
ஏரோசால் என்ற சொல்லைக் கேட்டவுடன் பெரும்பாலானோர் நினைவுக்கு வருவது ஹேர்ஸ்ப்ரே அல்லது தூய்மைப்படுத்தி தெளிப்பான்கள். உண்மையில் அவற்றை ஏரோசால் ஸ்பிரே என்று குறிப்பிடுவதுவே சரி. பொதுவான வரையறுப்பின்படி ஏரோசால்கள் என்பது வாயு அல்லது காற்று ஊடகத்தில் இடை நிறுத்தப் பட்டுள்ள (suspended ) மிகச் சிறிய திவலைகள்(திரவம்) அல்லது துகள்கள். ஏரோசால்கள் போதிய அளவில் வளிமண்டலத்தில் குவிந்திருக்கும் போது. முகில்களை உருவாக்கியும் சூரிய ஒளியை சிதறடித்தும் (scattering), சூரிய வெப்பத்தை உட்கிரகித்தும்(absorption) வினையாற்றி நம் கவனத்தை ஈர்க்கின்றன. சூரிய ஒளிச்சிதறலின் காரணமாக புகை மூட்டம் (haze) உண்டாவது மட்டுமின்றி சூரிய உதயம் மற்றும் அஸ்தமன வேளைகளில் வானத்தின் குறிப்பிட்ட பகுதிகள் சிவந்து போவதையும் காண்கிறோம். வளிமண்டலத்தில் பரவியுள்ள ஏரோசால்களை மட்டும் குறிப்பிடுவதற்கு அறிவியலாளர்கள் ஏரோசால் என்னும் பதத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஏரோசால் என்பது, தூசிப் படலம் என்னும் பொதுப் பெயராலும் சில இடங்களில் இக்கட்டுரையில் குறிப்பிடப் படுகிறது.
ஏரோசால் அறிவியல்
ஏரோசால் அறிவியல், ஏரோசால் உருவாக்கம் மற்றும் அகற்றம், தொழில்நுட்பவியல் சார்ந்த பயன்பாடுகள், சுற்றுச்சூழல் மற்றும் மக்கள் மீது ஏரோசால்களின் தாக்கம் மற்றும் பிற சம்பந்தமுள்ள தலைப்புகளையும் உள்ளடக்கி இருக்கிறது. (விக்கி)
வளிமண்டலக் கூறுகள்
நம் வளிமண்டலம் அடிப்படையில் வாயுக்களின் கலவை — 78% நைட்ரஜன் மூலக்கூறுகளையும், 21%உயிரியம் (oxygen) மூலக்கூறுகளையும் கொண்டது. மீதமுள்ள விழுக்காடு, 0.9% ஆர்கான் மற்றும் 0.1% பிற வாயுக்களால் ஆனது. பசுங்குடில் வாயுக்களான கரியமில வாயு,மீத்தேன், மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு பிற வாயுக்களாக அறியப்படுகின்றன. வளிமண்டலத்தில் இந்த வாயுக்களைத் தவிர துகள்மப் பொருட்கள் (Particulate Matter) எனப்படும் திரவத் திவலைகளும், திடத் துகள்களும் மிகச் சிறிய அளவில் காணப்படுகின்றன. இத்துகள்கள் மனித உடல்நலம் மற்றும் ஒட்டுமொத்த தட்ப வெப்ப நிலையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை கண்ணுக்குப் புலப்படாமல் இருப்பதால், வளிமண்டலம் பொதுவாகக் களங்கமற்றதாகக் காணப்படுகிறது. அப்படி இருக்கும் போதிலும், உங்கள் ஒரு ஆழ்ந்த மூச்சு இழுப்பில், கோடிக்கணக்கிலான திவலைகள் மற்றும் துகள்கள் உடலில் உட்புகும். இவ்வாறு வளிமண்டலத்தில் நீக்கமின்றிப் பரவியிருக்கும் தூசிப் பொருட்களே மேலே குறிப்பிட்ட ஏரோசால் அல்லது தூசிப் படலம். பெருங்கடல்கள், பாலைவனங்கள், காடுகள், மலைகள், பனிப்பாறைகள் மற்றும் அவற்றிடையேயுள்ள சூழ்நிலைத் தொகுப்புகள் அனைத்தின் மீதும் உலாவிவரும் காற்றில் இவற்றைக் காணலாம். இவை, தரையிலிருந்து வளிமண்டலத்தின் அடுக்குக்கோளம் (stratosphere) தொடங்குமிடம் வரையுள்ள மொத்த வெப்ப மண்டல கனபரிமாணம் முழுவதிலும் மிதந்து செல்லக் கூடியவை. ஏரோசால் அளவில் சில நானோ மீட்டர்கள் (மிகச் சிறிய தீநுண்மியின் உடல் அகலத்தை விட குறைவு) முதல் பல மைக்ரோ மீட்டர் வரை (மனிதத் தலை மயிரின் விட்டம் 50-70 மைக்ரோ மீட்டர்) வீச்செல்லை கொண்டிருக்கும்.
ஏரோசால் -துறைச் சொற்கள்
வெவ்வேறு துறை வல்லுநர்கள் ஏரோசால்களின் வடிவங்கள், அளவைகள் மற்றும் வேதிக் கலவைகளைப் பொறுத்து வெவ்வேறு துறைச் சொற்களால் குறிப்பிடுகிறார்கள். நச்சு இயல் வல்லுநர்கள் (toxicologists) ஏரோசால்களை அதிநயம், நயம் மற்றும் நயமற்றவை என்று வகைப்படுத்துகிறார்கள். ஒழுங்காற்று முகமைகளும் வானிலை ஆய்வாளர்களும் ஏரோசால்களை துகள் பொருட்கள் (Particulate Matter) என்னும் பொதுப் பெயரால் குறிப்பிடுகிறார்கள். அவற்றின் பரிமாணத்தைப் பொருத்து PM 2.5, PM 10 என்று அழைக்கிறார்கள்.
சில பொறியியல் புலங்கள் ஏரோசால்களை நானோ துகள்கள் என்கின்றன. ஊடகங்கள் பெரும்பாலும் ஏரோசால் பிறப்பிடங்களை நினைவூட்டும் அன்றாடப் பயன்பாட்டு சொற்களான புகை, சாம்பல், புகைக்கரி போன்ற எந்த பயன்படுத்திக் கொள்கிறார்கள். காலநிலையியல் ஆய்வாளர்கள் (climatologists) பொதுவாகப் பயன்படுத்துவது ஏரோசால்-ன் வேதிக் கலவைகளைத் தெரிவிக்கும் விவரத் துணுக்குகள் அடிப்படையில் அமைந்துள்ளது. அவர்கள் முன்னிலைப் படுத்தும் ஏரோசால் குழுக்கள்: சல்பேட்டுகள், அங்ககக் கரிமம் (organic carbon), கரி நுண்தூள்(black carbon), நைட்ரேட்கள், தாதுத் துகள்கள் மற்றும் கடல் உப்பு. துறைப் பெயர்கள் பெரும்பாலும் தனித்துவமானவை; குறைபாடு உடையவை. ஏனெனில் ஏரோசால்கள் அடிக்கடி வெவ்வேறு விதங்களில் கூட்டு சேர்ந்து சிக்கலான கலவைகளை உருவாக்கி விடுகின்றன. எடுத்துக்காட்டுகள், கரிம நுண் தூள் நைட்ரேட் மற்றும் சல்பேட் களுடன் ஒன்று சேர்வது அல்லது ஏரோசால் துகள்களின் மேல் ஒட்டிக் கொண்டு கலப்பின கலவை உருவாவது போன்றவை. இவை இயல்பாகவும் எளிதாகவும் வெகு சாதாரணமாக நடந்து விடுகின்றன.
இயற்கை (natural) ஏரோசால்
பெருந்திரளான ஏரோசால்கள் (மொத்த எடையில் 90%) இயற்கையாக உருவாகக் கூடியவை. அவையே இயற்கை ஏரோசால்கள். எடுத்துக் காட்டுகள்:
- இயக்கத்திலுள்ள எரிமலைகள் காற்றில் நெடுகப் பற்பல வரிசைகளில் சாம்பலையும் கந்தக அமில வாயு (sulphur dioxide) மற்றும் பிற வாயுக்களையும் உமிழ்வதால் சல்பேட் ஏரோசால்கள் உருவாகின்றன.
- காட்டுத் தீக்கள் முழுமையாக எரியுறாத அங்ககக் கரிமங்களை (organic carbon) மேலே அனுப்புகின்றன.
- சில தாவரங்கள் உண்டாக்கும் வாயுக்கள் காற்றிலுள்ள பிற பொருட்களுடன் வினையாற்றி ஏராளமான ஏரோசால்களை உற்பத்தி செய்கின்றன அமெரிக்காவிலுள்ள புகழ் பெற்ற புகை மலைகள் (Great Smoky Mountains ) வெளியிடும் புகை அத்தகையது.
- பெருங்கடலில் சில வகை நுண்ணிய கடற்பாசிகள் (micro algae) உண்டாக்கும் டைமெத்தில் சல்ஃபைட் என்ற வேதிப் பெயர் கொண்ட சல்ஃபரஸ் (sulfurous) வாயுவும் வளிமண்டலத்தில் சல்பேட் ஏரோசால்-ஆக மாற்றப் படுகிறது.
- கடல் உப்பு மற்று தூசி ஆகிய இரண்டு வகையும் இயற்கையில் ஏராளமாக உருவாகும் ஏரோசால்கள். பாலைவனங்களில் மணற்புயல் வீசும்போது தாது தூசிகளின் சிறு துணுக்குகள் வளிமண்டலத்தைச் சென்றடைகின்றன. பெருங்கடலின் அலைகள் மீது வீசும் பலமான காற்றால் சிதறடிக்கப் படும் கடல் நீர்த்திவலைகளோடு கடல் உப்பும் வானத்தை அடைகிறது. இவை இரண்டுமே வழக்கமான ஏரோசால்களை விட அதிகப் பருமன் உடையவை.
- தாவர மற்றும் விலங்கின ஒட்டுண்ணிகளான காளான்களின் சிதல் விதைகள் (fungal spores)-இனப் பெருக்கம் செய்யும் நுண் உயிரிய துகள்கள்- தெறித்துப் பரவும் இனப்பெருக்க முறையை தகவமைத்துக் கொண்டுள்ளன. இவை முதன்மை உயிரிய ஏரோசால் துகள்களின் (primary biological aerosol particles ) கணிசமான பகுதியாக இருந்து வருகின்றன. காற்றில் வெகு தூரம் பரவி மனிதருக்கு சுவாசப் பிரச்னைகளை உண்டாக்கக் கூடியவை.
மனிதச் சூழலால் உருவாகும் (anthropogenic ) ஏரோசால்
மொத்த ஏரோசால்களில் மீதமுள்ள 10 விழுக்காடு ஏரோசால்கள் மனித இனத்தின் செயல்பாடுகளால் உருவாகின்றன எனக் கருதப் படுகிறது. அவற்றின் ஊற்றுக் கண்கள் பலவகைப் பட்டவை. பொதுவாக இயற்கை ஏரோசால்களை விடக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் போதிலும், இவற்றின் தாக்கம் நகர மற்றும் தொழிற்சாலைப் பகுதிகளின் தரைக் காற்றில் மிகுந்திருக்கும். சில முக்கிய மனித செயல்பாடுகளால் உருவாகும் ஏரோசால்கள் வருமாறு:
- தொல்படிவ எரிபொருட்கள் பயன்பாடு மிகுந்த அளவில் சல்பர்-டை-ஆக்சைட் வாயுவை உண்டாக்குகிறது. அவ்வாயு வளிமண்டலத்தில் காற்றில் கலந்துள்ள நீராவி மற்றும் பிற வாயுக்களுடன் வேதிவினை செய்வதால் சல்பேட் ஏரோசால் உருவாகிறது.
- பிற பயன்பாடுகளுக்காக காடு மற்றும் நிலங்களைக் காலி செய்யவும் பண்ணைக் கழிவுகளை அழிக்கவும் வழக்கமாக நடைபெறும் உயிரியத்திரள் (biomass ) எரிப்புகள் உண்டாக்கும் புகைமண்டலம் முக்கியமாக அங்ககக் கரிமம் மற்றும் புகைக் கரியை உள்ளடக்கி இருக்கிறது.இவையும் ஏரோசாலின் காரணிகள். ஆண்டு தோறும் தலை நகர் டெல்லியில் அறுவடை காலங்களில் மேலோங்கி நிற்கும் புகைப்பனியின் (smog ) இதற்கு ஒரு எடுத்துக் காட்டு.
- தானுந்து வண்டிகள், எரிகூடங்கள் (incinerators), உருக்கு உலைக்களங்கள்
(smelters) மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவை சல்பேட்கள், நைட்ரேட்கள், புகைக்கரி மற்றும் பிற துகள்களின் உற்பத்திக் கூடங்கள்.
- காடழிப்பு (deforestation ), பசுமை அழிக்கும் மிகை மேய்ச்சல் (overgrazing), வறட்சி மற்றும் நிலத்தடி நீர் அருகிப் போகச் செய்யும் மிதமிஞ்சிய பாசனம் ஆகியவை நிலப் பரப்பில் பெரு மாற்றம் கொண்டு வரும் போது, புழுதி ஏரோசால் வளிமண்டலத்தினுள் நுழையும் விகிதமும் அதிகரிக்கும். உள்ளரங்குகளில் புகை பிடித்தல், எரிவாயு அடுப்பு, கணப்பு அடுப்பு, மெழுகு வர்த்தி பயன்பாடுகள் ஆகியவை ஏரோசால்-ன் ஊற்றுக் கண்கள்.
வியப்பளிக்கும் இடப் பெயர்வுகள்
வளிமண்டலத்தில் ஏரோசால்கள் சொற்ப காலத்துக்கே (பொதுவாக 4 நாட்கள் முதல் ஒருவாரத்திற்குள் ) இடை நிறுத்த நிலையில் தங்கி இருக்க முடியும் என்றாலும், அப்போதும் அவை பரந்த தூரங்களுக்குப் பயணிக்க முடியும். துகள்கள் வளிமண்டலத்தில் நொடிக்கு 5 மீட்டர் என்னும் வேகத்தில் (5m /sec ) இயங்குவதால் ஒரு வாரத்திற்குள் ஆயிரக் கணக்கான கிலோ மீட்டர்கள் பயணித்து விடுகின்றன. சஹாராவில் கிளம்பும் தூசிப் புகைமங்கள் (dust flumes ), அட்லாண்டிக் கடலைக் கடந்து கரீபியன் கடலுக்கு மேலாக வந்து விடும். காற்றால் வேகமாக அடித்துச் செல்லப்படும் ஆசிய ஏரோசால் கலவை, (குறிப்பாக கோபிப் பாலைவனத்தின் ஏரோசால் ) மற்றும் கிழக்கு சீனத்தின் மாசுபாடுகள் ஜப்பானுக்கு மேலாக பயணித்து மத்திய பசிபிக் பெருங்கடலை நோக்கி செல்லும். சைபீரியா மற்றும் கனடாவில் ஏற்படும் காட்டுத் தீக்கள் எழுப்பும் புகை, ஆர்க்டிக் பனிக் கவிகைக்குப் (ice cap ) போகும் வழியைத் தேடிக் கொள்ளும்
ஏரோசால் உண்டாக்கும் வெப்பத் தணிப்பு
வளிமண்டலத்தில் இருக்கும் ஏரோசால்கள் இருவழிகளில் சூழல் வெப்பத்தைத் தணிக்கின்றன . தாமாகவே சூரிய ஒளியை சிதறடித்து விண்வெளிக்குள் எதிரொளிக்கச்(reflect ) செய்வதோடு முகில்களுடன் சிக்கலான வழிகளில் வினையாற்றி அவையும் அதிக சூரிய ஒளியை விண்வெளிக்குள் எதிரொளிக்கச் செய்து விடுகின்றன. சூரிய வெப்பம் நிலப் பரப்பை முழுதாக அடைய விடாமல் தடையுறுவதால் வெப்பம் தணிகிறது. ஆனால் காட்டுத்தீ, தொழிலக நடை முறைகள் மற்றும் வாகனப் புகை வெளியேற்றம் உண்டாக்கும் கருப்பு கரிமம் மற்றும் பழுப்பு கரிமம் வகை ஏரோசால்கள் சூரிய ஒளியை சிதறடிப்பதோடு வெப்ப உட்கிரகிப்பும் செய்கின்றன. ஆயினும் வளிமண்டலத்தைக் குளிர்விப்பதே ஏரோசால்களின் ஒட்டுமொத்தத் தாக்கம் என்பது அறிவியலாளர்களின் அனுமானம்.
வெவ்வேறு வகை ஏரோசால்களின் செயல்பாடுகள்
எல்லாவகை ஏரோசால்களும் சூழலுக்கு ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.
- கடல் உப்பு அடிப்படை கொண்ட வெளிர் நிற ஏரோசால்கள் ஒளியை பிரதிபலிக்கக் கூடியவை. இவை பூமியைக் குளிர்விக்கின்றன.
- காட்டுத்தீ கக்கும் ஒளிர் கருநிற (jet -black ) புகைக்கரி சூரிய வெப்பத்தை கிரகித்துக் கொள்கிறது. அதிக உயரப் பிரதேசங்களில் ஏரோசால் இதைச் செய்வதால் குறைவான வெப்பமே நிலப் பரப்பைத் தாக்குகிறது. கருத்த ஏரோசால் வெண்பனி மற்றும் பனிப் பொழிவுகளைக் கருப்பாக்கி விடுகிறது. அதனால் அவற்றின் ஒளி திருப்பும் திறன் (albedo) குறைந்து பனி உருக ஆரம்பிக்கிறது.
- சில ஏரோசால்கள் அவற்றின் உள்ளடக்க ரசாயனத்தின் அடிப்படையில், சூரிய வெப்பத்தை புவிக்கோளின் தரைப் பரப்புக்கு அருகில் அடைத்து வைத்துக் கொள்வது பசுமைக் குடில் விளைவு என்றழைக்கப் படுகிறது.
முகில் உருவாக்கத்தில் ஏரோசால்-ன் முக்கிய பங்கு
முகில் உருவாக்கம், வானிலை அமைப்பில் ஏரோசால்கள் ஆற்றும் மற்றொரு ஆதார பணித்திறமாகக் கருதப் படுகிறது. ஏரோசால் துகள்களின் மீது நீர் மூலக்கூறுகள் நீராக ஒடுங்கும் போது முகில் துளிகள் உருவாகின்றன. இவை வழக்கமான முகில் துளிகளை விட அளவில் சிறியவை. இச்சிறு துளிகளின் திரள் முகில் எனப்படுகிறது. நீர்த் துளிகள் முகிலை ஒளி மயமானதாக ஆக்கி விடுவதால் மேலும் அதிக சூரிய வெப்பம் விண்வெளியில் பிரதிபலிக்கப் படுகிறது. இவ்வாறு ஏரோசால்கள் தாமாக குளிர்விப்பதோடு, அவற்றால் உருவான முகில்களும் சேர்ந்து குளிர்விப்பதால் பூமியின் வெப்ப நிலை வெகுவாகக் குறைகிறது. முகில்களின் எண்ணிக்கை மற்றும் வளிமண்டலத்தில் அவை உருவாகி இருக்கும் இடங்கள் ஆகியவையே மழைப்பொழிவு மற்றும் பனிப்பொழிவு வகை உருவாக்கத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
ஏரோசால் உண்டாக்கும் மனித உடல் நல பாதிப்புகள்
ஏரோசால் துகள்கள் சுவாசிக்கும் காற்றை மாசுபடுத்திப் பலவித மனித உடல் நலப் பிரச்னைகளை உண்டாக்கக் கூடியவை. துகள்மப் பொருட்களே வேறெந்த மாசுபடுத்தியைக் காட்டிலும் உலகில் அதிக மக்களின் உடல் நலத்தை பாதித்து வருகிறது. புழுதி, தீயால் உண்டாகும் கரிப்புகை, மற்றும் தொழிற்கூடங்கள் உமிழும் வேதிப் பொருட்கள் அனைத்துமே கேடு விளைவிக்கும் ஏரோசால்கள். உலக சுகாதார நிறுவனத்தின் மதிப்பீடுகள், துகள்ம மாசுபாடுகளின் பங்கேற்பு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7 மில்லியன் அகால (premature) இறப்புகள் நேர்கின்றன என்றும் இது உயர் இறப்பு விகிதத்தின் முன்னணி காரணங்களில் ஒன்றாக இருந்து வருகிறது என்று கூறுகின்றன. துகள்கள் உண்டாக்கும் உடல் நல பாதிப்புகள் அவற்றின் அளவைப் பொறுத்திருக்கும். மைக்ரான் அல்லது மைக்ரோ மீட்டர் என்ற அலகால் துகள்களின் நீளம் அல்லது விட்டம் அளவிடப்படுகிறது . 100 மைக்ரான்-ஐ விடப் பெரிய துகள்களை உட்சுவாசிக்க முடியாது. 10-100 மைக்ரான் அளவு துகள்கள் மூக்கில் உள்ள வடிகட்டிகளால் (சளிச்சவ்வு) நிறுத்தப்பட்டுவிடும். உட்சுவாசிக்க (inhalable) முடிகிற துகள்கள் என்று பொதுவாகக் குறிப்பிடப் படுபவை 10 மைக்ரான்-ஐ விடச் சிறியவை ; உடலின் தற்காப்பு அமைப்புகளைக் கடந்து நுரையீரலின் ஆழத்துக்கு சென்று விடக் கூடியவை. இவையே மேலதிக உடல் நல அபாயங்களை முன்னிறுத்துகின்றன. நெடுஞ்சாலை மற்றும் தொழிற்கூடங்களின் அருகில் கரடுமுரடான ஆனால் உட்சுவாசிக்க முடிகிற 2.5-10 மைக்ரான் துகள்கள் கண்டறியப்பட்டுள்ளன. துகள் மாசுபாட்டுக்கும் கீழ்க்காணும் உடல் நல பிரச்னைகளுக்கும் உள்ள தொடர்பை அறிவியல் ஆய்வுகள் உறுதிப் படுத்தியுள்ளன:
- கடுமையான இளைப்பு நோய் (asthma)
- குறைந்து வரும் நுரையீரல் செயல்பாடு
- காற்றுத் துவார நமைச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல்
- இதய மற்றும் நுரையீரல் நோயாளிகளின் அகால மரணங்கள்
- உயிர்சேதமற்ற மாரடைப்பு
- ஒழுங்கற்ற இதயத் துடிப்பு
வானிலை அமைப்பில் ஏரோசால்களின் தாக்கம்
புவிக்கோளின் வானிலை அமைப்பில் பல்வேறு காரணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவையாவன : சூரிய ஒளி, வளிமண்டலத்திலுள்ள வாயுக்கள், ஏரோசால் துகள்கள். வானிலை அமைப்பில் ஏரோசால்களின் பங்கு சிக்கலானது; நேரடிப் பங்கு, மறைமுகப் பங்கு என இருவகையானது. நேரடி விளைவுகள் அனைத்தும் ஏரோசால் துகள்கள்கள் சார்ந்தவை. முகில்களை உருவாக்க உதவக் கூடிய ஆற்றலுடன் ஏரோசால்கள் நிறைந்து இருப்பது மறைமுக விளைவுகளை உண்டாக்குகிறது. ஏரோசால்கள் மற்றும் அவற்றால் உருவாக்கப்படும் முகில்கள், வளிமண்டலத்துக்குள் வரும் சூரிய வெப்பக் கதிர் வீச்சின் 25% சக்தியை விண்வெளிக்குள் சிதறடித்து விடுகின்றன. இந்த அளவுக்கு புவியும் வளிமண்டலமும் குளிர்விக்கப் படுகின்றன. சூரியக் கதிர் வீச்சு என்பது உண்மையில் மின்காந்த அலைகள் பரப்புகை. இது வளிமண்டலத்திலுள்ள மின்னேற்றம் பெற்ற மூலக்கூறுகளுடன் எதிர்வினை செய்வதால் உருவாகும் புதிய ஒளிக்கதிர் வெவ்வேறு பாதைகளில் பயணிக்கின்றன. இதுவே ஒளிச் சிதறல் (scattering of light ) எனப் படுகிறது.
வானிலை அமைப்பில் பசுங்குடில் வாயுக்களின் தாக்கம்
முகில் மற்றும் ஏரோசால் கூட்டணி வெப்ப நிலை குறைப்புக்கே வழி வகுக்கிறது என்று கண்டோம். அது மிக எளிமைப் படுத்தப் பட்ட கருத்து. ஏனெனில் வெப்பத்தை சிறைப்படுத்தி வைக்கும் பசுங்குடில் வாயுக்களும் காற்றில் கலந்திருப்பதால், சூடேற்றத்தை ஓரளவுக்கு மட்டுமே குறைக்க ஏரோசால் மற்றும் முகில் கூட்டணியால் முடி கிறது. எனினும் வளிமண்டலத்தின் பசுங்குடில் வாயுக்கள் இருப்பை அளவீடு செய்து அதன் மூலம் மதிப்பீடு செய்யப் படும் வெப்ப நிலை உயர்வுகள் நிச்சயமாக எட்டப்படுவதில்லை. அதைவிடக் குறைவாகவே இருக்கின்றன. ஏரோசால்கள் மற்றும் முகில்கள் தான் அதன் காரணிகள் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.
ஏரோசால்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவல்
மனிதருக்கு கோவிட-19 என்னும் பெருந் தொற்று நோயை SARS-CoV -2 வைரஸ் தருகிறது. நோய் பாதித்தவர் சுவாசிக்கும்/ இருமும் /தும்மும் /பாடும் /கூச்சலிடும்/ பேசும் போதெல்லாம் வெளிப்படும் சுவாசத் திவலைகள் மற்றும் ஏரோசால் மூலம் அவருடைய நோய் மற்றவர்க்கு பரவும் வாய்ப்பு இருக்கிறது. திவலைகள் அளவில் வேறுபட்டிருக்கும்- நோயாளிக்கு அருகே நொடிகள் / நிமிடங்களில் தரையில் விழும் பெருந்திவலைகள்(5-10 மைக்ரான் } முதல் நெடு நேரம் காற்றில் நீடித்திருக்கும் <5 மைக்ரான் விட்டமுள்ள சிறு திவலைகள் (ஏரோசால் போன்ற திவலைகள் என்று இவற்றைக் குறிப்பிடுகிறார்கள்) வரை. சிறு திவலைகள் உள்ளரங்குகளில் அதிக நேரம் நீடிக்கக் கூடியவை . காற்றோட்ட வசதி குறைவான இடங்களில் பெருந்தொற்று அதிகமாகப் பரவுவது தெரிய வந்திருந்ததால் தொற்றிப் பரவக் கூடிய ஏரோசால்கள் காற்றில் நீடித்தன என்பதையும், 2 மீட்டர் தூரத்துக்கு அப்பால் இருந்தவர்களும் வைரஸ் தாங்கிய காற்றை சுவாசித்தனர் என்பதையும் உறுதிப் படுத்த முடிந்தது. மறு சுழற்சி செய்யப்படும் காற்று இந்த வகை உள்ளரங்குப் பரவலை அதிகரிக்கச் செய்யும். முடிவாக, பெருந்தொற்றுக் கிருமிகள் பொதுவாகத் தொடுதல் மூலம் அருகிலுள்ளோருக்குப பரவுகிறது; சிறு திவலைகள் (< 5 மைக்ரான்) மூலம் இரண்டு மீட்டருக்கு அப்பாலும் ஏரோசால் போன்ற பரவுகை நடைபெறுகிறது. இது தவிர காற்றின் மூலமோ வான் வழியாகவோ தொற்று பரவ வாய்ப்பில்லை என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.
அறிவியல் சார் சொற்கள்
Particulate Matter (PM)- துகள்மப் பொருட்கள்:
காற்றில் காணப்படும் துகள்(particle) பொருட்கள் மற்றும் திரவத் திவலைகளின் (droplets ) கலவையைக் குறிக்கும் பெயர்.துகள்மப் பொருட்கள், மூன்று முக்கிய தொகுதிகளாகப் பிரிக்கப் படுகிறது. கரடுமுரடான துகள்கள் (PM 10), நயமான துகள்கள் (PM 2.5) மற்றும் வெகு நயமான துகள்கள் (PM 0.1)
PM 10 ; 10 மைக்ரான் மற்றும் அதற்கு குறைவான விட்டம் கொண்ட துகள்கள். இவை சுவாசத்தில் உள்ளிழுக்கப்படக் கூடியவை.
PM 2.5 :2.5 மைக்ரான் மற்றும் அதற்கு குறைவான விட்டம் கொண்ட துகள்கள்
PM 0.1 : 0.1மைக்ரான் மற்றும் அதற்கு குறைவான விட்டம் கொண்ட துகள்கள்.
1 மைக்ரோ மீட்டர் = 1மைக்ரான்
Stratosphere (அடுக்கு மண்டலம்)
வளிமண்டலத்தின் 5 அடுக்குகள் முறையே வெப்ப மண்டலம். அடுக்குமண்டலம், மீஸோஸ்பியர் , தெர்மோஸ்பியர் மற்றும் எக்ஸோஸ்பியர்
வெப்ப மண்டலம் நாம் வாழும் முதல் அடுக்கு. இது கடல் மட்டத்திலிருந்து 10-15 km உயரம் வரை நீண்டுள்ளது. வெப்பமண்டலத்தை அடுத்த இரண்டாவது அடுக்காக அமைந்திருப்பது அடுக்கு மண்டலம் (stratosphere)
Albedo (ஒளி திருப்பும் திறன்)
கோலங்களின் மீது படும் ஒளியின் அளவுக்கும், மின்காந்தக் கதிர்வீச்சு மூலம் திருப்பியனுப்பும் ஒளியின் அளவுக்குமான விகிதம். அளவுகோல் = 0-1
பெறுகின்ற கதிர் வீச்சு முழுவதையும் கிரகித்துக் கொள்ளும் துல்லியமான கரும்பொருள் (perfectly black body) -ன் albedo =1
பெறுகின்ற கதிர் வீச்சு முழுவதையும் மின் காந்தக் கதிர் வீச்சு மூலம்
எதிரொளித்து விடும் பொருளின் albedo=0
பார்வைக் குறிப்புகள்
- https://www.sciencedaily.com/releases/2016/04/160401145037.html
- https://share.upmc.com/2020/11/aerosol-droplet-or-airborne/
- https://www.frontiersin.org/articles/10.3389/fpubh.2020.590041/full
- https://www.canada.ca/en/public-health/services/diseases/2019-novel-coronavirus-infection/health-professionals/main-modes-transmission.htm
- https://www.nasa.gov/centers/langley/news/factsheets/Aerosols.html