
அனல் தொண்டை
இக்கணம்
இடது முலையைத்தான்
அருந்திக் கொண்டிருக்கிறது
ஆயினும்
அதன் கண்கள் முழுதும்
வலது முலையிலேயே
சுற்றி சுற்றி சுழல்கிறது
வலதை
உறிஞ்சி தீர்த்துவிட
யாரோ
காற்றோடு காற்றாய்
வானிலிருந்து
வேக வேகமாய்
இறங்கி வந்து கொண்டிருப்பதை
உறுதியாய் அறிந்திருக்கிறது
அந்த தளிர் விரல்கள்
பால் முலைகள்
இரண்டிற்காக
அதை தாங்கி நிற்கும்
தேகத்தையும்
தேகத்தை தாங்கி நிற்கும்
உயிரையும்
உயிரை தாங்கி நிற்கும்
வேறேதோ ஒன்றையும்
யாருக்கும்
துளியும் கிள்ளிக் கொடுக்க மறுத்து
முற்றுமாய் உறிஞ்சிவிடத் துடிக்கிறது
இந்த குட்டி பிசாசின்
அனல் தொண்டை
***
நாளைக்கு யார்?
ஒவ்வொரு நெஞ்சும்
பறை அதிர்கிறது
நீயா? நானா?
இவனா? அவனா?
நாளைக்கு யார்?
நாளைக்கு யார்?
எங்கும் பச்சை வற்றிப்போன
எரிகோடை காலத்தில்
மேய்ப்பனற்ற மந்தை ஆடுகள்
அத்தனையும்
ரகசியமாய் புற்கள் கொண்டு தரும்
கசாப்பு கடைக்காரனிடம்
தனித் தனியாக
ரகசிய ஒப்பந்தம்
செய்து கொண்டிருக்கின்றன
ஒவ்வொருவருக்கும்
மிக நன்றாகவே தெரியும்
ஒவ்வொருவருக்கும்
எதுவுமே தெரியாத படிக்குத்தான்
இன்னும் நடிப்பு
ஒவ்வொரு அதிகாலையிலும்
யாரோ ஒரு ஆடு
அந்த மந்தை முழுமைக்கும்
பசும் புற்களாகிறது
***
சுவரில் வாழ்பவன்
ஒவ்வொரு முறையும்
எதேச்சையாக பார்க்க நேர்கையில்
இமைக்கணம்
என் விழிகள்
அதிர்ந்தடங்குகிறது
எப்போதோ
தன்னைத் தானே
சுவரில் படம் வரைந்து
அதனருகே
தன் பெயரையும்
எழுதி வைத்திருக்கிறான்
பெரும்பாலும்
அது தன் முகம் போல இல்லை என்பதாலா?
ஒரு வேளை
பத்தாண்டுகள் தாண்டிவிட்ட
இன்றைய முகமா?
கடவுளே
இந்த வீட்டுக்கு
மறுமுறை
புது வண்ணம் பூசும் வரை
அவன் உயிரோடுதான்
பார்த்துக் கொண்டிருப்பானா?
***
அனலானது அமுது
கணுவிடை மதர்த்த
தசைகளின் தித்திப்பு
எப்போதும்
ஏன்
அனலாயிருக்கிறது?
இதற்கெனத்தான்
அனலுக்கே
தாவுகிறதா
எந்த அனலும்?
***
தண்ணீரில் நெய் எடுப்பவள்
நெடும் எல்லைகளாய்
நடுவே
வரப்புகளை
இட்டு வைக்கிறேன்
இந்த இடைவெளிகளை
செம்மணிகள் செழித்து குலுங்கும்
பொன்வயல்களாய்
எழுப்பிக் கொள்ள
உனக்குத் தெரியும்
என்பது
எனக்கும் தெரியும்
***
இருள் வேண்டும் பொற்சுடருக்கு
என்
உடலும் ஒளியும்
சேர்த்து
ஒட்ட ஒட்ட
உறிஞ்சிக்கொள்
தொட்டால்
ஓட்டிக் கொள்ளும்
கன்னங்கரிய
இருள் மட்டும் கொடு
அனுமந்த்ரத்தில்
இறங்கி வந்திருக்கும்
இந்த ராக தேவதைகளோடு
கை கோர்த்து கொள்ள
உடலாலும் ஆவதில்லை
ஒளியாலும் ஆவதில்லை
கரும்பட்டு
இருளால் மட்டுமே
ஆகிறது
***
இனிய கவிதைகள் அற்புதமான கவிவரிகள் ஒவ்வொரும். வாழ்த்துக்கள்.
அன்புடன் கவிதா அவர்களுக்கு தங்களுன் இனிய வாழ்த்திற்கு மிக்க நன்றி