கீதப்ரியா, லதா, ஜோதி

அன்று உழவர் சந்தையிலிருந்து வெளியே வரும் போது, வாசலில் பூக்கார பாயிடம் மல்லிகை பூ எடை நிறுத்தும் போது தான் கவனித்தேன் வலது புற டீக்கடையில் நிற்பது ஜோதி மாதிரி இருக்கிறதே என்று.

உழவர் சந்தைக்கு போனால் எப்படியும் ரெண்டு தெரிஞ்சவங்கள பார்த்துவிடுவேன். நின்னு நாலு பழமை பேசிவிட்டு வந்தா தான் எனக்கு மனசு ஆறும். அன்று எங்கடா ஒருத்தரும் கண்ணுல படலியேன்னு நினைத்த போது தான் ஜோதி கண்ணில் பட்டாள்.

பார்த்து கிட்ட தட்டப் பதினைந்து ஆண்டாவது இருக்கும், ஆனால் ஜோதியாக இருக்குமோ என்று தோன்ற காரணம் அவள் வாயை திறக்காமல் சிரிக்கும் போது இப்போ இருக்கிற தெலுங்கு ஹீரோயின் ராசி கண்ணா சிரித்தால் உதட்டு ஓரம் கன்னத்தை ஒட்டி ஒரு வளைவு வருமே, அதே வளைவு ஜோதிக்கும் வரும். அந்த மாதிரி சிரிப்பு நான் வேறு யாரிடமும் இதுவரை பார்த்ததில்லை.

எதுக்கும் கேட்டு பார்த்துவிடலாம் என்று டீக்கடை முன் சென்று நின்றபின் தான் உரைத்தது, என்ன பேர் சொல்லி கூப்பிடுவது என்று.

இது என்ன கூத்து, இப்போ தான ஜோதின்னு சொன்னீங்க என்று நினைப்பீர்கள். ஆனால் அவள் நிஜ பெயர் ப்ரியா.

ஜோதி, என் அத்தை வீட்டுக்கு வந்த போது அவள் பெயர் ப்ரியா.

அது எனக்கு தெரிந்ததே ரொம்ப நாள் கழித்து என் பெரிய அத்தை சொன்ன போது தான். ப்ரியாவை ஜோதியாக மாற்றியது அவர் தான்.

அக்கா தங்கை என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று இன்று தொலைக்காட்சி சீரியல் எடுப்பவர்கள் எல்லாம் பாடம் படிக்க வேண்டும் என் இரு அத்தைகளிடமும்.

பெரிய அத்தைக்கு ஒரு மகன் மட்டுமே, சின்ன அத்தைக்கு இரு மகள்கள்.

இவர்கள் இருவர் வீடும் நடந்து போகும் தூரம் தான்.

சின்ன அத்தையின் வீட்டில் நடக்கும் எல்லா வேலைகளுக்கும் பெரிய அத்தை விழுந்து அடித்துக்கொண்டு ஐடியா கொடுப்பதும், ஆள் ஏற்பாடு செய்வதும், வேலையை மேற்பார்வை செய்வதும் என்று அவர் இல்லாமல் அங்கு ஒன்றும் நடக்காது என்கிற நிலைமை தான்.

இவர்களில் பொறுப்பு ஒருவரும் பொறுப்பு துறப்பு ஒருவருமாக இருந்தாலும், பாசக் காட்சிகளுக்கும் குறைவில்லை.

என்ன ப்ரியால ஆரம்பித்து ஒரே அத்தை புராணமா இருக்கேனு யோசிக்காதீங்க, இப்டி சென்டிமெண்ட் நீங்க பார்த்திருக்க மாட்டீங்க.

பெரிய அத்தை புதுப் புடவை வாங்கினால் அன்று சாயந்திரமே அதை எடுத்துக்கொண்டு சின்ன அத்தை வீட்டுக்கு வருவார்.

சின்ன அத்தையின் முதல் மகள் மீது அந்த புடவையை ஒரு பத்து நிமிடம் போர்த்தி இருக்க விட்டு பின்னர் எடுத்துக்கொண்டு போய் தான் கட்டுவார். இது அவள் புடவை கட்டும் வயது வரும் வரை தான், அதன் பின்னர் அவள் முழுதாக புடவையை ஒரு தடவை கட்டிய பின் தான் பெரிய அத்தை கட்டுவார்.

இந்த மாதிரி செண்டிமெண்ட் எல்லாம் எனக்கு பள்ளி காலத்தில் மிகவும் ஆச்சர்யமாக இருக்கும்.

மறந்தும் எனக்கோ, என் அக்காவுக்கோ அந்த முதல் போர்த்தும் வாய்ப்பு கிட்டியதில்லை.

சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் என் அப்பா மீது இருக்கும் கடுப்பை லேசாக எங்கள் மீதும், நல்ல காத்திரமாக என் அம்மா மீதும் ரெண்டு அத்தைகளும் காட்டுவார்கள்.

காரணம் என் அப்பா தாத்தா வைத்து கொடுத்த கடையை நடத்தத் தெரியாமல் நஷ்டப்படுத்தியதுதான்.

இது எல்லாம் சேர்ந்து எங்களுக்கு எங்கள் அப்பா பக்கத்து சொந்தம் என்றாலே கொஞ்சம் கிலி தான்.

அம்மாவுக்கு அத்தைகளிடம் காட்டுவதற்கென்றே ஏகப்பட்ட வீம்புகள் உண்டு. அவர்கள் வீட்டு காபியை குடிக்கமாட்டாத சாக்குக்கு நான் இன்னிக்கு முழுநாள் விரதம் என்பதில் தொடங்கி, ஏதாவது விருந்துக்கு அவர்கள் அழைத்தாலும் அன்று எங்களுக்கு படிக்கச் நிறைய இருப்பதாக சொல்லி தவிர்ப்பது, ஸ்கூல் டெஸ்ட் என்று படிப்பு சம்பந்தமாகவே எதையாவது சொல்வார், அதற்கு காரணம் அத்தை பெண்களை விட நாங்கள் கொஞ்சம் படிப்பில் தேவலாம்..

சின்ன அத்தைக்கு அப்பெண்டிசைடிஸ் ஆபரேஷன் செய்த போது சொல்ல வேண்டியதே இல்லை, சின்ன அத்தை வீட்டு முழு நிர்வாகமும் பெரிய அத்தை கையில் தான். தன் கணவரின் ஊரிலிருந்து ஜோதியை வீட்டு வேலைக்கு அழைத்து வந்தார் பெரிய அத்தை.

அது ஒரு முழுஆண்டு விடுமுறை.

இன்றும் ஞாபகம் இருக்கிறது வரும் போது ஜோதிக்கு எண்ணெய் வைத்து பின்னப்பட்ட தலைமுடி தோள் வரை இருந்தது. ரொம்ப பூஞ்சையான முடி

அவளுடன் அவள் அண்ணனும் வந்திருந்தார்.

ஒரு கையில் துணிமணி பையும், இன்னோர் கையில் ஜோதியுமாக வந்து மூவாயிரம் வாங்கி கொண்டு ஜோதியை ஒரு வருட வீட்டு வேலைக்கு விட்டு விட்டு போனார்.

அத்தனை வருடம் கிராமத்தில் திறந்தவெளிகளிலும், தோட்டத்தை சுற்றியும் இருந்து வந்ததாலோ என்னவோ இல்லை அத்தனை மனிதர்களை ஓரே நேரத்தில் பார்த்ததாலோ என்னவோ ஜோதி ஒரு மாதிரி விழித்தாள்.

முதல் வைபவம் பெயர் மாற்றும் வைபவம்.

என் சின்ன அத்தையின் மூத்த பெண்ணின் பெயர் கீதப்ரியா. அதனால் என் பெரிய அத்தை ஜோதியிடம் ” இனி யாராவது பேர் என்னனு கேட்டா ப்ரியானு சொல்லக்கூடாது, லதானு தான் சொல்லணும், புரிஞ்சுதா” என்று மென்மையாக ஆரம்பித்தார்..

உடனே சின்ன அத்தை, ” ஐயோ அக்கா, எங்க நாத்தனார் பொண்ணு மூத்தவ பெயர் வேற லதா தான். நாம என்னமோ வேணும்னே அவ பேர வச்ச மாதிரி நெனப்பா, வேற பேரா வைங்க” என்று லதா என்னும் நாமகரணத்துக்கும் தடை போட்டார்.

“சரி ஜோதி ன்னு வைக்கலாம், கூப்பிடறதுக்கும் நமக்கு ஈஸியா இருக்கும்” என்று இப்படி தான் ப்ரியாவாக வந்தவள் ஜோதியாக மாறினாள்.

எப்படியோ தத்தம் கணவர்களுக்கு அடுத்து தங்கள் அதிகாரம் செல்லுபடியாகும் ஒரு ஜீவன் என் இரண்டு அத்தைகளுக்கும் கிடைத்துவிட்டது. இவர்கள் கெட்டவர்களா இல்லை தெரியாமல் இப்படி நடந்துகொள்கிறார்களா என்றே கணிக்க முடியாது.

எப்போதும் எண்ணெய் வைத்து படிய வாரி இருக்கும் தலையில் எப்படி முடி உதிரும்.

இந்த காரணத்தை எந்த அத்தை கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை.

அடுத்தமுறை நான் ஜோதியை பார்த்த போது பாய் கட் போல வெட்டப்பட்டிருந்த தலைமுடியுடன் காட்சி தந்தாள்.

கூடவே என் அத்தையின் இரண்டாவது பெண் “பிக் மௌத் ” என்று ஜோதிக்கு புது பெயர் ஒன்றும் வைத்திருந்தாள்.

நல்ல வேளை ஜோதிக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று நினைத்து கொண்டேன்.

என் அத்தை வீட்டில் ஜோதிக்கு கொடுக்கப்பட்டது எதுவும் கஷ்டமான வேலை இல்லை, ஆனால் அது எதுவுமே அவள் வயதுக்கு ஏற்ற வேலைகள் இல்லை.

ஒரு வேலையைக் கூட ஜோதி ஈடுபாட்டோடு செய்து நான் பார்த்ததில்லை, அவளுக்கு எப்போ வீட்டை விட்டு வெளியே கிளம்புவோம் என்று இருக்குமோ என்னவோ, வேலை இல்லாத நேரம் எல்லாம் கேட்டுக்கு பக்கத்திலேயே தான் உட்கார்ந்திருப்பாள். வீட்டின் உள்ளே போடப்பட்டிருந்த மொசைக் தரையும் அவளுக்கு பிடிக்கவில்லை என்று நினைக்கிறன், காலை ஒரு மாதிரி நுனி விரலில் நடப்பது போல நடப்பாள், வீட்டுக்கு வெளியே, சுத்தி வர காரை தரையில் நன்றாகக் கால் பதிய நடப்பாள்.

என் இரண்டு அத்தைகளும் அவளை திட்டுவது இந்த இரண்டு விஷயத்திற்கு தான்.

“எப்போ பாத்தாலும் ஏதோ உலகத்துல இருக்காதா ஜோதி, கண்ணு பாக்க கை கிடு கிடுன்னு வேலைய செய்யணும்” என்று சொல்லி ரெண்டு கிலோ வெங்காயத்தை உரிக்க கொடுப்பார்கள். யாரும் இல்லாமல் தனியாக பின்பக்கம் செக்குதிட்டில் உட்கார்ந்து மணிக்கணக்கில் அந்த வெங்காயத்தை உரிப்பாள்.

அப்பொழுதெல்லாம் அவள் என்ன யோசிப்பாளோ தெரியவில்லை

ஜோதிக்கு வீட்டை விட்டு வெளியே செல்லும் வாய்ப்பு சில அபூர்வ நாட்களில் அமைவதுண்டு.

மதியம் என் சின்ன அத்தை சமையல் முடித்தவுடன், ஒரு கிண்ணத்தில் வைத்து கொடுத்து விடும் குழம்பை என் பெரிய அத்தை வீட்டில் கொடுத்துவிட்டு வர வேண்டும்.

பொங்கல், தீபாவளி சமயத்தில் இரண்டு பேர் வீட்டிலும் சுத்தம் செய்வது, வாசல் மெழுகுவது என்று வேலை செய்வாள். இது எல்லாம் அவள் வயதுக்கு சம்பந்தம் இல்லாத வேலைகள்தான். வாசல் மெழுகியவுடன் பத்து வாட்டி கையை கழுவுவாள். என் மாமா தான் என்ன நினைத்தாரோ தெரியவில்லை ஒரு பெரிய விளக்குமாரை வெட்டி அதில் மெழுக சொல்லித்தந்தார்.

அப்போதெல்லாம் எனக்கு என் பெரிய அத்தை வீட்டு ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடி கொண்டிருப்பது ஒரு குற்ற உணர்ச்சியை தரும்.

சொல்ல மறந்து விட்டேன், இவ்வளவு ஏன் ஜோதியாய் கவனித்தேன் என்றால் ஜோதி படிப்பை நிறுத்தி என் அத்தை வீட்டுக்கு வேலைக்கு வந்த வருடம் நானும் ஜோதியும் ஒரே வகுப்பு. எப்போதும் என் வகுப்பில் யாரோ படிப்பை நிறுத்தி எங்கள் வீட்டில் வேலை செய்வதாகவே தோன்றும்.

அடுத்து வந்த நாட்களில் ஜோதி கொண்டு வந்த பாவாடை சட்டையெல்லாம் மாறி விட்டது, அவளுக்கு அளவு பொருத்தமே இல்லாத என் அத்தை மகள்களின் நீளமான பிராக், தொளதொள சட்டை என்று மாறியது. அந்த துணிகளுக்குள் தன்னை பொருத்திக்கொள்ள அவள் ரொம்ப பிரயத்தனபடுகிறாள் என்பது அவள் துணியை சுருட்டி சுருட்டி பிடித்து கொள்வதும், இறுக்கி காலுக்கு அடியில் தள்ளிவிட்டு உட்கார்ந்து கொள்வதும் என்று அவள் கவனம் அதிலேயே இருக்கும்.

இதற்கு ஆறுதலாக ஜோதிக்கு வெளியே செல்ல இன்னுமோர் வாய்ப்பு கிட்டியது.

அது என் அத்தை பெண்கள் படிக்கும் பள்ளிக்கு மதிய உணவு கொண்டுசெல்லும் பணி. அதே பள்ளியில் தான் நானும் படித்தேன்.

அது வரை காலையிலேயே அவர்கள் பள்ளிக்கு வரும் போது மதிய உணவு எடுத்துவருவார்கள்.

என் அத்தை சமையல்கார அம்மாவை மாற்றப் போக அவர் மதிய உணவு தயார் செய்ய மட்டும் தான் வருவார். அதனால் அவர் சமையல் முடிந்த பின், ஜோதி தான் இருவருக்கும் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு வருவாள்.

பதினொன்று, பதினொன்றரைக்கே வந்து விடும் ஜோதி உணவு இடைவேளை விடும் வரை எங்கள் பள்ளியில் இருக்கும் நான்கு கூண்டுகளில் இருக்கும் மான், முயல், குரங்கு இவைகளை தான் உட்கார்ந்திருக்கும் மரத்தின் கீழே இருந்தே பார்த்துக்கொண்டிருப்பாள்.

என் அத்தை பெண்களோடு சேர்ந்து நான் உணவருந்த மாட்டேன்.

அவர்கள் இருவரும் தனியாக தான் சாப்பிடுவார்கள் . இது என் அத்தை அவர்களுக்கு கொடுத்திருக்கும் அறிவுரை. கூட யாரவது சாப்பிட்டால் இவர்கள் சாப்பிடுவதை பார்த்து கண் வைத்துவிடுவார்களாம்.

டிபன் பாக்ஸை திறந்து வைத்து விட்டு ஜோதி கூட தள்ளிப் போய்த் தான் உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

இவர்கள் சாப்பிட்டுச் சென்றவுடன் ஜோதி பாத்திரங்களை அடுக்கி எடுத்துவைத்து கேட் அருகே நின்றுகொள்வாள். என் அத்தை வீட்டு கார் ஓட்டுநர் அவர் உணவருதிவிட்டு வீட்டிலிருந்து திரும்பி செல்லும் போது ஜோதியை அழைத்து செல்வார்.

என் அம்மா தான் சொல்வார் ” உன் அத்தை பெண்கள் படிக்கிற லட்சணத்துக்கு ஜோதி பையன் வளர்ந்து கூட சாப்பாடு கொண்டு தருவான் பாரு “.

கொஞ்சம் இல்லை, ரொம்பவே படிப்பில் சுமார் தான் இருவரும். அதில் என் அம்மாவுக்கு நல்ல திருப்தி.

ஒவ்வொரு வருடமும் என் அத்தையும் மாமாவும் எங்கள் பள்ளியில் இருக்கும் “அதிதி பவன் “ மாணவர் விடுதிக்கு கட்டில் வாங்கி தருவது, அங்குள்ள பிள்ளைகளுக்கு உடைகள் தருவது என்று ஏதாவது செய்ய போகத்தான் இவர்கள் இருவரும் இந்த மட்டுக்காவது வகுப்புகளை தாண்ட முடிந்தது.

இப்படியே போய் கொண்டிருந்த போது தான், ஒரு நாள் என் அத்தை வீட்டில் ஒரே சண்டை அழுகை.

அந்த வருடம் என் அத்தை பெண்கள் இருவரையும் அடுத்த வகுப்புக்கு ப்ரோமோஷன் கொடுக்காமல் அதே வகுப்பிலேயே நிறுத்தி விட்டார்கள்.

“எவ்வளவு செஞ்சிருப்போம் அந்த ஸ்கூலுக்கும், அந்த இல்லத்துக்கும், ம்ம்ஹூம் பாஸ் போடலையே” என்று என் பெரிய அத்தையிடம் சின்ன அத்தை பள்ளி நடத்தும் கன்னியாஸ்திரிகளை பற்றி குறை கூறி கொண்டிருந்தார்.

வேறு பள்ளிக்கு மாற்றும் முடிவு எடுத்த பின்னர், ஜோதிக்கு சாப்பாடு கொண்டு செல்லும் வேலையும் இல்லாமல் போனது.

இந்த அமளி எல்லாம் அடங்கியவுடன், குலதெய்வக் கோவிலுக்கு போக நாங்கள் எல்லோரும் என் அத்தை வீட்டுக்கு வந்திருந்தோம். ” நீங்க அதே ஸ்கூல் தானா” என்று கேட்டு கொண்டு ” நானும் ஊருக்கு போய் எங்க ஊர் ஸ்கூல்ல சேர்ந்துக்குவேன்” என்று என்னிடம் சொன்ன ஜோதியை பார்க்க பாவமாக இருந்தது. அதை விட அவள் என்னை நீங்க என்று விளித்தது ஒரு வகை அன்னியமாக இருந்தது.

ஆனால் அதே வருடம் ஜோதியின் அண்ணனும் வந்து இன்னோர் மூவாயிரம் வாங்கி கொண்டு அடுத்த வருடமும் வீட்டு வேலைக்கு விட்டு போய்விட்டார்.

அந்த வருடம் ஜோதியிடம் இருந்த கொஞ்ச நஞ்ச சிரிப்பும் சுத்தமாக வடிந்து விட்டது கண்டு, என் பெரிய அத்தை தான் அடிக்கடி ஜோதியை பார்த்து , ” என்ன உங்க அரண்மனைல இருந்தா தான் தூக்கம் வருமா, இங்க என்ன கொறச்சல் உனக்கு, ஏன் எப்போ பார்த்தாலும் அழுமூஞ்சியா இருக்க” என்று போகிறபோக்கில் கேட்டுவிட்டு போவார்

என் சின்ன அத்தை அதைக் கூட கவனித்த மாதிரி தெரியவில்லை. அவருக்கு டிவி நாடகம், அதை விட்டால் நாத்தனார் வீட்டு குசலம், அவ்வளவு தான்.

அவள் சாப்பிட்டாளா என்று கூடக் கேட்கமாட்டார். சமையல்கார அம்மா தான் அவளுக்கு என்று வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தில் சாப்பாட்டை மூடி வைத்துவிட்டு போவார் .

கிடைத்த நேரத்தில் ஏதோ சின்ன வகுப்பு தமிழ் பாட புத்தகத்தை வைத்துக்கொண்டு எழுத்துக்கூட்டி ஜோதி படிக்கப் பார்ப்பாள். ஒரு சில நேரம் அதை பார்த்திருக்கிறேன்.

என் அத்தை வீட்டில் யாரும் அதற்கு ஒன்றும் சொன்னதில்லை, இவள் எங்க எழுத்துக் கூட்டி படித்து என்ன பண்ண போகிறாள் என்று நினைத்தார்களோ என்னவோ.

அதன் பின் ஒரு மாதம் இருக்கும், மறுபடியும் என் அத்தை வீட்டில் ஒரே குழப்பம், அமளி.

இந்த முறை என் அத்தை பெண்களின் படிப்பு பற்றியல்ல, ஜோதியை பற்றி.

மதியம் சாப்பாட்டுக்கு பின்னர் ஜோதியை காணவில்லை.

ரொம்ப மெனக்கெடாமலேயே என் சின்ன அத்தை தான், இங்க அவளுக்கு தெரிஞ்ச ஒரே இடம் பழைய ஸ்கூல் தான், அங்க தான் போய் இருப்பா என்று சரியாக சொன்னார். அவர் பார்க்கும் டிவி சீரியல் கைகொடுத்ததோ என்னவோ.

ஊரில் இருந்து வரவழைக்கப்பட்ட ஜோதியின் அண்ணன் தான் ஜோதியை ஸ்கூலில் இருந்து அழைத்து வந்தார். “இப்போ என்னத்துக்கு அந்த ஸ்கூலுக்கு போன அத சொல்லு” என்று ஆளாளுக்கு கேட்டும் ஜோதி பதில் பேசாமல் அழுது கொண்டிருந்தாள்.

பெரிதாக யாரும் ஒன்றும் திட்டவில்லை, “பணத்தை வைத்துவிட்டு உன் அருமை தங்கச்சிய ஊருக்கு கூட்டிகிட்டு போய்டு, இங்க நாங்க காவல் காக்க முடியாது” என்று பெரிய அத்தை பேசி முடித்தார்.

அழுதுகொண்டே அவள் அண்ணனின் திட்டுக்களை வாங்கி கொண்டு சென்றவள் தான், இன்றைக்கு தான் பார்க்கிறேன்.

என்னை அடையாளம் கண்டுகொண்டாள், எனக்கு ஆச்சர்யம் தாங்க வில்லை.

“எப்படி கண்டுபுடிச்ச” என்றேன்.

“மொகத்த பார்த்தா தெரியாதா , சரஸ்வதி அம்மா வீட்டு ஆளுங்க மொகம் எல்லாமே நெனப்பிருக்கே” என்றாள்.

ஆர்வம் தாளாமல், ” ஊருக்கு போய் என்ன பண்ணின ஜோதி, அட ஜோதின்னே வருது பாரு, ஸ்கூல்ல சேர்ந்திய” என்றவுடன் சிரித்தாள்.

“ஜோதின்னே சொல்லுங்க, உண்மையில ஸ்கூலுக்கு போய் சேர்ந்துக்கலாம்ன்னு நெனச்சு தான் போனேன், ஆனா நான் படிப்பு மேல ஆர்வமா இருக்கறன்னு தான் மொதல்ல எங்க அண்ணனும் நெனைச்சார், ஊர்ல இருந்த கவர்மெண்டு பள்ளிக்கூடத்துல சேர்த்து பார்த்தார். எனக்கு படிப்பு நடுவுல விடுபடவும் திரும்ப படிக்கச் ரொம்ப சிரமமாத்தான் இருந்துச்சு. ஆறு மாசம் வச்சிருந்து பாத்துட்டு வீட்டுக்கு கூட்டிகிட்டு போக சொல்லிட்டாங்க.. ஆனா அது எல்லாம் ஒன்னும் சங்கடமில்லை,

ஆனா படிப்பை விட எனக்கு அந்த வீடு புடிக்கல, புடிக்கலன்ன, அந்த ஜில்லுனு இருக்கற தரை, எந்நேரமும் கதவை சாத்தியே வச்சிருக்கறது, ஜனங்க பேச்சு சத்தம் கேக்காம இருக்கறது இதுல இருந்து தப்பிக்க தான் உண்மைல நான் ஸ்கூலுக்கு போனேன். எங்க அண்ணன் கிட்ட ஊருக்கு போனபின்னடி தான் இத எல்லாம் சொன்னேன்”.

எல்லாரும் சேர்ந்து அன்னிக்கு “இங்க உனக்கு என்ன கொறைன்னு “கேட்டப்போ அந்த வயசுல எனக்கு சொல்ல தெரில. நல்ல சாப்பாடு தான் போட்டாங்க, நல்ல இடம் தான் தந்தாங்க ஆனா என்னால அந்த வீட்டுக்குள்ள இருக்க முடில.

எங்க அண்ணன் அவ்ளோ திட்டுனாலும் , “உனக்கு காட்டு வேல தான் புள்ள சரிப்படும்ன்னு, என்னய தோட்ட வேலைக்கு கூட்டிகிட்டு போனார். ஊருக்கு போயும் நான் படிக்கணும்னு நினைக்கல, எங்க தோட்டம், காடு, ஆடு, மாடுன்னு, எங்க சனங்க பேச்சு இதுவே எனக்கு புதுசா மூச்சு வந்த மாதிரி இருந்துச்சு.

இப்போ மூணு வாரமா தான் இந்த சந்தைக்கு, எங்க அண்ணன், வாழ தாறு விக்கறாரு, நான் சந்த நாள் இதா இந்த டீக்கடை போடுவேன்” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்.

பேச்சோடு பேச்சாக “அவங்க மகளுங்க என்ன படிச்சாங்க” என்று கேட்டாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.