
நிசப்தத்தின் இரகசிய இசை
தேனடை போல தலைக்குள் சொற்கள்
வந்துகொண்டும் சென்றுகொண்டுமிருந்தன.
ஒவ்வொன்றும்
எழுதும் கவிதைக்கு
என்னை எடுத்துக்கொள்ளென்று குரலெழுப்பின.
என்னுள்ளிருந்த
நிசப்தத்தின் இரகசிய இசை
கவிதையுடன் காணாமல் போயிற்று.
மதுக்குப்பிகளில்
மாதங்கியின் தோள்களில்
மாடியில் நின்றால் தெரியும்
தரையிறங்கும் விமானங்களில்
தேடினேன். கிடைக்கவில்லை.
பிறிதொரு யுகத்தில்
என்னறைக்குள் பொம்மைபோல் அமர்ந்திருந்த
பின்வீட்டு வெண்முயலின் பஞ்சுடலை
முத்தமிட்டிருந்தபோது
தலைக்குள் நிரம்பிக் கொண்டிருந்தது
நிசப்தத்தின் இரகசிய இசை.
***
உம் நுதலது இமையா நாட்டம்
பசி மறந்து இரவு
பகல் மறந்து முதுகு
வலிமறந்து பனுவல்
பல படித்துச் சிறந்து
ஆட்சியர் பதவியில்
அமர்ந்த பெருமை
பஞ்சுமிட்டாயானதே!
தற்குறிக்கும் தறுதலைக்கும்
தலைவணங்க நேர்ந்த்தே!
துட்டரின் கயமைக்குத்
துணைபோக நேர்ந்த்தே!
’ஈசனே! இக்கசடரை என்று கொல்லும்
உம் நுதலது இமையா நாட்டம்?’
***
பூர்ணத்தின் துளி
ஆடும் கூத்து அணியும் வேடம்
ஓடும் காலம் ஒண்டிய உலகம்
அனைத்தும் மாயமென
உணரும் தருணம் நிகழும் தானாய்
உன்னில் என்னில் அவரில்.
ஆழ்மனத்தின் தாழ் திறக்கும்.
அறிவடங்கும். சித்தம் தெளியும்.
பூர்ணத்தின் துளி பூர்ணம் சேரும்
சூன்யமாகும் சூட்சுமம் புரியும்
உடல்மண்ணுக்கு! உயிர் காற்றுக்கு!