ஜன்னல் கம்பிகளுக்கிடைவழி வெம்மையான காற்று ரயில் சென்ற வேகத்திற்கு கண்களை திறக்க முடியாதபடி வீசியது. எண்ணையற்று தேங்காய் நாரைப்போல மாறியிருந்த தலைமயிரை தொட்டுத்தடவி பிசிறுகளை எடுக்க முயன்றான். அம்மா கேட்டது மயிர்ச்சிக்கை பியித்து எடுக்கும்போது உண்டான வலியில் உறைத்தது “கோலப்பா , இது உடம்புல ஒறம் இருக்க ஆளுக வாழுத இடம். ஒண்ணு செத்துப்போ இல்லன்னா, கண்ணுகாணாத இடத்துக்காவது போய்த்தொல.”. கழுவாத கண்களின் ஓரமாயிருந்த பீளை கழன்று போகும்படி வெந்த கண்ணீர் வழிந்தது. வெயில் சுட்டு கருத்த முகத்தை மூடிக்கொண்டான். அந்த மூன்றாந்தர கோச்சிலிருக்கும் மற்ற கண்கள் அனைத்தும் ஒவ்வொருவிதமாக கற்பனையில் அவன் இறந்தகாலத்தை கணக்கிட்டு முடிக்கும் முன் காற்றிற்கு படபடத்த காவித்துணியில் உடலைப் பொதிந்து மரஇருக்கையில் தன்னுடலை ஓர் மூட்டை போலாக்கி சுருண்டு படுத்துக்கொண்டான். பின் ரயில் சக்கரங்கள் சுழலும் இரைச்சலில் தூங்கிப்போனான்.

இனிமேல் முடியாது என்ற நிலையில் ஓர் இரவு வீட்டிலிருந்து கிளம்பும் போது அம்மா திண்ணையில் அன்று கடன் கொடுத்தவர்களுடன் நடந்த சண்டைக்கு பிறகான அயர்ச்சியில் சீரான மூச்சுடன் உறங்கிக்கொண்டிருந்தாள். இதற்கு முன்பு , ஒருமுறை ஊரைவிட்டு ஓடுவதற்கு முன்னும், தூக்குக்கயிறைப் பழைய வீட்டின் ஓட்டுப்பணியில் கட்டி தொங்கவிட்டு கழுத்தில் மாட்டி அழுதபடி நின்ற போதும் அவள் தடுத்து ஏறக்குறைய ஒரேபோல சமாதானப்படுத்தியிருக்கிறாள் “மகனே , கடனெல்லாம் அடச்சிப்போடலாம். எல்லாம் சொகமா முடியும் பாத்துக்க. உனக்கு நேரம் அமஞ்சி வந்துட்டா கையில பைசா ஓட்டமிருக்கும். உமக்க அப்பா பெரிய எண்ண யாவாரி, அத மறந்துராத. அந்த ரத்தம் ஓடுதவன் இந்த கொழப்பத்துக்கெல்லாம் பயரக்கூடாது கேட்டியா, கட்டுனவ போன இன்னொன்னு வரும். பயராம இரி , அம்மால்லா கூட இருக்கேன்,” அம்மாவின் இந்த வார்த்தைகள் தந்த பொய் நம்பிக்கையில் அவன் ஊரிலேயே தங்கி அடுத்தடுத்து பெரிய கடன்களில் சிக்கியிருந்தான். இந்தமுறை அவளே அவனை விரட்டிவிட்டாள்.
கிளம்பும் முன் வீட்டு வாசலின் மேல் திண்ணையில் தொங்கவிடப்பட்டிருந்த அப்பாவின் படத்தை பார்த்தான் , அந்த முகம் முன்பின் தெரியாத அந்நியனைப்போல தோன்றியது.
*
மருத்துவாழ்மலை அடிவாரத்தில் நின்றால் அதன் உச்சியில் தெரியும் ஒற்றை ஒளிப்புள்ளி கடவுள், அவன் செய்த பொய் சத்தியத்தில் இப்போது மோசமாக செத்துப்போயிருக்க வேண்டும். அங்கு சுதாவுடன் ஏறிச்சென்று பணயம் வைத்த அவள் நகைகள் அனைத்தையும் ஒரு வருடத்திற்குள் மீட்டு விடுவதாகச்சொல்லி கடவுள் மேல் சத்தியம் செய்து ஆரம்பித்த அரிசிக்கடை இப்போது இடிக்கப்பட்டு கோரைப்புல் ஆளுயரத்திற்கு வளர்ந்து நிற்கிறது. அந்தக்கடனும் அதைத்தொடர்ந்த வியாபார வீழ்ச்சியும் ஓர் விபத்தென அவனையும் சுதாவையும் சமாதானம் செய்ய எடுத்துக் கொண்ட முயற்சியில் அவன் சமாதானமாகி ஆறு வருடம் ஆகியும், அவள் ஆகாமல் முதல் வருடத்திலேயே பிரிந்து சென்றுவிட்டாள்.
அம்மாவை துணைக்கு அழைத்துக்கொண்டு சுதாவை தன்னுடன் வரவைக்கச்சென்ற இடத்தில் அம்மா “சுதாவ அனுப்பிருங்க. இது எல்லா வீட்டுலையும் நடக்க கததான. கடம் வாங்காத ஆளெ இல்லங்கத மனசுலாக்கணும். போகப்போக பய கைதாங்காத அளவுக்கு சம்பாதிப்பான். அப்போ பூட்டிவைக்க அலமாரி காணாது பாத்துக்கிடும்” என்று பறகளைக்காட்டிச் சிரித்தாள். “தைரியமா அனுப்பி வையிங்க,” நின்றபடியே எல்லாவற்றையும் முடித்துவிடும் வேகத்தில் பேசினாள்.
“அவ வந்தா தாரளாம கூட்டிட்டு போங்க. உங்க சாமர்த்தியம்,” என்றபடி கூடத்தில் அமர்ந்திருந்த சுதாவின் அப்பா பாதி முடித்திருந்த உணவை இலையில் வைத்துவிட்டு எங்கோ உச்சி வெயிலில் கிளம்பிவிட்டார். எட்டாவதும் கடைசிபிள்ளையான சுதாவிற்கு முப்பத்திமூன்று வயதான நிலையில் அவள் அப்பா இந்த வெயிலில் தலை சுற்றி விழாமலிருந்தால் ஆச்சரியம்.
“சுதா…யம்மா…வாம்மா போவோம். பயலும் பாவம் நீயும் பாவம். சின்ன வயசுல தனியா கெடந்து நொம்பலப்பட கூடாதுல்ல. அவன் திருந்திட்டான்” என்று அவளிருப்பதாக கற்பனை செய்திருந்த அறையைப்பார்த்து அம்மா சொன்னது அவள் காதில் விழுந்திருக்கவேண்டும். அடிச்சேலை சரசரக்க அந்த அறைக்குள்ளிருந்த இன்னொரு அறைக்குள் அவள் செல்லும் ஒலி கேட்டது. கோலப்பன் அமைதியாக எதாவது நடந்துவிடுமா என காத்திருந்தான். அன்றிரவு வீட்டிற்கு வந்ததும் அம்மா “பெரிய சீமச்சிறுக்கி கால்ல விழுந்து கூப்புட்டாதான் வருவாப்போல. காசு சேத்தா அந்த நாயி பொறத்தால வரும். நீ உனக்க வேலைய பாரு. எல்லாம் அதுவா நடக்கும்.”
கோலப்பன் பேசுவதற்கென்று எதும் இருக்கவில்லை. உடல் தளர்ந்து மனம் ஆற்றலற்று பிழிந்து போட்ட கரும்பு சக்கையாக கிடந்தது. “யம்மா, மானமா ஒரு வேலைக்கி போறேன். பொங்கதுக்கு வழியிருக்கும். இந்த கட யாவாரம்லா வேண்டாம்மா. எனக்கு முடியல்ல.”
“சீ…வாயமூடுல..அறுதப்பயல…நல்ல அப்பனுக்குத்தான் பொறந்தியா. ஆம்பளையா பொறந்தா மட்டும் காணாது கேட்டியா,” என்று வேகமாக அவனிடம் வந்தவள் “கடைக்கு போயி யாவாரத்த பாரு. பிள்ளன்னு பொறந்துருக்கு பாரு சவம்…சவம். உனக்க அப்பா மட்டுமிருந்தா இந்த வேதன எனக்குண்டா,” என சேலைத்தலைப்பால் முகத்தை மூடிக்கொண்டு அழுதபடி கீழே விழுந்த பொருளென அமர்ந்தாள். “இந்த வீடு உனக்க அப்பன் தந்தது. உனக்குன்னு என்னமாம் சம்பாத்தியம் உண்டால. ஒரு பிள்ள பெக்கக்கூட வக்கில்ல,” என்றவள் கத்தி அழுது முடித்தும் அமைதியாக இருந்த கோலப்பனின் உருவம் அவளை வெறிகொள்ள வைத்தது. “கோம்ப நாய, போல கடைக்கி போல,” என புடதியில் அடித்து எழும்பி துரத்திவிட்டாள்.
அந்த எண்ணெய்க்கடை வீதியிலிருந்த முதல் கடையில் ‘முத்து மாணிக்கம் ஹோல் சேல்’ என மஞ்சள் போர்டில் சிவப்பால் எழுதப்பட்டிருந்து. அதன் விரிந்த முன் அமைப்பில் எண்ணெய் டின்கள் வரிசையாக அடுக்கப்பட்டு அதன் பின்னாலிருந்த கல்லாப்பெட்டியின் பின் கோலப்பன் அமர்ந்திருந்தான்.
“உனக்க அம்ம இன்னைக்கும் பத்தி விட்டுட்டாளா?” என்றபடி வழியே கிடந்த காலி டின்களை தூக்கி மாற்றி வைத்துவிட்டு கடைக்குள் நுளைந்தான் அமுதம். கசண்டி மண்டையில் நரைத்த ஒன்றிரண்டு முடிகள் பின் மண்டையில் ஒட்டியிருந்தன. ஐம்பதை தாண்டிய வயதை மறைக்கம்படியான உடைகளை மட்டுமே அவன் அணிந்து மடின்கள் உரசி இடிபட்டு கேட்கக்கூசும் ஒலி , இருவரிடமும் குறைபட்டுக்கொள்ள ஏதுமில்லாத அளவிற்கு பழகிப்போயிருந்தது.
“யாவாரம் ஆகணும்லா,”
“அதான் டெய்லி கொட்டுதே , நீ கடைய தொறந்து வச்சி. ஆனாலும் உங்கம்மைக்கி வானத்துல பறக்க அளவுக்கு உன்மேல நம்பிக்க. எத நம்பிடே நீ கடன் வாங்குத. சுதாக்கு உருப்புடி எல்லாம் அறுதியா போச்சு. இனி அந்த வீடு ஒண்ணுதான் இருக்கு. அதையும் வித்து தீத்துட்டா உனக்க அம்ம அடங்கிருவாளா ?”
“கடன் வாங்கதும் அடைக்கும் எல்லாம் வீட்டுலையும் நடக்கதுதான். இத போட்டு பெருசு படுத்தாத.”
“நான் என்னடே பெருசு படுத்த. உனக்கு கல்யாணம் பண்ணி பேரனோ பேத்தியோ எடுத்தமா. கண்ண மூடிட்டு குழிக்குள்ள விழுந்தமான்னு இருக்க முடியல அவளுக்கு. நீ இப்போ யாவாரம் செஞ்சிதான் ஜீவிக்கனும்ன்னு எதும் இருக்காடே. நீ படிச்சதுக்கு கவர்மெண்டு பரிச்ச எழுதி மானமா இருக்கலாம்.”
“யாவாரம் ஆக நேரத்துல வந்து நிக்காத.”
“ஆனா , அழகிடே உங்கம்ம. இல்லாம உங்கப்பா நாயா பின்னால அலஞ்சிருப்பானா ?” என்று சம்பந்தமில்லாமல் எங்கோ பார்த்தபடி சொன்னான். பின் நிலைக்கு வந்தவனாய் “செரிடே நான் போறேன். அந்தா எதுத்த சாத்தாங்கோயில் ஐயரு ஃப்ரீயா விளக்கெண்ண வாங்க வாரான் அவனுக்கிட்ட பேசு யாவாரம் அமோகமா ஆகும்,” என்றபடி அமுதம் அமைதியானானே தவிர அங்கிருந்து கிளம்பவில்லை.
“சாமி. சாத்தா விளக்கெரிக்க எண்ணெ கேக்கான். நாலு நாள் இருட்டுலதான் கண்ணுதெரியாம கெடக்கான். இன்னைக்கி உங்க புண்ணியத்துல வெளக்கெரியட்டும்,” என்றார் ஐயர். அவர் உடுத்தியிருந்த காவிச்சாறம் கறையேறி மன்ணில் புறட்டி எடுத்தது போலிருந்தது. வெறும் பூணூல் மட்டும் அணிந்து ஐயருக்கான அடையாளத்துடன் அந்த கோவியில் கிடைக்கும் சில்லறகளைக்கொண்டு மூன்று பெண்களுக்கு கல்யாணம் செய்துவைக்கும் முயற்சியில் பத்தாண்டுகளுக்கு மேலாக இருக்கிறார்.
கோலப்பன் எண்ணெயை ஒரு சிறிய கண்ணாடி பாட்டிலில் அளவெடுக்காமல் ஊற்றிக்கொடுத்ததும் ஆசீர்வதிப்பது போல அவன் தலையில் கைவைத்து ஓடுவது போல நடந்து கோவில் நடையை திறந்தார். இருபதடி தூரத்திகிருந்த கோவில் வாசலிலிருந்து “தப்பிச்சி போயிரு. செத்துப்போயிருவ,” என்று தினமும் கத்துவது போல இன்றும் அவனைப்பார்த்து விரட்டுவது போல கையசைத்து கத்தினார்.
“இந்த கிறுக்கையரு சொன்னாலாவது கேளுடே. கடம் வாங்கி காப்பிக்கட யாவாரம் செஞ்சி மூணு பிள்ளையையும் கல்யாணம் பண்ணிவைக்காம இப்பொ அதுக வேற யாவாரம் செய்ய ஆரம்பிச்சாச்சு. நல்ல வேளப்பா உனக்கு கொழந்தையில்ல,” என்று அமுதம் சிரித்தான். கோலப்பன் இன்றைய கணக்கு நோட்டில் ஐயருக்கு கொடுத்த எண்ணெயையை முதல் வியாபாரமாக எழுதிவைத்து நோட்டை மூடினான்.
*
ஐயர் காணாமல் போய் ஒரு வருட நிறைவு நாளன்று
கடையின் போர்டு இருந்த இடம் வெறுமையாகி ஆலமரமொன்று கைக்குழந்தைபோல வேர்விட்டு வளர ஆரம்பித்திருந்தது. இரும்புக்கதவில் வாடகைக்கு என்ற கையால் எழுதிய போர்டு அசிங்கமாக தொங்கியது. அந்த வீதிக்கு இணையாகச்சென்ற அடுத்த பெரிய வீதியில் அமுதம் தன் புதிய எண்ணெய்க்கடையில் டின்களை சரியாக கட்டிடங்கள் போல் அடுக்கி பார்வையாக வைத்திருந்தான். தரையில் சாய்த்து வைத்திருந்த பெரிய போர்டில் எண்ணெய் விலைப்பட்டியலில் நேற்றைய எண்ணெய் விலை அழிந்து இன்றையதுடன் சேர்ந்து தெரிந்தது. சாத்தாங்கோவில், அதனருகிலிருந்த அரசின் உதிர்ந்த மட்கிய இலைகளால் மறைந்து போயிருந்தது. சாஸ்தா இருட்டில் மரப்பல்லிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தார்.
அந்த வழியாகச்சென்ற கோலப்பன் கண்டும் காணாமல் சென்றதைப்பார்த்து “பாக்காதது மாரி போகதடே. கடைய பெருசாக்கிருக்கேன். நல்லாருக்கா. வா , உள்ள வந்து பாரு” என கடையிலிருந்து சென்று கோலப்பனை ஒரு பக்கமாக இழுத்தபடி வந்தான் அமுதம்.
“சோலியிருக்கு. கம்பளத்துக்கு போயி அரிசிமூட எடுக்கனும். கொஞ்ம் ஸ்டேசுனரி ஐட்டெம் கடைல போடலாம்னு இருக்கேன். பொறவு வாரேன்”
“உனக்க அம்ம ஐடியா சொன்னாளா ?. அது கெடக்கட்டும் , வீட வித்தாச்சுன்னு கேள்விப்பட்டேன். இப்பொ சந்தோசமா அவளுக்கு”
“ஆமா”
“என்னடே சோந்து போயி பேசுகா. எல்லாம் முன்னுக்கூட்டியே தெரிஞ்ச விசயந்தான. உனக்க அம்மைக்கி தொடுக்கு ஒருத்தன் இருக்காம்லா அவந்தான் வாங்கிருக்கதா பேச்சு. உண்மையா என்ன ? உனக்கு தெரியுமோ என்னமோ. செரி செரி அதெல்லாம் பெருசா யோசிக்காத. யோசிச்சி மட்டும் என்ன சாதிச்சிர போற. எண்ணெ எங்க எடுக்க, அதச்சொல்லு. நமக்கிட்ட கம்பளத்து ரேட்டவிட கொறச்சிதான் ஹோல் சேலுக்கு விக்கேன் பாத்துக்க. நீ இங்கனையே எடு. உனக்கு கொஞ்சம் கொறச்சி கூடத்தாரேன். செக்குல ஆட்டுன நயம் தேங்கெண்ண இருக்கு”
“பொறவு வந்து பாத்து எடுக்கேன்”
“பாத்து எடுக்க நான் என்ன கழிவையா வச்சிருக்கேன். வந்து எடுத்துட்டு போ. வெலய பேசிக்கலாம்”
“செரி…”
“உடம்பு நல்லா சீணிச்சி போச்சுபோலையே. நீலம் பாரிச்சி சவம் மாதிரில்லா இருக்க”
சிறிய சட்சைக்குள் காற்றடித்து ஊதிப்போகும் அளவிலிருந்த உடலில் ஒட்டியிருந்த மெலிந்த கைகள், உயிரற்றது போல தொங்க கோலப்பன் கம்பளத்துக்கு நடந்தான்.
*
அழுக்குப்பிடித்த சட்டையில் அளவுக்குமீறி ஓட்டைகள் உருவாகி வெயில் உடம்பில் சுட்டது. பாறைகள் உடைந்து சிறு சிறு துண்டங்களை வடிவமற்று அடுக்கி வைத்தது போன்ற குன்றின் அடிவாரத்திலிருந்த காய்ந்து போன ஏரியின் வரப்போரமாய் நடந்து கொண்டிருந்தான். நீர்வற்றி வெடித்த நிலத்தில் பாளங்கள் யானைக்கூட்டத்தின் கால்தடங்கள் போல் தெரிந்தன. தனித்த பறவையொன்று எங்கோ ஆரம்பித்து எங்கோ பறந்தது. இன்று காலை ஆரம்பித்த நடை, இடைவெளியே இல்லாமல் இரவு தொடும் நேரம் வரை காய்ந்த வயிறுடன் வந்துவிட்டது. சூரியன் குன்றுக்குப்பின்னால் சிவந்ததில் மலையும் சிவந்து ஒளிர்ந்தது. உச்சியிலிருந்து நிழல் போன்ற உருவம் ஒற்றைக்குரலில் எதிரொலியுடன் கோலப்பனை அழைத்தது. நம்பிக்கையிழந்து போன கண்களில் முன்பு பழகிய உருவம் அவனை நோக்கி வருவது உருவெளி காட்சிபோல தெரிந்தது.
“கோலப்பா , நாந்தான் அடையாளம் தெரியா!”
“ஐயரே”
“பயராத. நான் செத்துப்போயி பேயா வரல்ல. வா மேலதான் இருக்கேன்” என்று குன்றின் வலது மூலையிலிருந்த துவாரமொன்றை காட்டினார்.
“தனியாவா இருக்கீங்க?”
“ஆமாடே,” என்ற முகம் மகிழ்ச்சியிலிருந்தது. அவர் கண்கள் ஒருவிதமான பரவசத்திலிருந்ததை , அவனை பார்த்ததால்த்தான் என முதலில் நினைத்தவன் அது தவறென நேரம் ஆக ஆக உணர்ந்தான்.
அந்த குகைவெட்டில் மேடை போல அமைக்கப்பட்ட கற் பாளமொன்றில் அமர்ந்து இன்னொன்றில் அவனை அமரச்செய்தார். மண் சட்டியிலிருந்து பழையதை எடுத்து வைத்து அதே சிரித்த முகத்துடன் பேசாமல் கோலப்பன் அள்ளியள்ளித் தின்பதையே பார்த்துக்கொண்டிருந்தார். வயிறு நிரம்பிய நிம்மதியில் ஐயரின் மகிழ்ச்சியான முகம் சதைப்பிடிப்புடன் உருமாறிய உடலுடன் சேர்த்து அவனை வெறுப்பாக்கியது.
இருவரும் பேசாமல் ஒருவரையொருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். பேசுவதேற்கென்று எதும் இல்லாதது போன்ற நிலையில் ஐயர் கண்களை மூடியபடி படுத்துக்கொண்டார்.
“இங்கன வந்து இப்படி இருந்துட்டா எல்லாம் செரியா போச்சா. உங்க பிள்ளைக மூணும் என்ன செய்யிண்ணு தெரியும்லா. இருந்தும் உங்களுக்கென்னனு வந்துட்டீங்க. சந்தோசமா இருக்கீங்க. கூச்சமா இல்லையா உமக்கு,” என்று நிறுத்தி மூச்சுவாங்கினான். “உம்ம கிறுக்கையருன்னு சொல்லுகதுல தப்பில்ல,” என்று எழுந்துச்செல்ல முயன்றான்.
“எதுக்கு கூச்சப்படணும். என்னால முடிஞ்சதெல்லாம் செஞ்சாச்சி. அவங்க வழிய அவங்க பாக்காண்டாமா. இந்த உடம்பு எதுக்கிருக்கு, நிம்மதியா சந்தோசமா இருக்கத்தான. அத செஞ்சா நீ எதுக்கு வெப்ராளப்படுக,” என்ற ஐயரின் குரல் தணிந்து இயல்பான மென்மையுடன் ஒலித்தது. அதன் தண்மையில் கோலப்பன் மீண்டும் அமர்ந்தான்.
“அப்பொ உனக்க பிள்ள தேவிடியாத்தனம் செய்யது நியாமன்னு சொல்லுகீரு இல்லையா?”
“அதுக்கு நான் எதும் செய்ய முடியாது அதத்தான் சொல்லுகேன்.”
“சீ…பேசாதீரும் நாக்கு அழுவிரும். அவங்க மொகத்த பாத்தா இந்த பேச்சு உமக்கு வராது பாத்துக்கிடும்.”
“நான் அவங்க மொகத்த பாத்துட்டேன் கோலப்பா…அது ரொம்ப சாதாரணமா அலச்சலில்லாத நிம்மதியான மொகமா இருந்துச்சி. அது தெரிஞ்சதுக்கு பொறவு என்ன கொழப்பம் நமக்கு சொல்லு. அந்தால எனக்க சாஸ்தாவ பாக்க கெளம்பிட்டேன். இங்க தங்கி ரெண்டு மாசமாச்சி. பொறத்த இருக்க அடிவாரத்துல கோயிலிருக்கு காலைல கூட்டிட்டு போறேன்”
“எல்லாத்தையும் பேசியே நியாயப்படுத்திர முடியும்ன்னு நெனைக்கீறோ ? அது தப்புன்னு தெரிய நாளாகாது” கோலப்பனின் உடல் அதிர்ந்தபடியே இருந்தது.
ஐயர் புன்னகைத்தபடி கதை சொல்வது போன்ற பாவனையில் பேச ஆரம்பித்தார் “பேசி நியாயப்படுத்திற முடியாது , ஆனா , எனக்க மூத்த பிள்ள ராஜிக்கி அஞ்சி வயசிருக்கும் போது வாங்குன பொருளொண்ணு உண்டு. சோப்பு கலர்ல்ல கழுத்துல கையில் உருப்படில்லாம் போட்ட பிளாஸ்டீக் பொம்ம. நாப்பது ரூவாயிக்கி கடனா வாங்குனேன். அதான் எனக்க மொத கடன். அந்த கடன அடைக்க அப்புடியே ஒன்னு ஒன்னா தொடங்கி எல்லாம் போயி கடைசீல தெருவிலையும் நின்னு சட்டியெடுத்தாச்சு. நான் வீட்டுலருந்து கெளம்பி வரதுக்கு முடிவெடுத்த நாளு விடியக்காலைல பறண் மேல அந்த பொம்மைக்கி காலு மட்டும் தனியா தெரிஞ்சிச்சி. எடுத்து பாத்தா அதுக்க உருவம் அழியாம அப்புடியே இருக்கு என்ன தோணிச்சின்னு தெரியல. கம்பெடுத்து அடிச்சி சப்பி ஒண்ணுமில்லாம ஆக்கிட்டேன். பொறவுதான் என்னால கெளம்ப முடிஞ்சது,” பேச்சற்ற நிலையில் இருவரும் படுத்துக்கொண்டனர்.
நடுயிரவில் அவன் விழித்தே கிடந்தான். காற்று ஒரே வேகத்தில் மாறாத ஒலியுடன் வீசியது. இருளில் சிறுகற் துகள்கள் நெறிபடும் ஓசையுடன் அவன் முன் கருத்த வழுவழுப்பான ஏறக்குறைய ஏழடி நீளமுள்ள பாம்பொன்று குளிர்ந்த பாறைப்பரப்பில் ஊர்ந்து வந்து படம் விரித்து எழுந்து நின்றது . பதறி விலகிச்சென்ற கோலப்பன் பின் அமைதியாகி அமர்ந்தான். நீர்மைபோன்ற நெளிவும் நெருப்புத்துளிகள் போன்ற கண்களும் கொண்டு அவனைப்பார்த்தபடி நின்றது.
அந்த இரக்கமற்ற கண்கள் ,
இரைவிழுங்க காத்திருக்கும் வாய் ,
ஏற்ற இடத்தில் நெளிந்து கொடுக்கும் உடல்
அம்மாவை உணர்த்தியது.
உடல் குளிர ஒரு நிமிடம் பயந்தவன். தெரிந்த நம்பமறுத்த ஒன்றை நேருக்குநேராய் முழுதாய் உணர்ந்தவனாய் அதனருகில் சென்றான். அது அங்கிருந்து நகர்ந்து செல்வதற்கு முன் கடைசியாய் சீறியது ஏளனச்சிரிப்பைப்போல ஒலித்தது. ஐயர் தூங்கிவிட்டவரைப்போல கிடந்தார். அவரிடம் ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பினான்.
*
மேட்டிலிருந்த ரயில் நிலையம் வெறிச்சோடிக்கிடந்தது. அங்கிருந்து நடந்தே செல்லும் தூரத்தில் அவனிருந்த வீட்டின் மாடிமட்டும் தெரிந்தது. கதவு பூட்டப்பட்ட வீட்டின் வாசலில் நின்றபடி அம்மா எங்கிருப்பாள் என யாரிடம் கேட்பதென யோசித்தான். மாறிப்போயிருந்த அவனுருவம் ஊர்க்காரர்களால் அடையாளம் காணமுடியாதபடி செய்திருந்தது.
“பொன்னம்மா வீடு?” என அந்த வழியே சென்ற பெண்ணிடம் கேட்டு அவள் சொன்ன வழியில் நடந்தான்.
பழகிய வழியில் தெரிந்த வீட்டை நோக்கி செல்வதாயிருந்தது. “இன்னும் கொஞ்ச தூரம் கொஞ்ச தூரம்” என முணுமுணுத்துக்கொண்டே நடந்தான். தளர்ந்த கால்கள் குழிகளில் தடுக்க வேகமாக நடந்து பின் ஓட ஆரம்பித்தான். போர்த்தியிருந்த காவித்துணி எதிர்திசையில் பறந்தது.
அந்தப்பெண் அடையாளமாய்ச்சொன்ன ஓட்டு வீட்டின் முன் களத்தில் அம்மா துவைத்த துணிகளை வாளியிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து காயப்போட்டுக்கொண்டிருந்த கம்பி அதிர்ந்து கொண்டிருந்தது. எடுப்பான முகம் பொலிவிழந்து வெளுத்துப்போயிருந்தது. உடல் மெலிந்து கழுத்தெலும்புகள் துருத்தி தெரிந்தன.வேலையின் களைப்பில் அவனைப் பார்க்காமல் வியர்த்து நின்றுகொண்டிருந்தாள். உள்ளிருந்து அவளை அழைத்த கனத்த அதிகாரக்குரல் அமுதத்தின் குரலைப்போலிருந்தது.
வளர்ப்பு நாயைப்போல வாலாட்டிப் பணிந்து காது மடங்கத் துணிகளை அப்படியே போட்டுவிட்டு சென்றாள்.
கோலப்பனுக்கு “இவ்வளவுதானா” என்றிருந்தது. ஆனால் இதை நடத்திக்காட்டுவது தன்னால் முடியாத ஒன்று எனும் எண்ணம் அவனுள் ஓரமாய் ஒளிந்து நின்றது. அவளிடம் பேசி எதுவும் மாறிவிடப்போவதில்லை என்பதை மனத்தில் ஓட்டியபடி மீண்டும் நடக்க ஆரம்பித்தான். ஒருவேளை ஐயர் இருக்கும் இடத்திற்கு அவன் மீண்டும் சென்றுசேர வாய்ப்பிருந்தது. அம்மா வீட்டின் ஜன்னல் வழி அவன் போவது வரை காத்திருந்து வெளியேவந்தாள் பின் வாளியிலிருந்த துணிகளை பிரித்தெடுத்து கம்பியில் தொங்கவிட ஆரம்பித்தாள்.