ஆர்.எஸ்.எஸ் பற்றி ஊடகத் திரிப்புகள்

நவம்பர் மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமை பிளெமிஷ்மொழி  ஒளிபரப்பு, வி.ஆர்.டி  கேன்வஸ் (VRT Canvas) அதனுடைய டெர்ஜாக்கி[Terzake (To the Point)]  எனும் நிரலின் கீழ் டி வெஸ்டெர்லிங்கென் [De Westerlingen(The Westerners)] என்ற தொடரிலுள்ள ஒரு டட்ச்  ஆவணப் படத்தை வழங்கியது. அதில், சில இளவயது டட்ச் நபர்கள் பல்வேறுநாடுகளை சேர்ந்த இளவயதினரை சந்திப்பதின்  மூலம் கலாச்சார வேறுபாடுகளை ஆய்வு செய்வார்கள். முன்பு, எல்லாநாடுகளுமே மேற்கத்தியமயமாகிக் கொண்டிருப்பதால் இத்தகைய வேறுபாடுகள் மறைந்து கொண்டிருக்கின்றன என்ற ஒரு அபிப்பிராயம் இருந்தது. ஆனால், தற்போது முஸ்லீம் நாடாக இல்லாத அனைத்து நாடுகளிலுமே மேற்கத்தியத்தின் மேலுள்ள  எதிர்ப்பு வலுத்துள்ளது.

இந்த முறை, நாம்  இந்தியாவில், நிகோலஸ் என்ற டட்ச் இளைஞர் சில ஹிந்து தேசிய இளைஞர்களை சந்திப்பதை பார்க்க அழைத்துச் செல்லப்படுகிறோம். தொலைக்காட்சி நிலைய இணையதளத்தின் அறிவிப்பு : “இந்தியாவில் தீவிரவாதி கூட்டமைப்புகளின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது. நிகோலஸ் வியூல் ஹிந்து தேசியவாதி இளைஞர்களான   திவ்யா, ரிடேஷ், விக்ரந்த் என்ற மூவரை சந்தித்து அவர்களுடன் புனித நகரமான அலஹாபாத்தை சுற்றி வருகிறார். இம்மூவரும் வெளிநாடுகளின் செல்வாக்கை எதிர்த்து ஹிந்து இந்தியாவிற்காக போராடுகிறார்கள்”.

ஹிந்து பாசிசம்? ( Hindu Fascism?)

இவர்களை ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் சந்திக்க காரில் செல்லும்போதே, ஒரு இந்திய சமயச்சார்பற்றவர் ஹிந்து தேசியவாதிகள் எப்படிப்பட்டவர்கள் என்று நிக்கொலஸ்ஸிடம் சுருக்கமாக சொல்கிறார். “தேசியவாதிகளின் வலிமை  பள்ளிகளில் உபயோகிக்கும் பாடப் புத்தகங்கள் ஹிந்துக்களை ஆதரிக்கும் வகையில் மீண்டும் எழுதப்பட வேண்டும் என்று சொல்லுமளவுக்கு அதிகரித்து வருகிறது. இவர்கள் வெளிப்படையாகவே நாஜிக்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்கள்”

இது,  இந்தியாவைப் பற்றிய  செய்திகளை அளிப்பதில்,  உலகளாவிய ஊடகப் பிரிவுகளுடைய  அதிகாரச்  சமன்பாட்டின்(Power equation) அழகிய சுருக்கம்.  இந்திய சமூகத்தை, குறிப்பாக வகுப்புவாத சச்சரவுகளை, பெரும்பான்மையான இந்திய பத்திரிகை நிருபர்களும்  இந்திய நிபுணர்களும், மதச்சார்பற்றவர்கள் அவர்களது மூக்கில்  ஏற்றியுள்ள கண்ணாடி வழியாக பார்ப்பதால், அவர்கள் கூறும் ஹிந்துக்களுக்கு எதிரான, பாரபட்சமான, தவறான செய்திகளையே  மக்களிடம் கக்குகிறார்கள். நிகோலஸ்ஸுடன் காரில் சென்ற சமயச்சார்பற்றவரின் முதல்  குறிப்பே  ஒரு சராசரி பார்வையாளரின் மனத்தில்  பின் வரப்போகும் சம்பவங்களைப் பற்றிய சந்தேக மேகத்தை கவிழ்க்கிறது. ஆனால், திறம்பட படமாக்கப்பட்டிருந்த அந்த ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில், காரில் சென்றவர் சொன்னதை ஊர்ஜிதப்படுத்துவது போலவோ, விளக்கப்படுத்துவது போலவோ ஒன்றுமே நடக்கவில்லை. 

1980களிலிருந்து, ஹிந்து தேசியவாதிகள் என்ற பதத்துடன் ‘வெளிவந்து கொண்டிருக்கும்’ அல்லது ‘வலிமையாகிக் கொண்டிருக்கும்’ என்ற அடைமொழி சேர்க்கப்படாமல்  நான் கேட்டதேயில்லை. இவர்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் இப்போது, அவர்கள் மிக்க வலிமை மிகுந்தவர்களாக ஆகி இருக்க வேண்டும். இக்காலத்திற்கு ஒரே ஒரு விதிவிலக்கு, 2009 தேர்தலுக்கு பின் வந்த சில வருடங்களாகும். 2009 தேர்தலில் 2004 தேர்தலை விட மோசமாக  பா.ஜ. க. தோல்வியுற்றதால், சோஷலிச-ஜாதியக் கட்சிகளும், கிறிஸ்டாஃபெ ஜாஃபெரெலோட் (Christophe Jaffrelot) போன்ற இக்கட்சிகளை ஆதரிக்கும் நிபுணர்களும், ஹிந்து தேசியவாதம் வெளிநடந்து கொண்டிருக்கிறது என்ற முடிவெடுத்து விட்டனர். ஆனால், அதிகாரத்தில் அவர்கள் கை ஓங்கியிருந்தபோது, இந்துத்துவத்தை ஆழப் புதைக்காமல், மதச்சார்பற்ற காங்கிரஸ் அக்காலத்தை வீணாக்கி விட்டது. ஏனென்றால், இந்த சமயத்தில் ஊழலை முன்பின் பார்த்திராத அளவிற்கு எடுத்துச்செல்வதில் மும்முரமாக முனைந்திருந்தாரகள். வாக்காளர்களால் இதை ஜீரணம் செய்ய முடியவில்லை. அடுத்த தேர்தலுக்கான பிரச்சாரம் நடந்தபோது, மதச்சார்பற்றவர்களே, பா.ஜ .க. வின் வெற்றி தவிர்க்க இயலாதது என ஒப்புக்கொண்டு விட்டனர்.

அரசியல் பார்வையாளர்கள் நினைப்பதற்கும் சொல்வதற்கும் மாறாக, நரேந்திர மோடியின் பா.ஜ.க.அரசாங்கம் எண்ணிக்கையில் வலுவாக இருந்தாலும்,  கருத்தியல் ரீதியில், நலிந்து இருக்கிறது. இந்த அரசாங்கம், அரசியலையும்  கல்வி திட்டத்தையம்  ஹிந்து வழிக்கோ காவி நிறத்திற்கோ மாற்றவில்லை. இடதுசாரி காங்கிரசின் ஹிந்துக்களுக்கு எதிரான அரசியல் சட்ட அமைப்பு ஆணையிடும் கொள்கைகளைதான் தொடர்கின்றனர் .அல்லது சட்ட அமைப்பை மாற்றுவதிலும், இக்கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதிலும் பாராமுகமாக இருக்கின்றனர். கிருத்துவ இஸ்லாமிய பள்ளிகளுக்கு அரசாங்க பண உதவி கிடைக்கிறது ஆனால் ஹிந்து பள்ளிகளுக்கு கிடையாது.. இப்பள்ளிகளை அரசாங்கமே எடுத்துக் கொண்டு மதச்சார்பற்றதாக மாற்றுகின்றது அல்லது எவ்விதமான அரசாங்க உதவியும் இல்லாமல்தான் நடத்தியாக வேண்டும். ஹிந்து ஆலயங்கள்  தேசியமயமாக்கப்பட்டு  அதிலிருந்து கிடைக்கும் வருவாய், ஹிந்துக்களுக்கு சம்பந்தமில்லாத காரியங்களுக்கு செல்கிறது. ஆனால், தேவாலய, மசூதிப்  பணத்தை இவ்வாறு செலவழிக்க  சட்டம் இடம் கொடுக்கவில்லை. பா.ஜ .க. ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் இதுதான் நடக்கிறது. இங்கேயாவது, சட்ட அமைப்பு அளிக்கும்  சலுகைகளை பயன்படுத்துவதை தவிர்த்திருக்கலாம்.

இந்த ஆவணப்படத்தில் பெரும்பான்மை ஹிந்துக்கள் எவ்வாறு ஓரம் கட்டப்படுகிறார்கள் என்ற உண்மைநிலையை  ஒரு பொட்டு கூட காண முடியாது. வெளிநாட்டினருக்கு இதை விளக்குவது கடினம் என்பதால் இதை மறுப்பதும் மறைப்பதும் வெகு சுலபம். உண்மையாகவே, ஹிந்துக்கள் அவர்களுடைய சொந்த நாட்டில் இரண்டாம் தர பிரஜைகளாகத்தான் வாழ்கின்றனர். இந்தியரல்லாதவர்கள் நான் சொல்வதை நம்ப மறுக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. இந்திய சட்டமைப்பை உலகின் எந்த மூலை யிலிருந்து வேண்டுமானாலும் பதிவிறக்கி நீங்களே சரிபார்க்கலாம். சட்டப்பிரிவு 25-30 லிருந்து ஆரம்பியுங்கள். 

இந்த ஆவணப்படத்தில் என்ன பார்த்தோம்? மக்கள் ஒரு திறந்தவெளி மைதானத்திற்குள் ஆர்.எஸ்.எஸ். கட்சிப்பிரிவு நடத்தும் உடற்பயிற்சி, கருத்தியல்  சந்திப்பிற்காகக்  கூடுகின்றனர். அவர்களெல்லோருமே, ஆர்.எஸ்.எஸ்.சின் உடையலங்காரமான வெள்ளை சட்டை, கருப்பு தொப்பி,  காற்சட்டை அணிந்துள்ளனர்.(புதிதாக கட்சியில் சேர்ந்துள்ளவர்கள் விலைகொடுத்து சீருடையை வாங்குகின்றனர்). இது புதிய சீருடை. சமீபகாலம் வரை காக்கி நிற அரைக் காற்சட்டையைதான்  அணிந்தனர். இது  காலனீயப் பாங்கை இன்னுமே பெரிதாகப் பிரதிபலிக்கும் சீருடை. அவர்களுடைய ராணுவப்பாணியில் அமைந்த பயிற்சி  சிறப்பு அம்சமாக சுட்டிக்காட்டப்படுகிறது.

ஆனால் இந்த கலஷ்னிகோவ் கால ஆயுதப் பயிற்சியில்  இவர்கள் உபயோகிக்கும் ஆயுதம் வெறும் கம்புதான் என்பது நன்றாகவே தெரிகிறது.ஆர்.எஸ்.எஸ். நபர்கள, கேரள கம்யூனிஸ்டுகள், பஞ்சாபிய  காலிஸ்தானிகள் மற்றும் பலரின்  கைகளில் முடிவேயிராத கொலைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றனர் என்ற ஒரு சிறு அறிகுறியை கூட  எங்குமே காண முடியவில்லை. ஆர்.எஸ்.எஸ். இளைஞர்களும் இதை கூறவில்லை. அவ்வாறு அவர்கள் கூறியிருந்தால் அதை காண்பிக்கவில்லை. படம் முழுவதும் இவர்கள்தான் வன்முறையாளர்கள், அதற்கு இரையாகுபவர்கள் அல்ல என்பது  விடாது  தெரிவித்தாலும் எந்த விதமான வன்முறையில் இவர்கள் ஈடுபடுவதையும்  காணவில்லை.   இந்த ஆர்.எஸ்.எஸ். செயல்திறனாளர்களை பேட்டி காணும்போது நிகோலஸ் அடிக்கடி கூறுவது இவர்கள் தோழமை, நயமை உடையவர்கள் என்பதாகும். வாகனத்தில் சென்ற மதச்சார்பற்றவர் இவர்களை  பாசிசக்காரர்களாக வர்ணிப்பதற்கு இவர்கள் செய்த தப்பிதமென்ன?

காதலர் தினம்(Valentine’s Day)

            இந்த ஆவணத்தொடரின் தலைப்பு, “கலாச்சார மோதலும் மேற்கத்திய மாறுதல்களுக்கான எதிர்ப்பும்” என்பதாகும். உண்மையாகச் சொல்வதென்றால், இந்த இளைஞர்களால்  மேற்கத்தியத்தின் செல்வாக்கு  தங்கள் நாட்டில் வெள்ளமாகப் பாய்வதை தாங்கி கொள்ள முடியவில்லை.  ஒரு நாசகரமான உதாரணம், மேற்கத்திய பாப் கலாச்சார வர்த்தக செல்வாக்கு உருவாக்கிய காதலர் தினத்தை இங்கேயும் கொண்டாடத் துவங்கியதாகும். வாலென்டைன் என்பவர் தடைசெய்யப்பட்ட திருமணங்களை நடத்திய ரோமானிய பாதிரியார். அவரை உயிர்த்தியாகியாகவும் அருட்தொண்டராகவும் மாற்றியபின், பிப்ரவரி 14ம் தேதியை அவருடைய நாளாக அறிவித்தனர். பிப்ரவரி 13- 15  நாட்கள் கிருத்துவத்திற்கு முன்னிருந்த, ஜூனோ பிப்ருவா(Juno Februa) என்ற கருவளத்திற்கான பெண்கடவுளிற்கு படைத்த விருந்தை உண்ணும் தினங்களுடன் (Fertility Feast) இந்த நாள் பொருந்துவதாக அமைந்தது. ஆயிரம் வருடங்களுக்கு பிறகு, ட்ருபடோர் என்றழைக்கப்பட்ட பிரான்ஸ்,ஜெர்மனி நாட்டு மேல்வம்சக் கவிஞர்கள் நாகரீகமாக தங்கள் காதல் உணர்ச்சியை பாடல்களாக வடிக்கும் நாளாக மாறியது. பல காலத்திற்கு பிறகு வாலென்டைன் காதலை காக்கும் அருட்தொண்டர் பதவிக்கு உயர்ந்துள்ளார்.

     இப்படித்தான் வணிகம், இவரை உச்சாணிக் கொம்பில் ஏற்றிவைத்து அவர் அருட்தொண்டராக மாறிய நாளை கிருத்துவ பக்திமான்கள் வெறுக்கும் நாளாக மாற்றி விட்டது. வெறும் அறிவற்ற மோக உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நாளாக மாற்றி விட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலிருந்தே நூல்களும்  பிற்காலத்தில் திரைப்படங்களும், இளவயதினர், தங்கள் உணர்ச்சியற்ற குறுகிய மனப்பான்மையுள்ள பெற்றோர்கள் போடும் முட்டுக்கட்டைகளை தகர்த்து தங்கள் இதயம் போன போக்கில் செல்வதாக அதிக அளவில் முறையே பதிப்பிடவும் திரையிடவும் செய்தன. இதையே, வணிகமும் மேற்கத்திய பழக்கங்கள் அனைத்திலுமே ஆர்வமுள்ள சமயச்சார்பற்றவர்களின் ஊக்குவித்தலும் இணைந்து, முற்றிலும் செயற்கையான காதலர் தினக் கொண்டாட்டமாக  இந்தியாவில் மீண்டும் செயல்படுத்துகின்றனர். நீண்ட காலம் நிலைக்க வேண்டிய திருமணம், பிறக்கும் குழந்தைகளின் வளர்ச்சி இரண்டையும் பின்தள்ளி விட்டு உணர்ச்சிகள் எழுப்பும் கிளர்ச்சியை தொடர்ந்து ஓடும் இந்நாள் மேற்கத்திய தரநலிவின் சின்னம். நிக்கோலஸுடன் உரையாடியவர்கள், நவீன மேற்கு நாடுகlளில் சர்வசாதாரணமாக காணப்படும் சீர்குலைந்த குடும்ப வாழ்க்கை தங்கள் நாட்டையும் சீர்குலைக்க வருவதை  தடுக்கப் பார்ப்பதாகச் சொல்கின்றனர்.

     ஆனால், ஆவணப்படத்தின்  நேர்காணலில், நாம் பார்த்தது ஆர்.எஸ்.எஸ். செயல் திறனாளரின்  வெகுளித்தனமான, ஒரு நாளைய கேளிக்கையைப் பற்றிய நகைச்சுவையற்ற, மற்றவர்களின் மகிழ்ச்சியை குலைக்கும் பாரபட்சமான நீண்ட ஆத்திரக் கூச்சல். டட்ச் இளைஞர் இதன் இன்னொரு பக்கமாகிய காதலர் தினத்தைப் பற்றிய ஹிந்துக்களின் நியாயமான விமரிசனத்தை கேட்கவில்லை. சமூகம் மதிக்கும் மூதாதையர்களின் பழக்கவழக்கங்கள் எனும் துணியை காதலர் தினம் போன்ற நவீனத்துவ சம்பவங்கள் கந்தலாக்கிக் கொண்டிருக்கின்றன என்ற ஆர்.எஸ்.எஸ். நபரின் கண்ணோட்டம் நேர்மறையானது. ஆனால் காதலர் தினத்தை தடுப்பதினாலேயே நவீனத்துவம் ரத்தாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பாரம்பரியக் கண்ணோட்டமும் காது கொடுத்து கேட்கத் தகுதியுள்ளதுதான்.

டட்ச் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு முதன் முறையாக வந்துள்ள நிகோலஸ்  தெருக்களின் மூலை முடுக்குகளிலெல்லாம் மேற்கத்திய நடையுடை பாவனைகள், நியான் விளக்குகள், வணிக வளாகங்கள், கென்டகி வறுத்த கோழி உணவகங்கள், இளைய ஜோடிகள் பொது இடங்களில் முத்தமிடுதல் போன்ற மேற்கத்தியத்தின் பரவலை காண்கிறார். அவருடன் செல்லும் ஆர்.எஸ்.எஸ்.பேச்சாளாரும் மெக்டொனால்ட் உணவகத்துக்கு சில சமயங்களில் சென்றுள்ளதை ஒப்புக்கொள்கிறார். முடிவாக, இந்த ஆவணப் படத்தை பார்ப்பவர்கள் வீட்டிற்கு கொண்டு செல்லும் உணர்வு, இந்தியாவில் மேற்கத்திய பரவலை  நிறுத்த இயலாது. சில உள்நாட்டினர்  இதை எதிர்த்தாலும் ,தடுத்து நிறுத்த திறமையற்றவர்களாக உள்ளதால் அவர்களை  பாசிஸ்ட் என்று கீழே தள்ள வேண்டிய அவசியம் இனி இல்லை.

தொடர்பு:

இதைப் பற்றி சிந்திக்கும்போது, ஆர். எஸ்.எஸ். நபரிடம், பல பத்தாண்டுகளாக மேற்கத்திய மக்களிடையே இந்துக்களுக்கு எதிரான எண்ணச் சார்பை அப்புறப்படுத்தும்  அளவிற்கு பேச்சுத்திறன் இல்லை என்பது தெரிகிறது. ‘இந்துக்களுக்கு எதிரான’என்ற வார்த்தையின் அர்த்தம்  மதபோதகர்களும், மதச்சார்பற்றவர்களும் கொண்டுள்ள விரோதத்தை குறிப்பிடுவது அல்ல; மக்களது  மனப் பின்னணியில் ஏற்பட்டுள்ள சீரமைப்பை குறிப்பிடுவதாகும். நிக்கோலஸுக்கு இந்துக்களிடம் சண்டையில்லை. மறைமுகமாக அவருள்ளிருக்கும்  ஹிந்துக்களுக்கு எதிரான சார்பை கூட அறியாமல் இருக்கலாம். ஆனால், இந்தியாவில் ஆர்வமுள்ள மற்ற மேற்கத்தியர்களை போலவே இவரும் இந்திய  விரோதிகள் வளர்த்துள்ள பாகுபாடான நோக்கை உறிஞ்சியுள்ளார்.

பல பத்து வருடங்களாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும்  ஒருதலைப்பட்ச சார்பை தொலைக்காட்சியில் ஒரு நொடிப்பொழுது நடந்த உரையாடல் மாற்றுமென நினைப்பது யதார்த்தமற்றது. இருந்தாலும், ஆர்.எஸ்.எஸ். உரையாளர் அவரது நிலைப்பாட்டை இன்னுமே நன்றாகவும் உறுதியாகவும் அழுத்திச் சொல்லியிருக்க வேண்டும். மாறாக, அவருடைய அமைதியான நாகரீகமான ஆனால் மலிவான விவாதம், 1920லேயே  வலிய ஏற்றுக்கொண்டு அன்று முதல் தொடரப்படும் கொள்கையின் ஒரு தருக்க விளக்கம். பழைய ஆர்.எஸ்.எஸ்.சின்    தகவல் தொடர்பின் மேலான அலட்சியம் சாரணச்  சிறுவர்களின் மனநிலையோடு ஒத்துள்ளது.  ஆர்.எஸ்.எஸ். நிறுவனர், கே.பி.ஹெட்ஜ்வார் முதலில் அங்கத்தினராக  இருந்த  சுதந்திர போராட்டத்தின் புரட்ச்சிக்கார பகுதி  போலீசார் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக ரகசியங்களை வாய்வழிச் செய்தியாகவே பரப்பியது. இத்தன்மையே அவரது சொந்த நிறுவனத்திலும் வெளியாரின் ஒப்புதல், ஊடகக் கூறுரைகள் ஆகியவற்றில் அக்கறை  செலுத்துவதை அலட்சியம் செய்தது. அதன் விளைவுதான் ஆர்.எஸ்.எஸ். பேச்சாளர்கள் செய்திகளை எடுத்துச் சொல்லத்  திறனற்றவர்களாக இருக்கின்றனர். நேர்காணல்களிலும், தொலைகாட்சி விவாதங்களிலும் அவர்களது அருவருப்பையூட்டும் செயல்கள் அவர்களது சிறந்த பக்கத்தை எடுபடாமல் செய்து விடுகின்றது.

இரண்டு முறை ஆர்.எஸ்.எஸ். ஊடகங்களின் அழைப்பை ஏற்க  மறுத்துள்ளது.. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தொண்ணுறுகளின் முதற் பகுதியில், ஆர்.எஸ்.எஸ்/பா.ஜ .க. மையங்களில் நான் ஹிந்து தேசியவாதிகளை நேர்காணச் சென்ற காலம், வெளியாட்களை நம்பாததால் அவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வதை அது பெருமளவில் தவிர்த்த  சமயம். அவர்களை அணுகும் சலுகை எனக்கு கிடைத்ததற்கு ஒரே காரணம், எனது அயோத்தி கோவில்-மசூதி  மோதலைப்  பற்றிய புத்தகம் ஒன்றுமட்டும்தான்  இந்துக்களுக்கு ஆதரவான முடிவுகளை கொண்டது என்பதினாலாகும். அதன் பிறகு, தனியார் தொலைகாட்சி நிலையங்கள் இந்தியாவில் வெற்றி பெற்று, சின்னஞ்சிறு கிராமங்களை கூட  வந்தடைந்தன. கடைசியாக வந்த இணையதளம் ஆர்.எஸ்.ஸிற்குமே வெளியாருடன் தொடர்பு கொள்வதை தவிர்க்கமுடியாததாக்கி விட்டது. எனவே, மற்றவர்களிடமிருந்து ஒதுங்கி நிற்பது முடிந்த கதை என நினைத்தேன். ஆனால் அவர்கள் அதை முழுவதுமாக கைவிடவில்லை எனத் தோன்றுகிறது.

எனவே, ஆர்.எஸ்.எஸ். செய்தியாளர்கள், மதச்சார்பற்றவர்களின் புராணங்கள் விவரிப்பது போல், பாசிசக்காரர்களாக இல்லையென்றாலும் விவரமறியாத கிராமத்தான்களைப்  போலத்தான் நடந்து கொள்கின்றனர். நேர்காணலில் பங்கெடுத்த ஆர்.எஸ்.எஸ்.நபர், வரலாற்று அறிவு குறைந்தவராகவோ அல்லது பேரினவாதிகளுக்கே உரித்தான நம்பகத்தன்மையை கொண்டவராகவோ இருந்ததால்  இந்தியாவில்தான் ஓட்டறுவை சிகிச்சை(Plastic Surgery)யும், இராமாயணத்தில் கூறியுள்ளது போல் விமானமும் கண்டு பிடிக்கப்பட்டது என்றார். இக்கூற்றில் இரண்டு குறைபாடுகள் உள்ளன. ஒன்று, இதற்கான ஆதாரம் ஏதுமில்லை. இரண்டாவது, எதையும்  நம்பக்கூடிய  சில ஹிந்துக்கள் வேண்டுமானால் இதை கேட்டு விட்டு ஹிந்து கலாச்சாரத்தை மேலும் போற்றக் கூடும். ஆனால் பலரிடம் இத்தகைய கூற்றுகள்    ஹிந்து மதத்தை மூட நம்பிக்கை கொண்ட நகைப்பிற்கிடமான ஒரு மதம் என்ற தவறான எண்ணத்தைத்தான் கொண்டு சேர்க்கும்.  ஓரினச் சேர்க்கையை நிகோலஸ் எடுத்தபோது ஒரே அடியாக, ஆர்.எஸ்.எஸ்.நபர் அது எங்கள் தேசத்தில் கிடையாது என்றார். இது சோவியத் ரஷ்யாவில்   இல்லையென்று (“முதலாளித்துவ வர்க்கத்தின் தரம் நலிந்த நிலை”) சொல்வது போலவும், ஆப்பிரிக்காவிலும் இல்லையென்று ராபர்ட் முகாபே சொன்னது போல்( “அவர்கள் அமெரிக்காவில் மகிழ்ச்சிகரமானவர்களாக  இருக்கலாம், ஆனால் அவர்கள் ஜிம்பாப்வேவில் சோகமானாவர்கள்”) உள்ளது. ஓரினச்சேர்க்கையை அசிங்கமான  பாலியல் நடத்தையாகக் கருதும் மேற்கத்தியர்கள் கூட  தேச எல்லைக்கு வெளியே நிறுத்தப் பார்க்கும் இவர்களது விகாரமான முயற்சியைக்  கண்டு சிரிப்பார்கள்.  இவ்வழியில்  ஆர்.எஸ்.எஸ்.சின்  போக்கு, செய்தித் தொடர்புக்கு முதல்நிபந்தையான, உரையாடலில் பங்கேற்பவர்களின்  கண்ணோக்கை கணக்கில் எடுத்துக்கொள்வதில், மிகவும் பலவீனமாக உள்ளது.

இழிநிலை

இந்துயிசத்தின் மனப்படிமம், தேசியவாதம் நேரடியாகவே அதிகாரத்தைப் பிடிப்பதில்  அளவற்ற ஆர்வத்தை  காட்டியபோதும், பின் அதிகாரத்தில் 1990களில் உட்கார்ந்த  போதும  இருந்த இழிநிலையில் தற்போது இல்லை. இதன் உண்மை காரணம், தீவிர அழிவுகாலத்தினர் ‘முஸ்லீம்களை இந்து தேசியவாதிகள் இந்து மஹாசமுத்திரத்தில் எறிவார்கள்’, ‘தலித்துகளின் விடுதலை கடிகார முள் பின் தள்ளப்படும்’ போன்ற முன்கணிப்புகள் எல்லாம் பொய்த்து விட்டன. சமீபத்தில், நரேந்திர மோடி வெளிநாட்டுக் கொள்கையை வெற்றிகரமாக கையாண்டுள்ளதும், மேற்கத்திய நாடுகள் கனவில் மட்டுமே காணக்கூடிய பொருளாதார வளர்ச்சியை இந்தியர்கள் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்கு உள்ளதும் இதற்கான காரணங்களாகும். இந்த அளவிற்கு முக்கியமாக இல்லையென்றாலும் சொல்லுமளவிற்கு உள்ள ஒன்று: கலிஃபோர்னியா மாகாண பாடப்புத்தக விவகாரத்தில்  (ஹிந்துயிசத்தைப் பற்றிய  உணர்வுக்கெதிரான பகுதிகளை நீக்குவதற்காக முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள்)  ஹிந்து கலாச்சாரத்தைப் பற்றிய எதிர்மறை சித்தரிப்புகள் திருத்தப்படுவதில் ஹிந்துப்  பெற்றோர்கள் அடைந்துள்ள முன்னேற்றங்கள். மாறாக, 2006ல் ஹிந்துக்கள்  இவ்விவகாரத்தில் முழுத்தோல்வியை சந்தித்தனர். அமெரிக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் இந்தியர்களையும் இந்தியவியலாளர்களையும் அதிகமாக உள்ள இந்தியாவிற்கு எதிரான குழுக்களின் வேகமும் கணிசமாக குறைந்து விட்டது.

சில நாட்களுக்கு பிறகு வந்த சோனா தத்தாவின், ஹிந்துக் கலை  ஹிந்து ஆலயக்  கட்டடடக்கலைப் பற்றிய  ஆவணப்படமும் இத்தகைய கருத்தைத்தான் மனதில் பதியச் செய்தது. படத்தில் , இந்துக்களின் அறிவாற்றல் வியக்கத்தக்க  அளவில்  நன்கு விளங்குமாறு சித்தரிக்கப்பட்டு  இருந்தாலும் ஆரம்பத்தில், சமயச்சார்பற்றவர்களின் வழக்கமான பொய்களை போலவே பன்முகத்திய மொகலாயர்கள் இந்து ஆலயங்களின் பக்கத்தில் பிரம்மாண்டமான மசூதிகளை கட்டினார்களென்றும் ஐரோப்பா முழுவதுமே மதப்போர்களினால் கொடூரமாக பாதிக்கப்பட்டிருந்த  காலகட்டத்தில் முகலாயர்கள்  அமைதியான சகிப்புத்தன்மை நிறைந்த பேரரசை நிர்மாணித்தனர் போன்ற பொய்களை கூறத் தவறவில்லை. இருந்தாலும் சமீப காலத்தை போல் இவை மிகுந்த இடையூறை விளைவிக்கவில்லை.

     எனவே, டட்ச் இளைஞர் நிகோலஸ் அவருடன் வாகனத்தில் சென்ற சமயச்சார்பற்றவரின் வெறுப்பு மிகுந்த சிறுவிளக்கத்திற்கு  அப்பாலும் ஆர்.எஸ்.எஸ்.நபர்களை திறந்த மனத்துடன் சந்திக்கச் செல்கிறார். அவர் சந்தித்த உள்ளூர் மக்களை பற்றி  நல்ல விவரங்களை கூறுகிறார். ஆனால் அவரது தப்பெண்ணங்களையும் தன்னுடனே எடுத்துச் செல்கிறார். அவை ஹிந்துக்கள் மேலல்ல. தேசியவாதிகள் மேலானது. பத்திருபத்தைந்து  வருடங்களுக்கு முன்னிருந்த தீவிரம் இல்லையென்றாலும் தொட்டுரணக்கூடியதாக உள்ளது. முடிவு: விளம்பரத்தை முன்னெடுத்து செல்லும் திறமைச்  சமன்பாடு சமயச் சார்பற்றவர்களுக்கு சாதகமாக இருந்தாலும் ஹிந்துக்களின் நிலை முன்போல் ஆழம் காண இயலலாத அளவிற்கு நம்பிக்கையற்றதாக இல்லை.

                         (Published on Pragyata.com 15 November 2017)

Series Navigation<< குஹாவின் கோல்வால்கர் – 2ம் பகுதிகருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக….. >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.