கொடி அசைந்ததும் காற்று வந்ததா?

ஒரு மரக் கிளையில் பறவை ஒன்று அமர்ந்திருந்தது. சில நிமிடங்களில் பறந்து சென்றது. நியூட்டனின் இயற்பியல் விதியின் படி அந்தப் பறவை தன் நிலையிலிருந்து மாற்று நிலைக்குச் செல்ல அதற்கான ஒரு விசை வேண்டும்; அந்தச் சக்தி எது? காற்று, அதை அமர்ந்த நிலையிலிருந்து பறக்கும் நிலைக்குத் தூண்டுவதில்லை. உள்ளிருந்து ஒரு சக்தி அதைப் பறக்கத் தூண்டுகிறது.அது உணவைத் தேடியோ, வேறெதற்காகவோ பறக்கிறது. பறப்பதற்கு சக்தி வேண்டும். அந்தச் சக்தியை எதன் பொருட்டு செலவழிக்க வேண்டும் என்ற அறிவு அதன் அனுமான, அனுபவ அறிவால் ஏற்படுகிறது. இது சிற்றறிவுடன் கூடிய தர்க்க அறிவின் பாற்பட்டது.

தர்க்கம் (Logic) என்றால் என்ன? அதன் பொருள் அல்லது பொருளடக்கம் என்று எதைச் சொல்வது? பல நூற்றாண்டுகளாக தர்க்கவியலாளர்களும், தத்துவவாதிகளும் பல்வேறு வகையில் தர்க்கம் என்பதற்கான வரையறைகளைச் சொல்லிவருகின்றனர்.

 • தர்க்கத்தில் முன்மொழிவு (Propositon), ஈடுபாடு (Interest or Entailment), உட்குறிப்பு (Implication), அனுமானம் (Inference), வலு (Validity), இசைவு நிலை (Consistency), உறுதி (Soundness or Firmness), மற்றும் பிரித்துணர்தல் (Destruction, Deconstruction &Reconstruction) எல்லாமே அடங்கும்.
 • தர்க்கம் என்பதே சிந்தனையின் வடிவமைப்பு
 • அதன் பொருளடக்கம் மொழியின் கட்டமைப்பு
 • அது உலகின் கட்டமைப்பின் (‘ட்ரக்டாடுஸ் – Tractatus)’) வடிவம் என்று லுட்விக் விட்கென்ஷ்டைன் (Ludwig Wittgenstein) சொல்கிறார்.
 • கணிதம் முதல், அறிவியல் வரை அனைத்திலும் பயன்படுத்தப்படுவது தர்க்கம் என்பதால் அதற்கெனத் தனிப் பொருள் இல்லை.

மேற்கூறிய அனைத்துமே தர்க்கத்தின் பொருள் எனக் கருதத்தக்கவை. இதை முறைமை சார்ந்த கருத்து (Formal definition) என்றே கொள்ள வேண்டும். மேலே சொல்லப்பட்டவைகள் எதுவும் ஒன்றுடனொன்று முரண்படவில்லை. தர்க்கம் என்பது இத்தகைய மாறுதல்களின் கூட்டுத் தொகையெனச் சொல்லலாம்.

இந்திய ஞானம் தர்க்கத்தைப் பற்றி ஆழமாகச் சிந்தித்து உலகிற்குக் கொடையாக அளித்திருக்கிறது. பொது யுகத்திற்கு முன்பான 5-ஆம் நூற்றாண்டில் பாணினி அளித்த சமஸ்ருத இலக்கணம் தர்க்கமாகவும், தர்க்க விதிகளுக்குட்பட்டும் அமைந்துள்ளது. 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கங்கேசாவின் ‘நவ்ய ந்யாயா, ப்ரத்யக்ஷம், அனுமானம், உபமானம், சப்தம் என்று தர்க்கத்தின் கூறுகளைச் சொல்கிறது.

ப்ரத்யக்ஷம் என்பது உணர்தல் எனப் பொருள் படும். அது வெளியிலிருந்தும், உள்ளிலிருந்தும் உணரப்படும். எங்கோ ஒருவர் வாசிக்கும் நாகஸ்வர இசை காதுகளில் கேட்பது வெளியிலிருந்து நாம் உணரும் ஒன்று; அந்த இசை நம் மனதை அசைப்பது ஆனந்த உள்ளூணர்வாகும்.

அனுமானம் என்பது ஊகித்தறிதல். புகை தெரிவதால் அங்கே நெருப்பிருக்கிறது. பிப்ரவரி 11-ம் தேதியன்று இவ்வாண்டிற்கான முதல் செயற்கைக்கோளை இந்திய வான்வெளி மையத்தின் இன்றைய தலைவர் சோம்னாத் விண்ணில் செலுத்தினார். இதில் நீங்கள் கீழ்க்கண்டவைகளை அனுமானிக்கிறீர்கள்:

 • பெருந்தொற்று தாக்கத்திற்குப் பிறகு இப்போதுதான் இந்தியா செயற்கைக் கோளை அனுப்புகிறது. (அறிதல்)
 • இன்றைய தலைவர் என்று வேறொருவரின் பெயர் வருவதால், முந்தைய தலைவரான சிவன் ஓய்வு பெற்றுவிட்டார். (அனுபலாப்தி என்று இதை தர்க்கம் சொல்கிறது- இப்போதைய தலைவர் சிவனில்லை என்று சொல்லாமல், மற்றொருவரின் பெயரைச் சொல்வதிலிருந்து நீங்கள் இதை அறிகிறீர்கள்)
 • திட்டவட்டமான தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. (தொடர்புறுத்தும் விதம்)

உபமானம் என்பது ஒத்துள்ள விஷயங்களை அறிந்து கொள்வது. வீட்டில் நாட்டு மாடு ஒன்றினை வளர்க்கிறார் ஒருவர். மாட்டுப் பண்ணை என்று அறியாமல் அவர் அங்கே ஜெர்ஸி இன மாடுகளைப் பார்க்கையில் இவையும் மாட்டினங்கள் எனப் புரிந்து கொள்கிறார்.

‘சப்தம்’ என்று சொல்லப்பட்டாலும், அது முழுமையான ஒரு புரிதலைத் தரும் ஒன்றாகத் தான் கையாளப்படுகிறது. அதாவது, விஷயத்தை அறியச் செய்வது.

ஆறு பிரமாணங்கள் உண்மை அறிதலுக்கான வழிகள் என்று இந்திய தர்க்கவியல் சொல்கிறது: உணர்தல், அனுமானம், உபமானம், சூழல்களிலிருந்து ஊகித்தறிதல், வாக்கியத்தில் மறைந்துள்ளவற்றையும் ஊகித்தறிதல், அறிவின் பரவல். இவை ஒவ்வொன்றையும் நாம் மேலே பார்த்தோம்.

ஊகிப்பதிலும் இரு பிரிவுகள் பேசப்படுகின்றன.- பூர்வ வாதம்- சேஷ வாதம். நம் அனைவருக்கும் தெரிந்த இந்தக் குற்றாலக் குறவஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள்-“ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி; மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே.” ‘மேகம் கறுக்கிறது, மழை பெய்யும்.’ இது பூர்வ வாதம். இந்த இடத்திலிருந்து 100 கி மீட்டருக்கு அப்பால் ஒரு கிளை நதியில் அங்கிருக்கும் ஒருவர் அதிகத் தண்ணீரைப் பார்க்கிறார். ‘மேலைத் திசையில் நேற்று மழை பெய்திருக்கக் கூடும்; ஆகையால், இங்கே புதுப்புனல்’ என்று அவர் எண்ணுவது சேஷ வாதம்.

இனி, உலகில் தர்க்கம் சார்ந்த புரிதல்கள் என்னவென்று பார்ப்போம்

முறைமை சார்ந்த தர்க்கமென்பது என்ன? பிரித்துணர்வது, உட்குறிப்பு, விளைவுகள், வலிமை, ஆழம், இசைவு நிலை, ஈடுபாடு போன்றவைகள் தர்க்கத்தின் உண்மையான பேசு பொருட்கள் எனலாம். இது தூய்மையான, கலப்படமற்ற ஒன்றாகத் தர்க்கத்தினைச் சொல்கிறது, அனேகமாக அனைத்து மொழிகளும், சிந்தனைகளும் இந்த வரைமுறைக்குள் வந்துவிடுகின்றன. எப்போது சிந்தனையும், மொழியும் இவ்வாறு செயல்படவில்லையோ அப்போது அவை பொருத்தமற்ற, அல்லது பயனற்ற ஒன்றாகிவிடுகின்றன. உதாரணமாக, இந்த பாடல் வரியை எடுத்துக் கொள்ளுங்கள். ‘கெஞ்சி நிற்பவன் என்றால் அவன் கோழையல்ல’. அவன் ஏதோ ஒன்றிற்காக இறைஞ்சுகிறான்; அது தற்சமய நிலை; அவன் தன்மானத்தை இங்கே பொருட்படுத்தவில்லை; அவன் கெஞ்சிக் கேட்பதில் வலுவாக நிற்கிறான். அவன் வார்த்தைகள் அவனது இச்செயலுடன் ஒத்துப் போகின்றன. இத்தனை இருந்தும் அவனது ஆளுமையான ஒன்றை இந்த ஒற்றை வாக்கியம் சொல்லிவிடுகிறது; அவன் ஒன்றும் கோழையில்லை என்பதே அது. இதே வாக்கியத்தை ‘கோழை, கெஞ்சுகிறான்’ என்று மாற்றிப்பாருங்கள். அவனது ஆளுமையே தலைகீழாகி விடுகிறது. முன்னதில் தர்க்கம் மொழியைக் கட்டமைக்கிறது. பின்னதில் அது சொல்லாக மட்டுமே இருக்கிறது. மொழி தர்க்கத்திற்கு இன்றியமையாதது என்பதும், தர்க்க சாரமற்ற சரியான வாக்கியம் முழு ஆளுமையை வெளிக்கொணரவில்லை என்றும் உணர்வீர்கள்.

பாமரர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் பேச்சிலும் சிந்தையிலும் தங்கள் அடையாளங்களை, முரண்களற்ற விதிமுறைகளை, தவிர்க்கப்பட்ட நடுக்கோட்டு விதிகளைப் (Excluded middle rules) பின்பற்றுகிறார்கள். படித்தவர்கள் பயன்படுத்தும் ‘தர்க்கம்’ குறித்தான சொற்களை அறியாமலேயே பாமரரும் அதைப் பின்பற்றிக் கொண்டுதான் இருக்கின்றனர். பாமரர்கள் படித்து, மேலும் கூட சிறப்பான தர்க்க நுணுக்கங்களைச் சொல்லலாம். ஆனால் சரியான காரணங்களைச் சொல்லும் பலர் ‘தர்க்க சாஸ்திரத்தின்’ விதிகளை அறிந்துதான் அவ்வாறு சொல்வதாக நினைப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. ‘நெருப்பு சுடும்’ என்பதை அறிய நாம் தீயைத் தொட வேண்டியதில்லை; காலம் காலமாக கடத்தப்பட்டு வந்த அறிவே போதும். தீயின் குணம் அதிக வெப்பத்தை உண்டாக்குவதால் அருகே நெருங்கும் ஒருவர் அதனால் காயப்படுகிறார் என்பது தர்க்க இலக்கணத்தில் சொல்லப்படும். அறிவியல் இதை மேலும் விவரித்து சொல்லும். நடைமுறை அறிவும், தர்க்க அறிவும், தர்க்கம் நிறுவும் அறிவியல் அறிவும் இதில் முரண்படவில்லை.

நடைமுறைவாதிகளான ஜான் டூயி (1859-1952), (John Dewey) சி. எஸ் பர்ஸ் (1839-1914) (C.S. Peirce) இதை மாற்றுக் கோணத்தில் பார்த்தார்கள். தம்முடைய வாழ்வில் மனிதர்கள் எவ்விதங்களில் ‘காரணம்’ (Reasoning) என்பதைப் பயன்படுத்துகிறார்களோ, அவற்றிற்கான குறியீட்டுக் குறிப்புகளை, தர்க்கவியலாளர்களும், தத்துவவாதிகளும் உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். தர்க்கமே அறிவியல் மற்றும் அதன் வழி முறைகளாக இருக்க வேண்டுமென்று பின்னவர் சொன்னார். ‘தினசரி அனுமானம்’ குறியீடுகளாக்கப்படவேண்டும் என்று முன்னவர் சொன்னார்.

தர்க்கத்திலிருந்து மொழிப் பயனர்களுக்கா அல்லது மொழிப்பயனர்களிடமிருந்து தர்க்கத்திற்கா என்ற கேள்வி எழுகிறதல்லவா? அம்புக்குறி எதைக் காட்டுகிறது என்ற குழப்பம் இப்போது நமக்கு ஏற்படுகிறதல்லவா? தர்க்க விதிகளையும், சட்டங்களையும் அறிந்த உணர்வோடுதான் மனிதர்கள் சரியான காரணங்களைப் பயன்படுத்துகிறார்களா அல்லது இயல்பான மனிதச் சிந்தனையும், காரணங்களும் தர்க்கக் குறியீடுகளாகின்றனவா?

அம்புக்குறி இரு திசைகளையும் காட்டுகிறது.

எனவே, முறைசார் தர்க்கவியல், தினசரிப் பயன்பாட்டில் இருக்கும் காரணங்களைப் பற்றி சிந்திக்கத் தேவை இல்லை என்றாலும், அதன் விதிகள் அன்றாடச் செயல்களில் உள்ளவைதான். அன்றாடப் பகுத்தறிவு அரிதாகவே தர்க்க விதிகளை மீறும்; தக்காளி ஒரு பழ வகைதான். ஆனால், பழக்கலவையில் அதை சேர்ப்பதில்லை; மாறாக காய்கறிக் கலவையில் அதைச் சேர்த்து சுவைக்கிறோம்.

இது தத்துவவாதி டானல்ட் டேவிட்சனின் (Donald Davidson) வாதத்தைப் போல அல்ல; (அவர் சிந்தனை, அர்த்தம், செயல் ஆகியவைகளின் ஒன்றிணைந்த உருவே தர்க்கம் என்றவர்.) மற்ற பண்பாடுகள், பழங்காலத்தவர்கள், வேற்றுலகோர் ஆகியோரைப் பற்றிய நம்பிக்கைகளை உண்மை என்று நாம் அனுமானிக்கலாம். பெரும்பாலோரின், மற்ற பண்பாடுகள் உள்ளிட்ட விஷயங்களை, பகுத்தறிவின் பாற்பட்டது என நாம் அனுமானிப்பது சிறந்த அடிப்படை; அவற்றை பகுத்தறிவில்லாததாக நாம் அனுமானிக்கத் தேவையில்லை. பெரும்பாலும் அவற்றை நாம் பகுத்தறிவிற்குப் புறம்பான ஒன்றாக நினைப்போமென்றால், அதுவே தீவிர விளக்கப் பகுத்தாய்விற்கு (Radical Interpretation) உட்படக் கூடிய சாத்தியங்கள் இல்லாத ஒன்றாகிவிடுமல்லவா? ஒட்டு மொத்தமாக அவர்கள் நல்ல அறிவு நிலையில் இல்லாமல் இருந்திருக்கக்கூடும் என்பதே தர்க்கத்திற்கு உட்படாத வாதம் என்று அவர் சொன்னார். வேற்று கிரகத்தினர், ஆவிகள், பேய்கள், பிசாசுகள், தேவர்கள், அசுரர்கள் ஆகியோரைப் பற்றிய நம்பிக்கைகள் பல நாட்டிலும், பல மனிதர்களிடத்திலும், பல இனங்களிலும் நிலவுகின்றன. பகுத்தறிவில்லாத ஒன்றாக அதை நம்முடைய அறிவியல் சமுதாயம் சொல்கிறது. ஆனால், வேற்றுக் கிரக வாசிகளைத் தேடியும் விண்ணியல் பயணங்கள், ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றனவே. தர்க்கம் காரணங்களைச் சொல்லி விளைவுகளை விளக்கும்; விளைவுகளிலிருந்து காரணத்தைக் கண்டறியும். புகை தூரத்தில் தெரிகிறது; அங்கே நெருப்பு பற்றியிருக்க வேண்டும். இதில் புகையை அறிவது, அதன் மூலம் நெருப்பை அறிவது இரண்டுமே சொல்லப்படுகிறது; அதே நேரம் நெருப்பு காரணமாகவும், புகை காரியமாகவும் காட்டப்படுகின்றன. இதை இந்தியர்கள் அன்வயவ்யாப்தி (anvayavyaapthi) என அழைக்கிறார்கள்.

அங்கே புகையில்லை, எனவே அங்கே நெருப்பில்லை என்று சொல்வதை வ்யாத்ரிகா வ்யாப்தி (Vyatireka Vyaptih) என்று சொல்கிறோம்.

2) தர்க்கம் சிந்தனைக் கட்டமைப்பின் வடிவம்

சிந்தனையின் அமைப்பு, மொழியின் கட்டமைப்பைப் பிரதிபலிப்பதாகப் பல தத்துவவாதிகள் சொல்வார்கள். ஆனால், மொழியின் அமைப்பு சிந்தனையைப் பிரதிபலிக்கிறது என்று அதை எதிர்ப்பவர்கள் சொல்கிறார்கள். எது எப்படி இருந்த போதிலும், இவை இரண்டுமே சிந்தனை, மொழி இவற்றின் தர்க்கக்கூறுகளைப் பற்றி தெளிவுறுத்தவில்லை. உலகம் இந்த விவாதத்தில் தொடங்கிய நிலையிலேயே இருக்கிறது. பரிணாம வளர்ச்சித் தத்துவத்தின்படி மனித இனம் உருவாகியிருக்குமெனில் இத்தனை மொழிகள் ஏன்? அந்தந்த நிலத்திற்கான ஒலிகள், துல்லியமான பிரபஞ்ச ஒலிகள் மொழிகளாக வளர்ச்சி பெற்றிருக்கக்கூடிய சாத்தியங்கள் அதிகமா அல்லது சிந்தனையின் அமைப்பு, மொழிகளைக் கட்டமைத்திருக்குமா?

எனவே, நாம் சிந்தனையை அல்லது எண்ணத்தை முதலில் பார்ப்போம்

அரிஸ்டாட்டில் (384-322 கி மு) (Aristotle) ‘எண்ண விதிகள்’ (Laws of Thought) என்பதைப் பற்றிச் சொன்னார். இவை அடிப்படையான தர்க்க இயல்புகளின்படி அமைக்கப்பட்டவை. ஒரே வாக்கியத்தில் நேர் எதிர்மாறான கூற்றிற்கு இடமில்லை. அவ்வாறே தொடர் வாக்கியத்திலும் முரணான நிலைகள், கூற்றைப் பொய்யாக்கிவிடும். உதாரணமாக இதைப் பார்ப்போம்

 1. இராமர் அயோத்தியில் இருந்தால், க்ருஷ்ணன் துவாரகையில் இருப்பார்.
 2. இராமர் அயோத்தியில் இருக்கிறார்.
 3. க்ருஷ்ணன் துவாரகையிலில்லை

ஒன்றும் இரண்டும் உண்மை என்பதால் மூன்று உண்மையில்லை. எனவே ‘அ’ என்பது உண்மை அல்லது ‘அ’ என்பது உண்மையில்லை. ‘அ’ என்பது உண்மையாகவும், உண்மையில்லாததாகவும் ஒரே நேரத்தில் இருக்க வாய்ப்பில்லை. (The famous line in Logic: If ‘P’ is a statement verifiable, then, negation of ‘P”, “not P” is denoted as ‘-P’ It has opposite truth value from ‘P’ i e if ‘P’is true, then ‘-P’ is false and vice versa.)

லுட்விக்கின் ‘கூறியது கூறலை’ (Tautology) எடுத்துக் கொள்ளுங்கள். ‘இன்று மதியம் மழை பெய்யும் அல்லது இன்று மதியம் மழை பெய்யாது’ (கிட்டத்தட்ட இந்திய வானியல் அறிக்கை போல இருக்கிறதோ?) இது ஒன்றுமே சொல்லவில்லை. ‘அ’ என்பது உண்மையோ இல்லையோ, ‘-அ’ என்பது உண்மை என நாம் நினைக்க வேண்டும். முரண்களை நாம் சிந்திக்க இயலாது என்பதை இது காட்டுகிறது என்று அரிஸ்டாட்டில் வாதிட்டார். ஆகையால், குறைந்தபட்சம் ஒரே நேரத்தில் நாம் இரண்டையும் சிந்திக்க முடியாது. சிந்தனை என்பது இரண்டையும் ஒரே நேரத்தில் கொள்ளாது என்பது தெளிவாகிறது.

3 ) தர்க்கத்தின் பொருளடக்கம் மொழியின் கட்டமைப்பு

எண்ணத்திற்கும், மொழிக்குமான சாத்தியங்களுள்ள உறவுகளைப் பற்றி நாம் பார்த்தோம். இதையே எண்ணத்திற்கும் பேச்சிற்குமான உறவாக டேவிட்சன் சொல்கிறார். பல தத்துவவாதிகள், இயல்பான மொழி, அது வெளிப்படும் விதம் அவற்றிற்கு தர்க்க இலக்கணங்களும் (Logical Grammer) அல்லது தர்க்க வடிவங்களும் (Logical Forms) இருக்கும் என்று நம்பினார்கள். அத்தகைய தர்க்க இலக்கணங்கள், சாதாரண இலக்கணத்தால் (ordinary grammer) மறைக்கப்படுகின்றன என்றும் அவர்கள் சொன்னார்கள். “இப்படிச் செய்வதே உனக்கு வழக்கமா இருக்கில்ல?’ இது இயல்பான மொழி. இதில் ‘இருக்கு, இல்லை’ என்ற எதிர்மறைகள் ஒற்றைச் சொல்லாக வந்து ‘இதுதான் உனது வழக்கம்’ என்று பொருள் தருகிறது. ‘இப்படிச் செய்வதே உனது வழக்கம்’ என்ற வாக்கியம் தர்க்கத்தின் படி முழுமையாக அந்த மற்றொரு நபரைப் பற்றி திட்டவட்டமாகச் சொல்கிறது.

லுட்விக்கும், பெர்ட்ரன்ட் ரஸ்ஸலும் (அவர்களது தொடக்கக் காலத்தில்) ஒரு குறிப்பிட்ட வகைமையில் அடங்கும் அன்றாட வெளிப்பாடுகள் அவற்றின் தர்க்க இலக்கணங்களை மறைத்துவிடுவதாக நம்பினார்கள். அன்றாடத்தின் தர்க்க இலக்கணமாக இருப்பதே, மீபொருண்மை (Metaphysical) வெளிப்பாடாகவும் இருக்கிறது. இரத சப்தமி என்றொரு வழிபாடு இந்துக்களிடையே உண்டு. அன்று எருக்க இலையில் அட்சதை, மஞ்சள் வைத்து குளித்து சூர்யனை வழிபடுவார்கள். இது வருடாந்தரத்தில் நிகழும் அன்றைய ஒரு நாள் நிகழ்வு. இதில் ஒரு பாமரனனின் அணுகுமுறை இரண்டு- 1) அவன் முன்னோர்களைக் கடைப்பிடிக்கிறான். 2) சூரியனின் பயணம் மாறுகிறது எனவும் அறிகிறான். இதையே தர்க்கவாதிகள், சூரியனின் வெண் ஒளியில் இருக்கும் ஏழு நிறங்கள், ஏழு குதிரைகளாகின, பூமி சூரியனைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் 12 மாதங்கள் (365 நாட்கள்) பன்னிரண்டு ராசிகளைக் குறிக்கின்றன. வட திசையை நோக்கி அவன் பயணம் திரும்புகிறது என்பதை மீபொருண்மையியல் என்றார்கள். உலகின் தோற்றமும், அதன் கடவுளின் பங்கும் என்பதில் எத்தனை பேதங்கள் கொண்டிருந்தாலும், இயற்கையின் வழி உண்மையை நிறுவ வேண்டும் என்றும் தர்க்கம் சொல்கிறது.

‘தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் ஒரு பாண்டியன்’ என்ற வாக்கியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது முரணுள்ள ஒன்றாக, சோழனை, பாண்டியனாகக் காட்டுகிறது. ‘அந்த அரசனின் தலை வழுக்கையாக இருக்கிறது.’ என்ற வாக்கியத்தில் இல்லாத அரசனின் வழுக்கையைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. இது ரஸ்ஸலின் புகழ் வாய்ந்த உதாரணம். வெற்றான வரைமுறை விவரிப்பு அடங்கியுள்ள வாக்கியம் (Empty Definite Description) என்பதைச் சுட்ட அவர் இதைப் போன்ற ஒன்றைப் பயன்படுத்தினார். மற்ற தத்துவவியலாளர்கள், இதை அர்த்தமற்றது எனச் சொல்வதைவிட தவறானது என்றே சொல்ல வேண்டும் என்றார்கள். இத்தகைய எடுத்துக்காட்டுகள் உண்மை போன்ற தவறையும், தவறான ஒன்றை ஏதுமற்ற வெற்று விவரிப்பு என்றும் காட்டுவதற்காகக் கையாளப்பட்டுள்ளன. மூலக் கட்டுரை ஆசிரியர் வில்லர்ட் வேன் ஆர்மேன் குவைன் 1 தன்னை “பிளாட்டோவின் தாடி” (Plato’s beard) என்று அழைப்பதிலிருந்து தப்பிப்பதற்காக இதைக் கையாண்டதாக எழுதியுள்ளார். உறுதியாக, உருவகக் கூறுகளின் அடிப்படையை, எடுத்துக் கொண்டு இப்படி மாற்றாகவும் சொல்லலாம்- அதாவது தர்க்க இலக்கணத்தின் பின்னே மறைந்துள்ள தினசரிகளின் இலக்கணம் என்று அறிவதை விட இரண்டுமே (அன்றாட இலக்கணம், தர்க்க இலக்கணம்) வெளிப்படையாகவும் மேற்புறத்திலும் உள்ளன என்பது தெளிவினைக் கூட்டும். இது தர்க்க முறைப்படியான சிந்தனைகள் அனைத்து மனிதரிடத்திலும் உள்ளது என்பதையும், சரியான காரணகளுக்குட்பட்டே அன்றாடச் செயல்கள் அமைகின்றன என்பதையும் சொல்கிறது. இது தன் தொடக்கக் கால எண்ணங்களை விமர்சித்து லுட்விக் எழுதிய ‘எதுவும் மறைக்கப்படவில்லை’ (Nothing is Hidden) என்ற நூலுடன் ஏறத்தாழ ஒத்துப் போகிறது.

எனவே பகுப்பாய்வதற்குப் (Analysis) பதிலாக, பகுப்பாய்ந்த வெளிப்பாடுகளை (Analysed Expressions) புதிய அணுகுமுறையில் பகுத்தாய்ந்து சொன்னார் ரஸ்ஸல் எனச் சொல்லலாம். ஐயத்திற்குரிய ஒரு வெளிப்பாட்டிற்கு தத்துவார்த்த முறையில் ‘கோஷர்’ (Kosher-யூத வழக்கங்கள்- எது ஏற்கப்படலாம் என்று வரையறுக்கும் உணவு முறை நியதிகள்) மாற்றினை அவர் அளித்தார் என்று வலுவாகச் சொல்லலாம். இந்த மாற்றானது ‘பொருட் தொடக்க ஆய்வுச் சிக்கல்’ (Ontological) ‘குழப்பங்கள்’ மற்றும் தர்க்கத்தின் பிணையிலில்லை என்றும் அவர் நம்பினார். உலகம் தொடங்கியதைப் பற்றிய பல்வேறு கூற்றுக்கள், நம்பிக்கைகள் ஆகியவை வெளிப்பாடும் கொள்ளும் விதத்தினை ஆராய்ந்தாரே தவிர ‘ஆன்டலாஜிகல்’ துறையின் கேள்விகளுக்கு அவரிடம் விளக்கங்களில்லை.

இதைப் போலவே, நேர்க்காட்சித் தர்க்கவாதிகளின் (Logical Positivists) ‘நிரூபணம் அல்லது சரியெனக் காட்டுவதான கோட்பாடுகளும்’ சில மீபொருண்மை வெளிப்பாடுகள் அர்த்தமற்றவை என்பதை நமக்குக் காட்ட வேண்டும். ஏனெனில், அவற்றை நிரூபிக்க முடியாமல் இருக்கலாம்; அவற்றை பார்க்க அல்லது அவதானிக்க முடியாமல் இருக்கலாம்; அனுபவக் கூறுகள் இல்லாமலிருக்கலாம்; விளைவுகள் இல்லாததால் இருக்கலாம். அத்தகைய வெளிப்பாடுகளின் தர்க்கம் அதனாலேயே அதை அர்த்தமற்றதாகிவிடுகிறது என்பதையாவது சொல்ல ஒரு நிரூபணம் வேண்டும்.

இத்தகைய சூழல்களில், தர்க்கத்தின் பொருளடக்கம், சாதாரண மொழி வெளிப்பாடு மற்றும் மீபொருண்மை வெளிப்பாடு ஆகிய இரண்டின் தத்துவக் கலவையாகி விடுவது இயல்பான ஒன்றே. இக்கருத்தைக் கணக்கில் கொண்டு, நேர்க்காட்சித் தர்க்கவாதிகள், அறிவியல், கணிதம், தர்க்க சாஸ்திர வெளிப்பாடுகள், கொள்கை அளவிலாவது இப்பிழைகளிலிருந்து விடுபட்டுள்ளன என்று சொன்னார்கள்.

இதிலும் கூட க(ர்)டெல் (Gödel) (சொல்லும் ‘முழுமை அடையாமை விதி’ ஒரு முரணைக் காட்டுகிறது. அவர் சொன்னார்: “கணிதத்தில் எல்லா உண்மைகளையும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அடிப்படை அனுமானங்களுக்குள் அடக்கி விட முடியாது.”

காலமும், இடமும் வேறு வேறு என்றார் ந்யூட்டன்.

காலம் சார்புடையது என்று நாற் பரிமாணத்தைக் காட்டினார் ஐன்ஸ்டைன்.

ஹெய்சன்பர்க்கின் ‘நிச்சயமின்மையின் விதி’, துகளின் வேகம், இடம் இரண்டையும் ஒரே நேரத்தில் அளவிடமுடியாது என்று சொல்கிறது.

குர்த் க(ர்)டெல் : காலம் என்பது கற்பனை, வெளியில் பொருட்கள் விரவி இருப்பதால், கால வெளி வளைக்கப்படுகிறது. இதனால் காலப் பாதைகள் அதிகமாக உருவாகின்றன. இந்தக் காலப் பாதைகளைப் பிடித்துக் கொண்டு சரியான வேகத்தில் பயணித்தால் கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் எல்லாவற்றிலும் பயணிக்கலாம் என்றார் கோடெல். கணக்கின் ஆதாரத்தில் சொல்லப்பட்ட கோட்பாடுகள் ஒவ்வொன்றுமே தர்க்கத்திற்கும் உடன்படுகின்றன, மாறுபடவும் செய்கின்றன.

4) உலகின் கட்டமைப்பே தர்க்கத்தின் பொருள்

அரிஸ்டாட்டிலின் ‘எண்ணச் சட்டங்கள்’ முன் மொழிவுகளுக்கு மட்டுமே பொருந்துவன அல்ல ‘அ’ அல்லது ‘-அ’ என்பதை நினைத்துக் கொள்ளுங்கள். அது அனைத்திற்கும் பொருந்துவது.

‘உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வருகிறது. ஒன்பது நாட்களாகப் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அது அணு ஆயுதங்களை பயன் படுத்தும் அல்லது பயன் படுத்தாது.’ (கட்டுரை எழுதிய நாளின் நிலவரப்படி)

ஒரே நேரத்தில் மழை பெய்யும் அல்லது பெய்யாது என்ற லுட்விக்கின் கூற்றை நினைத்துக் கொள்ளுங்கள்.

சிந்தனைக் கட்டமைப்பு மொழியின் கட்டமைப்பை பிரதிபலிக்கிறது என்றோ, மொழியின் கட்டமைப்பு சிந்தனையைப் பிரதிபலிகிறதென்றோ நாம் மீண்டும் நினைத்துப் பார்க்கலாம். உலகின் சுயமான தர்க்க விதிகளுக்குட்பட்டே மொழியும், சிந்தனையும் இயங்க முடியும்.

‘பழைய கல் தச்சன் கல் தச்சனே’ என்று சொல்லாட்சி உண்டு. இது எத்தனையோ நூற்றாண்டுகளாக மானிடம் அறிந்த ஒன்று. இருபதாம் நூற்றாண்டில் இதை ‘பொருளைப் பற்றிய மறு அறிக்கை’ (De Re- டெய்-ரெய்) என்றழைக்கிறார்கள்.

‘அந்தக் கல் தச்சன் மர ஆசாரி’ என்பதையோ ‘பழைய கல் தச்சன் கல் தச்சனே’ என்பதையோ ஒரே நேரத்தில் சிந்திக்கவோ, சொல்லவோ முடியாது. இதை ‘டெய் டிக்டோ’(de dicto- எந்தப் பொருளைப் பற்றி சொல்லப்பட்டதோ) என்கிறார்கள்.

இந்தத் தச்சனைப் பற்றிய நமது எண்ணம், மொழியின் தர்க்க அமைப்பால் தீர்மானமாகிறதா அல்லது அப்படி இல்லையா என்று தத்துவவாதிகள் கேட்கிறார்கள். அல்லது இரண்டுமே உலகைப் பற்றிய நமது கோணம் மற்றும் புரிதலைச் சமைக்கின்றனவா?

அரிஸ்டாட்டிலின் – மற்றொரு ‘எண்ண விதி’யைப் பார்ப்போம் அது ‘அடையாள விதி’ என்றழைக்கப்படுகிறது.

அ =அ ஆம், இது முற்றான உண்மை. ஆனால், அனைத்தின் அடிப்படையும் இதுதான்.

முன்மொழிவுகளூடான அனைத்து சிந்தனைகளும் தமக்குள் சமமாக இல்லாவிடில் சிந்தனை என்பதே இருக்காது. ஒரு சிந்தனை, வேறோர் சமயத்தில் வெளிப்படும் போது அது தன்னைப் போலவே இல்லை என்பதை நம்மால் அறிய முடியவில்லை யென்றால், அது சிந்தனையின் மீதே தாக்கத்தைக் கொண்டு வரும். பொருட் தொடக்கம் பற்றிய ஆய்வுக் கூறுகளின் இயல்பின்படி, காலப் போக்கில், ஒரு பொருளைப் பற்றி நிலவி வந்துள்ள அடையாளத்தை நாம் அங்கீகரிப்பதே, சிந்தனையின் அடிப்படையை வழங்கிவிடும். மல்லிகையும் பூதான்; முல்லையும் பூதான். மல்லிகையை முல்லை என்ற பெயரால் அடையாளப்படுத்துவதில்லை; அதைப் போலவே முல்லையையும். இரண்டும் வாசமுள்ள மலர் வகைகளே. ஆனால், அடையாளம் வேறு

‘அ’ என்பது ‘அ’ விற்குச் சமம்தான். மாலை விண்மீனான வெள்ளிதான் காலை விண்மீனாக இருக்கிறது என்பது ஒரு காலத்தில் அறியப்படாமல் இருந்திருக்கிறது. இந்த மாலை விண்மீன் மற்றும் காலை விண்மீன் பின்னர் சொற்றொடர்களாயின என்று ரூத் பார்கன் மார்கெஸ் ( Ruth Barcan Marcus) ‘பெயர்களும், விவரிப்புகளும்’ (Names and Descriptions) என்ற தன் நூலில் சொல்கிறார். ஒரே பொருள் குறிக்கப்படுகிறது ஆனால், மாறுபட்ட உணர்வுகள் ஏற்படுகின்றன.

அடையாள விதிகள் நிலையாக இருத்தல் அவசியம்; இல்லையெனில் சிந்தனையே ஒத்திசைவுடன் அமையாது.

தர்க்கம், மொழியின் போதாமைகளில் சில நேரங்களில் கட்டுண்டுவிடும். அப்படிப் பார்க்கையில் சிந்தனைக்கும் மொழிக்கும் இடையே சிறு இடைவெளி தோன்றும்..ஆனால், மொழியின் தாக்கம் இல்லாமல் சிந்திப்பது நேரக்கூடுமா?

நாம் அனைவரும் அறிவோம்- திடப் பொருளுக்கு நிலைத்த வடிவம் உண்டு-அதாவது அதற்கான உரு உண்டு. திரவப் பொருள் எந்தப் பாத்திரத்தில் வைக்கப்படுகிறதோ அந்த உருவில் இருக்கும். நாம் பயன்படுத்தும் சர்க்கரை (ஜீனி) திடப் பொருளா, திரவப் பொருளா?

தேசம், தேசத்தவர்கள் என்பது அடையாளம். ஒரு நாட்டின் இறையாண்மையைக் காக்க அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் போரில் ஈடுபடுவார்கள். இது தேசப்பற்று. சில போர்களில் நட்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள் போரில் இணைந்து கொள்வார்கள். ஆனால், ஒரு நாட்டின் இராணுவத்தில் 24 நாடுகளைச் சேர்ந்த 17,000 அன்னிய தேசத்தவர்கள் மூன்று வருட ஒப்பந்தத்தில் இணந்து கொள்வதும், மூன்று வருட முடிவில் அவர்களுக்கு அந்த நாட்டின் குடியுரிமை வழங்கப்படுவதும் எந்த தர்க்க விதிகளுக்குட்பட்டது என எனக்குப் புரியவில்லை. குறிப்பிடப்பட்டுள்ள நாடு உக்ரைன். (ஆதாரம்-. வியான் செய்தி)

ஓரளவு இசைந்த நிலை (தி ஜாவின் மொழியில்’சற்றே சாச்சாப்ல’) என்ன என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

1(Willard Van Orman Quine- அமெரிக்க தத்துவவாதி- பகுத்தாய்வு மரபைச் சார்ந்தவர். முன்னர் நாம் பார்த்த டேவிட்சன் இவரின் மாணவர். குவைன் ‘இருப்பது பற்றியது’ (On what there is) என்ற கட்டுரையில், இல்லாததை அடிப்படையாகக் கொண்டு ஒன்றைப் புரிந்து கொள்ளும் தத்துவமாக ‘பிளாட்டோவின் தாடி’ என்று குறிப்பிட்டார்.)

உசாவி:

https://www.cantorsparadise.com/does-logic-have-its-own-subject-matter-3fa66d175e65 Paul Austin Murphy

2 Replies to “கொடி அசைந்ததும் காற்று வந்ததா?”

 1. A difficult subject is presented in an understandable way. In fact, an article on logic should help in dissolving confusions and this article does that in a remarkable way.Para starting “paamararkal…… and ending with vyatrika vyapthi is published twice in the article. Probably an error in uploading. Thanks to Author and Solvanam .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.