
அவள் புலம்பிக் கொண்டே இருந்தாள். ஒரு மாதத்திற்கு மேலாக சனி ஞாயிறுகளில் எங்கும் ஊர் சுற்ற முடியாமல் போனதை பற்றி சலித்து போய் பேசிக் கொண்டிருந்தாள்.
நான் தலையை ஆட்டி ஆட்டிக் கேட்டுக் கொண்டதோடு சரி. எனக்கு அப்படி ஒன்றும் அதில் சலிப்போ வருத்தமோ இல்லை. நடுத்தர வர்க்கத்தில் இருந்து வந்ததாலோ என்னவோ, பெரும்பாலாக இப்படியான சலிப்புகள் எனக்கு வருவதில்லை. சலித்துக் கொள்ள நிறைய இருக்கும் சூழலில், எதற்கு சலித்துக் கொள்வது என்ற குழப்பத்திலேயே எல்லாம் பழகிவிட்டது.
‘எதுனாலும் எனக்கு ஓகேதான்’ இந்தப் பதில் தான் நிறைய இடங்களில் சொல்ல வேண்டிய கட்டாயம் இருந்திருக்கிறது. போகிற போக்கில் அதுவே பழகிவிட்டது.
கீதா அப்படி இல்லை. அவள் வேலை பார்த்துத்தான் ஆக வேண்டும் என்று அவளுக்கு எந்த கட்டாயமுமில்லை. அவள் சம்பளப் பணத்தின் மேல் அவள் குடும்பத்திற்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. அவளுக்கு பிடித்ததை எல்லாம் வாங்கி வாங்கிக் குவித்துக் கொள்வாள். வாங்கின பொருள் தேவையானதா இல்லையா என்ற கேள்விகளுக்கு அவள் இடம் கொடுத்து நான் பார்த்ததில்லை
‘ பிடித்தது / பிடிக்காதது’ ரகம் அவள்
‘அவசியமா/ அனாவசியமா’ ரகம் நான்.
அவள் தலைப் பக்கத்தில் கிடந்த தலையணையை எடுத்து கால் பக்கமாக எறிந்தாள். படுத்த வாக்கில் பக்கத்தில் கிடந்த இளஞ்சிவப்பு கரடிப் பொம்மையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு சுவரோடு சாய்ந்தபடி கால் நீட்டி என் கட்டிலைப் பார்க்க அமர்ந்து கொண்டாள். நான் எனக்கு வலது பக்கத்தில் கிடந்த துணிக் குவியலில் இருந்து ஒவ்வொன்றாக எடுத்து மடித்து, இடது பக்கத்தில் நைட்டி, உள் பாவாடை,சுடிதார் என்று தனி தனியாக பிரித்து அவற்றை அதனதன் பிரிவில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக் கொண்டிருந்தேன்.
‘சனிக்கிழமை கூட எதாச்சும் வேலையைக் கொடுத்து ஆபீஸ் வர வச்சிட்றான்.’
‘வீணாப் போன மேனஜர். மிச்சம் இருக்கிற ஒரு நாள் தூங்கி ரெஸ்ட் எடுக்க தான் சரியா இருக்குது….செம கடுப்பா இருக்கு.’
‘….’
‘உன்கிட்டதான்டி பேசிட்டு இருக்கேன். நீ உம்பாட்டுக்கு துணிய மடிச்சிட்டு இருக்க.’
‘யோசிச்சிட்டு இருந்தேன்.’
‘என்ன?’
‘எங்க போகலாம்ன்னு.’
‘இனி கிளம்பி எங்க போறது. மணி அஞ்சாகப் போகுது. இனி கிளம்பி போய்ட்டு வரதுக்குள்ள ரொம்ப லேட் ஆயிரும். அதுவும் இந்த சென்னை டிராபிக்கில, இப்ப கிளம்புன விடிஞ்சிரும். இப்ப தாண்டி பையனா பொறந்திருக்கணும் தோணுது. இந்த டைம் லிமிட்டே இருந்திருக்காது.’
‘………..’
‘என்ன பதிலையே காணும்?’
‘ம்ம்…கிளம்புவோம்.’
‘ இப்ப கிளம்பி?’
‘சொல்ல விடுடி முழுசா.’
‘சரி சொல்லு.’
‘கிளம்பி, அப்டீ சும்மா நடந்து போவோம்.’
‘எங்க நடந்து போறது?’
‘சும்மா அப்படி போலாம்டி. இந்த தெரு தாண்டி அப்டீ கங்கையம்மன் கோவில் தாண்டி, கோவில் குளம் தாண்டி….’
‘சரி. அப்புறம் அப்படி நடந்து கோயம்பேடு போயிருவோம். அப்புறம் அப்படியே அங்கிருந்து பஸ் பிடிச்சு ஊருக்கு போயிடலாம். சரியா?’
‘ஓவரா பேசாத!’
‘நீ லூசு மாதிரி பேசுனா நான் வேற எப்படி பேச. நம்ம தினம் நடந்து போற தெருவுல இப்ப திரும்ப நடந்து போய் பார்க்க என்ன இருக்கு அப்படி?’
‘முழுசா தெரியும்னு நினைக்கிற எல்லாத்திலேயும் தெரியாதது எத்தனையோ விட்டுப் போயிருக்கும்.’
‘சரி வரேன். எப்படியும் ரூமுக்குள்ளே இருக்க இருக்க இன்னும் தான் எனக்கும் கடுப்பாகும்.’
‘அப்போ போய் கிளம்பு. இந்த இரண்டு துணிய மடிச்சிட்டு நானும் கிளம்புறேன்.’
விடுதியில் இருந்து நான்கடி நடக்கிற வரை நாங்கள் ஒருவருக்கொருவர் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. அவள் காது மாட்டியில் பாட்டு கேட்டுக் கொண்டே நேரே பார்த்தபடி என் இடது கைபக்கமாக நடந்து வந்து கொண்டிருந்தாள்.
‘இப்ப எதுக்கு ஹெட்செட்டை எடுத்து விட்ட?’ கீதா என் பக்கமாக திரும்பி முறைத்து பார்த்தாள்.
‘இதெல்லாம் உள்ள வை. தெருவுக்கு ரெண்டு பக்கமுமா பார்த்துட்டே வா’
‘ ரொம்பப் பண்ற டி.’
‘சொன்னா கேளு . இரண்டு பக்கமும் பார்த்துட்டே வா. போர் அடிச்சா அப்ப ஹெட்செட் மாட்டிக்கோ’
‘ம்ம்…ஓகே’ காது மாட்டியை சுருட்டி கால்சட்டை பையில் போட்டுக் கொண்டாள். குதிரைவால் போட்டிருந்த முடியை அவிழ்த்து இன்னும் உயரத்தில் ஏற்றி ரப்பரை போட்டாள்.
தெருவின் வலது முக்கில் இருந்த கடையில் தோசைக் கல் பளபளத்துக் கொண்டிருந்தது. கடைக்குள் இருந்து பச்சை பனியனும் லுங்கியுமாக வந்தவர் ஓங்கி அதன் மேல் தண்ணீர் அடித்து ‘ச்சூ’ என்று பாட விட்டார்.
ஆம்லெட்டிற்கும் ஆஃப்பாயிலுக்கும் மசால் தோசைக்கும் ஆர்டர் கொடுத்திருந்தவர்கள் அந்த தோசைக்கல்லைப் பார்த்தபடி சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். ஃபிரைடு ரைஸ் போட்டுக் கொண்டிருந்தவர் பக்கத்திலே நின்று கொண்டிருந்தவர், பிரைடு ரைஸ் போடுபவரிடம் எதோ சொல்லிக் கொண்டிருந்தார். கல்லாவில் இருந்தவரிடம் இருந்து சாப்பாடு பையை வாங்கியபடி தலையை ஆட்டிக் கொண்டு சிரித்தவரின் ஈறு தெரியும் சிரிப்பு எனக்கு பிடித்திருந்தது.
எதிரில் இருந்த தள்ளு வண்டிக் கடையில் குவளையில் வைத்திருந்த காளானில் சோளச் செதில்களைப் பொடித்துத் தூவி ஒரு கை எதிர் நின்ற இன்னொரு கையிடம் நீட்டியது. குவளை வாங்கிய கையில் முதலாவதாக ஓடி வந்த சிவப்பு வளையலின் மேல் பின்னால் ஓடி வந்த வளையல் மோதி இரண்டும் சேர்ந்து முன்னும் பின்னும் ஆடியது. பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது அப்பா வாங்கிக் கொண்டு வந்து என் படிப்பு மேஜையில் வைத்த சிகப்பு தாவணி போட்ட தஞ்சாவூர் பொம்மை ஞாபகம் வந்தது.
தள்ளு வண்டிக் கடைக்கு வலது பக்கம் இருந்த பலகாரக் கடையில், பெரிய சட்டியில் இருந்த உருளை கிழங்குச் சீவல்களை கண் கரண்டியில் அள்ளி எண்ணெயை வடிய விட்டு கொண்டிருந்தார் மஞ்சள் பனியனில் மாநிறத்தில் இருந்தவர். அந்தக் கடையில் மற்றப் பலகாரங்களை விட இப்படி சாயுங்காலம் நேரம் சுடச் சுட போட்டுக் கொடுக்கிற இந்த உருளை கிழங்குச் சீவலுக்கு என்று ஒரு தனிக் கூட்டம் வரும். தினசரி நாளிதழில் பொதிருந்த சீவல்களை அப்பாவின் கைகளிலிருந்து துள்ளி வாங்கி கொண்ட குழந்தை, இடது கையில் சீவல் பொதியை தடுமாறித் தடுமாறி பிடித்துக் கொண்டு, வலது கையில் அப்பாவின் மணிக்கட்டை பிடித்துக் கொண்டது.
பலகாரக் கடைக்கு எதிரிலிருந்த கைபேசிக் கடைக்குள், ஒரு அகலமான கைபேசியை குனிந்து திருப்பித் திருப்பிப் பார்த்தபடி நின்றிருந்த பெண்ணிற்கு அருகில் நின்ற வாலிபப் பையன் கடைக்காரரிடம் தலையை ஆட்டி ஆட்டி எதோ பேசிக் கொண்டிருந்தான். அந்த பெண் சுருட்டை முடியை காதுக்கு பின்னால் ஒதுக்கி விடும் பொழுது அவள் காதில் போட்டிருந்த கிளிக் கூண்டு ஜிமிக்கி லேசாக ஆடியது.
கீதா தீடிரென்று என் மணிக்கட்டை பிடித்து நிறுத்தி விட்டு கண்களை மூடி அப்படியே நின்று விட்டாள்.
தண்ணீருக்கு தோசைக்கல் பாடிய ராகமோ, சோள செதில்கள் காளானில் மோதிய சத்தமோ, உருளை கிழங்கு சீவல்களின் மேல் மிளகாய்தூள் உரசும் சத்தமோ, எது அவளுக்குள் ஆழமாக சென்றது என்று தெரியவில்லை. அவள் உதடுகள் புன்னகையில் லேசாக வளைந்தது.
‘என்னடியாச்சு’ அவள் காது பக்கத்தில் குனிந்து கேட்டேன்.
‘ஒரு மாதிரி வித்தியாசமா, நல்லாருக்கு.’
‘அது சரி.’
அவள் பதிலுக்கு என்னைப் பார்த்து சிரித்தாள்.
‘சூப்பர் மார்க்கெட்டுக்கு போவோமா?’
‘எதுவும் வாங்கணுமா என்ன?’ கீதா என் கையில் பர்ஸ் இருக்கிறதா என்று பார்த்தாள்.
‘அதுலாம் இல்ல. சும்மா சுத்தி பாக்க.’
‘சூப்பர் மார்கெட்டுல சுத்திப் பாக்க என்ன இருக்கு’ அவள் ஒரு மாதிரியாக என்னை பார்த்தாள்.
நான் பதில் சொல்லாமல் கண்ணாடிக் கதவைத் தள்ளினேன்.
கண்ணாடிக்குள் அடுக்கியிருந்த கலர் கலர் பேப்பரில் பொதிந்திருந்த சாக்லேட்டுகளை பார்த்தபடி நின்றிருந்தோம்.
‘ரெண்டு எடுத்துக்கலாம்.’
‘பர்ஸ்?’
‘அதுலாம் இருக்கு,’ கால் சட்டை பையில் உள்ளங்கையால் அடித்து காட்டினாள்.
‘சரி இருந்திட்டுப் போட்டும். ஆனா இன்னிக்கு ஒன்னும் வாங்க வேண்டாம்.’
‘ஏன் அப்படி’
‘அப்படிதான். சும்மா சுத்திப் பார்க்க தான் வந்திருக்கோம்.’
‘உனக்கு பைத்தியம் முத்திட்டு.’
‘கொஞ்ச நேரம் முன்னாடி வித்தியாசமா நல்லா இருக்குன்னு யாரோ சொன்னாங்க,’ நான் கண்களை எல்லா திசைகளிலும் சுழல விட்டேன்.
‘சரி சரி கலாய்க்காத’ அவள் என்னை இழுத்து அவள் தோளோடு சேர்த்துக் கொண்டாள்.
முதல் வரிசையின் கடைசியில் நின்றிருந்த கடையில் வேலை பார்க்கும் இரண்டு அக்காக்கள் அவர்களுக்குள் பேசி கொண்டிருந்தார்கள். கருநீல புடவையில் நின்றிருந்தவள் சிரிக்கும் பொழுது அவள் சிங்கப் பல் அழகாக அவள் கீழ் உதட்டில் ஒரு குழி போட்டது. அந்த வரிசையிலிருந்து அடுத்த வரிசைக்குத் திரும்புகிற இடத்தில் வைத்திருந்த வெள்ளை பூண்டு ஊறுகாயில் ஒரு வெள்ளை பூண்டு பரல் கதவுத் தட்டியை தாண்டி எட்டி பார்க்கும் குழந்தை போல பாட்டிலில் ஒட்டியிருந்த பெயர் தாளுக்கு மேலாக எட்டி பார்த்தது.
அம்மாவோடு சேர்ந்து வந்திருந்த குழந்தை ஒன்று அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தது. ‘சிவ்வா’ ஓடாத என்று சொல்லியபடியே உளுந்து கவரை கையில் வைத்து முன்னும் பின்னும் திருப்பி பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த அம்மா. குழந்தை ஓடும் வேகத்தில் அதன் உடையின் கையில் இருந்த சிறகு வடிவமைப்பு அந்த ஓட்டத்தை ஒரு பறவை அங்குமிங்கும் பறப்பது போல் காட்டியது. நான் குனிந்து குழந்தையின் கன்னத்தில் செல்லமாகத் தட்டினேன்.
அப்பாவின் கையை விட்டுக் கொண்டு ஓடிய வேறொரு குழந்தை கல்லா பெட்டிக்கு பக்கத்தில் இருந்த நுரை குமிழி நிரப்பியிருந்த பச்சை நிற டப்பாவை இழுத்து எடுக்க முயற்சித்து உயரம் எட்டாமல் அழ தொடங்கியது. அதன் இடது கையிலிருந்த லாலிபாப் பொதிந்திருந்த மஞ்சள் தாளில் போட்டிருந்த குட்டி கலர் வட்டங்கள் அழகாக இருந்தது.
வெளியில் வர கண்ணாடி கதவை உள் பக்கமாக இழுத்தபொழுது மழைக்கு ஒதுங்கிய வாசலின் இரண்டு பக்கமும் ஆட்கள் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார்கள்.
வலது பக்கம் பத்துப் பதினைந்து ஆட்களுமாக, இடது பக்கத்தில் நான்கைந்து ஆட்களோடு ஒரு சாம்பல் நிற பசுவும், ஒரு கருப்பு வெள்ளை நிற நாயும் நின்றது. பசுவின் சாம்பல் நிற தோல் சில இடங்களில் துடித்து துடித்து அதன் மேல் அமர்ந்திருந்த ‘ஈ’யை விரட்டுவதை பார்த்தபடி எந்த பக்கமாக இறங்கி ஒதுங்கிக் கொள்வது என்று யோசித்து கொண்டு நின்றோம்.
‘இப்படி வந்து நில்லுங்க மா’ இடது பக்கத்தில் நின்றிருந்த ஒரு பாட்டி அருகில் நின்ற ஒரு நடுத்தர வயதுப் பெண்ணோடு கொஞ்சம் நெருங்கி கொண்டு நாங்கள் இறங்கி நின்றுகொள்ள ஒரு இடைவெளி விட்டாள்.
நான் கீதாவைத் திரும்பிப் பார்த்தேன்.
‘வாங்கம்மா வந்து நில்லுங்க. மனுசன் நாய் மாடுன்னு எல்லாரோடையும் சேர்ந்து நிக்கத் தான இந்த பொறப்பு’ பாட்டி என்னை பார்த்து சொன்னாள்.
இரவின் மணமும் மழையின் மணமும் உரசிக் கொண்டு நாசியில் ஏறும்பொழுது இதமாக இருந்தது.
***
Wow nice story…i like this story…🙂