- மிளகு
- மிளகு – அத்தியாயம் இரண்டு (1596)
- மிளகு – மிர்ஜான் கோட்டை
- மிளகு -அத்தியாயம் நான்கு
- மிளகு: அத்தியாயம் ஐந்து
- மிளகு – அத்தியாயம் 6
- மிளகு
- மிளகு: அத்தியாயம் எட்டு – 1999: லண்டன்
- மிளகு – அத்தியாயம் ஒன்பது – 1999 லண்டன்
- மிளகு – அத்தியாயம் பத்து – 1596 மிர்ஜான் கோட்டை
- மிளகு – அத்தியாயம் பதினொன்று
- மிளகு – அத்தியாயம் பனிரெண்டு
- மிளகு அத்தியாயம் பதின்மூன்று
- மிளகு அத்தியாயம் பதினான்கு
- மிளகு: அத்தியாயம் பதினைந்து
- மிளகு -அத்தியாயம் பதினாறு
- மிளகு – அத்தியாயம் பதினேழு
- மிளகு அத்தியாயம் பதினெட்டு
- மிளகு அத்தியாயம் பத்தொன்பது
- மிளகு – அத்தியாயம் இருபது
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்று
- மிளகு அத்தியாயம் இருபத்திரண்டு
- மிளகு அத்தியாயம் இருபத்திமூன்று
- மிளகு – அத்தியாயம் இருபத்துநான்கு
- மிளகு அத்தியாயம் இருபத்தைந்து
- மிளகு அத்தியாயம் இருபத்தாறு
- மிளகு – அத்தியாயம் இருபத்தேழு
- மிளகு – அத்தியாயம் இருபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் முப்பது
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்தி நான்கு
- மிளகு அத்தியாயம் முப்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் முப்பத்தாறு
- மிளகு அத்தியாயம் முப்பத்தேழு
- மிளகு அத்தியாயம் முப்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் நாற்பது
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்று
- மிளகு-அத்தியாயம் நாற்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் நாற்பத்திநான்கு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் நாற்பத்தாறு
- மிளகு – அத்தியாயம் நாற்பத்தேழு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தொன்று
- மிளகு – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு
- மிளகு-அத்தியாயம் ஐம்பத்திமூன்று
- மிளகு -அத்தியாயம் ஐம்பத்திநான்கு
1999 அம்பலப்புழை
திலீப் எழுந்து முன்னறைக்கு வரும்போது காலை ஏழு மணியும் சில நிமிடங்களும் ஆகி இருந்தது. பரமேஸ்வரன் என்ற பரமன் சித்தபுருஷராக கட்டிலுக்கு மேலே ஒண்ணரை அடி உயரத்தில் மிதந்து கொண்டிருப்பார் என்று ஏனோ தோன்ற இரண்டாம் படுக்கை அறைக்குப் போய்க் கதவைத் தள்ள அது திறந்து கொண்டது . பரமன் அங்கே இல்லை.
அப்பாவின் மறுவரவு முடிந்து விட்டிருக்கலாம் என்று அசிரத்தையோடு நினைத்தபடி வெளியே வரும்போது படுக்கை அறையோடு இணைந்த டாய்லெட் கதவு திறக்க, பரமன் வெளிப்பட்டார்.
“கமோட் வெளியே கொஞ்சம் அசுத்தம் பண்ணிட்டேண்டா திலீப். ஒரு துடைப்பமும், வாளியும், பினாயிலும் கொடு. சுத்தம் பண்ணிடறேன்.
நைச்சியமாகச் சிரித்தபடி சுவரைப் பிடித்துக்கொண்டு நின்றார் அவர். அப்போது தான் தாங்கு கட்டைகள் படுக்கையிலேயே இருப்பது திலீப்பின் கவனத்துக்கு வந்தது. அடடா, இவர் எப்படி கழிவறைக்குப் போய் வருவார் என்று யோசிக்காமல் விட்டுவிட்டேனே என்று மனம் மருகினார் திலீப் ராவ்ஜி.
“வேணாம்ப்பா. அவசர துப்புரவுக்குன்னு ஃப்ளாட் சிஸ்டத்துலே ஒரு குழு இருக்கு. சொன்னா ஹோஸ்பைப், பினாயில் எல்லாம் கொண்டு வந்து உடனே சுத்தப்படுத்திக் கொடுத்திடுவாங்க”

இவரையும் திலீப் உறங்கிய பெரிய படுக்கை அறையிலேயே படுக்க வைத்திருக்கலாம். கழிப்பறை பயன்படுத்த கைத்தாங்கலாகக் கொண்டுபோய் விட்டுக் கூட்டி வந்திருக்கலாம்.
”அப்பா ஐ ஆம் சாரி. எனக்குத் தோணலை நீ எப்படி பாத்ரூமை…”
”அது ஒண்ணும் கஷ்டம் இல்லேடா. நான் காணாமல் போனதுக்கு முன்னாடி அஞ்சு வருஷம் அப்படித்தானே கஷ்டப்பட்டேன், உங்களை கஷ்டப்படுத்தினேன். ஞாபகம் இல்லே போல இருக்கு”.
திலீப் ராவ்ஜிக்கு நினைவு இருந்தன அந்த பாண்டுப் சால் குடியிருப்பு தினங்கள். மனம் பிறழ்ந்த அம்மாவும், கால் போன அப்பாவும், வருமானம் இல்லாத திலீப்பும், இப்போது நினைத்துப் பார்க்க ஏனோ பிடிக்கவில்லை.
”சின்னக் குழந்தை மாதிரி தவழ்ந்துண்டு போனா, பாத்ரூம் என்ன, வேறே எங்கே வேணும்னாலும் போயிட்டு வரலாம். கம்மோடைப் பிடிச்சுண்டு உட்கார்ந்தா போன காரியம் நடந்துடும். சுத்தம் பண்ணிக்கறது தான் கஷ்டம். பல தடவை தரையிலே தவறி விழுந்திருக்கேன். சுத்தி இருந்த அசுத்தத்துலே இடுப்புக்கு கீழே புதைஞ்சு போய் சத்தம் போட்டு உதவிக்குக் கூப்பிட்டதும் உண்டு. In deep shit-ன்னா அதுதான். தாங்கனீகாவில் யாரையாவது கூப்பிட வெள்ளி விசில் கழுத்திலேயே மாட்டி இருக்கும். கீன்யாவிலே இதுக்குன்னே ஒரு ரெண்டுபேர் யூனிட் போட்டுட்டா. பகல்லே ஒண்ணு, ராத்திரி ஒருத்தன்னு டியூட்டி. வருதா வருதான்னு அடிக்கொரு தடவை சிப்பாய் வந்து பார்த்துட்டு போவான். இவனுக்கு வேலை வைக்கணும்கறதுக்காக வந்துடுமா?”
பரமன் பலமாக வாய் விட்டுச் சிரித்ததை இப்போதுதான் திலீப் ராவ்ஜி தன் ஆயுசிலேயே முதல் தடவையாகப் பார்த்திருக்கிறார். இது சிரிப்பாக வேடம் போடும் தன்னிரங்கலாகக்கூட இருக்கலாம்.
ஆக அப்பா கீன்யாவில் இருந்திருக்கிறார். தான்கனீகாவிலும் தான். அது இப்போது தான்ஸானியா இல்லையோ? இவர் அங்கே போனது எப்போது? எப்படி அங்கே போனார்? எத்தனை வருடம் இருந்திருக்கிறார்? என்ன செய்து கொண்டிருந்தார் அங்கே? கொஞ்சம் பொறுத்தால் அவரே சொல்வார்.
எவ்வளவு அதில் நம்புவது? ஆக வழக்கமான ’காணாமல் போய்த் திரும்பும் பெரியவர்களின் இமயமலைக்குத் தவம் செய்யப்போன கதை’ இல்லை இது.
” என்ன ஆகாரம் கழிக்கலாம்? ரெண்டு ஸ்லைஸ் ரொட்டி டோஸ்ட் பண்ணித் தரட்டுமா? இல்லே ஹோட்டல்லே ஃபோன் பண்ணி இட்டலி, வடை கொண்டு வரச் சொல்லட்டுமா?”
திலீப் ராவ்ஜி கேட்டபோது பரமன் ’சாஹர சயன விபோ’ என்று பாகேஸ்ரி ராகத்தில் எம்.டி.ராமநாதன் க்ருதியை மெல்ல ராகம் இழுத்தபடி இருந்தார்.
”எம்டிஆர் பாட்டு இல்லே? வரததாஸ முத்திரை இருக்கே. மெல்ல நகர்ந்தாலும் கேட்க என்ன அருமையா இருக்கு இந்த ஸ்லோயஸ்ட் பாகேஸ்ரி ராகம்? சாஹர சயனன் தூக்கம் வராம புரண்டுண்டு கிடந்தாலும் தூங்கிடுவான்”
திலீப் ராவ்ஜிக்கு இவர் அப்பா என்று உறுதியாகத் தோன்றியது அந்த நிமிடத்தில் தான்.
”ரொட்டித் துண்டும் கருப்புக் காப்பியுமா காலைச் சாப்பாடு முடிக்கறது தான் இதுவரை பண்ணிண்டிருந்தேன். தாங்கனீகாவிலே இருந்து இங்கே வந்ததும் இட்டலி கிடைக்கறதா, வடை கிடைக்கறதான்னு எதிர்பார்த்து நாக்கை நாலு முழம் இழுத்து வச்சுக்க வேணாம் பாரு. உன் உசிதப்படி சொல்லிடு”.
”தாங்கனீகாவிலே என்னவா இருந்தீங்க?”
திலீப் ராவ்ஜி தன்னிச்சையாகக் கேட்டார். பதில் சொல்வார் என்று தெரியும். சொல்லாவிட்டாலும் சரிதான்.
”நானா? எனக்கு தெரிஞ்சதெல்லாம் ஒரே ஒரு வேலை தான். அரசியல் ஆலோசகர். பொலிடிகல் அட்வைஸர். வெளியே விளம்பரப்படுத்தாத பதவியாக இன்காக்னிடோ பொலிடிகல் அட்வைஸர் incognito political advisor”.
அவர் சாஹர சயன விபுவை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். மறுபடி நிறுத்திச் சிரித்தார்.
”தாங்கனீகாவிலே முதல் நாள் ஆபீசுக்குப் போனபோது கட்டை ரெண்டையும் வாசல்லே விட்டுட்டுப் போகணும்னுட்டாங்க. போயிருப்பேன். நாலாவது மாடி. லிப்ட் கிடையாது. உள்ளூர் மகா ஜனங்கள் மாடிப்படி ஏடி இறங்கறது கவர்மெண்ட் கூட தொடர்பு கொள்றதிலே ஒரு அம்சம்னோ என்னமோ, சளைக்காமல் காகிதங்களைத் தூக்கிண்டு ஒரு நாளைக்கு எத்தனை தடவை வேணும்னாலும் படி ஏறுவா. இறங்குவா. நான் எத்தனை தடவை தவழ்றதாம்?”
”அப்புறம் என்ன ஆச்சு?”
திலீப் ராவ்ஜிக்கும் இது எங்கே போய் இப்போதைக்கு நிறைவடையும் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டிருந்தது.
”போன் போட்டுத்தரச் சொன்னேன். நான் நடந்து வந்து ஆபீஸ்லே உட்கார்ந்து வேலை பார்க்கத்தான் சம்பளம் கொடுக்கப் போறா. தவழறதுன்னா இன்னும் கொஞ்சம் வேண்டி வரும். அப்புறம் ஒண்ணு. இன் காக்னிடோன்னா ஆள் இருக்கறதைச் சொல்லாமல் இருக்கற ஜீவிதம், வேலை. இன் காக்னிட்டோவுக்கும் பசிக்கும். பாத்ரூம் போக வேண்டியிருக்கும். தேவையானதை செஞ்சுட்டு கூப்பிடுங்கோ. நான் வாசல்லேயே இருக்கேன்”.
அப்புறம் என்ன ஆச்சு?
“அப்படிச் சொன்ன ரெண்டாம் நிமிஷம் ரொட்டி வந்தது. காப்பி வந்தது. ஒரு பெரிய நாற்காலியைத் தூக்கிண்டு நாலு பேர் வந்து என்னைத் தூக்கி வச்சு நாலு மாடியும் ஏலேலோ ஏலேலோன்னு ஏறி, கொண்டு போய் என் ஆபீஸ் ரூம்லே விட்டுட்டா. கட்டைகளை அடுத்துக் கொண்டு வந்தா. ஒருநாள் கூட இது நடக்காம இல்லே”.
அவர் பெருமையோடு சொல்லி அதெல்லாம் பழங்கதைடா என்று தாங்கு கட்டைகளுக்காகக் கைகாட்டினார். திலீப் ராவ்ஜி அவரைக் கைத்தாங்கலாகப் படுக்கையில் உட்கார வைத்தார். கட்டைகளை அவர் கட்டிலில் இருந்து எடுத்து செல்லமாகத் தடவி முழங்காலின் குறுக்கே போட்டுக்கொண்டார்.
“எத்தனை எத்தனை சின்னச் சின்ன ஆப்பிரிக்க தேசங்கள். நீ நம்புவியோ நம்ப மாட்டியோ நம்ம பக்கத்து மாமி கௌரவ ஜனாதிபதியா இருக்கப்பட்ட ஒரு இத்துணூண்டு தேசம் இருக்கு. மொரீஷியஸ்லே இருந்து குடிபெயர்ந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்திலே இருந்து அதுவும் தென்னிந்தியா குறிப்பா தமிழ் பேசற குடும்பத்திலே இருந்து அந்த நாட்டோட தூதரா டில்லிக்கு வந்த ஒருத்தர் மூலமா நான் அந்த நாட்டுக்கு அரசியல் ஆலோசகனா போக எல்லாம் தயார். ஆட்சி கவுந்துடுத்து. சரி அதெல்லாம் அப்புறம் பேசறேன். என்னை விட்டா பேசிண்டே போவேன். உனக்கு ஆபீஸ் இருக்குமே. ரெடி பண்ணிண்டு கிளம்பு”.
”ஆபீஸா அதெல்லாம் முப்பது வருஷமா கிடையாது . மலையாள பூமிக்கு வந்து சில மாசம் ஒரு இடத்திலே வேலை பார்த்தேன். அது முடிஞ்சு ஹோட்டல், ஹோட்டல் ஹோட்டல் தான். இப்போ தான் மிளகு சாகுபடி. சரி நானும் உங்களை ஒரே நாள்லே எல்லாம் சொல்லிக் கஷ்டப்படுத்தக் கூடாது. அப்போ அப்போ கொஞ்சம் கொஞ்சமா சொல்றேன்”.
திலீப் ராவ்ஜி வெளியே நடந்தார்.
ஹாலில் வைத்திருந்த தொலைபேசி சிறு சிறு துணுக்குகளாக மணி சிதறி நின்று நின்று ஒலித்தது. வெளிநாட்டு அழைப்பு. யாராக இருக்கும்? திலீப் ராவ்ஜி யோசித்தபடி நின்றார்.
திலீப் ராவ்ஜியின் மகள் கல்பா இங்கிலாந்தில் இருந்து கூப்பிடுகிறாளோ. நேற்றுத்தானே பேசினாள். லண்டனில் நண்பர் பிஷாரடி கிருஷ்ணன் கோவில் அருகே தங்குமிடம் ஒதுக்கிக் கொடுத்தாரே, சௌகரியம் தானே அதெல்லாம். வேறே யாராக இருக்கும்? தெரிசா சாரதாம்மா லண்டனிலிருந்து பேசுகிறாளா? ஹோட்டலில் கவனித்துச் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் ஏதாவது இருக்கிறதா?
ஹலோ என்றார் படபடக்கும் நெஞ்சோடு.
“அப்பா நான் தான்”.
கல்பா தான்.
“என்ன ஆச்சும்மா? நாளைக்கு லண்டன்லே இருந்து எடின்பரோ போகிறே தானே. அங்கே இப்போதைக்கு தங்க பெட் அண்ட் ப்ரேக்ஃஃபாஸ்ட் bed and breakfast விடுதி கிடைத்ததா?”
ஜில்மோர் ஃப்ளேஸ் தெருவில் அடுத்தடுத்து நிறைய விடுதிகள் இருப்பதை பத்து வருடம் முன் திலீப் ராவ்ஜி லண்டனில் இருந்து எடின்பரோ போனபோது பார்த்திருக்கிறார். தங்கியும் இருந்திருக்கிறார். முசாபரோடு சேர்ந்து செயல்பட்டுத் தெரிசாம்மாவின் மேற்கு யார்க்ஷயர் கால்டர்டேல் நகர வீட்டை விற்றுத் தொகையை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துத் திரும்பி வர சாரதா தெரிசா அவரைக் கேட்டுக்கொண்டபோது தட்ட முடியாமல் வேலை முடித்து ஸ்காட்லாந்து போய் இரண்டு நாள் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தவர் திலீப் ராவ்ஜி.
“அப்பா, காட்மாண்டுவிலே இருந்து தில்லி போய்க்கிட்டிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஹைஜாக் ஆயிடுத்து”
”ஆமாம்மா டெலிவிஷன்லே காலையிலே நியூஸ் பார்த்தேன்”
“அந்த ஃப்ளைட்லே தெரிசாம்மா ஃப்ரண்ட் அண்ட் அப்பா டு மருது சின்னச் சங்கரன் சார் இருக்காராம். அவரோட மகள் பகவதி மருதுவுக்கு ஃபோன் பண்ணினா”.
“ஐயையோ சங்கரன் சாரா?” திலீப் ராவ்ஜி அதிர்ச்சியடைந்து கேட்டார்.
“unfortunately he too is a hostage” என்றாள் கல்பா. “கேரள கவர்மெண்ட் மூலம் சீக்கிரம் முடிக்க ஏதாவது பண்ண முடியுமா? சங்கரன் சாருக்கு பைபாஸ் பண்ணி இருக்கு. மாத்திரை மருந்து ஒழுங்கா எடுத்துக்கணும். இல்லேன்னா இருதய நிலைமை சீரியஸா போயிடும், அம்மா இறந்ததுக்கு அப்புறம் சித்த சுவாதீனம் அவ்வப்போது இல்லாம போயிடறார் இப்படி காரணம் சொல்லி இவரை மட்டும் முதல்லே விடுவிக்க முடியுமா? உனக்கு அங்கே செல்வாக்கு அதிகமாச்சே அப்பா. மருது கேட்கச் சொன்னான்”
”நானா? இட்டலி தோசை வித்து ஏதோ கொஞ்சம் சம்பாதிச்சவன் நான். எனக்குத் தெரிஞ்சவங்கள்லே அவ்வளவு உயர்மட்டத்தில் யாரும் இல்லையே”
”அப்பா, முடியாதுன்னா முடியாதுன்னு சொல்லுங்க. அதுக்காக நம்ப முடியாத அளவு கீழே உங்களை தாழ்த்திக்க வேணாம், கேட்டேளா?”
“எனக்கு யாரை தெரியும் கல்பா தங்கம்?”
“அப்பா, எங்க தாத்தா, that is உங்க அப்பா …. அவர் பெரிய கம்யூனிஸ்ட் தோழரா இருந்துதானே காணாமல் போனார். அவரோட சகாக்கள் யாராவது?”
அவர் திரும்பி வந்துட்டார் என்று சொல்ல நினைத்து வேண்டாம் என்று மனதை அடக்கிக் கொண்டார்.
“மகாராஷ்ட்ராவிலே இயங்கின கம்யூனிஸ்ட் அவர். மாசேதுங் எழுதின சிகப்புப் புத்தகம் மராட்டியிலே மொழிபெயர்த்தது தான் அவரோட பெரிய அச்சீவ்மெண்ட். மாசேதுங்குக்கு அவரைத் தெரியுமோ என்னமோ, மாசேதுங்கை அவருக்கு ரொம்ப நன்னா தெரியும். மாசேதுங் இல்லே இப்போ”
“நோ அப்பா, நோ ஜோக்ஸ். பகவதி பாவம். ஓன்னு அழறா”
“அனந்தன் கிட்டே கேட்கறேன்”
“அண்ணா கட்சியிலே நிறைய விரோதத்தை சம்பாதிச்சிருக்கறதா சொல்வான். “
”அது பாட்டுக்கு அது. உதவி பாட்டுக்கு உதவி”
“தெரியலேப்பா, நீங்க ஏதாவது”
”ஏதாவது செய்ய முடியும்னா இண்டர்நேஷனல் லெவல்லே தான் செஞ்சாகணும். அதுக்குள்ளே பிரதமர் வாஜ்பேயியும் உள்துறை அமைச்சர் அத்வானியும் நிச்சயம் ஏதாவது பண்ணியிருப்பாங்க நிச்சயமா”
“சரிப்பா. ராத்திரி ரெண்டு மணி ஆறது. நான் உறங்கப் போறேன்” கல்பா தொலைபேசியை வைத்து விட்டாள்.
”யார் ஃபோன்லே?”
பரமன் கேட்டபடி வெளியே வந்தார். பழைய தமிழ் சினிமாவில் இடைவேளைக்கு அப்புறம் தத்துவப் பாடல் உச்சக்குரலில் பாடிக்கொண்டு கைகால் இழந்து தாங்குகோல் ஊன்றிக்கொண்டு வரும் தாடிக்கார கதாபாத்திரங்கள் நினைவு வந்தன திலீப் ராவ்ஜிக்கு. தாடியோடு பரமன் அப்பா கார்ல் மார்க்ஸ் மாதிரி தெரிந்தார்.
”உங்க பேத்தி லண்டன்லே இருந்து கூப்பிட்டா. அவ ஃப்ரண்டோட அப்பா டெல்லியிலே காபினட் செக்ரட்டரியா இருந்த சின்னச் சங்கரன் நேற்று சாயந்திரம் ஹைஜேக் ஆன ஃப்ளேன்லே இருக்காராம்”.
”யாரு சங்கரனா? அவரோட நான் பயணம் போயிருக்கேனே” என்றார் பரமன்.
”நான் காணாமல் போனது அந்த ஃப்ளைட்டுலே தான். சங்கரன் என்னை தேடியிருப்பார்”
என்னமோ உளறுகிறார் என்று சும்மா இருந்தார் திலீப் ராவ்ஜி. முதுமை உளறல். நூற்றுப்பத்து வயதில் பேசுவதே அதிகபட்ச காரியம்.
திலீப் ரெண்டு பேர் சாப்பிடும் அளவு கேட்டு சாரதா தெரிசாவின் ஹோட்டலுக்கு ஃபோன் செய்து விட்டு பரமனைப் பார்த்தார்.
”அப்பா இங்கே உக்காருங்கோ, ஹோட்டல்லே இருந்து டெலிவரி பாய் இட்டலி, வடை, தோசைன்னு ஏதாவது எடுத்துண்டு வருவான். பாத்ரூம் க்ளீன் பண்ண அட்மின் அனுப்பிச்ச ஆள் வருவான். ஐடி கார்ட் காட்டச் சொல்லுங்கோ. நீங்க நடக்க வேணாம். அவனே வரட்டும். வாசலுக்கு ஒட்டி இருக்கற சீட். ஆமா அதுதான். அங்கே இருங்கோ. நான் டாய்லெட் போய்ட்டு வந்திடறேன்”
கையில் பத்திரமாகப் பிடித்துப் போன மலையாள மனோரமாவைப் படித்தபடி அவர் நகர, மலையாளப் பேப்பர் படித்து தினசரி காரியங்கள் துவங்கும் தன் மகனை ஆச்சரியமாகப் பார்த்தார் பரமன்.
’எனிக்கு மலையாளம் அறியில்லா’ என்ற ஒற்றை வாக்கியத்தைச் சொல்லி, வருகிறவர்களை சமாளிக்கத் தயாராக பரமேஸ்வரன் என்ற பரமன் ஆவலோடு உட்கார்ந்திருக்க, காலைச் சாப்பாடு எடுத்து வந்த நேப்பாளி பையனும் குளியலறை சுத்தமாக்க வந்த சிக்கிம்காரரும் கை அசைத்து சொல்ல வேண்டியதைச் சொல்லி பரமனுக்கு சிரமமில்லாமல் பார்த்துக் கொண்டார்கள்.
காலைச் சாப்பாடுக்காக டைனிங் டேபிளை அடுத்து எதிரும் புதிருமாக இரண்டு நாற்காலி போட்டு திலீப்பும் பரமனும் இருந்து சாப்பிடத் தொடங்கும்போது வாசலில் அழைப்பு மணிச் சத்தம். அனந்தன் தான்.
”என்ன அப்பா, காலையிலேயே கெஸ்ட் வந்திருக்காங்களா? யார் உங்க மும்பை தோஸ்த் மோதகமா?”
இல்லை என்று புன்சிரித்துத் தலையாட்டும்போது திலீப் ராவ்ஜிக்கு சாம்னா பத்திரிகை ஆபீசில் ஏதோ வேலை செய்யும் மோதக் நினைவுக்கு வந்தார்.
அறுபது கடந்த மோதக் மூலம் மும்பைத் தொடர்பு திலீப்புக்கு இத்தனை வருடம் கடந்தும் நீள்கிறது. சாம்னா அதிபர் இப்போது இல்லை என்றாலும், அங்கே டைப்பிஸ்டாக இருந்த திலீப்பின் மனைவி அகல்யா-தாய் இறந்துபோய் ஐந்து வருஷம் ஆனாலும், மதராஸிகளை விரட்ட திலீப் மராத்தியனாக அவதாரம் எடுத்து, சக மராத்தியனான கஜானன் மோதக்கோடு மதறாஸி ஹோட்டல்களையும், போண்டா, பஜ்ஜி, பருப்பு வடை விற்கும் தட்டுக்கடைகளையும் முற்றுகையிட்டு, இட்டலி தோசை சாம்பாரை கைப்பற்றிப் போன அறுபதுகளின் மிச்ச சொச்ச நினைவுகள் மோதக் உருவில் இன்னும் உண்டு.
முற்றுகையின் போது சாம்பாரும் வடையும் எடுத்துப் போக மோதக் பெரிய சைஸ் பாத்திரங்களோடு ஆஜரான காலங்கள் அவை. மோதக்கின் மனைவி முற்றுகை இட வேண்டிய அவசியமில்லாமல் அவ்வப்போது இட்டலி பண்ணிப் போட்டு இப்போது அவருடைய ப்ரியத்தைச் சம்பாதித்திருக்கிறாளாம்.
வருடம் ஒரு தடவையாவது மும்பையில் இருந்து தனியாக அம்பலப்புழை வந்து திலீப்போடு பழங்கதை சலிக்காமல் பேசிக்கொண்டிருந்து விட்டுப் போவது மோதக்கின் வழக்கம். ஜான் கிட்டாவய்யர் ஹோட்டல் சாப்பாட்டுக்கும் அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் அம்பல பால் பாயசத்துக்கும் அவர் மகாரசிகர்.
“ஓட்டல் சாப்பாடு ஏக்தம் சூப்பர் திலீப் அண்ணா, பெயர்லே மட்டும் அந்த ஜான் இல்லாம வெறும் கிட்டாவய்யர் ஹோட்டல்னு பெயர் வைச்சுப் பாருங்க, என்ன மார்க்சிஸ்ட் பூமின்னாலும், விஜிடேரியன் ஓட்டல் பெயர்லே விஜிடபிளாகத்தான் இருக்கணும். வச்சா இன்னும் கோடி கோடியாக் கொட்டும்” என்பார் மோதக் சீரியஸ் ஆக.
அவரை அதுவும் இதுவும் பேச விட்டு அப்பாவியான அந்த மனுஷரின் உலகம், ஊர் பற்றிய கருத்துகளைத் தெரிந்து கொள்ள திலீப்பைவிட அனந்தனுக்கு ரொம்பப் பிடிக்கும். ஜான் இல்லாத கிட்டாவய்யர் ஹோட்டல் இன்னும் வியாபாரம் மேம்படும் என்பது சரியானதென்று அவனுக்குத் தெரியும்.
மோதக் தான் வந்திருக்கிறார் என்ற நினைப்பில், ”சிவசேனாவை விட ஷரத் பாவர் காங்கிரஸ் நிறைய ஓட்டு வாங்குமாமே” என்று கேட்டபடி டைனிங் டேபிளுக்குப் போன அனந்தன் பரமனைப் பார்த்து ஆச்சரியப்பட்டான்.
”அனந்தா, இது, இது உங்க தாத்தா. எங்கப்பா. நாற்பது வருஷம் கழிச்சு வந்திருக்கார்”
அனந்தன் அதிர்ச்சியடைந்து தன் அப்பா திலீப் ராவ்ஜியை நெருங்கித் தோளில் தட்டி அணைத்துக் கொண்டான்.
“என்னாச்சுப்பா உங்களுக்கு நன்னாதானே இருக்கேள்- சொல்லுங்கோ என்னாச்சு? வைத்தியர் கிட்டே கூட்டிண்டு போகட்டா?”
படபடவென்று விசாரிக்க, ”பொய்யில்லேடா, உன் தாத்தா தான் இவர். சகா பரமேஸ்வரன் ஐயர். அப்பா உங்க பேரனை ஆசிர்வாதம் பண்ணுங்கோ. எச்சல் கையாலேன்னாலும் பரவாயில்லே. பெரியவா ஆசிர்வாதம் தான் முக்கியம்” என்றார் திலீப் ராவ்ஜி.
நாற்காலியை இறுகப்பிடித்தபடி பரமேஸ்வரன் எழுந்து அனந்தனிடம் நல்ல ஆங்கிலத்தில் சொன்னது இது –
”அனந்தன், உங்க நிலைமைலே நான் இருந்தாலும் அப்படித்தான் ரியாக்ட் செய்திருப்பேன். நாற்பது வருஷம் முன்னாடி குடும்பம், நட்பு, உறவு எல்லாத்தையும் விட்டுப் போனவன் திரும்பி ஏன் வந்தான்? அதுவும் தில்லிக்கும் பம்பாய்க்கும் நடுவிலே ஏரோப்ளேன்லே பறக்கறபோது காணாமல் போனவன் ஏன் அம்பலப்புழைக்கு வந்தான்? இது ஒரு கேள்வின்னா, காணாமல் போன காலத்தில் எழுபது வயதானவன் இப்போ திரும்பி வந்தா நூற்று பத்து வயசாகி இருக்குமே? அத்தனை காலம் மனுஷன் ஜீவிக்க முடியுமா? அனந்தன், உனக்கும், திலீப்புக்கும் ஆட்சேபணை இல்லேன்னா நான் ஒண்ணு கேட்டுக்கலாமா? என் திசுக்களையும், அனந்தன், திலீப் திசுக்களையும் வச்சு ஒரு டி என் ஏ டெஸ்ட் DNA Paternity Test பண்ணிப் பார்த்தா நான் நிஜமா இல்லையான்னு தெரியும். சரியா?”
அவர் திரும்பி உட்கார்ந்து பாதி சாப்பிட்டிருந்த வெண்பொங்கலையும் மிளகு வடையையும் ஆசையோடு தொடர்ந்து சாப்பிட முனைந்தார்.
’சார், தாத்தா, இது ஹ்யூமன் ரிலேஷன்ஸ் அடிப்படை மனுஷ உறவு சம்பந்தமானது. மனசு தொடர்பானது. உடம்பும், அறிவியலும், நிரூபிக்கறதும் இங்கே ஒட்டாது. நீங்க நம்பறீங்க. இந்த திலீப் ராவ்ஜி என் மகன், ஆனந்தன் என் பேரன்னு. அப்பா நம்பறார். இந்த வயசானவர் எங்கப்பா பரமேஸ்வரன்னு. இந்த நம்பிக்கை ரெண்டும் ஒண்ணுக்கொண்ணு சார்பாக இருக்கும்வரை நீங்க தாத்தாதான் அவர் உங்க மகன் தான். என்னையும் நீங்க பேரனா எடுத்துக்கலாம். தாத்தாவாக உங்களை இப்போதைக்கு நான் ஏற்றுக்கலேன்னாலும். வெல்கம் கிராண்ட் ஓல்ட் மேன் மிஸ்டர் பரமேஸ்வரன். நீங்க இங்கே இருக்க இந்த வீட்டுக் கதவுகள் திறந்தே இருக்கும்”.
அவன் உள்ளே போய் கார் சாவியோடு வந்தான்.
“அப்பா, ஸ்கூட்டர் சர்வீஸ் விட்டிருக்கு. நான் காரை எடுத்துப் போறேன். ஆலப்புழையிலே இருந்து ஆபீஸ் ட்ரைவர் மூலம் திருப்பி அனுப்பிடறேன்”.
சரி என்று தலையாட்டினார் திலீப் ராவ்ஜி.
அனந்தன் பரமேஸ்வரன் தாத்தாவுக்கு அன்போடு கையசைத்தபடி வெளியே நடந்தான்.