பிரபஞ்சமே சோதனைக்கூடமாய்: சாந்தூ குர்னானி

அமெரிக்காவிலுள்ள இல்லினாய் பல்கலைக் கழகத்தில், தன் அலுவலக அறையில் சாந்தூ குர்னானி, 1958
©
Sound & Picture Archives for Research on Women

முன்னுரை

1997 ஆம் வருடம் அக்டோபர் 12 அன்று நடக்கவிருந்த வரலாற்றுப் பயிலரங்கை வித்தியாசமான ஒன்றாக  நடத்த ஸ்பாரோ திட்டமிட்டிருந்தது. அறிவியல் ஆராய்ச்சிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்திருந்த பெண் விஞ்ஞானிகள் சிலரை அழைத்து அவர்களது வாழ்க்கையைப் பற்றியும் பணிகளைப் பற்றியும் பேசவைக்கவேண்டும் என்று விரும்பினோம். பெண் விஞ்ஞானிகள் பலர் இருந்த போதிலும் அவர்களில் சிலர் வெளி ஊர்களுக்கோ வெளி நாட்டிற்கோ, சென்றிருந்தனர்; சிலர் உடல்நலம் குன்றியிருந்தனர்.

முடிவில் ஷாந்தா காந்தி, சாந்தூ குர்னானி, சுதா பாத்யே, விஜயா ஆல்டேகர் ஆகிய நால்வரும் முன்வந்தனர். ஷாந்தா காந்திக்கு ஐந்து வயதிலேயே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது; பதினொரு வயதில் அவரது படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க பட்டது. ஆனால் பின்னர் அவர் தனக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு, மருத்துவக் கல்வியை மேற்கொண்டார். அவரைப் பொறுத்தவரை அறிவியல் எப்போதுமே வாழ்வை அகழ்ந்து அறிந்து கொள்ளும் வழியாக இருந்திருக்கிறது. அவரது இந்த அறிவியல் தேடல் பின்னாளில் கலைகளின் வழியாகத் தொடர்ந்தது. சாந்தூ குர்னானியின் வாழ்க்கை புயலும் சூறாவளியும் நிறைந்தது. புத்தகங்களை இரவல் வாங்கித் தெரு விளக்கின் கீழே படித்து, வருமானத்திற்காகத் துணிகளைத் தைத்துக் கொடுத்து உயிர் வேதியியல் கல்வியைத் தொடர்ந்தார் அவர். அந்தத் துறையில் உயர்நிலை ஆராய்ச்சிகள் செய்து உன்னத இடத்தை அடைந்தார். சுதா பாத்யேயும் தன் அன்றாட வாழ்க்கை அறிவியல் ஆராய்ச்சிக்குத் தடையாக இருக்க அனுமதிக்கவில்லை. ஆறே மாதமான கைக்குழந்தையுடன் இயற்பியலில் முனைவர் பட்டத்திற்குப் பதிவு செய்தார். விஜயா ஆல்டேகர் ஆறு குழந்தைகள் உள்ள குடும்பத்தில் மூன்றாமவர். இலட்சியவாதியான அவரது தந்தை இளம்வயதிலேயே இறந்துபோக குடும்பம் சில காலம் தத்தளித்தது. ஆனால் விஜயா மனம் தளராது தன் படிப்பைத் தொடர்ந்து உயிர்வேதியல் துறையில் சாதனைகள் படைத்தார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தொடர்ந்து எழுதியும் முனைவர் பட்டத்திற்காகச் சமர்ப்பிக்கப்படும் ஆய்வுகளை மதிப்பீடு செய்தும் வருகிறார். ஷாந்தா காந்தி, சாந்தூ குர்னானி மற்றும் சுதா பாத்யே இவர்கள் மூவரும் இந்தியப் பெண் விஞ்ஞானிகள் சங்கத்தை நிறுவிய முன்னோடிகள்.

மகளிர் ஆய்வு அறிஞரான மைத்ரேயி கிருஷ்ண ராஜ், ஸ்பாரோ பயிலரங்கில் இவர்களுடன் உரையாடினார். இந்த உரையாடலின் வழியே அவர்களின் வாழ்க்கை நினைவுகள், ஆராய்ச்சி அனுபவங்கள் மற்றும் அவர்களோடு பணியாற்றிய பிற விஞ்ஞானிகள் பற்றி நாங்கள் பலவற்றை அறிய முடிந்தது. பி. வி. பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் மும்பை பல்கலைக்கழக சமூகவியல் துறையைச் சார்ந்த மாணவியர் மற்றும் மாணவர் இந்த பயிலரங்கில் கலந்து கொ டனர்.

தனது வாழ்க்கை பற்றிய சாந்தூ குர்னானியின் பேச்சு எல்லோரின் கவனத்தையும் கவர்ந்திழுத்தது. அவரது கனிவும், நேர்மையும், வாழ்க்கையை அவர் பார்க்கும் விதமும் அதை எங்களுடன் பகிர்ந்து கொண்ட முறையும் எங்கள் மனத்தில்  நீங்காது இடம்பெற்றுவிட்டன. எனவே, சாந்தூ குர்னானியின் வாழ்க்கை நினைவுகளையே புத்தகமாக வெளியிடலாம் என்ற முடிவுக்கு வந்தோம்.

பயிலரங்கில் அவரது பேச்சையும் பின்னர் அங்கு நடந்த உரையாடலையும் அடிப்படையாகக் கொண்டு இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. சாந்தூ குர்னானியின் மொழியில், அவர் சொல்வது போலவே இதை அறிந்தால்தான் அவர் தன் வாழ்க்கையைப் பற்றிக் கூறிய முறைகளின் இதத்தையும், நெருக்கத்தையும் வெளிக்கொண்டுவர முடியும் என்று எண்ணினோம். அவர் பேச்சை அப்படியே வெளியிடவில்லை. திரும்பத் திரும்பக் கூறப்பட்ட சிலவும், மையமான பேச்சிலிருந்து விலகிய சிலவும்  நீக்கப்பட்டு வாசிக்க எளிமையாக இந்த புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.

வாசகர்கள் சாந்தூ குர்னானியின் வாழ்க்கையை சரியான பின்னணியில் வைத்துப் புரிந்து கொள்ள ஏதுவாக பாரதி பட் எழுதி 1992ல் வெளியான The Torch Bearer Women Scientists  என்ற கட்டுரையிலிருந்து சில பகுதிகள் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன.

ஏப்ரல் 1998                                                                                                             சி. எஸ். லக்ஷ்மி


சாந்தூ குர்னானியின் பெற்றோர் – உதாரம், பரமேஸ்வரி குர்னானி, பம்பாய் 1950களில்
©
Sound & Picture Archives for Research on Women

பிரபஞ்சமே சோதனைக் கூடமாய்: சாந்தூ குர்னானி

என்னுடைய குடும்பத்தில் நான் மூன்றாவது குழந்தை. எனக்கு முன் ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்து விட்டது; அதற்கும் முன் பிறந்ததை என்னுடைய பெரியப்பா தத்து எடுத்துக்கொண்டார். எனவே நான் குடும்பத் தின் மூத்த செல்லக்குழந்தையானேன். என்னுடைய அம்மா பதினான்கு குழந்தைகளைப் பெற்றார்; அவர்களில் ஐந்து ஆண்களும், ஐந்து பெண்களும் உயிர் பிழைத்தார்கள். ஒரு பெரிய கப்பல் எங்களைக் கராச்சியி லிருந்து பம்பாய் துறைமுகத்தில் கொண்டு வந்து போட்டபோது அம்மா கடைசிக் குழந்தையை பிரசவித்து ஆறு நாட்களே ஆகியிருந்தன.

அப்பா இரண்டாம் வகுப்பு வரைக்கும்தான் படித்தவர். போட்டித் தேர்வு ஒன்றில் தேறி ரயில்வேயில் ஒரு வேலை அவருக்குக் கிடைத்தது. எனவே படிப்பை இடையில் நிறுத்தி விட்டார். சிறுவயதிலேயே கல்யாணம் செய்து கொண்டார். குடும்பப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டதால் முறையான கல்வியைத் தொடர அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் புதியவற்றை படைக்கும் மனம் அவருக்கு இருந்தது. எப்போதும் எதையாவது செய்து கொண்டேயிருப்பார்; வயர்களை இணைத்தோ அல்லது வேறு எதையோ செய்து அதன் விளைவை விவரிப்பார். நான் குழந்தையாக இருந்தபோது எனக்குப் பலவற்றை விளக்கிச் சொல்லியிருக்கிறார்.

என்னுடைய அப்பாவும் அம்மாவும் திறந்த மனதுடையவர்கள்; வீட்டில் அம்மாவுக்கு ஒத்தாசை செய்ய அப்பா தயங்கியது இல்லை. வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்வார்; குழந்தைகளைக் குளிப்பாட்டுவார்; இவ்வளவு ஏன், சமையல்கூட செய்வார். அம்மா காலை உணவைத் தயார் செய்யும் போது அப்பா குழந்தைகளைத் தயார் செய்வார்; ஏனென்றால் பள்ளிக்கு அனுப்பவேண்டிய குழந்தைகளின்  நீண்ட வரிசையே இருக்கும்! இன்னார்தான் இந்த வேலையைச் செய்ய வேண்டும் என்ற கறார் கிடையாது. அம்மா அப்பாவைப் போற்றி வணங்கியதையும் நான் பார்த்ததில்லை. இரவுப் பணி முடிந்து அப்பா காலையில் திரும்பியதும் வீட்டு வேலைகளைச் செய்யத் துவங்குவார். எனவே சகோதர சகோதரிகளும் எல்லோரும் எல்லாவற்றையும் செய்யக் கற்றுக் கொண்டோம். பிறர் செய்வார்கள் என்று எதற்காகவும் நாங்கள் காத்திருக்கவில்லை. இம்மாதிரியான சூழலில்தான் நான் வளர்ந்தேன்.

என்னுடைய பெற்றோர்கள் பாசமாக இருந்தாலும் ஒரு வகையில் பழமைவாதிகளாகவும் இருந்தார்கள். எல்லா விவகாரங்களிலும், குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்றவை குறித்து என்னுடைய அப்பா அவருடைய அப்பாவின் அறிவுரையையும், வழிகாட்டல்களையும் கேட்டுப் பெறுவார். எனவே என்னுடைய படிப்பு நான்காம் வகுப்போடு நிறுத்தப்பட்டது. நான் மேலும் படிக்க விரும்பினேன். படித்த சில பேராசிரியர்களும், சில ஆசிரியர்களும் அப்பாவுக்கு நண்பர்களாக இருந்தார்கள். என்னைப் பள்ளிக்கு அனுப்புமாறு அவர்கள் அப்பாவிடம் சொல்வார்கள். ஒரு நண்பர் சொன்ன விதத்தில் மனம்மாறி அப்பா என்னை ஓர் ஆங்கிலப் பள்ளியில் சேர்த்தார். அது 1930 அல்லது ’32 இருக்கலாம். ஆனால் என் தாத்தா, “கூடவே கூடாது, அவள் இப்போது வளர்ந்து விட்டாள். வரன் பார்த்து அவளுக்குக் கல்யாணம் செய்யும் வழியைப் பார்” என்றார். தாத்தாவின் தயக்கம் ஒரு பக்கம் இருக்க, குடும்பம் பெரியதாக இருந்ததால் வீட் டில் உதவிக்கு யாராவது ஒருவர் வேண்டியிருந்தது. நான் என்னுடைய அம்மாவின் வலதுகையானது இப்படித்தான்.

உல்லாஸ் நகர் அகதிகள் முகாம் எண் 4 (1950 ஆரம்ப நாட்களில்)
©
Sound & Picture Archives for Research on Women

அகராதியின் துணையுடன் தேவதைக் கதைகளை படித்தது

இப்படியெல்லாம் இருந்தும், எப்படி நான் விஞ்ஞானி ஆனேன்? அதைத்தான் நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன். என்னுடைய கடந்த காலத்தைத் திரும்பி பார்த்தால், ஏதோ ஓரு தேவையும், ஓர் உந்துதலும் என்னுள்ளிருந்து என்னைச் சதா முட்டி முன் தள்ளியதை என்னால் உணர முடிகிறது. மற்றவர்கள் என்ன அறிவுரை சொன்னாலும், எல்லா எதிர்ப்பையும் எதிர்கொண்டு கல்வி பயிலவேண்டும் என்று எனக்குள்ளிருந்த ஏதோ ஒன்று என்னிடம் சொன்னது. பள்ளிக்குப் போகாமல் பத்து வருடங்கள் வீட்டிலேயே இருந்தபோதும் இந்த அவா மறையவே இல்லை. வீட்டுக்கு வரும் செய்தித்தாளை முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை படிப்பேன். என்னுடைய அப்பா படிப்பதில் தணியாத ஆர்வம் உடையவர்.

நூலகத்திலிருந்து புத்தகங்கள் எடுத்து வருவார். என்னிலும் மூன்று வயது இளைய தம்பி ஒருவன் எனக்கிருந்தான். பையன் என்பதாலேயே அவனை படிக்கவைத்துக் கொண்டிருந்தார்கள். அவனும்  நூலகத்திலிருந்து புத்தகங்கள் கொண்டு வருவான். நாங்கள் இருவரும் சேர்ந்து உட்கார்ந்து புத்தகங்கள் படித்த அந்த குளிர்கால நாட்கள் இன்னும் என் நினைவில் இருக்கின்றன. இருவரும் அருகருகே உட்கார்ந்து ஒரே புத்தகத்தைப் படிப்பது வழக்கம். என்னைவிட அவன் வேகமாகப் படிப்பான். எனவே பக்கத்தைப் புரட்டும் போதெல்லாம் சண்டை போட்டுக்கொள்வோம். 1932 ஆம் வருடம் தொடங்கி புதுக் கண்டுபிடிப்புக்களைப் பற்றிய விவரங்களைச் செய்தித்தாள்கள் வெளியிட்டன. அவற்றைப் படித்துவிட்டு, அப்பா என்னையும் பள்ளிக்கு அனுப்பியிருந்தால் நானும் எதையாவது கண்டுபிடித்திருப்பேனே என்று நினைத்துக்கொள்வேன். நான் கண்டுபிடிக்க எதுவும் மீதியிருக்காதோ என்று கூடக் கவலைப்பட்டேன்! வீட்டுக்கு யாராவது வந்தால் அவரிடம், “என்னைப் பள்ளிக்கு அனுப்பச் சொல்லி அப்பாவை வற்புறுத்துங்கள். எனக்கும் படிக்க ஆசை உண்டு என்று அவரிடம் சொல்லுங்கள்” என்பேன். எனவே படிப்பின் மீதிருந்த நாட்டம் மறையாமல் எப்போதும் எனக்கிருந்தது.

இந்தக் காலகட்டத்தில் விடுதலை இயக்கம் உச்சகட்டத்திலிருந்தது; அதன் தலைவர்கள், மக்களை ஒருங்கிணைக்கும் காரணியாக இந்தி இருக்க முடியும் என்று நினைத்தார்கள். ஓருவரின் மொழியைக் காப்பது அவருடைய கலாச்சாரத்தைக் காக்கும் வழியாகும். எங்கள் வீட்டருகே யாரோ ஒருவர் இந்தி கற்பித்துக்கொண்டிருந்தார். நான் இந்தி கற்றுக்கொள்ள விரும்பினேன். இந்தி வகுப்புக்கு என்னை அனுப்பச்சொல்ல அப்பாவிடம் வற்புறுத்த யாராவது ஒருவர் எனக்குத் தேவைப்பட்டார். இந்த வகுப்புகள் கிட்டத்தட்ட பெண்களுக்கான பள்ளியைப் போன்றவை. அங்கு தையல் வேலையும் கற்றுக்கொடுக்கப்பட்டது. வீட்டு வேலைகளை பெண்கள் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்வதில் என்னுடைய அப்பா சளைத்தவரில்லை. வீட்டிற்கே வந்து எங்களுக்குத் தையல் கற்றுக்கொடுக்க டெய்லர் ஒருவரை அப்பா நியமித்திருந்தார். ஆண்களின் புஷ் சட்டைகள் மற்றும் கால் சட்டைகளைக்கூட தைக்க நான் கற்றுக்கொண்டேன். தையல் வேலையோடு சேர்த்து இந்தியும் கற்றுக்கொண்டேன். இந்தியில் `கோவித்’  தேர்வுகளில் சிறப்பாகத் தேறினேன். நான் தொடர்ந்து படிக்கவேண்டும் என்று என்னுடைய ஆசிரியர் சொன்னார். பிடிவாதம் நிரம்பிய என் பெற்றோர்களிடம் என்னைப் படிக்க அனுமதிக்கும்படி அவ்வப்போது கேட்பேன். இந்தியை நன்றாகக் கற்றுக் கொண்டதால் பிரேம் சந்தின் நாவல்களைப் படிக்கத் தொடங்கினேன். மேலும் நல்ல கல்வியைப் பெறவேண்டும் என்ற தேவையை அதிகம் உணர்ந்தேன். இந்த கட்டத்தில் அம்மாவின் ஒன்றுவிட்ட தம்பி என்னுடைய வாழ்க்கையில்  நுழைந்தார்.

அவர் ஒரு மருத்துவர். இங்கிலாந்திலிருந்து அப்போதுதான் திரும்பியிருந்தார். வார இறுதியில் மருத்துவமனையில் வேலை இல்லாதபோது அவர் கராச்சியிலிருந்த என் தாத்தா வீட்டுக்கு வருவார். பெரிய தோட்டத்துடன்கூடிய பிரம்மாண்டமான பங்களா தாத்தாவுக்கு இருந்தது. பழங்களைப் பறித்துத் தின்பதற்காக நான் அந்தத் தோட்டத்திலிருந்த பல மரங்களில் ஏறியிருக்கிறேன். ஒரு மாற்றத்திற்காக எங்களைச் சில சமயம் தாத்தா வீட்டிற்கு எங்கள் பெற்றோர் அனுப்புவார்கள். ஆங்கில எழுத்துக்களைக் கற்றுத்தரச்சொல்லி அம்மாவின் ஒன்றுவிட்ட தம்பியை நான் தொல்லைப்படுத்துவேன். வாரவிடுமுறை நாட்களில் அவர் சொல்லித்தருவார்; அடுத்த முறை பார்க்கும்போது, “வீட்டுப்பாடம் செய்தாயா?” என்று கேட்பார். சில சமயம் செய்வேன், சில சமயம் செய்யமாட்டேன். செய்யாதபோது வீட்டில் எல்லார் முன்னாலும் பலமுறை தோப்புக்கரணம் போடச்சொல்லி தண்டனை கொடுப்பார். எல்லாரும் சிரித்து என்னைக் கேலி செய்வார்கள். இப்போது திரும்பிப் பார்த்தால் என் முயற்சியைக் கைவிடாதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நான் ஆங்கிலம் கற்பதை எந்த சம்பவத்தாலும் தடுக்க முடியவில்லை. என்னுடைய ஒன்றுவிட்ட அண்ணா கராச்சியில் எம்.எஸ்சி. வேதியியல் படித்துக்கொண்டிருந்தார். அவரும் வார இறுதியில் வீட்டுக்கு வருவார். அவரிடமும் கொஞ்சம் கற்றுக்கொண்டேன். இறுதியில் நான் சக்கர் திரும்பியபோது [சக்கர் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும். சிந்தியில் ‘சக்கர்’ என்றால் ’தலைசிறந்த’ என்று பொருள்] என் தம்பியின் நண்பரும் ஓவியருமான ஜேஸாராம் என்பவருடன் எனக்கு நட்பு உண்டாயிற்று; அவர் எங்களைப் பார்க்க வீட்டிற்கு வருவார். ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் என் விருப்பத்தை அவரிடம் சொன்னபோது ஆங்கிலத்திலுள்ள குழந்தைகளுக்கான புத்தகங்களை எனக்கு அனுப்பினார். தம்பியிடம் அகராதியைக் கேட்டு வாங்கி அதன் துணையுடன் அவற்றை படித்தேன். அந்த புத்தகங்களிலிருந்த கதைகளைப் புரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் பார்ப்பேன். இப்படித்தான் நான் ஆங்கிலம் கற்றுக்கொண்டேன். ஆங்கிலம் கற்றுக் கொள்ள நான் எந்தப் பள்ளிக்கும் போகவில்லை. அதனால்தான் என்னுடைய உச்சரிப்பைச் சரிசெய்து கொள்ள  நீண்ட காலம் பிடித்தது.

©
Sound & Picture Archives for Research on Women

ஆண்களின் சட்டைகள், தற்காப்புக் கலைகள் மற்றும் விஞ்ஞானம்

ஏற்கனவே எனக்கு வயது இருபத்திரண்டு ஆகியிருந்தது. படிப்பதற்கான நம்பிக்கையை நான் இன்னும் விட்டுவிடவில்லை. இருபத்திரண்டு வயதானதால் எந்தப் பள்ளியிலும் என்னால் சேரமுடியவில்லை. எனவே பஞ்சாப் மெட்ரிக் தேர்வை தனித்தேர்வராக எழுதத் தீர்மானித்தேன். பஞ்சாப் மெட்ரிக் தேர்வில் நான் தோல்வியுற்றாலும்கூட _ அநேகமாக அதுதான் நடக்கும் என்று நினைத்தேன் _ வழக்கமான மெட்ரிக் பள்ளியில், வயது அதிகமாக இருந்தாலும், நான் சேர்ந்து கொள்ள முடியும். ஏனென்றால், தோல்வியுற்ற நபர் எந்த வயதினரானாலும் வழக்கமான மெட்ரிக் பள்ளியில் அவர் சேர்த்துக் கொள்ளப்படவேண்டும் என்பது நடைமுறை. என் உறவுக்காரரின் நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்து எனக்குக் கணிதம் கற்பித்தார். இதற்குள் என் தம்பி மெட்ரிக் படிப்பை முடித்துவிட்டு கராச்சியில் பொறியியல் படிப்பில் சேர்ந்திருந்தான். அவனுடைய மெட்ரிக் புத்தகங்கள் வீட்டிலிருந்தன. அந்தக்காலத்தில் ஒவ்வொரு பாடத்துக்கும் ஏராளமான வினா விடைப் பிரசுரங்கள் இருந்தன. இந்தச் சிறு புத்தகங்களையும் தம்பி விட்டுச் சென்றிருந்தான். இந்தப் பிரசுரங்களிலிருந்த எல்லாவற்றையும் படித்தேன். பாடபுத்தகங்களை படிக்கவே இல்லை.

படிக்கவேண்டும் என்ற என்னுடைய ஆசை உறுதியாக ஒருபுறம் இருக்க, வேறுசில சூழ்நிலைகளும் என் ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் திசையில் என்னை உந்தித்தள்ளின. P.P.C.M உயர்நிலைப்பள்ளி என்று நயாசக்கரில் ஒரு பள்ளி இருந்தது. அந்தப் பள்ளியின் ஓவிய ஆசிரியை வேலையை விட்டுவிட்டு பம்பாய் ஜே.ஜே. ஓவியப்பள்ளியில் சேரப் போய்விட்டார். அவர் அந்த பள்ளியில் ஓவியமும் தையலும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் விடுப்பில் போயிருந்தார். எனவே இந்த வகுப்புக்களை நடத்த அவர்களுக்கு ஒருவர் தேவைப்பட்டார். என்னால் ஓவியம் சொல்லித்தர முடியாது; ஆனால் தையல் சொல்லிக்கொடுக்க முடியும். அந்தக்காலத்தில் நான் வீட்டிலிருந்த வருடங்களில் மகாராஷ்டிரத்திலிருந்து ஆர்.எஸ்.எஸ். குழு வந்து கம்புகளையும் வாள்களையும் பயன்படுத்தி பாரம்பரிய தற்காப்புக் கலையைக் கற்பிப்பது வழக்கம். நான் இவற்றைக் கற்றுக்கொண்டேன்; மேடையிலும்கூட நிகழ்த்திக்காட்டியிருக்கிறேன். எனவே எனக்கு முறையான கல்விப் பயிற்சி இல்லாவிட் டாலும் தையல் வகுப்புக்களையும் உடற்பயிற்சி வகுப்புகளையும் எடுக்கும் திறமை இருந்தது. ஒரு நாள் சில மாணவிகள் பேசிக்கொள்வதை நான் தற்செயலாகக் கேட்க நேர்ந்ததுவரை என்னுடைய பணி பிரச்சனையில்லாமல் போய்க்கொண்டிருந்தது. “இவளால் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தைகூட பேசமுடியவில்லை; ஆனால் இவள் நமக்கு சொல்லித்தர வந்துவிட்டாள்; இவளெல்லாம் நமக்கு ஆசிரியர்.”அந்த மாணவர்களிடம் நான் எதுவும் சொல்லவில்லை. நேராக பள்ளி முதல்வரின் அறைக்குப் போய் அவரிடம் சொன்னேன் : “அவர்களுக்குச் சொல்லித்தர எனக்குத் தகுதி வரும்வரை நான் இந்த பள்ளிக்கு ஆசிரியராக வரமாட்டேன்.” இது 1945ஆம் வருடம் ஜூன் அல்லது ஜூலை மாதம் நடந்திருக்கலாம். இப்படித்தான் என் தம்பி விட்டுச் சென்ற சிறுபுத்தகங்களை நான் மெய்யான முழு அக்கறையுடன் படிக்க ஆரம்பித்தது. 1946ஆம் வருடம் மார்ச் மாதம் நான் மெட்ரிக் தேர்வில் வெற்றி பெற்றேன். என்னைக் கல்லூரியில் சேர்க்கச் சொல்லி அப்பாவைக் கெஞ்சினேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

என்னுடைய படிப்புக்கு பெற்றோர்கள் காட்டிய எதிர்ப்புக்கு பணத்தட்டுப்பாடும் ஒரு காரணம். கராச்சியில் ஒரு தையல் வகுப்பு ஆரம்பித்து கொஞ்சம் பணம் சேமித்தேன். 1947ஆம் வருடம் ஜூன் மாதம் அப்பாவின் அனுமதியை எப்படியோ பெற்று டி. ஜே. சிந்து கல்லூரியில் இன்டர்மீடியட் விஞ்ஞானப் பிரிவில் சேர்ந்தேன். சில வகுப்புக்களுக்குத்தான் போயிருப்பேன்; அதற்குள் நாட்டுப் பிரிவினை எங்கள் வாழ்க்கையில் குறுக்கிட்டது.

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு மாறுதல் பெற அப்பா தன் விருப்பத்தை அதிகார பூர்வமாகத் தெரிவித்துவிட்டார். நான் அங்கேயே தங்கி கல்லூரிப் படிப்பை முடிக்க விரும்பினேன். சூழ்நிலை மிக வேகமாக மோசமாகிக்கொண்டுவந்ததால் என் விருப்பம் நிறைவேற வழியில்லை. இந்தியாவுக்குக் குடும்பம் கப்பலேற பெற்றோர்களுக்கு நான் உதவ வேண்டியிருந்தது. கராச்சியிலிருந்து சக்கருக்கு நான் போகவேண்டியிருந்தது. அந்தக் காலத்தில் அந்த பயணத்துக்கு முப்பத்தாறு மணிநேரம் பிடித்தது. மாலை ஆறுமணிக்கு ரயிலேறினேன். பிரிவினை அப்போதுதான் நடந்து முடிந்ததால் பிளாட்பாரத்தில் அகதிகளின் கூட்டம் அலைமோதியது. சுற்றும் முற்றும் நகர்வதே பெரும்பாடாக இருந்தது. என்னுடன் பயணம் செய்த என் அம்மாவின் சித்தியும் நானும் எப்படியோ ஒரு பெட்டியில்  நுழைந்துவிட்டோம். இந்துக்களைத்தேடி சில முஸ்லிம் ஆண்கள் பெட்டிக்குள்  நுழைந்தார்கள்; ஆனால் பெட்டியிலிருந்த முஸ்லிம் பெண்கள் எங்களைப் பாதுகாத்தார்கள். அவர்கள் எங்களுக்கு புர்கா கொடுத்து அணிய வைத்துவிட்டு இந்துக்கள் யாரும் அங்கில்லை என்று தேடிவந்த ஆட்களிடம் சொல்லிவிட்டார்கள். சக்கரை அடைந்த நான் மீண்டும் கராச்சி போக வேண்டியிருந்தது. கராச்சியில் தங்கியிருந்த என் அத்தை ஒருவர் தன்னுடைய நகைகளை என் பாட்டியிடம் கொடுத்து வைத்திருந்தார். அவற்றை எடுத்துவரவேண்டியிருந்தது. எனவே பாட்டி வீட்டுக்கு நான் மட்டும் தனியாகப் பிரயாணம் செய்தேன். எடுத்து வருவதற்கு எளிதான வழி என்று திட்டமிட்டு எல்லா நகைகளையும் அணிந்துகொண்டேன். திரும்பும்போது ஓரு முஸ்லிம் என்னை தடுத்து நிறுத்தி, “நான் உன்னைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்புகிறேன்” என்றார். நிறைய நகைகளை அணிந்து கொண்டிருந்த எனக்கு அவரிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியவில்லை. அவரைக் கல்யாணம் செய்துகொள்வதாகச் சொல்லிய பிறகு இருவரும் வீடுவரை நடந்துபோனோம். நடக்கும்போது இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. `இவரைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டியிருந்தால் என்ன செய்வது?’ என்று யோசித்துக்கொண்டிருந்தேன். வீட்டை அடைந்த பிறகு, “இது என்னுடைய அத்தை வீடு. அங்கிருந்து ஒரு பொருளை எடுத்து வரவேண்டும். வெளியே எனக்காகத் தயவு செய்து காத்திருங்கள்” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் ஓடினேன். திரும்பி வெளியே வரவேயில்லை. கடைசியில் செம்மறியாட்டுக் கூட்டம் போல கப்பலுக்குள் எங்களைத் திணித்துக்கொண்டோம். எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் கிளம்பினோம். கையிலிருந்ததெல்லாம் வெறும் துணி மூட்டைகள்தான். வீட்டின் கடைசிக் குழந்தையான என் தம்பிக்கு வயது வெறும் ஆறுநாட்கள் தாம்.

அமெரிக்காவில் சாந்தூவின் ஆராய்ச்சிக்கூடம் மற்றும் அலுவலகம் (1958)
©
Sound & Picture Archives for Research on Women

பம்பாய் – கல்வியின் நுழைவாயில்

அப்பாவின் மாற்றல் ஆணைக்காகக் காத்திருந்த நாங்கள் மிக அசுத்தமான சூழலில் பிற அகதிகளுடன் பம்பாயில் வாழ்ந்து கொண்டிருந்தோம். அத்தகைய சூழலிலும் செய்தித்தாள் வாசிப்பதை நான் நிறுத்தவில்லை. கராச்சியில் நான் சிந்தி செய்தித்தாள் வாசிப்பது வழக்கம். இங்கு டைம்ஸ் வாசித்தேன். என் கடைசித் தம்பிக்கு அதிகக் காய்ச்சல் அடித்ததால் டாக்டரைக் கூப்பிட வேண்டியிருந்தது. எனக்குத் தெரிந்த வழியில் டாக்டருக்கு நான் உதவ வேண்டும் என்று நினைத்தேன். வெவ்வேறு நேரங்களில் தம்பிக்கு இருந்த காய்ச்சலின் அளவை ஒரு துண்டுச்சீட்டில் குறித்துவைத்தேன். டாக்டர் வந்ததும் அவரிடம் அந்த அட்டவணையைக் காண்பித்தேன். `”நீ என்ன டாக்டரா?” என்று அவர் என்னைக் கேட்டார். காய்ச்சல் குறித்த அட்டவணையைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி எனக்கு வந்தது என்று என்னால் சொல்லமுடியவில்லை. அது சாதாரண பொது அறிவு தொடர்பான செயலாக இருக்கலாம். ஆனால் அது விஞ்ஞானத்தில் எனக்கிருந்த நாட்டத்தைக் காட்டியது. சிந்து மாகாணத்தில் நான் ஒரு விஞ்ஞானக் கல்லூரியில் சேர்ந்தது உண்மையென்றாலும் இந்தச் சம்பவம் விஞ்ஞானத்தின்மீது எனக்கிருந்த இயல்பான நாட்டத்தை வெளிப்படுத்துகிறது என்று நான் எண்ணுகிறேன்.

ஆக்ராவுக்கு அருகிலுள்ள அச்னேரா என்ற கிராமத்திற்கு அப்பாவுக்கு மாற்றல் கிடைத்தது. ஆக்ராவில் மூன்று கல்லூரிகள் இருந்தன. நானே ஒவ்வொரு கல்லூரிக்கும் சென்றேன். அப்போது டிசம்பர் இறுதி ஆகிவிட்ட தால், மார்ச்சில் தேர்வுகளை வைத்துக்கொண்டு எப்படி என்னைச் சேர்ப்பது என்று ஒவ்வொரு கல்லூரியிலும் கேட்டார்கள். நான் முயற்சியைக் கைவிடவில்லை. என்னைக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ள மறுக்கிறார்கள் என்றும், இதனால் ஒரு வருடம் எனக்கு வீணாகும் என்றும் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு ஒரு கடிதம் எழுதினேன். என்னைச் சேர்த்துக் கொள்ளச்சொல்லி மூன்று கல்லூரிகளுக்கும் பிரதமர் கடிதங்கள் அனுப்பியது எனக்கு ஆச்சரியத்தையும் நெகிழ்வையும் ஏற்படுத்தியது. 1948ஆம் வருடம் பிப்ரவரி மாதம் ஒரு கல்லூரியில் சேர்ந்தேன். மார்ச்சில் நடந்த தேர்வுகளில் தேறி முதலாண்டு படிப்பை முடித்தேன். என்னுடைய தம்பி, தங்கைகளின் எதிர்காலம் குறித்தும் சிந்திக்க வேண்டியிருந்ததால் அதன்பிறகு என்னால் படிப்பைத் தொடர முடியவில்லை. என்னுடைய கல்வியைப் பற்றி மட்டுமே என்னால் நினைக்க முடியாதே. கல்கத்தாவில் பொறியாளராக இருந்த என்னுடைய தம்பி இந்தச் சமயத்தில் எங்களோடு வந்து சேர்ந்தான். என்னுடைய எல்லா தம்பி தங்கைகளின் படிப்புக்கும் ஏற்ற சிறந்த இடம் எது என்று நாங்கள் தீர்மானிக்க வேண்டியிருந்தது. உரிய இடத்தைத் தேர்ந்தெடுக்க நானும் தம்பியும் பயணம் மேற்கொள்வது என்று முடிவுசெய்தோம். ஒரு பையில் ஓன்றிரண்டு சேலைகளை எடுத்துக்கொண்டேன். நானும் தம்பியும் பயணத்தைத் தொடங்கினோம். டெல்லிக்கு ரயிலில் போய் அங்கிருந்து ஜெய்பூர் போனோம். எங்களிடம் பணம் எதுவும் இல்லை. பின் எப்படி எங்களால் பல இடங்களுக்கு்ப போகமுடிந்தது? உண்மையைச் சொன்னால், டிக்கட் பரிசோதகரை ஏமாற்றி டிக்கட் இல்லாமலேதான் பயணம் செய்தோம். கடைசியாகப் பம்பாயை அடைந்தோம்.

கொடை உள்ளம் கொண்ட சில நபர்களால் கட்டப்பட்ட ஒரு தர்ம சத்திரம் பம்பாய் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே இருந்தது. அங்கு தங்குவதென்று நானும் தம்பியும் முடிவு செய்தோம். இரவில் அங்கு தூங்குவோம். பகலில் எங்கள் பைகளை ரயில்நிலையத்திலுள்ள பாதுகாப்பு அறையில் வைத்துவிட்டு எல்லா இடங்களுக்கும் நடந்தே போவோம். பஸ்ஸிலோ ரயிலிலோ போக எங்களிடம் காசு கிடையாது. எங்களால் சாப்பிட முடிந்ததெல்லாம் பொரி கடலை மட்டுமே. மாலை வேளைகளில் கடலையை இரண்டு பொட்டலங்களில் வாங்கிக்கொண்டு திரும்புவோம்; நடைபாதையை ஒட்டியுள்ள தோட்டத்தில் உட்கார்ந்து அன்றைக்கு நடந்தவற்றைப் பற்றிப் பேசுவோம். ஒரு கட்டத்தில், அன்றாடக் கூலிக்குத் தையல்வேலை கூட செய்தேன். இண்டரை ரூபாய் கூலி – காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை வேலை செய்ய கூலி இரண்டரை ரூபாய். ஐந்து மணி ஆகப் போகும் சமயத்தில் என்னுடைய ஊசி உடைந்து போயிற்று. ஊசிக்குரிய விலையைக் கொடுக்க அந்த இரண்டரை ரூபாயும் போயிற்று. பிறகு ஓர் அன்பர் உல்லாஸ் நகரில் அகதிகளுக்கான முகாம் ஒன்று இருப்பதாகச் சொன்னார். நானும் தம்பியும் அங்கு போய் முகாம் அதிகாரிகளைச் சந்தித்தோம். பொறியாளர் என்பதால் தம்பிக்கு உடனே வேலை கிடைத்தது; அவர்களுக்கு வேலை செய்ய ஆட்கள் தேவைப்பட்டார்கள்; தங்குவதற்கு எங்களுக்கு ஓர் அறை கொடுத்தார்கள். எங்கள் தம்பி தங்கைகள் வாழ்க்கையில் முன்னேற பம்பாய்தான் சரியான இடம் என்று நாங்கள் இருவரும் முடிவு செய்தோம்.

அது ஒரு சின்ன அறை. ஒரு பக்கத்தில் சிறு சமையல் பகுதி. கழிவறையும் குளியலறையும் எல்லோருக்கும் பொது. எப்போதும்போல அங்கு நிறையபேர் இருந்தார்கள். குளியலறை கழிவறை முன்னால் எப்போதும் நீண் ட வரிசைகள். தம்பி தங்கைகளை அழைத்து வந்து அங்கிருந்த பள்ளிகளில் சேர்த்தோம். இது நடந்தது 1948ல். நான் மீண்டும் கல்லூரியில் சேர விரும்பினேன். முலுண்ட் என்ற இடத்தில் புதிதாகத் துவக்கப்பட்ட டோப்பி வாலா கல்லூரியில் எனக்கு இடம் கிடைத்தது. ஆக்ராவில் நான் படித்த முதலாண்டு படிப்பு இங்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாததால் மீண்டும் முதலாண்டு படிப்பை மேற்கொள்ள வேண்டியிருந்தது. போதுமான பணமிருந்தால்தான் விஞ்ஞானம் பயில்வதோ புத்தகங்கள் வாங்குவதோ சாத்தியம். எனவே பணம் சம்பாதிக்க நான் ஒரு வழியை யோசிக்க வேண்டியிருந்தது. பெண்களுக்குத் தையல் வகுப்புகள் துவங்க முடிவு செய்தேன். துணிகளைத் தைத்துக்கொடுக்கவும் செய்தேன். காலை வேளைகளில் இவற்றைச் செய்துவிட்டுப் பிற்பகலில் கல்லூரிக்கு ஓடுவேன். ஏனென்றால் பிற்பகலில்தான் செய்முறை வகுப்புகள் நடக்கும். முற்பகலில் நான் இழக்கும் விரிவுரை வகுப்புகளை என்னால் சுயமாகப் படித்து ஈடுகட்டி விட முடியும்; ஆனால் செய்முறை வகுப்புகளை அப்படிச் செய்யமுடியாது என்று எனக்குத் தெரியும். எனவேதான் பிற்பகல் செய்முறை வகுப்புகளைத் தவறவிடமாட்டேன். நண்பர்களிடமிருந்து குறிப்புகளையும்,  நூலகத்திலிருந்து புத்தகங்களையும் பெற்றுக்கொண்டு உல்லாஸ்நகர் திரும்புவேன். அந்தக் காலத்தில் முகாமில் விளக்குகள் இருக்காது. எனவே நான் வெளியே போய் தெருவிளக்குகளின் அடியில் உட்கார்ந்து படிப்பேன். புத்தகங்களிலிருந்து குறிப்புகள் எடுத்துக்கொண்டு அடுத்த நாள் அவற்றைத் திருப்பியளித்து விடுவேன். இன்டர்மீடியட் விஞ்ஞானப் படிப்பு வரை அப்படித் தான் செய்தேன். அந்தப் படிப்புக்குப் பிறகு எங்கள் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் என்னுடைய தையல் வகுப்புகள் தொடர்ந்தன. இதனிடையில் மருத்துவராக வரவேண்டும் என்ற ஆசையும் மனதில் இருந்தது. மருத்துவப்படிப்பில் சேர முதல் வகுப்பில் தேறியிருக்க வேண்டும். முதல் வகுப்பைச் சொற்ப மதிப்பெண்களில் நான் தவற விட்டிருந்தேன். அனேகமாக எல்லா மருத்துவக்கல்லூரிகளுக்கும் விண்ணப்பித்தேன். இடம் கிடைக்கவில்லை. அதுவும் ஒரு வகையில் நன்மைதான் போலும்; ஏனென்றால் எனக்கு ரத்தத்தைக் கண்டால் பயம். விஞ்ஞான ஆய்வில் எனக்கு மகிழ்ச்சிதான். இதற்குள் வேறு எந்தக் கல்லூரியிலும் சேர முடியாத அளவுக்குக் காலதாமதமாகிவிட்டது. செயின்ட் சேவியர் கல்லூரியின் வேதியியல் பிரிவில் ஓர் இடம் இருந்தது. நான் போவதற்குள் அதுவும் நிரப்பப்பட்டு விட்டது. எனவே எனக்கு  உயிரியல் பிரிவில் இடம் கொடுத்தார்கள். துணைப் பாடமாக விலங்கியலை எடுத்தேன்; காரணம் அது ஒன்றுதான் இருந்தது. உயிரியலோடு சேர்த்து நாங்கள் உயிர்வேதியியலும் படிக்க வேண்டியிருந்தது; அந்தப் பாடம் என்னை வெகுவாகக் கவர்ந்தது.

குடும்பத்துக்கு உதவும் என் முயற்சிகள் தொடர்ந்தன. சுருக்கெழுத்தும் தட்டச்சும் கற்றுக்கொண்டு கொஞ்சம் பணம் சம்பாதிக்க முயன்றேன். குடும்பத்தை ஆதரிக்க என்னாலான எல்லாவற்றையும் செய்தேன்; ஆனால் ஒருபோதும் வலிந்து அவற்றைச் செய்ததாக நான் உணர்ந்ததில்லை; நான் செய்யவேண்டிய கடமை என்றே நினைத்தேன். தேர்வுகளுக்கு முன் ஐந்தாறு மாதங்கள் சர்னி சாலையிலிருந்த ஓர் அரசு விடுதியில் தங்கினேன். நான் ஏற்கனவே சொன்னதுபோல, சாதிக்க வேண்டும் என்ற தீவிர எண்ணம் ஒருவருக்கு இருந்தால் தடைகளைத் தாண்டலாம்; புதுப்பாதைகளும் அவர் முன் விரியும். நான் தங்கியிருந்த விடுதியின் ஆறாவது தளத்தில் பெண் ஒருத்தி தற்கொலை செய்துகொண்டாள். ரூயா கல்லூரி எம்.எஸ்சி. மாணவி அவள். விடுதியில் எல்லா அறைகளும் நிரம்பியிருந்தன; நான் இரண்டாவது தளத்தில் இருந்தேன். எல்லாருக்கும் தனித்தனி அறைகள். கண்காணிப்பாளர் ஓர் ஆங்கிலேய பெண்மணி. ஆறாவது தளத்திலிருந்த பெண் தற்கொலை செய்து கொண்டதும் மேல்தளங்களில் இருந்த பெண்கள் கீழே வந்து எங்கள் அறைகளை பகிர்ந்துகொண்டார்கள். பேய்க்குப் பயப்படுவதாக அவர்கள் சொன்னார்கள். நான் விடுதியில் சேர்ந்ததே அமைதியாக படிக்கத்தான். எனக்கும் ஒன்றும் பேய் பயம் இல்லாமலில்லை; வீட்டில் ஒருவர் இறந்துவிட்டால் குடும்பத்தினர் வீட்டைவிட்டுப் போய்விடுகிறார்களா என்ன என்று எனக்குள் கேட்டுக்கொண்டேன். அப்படியிருக்க, ஆறாம் தளத்தில் தங்க ஏன் அந்தப் பெண்கள் மறுக்க வேண்டும்? விடுதிக் கண்காணிப்பாளரிடம் சென்று, “அந்த மாணவியின் அறையில் தங்க எனக்கு ஆட்சேபணை இல்லை” என்று சொன்னேன். என்னைப் பின்பற்றி மற்ற பெண்களும் ஆறாவது தளத்துக்குத் திரும்புவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது. அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்ட அதே அறையில் தங்கினேன். நான் எங்கு போனாலும் என்னுடைய எழுத்தறிவிக்கும் திட்டத்தை ஆரம்பித்துவிடுவேன். அந்த விடுதியின் கடைநிலை ஊழியர், சமையல்காரர், துப்பரவு செய்யும் பெண் ஆகியோருக்கு எழுதப் படிக்கச் சொல்லிக் கொடுத்தேன். அவர்களெல்லாரும் என்னுடைய நண்பர்கள்; என்னை ஆதரிப்பார்கள் என்பதும் எனக்குத் தெரியும். அந்த அறையில் ஒரு மாதம் தங்கியிருந்தேன். ஆரம்பத்தில் யாருமே மேலே வரவில்லை. பிறகு மெதுவாக துப்பரவு செய்யும் பெண்ணும், இடைநிலை ஊழியரும், பிறரும் வர ஆரம்பித்தார்கள். இறுதியில் எல்லாப் பெண்களும் அவரவர் அறைக்குத் திரும்பினார்கள். ஒருநாள் விடுதிக் கண்காணிப்பாளர் கூட்டம் ஒன்றைக் கூட்டி, “பெருமையெல்லாம் சாந்தூவுக்கே” என்று சொன்னார்.

இந்தச் சம்பவம் என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை என்பதால்தான் விவரித்தேன். நான் முன்பு குறிப்பிட்டபடி உயிர்வேதியியல் கற்பதில் நான் ஆர்வமாக இருந்தேன். ஆராய்ச்சி செய்யும் பேராவலும் இருந்தது. புற்று நோய் ஆராய்ச்சிக் கழகம் (Cancer Research Institute)  பற்றியும் எனக்குத் தெரியவந்தது. பி.எஸ்சி. முடித்தபோது விடுதிக் கண்காணிப்பாளர் அடுத்து நான் என்ன செய்யப்போகிறேன் என்று கேட்டார். ஆராய்ச்சி செய்வதில் எனக்கிருந்த நாட்டத்தையும் புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகத்தில் சேர ஆசைப்படுவதையும் அவரிடம் சொன்னேன். உலகப் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் டாக்டர் கனோல்கர் அந்தக் கழகத்தின் இயக்குநராக இருந்தார். அவருக்கு விடுதிக் கண்காணிப்பாளர் ஒரு கடிதம் கொடுத்தார். புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகத்தில் சேர எனக்கு அனுமதி கிடைத்தது. கைவிடப்பட்ட ஓர் அறையில் தங்கும் சவாலை நான் மேற்கொண்டதால் விடுதிக் கண்காணிப்பாளருக்கு என்னை மிகவும் பிடித்துப்போனது; என்னுடைய ஆராய்ச்சிக் கனவை நனவாக்க இது உதவியது; இல்லையென்றால் என்னால் புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகத்தில் நுழைந்திருக்கவே முடியாது.

உயிர்வேதியியலில் நான் ஆராய்ச்சி செய்ய விரும்பினேன். அங்கு தலைவராக இருந்த டாக்டர் ரணதிவே எனக்கு  உயிரியல் கொடுக்கத் தயாராக இருந்தார். உயிர்வேதியியல்தான் வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். தொடர் ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பித்ததன் மூலம் என்னுடைய எம்.எஸ்சி. உயிர்வேதியியலை முடித்தேன். இதன்பிறகு வெளி நாட்டில் என் ஆய்வை மேற்கொள்ள எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அப்பா அப்போதுதான் ஓய்வு பெற்றிருந்தார். அந்தக் காலத்தில் ஓய்வூதியம் அதிகம் கிடைக்காது. அமெரிக்காவுக்கு விமானக் கட்டணம் வெறும் இரண்டாயிரம் ரூபாய்தான். ஆனால் அந்தப் பணம்கூட என்னிடம் இல்லை; அதை எனக்குக் கொடுக்க முடிகிற எவரையும் எனக்குத் தெரியவும் தெரியாது. எங்களுக்கு உதவமுடிகிற யாரையும் அப்பாவுக்கும் தெரியாது. யாரி டம் நான் உதவி கேட்பேன்? நான் பணி புரிந்த இடங்களிலெல்லாம் அலுவலகப் பணியாளர்களிடம் நான் நட்புடன் இருப்பேன். தலைமை எழுத்தர், தட்டச்சர் மற்றும் பிறரும் என்னுடைய நண்பர்கள். அமெரிக்கா போக விமானக் கட்டணத்துக்கு பணம் புரட்டும் யோசனையிலேயே ஆழ்ந்திருந்ததால் சோகமான முகத்துடன் நான் இருந்திருக்கவேண்டும். ஏனென்றால், ஒருநாள் மதிய உணவு இடைவேளையின்போது நான் சோகமாக இருப்பதற்கான காரணத்தைத் தட்டச்சர் கேட்டார். மேற்படிப்பிற்கு வெளிநாடு போக இரண்டாயிரம் ரூபாய் தேவைப்படுவதை அவரிடம் சொன்னேன். ஒரு வாரம் கழிந்து புரோஹித் என்ற அந்தத் தட்டச்சர் என் கையில் ஆயிரம் ரூபாயை வைத்தார்; அப்பா மேலும் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்தார். திரு. புரோஹித் எனக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தது என்னுடைய வாழ்க்கையில் இன்னொரு திருப்புமுனை. அந்தப் பணத்தை வட்டியுடன் அவருக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டேன். என்றாலும் எனக்குப் பணம் மிக அவசரமாகத் தேவைப்பட்ட காலத்தில் அவர் அதை எனக்குக் கொடுத்ததுதான் முக்கியம். அண்மையில், திரு. புரோஹித் என் வாழ்க்கையில் ஆற்றிய மிக முக்கிய பங்கை சட்டென்று உணர்ந்தேன். அவருக்கு ஏதாவது செய்யவேண்டுமென்ற எண்ணத்தில் அவரை பம்பாய் முழுக்கத் தேடினேன். ஆனால் அவரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஆசைகள் இருக்கும் ; எனக்கும் இருந்தன. நான் சொன்னதுபோல எனக்கு நிறைய சகோதர, சகோதரிகள் இருந்தார்கள்; என்னைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க முடியாது. அவர்களுடைய முன்னேற்றத்தையும் நான் கருதவேண்டும். கராச்சியில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்திருந்தோம். சிறிது காலத்தில் அப்பாவும் ஓய்வு பெற்றுவிட்டார். மற்றவர்களை நான் காப்பாற்றவேண்டும். பிஎச். டி. முடித்த போது எனக்கு வயது முப்பது. அமெரிக்காவிலிருந்து திரும்பியபோது வயது முப்பத்திரண்டு. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் பல ஆண்கள் என்மீது காதல் வயப்பட்டார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் என்னை விட இளையவர்கள். நான் ஒரு விஞ்ஞானி, நான் முதியவளாவேன் என்று எனக்குத் தெரியும்; அதன் பிறகு கணவனின் தேவைகள்? என்னால் அவர்களின் திருமணக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனியாக இருப்பது என்று நான் எடுத்த முடிவு குறித்து எனக்கு மகிழ்ச்சியே. நான் ஒருபோதும் காதல் வயப்படவில்லை என்று சொல்லவில்லை. என்னுடன் பணியாற்றிய ஒருவரைக் காதலித்தேன்; அவர் என்னுடைய வாழ்க்கைத் துணையாவார் என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. டில்லி லட்டுவைச் சாப்பிட்டாலும் துன்பப்படுவாய், சாப்பிடாவிட்டாலும் துன்பப்படுவாய் என்று சொல்வார்கள். எனவே சாப்பிட்டுவிட்டே துன்பப்படுவோமே. காதல் வயப்படுவதும் அதை போலத்தான். எனவே நானும் காதல் வயப்பட்டேன், அது எப்படி இருக்கும் என்றும் தெரிந்துகொண்டேன்.

அமெரிக்காவில் தம் அறையில் சாந்தூ
©
Sound & Picture Archives for Research on Women

விஞ்ஞான ஆய்வு

என்னுடைய எம். எஸ்சி. பட்டத்துக்கு, உயிர்வேதியியல் மண்டலங்களின் மீது கதிர்வீச்சின் விளைவுகள் குறித்து ஆய்வு செய்தேன். என்னுடைய பிஎச். டி. பட்டத்துக்கு வைட்டமின் பி -12 குறித்து ஆய்வு செய்தேன். பி -12 செயல்படும் முறை அன்று அறியப்படாமலிருந்தது. நான் செய்த சோதனைகள் மூலம் பி -12, கூட்டு செரிமானப் பொருளாக (Enzyme)) காணப்படுவதை நிரூபித்தேன். ஸிராக்யூஸ் பல்கலைக்கழகத்தில் போஸ்ட்டாக்டரேட் செய்தேன். அயோவா பல்கலைக்கழகத்தில் புரோட்டின் வேதியியலில் மேலும் ஓராண்டு உயர் ஆராய்ச்சியை செய்தேன். 1962ல் நான் இந்தியா திரும்பியபோது இந்தியா போரின் பிடியில் இருந்தது. நான் வெளிநாட்டில் இருந்தபோதே சி. எஸ். ஐ. ஆர். (Council of Scientific and Industrial Research) அமைப்பின் ஆய்வு நிதி உதவியைப் பெற்றிருந்தேன்; நான் விரும்பும் இடத்தில் பணி புரியும் சுதந்திரத்தையும் அந்நிறுவனம் கொடுத்திருந்தது. ஆனால் அவர்களாகவே என்னை டெல்லியிலுள்ள ஸஃப்தர்ஜங் மருத்துவனையில் நியமித்தார்கள். 1952 முதல் ’62 முடிய ஆராய்ச்சி செய்தவள் நான்; ஆனால் ஸ்ஃப்தர்ஜங் மருத்துவமனையில் நான் செய்ய வேண்டியிருந்ததெல்லாம் ரத்தப் பகுப்பாய்வுதான்; அது உண்மையில் மருத்துவப் பயிற்சியுடன் தொடர்புடைய உயிர்வேதியியல்தான். அதில் எனக்கு ஆர்வமில்லை. டெல்லியிலுள்ள சி. எஸ். ஐ. ஆர். தலைமையகத்துக்குச் சென்று அவர்கள் கொடுத்த வேலை பிடிக்கவில்லை என்று சொன்னேன். வேளாண்மை அமைச்சகத்தின் உணவுத்துறையில் என்னை வேலைக்கு அமர்த்தினார்கள்; அமெரிக்காவிலிருந்து வந்த உணவு வேதியியல் பேராசிரியர் ஒருவர், கர்னால் பகுதியிலிருந்த கிராமங்களில் நிலவி வந்த சத்துணவுப் பற்றாக்குறைகள் குறித்த ஆய்வை அத்துறையின் உதவியோடு நடத்திவந்தார். லேடி ஹார்டிங் கல்லூரியில் எம். எஸ்சி. சத்துணவுப் படிப்பை மேற்கொண்டிருந்த ஆறு மாணவிகளைக் கொண்ட குழு ஒன்றை அந்தப் பேராசிரியர் என்னுடன் அனுப்பினார். வேளாண்மைத்துறை வழங்கிய ஒரு உதவியாளர், மற்றும் அந்த ஆறு மாணவிகள் இவர்களோடு சேர்ந்து கார்னால் பகுதியில் தங்கி ஆறு கிராமங்களைத் தேர்ந்தெடுத்தோம். அந்தக் கிராம மக்கள் காலை, பிற்பகல், இரவு வேளைகளில் என்ன சாப்பிட்டார்கள், எவ்வளவு சாப்பிட்டார்கள் என்பவை போன்ற விவரங்களை நாங்கள் குறித்து வைக்கவேண்டும். இந்த ஆய்வும் எனக்குப் பிடித்தமானதாக இல்லை. சோதனைச்சாலையில் இல்லாமலிருப்பது பெரிய இழப்பாகத் தோன்றியது. அங்கு  நூலகம் கிடையாது; எல்லாவற்றையும் கோப்புகள் மூலமாகவே பரிமாறிக் கொள்ள வேண்டியிருந்தது. மீண்டும் சி. எஸ். ஐ.ஆருக்கு போனேன்; நான் உண்மையில் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதைக் கண்டறிந்து சொல்லச் சொன்னார்கள். புரோட்டீன் வேதியியல்தான் என்னுடைய களம்; எனவே அதில் ஒரு ஆய்வுத் திட்டம் தயாரித்து பல ஆய்வு நிறுவனங்களுக்கு அனுப்பினேன். பெரும்பாலான நிறுவனங்கள் அதை நிராகரித்துவிட்டன. ஹைதராபாதிலுள்ள மண்டல ஆய்வுக்கூடத்தின் டாக்டர் பி. எம். பார்கவா மட்டும்தான் என் திட்டத்தை ஆமோதித்தார். 1963ஆம் ஆண்டு துவக்கத்தில் நான் அங்கு சேர்ந்தேன். கண்ணீர்த்துளிகளில் காணப்படும் லைசோசைம் என்ற ஒருவகை செரிமானப் பொருள் குறித்த ஆய்வை அங்கு மேற்கொண்டேன். அதன் அமைப்பில் கவனம் செலுத்தினேன். பிறகு லண்டனிலுள்ள செஸ்டர் பியாட்டி ஆராய்ச்சி கழகத்தில் ஒரு வருடம் பணிபுரிந்தேன்; அதற்குப் பிறகு B.A.R.C ல் சேர்ந்து லைசோசைம் குறித்த என்னுடைய ஆராய்ச்சியைத் தொடர்ந்தேன்.

பஞ்சாபில் கர்னால் கிராமத்தில் விபரம் சேகரித்தல்
©
Sound & Picture Archives for Research on Women

பாபா அணுஆராய்ச்சி மையம் (B.A.R.C.)இல் இருந்தபோது சக ஆய்வாளர்களுடன் சேர்ந்து திசுக்கள் (tissues)  மீது லைசோசைமை வைத்துப் பல சோதனைகளைச் செய்தேன். லைசோசைம் எல்லா திசுக்களிலும் காணப்பட்டது. சிலவற்றில் அதன் அடர்த்தி குறைவாக இருந்தது; ஆனால் சோதனையின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியபோது எங்களால் அதிக அடர்த்தியைக் காணமுடிந்தது. அது ஏன் அப்படி என்று யாரும் ஆச்சரியப்படுவது இயற்கை. ஒரு இயற்பியல் ஆய்விதழில் படித்தேன் – உ ண்மையில் அது ஒரு பழைய கண்டுபிடிப்புதான் – அதாவது, ஒருவர் சோதனைகளை மேற்கொள்ளும்போது முடிவுகள் தனித்த நிலையில் (in isolation) கிடைப்பதில்லை. ஒரு சோதனையில் பெறப்படும் முடிவுகளில் அச்சோதனையை மேற்கொள்ளும் நபர் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறார். அந்தக் கேள்வி என்னைத் தொடர்ந்து தொல்லைப்படுத்தி வந்தது. என் சக ஆய்வாளர்களோடு சேர்ந்து நான் எந்த மாதிரியான சோதனைகளை வடிவமைத்தாலும் எப்போதும் தீர்மானமான, கேள்விக்கிடமற்ற முடிவுகளே (Positive results) எங்களுக்குக் கிடைத்தன. நான் முன்பு சொன்னதுபோல, நாங்கள் தொழில் நுட்பத்தை மேம்படுத்தினால் அதிக அடர்த்தியான லைசோசைம் எங்களுக்குக் கிடைத்தது. “முடிவுகளைப் பெறுவதில் மனம் ஏதும் பங்கு வகிக்கிறதா? அப்படிப் பங்கு வகித்தால், என் முடிவுகளில் மனத்தின் பங்கை எப்படி நான் ஆராய்வது? அதை எப்படி சோதனை ரீதியாக நிரூபிப்பது?” போன்ற கேள்வி களை நாங்கள் கேட்க ஆரம்பித்தோம்.

மூன்று படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி வீடு ஒன்றில் நான் மட்டுமே வசித்து வந்தேன். எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டிருந்தேன். முழு வீட்டையும் நான் பயன்படுத்திப் பராமரிக்கவில்லை, அது ஒரு தொல்லை என்பதால். ஒன்று விஞ்ஞானத்தில் கவனம் செலுத்தவேண்டும், அல்லது வீட்டை அக்கறையோடு பராமரிக்கவேண்டும். ஒருநாள் சின்மயா மிஷனைச் சேர்ந்தவரும்  நூலகருமான என் நண்பர் ஒருவர், “சாந்தூ, உன்னுடைய அறைகளெல்லாம் காலியாகத்தானே இருக்கின்றன. வாரம் ஒருமுறை நாங்கள் ஒரு குழுவாக வந்து உன் வீட்டில் ஆன்மீக விஷயங்களை விவாதிப்பதில் உனக்கு ஆட்சேபணை ஏதும் உண்டா?” என்று என்னைக் கேட்டார். “எனக்கு ஆட்சேபணை இல்லை,  நீங்கள் வரலாம்” என்று சொன்னேன். வியாழக்கிழமை மாலைகளில் நாங்கள் சந்திக்க ஆரம்பித்தோம். இந்த கூட்டங்கள் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடந்தன. நாங்கள் விவாதித்துக் கொண்டிருந்தது ஆழமான விஞ்ஞானம் என்பதை நான் உணர ஆரம்பித்தேன். நாங்கள் ஈடுபட்டிருந்த புற உலக விஞ்ஞானத்தைவிட அது அதிக சிக்கலானது. “புற உலகு என்ற ஒரு பகுதியை மட்டும் ஆய்வு செய்யும் நான் ஒரு உண்மை விஞ்ஞானியாக இருக்க முடியுமா?” என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். அகத்தின் இயல்பு பற்றி எனக்கு என்ன தெரியும்? `தினம் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை நாட வேண்டியதில்லை.’  எனவே நான் ஆப்பிளை ஆய்வு செய்கிறேன்; அதில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளதைக் காண்கிறேன்; ரத்த விருத்திக்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது. ஆனால் இந்த ஆய்வுகளை மேற்கொள்கிற, பேசுகிற, பார்க்கிற அந்த நபரை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அந்தக் கேள்விகள் கேட்கப்பட வேண்டியவைதான், இல்லையா? நான் ஒரு முழுமையற்ற விஞ்ஞானியாக இருக்கமுடியாது. உயிரற்ற பொருள்களைப் பற்றித்தான் நான் ஆய்வு செய்கிறேன். உயிருள்ளவை பற்றி என்னுடைய ஈடுபாடு என்ன? சக்தியின் இருப்பையும், அதை மாற்றுவதையும் செய்யலாம் என்றும் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஆனால் சக்திக்கு இயங்கும் ஆற்றல் உண்டு என்று எந்த விஞ்ஞானியும் நம்புவதில்லை. அது உயிருள்ள விசை ஆற்றல் இல்லை என்றே நம்பப்படுகிறது. விஞ்ஞான ரீதியாக, சக்தி உயிரற்ற சக்தியாகவே கருதப்படுகிறது. ஆக, நான் என்ன சொல்வது? விஞ்ஞானத்தை நான் விட்டுவிடவில்லை. வேறு திசையில்தான் திரும்பினேன்.

முதல் முப்பது ஆண்டுகள் புறவய விஞ்ஞானத்தில் மட்டுமே ஈடுபட்டிருந்தேன். பார்க்கிற மற்றும் கேட்கிற என்னுடைய ஆற்றலின் இயல்பை அறிந்து கொள்ள தற்போது விரும்பினேன். ஆராய்ச்சி விஞ்ஞானியாக ஆவதற்கு எனக்கு பன்னிரண்டு ஆண்டுகள் பிடித்தால், அதே கால அளவு இல்லையென்றாலும், இந்த ஆழமான அம்சங்களைக் காண சில வருடங்களாவது பிடிக்கும். இந்த மாறுபட்ட ஆய்வுமுறை . . . அதற்கு நான் எங்கே போவது? இதைச் செய்ய வேறு வழிகளைத்தேட ஆரம்பித்தேன். பகுப்பாய்வு, ஆழ்ந்த நோக்கு, சோதனைகள், மற்றும் இணைப்பாக்கம் ஆகியவை விஞ்ஞானத்தின் நான்கு அம்சங்கள். ஆனால் இவை நான்கும் ஒவ்வொரு மனத்தின், ஒவ்வொரு அறிவு முறைமையின் ஒரு பகுதியாக இருக்கலாம். அடிப்படையில் விஞ்ஞானம் ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் அறிவுமுறை. அப்படியானால் நவீன விஞ்ஞானத்தை மட்டும்தான் விஞ்ஞானம் என்று அழைக்கவேண்டுமா? விஞ்ஞானத்தையும், தத்துவத்தையும் பிரிக்கமுடியுமா? ரோஷன் என்ற என்னுடைய தோழி ஒரு கணிதவியலாளர். அவள் ஒரு கணிதச் சமன்பாட்டை நிரூபிப்பதில் ஈடுபட்டிருக்கும்போது யார் அவளைக் கூப்பிட்டாலும் அவளுடைய காதில் விழாது. அந்த அளவுக்கு அவளுடைய கவனம் ஒருமுகப்பட்டிருக்கும். “தியானமும் அதைப் போன்றதுதானே?” என்று நினைத்துக் கொண்டேன். அகத்தின் இயல்பை ஆராயும் முன்பாக இந்தப் பயிற்சிகளைக் கற்கவேண்டும் என்று நினைத்தேன். இந்த உலகம் முழுதும் என் சோதனைச்சாலையாக ஆகவேண்டும். அப்படித்தான் அது இப்போது எனக்கு இருக்கிறது. பிரம்மச்சாரிணி வந்தனா சைதன்யா என்ற முறையில் இந்த முழு உலகத்தையும் என்னுடைய சோதனைச்சாலையாக ஆக்கிக் கொண்டேன்.

ஸ்பாரா பயிலரங்கில் மாணவர்கள் மற்றும் பங்கேற்றவர்களில் ஒரு பகுதி
©
Sound & Picture Archives for Research on Women

குறிப்பு:

இந்தப் பிரதியும் ஓவியங்களும், புகைப்படங்களும் ஸ்பாரோ அமைப்பின் காப்புரிமைக்கு உட்பட்டவை. இவற்றை யாரும் எந்தத் தளத்திலும் வேறு எந்தப் பதிப்பிலும் உபயோகிக்க அனுமதி இல்லை.

தொடர்புள்ள பதிவு:

ஆங்கில பிரதி உருவாக்கம் : சி. எஸ். லக்ஷ்மி
தமிழ் தொகுப்பு : அ. ஸ்ரீனிவாஸன் , எம். சிவசுப்ரமணியன்
முகப்போவியம் : பாரதி கபாடியா
முகப்பு வடிவமைப்பு : தமால் மித்ரா
புகைப்பட உதவி : ப்ரியா டிஸுஸா

Series Navigation<< தனியாய் ஒரு போராட்டம்முன்னணிப் பெண் விஞ்ஞானிகள் >>

One Reply to “பிரபஞ்சமே சோதனைக்கூடமாய்: சாந்தூ குர்னானி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.