பொன்மான்

“தன் மானம் இலாத, தயங்கு ஒளி சால்
மின் வானமும் மண்ணும் விளங்குவது ஓர்
பொன் மான் உருவம் கொடு போயினனால்-
நன் மான் அனையாள் தனை நாடுறுவான்.”

கம்பன், தன் அற்புதக் காவியத்தில் மாரீசன் பொன் மானென வடிவெடுத்து சீதையின் முன்னே துள்ளிக் குதித்துச் சென்றதை இவ்வாறு பாடியிருக்கிறார்.

அத்தகைய பொன் மான்கள் இன்றும் உண்டு. ஆனால், அனைத்தும் பொய் மான்களல்ல; எப்போதுமே பொன்னாகவே நிலைத்திருக்கும் மான்களுமல்ல. இடையில் தென்பட்டுத் தென்பட்டு காணாமல் போகும் இனம் இவை.

பிட் காயின் (Bit coin) மற்றும் இதர குறியீட்டு நாணயங்கள் இந்தியர்களிடத்திலும் உள்ளன. சில பரிவர்த்தனை மையங்களும் இயங்குகின்றன. அவற்றைப் பற்றிப் பார்ப்பதற்கு முன், ஒரு ‘திரில்லர்’ நிகழ்வைப் பார்ப்போமா?

அவருக்கு வயது 26; வசிப்பது பெங்களூருவில் உயர் வருமானப் பிரிவினர் வசிக்கும் சொகுசுப் பகுதியில். நவம்பர் 18 அன்று அவரை பெங்களூர் காவல் துறையினர் கைது செய்து நிலையத்திற்குக் கொண்டு வந்தவுடன் அவர் பாடத் தொடங்கினார்! கணினி அறிவியலில் பட்டம் பெற்றுள்ள அவர், நிழல் உலகிற்கு உதவும் கொந்தராகத் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். பிட் காயின்களைக் கொந்தி எடுப்பதில் தனித் திறம் தனக்கு உண்டு என்பதில் பெருமை. முதலில், நான்காம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் போதே வலை பெயர்த்தல், ஜாவா, ஆகியவற்றைப் பயன்படுத்தி ‘ரன் எஸ்கேப்’ (RuneScape) என்ற விளையாட்டுப் ‘பாட்’ (bot) அமைத்தாராம்; பத்தாவது வகுப்பிற்கு வருவதற்குள் .’இன்டெர் நெட் ரிலே சாட்’ (IRC-Internet Relay Chat) டில் இணைந்திருக்கிறார். அதில் 50,000க்கும் மேற்பட்ட கறுப்புத் தொப்பி கொந்தர்கள் (Black hat hackers) இருந்திருக்கிறார்கள். அதில் தான் நிதி சம்பந்தமான குற்றங்களை எவ்வாறு செய்வது என்பதைக் கற்றுக் கொண்டாராம். கல்லூரி புகுமுக வகுப்பில் போதைப் பொருட்களில் ஆழ்ந்தார். 17 வயதில் இமாலயத்திற்கு ஒடிப் போயிருக்கிறார். பின்னர் பொறியியல் படிப்பில் சேர்ந்து அதைப் பாதியில் விட்டுவிட்டு (ஆனாலும் குழந்தைகளின் பாடத்திட்டம் போலிருக்கிறது என்று நொந்து படிப்பை விட்டுவிட்டாராம்) நெதர்லாந்து சென்று கணினியியல் படித்து, அங்கே தன் ஓட்டுனரிடம் தன் பிட் காயின்களையும், குறியீடுகளையும் இழந்து மீண்டும் முதல் கட்டத்திலிருந்து ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்.

இதெல்லாம் அவரே கொடுத்துள்ள வாக்குமூலம். அவர் எப்படி காவல் துறையினரிடம் சிக்கினார்? காஃபித் துகள்கள் அடங்கிய ஒரு பெட்டகத்தை சந்தேகித்த, சாம்ராஜ்பேட்டை, பெங்களூரு, அயலகத் தபால் நிலைய சுங்கத்துறை அதிகாரி அதைச் சோதித்ததில் போதைப் பொருள் பதுக்கப்பட்டிருப்பதும், அதற்கான விலை பிட் காயின் மூலம் செலுத்தப்பட்டிருப்பதும், அதில் நம் கதா நாயகனின் பங்கும் இருப்பதும் வெளியாகின.

ஸ்ரீகி என்று நண்பர்களால் விளிக்கப்படும் இவர், நேரலை சூது விளையாட்டுக்களில் எதிர்முனையில் இருப்போரின் வியூகங்களைக் கொந்தி தன் நண்பர்களுக்குக் கொடுத்து அவர்களை வெற்றி பெறச் செய்துள்ளார். நிழல் உலகில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் வாங்குவது, அதற்கானத் தொகையை பிட் காயின்களில் பற்பல அடையாளங்களில் அனுப்புவது, ஐந்து நட்சத்திர விடுதிகளில் மாதக் கணக்கில் தங்குவது, உல்லாச வாழ்க்கை வாழ்வது என்று இருப்பவர் சொல்லியிருக்கும் ஒரு தகவல் மிகுந்த அதிர்ச்சி தரும் ஒன்று.

பிரிட்டிஷ் வர்ஜின் ஐலேண்டில் (British Virgin Island) பதிவு செய்யப்பட்ட பிட் ஃபைனெக்ஸ் (Bitfinex) என்ற நிகர்நிலை தளத்திலிருந்து 2016-ல் 1,19,754 பிட் காயின்கள், சுமார் 2000 பரிமாற்றங்களில் திருடப்பட்டன. அப்போது அவற்றின் மதிப்பு $71 மில்லியன். நம் ஸ்ரீகி சொல்கிறார்: ‘அந்தப் பங்கு வர்த்தகத் தளம் இருமுறை கொந்தப்பட்டது; அதையும் முதலில் செய்தவன் நானே. இஸ்ரேலிய இராணுவத்தில் பணியாற்றும் இருவர் பின்னர் அதே தளத்தில் களவாடினார்கள். அப்போது ஒவ்வொரு பிட்காயினின் மதிப்பு $100- $200 வரை. பின்னர் மற்றொரு பிட் காயின் பரிவர்த்தனைத் தளமான பி டி சி-ஈ. காமைக் (BTC-e.com) கொந்தி 3000 பிட் காயின்கள் திருடினேன். அதில் மட்டுமே $3-3.5 மில்லியன் இலாபம் பார்த்தேன். கர்னாடக அரசின் மின்வழிப் பொருள் வாங்கும் தளத்திலிருந்தும் (e-procurement portal) ரூ11.5 கோடிகள் சுலபமாக எடுத்தேன்.’

அவர் களவாடியதாகச் சொன்ன பிட் காயின்கள் எங்கே? ஜனவரி 12, 2021ல் பெங்களூரு காவல்துறை 31.123 பிட் காயின்களை அவரது மின்பணப் பெட்டகத்திலிருந்து (e-wallet) கைபற்றினர். அப்போதைய மதிப்பு ரூ 9 கோடி. ஜனவரி 22-ம் தேதி அந்த மின்பணப்பெட்டகத்தைத் திறந்த காவல் துறையினர் அதில் 186.8 பிட் காயின்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் அர்த்தம் ஜனவரி 8-லிருந்து ஜனவரி 22 க்குள் அந்த மின்பெட்டகத்தில் பரிவர்த்தனை நடந்துள்ளது என்பதே. இதை ஆராய்ந்த யூனோ காயின் (Uno coin) என்ற குறியீட்டு நாணயப் பரிவர்த்தனை மையம், ஸ்ரீகி, பொதுவில் இணையத்தில் இருக்கும் மின் பெட்டகச் சாவிகளைக் கொண்டு, ஒரு பெட்டகம் வடிவமைத்து அதன் செயலியை மாறுபடுத்தி பொய்யான பரிவர்த்தனைகளைக் காட்டியிருக்கிறார் என்று சொல்லியிருக்கிறது. யூனோ காயின் தளத்தையும் கொந்தியிருப்பதாக ஸ்ரீகியின் மீது குற்றச்சாட்டு இருக்கிறது.

ஸ்ரீகி, மத்திய குற்றப் புலனாய்வாளர்களின் பாதுகாப்பில் இருக்கும் போதே நவம்பர் 30, 2020-ல் அடையாளம் தெரியாத மின்பெட்டகங்களுக்கு 5045.48 பிட் காயின்கள் 14 பரிவர்த்தனைகளில் அனுப்பப்பட்டிருக்கின்றன என்றும், அவர் நீதி மன்றக் காவலில் இருந்த ஏப்ரல் 14, 2021-ல் 69 பரிவர்த்தனைகளில் 10,057.47 பிட் காயின்கள் மாற்றப்பட்டுள்ளன என்றும், ‘வேல் அலெர்ட்’ (Whale Alert) என்ற, தொடரேட்டுப் பரிவர்த்தனைகளை ஆராயும் நிறுவனம் சொல்லியுள்ளது. இந்த பிட் காயின்கள் பிட்ஃபைனெக்ஸில் 2016-ல் களவாடப்பட்டவை எனச் சொல்லப்படுகிறது. ஆனாலும், 2016-ல் களவாடப்பட்ட அந்த பிட் காயின்களை மையப்படுத்தி ஸ்ரீகி கதை ஒன்றைக் கட்டமைக்கிறார் எனக் காவல் துறை கருதுகிறது. இதில் பல அரசியல் பிரபலங்களும், பெரும் செல்வந்தர்களும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. ‘உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியல; நம்ம கண்ண நம்மால நம்ப முடியல.’

இதற்கிடையில் இல்யா லிஸ்டென்ஸ்டெய்ன் (Ilya Lichtenstein,) 34, மற்றும் அவரது மனைவி ஹெதர் மோர்கன் 31 (Heather Morgan) இருவரும் பணச்சலவை செய்த குற்றத்திற்காக பிப் 8 2022-ல் நியுயார்க் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளார்கள். நிகர்நிலை பரிவர்த்தனை மையமான பிட்ஃபைனெக்சிலிருந்து களவாடப்பட்ட பிட் காயின்கள் இல்யாவின் மின்பணப் பெட்டகத்தில் சிறிது சிறிதாகச் சேர்க்கப்பட்டு, பின்னர் பல்வேறு நிழல் கணக்குகளின் வழியே ஐந்து வருடங்களாக இல்யா மற்றும் அவரது மனைவியின் நிதிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டு இயல்பான நிதிச் செயல்பாடுகளாகக் காட்டப்பட்டிருக்கின்றன. இதை ஆராய்ந்து வெளிக் கொண்டுவருவது எளிதான செயலல்ல. 25,000 பிட் காயின்கள் பணச் சலவை செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது மின் பெட்டகத்தில் 94.000க்கும் அதிகமான பிட் காயின் இருப்பதாகவும் சொல்கிறது காவல் துறை. இல்யாவின் மின் பெட்டகத்தைக் கைப்பற்றி, அதனுடன் இணைந்த நேரலை கணக்குகளைப் பார்த்ததில், தனிப்பட்ட சாவிகள் அடங்கிய பல பெட்டகங்களின் மூலம் களவாடப்பட்ட பணம் இவர்களின் வசம் வந்திருப்பது தெரிய வந்துள்ளது. பௌதீகப் பொருட்கள் திருடு போகும்; இணையத் திருடர்கள், வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்தை பலவித தந்திரங்கள் செய்து எடுப்பார்கள்;

தகவல்களைக் கொந்தி அமைப்புகளைச் செயலிழக்கச் செய்து, பிணை பணம் பெறும் நிழல் உலகம் உண்டு; போதைப் பொருள் வர்த்தகம் முன்னர் ‘எலி’களை நம்பி நடை பெற்றது மாறி, குறியீட்டு நாணயங்களில், நிழல் கணக்குகளின் வழியே நடை பெறும் சம்பவங்கள் உண்டு; கலைச் சேவை அல்லது கலாஞானம் என்ற பெயரில் ‘மெய்யுரு’க்களை’ வாங்கி கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவோரும் உண்டு; ஆனால், க்ரிப்டோ நாணயத்தையே திருடி அதை 2000 பரிவர்த்தனைகளின் மூலம் மின் பெட்டகத்திற்கு அனுப்பி, அதை அவ்வாறு பெற்றவர் 25,000 பரிவர்த்தனைகள் மூலம் சலவை செய்வது என்பது?

இதை மோப்பம் பிடித்து அந்தச் சிக்கலுக்குள் புகுந்து இழை இழையாகப் பிரித்து, நீதி மன்றத்தின் முன் அந்தக் குற்றத்தை நிரூபிக்க ஆவன செய்ய முடியும் என்பது, குற்றவியல் துறையின் தொழில் நுட்ப வல்லுனர்களின் திறமை. இதில் கவனம் கொள்ளக் கூடியவை இரண்டு விஷயங்கள்-1) குறியீட்டு நாணயங்களைப் பெயர்க்க முடியும்.2) அப்படிப் பெயர்க்கப்பட்டவைகளை அடையாளம் காண முடிகிறதென்பதால், குறியீட்டு நாணயங்கள் பெருமையாக சொல்லிக் கொள்வது போல் அவை ஒன்றும் அவ்வளவு பாதுகாப்பானதல்ல. வல்லவனுக்கு வல்லவன் புவியில் உண்டு. இல்யா, ஹெதர், ஸ்ரீகி அனைவரும் சந்தேகிக்கப்படுகிறார்கள் என்பதுதான் தற்போதைய நிலை. தீர்ப்பு வரும் வரை அவர்களைக் குற்றவாளிகள் எனக் கருதத் தேவையில்லை.

இந்தியாவும், குறியீட்டு நாணயங்களும்

2013-17 வரையிலான கால கட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி, (RBI) பிட் காயின் போன்ற இலக்க நாணயங்களைப் பற்றி வங்கிகளுக்கும், பொது மக்களுக்கும் எச்சரிக்கை செய்து, அவைகளில் செய்யப்படும் முதலீடுகள் எவ்வகைப் பாதுகாப்புகளும் அற்றவை என்றும், நிழல் உலகின் செயல்பாடுகளில் அவை பயன்படுத்தப்படும் ஆபத்துக்கள் இருப்பதால் அவைகளில் வர்த்தகம் செய்ய வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டது.

2017 பிப்ரவரி 1-ம் தேதி க்ரிப்டோக்களை முழுதும் தடை செய்யக் கோரி பொது நலமனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. 2018 மார்ச் மாதம், நேர் வரி விதிப்பு மத்திய ஆணையம், (CBDT-Central Board of Direct Taxes) க்ரிப்டோக்கள் வர்த்தகத்தை, முழுதும் தடை செய்ய வேண்டுமென்று மத்திய நிதித் துறைக்கு பரிந்துரைத்தது. அதுவரையிலும் குறியீட்டு நாணய பரிவர்த்தனை மையங்களுக்கு வங்கிகள் அளித்து வந்த நிதி சார்ந்த சேவைகளும் இந்திய ரிசர்வ் வங்கியால் 2018ம் ஆண்டு ஏப்ரல் ஆறாம் தேதியிட்ட சுற்றறிக்கையால் நிறுத்தப்பட்டது. இந்த வர்த்தகத்தை ‘கறுப்புச் சந்தையின் தொடர் நிகழ்வு’ என்றே இந்திய ரிசர்வ் வங்கி வகைப்படுத்தியது.

2020, மார்ச்சில், உச்ச நீதி மன்றம், வங்கிகள், க்ரிப்டோ சொத்துக்களின் பரிவர்த்தனை மையங்களுக்கு அளித்து வந்த சேவைகளைத் தொடர அனுமதியளித்தது.

இந்தியாவிலேயே உருவான 15 க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை மையங்கள் இருக்கின்றன. இவைகளில் க்ரிப்டோ நாணயங்கள் வாங்கப்படுகின்றன, விற்கப்படுகின்றன, சொத்துக்களாகச் சேர்க்கப்படுகின்றன, கடனும் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் இயங்கும் சிறந்த ஐந்து பரிவர்த்தனை மையங்கள்:

ஜெப்பே (Zebpay)

சந்தீப் கோயங்கா, (Sandeep Goenka) மஹின் குப்தா, (Mahin Gupta) சௌரப் அகர்வால் (Saurab Agarwal) ஆகியோரால் 2014-ல் தொடங்கப்பட்ட இந்த மையத்தில் இதுவரை எந்த பாதுகாப்பு அபாயங்களும் ஏற்படவில்லை.

காயின் டி சி எக்ஸ் (Coin DCX)

நீரஜ் கான்தெல்வால் (NeerajKhandelwal), சுமித் குப்தா (Sumit Gupta) 2018ல் இதைத் தொடங்கினார்கள். 35 இலட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இதன் பயனர்கள். குறைந்த சேவைக் கட்டணமும் இவர்களின் பலம்.

வஸிர் எக்ஸ் (WazirX)

2017-ல் நிச்சல் ஷெட்டி (Nischal Shetty) தொடங்கிய இது தற்போது பைனான்ஸ் (Binance) வசம் உள்ளது. டபில்யூ ஆர் எக்ஸ் (WRX) என்ற சொந்த க்ரிப்டோ நாணயங்கள் இதில் புழங்குகின்றன.

யூனோகாயின் (Unocoin)

2013-ல் தொடங்கப்பட்டது. பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 15 இலட்சம். தேதியை நிர்ணயித்து நாணயங்களை வாங்கவும், விற்கவும் வசதிகள் இருப்பதால், சந்தை நிலவரத்தைக் கணித்து நாணய வர்த்தகம் செய்பவர்கள் இதை விரும்புகிறார்கள்.

காயின் ஸ்விட்ச் குபேர் (Coin Switch Kuber)

விமல் சாகர் (Vimal Sagar) கோவிந்த் சோனி, (Govind Soni) ஆஷீஷ் சிங்வால் (Ashish Singwal) ஆகியோரால் 2017-ல் தொடங்கப்பட்ட இதில் இதுவே வடிவமைத்த செயலி 2020-லிருந்து இயங்குகிறது. $1 பில்லியன் மதிப்புள்ள, தனியார் வசம் இருக்கும் துணிகர முதலீட்டு தொடங்கு நிலை (Venture Capital Start-up) நிறுவனம் இது. இந்தியாவின் முதல் ‘யுனிகார்ன்’ (Unicorn) என்ற பெருமையை அடைந்துள்ளது.

க்ரிப்டோவும், இந்திய அரசும்

2022-23-ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை, க்ரிப்டோ பரிவர்த்தனைகளில் வரும் இலாபம் 30% வரி விதிப்பிற்கு உள்ளாகும் என்று அறிவித்துள்ளது. ஆயினும், நஷ்டங்களுக்காக சலுகை எதுவும் கிடையாது; அதாவது இலாபத்திலிருந்து நஷ்டத்தைக் கழித்து நிகர இலாபத்தில் வரி செலுத்தும் சலுகையில்லை. நிகர்நிலை பரிவர்த்தனைகள் அதிக அளவில் நடை பெறுகின்றன என்றும், 1% வரி, பரிவர்த்தனை நடைபெறுகையில் பிடித்தம் செய்யப்படுமென்றும், இலக்கச் சொத்துக்களின் கொள்முதல் விலை போக, மிகுதியாகப் பெரும் இலாபம் 30% வரி விதிப்பிற்கு உள்ளாகும் (வரி விதிப்பு சட்ட எண் 115 பி பி ஹெச்- BBH) என்றும் நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அறிவித்தார். க்ரிப்டோ வரி விதிப்புக் குழுமமான க்ரிப்டோ டாக்ஸ் ப்ரைவெட் லிமிடெட்டின் (CryptoTax Pvt Ltd) முதன்மை நிர்வாக இயக்குனரான அபினவ் சூமெனி (Abhinav Soomaney) பொதுவாகப் பயன்பாட்டில் இருக்கும் வரி விதிப்பு வழிகளை இவ்வாறு பட்டியலிடுகிறார். HIFO, LIFO- நாணயக் கணக்குகளின் இருப்பில், அதிக விலையில் பெறப்பட்ட நாணயங்கள் விற்கப்படுகையில், அவைகள் முதலில் விற்கப்பட்டதாக எடுத்துக்கொள்ளப்படும் வகை HIFO எனப்படுகிறது. மாறாக கடைசியில் வாங்கியது முதலில் விற்கப்பட்டதாக எடுத்துக் கொண்டால், அது LIFO எனப்படுகிறது என்று விளக்கியிருக்கிறார் அவர்.

அரசின் இந்த வரிவிதிப்பு, க்ரிப்டோ நாணயங்கள் ‘கரன்சி’ வகையைச் சேர்ந்ததா அல்லது ‘சொத்து’ வகையைச் சேர்ந்ததா என்ற கேள்விக்கு அது க்ரிப்டோவை சொத்தாகக் கருதுகிறது என்ற பதில் கிடைத்துள்ளதாகத் தோன்றுகிறது. வரி விதிப்பில் அவைகளைக் கொண்டு வருவதின் மூலம், அரசு, மறைமுகமாக க்ரிப்டோக்களை ஆதரிக்கிறது என்றும் குரல்கள் கேட்கின்றன. இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய நாணயமான ரூபாய்களை இலக்கத்தில் வெளியிடும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சொல்லியிருக்கிறார். க்ரிப்டோ நாணயங்கள் நாட்டின் நிதி இறையாண்மைக்கு எதிரானவை என்று இம்மாதம் 15-ம் தேதி அளித்த பேட்டியில் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளூநர் ரபி ஷங்கர் சொல்லியிருக்கிறார். க்ரிப்டோகரன்ஸி மசோதா தாக்கல் செய்யப்பட்டால் ஒரு தெளிவு வரலாம்.

க்ரிப்டோ சந்தை

கிட்டத்தட்ட இரண்டு கோடி இந்தியர்கள் குறியீட்டு நாணயங்களில் வர்த்தகமோ, சேமிப்போ செய்கிறார்கள் என்று பிசினஸ் இன்சைடெர் (Business Insider) செய்தித் தளம் சொல்கிறது. 2021-ம் ஆண்டு முதல் ஏழு மாதத்தில் $21.8 பில்லியன் அளவிற்கான வர்த்தகம் ஒரு தனி பரிவர்த்தனை மையத்தில் மட்டுமே நடந்திருக்கிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட 14-15 மையங்கள் இந்தச் செயல்பாட்டில் இருக்கின்றன என்பதால் மொத்த வர்த்தகத் தொகை அளவினை உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.

க்ரிப்டோ நாணயங்களில் நீங்கள் முதலீடு செய்வதையோ, சேமிப்பதையோ, ரூபாயை குறியீட்டு நாணயமாக மாற்றுவதையோ, குறியீட்டு நாணயங்களை ரூபாயாக மாற்றுவதையோ செய்யலாம். அதற்கு பரிவர்த்தனை மையங்கள் உதவுகின்றன. நீங்களே கூட சொந்தமாக மையங்களை அமைக்கலாம். தனி நபரோ, நிறுவனமோ, இச்செயல்களில் ஈடுபடுவோரின் அடையாளங்களை, குறிப்பாக ஆதார் எண், வரி எண், குழுமங்களின் பதிவு எண் ஆகியவற்றை தளத்தில் பதிவேற்றி, சரி பார்த்த பின்னரே, செயலிகள் இயங்கும் என்று சட்டத் துறை சொல்லியுள்ளது.

இதை நிறைவேற்றிய பிறகு நீங்கள் வங்கிகளின் யூனிஃபார்ம் பேமென்ட் (UPI) மூலம் ரூபாய்களை அனுப்பி க்ரிப்டோ நாணயக் கணக்கினை உங்களுக்குப் பிடித்தமான அல்லது உங்கள் தேவைகளுக்கேற்ற பரிவர்த்தனை மையத்தில் துவக்கலாம். ஆனாலும், பெரும் வங்கிகள் கூட தங்கள் வாடிக்கையாளர்களை இதைத் தவிர்க்குமாறுதான் பெரும்பாலும் சொல்லிவருகின்றன. எனவே, சில இந்தியர்கள், தங்களை இந்தியரில்லை என்று சொல்லி பன்னாட்டுப் பரிவர்த்தனை மையங்களில் சட்டத்திற்குப் புறம்பாகத் தங்களைப் பதிவு செய்து, அதன் பின், சேமிப்பு அட்டை அல்லது கடன் அட்டையின் மூலம் க்ரிப்டோவில் நுழைகிறார்கள்.

எந்த க்ரிப்டோவில் ஈடுபடலாம் என்ற கேள்வி எழுவதும் சரியே. பல நாணயங்கள், நாணய இணைகள் உள்ள மையங்கள் பலருக்கு ஏற்புடையதாக இருக்கும். உண்மையில், நாணய இணைகளை –பிட் காயின்-ஈதர், சொலனா-டீதர் போல- தெரிவு செய்தோமென்றால், நாம் விரும்பும் நாணயத்தினை வாங்குவதற்கும், விற்பதற்கும் ஒன்றிற்கு மேற்பட்ட செயல்பாடுகள் தேவையில்லை. எனினும், மையங்கள் விதிக்கும் சேவைக் கட்டணத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பங்கு வர்த்தகத் துறையில் அதிகம் செயல்படும் ‘டிரைவேடிவ்ஸ்’ (Derivatives) ‘பெறப்படும்’ என்ற கருத்தும் கிரிப்டோ நாணயச் சந்தைகளிலும் இருக்கிறது. ‘ஃப்யூசர்ஸ், (Futures) ஆப்ஷன்ஸ்,(Options) ஃபார்வேர்ட்,(Forward) ஸ்வேப்ஸ்’ (Swaps) ஆகியவை ‘பெறப்படும்’ வகைமைகளில் குறிப்பிடத் தகுந்தவை.

குறிப்பிட்ட நாணயங்களை, குறிப்பிட்ட எதிர் வரும் தேதியில், குறிப்பட்ட விலைக்கு வாங்க அல்லது விற்க உதவுவது ஃப்யூசர்ஸ்.

‘ஆப்ஷன்ஸ்’- ஃப்யூசர்ஸ் வகைதான். ஆனால், இதில் வாங்குபவர், தன் ஒப்பந்தத்தைச் செயல்படுத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை.

ஃபார்வேர்ட்- இதுவும் ஃப்யூசர்ஸ் போன்றதே. ஆனால், பங்கு பரிவர்த்தனை மையத்தில் இது நடைபெறுவதில்லை; மாறாக, ‘ஓவர் த கவுன்டரில்’ (Over the Counter) நடை பெறும்.

ஸ்வேப்ஸ்- இரு நபர்களுக்கிடையே ஒரு நிர்ணயிக்கப்பட்ட தொகை குறிப்பிட்ட காலத்திற்கு பரிமாற்றம் செய்யப்படுவதைக் குறிக்கும்.

பங்குச் சந்தைகளின் இந்தப் ‘பெறப்படும்’ அனைத்துமே, பொருள், உலோகம், கடன் பத்திரம், பங்குக் குறியீடுகள் ஆகியவற்றின் மதிப்பின் அடிப்படையில் அமையும். ஆனால், அடிப்படையாக எந்தப் பொருளுமே இல்லாத குறியீட்டு நாணய பங்குச் சந்தைகளிலும் இந்தப் ‘பெறப்படுபவை’ இயங்குகிறது. ‘காயின் பேஸ்’, (Coin base) மற்றும் ‘பேபால்’ (Paypal) இதில் ஆர்வத்துடன் செயல்படுகின்றன. இந்தியாவிலும் ‘க்ரிப்டோ கரன்ஸி மசோதா’ சட்டமான பிறகு இத்தகையச் செயற்பாடுகள் அதிகரிக்கலாம்.

குறியீட்டு நாணய பங்குச் சந்தையின் வேகம் தான் முதலீட்டாளர்களின் விருப்பம். ஆனால், பெரும்பாலும், குறிப்பாக, சந்தை மிக அதிக ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகும் போது, பல முதலீட்டாளர்களால், இந்திய மையத்தில் நாணயங்களை விற்க முடிவதில்லை, மாறாக வாங்க முடிகிறது. அவர்களைப் பாதுகாக்கவே அவ்வாறு செய்வதாக மையங்கள் சொல்கின்றன.

இதைப் பலகால முதலீடாக செய்ய நினைப்பவர்கள், தங்கள் நாணய இருப்பினை தனியே ஒரு மின் பெட்டகத்திற்குக் கொண்டு செல்வது நலம்.

எப்ரல் 2020ல் $923 மில்லியனாக இருந்த இந்திய குறியீட்டு நாணயச் சந்தை மே 2021-ல் $6.6 பில்லியனாக வளர்ந்திருக்கிறது. இந்தியா ஏழை நாடில்லை- பல இந்தியர்கள் ஏழைகள்.

முறைப்படுத்துதல் இயலுமா?

அயலக லாட்டரிச் சீட்டுக்களை வாங்குவது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள ஒன்று. ஆனாலும், வாங்குகிறார்கள். மதுபானம், போதைப் பொருள் நுகர்வு, பதுக்கல், கடத்தல் போன்றவைகளை முழுதுமாக எந்த அரசாலும் கட்டுப்படுத்த முடிந்ததில்லை. அவ்வகையில் க்ரிப்டோவும் விதிவிலக்காக இருக்கப் போவதில்லை. இந்தியப் பொருளாதாரம், அதன் மக்கள் தொகை, அதன் ரூபாயின் மதிப்பு, அதன் உணவு, கல்வி, தொழில், இராணுவம், மற்றும் சுகாதாரக் கட்டமைப்புகளைக் கணக்கில் கொண்டு பார்த்தால், குறியீட்டு நாணயச் சந்தையை முறைப்படுத்தும் தேவை இருப்பதை உணரமுடியும். ஆனால், அது அத்தனை எளிதல்ல.

உலகெங்கிலும் உள்ள நாடுகளினிடையே இந்தச் சந்தையை முறைப்படுத்துவதைப் பற்றிய ஒருமித்த திட்டங்களில்லை. முழுவதும் சுதந்திரமான அல்லது முழுதும் கட்டுப்படுத்தப்பட்ட இரு மாறு நிலைகளைக் காண்கிறோம். இரண்டு முனைகளுக்கும் இடையில் சில நாடுகள் நிற்கின்றன.

பி ஏ சி சி (BACC-Block Chain Cryptoassets Council) அமைப்பு இதில் உதவ முன் வரவேண்டும்.

கீழே சில பரிந்துரைகள்:

  • தனதேயான சட்ட திட்டங்களுடன் செயல்படும் இத்தகைய அமைப்புகள் வரைமுறைக்குள் கொண்டு வரப்பட வேண்டும். தங்கள் செயல்பாடுகளில் அவர்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, அந்தப் பரிவர்த்தனை மையத்திடம் அது சொல்லும் குறியீட்டு நாணயங்கள் உண்மையிலேயே இருக்கின்றனதா எனத் தணிக்கை செய்வது முதலீட்டாளர்களுக்கு உதவும்.
  • வங்கிக் கடன்களைக் கொடுப்பதற்கு முன் ‘ஆபத்து ஆய்வு’ (Risk Analysis) ஒன்றைச் செய்வார்கள். அதைப்போல குறியீட்டு நாணயத்திற்கான வழிமுறை வேண்டும். ‘சாலிடஸ் ஆய்வகத்திடம்’ (Solidus Labs) ஆபத்துக்களை ஆராய, காயின் டி சி எக்ஸ் (Coin DCX) ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. காளான்களைப் போல பெருகி வரும் சந்தைகளின் வரலாறு, அவற்றை இயக்கும் மனிதர்கள், அதன் பின்னே இயங்கும் மனிதர்கள் பற்றிய விவரங்கள் உடனுக்குடன் தெரிய வரவேண்டும். இதில் செயற்கை நுண்ணறிவும், இயந்திரக் கற்றல் மொழியும் திறமையாகக் கை கொடுக்கும்.
  • அரசின் நிதி இறையாண்மை எக்காரணத்தாலும் பாதிக்கப்படக் கூடாது.
  • குற்றத் தடயவியல் துறை இந்தத் தொழில் நுட்பத்தை அறிதல் வேண்டும். அமெரிக்காவில் ‘எலிப்டிக் பாரன்சிக் செயலியை (Elliptic Forensic Software) உபயோகிக்கிறார்கள். ஐக்கிய யூரோப்பில் ‘க்ராஃப் சென்ஸ் (Graphsense). நாம் இவைகளை அறிந்து கொள்ள வேண்டும் அல்லது உருவாக்க வேண்டும்.
  • அடிப்படை பொறியியல் துறையைக் காட்டிலும், தகவல் தொழில் நுட்பத் துறை அதிகக் கவனம் பெற்று வருவதைப் போல, நிதி, வர்த்தகம் போன்ற வழமையான துறைகள் பின்னிற்குத் தள்ளப்பட்டு குறியீட்டு நாணயங்கள் அபரிமித வளர்ச்சி அடைந்தால், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இந்தியா போன்ற நாடுகளில் அதிகரிக்கும் அபாயம் உண்டு. அதை எதிர்கொண்டு மக்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்கள் தேவை.

இன்றைய நிலை

தொடரெட்டுத் தொழில் நுட்பத்தில் மத்திய, மா நில அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன. தெலுங்கானா ஒரு மாவட்டத்தையே ‘ப்ளாக் செயின் டெக்னாலஜி’க்கு ஒதுக்கியுள்ளது. கேரளாவில் ABCD (Accelerated Block Chain Development) பலவிதங்களில் தொடரேட்டுத் தொழில் நுட்பத்தை நிதித் தொழில் வல்லுனர்கள் மற்றும் மாணவர்களிடம் கொண்டு செல்கிறது. இந்திய வங்கிகள், மற்றும் இந்தியாவில் செயல்படும் வங்கிகள் ‘கடன் கடிதம்’ (Letter of Credit), மற்றும் ‘புரிந்துணர்வுக் கடிதம்’ (Letter of Understanding) ஆகியவற்றில் தொடரேட்டைப் பயன்படுத்துகின்றன. இன்னும் பத்தாண்டுகளுக்குள், வாக்குச் சீட்டைப் பதிவு செய்யவும், கரி உமிழ்வினைப் பதிவு செய்யவும் இந்தத் தொழில் நுட்பம் இந்தியாவால் பயன்படுத்தப் படலாமென சிலர் சொல்கிறார்கள். தொரடேட்டுத் தொழில் நுட்பம் இன்னமும் பலவழிகளில் பயன் தரக்கூடும், எனவே க்ரிப்டோ கரன்சிகளை முறைப்படுத்துதல் அரசின் தலையாய கடமை.

இந்த நேரத்தில் இந்தியாவில் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு செய்தியையும் பார்க்கலாம். ஹர்ஷத் மேத்தாவின் பங்குச் சந்தை ஊழலில் அதிர்ந்த அன்றைய மத்திய அரசு தொழில் நுட்பத்துடன் இணைந்த வெளிப்படையான ஒரு பங்கு வர்த்தக சந்தையை அமைக்க விரும்பியது. அதில் பணிபுரிவதற்குத் தேர்வு செய்யப்பட்ட ஐவரில் கணக்காயப் பட்டம் பெற்ற சித்ரா இராமக்ருஷ்ணாவும் ஒருவர். கடன் பங்கு வர்த்தகத்தில் நிபுணரான அவர், 1992-93ல், ஒன்பதே மாதங்களில் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சை (என் எஸ் சி- National Stock Exchange) கட்டமைத்தார். 2013-ல் அதன் மேலாண்மை இயக்குனராகவும், தலைமை நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டார். அந்தப் பதவிக்கு வந்த சில மாதங்களில் ஆனந்த் சுப்ரமண்யனை தனது முதன்மை ஆலோசகராக நியமித்தார். விரைவிலேயே ஆனந்த் சுப்ரமண்யன் குழுமத் தலைமை அதிகாரியானார். டிசம்பர், 2016ல் சித்ரா பதவி விலகினார். ஆனந்த் சுப்ரமண்யனை சட்ட விதிகளுக்குப் புறம்பாக சித்ரா நியமித்திருக்கிறார், அவரது பதவி உயர்வும் அனுமதிக்கப்பட்ட ஒன்றல்ல என்று சொல்லியிருக்கும் ‘இந்திய பங்குப் பரிமாற்ற நிர்வாகம்’ (Securities Exchange Board of India) இந்த விஷயத்தை மத்திய புலனாய்வுத் துறையிடமும் ஒப்படைத்துள்ளது. முக்கிய காரணம் ஓ பி ஜி செக்யூரிடீஸ் (OPG Securities). ‘சாணக்யா’ என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு செயலியைப் பயன்படுத்தி சந்தைகள் பற்றிய என் எஸ் சியின் (NSE) அவதானிப்புகளை முன் கூட்டியே அறிந்து மிகுந்த இலாபத்தை ஓ பி ஜி (OPG) சம்பாதித்திருக்கிறது. ஆய்வு செய்வதாகக் கூறி 2005-06-ல் என் எஸ் சியின் (NSE) அந்தரங்கத் தகவல்களைப் பெற்று அஜய் நரோத்தம் ஷா வடிவமைத்த செயலி ‘சாணக்யா’. அதை அவர் ஓ பி ஜியிடம் (OPG) விற்றிருக்கிறார். என் எஸ் சியின் (NSE) மூலக் கணினியின் கட்டமைப்பை (Architecture of Main Server) அதன் ஊழியர்கள் மூலம் திருடி ‘இணை இருப்பிடம்’ (Co-location) என்ற ஒன்றை ஓ பி ஜி (OPG) செய்திருக்கிறது. பயனர்களும், முகவர்களும் ஒரே நேரத்தில் என் எஸ் சியில்(NSE) பரிவர்த்தனை செய்யத் தொடங்கும் போது வலைத் தளத்தில் ஏற்பட்ட போக்கு வரத்து நெரிசலைத் தவிர்க்க ‘சம நிலைச் சுமை’ (Load Balancer) என்ற கருவியை என் எஸ் சி (NSE) 2012-ல் கொண்டு வந்தது. அது முக்கிய செயலியிலிருந்து பல கணினிகளுக்கு போக்கு வரத்தினை முறைப்படுத்தி மாற்றி மாற்றிக் கொடுக்கும். என் எஸ் சியின் (NSE) முதன்மைக் கணினிச் செயலியுடன் பல முகவர்களின் வலைத் தளம் இணைப்பில் இருக்க, ஓ பி ஜி(OPG) என் எஸ் சியின் காப்புப் பிரதி சேவையகத்தின் (Back up server of NSE) மூலம் நெரிசலில் சிக்காமல், சுலபமாக, அதிகமாக, போட்டியாளர்கள் இல்லாமல் தன் வர்த்தகத்தை நடத்தியிருக்கிறது. காப்புப் பிரதி சேவையகத்தில் சுமை பூஜ்யம்தான். (Zero Load)

இத்தனை வரம்பு மீறல்களும், என் எஸ் சியின் (NSE) நிர்வாகக் குழுவிற்குத் தெரியாமல் இருக்கவோ, ‘இந்திய பங்குப் பரிமாற்ற நிர்வாகம்’ (SEBI) அறியாமல் இருக்கவோ வாய்ப்புகள் குறைவு. சிறு முதலீட்டாளர்கள் எவருக்கும் எந்த நஷ்டமும் ஏற்படவில்லை என்றும் செய்திகள் வருகின்றன. சித்ரா ‘இமயமலையிலும், அல்லது எங்கெங்கிலும் இருக்கும் ‘யோகி’ யின் அறிவுரைப்படி செயல்பட்டதாகச் சொல்லியிருக்கிறார். அவருக்கும் இவருக்குமான மின்னஞ்சல் பரிமாற்றங்களில் என் எஸ் சியின் நிதி, (Funds of NSE) வருமானம், வணிக வியூகங்கள், ஐந்து ஆண்டு காலத் திட்டங்கள், வெளி நாடுகளுக்கு பயணித்தல், அங்கே உல்லாச ஓய்வெடுத்தல் என்று கலவரமான செய்திகள் இருக்கின்றன. தடயவியல் தணிக்கைக் குழு, அந்த ‘யோகி’, ஆனந்த் சுப்ரமண்யன் என நம்புவதற்கு சாத்தியங்கள் அதிகமுள்ளது என்று சொல்லியிருக்கிறது. ‘என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது.’

அரசு, மற்றும் அதன் துறைகளின் கீழ் இயங்கிய தேசிய பங்குப் பரிவர்த்தனை மையத்தின் நிலை இது என்றால் க்ரிப்டோக்களைப் பற்றி என்ன சொல்ல முடியும்? ஒன்றைச் சொல்லலாம்- அரசு க்ரிப்டோ வர்த்தகத்தை கண்காணித்து, தேவையெனில் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனை நடை பெறும் தளங்களை முடக்குவதோடு, அதிலிருந்து கையகப்படுத்திய நாணயங்களை தங்கள் இருப்பில் வைத்துக் கொண்டு வளர்ச்சிகளுக்குப் பயன்படுத்தலாம். இதற்கெல்லாம் நேர்மையோ நேர்மையான அதிகாரிகள், வலுவான ஆதாரங்கள், பழி வாங்குவதற்காகச் செய்யப்படாத நடவடிக்கைகள் என என்னென்னவோ தேவை. சில அரசு சாரா நிறுவனங்கள் அயல் நாடுகளிலிருந்து பெரும் பணம் பெற்று இந்திய நாட்டின் அமைதியைக் குலைப்பதையே நம்மால் துரிதமாகத் தீர்க்க முடியவில்லை. ஸ்விஸ் வங்கிகளில் கறுப்பு பணம் வைத்துள்ளவர்களை இன்னமும் விசாரித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும், நம்பிக்கை இழக்க வேண்டாம். முன்னரே சொன்னது போல், தொடரேடும், இயந்திரக் கற்றல் மொழியும், வலுவான தொழில் நுட்ப அமைப்பும் நமக்கு உதவும்.

‘நீங்களும் கோடீஸ்வரர்களாகலாம்’ என்று ஒரு பிரபலமான நிகழ்ச்சி உண்டு. இப்போது இரு கோடி ‘காரி’ குறியீட்டு நாணயங்களை வெல்லலாமென்று இரு முழு பக்க விளம்பரம் வந்துள்ளது.

‘மற்றவர்கள் பயப்படும் போது நீங்கள் பேராசையுடன் இருங்கள்; அவர்கள் பேராசைப்படும்போது நீங்கள் பயப்படுங்கள்.’

நதியில் குளிப்பது பேரானந்தம்; அதன் ஆழம், சுழல், நம் நீச்சல் திறமை பற்றிய அறிவும் தேவை.

Series Navigation<< யாயும் ஞாயும்

One Reply to “பொன்மான்”

  1. கட்டுரைகளில் நீங்கள் பயன்படுத்தி வரும் கொந்தல்/கொந்தர் வார்த்தைக்கு வேதகிரியார் சூடாமணி நிகண்டு தரும் அர்த்தம் இவ்வாறு:
    கொந்தலே சினக் குறிப்பு, கொந்துதல்,பெருங்கோபம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.