ஊர்மிளா பவாரின் இரண்டு சிறுகதைகள்

ஆங்கில மொழிபெயர்ப்பு
ஜாஹ்னவி பால்கே
கீர்த்தி ராமச்சந்திரா

கோட்டோவியம்: இரீனா ஸாக்கியான்
©
Sound & Picture Archives for Research on Women

ஒரு குழந்தைப் பருவத்துக் கதை

“குழந்தைகளுக்காக ஏதாவது எழுதுங்கள் என்று கடிதம் எழுதியிருந்தார் அந்தக் குழந்தைகள் பத்திரிகையின் ஆசிரியர். அட கடவுளே! மீண்டும் ஒரு குழந்தையாக மாறி அவர்களுக்காக எழுதுவதென்பது அத்தனை சுலபமா? அந்தக் கடிதத்தைத் தூர வைத்துவிட்டு, குவிந்துவரும் வேலைக் குவியலினுள் நுழைந்தேன். ஆனால் என்ன இது. . .? குழந்தைப் பருவம் என்மீது கவிந்து கழுத்தைப் பிசாசுபோல் கட்டிக் கொண்டது. கட்டிக் கொண்டது மட்டுமல்ல, கடிகாரத்தை முப்பத்தைந்து வருடங்கள் பின்னுக்கு நகர்த்தி என் விரோதிகளின் சாம்ராஜ்யத்துக்குள் என்னைத் தள்ளியது- முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய விரோதிகள்.

நான் குழந்தையாயிருந்தபோது வயதானவர்களையெல்லாம் விரோதிகளாகவே பாவித்தேன். எல்லாக் குழந்தைகளும் பொதுவாக இப்படித்தான் நினைப்பார்கள் போலும். ஆனால் என் விரோதிகள் முற்றிலும் மாறுபட்டவர்கள். எனக்கு நான்கு முக்கிய விரோதிகள் இருந்தனர். நம்பர் ஒன்று, என் தகப்பனார். நம்பர் இரண்டு, என் தாயார். மூன்று, என் அண்ணா. நான்கு, என் ஆசிரியர் ஹெர்லேகர் குருஜி. இந்த நால்வரும் என் வாழ்வின் அஸ்திவாரத்தை அமைத்தனர். நான் இன்று இப்படி இருக்கிறேன் என்றால் அதற்கு அவர்கள்தாம் காரணம்.

நான் விரோதியாகக் கருதிய வேறு சிலரும் இருந்தனர். அவ்வளவு முக்கியமில்லாதவர்கள் அவர்கள். என்னைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் அம்மாவிடம் சொல்வார்கள் – அம்மா என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பக்கூடாது என்று அவர்கள் எண்ணம். “இந்த வாலு வயல் கரையிலிருந்து தோன்ட்லி செடிகளை எல்லாம் பிடுங்கிவிட்டது,” அல்லது என்னிடம் “சனியனே, அந்த இலந்தை மரத்திலோ இல்லை, பயிரிலோ கல்லை விட்டு எறிந்தால் உன் காலை முறித்து விடுவேன்,” என்றோ, “உன்னைத் தானே, போ, போய்த்தொலை. என்னைத் தொட்டு விடாதே,” என்றோ சொல்வார்கள். இப்படியே என்மீதுள்ள தங்கள் வெறுப்பைக் காட்டினார்கள்.

இந்தச் சின்ன விரோதிகளைப் பற்றி நான் அதிகம் கவலைப்படவில்லை. அந்த நான்கு பெரிய விரோதிகளோடுதான் தினமும் நான் பாடாய்ப்படவேண்டியிருந்தது. எப்படா இவள்மீது பாயலாம் என்று காத்திருப்பார்கள். விரோதி நம்பர் ஒன்றான என் அப்பா, சீக்கிரமே இறந்துவிட்டார். எனக்கு அந்தப் பயங்கரமான நாலு எதிரிகளில் ஒரு எதிரியிடமிருந்து விடுதலை கிடைத்தது. இருந்தாலும் பாக்கி மூன்று பேர்கள் இருந்தார்களே?

என் அப்பா இறக்கும்போது நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு அவரை நன்றாக நினைவிருக்கிறது. யாராவது அவருடைய படத்தை வரையும்படி என்னிடம் கேட்டால், அவரை வரைய இரண்டே இரண்டு நிறங்கள் போதும் -கறுப்பும் வெள்ளையும். அப்பா மெலிந்திருப்பார். குள்ளம். கறுப்பு. ஒரு வெள்ளை வேட்டி, வெள்ளை கமீஸ் (சட்டை), கறுப்புக் கோட்டு, தலையில் காந்தி குல்லா. இவைதான் அவருடைய உடையலங்காரம். அவர் கண்கள் எப்போதும் அகலத் திறந்து வெறித்தபடி இருக்கும். அவையும் கறுப்பு வெள்ளைதானே? பற்களும் வெள்ளை. அப்புறம் வேறு நிறம் எதற்கு?

சின்னஞ்சிறு நண்டுகள் மணலுக்குள் புகுந்து மறைவதைப் பார்த்திருக்கிறீர்களா? அப்பா அப்படித்தான் நடப்பார். நல்ல மழையோ வெயிலோ, இரண்டும் இல்லாத மப்பு நேரமோ, அப்பா எப்போதும் ஒரு கறுப்புக் குடை வைத்திருப்பார். அவருடைய மூன்றாவது கை மாதிரி. அது அவ்வப்போது எங்களது முதுகையும் பதம் பார்க்கும்.

அப்பா அந்த நாளைய ஸ்கூல் மாஸ்டரானதால் ‘அடி’ மாஸ்டராகவே திகழ்ந்தார். ஏதோ அடிப்பார் என்றில்லை. அடிக்க ஆரம்பித்தார் என்றால் தன்னையே மறந்துவிடுவார். எங்கள் ‘வாடி’யில் அவர் ஒருவர்தான் படித்தவர். எவ்வளவு படித்திருக்கிறார் என்று நினைக்கிறீர்கள்? ஏழாம் கிளாஸ் வரை. ஏழாம் கிளாஸ் பாஸ் செய்வது என்ன மலையா, யாருக்குத் தெரியும் இது? பின்தங்கிய வகுப்பில் பிறந்தபோதிலும் படித்தவர் என்பதால் எங்கள் சாதியிலுள்ள சில வயசாளிகள் அவரை மதிப்பாக வைத்திருந்தனர். அவர்கள் புகழ்ச்சியில் அவருக்குத் தலைக்கனம் வந்துவிட்டது. வாதத்துக்கு மருந்து சொல்வதுபோல் எல்லோரிடமும் சென்று, ‘நன்றாகப் படியுங்கள். கல்வி கற்க வேண்டும்’ என்று உபதேசிப்பார். வீட்டுக்கு வந்ததும் லாந்தர் விளக்கின் முன் புத்தகங்களுடன் உட்காரச் சொல்லுவார். கழுத்தெல்லாம் சுளுக்கு வலி எடுக்கும் வரை உட்காரவேண்டும். இல்லாவிட்டால் அடித்து நொறுக்கி விடுவார். அசட்டு ஆயியால் அவரைப் பார்த்துக்கொண்டிருக்கத்தான் முடியும்.

ஒருதடவை எங்கள் கிராமத்து அத்தை அவரைத் தலை குனிய வைத்து விட்டாள். அப்பா கிராமத்துக்குப் போயிருந்தார். அவளுடைய பையனை – தன் மருமகனை – ஸ்கூலுக்குப் போகாததற்காக அடிக்க ஆரம்பித்துவிட்டார். “அவன் படிக்கிறான், படிக்கவில்லை, உனக்கென்ன?” என்றாள் என் அத்தை. அப்பா அவளை பொருட்படுத்தாமல் மேலும் இரண்டு மூன்று அடிகள் கொடுத்தார். அத்தை ரதாம்பா பழத்தைப் பிளந்து அதன் சிவந்த துண்டுகளை மகனின் புட்டத்தில் தடவினாள். அப்புறம் “இந்தப் பாவி என் குழந்தையை அடிச்சு நொறுக்கிவிட்டானே, என்ன மாதிரி ரத்தம் கொட்டுது பாருங்க” என்று கூச்சலிட ஆரம்பித்தாள். வாயில் அடித்துக்கொண்டு ஊளையிடவும் ஆரம்பித்தாள். ஊரிலுள்ள பெரியவர்கள் வந்து அப்பாவை ஏசத் தொடங்கினார்கள். பயந்துபோய் அப்பா ஒரு கோழையைப் போல வீட்டுக்கு ஓடி வந்துவிட்டார்.

ஒரு சுவாரஸ்யமான விஷயமும் இருந்தது. எங்கள் சாதிக்குப் பூசாரியாக இருந்தவர் அப்பாதான். பஞ்சாங்கம் பார்ப்பார், சத்ய நாராயணா பூஜை நடத்துவார், திருமணங்களையும் நடத்திவைப்பார். இதற்கு முன்னால் அப்பாவின் அப்பா இவற்றை நடத்தி வந்தார். அதற்கு முன்னே அவருடைய தாத்தா, அதற்கு முன்னே கொள்ளுத் தாத்தா. பள்ளிக்கூட வாத்தியார் வேலையையும் பார்த்துக்கொண்டு இந்த காரியங்களையும் பார்த்துவந்தார். எனவே அவரை வீட்டில் பார்ப்பதே அபூர்வம். வீட்டுக்கு வரும்போது ஒரு புதிய துணியில் கட்டப்பட்ட தேங்காய், கொஞ்சம் அரிசி இவற்றோடுதான் வருவார். ஆயி எங்கள் முன் அந்தத் துணிக்கட்டை அவிழ்ப்பார். காகங்கள்போல் நாங்கள் அதைக் கூர்ந்து பார்த்தபடி இருப்போம். உலர்ந்த திராட்சை, அக்ரூட், பாதாம் பருப்பு போன்ற பல பொருட்களும் கலந்திருக்கும். துணியைப் பிடித்துப் பறிக்க நாங்கள் காத்திருப்போம். யாராவது ஒருவர் அதை பிடுங்கிக்கொண்டு, “நான் ஒரு கமீஸ் தைப்பேன்”, “எனக்கு ஒரு கவுன் வேண்டும்” என்று கத்துவோம். நிறையத் துண்டுத்துணிகள் சேர்ந்தபின், விதவிதமான துணிகளைக்கொண்டு தைக்கப்பட்ட கமீஸ்களும் கவுன்களும் எங்களுக்குக் கிடைக்கும். எங்கள் உடம்பைப் புத்தாடைகள் அலங்கரிக்கும். சட்டையின் ஒரு கை ஒரு நிறமாகவும் அடுத்த கை வேறொரு நிறமாகவும் இருந்தால் என்ன? அரிசியில் பைசாவோ சில்லறையோ கிடக்கும். நாங்கள் அதை எடுக்க முயலும்போது அப்பா எங்கள் தலையில் ஒரு குட்டு குட்டி “உங்கள் அப்பன் வீட்டுப் பணமா?” என்று கேட்பார். யார் அப்பன் வீட்டுப் பணமோ, யார் கண்டது?

அப்பா எத்தனை பெரிய கஞ்சன் என்று கேட்காதீர்கள். தனக்காகக்கூட ஒரு பைசா செலவழிக்க மாட்டார். ஹோட்டலுக்குப் போய் ஒரு சிங்கிள் டீ குடிக்க மாட்டார். வேட்டி கிழிந்துபோனால் தைத்து உடுத்துக் கொள்வார். கிழிந்த சட்டையைக் கோட்டால் மறைத்துக் கொள்வார். பென்சிலோ ரப்பரோ வாங்கவேண்டுமென்று பைசா கேட்டால் கோபம் வந்துவிடும். கோபம் வந்துவிட்டால், அவ்வளவுதான். அவருடைய வெள்ளை கறுப்புக் கண்களுடன் சந்திரனில் தெரியும் ராட்சசன் மாதிரி காட்சியளிப்பார்.

எங்களைத் துன்புறுத்துவதில் அவருக்குக் கொள்ளை மகிழ்ச்சி. எங்களை விளக்கெண்ணெய் குடிக்கச் சொல்வார். இரவில் ராந்தல் விளக்கொளியில் சிறிய சினாபுட் பொட்டலங்களை பிரிப்பார். வெல்லத்துடன் கலந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டுவார். இரவு சாப்பாட்டுக்குப் பின் அதில் ஒரு உருண்டை சாப்பிட்டு, காலையில் விளக்கெண்ணெய் குடித்து விட்டால் வயிற்றிலுள்ள கிருமிகள் என்ன, அவற்றின் தாத்தாக்கள்கூட செத்து வெளியே வந்துவிடும். விரல்களுக்கிடையே அவர் அந்தக் கலவையை உருட்டும்போது சிவப்பாக ஜொலிக்கும் அவர் கண்களைப் பார்த்தாலே வயிற்றிலுள்ள கிருமிகள் உயிரை விட்டுவிடும். விளக்கெண்ணெய் குடிக்க வேண்டிய தேவையே இருக்காது. ஆயினும் நாங்கள் குடித்தோம்.

ஒரு தடவை அந்த சினாபுட் உருண்டையை விழுங்க முடியாமல் தவிக்கத் தொடங்கினேன். அப்பா எழுந்துவந்து மார்பில் ஓர் உதை விட்டார். அப்படியே பின்னால் சாய்ந்து விட்டேன். உருண்டை தொண்டை வழியாக உள்ளே சென்று விட்டது. உடனே அவர் அட்டகாசமாகச் சிரிக்கத் தொடங்கிவிட்டார். எனக்கு ஒரே கோபம். ஸ்கூலிலிருந்து அவர் திரும்பி வரவே கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.

எங்கள் ஸ்கூலுக்குப் பக்கத்தில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்றிருந்தது. அந்தக் கோவில் எனக்கு ஒரு பாதுகாப்பு. ஸ்கூலுக்குப் போக மனசில்லாத போது, புத்தகப் பையுடன் அந்த கோவிலில் தங்கிவிடுவேன். ‘கடவுளே, அப்பா வீட்டுக்கு வரக்கூடாது’ என்று வேண்டிக் கொள்வேன்.

கடவுள் என் பிரார்த்தனையை நிச்சயமாகக் கேட்டிருப்பார். நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது அவர் நோயில் படுத்தார். அவர் வயிற்றில் உள்ள ரத்தம் எல்லாம் தண்ணீராக மாறிவிட்டது என்றாள் அம்மா. ஆஸ்பத்திரிக்குப் போய் அவரைப் பார்த்தேன். வெள்ளைப் போர்வையை அவர்மேல் போர்த்தியிருந்தனர். கர்ப்பிணியின் வயிறுபோல் வீங்கியிருந்த அவரது வயிற்றைத்தான் பார்த்தேன். அவருடைய தலைப்பக்கம் சென்றபோது, எங்களைப் பார்த்து அவர் ஒரு குழந்தை மாதிரி அழத்தொடங்கினார். அம்மாவிடம் “பிள்ளைகளை நன்றாகப் படிக்க வை” என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

அப்பா இறக்கக் கூடாது என்று அன்றைக்கு நான் ஆசைப்பட்டேன். அவர் வாழ வேண்டும். என் அக்காவும் படிக்கவேண்டும் என்பதில் அவர் ஆர்வமாயிருந்தார். அப்போது அது அவரால் இயலாததால் அவளை வேறொருவர் வீட்டில் தங்கவைத்துக் கல்வி கற்பிக்க முயன்றார். அவளுக்குப் படிப்பு வரவில்லை. எனவே கல்யாணத்தை முடித்துவிட்டார். ஆனால் நான் அப்படி இருக்கப் போவதில்லை. ‘நான் ஸ்கூலுக்குப் போவேன், படிப்பேன், நீங்கள் சாகாதீர்கள்’ என்று அவரிடம் சொல்ல விரும்பினேன். ஆனால் அவர் இறந்துபோனார். அன்று வெள்ளிக்கிழமை. இரவு முழுவதும் அவர் உடலைச் சுற்றி அமர்ந்திருந்தோம். ஒருவர்கூட கண் மூடவில்லை. மறுநாள் சனிக்கிழமை. காலையில் எங்களுக்கு ஸ்கூல் உண்டு. எனக்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லை. புத்தகப் பையைத் தூக்கிக்கொண்டு அம்மாவிடம் போய், “ஆயி, நான் ஸ்கூலுக்குப் போகட்டுமா?” என்று கேட்டேன். அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அதற்கு முன்போ பின்போ ஸ்கூலுக்குப் போவதில் அவ்வளவு அக்கறை நான் காட்டியதில்லை.

அப்பா போய்விட்டார். ஆயி பித்துப்பிடித்தவள்போல் வீட்டைச் சுற்றி சுற்றி வந்தாள். இது நல்லதுக்குத்தான் என்று நான் நினைத்துக் கொண்டேன். என்னைப் பார்த்து கத்த மாட்டாள். ஸ்கூலுக்கு போகச் சொல்லமாட்டாள். இஷ்டம்போல் சுற்றலாம். ஆனால் அப்படி நடக்க வில்லை. அப்பா இறப்பதற்குமுன் ஆயியிடம் “குழந்தைகளைப் படிக்க வை” என்ற மந்திரத்தைச் சொல்லிவிட்டுப் போயிருந்தார் _ அது போதும். ஆயி அதைப் பேயாய்ப் பிடித்துக்கொண்டாள். படிப்பைப் பொறுத்தவரை அம்மாவைவிட அப்பாவே பரவாயில்லை என்று தோன்ற ஆரம்பித்தது.

அப்பாவைப் போல் ஆயிக்கும் மெலிந்த உடல். ஆனால் நல்ல உயரம். சிவப்பு. கவலை தோய்ந்த பார்வை. முழங்கால்வரை வரும் ஒரு கிழிந்த ஒன்பதுகஜப் புடவையை உடுத்தியிருப்பாள். எங்கள் வீடு சாலையை ஒட்டி இருந்தது. குழந்தைகள் ஸ்கூலுக்குப் போவதையும்  வருவதையும் பார்க்கலாம். முற்றத்தில் உட்கார்ந்தபடி ஆயி கூடை முடைந்துகொண்டிருப்பாள்— பெரிய கூடைகள், சிறிய கூடைகள், அகலமானவை, குறுகியவை. காலையில் விழித்தால் அவள் கூடையோ முறமோ முடைந்து கொண்டிருப்பதைப் பார்க்கலாம். இரவில் தூங்கப் போகும்போதும் அந்தக் காட்சியைப் பார்க்கலாம். இடையே அடுக்களை வேலையையும் கவனித்துக்கொள்வாள். அப்பாவின் கால்களுக்கு ஓய்விருந்ததில்லை. ஆயிக்குக் கைகள்.

சிலசமயம் சாலையில் நின்றபடி குழந்தைகள் அவள் கூடை முடைவதை பார்த்துக்கொண்டே நிற்கும். அவர்கள் கூர்ந்து பார்ப்பது எனக்குச் சங்கடமாக இருக்கும். அவர்களின் அம்மாக்கள் அழகிய உடை உடுத்தி, நகைகள் அணிந்து, முகத்தில் புன்னகையுடன் தேவதைகள் மாதிரி இருப்பார்கள். ஆனால் ஆயி எப்போதும் கோபத்துடன், “ஸ்கூலுக்குப் போ. . . படி” என்று கத்திக்கொண்டே இருப்பாள். அவளுக்கு ஓர் எழுத்து படிக்கத் தெரியாது. மராட்டிகூட தப்பும் தவறுமாகப் பேசுவாள். எனினும் ஒரு டீச்சர் மாதிரி அதிகாரம் செய்வாள். ஸ்கூல் விழாவில் பங்கெடுத்து ஜெயித்து, ஒரு பென்சிலோ, சாக்பீஸோ, ஸ்கேலோ பரிசாகப் பெற்று அவளிடம் கொண்டு காண்பித்தால், ஒரு பாராட்டோ மகிழ்ச்சியோ கிடையாது. “நல்லா இருக்கு” என்று வறண்ட குரலில் ஒரு வார்த்தை மட்டும் வரும்.

கஞ்சத்தனத்தில் ஆயி அப்பாவுக்கு ஒரு படி மேல். சோறும், தண்ணீர் போலிருக்கும் குழம்பும்தான் உணவு. எப்போதாவது புளியங்கொட்டை அளவு காய்கறி தென்படும். தவிடும் மாவும் கலந்து பாக்ரி (ரொட்டி) செய்து இறால் மீன், கருவாடு அல்லது உப்பு சேர்த்துப் பொரித்த ஏதாவது பதார்த்தத்துடன் தருவாள். பண்டிகை நாட்களில்கூட இனிப்புப் பண்டங்கள் கிடையாது. அப்பா உயிருடன் இருக்கும்போதாவது குறுணையும் கருப்பட்டியும் சேர்த்துப் பாயசம் செய்வாள். இப்போது அதையும் நிறுத்திவிட்டாள். கண்ணீர் வடிப்பது மட்டும்தான் நடந்தது. என் தோழிகளின் அம்மாமார்கள் அவர்களுக்கு விதவிதமான உணவுகள் டிபன் பாக்ஸ்களில் வைத்துத் தருவார்கள். வாயில் நீர் ஊறும். ஆனால் ஆயி இதையொன்றும் கண்டுகொள்ளவில்லை.

சாப்பாடு இருக்கட்டும், நன்றாக உடை உடுத்துக் கொண்டதே எனக்குத் தெரியாது. வாரத்தில் ஒருநாள் எங்கள் தலையில் சோடா காரத்தைத் தேய்த்து வென்னீரில் குளிப்பாட்டுவாள். தலையையும் காதுகளையும் நன்றாகத் தேய்ப்பாள். தலை உலர்ந்ததும் எண்ணெய் தடவி ஒரு கூரிய சீப்பால் ஈரும் பேனும் வெளியே விழும்படி சீவுவாள். தலை மயிரைப் பின்னுக்கு இழுத்து அழுத்தமாக ஜடைபோட்டு உறுதியான நூலால் கட்டிவிடுவாள். இந்தச் சித்ரவதையில் என் உயிர் போகும். கண்களில் மின்மினிப் பூச்சி ஆட ஆரம்பித்து விடும்! பிறகு, புடவையின் பார்டரிலிருந்து கிழித்த ஒரு சிறு துண்டை ஜடையின் நுனியில் சுற்றிக் கட்டுவாள். தேள் கொடுக்கு போல் அது என் முதுகில் ஒரு வாரம் கிடக்கும். என் தோழிகள் பலவர்ண பிளாஸ்டிக் கிளிப் , ஸாட்டின் ரிப்பன் எல்லாம் கட்டியிருப்பார்கள். நன்றாக அலங்கரித்துக்கொண்டு நிலைக்கண்ணாடி முன் நின்று முன்னும் பின்னும் திரும்பி அழகு பார்த்துக் கொள்வார்கள். நாங்கள் கண்ணாடியைக் கையில் எடுத்தாலோ ஆயி, “எதற்குத் திரும்ப திரும்ப கண்ணாடியைப் பார்க்கிறாய்? எதிரில் நிற்பவர் முகத்தைப் பார்த்தாலே தெரிந்துவிடுமே உன் லட்சணம்” என்பாள்.

ஆயி பார்க்க சாது மாதிரி இருப்பாள். ஆனால் ஏகப்பட்டப் பொய் சொல்லுவாள். நன்றாக நடிப்பாள். யாராவது வாடிக்கையாளர்கள் வந்து கோபத்துடன் “எங்கே நான் ஆடர் கொடுத்த கூடை? இன்றைக்குத் தருகிறேன் என்று சொன்னாயே, ஏன் ரெடியாகவில்லை? கொடுத்த அட்வான்ஸை திருப்பித் தா” என்று கேட்பார்கள். அப்போதெல்லாம் அவள் என்னைக் காட்டி, எனக்கு உடம்பு சுகமில்லை என்று சொல்லிவிடுவாள். “இந்தக் குட்டி ஒரே சீக்கா போயிட்டா . . . பிழைப்பாளோ மாட்டாளோன்னு பயந்து . . . அதனாலதான உங்க வேலையைச் செய்யல. இன்னிக்கு எப்படியும் உங்க வேலையை முடிச்சுத் தரேன். இந்த ஒரு தடவை மன்னிச்சுக்குங்க” என்று அழுவாள். உண்மையில் நான் நன்றாகத்தான் இருப்பேன்.

சமயங்களில், கிராமங்களில் இருந்து பெண்கள் _ என் அத்தையும் அவள் மருமகளும்கூட – நாலணா எட்டணா கடன் கேட்டு வருவார்கள். அம்மா கையை விரித்து விடுவாள். பொய் சொல்லுவாள். அழவும் செய்வாள்.

கூடைகளை யார் வீட்டிலாவது கொண்டு கொடுக்க வேண்டிய சமயங்களில் என்னை “தாக்த்யா” என்று அழைப்பாள் – இனிமையான குரலில். நான்தான் கடைக்குட்டி. அதனால் என்னைச் செல்லமாக தாக்த்யா என்று அழைப்பாள். அந்தக் குரலைக் கேட்டதுமே அவள் எதற்கு வருகிறாள் என்று தெரியும். திரும்பத் திரும்ப அழைப்பாள். நான் பதில் கொடுக்க மாட்டேன். என்னை ஒரு குத்து குத்துவாள். ஒரு நிமிஷம் முன் தேனாக அழைத்தவள் இப்போது பல்லைக் கடிக்கும் சூனியக்காரியாக மாறியிருப்பாள். “தேவ்டியா கழுதே, திங்க மட்டும் தெரியும். வேலைன்னா கசக்குதோ? எழுந்திருடி, இல்லேன்னா முகத்திலெ சூடு போடுவேன் . . . போ, இந்தக் கூடையை அந்த வீட்டில் கொண்டு கொடு, இந்த முறத்தை டூட்டுவிடம் கொடு . . .” என்று கூச்சல் போடுவாள்.

இந்த டூட்டு, பர்மாவின் திபா மன்னரின் பேத்தி. ஆங்கிலேயர்கள் அந்த மன்னரை ரத்னகிரியில் சிறை வைத்திருந்தனர். அவருக்கு பாய்கி என்றொரு மகள். எல்லோரும் அவளை பாயா என்று அழைப்பார்கள். அவளுடைய மகள் தான் இந்த டூட்டு. மன்னரின் பேத்தி வசிப்பது ஒரு குடிசையில். சாணி பொறுக்கி வறட்டி தயாரிப்பாள். மன்னரும் டூட்டுவின் தாயாரும் காலமானபின் பர்மாவிலிருந்து யாரும் டூட்டுவைத் தேடி வரவில்லையென்றும், இங்கும் யாரும் அவளை பற்றிக் கவலைப்படவில்லையென்றும் ஆயி சொன்னாள். டூட்டு ஒரு நீள ஸ்கர்ட்டும் பிளௌஸும் அணிந்திருப்பாள். குண்டாக, குள்ளமாக, மஞ்சள் நிறத்துடன், தட்டை மூக்கோடு இருப்பாள். எனக்கு அவளைப் பிடிக்கவே பிடிக்காது.

ஆனால் டூட்டு வர்ண காகிதங்களால் அழகான பூக்கள் செய்வாள். அதன்மேல் கில்ட் பொடி தூவி, ரத்னகிரி சந்தைக்கு வரும் கிராமப் பெண்களிடம் விலைக்கு விற்பாள். அவர்கள் அந்த பூக்களை வாங்கித் தலையில் சூடிக் கொள்வார்கள்.

டூட்டு ஆயியின் தோழி. சில சமயம் வீட்டுக்கு வந்து ஆயியுடன் பேசிக் கொண்டிருப்பாள். ஒரே சமயம் அவர்கள் கையும் வாயும் வேலை செய்துகொண்டேயிருக்கும். டூட்டு பூக்கள் செய்வாள். அம்மா கூடை முடைவாள். என்னை அம்மா திட்டத் தொடங்கினால் டூட்டுவும் அவளுடன் சேர்ந்து கொள்வாள். அவள் அப்படிச் செய்ய வேண்டிய அவசியம் என்ன? இருந்தும் அப்படித்தான் செய்தாள். “இவளை மாடு மேய்க்க அனுப்பவேண்டும். அல்லது என் திக்யாவுக்கு இவளைக் கொடு” என்பாள். அப்போது அவள் பரந்த முகம் சிரிப்பினால் மேலும் விரியும். அவள்மேல் எனக்குக் கோபம் கோபமாக வரும். அவளை யாராவது உதை கொடுத்து பர்மாவுக்கு அனுப்பி விட்டால் நல்லது என்று எனக்குத் தோன்றும். அல்லது ஒரு நாய் அவளை பலமாகக் கடித்தாலும் போதும்.

ஆயி மற்றவர்களிடம் பேசும்போது மிகவும் பவ்யமாக “ஆமாம் ஐயா, . . . சரிதான் ஐயா” என்று அப்பாவி மாதிரி பேசுவாள். என்னிடம் கத்தும் போது எங்கிருந்தோ அவளுக்குப் பலம் வந்துவிடும். அசைவுகள் மின்னல் மாதிரி வேகமாகப் பாயும். எனக்கு உடம்புக்கு வந்து காய்ச்சல் கொதித்தால், என்னைக் கொஞ்சநேரம் அணைத்தபடி இருப்பாள். உப்பு நீரில் நனைத்த ஈரத்துணியை நெற்றியில் ஒத்துவாள். அவள் ஸ்பரிசம் இதமாக இருக்கும். ஆனால் அவள் அமைதியற்று இருப்பாள். எதையாவது முணுமுணுத்தபடி. “எவ்வளவு வேலை கிடக்கு . . . கூடை முடைய வேண்டும், மாட்டுக்குத் தீனி வைக்கவேண்டும் . . .” என்று கோழியைப் போல் வார்த்தைகளைக் கொத்திப் பொறுக்குவாள்.

ஓ, ஆயி என்னைக் கூடைகளைக் கொண்டுபோய் கொடுத்துவிட்டு வரும்படி சொன்னதையல்லவா சொல்லிக் கொண்டிருந்தேன். அந்த மனிதர்கள் என்னை வீட்டுக்கு வெளியே நிற்கச் சொல்லிவிட்டு, கூடைகள், முறங்கள் மீது தண்ணீரைத் தெளித்தபிறகுதான் உள்ளே எடுத்துச் செல்வார்கள். கையை உயரே தூக்கி, காசுகளை என் உள்ளங்கையில் போடுவார்கள். என் கையைத் தொட்டால் என்ன, அவர்கள் கை எரிந்து கருகிவிடுமா? என்னுடன் படிக்கும் குழந்தை யாராவது அந்த வீட்டில் இருந்தால் எனக்கு அவமானமாக இருக்கும். செத்துப் போவது மேல் என்று தோன்றும். இன்றைக்கு என் அம்மாவுக்கு ஒரு பாடம் கற்பிக்கவேண்டும் என்று எனக்குள்ளே சொல்லிக் கொள்வேன். பள்ளிக்கூடம் போகக்கூடாது.

ஆனால் வீட்டுக்கு வந்ததும், என் மனத்திலிருப்பதை ஆயி எப்படியோ அறிந்துகொள்வாள். பிறர் மனத்திலிருப்பதை அறிந்துகொள்வதில் அவள் மிகக் கெட்டிக்காரி. ஒரு கட்டி வெல்லத்தை என் கையில் வைத்துவிட்டு, இனிய குரலில், “போ, பள்ளிக்கூடம் போ. . . வந்ததும் பைசா தருவேன். பொட்டுக் கடலை வாங்கிக்கோ” என்பாள். ஒவ்வொரு தடவையும் அவள் சொல்வதை அப்படியே நம்பிவிடுவேன். ஆனால் அவள்தான் பொய் சொல்வதில் தேர்ந்தவளாச்சே. “இன்றைக்கு இல்லை. நாளைக்கு” என்று சமாளித்து விடுவாள். ஏமாற்றுவாள். நான் கொஞ்சம் அடம் பிடித்தால் அவள் பொறுமை இழந்துவிடுவாள். தண்டனை கிடைக்கும். எனக்கும் கோபம் வரும். ஸ்கூலுக்கு மட்டம் போட என்னவெல்லாம் வழிகள் உண்டு என்று யோசிப்பேன். ஸ்கூலுக்குப் போகிறேன் என்று சொல்லிவிட்டுக் கோவிலில் போய் இருந்துகொள்வேன்.

கோயில் அர்ச்சகர் வருவார். ஹனுமான் சிலையைக் குளிப்பாட்டி, பூஜை செய்து எங்களுக்குப் பிரசாதம் தருவார். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அழகாக இருப்பார். ஸ்ரீராமன் பளிங்குச் சிலை மாதிரி. அவருடைய கறுத்த விழிகளை, தலைமுடியை, சிவந்த காது நுனிகளை, குதிகால்களைப் பார்க்கப் பிடிக்கும். அரை நிஜாரும் பூணூலும் அணிந்திருப்பார். நெற்றியில் நேரான சிவப்புக் கோடு. இனிமையான சிரிப்பு.

ஒரு நாள் கோவிலின் உள்ளே விளையாடிக் கொண்டிருந்தோம். அர்ச்சகர் பூஜை செய்துகொண்டிருந்தார். ரொம்ப நேரம் ஆயிற்று. அவர் வெளியே வரவில்லை. கோவில் படிகளில் நாங்கள் அமர்ந்து பிரசாதம் வரும்வரும் என்று காத்துக்கொண்டிருந்தோம். இன்னும் கொஞ்சம் நேரம் சென்றபின் அவர் கதவைத் திறந்தார். கோம்பாட்டி சாதிப் பெண் உல்கவ்வா மிகுந்த அச்சத்துடன் வெளியே வந்தாள். அழுதுவிடுவாள் போலிருந்தது. அவளுக்குப் பின்னால் அர்ச்சகரும் வெளியே வந்து வேகமாகப் போய் விட்டார். எங்களுக்குப் பிரசாதம் கிடைக்கவில்லை. ஏனோ தெரியவில்லை, அப்புறம் அந்த அர்ச்சகரைக் கண்டால் எனக்குப் பயம்.

உல்கவ்வா ஏன் அழுதாள் என்று ஆயியிடம் அன்று கேட்க விரும்பினேன். ஆனால் நான் ஸ்கூலுக்குப் போகாமல் கோவிலில் இருந்தேன் என்கிற விஷயம் வெளிவந்து விடுமே! ஆயி என்னை அடித்து நொறுக்கிவிடுவாள். விரோதி நம்பர் மூன்றான என் அண்ணனும் அவளுடன் சேர்ந்து கொள்வான்.

ஒருநாள் எனக்கு ஸ்கூல் செல்ல விருப்பமில்லை . . . என்ன செய்வது? என்னுடைய ஒரே நல்ல கவுனை மூலையில் இருந்த உரலின் பின்னால் கிழிந்த துணிகளுடன் சேர்த்து மறைத்து வைத்துவிட்டேன். வழக்கம்போல் ஆயி எனக்குக் குழம்பும் சோறும் தந்துவிட்டு, “ஸ்கூல் பெல் அடிச்சாச்சு . . . கிளம்பு” என்றாள். வீட்டுக்கு அருகிலேயே இருந்தது ஸ்கூல். அப்படி இல்லாவிட்டால்கூட அம்மாவுக்கு அந்த மணி ஓசையும், பிள்ளைகளின் பிரார்த்தனை ஒலியும் கேட்டுவிடும்.

“என் கவுனைக் காணோம்” என்று முனகினேன். எதற்குத் திட்டமிடுகிறேன் என்று அவளுக்குப் புரிந்துவிட்டது. என் அண்ணனை அழைத்தாள். அவனும் ஸ்கூலுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். இரண்டு பேரும் சேர்ந்து எனது கவுனைத் தேடத் தொடங்கினர். அவன் என்னைவிட நான்கு வயதுதான் பெரியவன். அவனுக்கு முன்னால் பிறந்த நான்கு பேரில் ஒருவன் இறந்துவிட்டான். மூத்த அக்காவுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. மீதி இரண்டு பேரும் கொஞ்சம் அமைதியானவர்கள். என்னை அடித்ததே இல்லை. அதே சமயம் அன்பைப் பொழிவதுமில்லை. இது எனக்குப் பிடித்திருந்தது. இந்த அண்ணனோ, ஏதோ சபதத்தை நிறைவேற்றுபவன்போல் என்னை அடிக்கத் திட்டமிட்டுக் கொண்டேயிருப்பான் – சிவாஜியைத் தீர்த்துக்கட்ட அப்சல்கான் திட்டமிட்ட மாதிரி. அவன் நல்ல பலசாலி. குண்டு இல்லை ஆனால் நல்ல முறுக்கேறிய உடம்பு. அடித்தால் மிகவும் வலிக்கும். என்னைச் சட்டென்று பிடித்து ஆயி முன் நிறுத்துவான். எவ்வளவு வேகமாக ஓடினாலும் என்னைப் பிடித்துவிடுவான். அவன் காலை ஒரு நாய் கடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். ம் . . . அவர்கள் இருவரும் வீடு பூராவும் மூலை முடுக்கெல்லாம் தேடினார்கள். கொடியில் தொங்கிய போர்வைகளை உதறிப் பார்த்தார்கள். கிழிந்த கோணிப்பைகளை, கயிறுகளை, பரணில் கிடந்த நூல் குவியல்களை எல்லாம் உதறிப்பார்த்தார்கள். தேடிக்கொண்டிருக்கும்போதே தங்களுக்குள் நிறுத்தாமல் பேசிக் கொண்டார்கள். அவ்வப்போது என்மீது அனல் கக்கும் பார்வையை வீசினார்கள்.

எனக்கு அண்ணன் மீது கோபம் வந்தது. அவனுக்கு ஸ்கூலுக்கு நேரமாகவில்லையா? பேசாமல் போயிருக்கவேண்டியதுதானே. அது கிடையாது. அவன் பள்ளிக்குத் தாமதமாகப் போவதற்காக யாரும் அவனைக் கோபிப்பதில்லை. அவன்தான் ஹைஸ்கூல் படிக்கிறானே. அவனுடைய டீச்சர் அவனைத் திட்டினால் என்மேல்தான் பழிபோடுவான். நான் ஒரு அடங்காப்பிடாரி என்றும், ஆயிக்குத் தொந்தரவு கொடுக்கிறேன் என்றும், ஸ்கூலுக்கு மட்டம் போடுகிறேன் என்றும் சொல்வான். என்னை இழுத்துக் கொண்டே ஸ்கூலில் கொண்டுபோய்ச் சேர்த்து என் இடத்தில் உட்கார வைப்பான். அந்த முட்டாள் ஆசிரியரும் அவன் சொல்வதைக் கவனமாகக் கேட்பார். “நல்ல காரியம் செய்தாய்” என்று அவனைப் பாராட்டுவார். இதற்குத்தான் அவர்கள் எல்லோரையும் என் விரோதிகள் என்று சொன்னேன்.

என் ஸ்கூலின் ஹெர்லெகர் மாஸ்டர் இவர்கள் இரண்டு பேருக்கும் நல்ல அடி கொடுக்கவேண்டும் என்று எனக்கு ஆசை. என் கற்பனையில் அந்தக் காட்சியை வரைந்தேன். அந்தக் கணத்தில் நான் இவ்வாறு எனக்குள் நினைத்துக்கொண்டு மூலையில் இருந்த உரலையும் திருட்டுத்தனமாகப் பார்த்துக்கொண்டு இருந்தபோது என் அண்ணன் முன்னால் வந்து அந்த உரலை உதைத்துத் தள்ளினான். பின்னால் கவுன் கிடந்தது. அப்புறம் என்ன? ஏதோ அலிபாபா குகையிலிருந்து ரத்தினங்கள் நிறைந்த பையை எடுப்பதுபோல் அதைத் தூக்கி எடுத்து, கண்களில் வெற்றி ஒளி மின்ன, “ஆயீ, இதோ பார்” என்றான்.

“தேவ்டியா சனியனே, ஏன் இப்பிடி உசுர வாங்கறே?” என்று கத்தினாள் ஆயி. இரண்டு பேரும் மாறிமாறி என்னை அடித்தனர். கவுனை அணியச் செய்தனர். என் கழுத்தை அழுத்திப் பிடித்தபடியே என்னை ஸ்கூலுக்கு இட்டுச்சென்றான் அண்ணன். அந்த நேரத்தில் கழுத்தை முறிக்கும் மங்கப்யா பிசாசு மாதிரி இருந்தான் அவன். இந்த மங்கப்யா பிசாசுக்குத் தலை கிடையாது. மார்பில்தான் கண்கள். கையையும் காலையு ம் விரித்து விரித்து நடக்கும். வழியில் தட்டுப்படும் அனைத்தையும் காலால் இடறித் தள்ளும். அது போலத்தான் அண்ணன் என்னைக் குண்டும் குழியும் முள் புதருமாக இருந்த தெரு வழியே இழுத்துச்சென்றான். மங்கப்யா பிசாசு, ஸ்கூலில் வகுப்புக்கு வெளியே என்னை நிறுத்தி, வாத்தியாரை அழைத்து, “குருஜி, அம்மா இவளை வகுப்பில் உட்கார அனுமதிக்கும்படி சொல்லச் சொன்னாள். நாளையிலிருந்து லேட்டாக வர மாட்டாள்” என்றது. சொல்லிவிட்டுத் தீ விழுங்கும் வேதாளத்தின் முன் இழுத்து விட்டுவிட்டு மறைந்து விட்டான்.

இந்த வேதாளம்தான் ஹெர்லேகர் குருஜி. என் எதிரி நம்பர் நான்கு. என் அப்பாவும் இவரும் ஒரே அச்சு. ஒரே ஜாடை. அப்பாவுக்கு நிஜாரும் கமீஸும் அணிவித்தால் ஹெர்லேகர் மாதிரியே காட்சியளிப்பார். சிறிய வித்தியாசம் இருக்கலாம். ஹெர்லேகர் சற்று உயரம். கண்கள் சிவப்பேறி இருக்கும். அந்தச் சிவப்பு விழிகளைப் பார்த்தாலே நான் நடுங்கி விடுவேன். ஆடையை நனைத்து விடுவேனோ என்று தோன்றும்.

படிக்காவிட்டால்தான் அப்பா என்னை அடிப்பார். ஆனால் ஹெர்லெகர் குருஜி படித்தாலும் என்னை அடிப்பார். வகுப்பறையில் நான் மிக அமைதியாக இருந்தால் போர்டில் கணக்குகள் எல்லாம் போட்டு முடித்ததும், என்னிடம், “எழுந்திரு. போர்டை சுத்தம் பண்ணு” என்பார். “குப்பைகளை வெளியே கொட்டிவிட்டு வா”, “வராந்தாவில் கிடக்கும் சாணத்தைப் பொறுக்கி வெளியே போட்டுவிட்டு வா” என்பார். வகுப்பில் கடைசி வரிசையில்தான் என்னை உட்காரவைப்பார்.

ஸ்கூலுக்கு சரியான நேரத்தில் வரவேண்டும்; முதல் பெல் அடிக்கும்போது வகுப்பில் காலெடுத்து வைக்கவேண்டும்; இரண்டாம் பெல் அடிக்கையில் வகுப்பறைக்குள் இருக்கவேண்டும் என்று குருஜி சொல்லியிருக்கிறார். இதில் சிறிது தவறினாலும் போதும், அவ்வளவுதான். நல்ல அடி கிடைக்கும். மற்றவர்களையும் அவர் அடிப்பார். ஆனால் சற்றுக் குறைவாக இருக்கும். ஆயி வாத்தியார்களிடம் ஏற்கனவே சொல்லியிருக்கிறாள் என்னை நன்றாக அடிக்கவேண்டும் என்று. அடிபட்டால்தான் அறிவு வளரும் என்பது அவள் நம்பிக்கை. அப்பா அவருடைய மாணவர்களை அடிப்பதை அவள் பார்த்திருக்கிறாளே. மேலும், ஷ்யாம்சி ஆயி”* என்ற படத்தில் வரும் “சடி லகே சம்சம்” என்ற பாடலை நான் ராகத்துடன் பாடுவதை அவள் கேட்டிருக்கிறாள்.

என்ன சொல்ல வந்தேன்? . . . ஆம். மங்கப்யா என்னை வேதாளத்திடம் ஒப்படைத்ததும் வேதாளம் என்னைப் பார்த்து, “காதைப் பிடித்துக்கொண்டு நில்” என்று கர்ஜித்தது. பிறகு, “முன்னால் குனி” என்றது. இன்னும் திருப்தியடையாமல், “போய் வராந்தாவிலுள்ள சாணத்தைப் பொறுக்கி எறிந்துவிட்டு வா” என்றது.

ஸ்கூல் முற்றம் ஒரு திறந்த வெளி. அந்தப் பக்கம் அலைந்து திரியும் மாடுகள் அங்கே சாணம் போடும். ஒவ்வொரு வகுப்பும் முறை வைத்துச் சாணம் பொறுக்க வேண்டும். எங்கள் வகுப்பின் முறை வரும்போது, சாணம் பொறுக்கும் வேலை எப்போதும் என் தலைமீதுதான். காரணம் எங்கள் அருமைப் பசு கபிலா. கபிலாவை ஆயி கிராமத்திலிருந்து கொண்டுவந்திருந்தாள் அதன் வயிற்றிலுள்ள முப்பத்து முக்கோடி தேவர்களை வணங்க. இந்தப் பசுதான் பள்ளிக்கூட முற்றத்தை அசுத்தமாக்குகிறதென்று குருஜி கூறுவார். அதனால்தான் சாணத்தைப் பொறுக்கும் வேலை எனக்கு. இன்றைக்குச் சாணம் பொறுக்கும் முறை எங்கள் வகுப்புக்கு அல்ல. இருந்தும் குருஜி என்னை அனுப்பினார்.

எனது தோழிகள் – தோழிகளா அவர்கள்? – என்னைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்கினர். எனக்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லை, நான் அசையவில்லை. குருஜி கத்தினார். “நான் சொன்னது காதில் விழலையா?” நான் அசையவில்லை. குருஜி என்னைத் தாக்கப்போகிறார் என்று புரிந்தது. அவர் எழுந்தார். அவரது கோபத்தின் ஜ்வாலை என்னைத் தாக்கியது. என் கால்கள் அசையவில்லை. ஒரு மலைப்பாம்பு உன் எதிரே இருந்து உன்னைப் பார்த்துக்கொண்டிருந்தால் உன்னால் அசையவே முடியாது என்று ஆயி சொல்லுவாள். இப்போதும் அப்படித்தான் . . .

குருஜி நெருங்கி வந்தார். இன்னும் நெருங்கி வந்து பளீரென்று என் முகத்தில் அறைந்து, “போ வெளியே” என்று கத்தினார். நான் ‘ஓ’வென்று அழுதுகொண்டே வீட்டுக்கு ஓடினேன். ஆயி முற்றத்தில் கூடை முடைந்துகொண்டிருந்தாள். அழுதுகொண்டே நான் வருவதைக் கண்டதும் எழுந்து, “என்ன நடந்தது? ஏன் அழுவறே, என்ன விஷயம்?” என்று கேட்டாள். எனக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை. அழுதுகொண்டே நின்றேன். என் கன்னத்தின் வீக்கத்தையும் அதில் பதிந்திருந்த குருஜியின் ஐந்து விரல்களின் அடையாளத்தையும் கண்டு அவளுக்குத் தன்னை அடக்கிக்கொள்ள முடியவில்லை. “குருஜி உன்னை அடித்தாரா? இரு, நான் அவரைப் பாத்துக்கிடறேன்” என்று சொல்லிவிட்டு அவரைத் திட்டத் தொடங்கினாள். “நானே ஸ்கூலுக்குப் போக வேண்டுமா?” என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள்.

அவள் குருஜியிடம் சத்தம் போடவேண்டும், சண்டை பிடிக்கவேண்டும் என்று மிகவும் விரும்பினேன். ஆனால் அவள் ஸ்கூலுக்கு வருவதில் எனக்கு விருப்பமில்லை. உண்மையில் அவளுடைய முட்டுக்குமேல் உயர்த்தி உடுத்திய கிழிந்த புடவையையும், அலங்கோலமான கூந்தலையும் நினைத்து எனக்கு வெட்கமாக இருந்தது. அழுதுகொண்டே அவளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அழுது அழுது என் கண்கள் வீங்கிவிட்டன.

ஆயி மேலும் கீழும் நடந்தாள். சட்டென உட்கார்ந்தாள். கை வேலையை எடுத்தாள், திரும்ப அதை தூர வைத்துவிட்டு எழுந்தாள். புடவையில் ஒட்டிக் கொண்டிருந்த தும்பு தூசிகளைத் தட்டி உதறினாள். பின் எதையோ மறந்துவிட்டவள் போல் மீண்டும் உட்கார்ந்தாள். இப்படியே இரண்டு மூன்று தடவை நடந்தது. நான் தொடர்ந்து அழுது கொண்டிருந்தேன். கொஞ்சம் மஞ்சளையும் படிக்காரத்தையும் குழைத்து என் கன்னத்தில் போட்டாள். “குருஜி ஏன் உன்னை அடிச்சார்?” என்று கேட்டாள்.

“நான். . . நான் சாணத்தைப் பொறுக்கலையாம்” அழுகையினூடே சொன்னேன்.

“உன்னை ஏன் சாணத்தை எடுக்கச் சொன்னார்?”

“நம்ப கபிலாதான் சாணம் போட்டதாம். குருஜி சொல்றார். . .”

“சரி, இங்கேயே இரு. உன் வாத்தியார் ஸ்கூல் விட்டு வீட்டுக்குப் போகும்போது சொல்லு. நான் அவரை கவனிச்சுக்கிடறேன்.”

ஆயி உட்கார்ந்தாள். ஹெர்லேகர் குருஜியை அம்மா என்ன செய்யப்போகிறாள்? எனக்குப் புரியவில்லை. அவரை நேருக்கு நேர் பார்த்தால் அவள் வாயைத் திறக்கக்கூட மாட்டாளே? என்னிடம்தான் அவள் நாக்கும் கைகளும் விளையாடும்.

பிற்பகலில் எனக்குத் தூக்கம் வந்தது. தலையை உதறி கண்களை அகல விரித்துக்கொண்டேன். ஆயி மீண்டும் படிக்கார மஞ்சள் மருந்தைக் கன்னத்தில் தடவினாள். பிற்பகல் கழிந்து ஸ்கூல் விடுவதற்கான கடைசி மணி அடித்தது. என் நெஞ்சு படக் படக் என்று அடிக்கத் தொடங்கியது. ஹெர்லேகர் குருஜி குழந்தைகள் சூழ வருவதைக் கண்டதும் எனக்கு மேலும் பயம் வந்தது. மெதுவாக வார்த்தைகள் என் நாவிலிருந்து விழுந்தன – “ஆயீ, குருஜி.”

அந்த வார்த்தை காதில் விழுந்ததும், பாதி முடைந்த கூடையைக் கீழே எறிந்துவிட்டு, ஆயி எழுந்தாள். தன் புடவையைச் சரி செய்துவிட்டு, படம் விரித்து கொத்துவதற்குத் தயாராக நிற்கும் ஒரு பெண் பாம்புபோல நின்றாள். குருஜி சமீபித்ததும், புடவையைத் தலைமேல் இழுத்துவிட்டுக் கொண்டு, “குருஜி, கொஞ்சம் நில்லுங்கள்” என்றாள். குருஜி கண்களை விரைவாகச் சுழற்றி அவளை நோக்கினார். அகங்காரம் தொனிக்க “என்ன விஷயம்?” என்றார்.

“என் மகள் உங்க ஸ்கூலில் படிக்கிறாள், சரியா? இன்னிக்கு அவள் என்ன பண்ணினாள்? இப்படி அடிச்சிருக்கீங்களே, பாருங்க. இந்தக் குழந்தையின் கன்னத்தை பாருங்க” என்று சொல்லி, என்னை அவள் பக்கம் அழைத்து என் முகத்தை அவருக்கு எதிரே காட்டினாள். குருஜியின் முகத்தைப் பார்க்க எனக்குத் தைரியம் இல்லை.

“அது . . . அது . . . வந்து . . . உங்க வெள்ளைப் பசு . . . ஸ்கூலில் சாணம் போட்டது” என்று திணறினார் குருஜி.

“என் பசு சாணம் போடுகிறதாமே! அது சாணம் போடுவதை நீர் பார்த்தீரா? குருஜி, நீங்க ரொம்ப படிச்சவரு, சின்ன பிள்ளை கணக்காப் பேசுரீரு. இங்க பாருங்க, நான் அப்படியொண்ணும் மரியாதைப்பட்ட மனுஷியில்லை. இந்த மரத்தடியில், ரோடு பக்கம் என் குழந்தைகளோட வாழுறேன். ஒரு நாடோடி மாதிரி. ஏன்? அவர்கள் படிக்கட்டுமேனுதான். நல்லா படிச்சு பெரிய மனுசாளா ஆகணும்னுட்டுத்தான். நீரோ இந்தக் குழந்தையை இப்படி கஷ்டப்படுத்தியிருக்கிறீர்.” ஆயியின் பேச்சு சீராக இல்லை. குளறுகிறது. உரத்த குரலில் குருஜியை எச்சரித்தாள். “இங்க பாரும் ஐயா, இதுக்குப் பிறகு இனிமே உம்ம விரல் என் குழந்தையைத் தொட்டாக்கூட, நீர் இந்த ரோட்டு வழி நடக்க முடியாது. நான் பாத்துக்கிடுவேன்.”

“சரி, சரி, நானும் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் பின்வாங்கினார் குருஜி. பிறகு ஒரு நொடியில் மறைந்துவிட்டார். இதற்கிடையில் நிறையபேர் எங்களைச் சுற்றிக் கூடிவிட்டனர். ஆயி கைகளை ஆட்டி ஆட்டி பேசுவதையும் ஹனுமான் மாதிரி காட்சியளித்த என் முகத்தையும் பார்த்துக்கொண்டு நின்றனர்.

அதன் பிறகு எவ்வளவோ விஷயங்கள் சுலபமாகிவிட்டன. சாணம் அள்ளலும் குருஜியின் அடியும் நின்றுவிட்டது. நானும் ஸ்கூலுக்குச் சரியான நேரத்தில் செல்லத் தொடங்கினேன். முக்கியமாக, அன்று முதல் அம்மாவை மாபெரும் துணையாகப் பார்க்கத் துவங்கினேன். என் வாழ்க்கைக்கு ஒரு பாதை கிடைத்துவிட்டது.

***

* ஷ்யாம்சி ஆயி : சமூக சீர்த்திருத்தவாதியான ஸானே குருஜியின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் திரைப்படம். அதில் வரும் ‘சடி லகே சம்சம்’ என்ற பாடல் ஆசிரியரின் பிரம்பு சம்சம் என்று அடிப்பதைக் குறிக்கும். இளம் வயது ஸானே குருஜியாக நடிக்கும் சிறுவன் ஆசிரியர் இல்லாத நேரத்தில் அவரைக் கேலி செய்து பாடும் பாடல் இது.

____________________________

கவசம்

திகாலையில் விழித்தது முதலே இந்திராவின் வாய் வளையல்கள் குலுங்குவதுபோல் ஒலித்துக்கொண்டிருந்தது. கௌர்யாவின் மேல் கோபத்தைக் கொட்டினாள். அவனை அடித்தாள். கத்தினாள். கோபத்துடன் “ஏண்டா, ஏன் என்னைச் சந்தைக்குப் போய் மாம்பழம் விற்கக் கூடாது என்கிறாய்? ஏன், என்ன நடந்தது?” என்றாள். ஆனால் கௌர்யாவிற்கும் ஒன்றும் சொல்வதற்கில்லை. கோபத்தை அடக்கிக்கொண்டு, கண்ணீரை விழுங்கியபடி, சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான் – “சந்தைக்குப் போகவேண்டாம் . . .”

அது இந்திராவின் கோபத்தை மேலும் கிளறியது. மீண்டும் மீண்டும் அவன் மேல் பாய்ந்தாள், அடித்தாள், கத்தினாள். கௌர்யாவின் அப்பா, இத்தனைக் களேபரத்திலும் குடிமயக்கத்தில் கிடந்தவன், விழித்து உறுமினான். “டே உங்கம்மைக்கு . . .! தேவடியா சனங்க, வாயை மூடு! மனுசன தூங்க விடாம . . .”

யாரோ ஒருபெண் தலையை உள்ளே நுழைத்து, “என்ன விஷயம்? கௌர்யா என்ன சொல்கிறான்?” என்று விசாரித்தாள். இந்திராவின் ஏச்சு வலுத்தது. “இந்தச் சனியனின் நாக்கு அழுகிப் போகும். மரியாதை இல்லாமல் ஆயிட்டான், தடிக்கழுதை. . .”

இப்படியே கொஞ்சம் நேரம் கழிந்தது. சற்று அமைதி நிலவியது. திடீரென்று இந்திரா குதித்தெழுந்து கத்தினாள்: “சந்தைக்குப் போகக்கூடாதாம், சொல்றாரு இவரு. அப்புறம் சாம்பலையாத் திம்பே? உன் அப்பனைப் பார், மலப்பாம்பு மாதிரி படுத்து உருளுறான். அவனுக்கு வெட்கம் இருக்கா . . .? இப்போ என் உயிரை வாங்குறே! உன் நாக்குல தீக்கொள்ளியை வைக்க, உங்க எல்லாத்துக்கும் . . .”

“இந்தக் கத்தல் எல்லாம் வீட்டுக்குள்ளேதான் கேக்குது. பழம் வாங்க வறவங்ககிட்டே வாய் அடங்கிப்போகுது” என்று கௌர்யா தனக்குள்ளே முனகிக் கொண்டான்.

தவிடும் மாவும் கலந்து செய்த பாக்ரி துண்டுகளை எடுத்தபடி இந்திரா கௌர்யாவைப் பார்த்தாள். ஊதிப்போன பாம்பு மாதிரி படுத்திருந்த அவனும் மூலையிலிருந்து அவளையே கூர்ந்து பார்த்தான். அழுது அழுது கண்கள் சிவந்திருந்தன. விம்மலில் அவன் உடல் குலுங்கியது. உறிஞ்சி உறிஞ்சி மூக்கு வீங்கியிருந்தது.

கௌர்யாவைச் சமாதானப்படுத்தவோ, கட்டி அணைத்துக்கொள்ளவோ இந்திராவுக்கு நேரம் இல்லை. விளக்கிச் சொல்லவும் இப்போது முடியாது. மாம்பழங்களைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு விடிவதற்கு முன் சந்தைக்குப் புறப்படவேண்டும். முந்திய இரவே வைக்கோலிலிருந்து மாம்பழங்களை வெளியே எடுத்து, நல்ல பழங்களை பெரிய கூடையிலும், நன்கு கனிந்தவற்றையும் அணில் கடித்தவற்றையும் அழுகிப்போனவற்றையும் சிறிய கூடையிலும் பிரித்து அடுக்கி வைத்துவிட்டாள். சின்னக் கூடையைத் தலையில் எடுத்துச்சென்று, மீன் சந்தையில் அதைக் கொடுத்து கொஞ்சம் மீன் வாங்கி வரும்படி கௌர்யாவிடம் சொல்ல வேண்டும். ஆனால் இரவிலிருந்தே அவன் “மாட்டேன் மாட்டேன்” என்று திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கிறான். அடிபட்ட பிறகுகூட நிறுத்தவில்லை. அதனால்தான் இந்திராவுக்குக் கோபம் ஏறிவிட்டது.

“கௌர்யா, ஊளையை நிறுத்திவிட்டு ஆத்துக்குப் போய் ஒரு குடம் தண்ணி கொண்டுவா. எழுந்திரு. பொழுது விடிஞ்சாச்சு” என்று சற்று அமைதியான குரலில் சொன்னாள் இந்திரா. அப்போது பக்கத்து வீட்டு ஸாவுபாய் உள்ளே நுழைந்தாள். “என்ன விஷயம்? என்ன சண்டை?”

‘ஒண்ணாம் நம்பர் சண்டைக்காரி, இவளுக்குச் சண்டையைத் தவிர வேறென்ன தெரியும்? ஊரில் உள்ளவர்கள் மட்டுமா, சந்தைக்கு வருபவர்கள்கூட இவளைக் கண்டு பயப்படுகிறார்கள். மீன்காரிகள்கூட. இங்கே வந்திருக்கா, எரிகிற கொள்ளியில் எண்ணெய் விட’ என்று தனக்குள்ளே கூறிக் கொண்டான் கௌர்யா, ஸாவுபாயின் மீது தன் கண்களைப் பதித்தபடியே.

கௌர்யாவின் முன் உட்கார்ந்துகொண்டு அவன் முதுகைத் தடவியபடியே, “என்ன ஆச்சு? ஏண்டா அழுகிறாய் . . . ம்?” என்றாள் ஸாவுபாய்.

அவளிடமிருந்து இப்படி ஒரு எதிர்பாராத அரவணைப்பு கிடைத்தது கௌர்யாவைக் குழப்பியது. மீண்டும் துக்கம் எழும்பியது. ஆனால் தன் கண்ணீரை அடக்கிக்கொண்டு, இரக்கத்துடன் ஸாவுபாயைப் பார்த்தான். உண்மையை அவளிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற திகைப்பில் அவன் முகம் சுருங்கியது. ஆனால் அந்தச் சின்ன சிம்னி விளக்கின் ஒளியில் அவன் முகமாறுதலை இரண்டு பெண்களும் கவனிக்க முடியவில்லை.

‘கௌர்யா, நல்ல பையன் இல்லையா ? புறப்படு, சந்தைக்கு நேரமாயிற்று. எழுந்திரு” – அதே இனிமையான குரலில் ஸாவுபாய் அவனைக் கிளப்பினாள். ஆனால் அவன் அசையாமல் உட்கார்ந்திருந்தான்.

“அப்படியெல்லாம் சொன்னால் அவன் எழுந்திருக்கமாட்டான். அவனுக்கு இது கேட்கிறது” என்று சொல்லிக் கொண்டே இந்திரா அடுப்பிலிருந்து கொள்ளிக்கட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு கௌர்யாவை நோக்கி வந்தாள். “எழுந்திருக்கிறாயா, சூடு போடட்டுமா” என்றாள் நெருப்பை அவன் முகத்துக்கு எதிரே நீட்டியபடி. கௌர்யா திடுக்கிட்டுப் பின்வாங்கினான். ஸாவுபாய் சட்டென்று இந்திராவின் கையிலிருந்து கட்டையைப் பறித்துவிட்டு, கௌர்யாவைத் தனக்கு பின்னால் தள்ளியபடி, “கொலைகாரி, பத்ரகாளி, என்ன செய்யறே? வயசுவந்த பிள்ளை, படிக்கிற பையன், அவனைச் சுட்டெரிக்கப் போறியா?” என்று கத்தினாள்.

“எங்கே ஸ்கூலுக்குப் போறான், உதவாக்கரை? ஊரைச் சுற்றிச்சுற்றி வாறான்” என்று கத்தினாள் இந்திரா. அவனை விழுங்கிவிடுவது மாதிரி பார்த்தாள். கௌர்யா மெதுவாக எழுந்து ஸாவுபாயின் பின்னால் படம் எடுத்த பாம்புபோல நிமிர்ந்து நின்றான். இரண்டு நாட்கள் முன்பு ஸ்கூலில் நடந்த நிகழ்ச்சிகளைக் குறிப்பிடும் சொற்கள் வாயிலிருந்து வெளியே வரத் துடித்தன. அவற்றைக் கக்கிவிட வாயைத் திறந்தான். ஆனால் வந்தவை என்னவோ வேறு வார்த்தைகள். “எனக்குப் புஸ்தகம் எதுவும் வாங்கித் தரல்லை . . . நான் ஸ்கூல் போகமாட்டேன் . . . நான் . . . நான் . . .”

சொல்ல வந்ததை முடிப்பதற்கு முன்பே இந்திரா, “சரி சரி, இன்னிக்கு வாங்கித் தரேன். இப்போ போய் ஒரு குடம் தண்ணி எடுத்தா. சீக்கிரம்” என்று உத்தரவிட்டாள். குடத்தை அவன் கையில் திணித்து வெளியே விரட்டினாள்.

வெளியே வந்த கௌர்யா கொதித்துப் போயிருந்தான். தன் பேரிலேயே அவனுக்குக் கோபம் வந்தது. இரண்டு மூன்று நாட்களாகச் சொல்லிவிடவேண்டும் என்று துடித்துக் கொண்டிருப்பதை ஏன் சொல்ல முடியவில்லை? நான் சொல்ல முடியாத அளவுக்கு அந்த வார்த்தைகளில், அந்த நிகழ்ச்சியில் என்னதான் இருக்கிறது? உண்மையில் அந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஸ்கூலுக்கு போகவே பிடிக்கவில்லை.

கௌர்யா நாலாம் கிளாஸ் பாஸ் செய்து ஐந்தாவது போனான். இந்திரா மகிழ்ச்சியில் பூரித்துப்போனாள். கௌர்யா நிறைய படிப்பான், எங்காவது வேலை தேடிக்கொள்வான், அவர்கள் கஷ்ட காலத்துக்கு விடிவு ஏற்படும் என்று நம்பினாள். கிராமத்தின் நல்ல பாடசாலையில் அவனைச் சேர்த்தாள். அவனுக்கும் ஸ்கூல் பிடித்திருந்தது. ஒழுங்காகச் சென்றான். ஆனால் அன்றைக்கு . . .

அன்றைக்கு இடைவேளையின்போது, ஸ்கூலுக்கு வெளியே மற்ற பையன்களுடன் விளையாடிக்கொண்டிருந்தான். விளையாட்டைவிட அவன் கவனம் மரத்தின் கீழ் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆசிரியர்கள் பேரிலேயே இருந்தது. முக்கியமாக அவர்கள் சாப்பிடும் பாஜி போளியில் இருந்தது என்பதுதான் உண்மை. திடீரென்று ஆசிரியர்களிடையே ஏதோ தகராறு ஏற்பட்டதுபோல் தோன்றியது. அவனுடைய டீச்சரும் வேறு ஒரு சாரும் உரத்த குரலில் கைகளை ஆட்டி கோபத்துடன் பேசிக்கொள்வது தெரிந்தது. என்னவென்று தெரிவதற்கு முன்பே மாணவர்கள் அவர்களைச் சுற்றி நின்றனர். எல்லோருக்கும் முன்பாக கௌர்யா . . .

சாரிடம் கோபத்துடன் “இப்படி ஆபாசமாக பேசக் கூசவில்லையா?” என்று கேட்டுக்கொண்டிருந்தாள் டீச்சர்.

“நான் என்ன சொல்லி விட்டேன்? உண்மையைத் தானே சொன்னேன்? இங்குள்ள மாம்பழங்களைவிட நீங்க கொண்டுவந்தவை மிகவும் பெரியவை. அதனால்தான் உங்க மாம்பழங்கள் பெரிசு என்று . . .”

“போதும், ஒன்றும் சொல்லத் தேவையில்லை.”

“ஆனால். . .” என்று சொல்லிய சார் சிரித்தார். அது டீச்சரை மேலும் கோபமூட்டியது.

“பல்லைக் காட்ட வெட்கமாயில்லை?” என்று கத்தினாள் டீச்சர். குருஜியின் முகத்தில் படர்ந்திருந்த சிரிப்பு கற்பூரம் போல் கரைந்துவிட்டது. அவர் முகம் விழுந்து விட்டது. ஏதோ சொல்வதற்காக அவர் உதடுகள் அசைந்தன. ஆனால் டீச்சர் குறுக்கிட்டார். “எதைச் சொன்னாலும் எதற்காக இந்தக் கிராமத்தின் பெயரையும் குறிப்பிட்டே சொல்கிறீர்கள்?”

“ஏன் சொல்லக் கூடாது? இந்த ஊரின் பெயர் சோளி தானே. சோளி கிராமம். இங்குள்ள மாம்பழங்களை சோளி மாம்பழம் என்று சொல்லாமல் பின் எப்படி . . .”

“இங்கே பாருங்க, மறுபடியும் அபத்தமான பேச்சு! மூக்கு ஒழுகுற குழந்தைக்குக்கூடத் தெரியும் இந்த கிராமத்தின் பெயர் சோளி என்று. எதற்காக அதை இங்கே குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்?” என்றாள் டீச்சர், தன் விரலை அவர் மூக்குக்கு எதிரே குச்சி மாதிரி நீட்டிக் கொண்டே.

“டீச்சர், உண்மையில். . . நான் சத்தியமாக அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை” என்றார் குருஜி அவளைச் சமாதானப்படுத்தும் பாவனையில்.

டீச்சருக்குக் கோபம் தீரவில்லை. “இல்லை. நீங்க நல்ல நோக்கத்தில சொல்லலை” என்று உறுமினாள்.

அவரை இக்கட்டிலிருந்து காப்பாற்ற வந்ததுபோல் இன்னொரு குருஜி சொன்னார். “வந்து, டீச்சர், இதில் வேடிக்கை என்னவென்றால். . .”

“வேடிக்கையா? எது வேடிக்கை? உங்களைப் போன்ற ஆட்களுக்கு எப்பவுமே இந்த மாதிரி விஷயங்கள் வேடிக்கைதான். இல்லையா?”

“ஆனால் இங்க எல்லாரும் அப்படித்தானே சொல்கிறார்கள்?” என்றார் முதல் குருஜி. “இந்த கிராமத்துப் பெண்கள் சந்தைக்கு மாம்பழம் விற்கச் செல்லும்போது, ஜனங்கள் எப்படிக் கேட்கிறார்கள் – சோளி மாம்பழமா என்றுதானே? இதோ . . . இந்த கௌர்யாவே சொல்வான், இல்லையா கௌர்யா?. . . உன் அம்மா சந்தைக்கு மாம்பழம் விற்கப் போகும்போது ஆட்கள் இப்படித்தானே கேட்பார்கள்?” குருஜி கௌர்யாவை முன்னே இழுத்து அவளிடம் பேசினார்.

கௌர்யாவுக்கு ஒரே குழப்பம். மாம்பழம் . . . பெரிய மாம்பழம் . . . உன் மாம்பழம் . . . சோளி மாம்பழம் . . . எல்லாம் சிறிய சாதாரண வார்த்தைகள். கவணிலிருந்து எறிந்த கற்கள்போல் அவை அவன் தலைக்கு மேலே பறக்க, அவன் திகைத்து, ஒன்றும் புரியாமல், வாயடைத்து . . .

“அவனிடம் என்ன கேள்வி? எனக்குத் தெரியாதா? உங்களைப் போன்ற அப்பன் பேர் தெரியாதவர்களுக்கு வாய் மட்டும் ஒரு முழம் நீள்கிறது.”

“ஏய் ஏய் . . . நாக்கை அடக்கி பேசு? யாரைப் பார்த்து அப்படிக் கேட்கிறாய்?” கோபத்தில் கத்தினார் குருஜி.

“உன்னைத்தான் . . . ஒரு . . .” கண்களைச் சுழற்றிக் கொண்டே கத்திய டீச்சர், பாதி சாப்பிட்ட உணவுடன் விருட்டென்று நடந்து வகுப்பறைக்குள் சென்றாள். கோபம் தெறிக்க குருஜியும் அவளைப் பின்தொடர்ந்தார்.

“ஹேய்” என்று கத்திக் கொண்டே குழந்தைகள் பிரிந்தனர். ஒரு சிலர் கௌர்யாவைச் சூழ்ந்து கொண்டு அவனைப் பார்த்தபடி நின்றனர். ஏழாம் வகுப்பு படிக்கும் பையன்கள் தங்களுக்குள்ளே கரகரத்த குரலில் பேசியபடி, சிரித்துக்கொண்டிருந்தனர். மணி அடித்தது. எல்லோரும் வகுப்பறைக்குள் ஓடினர். கௌர்யாவின் கால்கள் நகரவில்லை.

செய்வதறியாது அவன் ஒரு மரத்தின் கீழே அமர்ந்தான். ஆசிரியர்களின் சண்டை . . . அந்த வார்த்தைகள் . . . அவன் நெற்றியில் நரம்புகள் துடித்தன . . . எப்படி இது நேர்ந்தது? அந்த வார்த்தையில் என்ன இருக்கிறது _ ஒரு வாக்குவாதத்தைக் கிளப்பும்படி, ஒரு சண்டையை ஆரம்பிக்கும்படி? டீச்சர் இவ்வளவு ஆத்திரப்பட வேண்டுமென்றால் அந்த வார்த்தையில் என்னமோ இருக்கிறது. டீச்சர் படித்தவள், நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவள் . . . எப்போதும் நல்ல விஷயங்களையே சொல்லுவாள். அதனால்தான் அந்த வார்த்தைகளில் ஏதோ மோசமான அர்த்தம் இருப்பதை உணர்ந்துகொண்டாள். அவள் குருஜியுடன் சண்டை போடும்போது, எனக்குள்ளே அது நல்லதுக்குத்தான் என்று தோன்றியது. என் டீச்சர் மிக நல்லவள். இல்லாவிட்டால் என் அம்மா, கிராமத்து மற்ற பெண்கள். . .

கௌர்யாவின் கண் முன் கடைத்தெரு விரிந்தது. வாடிக்கையாளர்கள் எப்படி அம்மாவைச் சுற்றி நிற்கின்றனர். அவர்களின் வித்தியாசமான குரல்கள் . . . அவர்கள் உச்சரிப்பில் கொடுக்கும் அழுத்தம் . . . “ஏய் மாம்பழக்காரி, உன் மாம்பழம் எப்படி? அதை வெளியே எடு, பார்க்கட்டும் . . . அவை கல் மாதிரி இருக்கிறதா, மெதுவாக இருக்கிறதா? சோளி மாம்பழம்தானே இவை? காட்டு, உன் மாம்பழங்களைக் காட்டு, பார்ப்போம்.” சந்தையைப் பற்றி நினைக்கும்போதே அவனுக்குத் தலை சுற்றியது. ஒரு தடவை திருவிழாவின் போது ராட்சச குடைராட்டினத்தில் ஏறினான். ராட்டினம் சுழன்றபோது அவன் வயிற்றில் பயம் பந்தாக உருண்டது. கிட்டத்தட்ட அதே மாதிரி உணர்ச்சிதான் இப்போதும். அந்த வார்த்தைகள் . . . அந்த வாடிக்கையாளர்கள் . . . சந்தை . . . அவனுக்குப் பயமாக இருந்தது.

“சனியனே, செத்தா போயிட்டே?” என்ற அம்மாவின் வார்த்தைகள் அவனை உணர்வுக்குக் கொண்டுவந்தன. பாதி வழிவரை வந்திருந்த அவள், பாயத் தயாராயிருக்கும் எருமை மாதிரி நின்றாள். குடத்தை அவன் கையிலிருந்து பறித்து அவன் முதுகில் பலமாக ஒரு அறை வைத்தாள். “எழுந்துரு சீக்கிரம் . . . எட்டி நட” என்று கூவியபடி அவனை வழி தவறி போன மாட்டை இழுத்துச் செல்வதுபோல் வீட்டை நோக்கி அழைத்துச் சென்றாள்.

மாம்பழம் விற்கும் மற்றப் பெண்களுக்கு இந்திராவினால் தாமதமாயிற்று. கௌர்யாவுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. மனசிலுள்ள கோபத்தைத் திரும்பவும் அடக்கிக் கொண்டே பாக்ரியை விழுங்கிய அவன் தலையில் இந்திரா ஒரு கூடை அழுகிய மாம்பழங்களைத் தூக்கிவைத்து “நட” என்று கத்தினாள்.

“ஒரு பையில் அந்தப் பழங்களைப் போட்டுக் கொடு” என்று உறுமினான் கௌர்யா. கோபத்தில் அவன் கன்னங்கள் சிவப்பேறியிருந்தன. “பெரிய பண்ணையார் இவர்” என்று சொல்லிவிட்டு, எங்கிருந்தோ ஒரு பையைத் தேடி எடுத்து, கூடையிலிருக்கிற பழங்களை அதில் மாற்றினாள். அதை அவன் தலையில் தூக்கிவைத்துவிட்டு, தூரத்தில் போகும் மற்ற கிராமப் பெண்களைப் பிடிப்பதற்காக ஓடினாள். தலையில் இருந்த பையை தோளுக்கு மாற்றியபடி கௌர்யாவும் அவளைத் தொடர்ந்தான்.

வீடுகளையும் குடியிருப்புகளையும் கடந்து, வளைந்து வளைந்து செல்கிற பாதை வழியே நடந்து சீதையின் மாலை என்ற பகுதியை அடைந்தனர். பழைய வறண்ட நிலம்தான். ஆனால் கௌர்யாவுக்கு அது புதிதாகத் தோன்றியது. அந்தத் திறந்த வெளி விரிந்துகொண்டே அடிவானம்வரை சென்று அதற்கு அப்பாலும் நீண்டு ஆகாயத்தைக் கட்டி அணைத்தது. அந்த வெளியின் பிரம்மாண்டத்தை கௌர்யா அப்போதுதான் முதன் முறையாகக் கண்டான். அதன் முன் மற்ற எல்லாம் சிறியதாக, அற்பமாகத் தோன்றியது. பாறைகளின் அடியே வளரும் சிறிய நீலநிற முட்செடியாகத் தன்னை உணர்ந்தான் -_ எவ்வளவு சிறியவன் – மிகச் சிறியவன், ஒரு பூச்சி . . . ஏன் எறும்பு போல உணர்ந்தான் அவன்.

கிராமப்பெண்கள் அடிவானத்தை நோக்கிச் செல்லும் நேர்ப்பாதையில், தங்களுக்குள் பேசிக்கொண்டும், மகிழ்ச்சியையும் கவலையையும் பகிர்ந்து கொண்டும், சிரித்துக் கொண்டும் அழுதுகொண்டும் விரைவாக நடந்தனர். கௌர்யா அவர்களுக்குப் பின்னால், அவர்களிடமிருந்து தனிப்பட்டவன்போல் அவர்களைக் கூர்ந்து கவனித்தான். வெளியூர்க்காரர்களின் மாறுபட்ட கோணத்தில் அவர்களைப் பார்த்தான். கிழிந்த புடவை வழியே தெரியும் அவர்களுடைய பின்பக்கம் ஒவ்வொரு அடி நடக்கும்போதும் குதிப்பதையும், கிழிந்த சோளியின் வழி தெரிந்த முதுகையும், பின்னாலிருந்தே தெரிந்த மார்பையும் அசலூர்க்காரனின் பார்வையில் அவன் கவனித்தான்.

நடக்கும்போது முட்செடியில் காலை வைத்துவிட்டான் கௌர்யா. கூரான முட்கள் ஊசியைப்போல் காலில் தைத்தன. ஆ . . . யீ . . . என்று கத்திக் கொண்டே கீழே விழுந்தான். தலையில் சுமந்த பையும் கீழே விழுந்தது.

இந்திரா சட்டென்று நின்றாள். தலைமேல் உள்ள சுமையுடன் ஜாக்கிரதையாகத் திரும்பி, “கண்ணு குருடா? பார்த்து நடந்தா என்ன? எழுந்திரு, நட” என்று கத்தினாள். கௌர்யாவுக்கு எழுந்திருக்க முடியவில்லை. வேறு வழியின்றி இந்திரா திரும்பி வந்தாள். தலைச்சுமையைச் சரிப்படுத்திக் கொண்டே, குதிகால் போட்டு உட்கார்ந்து, அவன் காலில் தைத்திருந்த முட்களை ஒவ்வொன்றாகப் பிடுங்கினாள். “சீதா மாலைக்கு இது தானே நேர் வழி. உனக்குப் பழக்கமாகவில்லையா? இந்த லட்சணத்தில் நடந்தால் நேரம் போய்விடும். அப்புறம் நம்ப மாம்பழங்கள யாரு வாங்குவாங்க?” என்றாள்.

“ஆயீ, ‘மாம்பழம்’னுட்டு மட்டும் சொன்னால் போதுமே. உடம்பை நல்லா மூடிக்க” என்றான் கௌர்யா திடீரென்று. ஆனால் இந்திராவுக்கு அவனைக் கவனிக்க நேரமில்லை. தனக்கு முன்னால் வெகுதூரம் போய்விட்ட பெண்களைப் பார்த்துக் கொண்டே, மாம்பழப்பையைத் தூக்கி கௌர்யாவிடம் கொடுத்துவிட்டு, பழக்கூடையைத் தலையில் சரியாக பிடித்தபடி எழுந்துகொண்டாள். கௌர்யாவும் எழுந்தான். பையைத் தன் தோளில் தொங்கவிட்டுக்கொண்டு கவனமாக முன்னே நடந்தான். முட்செடிகள் பாறைகளின் பள்ளங்களில் கவிந்திருந்தன. விரிந்த வறண்ட நிலம் பயமூட்டியது. அவனைத் தூக்கி வீழ்த்துவது போலிருந்தது. சட்டென்று சிறிய உதறலுடன் இந்திராவின் பின் ஓடினான்.

இந்தச் சமவெளி மழைக் காலத்தில் எப்படியோ மாறி விடுகிறது . . . விரல் நக அளவில் சிறிய பளிச்சென்ற மஞ்சள் நிற சோனாவலி பூக்கள், பூமியை அணைத்தபடி சிரிக்கும். யாரோ அடிவானம்வரை தங்கத்தைச் சிதறியதுபோல் தோன்றும். இந்தத் தங்க விரிப்பைக் கண்ட யாரோ ஒரு முனிவருக்கு சோளி தைப்பதற்கு பொன் மான் தோல் கேட்ட சீதாவின் நினைவு வந்ததாம்.

எனவே இந்தக் கிராமத்தை சீதாவின் சோளி என்று அழைத்தார். நாளடைவில் கிராமம் வெறும் சோளி ஆகிவிட்டது.

இந்தக் கதையை அவனது டீச்சரிடமிருந்து கேட்டிருக்கிறான் கௌர்யா. அதைச் சொல்லும்போது அவள் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்திருந்தது, பெருமையாக இருந்தது. ஆனால் அன்றைக்கு அவள் குருஜியுடன் சண்டை போட்ட போது . . .

சீதாமாலையைக் கடந்து, ஆற்றையும் குன்றுகளையும் தாண்டி, அந்தச் சோளிப் பெண்கள் நகரத்தின் எல்லையை அடைந்தனர். மற்ற கிராமங்களைச் சேர்ந்த பெண்களும் கூடைகள், சப்பாத்திக் கட்டைகள், மாம்பழங்கள் முதலியவற்றுடன் வந்து அவர்களுடன் சேர்ந்துகொண்டனர். நகரத்தின் காற்று தொட்டவுடன் கௌர்யா தன்னையே மறந்து விடுவான். நகரத்தின் அதிசயங்கள் அவனை மெய்மறக்கச் செய்துவிடும். ஆனால் இன்றோ அவன் நெஞ்சில் ஒரு பாரம் ஏறியதுபோல் இருந்தது. இருந்தும் தன்னை அடக்கிக் கொண்டு நடந்தான். சிறிது சிறிதாக அவனுக்கு அந்த சொற்களின் அர்த்தம், மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யும் வாடிக்கையாளர்களின் நடத்தை எல்லாம் புரியத்தொடங்கின. அவன் ஒரு முடிவுக்கு வந்தான். கிராமத்தின் பெயரை வாடிக்கையாளர்கள் சொல்லக்கூடாது. மாம்பழத்தைப் பற்றி மட்டுமே கேட்க வேண்டும்; அவை எங்கிருந்து வருபவை என்று கேட்கக்கூடாது என்று வாங்குபவர்களிடம் சொல்லிவிடவேண்டும். ஆயியிடமும் மற்றப் பெண்களிடமும் எச்சரிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் இதைப் பொருட்படுத்தாவிட்டால், அவர்களைத் திட்டவேண்டும், சண்டைபிடிக்க வேண்டும், ஏனென்றால் . . . ஏனென்றால் . . .

“ஏய், ஏய், நில்லு! நில்லு அப்படி. பின்னால் போ . . .” என்று கத்திக்கொண்டே இரண்டு பொலீஸ்காரர்கள் அவர்களிடம் வந்தனர். ரோட்டில் சென்ற மோட்டார்கள், சைக்கிள்கள் உட்பட _ எல்லாம் நிறுத்தப்பட்டிருந்தன. சில பெரிய மனிதர்கள் ஒரு காரிலிருந்து இறங்கினர். ரோட்டின் ஒரு பக்கமாகச் சென்று ஒரு பெரிய பெயர் பலகைக்கு மாலை அணிவித்தனர். மக்கள் கை தட்டினர். “கிராமத்தின் பெயரை மாற்றுகிறார்கள்” என்றார் ஒரு போலீஸ்காரர். கௌர்யா கவனமாகப் பார்த்தான். “இந்திரா காந்தி நகர்” என்ற பெயர் அந்த பலகையில் பளபளத்தது. இதற்கு முன்பு ‘கூயி காவ்தன்’ (ஊளை ஒலி) என்ற பெயரைக் கொண்ட ஒரு மரப்பலகை அங்கே இருந்தது. ஒவ்வொரு தடவையும் அதைப்பார்க்கும்போது இங்கிருந்தே நகரத்தில் நரி ஊளையிடுவதைக் கேட்கலாம் என்று நினைத்துக் கொள்வான் கௌர்யா. தனது கிராமத்து பெயரையும் இப்படி மாற்றிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவனுக்குத் தோன்றிற்று.

சோளி கிராமம்? சீ! அசட்டுத்தனமாக இருந்தது . . . ஆனால் யாருடைய பேரை அதற்கு இடவேண்டும்? இது இந்திரா நகர். என் அம்மாவின் பெயர் இந்திரா. சீ. . . நிச்சயமாக அம்மாவின் பெயரை இட முடியாது. ஸாவுபாயின் பெயரை இட்டால் என்ன? ‘சாவித்ரி’ . . . அவள் ஒரு நல்ல பெண்மணி; மக்கள் அவளைக்கண்டு அஞ்சுகிறார்கள்; அவளை ஏமாற்ற முடியாது . . . இல்லாவிட்டால் அதற்கு டீச்சரின் பெயரிட்டால் என்ன?

“ஏய், மாமி, உன்னிடம் மாம்பழம் இருக்குதா? காட்டு . . . ம் . . . உன் மாம்பழத்தைப் பார்ப்போம் . . .” கௌர்யாவின் கனவு கலைந்தது. வெள்ளைப் பைஜாமா அணிந்த ஒருவன் அம்மாவை உரசியபடியே அவளுடன் நடக்கிறான். ஆனால் இந்திரா நிற்காமல் விரைந்து நடந்துகொண்டிருக்கிறாள். தோளில் தொங்கிய பையைக் கெட்டியாகப் பிடித்தபடியே கௌர்யா ஒரு அம்புபோல் பாய்ந்து அவர்கள் இருவருக்குமிடையே சென்று, அம்மாவைச் சற்று அப்புறம் தள்ளி, அந்த மனிதனிடம் “இல்லை. நாங்கள் மாம்பழம் விற்க வரவில்லை . . .” என்றான். “ஓ, விற்க வரவில்லையா? அப்படியா. அப்ப, வெறுமனே காட்டுவதற்கு மட்டும்தான் வந்தீர்களா? அப்படியானா காட்டவாவது செய்யுங்கள் . . . என்ன மாமி?” என்றான். பிடிவாதக்காரன்போல் அவளைப் பின்தொடர்ந்தான். கௌர்யா அவர்கள் நடுவே புகுந்து அம்மாவைத் தள்ளிக்கொண்டேயிருந்தான். இப்போது மூன்று நான்குபேர் இந்திராவைத் தொடர்ந்து வரத்தொடங்கினர். கௌர்யா அவர்களைத் தடுக்க முயன்றான்.

“என்னடா செய்கிறாய்? குறுக்கே குறுக்கே ஏன் வரே? தள்ளிப் போ” என்றாள் இந்திரா. தலைச்சுமையை சரிசெய்தபடியே கௌர்யாவைப் பிடித்துத் தள்ளினாள். கௌர்யா இடறினான். அம்மாவிடம் அவனுக்குக் கோபம் வந்தது. தோளில் இருந்த பையைத் தூக்கி எறிந்து விடலாமா என்று நினைத்தான். நெற்றி ரேகைகள் சுருங்கின. முணுமுணுத்துக் கொண்டே சற்றுத் தொலைவில் போய்விட்ட அம்மாவிடம் ஓடினான் கௌர்யா.

சந்தையில் ஒரே கூட்டம். ரோட்டின் இருபக்கமும் கிராமத்து மக்கள் வழக்கம்போல் உட்கார்ந்திருந்தனர். மாம்பழம், பலா, கர்வண்டா இலந்தை, முந்திரிப்பருப்பு போன்றவை அவர்கள் முன் இருந்தன. வாடிக்கையாளர்கள் அவர்களை மொய்த்திருந்தனர்.

மாம்பழம் விற்பவர்களின் புதிய கோஷ்டி வந்தவுடன் மக்கள் அவர்களைச் சுற்றிக் கூடினர். கூடைகளைக் கீழே இறக்குவதற்கு முன்பே பத்து பனிரெண்டு கைகள் அதற்குள் நுழைந்தன. கைக்கெட்டிய மாம்பழங்களை எடுத்துத் தங்கள் பைகளில் நிரப்பத் தொடங்கினர். யார் எத்தனை எடுத்தார் எப்படி எடுத்தார் என்று யாருக்கும் தெரியாது. ஒருவன் பையை இந்திரா சோதித்தபடியே அடுத்தவன் எடுத்த பழங்களை எண்ணும்போது மூன்றாமவன் கிடைத்த பழங்களை அள்ளிக் கொள்வான். தாங்கள் கொடுக்க வேண்டிய பணத்தை மிகக் குறைத்தே சொன்னார்கள் சிலர். இந்திரா அவர்களுடைய பைகளை பிடித்தபடியே கெஞ்சிக் கொண்டிருந்தாள். கூட்டை விட்டு வெளிவந்த பெட்டைக்கோழியை, காக்கைக் கூட்டம் கொத்திக் குதறுவதுபோல் உணர்ந்தாள் இந்திரா. கௌர்யாவை உதவிக்கு அழைத்தாள். “கௌர்யா . . . ஓடியா. . . டேய், மாம்பழத்தை கவனித்துக் கொள். . . பணத்தை எண்ணு. . .” கௌர்யா காதில் விழாதவன்போல் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சில அடிகள் தள்ளி, ஸாவுபாய், மாம்பழம் விற்றுக்கொண்டிருந்தாள் – பளபளவென்ற கண்ணாடி பாட்டில்களுக்குப் பின்னால் இருக்கும் கடைக்காரன் மாதிரி. கிட்டத்தட்ட ஒரு ராணிபோல. பழங்களைத் தானே கையில் எடுத்து எண்ணி வாங்குபவரின் பையில் போட்டாள். அவரும் சரியான பணத்தைக் கொடுத்தார். அதிக சாமர்த்தியம் காட்டவோ குழப்பம் விளைவிக்கவோ முயல்வதில்லை. யாராவது தொல்லை கொடுக்கிறான் என்று தெரிந்தால் ஸாவுபாய் உஷாராகிவிடுவாள். “ஏய், நில்லு, பழத்தைத் தொடாதே. நானே எண்ணித் தருகிறேன், என்ன?” அல்லது “என்னய்யா இது, எவ்வளவு பணம் தந்திருக்கே. சரியா கணக்கைப் பாரு” என்பாள். இப்படி ஒரு மிடுக்குடன் தன் வியாபாரத்தைக் கவனித்தாள்.

ஸாவுபாயின் கடுமையான கண்டிப்பைப் பார்க்கும்போது அவனுடைய அம்மா மிக சாதுவாகவும் திடபுத்தியற்றவளாகவும் காணப்பட்டாள். ரொம்பவும் சாது . . . சீ . . . ஏன் அப்படி இருக்கிறாள்? அப்படியிருப்பதால் தான் வாங்க வருபவர்கள் தங்கள் மனம் போல பேசவும் நடக்கவும் செய்கிறார்கள். இந்த நினைவு வந்ததும் அவனுக்கு அவள் பேரில் மேலும் கோபம் வந்தது. அவளைக் குறித்து அவமானமாக இருந்தது. ஸாவுபாயின் மகன் என்று நினைத்துக் கொள்ளட்டுமே என்ற எண்ணத்தில் அவள் பக்கம் நகர்ந்து சென்றான். அப்போதுதான் இந்திரா சொல்வது எதையும் கேட்கக் கூடாது என்றும், அவள் மனத்தைப் புண்படுத்த ஏதாவது செய்யவேண்டும் என்றும் தீர்மானித்தான்.

மத்தியான சூரியன் கொளுத்தியது. அவன் உள்ளும் புறமும் சுள்ளென்று சுட்டது. பசி வயிற்றில் தீயாய் எரிந்தது. மாம்பழங்கள் எப்போது விற்றுத் தீரும், தான் எப்போது பாக்ரியைத் தின்னலாம் என்று தவிப்புடன் காத்திருந்தான். இடையிடையே பையிலிருந்த அழுகிய மாம்பழங்களைத் தின்றான்.

கூட்டம் குறைந்துவிட்டது. பொருட்கள் அனேகமாக விற்றுத் தீர்ந்துவிட்டன. நல்ல மாம்பழங்கள் விற்றுப் போய் விட்டன. சோளிப் பெண்கள் வெயிலில் வாடிவதங்கிக் கொண்டிருந்தனர். வியர்வையைத் துடைத்துக்கொண்டே வாங்க வருபவர்களைப் பற்றி ஒருவருக்கொருவர் குறைப்பட்டுக்கொண்டனர். பரபரப்பு அடங்கியிருந்தது. அப்பொழுது நாலைந்து மீன்காரிகள் வந்து இந்திராவைச் சுற்றி நின்றுகொண்டனர். ‘மாமி, மாம்பழம் எப்படி?’ என்றாள் அவர்களில் ஒருத்தி. பருத்த உருண்ட சுரைக்காய் போன்ற அவர்கள் உடம்பிலிருந்து வீசிய அழுகிய மீன்நாற்றம் அவன் மூக்கில் நுழைந்தது.

மீன் விற்றுவிட்டு வீடு திரும்புபவர்கள் அவர்கள். உடம்பு பூரா நகை அணிந்த இந்தப் பெண்கள் சில பைசாக்களுக்காக பேரம் பேசிக் கொண்டிருந்தனர். பழங்களை விரல்களால் அழுத்தியும் நசுக்கியும் பார்த்துவிட்டு தங்கள் கூடைக்குள் திணித்தனர்.

“ஏய், நில்லு. எத்தனை பழம் எடுத்தே?” என்று கேட்டபடியே ஒருத்தியைத் தடுக்க முயன்றாள் இந்திரா.

“என்ன இது, எடு கையை . . . பழத்தை எடுக்குமுன் அதை நன்றாய் பார்க்க வேண்டாமா? யே அல்லா, என்ன இது மாமி, உன் மாம்பழம் இவ்வளவு சின்னதா இருக்கு . . .?”

“இந்த மாம்பழம் எங்கேயிருந்து?. . . ம் . . . சோளியிலிருந்தா? அதுதான் இப்படி சிறிதாயிருக்கு. பதினாலு – பதினைந்து வயசு பிள்ளைக்குள்ளது போல் . . . ஹி ஹி ஹி” என்று சிரித்தனர்.

“இதோ பாரு, வேணா நல்ல பழத்தை மட்டும் எடுத்துக்கோ . . . ஆனா என்னை ஏமாற்றாதே” என்று சொல்லிக் கொண்டே இந்திரா கிழிந்த புடவையால் மார்பை மறைத்துக் கொண்டாள். சொல்லும்போதே தான் ஏதோ தப்பு செய்துவிட்டது மாதிரியும் . . . மன்னிப்பு கேட்பது போலவும் . . பழங்கள் சின்னதாயிருப்பதற்கு அவள்தான் காரணம் என்பது போலவும். . .

கௌர்யா கொதித்துக் கொண்டிருந்தான், குறிப்பாக அந்த மீனவப் பெண்களின் வார்த்தைகளில். . . சீ, பெண்கள்கூட இப்படிப் பேசுகிறார்கள்! அம்மா தாங்கிக்கொள்கிறாளே! இவர்களுடன் அவள் சண்டை பிடித்திருக்கவேண்டும். . . திட்டவாவது செய்திருக்கவேண்டும்.

“பதினைந்து ரூபாய் என்ன கணக்கு? இருபத்து நாலு ரூபாய் ஆகுதே!” இந்திரா கணக்கு பார்த்தாள்.

“இருபத்து நாலா?. . . நிச்சயமாக இருக்காது. அவள் ரெண்டு டஜன் எடுத்தாள், இவள் ரெண்டு டஜன், நான் மூன்று டஜன். . . கைருன்னிஸா, எத்தனை எடுத்தாய்? ஒரு டஜனா? அப்போ எத்தனை ஆச்சு? அஞ்சு டஜன். அஞ்சு டஜனுக்கு பதினைந்து ரூபாய். . .” மீன்காரிகள் வேண்டுமென்றே கள்ளக்கணக்கு சொல்லி ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள்.

“எப்படி அஞ்சு டஜன்? எட்டு டஜன் ஆகுதே? பார்ப்போம். எத்தனை எடுத்திருக்கே” என்று சொல்லிக்கொண்டே பைகளை பிடித்துக் கொண்டாள். இழுபறி ஆரம்பமாயிற்று. மீன்காரிகளும் கூச்சலிட்டனர். அவை கௌர்யாவின் மீது அடிகள் போல் விழுந்தன. அவனால் தாங்க முடியவில்லை. சட்டென எழுந்து ஆத்திரமடைந்த பூனைக்குட்டிபோல அவர்களின் பைகளை பிடித்துக் கொண்டு கத்தினான். . . “போட்டுவிட்டு போங்கள். . . எங்களிடமே இருக்கட்டும். . . நாங்கள் பழங்கள் ஒன்றும் விற்கவில்லை. . . கீழே வையுங்கள்.”

“யே அல்லா! சுபேதா, இந்த சுண்டைக்காய் பயல் எப்படி சண்டைக்கு வருகிறான் பார்.”

“இங்கே எதற்கு வந்தீர்கள்? மாம்பழம் விற்கவா அல்லது அதைக் குஞ்சு பொரிக்கவா? போடா அங்கே. . .” என்று சொல்லியபடியே கௌர்யாவின் கையை பற்றி இழுத்து, தூரத் தள்ளி, பதினைந்து ரூபாயை இந்திராவின் முன் எறிந்துவிட்டு ஓடிவிட்டனர்.

“தேவிடிச்சி! அவங்க நாக்கு அழுக. . . இந்தப் பழத்தை தின்னு பேதியாய் போகட்டும். . .” இந்திரா கைவிரல்களை முறித்துக்கொண்டு திட்டினாள், சாபமிட்டாள். மற்ற மாம்பழக்காரிகளுக்கும் இந்தக் கதிதான். வேறுவழியில்லாமல் சண்டை போட்டுக்கொண்டு கெஞ்சிக் கூத்தாடி வியாபாரம் செய்ய வேண்டியிருந்தது.

ஸாவுபாய் உதவிக்கு வருவாள் என்று நினைத்தான் கௌர்யா. ஆனால் அவள் தனக்கு எதுவும் சம்பந்தமில்லை என்கிற பாவனையில் பேசாமல் உட்கார்ந்திருந்தாள். அவளுடைய பழங்கள் எல்லாம் விற்றுப்போய்விட்டன. அவள் அருகே யாரோ ஒருவன் உட்கார்ந்திருந்தான்.

அவன் ஒரு நடுத்தர வயது மனிதன். தடியன். மீசை வைத்திருந்தான். நல்ல ஆடை உடுத்திருந்தான். வெற்றிலை போட்டிருந்தான். ஸாவுபாயிடம் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தான். வெற்றிலையை மென்றபடியே அவன் சிரிக்கச் சிரிக்க. . ஸாவுபாயும் சிரிக்கிறாளே! கண் சிமிட்டுகிறாள். . . அவன் அவளிடம் என்ன சொல்லியிருப்பான்? ஒருவேளை. . . சோளி. . . மாம்பழம். . . அது மாதிரி? கௌர்யாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. . . பெயரை மாற்ற வேண்டும். . . சாவித்ரி கிராமம், சாவித்ரி. . . இந்தச் சொற்கள் அவன் மனப்பலகையிலிருந்து கற்பூரம்போல் எரிந்து போயின.

“என்ன மாமி, . . . மாம்பழமா. . . எப்படி உன். . . உன்னுடையது எப்படி? பார்க்கலாமா. . . காட்டு என்னிடம்!” வார்த்தைகள் வழிந்தன. சாராய நெடி கௌர்யாவின் நாசியைத் துளைத்தது. நின்ற நிலையிலேயே உறைந்து நின்றான் அவன்.

இந்திராவின் முன்னால் இரண்டு குடிகாரர்கள் நின்று கொண்டிருந்தனர். ஆடிக்கொண்டு, இளித்துக் கொண்டு. கண்கள் சிவந்திருந்தன. போதை ஏறியிருந்தது. ஆடைகள் அலங்கோலமாயிருந்தன. கால்சட்டைகள் கீழே நழுவிக் கொண்டிருந்தன. அதில் பொத்தான்கள் இல்லை. கீழே உட்கார்ந்து, கூடையில் கையைவிட்டு, கேலியும் ஆபாசமும் கலந்து குளறினர். “என்ன மாமி, ம். . . பேசமாட்டியா?. . . உன். . . உன். . . மாம்பழம். . . எங்கிருந்து. . . சோளியா?. . . நாங்கள் அதைக் கசக்கி பார்க்கலாமா. . . ஹிக். . . ஹி. . . ஹி. . . க்” – அவர்கள் விக்கினர்.

கௌர்யாவுக்கு நடுக்கம் ஏற்பட்டது _ அவர்கள் மோசமான பேச்சும் நடத்தையும். . . இப்போ இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள். . . என்னைத் தாக்குவார்களா? அம்மாவைப் பிடித்துக் கொண்டு. . . கௌர்யா நடுங்கினான். எல்லா சக்திகளையும் இழந்துவிட்டதுபோல் உணர்ந்தான். சீதாமாலையில் நடந்து வரும்போது காலையில் அவனுக்கேற்பட்ட குலை நடுக்கம் போல். . .

திடீரென்று அம்மாவின் குரல் கேட்டது. “ஆமாம் பாபா. . . இந்தப் பழங்கள் எல்லாம் சோளியிலிருந்துதான். உங்க அம்மாவின் சோளி. பார். உன் அம்மாவின் மாம்பழங்கள். நல்லா பார். தொட்டுப் பார். . . ம்”

குடிகாரர்கள் சட்டென்று பின்வாங்கினர். ‘எங்க அம்மாவின் சோளி மாம்பழமா? எங்க அம்மாவையா திட்டுகிறாய்? தட்டுவாணிச் சிறுக்கி. . . அம்மாவின் சோளியா? என்ன தைரியம் உனக்கு? எங்க அம்மா. . . என்ன. . . அம்மா. . . ம்?” புரியாதபடி ஏதோ உளறிக்கொண்டே சிரமப்பட்டு எழுந்து வாலறுபட்ட நாய்கள்போலத் தள்ளாடிச் சென்றனர்.

கௌர்யா திகைத்துப்போய் நின்றான். அம்மாவின் சோளி, சீதாவின் சோளி என்ற சொற்களின் அர்த்தம் ஒரு நொடியில் எப்படி மாறிவிட்டது என்று அதிர்ச்சியாக இருந்தது. அந்தக் குடிகாரர்களைப்போல மோசமாகத் தோன்றிய அந்தச் சொற்கள் இப்போது நூல்போல் நேராக இருந்தன. அன்று முழுவதும் – இல்லை, சென்ற இரண்டு மூன்று நாட்களாக – தன் கழுத்தை வாளாக அறுத்துக் கொண்டிருந்த அந்தச் சொற்களை அம்மா மழுங்க அடித்துவிட்டாள். அதுவும் கோபப்படாமல். . . கத்தாமல். . . டீச்சர் அந்தச் சொற்களைப் பற்றிக் கொண்டு ஒரு ஆட்டமே ஆடியபோது என் ஆயீ. . .

கௌர்யா அம்மாவை பார்த்தபடியே நின்றான். மென்மையானவள், எளிதில் அடிபடுபவள் என்று அவன் நினைத்திருந்த அவன் ஆயீ இப்போது வித்தியாசமாகக் காட்சியளித்தாள். அவளுடைய மென்மையே அவள் கவசம். மாம்பழத்தின் உள்ளே இருக்கும் உறுதியான பலமான விதை மாதிரி. அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தக் கவசம் வளர்ந்து வளர்ந்து, சீதாமாலையைத் தழுவும் வானம் அளவு பெரியதாகியது.


குறிப்பு:

இந்தப் பிரதியும் ஓவியங்களும், புகைப்படங்களும் ஸ்பாரோ அமைப்பின் காப்புரிமைக்கு உட்பட்டவை. இவற்றை யாரும் எந்தத் தளத்திலும் வேறு எந்தப் பதிப்பிலும் உபயோகிக்க அனுமதி இல்லை.

தொடர்புள்ள பதிவு:

ஆங்கில பிரதி உருவாக்கம் : சி. எஸ். லக்ஷ்மி
தமிழ் தொகுப்பு : எம். சிவசுப்ரமணியன்
கோட்டோவியங்கள் : இரீனா ஸாக்கியான்

______________________

Series Navigation<< நாங்களும் படைத்தோம் வரலாறுநடவுகால உரையாடல் – சக்குபாய் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.