“இரு புறமும் சுழலும் கடிகாரம்” பற்றி

This entry is part 20 of 48 in the series நூறு நூல்கள்

மாலதி சிவராமகிருஷ்ணனின் சிறுகதைத் தொகுப்பு

                  வட்டமான முட்கள் வைத்த கடிகாரத்தின் பிம்பம் வெறும் நேரத்தைச் சுட்டுவதாக மட்டுமல்லாமல்,  உலக நகரங்களின் சுட்டியாகவும் இப்போது மாறியிருக்கிறது. ‘இரு புறமும் சுழலும் கடிகாரம்’ என்ற கவித்துவமான தலைப்பைக்கொண்ட இத்தொகுப்பின் கதைகளிலும் நினைவுகள் ஒரு முள்ளாக காலத்திலும், பயணங்கள் ஒரு முள்ளாக அனுபவங்களிலும் சுழல்கின்றன. 17 கதைகள் கொண்ட இத்தொகுப்பின் ஒவ்வொரு கதையும், முத்தாய்ப்பாக கவித்துவமான தலைப்புகள் கொண்டிருக்கின்றன. புதிய யத்தனிப்புகள், பரிசோதனைகள், சிறு வயது நினைவுகள், கச்சிதமான கதாபாத்திர பதிவுகள் என எல்லாவிதமான கதைகளும் ஆசிரியரின் நுண் விவரிப்புகள்கூடிய கதை சொல்லலில் உயிர் பெற்று எழுகின்றன.

சிதை வளர் மாற்றம்” – “அந்த ஒரே இரவில் நாங்கள் அனைவரும் பெரியவர்களானோம். சிதையில் எரிந்தது எங்கள் பாட்டி மட்டுமில்லை, எங்கள் பால்யமும்தான்.” என்று நேரடியாக தலைப்பும் முடிவும் ஒன்றாகும் இக்கதை வாசகனிடம் விட்டுசெல்வது, இந்த எளிய வார்த்தைகளை மீறிய வலிமிகுந்த இழப்புணர்வை. குழந்தைகளின் நினைவுகளில், களிமண்ணில் அச்சுபோல எத்தனை எளிதாக, கவனிப்பதும் கவனிக்காததும் பதிந்துவிடுகின்றன. சமர்த்து குறைந்தாலும் ஹோதா குறையாத தாத்தா, தாத்தா மீது சலிப்பு இருந்தாலும், அன்பு குறையாத பாட்டி, இவர்களுக்கிடையே இனிப்பும் புளிப்புமாக நடந்தேறும் சம்சார நாடகங்கள், இவற்றின் நுட்பம் குறையாத விவரணைகள்.  “தாத்தா எப்பவும் பாட்டியை வைஃப் என்றுதான் குறிப்பிடுவார்”, என்று மனதில் பதிந்த குறிப்பு. “எனக்கும் எங்க பெரியப்பா பொண்ணு சிவகாமுவுக்கும் ஒண்ணாதான் ஜாதகத்தை எடுத்தா. உங்க தாத்தா ஜாதகம், வெங்கடேச அத்திம்பேர் ஜாதகம் ரெண்டும் வந்தது…” என்று தன் பேத்தியின் தலையை வாரியபடியே பாட்டி சொன்னது. பாட்டியின் இழப்பு, இந்நினைவுகளை ஒரே  நொடியில் சூளையிலிட்டு இறுக்கிவிடுகிறது. 

அதுபோலவே, “போர்வை” கதையில், கல்யாண வீட்டிற்கு பட்சணம் செய்ய ஊருக்கு வந்திருக்கும் உறவுக்கார நார்மடி பாட்டியின் சித்திரமும் கண்முன் சதையும் நரம்புமாக அவளை நிறுத்துகிறது. தீடீர் விருந்தாளியாக தன் வீட்டிற்கு வந்திருக்கும் பாட்டியும் அவளுடன் வரும் பதின்பருவ பேத்தியும், சிறுமியின் நினைவுப் பதிவுகளிலிருந்து உயிர்பெற்று வருகிறார்கள். பணக்கார உறவுக்காரரின் வீட்டில் கல்யாண பட்சணம் செய்ய வந்த பாட்டி, வேலை முடிந்து கல்யாணம் வரை ஒன்றிரண்டு நாட்கள் தங்குவதற்காக ஆசிரியரின் வீட்டிற்கு வருகிறார்கள். புதியவர்களைப் பார்த்த ஆச்சர்யத்திலும், ஆர்வத்திலும் மெதுவாக பழகுகிறாள், அம்மா. வந்த பாட்டியோ, யதார்த்தமாக உறவுக்குறிப்புகள் மூலம் கூச்சத்தை சமன்படுத்தி, தான் கொண்டுவந்திருந்த பழைய பையின் அத்தனை சாமான்களும் தெரிய, கீழிருந்து நாலு கொய்யாக்காய்களை எடுத்து, “நன்னாயிருக்கே குழந்தைகள் இருக்கிற வீட்டுக்கு வெறுங்கையோட வரமுடியுமா?” என்று கொடுக்கிறாள். பின், தனக்கு கிடைக்கும் அத்தனை உபசரிப்புகளையும் தயக்கமின்றி ஏற்றுக்கொள்கிறாள். அப்பணக்கார உறவுக்காரரின் வீட்டிற்கு கூலிக்கு பட்சணம் செய்ய வந்திருப்பதை, நாசூக்காக,’கொஞ்சம் பட்சணமெல்லாம் பண்ணனும் ஒத்தாசைக்கு வாயேன்னு” அன்பாக அழைத்ததுபோல சொல்கிறாள். மறைக்கமுடியாத  உணர்ச்சியுடன் அம்மா, அவ்வீட்டு மாமியின் குணங்களை “ப்ளூ ஜாக்கர் தோடும், எட்டுக்கல் வைரபேசரியும், வைர முத்து மூக்குத்தியும் போட்டுண்டு உலகமே லட்சியமில்லைன்னு போவா… யதேச்சையா பாத்துட்டா, அன்னிக்கு அஞ்சு மனசும் குளுந்திருந்தா, தலையை அமத்தலா ஒரு அசைப்பு அசைச்சிட்டு, சிரிச்சாளொ இல்லையோங்கிறாப்ல ஒரு அரைக்கால் இன்சு சிரிப்பு சிரிச்சுட்டு அதுவே உங்களுக்கெல்லாம் ஜாஸ்திங்கறாப்ல விருட் விருட்னு போவா “ என்று விவரமாக சொல்ல, கேட்டுக்கொண்டிருந்த பாட்டி,”ஆமா, அவ கும்மோணத்துகாரிதான், கரெக்டு” என்று சாதரணமாக ஆமோதிக்கிறாள். இந்த கணம், அப்பாட்டியின் கோட்டுச் சித்திரம் முழுமையடைகிறது. இந்த அலைக்கழிக்கும் எண்ணங்களின் சொகுசுக்கு இடமில்லாத அவளது வாழ்க்கை சித்திரம் துல்லியமாகிறது.

இன்னொரு அற்புதமான சித்திரம், “மொழி” கதையில் நாகரத்தினம். அமெரிக்காவில் தன் மகனைப் பார்க்க சென்றிருப்பவர், தன் பேரனுடன் பேச மொழி புரியாத அவஸ்தையில் செய்யும் சுய விசாரணைகள்.  இடைவெளியின் வருத்தத்திலிருந்து, தன்வெளிப்பாட்டின் உண்மையான மொழியை அறிந்துகொள்வதுவரை, அவளது உணர்வுகளின் பதிவாக, எண்ணவோட்டங்களாக ஒரு கதை. 

யாவரும் கேளிர்” – இத்தொகுப்பில், மிக நேர்த்தியாகயும் நேர்மையாகவும் புனையப்பட்ட கதைகளில் ஒன்று. சாதாரணமான வாழ்வில் நிகழக்கூடிய அசாதாரணமான சூழல். நாதன் மாமா என்பவர், அவளின் ஆதர்ஸ நண்பர். தன் ரசனைக்கேற்ற நண்பர்கள் இல்லாத அந்த சிற்றூர் சூழலில், சராசரியான ஒரு குடும்ப அமைப்பில் தன் குடும்பத்தை கவனித்துக்கொள்ளும் அவளுக்கு அவரின் நட்பு ஒரு பெரிய வடிகால். அவர் வரும்போதெல்லாம், இலக்கியமும் ரசனையும் என மனதுவிட்டு பகிர்ந்துகொள்கிறாள். அன்று எப்போதும்போல அவர் வருகிறார், அவளுடன் தீவிர இலக்கியம் பேசுகிறார். அவள் சமையலறையில் குக்கர் வைத்துவிட்டு வருகிறாள். அவர் அமர்ந்திருந்த சோபாவில் இறந்துகிடக்கிறார். இது கதையின் முகப்புதான். இங்கிருந்து ஒவ்வொரு கணமும் தீவிர கவனிப்புகளின் விசையில் நீண்டு செல்கின்றன. உதவிக்கு பக்கத்துவீட்டில் இருக்கும் செந்தில் அம்மாவிடம் சொல்லி செந்தில் அப்பாவை அழைக்கிறாள். அவர் சட்டையை மாட்டிக்கொண்டு இவளைப் பார்க்க வரும்போது, தன்னிச்சையாக தலைமுடியை சரிசெய்துகொள்கிறார். அங்கிருந்து, அவர்கள் டாக்டரை வரவழைத்து , நாதன் மாமா இறந்திருப்பது உறுதி செய்யப்படும் வரையிலான மனவோட்டங்கள், கவனிப்புகள். அதன்பின், அவரைப் பற்றி ஒன்றும் தெரியாதிருப்பதன் பீதி. யதேச்சையாக பழக்கமான நபர், அவரைப் பற்றி ஒன்றும் தெரிந்துகொள்ளாமலே நீண்ட நட்பு.  நம் உலகை பெரிதாக்க, விநோதமான மெய்நிகர் உலகங்களை சிருஷ்டித்துவிடுகிறோம்.

இத்தொகுப்பின் அறிபுனை, கற்பனை புனைவு வகை கதைகளும் மிக சுவாரஸ்யமான முயற்சிகள். பெரும்பாலும் இடமும் காலமும் அடையாளமும் முயங்கி வரும் களங்கள். நியூ யார்க்கிலிருந்து மதுரைவரை விரிந்த திணைகள்.

இடமும் மனிதர்களும் கதைகளும் சேர்ந்து திரளும் உணர்வுகள், அந்த முயக்கத்திலிருந்து தெளிந்து வரும் மானுட உண்மை, குறிப்பாக பெண்களின் அக உலகம் அற்புதமாக வெளிப்பட்டிருக்கும் கதை “எங்கெங்கு காணினும்”.

ஒவ்வொரு கதையும், தன் கதாபாத்திரங்களையும் அக்கதை களத்தின் சப்தங்களையும் நம்முடன் விட்டு செல்கின்றன. கடிகாரங்களின் சுழற்சிக்கு அப்பால், தன் இயல்பில் இயங்குவதுதான் புனைவுலகு. அவ்வுலகிற்கு ஒரு உல்லாச பயணமாக அழைத்துச் செல்கிறது, இத்தொகுப்பு.

இது மாலதி சிவராமகிருஷ்ணனின் முதல் சிறுகதை தொகுப்பு. 

இரு புறமும் சுழலும் கடிகாரம்

தடம் பதிப்பகம்

முதல் பதிப்பு : டிச. 2021

Series Navigation<< தி.ஜானகிராமனின் மோகமுள் வாசிப்பு அனுபவம்புறத்தைச் சொல்லி அகத்தை அடையாளம் காட்டும் எழுத்து >>

One Reply to ““இரு புறமும் சுழலும் கடிகாரம்” பற்றி”

  1. ஆசிரியரின, அற்புதமான விமர்சனம். ஒவ்வொரு கதையும் ஆத்மார்த்தமாக அனுபவித்து கூர்ந்து படித்து , கதாபாத்திரம் , கதைகளம் என அழகாக , வகைபடுத்தியுள்ளார்…… என்னை போன்ற பல வாசகர்களின் எண்ணத்தை பிரதிபலித்ததாக உள்ளது் .
    அனுக்ரகாவின் விமர்சனம் கூட மிகவும் கவித்துவமாக உள்ளது.
    கதை தொகுப்பை படித்த நிறைவு, இந்த விமரசனம் படித்தபோதும் உள்ளது.
    நன்றி .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.