புவி சூடேற்றம் பற்றிய திரிபுகள்

This entry is part 12 of 23 in the series புவிச் சூடேற்றம்

வாதம் செய்வது என் கடமை
அதில் வழியைக் காண்பது உன் திறமை
-கவிஞர் கண்ணதாசன்

கடந்த பதினோரு பகுதிகளில் சொன்ன விஞ்ஞான விஷயங்களை மிகச் சாதுரியமாக குழப்புவதில், பல லாப நோக்குள்ள நிறுவனங்கள், வல்லுனர்கள். இவர்களின் வாதங்களை மேல்வாரியாகப் பார்த்தால், மிகவும் சரியாக இருப்பதைப் போலத் தோன்றும். இங்கு நாம் சொல்வது, டிரம்ப் போன்றவர்களின் அபத்த வாதங்களை அல்ல. டிரம்ப் போன்ற ஆழமற்ற மனிதர்களின் வாதங்கள், அறிவு சார்ந்த வாதங்களே அல்ல. இவர்களுக்குக் கண்ணால் பார்ப்பதே புரியும். செப்டம்பர் 2020 –ல், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வாதத்தில், புவி சூடேற்றம் பற்றி டிரம்ப் இவ்வாறு கூறினார்: “நல்ல குடிநீர், மற்றும் காற்று என்பதில் நான் உடன்படுகிறேன்” – எவ்வளவு குறுகிய பார்வை! நதிகளில், அமிலமும் நச்சும் கலக்காத வரையில், இவர்கள் பார்வையில் புவி சூடேற்றம் என்ற ஒன்று இல்லவே இல்லை. இவ்வகை வாதங்கள், அபத்தமாக இருக்கும் போதிலும், அது அமெரிக்க ஜனாதிபதி என்று சர்வத்தையும் முடிவு செய்யும் மனிதர் சொல்வதால், பதிவு செய்யும் கட்டாயம் எல்லோருக்கும் உள்ளது. இந்த லட்சணத்திற்கு, கலிஃபோர்னியா மாநிலத்தில் எரியும் பயங்கர காட்டுத்தீயை பார்க்கச் சென்ற டிரம்ப், “விஞ்ஞானிகளுக்கு இன்னும் பருவநிலை மாற்றம் பற்றி, சரியாகப் புரியவே இல்லை” என்று தன் மேதாவிலாசத்தை உலகிற்குப் பறை சாற்றினார்!

சரி, புத்திசாலித்தனமாக விஞ்ஞானத்தை திரிப்பவர்களது வாதங்களை அலசுவோம். மனித விஞ்ஞான வரலாற்றில், இது போன்ற மிகப் பெரிய அளவு திரித்தல் நடந்ததில்லை. முன்பு செய்த திரித்தல் எல்லாம், ஒரு பயிற்சிக்கு என்று சொல்லும் அளவிற்கு, இந்தத் திரித்தல் வேர்கள், அவ்வளவு ஆழமானவை. இதனால் தான், பல படித்தவர்களும், இவ்வகை வாதங்களில் சிக்கி விடுகிறார்கள். நிச்சயமாக, இந்த மாயையிலிருந்து வெளிவந்த சிலரின் விளக்கங்களையும் இந்தப் பகுதிகளில் அலசுவோம். இதற்கு காரணம், இக்கட்டுரைகளைப் படிப்பவர்களுக்கு அப்படிப்பட்ட சந்தேகங்கள் வந்தாலும், முன்னர் இந்தப் பாதையில் பயணித்தவர்களின் விளக்கங்கள், சந்தேகங்களைக் குறைக்க உதவும்.

”பூமியில் பருவநிலை எப்பொழுதும் மாறிக் கொண்டுதான் இருந்து வந்துள்ளது. விஞ்ஞானிகள், இதைப் பெரிதுபடுத்தி, பூச்சாண்டி காட்டி வருகிறார்கள்”

விளக்கத்திற்குப் போகுமுன், இந்த திரித்தலில், கொஞ்சம் விஞ்ஞானத்தைத் தனக்குச் சாதகமான முறையில் கலந்து விடுவதை கவனியுங்கள். விஞ்ஞானத்தைத் தாக்குவதற்கு முன், நம்பகத்தன்மைக்காக விஞ்ஞானத்தையும் சொஞ்சம் தூவிவிட்டு வேடிக்கை பார்ப்பது இவர்களது நோக்கம். அட, இவர்கள் சொல்வது உண்மையோ என்று படிப்பவருக்கு முதலில் தோன்ற வேண்டும். அப்பொழுதுதான் கடைகட்டிக் கல்லாவைப் பார்க்க முடியும். இதைச் செய்யும் அமைப்புகள், பின்னணியில், தொல்லெச்ச எரிபொருள் நிறுவனங்களின் நன்கொடையில் இயங்கும் அமைப்புகள்.

முதலில் எல்லோரும் ஒரு உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும். பூமியில் பருவநிலை எப்பொழுதும் மாறிக் கொண்டு வந்துள்ளது. இதில் சந்தேகமில்லை. விஷயம் அதுவல்ல. கடந்த 800 ஆண்டுகளாக பூமியின் சூடேற்றும் வாயுக்களின் அளவும், பூமியின் சராசரி வெப்பமும் மேலும் கீழும் மாறிய வண்ணம் இருந்து வந்துள்ளன. ஆனால், கடந்த 150 ஆண்டுகளாக, சூடேற்றும் வாயுக்களும் ஏராளமாக அதிகரித்துள்ளன; பூமியின் சராசரி வெப்பநிலையும் ஏராளமாக உயர்ந்து வருகிறது. இதைத்தான் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மற்ற அதிகரிப்புகள், சில பத்தாண்டுகளில் குறையவும் செய்துள்ளது. கடந்த 150 ஆண்டுகளில், குறைவு என்பதற்கே இடமில்லை. இதைத்தான் புவி சூடேற்றம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து வருகிறார்கள்.

பருவநிலை மாற்றம் பிரச்சனை அல்ல. ஏராளமான மாற்றம்தான் பிரச்சினை. இது போன்ற சாதுரியமான அரை விஞ்ஞானம், தனக்கு சாதகமான பகுதிகளை மட்டுமே எடுத்துக் கொண்டு திரித்துவிடும் முயற்சி.

”புவி சூடேற்றம் பற்றி விஞ்ஞானிகளிடம் கருத்து வேறுபாடு உள்ளது. முற்றிலும் இது ஒப்புக் கொள்ளப்படவில்லை”.

இதைப் பற்றி புத்தகமே போட்டு விட்டார்கள், விஞ்ஞானத் திரித்தல்காரர்கள்! அத்தோடு நிற்கவில்லை இவர்கள். அமெரிக்காவில் உள்ள 200,000 பன்னிரண்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு, இந்தப் புத்தகம் மற்றும் டி.வி.டி. –யை அனுப்பியுள்ளார்கள்! உண்மையான விஞ்ஞானத்திற்கு, பிரச்சாரம் தேவையில்லை.

முதலில் இந்த குற்றச்சாட்டிற்கான பதில், 97% விஞ்ஞானிகள், புவி சூடேற்றம் உண்மை என்ற விஷயத்தை ஒப்புக் கொண்டுள்ளார்கள். இந்த அளவு, விஞ்ஞான உலகில் ஒப்புமை எந்த ஒரு விஷயத்திலும் இருந்ததாகத் தெரியவில்லை.

அடுத்தபடியாக, விளக்க வரைபடத்தைக் கொண்டு மாணவர்களை சாதுரியமாக குழப்புகிறார்கள். இவர்களது பிரச்சார புத்தகத்திலிருந்து, இதோ அந்த விளக்க வரைபடம்:

பூமியில், 2000 வருடங்களாக சராசரி வெப்பநிலை மாறிக் கொண்டுதான் வந்துள்ளது. ஒன்றும் கவலைக்கிடமில்லை. இதை, உங்களை பயமுறுத்தும் விஞ்ஞானிகள் கொடுத்த விளக்க வரைபடம் என்று தான் சார்பற்ற ஒரு சங்கமாக சொல்லிக் கொண்டு, குழப்புகிறார்கள். இதில் முக்கியமான விஷயம், 1900 –க்குப் பிறகு இந்த வரைபடத்தில் இல்லை. இன்றைய பருவநிலை மாற்ற விஞ்ஞானிகள் கி.பி. 0 முதல் 1900 வரை நடந்தவற்றை ஒரு பின்னணியாகத் தான் கொண்டுள்ளார்கள். தொழில் புரட்சி, 1900 க்கு பிறகுதான் துரிதமானது. உண்மையில், இந்த விளக்க வரைபடத்தை, நடுநிலையாளர்கள் இப்படிப் பார்க்க வேண்டும்:

பல தேர்ந்த விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்ளும் முடிவு, 1850 –லிருந்து, பூமியின் சராசரி வெப்பநிலை இப்படித்தான் மாறி வருகிறது. 20 –ஆம் நூற்றாண்டை இந்த விளக்க வரைபடத்தில், பார்த்தால், எவ்வாறு பூமியின் சராசரி வெப்பமும், கரியமில வாயுவும் உயர்ந்துள்ளன என்பது மிகத் தெளிவாகத் தெரியும். இது peer reviewed science, அதாவது, விஞ்ஞான உலகால், ஆராயப்பட்டு, ஒப்புக் கொள்ளப்பட்ட நிஜம்.

”புவி சூடேற்றம் நின்று விட்டது. விஞ்ஞானிகள் சும்மா பயமுறுத்துகிறார்கள்”. 

டிரம்ப் அளவில் சொல்லாமல், இதற்கு ஆதாரமும் கூடவே தருவார்கள். இவர்கள் தரும் ஆதாரம் இதோ. இது போன்ற வாதங்களில், பெரும்பாலும், 1951 முதல் 1980 வரையில் எப்படி பூமி குளிரத் தொடங்கியுள்ளது, சூடேறவில்லை என்று விளக்குவார்கள். மேல்வாரியாகப் பார்த்தால், இது ஏதோ சரியாக இருப்பது போலத் தோன்றும். இந்த விளக்க வரைபடத்தைக் கூர்ந்து கவனியுங்கள்.

இதில் சொல்லப்பட்டுள்ள விஷயம், 5 ஆண்டுகளுக்கான தொடர் சராசரி வெப்பம். அதுவும், 1880 முதல் 2020 வரையிலான அளவுகள். நாம் வாட்ஸாப் பேர்விழிகள் சொல்லுவது போல, ‘நாசாவே சொல்லிவிட்டது. ஓட்டுங்கள் உங்கள் ஹம்மரை’ என்று முடிவுக்கே வந்து விடுவார்கள்! இதில் பல விஷயங்களை இவர்கள் தொடுவதே இல்லை. உதாரணத்திற்கு, 1980 முதல், வருடத்திற்கு .2 டிகிரி மாற்றம் இருந்த வண்ணம் உள்ளது. எல் நினோ, சூரிய களங்கங்கள், மற்றும் எரிமலை போன்ற விஷயங்கள் இந்த .2 டிகிரி ஏற்றம் இறக்கத்திற்கு காரணம் என்பது தெளிவாகியுள்ளது. ஆனால், 1998 முதல் கவனித்தால், புவி சூடேற்றம், வரலாற்றில் இல்லாத அளவிற்கு அதிகமாவதை இந்த விளக்க வரைபடத்தில் காணலாம். இந்த வகை அதிகரிப்பு 1980 முதல் நடந்து வருகிறது என்பதே உண்மை. இதை விட்டு விட்டு, நாசா சொல்கிறது பூமி குளிர்ந்து வருகிறது என்பதெல்லாம், விஞ்ஞானப் பிதற்றல். இது திரித்தல் குழுக்களின் தேர்ந்த ஒரு முறை – விஞ்ஞானத்தை திரித்து, நிரூபிப்பது போல, படிப்பவரைக் குழப்புவது!

”மனிதர்கள் உருவாக்கும் கரியமில வாயுவிற்கும் புவி சூடேற்றத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை”

இவ்வகை வாதம் செய்பவர்கள், மனிதர்கள், தொல்லெச்ச எரிபொருளால் உருவாக்கும் கரியமில வாயு, இயற்கையில் உருவாகும் கரியமில வாயுவிற்கு முன் எம்மாத்திரம்? எரிமலைகள், கடல் போன்ற இயற்கையின் ராட்சச அமைப்புகளைப் பார்க்கையில், மனித கரியமில வாயு உருவாக்கம் ஒரு விரல் நுனியளவு கூட இருக்காது. விஞ்ஞானிகள், நம் தொல்லெச்ச எரிபொருள் தொழிலை அழிக்க சதி செய்கிறார்கள் என்றும் வாதம் செய்கிறார்கள்.

உண்மை அதுவல்ல. எரிமலைகள் ஏராளமான கரியமில வாயுவை உருவாக்குவது உண்மை. ஆனால், அவை தொடர்ந்து வெடித்துக் கொண்டு இருப்பதில்லை. பல எரிமலைகள் என்றோ பல பத்தாண்டுகள் அல்லது நூறாண்டுகளுக்கு ஒரு முறை வெடிக்கின்றன. சில எரிமலைகளின் சாரல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் செழிப்பாக ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதும் உண்மை. இந்த விளக்க வரைபடம் என்ன காட்டுகிறது? பூமியில் உள்ள சமீபத்திய (150 ஆண்டுகள்) எரிமலை நிகழ்வுகளை, சராசரி பூமியின் வெப்ப அளவோடு காட்டுகிறது.

இந்த 150 ஆண்டுகளில், 8 மிகப் பெரிய எரிமலை வெடிப்புகள் விஞ்ஞானிகளால் பதிவு செய்யப்பட்டுள்ளன. எரிமலை வெடிப்பினால், கரியமில வாயு அதிகமாகிறது என்றால், இரண்டு வெடிப்பிற்கு இடைப்பட்ட காலத்தில், பூமி குளிரவேண்டும் அல்லவா? அப்படி நிகழவில்லை. மாறாக, பூமியின் சராசரி வெப்பம், கடந்த 150 ஆண்டுகளாக, சீராக உயர்ந்து வருகிறது. மனித நடவடிக்கைகள்தான் இதற்கு காரணம் என்பது தெளிவாகிறது. இவ்வாறு முதலில் மனிதனால் உருவாகும் புவி சூடேற்றத்தை எதிர்த்தவர், பிற்காலத்தில், மனித நடவடிக்கைகள் போல, புவி சூடேற்றத்தை விளக்கக் கூடிய ஒரு காரணம் வேறு எதுவும் இல்லை என்று சொன்ன ரிச்சர்டு முல்லர் என்னும் விஞ்ஞானி. முல்லரைப் போல, பல விஞ்ஞானிகள், முதலில் இல்லை என்று ஆரம்பித்து, பிறகு, விஞ்ஞான ரீதியாக தன்னையே திருத்திக் கொண்டவர்கள் ஏராளம். இதில் தவறேதும் இல்லை.

”விஞ்ஞானிகள் பயன்படுத்தும் மாதிரியுருக்கள் நம்பத்தகுந்தவை அல்ல. இந்த மோசமான கணினி மாதிரியுருக்களை வைத்துக் கொண்டு, விஞ்ஞானிகள், இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, நம்மை வீணாக பயமுறுத்துகிறார்கள்”

இது பருவநிலை மாற்றம் சார்ந்த ஒரு புதிய திரித்தல் நுட்பம். மற்ற நுட்பங்கள், பல்வேறு விஞ்ஞான திரித்தல் விஷயங்களில் பயன்படுத்தப்பட்டாலும், இது இந்தத் துறைக்கே உள்ள ஸ்பெஷல். இப்படித் திரிப்பவர்களுக்கு, பருவநிலை என்பது மிகவும் சிக்கலான விஷயம் என்பது மிகவும் தெளிவாகத் தெரியும். சிக்கலான ஒரு விஷயத்தை சரியாக அளப்பதும், கணிப்பதும், மிகவும் கடினம் என்பதும் இவர்களுக்குத் தெரியும். தெரிந்தே இப்படிச் செய்வதற்கு, லாப நோக்குள்ள எண்ணெய் நிறுவனங்கள், வாகனத் தொழில்கள், தங்களுடைய லாபத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அளிக்கும் ஊக்கமே இதன் பின்புலம்.

இதற்கு பதிலளிக்கும் முன்பு, இவர்களின் குற்றச்சாட்டை சற்று விரிவாகவே பார்த்து விடுவோம். இவர்களின் முதல் ஆட்சேபணை, இந்த சிக்கலான மாதிரியுருக்களில், ஏராளமான அளபுருக்கள் (parameters on climate models) உள்ளன. இதனால், எதை வேண்டுமானாலும் கதை கட்டி விடலாம். இரண்டாவது ஆட்சேபணை, இன்று அதிகரித்து வரும் புவி சூடேற்றத்தை இந்த மாதிரியுருக்கள் சரியாக விளக்குவதில்லை. இரண்டு ஆட்சேபணைகளும் சற்று முரணாகப் பட்டாலும், அதை நாம் பெரிது படுத்த வேண்டாம்.

பிரபல பெளதிக விஞ்ஞானி ஃப்ரீமேன் டைஸனின், 1970 –களில் பருவநிலை மாற்றம் பற்றிய கருத்தையே, இந்த வகை ஆட்சேபக்காரர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். எப்படி பருவநிலை மாற்றம் கணிக்கப்படுகிறது என்று முன்னமே விளக்கியிருந்தேன். பருவநிலை கணிப்பு என்ற துறையில் பல சிக்கல்கள் உள்ளன:

  • பூமியின் ஒவ்வொரு சதுர அடியிலும், வானிலையை அளப்பது இயலாத காரியம்
  • கடந்த 200 ஆண்டுகளாகத்தான் நம்மிடம் வானிலை அறிக்கைகள் உலகின் பல பகுதியிலும் உள்ளன. இதிலும், போர், இயற்கை அழிவு என்று பல இடையூறுகளால், சில இடங்களில், சில ஆண்டுகள் பதிவுகள் இல்லாமலும் போய் விடுவதுண்டு
  • கடந்த 150 ஆண்டுகளாகத்தான் கடலில் செல்லும் கப்பல்கள் கடல் வானிலையை அளக்கத் தொடங்கின
  • 1960 முதல், வானிலையை அளக்கும் செயற்கை கோள்கள் நம்மிடம் இருக்கிறது

இந்தக் காரணங்களால், எந்த ஒரு பருவநிலை கணிப்பு மாதிரியுருவும் சில தோராயமான முடிவுகளை (பரப்பளவு, உயரம்) உள்வாங்கத்தான் வேண்டும். 1970 –க்குப் பிறகு, வரலாற்றில் இல்லாத அளவிற்கு நம்மிடம் கணினி சக்தி அதிகரித்துள்ளது. பருவநிலை சார்ந்த மாதிரியுருக்கள், வெகுவாக முன்னேறியுள்ளன. 1988 முதல், IPCC என்ற அமைப்பு, இவ்வகை மாதிரியுருக்களை, உலக விஞ்ஞானிகள் (எல்லா நாடுகளுக்கும் இதில் பங்கு உண்டு) மெருகேற்றி வருகிறார்கள்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை முக்கிய அறிக்கையை வெளியிடும் IPCC –ன், அறிக்கைகள் சற்று விநோதமானவை. எந்த ஒரு கருத்தையும் திட்டவட்டமாக இதில் சொல்லமாட்டார்கள். உதாரணத்திற்கு:


“தென் அமெரிக்கா, ஆசிய கடற்கரையில் வாழும் ஏழை மக்களின் வாழ்வாதாரம், கடந்த 50 ஆண்டுகளாக, புவி சூடேற்றத்தால், பாதிக்கப்படுகிறது என்று 88% உறுதியாக சொல்ல முடியும். இதில் விஞ்ஞானிகளுக்கு 95% தன்னம்பிக்கை உள்ளது”. இதன் சுருக்கம் : கடற்கரையில் வாழும் ஏழை மக்கள் புவி சூடேற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இன்றைய பருவநிலை மாற்ற விஞ்ஞானம், ஏராளமாக வளர்ந்துள்ளது. இருக்கும் மாதிரியுருக்களை மெருகேற்றுவதோடு, கைவசம் இருக்கும் மாதிரியுருக்களை ஒருங்கிணைத்தும் வந்துள்ளார்கள். இது CMIP அல்லது Coupled Model Intercomparison Project என்று அழைக்கப்படுகிறது. கடந்த 700 வருடங்களாக பூமியின் சராசரி வெப்பநிலையை கணிக்கும் பணியை இந்த மாதிரியுரு செய்துள்ளது என்பது 97% விஞ்ஞானிகளின் கருத்து (IPCC –யின் கட்டுரைகளைப் படித்ததால் வந்த வினை இது என்று நினைக்கிறேன் ☺). மேற்கொண்டு, சந்தேகத்தைத் தூண்டி வேடிக்கை பார்க்கும் திரிப்பாளர்களுக்கு, சந்தேகத்திற்கு இடமே இல்லாத வகையில் கடந்த 700 ஆண்டுகளை துல்லியமாக மேலும் பிரித்து, பிரித்து, ஆய்ந்துள்ளது. இதில், முதல் படம், கடந்த ஆயிரம் ஆண்டுகளாக, பூமியின் சராசரி வெப்பநிலையில் எரிமலை வெடிப்புகளின் பாதிப்பை காட்டுகிறது. பெரும்பாலும், இது மிகக் குறைவு (0.05 டிகிரி கூட இருக்காது). அடுத்த படம், கடந்த ஆயிரம் ஆண்டுகளாக, பூமியின் சராசரி வெப்பநிலையில், சூரிய வெப்பத்தின் தாக்கத்தைக் காட்டுகிறது. இதுவும் .5 டிகிரியை விடக் குறைவுதான்.

   

கடைசி படம், கடந்த ஆயிரம் ஆண்டுகளாக, பூமியின் சராசரி வெப்பநிலையில், மனித நடவடிக்கைகளின் தாக்குதலைக் காட்டுகிறது. மனித நடவடிக்கைகளின் தாக்குதலைக் காட்டுகிறது. இது 1.5 டிகிரி என்பது 2019 –ல் மிகத் தெளிவு (இந்தப் படம் 2000 வரைதான்). இந்தப் படங்களிலிருந்து ஒன்று மிகவும் தெளிவாக நிரூபணம் ஆகிறது. எரிமலை, சூரிய வெப்பம் என்பதெல்லாம் பூமியின் சராசரி வெப்ப அளவை பெரிதாக மாற்றவில்லை. மனித நடவடிக்கைகள் இன்று கிட்டத் தட்ட 2 டிகிரி அளவிற்கு உயர்த்தி விட்து. இது இப்படி இருக்கையில், லாப நோக்குள்ள பல தொல்லெச்ச எரிபொருள் அமைப்புகள் கிளப்பி விடும் பொய் திரித்தல்கள் பல. விஞ்ஞானத்தை எள்ளி நகையாடும் லாபநோக்குடைய வியாபாரங்கள், மேலும் பல வகையிலும் திரித்து கதை கட்டி வெற்றிப் பெற்றுள்ளார்கள்.

Series Navigation<< மறுசுழற்சி விவசாயம்புவி சூடேற்றம் பாகம்-13 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.