அனாயாசம்

நெல்லி மரத்தடியில் நாற்காலியில் அமர்ந்திருந்தார் சித்தப்பா.

நான் தகவல் சொல்ல அவர் முன்னால் சென்றேன். பட்டையான பச்சைக்கரை, வேட்டியில் எடுப்பாகத் தெரிந்தது. தோள் துண்டில் அதே வண்ணக்கரை மெலிதாக இருந்தது. கண்ணாடிக்குள் இருந்த கண்களை அவ்வளவு தெளிவாகக் காண முடியவில்லை. அவருடைய கண்ணாடிகளும் அவருடைய கண்கள் தான் என அவருடன் இருப்பவர்கள் எண்ணி விடுவார்கள். ஐந்து மணிக்கு எழுந்திருப்பவர் நாற்பத்து ஐந்து நிமிடத்தில் குளித்துப் பூசனையை முடித்து விட்டு நாற்காலியில் வந்து அமர்ந்து விடுகிறார். எப்போதுமே வீட்டுக் கொல்லையில் இருக்கும் நெல்லி மரத்தடியில் தான் இருப்பு. காலை விடிவதிலிருந்து மாலை அஸ்தமனம் வரை. எங்கள் வீடு பெரியது – எங்கள் குடும்பத்தைப் போலவே. வீட்டின் நிலை வாசல் கீழத் தெருவில். கொல்லை வாசல் மேலத்தெருவில். கொல்லை வாசலை ஒட்டி பெரிதாக நான்கு வைக்கோல் போர்கள். அதன் பின்னர் மாட்டுத் தொழுவம். குறைந்தபட்சம் பதினைந்து மாடுகள் எப்போதும் இருக்கும். அதிகபட்சம் இருபத்து ஐந்து. பதினைந்துக்கு எப்போதும் குறைந்ததில்லை. தொழுவத்துக்கு எதிரில் நெல்லி மரம். சித்தப்பாவே சிறு செடியாக நட்டு வளர்த்தது. அதன் அடியில் அமர்ந்து மாடுகளைப் பார்த்துக் கொண்டிருப்பார். ஊர்க்காரர்கள் மேலத்தெரு வழியாக வருவார்கள். மரத்தடியில் அமர்ந்து சித்தப்பாவுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். உணவு உண்ண வீட்டுக்குள் வருவார். உண்ணும் நேரம் உறங்கும் நேரம் தவிர மற்ற பொழுதெல்லாம் மரத்தடி தான். மழை பெய்யும் போது தொழுவத்தில் நாற்காலியைப் போட்டுக் கொண்டு மழையையும் மரத்தையும் பார்த்துக் கொண்டிருப்பார்.

‘’சித்தப்பா ! வயல்ல இன்னைக்கு நடவு. நாப்பது ஆள் சொல்லியிருக்கு. முப்பது பேராவது வந்திடுவாங்க. நான் வயலுக்குப் போய்ட்டு வந்திடறன்.’’

‘’சாப்பிட்டயா?’’

‘’வேலையை ஆரம்பிச்சு வச்சுட்டு வந்திடறன்.’’

‘’காலைல வயத்த காயப் போடாத. கொஞ்சமா பழையதாச்சும் சாப்டிட்டு வயலுக்குப் போ’’

அவருடைய சொற்கள் உத்தரவுகள். மீற முடியாதவை. எனக்கு எங்கள் குடும்பத்துக்கு மட்டும் இல்லை. எங்கள் ஊரில் எல்லாருக்குமே அப்படித்தான்.

***

சின்ன குழந்தையாக இருக்கும் போது ஊஞ்சலில் அம்மா மடியில் படுத்துக் கொண்டு அம்மாவிடம் கேள்வியாகக் கேட்பேன். அம்மா ஒரே கேள்வியை பல நாட்களில் பல தடவை கேட்டாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முறை பதில் சொல்வாள்.

’’அம்மா! சித்தப்பா ஏன் எப்போதும் நெல்லி மரத்தடியில ஒக்காந்திருக்கார்’’

‘’சாமானிய மனுஷா நாலு சுவருக்குள்ள இருக்கும் போது நிம்மதியா பயமில்லாம இருக்காங்க. ஆயிரத்துல ஒருத்தர் லட்சத்துல ஒருத்தர் வெட்டவெளியில வானத்துக்குக் கீழ இருக்கோங்கறதலயே நிம்மதியா இருக்காங்க. உங்க சித்தப்பா வசிப்பிடமா மரத்து நிழலே போதும்னு முடிவு பண்ணிட்டார்’’

நான் பள்ளிக்குச் செல்லும் சிறுவனாக இருக்கும் போது சித்தப்பாவிடம் கேட்டேன்.

‘’சித்தப்பா! நீங்க ஏன் ராத்திரில மரத்துக்குக் கீழ படுத்துக்கறதில்லை?’’

என்னைப் பக்கத்தில் அழைத்து அணைத்துக் கொண்டு முதுகில் ரெண்டு சாத்து சாத்தினார். அவர் அப்படி சாத்தினால் சத்தம் மட்டும்தான் பெரிதாக இருக்கும். வலியே இருக்காது.

‘’பள்ளிக்கூடத்துல என்னடா சயின்ஸ் படிக்கற நீ. ராத்திரி மரத்துக்குக் கீழத் தங்கக் கூடாதுடா. ராத்திரி மரம்லாம் சுவாசிக்கும். மனுஷாளப் போலவே ஆக்சிஜனை எடுத்துக்கிட்டு கார்பன் டை ஆக்சைடை வெளியே விடும்னு உனக்குத் தெரியாதா’’

சின்னக் குழந்தைகளிடம் சிறுவர்களிடம் பெரியவர்களிடம் வேலையாட்களிடம் என எல்லோரிடமும் சுவாரசியமாக பேசிக் கொண்டிருப்பார். பெரும்பாலான நேரம் மௌனம். அவர் மௌனமாக இருந்தாரா அல்லது நெல்லி மரத்துடன் பேசிக் கொண்டிருந்தாரா என்பது அவருக்கும் நெல்லி மரத்துக்கும் தான் தெரியும். சித்தப்பாவுக்கு நெல்லி மரம் அதில் வந்தமரும் காகங்கள், மைனாக்கள், கிளிகள், தொழுவத்துப் பசுக்கள் என அனைத்துப் பிராணிகளுடனும் இணக்கம் இருந்தது. உணர்வுபூர்வமான பிணைப்பு இருந்தது. செடி வளர்ப்பார். மரக்கன்றுகள் பதியம் போடுவார். அவரே செய்வதும் உண்டு. ஆட்களை வைத்து செய்வதும் உண்டு. வயலுக்குப் போவார். அப்பாவும் பெரியப்பாவும் வயலுக்குப் போனாலும் இவரும் போய் பார்த்து விட்டு வருவார்.

மங்கள நிகழ்ச்சிகள் குறித்து சொல்வதற்கு சித்தப்பாவிடம் வருவார்கள்.

‘’வீட்டுல விசேஷமா? கல்யாணமா? பொண்ணு என்ன நட்சத்திரம்? பையன்?’’

அவர்கள் நட்சத்திரங்களைச் சொல்வார்கள்.

தான் வளர்க்கும் மரக்கன்றுகளிலிருந்து அந்த நட்சத்திரங்களுக்கு உரிய கன்றுகளை எடுத்துத் தருவார்.

‘’வீட்டுத் தோட்டத்துல வச்சு வளருங்க. இந்த மரங்கள் செழிப்பா வளர்ர மாதிரி மாப்பிள்ளை பொண்ணோட வாழ்க்கையும் செழிப்பா இருக்கும்’’

எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் சித்தப்பா கொடுத்த கன்றுகள் வளர்ந்து மரங்களாக உள்ளன.

தேசாந்திரம் போகும் சாமியார் ஒருவர் வட நாட்டிலிருந்து எங்கள் ஊருக்கு வந்திருந்தார். இடுப்பில் ஒரு காவி வேட்டி. தோளில் ஒரு காவித் துண்டு. கையில் வேறு ஏதும் இல்லை. எங்கள் வீட்டுத் திண்ணையில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தார். ஹிந்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, ஒரியா, இங்கிலீஷ், தமிழ் என ஏழு பாஷை தெரிந்தவர் என அப்பா அவரைப் பற்றி சொன்னார். தேசாந்திரம் போகும் போது எந்த ஊரிலும் மூன்று நாட்களுக்கு மேல் தங்க மாட்டார் என்றும் நடந்தே தேசாந்திரம் போவார் என்றும் அப்பா மேலும் அவரைப் பற்றி சொன்னார்.

அவர் புறப்படும் சமயம், ஊர் மக்கள் பல பேர் வந்து அவர் காலில் விழுந்து வணங்கினார்கள். எங்கள் வீட்டிலும் எல்லாரும் அவர் அடி பணிந்தோம். சித்தப்பா அவர் காலில் விழுந்த போது எங்கள் பாட்டி விசும்பினாள். ‘’ஒண்டிக் கட்டையா இருக்கான் சாமி’’.

சாமியார் சில கணங்கள் மௌனமாக இருந்தார்.

‘’உனக்கு அனாயாச மரணம் சம்பவிக்கும். நீ சாவை ஜெயிப்ப’’ என்றார்.

எங்கள் வீட்டுப் பெண்கள் எல்லாரும் கண்ணீர் சிந்தினர். சாமியார் சர சர என நடந்து சென்று விட்டார்.

மூன்று நாட்கள் கழித்து நான் அம்மாவிடம் கேட்டேன். ‘’அனாயாச மரணம்னா என்னம்மா?’’

அம்மா மௌனமாக யோசித்தாள். ஒரு பெருமூச்சுக்குப் பின் பேச ஆரம்பித்தாள். ‘’மனுஷாள் எல்லாருமே சாவைக் கண்டு பயப்படறா. ஏன்னா சொந்த பந்தங்களோட இருக்கறதயும் லௌகிக சந்தோஷங்கள்ல மூழ்கியிருக்கறதலயும் மட்டுமே வாழ்க்கைன்னு நம்பறா. அப்படிப் பட்டவாளுக்கு சாவுன்னு சொன்னா பயம் வந்துடுது. சாவுக்கு அப்பறம் நாம என்ன ஆவோம்னு தெரியலயேங்கற பயம். அடுத்த ஜென்மம் பத்தி பயம். ஆனா சில பேருக்கு வாழ்க்கைன்னா என்னங்கறதும் சாவுன்னா என்னங்கறதும் நல்லா புரிஞ்சிடுது. அவங்களுக்கு மரணத்தைப் பாத்து பயம் இல்ல. அவங்க வாழ்க்கைல எப்போதும் சந்தோஷம் இருக்கு. சாவையும் சந்தோஷமா அணுகறாங்க. நினைக்கறாங்க. அவங்க துளி கூட மனசுல சஞ்சலமோ பயமோ இல்லாம சந்தோஷமா அனாயாசமா மரணத்தை வரவேற்பாங்க. மத்தவங்களுக்காக வாழற மாவீரர்களுக்கும் மகா யோகிகளுக்கும் அனாயாச மரணம் நிகழும்’’

***

வேளாண்மைத் துறையில் வேலை பார்த்து ரிடையர்டு ஆகி இருபது ஆண்டுகள் ஆகி விட்டது. வேலைக்குச் சேர்ந்ததற்கு முக்கியக் காரணம் சித்தப்பா. ஆனால் அவர் நான் அரசாங்க உத்யோகத்துக்கு செல்வதை விரும்பவில்லை.

ஒரு நாள் காலை ஏழு மணிக்கு அவர் முன் சென்றேன். நெல்லி மரத்தடிக்குத்தான்.

‘’சித்தப்பா! இன்னைக்கு காலைல பத்து மணிக்கு ஆடுதுறைல அக்ரிகல்சர் டிபார்ட்மெண்ட்ல ஆஃபிசர் வேலைக்கு ஒரு இண்டர்வியூ இருக்கு. நான் அட்டண்ட் பண்றன்’’

‘’நாலு வேலி நிலம் இருக்கு. உனக்கு எதுக்குடா சர்க்கார் வேலை?’’

‘’அக்ரிகல்சர் டிபார்ட்மெண்ட் தானே சித்தப்பா. தினமும் புதுப் புது ஊர்ல நிறைய விவசாயிகளைப் பார்க்கலாம். உத்யோகம் மூலமா அவங்களுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணலாம்’’

‘’இப்ப அந்த நோக்கத்துக்காகத்தான் வேலைக்குப் போகப் போறீயா?’’

நான் அமைதியாக இருந்தேன். வீட்டுக்குள் சென்று டிஃபன் சாப்பிட்டு விட்டு ஒரு சின்ன ஹேண்ட் பேக்குடன் ஆடுதுறை கிளம்பினேன். எந்த காரணத்துக்காக வெளியூர் சென்றாலும் சித்தப்பாவிடம் வீட்டின் குழந்தைகள் சிறியவர்கள் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். அது எங்கள் வீட்டு வழிமுறை. அதனை அந்த முறையும் பின்பற்றினேன்.

சித்தப்பா என்னிடம் இரண்டு மாம்பழங்களைக் கொடுத்தார்.

‘’இது ஒட்டு மாம்பழம். இலுப்பைல மாங்கன்னை ஒட்டு போட்ட மரம். வேர் அடிப்பகுதி இலுப்பை. மரத்தோட மேல்பகுதி மா. இந்த கன்னு இலுப்பை மாதிரி சர சர ன்னு வளரும். ஆனா இனிப்பான மாம்பழமா காய்க்கும்’’

ஆடுதுறையில் நூற்று ஐம்பது பேர் எழுத்துத் தேர்வு எழுதினோம். அந்த தேர்வு காலையில் நடந்தது. மதியம் இரண்டு மணிக்கு அந்த தேர்வின் முடிவுகளை அறிவித்தார்கள். நூற்று ஐம்பது பேர் தேர்வு எழுதியதில் பத்து பேர் தேர்வாகி அவர்களுக்கு மட்டும் மதியம் மூன்று மணிக்கு இண்டர்வியூ. அதிலிருந்து இரண்டு பேர் தேர்வாக வேண்டும்.

ஒன்பது பேருக்கு இண்டர்வியூ முடிந்து பத்தாவதாக நான் உள்ளே சென்றேன். என் ஹேண்ட் பேக் என் கையில் இருந்தது.

என்னிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி ‘’ ‘ஒட்டுப் போடுதல்’ என்றால் என்ன?’’ என்ற கேள்வி. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. சித்தப்பா இந்த விஷயத்தில் கில்லாடி. அதனால் எனக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருந்தது. தெரிந்த எல்லாவற்றையும் சொன்னேன். அன்று காலை சித்தப்பா சொன்ன ஒட்டு மாங்கன்று விஷயத்தையும் சொன்னேன்.

இண்டர்வியூ குழுவுக்கு பேராச்சர்யம். ‘’இலுப்பைக் கன்னையும் மாங்கன்னையும் ஒட்டுப் போட முடியுமா? ஆச்சர்யமா இருக்கே’’ என்றனர்.

நான் சித்தப்பா என்னிடம் கொடுத்த இரண்டு மாம்பழங்களையும் ஹேண்ட் பேக்கிலிருந்து எடுத்து மேஜை மேல் வைத்தேன். அவர்கள் அதனை எடுத்து முகர்ந்து பார்த்தனர். மணியடித்து ஓ.ஏ வை வரவழைத்தனர். அவரிடம் அந்த பழங்களை வெட்டி துண்டுகளாக கொண்டு வரச் சொன்னார்கள். சில நிமிடங்களில் பழத் துண்டுகள் வந்தன. அந்த இடைவெளியில் நான் சித்தப்பா பற்றி சொன்னேன்.

மாலை ஐந்து மணிக்கு இண்டர்வியூ முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

எனக்கு சர்க்கார் வேலை கிடைத்தது.

***

சித்தப்பா தான் அமர்ந்திருக்கும் நெல்லி மரத்தின் வளர்ச்சி குறைந்த கிளைகளை அவ்வப்போது வெட்டி எடுத்து தொழுவத்தின் ஒரு ஓரத்தில் அடுக்கி வைத்திருப்பார். அதில் அவர் வளர்த்த சந்தன மரத்தின் சில பட்டைகளும் கட்டைகளும் கூட இருந்தன.

வீட்டில் நிறைய மங்கள நிகழ்ச்சிகள் நடந்தன. சாவுகளும் நடந்தன. பாட்டி, பெரியப்பா, அத்தை என.

ஒருநாள் என்னை அழைத்தார் சித்தப்பா.

‘’நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ. தொழுவத்து ஓரமா இருக்கற கட்டைகள் தான் என்னோட சிதை. என் மூச்சு நின்னு மூணு மணி நேரத்துக்குள்ள என்னை ஆத்தங்கரைல தகனம் பண்ணிடனும். ‘’

’’நீங்க நூறு வயசு வரைக்கும் இருப்பீங்க சித்தப்பா’’

***

தொழுவத்து மாடுகளும் நெல்லி மரத்தின் பட்சிகளும் பல தலைமுறைகள் தாண்டி விட்டன. எங்கள் வீட்டிலியே அடுத்தடுத்த தலைமுறைகள் வந்தாகி விட்டது. சித்தப்பா நெல்லி மரம் நாற்காலி தொழுவம் வயல் என்றே இருந்தார்.

***

அன்று ஞாயிற்றுக் கிழமை. அடுத்த நாள் கவர்மெண்ட் ஹாலிடே. அதனால் நடவை நான் பார்த்துக் கொண்டேன். வீட்டுக்கும் வயலுக்கும் பத்து நிமிட நடைப் பயண தூரம் தான். சைக்கிளில் வந்தால் நான்கு நிமிடம்.

நான் பழையது சாப்பிட்டு விட்டு சித்தப்பாவிடம் சொல்லி விட்டு கிளம்பினேன்.

‘’போய்ட்டு வா’’ என்றார்.

நான் ஒரு சைக்கிளில் வயலுக்கு வந்தேன். ஆட்கள் நடவைத் துவங்கியிருந்தார்கள்.

ஐந்து நிமிடத்தில் வீட்டிலிருந்து சைக்கிளில் ஒரு பண்ணையாள் கொண்டு வந்த செய்தி வந்தது.

சித்தப்பாவின் மூச்சு நெல்லி மரத்தடியில் நாற்காலியில் அமர்ந்திருக்கும் போதே நின்றிருக்கிறது.

***

அவர் சொன்ன விதமாகவே எல்லாவற்றையும் செய்தேன். நெல்லி மரக் கட்டைகள். சில சந்தனக் கட்டைகள். மூன்று மணி நேரம் . அனைத்தையும்.

***

எத்தனையோ வருஷம் ஆகி விட்டது. இப்போதும் அந்த நாற்காலி நெல்லி மரத்தடியில் அப்படியே இருக்கிறது.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.