கலனின் மூடியைத் திறந்ததும் வடித்த கிச்சடி சம்பா அரிசிச்சோற்றின் நீராவி எழுந்தது. அம்மா பாத்திரங்களை ஒவ்வொன்றாகத் திறந்து எங்கள் இலைகளில் பரிமாறத் தொடங்கினாள். பக்கத்து வீட்டு வாழை மரத்தில் பறித்தெடுத்த இலை நீளமாகவே இருந்தது. முதலில் கிடாரங்காய் ஊறுகாய் இலையின் இடது பக்கம் வைக்கப்பட்டது. அதற்குப் பக்கத்தில் இடித்த கல் உப்பு. அம்மாவுக்கு பொடி உப்பை விட கல் உப்பின் மேல் தான் நம்பிக்கை அதிகம். பூசணிக்காய் கூட்டு. வாழைக்காய் பொறியல். மாங்காய் பச்சடி.
அம்மாவுக்கு சோறு வடித்தால் தான் திருப்தி. சோறு நீர் கோர்த்து இருக்க வேண்டும்.
‘’எவ்வளவு வேணாலும் கொழஞ்சு இருக்கலாம். வெர வெரயா இருந்தா எப்படி?’’ கேஸ் அடுப்பில் கூட பொங்க வைத்துத்தான் உணவு.
‘’குக்கர்ல டைம் மிச்சமாகும்மா’’
’’ஒரு நாள்ல எத்தனையோ பொழுது வேஸ்ட்டா ஆகுது. அன்னம் பொங்கறதுல தான் டைம் மிச்சம் பண்ணனுமா’’
அம்மாவுக்கு எல்லா விஷயங்கள் குறித்தும் தனித்த அபிப்ராயம் உண்டு.
திவாகர் இலையின் நடுவில் அம்மா சோற்றினை வைத்தாள். திவாகர் ‘’போதும் போதும் ‘’ என்றார்.
‘’என்ன ஆரம்பிக்கும் போதே போதும்னு சொல்றீங்க’’ நான் கேட்டேன்.
‘’மெல்ல சாப்பிடட்டும்’’ என்றாள் அம்மா.
திவாகர் கூட்டையும் பொறியலையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அம்மா அவர் இலையில் மேலும் ஒரு கரண்டி வைக்க முயன்றாள்.
‘’பிளீஸ் ! எனக்கு வேணும்ங்கறத நான் கேக்கறன். நான் கேட்டு வாங்கி சாப்பிட கூச்சப்பட மாட்டேன். ஆனா நான் ஒன்னு ஒன்னா எல்லா டிஷ்ஷையும் சாப்பிடறதுக்குள்ள அடுத்தடுத்து வச்சுடுவாங்க.’’
சௌ சௌ சாம்பாரை விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தார் திவாகர்.
‘’சிருங்கேரில பெரிய டைனிங் ஹால் இருக்கு. ஒரு பந்திக்கு பத்தாயிரம் பேர் சாப்பிட முடியும். சில நிமிஷங்கள்ல பந்தி பரிமாறிடுவாங்க. முந்தி பிந்தின்னு இல்லாம எல்லா பந்தி வரிசைக்கும் சாப்பாடு ஒரே சீரா போய் சேந்துடும்.’’
‘’நேஷனல் ஜியாக்ரஃபி சேனல்ல ’’வேர்ல்ட்ஸ் லார்ஜெஸ்ட் கிச்சன்’’னு ஒரு நிகழ்ச்சி. அதுல தர்மஸ்தலால சாப்பாடு போடறது பத்தி பாத்துருக்கன்’’ அம்மா சொன்னாள்.
திவாகர் அம்மாவைப் பார்த்து புன்னகைத்தார்.
சாம்பாருக்கு மாங்காய் பச்சடியைத் தொட்டுக் கொண்டு உணவருந்திக் கொண்டிருந்தார் திவாகர்.
‘’கூட்டு பொறியல் வைக்கட்டுமா’’
‘’இல்ல. வேண்டாங்க. வேணும்னா கேக்கறன்’’. வாழை இலையில் மேல்பாதியில் ஊறுகாய் கொஞ்சமாகத் தொடப்பட்டும் உப்பு இன்னும் எடுக்கப்படாமலும் இருந்தது.
எல்லா செயல்களையும் நிதானமாகச் செய்யக் கூடியவர் என்றாலும் சாப்பிடும் போது திவாகர் சற்று நிலையழிந்திருப்பதாக எனக்குத் தோன்றியது.
‘’திவாகர் ! ஆர் யூ ஓ.கே? எனி இஸ்யூஸ்?’’
‘’நோ நோ ஆல் இஸ் வெல்’’ என்று சொன்னாலும் பதிலில் ஒரு சிறு பதட்டம்.
அன்னவெட்டி முழுக்க சாதத்தை எடுத்து திவாகர் இலையில் பரிமாறினாள் அம்மா.
இலையில் இருந்த சாதத்தில் பாதியை ரசத்துக்கு வைத்துக் கொண்டார் திவாகர். ரசத்தை நன்றாக அழுத்திப் பிசைந்தார். மிளகு ரசத்தின் வாசனை நிறைந்தது. நான்கைந்து முறை அழுத்திப் பிசைந்ததும் மீண்டும் ரசம் கேட்டார் திவாகர்.
’’சின்ன பையனா இருந்தப்போ எப்படி ரசம் பிசையணும்னு அப்பா சொல்லித் தந்திருக்கார். கல்யாண வீடுகள்ல இலைல சாப்பாடு போடுவாங்க. ரசம் அங்கயும் இங்கயும் ஓடும். நான் அணை போட்டு தடுத்து நிறுத்துவன். ரசத்தை நல்லா அழுத்திப் பிசை என்பார் அப்பா.’’
‘’இவன் இன்னைக்கும் இட்லிக்கு மிளகாப் பொடி வச்சா அத ஒரு ஏரி மாதிரி அணை கட்டுவான்’’ என்றாள் அம்மா என்னைப் பார்த்து.
இலையில் பொடி இல்லை என்றாலும் நான் மானசீகமாக அணை கட்டினேன்.
”ராஜராஜனை சமீபத்தில் பாத்தீங்களா?’’ அம்மா திவாகரைக் கேட்டாள்.
‘’சிங்கப்பூர்ல இருந்து அடிக்கடி தொழில் விஷயமா டெல்லி வருவான். வந்ததும் வந்திருக்கன்னு ஃபோன் பண்ணுவான். கிளம்பும் போது கிளம்பிட்ட்ன்னு. ஒய்ஃப் குழந்தைங்க எல்லாரும் அங்க தான் இருக்காங்க. பேரண்ட்ஸையும் அங்க கூட்டிட்டு போய்ட்டான். ‘’
‘’சந்திரன்ட்ட எப்பவாவது பேசுவான். நாலு வருஷம் முன்னாடி வீட்டுக்கு வந்திருந்தான். ஒய்ஃப் குழந்தைகளை மாமனார் வீட்டில் விட்டுட்டு. இப்ப அரிசிச்சோறே சாப்பிடறது இல்ல. கூட்டு பொரியல் அவியல் மட்டும் வைங்கன்னு சொல்லிச் சாப்டான்’’ அம்மா திவாகரிடம் சொன்னாள்.
‘’அவன் எப்போதுமே புதுசு புதுசா ஏதாவது செய்வான்,’’ நான் சொன்னேன்.
’’நாங்க மூணு பேரும் ஃபைனல் இயர்ல ஒரே ரூம்ல இருந்தோம். அது ரெண்டு பேர் ரூம். ராஜராஜன் குளோஸ் ஃபிரண்ட். அதனால என் ரூம்ல இல்லாம இவங்க ரூம்ல தான் இருப்பேன். ‘’
’’திவாகர் தான் ரூமை டெய்லி கூட்டி வைப்பார். செருப்பு ஷூ வை எல்லாம் வரிசையா அடுக்கி வைப்பார். நாங்க துணியை கன்னா பின்னான்னு போட்டு வச்சிருப்போம் . முறையா இவர் தான் மடிச்சு வைப்பார்.’’ நான் அம்மாவிடம் சொன்னேன்.
‘’இப்பவும் அப்படித்தானா. ஒய்ஃப்க்கு வீட்டு வேலைல ஹெல்ப் பண்றது உண்டா’’
‘’முடிஞ்சத செய்வன்’’ என்றார் திவாகர்.
‘’ராஜராஜன் மட்டும் தான் திவாகரை ஒருமைல பேசுவான். நாங்க எப்போதும் கொஞ்சம் மரியாதையோடய அணுகுவோம்.’’
அம்மா கெட்டியாக இருந்த தயிறை வெட்டி எடுத்து எங்கள் இலையில் இட்டாள்.
இடது மூலையில் இருந்த உப்பை உணவுடன் சேர்த்துக் கொண்டார் திவாகர். இலையில் தயிர் சாதமும் ஊறுகாயும் மட்டும் இருந்தது.
‘’எனக்கு ஒரு கரண்டி சாம்பார் போடுங்க’’ என்றார் திவாகர்.
‘’பரவாயில்லயே கேட்டுட்டீங்களே’’
நாங்கள் ரெண்டு பேரும் சாப்பிட்டு எழுந்தோம்.
வாசல் சுவரில் ஒரு காகம் வந்தமர்ந்து மூன்று முறை கரைந்தது.
அம்மா அதற்கு எடுத்து வைத்திருந்த சோற்றுருண்டையை எடுத்துச் சென்று வைத்தாள்.
‘’ஏன் இன்னைக்கு லேட்?’’ அம்மா அதனிடம் கேட்டாள்.
அவள் கேள்விக்கு பதிலாக இரண்டு முறை கரைந்தது.
‘’இன்னைக்கு எங்க வீட்டுக்கு கெஸ்ட்’’ அம்மா சொன்னாள்.
’’அப்படியா’’ என ஒருமுறை கரைந்து விட்டு சோற்றினைக் கொத்த ஆரம்பித்தது.
திவாகரை வீட்டின் ஊஞ்சலில் அமரச் சொன்னேன். அவர் மறுத்தார். ஒரு பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்து வந்து போட்டேன். அதில் அமர்ந்து கொண்டார். நாற்காலியில் இரண்டு முறை கொஞ்சம் முன்னே வந்து அமர்ந்தார். சற்று பின்னால் சென்றார். அவர் நகர்வுகளில் ஒரு அசௌகர்யம் இருந்தது. ஆசுவாசமாக ஊஞ்சலில் அமருங்கள் எனச் சொன்னதை மீண்டும் வேண்டாம் என மறுத்தார்.
வெற்றிலை சீவல் தட்டைக் கொடுத்தேன்.
இரண்டு வெற்றிலையை சேர்த்து எடுத்து காம்பையும் நுனியையும் கிள்ளி டப்பாவில் இருந்த சுண்ணாம்பை மெல்ல வெற்றிலையின் பின்பக்கம் தடவி முதலில் கொஞ்சம் சீவலை வைத்து பின்னர் கொஞ்சம் சீவல் சேர்த்து மடித்து வாயில் போட்டுக் கொண்டார்.
‘’தமிழ்நாட்டுல பல பகுதிகள்ல சீவல்னா என்னன்னெ தெரியாது. அங்கல்லாம் பாக்குதான்’’
நான் ஆமோதித்தேன்.
அம்மா சாப்பிட்டு வந்து ஊஞ்சலில் அமர்ந்தாள். ’’அப்பா வர ரெண்டு நாளாகும். ஊர்ல அறுவடை நடக்குது. அவர் இருக்கணும் இல்ல இவன் இருக்கணும். உங்களைப் பாத்திருந்தா சந்தோஷப்பட்டிருப்பார்’’
‘’திவாகர் வீட்டுக்கு வந்தப்ப சகஜமா இருந்தீங்க. அப்புறம் கொஞ்சம் அன் ரெஸ்ட்டா ஃபீல் பண்ணீங்க’’ நான் திவாகரிடம் கேட்டேன்.
திவாகர் எதுவும் சொல்லாமல் இருந்தார்.
‘’உபசாரத்துல ஏதும் குறையா?’’ அம்மா கேட்டாள்.
‘’பிளீஸ் பிளீஸ் அதெல்லாம் இல்ல’’
சில கணங்கள் மௌனமாக இருந்தார்.
‘’எங்க அம்மா நல்லா சமைப்பாங்க. அவங்க லைஃப் அவங்க பிளானிங் எல்லாமே ரொம்ப ஆர்கனைஸ்டா இருக்கும். காலைல நாலரை மணிக்கு எழுந்திரிப்பாங்க. நாலு நாப்பதுக்கு தெருவுக்கு தண்ணி தெளிக்க கிணறு இறைக்கற சத்தம் கேக்கும். வீட்டுல மோட்டார் இருந்துச்சு. இருந்தாலும் கிணத்தில தான் தண்ணி இறைப்பாங்க. அந்த சத்தம் கேட்டதுமே தொழுவத்து மாடுங்க அம்மா அம்மான்னு கூப்பிடும். ரெண்டு பெரிய வாளில் தண்ணி எடுத்துப் போய் சாணம் கரைச்சு வாசல் தெளிப்பாங்க. ஒவ்வொரு கிழமைக்கு ஒவ்வொரு கோலம்னு போடுவாங்க. அந்த டிசைன்ல கொஞ்சம் சின்னதா பெரிசா மாத்திப்பாங்க. காலைல மாட்டுக்கு தண்ணி காட்டணும். வைக்கோல் எடுத்து போடணும். விடியறதுக்குள்ள குளிச்சிட்டு பக்கத்துல இருக்கற வினாயகர் கோயில்ல விளக்கு ஏத்திட்டு வருவாங்க. காலைல தினம் ஒரு மணி நேரம் ராமநாமம் சொல்லுவாங்க. காலைல 8 மணிக்கு சமையலை ஆரம்பிச்சாங்கன்னா 11 மணிக்கு சாப்பாடு ரெடியா இருக்கும். ‘’
வாசலில் ஒரு பெண் ’’அம்மா பசியா இருக்கும்மா’’ என்றாள்.
அம்மா சென்று அவளுக்கு சாப்பாடு போட்டு விட்டு வந்தாள். திவாகர் இன்னும் இரண்டு வெற்றிலைகளை மடித்து தாம்பூலம் போட்டார். அம்மா மீண்டும் ஊஞ்சலில் வந்து அமர்ந்தாள்.
திவாகர் எங்களைப் பார்த்து ‘’என்ன சொல்லிக்கிட்டு இருந்தன்?’’ என்று கேட்டார்.
அம்மா ‘’ 11 மணிக்கு சாப்பாடு ரெடியா இருக்கும்’’ என்றாள்.
’’ம் . அன்னைக்கு 10.45க்கு சாப்பாடு ரெடியா இருந்தது. அப்பா வயலுக்குச் சென்றவர் இன்னும் வரவில்லை. நான் அப்போது தான் வீட்டுக்கு வந்தேன். ‘தம்பி! கை கால் கழுவிட்டு வா சாப்பிடலாம்னு அம்மா சொன்னாங்க.’ நான் கிணத்தடில முகம் கழுவிட்டு வரேன். ஊஞ்சல் மெல்ல ஆடிட்டு இருந்தது. அம்மா அதுல தூங்கிட்டு இருந்தாங்க. அசதியா இருக்காங்கன்னுட்டு நான் அவங்களை எழுப்பாம சாப்பிட ஒக்கார்ரன். என்ன சாப்பாடுன்னு பாத்திரங்களோட மூடியைத் திறந்து பாக்கறன். சௌ சௌ சாம்பார். மிளகு ரசம். மாங்காய் பச்சடி. கூட்டு . பொறியல். இன்னைக்கு இங்க என்ன சமையலோ அதே சமையல். தட்டை எடுத்துப் போட்டுட்டு சாதம் போட்டுக்க போறேன். வாசல்ல ஒரு குரல். ‘’அம்மா பசிக்குதுன்னு’’. அம்மா எழுந்திடப் போறாங்கன்னு நான் எழுந்து போய் இதோ வரேன்னு சொல்லிட்டு சாதம் எடுத்துப் போடறன். யாசகத்துக்கு வந்த அந்த அம்மா ’’நீங்க நல்லா இருக்கனும்’’னு சத்தமா சொல்றாங்க. நான் அவங்களை அனுப்பிட்டு உள்ள வர்ரேன். ஊஞ்சல் நின்னு இருக்கு. அம்மா தோளைத் தொட்டு ‘’அம்மா அம்மா’’ன்னு கூப்படறன். அம்மா மூச்சு நின்னிருக்கு. ‘’
வீட்டு வாசலில் ஒரு காகம் வந்து கரைந்தது. பலமுறை கரைந்து கொண்டே இருந்தது. நாங்கள் மூவரும் மௌனமாக இருந்தோம்.
‘’அன்னைக்கு அம்மா செஞ்ச சாப்பாட்ட என்னால சாப்பிட முடியல. அம்மாவும் சாப்பிடலை. இன்னைக்கு உங்க வீட்ல செஞ்ச அதே டிஷ். ஒன்னு கூட மாத்தம் இல்லாம’’ திவாகர் சொல்லும் போது வாசலில் நிறுத்தாமல் கரைந்து கொண்டிருந்தது காகம்.
அம்மா கூட்டு , பொரியல் , சாம்பார், ரசம், மோர் என அனைத்தையும் ஒரு ஒரு கைப்பிடி உருட்டி வீட்டு சுவரில் வைத்தாள். காகம் அனைத்தையும் கொத்தி கொத்தி தின்றது.
***
The Crow metaphor has been exhibited organically. Descriptions regarding the dishes made me really hungry. Well crafted story overall. Looking forward for the next.