எனக்கு மகள் பிறந்ததும் என் மாமியார் நான் சமைத்ததைச் சாப்பிட ஆரம்பித்தார். இப்போது நான் புனிதமடைந்துவிட்டதாக அவர் கூறினார். பிராமண வித்திலிருந்து பிறந்த குழந்தை ஆனதால் என் கையால் சாப்பிடுவதில் எந்தப் பிரச்சினையுமில்லை. மூடிய வீட்டுக்குள் இந்த மாதிரி சின்னச்சின்ன விஷயங்கள் நடைபெறுகின்றன. சாதி வேறுபாடுகள் மூடிய வீட்டுக்குள் மறைக்கப்பட்டு விடுகின்றன. எனக்கு ஒரு தோழி. அவள் இரண்டாவது திருமணம் செய்திருந்தாள். முதல் திருமணத்தில் இரண்டு பையன்கள் இருந்தனர். அவள் ஒரு ஆபீசர். நாஸிக்கில் ஒரு நல்ல பதவியில் இருக்கிறாள். வீட்டுக்கு ஒரு நாள் சாப்பிட வந்திருந்தாள். என் மாமியாரும் நாத்தனாரும் அவளுடைய கணவனின் சாதி பெயர் பக்தாரிகர் என்பதால் அவளை ஒரு பிராமணப்பெண் என்று நினைத்தனர். எந்த பிரச்சினையும் எழவில்லை. என் மாமியார் உணவு பரிமாறுகையில், “குமுத், எங்கே வசிக்கிறாய் ?” என்று கேட்டாள். ஒரு மஹர் குடியிருப்பில் முதலில் வசித்ததாகச் சொன்னாள் அவள். அப்போதுதான் என் மாமியாருக்குள் எப்படிப்பட்ட குறுகிய மனம் இருந்ததென்பதை உணர்ந்தோம்.
ஏதோ ஒரு பாவம் செய்துவிட்டதைப் போல் ஆகிவிட்டது அவருக்கு. கையில் இருந்த பாத்திரம் கீழே விழுந்தது. இரத்த அழுத்தம் எகிறியது. “என்ன பாவம் செய்துவிட்டேன்! ஒரு மஹர் பெண்ணுக்கு -அவள் ஆபீசராயிருந்தால் என்ன – என் கையால் உணவு பரிமாறிவிட்டேனே? அவள் தட்டைத் தொட்டுவிட்டேனே?” என்றார். இதில் துரதிருஷ்டம் என்னவென்றால் என் மாமியார் ஓர் தலைமை ஆசிரியர். எனவே, அவர் பள்ளியில் என்னவிதமான மதிப்பீடுகளை ஏற்படுத்தியிருக்க முடியும் என்ற வியப்பு எனக்கு ஏற்படுகிறது. பல்வேறு சாதிக் குழந்தைகள் அந்தப் பள்ளியில் படிக்கிறார்கள். இப்போது ஊர்மிளாவின் அனுபவத்தைப் பார்ப்போம். ஊர்மிளா, மீனவர்கள் உங்களிடம் எவ்வாறு நடந்து கொண்டார்கள்? தினசரி உங்களிடம் எப்படிப் பழகினார்கள்? பிரிவுகள் பிராமணர்களுக்கும் தலித்துகளுக்கும் மட்டும் அல்ல, எல்லா சாதிகளுக்கும்தாம். உங்கள் அனுபவம் என்ன?
ஊர்மிளா: அவர்களும் சாதியத்தின் பிடியில் உள்ளவர்கள்தாம். இவை மனு ஸ்ம்ருதியிலிருந்து தொடங்குகின்றன. அவர்களும் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறார்கள். ஓர் உதாரணம் சொல்கிறேன். இதை என் சுயசரிதையில் சேர்க்க ஆசை. என் அம்மா எங்கள் வீட்டைத் தொட்டு ஒரு சிறிய அறையைக் கட்டினார். வாடகைக்கு விடலாம் என்ற எண்ணம். ஒரு முகமதிய தம்பதி வாடகைக்கு வந்தனர். சின்ன வயசு. கணவன் அப்துல்லா ஒல்லியாக இருந்தான். மனைவி கொள்ளை அழகு. சிவப்புக் கன்னம், கருவிழிகள். இருவரும் எங்கள் அறையில் தங்கினர். அவர்களுக்கு ஒரு குழந்தை. அதற்குக் கணை நோய். அவள் குழந்தையைக் கவனிப்பதே இல்லை. அப்துல்லாதான் பார்த்துக் கொள்வான். அவனிடம் அம்மா, “குழந்தையை முற்றத்தில் விடு, விளையாடட்டும். அப்போதான் குணமாகும்” என்பாள். அப்துல்லாவும் அம்மாவுடன் இருப்பான். பிறகு அவனுடைய கதையைச் சொன்னான். பம்பாயில் அந்தப் பெண் வீட்டில் அவன் வேலைக்காரனாக இருந்தான். அவர்கள் இருவரும் பம்பாயிலிருந்து இங்கே ஓடிவந்துவிட்டார்கள். அவள் ஒரு முஸ்லிம். அவள் கணவன் வெளிநாட்டில் இருக்கிறான். அங்கேயே இரண்டு மூன்று பேரை மணந்துகொண்டான். அவள் தன் தாய் வீட்டிலேயே இருக்க வேண்டியதாயிற்று. அங்கு வைத்துத்தான் அவளுக்கும் இவனுக்கும் தொடர்பு ஏற்பட்டது. அப்பாவுடன் சண்டை போட்டுக்கொண்டு இங்கே வந்துவிட்டார்கள். இதுதான் அவர்கள் கதை. ஒருநாள் இரண்டு பெண்கள் பம்பாயிலிருந்து அவளைப் பார்க்க வந்தனர். அவள் நிறைய அழுதாள். ஒருத்தி அவள் சகோதரி, மற்றவள் அவள் சொந்த மகள் – முதல் கணவனிடம் பெற்ற மகள். அவளும் அழகாக இருந்தாள். இரண்டு பேருக்குமே – தங்கைக்கும் மகளுக்கும் – என் வயதுதான் இருக்கும். என்னிடம் மிகவும் சினேகமாயிருந்தார்கள். ரத்னகிரியில் ராஜிவாடா என்ற ஒரு முஸ்லிம் பகுதி இருக்கிறது. மீன்பிடிப்பவர்கள் அங்கே வசிக்கிறார்கள். மீன்பிடித்துச் சந்தையில் விற்பார்கள். அங்கே கோலி இனத்து மீனவர்கள் கிடையாது. முஸ்லிம் சமுதாயம்தான் இருக்கிறது. அவர்கள்தாம் இந்தத் தொழிலை நடத்துகிறார்கள். அப்துல்லாவுக்கு அங்கே சில உறவுக்காரர்கள் உண்டு. மீன் விற்க வரும் பெண்கள் அப்துல்லாவிடம், “இந்த மஹர்கள்கூட ஏன் தங்கியிருக்கிறாய்? அங்கே வந்துவிடு” என்பார்கள். இப்படியே சொல்வார்கள். ஆனால் அவன் அதைக் கேட்பதில்லை. ஒருதடவை ஈத் விழா வந்தது. அவன் மனைவி கொஞ்சம் ஷீர் குருமா செய்து, ஒரு டிபன் பாக்ஸில் வைத்து எங்கள் மூவரிடமும் கொடுத்து “ராஜிவாடாவுக்குக் கொண்டுபோங்கள்” என்றாள். பிரியாணி எல்லாம் கொடுத்தாள். எங்கள் குடும்பத்துக்கும் தந்தாள். நான் அதைச் சாப்பிடும் போது என் அண்ணா, “அதைச் சாப்பிடாதே. அதில் மாட்டு மாமிசம் இருக்கும், சாப்பிடாதே” என்றான். அம்மா சொன்னாள் : “நாம்தான் செத்த மிருகத்தின் இறைச்சியைத் தின்னுகிறோமே, இதைச் சாப்பிட்டால் என்ன? சும்மா இரு.” பிறகு நாங்கள் அந்த டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டு ராஜிவாடா சென்றோம். மீன் பிடிப்பவர் பற்றித்தான் நமக்குத் தெரியுமே, சந்தை என்ன களேபரமாக இருக்கும் என்று. எங்கும் ஒரே அழுக்கும் குப்பையும். ஒரு பக்கம் மீன் வலைகள். இன்னொரு பக்கம் அழுகிய மீன்கள். வெயிலில் கொஞ்சம் மீன்கள் காயப்போடப்பட்டிருந்தன. ஒரே குப்பை மயம். சாக்கடை வேறு. ஈத் பண்டிகை. என்னுடன் வந்த பெண்கள் நகைகள் அணிந்து நல்ல புடவை உடுத்தியிருந்தனர். அந்த வீட்டுக்காரர்கள் என்னைப் பார்த்ததும் கோபத்துடன் “இங்கே உட்கார்” என்றனர். ஒரு பெஞ்ச் இருந்தது. அதில் என்னை உட்காரச் சொல்லிவிட்டு அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றனர். அந்த இரண்டு பெண்களும் நானும் நல்ல சினேகமாயிருந்தோம். உயிருக்குயிரான நட்பு. ஒருவரையொருவர் பார்க்காமல் இருக்கமுடியாது என்ற நட்பு. அவ்வளவு நெருக்கம். உள்ளே போனவர்கள் வெளியே வந்து, என்னை ஏறிட்டும் பார்க்காமல் `வா, போகலாம்’ என்றார்கள். டிபன் பாக்ஸ் அவர்கள் கையிலேயே இருந்தது. பையும் இருந்தது. நாங்கள் கிளம்பினோம். “என்ன நடந்தது?” என்று கேட்டேன். “ஒன்றுமில்லை” என்றனர். வரும்போது நாங்கள் ஒருவர் கையை மற்றவர் தோளில் போட்டுக் கட்டிக்கொண்டபடி வந்திருந்தோம். திரும்பிப் போகும்போதோ எல்லாம் மாறிவிட்டது. அவர்கள் தனியே நடந்தனர். நானும் விலகி நடந்தேன். விவரம் எனக்குப் பின்னர்தான் தெரிந்தது. மூத்தவள் பெயர் பேபி. அவள், “நமக்குத் தெரியாமல் போயிற்று. இப்போ இதை யார் சாப்பிடுவார்கள்? தீட்டுப்பட்டுவிட்டதே. அக்காவிடம் சொல்லவேண்டும். [இவர்கள் சாதியைப்பற்றி] நமக்குத் தெரியாதே” என்றாள். இப்படி நாங்கள் திரும்பி வந்தோம். மறுநாள் அந்த ராஜிவாடாப் பெண் வந்தாள். என் அம்மா உட்கார்ந்து நூல் நூற்றுக்கொண்டிருந்தாள். தன் உறவினரிடம் அந்தப் பெண் “ஏன் இந்த மாடுகளுடன் வசிக்கிறாய்? வா, என்னுடன் வந்துவிடு” என்றாள். அவர்களை மீன்கள், மீன்வலை குவிந்து கிடக்கும் அந்தக் குப்பை மேட்டுக்குக் கூட்டிக்கொண்டு சென்றாள். முஸ்லிம்களும் சாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை அன்றைக்கு உணர்ந்தேன். அன்றிலிருந்து அந்த இரண்டு பெண்களும் என்னிடமிருந்து பிரிந்து விட்டனர். பம்பாய்க்குச் சென்று விட்டனர். அந்தக் காயம் சிறுவயதிலிருந்து இன்னும் என் மனத்தில் இருக்கிறது.
மாணவர்: பம்பாய் போன்ற நகரத்தில் சாதி முறை எவ்வாறு இருக்கிறது?
ஊர்மிளா: பம்பாய் ஒரு Cosmopolitan நகரம். இங்கு அந்த மாதிரி கிடையாது. சாதி முறை எங்கு வெளிப்படையாகத் தெரிகிறது என்றால் இட ஒதுக்கீடு பிரச்சினை வரும்போது. அப்போது அவர்கள் எங்களைச் சீண்டுகிறார்கள். “இவர்கள் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள் – நம்மைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு. நமக்குரிய இடத்தை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள்” என்கிறார்கள். இட ஒதுக்கீடு என்று வரும் போது நான் கூறிவருவதுதான் சரி என்று நினைக்கிறேன். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் மேல்சாதியினரே எல்லா இடத்தையும் ஆக்ரமித்திருந்தனர். எங்கே பார்த்தாலும் நூற்றுக்கு நூறு சதம் அவர்கள்தாம். நமது அரசியல் சட்டம் இயற்றப்பட்டபோது பின்தங்கிய வகுப்பினருக்குச் சற்று முன்னேறச் சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது. அந்த மாதிரி இட ஒதுக்கீடு இல்லாதிருந்தால் என்னால் படித்திருக்கவே முடியாது. எங்கள் கிராமத்தில் என் வயதுப் பெண்கள் – என்னைவிடச் சிறியவர்கள் கூட – சந்தைக்கு விறகு சுமந்து விற்று வருவார்கள். உண்ண உணவில்லை, உடுக்க உடையில்லை. ஒன்றுமேயில்லை. எங்கள் தந்தை எங்களை ரத்னகிரி அழைத்து வராதிருந்தால், அம்மாவிடம் எங்களை நன்கு படிக்க வைக்கவேண்டும் என்று சொல்லாமலிருந்தால், நானும் அவர்களைப் போல்தான் இருந்திருப்பேன். நான் இங்கே வந்திருக்கவே முடியாது.
லதா: முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் பூலேயை பற்றிக் குறிப்பிடும் போது ஜோதிபா பூலே தன் எண்ணங்களை அவர் மேல் திணித்தார் என்றும், அதனாலேயே அவர் ஆசிரியராக வர முடிந்ததென்றும் சொல்வார்கள். இப்படி ஒரு விமர்சனம் இருக்கிறது. ஜஸ்டிஸ் ரானடேயை பற்றிக்கூறும் போதோ அவர் ரமாபாய்க்கு இளவயதிலேயே கற்பித்தார் என்று சொல்வார்கள். ஆனால் பூலே விஷயத்தில் அது திணித்தல் ஆகிவிடுகிறது. 1848ல் பூலே பெண்களுக்கான ஒரு பாடசாலையை ஆரம்பித்தார் என்று கேள்விப்பட்டபோது எனக்கு வியப்பு ஏற்பட்டது. இது நமது வரலாற்றிலோ பெண்கள் வரலாற்றிலோ இடம் பெறவில்லை. ஈஸ்வர சந்திர வித்யாசாகர் 1850லோ 1852லோ தொடங்கியதுதான் முதல் பெண் பாடசாலை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. காலவரிசைப்படி நாம் இந்த விவரத்தைச் சரி செய்ய வேண்டும். அதுபோல சாவித்ரிபாயிதான் முதல் பெண் ஆசிரியர். அன்று அவர் இருந்திராவிட்டால் இன்று நாம் இங்கிருந்திருக்க முடியாது. நாம் இருந்தாலும், ஊர்மிளா இங்கிருந்திருக்கமுடியாது – இடஒதுக்கீடு மட்டுமில்லாதிருந்தால்.
ஊர்மிளா: இட ஒதுக்கீடு தேவைதான். அது தொடர்ந்து இருக்கவேண்டும். துப்புரவுத் தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில் நூறு சதவீதம் தலித்துகளுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த பிராமணனை அங்கே பார்க்க முடியும்? யாராவது பிராமணர்கள் அதில் இருக்கிறார்களா? ஏன் அவர்கள் அங்கே போய் இடஒதுக்கீடு கேட்கக் கூடாது? “நானும் தெரு கூட்டுகிறேன், கக்கூஸ் சுத்தப்படுத்துகிறேன். நான் ஏன் அதை செய்யக் கூடாது?” என்று சொல்லட்டுமே?. . . டாக்டர் அம்பேத்கர் சொல்லியிருக்கிறார் : இரண்டு குதிரைகள் – ஒன்று ஆரோக்கியமானது, பசியோடிருக்கிறது. இன்னொன்று பலவீனமானது, பசியோடிருக்கிறது. புல்லை அவற்றின் முன் இடுகிறீர்கள். எந்தக் குதிரை நிறையச் சாப்பிடும் – ஆரோக்கியமானதா பலவீனமானதா? ஆகவே, இரண்டையும் முதலில் ஒரேமாதிரி ஆரோக்கியமாக்குங்கள். அதன்பிறகு இரண்டையும் பந்தயத்தில் விடுங்கள்.”
குடும்பச் சித்திரம் :
லதா: தனிப்பட்ட முறையில் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நீங்கள் எழுத்தாளர். உங்கள் கணவர் எழுத்தாளரல்ல. நீங்கள் எழுதும் பாணி, நீங்கள் பெற்றிருக்கும் பெயர் இவற்றைப் பற்றிய அவருடைய எதிர்வினை என்ன? உங்கள் சமகால தலித் இலக்கியவாதிகளிடம் அவருக்கு நல்ல மதிப்பு இருக்கும். நீங்களும் இலக்கியவாதியாக கருதப்படும்போது அவருடைய நிலை என்ன?
ஊர்மிளா: அவருக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் ஒரு மனைவி கணவனை விட முன்னே செல்லும்போது எல்லோரும் அவனைக் கேட்கத்தான் செய்கிறார்கள்; சிறிது மனக் கஷ்டமும் பொறாமையும்கூட இருக்கலாம். ’ஆம்ஹீஹி இதிஹாஸ் கடவல’ நூலுக்காக நான் பெண்களைப் பேட்டி கண் டபோது, இயக்கத்திற்காகப் பிற ஆண்களுடன் வெளியே சென்றதற்காக அவர்கள் கேலி செய்யப்பட்டதாகக் கூறினர். அவர்கள் கணவர்கள்கூட, “போ, உங்கள் மாப்பிள்ளைகள் உங்களை அழைத்துச் செல்ல வந்திருக்கிறார்கள். போய் ஜாலியாக இரு” என்பார்களாம். எல்லாக் கணவர்களும் அப்படித்தான். விளம்பரங்களில் காட்டப்படும் கணவன்மார்கள்போல்தான். தங்களை நல்ல கணவன்மார்களாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அவருடைய நண்பர், உங்கள் மனைவி எழுதியதைப் படித்தேன். நன்றாக எழுதுகிறாள் என்று சொன்னால், அவருக்கு பெருமையாகவும் இருக்கிறது.
லதா: உங்கள் பெண் குழந்தைகள் எப்படி? அவர்கள் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கிறதா?
ஊர்மிளா: பெண்கள் புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஆயிற்றே. ஆனால் ஒரு தாய் செய்ய வேண்டிய கடமைகள் எல்லாம் நான் செய்ய வேண்டும் என்பதை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அம்மா காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். சாப்பாடு தயாரித்து, டிபன் கட்டித்தருதல் எல்லாம் செய்யவேண்டும். இதுதான் அவர்களுக்கு வேண்டியது. அம்மா தனது கடமைகளை முதலில் செய்யட்டும். பிறகு அவளுக்கு என்ன செய்யவேண்டுமென்று தோன்றுகிறதோ அதைச் செய்து கொள்ளட்டும். இதுதான் அவர்களின் மனோபாவம். என்றாலும், என் சிறுவயதில் பார்த்த மனிதர்களைப்போல பழமைவாதிகளல்ல. ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையேயான உறவுகள் பற்றி, எனது ஆண் நண்பர்கள் பற்றியெல்லாம் நான் சொல்ல முடிகிறது. என் கணவரிடம் ஓர் ஆணை இவர் என் நண்பர் என்று சொல்ல முடியாது. அந்த நண்பரை ஒரு சகோதரனாகக் கருதுகிறேன் என்று சொன்னால்தான் அவரால் ஏற்றுக்கொள்ள முடியும். எனது குழந்தைகளைப் பற்றி : இளையவள் லீலாவதி ஆஸ்பத்திரியில் லாப் டெக்னிஷியன். மூத்தவள் மாளவிகா உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியர்.
லக்ஷ்மி: ஊர்மிளாஜி, “நான் என் பெண்களுக்காக நிறையச் செய்யவில்லை என்று நினைக்கிறேன்” என்று சொன்னீர்களே, ஏன்? இந்த மாதிரி ஏன் நினைக்கிறீர்கள்?
ஊர்மிளா: அப்பாதான் குடும்பத்தின் தலைவர் என்ற உணர்வு நம்மைவிட்டுப் போகவில்லை என்பதை நான் மறக்கவில்லை. அது நம்மைவிட்டுப் போகாது. நான் அப்படி நினைப்பதற்கும் என் கணவர்தான் பாதி காரணம். இவள் படிக்கிறாள், காலேஜ் போகிறாள், லைப்ரரி செல்கிறாள் என்றெல்லாம் உணர்ந்து அவர் ஒத்துழைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் `இவள் குழந்தைகளைக் கவனிக்காவிட்டால் நானும் கவனிக்கமாட்டேன். அவள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்’ என்று நினைத்தார். இப்படியே எல்லா விஷயத்திலும் அவர் நினைத்ததால் குழந்தைகள் எங்களை விட்டு விலகிப் போய்விட்டனர். என் குழந்தைகளைப் பற்றிக் கேட்டீர்கள் . . . எனக்கு மூன்று குழந்தைகள். மூத்த பையன் MBBS இரண்டாம் வருஷம் படித்துக் கொண்டிருந்தான். கூட்ட நெரிசலில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்துவிட்டான். ஒரே பயங்கரம். மறக்க முடியாத நினைவு அது. அங்கேயே இறந்து விட்டான். முன்பெல்லாம் நிறையப் படிப்பேன். படிப்பிலேயே மூழ்கி விடுவேன். அந்தத் துயர நிகழ்ச்சிக்குப் பிறகு அதிகம் படிக்க முடியவில்லை. 1988ல் நடந்தது அது. இந்தப் பத்து ஆண்டுகளில் நிறையவே எழுதி விட்டேன். எழுத்திலேயே என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். எழுதும்போது மனமும் எண்ணமும் ஒரு நிலையில் இருக்கிறது. எழுதுவதன் மூலமே அந்தச் சோகத்திலிருந்து சற்று வெளியே வர முடிகிறது.
லக்ஷ்மி: உங்கள் மகளின் திருமணத்தை நடத்தி வைத்தீர்களே, அதுமாதிரி வேறு எந்த அம்மாவாலும் செய்திருக்க முடியாது. உங்கள் மகள் `அம்மா எனக்கு பக்கபலமாக இருந்தாள்’ என்று உங்களைப் பற்றி மிகவும் பெருமைப்படுவாள். உங்களை உங்கள் மகள் குற்றம் சொல்லவே முடியாது.*** நீங்கள்தான் உங்களையே குறை சொல்லிக்கொள்கிறீர்கள் – உங்கள் கணவரைப்போல. உங்கள் பெண்கள் அப்படி நினைக்கவே மாட்டார்கள்.
ஊர்மிளா: பெரியவள் கல்யாணத்தில்தான் பிரச்சினை இருந்தது. நான் நடந்து கொண்டதில் அவளுக்கு மிகத் திருப்தி. `அம்மாவால்தான் நான் நன்றாக இருக்கிறேன்’ என்று அவள் நினைக்கிறாள். அவளுடைய இப்போதைய கணவர்கூட “ நீங்கள் ஜான்சி ராணி மாதிரி போராடினீர்கள். அதனால்தான் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என்கிறார். என்னிடமே சொன்னார் அப்படி.
_________________
* ஊர்மிளா பவாரின் ஒரு குழந்தைப் பருவத்துக் கதை பயிலரங்கில் படிக்கப்பட்டது. அப்போது ஊர்மிளாவின் கண்கள் நிறைந்து விட்டன. அதைத்தான் குறிப்பிடுகிறார். அந்தக் கதை இணைப்பாக இங்கு தரப்பட்டுள்ளது.
** ’பலூத்தா’: தயா பவாரின் சுயசரிதை
*** ஊர்மிளாவின் மகள் தன் நண்பனைக் காதலித்து வந்தாள்; ஆனால் அவன் என்ன நினைக்கிறான் என்று அவளால் திட்டவட்டமாக அறிய முடியவில்லை. எனவே, வீட்டார் பார்த்துவைத்த திருமணத்திற்கு ஒத்துக் கொண்டாள். திருமணத்திற்குச் சில நாட்களே இருக்கும்போது அவள் நண்பன் தனது காதலை வெளிப்படுத்தினான். தன் மகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதுதான் ஊர்மிளாவின் ஒரே விருப்பமாக இருந்தது. என்ன வந்தாலும் மகளுக்குப் பக்கபலமாக இருக்கவேண்டும் என்று எண்ணினார். திருமணத்தைத் தடுத்து நிறுத்த அவரால் முடியவில்லை. ஆனால், அவரது கணவரின் உறவினர்களின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில், ஊர்மிளா அந்தத் திருமணத்தைச் செல்லாது என்று மாற்றி தன் மகளை அவள் விரும்பியவனுக்கே மணமுடித்து வைத்தார்.
குறிப்பு:
இந்தப் பிரதியும் ஓவியங்களும், புகைப்படங்களும் ஸ்பாரோ அமைப்பின் காப்புரிமைக்கு உட்பட்டவை. இவற்றை யாரும் எந்தத் தளத்திலும் வேறு எந்தப் பதிப்பிலும் உபயோகிக்க அனுமதி இல்லை.
தொடர்புள்ள பதிவு:
ஆங்கில பிரதி உருவாக்கம் : சி. எஸ். லக்ஷ்மி
தமிழ் தொகுப்பு : எம். சிவசுப்ரமணியன்
கோட்டோவியங்கள் : இரீனா ஸாக்கியான்
One Reply to “நாங்களும் படைத்தோம் வரலாறு”