யாயும் ஞாயும்

“யாயும் ஞாயும் யாரா கியரோ,
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்,
யானும் நீயும் எவ்வழி யறிதும், 
செம்புலப் பெயனீர் போல,
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.”
-செம்புலப் பெயனீரார் (குறுந்தொகை - 40)

காதல் வயப்பட்ட தமிழர்களில் பெரும்பான்மையினோர் அறிந்த இந்தப் பாடல், ஒன்றைக் குறிப்பால் உணர்த்துவதாக எனக்குத் தோன்றுகிறது. அறிமுகமற்ற, அந்தரங்கம் வெளியாகாத இரு நபர்களிடையே முகிழ்க்கும் அன்பை அது கொண்டாடுகிறது. இன்று இதே பாடல் இப்படி ஒலிக்கக்கூடும்.

“நம் அந்தரங்கங்கள் என ஒன்றுமில்லை
வலையரங்கத்தில் நம் இனம், மதம், மொழி
கேளிக்கை விருப்பங்கள், வங்கியின் கடவுச் சொல்
மண வாழ்க்கை, மன வாழ்க்கை இன்ன பிற
உலாவும் உலகத் தளத்தில் தொலைந்தது அது.”

தனிமையிலே இனிமை காண முடியுமா?

இன்று பலரும் சந்திக்கும் இடர் இதுதான். தனி மனித சுதந்திரம் அதிகம் பேசப்படும் காலத்தில் அவனது ‘தனிகள்’ பொதுவில் வருவது வியப்பான முரண்.

1990களின் தொடக்கத்தில் குறியீட்டு மொழி வல்லுனர்கள், அமெரிக்காவின் ‘தேசிய பாதுகாப்புத் துறை’ மேற்கொண்ட ‘கிளிப்பர் சிப்’ (Clipper Chip) செயல்முறைகளை எதிர்த்து இயக்கங்கள் தொடங்கினார்கள். இணையங்களைப் பயன்படுத்துவோரை கண்காணிப்பதற்காகப் பின் வாயில் வழியாக உள் நுழையும் தந்திரம் அந்த ‘கிளிப்பர் சிப்’. “உங்கள் அரசு உங்களை வேவு பார்க்கும் செய்கை இது. வலைத்தளங்கள் உங்களைப் பற்றிய விவரங்களைத் தகவல் அமைப்புகளாக மாற்றி வணிக நிறுவனங்களுக்கு விற்கின்றன என்றால், உங்கள் நடவடிக்கைகள் அனைத்தையும் ‘க்ளிப்பர் சிப்’ மூலம் அரசு கொந்துகிறது” என்றவர்கள் குறியீட்டு மொழி மேலும் வலிமை உள்ளதாக மாற வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டார்கள். கவசத்துடன் தான் நம் செய்திகள், உரையாடல்கள் பயணிக்கின்றன என்ற மாயையில் நாமிருக்க இந்திரன் கிழவனாகத் தந்திரமாக நடித்து கர்ணனின் கவசத்தைப் பெற்றுச் சென்றது போல அரசுகள் நம் கவசத்தைக் கழட்டின. என்ன ஒரு வித்தியாசம்-கவசம் பறிபோய்விட்டதென்று கர்ணனுக்குத் தெரியும்-அறிந்தே அதைத் தருகிறான்; நாமோ அப்பாவிகள். இருந்தும், வல்லுனர்கள் அரசிற்கு எதிராகப் போராடி, வழக்காடி, குறியீடுகளை செம்மையாக்கி, அரசின் பெரும் வலிமையைத் தகர்த்தார்கள். ஆயினும், இது போர்க்களத்தில் வென்று போரில் தோற்ற நிலைதான்.

இந்த நிபுணர்கள் சொல்வதும் கேட்பதும் ஒன்றுதான்- என் தகவல்களை நான் யாரிடம் பகிர வேண்டும் என்ற உரிமை எனக்கு உரித்தானது. கழுகுகளைப் போல் கூர்ந்து பார்க்கும் ஒற்றுத் துறைக்கோ, அதை ஊக்குவிக்கும் அரசிற்கோ இந்த உரிமையைத் தட்டிப் பறிக்கும் அதிகாரமில்லை.

தன் அந்தரங்கத்தைப் பேண விரும்பும் மனிதர்களால் கொண்டாடப்பட்ட ஒன்று 1993-ல் ஸ்டீபன் லெவி (Stephen Levy) ‘வொயர்ட்’டில் (Wired) எழுதிய கட்டுரை : “குறியீட்டு ஆர்வலர்கள் காணும் கனவு- எந்த ஒரு மனிதனும், அது அவனது மருத்துவ நிலையாக இருக்கட்டும், அல்லது கருத்தாக இருக்கட்டும், அவனாக விரும்பினாலொழிய அதைப் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படக் கூடாது; வலையில் உலவும் தகவல்களைக் கொத்தக் காத்திருப்பவர்களுக்கு அவை புகை மூட்டங்களாகிக் கரைந்துவிட வேண்டும்; உளவுக் கருவிகளே பாதுகாக்கும் கருவிகளாக வேண்டும்.”

இன்றைய நிலை அப்படியா இருக்கிறது?

பெரும் தொழில் நுட்ப நிறுவனங்களின் பலம் அதன் கண்காணிப்புத் திறனில் இருக்கிறது. நாம் அமெசானில் ஒரு பொருளை வாங்க நினைத்து தளத்திற்குச் சென்றால், ‘நீங்கள் சென்ற முறை இதை வாங்கினீர்கள்; இம்முறையும் உங்களுக்குத் தேவைப்படலாம்’ என்றோ, ‘நீங்கள் வாங்க நினைக்கும் பொருளை பலர் விரும்பி வாங்கியிருக்கிறார்கள்; அவர்கள் இத்துடன் இந்தச் சிலப் பொருட்களையும் வாங்கி தங்கள் வாழ்க்கைக்கு மதிப்பு கூட்டியுள்ளார்கள்’ என்றோ வலை விரிக்கிறது.

‘தகவல் அறியும் முழு உரிமை’ தேச பாதுகாப்பிற்கு அவசியம் என்று வாதத்தை மேம்போக்காக அமெரிக்க அங்கத்தினர் சபை நிராகரித்தாலும், ஜார்ஜ் ஆர்வெலின் 1984 நாவலின் கதாநாயகன் வின்ஸ்டென் ஸ்மித்தை மேற்கோள் காட்டி நீதிபதிகள், மனித மாண்பிற்கு அத்தகைய உரிமை எதிரானதென்று தீர்ப்பளித்திருந்தாலும், ‘நிழல் வரவு- செலவுத்’ திட்டம் அரசு மற்றும் அதன் துறைகளால் செயல்படுத்தப்பட்டுத் தான் வருகின்றது. உலகறிந்த ஒரு எடுத்துக்காட்டு- எட்வெர்ட் ஸ்னோடென். பத்து வருடங்களுக்கு மேலாகியும், லண்டன் நீதிமன்றம் அவர் அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்கு உட்பட வேண்டும் என்று சொல்லியும், மேல்முறையீடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அவர் வெளிக்கொணர்ந்தவை, அரசே அதன் மக்களை எப்படியெல்லாம் வேவு பார்த்தது என்பதைத்தான். இது ஏதோ அமெரிக்க அரசு மட்டும் மேற்கொள்ளும் நடவடிக்கையல்ல. ரஷ்யாவின் அலெக்ஸி நவால்னி (Alexi Navalny) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குறிப்பிட்ட வேதிப் பொருளை உபயோகித்து நவால்னியை இறக்கும் நிலைக்கு மிக அருகில் கொண்டு சென்றது யார்? 3இந்தியாவில் பெகாசஸ் (Pegasus) மேற்கொண்ட, மேற்கொள்ளும் ஒற்றறிதலும் நமக்குத் தெரிந்ததுதான். இஸ்ரேலைச் சார்ந்த ஒரு சிறு தொழில் நுட்பக் குழு என் எஸ் ஓ (NSO- Niv, Shalev and Omri –Founders). அதன் மென்பொருள் செயலியான பெகாசஸ் ஒற்றுக் கருவி, உங்கள் கைபேசி, அலைபேசி போன்ற மின்னணு சாதனங்களில் பரிமாறப்படும் தகவல்களை ஒத்தி எடுத்து பெரும்பாலும் அரசுகளுக்கு விற்றுவிடுகிறது. இராணுவம், மருத்துவம், வணிகம், மனித உரிமைக் கழகங்கள் ஆகியவைகளின் உட்தகவல்களை அதன் மூலம் அரசு பெற்றிருப்பதாக வெளியான செய்தியால் இந்திய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. ‘கண்காணிக்கும் அதிகாரம்’ தனி மனித சுதந்திரத்தை மீறும் செயலென்று கருத்துக் கூறிய உச்ச நீதி மன்றம், மூவர் கொண்ட ஒரு குழுவை இந்த வரம்பு மீறல்களைப் பற்றி விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறியுமாறு உத்தரவிட்டுள்ளது. அக்குழுவினர், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் தரப்புக்களைச் சொல்லி அந்தந்த மின்னணு சாதனங்களையும் தேவையெனில் சமர்ப்பிக்க வேண்டுமென்றும் சொல்லியுள்ளார்கள்.

உலகெங்கும் தன் ஒற்றர்களை அனுப்பி, அச்சுறுத்தியோ, உறவினரைப் பணயமாக வைத்தோ, சுமார் பத்தாயிரம் சீன தேசத்தினரை, சீனா வெவ்வேறு நாடுகளிலிருந்து தன் தலை நகருக்குக் கடத்தி வந்து, சீனாவின் தேசிய முறையில் விசாரித்துக் கொண்டிருக்கிறது.

முழு அதிகாரமுள்ள ஒரு அரசின் கைகளில் இத்தகைய உரிமையும் சேர்ந்தால் அது வட்ட வடிவச் சிறையில் இருக்கும் கைதிகளை எப்போதும் மோப்பமிடும் வசதியைத் தரும் ஒன்றாகிவிடும். சிறைகளை வட்ட வடிவத்தில் அமைத்து அதன் கீழ்ப்பகுதியில் சிறு சிறு அறைகளைக் கட்டிவிடுவார்கள். வட்டக்கட்டிடத்தின் மேல்பகுதியிலிருந்து பார்வையிடுவது வசதியாக இருக்கும். விளையாட்டு அரங்கங்கள் பல இவ்விதமாக அமைக்கப்படுகின்றன. மனித நேயம் மிக்கவரும், கலைஞருமான அய்வெய்வே (Ai Wei Wei) 2000 ஆண்டு வரை தன் வலைப்பூவில் சுதந்திரமாகத் தன் கருத்துக்களைச் சொல்லி வந்தார். ஆனால், அதை உளவறிந்த அரசு அவரை செயல்படமுடியாமல் செய்துவிட்டது. புகழ் பெற்ற டென்னிஸ் விளையாட்டு வீரங்கனையான பெங்க் ஷுவாயின் (Peng Shaui) நிலை என்ன என்று யாருக்குத் தெரியும்? ஃபலூன் காங்(க்) (Falun Gong) என்ற மத வழிபாட்டு முறையைப் பின்பற்றிய சீனர்களை அந்த அரசு, அமெரிக்காவின் சிஸ்கோ வடிவமைத்துத் தந்த ஒரு ‘அக்கினிச் சுவர்’ கொண்டு துப்பறிந்து கொடுமைப்படுத்தியது. அந்த மதத்தினரைக் கொன்று உறுப்புகளை அறுவடை செய்து மாற்று உறுப்புகள் தேவைப்படும் தேசியவாதிகளுக்குப் பொருத்தினார்கள் என்றும் செய்திகள் வந்தன. அந்தக் கோட்டையிலிருந்து உண்மைகள் வெளிவருவதில்லை. இன்று உய்குர் இனத்தினரின் நிலையும் இலை மறைவு காய் மறைவாகத்தான் உலகிற்குத் தெரிகிறது.

சுருக்கமாகச் சொல்வதென்றால் உங்களின் ஒவ்வொரு செயலும் கண்காணிக்கப்படுகின்றது; தேவையெனில் உங்களைத் கூறு போடலாம் எனத் தகவல் ஆதாரங்கள் திரட்டப்படுகின்றன. இது ஏதோ ‘டிஸ்டோபியன்’ அறிவியல் புனைவு என நினைத்தாலும் சரிதான்; ஆம், புனைவு நிஜமாகிறது. என்ன ஒன்று, நம்மால் அதன் ஆளுமையைச் சரிவரக் கணிக்க இயலாது. நம் கையைக் கொண்டே நம் கண்ணைக் குத்துவார்கள் என்பதை நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லையல்லவா?

குறியீட்டு மொழி வல்லுனர்கள் தனி மனிதத் தகவல்களை பாதுகாக்கும் முதல் போரில் முழுவதுமாக வெற்றியடையாவிட்டாலும், நம்பிக்கை நாயகர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

நாளை உதயமாகும் தனி உலகம்

zk-SNARKs என்ற தொழில் நுட்பம் அதை சாத்தியமாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. zk-SNARKs என்பது ‘ பூஜ்யத் தகவல்-வினைகளற்ற கருத்துப் பரிமாற்றம்’ என்பதின் சுருக்கம்; (zero-knowledge succinct non-interactive arguments of knowledge) மறைவறிவு என்னும் சொல்லால் சுட்டலாம் எனத் தோன்றுகிறது. இதை சற்று விளக்கமாகப் பார்க்கலாம். எதீரியம் நிலை-ஒன்றில் (Ethereum- Level 1) ‘ப்ளாஸ்மா’ (Plasma)வைப் பயன்படுத்துகிறார்கள். அதன் வேகம் இன்றைய வணிகப் பாய்ச்சல்களுக்குப் போதவில்லை. எதீரியம் நிலை-(Ethereum-Level 2) இரண்டில், நிரூபிக்கப்பட்ட பல தகவல்கள் தொகுக்கப்பட்டு நேரலையில் அந்தப் பரிமாற்றச் செயலை முழுதும் செய்யத் தேவையில்லாமல், எது இடம் பெற வேண்டுமோ அது மட்டுமே செய்யப்பட்டு விரைவு கூட்டப்படுகிறது. இந்தச் ‘சுருக்கும் சுருட்டல்’ (ZK- Rollups) பலப் பரிமாற்றங்களைச் சுருட்டி அவற்றிற்கு ஒரு குறியீட்டு மொழி நிரூபணத்தினை அளிக்கிறது. இந்த நிரூபணம்தான் ‘ஸ்னார்க்’ (Snark) என்று அழைக்கப்படுகிறது. அதாவது, உங்கள் செயல்களை யாரிடம் நீங்கள் பகிர்ந்து கொள்கிறீர்களோ, அவரைத் தவிர மற்றவர்களுக்கு அது பூஜ்யம் என்றே புலப்படும். இதில் மற்றொரு வசதியும் இருக்கிறது. கணக்குகள் குறியீட்டு அட்டவணைகளாகப் பதிவாகின்றன. ஒரு பரிமாற்றம் முன்னர் 32 ‘பைட்கள்’ (Bytes) எடுத்துக் கொண்டதென்றால், இதில் 4 ‘பைட்கள்’ போதும். எடுத்துக்காட்டாக ஒரே துறையில் இயங்கும் பல நிறுவனங்களின் அடிப்படைத் தகவல்கள் எண்ணிலக்கத்தில் தொகுக்கப்பட்டு சுருக்கப்படுகின்றன. அட்டவணைக் குறியீடு, நேர மற்றும் மின்சக்திப் பயன்பாட்டை குறைக்கும். அதிகளவில் மின்சக்தி உண்டு உருவாகி இயங்கும் தொடரேட்டுத் தொழில் நுட்பத்தில், இரு நிலைகளாகச் செயல்பாடுகள் பிரிந்துள்ளதால் மின்சக்தி விரையம் குறையும் (இதையே அடிப்படையாகக் கொண்டு ‘இன்டெல்’ என்ன செய்கிறது என்பதை இந்தக் கட்டுரையில் மற்றோர் இடத்தில் பார்க்கப் போகிறோம்.) இந்த பூஜ்ய மறைவறிவின் செயல்பாட்டால் ‘ப்ளாக்கை’ உறுதி செய்யத் தேவைப்படும் நேரம் வெகுவாகக் குறையும். நிலை இரண்டிலிருந்து நிலை ஒன்றிற்கு பணமனுப்புதல் விரைவில் நடக்கும். ஏனென்றால், உறுதி செய்யப்பட்ட பின்னரே இது பணப் பரிவர்த்தனை நிலைக்கு வருகிறது. பல பெரிய நிறுவனங்கள் பல்வேறு நாடுகளிலுள்ள அதே துறையைச் சேர்ந்த சிறுக் குழுமங்களை குறுக்கு மற்றும் நெடுக்கு வாட்டில் இணைப்பதில் இந்த நுட்பம் பயனுள்ளதாக இருக்கிறது.

பலருக்குத் தகவல் கசியாமலேயே, ஒருவர் தனக்கு இது தெரியும் என்று நிரூபிக்கும் வழி இது. புகைப்படலமாக, புதிராக இயங்கும் இது, யார், யாருக்கு, எத்தனை தொகை, எதற்காக அனுப்புகிறார் என்ற விவரங்களை வெளியிடாமல், பொதுத் தொடர் சங்கிலியில் அந்த வணிகத்தை மெய்ப்பித்த பிறகு, அந்தப் பணப் பரிமாற்றத்தை அனுமதிக்கும். உங்கள் வணிகம், நம்பிக்கையாக நடைபெறும்; உங்கள் பணமும் உறுதி செய்யப்படும். தனி நபர்களின் செயல்பாடு அவர்களுக்குள் மட்டுமே. ‘நிஞ்ஜா’ தான், பொது வெளியில் தான் உள்ளது; ஆனால், கண்களுக்குப் புலப்படாது. அந்த அருங்கலையில் அடங்கியுள்ளவை அவ்வளவு எளிதில் புலனாகிறதா என்ன?

அரசுகளின் நாணயங்களை அசைத்துப் பார்க்கும் இணைய நாணயங்கள், குறியீட்டு நாணயங்கள், இலக்க நாணயங்களில் ‘ஜிகேஷ்’ (ZCash) என்பது புது வரவு. பூஜ்ய அறிவின் (மறைவறிவு) ஒரு நிரூபணமாக, தனியாரின் குறியீட்டு நாணயமாக இது இருக்கிறது. புலப்படாத தன்மை பணத்திற்கு என்றுமே உண்டு. இன்னும் சில ஆண்டுகளில் அரசுகளே இலக்க நாணயங்களை, (Digital currency) இறையாண்மை கரன்சிகளாக (Sovereign Currency) அறிமுகம் செய்யும் என்பது திண்ணம். 08/11/2016ல் ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று இந்திய அரசாங்கம் அறிவித்தது; கையில் இருந்தவற்றை சட்டப்படி செல்லுபடியாகும் கரன்சியாக மாற்ற பொது மக்கள் வரிசையில் நின்றார்கள். அதைப் போல புழக்கத்தில் இருக்கும் பௌதீகப் பணத்தை செல்லாது என்று அறிவித்து இலக்க நாணயங்களை எந்தவொரு அரசும் தடாலடியாக அறிமுகம் செய்யக்கூடும். அரசிற்கு இலக்க நாணயங்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல. நம் இலக்க நாணயப் பரிவர்த்தனை அரசின் ஏடுகளில் பதிவாகிவிடும். எனவே, அதையும் மீற இந்த குறியீட்டு நாணயங்கள், முக்கியமாக ‘ஜிகேஷ்’ தேவை என்று அதன் தரப்பாளர்கள் சொல்கிறார்கள். இணையான ஒரு பொருளாதார உலகம். இதை நிழற்சந்தை எனச் சொன்னால் இவர்கள் சினமடைகிறார்கள்.

இந்த ‘மறைவறிவு’ பணத்தைத் தாண்டியும் பலவற்றைச் செய்யும் என்ற 1வினய் குப்தா, ‘குகையில் வாழ்ந்த மனிதன் விண்கப்பலில் செல்வது போல்’ என்று சொல்கிறார்.

நம்முடைய கடவுச் சொற்கள் எவ்வாறு தீயவர்களிடம் சென்று சேர்கிறது? நம்முடைய கணினி நேரடித் தாக்குதலுக்கு உள்ளாகி அவை களவாடப்படுவதில்லை. மையத்தில் சேமிக்கப்படுவதில், அத்தனை விவரங்களும் இருக்க, கொந்துவது சுலபமாக இருக்கிறது. அவ்வாறான மையச் சேமிப்பு இல்லையென்றால், ஒவ்வொன்றாய், ஒவ்வொன்றாய் கணினிகளைக் கொந்தித்தான் விவரங்கள் சேமிக்கப்பட வேண்டும். அதற்குள் காலம் கடந்துவிடும்.

தொடக்கத்தில் இந்த மறைவறிவுத் தொழில் நுட்பத்திற்கு சில சரிவுகள் சிந்திக்கப்பட்டன. ஒரு நம்பகமான அமைப்பு தேவையோ என்று அதன் அமைப்பாளர்கள் மிகப் பெரிய உருவாக்க நிகழ்வை ஏற்படுத்தி, தனியான சாவியைக் கொண்டு அமைப்பாளர்களே பின் வழியாக நுழைவார்களோ என்ற இயல்பான சந்தேகத்தைப் போக்கினார்கள். ஆனால், ஆய்வாளர்கள், நம்பிக்கை சார் அமைப்பு என்ற ஒன்றே இதற்குத் தேவையில்லை என்று சொல்லிவிட்டார்கள்.

இந்தத் தொடரில் எதீரியம் தொடரேட்டைப் (Ethereum- Blockchain) பற்றி நாம் பார்த்துக் கொண்டே வருகிறோம்.
அது பரவலாக்கப்பட்ட தொடரேட்டுத் தொழில் நுட்பம். அது மறைவறிவை அணைத்துக் கொண்டுள்ளது. அதன்மூலம் அது தன் செயல்பாடுகளை முன்னேற்றி, ஒரே நேரத்தில் பல பரிவர்த்தனைகளை அல்லது செயல்பாடுகளை நேரலையில் செய்யும் தேவையைக் குறைத்து தன் வேகத்தை அதிகரித்துக் கொண்டுள்ளது. எதீரியம்-2 இந்த மறைவறிவின் செயல்பாட்டுக் கட்டமைப்பில் வளர்கிறது.

இந்த மறைவறிவு முன்னர் குறியீட்டு மொழி வல்லுனர்கள் கண்ட கனவின் நிஜம். நான் பேச நினைப்பதெல்லாம், நான் பேச நினைப்பவரிடம், நான் விரும்பும் விதத்தில், காதோடு மட்டும் நான் ஒரு முறை சொல்ல, அது சேருமிடம் மட்டுமே சேர, என் அந்தரங்கம் காக்கப்படுகிறது. இது வெறும் மறைவறிவுடன் நிற்கத் தேவையில்லை; மேலும் வளரும், கூர்மை அடையும், கணக்குகள் காப்பாக அமையும்.

இத்தனை அளவிற்கு தனி மனித சுதந்திரத்தை அரசுகள் அனுமதிக்குமா? முறையான கட்டமைப்பின் அடிப்படையே ஆட்டம் கண்டுவிடுமல்லவா? குற்றவாளிகளை, குற்றச் செயல்களில் ஈடுபடும் சாத்தியங்கள் உள்ளவரை, பணத்திற்காக, தேச இறையாண்மைக்கு எதிராக செயல்படுபவரை, தகவல் கொந்தல்கள் செய்து பிணையப் பணம் பெறுபவரை எவ்வாறு தான் அடையாளம் காண்பது என்பது உளவுத் துறை மற்றும் தேசிய பாதுகாப்புத் துறையின் அர்த்தமுள்ள கவலைதான். அவர்கள் கட்டுப்பாடற்ற எல்லையற்ற தனி நபர் சுதந்திரத்தை எந்தக் காலத்திலும் வரவேற்கப்போவதில்லை. அவர்கள் ‘குற்றவாளிகளைப்’ பற்றி கவலைப்படுவதெல்லாம் சரிதான். ஆனால், இப்போது இருக்கும் அமைப்பு குற்றவாளிகள் இல்லாமல் செய்துவிடவில்லையே? குறியீட்டுத் தொழில் நுட்பத்தால் தான் குற்றவாளிகள் உருவாகுகிறார்கள் என்பது பெரிய அபத்தம். மனித நாகரீகத்தின் உடன் பிறப்பு குற்றங்களும் தான். அரசுகள் தடுக்கில் நுழைந்தால், குற்றத்தால் ஈர்க்கப்படுபவர்கள் கோலத்தில் நுழைகிறார்கள். இன்றிருக்கும் நிதி, வணிகம், இராணுவம், பாதுகாப்பு எதுவும் குற்றவாளிகளின் தாக்குதல்களிலிருந்து தப்பித்ததில்லை. எந்த விவரத்தையும் கேட்காத ஸ்விஸ் வங்கிகள், கொள்கை முடிவெடுக்கும் இடத்தில் ஒட்டுண்ணியாக இருந்து தங்கள் பங்குகளை வாங்கி, விற்கும் 2‘உள்ளிருக்கும் வியாபாரிகள்’, கிருமிகளை அனுப்பி அனைத்தையும் முடக்கும் சில நாடுகள் இவைகளையெல்லாம் இதுவரை தடுக்க முடிந்திருக்கிறதா? இதெல்லாம் அரசுகள் அறிந்தவைதான்; அவர்கள் பயம் கொள்வது மக்களைக் கட்டுக்குள் வைக்கும் அதிகாரம் பறிபோய்விடுமோ என்பதே. அந்தரங்கத்தைப் பேண விரும்புவர்கள் குற்றவாளிகளா என்ன?

ஆனால், எளிய மனிதர் இத்தகைய அந்தரங்கத்தைப் பற்றி என்ன நினைப்பார்? பெரும் இணையத் தொழில் நிறுவனங்கள், தங்கள் விவரங்களைக் கண்காணித்து, விற்று, இலாபம் சம்பாதிப்பதை அறிந்தாலும், அதை விளக்கும் காணொலிகளைப் பார்த்தாலும், அது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். ‘மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயம்?’ என்ற மனநிலை இந்தியர்களுக்கு என்றுமே உண்டு. மடியில் கனமிருந்தாலும், இல்லாதது போல் நடிக்கும் திறன் சில ஆள்வோரிடம் இருந்தாலும், அதையும் நம்பும் இந்தியப் பிரஜைகளும் உண்டு. கொள்கைப் பரப்பீட்டின் உள்ளடக்கம் தெரியாத இந்தியன், தன் அந்தரங்கத்தைப் பற்றி ஏன் கவலைப்படப் போகிறான்? காசு செலவிடத் தேவையில்லாத, காப்புறுதி அற்ற செயலிகள் போதும் அவனுக்கு.

ட்ரோஜன் குதிரை

பரிசுப் பொருளாக அந்தரங்கம்.

மூன்றாம் வலையையும், குறியீட்டு மொழி, நாணயம் ஆகியவற்றையும் சிந்திக்கும் ஆர்வலர்கள், மாற்றி யோசிக்க வேண்டிய நேரமிது. செயலிகளுக்கு முதன்மை கொடுத்து, அந்தரங்கத்தை புலப்படுத்தாமல் இயங்கச் செய்யும் வழிகள் தேவை. ஏனெனில், அது மதிப்புக் கூட்டுப் பொருளல்ல, அது மனித வாழ்வின் அடிப்படை உரிமை. (https://ethereum.org/en/developers/docs/scaling/layer-2-rollups – Dan Jeffries)

க்ரிப்டோவின் வளர்ச்சிக்கு என்ன செய்யலாம்?

 • தொடரேட்டுத் தொழில் நுட்பம்
 • மையமற்ற அதன் அணுகுமுறை
 • குறைந்த அளவு மின்சக்தி, விரைந்த அளவில் பரிவர்த்தனை
 • நாடு, இன, மொழி பேதமற்ற உலகத்திற்கான பொருளாதாரம்
 • எளிய வழி முறைகள், உரிய பாதுகாப்பு, நம்பிக்கை.

இந்தியாவில், ராஜஸ்தான், ஜெய்பூரில் ‘காற்று மாளிகை’ ஒன்று உள்ளது. அது காற்று மட்டும் வந்து போவதல்ல; உள்ளிருப்போர் உங்களைப் பார்ப்பார்கள், ஆனால், நீங்கள் பார்க்கப்படுவதே தெரியாது. என் ஜன்னல்கள் திறந்திருக்கும், நீங்கள் என்னைக் காண முடியாது.

அந்தரங்கம் புனிதமானதுதான். பொது வெளியில் அதன் தனித்தன்மை பாதுகாக்கவும் படவேண்டும். அதே நேரம் தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரனாகிவிட்டால் என்ன செய்வது? அரசின் ஒற்று நடவடிக்கைகள் முழுதுமாக நீக்கப்படுமானால், தனி மனிதர்களே வேறு பல அபாயங்களுக்கு உள்ளாகும் சூழல் வந்துவிடலாமல்லவா? அரசு என்பது இராணுவம், நிதி, பொது நலம் என்பது மட்டுமல்ல. அரசின் கண்காணிப்புகள் இல்லையெனில், நாட்டில் சட்டம், ஒழுங்கு நிலை குலையலாம்; இளைஞர்களை எளிதாக திசை மாற்றலாம்; போதை பழக்கத்திலோ இன்னபிறவற்றிலோ அவர்களின் சக்தியும், நேரமும், பணமும் வீணாகலாம். முக்கியமாக இணையக் கொந்தர்கள் இத்தகைய க்ரிப்டோ நாணயங்களில்தான் பிணைத் தொகையைக் கேட்கிறார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. ஒரு தமிழ் குறும்படத்தைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். ஆறாம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவன், மற்றொரு மாணவன் வைத்திருக்கும் கைக் கடிகாரத்தைத் திருடிவிடுகிறான். பொருளைக் காணவில்லை என்றதும் அனைத்து மாணவர்களின் காற்சட்டைப் பைகள் சோதனையிடப்படுகின்றன. அனைவரும் தங்கள் கைக்குட்டையால் கண்களை கட்டிக் கொள்ள வேண்டும். ஆசிரியரும் அவ்வாறே கண்களைக் கட்டிக்கொண்டு சோதனை செய்கிறார். பொருளைக் கண்டுபிடித்தாலும், அவன் யாரென்றே சொல்லாமல், கடிகாரம் உரிய மாணவனிடம் சேர்ப்பிக்கப்ப்டுகிறது. திருடியவனைத் தவிர யாருக்கும் செய்தவன் யாரெனத் தெரியாது. அந்த வகுப்பில் இருந்தவர்கள் அனைவரும் தான் சோதிக்கப்பட்டார்கள். ஆனால், திருடனை வெளிப்படுத்தாமல் செயல்பட்டதில் அந்த ஆசிரியர் அவனை வெட்கப்படச் செய்து திருத்தியும் விடுகிறார். அவன் தவற்றை உணர்கிறான். கண்களைக் கட்டிக் கொண்ட ஆசிரியரைப் போல அரசு செயல்படுமா என்பதுதான் கேள்வி. செயல்பட்டால் நலம் என்பது பெருங்கனவோ? தேங்கிக்கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் விதமாக, 2021 குளிர்கால கூட்டத் தொடரில் இந்திய அரசு ஒரு நடுவரங்க (Arbitration) மசோதாவைத் தாக்கல் செய்துள்ளது. முன்னரே இருக்கும் சட்டத்தைச் சீரமைப்பது நோக்கம். இதன்மூலம் குடிமையியல் குற்ற வழக்குகள் தீர்க்கப் படலாம்; பாதிக்கப்பட்டவரின் ஒப்புதலுடன் 43 கிரிமினல் குற்றங்கள் திரும்பப் பெறவும், நீதிமன்ற அனுமதியுடன் மேலும் 13 கிரிமினல் குற்றங்கள் திரும்பப் பெறவும் இது வழிகாட்டுகிறது. செங்கோல் வளையாமல், இறையாண்மைக்குக் கேடு வராமல் அரசுகள் நடந்து கொண்டால் அது அந்தரங்கத்தில் தேவையற்று உள் நுழைகிறது எனப் பெரும்பான்மையான மனிதர்கள் சொல்ல மாட்டார்கள்.

இந்தச் சிக்கலை சரி, தவறு என்று இரு நேரெதிர் கோணங்களில் மட்டும் பார்க்க முடியாது. ‘பூரண சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ?’ என்று பாடிய பாரதி சொன்னது இந்தியர்களே, இந்தியாவை, இந்தியர்களுக்காக ஆளவேண்டும் என்பதுதான். ‘எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல் அறிதல் வேந்தன் தொழில்.’ என்று சொல்கிறார் திருவள்ளுவர். ஒன்று நிச்சயமாகச் சொல்லலாம்- குடி உயரக் கோல் உயரும்.

பிட்காயினும் எல் சால்வடோரும்

பிட்காயினை செல்லுபடியாகும் நாணயமாக அனுமதித்துள்ள எல் சல்வடோரின் நிலையைச் சற்று பார்ப்போமா?

பிட்காயின் எதிர்ப்பாளர்கள், அரசின் சட்டம் அராஜகமானது என்று சொல்கிறார்கள். பிட்காயினை மறுப்பதாக வணிகர்களின் மேல் எந்தக் குற்றச்சாட்டும் பதிவாகவில்லை. ஆனால், புகழ் பெற்ற பொலோ கேம்பரோ உணவகங்கள் (Pollo Campero Restaurants) பிட்காயினை ஏற்க மறுப்பதாக மக்கள் சொல்கிறார்கள். அரசின் சட்டம் சுருக்கமாக இப்படிச் சொல்கிறது:

 • அனைவருக்கும் பொதுவான சட்டம் இது.
 • பிட்காயினுக்கும், அமெரிக்க டாலருக்குமான பரிவர்த்தனை மதிப்பு வெளிப்படையாக சந்தையில் நிர்ணயிக்கப்படுகிறது. அதில் இலாபம் அடையும் ஒருவர் சொத்து மூலதன அதிகரிப்பிற்கான வரி செலுத்தத் தேவையில்லை.
 • விலைப்பட்டியல் பிட்காயினில் சொல்லப்படலாம்
 • வரிகளை அதில் செலுத்தலாம்.
 • தானியங்கிகளாகவும், உடனடித் தன்மையுடனும் பரிவர்த்தனை நடைபெற தேவையானக் கட்டமைப்பை அரசு செய்யும். தனியார் அதற்கான தேர்வு வசதிகளை அமைப்பார்கள்.
 • பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பணம் பிட்காயினில் வழங்கப்பட வேண்டும்.

இதில் கடைசியில் குறிப்பிடப்பட்டுள்ள விதியைத் தான் பிட்காயின் எதிர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டி அரசு அனாவசியமாக இடையூறு செய்கிறது என்கிறார்கள்.

ஆதரவாளர்களின் எண்ணமோ வேறாக இருக்கிறது.

வங்கிக் கணக்கு, உரிமம், வணிகக்காப்புச் சான்றிதழ்கள், வியாபார அனுமதி போல பிட்காயினும் ஒரு தேவை. அது, நாளய உலகிற்கு குடிமக்களைத் தயார் செய்யும் ஒன்று என்பது அவர்களின் வாதம்.

தன் ‘ஷிவோ’ (Chivo) செயலியைத் தான் வணிகர்கள் பயன்படுத்த வேண்டுமென்று அரசு கட்டாயப்படுத்தவில்லை. ‘ஷிவோவை’ பயன்படுத்துவோருக்கு $30 ஊக்கத் தொகை தருவதாக அரசு அறிவித்திருக்கிறது. விற்பனை நடைபெறும் அங்காடிகளில், வணிகர்கள், ‘பே சீ’, (PaySea) ‘ஓபன் நோட்’ (Open node) போன்ற செயலிகளைப் பயன்படுத்தலாம். இச்செயலிகள் பிட்காயினுக்கும், அமெரிக்க டாலருக்குமான பண விகித மாற்றத்தை உடனடியாகச் செய்துவிடும் திறன் கொண்டவை. ‘ஷிவோ’ ஒரு சவலைக் குழந்தை. https://www.nasdaq.com/articles/despite-criticisms-el-salvador-is-not-forcing-its-citizens-to-use-bitcoin – guest post by Jamie Garcia

‘ஆசிக் சிப்’ (ASIC chip)

குறைவான மின்னழுத்தத்தில் நிறைவான செயல்திறன் என்ற வாக்கியத்துடன் பிட்காயின் சுரங்க வேலைகளை எளிதாக்க ‘இன்டெல்’ (Intel) களமிறங்கியுள்ளது.

அதென்ன ஆசிக்? ASIC — (application-specific integrated circuit) குறிப்பிட்ட செயல்பாட்டிற்கான ஒருங்கிணைக்கப்பட்ட இந்த கணினித் துண்டு, பிட்காயின் சுரங்கச் செயல்பாடுகளில் ஈடுபடும் கணினிகளில் மையப் பங்காற்றும். பிப்ரவரியில் இதற்கான ஒரு மாநாடும் நடைபெறவிருக்கிறது. BZM2 என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த சிப்பை வாங்குவதற்கு ‘க்ரிட்’ (GRIID) என்ற குழுமம் முன்வந்து அதற்குரிய தகவல்களை பங்குப் பரிவர்த்தனை மையத்தில் பதிவு செய்திருக்கிறது. ஒஹையோவைச் சேர்ந்த இக்குழுமம் பொதுப் பங்குக் குழுமமாகிறது. நியூயார்க் பங்குக் கேந்திரத்தில் அதற்கான அறிக்கைகள் பதிவாகிவிட்டன. ஆசிக்சிப் என்ற இன்டெலின் ‘பொனென்சா- செல்வச் செழிப்பு எம் இரண்டு’ (BZM2) தொழில் நுட்ப கணினித் துண்டுகளின் கால்பங்கு உற்பத்தியை ‘க்ரிட்’ வாங்கும். இந்த ஒப்பந்தம் 2025 வரைக்குமானது. இதையெல்லாம் சொல்வதற்கு ஒரு காரணமுண்டு. அது குறியீட்டு நாணயங்களின் வளர்ச்சியும், அதில் ‘இன்டெல்’ போன்ற நிறுவனங்கள் ஈடுபடுவதும் இந்தியாவின் கவனத்திற்கு வர வேண்டும் என்பதுதான். மிகச் சமீபத்தில் இந்திய அரசு குறைக்கடத்தி சிப் (Semi conductor Chips) தொழிற்சாலைகளை இந்தியாவில் நிறுவுவதற்கு பன்னாட்டு வணிகர்களை அழைத்திருக்கிறது; பல சலுகைகளையும் அறிவித்திருக்கிறது. ‘இன்டெல்’ மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து எவரும் போகாவிட்டாலும், அதை நமது அறிவியல் அமைப்புகளில் காணொலியாகவாவது பார்க்கும் முயற்சிகள் நடை பெற்றால் நலமே. (https://www.nasdaq.cm/articles/intel-to-launch-bitcoin-mining-chip)

NFT ( மெய்யுரு) உலகில் எந்தெந்த நாட்டினரிடத்தில் அதிக அளவில் இருக்கிறது?

கீழே இருக்கும் அட்டவணையைப் பாருங்கள். நாம் எதிர்பாராத தேசத்தினர் குறியீட்டுத் தொழில் நுட்ப ஆவலர்களாக வளர்ந்து வருவது வியப்பளிக்கிறது.

இது செப், 2021ல் வெளியான தகவல். நீல நிறத்தில் காணப்படுவது ஏற்கெனவே ‘மெய்யுருக்களில்’ முதலீடு செய்தவர்கள்; கறு நிறம் அத்தகைய முதலீடுகளைச் செய்வதற்கு இப்போது திட்டமிடுபவர்களைப் பற்றியது. (https://www.statista.com/statistics/1278047/global-nft-adoption-by-country/)

நம் நாட்டின் பெயர் இதில் காணப்படவில்லை. ஆனால், இந்தியர்கள் குறியீட்டு நாணயங்களில் அதிகமாக முதலீடுகளைச் செய்துள்ளனர் என்பதை இத் தொடரில் முன்னரே பார்த்தோம். முகநூலின் ‘மெடாவர்ஸ்’ வடிவில், தமிழ் நாட்டில் திருமண வரவேற்பு ஒன்று நடை பெறப் போவதைப் பார்ப்போமா?

தினேஷ், ஜனகநன்தினி இருவரும் தங்கள் திருமணம் முடிந்த பிறகு ஒரு ‘மெடாவர்ஸ்’ வரவேற்பை அவதாரங்களாக நிகழ்த்தவிருக்கிறார்கள். அதில் மணப்பெண்ணின் இறந்துவிட்ட தந்தையும் வடிவெடுத்து வந்து அவர்களை ஆசீர்வதிக்கப்போகிறார். விருந்தினர்கள் நிகழ்வில் அவதாரங்களாகவோ அல்லது அப்படி அப்படியேவோ இணையலாம். இதற்கான இசையை வடிவமைத்துத் தருபவர் எம் எஸ் க்ருஷ்ணா. இதில் இயங்குகலையைப் பயன்படுத்தி கதை சொல்லப் போகிறார் அதிதி ஹரிகுமார். (ஒரு அழைப்பிதழ் நமக்கெல்லாம் தரலாமே? ஊரிலே கல்யாணம், மாரிலே சந்தனம் என்று சொல்வார்கள்!)

க்ரிப்டோ நாணயங்களின் மதிப்பும், பங்கு வர்த்தகமும்

Cryptocurrencies

AS OF DATA AS OF JAN 25, 2022 1:42 AM ET

SymbolNameChange
BTCBitcoin1.97%1.97%
ETHEthereum2.94%2.94%
XRPRipple2.30%2.30%
BCHBitcoin Cash1.31%1.31%
ADACardano4.09%4.09%
LTCLitecoin1.39%1.39%
XEMNEM1.42%1.42%
XLMStellar0.76%0.76%
EOSEOS1.59%1.59%
NEONEO1.21%1.21%
MIOTAIOTA2.25%2.25%
DASHDash8.79%8.79%
XMRMonero5.25%5.25%
TRXTRON1.26%1.26%
XTZTezos

https://www.nasdaq.com/market-activity/cryptocurrency

நம்முடைய அரசு அங்கீகரித்த தேசிய நாணயங்களின் மதிப்பு எவ்வாறு உலகப் பொருளாதார, வட்டி விகித, நிலைகளைச் சார்ந்துள்ளதோ அதைப் போலத்தான் குறியீட்டு நாணயங்களின் சந்தை நிலவரமும் இருக்கும். ஹோர்ஹே லுயிஸ் போர்கஸ் ஒரு முறை சொன்னார்: கற்களில் எதுவும் கட்டப்படவில்லை; மண்ணில் கட்டப்பட்டதை கல்லில் கட்டப்பட்டதாகக் காட்டுகிறோம்.

நவம்பர் 2021ல் உச்சத்தைத் தொட்ட பிட்காயின்-(BTC), எதீரியம் (ETH) சரிவைச் சந்தித்து வருகின்றன. எதீரியுமும், சொலோனாவும் 20% வீழ்ந்துபட்டதென்றால், அதினிலும் பெரிய சரிவை 2018க்குப் பிறகு பிட்காயின் சந்தித்துள்ளது. இந்த நாணயங்களில் பங்கு வர்த்தகம் நடை பெறும் அமைப்புகள் சொல்கின்றன’ ‘பல முதலீடுகள் ‘மெய்யுருக்களை’ நோக்கியும், ‘பெறப்படும் அல்லது இதனால் தோற்றுவிக்கப்படும் வர்த்தகம்’ (Derivatives) நோக்கியும் பயணமாகின்றன.’ குறியீட்டு நாணயச் சந்தையில், இத்தகைய நாணய வகைமைகள் அதிகரித்துள்ளதும் ஒரு காரணம். காத்திருக்கும் நேரம் அதிகரிப்பதும், இதன் மூலம் வணிகம் செய்வதற்கு செலுத்தப்பட வேண்டிய தொகையும் அதிகரிப்பதும் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

இதை விளக்கிக் கொள்ள ஒரு தகவலைப் பார்ப்போம். ‘மைக்ரோ ஸ்ட்ரேடிஜி’யின் பங்குகள் 33% சரிந்துள்ளன. செப்டம்பர் 2020ல் பிட்காயின்களில் தன் முதலீடுகளை அதிகரித்தது இந்தக் குழுமம். சென்ற பத்து நாட்களில் பிட்காயினின் மதிப்பு $35000க்கும் கீழே சரிந்தது. இதனால், அதிக பாதிப்பிற்குள்ளான ‘மைக்ரோ ஸ்ட்ரேடிஜி’ ஒரு தில்லாலங்கடி வேலை செய்தது. பிட்காயின் வீழ்ந்துபட்டதால் ஏற்பட்ட நஷ்டத்தை ‘பொது கணக்குத் தர நிர்ணயத்தின் படி’ கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், ஒரு குறிப்பாக வெளியிட்டது. அதாவது ‘பொது கணக்குத் தர நிர்ணயத்தின் பாற்படாதவற்றில் பிட்காயின் சரிவினால் உண்டான நஷ்டத்தைக் கணக்கிடுதல் சரியான முறையில்லை என்று பங்கு பத்திர பரிவர்த்தனைக் கேந்திரம் சொல்லிவிட்டது. குழுமம் அதன்படி நேர் செய்யப்பட்ட கணக்கை பதிவிட்டுள்ளது. https://www.marketwatch.com/articles/microstrategy-stock-sec-bitcoin-accounting-51643030920?mod=cryptocurrencies.

இந்தியாவிலும் இந்த நாணயங்களின் பங்குச் சந்தை இருக்கிறது. அடுத்த கட்டுரையில் அதைப் பற்றிப் பார்ப்போம்.

Series Navigation<< வெப் -3 (Web-3)பொன்மான் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.