போன வருடம், ஆகஸ்ட் 4 ஆம் தேதி, பத்மா சச்தேவ் என்கிற டோக்ரி கவிதாயினி மற்றும் எழுத்தாளர், மும்பையில் காலமானார் என்ற செய்தியைப் படித்தேன். இவரை பற்றி தெரிந்துகொள்ள இணையத்தில் தேடியபோது கிடைத்த தகவலகள் சுவாரசியமானவை.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள தேவிகா நதிக்கரையில் அமைந்திருக்கும் பூர் மண்டல் என்கிற சிறு கிராமத்தில், ஏப்ரல் 17, 1940 இல் பத்மா பிறந்தார். இவருடைய தகப்பனார் பண்டிட் ஜய தேவ் சர்மா, கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
பால் பற்கள் விழுவதற்கும் முன்பாகவே, பத்மா, தன் தந்தையை இழந்தார். இந்திய- பாகிஸ்தான் பிரிவினையின்போது விழுந்த குண்டுகளில் ஒன்று அவரது தந்தையின் உயிரை பறித்துக் கொண்டது. பத்மாக்கு அப்போது ஆறு அல்லது ஏழு வயதிருக்கலாம். பத்மாவுக்கு இரண்டு இளைய சகோதரர்கள். கணவரின் இறப்புக்கு பிறகு செய்ய வேண்டிய சடங்குகளை முடிப்பதற்காக, ஒரு வருடம் கிராமத்தில் தங்கி விட்டு, குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்கிறகணவரது கனவை நிறைவேற்றுவதற்காக, பத்மாவின் தாயார், குழந்தைகளோடு ஜம்முவுக்கு குடிபெயர்ந்தார். அப்போது அவர் 22 அல்லது 23 வயதேயான இளம் விதவை. பாலைவனமெ ன எதிரில் விரிந்து கிடந்த வாழ்க்கையை, சிறுமி பத்மா தன் தாயாருடனும் சகோதரர்களுடனும் கடக்கத் துவங்கினார்.

இளம் வயதிலேயே பத்மாவுக்கு கவிதைகள் புனைவதில் பெரும் ஆர்வம் இருந்தது. டோலக் எனும் இசைக்கருவியை வாசித்த வாறே, சிறுமி பத்மா, தாளக்கட்டுக் கேற்ப சந்தங்களை கோர்த்து கவிதைகளை புனைவாரம். தன் வயதொத்த சிறுவர் சிறுமியர்களை ஒருங்கிணைத்து, நாடகங்களை எழுதி, ஜம்மு வானொலியில் நிகழ்ச்சிகள் தயாரித்து தந்திருக்கிறார். அதே ஜம்மு வானொலி நிலையத்தில், பின்னாட்களில் டோக்ரி மொழிச் செய்தி வாசிப்பாளராக தன் வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறார். இங்குதான் அவர் தன் கணவர் சர்தார் சுரேந்தர் சிங்கை சந்தித்திருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு, பத்மா தில்லி வானொலி நிலையத்தில் சில வருடங்கள் பணியாற்றிய பின், மும்பை வானொலி நிலையத்திலும் பணியாற்றியிருக்கிறார்.
உருது மற்றும் ஹிந்தி மொழிகளில் நல்ல புலமை பெற்றிருந்த பத்மா, எழுதத் தேர்ந்தெடுத்தது தனது தாய்மொழியான டோக்ரி மொழியையே. பத்மா சில ஹிந்தி திரைப்படங்களுக்கும் பாடல்கள்எழுதியிருக்கிறார்.
டோக்ரி மொழியின் முதல் பெண் கவிஞராக அறியப்படுகிற பத்மா, 1969 இல் வெளிவந்த அவரது “என் கவிதைகளும் என் பாடல்களும்” என்கிற தொகுப்புக்காக 1971 இல் சாகித்ய அகாடமி விருது பெற்றார். பத்மாவுக்கு இந்திய அரசு 2001 இல் பத்மஸ்ரீ விருதை அளித்து கௌரவித்தது. இதைத்தவிர கபீர் சம்மான், சரஸ்வதி சம்மான் போன்ற உயரிய விருதுகளாலும் பத்மா அலங்கரிக்கப்பட்டார். 2019 ல் பெருமை வாய்ந்த சாகித்ய அகாதமி ஃபெலோஷிப்பும் இவருக்கு வழங்கப்பட்டது.
இவரது புகழ் பெற்ற மற்ற படைப்புகள்:-
தாவி தே சனாப்
(தாவியிலிருந்து சனாப் வரை)
நேடியான் கலியான்
(குறுகிய பாதைகள்)
போட்டா போட்டா நிம்பல்
(சொட்டு சொட்டாய் மேகங்களற்ற வானம்)
உத்தர்வாஹினி
(வடக்கு நோக்கிப் பாயும் நதி)
அம்ராயி
(நேர்காணல்களின் தொகுப்பு)
சித் சித்தே
(நினைவலைகள்)
மேரி குல்லா கஹான்
( என் தொப்பி எங்கே)
பூந்த் பாவரி
(சுய சரிதை)
டோக்ரி மொழியை எட்டாம் பட்டியலில் இணைக்க, மற்ற டோக்ரி கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் ஒருங்கிணைத்து போராடியதில், பத்மா பெரும் பங்காற்றினர். டோக்ரி மொழியை உலக அளவில் கொண்டு செல்வதற்கும், டோக்ரி மொழியை தன் படைப்புகளால் செழுமைப்படுத்துவதிலும், பத்மா ஆற்றிய பங்கு ஒப்பில்லாதது. அதனால்தான், ‘டோக்ரி மொழியின் தாய்’ என டோக்ரி மொழி பேசுபவர்களால் பத்மா பெரிதும் கொண்டாடப்படுகிறார்.
இவரைப் பற்றிய விபரங்களை தேடிக்கொண்டிருந்த போது, என் கண்ணில் பட்டது அவருடைய “இன் பின்” (இவர்கள் இல்லையேல்) என்கிற நாவல். நினைவோடை வடிவில் எழுதப்பட்டிருந்த இந்நாவலின் சில பக்கங்கள் இணையத்தின் ஹிந்தி இலக்கிய தளம் ஒன்றில் படிக்கக் கிடைத்தன.
இந் நாவலின் முதல் அத்தியாயத்தில், பத்மா, உறவு முறையில் தனக்கு சகோதரரான லப்பூ அண்ணாவைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். அதில், அவரது குண விசேஷங்கள், வாழ்க்கையை அவர் அணுகிய விதம், பத்மாவின் தாயாருக்கு லப்பூ அண்ணாவின் மீது இருந்த கரிசனம் போன்றவை குறித்து விவரித்திருந்தார்.
முழு நாவலையும் படித்துவிட வேண்டும் என்கிற ஆர்வ மேலீட்டால், கான்பூரில் இருக்கும் பதிப்பகத்தாரை அணுகி, நாவலை தபால் மூலம் வரவழைத்து, படிக்க ஆரம்பித்தேன். படிக்கும்போதே, இதைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்கிற விருப்பமும் வளர்ந்தது. அப்படி ஆரம்பித்த முயற்சிதான் “இவர்கள் இல்லையேல்” என்கிற இந்தத்தொடர்.
இந்த நினைவோடை வடிவ நாவலில், நாவலாசிரியர், குடும்பங்களில் வேலை செய்ய வந்த வேலையாட்கள் பல வருடம் தொடர்ந்தார்கள், குடும்பத்தில் ஒருவராகவே மாறிப் போனார்கள், தேவைப்படுகையில் கருத்தோ அறிவுரையோ கூறுகிற, நெறிப்படுத்தும் நலலாசிரியர்களாகவும் ஆனார்கள் என்று விவரிக்கிறார். அவர்கள் கூடப் பயணித்திராவிடில், இந்த வாழ்க்கையை கடப்பதென்பது எவ்வளவு கடினமானதாக இருந்திருக்கும் என்றும் கூறுகிறார். இந்த பயணத்தில், ஆத்மார்த்தமாக இணைந்து பயணித்தவர்கள் என்றும் நினைவில் இருப்பார்கள்; பாதையிலிருந்து முன்னரோ அல்லது பின்னரோ நின்று விட்டவர்களின் நினைவுகள், இதயத்தின் ஒவ்வொரு மடிப்புக் கொள்ளும் பத்திரமாக பொதிந்து வைத்திருக்கிறேன். அவர்களை நன்றியோடு நினைவுகூரும் முயற்சியே இந்த நாவல் “என்று தெரிவிக்கிறார்.
கடந்த பன்னிரண்டு அத்தியாயங்களில் நீங்கள் சந்தித்தவர்களைத் தவிர, இன்னும் பலர், இந்த நினைவோடையில் தலைகாட்டி மின்னி மறைகிறார்கள். நேரம் காரணமாக, அனைவரையும் குறித்து எழுத இயலாமல் போனது ஒரு குறைதான்.
நாவலாசிரியரின் மூல நாவல், இருபதுக்கும் மேற்பட்ட வேலையாட்களை குறித்துப் பேசினாலும், சில அனுபவங்கள் திரும்பத் திரும்ப வருவது போல தோன்றியதால் அவற்றை என் மொழிபெயர்ப்பில் சேர்த்துக் கொள்ள முடியாமல் போனது. மேலும் சில பணியாட்கள், குறுகிய காலமே நாவலாசிரியரின் வீட்டில் பணிபுரிந்து சென்றிருக்கிறார்கள். நாவலை செம்மைப் படுத்துவதில் அவர்களது பங்களிப்பு மிகக் குறைவாகவே இருந்ததனால், இத்தகைய பாத்திரங்களை மொழிபெயர்ப்பில் சேர்க்கவில்லை. இருப்பினும், மூல நாவலில் நாவலாசிரியர் விவரித்தவற்றில், கிட்டத்தட்ட 90 சதவீதம், மொழிபெயர்ப்பில் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறேன்
பெரும்பாலான கதாபாத்திரங்கள், நாவலாசிரியரிடம் வந்து சேரும் போது, உலகத்தின் நீக்கு போக்கு எதுவும் அறியாத வெள்ளந்தியான பச்சை மண்ணாகத் தான் இருந்திக்கிறார்கள். நாட்பட நாட்பட, அவர்கள் புடம் போட்ட தங்கமாய் ஜொலிப்பது, வீட்டு எஜமானர்களின் அன்பாலும் கரிசனத்தாலும் தான். இவர்கள் வீட்டுப் பணியிலிருந்து விலகிய பிறகும், அவர்கள் தம் வாழ்க்கையை செவ்வனே வாழ்வதற்கான ஜீவனோபாயங் களை, நாவலாசிரியரும் அவரது கணவரும் அவர்களுக்கு அளிக்க முற்பட்டு அதில் பெருமளவுக்கு வெற்றியும் காண்கிறார்கள்.
தயிருக்காக பாலை உறை ஊற்றிய பின், அதை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்த பீஹார் சிறுவன், கணவன், திருமணம் கடந்த தகாத உறவில் சிக்கி சீரழிந்த போதிலும், அவன் குற்றமே செய்யத் தெரியாதவன் என்றும், எல்லாம் அந்த தட்டுவாணி சிறுக்கி தான் காரணம் என்னும் திட நம்பிக்கையுடன், கணவனை மாந்திரீகர்களிடமும் ஜோசியம் பார்ப்பவர்களும் கூட்டித்திரிந்து, அதில் கணிசமான பணத்தை இழந்த கமலா, நாவலாசிரியர் மீது கொண்ட அன்பின் காரணமாகவே மும்பையிலிருந்து இவர்களோடு தில்லி வந்த அல்கா, வீடு முழுவதையும் தன் சுட்டுவிரலால் சுழற்றிய, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எஜமானர்களை ஏமாற்றிய பிரதாப், கணவனை விட்டு விலகி வந்து, பின் பராமரித்து ஆதரவு தந்தவனையும் ஏமாற்றிவிட்டு ஓடிய தன்னலம் நிறைந்த விமலா, தெருவில் வேலை செய்கிற துப்புரவுத் தொழிலாளிகள் உட்பட எல்லோரையும் அன்போடு அழைத்து உணவு பரிமாறும், லக்கி எனும் இஸ்திரி போடும் பெண்மணி, தன்னைவிட பல வயது மூத்தவனுக்கு வலுக்கட்டாயமாக செய்து வைக்கப்பட்ட திருமணத்திலிருந்து ஓடிவந்த சகீனா, ” வேலை செய்யும்போது நீங்கள் என்னிடம் பேசினால் எனக்கு தொந்தரவாக இருக்கிறது. எனவே உங்களுக்கான தேநீரை நீங்களே தயாரித்துக் கொள்ளுங்கள்” என்று விகல்பம் இல்லாமல் சொன்ன கிஷோர், தன் சொந்த மாநிலத்துக்காரன் என்பதனாலேயே வீட்டுக்கு அழைத்து வந்து பராமரித்த பதினைந்து வயது ஜுகல் இப்படி எத்தனையோ பேர் ஆசிரியரின் வாழ்க்கையில் வந்து போகிறார்கள்.
மூல நாவலை ஹிந்தி மொழியில் படித்த கையோடு அதை மொழிபெயர்த்து, மேஜைக் கணினியோ மடிக்கணினியோ என்னிடம் இல்லாததால், தொலைபேசியில் இருக்கும் வாய்ஸ் ரெக்கார்டரின் உதவியுடன் உடனுக்குடன் எழுத்துப் பிரதியாக்கிக் கொள்வேன். சரியான ஒரு வார்த்தைக்காக அல்லது மூலத்துடன் ஒத்துப் போகிற சொலவடைகளுக்காக சில சமயம் பல நாட்கள் காத்திருந்திருக்கிறேன். மிகப் பொருத்தமான வார்த்தை கிடைத்தவுடன் அடைகிற சந்தோஷம் வார்த்தைகளில் விவரிக்க இயலாதது. என்னதான் கண்ணில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு, ஒரு முறைக்கு இரு முறையாகப் படித்து, பிழை திருத்தினாலும், குறும்புக்கார பிள்ளைகள் போல, எப்படியோ, அவை நுழைந்துவிட்டிருக்கக்கூடும். போதாததற்கு, ஆட்டோ கரெக்ட் அட்டகாசங்கள் தனி. நேசமான என்று உச்சரித்தால், அது மோசமான என்று தட்டச்சு செய்து விடும். சில சமயம் இரண்டு சுழி ன வுக்கும் மூன்று சுழி ண வுக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பும். எவ்வளவு கவனமாக இருந்தபோதிலும், சில பிழைகள் என்னை மீறி நிகழ்ந்திருக்கக்கூடும். அது என் குறையேயன்றி வேறேதுவுமில்லை.மன்னித்து மறப்பீர்களாக!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், ஜம்மு பகுதியில் பெரும்பாலானவர்களால் பேசப்படுவது டோக்ரி மொழியே. இமாச்சலப் பிரதேசத்திலி ருந்து ஆசாத் காஷ்மீர் வரை மக்கள் டோக்ரி மொழியை பரவலாக உபயோகப்படுத்துகிறார்கள். டோக்ரி, பாரம்பரிய தேவநாகரி எழுத்து முறையையே பயன்படுத்துவதாலும், பெரும்பாலான சொற்கள் பேச்சுவழக்கில் அதிகம் உபயோகிக்கப் படுவதாலும் பொருள் விளங்கிக் கொள்வதில் சிரமம் எதுவும் ஏற்படவில்லை.மேலும், டோக்ரி மொழிக்கு பஞ்சாபி மொழியின் சாயல் அதிகம் இருப்பதால், பஞ்சாபிச் சொற்களும், இந்திச் சொற்களும் பரவலாக உபயோகப்படுத்தப்படிருப்பதால், பொருள் விளங்கிக் கொள்வதிலும் மொழிபெயர்ப்பிலும் குறிப்பிடத்தக்க சவால்கள் எதையும்ம் எதிர்கொள்ள வேண்டி யிருக்கவில்லை.
ஆதரவற்றவர்களை அணைத்துக் கொள்ளும் குணம், பசித்த வயிற்றுக்கு உணவிடும் பரந்த மனம், தாயைப் போல பார்த்து பார்த்து சீனாவுக்கு சேகரித்த சீதன சாமான்கள், பின்னர் அவளுக்கு பிரசவம் பார்த்தது, வேலை செய்த பெண்களுக்கு புதுப்புடவை துணிகள் என திருமணத்துக்கு செலவு செய்வது, அன்பளிப்பு வழங்குவது, தவறு செய்கையில் உரிமையுடன் தட்டிக் கேட்பது, வாழ்க்கைக்கு வழி செய்து கொடுத்த காரணத்தினாலேயே அவர்களை அடிமை போல கருதாமல், இன்னும் சிறந்த வாழ்க்கை அவர்களுக்கு கிடைக்கையில், அவர்களை எந்த தயக்கமுமின்றி உற்சாகப்படுத்தி அனுப்புவது, ‘உங்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது பீஜி. நீங்கள் கண்ணாடி அணிந்துகொண்டு படிக்கவும் எழுதவும் மட்டும் செய்யுங்கள் அதுதான் உங்களால் முடியும்” என்று முகத்திற்கு எதிரே பளிச்சென்று சொல்லும் சாந்தா வையும் கட்டி அணைத்துக் கொண்டு அவளோடு சேர்ந்து சிரிக்க முடிவது என இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் நாவலாசிரியரை வழி நெடுக சிறு மின்னலென ஒளிர்ந்து, அடையாளம் காட்டும் சம்பவங்கள்.
இந்த நாவலைப் படித்து முடித்ததும், இதைபற்றி மூத்த எழுத்தாளரும் நண்பருமான இரா முருகன் சாரிடம் விரிவாக பேசினேன். அவர் உடனடியாக சொல்வனம் ஆசிரியர் குழுவைச் சார்ந்த பாஸ்டன் பாலாவை மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு என் விருப்பத்தை தெரிவித்தார். நண்பர் லலிதாராம் பாலாவின் தொடர்பு எண் தந்தார். குறுஞ்செய்தி ஒன்றை பாலாவுக்கு அனுப்பிவிட்டு காத்திருந்தேன். பாலா கட்டைவிரல் உயர்த்தி ஆதரவு தெரிவித்ததும் முதல் அத்தியாயத்தை எழுதி அனுப்பினேன். தொடர்ந்து எழுந்து படி பாலா உற்சாக வார்த்தைகள் கூறியதன் பேரில், மூல நாவலிலிருந்து, எனக்குப்பிடித்த/ என்னை பாதித்த பன்னிருவரை குறித்து எழுதத் தொடங்கினேன்.
இந்த நாவலை மொழிபெயர்க்க ஆரம்பித்த காலகட்டங்களில் நாவலாசிரியர் பத்மா சச்தேவின் ஆவி, என்னுள் கூடு விட்டு கூடு பாய்ந்தது போல உணர்ந்தேன். அவரோடு சிரித்தேன்; பிணங்கினேன்; ஒத்துக்கொண்டேன்; மறுத்தேன்; அழுதேன். நாவலாசிரியர் விவரித்த கதாபாத்திரங்கள், எனக்கும் நன்கு அறிமுகமானவர்கள் போலவே தோன்ற தொடங்கினார்கள். சில சமயம் அவர்கள் என்னோடு பேசினார்கள். சில சமயம் நான் அவர்களுடன் பேசினேன். சில சமயம் நாங்கள் பத்மாவுடன் பேசினோம். மொத்த மொழிபெயர்ப்பு முயற்சியின் போதும், ஒரு கொண்டாட்ட மனநிலையே தொடர்ந்து கொண்டிருந்தது என்பது கூடுதல் மகிழ்ச்சி.
மொத்தத்தில், இந்த நாவலை மொழிபெயர்த்தது, எனக்கு சுகானுபவமாக இருந்தது. நாமும் இது போன்ற ‘கடவுளால் படைத்து அனுப்பப்பட்ட விசேஷ மனிதர்களை’ நம் வாழ்க்கையிலோ அல்லது அடுத்தவர் வாழ்க்கையிலோ எப்போதாகிலும் சந்தித்திருப்போம் தானே!
wonderful right up. really traveled along with you. congrats