கிராவின் திரைப்பட ரசனை

This entry is part 9 of 10 in the series கி.ரா. - அ.ரா.

“மழைக்காகப் பள்ளிக்கூடத்தின் பக்கம் போனேன்; ஆனால் பள்ளிக்கூடத்திலிருந்து மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்” என்பதைப் பல நேரங்களில் சொல்லியவர் கி.ரா. இப்படிச் சொன்னதால், அவர் பள்ளிக்கூடத்திற்கே போனவரில்லை என்பது பொருளில்லை. பள்ளிக்கூடப் பாடத்திட்டம், ஆசிரியர்கள், அவர்களின் கற்பித்தல் முறை போன்றவற்றில் அவருக்கு ஈடுபாடு இருந்ததில்லை; புத்தகங்களில் கற்றதைத் திருப்பிச் சொல்லும் ஆசிரியர்களிடமிருந்து கற்றுக்கொள்ளப் பெரிதாக எதுவுமில்லை என்பதையே இந்த விவரிப்பின் மூலம் உறுதி செய்தார். அதே நேரம் அவரது கற்றல் முறை என்பது கூர்ந்து கவனித்தல் வழியாகவும், பார்த்த ஒவ்வொன்றைப் பற்றியும் தெரிந்தவர்களிடம் கேட்டுத்தெரிந்து கொள்வதன் மூலம் கற்றுக் கொள்வதாகவும் இருந்தது.

அவரது பாடங்கள் எல்லாம் இயற்கையின் ஜீவராசிகளாகவே இருந்தன. தாவரங்களையும் விலங்கினங்களையும் நீர்நிலைகளையும் நிலத்தின் மண்வகைகளையும் படிமங்களையும் வகைபிரித்துப் பேசும் பல கதைகளை அவர் எழுதியிருக்கிறார். ஒன்றைப்பலவாக அடுக்கிச் சொல்லும் வாய்ப்புகள் கொண்ட புனைகதை வடிவத்திற்குள்ளேயே ஒரு சொல்லை விரித்துப் பேசும் வாய்ப்பை உருவாக்கிக்கொண்டு விரித்துப் பேசுவார். இந்தச் சொல்முறைக்கு நல்லதொரு உதாரணமாக இருப்பது அவரது கிடை குறுநாவல். ஆடு மேய்க்கும் இளம்பெண்ணும் இளைஞனும் கொண்ட காதலை -சாதி மீறிய உறவைப் பேசும் கதைக்குள் ஆடுகளின் வகைகளைப் பட்டியலிட்டுக்காட்டுவார். அதே போல, மாற்றிக் கட்ட இன்னொரு வேட்டி இல்லாத ஒருவரின் கதையைச் சொல்லும் கதைக்குத் தலைப்பு வேட்டி. அந்தக் கதைக்குள் வகைவகையான துணிகளையும், வேட்டிகளின் வகைப்பாடுகளையும் நுட்பமான வேறுபாடுகளையும் சொல்லிவிட்டுக் கதையின் வடிவ அமைதி மாறாமல் கதையை முடித்துவிடுவார். இயற்கையைப் பாடமாகப் படிக்க நினைக்கும் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெற்றோர் வாங்கித்தர வேண்டிய கதைப்புத்தகம் அவரது பிஞ்சுகள் என்று சொல்வேன்.

புதுச்சேரியில் இருந்த காலத்தில் அவருடன் நடைபோவதற்குப் புதுப்புது இடங்களைத் தேடிச் செல்வதுண்டு. அப்படித்தான் இப்போது கருவடிக்குப்பம் மயானத்தோப்புக்குள் ஒருநாள் நுழைந்தோம். நூற்றாண்டைத் தாண்டிய மரங்கள் அடர்ந்த வனமாக இருக்கும் சுடுகாட்டை நான் வேறெங்கும் கண்டதில்லை. அந்த வனத்திற்குள் தான் தமிழ் நாடகத்தின் தந்தையென அழைக்கப்படும் சங்கரதாஸ் சுவாமிகளின் கல்லறை இருக்கிறது. நாடகப்பள்ளி மாணவர்களோடு ஒன்றிரண்டு தடவை அதற்கு முன் போனதுண்டு. புதுவையின் முதன்மையான சுடுகாடான கருவடிக்குப்பம் தோப்பை ஒருவரும் சுடுகாடாக நினைப்பதில்லை. மயானத்திற்குப் பக்கத்திலேயே ஒரு கோயில் உண்டு. அதுவும் வேறு ஊரில் இல்லாத ஒன்று. பாரதியின் குயில்பாட்டுத்தோப்பு இதுதான் என்று பலரும் சொல்வார்கள். அந்த அனுபவத்தில் கி.ரா.விடம் தோப்புக்குள் இருக்கும் மரங்களைப் பற்றிச் சொன்னேன். இதையெல்லாம் நாங்கள் பேசிக் கொண்டிருந்த இடம் ஒரு சினிமா தியேட்டர் வாசல்.

நல்ல படம்; பார்த்துவிடுங்கள் என்று யாராவது சொன்னால், ஏன்? எப்படி? என்று பேசிவிட்டு, அவர்களின் பேச்சை வைத்தே அந்தப் படத்தைப் பார்க்க வேண்டுமா? வேண்டாமா? என்று முடிவுசெய்துவிடுவார் கி.ரா. புதுவையில் இயங்கிய திரைப்பட ரசனை சார்ந்த வெளியீடுகளுக்கும், ஆண்டுதோறும் நடக்கும் புதுவைத் திரைப்பட விழாவிற்கும் முதல் ஆளாக நிற்பவர் கி.ரா. நாசரின் அவதாரம் படம் வந்தபோது “இயக்குநர் தங்கர் பச்சான் அந்தப்படத்தைப் பார்த்துவிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்; அவர் சொன்னா நம்பிப் பார்க்கலாம்” என்று சொன்னார். இருவரும் படம் பார்ப்பதற்காக அந்தத் தியேட்டர் வாசலில் இருந்தோம். கருவடிக்குப்பம் போகும் பாதையில் இருந்த அந்த அரங்கில் புதுப்படங்கள் எதுவும் முதல் காட்சியாக வருவதில்லை. இரண்டாவது மூன்றாவது சுற்றில் தான் வரும். ஆனால் கலைப்படம் எனக் கருதப்பட்ட அவதாரத்தை நகரின் முதன்மை வரிசைத் திரையரங்குகள் வாங்காததால், இந்த அரங்கில் வெளியிட்டிருந்தார்கள்.

நாங்கள் போனபோது தியேட்டருக்கு முன்னால் ஒருவரும் இல்லை. டிக்கெட் கொடுக்கும் அடையாளமும் இல்லை. உள்ளே போய் விசாரித்தோம். கூட்டம் குறைவாகவே வருது. 100 பேர்களாவது வந்தால் அடுத்த காட்சி நடக்கும் என்று சொல்லி விட்டார்கள். என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் குயில்தோப்பு என அறியப்பட்ட மயானத்திற்குள் போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என்று சொன்னார் கி.ரா. காலாற நடக்கலாம் என்று நுழைந்து ஒவ்வொரு மரத்தின் பக்கமும் நின்று மரங்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டே வந்தார். பட்டைகளையும் வழுவழுப்பையும் இலைகளையும் வைத்து அவற்றின் பெயர்களையும் அவைகளின் உறுதிப்பாட்டையும் சொன்னார். இதுபோன்றதொரு மயானத்தில் தான் அரிச்சந்திரன் – சந்திரமதி கதை நிகழ்ந்திருக்கவேண்டும். அந்தக் கதையைப்பாட்டாகவும் வசனமாகவும் எழுதி மேடையேற்றிய சங்கரதாஸ் சுவாமிகளின் சமாதிவரை போய்விட்டுத் திரும்பினோம்.

தோப்பின் வாசலில் நின்று திரையரங்கைப் பார்த்தோம். கூட்டம் வந்திருந்தது. நாங்கள் நடந்துபோகவும் டிக்கெட் கொடுக்கத்தொடங்கினார்கள். நான் சில தடவை அந்த அரங்கில் படங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் கி.ரா.வுக்கு அது முதல் முறை. முதுகுவலியை உண்டாக்கக்கூடிய இருக்கைகள் தான் இருக்கும் என்று சொல்லியிருந்தேன். பரவாயில்லை படம் நல்ல படம் என்றால் அதெல்லாம் தெரியாது என்று சொல்லிவிட்டார்.

படம் பார்த்துவிட்டுத் திரும்பும்போது படத்தின் காட்சிகளில் காடும் வீடும் பாதைகளும் இயற்கையை விட்டு விலகாமல் பிடிக்கப்பட்டிருப்பதைப் பற்றிச் சொல்லிக்கொண்டே வந்தார். கண் தெரியாத பெண்ணாக நடித்துள்ள ரேவதியின் நாசி உணர்வைக் காட்ட இயற்கையின் ஒலிகளையும் வாசனையையும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று பாராட்டிப் பேசிக்கொண்டே வந்தார். ’நல்ல பாடல்கள் இருக்கு; நல்ல நடிப்பு இருக்கு; ஆனா நம்மெ ஆளுகளுக்கு இது போதாதே; படம் பார்க்க வரமாட்டாங்களே’ என்று வருத்தத்தோடு சொல்லிக்கொண்டே வந்தார். சில நாட்களுக்குப் பின் நடிகர் நாசர் வந்தார். அவரிடம் அந்தப் படத்தைப் பற்றி விரிவாகப் பேசிக்கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த எனக்கு அவரது சினிமா ரசனை என்னுடைய பார்வைக்கோணத்திலிருந்து பெரிய அளவு வேறுபட்டது என்பது புரிந்தது.

38

“சார் அப்பா விசாரிச்சார்

இப்போ அப்பா உடன்தான் இருக்கேன்

அழைக்கிறீர்களா?”

புதுவை இளவேனில் மெசஞ்சரில் இதை அனுப்பிய நாள் ஏப்ரல்-19/ நேரம் இரவு 9.27. அவரது தொலைபேசி எண்ணையும் தந்தார். அவர் அப்பா என விளித்த து கி.ரா.வை. இந்த நேரத்தில் வேண்டாம். நாளை பகலில் பேசிக்கொள்கிறேன். அடுத்த நாள் ஏதோ ஒரு வேலையால் மறந்துவிட்டேன். இரண்டு நாட்கள் கழித்து கி.ரா.வின் தொலைபேசிக்கு அழைத்தேன். யாரோ பேசிக்கொண்டிருப்பதாகச் சொன்னது. இரண்டு தடவை முயற்சி செய்துவிட்டு விட்டுவிட்டேன். சில நாட்கள் கழித்து இளவேனில் பக்கத்தில், குதூகலமாக அவர் எழுதிக் கொண்டிருந்த படம் வந்தது. நானும் பார்த்துச் சிரித்துக்கொண்டேன். நூறைக் கடந்தும் இருப்பார்; இன்னும் சில நூல்களை எழுதுவார் என்று மனம் சொன்னது.

சிலநாட்கள் கழித்து மருத்துவமனைக்குப் போய்வருவதாகத் தகவல் வந்தது. நானும் மருத்துவமனையில் ஒருவாரம் இருந்துவிட்டு வந்தேன். இப்போது அழைப்பது சரியில்லை என்று தோன்றியது. அதனால் தொலைபேசியில் அழைக்காமல் விட்டுவிட்டேன். திரும்பவும் பாண்டிச்சேரிக்குப் போவோம். சந்திப்போம் என்றே மனசு சொல்லியது.

வழக்கமாக 12 மணிக்கு மேலும் விழித்திருப்பேன். தூங்குவதற்கு முன்னால் முகநூலில் ஒரு சுற்றுச் சுற்றுவிட்டுத் தூங்கிவிடுவேன். ஆனால் மே. 17 அன்று பத்தரை மணிக்கெல்லாம் தூங்கிவிட்டேன். மூன்றரை மணிவாக்கில் ஒரு தொலைபேசி அழைப்பு. வந்து உடனே நின்று விட்டது. எடுத்துப் பார்த்தால் அதொரு வெளிநாட்டு அழைப்பு. அப்படியான அழைப்புகளுக்குத் திரும்பவும் அழைத்து மறுமொழி சொல்வதில்லை. ஒரு தடவை வரும் அழைப்புகளைத் திரும்ப அழைத்தால் நமது தொலைபேசி திசைமாற்றம் செய்ய வாய்ப்புண்டு என்பதால் அதனைத் தவிர்ப்பேன். அப்படித்தான் அதையும் திரும்ப அழைக்கவில்லை. ஆனால் தூக்கம் கலைந்து விட்டது.

முகநூலின் பக்கங்களில் நுழைய நினைத்துத் திறந்தபோது முதல் பதிவாக வந்தது இளவேனில் பதிவுதான். அப்பாவைப் பறிகொடுத்த மகனின் கதறலாக இருந்தது அந்தப்பதிவு. நான் புதுச்சேரியில் இருந்த காலத்தில் கி.ரா.வுக்கும் இளவேனிலுக்குமான உறவு ஒவ்வொன்றாக மாறிக்கொண்டிருந்தது. தாகூர் கலைக்கல்லூரிக்குச் செல்லும் சாலையில் கி.ரா., இருந்தபோதுதான் அந்தச் சிறுவனைப் பார்த்தேன். பின்னொரு நாளில் அந்தச் சிறுவன் இளைஞனாக மாறிய தோற்றத்தில் இருந்தான்.

பின்னரும் புதுவை இளவேனிலோடு தொடர்புகள் இருந்தன. முகநூல் காலம் விலகிய தொடர்புகள் நெருங்கிய காலமாகிவிட்டது. வார்சாவிலிருந்து திரும்பிய பின்னர் உங்களையும் படங்கள் எடுக்க வேண்டும் என்று என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். எப்போதும் புதுவை இளவேனிலைப் பார்க்கும்போது கி.ரா.வைப்பற்றியே பேசினார். கடந்த பத்தாண்டுகளில் கி.ரா.வின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியிருந்தார் இளவேனில். அவரது புதிய புத்தகங்களை அவருக்குச் சமர்ப்பணம் செய்தார். நூல்களின் உரிமையைப் பிரித்துப் பாகம் செய்யும்போது அவரையும் ஒரு மகனாகப் பாவித்துப் பிரித்து எழுதினார்.

அவரது மரணத்திற்குப் பின்னர் சில நாட்கள் கழித்து ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார் இளவேனில். “பேசாமல் இருந்தீட்டீங்க சார் என்று கோபமும் வருத்தமும் கூடியதாக அந்தச் செய்தி இருந்தது. ”

“அதுதான் பெருந்துயரம். உன்னிடம் சொன்ன சில நாட்களில் நானும் மருத்துவமனைக்குப் போய்விட்டேன்; கரோனாவின் தாக்குதல். ஒருவாரம் மருத்துவமனையில் தங்கித் திரும்பினேன் ” என்றேன்.

‘துயர கணங்கள் சார்.. கடைசி நாட்களில் … உங்களிடமும் பேச விரும்பினார்’ – என்பது இளவேனில். எனக்கும் அவருக்குமிடையே ஒரு ரகசியம் ஒன்று உண்டு. அதை வெளிப்படையாகச் சொல்ல நினைத்திருக்கலாம். இனி அதை ரகசியமாகவே விட்டுவிட வேண்டியது தான் என்று சொல்லி முடித்தேன். அப்படியான பல ரகசியங்கள் என்னிடம் இருக்கின்றன என்றார் புதுவை இளவேனில்

Series Navigation<< ”சிறுகதையை அப்படியே நாடகமாக்க வேண்டும் என்று அவசியமில்லை.”பேரா.சுந்தரனார் விருது >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.