கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக…..

கொன்ராட் எல்ஸ்ட்டின் ஹிந்து தர்மமும் அதன் கலாச்சாரப் போர்களும் தமிழில்: கடலூர் வாசு 

முன்னுரை:

அநேக நபர்கள், ஹிந்துக்கள், மேற்கத்தியர்கள், மற்றவர்களுமே கருத்து சுதந்திரத்திரத்தை ஆதரிக்கிறோம் என்று உதட்டளவில் மட்டுமே  சம்மதிக்கின்றனர். கூடவே, இச்சுதந்திரம் முழுமையானதல்ல. அதன் ஓரங்கள் மடித்துத் தைக்கப்பட்ட வேண்டும். கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்கின்றனர். நான் இதைஒப்புக் கொள்ளவில்லை. அதைத்தான் இக்கட்டுரை மூலம் வாதிடுகிறேன். 

நம்மிடையே வாழ்ந்து வரும் வயதானவர்களின் இளமைக் காலத்தில்  இந்தியாவில் கருத்து சுதந்திரம் பற்றிய சர்ச்சை, சல்மான் ரஷ்தி விவகாரத்தில், 1988ல்  அவருடைய புதினம் சடானிக் வெர்சஸ்(Satanic Verses) தடை செய்யப்பட்ட பின்னரே சூடு பிடித்தது. ராஜிவ் காந்தியின் காங்கிரஸ் அரசு, முஸ்லீம் தலைவர் சயீத் ஷஹாபுதீன் அவர்களின் வேண்டுகோளுக்கு  இணங்கி  இதை செய்தது. பரிமாற்றமாக, இவர் அயோத்தியில்(ஆலய மசூதி சர்ச்சையினால் அச்சமயம் கொந்தளிப்பு மிகுந்த  இடமாக இருந்தது)  நடக்கவிருந்த முஸ்லீம் கூட்டத்தை ரத்து செய்ய ஒப்புக்கொண்டார். இக்கூட்டத்தில் ரத்தம் சிந்தும் என எதிர்பார்க்கப்பட்டது. (டேனியல் பைப்ஸின் ரஷ்தி விவகாரம் (The Rushdie Affair) நூலில் எனது பின்னுரையை பார்க்கவும்)

இளைஞர் தலைமுறைக்கான  முக்கிய சம்பவங்கள், ஏ .கே. ராமானுஜன் அவர்களின் “முன்னூறு  ராமாயணங்கள்” என்ற நீண்ட கட்டுரையை டில்லி பல்கலைக்கழகம் 2011 பாடத்திட்டத்திலிருந்து ஹிந்துக்கள்  கொடுத்த அழுத்தத்தினால் திரும்பப் பெற்றதும், ( See e.g. Ramanujan and Ramayana Sunday Guardian, 30 October 2011) பெங்குவின் பிரசுரம் 2014ல் வெண்டி டானிகரின் ஹிந்துக்கள்:ஒரு மாற்று வரலாறு (The Hindus: An Alternative History)என்ற புத்தகத்தை ஹிந்துக்கள் கொடுத்த அழுத்தத்தினால் திரும்பப் பெற்றதும் ஆகும். 

இதைத் தணிக்கைமுறை எனக் கூறுவது வானத்தை எட்டும் பிரச்சாரம் ஆகும். ரஷ்தியின் விவகாரத்தோடு ஒப்பிட்டால் கால் தூசு கூட பெறாது. ரஷ்தியின் புத்தகம் சட்டபூர்வமாகத் தடை செய்யப்படவில்லை என்றாலும் அவரை கொலை செய்வோம் என அச்சுறுத்தினர். அவரது புத்தகத்தை மொழியாக்கம் செய்த நார்வே ஜப்பான் மொழிபெயர்ப்பாளர்கள் கொலை செய்யப்பட்டார்கள். ஆனால் ஊடகங்களும் கல்விக்கூடங்களும் தணிக்கை என்ற பெயரில் மக்கள் கோபத்தை தூண்டி விட்டுள்ளனர். எனவே இப்புத்தகங்கள் தணிக்கைக்கு கடுகடுப்பான உதாரணங்களாக முன் வைக்கப்பட்டுள்ளன. ஹிந்துக்களுக்கு எதிரான இவ்விரண்டு ஆவணங்களையும் சட்டம் தடை செய்யவில்லை. ஆனால், ஹிந்துவாதிகள் அச்சுறுத்தும் ஒரு சட்டப்பிரிவை வாதத்தில் பிரயோகிக்க தயாராக இருந்ததால் இதை உதாசீனம் செய்யவும்  இயலவில்லை. அதுதான் இந்திய தண்டனை சட்டத் தொகுப்பின் இருநூற்றி தொண்ணுத்தைந்து ஏ என்ற பகுதியாகும். இந்தப் பிரிவு ஏன் இங்குள்ளது? பொது வாழ்வில் இதன் பங்கு என்ன? 

வெளியிலிருந்து உள்நோக்கல்: டானிகர் விவகாரம் (Looking In from Outside: The Doniger Affair)

நவம்பர் 2014ல்,அமெரிக்க மத மன்றத்தின்(American Academy of Religion) A.A.R.ஏ.ஏ.ஆர்.) கூட்டத்தில், தண்டனை சட்ட அமைப்பின் 295 ஏ பிரிவின் கீழுள்ள தணிக்கை முறையை விவாதிக்க ஒரு குழுக் கலந்தாய்வை அமைத்தது. பெங்குவின் பிரசுரம் வென்டி டானிகரின் புத்தகத்தை தடை செய்த தகவல்தான் இதற்குக் காரணம். கலந்தாய்வு கருத்துக்களை பற்றி,மன்றத்தின் 2016 ஜூலை மாத சஞ்சிகையில் நால்வர் எழுதிய கட்டுரைகளும் டானிகரின் பதில் கட்டுரையும் பிரசுரமாயின. இது, சச்சரவிற்கு மூல காரணமான 295 ஏ வை குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளது.(பென்னிங்டன் 216:323-Pennington 2016:323)

295 ஏ இந்திய குடிமக்களின் மத உணர்ச்சிகளை புண்படுத்தலை குற்றமாக்கும் பிரிவு.வித்ய பாரதி என்ற ஹிந்து தேசிய சங்கத்தின் முந்தைய இயக்குனரான தீனா நாத் பத்ரா, இப்பகுதியின் கீழ் பதிப்பாளர் மேல் வழக்கு தொடுத்தார்.  இவ்வழக்கின் பின்னுள்ள சட்ட பலத்தை கண்டுணர்ந்த பதிப்பாளர் தோல்வியை தவிர்க்க நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்து கொண்டார். பதிப்பாளர் விற்பனைக்கான புத்தகங்களை திரும்பப்பெறுவதற்கும் கைவசமுள்ள  மற்ற புத்தகங்களை கூழாக்கவும் ஒப்புக்கொண்டார். ஒரு புத்தகம் கூட கூழாகவில்லை. புத்தகங்களை திரும்பப் பெறுமுன்னரே அனைத்து பிரதிகளும்  திடீரென இதற்கு கிடைத்த இலவச விளம்பரத்தினால் விற்றுப்  போயின. (டானிகர் 2016:364) 

பல கல்வியாளர்கள் பெங்குவின் பதிப்பகத்தை கோழையென குற்றம் சாட்டினார். ஆனால், டானிகர், பதிப்பகம் சட்டத்திற்கு பயந்துதான் இதை செய்தது என்றறிந்து 295 ஏ சட்டப்பகுதியை கண்டனம் செய்தார். “இந்த விவகாரத்தில் உண்மையான வில்லன் இந்திய சட்டம்தான். இந்தியர்களின் மனதை புண்படுத்துவதாக உள்ள ஒரு புத்தகத்தை பதிப்பித்தல் பெருங்குற்றம் எனும்  சட்டம், அக்குற்றச்சாட்டு கேலிக்குரியதாக இருந்தாலும், பதிப்பாளர்கள் உயிருக்கே உலை வைக்கக் கூடியதாகும்” ( டானிகர் 2014 சொன்னவர் பென்னிங்டன் 2016:330)

இவர் சொன்னது முற்றிலும் சரி, ஒரு வார்த்தையை தவிர. இச்சட்டம்  ஹிந்துவை அவமதிக்கும் எந்தப் புத்தகமாயிருந்தாலும் தடை செய்கிறது எனக்கூறுவது ஒருதலைப்பட்சமானதும் தவறானதுமாகும். இச்சட்டம் யாரையும் பாகுபடுத்தவில்லை. இது அனைத்து மத இந்தியர்களுக்கும் பொதுவானது.  இதன் வரலாற்றைப் பார்த்தால்   முகம்மதியர்களை அவமதிக்கும் புத்தகங்களைத் தடை செய்வதற்கும்  ஹிந்துக்களின் வாயை அடைப்பதற்குமாக ஏற்படுத்தப்பட்ட சட்டம் என்று தெரிகிறது. இச்சட்டம் ஹிந்துக்களை ஆதரிக்கிறது,  ஹிந்துக்களுக்கு  மட்டுமே பாதுகாப்பு சலுகை அளிக்கிறது எனும் டானிகரின் மறைமுகமான குறிப்பீடுகள் இரண்டுமே தவறு.  இந்தியா, சிறுபான்மையினரை மிதிக்கும்  திரையின் பின்னர் மறைந்துள்ள ஹிந்து ராஜ்ஜியம் என கதை கட்டுவதற்கு உபயோகமாக இருக்கலாம். மாறாக, ஹிந்துக்களுடன் எதிருக்கெதிராக  ஒப்பிட்டால்  இச்சட்டம் சிறுபான்மையினருக்குதான்  சலுகை அளிப்பதாக உள்ளது. 

இது போல், பென்னிங்டன் பொழிப்புரை(2016:329)யில் இந்தியாவில் இத்தகைய அவமதிப்பு சட்டங்கள் பெரும்பான்மை  பகுதியினரால் சிறுபான்மையினரை அடித்து நொறுக்குவதற்குத்தான் பயன்படுகின்றன என மார்த்தா நுஸ்பாம் கோருகிறார் என்பதும் பெருமளவில் உண்மையல்ல. (ஆனால் பிரிட்டிஷ் இந்தியாவிற்கு பின்வந்த மற்றொரு நாடான பாகிஸ்தானில் உண்மை நிலையாகும்). 295 ஏ எவ்வாறு நடைமுறைக்கு வந்தது என்பது தெளிவாகும்போது இதுவும் தெளிவாகும். 

புத்தகத் திரும்பப்பெறுதலிற்கும் தணிக்கை முறைக்கும் எதிரான எதிர்வினைகள்: (Reactions against Book Withdrawals and Censorship)

பிரபலமான புத்தக எரிப்பிறகான எதிர்வினையைப் பற்றி முதலில் சில வார்த்தைகள் கூற வேண்டும். பாடத் திட்டத்தில் சமீபத்திய மாற்றங்களும் ஹிந்துக்களை ஆதரிக்கும்  ஆர்வலர்கள் எழுதிய புத்தகங்களுக்கான எதிர்ப்பும் தீனா நாத் பத்ரா(சில பள்ளிப் பாடப்புத்தகங்களின் ஆசிரியர்)  பெயரை வைத்தே நடக்கின்றது. இந்த மாற்றத்தையும் எதிர்ப்பையும் ஆதரித்து இந்திய வெளிநாட்டு அறிஞர்கள், எதிர்க்குரல் எழுப்பியோ அல்லது மனுக்கள் மூலமாகவோ ஆட்சேபனையை தெரிவித்துள்ளனர். 

இதனால், ஜூலை 14 ஸுரிக் நகரத்தில் நடந்த தென்னாசிய ஆய்வுகள் மாநாட்டில் எங்கள் எல்லோரிடமும் டானிகர் புத்தகத்தை ஆதரித்தும், பத்ராவின் சட்டச் சவாலுக்கு பயந்து புத்தகத்தை திரும்பப்பெற்ற பதிப்பாளரை எதிர்த்தும் எழுதப்பட்ட மனுவில் கையெழுத்திடக் கோரப்பட்டது.(நான் முழு மனதுடன் இதில் கையெழுத்திட்டேன் என்று வெளிப்படையாகவே கூறுகிறேன்). படித்தவர்களிடையே உள்ள பொதுவான வெளிப்படையான எண்ணம் புத்தகங்கள் தடை செய்யப்படுவதை கண்டிக்கிறோம் என்பதாகும். ஆனால், மற்ற மனுக்களை போலில்லாமல் இந்த மனு, 295  ஏ வின் எதிர்மறை பங்கை குறி வைத்திருந்தது. 

பெரும்பாலான அறிவுஜீவிகளின் ஆத்திரம், தடை செய்யப்பட்ட  ஆசியர்கள் எல்லோருக்குமானது  அல்ல. இது போல், முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட அல்லது  முற்றுகையிடப்பட்ட ஆசியர்கள் எல்லோரிடமும் கைகோத்து நடக்க இவர்கள் முன்வரவில்லை. முஸ்லிம்களும் கிருத்துவர்களும் புத்தகங்களை தடை செய்தபோதோ எழுத்தாளர்களை தாக்கியபோதும் கூட  இத்தகைய எதிர்ப்புப் புயலை பார்க்கவில்லை. 2006ல், நபிகள் நாயகம்  பற்றிய கேலிச் சித்திரங்கள் வரைந்த ஆசியர்களும் , அவற்றை பிரசுரித்த பதிப்பாளரும்  பலமுறை தாக்கப்பட்டனர். இதற்கு பின் நடந்த  அமெரிக்க ஏ.ஏ.ஆர். வருடாந்திர மாநாட்டில் கேலிச்சித்திரங்களை விவாதிக்க குழு அமைக்கப்பட்டது. அதில் பங்கேற்ற அனைவருமே முஸ்லீம்களின் ஆட்சேபணையை வெவேறு அளவிற்கு ஆதரித்து பேசினர். ஒருவர் கூட கருத்து சுதந்திரத்தை ஆதரித்துப் பேசவில்லை. (மற்றொரு  விவாதக் குழு, ஜிஹாத் வாட்ச்.ஆர்க் என்ற இணையதளத்தையும், மரண அச்சுறுத்தல்களுக்கு இலக்கான, ஒரு முறை உயிர் தப்பிய  ராபர்ட் ஸ்பென்சர், பமீலா கெல்லர்  ஆகியோரையும் கடுமையாக கண்டனம் செய்வதற்காக நடத்தியது. இதை எதிர்த்து குழுவில் இருந்த ஒருவரும் பேசவில்லை.)

இம்மன்றக்  குழுவின் உள்நடப்புகளில் கூட, அறிஞர்களும், இந்திய ஆய்வியலாளர்களும் மாற்றுக்கருத்து சுதந்திரத்தின் மதிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதை நான் என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன். டானிகரும் அவரது ஆதரவாளர்களும் மவுனமாக சம்மதம் அளித்த பல குழுக்களில் எனது உரை தடை செய்யப்பட்டிருக்கிறது.(எல்ஸ்ட் 2012:350-385). இந்த கொள்கையின் முக்கிய இலக்கு இன்று உயர்மட்டத்திலுள்ள மல்ஹோத்ரா அவர்கள். இவர் இந்திய ஆய்வியலார்களின் வழக்க அடிப்படைகளையும் அவர்களுடைய ஹிந்துக்களுக்கு எதிரான சார்பையும் கூர்மையாக விமரிசிப்பவர். இவருடைய பல அனுபவங்களை முழுவதுமாக ஆவணப்படுத்தியுள்ளார். (மல்ஹோத்ரா: ஹிந்துபோபியா 2016). 

இந்தியப்பார்வையாளர்களும் சுதந்திரப்பற்று  உள்ளவர்களும் இந்த சட்டத்தைப் பற்றியும், புத்தங்கள் தடை செய்யப்படுவதையும்  நினைத்து வருந்துவது தவறில்லை. ஆனால் கவனத்தைக் கவர்ந்த முந்தைய புத்தகத்தடைகளைப்  பற்றி வாய்மூடி மவுனிகளாக இருப்பவர்களை  இவர்களுடன் சேர்க்கக் கூடாது. ரஷ்தியின் புத்தகம் தடை செய்யப்பட்டபோது டானிகர் எங்கிருந்தார்? அமெரிக்க கல்வித்துறையின்  ஆதரவையும் அனுதாபத்தையும் பெற்றுள்ள இந்திய சமயச் சார்பற்றவர்கள் இத்தடையை தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடினர், இத்தடையை விதித்தவர்,  சமயச்சார்பற்றவர் என தன்னைத்தானே பிரகடனம் செய்துகொண்ட ஆளும்கட்சி காங்கிரசின் பிரதம மந்திரி, ராஜீவ் காந்தி ஆவார்.   ராம் ஸ்வரூப்பின், “கிருத்துவம் இஸ்லாம் பற்றிய ஹிந்துவின் பார்வை”( Hindu View of Christianity and Islam) தடை செய்யப்பட்டபோதும், டான் பிரவுனுடைய டாவின்ச்சி கோட்(Da Vinci Code) தடை செய்யப்பட்டபோதும் இவர்கள் எங்கிருந்தார்கள்? 

டானிகரும் இதர இந்திய ஆய்வியலாளர்களும் சமயப் பாகுபாடுகளை மன்னித்துவிடுவார்கள், வாங்கிக்கட்டிக்கொள்பவர்கள் ஹிந்துக்களாக இருந்தால். 

ஹிந்துக்கள் குரலெழுப்பினால்  மட்டுமே இவர்கள் ஆட்சேபணையும் கிளம்பும். பத்ராவின் முயற்சிக்காக நான் வருத்தமடைந்தாலும் ஹிந்துக்கள் டானிகரின் அவமதிப்பை பேசாமல் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. புத்தகத்த தடை தவறானது என மன்றாடும் அதே சமயம் அமெரிக்க இந்தியப்  பார்வையாளர்கள் அதிக அளவில் விளம்பரமாகிய  அவர்களது கோபத்தை வெளிப்படுத்த  அவர்களுக்கு அருகதையில்லை என்பதுதான் உண்மை. 

நான் சொல்ல வருவது என்னவென்றால் யாரிடம் சினம் கொள்ளவேண்டும் எனும் இவர்களது தேர்விற்கான  அதிகாரம் யாரிடம் உள்ளது என்பதை காண முடிகிறது என்பதுதான். வன்முறை அச்சுறுத்தல்களுக்கு இவர்கள் மிக்க  மதிப்பளிக்கிறார்கள். ஹிந்துக்கள் தங்களுக்கு பிடிக்காத  எழுத்தாளர்களை தாக்குவோம் எனக் கிளம்பினால்  அன்றே பிரபல வரலாற்று நிபுணர்கள் ஹிந்துக்களின் தணிக்கையைப் பற்றி பேசுவதை நிறுத்தி விடுவார்கள். ஏன்! அதற்கு பக்கபலமாகவும் இருப்பார்கள். ஏனென்றால், இதுதான் இஸ்லாமிய அச்சுறுத்தல்களும் தணிக்கைகளும் செய்துள்ளது. அதையும்விட மேலாக, அந்த அச்சுறுத்தல்கள் இவர்களது தொழிலுக்கு விளைவிக்கும் ஆபத்துக்கள். இஸ்லாமிற்கு எதிராக இஸ்லாமிய தணிக்கையை விமரிசனம் செய்தால் அது சங்கடத்தை விளைவிக்கும். ஆனால் ஹிந்துக்களை சாடும்  ஒரு பதிப்பின் மேல் எடுக்கப்படும்  நீதித்துறை  நடவடிக்கையை எதிர்த்தால் உங்களுக்கு புகழாரம் சூட்டுவார்கள். கருத்து சுதந்திரம் என்பதை நேருக்கு நேர் சந்திக்கும்போது இந்த அறிவாளிகள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதற்கு இது எடுத்துக்காட்டாகும். 

டானிகர் விவகாரம்: ஹிந்துக்களுக்கு இதிலென்ன ஆதாயம்? (The Doniger Affair: What is in it for the Hindus?)

ஹிந்துக்களுக்கு இப்புத்தகம் திரும்பப்பெறப்பட்டது  ஒரு போரில் அடைந்த வெற்றிக்கு ஈடானது. உலகளவில், ஹிந்துக்களுக்கு கிடைத்த விளம்பரமோ முற்றிலும்  எதிர்மறையானது. மேலும், ஹிந்துக்கள் சர்வாதிகாரிகள், சகிப்புத்தன்மையற்றவர்கள் என்ற சமீபத்திய கட்டமைப்பை இது உறுதிப்படுத்துவதாக உள்ளது. இந்த முடிவும் பயனுள்ளதாக அமையவில்லை, இணையதள காலத்தில் இப்புத்தகத்தின் மிருதுவான பிரதியை அணுகுவது சுலபமாகி விட்டது. இதில் சம்பந்தப்பட்ட ஹிந்துக்களும் விவாதங்களில் எதிராளிகளுடன் மல்லாடத்  திறனில்லையென  ஒப்புக்கொண்டுள்ளனர். 

பிரதிவாதங்கள் அவர்களிடம் இருந்தன. டானிகரின் புத்தகத்தில் உள்ள கணக்கற்ற தவறுகளை ஒன்று கூட்டி இந்திய-அமெரிக்க மருத்துவப் பொறியியலாளரும், சம்ஸ்க்ருத வல்லுனருமாகிய விஷால் அகர்வால் என்பவர் ஒரு புத்தகத்தையே வெளியிட்டுள்ளார்.(2010லேயே இணையதளத்திலும் 2014ல் புத்தக வடிவிலும் வெளிவந்துள்ளது). எல்லாவற்றையும் விட, டானிகரின்புத்தகம் ஹிந்துயிசத்தைப் பற்றி மனச்சாட்சியும் ஆழ்ந்த சிந்தனையும் இல்லாமல் எழுதப்பட்ட புத்தகம் என்பதையும்,  அவரைப்போன்ற ஒரு பேராசியரிடமிருந்து (உலகச் சிகரத்திலுள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் புகழ் பெற்ற சேவை அளிக்கும் மிர்சியா எலியாட்  பேராசியர்-Mircia Eliade Distinguished Service Professor at Chicago University,top of the world) ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாகும் என்பதைக் காண்பித்துள்ளார். மற்றொரு பதிப்பாளரின்(பேசும் புலி, டெல்லி, 2015 -Speaking Tiger, Delhi 2015) இப்புத்தக மறுபதிப்பில் டானிகர் அவருடைய தகுதிக்கேற்றவாறு அகர்வால் புத்தகத்தை தெரிந்ததாகவும் காட்டிக்கொள்ளவில்லை. அவர் சுட்டிக்காட்டிய தவறுகளையும் சரிசெய்யவில்லை. 

இத்தகைய விவகாரத்தில் உள்ள இந்த முக்கிய அம்சத்திற்கு  மேற்கத்திய கல்வியாளர்களும் அவர்களை குஷிப்படுத்தும் இந்தியர்களும் மூடி போட்டு வைத்துள்ளனர். மாறாக,, பென்னிங்டன், “ஒரு சிறந்த அறிஞர் தன்னுடைய ஆராச்சியின்  மூலம் நிரூபித்துள்ள உண்மையான தகவல்களை கொண்ட புத்தகத்தை கடுமையாக கண்டனம் செய்கிறார்கள்” என்கிறார்.

  இப்புத்தகத்தைப் பற்றிய  ஹிந்துக்களின் எண்ணங்கள் , ஹிந்தி மொழியிலுள்ள சில பத்திரிகைகளில் இங்கொன்றும்  அங்கொன்றுமாகக் காணப்படும்  கருத்துரைகள் வாயிலாக சற்றே புலப்படுகிறது. எஸ்.சங்கர், டெய்நிக் ஜக்ரான் (Dainik Jagran) பத்திரிகையில் “டானிகரின் குறைபாடுகளும் வழக்கமானதுதான்; தரமான பாரம்பரிய புத்தகங்களை புறக்கணித்தல், ஹிந்து சம்பிரதாயங்களை அயல் நாட்டினருடையதாக திரித்தல்,, இந்திய வரலாற்றை இந்திய மார்க்சிய வரலாற்று ஆசிரியர்களுடன் கூட்டு சேர்ந்து எழுதுதல், உள்நாட்டு  அறிவாற்றலை தவிர்த்து அயல்நாட்டு அறிவாற்றலை நம்புதல் ஆகியவையாகும். சங்கருடைய சொந்த வார்த்தைகளில்,” டானிகர், காலனிய இனவாத சிந்தனைகளினால் விளைந்த  மற்றவர்களை புறக்கணிக்கும் திமிரான மனப்பான்மையுடையவர்” என்கிறார். விவேக் குமஸ்தே, ரீடிஃப்.காம் இணையதளத்தில் இது கருத்து சுதந்திரத்திற்கான உண்மையான போராட்டமல்ல, போராட்டம் என்ற முகமூடித்திரைக்குப் பின்னால்  குறுகிய கொள்கை என்ற பதுங்கிடத்திலிருந்து நடக்கும் ஒன்று, ஹிந்துக்களின் நோக்கை அமிழ்த்துவதற்கான நுட்பமான சர்வாதிகார போக்கு என்கிறார்( பென்னிங்டன் 2016:331) 

ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இது உண்மைதான். இது சமமான விளையாட்டு மைதானமல்ல. டானிகர் உட்பட அமெரிக்க கல்வியாளர்கள் ஹிந்துக்கள் சொல்வதை காதில் போட்டுக்கொள்வதில்லை என்பதை முழு மனதாக ஏற்றுக் கொண்டுள்ளனர். அதிகாரம் அவர்கள் பக்கம் சாய்த்திருப்பதற்கு ஹிந்துக்கள்தான் காரணம். ஹிந்துக்கள் பாண்டித்யத்தை வளர்ப்பதில் முதலீடு செய்யாததால் நீதிமன்றத் தீர்ப்பு என்பதை தவிர வேறு போக்கிடம் இல்லை.அறிவாளிகளின் முன்னணித் தலைவர் என்று தங்களுக்கு தாங்களே பட்டம் சூட்டிக் கொண்டவர்களின் பல பத்து வருட கையாலாகாத்தனத்திற்கு இது அவர்கள் கொடுக்கும் விலை.  கல்வித்துறையின் தற்போதைய ஒருமித்த கருத்தை மாற்றும் ஒரு அறிவாற்ற சவாலை கட்டமைப்பதென்பது நீண்ட கால திட்டம். குறுக்கு வழிகள் கிடையாது. ஹிந்துக்கள் நீதி மன்றத்திற்கு சென்று பெங்குவின் கையை முறுக்கி வெற்றி கண்டு விட்டோம் என்று நினைக்கலாம் ஆனால் அது ஹிந்துயிசத்தை அவமானப்படுத்தியதாகும்.  யாக்ஞவல்க்யர், புத்தர், பாத்ராயணர், சங்கரர், குமரிலபட்டர் போன்ற முற்கால பிரபல ஹிந்துக்கள்  கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் ஹிந்துயிசத்தை கண்டு  பெருமைப்பட மாட்டார்கள். 

தொன்மை வாய்ந்த இந்திய சிந்தனை, கிருத்துவர்களுக்கு எதிரான முஸ்லிம்கள், கத்தோலிக்கர்களுக்கு எதிரான பிராடஸ்டண்ட் என்ற அஞ்சலைப் பெட்டிக்குள்  அடைந்த பழமைவாதம் அல்ல. இந்த மேற்கத்திய முன்னிறுத்தலை இந்திய மதச் சார்பற்றவர்கள் மற்றெல்லாவற்றையும் விட மதிப்பு வாய்ந்தது எனக் கடன்வாங்கி அதை இந்திய சிந்தனை நிலப்பரப்பில் மற்றவர் மீது திணிக்கின்றனர்.  துடிப்பு மிகுந்த இந்திய அறிவாற்றல் திடலில், சுமுகமான வாக்குவாதங்கள் செழிப்பாக நடந்த காலத்தோடு, டானிகரும் அவரை சார்ந்த பள்ளியினரும் ஹிந்துக்களின் குரல் கேட்காதவாறு கதவை பூட்டி தாழ்ப்பாள் போட்டதற்கு பதிலடியாக ஹிந்துக்கள் டானிகரை அரக்கி போல் சித்தரித்து அவருடைய நோக்கை வெளிப்படுத்த விடாமல் தடைகளை ஏற்படுத்திய நவீன காலத்தோடு ஒப்பிட்டால் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தைத்தான் காண்கிறோம்.

வெற்றியின் சுவையை ஹிந்துக்கள் வழக்கமாக உணராததால், அறிவுள்ள  இந்தியர்கள் கூட பதிப்பாளரின் பின்வாங்கலை குறித்து மகிழ்ச்சியடைகிறார்கள் (எல்ஸ்ட்  2015:74-87). இது சரியான விடையல்ல. இருந்தாலும் இது ஒரு விடைதான். 295 ஏ மோசமானதாக இருக்கலாம். ஆனால் அது சட்டப் புத்தகத்தில் உள்ள வரை கிருத்துவர்களையும்  முஸ்லிம்களையும் போல்  ஹிந்துக்களையும் கணக்கில்  எடுத்துக் கொள்ளத்தான்  வேண்டும்.

295 ஏ சட்டப்பகுதியின் வரலாறு: (History of Section 295A)

295 ஏ ஹிந்து சமூகம் நிறுவியதல்ல. ஹிந்துக்களுக்கு எதிராக நிறுவப்பட்டதாகும். பிரிட்டிஷ் அரசாங்கத்தால், இஸ்லாமிய மதத்தை விமரிசனம் செய்வதை தடை செய்ய ஹிந்துக்கள் மேல் திணிக்கப்பட்ட சட்டம். எனவே, டிக் பிளானெட் .காம் /விக்கி இணையதளத்தில்  ஆகஸ்ட் 5, 2016ல் ரங்கிலா  ரசூல் என்ற பதிவில் கண்ட உண்மை விவரம்: 1927ல் முஸ்லீம் சமுதாயம் கொடுத்த அழுத்தத்தினால் பிரிட்டிஷ் ராஜ்ஜிய நிர்வாகம் வெறுப்பூட்டும் பேச்சுதடை சட்டப் பகுதி 295 ஏவை அமல்படுத்தியது. 

இதை சட்டமாக்கியதற்கான காரணம்,   இஸ்லாமியா மத வாதங்களுக்காக ஆரிய சமாஜ தலைவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டதாகும். முதலில், 1897ல் பண்டிட் லேக்ராம் இஸ்லாமை விமரிசித்து எழுதிய புத்தகத்திற்காக ஒரு முஸ்லிமால்  கொல்லப்பட்டார். மிகவும் பரபரப்பான கொலை டிசம்பர் 1926ல் நடந்த சுவாமி ஷ்ரத்தானந்தாவினுடையது. இவருடைய புத்தகம் Hindu Sangathan: Savior of the dying race (1924), வி .டி. சாவர்க்கரின் ஹிந்துத்வாவிற்கு அடுத்தபடியாக ஹிந்துக்களின் புனருத்தாரணத்திற்காக எழுதப்பட்ட கருத்தியல் புத்தகம். (ஆனால்,இவரது கொலையைத் தூண்டிய சம்பவம், இஸ்லாமிலிருந்து ஹிந்து மதத்திற்கு திரும்பிய ஒரு குடும்பத்திற்கு இவர் கொடுத்த பாதுகாப்பாகும்) மேலும், இதே சமயம் சீதா தேவியை இழிவுபடுத்தும் முஸ்லீம் துண்டுப் பிரசுரத்திற்கு பதிலடியாக  மஹாஷாய் ராஜ்பால் புனைபெயரில் நபிகளின் சொந்த வாழ்க்கையைப் பற்றி எழுதிய முஸ்லிம்களுக்கு எரிச்சலூட்டும் “ரங்கீலா ரசூல் “ எனும் புத்தகம் பெரிய சர்ச்சையை கிளப்பியது. ராஜ்பால் 1929ல் கொலை செய்யப்பட்டார். (சரமாக நடந்த இக்கொலைகளை அம்பேத்கர் (1940) விவரித்துள்ளார். ஷ்ரத்தானந்தாவின் கதை ஜோர்டன்ஸ் (1981) பார்க்க)

295 ஏவின் மூலத்தையும் அர்த்தத்தையும் விளக்கி எழுதியுள்ள டானிகரும் இதர நான்கு எழுத்தாளர்களும் இந்த முக்கியமான உண்மையை மூடி மறைத்து விட்டனர். இவர்கள் யாருமே இந்த சட்டம்,  மீண்டும் மீண்டும் நடந்த ஒருவழி சமூகக் கொலைகள் அதாவது, ஆரிய சமாஜத் தலைவர்கள் முஸ்லிம்களால் கொல்லப்படுவதை நிறுத்துவதற்கும்  முஸ்லீம் சமுதாயத்தை சமாதானப்படுத்தவும் கொண்டுவரப்பட்டது என்பதை எழுதவில்லை. அதற்கான அறிகுறிகள் எங்குமே இல்லை. அனதாநந்த் ராம்பச்சன் ஒருபடி மேல் போய் ஆரிய சமாஜம்தான் வன்முறையில் நடந்துகொண்டது எனக்  குற்றம் சாட்டுகிறார். இல்லவே இல்லை! ஆரிய சமாஜம் இஸ்லாமை விமரிசித்ததை  மனவியல் வேண்டுமானால்  வன்முறையென உருவகப்படுத்தலாம். ஆனால் வன்முறையை  கையாண்டவர்கள் யாரென்று  பார்த்தால்  அனைவருமே முஸ்லிம்கள்தான். 

வார்த்தைகளில் கூட ஆரியசமாஜம் வன்முறையை கையாளவில்லை. ஹிந்துவல்லாத ஒருவர் எழுதிய ஷ்ரத்தானந்தரின் வாழ்க்கை வரலாற்றில், “முஸ்லிம்களை பற்றிய அவரெழுத்துகள் கொடூரமாகவும் சினமூட்டுவதாகவும் உள்ளது. ஆனால், …..அவையெல்லாமே, ஹிந்துயிசத்தையும், ஆரிய சமாஜத்தையும், ஸ்வாமி ஷ்ரத்தானந்தரையும் விமரிசித்தும், …இஸ்லாமியப்  பகைவர்களை  கொல்வது சரியானது என்றும், நேர்மையற்ற சுற்றிவளைத்த பிரச்சாரங்களை  எழுதியதற்கும் பிரகடனங்களுக்கும் அவர் கொடுத்த பதிலடிகள்.  அவர் என்றுமே நேர்மையற்ற  மறைமுகமான வன்முறைகளில் இறங்குவதை ஆதரிக்கவில்லை” என்றிருக்கும் வாதத்தைப் பார்க்கவும். (ஜோர்டன்ஸ்(Jordens)1981:174-175)   சி.எஸ். ஹாட்காக் (2016:341) ,” விவாதங்கள் சீற்றத்தை எழுப்பியதால் வன்முறையை தூண்டியது”  எனச் சொல்வது உண்மைக்கு வெகு அருகில் உள்ளது. 295 ஏ பற்றி எழுதும் ஒரு   கல்வித்துறை எழுத்தாளரின்  புரிதல் இந்த அளவிற்கு குறைவாகவும்   வன்முறையின் தன்மை என்னவென்று அவர் அறியாதிருப்பதும் விசித்திரமாயுள்ளது. மற்றும், இந்த வன்முறை இருபக்கங்களுக்கும் சமமானது என்று தவறாகவும் , வேண்டுமென்ற செய்யப்பட்ட  கொலைகளை வேண்டுமென்றே சொல்லாமல் விடுவதும் செய்திருக்கும் இவர், குற்றவாளிகளான முஸ்லீம் நபர்களின் அடையாளத்தையும் இவரது கட்டுரையில் மறைத்துமுள்ளார். இன்றைய இந்தியவியல் முறை தொடர்ந்து   ஹிந்துக்களை எதிர்க்கிறது என ஹிந்துக்கள் குற்றம் சாட்டுவதற்கு  இதை உதாரணமாக முன்வைக்கலாம்.  

பிரிட்டிஷார் இந்த அமைதியின்மையை நிறுத்த முடிவு செய்தனர். அவர்களுடைய நீதித்துறை கொலைகாரர்கlளுக்கு  சரியான தண்டனை விதித்தாலும் இக்கொலைகளைத் தூண்டிய சமய விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கத் தீர்மானம் செய்து விட்டனர். 1857 சிப்பாய் கலகத்திற்கு பின் ராணி விக்டோரியா, உள்நாட்டு மதங்கள் அவமதிப்பை  தடுப்பதற்காகவும் களையெடுப்பதற்காகவும்  உள்ள பொறுப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் ஒப்புவித்தார்.  கிருத்துவ மதபோதகர்கள் உள்ளூர் சமயங்களை விமரிசப்பதின் மூலம்  கிருத்துவத்திற்கு ஆள்  சேர்ப்பதைச் செய்து கொண்டிருந்ததால் மதங்களை விமரிசனம் செய்யலாம் என்பதை  எல்லோரும் ஏற்றுக்கொண்டிருந்ததால்  அது தடை செய்யப்படவில்லை. 

உதாரணமாக, 1862ல் ஜாதியுணர்வு மிகுந்த வல்லபா வைஷ்ணவ சமூகத்தை எதிர்த்த சீர்திருத்தவாதி விவகாரத்தில் பிரிட்டிஷ் மாஜிஸ்ட்ரேட் தனி மனித உரிமையை தூக்கி நிறுத்தி சொன்னது,” பத்திரிகைத்துறையின் வேலையும் கடமையும், அதன்  வாதம், கண்டனம், கேலி ஆகியவற்றிலுள்ள திறமைகளை வைத்துத் தலையிட்டு பொது மக்களின் கருத்துக்களை மாற்றுவதும்  தூய்மைப்படுத்துவதுமாகும்”. அவர் மத விமரிசனத்தின் முக்கியத்துவத்தை மேல்தூக்கி வைத்து மத விஷயங்களில் பொதுமக்களின் கருத்தை தகுந்த காரணங்களினால் மாற்றியமைப்பது சட்டத்திற்கு புறம்பானதல்ல என்பதை நிலைநாட்டினார் (ஹாட்காக்(Adcock)2016:345).

பிரிட்டன் நாட்டில் காரணங்களை முன்வைத்து  உலகநோக்கை குறித்து நடந்த  வாக்குவாதங்கள் செழித்தோங்கியதற்கு  பொது ஜன கருத்துக்களை அத்தகைய வாக்குவாதங்கள் மாற்றியமைக்கக்கூடும் என்ற நம்பிக்கைதான். முதலில் காலனிய அதிகாரிகள் இந்தியர்களை அவ்வாறே நடத்தினர். ஆனால் 295 ஏ பகுதி வேண்டுமென்றே  இதை தலைகீழாக மாற்றி விட்டது. 

இந்த விவகாரம் இதற்கு சில வருடங்களுக்கு முன்னரே, ஆரிய சமாஜத் தலைவர் 1915ல் தரம் பீர் என்பவர் மேல் தொடரப்பட்ட வழக்கில் ஆரம்பித்தது. கலவரம் செய்ததற்காக முஸ்லிம்கள் தண்டிக்கப்பட்டனர் என்றாலும் தரம் பீர் மேலும்  குற்றம் சாட்டப்பட்து. அவரை குற்றவாளி என தீர்மானிப்பதற்காகவே ஒரு நீதிபதி கொண்டுவரப்பட்டார். பகுதி 298ன் கீழ் அவமதிப்பான  வார்த்தைகளையும் செய்கைகளையும் உபயோகிக்கப்படுத்தியதற்கும், மற்றொரு சமுதாயத்தின் மத உணர்ச்சிகளை காயப்படுத்தியதற்கும், பகுதி 153ன் கீழ் வேண்டுமென்றே பின் நடந்த கலகத்தை தூண்டி விட்டதற்காகவும் குற்றவாளியென தண்டிக்கப்பட்டார். (ஹாட்காக(Adcock 2016: 345).

ஹாட்காக் கூறுவது போல் பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்கனவே இருந்த சட்டங்களை வளைத்து மத வாதங்களைத் தடை செய்தது.  மாஜிஸ்ட்ரேட் இவ்வழக்கில் சொன்னது; ”மதத்தில் உணர்ச்சிகள் வேரூன்றியுள்ளதால், கலகத்தை உண்டுபண்ண வழி வகுக்கிறது. அதை மட்டும்தான் அது செய்ய முடியும். மதத்தை பற்றிய  வாக்குவாதம் குறிக்கோளற்றது.  அதை நியாயப்படுத்த இயலாது. எனவே பொது மக்களிடம் எதிர்வாதங்களை வைக்கும் உரிமையை மதத்திற்கு நீட்ட இயலாது. மத வாதம் என்பதே ஆத்திரத்தை தூண்டுவதுதான். வெறுப்பை கிளப்புவதற்காகவே கணக்கெடுத்து செய்வது. எனவே அதை சகித்துக் கொள்ள முடியாது.”

பிரிட்டிஷ் மக்கள் இவ்வாறு சுற்றிவளைத்து காரணம் காட்டுவதை ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். எதை அவர்கள் ஏற்கமாட்டார்களோ, ஏன்! 50 வருடங்களுக்கு முன் இந்தியர்களிடமும் செய்யப்படவில்லையோ, அதை பிரிட்டிஷ் ராஜ்ஜியம் தங்களுடைய இறுதிப் பகுதியில் காலனிய கீழாட்களின் மேல் திணித்தது. அது  இன்றுவரை அவ்வாறே உள்ளது. 

ஷ்ரத்தானந்தாவின் கொலை  இறுதியாக இம்மனப்பாங்கை சட்டமாக மாற்றியது.1927ல் 295 ஏ சட்டமான பின், மத உணர்ச்சிகளை சொற்களால் காயப்படுத்ததினால் அவர்கள்மேல் குற்றம் சாட்டுவது சுலபமாகி விட்டது. கொலை செய்தவர் தண்டிக்கப்பட்டதுமல்லாமல் ஷ்ரத்தானந்தாவிற்கும் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்நடந்த  நிகழ்ச்சிக்காக  அவர் இறந்த பின் தண்டனையளிக்க முயற்சி செய்தனர். (ஹாட்காக்(Adcock)2016:345)

எதிர்மறை விளைவு: (Counterproductive)

பிரிட்டிஷ் அரசாங்கம் இதன் மூலம் நீதியை நிலைநாட்ட அக்கறை கொண்டு  இதை செய்யவில்லை.அவர்களுக்கு வேண்டியது பொருளாதாரம் தடையில்லாமல் நடப்பதற்கு தேவையான அமைதியும் சலசலப்பின்மையும் ஆகும். கிருத்துவ மதபோதகர்கள் செய்யாததை ஒன்றும் (இன்றும் செய்து கொண்டிருப்பதையும்) ஆரிய சமாஜம் செய்துவிடவில்லை. கிருத்துவத்திற்கு மக்களை மாற்றுவதற்காக அவர்களுடைய மதத்தைக் குறைபட்டதாகவும் தவறான ஒன்றாகவும் விவரிப்பார்கள். இது அவர்களுடைய மதத்தைப் பற்றிய மாற்றுக்  கருத்துகள் அல்லது தற்போதைய உணர்ச்சிபூர்வமான வார்த்தையில் சொன்னால் “அவமதிப்பு” என்பதில்தானே அடங்கும். 

ஆரிய சமாஜத்தின் வார்த்தைகள் முஸ்லிம்களின் விரும்பத்தகாத செயல்களைத் தூண்டியிருந்தால் சமாஜமும் பிரச்சினைக்கு ஒரு காரணமென்பதால் அதற்குப்  பரிகாரம் தேவை. கலகங்களைத் தடுப்பதற்கான எண்ணத்துடன் செய்யப்பட்ட புதிய சட்டம், முஸ்லிம்கள் ஆரிய சமாஜத் தலைவர்களை தொடர்ந்து கொலை செய்வதையும்  கலகங்களையும்  இரண்டாம் உலகப்போர் வரை நிறுத்தவில்லை என்பதை அம்பேத்கர் விவாதித்துள்ளார் (அம்பேத்கர்1940:156). முடிவாக, தேசப்பிரிவினையின்போது அவர்களுடைய சக்திக்கூடமாக விளங்கிய மேற்கு பஞ்சாபில் லாகூரில் இருந்த  தயானந்த் ஆங்கில வேதக்கல்லூரியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டது  ஆரிய சமாஜத்தின் முதுகை உடைத்தது. சுதந்திரத்திற்குப் பிறகு இஸ்லாமிற்கு எதிரான வாதங்கள் வகுப்புவாதம் என, வலுவடைந்து கொண்டிருந்த  மதச்சார்பியக்கம் அதற்கு கரி பூசியதால் ஆரிய சமாஜம் அதை கைவிட்டது. ஆனால், 295 ஏ பகுதிக்கு இதில் சம்பந்தமில்லை. 

அடிப்படையில், இச்சட்டம் வன்முறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, ஒரு அறிக்கை வன்முறையை தூண்டியது என்பதே  வன்முறைக்கு சிறந்த ஆதாரம் என்றாக்கி  விட்டது. மேலும், பொது அமைதியை குலைக்குமளவிற்கு உணர்வுகளைத் தட்டி எழுப்பினால்  அரசாங்கம் சட்டபூர்வமான நடவடிக்கையை எதிராளிகள் மேல் எடுக்கலாம் என இச்சட்டம் அதனுடைய எல்லையை  விரிவாக்கியுள்ளது. 295 ஏ மத உணர்வுகளை இவ்வாறு அரசியலாக்குவதை ஊக்குவித்துள்ளது,(ஹாட்காக் 2016:345)

எனவே, ஒருங்கிணைந்து  செய்யும்  வன்முறை நடத்தைகள்  காயமடைந்த உணர்வுகளின் விளைவு என்று நியாயப்படுத்தும்போது, மதவெறியில்  நடக்கும் வன்முறை செயல்களைத் தடுப்பதில் சட்டம் முன்னெச்சரிக்கையாக செயல்படுவதிலிருந்து பின்வாங்குகிறது.(ஹாட்காக் 2016:347). 295 ஏவின் தற்கால விளைவுகள் கொடுமையாகவும் மதச் சார்பற்றதாகவும் இல்லாதிருப்பதால் இச்சட்டத்தை நீக்க வேண்டும் என்ற மனுவில் கையெழுத்திட அறிவாளர்கள் சுலபமாக ஒப்புக்கொள்வர். இந்துக்களுக்கு எதிராகவும் சிறுபான்மையினர் சார்பாகவும் உள்ள இவர்கள், சிறுபான்மையினரை வாக்குவாதங்களிலிருந்து பாதுகாக்கும் கவசமாக முதலில் இயற்றப்பட்டதும் முஸ்லீம்கள்  செய்யும் கொலைகளுக்காக ஹிந்து வார்த்தைகளைத் தண்டித்த ஒரு சட்டத்திற்கு  இப்போது இவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்பது அதிசயமாக உள்ளது. 

முதலிலிருந்தே வெகு காலம் வரை முஸ்லிம்களுக்கு கவசமாக இருந்த சட்டத்த்திலுள்ள மதங்களைப் பற்றிய  நடுநிலை மொழி தங்களுக்கும்  நன்மை பயக்கக் கூடும் என்பதை ஹிந்துக்கள் படிப்படியாக தெரிந்து கொண்டனர். கிறித்துவர்கள் டான் பிரவுன் அவர்களின் டாவின்சி கோட் என்ற புத்தகத்தை இச்சட்டத்தின் வாயிலாகத்தான் தடையை கொண்டு வந்தனர். இப்போக்கு  “தொடாதே என்னை”என்ற  பரவலாக உள்ள அருவருப்பான சூழ்நிலையை உண்டுபண்ணியுள்ளதால்  ஒவ்வொரு சமூகமும் மற்ற சமூகங்களை விட தங்களுடைய உணர்வுதான் எளிதில் காயப்படக் கூடியதாக உள்ளது  என்கிறது.

பகுதி 295 ஏவின் பின்னுள்ள அறிவுபூர்வமான காரணம்: (Rationale Behind Section 295A)

பத்ராவும் மற்ற ஹிந்துக்களும் கொடுத்த அழுத்தத்திற்கு பயந்து பதிப்பாளர்கள் டானிகரின் புத்தகத்தையும் அதற்கு முன் ராமானுஜனின் 300 இராமாயணங்கள் புத்தகத்தையும் திரும்பப்பெற  இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, 295 ஏ சட்டத்தின்கீழ் வரும் விசாரணையை சந்திப்பதற்கான பயம்; இரண்டு, இந்துக்களிடையே இப்புத்தகங்கள் விற்பனையாகுமா என்ற பயம்.  சித்தாந்தத்திற்கும் மேலாக, தொழிலதிபர்கள்  கணக்கில் எடுத்துக் கொள்வது, சர்ச்சையினால்  அவர்களது வியாபாரத்திற்கு ஏற்படும் லாபநஷ்டங்கள்தான்.  இந்த விவகாரத்தில் அவர்கள் கணக்கீடு ஹிந்துக்களின் எண்ணிக்கை மட்டுமே. 

இந்த சர்ச்சையைத் தூண்டியவர்கள் பதிப்பாளர்களிடம் பயத்தை உண்டுபண்ணவில்லை. அரசியல் அதிகாரமும் அவர்கள் பின்னால் இல்லை. இந்த சர்ச்சையின் போது காங்கிரஸ் கட்சி பதவியிலிருந்தது. இந்திய நீதிபதிகள் விலை போகிறவர்கள் என்பதைக் கேட்டிருந்தாலும், இந்திய நீதித்துறை சுதந்திரமாக நடப்பதால் சில சமயம் அரசாங்கத்திற்கு பிடித்தமில்லாத தீர்ப்புகளும் வருவதுண்டு.   உதாரணமாக, 2002ல் நடந்த குஜராத் கலவரத்தில் முதல்வர் மோடிக்கு  சம்பந்தமில்லை என மீண்டும் மீண்டும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த சமயம், மோடிக்கு எதிரான பிரச்சாரங்களில் மிகுந்த அளவில் முதலீடு செய்திருந்த காங்கிரஸ் கட்சிதான் பதவியில் இருந்தது. 

மனிதர்கள் எத்தனை விரைவாக எதையுமே மறந்து விடுகின்றனர் என்பது ஒரு விசித்திரம்.  மோடியின் பா.ஜ .க. 10 வருடங்களாக எதிர்க்கட்சியாக இருந்து மாறி மே, 2014ல் தான் ஆட்சிக்கு வந்தது. ராமானுஜன், டானிகர் சர்ச்சைகள் போது காங்கிரஸ் தலைமைப் பதவியில் பத்திரமாக அமர்ந்திருந்தது. பதிப்பாளர்கள் ஏதாவது ஒரு ஆட்சியின் மீது பெருமதிப்பு வைத்திருந்தார்களென்றால் அது மதச் சார்பற்ற காங்கிரசாகத்தான் இருக்க முடியும். எனவே, 295 ஏ சட்டப் பகுதி  எக்கட்சி  ஆட்சியிலுள்ளது என்பதை பொருட்படுத்தாமல் தணிக்கை முறைகளுக்கு ஆதரவளிப்பதில் செல்வாக்கு மிகுந்ததாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின் 295 ஏவை நீக்குவதற்கு முனையவில்லை. இதற்கான ஒரு காரணம் உணர்ச்சிமிக்க சமூக விவகாரங்களாய்  நீண்ட கொம்பால்  கூட தொட மாட்டோமென கட்சி முடிவெடுத்துள்ளது. பத்திரமான மதச்சார்பற்ற வளர்ச்சிக்காக உறுதியெடுத்த்துள்ளது. இதற்கும் ஒரு ஆழமான காரணம் உள்ளது.  

295 ஏவில் படிகமான காலனியப் பார்வை 1857ல் நடந்த கலகத்தினால் முன்வந்தது. இக்கலகம், பகுத்தறிவிற்கு  ஒவ்வாததாகத் தெரிந்த மத உணர்ச்சிகள்: பசுக்கொழுப்பிற்கும் பன்றிக் கொழுப்பிற்கும் முறையே ஹிந்துக்களிடமும் முஸ்லிம்களிடமும் இருந்த ஆட்சேபணைகள். இந்தியா இதற்கு பின் பேரரசாக மறுசீரமைக்கப்பட்டு ராணி விக்டோரியா இந்தியாவிற்கும் பேரரசியானார். இந்தியர்களை தன் வசம் செய்து கொள்வதற்காக ஒரு புனிதமான பிரகடனத்தை அறிவித்தார்: ‘ராணி விக்டோரியாவின் மத விவகாரங்களில் நடுநிலை எனும் பிரகடனம்….இந்தியர்களின் மத நம்பிக்கைகளிலும் வழக்கங்களிலும் தலையிடுவதை தவிர்ப்போம் என வாக்குறுதி அளித்தது. (….) இப்பிரகடனத்திற்கு தூண்டுதலாக இருந்தது இந்தியாவில் மதம் ஒரு  நிலையில் நில்லாத உணர்வெழுச்சிக்கு மூலகாரணமாயிருப்பதால் அமைதிக்கு பங்கம் விளைவிக்கக்  கூடியது  என்ற அனுமானமாகும்.’(விஸ்வநாத் 2016:353)

இந்நிலை, காலனிய வர்க்கத்தின் அதனைப் பற்றிய மேம்பட்ட நினைப்பின் சிகரம். பிரிட்டிஷ் மக்கள், வாக்குவாதங்களில் காரணங்களை முன்வைத்து பேசுவதில் திறமையுடையவர்கள். ஆனால், பிறந்த மண்ணில் வாழும் இந்தியர்களோ, உணர்ச்சிகளும் மூடநம்பிக்கைகளும் கூடிய கூண்டில் அடைபட்டவர்கள் என்பதாகும். இதில் ஒரு பருப்பளவு உண்மையுள்ளது; இந்தியர்கள் ஆங்கிலேயர்களை விட அதிகமாக உணர்ச்சி வயப்படுகிறவர்களோ, மூட நம்பிக்கை உடையவர்களோ அல்ல. ஆனால் மத வாதங்களில்  விருப்பமற்றவர்கள். 19ம் நூற்றாண்டு ஐரோப்பியர்கள் உலகத்தை அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வமுடையவர்களாக இருந்தனர். அந்நிய நாடுகளை கைப்பற்றிய சூட்டோடு சூடாகப் புதிய மொழிகளையும் கலாச்சாரங்களையும் பயில்வதில் ஆர்வமுள்ளவர்கள் இந்நாடுகளில் வந்திறங்கினார். இத்தகைய உந்துதலில் பெருமிதம் கொண்ட இந்த ஆர்வலர்கள், சோம்பல் மிகுந்த உள்ளூராரிடம் இத்தன்மை இல்லையென்ற பார்வையைக் கொண்டிருந்தனர்.  எனவே, இந்திய மொழியியல் முன்னோடிகளிடம் பெருமதிப்பு வைத்திருந்தாலும், மொட்டிட்டிருக்கும் ஐரோப்பிய மொழி அறிவியலிற்கு உத்வேகத்தை அளித்தவர்கள் என ஒப்புக்கொண்டாலும் அவர்கள் அந்நிய மொழிகளில் ஆர்வம் கட்டவில்லை என்பதாக பார்த்தனர். உதாரணத்திற்கு, பழமை வாய்ந்த சம்ஸ்க்ருத இலக்கணத்தை வகுத்த பாணினி, இரானிய புருஷாஸ்கி மொழி பேசும் மக்களுக்கு அருகில் வாழ்ந்த போதும் அவருடைடைய மொழியியல் புனைவுகளில் இம்மொழிகளை பயன்படுத்தவில்லை. 

எனவே, மத விவகாரங்களிலும் இதே நிலைதான் நிலவுகிறது என்பது ஒரு தர்க்கரீதியான முடிவாயிருந்தது. கேரளாவில் சிரிய கிருத்துவர்களுக்கும், குஜராத்தில் சௌராஷ்ட்ரியர்களுக்கும் , உள்ளூரார் கொடுத்த வரவேற்பை பார்க்கலாம். அவர்களுடைய மதத்தின் உட்கருத்துகளைப் பற்றிய கேள்விகளை எழுப்பவில்லை; அவர்களது பாரம்பரிய வழக்கங்களையும் -நன்னடத்தை என்ற எல்லைக்குள்-( தற்போதைய அரசியல் சட்டத்தில் உள்ளது போல் இரானிலும் சிரியாவிலும் இல்லாத பசுவதைக்கான தடை), அவர்களுக்கு விருப்பமான தீர்க்கதரிசிகளையும், குருக்களையும், திருநூல்களையும மரியாதை செய்வதையும், தேவாலயங்களையும், கோவில்களையும் நிர்மாணிப்பதற்கு அனுமதித்தபோதும் அவர்கள் மதத்தில் அவ்வாறு என்னதான் உள்ளது என்பதை அறிவதில் ஆர்வம் காட்டவில்லை. தங்கள் பாரம்பரியத்தில் திருப்தியுடன் இருந்ததால் அந்நிய மத  வழக்கங்களில் மூக்கை நுழைக்க விரும்பவில்லை. ஹிந்துக்கள் முஸ்லிகள் இருவரிடமுமே  மற்ற மதங்களின் மேல் அறிவியல் சார்ந்த ஆர்வம் தென்படவில்லை. அல் பிரூனி, தாரா ஷிகோ இருவரும் நடைமுறைக்கு ஆதாரமாய் அமைந்த  விதிவிலக்குகள். 

காலனிய காழ்ப்புணர்ச்சிகள் அனைத்துமே தவறானவையல்ல. ஆனால் மேற்கூறிய விவரங்கள் சாமானிய ஹிந்துக்களுக்கு அநீதி இழைப்பதாக உள்ளது. ஹிந்துக்கள் சமீபகாலம் வரை கிருத்துவர்களை விட மற்ற மதங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினர். ஆனால் மதங்களை விமரிசிக்கும் மனப்போக்கு அவர்களிடம் இல்லை. அவர்கள் அகதிகளிடம் காட்டிய சகிப்புத்தன்மை  அலட்சியத்தினாலோ தங்களைப் பற்றிய மன நிறைவினாலோ அல்ல. அவர்களுடைய பரந்த மனப்பான்மையினால்தான் என நான் நினைக்கிறேன். 

மேற்கில், மதம் மாறிய புனித பால் (யூத மதத்திலிருந்து கிருத்துவம்), புனித ஆகஸ்டின்  (மானிகியத்திலிருந்து கத்தோலிசிசம்), ஜான் நியூமன் (ஆங்கிலிகனிசத்திலிருந்து கத்தோலிக்கம்) போன்றவர்களிடம் அவர்களது மத மாற்றம் சரியான காரணத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதல்ல என்றோ, மத வாதங்களில் ஈடுபடுவது  வெறுப்பை ஏற்படுத்துவதற்காக கணக்கிட்டு செய்யப்படும் தூண்டுதல் என்று  ஆங்கிலேய நீதிபதி ஆரிய சமாஜத்திடம் உரைத்தது போல் கூறுவதோ,  அவர்களை  அவமதிப்பதாகும். ஆனால், 295 ஏ வில் படிகமான காலனிய நோக்கில்  இந்தியர்கள் வேற்று இனம், பகுத்தறிவில் குறைந்தவர்கள், வாக்குவாதங்களில்  நம்பிக்கை வைக்கக் கூடாதவர்கள், அதிருஷ்டவசமாக, வாக்குவாதம் செய்வதிலும்  அதிக விருப்பமில்லாதவர்கள்  என்பதினால், இந்திய கலாச்சாரத்துடன் ஊறிய மனப்போக்கு எனக் கூறி மத வாக்குவாதங்களை சட்டத்திற்கு புறம்பானதாகச் செய்வது  மிகையாக தோன்றவில்லை. 

இவ்வாறே, பல இந்திய மதச் சார்பற்றவர்களும் அவர்களது மேற்கத்திய நண்பர்களும் வாக்குவாதங்களை அடக்குவதை தொடர்ந்து நியாயப்படுத்துகின்றனர். ‘இந்தியாவில், ஒரு மதத்தை உண்மையாகவே பொறுத்துக் கொள்வதென்றால் அம்மதத்தை விமரிசனம் செய்வதை விட்டு விலகி இருப்பதுதான் என்பது மதச்சார்பற்றவர்களின்  பரவலான உயர் கோட்பாடு’. (பென்னிங்டன் 2016:346)

மதச் சார்பின்மை: (Secularism)

மத விமரிசனத்திலிருந்து விலகி இருத்தல் மதச் சார்பற்றவர்களின் கோட்பாடு என்று அழுத்திச்  சொன்னால் அவர்களது மென்மையான உணர்வை குத்துவதாகும். மேலும் அது ஒரு நீண்ட விவாதத்திற்கு இடமளிக்கும். மேலும் 295 ஏ சட்டத்தின் கீழ் இவ்விவாதம் மாட்டிக் கொள்ளும். ஒரு கல்வியாளர் இவ்வார்த்தையை இவ்விதம் பிரயோகிப்பது முறையானதல்ல.. ஆனால், இந்தியாவில், இச்சொல், ஜவஹர்லால் நேரு காலத்திலிருந்தே(1951), மூலப் பொருளிற்கு முற்றிலும் மாறான பொருளை கொண்டுள்ளது.  இது மதச் சார்பற்றவர்கள் என தங்களை வருணித்துக் கொள்ளும் இந்தியர்களையும் அவர்களுடைய எதிரிகள் எனக்  கடுமையாகத் திட்டப்படும் இந்தியர்களையும் நுட்பமாக கவனிப்பவர்களுக்கு  சுலபமாக புரியும். “நவீன மேற்கத்தியம் புரிந்துகொண்டுள்ள மதச் சார்பின்மை பயமுறுத்துவது, ஏளனம் செய்வது, கிருத்துவ இஸ்லாமிய மதங்களின்  அடிப்படை கோட்பாட்டு கடுமையான வார்த்தைகளினால் கண்டனம் செய்வது.(….) எனவே, மிகத் தீவிர  அடிப்படைவாதம் மிக்க இஸ்லாமிய கிருத்துவர்கள் -கிருத்துவ மதபோதகர்களும் முஸ்லீம் முல்லாக்களும்- இந்திய மதச் சார்பின்மையை பாதுகாக்க தொண்டை வரளக் கத்துகிறார்கள் என்பது கபடச் செயலாகத்தான் தெரிகிறது. கம்யூனிச சர்வாதிகாரத்தின்  தொண்டர்கள் ஜனநாயகத்தைப் பாதுகாக்கிறோம் என வாய் கிழியப் பேசுவதும் இது போல்தான்  உள்ளது’. (எஸ்.ஆர். கோயல் 1998:vii)

எனவே, மேற்கு நாடுகளில் மதச் சார்பின்மை என்றால் சட்டத்தின் கண் முன்  எல்லா குடிமக்களும் சமமானவர்கள், அவர்களது மதம் ஒரு பொருட்டல்ல. அல்லது இந்தியர்களின் வார்த்தைகளில், “பொது உரிமையியல் விதித்தொகுப்பு.”  மாறாக, இந்தியாவில், மதச் சார்பற்றவர்கள் இப்போதுள்ள மத அடிப்படையில் உள்ள தனிப்பட்ட சட்டங்களை பாதுகாக்க வேண்டுமென்கிறார்கள். ஆனால் இதிலுள்ள முரண்பாட்டிற்கு சங்கோஜப்பட்டு இந்த பேச்சைத் தவிர்ப்பதைதான் விரும்புகின்றனர். மேலும், இங்குள்ள மதச் சார்பற்றவர்கள் பெரும்பான்மை ஹிந்துக்களுக்கான அரசியலமைப்பு, சட்டம், நடைமுறை பாகுபாடுகளைத் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்கின்றனர். (நீங்கள் வேறொரு கிரகத்திலிருந்து வந்தவராயிருந்து அத்தகைய பாகுபாடுகள் இங்கில்லை என நினைத்தால் உங்களுக்காக ஒரு உதாரணம்: 2006 கல்வியுரிமை திட்டம்  சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு விலக்களித்து மற்ற பள்ளிகளின் மேல் அதிக அளவு பணம் தேவைப்படும் பணிகளை விதித்ததால் நூற்றுக்கணக்கான இந்து பள்ளிகள் இழுத்து மூடப்பட்டன.) 

இதே போல், மேற்கு நாடுகளில் மதச் சார்பின்மை சட்டமானபின், அதனோடு கைகோத்துக் கொண்டு சென்றது மேலும் மேலும் ஆழமாகிக் கொண்டிருக்கும் மத விமர்சனம். மதத்தை அதன் பீடத்திலிருந்து தள்ளியதுடன் மதமும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட நம்பகத்தன்மையில்லாத ஒன்று, விமர்சனத்துக்கும் கேள்விக்குமுரியது என்ற நிலைக்கு கொண்டுவந்து விட்டது. இந்தியாவிலோ, மதச் சார்பற்றவர்கள் இதற்கு  எதிர்மாறாக 295 ஏ சட்டப் பகுதி மத விமர்சனத்தை தடை செய்ய வேண்டும். ஆனால் ஹிந்து மதத்தை விமர்சனம் செய்வதற்கு விலக்களிக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதனால்தான் ஏ. ஏ. ஆர். அறிஞர்கள் இந்திய மதச் சார்பற்றவர்களுடன் ஒன்று சேர்ந்து கொண்டு, சிறுபான்மையினர் கட்டாயப்படுத்தும் தணிக்கைகளை எதிர்த்து ஒரு விரலைக் கூட நீட்டவில்லை என்றாலும் டானிகர் எனும் மடுவை மலை போல் தூக்கி நிறுத்துகிறார்கள். அதனால்தான் இவர்கள் ஹிந்துக்களின்  சுய எண்ணங்களை மதியாமல் மிதித்துச் செல்லும் ஒரு தரமற்ற புத்தகத்தைத் தடை செய்ய வேண்டும் எனும் ஹிந்துக்களின் நயமற்ற முயற்சிக்கு, தீவிர கண்டனம் தெரிவிக்கின்றனர். 

முடிவுரை: (Conclusion)

டானிகர் புத்தகத்தின் பின்வாங்கலைப் பற்றிய ஹிந்துக்களின் நியாய வாதங்கள்  அனைத்துமே சுருக்கமாக ஒன்றைத்தான் சொல்கின்றது: ‘கருத்து சுதந்திரம் என்பது அவமதிப்பதற்கான  சுதந்திரம் அல்ல.’  இது பேச்சாளர்களின் சிந்தனையற்ற தன்மையையும் படிப்பறிவின்மையையும்தான் காட்டுகிறது. புத்தகத் தடையை பற்றிய வாக்குவாதங்களில் அதை எதிர்க்கும் குழுவிலிருந்து ஒருவராவது, ஜார்ஜ் ஆர்வெல் அவர்களின் பிரபலமான நோக்கீடான “சுதந்திரம் என்ற பதத்திற்கு ஏதாவது பொருள் இருக்கிறதென்றால் அது மக்கள் எதை கேட்க விருப்பமில்லையோ அதை கூறுவதற்கான உரிமை” என்பதைக் கூறத்தான் போகிறார். அவமதிக்கும் வார்த்தைகளைக் கூறும் சுதந்திரம் இல்லையென்றால் கருத்து சுதந்திரம் என்பதற்கு அர்த்தமேயில்லை. அவமதிப்பதைத் தடை செய்தால், அர்த்தமுள்ள வார்த்தைகள் கூட யாரையாவது எங்கேயாவது அதிருப்தியூட்டலாம் என்பதால் தடை செய்யப்படும். 

அதுமட்டுமல்லாமல், கடுமையாகத் திட்டி எழுதும் பலர்  (டானிகரையும் சேர்த்துதான்) உண்மையாகவே தாங்கள் சரியான காரியத்தைதான் செய்துள்ளோம். யாரையும் அவமானப்படுத்தவில்லை என எண்ணுகிறார்கள். எனவே, அவமதிப்பு என்பது ஒருவரது உள்ளுணர்வைச் சார்ந்தது. அவமதிக்கப்பட்டேன்  என நினைப்பவருக்கு அனைத்துமே அவமதிப்புகளாகத்தான் தெரியும். இது தொடாதே என்னை என்ற நினைப்பிலேயே மூழ்கி இருக்கும் மோசமான ஒருவரை  எந்த புத்தகங்கள் வெளிவரலாம்  என்பதை  அனுமதிக்கும்  நடுவராக  இருத்தி விடும். 

எனவே தணிக்கையையும், தணிக்கைக்கு ஆதரவாயுள்ள எல்லா செயல்களையும்,பதிப்பாளர்களை அவர்களது வெளியீடுகளை திரும்பப் பெறுமாறு 295 ஏ சட்டத்தை காட்டி அச்சுறுத்தி கட்டாயப்படுத்துவதையும் ஓழித்திடுவோம். தணிக்கை சட்டங்களை ஒழித்திடுவோம். ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் கருத்து சுதந்திரம். ஜனநாயகம் ஓரிடத்தில் அமைவதற்கான முன்நிபந்தனை. முடிவெடுப்பதில் சமபங்கு அனைவருக்கும் உண்டு  என்றாலே  அனைத்து செய்திகளும் கருத்துக்களும் அனைவரிடமும் சமமாக செல்லும் வாய்ப்புள்ளது என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். ஒரு பிரிவு, மற்ற பிரிவுகள் எதை எழுதலாம் அல்லது படிக்கலாம் என்று நிர்ணயிப்பது அல்ல. 

அவமதிப்பை சட்டத்தின் மூலம் தடை செய்யாவிட்டால், சகிக்கவொண்ணாத  அளவிற்கு விமர்சனம் என்ற பெயரில் திட்டல்  நம்மைச் சூழும் என்ற அச்சத்திற்கு பதில்: இந்தியா எந்த விதமான தணிக்கை சட்டங்களும் இல்லாமல் ஆயிரக் கணக்கான வருடங்கள் இருந்திருக்கிறது. சமய மார்க்கத்தில், காலனிய காலத்திலோ அல்லது இன்றைய  அளவிலோ இருக்கும் அவமதிப்பை விட அப்போது மோசமாக இல்லை. மிகைப்படுத்தப்பட்ட இத்தகைய அச்சத்தை   ஒரு நாகரீகமான சமுதாயம் அரசின் தலையீடு இல்லாமலேயே  அடக்கம் செய்து விடும்.  மக்கள் ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்து கொள்வதின் மூலம், விமர்சனம், அவமதிப்பு இரண்டையுமே ஒரு அளவோடு நிறுத்திக் கொள்வார்கள். 

முடிவாக, உலக  நோக்கங்களிலிருந்து ஊற்றெடுக்கும் வெறியூட்டும் விமர்சனங்கள்  அந்த நோக்கங்களின் உட்கருத்துக்களோடு சம்பந்தப்படாதிருக்கலாம்  என்பதை நாம் எதிர்கொண்டே தீர வேண்டும். விமர்சனம் எல்லா மதங்களையும் ஒரே அளவிற்கு வன்முறையில் இறங்கத்  தூண்டுவதில்லை. தற்செயலாக அமைந்த ஒரு மகிழ்ச்சியான நிகழ்வினால், நான் தைரியமாக கூறுவேன், இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்த மதங்கள் அவர்களுக்கிடையேயுள்ள கருத்து வேறுபாடுகளை சுமூகமாக தீர்த்து கொள்ளும் திறமை படைத்தவையாகும். 

(Published in Astha Bharati’s Periodical,Dialogue, in 2016)

BIBILIOGRAPHY

Adcock,C.S.,’Violence, Passion and the Law: A brief history of section 295A and its antecedents’ Journal oaf the American Academy of Religion, June 2016,Vol 84.337-351

Agarwal,Vishal, The New Stereotypes of Hindus in Western Indology, Hinduworld Publishers, Wilmington, DE, 2014

Ambedkar, Bhimrao Ramji, Thoughts on Pakistan,1940, republished as Vol 8 of Ambedkar’ Writings and Speeches, Published by the Government of Maharashtra, 1986-90

Doniger, Wendy, The Hindus: An Alternative History, Penguin, Delhi, 2009

_____,’Public Statement from Wendy Doniger following withdrawal of her book by the publisher’, South Asia Citizens Web, 11 February 2014

_____’ Roundtable on Outrage,Scholarship, and the Law in India: A response’ Journal of the American Academy of Religion, June 2016, Vol 84, pp 364-366

Elst, Koenraad, The Argumentative Hindu, Voice of India, Delhi, 2012

_____, On Modi Time, Voice of India, Delhi, 2015

Goel,Sita Ram, ed., Freedom of Expression, Voice of India, Delhi, 1998

Jordens, J.T.F., Swamy Shraddhananda: His Life and Causes, Oxford University Press, Oxford/Delhi, 1981

Malhotra, Rajiv, Academic Hinduphobia, Voice of India,Delhi, 2016

Pennington, Brian K., ‘The unseen hand of an Underappreciated Law,: The Doniger affair and its aftermath’ Journal of the American Academy of Religion, June 2016, Vol.84,pp.323-336

Ramacharan, Anantanand, ‘Academy and Community: Over.84, pp.367-3 ‘Overcoming suspicion and building trust’ Journal of the American Academy of Religion, June 2016,Vol 84,pp.367-372

Swarup, Ram, Hindu View of Christianity and Islam, Voice of India, Delhi, 1993

Viswanath, Rupa, ‘Economies of offense: hatred,speech, and violence in India’, Journal of the American Academy of Religion, June 2016, Vol 84,pp.352-363

Series Navigation<< ஆர்.எஸ்.எஸ் பற்றி ஊடகத் திரிப்புகள்மெக்காலேயின் வாழ்க்கையும் காலமும் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.