அருந்ததி சுப்ரமணியம் கவிதைகள்

வீடு

எனக்கு ஒரு வீடு கொடுங்கள்
எனக்கு சொந்தமாக வேண்டாம்,
அறைகளுக்குள்ளும் புறமும் நான்
தடயமின்றி நழுவிச் செல்ல முடிவதாய்,
நீர்க் குழாய்களும்,
ஜன்னல் திரைகளின் நிறங்களும்,
படுக்கையருகில் சிதறிய புத்தகங்களும்
என் கவலை ஆகாதபடி.

இலேசாக நான் பாவிக்க முடியும் ஒரு வீடு,
நேற்றைய உரையாடல்கள்
அடைக்காத அறைகள், அவற்றில்
பிளவுகளை நிரப்ப என் தன்மை
உப்பத் தேவையின்றி.

சொந்தம் கொண்டாடினால் அன்னியமாகும்,
பார்வையிட மட்டும் நான் வந்தால்
உபசரிப்பு கிடைக்கும்,
ஒரு வீடு, இந்த உடம்பைப் போல்.

– ( Where I Live கவிதைத் தொகுப்பிலிருந்து)

***

இயற்கை வனப்பே பெண்ணாகும் போது
சாவித்துளை வழியே பார்த்திருந்த
எனக்கு எட்டு வயது

உள்ளே வரவேற்பறையில் என் அம்மாவைப் பார்த்தேன்
தன் செம்பருத்திப்பூ நிறப் பட்டுச் சேலை அணிந்தவளாய்,

மெல்லிய விரல்கள் இணக்கமாகப் பிடித்திருந்த
கண்ணாடிக் கிண்ணத்தில் பனிக்கட்டிகளிட்ட கோலா பானம்

சட்டென்று கூச்சமடைந்து விட்டேன்
ஏனெனில் அவளை இப்படிப் பார்த்ததில்லை.

நிச்சயமாக நான் அவளை நன்கறிந்தவள்–
நீல மல்மல்லின் சாந்தமான அலைவு,
மணிக்கட்டில் பல் பல்லாக மெலிதான தங்க வளையல்,
வலது மேல் புஜத்தில் ஒரு
மருவின் இதமான குவியம்,
அவளுடைய உயர்ந்து வளைந்த பாதங்கள்–
என்னை நான் அறிந்ததை விட மிக நன்றாகவே.

மேலும் அவள் குரலும் எனக்குத் தெரியும்
நீரோட்டம் போல் ஒலிக்கும் —
கோலாவில் மிதக்கும் ஐஸ் கட்டிகள்.

ஆனால் சாவித்துளை வழி காண்
வளர்ந்தவர்கள் கொண்டாட்டத்தில்
அவள் இனிமேலும்
வெறும் புவியியல் இல்லை.

கழுத்தை எப்படிச் சாய்க்க,
அவளின் சுழலும் பானத்தில்
ஒரு மிடறை எப்போது உறிஞ்ச
என்றறிந்தவளாக இருந்தாள்
நெருக்கடியெனும் சொற்களையும்
மத்தியமான குரல்களின், சாயம் பூசிய நகங்களின்
மொழியையும் புரிந்து கொண்டாள்

அவளை நான் இரவு முழுக்கப் பார்த்திருக்க முடிந்திருக்கும்.

அப்படித்தான் நான் கண்டு கொண்டேன்
எப்போதும் சாவித்துளைகள் காட்டுவன அதிகம்
வாசல் திறப்புகளைக் காட்டிலும்.

சுவரில் ஒரு சிறு பிளவு தான்
உங்களுக்குத் தேவை
ஓர் இணை பிரபஞ்சத்தில்
இடறி விழ என்று.

அம்மாக்கள் பெண்களே என்று.

(ஆசிரியரின் Love Without Story தொகுப்பில் இருந்து )

***

[தமிழாக்கம்: கோரா]

மூல ஆசிரியர் பற்றி:

அருந்ததி சுப்ரமணியம் : பரிசு பெற்ற இந்தியக் கவிஞர். இங்கிலீஷில் கவிதைத் தொகுப்புகள் மற்றும் உரைநடை இலக்கிய வகைகளில் 13 நூல்களை எழுதியிருக்கிறார். இவரது விரிவான பண்பாடு மற்றும் ஆன்மிக உள்ளடக்கம் கொண்ட உரைநடை எழுத்துகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. நவீன இலக்கிய உலகில் பல ஆண்டுகளாக, கலை இதழாளர், விமர்சகர், நிகழ்த்து-கலை பொறுப்பாளர், கவிதைத் தொகுப்பாளர் மற்றும் பதிப்பாசிரியர் எனக் கொண்டாடப் படுகிற பன்முக ஆளுமையாக இவர் இருந்து வருகிறார். “When God is a Traveller” என்னும் கவிதைத் தொகுப்புக்காக இவருக்கு சாகித்ய அகாடெமி விருது-2020 வழங்கப் பட்டது. இவர் பெற்ற பற்பல அனைத்துலக இலக்கிய விருதுகள் மற்றும் ஆய்வுக் கொடைகள் பற்றிய தகவல் தளம்:
https://arundhathisubramaniam.com/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.