நட்சத்திரம்

‘நாவல்காடு நாவல்காடு’

‘இறக்கம் இருக்கா’ நிறுத்தம் வருவதற்கு இரண்டு நொடிகளுக்கு முன்னே நடத்துனர் சத்தம் கொடுத்தார்.

முன்னதாகவே இரண்டு தடவை ஓட்டுநர் கழுத்தை திருப்பி பேருந்தின் கடைசியை பார்த்துவிட்டு மறுபடியே முன்பக்கமாக திருப்பிக் கொண்டார். அவர் இரண்டு முறையும் பார்த்தது நடத்துனரின் முகத்தை தான். அவர்களுக்குள் அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.ஒவ்வொரு பேருந்தையும் இயக்கும் நடத்துனருக்கும் ஓட்டுநனருக்கும் இடையே இப்படி கண்களால் மட்டும் பேசிக் கொள்ளும் எத்தனையோ உரையாடல்கள் நிகழ்கிறது.

மாமாவும் மாமியும் கூட இப்படிதான். கண்களினாலேயே பேசி கொள்வார்கள், நிறைய இடங்களில். மாமா தான் வேலைக்கு போய் சம்பாதித்து போட்டு குடும்பத்தை தாங்கி பிடித்திருப்பது போல தெரிந்தாலும், மாமி ஒருநாள் ஊருக்கு போய்விட்டால் பிரேக்டவுன் ஆன வண்டி மாதிரி வீடே முன்னோக்கி செல்ல முடியாமல் நின்று விடும். மாமா முகமே தூக்கணாங்குருவி கூடு மாதிரி இருக்கும் அந்த நாட்களில்.

எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் அப்படியான வீடுகளை விரல் விட்டு எண்ணி விடலாம். பெரும்பாலான வீடுகளில் சத்தம் இல்லாமல் கணவன் மனைவிக்கிடையே ஒரு உள் அமைதி போர் நடந்து கொண்டுதான் இருக்கும்.

மாமாவையும் மாமியையும் பார்க்கும் பொழுதெல்லாம் அப்பாவும் அம்மாவும் இப்படி இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றாமல் இருந்ததே இல்லை. ஒருநாளைக்கு நூறு தடவை அவர்கள் கண்ணில் பட்டாலும் அந்த நூறு தடவையும் அப்படி தோன்றும். அந்த நேரத்தில் சுந்தரம் உடன் இருந்தால் அவர் கையை பிடித்துக் கொள்வேன்.அவர் திரும்பி என்னை பார்க்கும் அந்த பார்வையில் ஒரு ஆறுதல் இருக்கும்.

*****

‘என் ஓட்டத்தை நிறுத்தாமலே ஆண்டவன் வாழ்க்கையை முடிச்சிருவானோ’ அம்மா அடிக்கடி இப்படி புலம்பிக் கொண்டிருந்தாள்.

‘வீடு வீடா பத்து பாத்திரம் தேய்க்க ஓடுறது காணதுனு வீட்டுக்கு வந்தா இவரு தண்ணிய போட்டுட்டு வந்து ஓட விடுறாரு. அவர் தூக்கி எரியுற பொருளெல்லாம் ஓடி ஓடி பொருக்கியே என் காலு படமெல்லாம் தேர்ச்சி போச்சு’ ஒருதடவை தேம்பி தேம்பி அழுது கொண்டு அம்மா இப்படி சொன்னாள்.

‘எப்படியாச்சு நல்லபடியா ஒரு வேலையோட வந்திரு தாயி. பொம்பள பிள்ளைக்கு என்ன நாடு வந்தாலும் ஊன்றி பிடிக்க வேலைன்னு ஒன்னு இருந்தா, நாலு எட்டு கூடுதலா விரசா வைக்கலாம்’ கல்லூரி விடுதியில் என்னை விட்டுவிட்டு திரும்பும் போது என் கையை பிடித்து வைத்துக் கொண்டு அம்மா சொன்னது. அது கேட்காமல் கேட்ட ஒரு சத்தியம் போல் இருந்தது.

என்னை வெளியூரில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்பதில் அம்மா ரொம்பவும் உறுதியாக இருந்தாள். ‘இது என் விதி. இத்தனையும் போடணும்னு எனக்கு இருக்கு. கோட்டையில பிறந்தாலும் போட்ட புள்ளி மாறாது. தினமும் உங்க அப்பாரு குடிச்சிட்டு வந்து நடையில் நின்னு கூத்து போடுறதும், ஊரே வேடிக்கை பார்க்கதுமா கிடந்து நாறி போகனும்னு எனக்கு எழுதி இருக்கு. உனக்கு இந்த எழுத்தெல்லாம் வேண்டாம். நீ படிப்ப பார்க்கணும். படிப்ப புடிச்சு வாழ்க்கையில மேல ஏறனும் நீ’ இப்படியெல்லாம் சொல்லும்பொழுது அம்மாவின் கண்கள் கோவைப்பழம் மாதிரி சிவந்து போய் கிடந்தது. இடைஇடையே மூக்கை சிந்திக்க கொண்டாள். கண்ணீர் தடம் வரிவரியாக கன்னத்தில் விழுந்து இருந்தது.

‘ஆயிரும். எல்லாம் சரி ஆயிரும். வெளிச்சம் கண்டிப்பா வந்திரும். வரணும்’ சேலை தலைப்பால் முகம் பூராவும் துடைத்துக் கொண்டாள். கண்களில் ஒரு தெளிவு தெரிந்தது.

இவ்வளவு நேரமும் என் முன் அமர்ந்து அழுது அழுது பேசியது இதே அம்மாதானா என்பது போல் இருந்தது. அம்மாவின் முகம் துருவ நட்சத்திரம் மாதிரி தீர்க்கமாய் இருந்தது.

அம்மா சொன்னது மாதிரியே அம்மாவின் ஓட்டம் நிற்காமலேயு உயிர் ஓடி விட்டது.எனக்கு வேலை கிடைத்திருக்கிறது என்று அம்மாவிடம் நான் பேசி முடித்திருந்த தொலைபேசி அழைப்பிற்கு, அடுத்து எனக்கு வந்த தொலைபேசி அழைப்பு அம்மா இறந்த செய்திதான்.

‘நெஞ்சுவலி வந்து அக்கா உசுர விட்டிருச்சு….’ மாமாவின் தேம்பிய குரல் இடி போல் இறங்கியது.

இரண்டுக்கும் இடையில் இருந்த அந்த ஒரு ராத்திரியில் என்னவெல்லாம் அவளுக்குள் ஓடியிருக்கும் தெரியவில்லை. தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து பூரித்து போயிருப்பாள்‌. கொஞ்ச நேரம் முற்றத்தில் கால தொங்க விட்டுட்டு, அண்ணாந்து நிலாவை பார்த்தபடி இருந்திருப்பாள்.

துக்கத்தை மட்டுமே சுமந்து பழகின இதயத்திற்கு சந்தோசத்தை பொறுக்க சக்தி இல்லாமல் துடிப்பை நிறுத்தி கொண்டது.

******

‘பையை எங்கிட்ட கொடுமா. நீ அவள் பிடிச்சிட்டு பாத்து இறங்கு.’ சுந்தரம் என்னை முன்னாடி இறங்கவிட்டு அவர் பின்னாடி இறங்கினார். இறங்கும் பொழுது கயல் என் கையை இன்னும் அழுந்த பிடித்துக் கொண்டாள்.

இந்த எட்டு வருடத்தில் ஊர் நிறைய மாறியிருந்தது. இரண்டு பக்கமுமாக வரிசையாக நிற்கும் நாவல் மரங்கள் தொலைந்து போயிருந்தது. அதன் இடத்தில் தெரு விளக்கு பளீர் என்று எரிந்து கொண்டிருந்தது. வயல்கள் வரிசை வீடுகளாக மாறியிருந்தது. எல்லாவற்றையும் அதன் அதன் இடத்தில் மீண்டும் அமர்த்தி பார்த்தேன். கண்ணுக்கு எதிரில் இருப்பது தொலைந்து போனாலும் கண்களுக்குள் பதிந்திருந்தது ஒரு நாளும் தொலைந்து போவதில்லை.

‘நல்லா இருக்குதியாம்மா.’ நடுத்தெரு நடராஜன் தாத்தா மீசையை தடவி விட்டுக் கொண்டார்.

‘ஆறு மாசத்தில புருஷனும் பொண்டாட்டியும் வரிசை கட்டிட்டு போய்டாக. இப்படி கண்ணுக்கு அழகா பிள்ளைக வருகத பார்க்க கொடுத்து வைக்காம.’ பெருமூச்சு விட்டுக் கொண்டு கயலின் தலையை கோதினாள் பக்கத்தில் நின்று கொண்டிருந்த விசாலம் ஆச்சி.

சுந்தரம் என் கையை பிடித்துக் கொண்டார்.

‘என்ன பொங்கல் வந்தாச்சா’ திருப்பு வீட்டு லீலா அக்கா கேட்டாள்.

ஒருவர் துக்கமாக வரவேற்றால், இன்னொருவர் சந்தோசமாக வரவேற்கிறார்கள்.

ஒவ்வொரு வீட்டு நடையிலும் ஒவ்வொரு விதமாக கோலம் வரைந்து கொண்டிருந்தார்கள்.சிலர் கோலப்பொடியும் கலர் பொடியும் வைத்து வரைந்து கொண்டிருந்தார்கள்.சிலர் காதலியும் சுண்ணாம்பும் வைத்து வரைந்து கொண்டிருந்தார்கள்.

நம்ம வீட்டு வாசலில் கலர் பொடி கோலம் போடவா, காவி கோலம் போடவா என்று யோசித்துக் கொண்டே நடந்தேன். தொலைபேசியில் அழைத்து பொங்கலுக்கு வருவதாக சொல்லி, வீட்டை சுத்தம் செய்து வைக்க முடியுமா என்று கேட்ட பொழுது குருணாயி அக்கா மறுவார்த்தை சொல்லாமல் ‘சரி தாயி. உனக்கு செய்யாம யாருக்கு செஞ்சிற போறேன்’ என்று சொன்னார்கள்.

அது அவர்கள் எனக்கு செய்வதில்லை. அம்மாவுக்கு செய்வது.

குருணாயி அக்காவும், அம்மாவும் ரொம்ப நேரம் நின்று கொண்டே பேசுவார்கள். இரண்டுபேர் கண்களிலும் துக்கம் நிரம்பி வழியும். இருப்பதை தானே மாறி மாறி பகிர்ந்து கொள்ள முடியும். அவர்களிடம் துக்கம் தான் நிறைய இருந்தது.

என்றாவது ஒருநாள் மீன்குழம்போ கறிக்குழம்போ வைத்தாள்.’குருணாயி குழம்பு பையனுக்கு கொடு’ என்று அம்மா ஒரு சின்ன கிண்ணத்தில் கொழம்பு ஊற்றி கொண்டு நீட்டுவாள்.

குராணாயி அக்கா சிரித்துக் கொண்டே வாங்கிக் கொள்வாள்.

‘என்கிட்ட தவிர குருணாயி யாருகிட்டயேயும் ஒரு பருக்கை கூட வாங்காது. நான் இல்லாம கிடக்கேன் உன்கிட்ட வந்து அழுதனானு வெடுக்குனு கேட்டிருவா.’ அம்மா இப்படி சொல்கையில் ஒருதடவை நான் இப்படி கேட்டுவிட்டேன் ‘நாமலே எப்பயாச்சு தான் நல்ல சாப்பாடு செய்றோம். அதுவும் கொஞ்சோண்டு தான் இருக்கு. அதுல அங்க கொண்டு போய் கொடுக்கணுமா.’

‘நாம சம்பாதிச்சு நாம் மட்டும் தான் வாழணும்னு நினைக்க கூடாது. எதோ என் சக்திக்கு எனக்கு புடிச்ச பங்கு இது.’ அம்மா அடுத்த வேலையை பார்க்க போய்விட்டாள்.

வீட்டு வாசலுக்கு வந்து சேர்ந்த பொழுது குருணாயி அக்கா சுண்ணாம்பு வைத்து பொங்கல் பானை வரைந்து கொண்டிருந்தார்கள். அவர் ஒரு சிரிப்பை கடத்தி விட்டு உள்ளே சென்று விட்டார். கயலும் என் கையை விட்டுவிட்டு உள்ளே ஓடிவிட்டாள்.

‘நீங்க சுத்தம் மட்டும் செஞ்சு வச்சா போறாதா. இதெல்லாம் நானே வந்து செஞ்சிருப்பனே.’

‘இருக்கட்டும் நீ ஃபோன் போட்டு வெள்ளை அடிச்சு வீட்டு சுத்தம் பண்ணி வைக்க சொன்னா, அது மட்டும் தான் செய்யணும்னு இருக்கா. கோலமும் சுத்தம் பண்ணுறதில சேர்த்திதான்’ பொங்கல் பானைக்கு கழுத்து வரைந்தபடியே நிமிரிந்து பார்க்காமல் குருணாயி அக்கா சொன்னார்கள்.

குனிந்து அவர்கள் தோளை பிடித்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.நடையில் வரைந்திருந்த சுண்ணாம்பு கோடுகளில் கால் பட்டுவிட்டால் எட்டி கால் எடுத்து முற்றத்தில் வைத்தபொழுது இடது கதவு ஓரமாக முற்றத்தில் ஒரு நட்சத்திரம் வரையபட்டிருந்தது.

‘இந்த நட்சத்திரம் எதுக்கு’ நான் திரும்பி பார்த்துக் கேட்டேன்.

‘பிரஷ் வாக்கா இழுக்க வருதானு பார்க்கிறதுக்கு சும்மா வரைஞ்சு பார்த்தேன் தாயி.’ அக்கா நிமிர்ந்து என் முகத்தை பார்த்து சொன்னாள்.

அக்கா பக்கமிருந்து திரும்பி மீண்டும் அந்த நட்சத்திரத்தை பார்த்தபொழுது அது சிரித்தது. எல்லாம் சரி ஆயிரும்னு சொன்ன அம்மாவின் சிரிப்பு அது.

நான் குனிந்து நட்சத்திரத்தை தொட்டு பார்த்தேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.