
ராமச்சந்திர ஐயர் இப்போதெல்லாம் ஹிந்துவில் மோடியைத் திட்டி வருகிற கட்டுரைகளைப் படித்து முடித்த பின் நேராகக் கல்யாண மாலைப் பக்கம் போய் விடுகிறார். வருகிற ஆவணிக்குக் குஞ்சம்மாளுக்கும் இருபது ஆகி விடும். ஜாதகக் கட்டை எடுத்து ஒரு வருஷத்துக்கு மேலே ஆகியும் பையன்களின் பெற்றோர்களது கடைக்கண் பார்வை இதுவரை அதன் மேல் விழவில்லை. அமெரிக்காவில் இருப்பவர்களிடம் சம்பளம் கார் வீடு எல்லாம் இருக்கின்றன. ஆனால் அவர்களால் அவற்றின் ஊடே சென்று விட்ட வயதைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. உள்ளூர்க்காரனிடம் வயதைத் தவிர வேறு எதுவும் இல்லையென்பதும் அவருக்குப் பிரச்சினையாக இருந்தது.
அவர் கண்ணை இடுக்கிக் கொண்டு ஒரு கோயமுத்தூர்ப் பையனின் விவரங்களைப் படித்துக் கொண்டிருந்த போது “இந்த சோமுக் கடன்காரனை எங்கே காணம்? வெளியிலே அனுப்பிச்சிருக்கேளா?” என்று கேட்டபடி ராஜம் வந்தாள்.
ஐயர் நிமிர்ந்து பார்த்தார். அவள் கையில் காப்பி டவரா டம்ளருடன் நின்றாள்.
“ஆமா. போஸ்ட்டாபீஸ்லே போயி நாலு கவர், ஸ்டாம்ப் எல்லாம் வாங்கிண்டு வான்னு அனுப்பிச்சிருக்கேன். காப்பியை தேவுகிட்டே கொண்டு போய்க் கொடுக்கணுமா?” என்று கேட்டார் ஆவி பறக்கும் காப்பியைப் பார்த்தபடி.
அப்போது குஞ்சம்மா அங்கே வந்தாள். “என்னம்மா காப்பியைக் கையிலே வச்சு தபஸ் பண்ணிண்டு இருக்கே?” என்று சிரித்தாள்.
“ஏய் குஞ்சு, இதைப் போய் தேவுகிட்டே குடுத்துட்டு வாயேன். இந்த சோமுவை உங்கப்பா வெளியிலே அனுப்பிச்சிருக்காராம்” என்றாள் ராஜம் அலுப்போடு.
ஐயர் “நன்னா இருக்கு. அவளை அனுப்பிச்சிண்டு. என்கிட்டே தா. நான் கொண்டு போய்க் கொடுத்துட்டு வரேன்” என்று எழுந்தார். குஞ்சம்மா அவரை ஆச்சரியத்துடன் பார்த்து விட்டுத் தண்ணீர் குடிக்க சமையல் கட்டுப் பக்கம் சென்றாள்.
அவர் ராஜத்திடம் “யாராவது வெடிமருந்து கிடங்குக்குள்ளே கேஸ் சிலிண்டர்களையும் பக்கத்திலே வச்சு அடுக்கிண்டிருப்பானா?” என்று கேட்டபடி காப்பித் தம்ளரை வாங்கிக் கொண்டு பாக்டரியை நோக்கி நடந்தார்.
தேவு அவர்கள் வீட்டை அடுத்து இருந்த அவர்களுடைய பாக்டரியில் வேலை பார்க்கிறான். காலையில் ஒரு காப்பி, மத்தியானம் சாப்பாடு, மாலையில் ஒரு காப்பி அவனுக்கு இங்கிருந்து போய் விடும். அவன் தனது அப்பா அம்மாவுடன் அடுத்த தெருவில்தான் இருக்கிறான். இரு குடும்பத்துக்கும் பதினைந்து வருஷத்துக்கு மேலாகப் பழக்கம். தேவுவின் அப்பா மகாலிங்கம் உள்ளூர் மில் ஒன்றில் சூப்பர்வைசராக வேலை பார்த்தார். ஐயர் அதே மில்லில் வேலை பார்த்த போது இருவருக்கும் பழக்கம் உண்டாயிற்று. சில வருஷங்கள் கழித்து ஐயர் வேலையை விட்டு விட்டு சொந்தத் தொழில் ஆரம்பித்து விட்டார். பள்ளிக்கூடங்களுக்கும் கல்லூரிகளுக்கும் தேவையான சாக்பீஸ்களை உற்பத்தி செய்து தரும் சிறிய பாக்டரி. தனக்கும் வயதாகிக் கொண்டு வருகிறதே என்று தனது ஒரே பையன் காமேச்வரனை ஐந்தாறு வருஷம் முன்பு பாக்டரி வேலையில் பழக்கி விட்டார். இப்போது அவன்தான் பாக்டரியை நடத்தி வருகிறான்.
தேவு காலேஜை முடித்து விட்டு ஆறு மாசம் வேலை கிடைக்காது தடுமாறிக் கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் காமேச்வரனிடம் வந்து “அண்ணா, நான் உங்க பாக்டரிலே வேலைக்குச் சேந்துக்கறேன்” என்றான்.
காமேச்வரன் அவனை ஏற இறங்கப் பார்த்தான். பேண்ட் ஷர்ட் என்று காலேஜ் பையனின் உடை. பளீரென்று திருத்தமாக இருந்தான்.
“விளையாடறயாடா தேவு?” என்று சிரித்தான் காமேச்வரன். “பாஸ் மாதிரி டிரஸ் பண்ணிண்டு எனக்கு முன்னாலே நிக்கறே? என்னைப் பார்” என்று தலையிலிருந்து கால்வரை ஒரு கோட்டை இழுப்பது போல ஒரு கையை உயர்த்தித் தாழ்த்தினான். கறுப்பு நிற அரை நிஜார். கைவைத்த பச்சைக் கலர் பனியன். தலை லேசாகக் கலந்திருக்கக் காமேச்வரனின் முகத்திலும் கைகளிலும் வியர்வை தெரிந்தது.
அவர்கள் அருகே இருந்த கோட்டை அடுப்பில் தீ உயர்ந்து எழுந்து படபடத்ததில் அதன் காந்தும் உஷ்ணம் இருவர் மீதும் பட்டது. பாக்டரியில் முக்கியமானது அடுப்பு வேலை. கோட்டை அடுப்புக்கு முன்னால் நின்று வேலை பார்க்க வேண்டும். வாட்ட சாட்டமான பெரிய இரும்பு வாணலியை – அதைத் தூக்கி வைக்க நாலு கை வேண்டும் – அடுப்பின் மேல் ஏற்றி ஜிப்சம் கல்லைப் போட்டு வறுக்க வேண்டும். ஆளுயரத்திற்கு எழும்பிச் சீறும் தீயின் ஜுவாலையின் முன்பு மணிக் கணக்கில் நின்று வறுத்துக் கொண்டே தீய வேண்டும்.
“அவ்வளவுதானே?” என்றபடி தேவு தனது கால்சட்டையையும் அரைக்கைச் சட்டையையும் கழற்றினான். இப்போது அவனும் அரை நிஜார் பனியனில்.
காமேச்வரன் திடுக்கிட்டு “டேய் டேய் என்னடா இது?” என்று பதறினான்.
ஒரு வாரத்தில் தேவு கோட்டை அடுப்பின் உக்கிரத்தின் முன் நிற்கப் பழகி விட்டான். ஆறுக்கு மூணு என்று நின்ற வாணலிக்குள் போட்ட ஜிப்சம் கற்களை விடாமல் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்க வேண்டும். பழுப்பு நிறத்தில் உள்ள ஜிப்சம் வெள்ளை நிறத்துக்கு மாற இரண்டு மணி நேரம் பிடிக்கும். ஐந்து நிமிஷத்துக்கு ஒரு முறை புரட்டிப் போடுவதற்கு இரும்புக் கரங்கள் வேண்டும் என்று ஒரு தடவை காமேச்வரன் சிரித்துக் கொண்டே தேவுவிடம் சொன்னான்.
பதினைந்து நாள்கள் போயிருக்கும். ஒரு நாள் காமேச்வரன் “நான் பேங்க் வரைக்கும் போய்க் கடன் பேப்பர்லே கையெழுத்து போட்டுட்டு வரேன்.
நான் வரதுக்கு ஒரு மணி ரெண்டு மணி ஆயிடும். நீ நேத்தி ராத்திரி வந்த ஜிப்சத்தை எடுத்து வறுக்க ஆரம்பிக்கறயா? எவ்வளவு முடியுமோ நீ பண்ணு. மொத்தம் நாலு ஏடு எடுக்கணும். ஏழெட்டு மணி நேரம் ஆகும். நான் வந்து உன்னோட சேந்துக்கறேன்” என்றான் தயக்கத்துடன்.
“எதுக்கு இவ்வளவு பண்ணிப் பண்ணி பேசறேள்? நீங்க போயிட்டு வாங்கோ. உங்க பாங்க் வேலை முடியறதுக்குக் கூட நாழியானாலும் பரவாயில்லே. நான் பாத்துக்கறேன். ” என்றான் தேவு.
ஆனால் காமேச்வரன் இடத்தை விட்டு நகராமல் நின்றான்.
“இதைப் பாத்தேளா?” என்று இரு கைகளையும் மடக்கிக் கண்டு சதையில் தெறித்து நின்ற புஜங்களைக் காட்டினான்.
“என்னதுடா இது?” என்றான் காமேச்வரன் திகைத்து.
“இரும்புக் கரங்கள்!” என்று சிரித்தான் தேவு.
அன்று காமேச்வரன் திரும்பி வரும் போது மூன்று மணியாகி விட்டது. பாக்டரியில் தேவுவைக் காணவில்லை. அணைந்திருந்த அடுப்பில் வறுபட்டிருந்த ஜிப்சம் வெள்ளை நிறத்துடன் லேசான புகையைக் கக்கிக் கொண்டிருந்தது. எங்கே போனான் இவன்? காமேச்வரன் ஆச்சரியத்துடனும் சற்றுக் குழப்பத்துடனும் வீட்டுக்குள் போனான். அங்கே தேவு சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
காமேச்வரனைப் பார்த்ததும் அவன் அம்மா “வா. வா. ஏது உனக்கு இவ்வளவு நாழியாயிடுத்து? நானும் இந்தப் பிள்ளையாண்டானையும் ஒரு மணிலேர்ந்து சாப்பிட வாடான்னு கூப்டுண்டு இருக்கேன். இதோ கை வேலையை முடிச்சிட்டு வந்துடறேன்னு இப்பதான் வந்தான்” என்றாள்.
தேவு காமேச்வரனைப் பார்த்து “மூணாவது ஏடு எடுக்கக் கொஞ்சம் நாழியாயிடுத்து” என்றான்.
“என்னது? மூணாவது ஏடா?” என்று காமேச்வரன் வாய் விட்டுக் கத்தி விட்டான். ராஜம் அவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.
“ரெண்டாவது ஏடு கூட எடுத்திருக்க மாட்டேன்னா நினைச்சிண்டு வந்தேன். மூணு முடிச்சிட்டயா?” என்றான் காமேச்வரன்.
“எமகாதகனா இருக்கானேடா?” என்று பூரித்துச் சொன்னாள் ராஜம்.
அந்த நாளுக்குப் பிறகு காமேச்வரன் பாக்டரியில் மாதத்தில் கழித்த தினங்கள் என்று கணக்குப் பார்த்தால் ஒரு கை விரல்களுக்கு கீழே இருந்தது. தேவுவும் அங்கு வேலைக்கு வந்து இரண்டு வருஷங்களாகப் போகிறது. தேவு வருவதற்கு முன்னால் காமேச்வரன்தான் தூத்துக்குடியிலிருந்து ஜிப்சம் வரவழைப்பது, பாக்டரியில் அடுப்பில் வதங்குவது, மில்லுக்கு எடுத்துக் கொண்டு போய்க் கல்லை மாவாக ஆக்குவது, சாக்பீஸ் தயாரிப்பது, வியாபார ஆர்டர்களை வாங்கி அவற்றை நிறைவேற்றுவது, கஸ்டமர்களிடம் இருந்து பணம் வசூலிப்பது என்று எல்லா வேலைகளையும் ஒரு ஒன் மேன் ஆர்மியாகச் செய்து சிரமப்பட்டுக் கொண்டிருந்தான். இப்போது தயாரிப்பு வேலை எல்லாம் தேவுவிடம் கொடுத்து விட்டதால் காமேச்வரனால் பல இடங்களுக்குப் போய் ஆர்டர்கள் பிடிப்பதற்கும், வர வேண்டிய பணங்களை வசூல் செய்வதற்கும் நிறைய நேரம் கிடைத்தது. சைக்கிளிலிருந்து காமேச்வரன் ஸ்கூட்டருக்கு மாற இது வியாபாரத்தின் முன்னேற்றத்துக்குப் பெரிய வழியை ஏற்படுத்திக் கொடுத்தது. தேவு காமேச்வரனின் வலது கையாக ஆகி விட்டான் என்று ஐயர் தன் குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்வார்.
ராமச்சந்திர ஐயர் பாக்டரியிலிருந்து வீட்டுக்குள் வந்த போது அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. மகாலிங்கம் ஹாலில் சோபாவில் உட்கார்ந்திருக்க ராஜம் அவருடன் பேசிக் கொண்டிருந்தாள்.
அவரை வரவேற்று ஐயர் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டார். எதற்கு இப்போது வந்திருக்கிறார் என்று ஒரு கேள்வி மூலையில் குடைந்தது. தேவுவுக்கு சம்பளத்தை ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் வந்திருக்கிறாரோ?
“வேலையெல்லாம் பாக்டரியில் நன்னாப் போயிண்டிருக்கா?” என்று கேட்டார் மகாலிங்கம்.
“தேவராஜ சுவாமிகள் புண்ணியத்தில் எல்லாம் நன்னா நடந்துண்டிருக்கு” என்றார் ஐயர்.
“எல்லாம் நீங்க அவனுக்குச் சொல்லிக் கொடுத்ததுதானே?”
“இருந்தாலும் சட்டுன்னு கிரஹிச்சிண்டு பண்ணனுமே. கஷ்டமான வேலைன்னு உடம்பு வளையனும். தெரிஞ்சுக்கணும்னு ஆசை இருக்கணும். இல்லியா? நேரம் காலம் பாக்காம உழைக்கறான். தேவு கெட்டிக்காரனா இருக்கறதாலே எல்லாம் அமைஞ்சு வந்திண்டிருக்கு” என்றார் ஐயர்.
ராஜம் இருவருக்கும் காப்பி கொண்டு வந்து கொடுத்தாள்.
“நீங்க உங்காத்துப் பிள்ளை மாதிரின்னா அவனைப் பாத்துண்டு இருக்கேள்” என்றார் மகாலிங்கம்.
“இன்னிக்கி என்ன ஒரே ஸ்தோத்தரமா பெஞ்சு தள்ளறேள்? எங்களுக்கு மூக்கடைக்கற மாதிரி இருக்கு” என்று சிரித்தார் ஐயர்.
“நீங்கதான் அவன் மேலே பெரிசா வரணும்னு ஆசீர்வாதம் பண்ணி அனுக்கிரகிக்கணும்” என்றார் மகாலிங்கம்.
அந்தப் பேச்சிலும் குரலிலும் ஏதோ ஓர் இழை தவறித் தடுமாறுவது போல இருந்தது ஐயருக்கு. அவர் மகாலிங்கத்தை உற்றுப் பார்த்தார்.
“சின்னதா அவனுக்கு ஒரு பாக்டரி போட்டுக் கொடுக்கலாம்னு மனசிலே பட்டது. அவனும் இங்க நன்னா வேலையைக் கத்துண்டதுனாலே பிராப்ளம் ஒண்ணும் இருக்காதுன்னு நினைக்கிறேன்” என்றார் மகாலிங்கம்.
ஐயருக்கு அடிவயிற்றில் கல் போட்டாற் போலிருந்தது. அவர் நம்ப முடியாமல் மகாலிங்கத்தைப் பார்த்தார்.
உள்ளேயிருந்து கேட்டுக் கொண்டிருந்த ராஜம் ஹாலில் வந்து நின்று கணவரைப் பார்த்தாள். அவள் கூடவே குஞ்சம்மாவும் வந்து நின்றாள்.
“மாலி, நீர் சொல்றதையெல்லாம் பாத்தா எல்லா ஏற்பாடும் ஏற்கனவே பண்ணிப்பிட்டீர் போல இருக்கே” என்றார் ஐயர்.
“ஐயையோ அதெல்லாம் ஒண்ணும் பண்ணலே. உங்க காதிலே போட்டு நீங்க ஓக்கேன்னு சொன்னாதான் மேலே பாக்கலாம்னு இருக்கேன்.
இன்னும் தேவுகிட்டே கூட ஒரு வார்த்தை சொல்லலே. நீங்க சரின்னா சொல்லலாம்னு இருக்கேன். புதூர்லே ஒரு ஷெட்டு என் மச்சினன் வச்சிருக்கான். ரொம்ப வருஷமா அது காலியாதான் இருக்கு. அத்திம்பேர் நீங்க உங்க பாக்டரிக்கு எடுத்துக்கோங்கோன்னு சொல்லியிருக்கான்” என்றார்.
“புதூரா? அவ்வளவு தூரத்திலா?” என்றாள் குஞ்சம்மா. ஐயர் அவளைப் பார்த்தார்.
“இங்கேன்னா வாடகையே ஆளைத் தூக்கிச் சாப்பிட்டுடுமே. போறாக்குறைக்கு ஃப்ரீயா இடம் கிடைக்கறதே பெரிய விஷயமாச்சே” என்றார் மகாலிங்கம்.
ஐயர் மகாலிங்கத்தைப் பார்த்து “தேவு ரொம்ப நல்ல பையன். அவனுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும்” என்றார்.
மகாலிங்கம் “உங்க கிட்டே வந்து கேக்கறதுக்கு கொஞ்சம் சங்கடப் பட்டுண்டேதான் வந்தேன். நீங்க பெரிய மனுஷான்னா பெரிய மனுஷாதான். எல்லாம் உங்கள் ஆசீர்வாதம். சரி, நான் பாக்டரிக்குப் போய் தேவுகிட்டே ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போறேன்” என்று விடை பெற்றார்.
அவர் போனதும் “என்ன இந்த மனுஷன் பெரிய கல்லா தலையிலே தூக்கிப் போட்டுட்டுப் போறது?” என்று ராஜம் கோபத்துடன் ஐயரைப் பார்த்துக் கேட்டாள்.
“சரி, பாக்கலாம். என்னதான் நடக்கப் போறதுன்னு” என்றார் ஐயர்.
“தேவு அவ்வளவு தூரம்லாம் போக மாட்டான்” என்றாள் குஞ்சம்மா.
ஐயர் அவளைப் பார்த்து “உனக்கெப்படித் தெரியும்?” என்று கேட்டார்.
“அவன்தான் ஒரு நா சொன்னான். போன வருஷம் அவ அப்பாவுக்கு மில்லிலே பிரமோஷன் கொடுத்துக் கப்பலூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணாளாம். ‘நீங்க வேணும்னா போங்கோ. இங்க நான் ரூம் பிடிச்சிண்டு பாக்டரியில் வேலை பாக்கறேன். எனக்கு வேலையும் காமேச்வரன் அண்ணா ஆத்து மனுஷாளையும் ரொம்பப் பிடிச்சிருக்கு. அவாளும் என்கிட்டே ஒட்டிக்க இருக்கா. நான் எங்கையும் வரலே’ன்னு சொல்லிட்டானாம்”” என்றபடி குஞ்சம்மா மாடியில் இருந்த தன் அறையைப் பார்க்கச் சென்றாள்.
ஐயர் யோசனையில் ஆழ்ந்தார்.
மறுநாள் காலையில் சோமு வேலைக்கு வந்த போது காமேச்வரன் அவனிடம் “தூத்துக்குடிலேர்ந்து ஜிப்சம் மூட்டை வந்திருக்காம். நீ என்கூட வா. ரெண்டு பேரும் லாரி ஆபீஸ்லேர்ந்து டெலிவரி எடுத்துண்டு வந்துடலாம்” என்று கூட்டிக் கொண்டு போனான்.
முதல் நாள் போலவே அவர் ஹாலில் ஹிந்து பேப்பரில் ஆழ்ந்து கிடந்த போது ராஜம் வந்தாள், “இன்னிக்கும் நீங்களே தேவுவுக்கு காப்பி கொண்டு போய்க் கொடுத்துட்டு வந்துடறேளா?” என்று சிரித்தாள்.
அவர் மாடியைப் பார்த்து “குஞ்சம்மா!” என்று கூப்பிட்டார்.
“என்னப்பா?” என்று கேட்டுக் கொண்டே அவள் கீழே இறங்கி வந்தாள்.
“இந்தக் காப்பியைக் கொஞ்சம் தேவுவுக்குக் கொடுத்திட்டு வாயேன்” என்று காப்பித் தம்ளரை அவளிடம் கொடுத்தார்.
***