- சொல்லாத கதைகள்
- தனியாய் ஒரு போராட்டம்
- பிரபஞ்சமே சோதனைக்கூடமாய்: சாந்தூ குர்னானி
- முன்னணிப் பெண் விஞ்ஞானிகள்
- நாங்களும் படைத்தோம் வரலாறு
- ஊர்மிளா பவாரின் இரண்டு சிறுகதைகள்
- நடவுகால உரையாடல் – சக்குபாய்
- நெஞ்சில் துயில்கொள்ளும் ஒரு கவிதை – ஜமீலா நிஷாத்
- ஜமீலா நிஷாத்தின் தலைப்பிடாத சில கவிதைகள்
- இனக்கலவர நினைவுகள்: குமுறும் குரல்கள்
தொடர்புள்ள பதிவு:

©

Sound & Picture Archives for Research on Women
. . . பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் பெண் கல்வி உரிய கவனம் பெறவில்லை. பதவி காரணமாகக் கல்விக்குழுவின் தலைவராக இருந்த ட்ரிங்க்வாட்டர் பெத்துநே என்பவர் 1849ஆம் ஆண்டு கல்கத்தாவுக்கு அருகிலிருந்த ஒரு கிராமத்தில் `இந்து பெண்கள் பள்ளி’ என்ற பெயரில் ஒரு பள்ளியை நிறுவினார்.1
தன்னுடைய சொந்தக் கணக்கிலிருந்து பத்தாயிரம் பவுண்டுகளை அப்பள்ளிக்கு தாராள நன்கொடையாக வழங்கினார்.2 பண்டிட் ஈஸ்வர் சந்திர வித்யாசாகர், ராஜா தக்ஷிணரஞ்சன் முகர்ஜி, மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் போன்ற சில வங்காள கொடை வள்ளல்கள், கல்வியாளர்கள், சமூக சீர்த்திருத்தவாதிகள் அவருடைய இந்தப் பெருமுயற்சிக்கு உதவினார்கள். கல்கத்தாவிலிருந்த பெத்துநேவின் சொத்து அவருடைய உயிலின்படி அவருடைய மரணத்திற்குப் பிறகு இந்தப் பள்ளிக்கு நன்கொடையாக அளிக்க பட்டது; அவருடைய நினைவாக பள்ளி “பெத்துநே பள்ளி” என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 1878ல் இதே பள்ளியில் கல்லூரி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன.3
1857ல் தொடங்கப்பட்ட கல்கத்தா மற்றும் பம்பாய் பல்கலைக்கழகங்களுக்கு 1875 வரை மெட்ரிக் தேர்வுகளுக்கு பெண்களை அனுமதிக்கும் அதிகாரம் இல்லை என்பது சந்திரமுகி பாசு மற்றும் ஃபிரோஸா ஸோரப்ஜி ஆகியோருக்கு முறையே கல்கத்தா மற்றும் பம்பாய் பல்கலைக்கழகங்கள் அனுமதி மறுத்ததன் மூலம் தெரியவருகிறது. காதம்பினி பாஸுவை அனுமதித்ததன் மூலம் 1877ல் கல்கத்தா பல்கலைக்கழகம் பெண்களுக்குத் தன் கதவுகளைத் திறந்தது. ஆனாலும் பிறகு மருத்துவக்கல்வி பயில அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் கலைப்பாடம் படிக்கவேண்டியதாயிற்று. அவர்தான் கல்கத்தா பல்கலைக் கழகத்திலிருந்து வெளிவந்த முதல் இந்தியப் பெண் பட்டதாரி. பிறகு 1883ல் மருத்துவக் கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்து கல்கத்தா பல்கலைக்கழகத்தின் முதல் பெண் மருத்துவ பட்டதாரி ஆனார்.
அதே ஆண்டில் பம்பாய் பல்கலைக்கழகம் தன்னுடைய செனட் தீர்மானத்தின்படி பெண்களை கலைப்பாடங்கள், மருத்துவம், சட்டம் மற்றும் சிவில் என்ஜினீயரிங் போன்ற எல்லா படிப்புகளுக்கும் அனுமதித்தது. 1878 வரை லண்டன் பல்கலைக்கழகம்கூட பட்டப்படிப்புகளுக்கு பெண்களை அனுமதிக்கவில்லை என்பது ஆச்சரியம் தரும் செய்தி.
உலகம் முழுதுமே பெண்கள் உயர்கல்வித் தளத்திற்குத் தாமதமாகத் தான் வந்தார்கள். நியமன உறுப்பினர் என்ற தகுதியில் 1891ல் பம்பாய் பல்கலைக்கழகத்தின் செனட் கூட்டத்தில் திருமதி ஈடித் பேஷே ஃபிப்சன் பங்கேற்றார் என்பது சுவாரஸ்யமான விஷயம். 4
சமூக புரட்சியின் சரித்திர காரணகர்த்தாக்கள்
பம்பாய் பல்கலைக்கழகம் 1882ல் முதன்முதலாக பி. எஸ்சி. பட்டப் படிப்பைத் துவக்கியது. வில்சன் கல்லூரியில் வேதியியல், பௌதிக புவியியல், மற்றும் புவிஅமைப்பியல் ஆகிய பாடங்களைப் படித்து 1896ல் அப்பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. பட்டம்பெற்ற முதல் பெண் ஸோரப்ஜி ஆலிஸ் முன்டே. 1920ல் ராயல் விஞ்ஞானக் கழகத்திலிருந்து எம்.எஸ்சி. (ஆய்வுக் கட்டுரைகள் மூலம்) பட்டம் பெற்ற முதல் பெண் மனேக்பாய் மெர்வாஞ்சி மேத்தா என்பவர்; அப்போது ஏழு ஆண்கள் மட்டும்தான் எம்.எஸ்சி. பட்டம் பெற்றிருந்தார்கள். எம்.எஸ்சி. படிப்பு தொடங்கிய 1916 லிருந்து நான்கு ஆண்கள் மட்டுமே பட்டம் பெற்றிருந்தது, பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்லர் என்பதைக் காட்டுகிறது. 1920 தொடங்கி 1933 வரை ஆய்வுக் கட்டுரைகள் மூலம் ஐந்து பெண்கள் எம்.எஸ்சி. பட்டம் பெற்றிருந்தார்கள்.5
1934ல் இயற்பியலில் எம். எஸ்சி. பட்டம் பெற்ற முதல் பெண் மைனா மாதவ் பராஞ்ச்பே. 1934 முதல் 1950 வரை ஆய்வின் மூலம் முப்பத்திரண்டு பெண்கள் எம்.எஸ்சி. பட்டம் பெற்றார்கள். 6,7,8
ஆண்களுக்குக் கிடைத்த அதே வகையான கல்வி தங்களுக்கும் வேண்டும் என்று இந்தப்பெண்கள் விரும்பியது மகிழ்ச்சிக்குரியது. ஆண்களோடு போட்டியிட்டு பல பரிசுகளையும், விருதுகளையும், உதவித்தொகைகளையும் பெற அவர்களுக்குத் தகுதி இருந்தது.9 செல்வி ராகினி ஃபட்கே ஆய்வறிஞராக மட்டுமே இயங்கியவர். வெளிநாடு சென்ற அவர் ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவரை மணந்து அங்கேயே தங்கி விட்டார். டாக்டர் (செல்வி) மைனா பராஞ்ச்பே லண்டன் சென்று பிஎச். டி. மற்றும் டி. ஐ. சி. (ஈ. ஐ. இ.) பட்டங்களைப் பெற்று, 1942ல் ராயல் விஞ்ஞானக் கழகத்தில் உதவி விரிவுரையாளராகச் சேர்ந்தார். ஓய்வு பெறும்வரை தொடர்ந்து கற்பித்தார். 1942ல் ராயல் விஞ்ஞானக் கழகத்தில் பணியாற்றிய முப்பத்து மூன்று பேரில் பதிமூன்று பேர் மட்டுமே பிஎச்.டி. பட்டம் பெற்றவர்கள்; அதில் இரண்டு பேர் பெண்கள் – டாக்டர் எம். பராஞ்சிபே மற்றும் டாக்டர் ஆலிவ் ஜோசப் . 1942 முதல் 1947 வரை ஐந்து பெண்கள் டாக்டர் பட்டம் பெற்றவர்களாக இருந்தார்கள் – கே. வி. காந்தக், ராதா கே. அய்யர் (பிறகு பந்த்), ஆலிவ் ஜோசப் , டாடா நானாவதி, மற்றும் மாலினி வர்தே. டாக்டர் (செல்வி) வர்தேயும் 1947ல் ராயல் விஞ்ஞானக் கழகத்தில் விலங்கியலில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். 10,11,12
நேரடிப் பேட்டிகளுக்கு வயதான விஞ்ஞானிகள் கிடைக்காததே இந்தக் கட்டுரையை எழுதும்போது நான் எதிர்கொண்ட முக்கியமான பிரச்சினை. என்றாலும் அவர்களில் இரண்டு பேரோடு பேச எனக்கு அதிர்ஷ்டம் கிட்டி யது. அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை அலசிப் பார்க்கும்போது, பரந்த இந்திய வானத்தை அழகுபடுத்தும் அற்புத வண்ணங்களின் அழகான வானவில்லை காட்சிப்படுத்தும். இந்த முன்னணி பெண் விஞ்ஞானிகளின் வாழ்க்கையில் உண்டான மாற்றத்தின் செயல்வகையை அந்த வண்ணங்களில் ஒவ்வொன்றாகக் காணப் போகிறோம். கண்ணாடிக் கூரையை உடைத்து வெளியேறி, தன்முனைப்பான முயற்சிகளால் அவர்கள் தங்களுக்கு மட்டும் வரலாறை உருவாக்கிக் கொள்ளவில்லை; இந்திய சமூகத்தின் சமூகப் புரட்சிப் போக்கில் அவர்கள் சரித்திர காரணகர்த்தாக்களாகவும் ஆனார்கள்.
சமூகப் புரட்சி என்றால் என்ன? மாற்றங்களின் தொடர்ந்த, ஆக்கபூர்வ இயக்கமே பரிணாமம் என்பதை நாம் அறிவோம்; அது நிதானமாக நிகழும் ஒரு நடைமுறை; அதன் தாக்கம் பல நூற்றாண்டுகளுக்குக்கூட உணரப்படா மல் போகலாம். ஆனால் புரட்சி என்பது புது அணுகுமுறைகளோடும், பகுத்தறிவுச் சிந்தனையோடும் நடப்பிலுள்ள சட்டங்களையும், வேரோடிய வழக்கங்களையும், மரபுகளையும் சவாலுக்கு உள்ளாக்கும் வேகமான நடைமுறை. வேறு வார்த்தைகளில் சொன்னால், குறிப்பிட்ட சிலர் தங்கள் நன்மைக்காக சமூகத்தின்மீது திணித்த பிரம்மாண்டமானதும் நிலைபெற்று விட்டதுமான தர்மசாஸ்திரம் என்ற கட்டமைப்பை உடைத்தெறிவதுதான் இங்கு நாம் பேசிக் கொண்டிருக்கும் புரட்சி. இவ்வகையில் புது திசையையும், மதிப்பீடுகளையும் சமூகப்புரட்சி சமுதாயத்திற்குத் தருகிறது.
பின்வருவன சில உன்னத எடுத்துக்காட்டுகள் :
1. டாக்டர் கமலா சோஹோனி (பாக்வத்)
கமலாதாயியின் அப்பா ஒரு வேதியியலாளர் என்பதால் அவருக்கும் வேதியியலில் ஆர்வம் உண்டானது. பி. எஸ்சி.க்குப் பிறகு பெங்களூரிலுள்ள இந்திய விஞ்ஞானக் கழகத்தில் அவர் சேரவேண்டுமென்று அவருடைய அப்பா திரு. பாக்வத் விரும்பினார். 1911ல் திரு. பாக்வத் அங்குதான் படித் தார். 1933 வரை இந்த பிரபல நிறுவனத்தில் பெண்களுக்கு அனுமதி கிடையாது; அதில் சேர கமலா பெரும்பாடுபட வேண்டியிருந்தது. நோபல் பரிசு பெற்றவரும் அந்நிறுவனத்தின் இயக்குநருமான டாக்டர் சி. வி. ராமனுடன் கமலா பல விவாதங்களை நடத்தினார்; தன்னுடைய கூர்மையான அறிவாலும், விவேகத்தாலும் ராமனைக் கவர்ந்து, அவர் அந்நிறுவனத்தின் கதவுகளைப் பெண்களுக்குத் திறக்கும்படி செய்தார். இந்திய விஞ்ஞானக் கழகத்தின் முதல் மாணவியாக கமலா ஆனார்.
காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை சிறு உணவு இடைவேளையைத் தவிர அவர் கடுமையாக உழைத்தார்; டென்னிஸ் வீரரான தன்னுடைய அப்பாவிடமிருந்து பெற்ற நாட்டம் காரணமாக சிறிது நேரம் டென்னிஸ் விளையாடுவார். உயிர்வேதியியல், உயிர்இயற்பியல், கருவிகள் ஆக்கம், கண்ணாடிப் பொருட்கள் உருவாக்கம், விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதுதல், விஞ்ஞானப் புத்தகங்களுக்கு மதிப்புரை எழுதுதல் போன்றவற்றில் அவர் எடுத்துக்கொண்ட திடமான பயிற்சி அவரைப் பிற்காலத்தில் மிகப்பெரும் விஞ்ஞானியாக உருவாக்கியது.
விடாமுயற்சியும், பெரும் கனவுகளும் கொண்ட அவர் பிரபலமான விஞ்ஞானிகளுடன் – அவர்களில் சிலர் நோபல் பரிசு பெற்றவர்கள் – கடிதப் போக்குவரத்து வைத்துக் கொண் டார்; ஒரு நாள் அவர்களைச் சந்திக்கும் கனவையும் கைக்கொண்டிருந்தார். எம்.எஸ்சி. முடித்த பிறகு அவருக்கு வெளிநாட்டு கல்வி உதவி ஒன்றும், பம்பாய் பல்கலைக் கழகத்தின் ஸ்ப்ரிங்கர் ஆராய்ச்சி உதவியும் கிடைத்தன. கேம்ப்ரிட்ஜுக்குப் போய் நோபல் பரிசு பெற்ற டாக்டர் ஹாப்கின்ஸிடம் பிஎச். டி.க்கு சேர்ந்தார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழத்திலிருந்து பிஎச். டி. பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண் அவர்தான். விடுமுறைகளில் பயண உதவி பெற்று அவர் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொண்டிருந்த பல விஞ்ஞானிகளைச் சந்தித்தார். அவருடைய இருபதுகளிலேயே கமலாவின் கனவுகள் நிறைவேறின.
நாடு திரும்பும் முன்பாகவே டெல்லியிலுள்ள லேடி ஹார்டிங் கல்லூரியில் அவருக்கு ஒரு பதவி காத்திருந்தது. சில நாட்களில் குன்னூரிலுள்ள சத்துணவு ஆய்வுக்கழகத்தின் உதவி இயக்குநரானார். உரிய உயர் தகுதிகள் இருந்த போதும் இயக்குநர் பதவி காலியானபோது அது அவருக்கு வழங்கப்படவில்லை. வெறுப்புற்ற அவர் பதவியிலிருந்து விலகினார். இதே சமயத் தில் திரு. ஸொஹோனியின் விருப்பத்துக்கேற்ப அவரைத் திருமணம் செய்து கொண்டார். பம்பாய் வந்த பிறகு ராயல் விஞ்ஞானக் கழகத்தில் சேர்ந்து இருபத்தைந்து ஆண்டுகள் பணிபுரிந்தார். அந்நிறுவனத்தின் இயக்குநரான முதல் பெண்ணும் அவர்தான். விஞ்ஞானியாக அவருடைய வாழ்க்கை உன்னதமானது; பல `முதல்’களைக் கொண்டது. ஆனாலும், ஆண்களால் ஆதிக்கம் செய்யப்பட்ட ஒரு நிறுவனத்தில் அவருக்கு பல வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டதையும் அவர் குறிப்பிடத் தயங்குவதில்லை.
சத்துணவு தொடர்பான ஆய்வுக்கு அவர் வழங்கிய பங்களிப்பு மிக பெரிது; பயறு வகைகள், பனை பொருட்கள், அரிசி மாவு ஆகியவற்றின் சத்துக்களைப் பற்றி அவர் ஆழமான ஆய்வுகளைச் செய்தார். ஓய்வு பெற்ற பிறகும்கூட நுகர்வோர் சங்கங்கள் உள்ளிட்ட பல செயல்பாடுகளில் தன்னுடைய கௌரவ சேவையை வழங்கி வந்தார்; உணவுக் கலப்படத்தை சோதனையிடும் ஒரு கருவியை வடிவமைப்பதில் அவர் முக்கியப் பங்காற்றினார். 13,14
2. டாக்டர் கமல் ரணதிவே (சமர்த்)
“உன்னுடைய தொழிலுக்குதான் முதலிடம். அப்புறமாக ஒரு டாக்டரைத் திருமணம் செய்து கொள்ளலாம்; உன்னுடைய தொழிலில் அவர் நல்ல துணையாக இருக்கலாம்” – மருத்துவப்படிப்புக்கு பதிலாக பி.எஸ்சி. படிக்க விரும்பிய கமலிடம் அவருடைய அப்பா பேராசிரியர் சமர்த் சொன்ன வார்த்தைகள் இவை; தான் காதலித்த ஒரு கணிதவியலாளரைத் திருமணம் செய்து கொள்வதற்காக கமல் பி.எஸ்சி. படிக்க விரும்பினார். தன்னுடைய மகள் டாக்டராகி, பொருளாதாரச் சுதந்தரம் பெற்று, தொழிலில் முன்னேறிப் பிறகு கணவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரும்பிய ஒரு அப்பாவை இங்கு காண்கிறோம். இது எத்தனை பெரிய மாற்றம்!
தாவரவியலில் எம்.எஸ்சி. பட்டம் பெற்ற பிறகு டாக்டர் (திருமதி) ரணதிவே 1943ல் புற்றுநோய் ஆய்வுக் கழகத்தில் சேர்ந்து திசு வளர்ப்புக்கான சோதனைச்சாலை ஒன்றை நிறுவினார். புற்றுநோய் மற்றும் தொழுநோய் ஆய்விற்குத் தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்து இத்துறையில் முன்னோடி விஞ்ஞானி ஆனார். `செயல்முறை உயிரியல்’ என்ற ஒரு புதுப் பாடப்பிரிவையும் அவர் அறிமுகப்படுத்தினார்; சூழல் கேடுகளால் வரும் புற்றுநோய், செல்லியல், சோதனை ரீதியிலான புற்றுநோய்த் தோற்றவியல், நோய்த் தடுப்பியல், செல் இயக்கவியல், கதிரியக்க சிகிச்சை முறை போன்ற துறைகளில் பல விஞ்ஞானிகளுடைய ஆய்வை வழிநடத்தினார்; இதன்மூலம் கொடிய நோயான புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் ஆய்வுப் பணியைத் தொடர விஞ்ஞானிகளின் குழு ஒன்றுக்குப் பயிற்சியளித்தார்.15 புற்றுநோய் மற்றும் தொழுநோய் தொடர்பான ஆராய்ச்சிக்கு அவருடைய உயரிய பங்களிப்புக்காகப் பல விருதுகளை பெற்றார்; இந்திய மருத்துவக் கவுன்சிலின் முதல் வெள்ளி விழா ஆராய்ச்சிக்கு விருது (1964), அவருடைய புகழுக்கு அணி சேர்த்த பத்மபூஷன் (1982) ஆகியவை அவற்றில் சில.16
பதவியிலிருந்து ஓய்வு பெற்றபிறகு விஞ்ஞானத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்கும், நமது சமுதாயத்துக்கு விஞ்ஞான மனோபாவத்தை வழங்குவதற்கும் கமல் தன்னுடைய வாழ்க்கையை முழவதுமாக அர்ப்பணித்துக் கொண்டார். ஆரோக்கியம் பேணுதல், சுகாதாரம், சத்துணவு, கணிதம், குடும்பக்கட்டுப்பாடு போன்றவற்றில் பெண்கள், குழந்தைகள், ஆண்கள் ஆகியோருக்குக் கல்வி புகட்டுவதற்காகவும் இவை குறித்த முகாம்களை நடத்தவும் அவர் மகாராஷ்டிரத்தின் தொலைதூர கிராமங்களுக்கு அடிக்கடி போகிறார். கிராமப்புற பெண்களுக்கான விஞ்ஞான கேந்திரங்களையும், ஆண்களுக்கான பாரத இளைஞர் கேந்திரங்களையும், கிராமப்புற மக்களுக்காக இயங்கும் ஒருங்கிணைந்த மருத்துக்கல்வித் திட்டம் ஆகியவற்றையும் அவர் நிறுவியுள்ளார்.17
3. டாக்டர் ராதா பந்த் (அய்யர்)
மருத்துவப்படிப்பில் சேரத் தகுதியான வயதைவிடவும் குறைவான வயதுயுடையவராக ராதா இருந்ததால், டாக்டர் ஸொஹோனியைப் போலவே இன்டர் மீடியட் விஞ்ஞானப் பிரிவில் சேரப் போராடவேண்டியிருந்தது. செயின்ட் ஸ்டீஃபன் கல்லூரியின் முதல்வர் ஒரு பெண்ணை அனுமதிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். டெல்லியிலுள்ள இந்து கல்லூரியின் முதல்வர், இன்னொரு பெண்ணைக் கல்லூரியில் சேர அழைத்து வந்தால் இடம் தருவதாக ஒப்புக்கொண்டார். ராதாவும் பல பெண்களிடம் பேசிப் பார்த்தார் அவர்களுடைய பயிற்சிக் கட்டணத்தைத் தானே கட்டுவதாகவும் சொல்லிப் பார்த்தார்; ஆனால் ஒருவரும் இன்டர்மீடியட் விஞ்ஞானப்பிரிவில் சேர முன்வரவில்லை. மன உறுதி குலையாத ராதா முப்பத்தாறு மணிநேரம் உண்ணாவிரதம் இருந்தார். மனம் நெகிழ்ந்த அவருடைய அம்மா, இந்து கல்லூரி முதல்வரிடம்போய் மீண்டும் இடம் கோருமாறு அவருடைய அப்பாவைக் கட்டாயப்படுத்தினார். இறுதியில் முதல்வரும் ராதாவைச் சேர்த்துக்கொள்ள ஒப்புக்கொண்டார். ஆனால் சம்பந்தப்பட்ட ஆசிரியர் அவருடன் துணை வந்தபடிதான் அவரால் வகுப்புக்குப் போகமுடிந்தது. துவக்கத்தில் விசிலடித்தும், கெக்கலித்தும் கேலிபண்ணிய மாணவர்கள் அவர் உயர் மதிப்பெண்கள் பெற்றபோது தங்களுடைய கேலியை நிறுத்தியது மட்டுமின்றி அவரை மதிக்கவும் தொடங்கினார்கள் (1933-35).
செயின்ட் சேவியர் கல்லூரியில் பயில ராதா பம்பாய் வந்தபோது, டில்லியைவிட இனிமையான சூழல் அங்கிருப்பதைக் கண்டார். பின்னர் ராயல் விஞ்ஞானக் கழகத்தில் பிஎச்.டி. மாணவியாக ஆன அவர் கிடைத்தற்கரிய பல்கலைக்கழக ஆய்வு உதவியை நான்கு ஆண்டுகள் பெற்றார்.
வயதுக்கு வருவதற்கு முன்பாகவே அவருக்குத் திருமணம் செய்விக்காததால் அவர்கள் குடும்பத்தின் எந்தச் சடங்குகளையும் நடத்த மாட்டோம் என்று சனாதன பிராமணர்கள் பயமுறுத்தினார்கள். ராதாவின் அப்பா அது பற்றி கவலைப்படவில்லை. பிஎச்.டி. முடித்த பிறகு (1938), அவர் ஜி. எஸ். மருத்துவக் கல்லூரியிலும், ஹாஃப்கின் நிறுவனத்திலும் பணியாற்றினார். நேர்காணல் இல்லாமலேயே அலகாபாத் பல்கலைக்கழகம் அவருக்கு விரிவுரையாளர் பதவியையும் அவர் கேட்ட எல்லா வசதிகளையும் கொடுத்தது. பெற்றோர்களின் சம்மதத்துடன் தாவரவியலில் விரிவுரையாளராக இருந்த பந்த் என்பவரை மணந்து அலகாபாதிலேயே வசித்தார். பந்த் குடும்பத்தினர் மகாராஷ்டிரத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள்; குமாவுனில் வசித்தார்கள். சிறந்த ஆசிரியராகவும், உயிர்வேதியியலில் சிறந்த ஆய்வாளராகவும் ராதா விளங்கினார். அவருடைய பெற்றோர்கள் அவருடன் தங்கி அவருடைய குழந்தைகளைக் கவனித்துக்கொண்டார்கள்.18
4. சாந்தா காந்தி
ஒரு மகளின் கல்விக்கு ஒரு தந்தை தரவேண்டிய தார்மீக மற்றும் பொருளாதார ஆதரவுக்கு இன்னொரு உதாரணம் சாந்தா. அவருடைய அப்பா ஒரு பொறியியலாளர். குழந்தைப் பருவத்தில் அணைக்கட்டுக்கள் மற்றும் பாலங்களின் மாதிரிகளை வைத்து விளையாடினார் சாந்தா. அவர் பிறந்த உடனேயே அவருடைய தாத்தா இறந்து போனதால் மூடநம்பிக்கைக்குப் பலியானார். ஐந்து வயதில் அவர் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்மூலம் அவர் வேறு குடும்பத்தைச் சேர்ந்தவராகி விடுகிறார்; காந்தி குடும்பத்துக்கு இனி வேறெந்த உற்பாதங்களும் ஏற்படாது என்பதுதான் அந்த மூடநம்பிக்கை. பதினோரு வயதில் அவருடைய படிப்பு நிறுத்தப்பட்டது; ஒரு மருமகள் அவளுடைய கணவனைவிட அதிகம் படிக்கக்கூடாது என்பதுதான் காரணம். பிறகு 1929ல் அவர் திருமண நிச்சயத்தை முறித்து விட்டு தன்னுடைய கல்வியைத் தன் தந்தையின் அனுமதியோடு தொடர்ந்தார். அவர் ஒரு மருத்துவராக ஆகி பொருளாதார சுதந்திரம் பெற வேண்டும் என்று அவருடைய தந்தை விரும்பினார். ராயல் விஞ்ஞானக் கழகத்தில் சேர்ந்த அவர் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதால் மருத்துவம் படிக்க லண்டனுக்கு அனுப்பப்பட்டார். அங்கும் அவருடைய அரசியல் நடவடிக்கைகள் தொடர்ந்ததால் `கம்யூனிஸ்ட்’ என்று தவறுதலாக முத்திரை குத்தப்பட்டார். இது குறித்து கவலைப்பட்ட அவருடைய அப்பா அவரைத் திரும்ப அழைத்துக் கொண்டார். சாந்தா ராயல் விஞ்ஞானக் கழகத்தில் சேர்ந்து பி.எஸ்சி. தாவரவியல் முடித்தார் (1939). `ஒட்டுண்ணிக்கு ஆதாரமான மூலம் மற்றும் ஒட்டுண்ணிக்கு இடையிலான தொடர்பு’ என்ற தலைப்பில் எம்.எஸ்சி. மரபியல் படிக்க அவருக்கு உதவித்தொகை கிடைத்தது. ஆனால் லண்டனில் அவர் சந்தித்த ஆங்கில வரலாற்று நிபுணரைத் திருமணம் செய்து கொண்டதால் படிப்பைத் தொடர முடிய வில்லை; கணவருடன் லாகூர் சென்றுவிட்டார். மிகுந்த புத்தி கூர்மையுடைய அவருடைய கணவர் விக்டர், இந்தியாவில் தன்னுடைய பணி சுவாரஸ்யமாக இல்லாததால் லண்டன் திரும்பிவிட முடிவு செய்தார். சாந்தா தன்னுடைய தேசப்பற்று காரணமாக இந்தியாவிலேயே தங்கி மக்களுக்குச் சேவை செய்ய விரும்பியதால் பரஸ்பர புரிந்து கொள்ளலோடு இருவரும் பிரிந்து விட்டார்கள்.19
சாந்தா காந்தியின் வாழ்க்கையே ஒரு பரிசோதனை; நாடு அவருக்கு ஒரு சோதனைச்சாலை. அவர் நாட்டியமும், நாடகக்கலையும் கற்றார்; கலைகளும் விஞ்ஞானமும் இணைந்த கலவையின் மூலமாக வாழ்க்கையின் ரகசியங்களைக் கண்டுபிடிக்க ஆய்வு செய்தார். சிறுவர்களுக்கான கல்வியில் சோதனைகள் செய்ய ஆரம்பித்தார். சிறுவர் குழுக்களோடு பணியாற்றிய அவர் பால பவன் என்ற அமைப்பை நிறுவினார். கலைகளும் விஞ்ஞானமும் ஒருங்கிணைக்கப்பட்ட கற்கும் முறைகளை உருவாக்கினார். இதன் மூலம், தங்களைப் பற்றியும், சுற்றுச்சூழல் பற்றியும், இந்திய கலாச்சாரத்தின் உண்மையான மதிப்பீடுகள் குறித்ததுமான விழிப்புணர்வை குழந்தைகள் பெறவேண்டும் என்று அவர் விரும்பினார்.
வசதியற்ற குழந்தைகளுக்கான ஒலி – ஒளி மூலமான ஒரு கல்வித் திட்டத்தை வளர்த்தெடுக்கும் AVEHI என்ற நிறுவனத்தோடு தற்போது அவர் இணைந்து பணியாற்றி வருகிறார்.20
5. டாக்டர் மாலதி பைச்வால் (வாங்கிகர்)
மாலதி வாங்கிகரின் தந்தை ஒரு மருத்துவர். அவருக்கு வரும் மருத்துவம் தொடர்பான தகவல் ஏடுகள் உயிரியல் விஞ்ஞானங்களில் மாலதிக்கு ஆர்வத்தை உண்டாக்கின. பி.எஸ்சி. பட்டம் பெற்றபிறகு, மாதுங்காவில் இருந்த வேதியியல் தொழில்நுட்பவியலுக்கான பல்கலைக்கழகத் துறையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இரண்டாண்டு பி.எஸ்சி. (தொழில்நுட்பவியல்) படிப்பில் சேர்ந்தார். அவருடைய பெற்றோர்கள் அவரை ஊக்குவித்தார்கள். பம்பாயில் படிப்பது அவருடைய பார்வையை விரிவாக்கும் என்றும், எம்.எஸ்சி. படிப்பை பூனாவில் படிப்பதைவிடவும் அது சிறந்ததாக இருக்கும் என்றும் நினைத்தார்கள். நளினி கைதோண்டே என்ற ஒரு தோழியுடன் அவர் பெண்களுக்கான விடுதியில் தங்கினார். அவர்கள் இருவரையும் பார்த்து அவர்களுடைய சகாக்கள் ஏளனம் செய்து சிரித்தார்கள். அவர்களுடைய வகுப்பு மாணவர் ஒருவர் ஒருமுறை, “இந்த தொழில்நுட்பப் படிப்பை வைத்துக்கொண்டு என்ன செய்ய போகிறீர்கள்? கல்யாணம் செய்துகொண்டு நான்கு சுவர்களுக்குள் அடைபட்டிருக்கப் போகிறீர்கள்,” என்று சொன்னாராம். ஆனால், மாலதி, டாக்டர் பைச்வாலைத் திருமணம் செய்து கொண்டபிறகு பல்கலைக்கழக வேதியியல் தொழில்நுட்பத் துறையில் போதித்தார்; பல மாணவர்களுக்கு ஆய்வு வழிகாட்டியாக இருந்தார்; S,.N.D.T.பெண்கள் பல்கலைக்கழகத்தின் சி.யு. ஷா மருந்தியல் கல்லூரியின் முதல்வராக இருந்தார். பணியிலிருந்து ஓய்வு பெற்றபிறகும் ஆலோசகராகத் தொடர்கிறார்.
இவருடைய தோழியான நளினி கைதோண்டே குடும்பச் சூழ்நிலைகளால் திருமணம் செய்து கொள்ளவில்லை. 1948ல் எம்.எஸ்சி. (தொழில் நுட்பவியல்) முடித்தபிறகு டெல்லியிலுள்ள லேடி ஹார்டிங் கல்லூரியில் பணிபுரிந்தார்; குடும்பத்தின் அரவணைப்பு அவருக்குக் கிடைக்கவில்லை; மாறாக அவர் பொருளாதார ரீதியில் குடும்பத்தை ஆதரித்தார். அதன்பிறகு பம்பாய் வந்து மருத்துவமனைகளில் பணியாற்றினார். இன்றைக்கு இருப்பதைப்போல மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் இல்லாத ஒரு காலத்தில் அவரே தேவையான மருந்துகளைத் தயாரித்தார்.21,22
6. டாக்டர் மாதுரிபென் பவசார்
பி.எஸ்சி. (வேதியியல், இயற்பியல்) முடித்தபிறகு தொழில்நுட்பவியல் படிப்பைத் தேர்ந்தெடுத்த பெண்ணிற்கு இன்னொரு உதாரணம் மாதுரிபென். 1949ல் அவர் பி.எஸ்சி. (தொழில் நுட்பவியல்) பட்டமும், 1951ல் எம்.எஸ்சி. (தொழில்நுட்பவியல்) பட்டமும் பெற்று சாயங்கள் தொடர்பான ஆய்வைச் செய்தார். பிஎச். டிக்குப் பிறகு ஆசிரியர் தொழிலில் முழுமனதுடன் ஈடுபட்டார். சிறந்த ஆசிரியர் என்று பெயர் பெற்றதால் ஓய்வு பெற்ற பிறகும் அவரை விரிவுரையாற்ற அழைக்கிறார்கள்.
அவருக்கு ஒரு சகோதரர் இருந்தும்கூட பெற்றோர்களையும், அத்தையையும் அவர் அன்புடன் பணிவிடை செய்து பார்த்துக் கொண்டார். வயதான பெற்றோர்களைக் காக்க ஒரு மகன் வேண்டும் என்ற நம்பிக்கையைப் பொய்யாக்கினார். அவருடைய பெற்றோர்களுக்கு மாதுரி பென் ஒரு மகனைப் போலத்தான்.
விஞ்ஞானக்களமும், அதைவிட தொழில்நுட்பவியலும் பிரத்யேகமாக ஆண்களுக்கானவை என்ற நிலை முன்னும் இருந்தது; இப்போதும் இருக்கிறது. தொழிற்சாலைகளின் பெருக்கத்திலும், அதன் வழியாகப் பொருளாதார முன்னேற்றத்திலும், வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதிலும் தொழில்நுட்பவியல் ஒரு முக்கியப் பங்கை ஆற்றுகிறது. இந்த வகையில் இந்த பெண் தொழில்நுட்பவியலாளர்கள் தங்களுடைய நிலையை உயர்த்திக் கொண்டது மட்டுமன்றி, நாட்டிற்கும் அரிய சேவையைச் செய்தார்கள்.23
7. டாக்டர் லிலிபென் தேசாய்
லிலி தேசாய் ராயல் விஞ்ஞானக்கழகத்தின் மாணவி. அவருடைய தந்தையும் ஒரு விஞ்ஞானி. லிலி தேசாய் வேதியியலில் பிஎச்.டி. பட்டம் பெற்றபிறகு அவருக்காக ஒரு சிறு வேதியியல் தொழிற்சாலையை அவருடைய அப்பா நிறுவிக் கொடுத்தார். இதன்மூலம் அவருக்குப் பொருளாதார சுதந்தரமும், அவர் பெற்ற அறிவை பயன்படுத்தும் வாய்ப்பும் கிட்டும் என்று அவருடைய அப்பா எண்ணினார். அவரைப் பொறுத்தவரை ஓய்வுபெறும் வயது என்று ஒன்றில்லை; தன் பணியை நேசிப்பதால் அவர் தொடர்ந்து உழைக்கிறார்.24
8. டாக்டர் ஸ்மிதா ராய் (பரணி)
மேற்சொன்னவற்றிலிருந்து வேறுபட்டது ஸ்மிதாவின் கதை. கட்ச் வியாபாரக் குலத்தில் பிறந்தவர் அவர். அவ்வினத்தில் ஆண்களின் கல்வியே பள்ளி அளவில் நின்றுவிடும். குடும்ப வியாபாரத்தைக் கவனித்துக் கொள்ளவும் வேறு எங்கும் வேலை தேடவேண்டிய அவசியம் ஏற்படாதிருக்கவும் ஒருவேளை இப்படி நடக்கலாம். குழந்தைப் பருவத்தில் தனக்குச் செய்விக்கப்பட்ட திருமண நிச்சயத்தை மேற்கொண்டு படிப்பதற்காக உடைத்தெறிந்தார். உண்மையில் அவருடைய பெயர் ஸகர்பென்; ஆனால் பிறகு அதை ஸ்மிதா என்று மாற்றிக்கொண்டார்; ஏனென்றால் அழகான பெயர்கள் மீது அவருக்கு மோகமாம். இருபத்தைந்து முதல் முப்பது பத்திரிகைகளுக்கு அவருடைய குடும்பத்தினர் சந்தா கட்டியிருந்தார்கள். அவற்றில் பெரும்பாலானவற்றை அவர் படித்து விடுவார். இப்படியாகப் படிக்கவும், அறிவையும் படைப்பாற்றலையும் பெறவும் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். 1945ல் ராயல் விஞ்ஞானக் கழகத்தில் பி.எஸ்சி. பட்டம் பெற்றபிறகு, டாக்டர் சித்ரேயின் வழிகாட்டுதலில் எம்.எஸ்சி. படிப்புக்கு அவர் ஜி. எஸ். மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். முளைவிட்ட தான்யங்களிலுள்ள நிகோடினிக் திராவகத்தின் ஊன்ம ஆக்கச்சிதைவு மாறுபாட்டு அம்சங்களை (Metabolic aspects), குறிப்பாக ஊட்டச்சத்து மதிப்புகளை ஆய்வு செய்தார். இதே ஆய்வை இன்னும் விரிவாக பிஎச்.டி. பட்டத்திற்குச் செய்தார். அறிவுக்கூர்மை நிரம்பிய மாணவியான அவர் மாணவப் பருவம் முழுவதும் பல உதவித்தொகைகளைப் பெற்றார். அவருடைய இனத்தில் அவர்தான் முதல் பட்டதாரியும், முதல் பிஎச்.டி. பெற்றவரும் ஆவார்.
S.N.D.T. பெண்கள் பல்கலைக்கழகத்தில் உணவு விஞ்ஞானம் மற்றும் ஊட்டச்சத்துத்துறையில் விரிவுரையாளராகவும், பிறகு இணைப் பேராசிரியராகவும், இறுதியில் துறைத் தலைவராகவும் ஆனார். ஆசிரியர்களுக்கான ALIS என்ற திட்டத்தின் கீழ் அவர் ஸ்காட்லாந்தில் ஆறு வாரங்கள் தங்கி யிருந்தார்.
தன்னுடைய நண்பர் ஓருவர் வீட்டில் சந்தித்த வங்காளியான டாக்டர் பி. கே. ராய் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்; அதிகம் படித்த பெண்களைப் போற்றும் இயல்புடையவர் அவருடைய கணவர்.25
9. டாக்டர் சாந்தூ குர்னானி
நாம் மேலே குறிப்பிட்ட பெண்களில் பெரும்பாலோருக்கு தங்கள் தந்தையாரின் ஆதரவும் பண உதவியும் கிடைத்திருந்தன. ஆனால் சாந்தூ குர்னானியின் வாழ்க்கையோ முட்கள் நிறைந்தது. பத்து வயதாயிருக்கும்போதே சாந்தூவின் தந்தை அவளது எதிர்ப்பையும் மீறி பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டார். சாந்தூ வீட்டிலிருந்தபடியே படித்து பஞ்சாப் மெட்ரிக் தேறினாள். தனது சகோதரர் மற்றும் தம்முடைய கல்விக்காகத் தையல் வேலையும் ஆசிரியர் தொழிலையும் மேற்கொண்டார். பிரிவினைக்குப் பின் அவர் குடும்பம் கராச்சியிலிருந்து இந்தியாவுக்கு வந்தது. கல்லூரியில் நுழையச்சிரமம் ஏற்பட்டதால் பிரதம மந்திரி நேருஜிக்கு எழுதினார். ஆக்ரா கல்லூரியில் இடம் கிடைத்தது. மேற்கொண்டு படிப்பதற்காக பம்பாய் வந்து சென்ட்ரல் ஸ்டேஷனின் பிளாட்பாரத்தில் தங்கினார்; பொரிகடலைதான் உணவு. படிப்பதற்கு ஏற்ற கல்லூரியைத் தேடத்துவங்கினார். செயின்ட் சேவியர் கல்லூரியில் உயிரியல் பயில இடம் கிடைத்தது. கல்யாணிலிருந்த அகதிகள் முகாமில் தங்கி படித்துவந்தார். கல்லூரிக் கட்டணத்துக்காக மீண்டும் தையல் வேலையை மேற்கொண்ட அவர் நண்பர்களிடமிருந்து புத்தகங்களைக் கடனாகப் பெற்று, தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்தார்.26
பின்னர் வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைத்தது; திரும்பியதும் பம்பாய் பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றினார். புரோட்டீன் வேதியலில் ஈடுபட்டு நிறைய மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தார். உயிர்வேதியியல் துறையில் புகழ்பெற்று விளங்கினார். `வாழ்வின் குறிக்கோள்’ பற்றிய தேடலில் அவர் ஆழமாக ஈடுபட்டு வருகிறார். சின்மயா மிஷினில் சேர்ந்து பிரம்மச்சாரினி வந்தனா சைதன்யாவாக அறிவியலுக்கும் சமயத்துக்கும் உள்ள தொடர்பை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.27
உதவிய நூல்கள்
1. Chameli, Basu (1975), ‘Women’s Emancipation in Bengal’, in Down the Memory Lane Commemorative Vol. Indian Women Scientists’ Association, International Women’s Year, Arcee Press, New Delhi. p.45.
2. Dongerkery S.R. (1967), “Women in the Universities”, Chapter XVIII, in University Education in India, Manaktalas, Bombay. p.257.
3. Chameli Basu, op.cit. p.145,146.
4. Dongerkery S.R. (1967), op.cit. p.247, 258.
5. Bombay University Calendar, 1908 to 1939.
6. Catalogue Section, Bombay University.
7. Fourth Five Yearly Report of the Royal Institute of Science, Bombay 1937-42.
8. Fifth Five Yearly Report of the Royal Institute of Science, Bombay 1942-47.
9. Golden Jubilee Commemoration Volume (hereafter G J C V) (1971) Institute of Science, Bombay, Ed.Prof. R. N. Usgaonkar. The Government Central Press, Bombay.
10. Catalogue Section, op.cit.
11. Fourth five yearly Report, op.cit.
12. G.J.C.V. op.cit.
13. Personal Communication.
14. Kamala Sohoni (1957) “Work with Double Vigour”in Down the Memory Lane, op.cit. pp 7-12.
15. Kamal J. Ranadive (1975), ibid pp 18-29.
16. Personal Communication.
17. Kamal J. Ranadive (1989) ISWA Newsletter, pp-5-8.
18. Radha Pant (1975)”Ever a Fighter”, Down the Memory Lane, op.cit.pp 40-53.
19. Shanta Gandi(1975) “‘And the Walls Dissolve”‘ , ibid pp 1-6.
20. Personal Communication.
21. Malati R. Baichwal (1975) “I love Science”, Down the Memory Lane, op.cit. pp 86-93.
22. Personal Communication.
23. ibid.
24. ibid.
25. ibid.
26. Shantoo Gurnani (1975) ” Where There is a Will, There is A Way”. Down the Memory Lane op.cit. pp 54-61.
27. Personal Communication.
குறிப்பு:
இந்தப் பிரதியும் ஓவியங்களும், புகைப்படங்களும் ஸ்பாரோ அமைப்பின் காப்புரிமைக்கு உட்பட்டவை. இவற்றை யாரும் எந்தத் தளத்திலும் வேறு எந்தப் பதிப்பிலும் உபயோகிக்க அனுமதி இல்லை.
ஆங்கில பிரதி உருவாக்கம் : சி. எஸ். லக்ஷ்மி
தமிழ் தொகுப்பு : அ. ஸ்ரீனிவாஸன் , எம். சிவசுப்ரமணியன்
புகைப்பட உதவி : ப்ரியா டிஸுஸா
Remarkable contributors. It shows their deep passion for Science and Research. They braved all troubles. Young girls should read such inspiring narratives and set high goals .