சிவன் ஆடிய களம்

கபில்தேவ் தலைமையில் நமது அணி 1983ல் உலகக்கோப்பை வென்றது இந்திய கிரிக்கெட் வரலாற்றின் முக்கிய திருப்புமுனை. அத்தொடரில் இங்கிலாந்து நெவில் மைதானத்தில் இந்தியாவுக்கு தோல்வி நிச்சயமென உறுதியாகிவிட்ட நிலையில் கபில்தேவ் விஸ்பரூபம் எழுந்தருளி 175 ரன்களை அடித்து அவுட் ஆகாமல் வெற்றி வாகை சூடினார். இன்று இந்திய மண்ணில் எங்கெங்கும் கிளைத்து வளர்ந்து பரவியிருக்கும் கிரிக்கெட் விருட்சத்தின் விதை நெவில் மைதானத்தில் முளைத்தது என்றே கூறலாம். பிபிசி ஸ்டிரைக் காரணத்தால் சரித்திர புகழ் பெற்ற அந்த மாட்ச் வீடியோவில் பதிவாகும் வாய்ப்பை இழந்தது. நேரடி ஒளிபரப்பும் நிகழவில்லை.

அசலான சாகசங்கள் உலகில் அரிதாகவே நிகழ்பவை. மானுடத்தின் பெரும்பான்மையான வாழ்க்கை என்பது அசல் சாகசங்களின் நிழல்களில் வசித்தபடி, அசலை நகல் செய்யும் முயற்சிகளிலேயே கடந்து சென்று விடுகிறது. சமீபத்தில் வெளியான 83 எனும் திரைப்படம் கூட அசலை நகல் செய்யும் ஒரு முயற்சியே. லண்டனில் கொரோனா முதல் அலை வீசிய நேரத்தில் நானும் எனது கல்லூரி நண்பர்களும் கபில் ஆடிய அந்த நெவில் மைதானத்தை நேரில் சென்று காண முடிவு செய்தோம். கொரோனா காரணத்தால் அப்போது பல நண்பர்கள் வேலையை இழந்து பதட்டத்தில் இருந்தனர். சிலருக்கு விசா முடிந்து இந்தியா திரும்பி செல்ல வேண்டிய நிலை. தேசங்கள் விமான போக்குவரத்தை ரத்து செய்திருந்தன. நட்புகள் உறவுகள் வட்டத்தில் கொரோனா மரணங்கள் தொடர்ந்தபடியிருக்க, லாக்டவுன் உச்சத்தில் பித்து பிடித்து சிறைக்கைதிகளாய் தவித்த நேரத்தில், நண்பர்கள் அனைவரும் நெவில் மைதானத்தில் சந்திக்கலாம் என்ற யோசனை எனக்கு பெரும் கிளர்ச்சியை தந்தது.

நான் வசிக்கும் ஊரிலிருந்து நெவில் மைதானம் நான்கு மணி நேரப்பயணம். மூன்று ரயில்கள் மாறவேண்டும். அதிகாலையில் எழுந்ததுமே பரபரப்பு தொற்றிக் கொண்டது. முதல் ரயில் தலைநகர் லண்டன் நோக்கி செல்லும் தேம்ஸ் லிங்க் எக்ஸ்பிரஸ். பெட்டிக்கு ஒருவர் என்ற ரீதியில் அந்த ரயிலை அத்தனை காலியாய் பார்த்ததேயில்லை. வசந்தம் முடிந்து கோடை துவங்கிய காலமென்பதால் ரயிலின் கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே எங்கெங்கும் பச்சை மின்னியது. ரயில் முன்னே செல்ல என் நினைவுகள் பின்னே நகர்ந்தன.

எண்பதுகளின் முற்பகுதியில் இந்திய கிராமங்களுக்குள் டிவி நுழையாத காலம். நகரத்தில் வசதியான சில வீடுகளில் மட்டுமே கறுப்பு வெள்ளை டிவி இருந்தன. வேகமாய் பெருகிய ஜனத்தொகையும் வேலையில்லா திண்டாட்டமும் சமூகத்தின் பிரதான பிரச்னையானதால், கிரிக்கெட் பற்றிய புரிதலோ விவாதங்களோ மக்களிடம் அப்போது இருக்கவில்லை. சிலர் ரேடியோவில் கமெண்டரி கேட்பதுண்டு. 1983 உலகக் கோப்பை சீசன் முன்புதான் கலர் டிவிகள் வரத்துவங்கின. அவ்வருடம் உலகக்கோப்பை வென்ற பிறகுதான் கிரிக்கெட் பித்து இந்தியாவின் பட்டி தொட்டியெல்லாம் பரவத் தொடங்கியது.

லண்டன் கிங்ஸ் க்ராஸ் ரயில் நிலையத்தில் இறங்கி தெற்கு லைன் பிடித்து ப்ராம்லி நோக்கி பயணத்தை தொடர்ந்தேன். ப்ராம்லியில் சில நண்பர்கள் காரில் காத்திருக்க, பல்வேறு திசைகளிலிருந்து வந்த நண்பர்களை இணைத்துக்கொண்டு நெவில் மைதானத்தை நோக்கி வாகனங்கள் புறப்பட்டன. நெடுஞ்சாலையோரங்களில் விவசாயிகள் விற்ற செர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ப்ளம்ஸ், பீச் போன்ற பல வகை பழங்கள் கண்களை கவர்ந்தன. நம்மூர் இளநீர், நுங்கு, வெள்ளரி, தர்பூசணி நினைவு வர காரை நிறுத்தி செர்ரி பெர்ரி என பழங்களை வாங்கி குவித்தோம். தேசங்களும் பழங்களும்தான் மாறுகின்றனவே தவிர நமது பழக்கதோஷங்கள் மாறுவதில்லை. கனிந்த பழங்களால் சிறிது நேரத்தில் கார் முழுக்க பழ வாசனை. முகக்கவசம், சமூக இடைவெளி என அதுவரை ராணுவ ஒழுங்குடன் பயணித்த நாங்கள் சட்டென்று சங்ககால குரங்குகளாய் மாறி சுவையான பழங்களை உண்டு மயங்கிப்போனோம்.

1987ல் எனது சித்தியும் சித்தப்பாவும் புதுத் தம்பதிகளாய் எங்கள் வீட்டுக்கு திருமண விருந்துக்காக வந்திருந்தார்கள். சித்தப்பா வாய் பேசாத காது கேளாத மாற்றுத்திறனாளி. அவரை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு சிறுவனான என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் வரும்பொழுதே 87 உலகக்கோப்பை போட்டியின் அட்டவணையை கையில் வைத்திருந்தார். எங்கள் வீட்டில் டிவி இல்லாததால் தெருவில் இருவரும் நடந்து செல்வோம். எந்த வீட்டின் டிவியிலிருந்து கிரிக்கெட் சப்தம் கேட்கிறதோ உள்ளே நுழைந்துவிடுவோம். ஒரு நாள் நாங்கள் உள்ளே சென்றது போலீஸ்காரர்களின் வீடு. சிறிய கருப்பு வெள்ளை டிவி வைத்திருந்தினர். காவல்துறையில் ஒட்டுனர்கள், சமையல்காரர்கள், பேண்டு வாத்தியம், முடி வெட்டுபவர்கள், தோட்டக்காரர்கள் என பல கிளைத்துறைகள் உண்டு. சமையல் போலீஸ் சுவையான பலகாரங்கள் செய்து கொடுக்க, இசைப்போலீஸ் ட்ரம்பெட் வாசிக்க, டிவியில் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு ஓடிக்கொண்டிருக்க, எனது சித்தப்பாவுக்கு சந்தோஷம் தாளவில்லை. மட்டையை இப்படி அடிக்கணும், பந்தை அப்படி போடணும் என்று சைகை கமென்ட்ரி கொடுத்தபடி இருந்தார். இன்று IPLல் பீப்பீப்பீ என்று ஊதப்படும் ஆதிஒலியின் வடிவத்தை ஒரு போலீஸ்காரர் ட்ரம்பெட்டில் அன்றே ஊதிக்கொண்டிருந்தார். அந்த வீடே ஒரு ஸ்டேடியம் போல் அதிர்ந்தது.

நெவில் ஸ்டேடியத்தை நெருங்க நெருங்க நெஞ்சத்தில் பட்டாம்பூச்சிகள் பறக்க துவங்கின. ராயல் டன்ப்ரிட்ஜ் வெல்ஸ் எங்களை அன்புடன் வரவேற்றது. வெகுநேரம் அமர்ந்தே பயணித்ததால் காரிலிருந்து இறங்கி நடக்க துவங்கினேன். ஸ்டேடியம் நுழைகின்ற தெருவின் இருபக்கமும் தபாலட்டை புகைப்படங்கள் போல அழகிய வீடுகள். நன்கு பராமரிக்கபட்ட தோட்டங்கள், வீட்டின் வாசல்களில் பூங்கொத்துகளை நீட்டி வரவேற்றன. ரோஜாக்கள் நிறைந்த ஒரு வீட்டில் வயதான தம்பதியர் சூரிய ஒளியில் சிவனும் சக்தியுமாய் புன்னகையுடன் ஜொலித்தனர்.

‘காலை வணக்கங்கள்’ என்றேன்.

‘குட் மார்னிங். அதென்ன சமீபத்தில் நிறைய இந்தியர்கள் இந்த மைதானத்தை நோக்கி படையெடுக்கிறீர்கள்?’ என்றார் சிவன்.

‘கபில் ஆடிய களம்’ என்றேன்.

‘ஆம். இந்த ஸ்டேயத்தில் நிகழ்ந்த ஒரேயொரு சர்வதேச போட்டி அது. லோக்கல் மாட்சுகள் மட்டுமே பார்த்த எங்கள் விழிகளுக்கு அன்று கபில் ஆடியது மாபெரும் தரிசனம்’ என்றார்.

சக்தி நடுவில் புகுந்து ‘ சில மாதங்கள் முன்பு இங்கே 83 சினிமா ஷூட்டிங் நடந்தது. கபில் வந்திருந்தார். வேடிக்கை பார்த்த எங்களுக்கு ஒரு வாரம் சுவையான இந்திய சாப்பாடு. டிக்கா மசாலா அருமை’ என்று சிரித்தார்.

எங்களது பேச்சொலியால் கவரப்பட்டு பக்கத்து வீட்டின் தோட்டத்திலிருந்த பெண்மணியொருவர் அருகில் வந்து அரட்டைக்குள் புகுந்தார். அவரது வீடு ஸ்டேடியத்தை ஒட்டிய வீடு. 83ல் கபில் விளாசிய சிக்ஸர்களில் சில பந்துகள் அவரது வீட்டின் கூரையில் அடித்து விழுந்த இடங்களை சுட்டி காண்பித்தார். அவரது உறவினர் ஒருவர் அந்த பந்தை பல வருடங்கள் பத்திரமாய் வைத்துள்ளார் என்பது சுவாரசியமான தகவல். நாங்கள் அவர்களுக்கு நன்றி கூறி விடைபெற்று ஸ்டேடியத்தை நெருங்கினோம். காரிலிருந்து கிரிக்கெட் மட்டை, பந்து, ஸ்டம்புகளை எடுத்துக் கொண்டு நெவில் மைதானத்துக்குள் நுழைந்தோம்.

எண்பதுகளில் மரங்களை வெட்டி செதுக்கி இழைத்து கிரிக்கெட் மட்டை செய்து விளையாடிய நாங்கள், தொண்ணூறுகளில் காசு கொடுத்து மட்டைகள் வாங்கினோம். இந்தியாவின் தாராளமயக் கொள்கைக்கு பிறகு எங்கள் வீட்டில் கலர் டிவி நுழைந்தது. கிரிக்கெட்டுக்காக நான் முதலில் அழுதது 1992ல் இந்தியா தோற்றவுடன். அவ்வருடம் உலகக்கோப்பையை பாகிஸ்தான் வென்றது. 1995ல் காம்ப்ளி அழுதார். கோப்பை இலங்கைக்கு சென்றது. அதன் பிறகு ஆஸ்திரேலியாவே தொடர்ந்து ஜெயித்து மற்ற நாட்டினரை அழவைத்தனர். பல வருடங்கள் கழித்து தோனி தலைமையில் இந்தியா மீண்டும் உலகக் கோப்பை வென்றது. கபிலுக்கும் தோனிக்கும் இடைப்பட்ட இருபத்தியெட்டு ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் அடைந்த மாற்றங்கள் எண்ணற்றவை. கிரிக்கெட்டை வாழ்வாதாரமாக்கி பல குடிசை தொழில்கள் உருவாகின. கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்திட்ட மட்டைகள், பந்துகள், ஸ்டம்புகளின் விற்பனைகள் பெருகின. விளம்பரங்கள். சூதாட்டங்கள். கனவுகள். காமென்டரிகள். ஒளிபரப்பு உரிமங்கள். தினசரி பத்திகள். வார இதழ் கட்டுரைகள். சிறுகதைகள். நாவல்கள். விசிறிகள். புகைப்படங்கள். திரைப்படங்கள். புதிய ஸ்டேடியங்கள். அரசியல் சினிமா பிசினஸ் அனைத்தும் கிரிக்கெட்டுடன் இணைந்து மாபெரும் விசையாகி சமூகத்தை இயக்கின. 83ல் வெற்றிபெற்று நாடு திரும்பிய நமது அணிக்கு பரிசளிக்க கூட நிதியில்லாத பிசிசிஐ, அப்போது லதா மங்கேஷ்கர் அவர்களை டில்லிக்கு அழைத்து நிகழ்ச்சி நடத்தி இருபது லட்சம் திரட்டி ஆளுக்கொரு லட்சம் கொடுத்தது. இன்றோ ஒளிபரப்பு உரிமம் கொடுப்பதன் மூலம் பிசிசிஐக்கு கிடைக்கும் வருமானம் மட்டுமே 3500 கோடி.

குறுகலான ஒரு நுழைவாயில் வழியே நெவில் ஸ்டேடியத்தினுள் சென்றதும் சட்டென்று பிரம்மாண்டமாய் வானம் மேலே விரிய கீழே மரகதக் கம்பளமாய் ஆடுகளம் பிரகாசித்தது. இதமான வெயில். சுத்தமான காற்று. மனித சஞ்சாரங்கள் ஏதுமற்று கைவிடப்பட்ட ஒரு கோவிலின் அமைதி அங்கே நிலவியது. நீல வானில் வெண்மேகங்கள் எங்களை ஆர்வத்துடன் வேடிக்கை பார்க்க துவங்கின. அன்று கபில் ஆடிய சிவ நடனத்தை நகல் செய்தவாறு நாங்கள் ஆடத் துவங்கினோம். பவுலிங் பேட்டிங் ஃபீல்டிங் என ஆட்டம் களைகட்டியது. வேகமாய் அடிக்கப்பட்ட பந்து பவுண்டரி தாண்டி சென்று ஒரு புதருக்குள் மறைந்து தொலைந்து போனது. வெடிச்சிரிப்பும் வியர்வையுமாய் எங்களை மறந்து ஆடியதால் கொரோனா இறுக்கங்கள் மனதைவிட்டு தளர்ந்து குறைந்து மறையத் தொடங்கின. கபில் நடந்த மண்ணில் நாங்களும் நடக்கிறோம் என்பதை நம்ப இயலாமல், கனவும் நனவும் பிணைந்ததோர் காட்சிப் பிழைக்குள் மிதந்துக் கொண்டிருந்தோம்.

நெவில் மைதானத்தில் நடந்த ஒரேயொரு சர்வதேசப் போட்டி வீடியோ எடுக்கப்படாததால், பிபிசி எடுத்த சில புகைப்படங்கள் மட்டுமே காண்பதற்கு உள்ளது. நடராஜர் தாண்டவம் போல் ஒற்றை காலை தூக்கி கபில் ஆடியபடி நிற்கும் ஒரு புகைப்படம் மிகப் பிரபலம். அந்த போட்டோக்கள் அனைத்தின் பின்னணியிலும் அடர்த்தியாய் அந்திவண்ணத்தில் மலர்கூட்டம் தென்படுவதை காணலாம். பொன்னார் மேனியன் என்றாலே அந்திப்பொன் தானே? நாகலிங்கப்பூ சிவனுக்கு உகந்த மலர். நாகலிங்க மரத்தின் கீழ் உதிரம்போல் உதிர்ந்தோடி நிரம்பியிருக்கும் நாகலிங்கப் பூக்களை சிறு வயதில் விளையாடும் போது பார்த்ததுண்டு. பிபிசி புகைப்படங்களில் பார்த்த அம்மலர்கள் நினைவு வர, நெவில் மைதானத்தின் எல்லைக்கு வெளியே தெரிந்த புதர்களை உற்று நோக்கினேன்.

‘ரோடடென்றான்’ என பரவசமாய் கூவியபடி நந்தனார் போல பவுண்டரி லைன் நோக்கி ஓடினேன். சில நண்பர்கள் குழப்பத்துடன் என்னை பின்தொடந்து ஓடி வந்தனர். செடியா புதரா மரமா என கூற முடியாதபடி சிறியதும் பெரியதுமாய் விண்ணை தொடுகின்ற பேராசையுடன் ரோடடென்றான் அடர்ந்து படர்ந்து உயர்ந்து வளர்ந்திருந்தன. செடிகளின் இடுப்பில் அமர்ந்தபடியும் புற்தரையில் உதிர்ந்து உருண்டோடி விளையாடியபடியும் இளஞ்சிவப்பு ரோடடென்றான் பூக்கள் மழலைகளாய் கண் சிமிட்டின. இவைதானே பிபிசி புகைப்படங்களில் சிரித்தவை. இந்த பூக்களின் மூதாதையர்கள் 83ல் நடந்த சிவ நடனத்தை நேரில் கண்டு களித்து இருக்குமல்லவா? அப்பூக்களின் நகல் வடிவங்கள்தானே இவை? பிரபஞ்ச பெருவெடிப்பின் அதிர்வுகள் நமக்குள் என்றும் இருப்பதுபோல, கபில் அன்று விளாசியதன் அதிர்வுகள் இன்றைய ரோடடென்றான் மலர்கள் ஒவ்வொன்றிலும் மின்னின. அந்தி சாய்ந்ததும் நண்பர்கள் அனைவரும் மன நிறைவுடன் வீடு திரும்பினோம்.

கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை முடிந்து தற்சமயம் மூன்றாவது அலை வீசிக் கொண்டிருக்கிறது. இந்த அலைகளில் விடாமுயற்சியுடன் நீந்தியபடி மனிதர்கள் மெல்ல மேலெழுகிறார்கள். சென்ற வருடம் கபில்தேவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஆஸ்பித்திரியில் சிகிச்சை பெற்று மீண்டெழுந்தார். அன்று வேலை இழந்த நண்பர்களுக்கு வேறு சில வாசல்கள் திறந்து பணியில் அமர்ந்துவிட்டனர். உறவுகளை நட்புகளை இழந்து வலியில் துவண்ட பிறகு வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நாம் நகர்வதை தவிர வேறு வழியில்லை. எதிர் வரும் காலங்களில் மனிதர்கள் மீண்டும் பல புதிய சாகசங்களை நிகழ்த்தியாக வேண்டும். அதை காண்பதற்கு மலர்கள் மீண்டும் மீண்டும் பூத்துக் கொண்டேதான் இருக்கும். நகல் செய்து நகல் செய்து மானுடம் நம் கைகளில் திணித்த வாழ்வென்பது நம்பிக்கைகளாலும் சாகசங்களாலும் நெய்யப்பட்டதோர் நீண்ட சரடுதானே?

14 Replies to “சிவன் ஆடிய களம்”

 1. அருமையான கட்டுரை..இந்த அற்புதமான கட்டுரையின் மூலம் நாம் அனைவரும் திரும்பிச் சென்று நமது கடந்த கால மகிழ்ச்சியான கிரிக்கெட் நாட்களை உணர முடியும். உங்கள் கனவை நனவாக்க நெவில் மைதானத்திற்குச் செல்ல உங்களுக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது என்று நினைக்கிறேன்

 2. கிரிக்கெட் வணிகங்கள் மனதில் புகாத இளமை பருவ கிரிக்கெட் நினைவுகளை அசை போட வைக்கும் அற்புதமான கட்டுரை.
  அதை விட ஆதியும் அந்தத்தையும் சித்தாந்தமும் ‌‌‌‌‌‌‌‌‌இனைத்து நெய்யப்பட்ட நீண்ட சரடு போல் இருந்தது இன்னும் சிறப்பு…

 3. அருமையான கட்டுரை மற்றும் முற்றிலும் மாறுபட்ட தலைப்பிலும் இருப்பது புதுமை. யாரும் நடராஜர் ஆடிய ஆட்டத்தை மட்டைப்பந்து வீரர் கபில் தேவ் ஆட்டத்தோடு
  ஒப்பிட்டு சொல்லப்பட்ட சிந்தனையை சிந்தித்து எழுதிய கதை ஆசிரியர் ராஜா அவர்களுக்கு என் பாராட்டு மற்றும் மேலும் புதிய படைப்புகளை
  படைக்க வாழ்த்துக்கள்.
  நன்றி
  தேவி

 4. மிகச்சிறப்பான பதிவு. 83 உலகக்கோப்பை இந்தியா வென்றதற்குக் காரணமான கபில்தேவின் ஆட்டத்தைக் காணமுடியாத நினைவேக்கம் என்னும் புள்ளியில் அழகான தொடக்கம் அமைந்துவிட்டது. அநேகமாக நானும் உங்கள் வயதுக்காரனாக இருப்பேன். அந்தப் பந்தயம் நடைபெறும்போது நான் ஹொஸபேட்டெ என்னும் ஊரில் இருந்தேன். மல்லிகெ, சன்மான் என இரு ஓட்டல்களின் வளாகத்தில் உயரமான ஓர் இடத்தில் தொலைக்காட்சிப்பெட்டியை வைத்து, ஊர்க்காரர்கள் அந்தப் பந்தயத்தைப் பார்ப்பதற்கு வழி செய்திருந்தனர். வாய்ப்பு கிட்டும்போது அதன் வாசலில் நின்று பார்த்த நினைவுகளை வெற்றிராஜாவின் கட்டுரை கிளர்ந்தெழ வைத்துவிட்டது. நெவில் மைதானத்தை நோக்கிய பயணத்தில் நானும் உடனிருப்பதுபோல உணர்ந்தேன். இடைச்செருகலாக வரும் சித்தப்பாவின் பாத்திரம் ஒரு சிறுகதையின் சித்திரம்போல உள்ளது. கபில்தேவ் அடித்த பந்து எங்கள் வீட்டுக்கூரையின் மீது விழுந்தது என்று சொல்லிப் புன்னகைக்கும் பெண்மணியின் முகமும் அழகான சித்திரம். சிவதாண்டவ நடனத்தின் இணைப்பு கட்டுரையை வேறொரு தளத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டது. மனம் மலரவைக்கும்படி இப்படி ஒரு கட்டுரையைப் படித்து நீண்ட நாட்கள் ஆகின்றன. இன்றைய தினத்தை என் இளமையை நோக்கித் திசைதிருப்பிவிட்டது வெற்றிராஜாவின் கட்டுரை. வெற்றிராஜாவுக்கு மொழி மிக அழகாக கைவந்திருக்கிறது. அவர் தொடர்ந்து எழுதவேண்டும். அவருக்கு என் வாழ்த்துகள்

  அன்புடன்
  பாவண்ணன்

 5. Mesmerizing.. What an amazing story telling. Four decades of information filled with facts, fun, economy, emotions, friendship etc.. giving a real feeling of watching a movie.. Flashbacks taking us back to 80s and effortlessly bringing back to Dhoni’s era and painting picture of current day cricket and economy surrounding that.. seamless presentation.. Totally amazing..

  Wealth of information I’ve learned first time.

  I enjoyed the part talking about friends reunion – ‘sangakala kuranguhal’, time spent with chithappa, police quarters..

  Only after reading your article I went and looked at BBC’s picture background.. I never paid attention to the beautiful flowers in the background.
  Then I learned for first time the name ‘Rhododendron’. The part you’ve written about running towards boundary line shouting Rhododendron sounded like Archimedes’ eureka moment :-). You’ve really lived the moment.

  The picture in the article showing clouds and green ground… Amazing picture. Don’t know who took it.. Perfection to the core..

  The stadium entrance showing telephone booth. amazing picture.

  Reading this, anyone can relate easily and relive childhood..

  It’s a beautiful tribute to Kapil @therealkapildev.

  This is a story which needs to be published in all languages. Hindi and English especially.. so that Kapil(@therealkapildev), @krissrikanth21 and broader cricketing fraternity knows and appreciate the facts captured here.. who knows ‘Rhododendron’ and Nevill’s ground may further become popular..

 6. சக காலத்தில் தோனி நிகழ்திய அற்புதத்தை நினைத்து வியக்காத நாட்கள் இல்லை. உங்கள் கட்டுரை வாயிலாக காலம் என்றுமே நிகழ்வுகளை திரும்ப திரும்ப நிகழ்த்தும் என்பது மீண்டும் உணர்த்தியது. உங்கள் கட்டுரை வாயிலாக இந்திய கிரிக்கெட்டின் முக்கியமான ஆரம்ப புள்ளியின் தகவலை அறிந்ததில் மகிழ்ச்சி. கபில் ஒரு வரலாற்று நாயகர், அவரைப் பற்றியும் நெவில் மைதானத்தையும், அவரின் ஆட்டத்தையும் ஒரு சிறுகதை போன்ற எழுத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி ராஜா !!!

 7. ராஜாவிற்கு மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துகளும். வாழ்க்கை என்பதன் அர்த்தம் பலருக்கு வாழ்ந்து முடியப்போகும் தருவாயிலே புலப்படுகிறது. இந்த கட்டுரை இதை வெகுவாக அலசுவதாய் தோன்றியது, மேலும் பல பல பரிமாணங்கள் சொல்ல முனைகிறது : 1) கடந்து வந்த பாதையை திரும்பி பார்ப்பது பலருக்கு கடினமே, இருந்தாலும் அது சுமந்துகொண்டிருக்கும் சுகமான நினைவலைகளை சற்றே சென்று பார்த்து, அள்ளிப் பருகி , ஆனந்தமோ, துக்கமோ அரவணைத்து கொள்ளவேண்டும் என்பதை பதைபதைப்பில்லாமல் விலக்குகிறது – பின்நோக்குதல் பெரும்பாலும் ஆனந்தத்தை தரும், இன்னும் உள்நோக்கி விட்டாலோ பேரானந்தமே வசப்படும் – இந்த கட்டுரை அதற்கு ஒரு சாட்சி. 2) தலைப்பு – சிவன் ஆடிய களம் – நாம் அனைவரும் இந்த பிரபஞ்சத்தில் களமாடிகள் என்பதை உணர்த்துவதாய் பட்டது. 3) சொல்லாடல் – பல பல இடங்கள் உள்ளது, இருந்தாலும் சங்ககால குரங்குகளாய் மாறி சுவையான – மிகவும் ரசித்தேன். 4) இந்த நவ உலகத்தில், அனைத்துமே வணிக மயமானதால் – நம் கனவுகளும், நினைவுகளும் அதற்கு பலியாகி, எடுப்பார் கை பிள்ளைபோல வாடி, வதங்கி இருக்குறது. 5) நானும் உங்களோடு ரயில், கார், பயணத்தில் வந்த அனுப்பதோடு செர்ரி பெர்ரி சுவையும் நாவில் தீண்டியதுபோல் அனுபவம் பெற்றேன்.

  அற்புதமான கட்டுரை, இது அனைவரும் படிக்கவேண்டிய கட்டுரை. மேலும் இதுபோல பல பல கதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி – எங்களை மகிழ்விக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

 8. திரு ராஜாவின் எழுத்தும் நடையும் அபாரம். நெவில் குரக்கட் மைதானத்தை பக்தனைப் போல தரிசிக்கிறார். ஊக்கம் மிகுந்த தமிழ். ஏக்கம் தொனிக்கும் பழைய கனவுகள்! சமீப காலத்தில் நான் இது போன்றதோர் இலக்கிய இன்பத்தை சுவைத்ததில்லை. மேலும் பற்பல படைப்புக்களைத் தாருங்கள் எங்கள் ராஜாவே!

 9. An Exquisite piece Raja! Weaving the past and present…viewing the past through a modern lens and vice-versa…
  The touch of nature right from the view from train, to the skies and the flowers beautifully set..

  So many analogies, correlations, metaphors giving a deeper reflection of who we are ..simple joys, dreams, fears, hopes etc..all v beautiful.
  Thank you.

 10. Sivan aadiya Kalam, 💯 % entertainment package. அருமையான படைப்பு. புதிய வார்த்தைகள் கற்றுக் கொண்டேன். அந்த பூக்களை போல, எனது மூதாதையரும் (தாத்தாவுக்காக) என் அம்மா ரேடியோ மூலம் கமெண்டரி கேட்டு சொன்னது நினைவுக்கு வந்தது. நீங்கள் கூறியது உண்மையே. அந்த சிவன் ஆடிய களத்தின் அதிர்வு என்னையும் உணர செய்தது. ( Note: I was born 9 years later after the 1983 historic moment). Hence, I used to cheer Kapil for breaking Hadlee’s record. Also I used to mimic his bowling action while playing cricket and what I learnt in that process is, for that bowling action out-swing comes so naturally 😊. I would have loved to do that in Neville ground if I was there . Your story kindled many thoughts to me. I felt as if I was traveling with you through out this story.

 11. Sivan aadiya Kalam, 💯 % entertainment package. அருமையான படைப்பு. புதிய வார்த்தைகள் கற்றுக் கொண்டேன். அந்த பூக்களை போல, எனது மூதாதையரும் (தாத்தாவுக்காக) என் அம்மா ரேடியோ மூலம் கமெண்டரி கேட்டு சொன்னது நினைவுக்கு வந்தது. நீங்கள் கூறியது உண்மையே. அந்த சிவன் ஆடிய களத்தின் அதிர்வு என்னையும் உணர செய்தது. ( Note: I was born 9 years later after the 1983 historic moment). Hence, I used to cheer Kapil for breaking Hadlee’s record. Also I used to mimic his bowling action while playing cricket and what I learnt in that process is, for that bowling action out-swing comes so naturally 😊. I would have loved to do that in Neville ground if I was there . Your story kindled many thoughts to me. I felt as if I was traveling with you through out this story.

 12. First experience is always the special one…first kiss…holding your first child….and in the same context, the first international cricket victory for Team India….The joy of victory was celebrated quietly , rejoicing the moments in which the underdogs surprised the world.. the Haryana lad with great self belief leading to an incredible victory. People of our times enjoyed it through articles in Hindu and Sports star photos….

  It is in a way appropriate that the great innings was not captured in TV, but through commentary and photographs. Imagination is more vivid that what you see in the screen. Raja does it in an exemplary manner, taking us back forty years and let us relive it and imagine the day and event…His style of reliving the moments by playing in the ground at present, and seamlessly taking back to the past, with factual information is brilliant.. has a tinge of George Lucas.

  What Raja elegantly succeeds in not just bringing back the fond memories, but its relevance in today’s context. Life moves on, but more adventures are to come..as in his words. I wish Raja sir brings more of those adventures through his powerful words.

  Excellent article which is not just for reading pleasure but which achieves a deeper connection with the events..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.