- மொபைல் தொடர்பாடல் வரலாறு – பகுதி 1 (0G & 1G)
- மொபைல் தொடர்பாடல் வரலாறு-2G
- மொபைல் தொடர்பாடல் வரலாறு- பகுதி 3- 3G
அத்தியாயம் -1: 3G தொழில் நுட்ப உருவாக்கம்
1.1 பின்புலம்:
1.1.1. 2G யின் போதாமைகள்
மொபைல் உரையாடலும் இணைய (இன்டர்நெட்) அணுக்கமும் மக்களின் நன்மதிப்பைப் பெற்று விட்ட நிலையில் அது மொபைல் இன்டர்நெட் சேவையாக ஒருங்கிணைய நேர்ந்தது காலத்தின் கட்டாயம். 2G அமைப்பு, உரையாடலுக்கு உகந்ததாக வடிவமைக்கப் பட்டிருந்தது. 2G யின் தொடக்க நிலை மின்னஞ்சல் மற்றும் இணையம்-சார் சேவைகளால் மக்கள் பெரும் பயனடைந்துவிடவில்லை. ஏனெனில் 2G காலகட்ட அலைபேசிகள் சிறிய காட்சித் திரை, நெருக்கமான விசைப் பலகை மற்றும் குறை திறன் மின்கலம் ஆகியவற்றையே கொண்டிருந்தன. அவை தொலை பேசி உரையாடல் மற்றும் குறுஞ்செய்தி அனுப்புதல் போன்ற பயன்பாடுகளுக்காகவே வடிவமைக்கப் பட்டவை.
தரவு சேவைகள் 9.6 kbps என்ற அதிகபட்ச வேகத்திலேயே இயங்க முடிந்தது. இடைநிலைத் தொழில் நுட்பங்களான 2.5G (1995)மற்றும் 2.75G (1997) முறையே அதிக பட்சம் 115.2kbps, 384kbps தரவு வேகங்களைக் கொடுக்க முடிந்தது. 1999-ல் வெளிப்பட்ட ப்ளாக்பெர்ரி (BlackBerry) மொபைல் கருவிகள், மின்னஞ்சல் சேவைக்கு உகந்ததாக வடிவமைக்கப் பட்டிருந்ததால் மிக மேன்மையான அலுவல் கருவியாகக் கருதப் பட்டு பெரு வணிக நிர்வாகிகள் கைகளில் தவழ்ந்தன. இது குறிப்பிடத்தக்க முன்னேற்றம்.
ஆனால் உரையாடல் மற்றும் மித வேக தரவு சேவைகளுக்கு 2G-யே போதுமானது எனக் கருதப் பட்ட போதிலும், பெரும்பாலான பயனர்களிடயே அதிவேக தரவு சேவைகள் மற்றும் பல்லூடக சேவைகளை நோக்கிய கருத்தியல் நகர்வு (paradigm shift) உருவாகிவிட்டது. பல்லூடக பயன்பாட்டுக்கான 3G மொபைல் அமைப்புகள், 2Mbps வேக தரவுப் பயன்பாட்டுக்கு உகந்த திறன் பேசிகள் (smart phones) ஆகியவற்றின் வருகைக்கு பயனர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

1.1.2 திறன் பேசி வருகை:
ஐ.பி.எம் ( IBM), 1994-ல், தொடுதிரை(touch screen), மின்னஞ்சல், ஃபேக்ஸ், குறிப்புகள் மற்றும் நாள் காட்டி வசதிகளுடன் அறிமுகப் படுத்திய சைமன் சொந்த தகவல் தொடர்பாளர் ( Simon Personal Communicator ) தான் உலகின் முதல் திறன் பேசி எனலாம். (ஸ்மார்ட் போன் என்ற பெயரே 1997-ல் தான் பயன்பாட்டுக்கு வந்தது). இது காலம் கனியும் முன்பே சந்தைக்கு வந்து விட்டபடியால் 6 மாதங்கள் மட்டுமே நிலைத்தது. ஆனாலும் அதுவே பிற்கால திறன்பேசிகளின் பெருமைக்குரிய முன்னோடி.
1996-ல் நோக்கியா-9000 தொடர்பாடல் சாதனங்கள் (communicator) வரிசை தொடங்கியது. அதுவே 1999 ஆண்டின் Blackberry வணிகப் பயன்பாட்டு திறன் பேசி உருவாக்கத்துக்கும் முன்னோடி ஆகியது. ப்ளாக்பெர்ரி வரிசை திறன்பேசிகள் சிலகாலம் (2001-2007) சந்தைத் தலைமையை (market leader) அடைந்து, பின்னர் ஆப்பிள் ஐபோன் வருகைக்குப் (2007) பின் பயனர் ஆதரவு குறைந்து நின்று போனது. சிலர் நினைப்பது போல, உண்மையில் திறன் பேசிகளின் வருகை 3G-க்காக காத்திருக்கவில்லை. EDGE (2.75G) பிணையங்களைக் கொண்டே ஆரம்பமாகி விட்டது.
ஆப்பிள் கம்பெனியின் முதல் iphone-ல் பயன்படுத்தப் பட்ட EDGE தொழில் நுட்பம், 3G வருகையின் பின்னரும் தொடர்ந்து கொண்டிருந்தது. இன்றைய திறன் பேசிகள் எல்லா விதத்திலும் மேம்பாடு அடைந்து மொபைல் தொழில் நுட்ப வளர்ச்சிக்குகந்த வளர்ச்சி கொண்டுள்ளன.
அதிக நினைவகக் கொள்திறன், அதிவேக இணைய அணுக்கம் மற்றும் தரவிறக்கம், HD கேமரா, நாட்கணக்கில் நீடிக்கும் மின்கலம், இசை மற்றும் ஒலிக் காட்சித் தாரைகள் (streaming) ,ஒரே நேரத்தில் பற்பல செயலிகளைப் பயன்படுத்தும் வசதி, புவி தடங்காட்டி (GPS ) ஆகியவை இன்றைய திறன் பேசிகளின் சிறப்புக் கூறுகளாகக் கருதப் படுகின்றன சிறப்புக் கூறுகள் மற்றும் விலை அடிப்படையில் அவை மட்டம் (Low -End ), நடுத்தரம் (Mid-Range) மற்றும் உயர் தரம் (High-End) என வகைப்படுத்தப் படுகின்றன. அதிக மக்கள் விரும்பும் ஆப்பிள் -ஐபோன், விண்டோஸ் போன், கூகிள்- ஆன்ட்ராய்டு போன், மற்றும் அமேசான் ஃ பையர்போன் திறன்பேசிகள் வருகை 3G உதயத்தை துரிதப் படுத்தியது எனலாம்.
1.1.3.பன்னாட்டுத் திரிகை (international roaming) தேவைகள் :
முதல் இரு மொபைல் தலைமுறை (1G&2G) காலத்தில், ITU (International Telecommunication Union ) எனப்படும் அனைத்துலக தொலைத்தொடர்பு ஒன்றியம் அலைக்கற்றை ஒதுக்கீடு தவிர பிற தொழில் நுட்பம் சார்ந்த விடயங்களில் அரசு மற்றும் தனியார் மொபைல் செய்குநர்களின் முன்னெடுப்புக்கு, முழு ஆதரவு அளித்திருந்தது.
அத்தகைய அணுகுமுறை காரணமாக, 1G/2G மொபைல் அமைப்புகள், தேசிய அல்லது பிராந்திய தர நிலைகளின் அடிப்படையில், தேசிய அல்லது பிராந்திய ஒழுங்காற்று மற்றும் இயக்க (regulatory & operating) சூழலுக்குத் தகுந்த வகையில் உருவாக்கப் பட்டன. அவற்றால் அந்தந்த நாட்டின் ரேடியோ சூழலுக்குள், அல்லது குறிப்பிட்ட தரநிலை மொபைல் அமைப்புகள் இயங்கும் பிராந்தியங்களுக்குள் மட்டுமே இடப் பெயர்வு வசதி (mobility) அளிக்க முடிந்தது.
சிலர் பன்னாட்டுத் திரிகைக்காக பல அலைபேசிகளையும் சிம் கார்டுகளையும் பயன்படுத்தி வந்தார்கள். இவ்வகைத் தொந்தரவுகள் நீங்கவேண்டுமெனில், அனைத்துலக தொலைத்தொடர்பு ஒன்றியத்தின்(ITU) முன்னெடுப்பில், பன்னாட்டுத் திரிகை வசதி அளிக்கும் அடுத்த தலைமுறை (3G) மொபைல் அமைப்புத் தரநிலை உருவாக வேண்டும் எனக் கருதினார்கள்.
1.2. பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU )-அறிமுகம்
இன்டர்நேஷனல் டெலிகம்யூனிகேஷன் யூனியன் (ITU) என்பது ஐக்கிய நாடுகள் அமைப்பின் தகவல் மற்றும் தொடர்பு தொழில் நுட்பத் துறைகளில் நிபுணத்துவம் கொண்ட ஒரு முகமை. அது ஏற்றுள்ள முக்கிய பொறுப்புகள்:
- அரிய வளங்களான ரேடியோ அலைக்கற்றைகளின் நியாயமான உலகளாவிய பகிர்தலை ஊக்குவித்தல்
- செயற்கைக் கோள் சுற்றுப்பாதைகளை ஒதுக்கிக் கொடுத்து அனைத்துலக ஒத்துழைப்பை எளிதாக்குதல்
- உலகம் முழுதும் சமச்சீர் தொழில்நுட்பத் தரநிலைகள் உருவாகவும் ஒருங்கிணைக்கவும் உதவுதல்
- வளரும் நாடுகளின் தொலைத்தொடர்பு கட்டமைப்பை மேம்படுத்தப் பாடுபடல்
1.2.1. ITU –வின் முக்கிய உட்பிரிவுகள்:
ITU தலைமையகம் ஜெனீவாவில் அமைந்துள்ளது. அதன் தலைமைப் பொறுப்பு ஏற்றிருப்பவர் பொதுச்செயலாளர் (Secretary General ). தலைமை செயலகம் மற்றும் ITU Council (சபை ) ஆகிய அமைப்புகளைத் தவிர, ITU -வில் மூன்று முக்கிய தொழில்நுட்பத் துறைகள் உள்ளன: T , R, D துறைகள் .ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு பொறுப்புகள் தரப்பட்டுள்ளன. துறைகள் சார்ந்த நடைமுறை மற்றும் தொழில் நுட்ப வினாக்களுக்கு விளக்கம் அளிப்பது ITU-வின் தலையாய கடமை.
- ITU-R(ரேடியோ தொடர்பாடல் பிரிவு)-இப்பிரிவு ரேடியோ அமைப்புகளின் பொறுப்பை ஏற்றுள்ளது அதாவது ரேடியோ பரப்புகை தொழில்நுட்பத் தேர்வு, ரேடியோ இடைமுகம் (Radio Interface), அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் செயற்கைக் கோள் நிர்வாகம்
- ITU-T (தொலைத் தொடர்பு தரப்படுத்துதல் பிரிவு)- அனைத்துப் பிணையக் கூறுகளுக்கான (network elements ) தொழில் நுட்ப மற்றும் தொலை தொடர்பாடல் தர நிலைகளை உருவாக்குதல்
- ITU-D (தொலைத்தொடர்பு விரிவாக்கம்) வளரும் நாடுகளுக்கு தொழில் நுட்ப மற்றும் பிணைய விரிவாக்க உதவி.
1.3. ITU- 3G உருவாக்க முன்னெடுப்புகள்
1.3.1.FPLMTS (Future Public Land Mobile Telecommunication System)
அதிவேக கம்பியில்லா பிணையங்கள் உருவாக்குவதற்காக ITU 1986-ல் தரநிலையாக்க செயல்முறைகளை ஆரம்பித்து வைத்தது. அதற்காக நியமிக்கப் பட்ட FPLMTS என்னும் செயற்குழு ஆரம்ப கட்ட தரநிலை தொகுப்புகளை உருவாக்கியது. 1980களில் ITU தொடங்கிய இந்த ஆய்வுத் திட்டத்தின் நோக்கம் கிட்டத்தட்ட 2000 ஆண்டில் அநேகமாக 2000 MHz அலைவெண் பட்டையில் செயல்படக்கூடிய ஒரு மொபைல் அமைப்பை உருவாக்கி உலக மொபைல் சமூகத்துக்கு வழங்குவது.
ஆனால் 1990 களில் GSM மற்றும் பிற 2G தொழில் நுட்ப அமைப்புகள் உலகெங்கும் மிகவும் ஊக்கமுடன் நிறுவப் பட்டு வந்ததால் அடுத்த தலைமுறை மொபைல் அமைப்பு உருவாக்கத்துக்கான தூண்டுகோல் எதுவும் இருக்கவில்லை. எனவே 1990களின் தொடக்கம் வரை FPLMTS உருவாக்க வேலைகள் தேக்கமடைந்திருந்தன. FPLMTS என்னும் acronym சந்தைப் படுத்த உகந்ததாக இல்லாததோடு எந்த மொழியிலும் உச்சரிக்க முடியாததாகவும் இருந்தபடியால், இன்டர்நேஷனல் மொபைல் டெலிகம்யூனிகேஷன்ஸ்-2000 (IMT-2000) என்று பெயர் மாற்றப்பட்டது.
1992-ல் ITU நியமித்த செயற்குழு(working group), புதிய தரநிலையின் முதல் தொகுப்பை தயாரித்து வெளியிட்டது. ஆரம்பத்தில் ஒரே ஒரு உலகளாவிய தர நிலை உருவாக்கும் நோக்கத்தில் அமைக்கப் பட்ட செயற்குழு, அது இயலாத காரியம் என்றுணர்ந்து, ஒரு தரநிலைகள் குடும்ப வரையறுப்புக்கு ஒத்துப் போக நேர்ந்தது. இன்றைய
இரு 2G செல்லுலார் மொபைல் தொழில் நுட்பங்களுக்கு இடையே -அதாவது TDMA (Time Division Multiple Access) மற்றும் CDMA (Code Division Multiple Access ) -அடிப்படை வேறுபாடுகள் இருப்பதால் அவை ஒன்றுடன் மற்றொன்று இணைந்து இயங்க முடியாமல் இருக்கின்றன.
3G பயன்பாட்டுக்காக இரு தொழில் நுட்பங்களும் ஒரே பன்னாட்டு தர நிலைக்கு மேம்படுத்தப் பட்டால் உலகளாவிய மொபைல் தொடர்பாடலாக இணையும் என்பது ITU-வின் உள்ளார்ந்த நம்பிக்கை. ஆனால் இம்முறை இந்த ITU -2000 முன்னெடுப்பில் அத்தகைய இணைவுக்கு வாய்ப்பில்லை. எனினும் TDMA தொழில் நுட்பத்தின் வளர்ச்சிப்பாதை GPRS மற்றும் EDGE தொழில் நுட்பங்களின் இணைப்பில் WCDMA (UMTS) ஆக மலரப் போவதாலும் யூரோப் மற்றும் ஆசிய நாடுகளில் முழுதும் இந்த தொழில் நுட்பம் மட்டுமே ( உலக நெட்ஒர்க்களில் 80%) பயன்பாட்டில் இருக்கப் போகின்றது என்பதாலும் ITU -வின் நோக்கம் 80% நிறைவேறும் எனத் தெரிகிறது.
1.3.2 IMT-2000 அலைக்கற்றை ஒதுக்கீடு :
1992-ல் ITU -வால் அலைவெண் பட்டைகள் 1885-2025MHz மற்றும் 2110-2200 MHz அடையாளம் காணப்பட்டு உலகளாவிய IMT -2000 நிலப் பயன்பாட்டுக்கு ஒதுக்கப் பட்டன.மேலும் 1980-2010 மற்றும் 2170-2200 MHz அலைவெண் பட்டை IMT2000-ன் செயற்கைக் கோள் கூறு பயன்பாட்டுக்கு ஒதுக்கப் பட்டது.
1999-World Radio Conference (WRC99)- IMT-2000-ன் மேம்பட்ட மொபைல் தொடர்பாடல் பயன்பாட்டுக்காக அலைக்கற்றை மற்றும் ஒழுங்காற்று பிரச்னைகளைக் கையாண்டு வந்தது. 2005-2010 ஆண்டு சந்தைத் தேவைக்கேற்ப கூடுதல் அலைப்பட்டைகளைத் தேடிக் கண்டுபிடித்துத் தருவதே அதன் நோக்கம்.
1.3.3. IMT-2000 வரையறுப்பு :
lMTS 2000 என்பது இரண்டாம் தலைமுறை மொபைல் நெட்ஒர்க் -களின் குறைபாடுகளை விஞ்சி மேம்பட பன்னாட்டு தரநிலை உருவாக்க நிறுவனங்களிடையே தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வந்த புதிய மூன்றாம் தலைமுறை மொபைல் நெட்ஒர்க்.
1.3.4.IMTS-2000 சிறப்பு இயல்புகள்:
- உயர்தர இணங்கு தன்மை
- எல்லா செயல்படு நிலைகளிலும் செலவு குறைப்பு
- அனைத்துலக வடிவமைப்புகளில் பொதுத்தன்மை
- WARC-1992 ஒதுக்கீடு செய்த ரேடியோ அலைப்பட்டைகளுக்குள், IMTS-2000 தரை மற்றும் செயற்கைக் கோள் கூறுகள் வினையாற்ற ஏற்பாடு செய்தல்.
1.3.5.IMTS 2000 குடும்ப தொழில் நுட்பங்கள்:
IMT- Direct Spread (IMT-DS, UMTS/UTRA-FDD-யூரோப் அமைப்பில் இதன் பெயர்)
IMT-Multi கேரியர் (IMT-MC, CDMA2000- அமெரிக்க அமைப்பில் இதன் பெயர் )
IMT-Time Code(IMTS-TC, சீன அமைப்பு -யூரோப் அமைப்பின் சிறு மாறுபாடு -TD-SCDMA குறும் பட்டை TDD)
IMT-Single Carrier(IMT-SC; EDGE என்ற பெயரில் அறியப்படுகிறது)
IMT Frequency Time(IMT-FT; DECT என்ற பெயரில் அறியப் படுகிறது)
IMT OFDMA TDD WMAN;மொபைல் WiMAX என்ற பெயரில் அறியப் படுகிறது)
1.3.6. IMT2000 தொலைநோக்கு(Vision) :
- உலகளாவிய பொது அலைப் பட்டை பயன்பாடு (1.8-2.2 GHz band)
- பன்முக ரேடியோ சூழல்: செல்லுலார், கார்ட்லெஸ், செயற்கைக் கோள் மற்றும் LANs (குறும் பரப்புப் பிணையங்கள்)
- விரிந்த வீச்சு தொலைத்தொடர்பு சேவைகள் (குரல், தரவு, பல்லூடகம், இணையம் )
- திறமைமிகு அலைக்கற்றைப் பயன்பாடு
- இருப்புநிலை (stationary) மொபைல் தரவு வேகம் 2 Mbps, நடைப்பயிற்சி நிலை 384 kbps, கார் பயணத்தில் 144kbps .
- சேவையளிப்பு மற்றும் தரவு போக்குவரத்தில் அதிக மதிநுட்ப பிணையப் (Intelligent Network) பயன்பாடு
- உலகளாவிய தடையற்ற திரிகை
- மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் செயல் திறன்
- செயற்கைக்கோள் மற்றும் புவிக்குரிய அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பு
1.3.7.பிராந்திய தரநிலை உருவாக்க நிறுவனங்கள்:
Europe:ETSI(European Telecommunications Standards Institute)
US : TIA (Telecommunications Industries Association & T1P1(Technical Sub -Committee of ANSI accredited Committee T1-Telecommunications )
Japan : ARIB (Association of Radio and Business ) & TTC (Telecommunications Technologies Committee)
China: RITT(Research Institute of Telecommunications Transmission)
Korea: TTA (Telecommunications Technologies Association)
1.3.8 IMTS-2000 செய்முறை (process) :
ITU-R, ஒற்றைத் தரநிலையை உருவாக்குவதற்காக , அனைத்து பிராந்திய தர நிலை உருவாக்க அமைப்புகளையும் தத்தம் ரேடியோ பரப்புகை தொழில் நுட்பங்கள் குறித்த கருத்துருக்களை அனுப்பும்படி வேண்டுகோள் விடுத்தது. அதன் விளைவாக 1996-ல் இருந்து 1998 வரை, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் பிராந்திய தரநிலை உருவாக்க அமைப்புகள் கருத்துரு சமர்ப்பித்தலுக்கான வேலைகளை மேற்கொண்டன. மொத்தம் 17 வெவ்வேறு கருத்துருக்கள் சமர்ப்பக்கப் பட்டன. இவற்றில் 11 நிலம் சார்ந்த(terrestrial ) அமைப்புகள்; மற்ற ஆறும் செயற்கைக்கோள் சார்ந்த அமைப்புகள். இவை அனைத்தும் 1998-க்குள் மதிப்பிடப் பட்டன. ஆனாலும் 1999 முன் பகுதியில் ஏதோ ஒரு வடிவத்தில் கருத்தொருமிப்பு உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 1999 இறுதியில் கருத்தொருமிப்பு ஏற்பட்ட உடன், ரேடியோ பரப்புகை தொழில் நுட்ப விவரக் குறிப்பீடு (specification ) வெளியிடப் பட்டது.
1.4. IMTS-2000- பிராந்திய முன்னெடுப்புகள் :
1.4.1 யூரோப் முன்னெடுப்புகள்:
1.4.2.நோக்கம்:
யூரோப் நாடுகளின் மூன்றாவது தலை முறை மொபைல் அமைப்புகளின் தரநிலையாக இருக்கக் கூடியதாகவும் IMTS-2000 அமைப்புகள் குடும்பத்தில் (family of systems ) ஒரு உறுப்பினர் தரநிலையாக்க வடிவெடுக்கக் தக்கதாகவும் அமையப் போகிற UMTS (யுனிவெர்சல் மொபைல் டெலிபோன் சிஸ்டம் ) உருவாக்குதல்
1.4.3. முன்னெடுப்பு நிறுவனம்:
ஐரோப்பிய தொலைத்தொடர்பு தரநிலைகள் பயிலகம் (European Telecommunication Standards Institute -ETSI ). முன்பு (2G) GSM உருவாக்கத்திற்கு பொறுப்பேற்றிருந்த ETSI-யின் ஸ்பெஷல் மொபைல் குரூப் டெக்னிக்கல் கமிட்டியே UMTS உருவாக்க வேலைகளில் ஈடுபடுத்தப் பட்டது. தற்போதைய (2G ) GSM அமைப்பிலிருந்து யூனிவர்சல் மொபைல் டெலி கம்யூனிகேஷன்ஸ் சிஸ்டம் (UMTS ) அமைப்புக்கு சேவை மாற்றம் செய்வதை எளிதாக்கும் UMTS தரநிலையை உருவாக்கித் தருதல் அதன் குவியமாக இருக்கும்.
1.4.4. முன்னெடுப்புகள் (காலவரிசையில்):
- 1991-95 -ஐரோப்பிய ஒன்றியம் நியமித்த ஆராய்ச்சித் திட்டம், அகலப்பட்டை (Wideband)Code Division Multiple Access (WCDMA) மற்றும் Time Division Multiple Access(TDMA) அடிப்படையில் அமைந்த ரேடியோ ட்ரான்ஸ்மிஷன் தொழில் நுட்பங்களை (Radio Transmission Technology) ஆராய்ந்து 3G அமைப்புக்குப் பொருத்தமானவை என அறிவித்தது. இதன் அடிப்படையில் 1998-ல் தொழில் நுட்பம் முடிவு செய்யப் பட்டது.
பிப்ரவரி 1995-UMTS சிறப்புப் பணிக்குழு (Task Force) அமைக்கப் பட்டது. பணிக்குழு UMTS வழித்தடம்(Road to UMTS) அறிக்கையைத் தயாரித்துக் கொடுத்தது. டிசம்பர் 1996 – ஸ்விட்ஸ்ர்லண்ட், ஸுரிச் நகரில் நடைபெற்ற யூரோப் நாடுகளின் மாநாட்டில் UMTS forum (மன்றம்) உருவாக்கப் பட்டது. அதற்கு முன்பே திட்டமிடப்பட்டிருந்த யூரோப்பியன் WCDMA தரநிலைக்கு 1996-ல் UMTS என்று பெயரிடப் பட்டது.
- ஜூன் 1997- UMTS ஃ போரம், ‘UMTS-க்குரிய ஒரு ஒழுங்காற்றுக் கட்டமைப்பு’ என்று தலைப்பிட்ட முதல் அறிக்கையைத் தயாரித்தது.
- அக்டோபர் 1997- ERC (European Research Council ), UMTS-ன் மைய அலைப்பட்டையைத் தீர்மானித்தது.
- ஜனவரி 1998-பாரிஸ்-ல் நடந்த ETSI சிறப்பு மொபைல் குழு அமர்வில், W-CDMA, TD-CDMA ஆகிய இரு முன்மொழிவுகளும் இணைந்த UMTS ரேடியோ இடைமுகம் (interface) விவரக் குறிப்பு முடிவு செய்யப்பட்டது.
- June1998 அனைத்து ரேடியோ இடை முக முன்மொழிவுகளும் ITU-R இடம் ஒப்படைக்கப் பட்டன.
- 4,December 1998 -டென்மார்க், கோபென்ஹகேன் நகரில் ETSI-மொபைல் குழு, TIP1, ARIB TTC, TTA ஆகிய அனைத்து ஆராய்ச்சி நிறுவனங்களின் கூட்டமைப்பான 3G Partnership Project (3GPP) உருவாக்கப் பட்டது.
- 7,8 டிசம்பர் -பிரான்ஸ், சோபியா ஆன்ட்டிபொலிஸ் நகரில் 3GPP-யின் முதல் தொழில் நுட்ப விவரக் குறிப்பு குழுக்கள் அமர்வு நடை பெற்றது.
- 14 டிசம்பர் 1998 ஐரோப்பிய நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவை எடுத்த முடிவின் படி, 2002 ஜனவரி ஒன்றாம் தேதிக்குள் UMTS சேவைகளை ஒருங்கிணைந்த மற்றும் முற்போக்கான வழியில் அறிமுகம் செய்ய எல்லா உறுப்பினர் நாடுகளும் உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் எடுக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டது.
- பிப்ரவரி 1999- பின்லாந்து நோக்கியாவின் சோதனை UMTS பிணையத்தின் WCDMA கருவியில் இருந்து WCDMA base station மற்றும் நோக்கியா மொபைல் switching center வழியாக PSTN எண்ணுக்கு வெற்றிகரமாக அழைப்பு விடுக்கப் பட்டது.
- 16,மார்ச் 1999 -பின்லாந்து அரசு உலகின் முதல் 3G மொபைல் தொழில் நுட்ப உரிமங்களை வழங்கியது. அவை Sonera, Radiolinja, Telia, Suomen Kolmegee ஆகிய நான்கு மொபைல் அமைப்புகளுக்கு வழங்கப்பட்டன.
- March1999-பிரேசில் நாட்டு Fortaleza நகரத்தில் நடந்த அமர்வில் ITU, மூன்றாம் தலைமுறை மொபைல் அமைப்புகளுக்கான ரேடியோ இடைமுகங்கள் இசைவாணை (approval) அளித்தது.
- 27,28ஏப்ரல் 1999-ல் NTT DoCoMo-வின் WCDMA-3G உள்கட்டமைப்பு பேரம் லூசென்ட், எரிக்சன் மற்றும் NEC கம்பெனிகளுடன் நிறைவு அடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
- December 1999-ETSI தரநிலையாக்கம் பிரிவு தயாரித்து வந்த UMTS ரிலீஸ் 1999 FDD மற்றும் TDD-க்கான விவரக் குறிப்பீடுகள் முடிவடைந்தன.
- 29,March 2000- Siemens உலகின் முதல் 3G UMTS சோதனை அழைப்பை TD-CDMA (TDD) பிணையம் வழியாக அனுப்பி வெற்றிகண்டது.
- ஏப்ரல் 2000-வேர்ல்ட் ரேடியோ Conference (WRC-2000), UMTS/IMTS-2000 அலைப்பட்டை நீட்டிப்பை முடிவு செய்தது.
- ஜூலை 2000- GSM விவரக் குறிப்பீடுகளை அவற்றின் தொடரும் பராமரிப்பு மற்றும் முன்னேற்ற செயல்பாடுகளை ETSI ஸ்பெஷல் மொபைல் குரூப், 3G பார்ட்னர்ஷிப் ப்ரோஜெக்ட் (3GPP) கையில் ஒப்படைத்தது.
- 1, ஜனவரி 2001- இந்த தேதியில் யூரோப்-ல் எந்த 3G UMTS பிணையமும் வணிகப் பயன்பாட்டு நிலையை எட்டவில்லை.
- March2001- 3GPP, UMTS ரிலீஸ் 4 விவரக் குறிப்பீடுகளுக்கு இசைவாணை அளித்தது.
- 1, டிசம்பர் 2001-நார்வே–யில் முதல் வணிகப் பயன்பாட்டு UMTS பிணையம் Telenor கம்பெனியால் தொடங்கப் பட்டது.
1.4.5.வட அமெரிக்க முன்னெடுப்புகள்:
ITU-R முன்மொழிவுகளுக்காக விடுத்த அழைப்புகளுக்கு இணங்கி 3G தரநிலையாக்கத்திற்கான முன்மொழிவுகள் அமெரிக்காவின் Telelommunications Industries Assocition (TIA) மற்றும் Technical Subcommittee of Standards Committee(T1P1)-களால் சமர்ப்பிக்கப் பட்டன. இந்த நிறுவனங்கள் GSM சம்பந்தப்பட்ட செயல்பாடுகளை கவனிப்பதோடு, ETSI-யின் ஸ்பெஷல் மொபைல் குரூப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளவை. இருப்பினும் அமெரிக்கா எந்த ஒரு குறிப்பிட்ட 3G மொபைல் அமைப்பு தரநிலையையும் திட்டமிடவில்லை. மாறாக தற்போது செயல்பாட்டில் உள்ள செல்லுலர் மற்றும் PCS அமைப்புகள் 3G-யை நோக்கி படி மலர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப் பட்டது. அத்துடன் cdma2000 மற்றும் UWC136 அமைப்புகள் IMT-2000-த்தின் RTT வேட்பாளராக முன்மொழிவுகளை அனுப்பி இருந்தன.அமெரிக்காவின் முதல் 3G நெட்ஒர்க் (CDMA2000) ஜனவரி 28,2002-ல் Verizon கம்பெனியால் ஆரம்பிக்கப் பட்டது.
1.4.6.. ஆசிய முன்னெடுப்புகள்:
ஆசியாவைப் பொறுத்தவரை பெரும்பாலான மூன்றாம் தலை முறை மொபைல் செயல்பாடுகள் ஜப்பான், கொரியா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகளில் மட்டுமே தொடங்கப்பட்டன. அவை முறையே ஜப்பானின் ARIB(Association of Radio Industry &Business) மற்றும் TTC ( Telecommunications Technology Committee ),கொரியாவின் TTA (Telecommunication Technologies Association ), சீனாவின் RITT (Research Institute of Telecommunications Transmission ) ஆகிய அமைப்புகளால் கையாளப் பட்டு வந்தன.
ஜப்பான் முன்னெடுப்புகள்:
விரைவில், 2001க்குள், மூன்றாம் தலைமுறை அமைப்பு உருவாக்கும் முனைப்புடன் இருந்த ஜப்பான், IMTS-2000 தர நிலையாக்க செயல்பாடுகளின் இயக்கி மற்றும் தீவிர ஆதரவாளராக செயல்பட்டது. W-CDMA தொழில் நுட்பம் மற்றும் அத்துடன் கவனமாக சீரமைக்கப் பட்டிருந்த ETSI-யின் UTRA (UMTS Terrestrial Radio Access) என்கிற ரேடியோ ட்ரான்ஸ்மிஷன் டெக்னாலஜி (RTT)யையும் ARIB ஏற்றுக் கொண்டது. வளர்ச்சி அடைந்த GSM அணுக்கம் மற்றும் பிணைய இடைமுக செயலாக்கங்களை பயன்படுத்திக் கொள்ள விரும்பிய TTC, ETSI ஸ்பெஷல் மொபைல் குரூப்-உடன் நெருக்கமாக செயலாற்றியது. 1998, செப்டம்பரில் டோக்கியோ அருகில் இருக்கும் நோக்கியாவின் R&D நிறுவனத்தில் நோக்கியா WCDMA டெர்மினலில் இருந்து டொகோமோ சோதனை நெட்ஒர்க்–கிற்கு முதல் அழைப்பு வெற்றிகரமாக நிறைவேறியது. ஜூன் 2001-ல்,NTT DOCOMO 3G சேவையின் சோதனை ஓட்டத்தை ( முதல் மொபைல் இன்டர்நெட் சேவை) துவங்கியது. செப்டம்பர் 25,2001ல் NTT DoCoMo மூன்று 3G போன் மாடல்கள் வணிகப் பயன்பாட்டுக்காக கைவசம் இருப்பதாக அறிவித்தது.
பின்னர், முன்பே அறிவித்திருந்தபடி, அக்டோபர் 2001 முதல் தேதியில் ஜப்பானின் NTT DOCOMO வணிகப் பயன்பாட்டுக்குரிய முதல் WCDMA 3G மொபைல் நெட்ஒர்க்கைத் தொடங்கியது.
கொரியா:
IMT-2000 செயலாக்கத்திற்காக ITU விடுத்திருந்த முன்மொழிவு வேண்டுகோளுக்கு (request for propasal) இணங்கி கொரியா இரண்டு RTT முன்மொழிவுகளை (குளோபல் CDMA I, குளோபல் CDMA II) அனுப்பியது.
1, அக்டோபர் 2000-ல் கொரியாவின் SK Telecom முதல் வணிக பயன்பாட்டு cadma2000 நெட்ஒர்க்கை தொடங்கியது. அது CDMA20001xEV-DO (Evolution Data Only) என்ற வகை mobile அமைப்பு.
சீனா :
சீனாவும் ITU-வின் IMTS-2000 தரநிலையாக்கப் பணிகளில் தன்னை சுறுசுறுப்பாக ஈடுபடுத்திக் கொண்டது. ITU-R வேண்டுகோளுக்கிணங்கி ஒரு TDMA/CDMA கலப்பு ரேடியோ ட்ரான்ஸ்மிஷன் டெக்னாலஜி முன்மொழிவை அனுப்பியது. பின்னர் சீமென்ஸ் கம்பெனி உதவியுடன் TD-SCDMA என்னும் தரநிலையை தன் சொந்த பயன்பாட்டிற்காக உருவாக்கிக் கொண்டது.சீனாவின் முதல் 3G அமைப்பு 1 october 2009-ல் தொடங்கியது.
1.4.7. பிற முன்னெடுப்புகள்(3GPP):
1998-ல் UMTS உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்த வெவ்வேறு தர நிலை மேம்பாட்டு நிறுவனங்கள்(ETSI SMG, T1P1, ARIB, TTC மற்றும் TTA) ஒருங்கிணைந்து 3G பார்ட்னர் ஷிப் ப்ரோக்ராம்-ஐ உருவாக்கினார்கள். அதை உறுதி செய்யும் 3rd ஜெனெரேஷன் பார்ட்னர்ஷிப் ப்ரோஜெக்ட் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. ஆரம்பத்தில் GSM உள்ளகத்தின் (core) பரிணாம வளர்ச்சியில் எழுந்த 3G அமைப்புகளின் தொழில்நுட்ப விவரக் குறிப்பீடுகள் மற்றும் அறிக்கைகள் மற்றும் அவற்றின் பலனாய் உருவாகும் ரேடியோ அணுக்க டெக்னாலஜிகள், FDD(Frequency Division Duplex ) மற்றும் TDD (Time Division Duplex) எனப்படும் இரு UMTS தொழில்நுட்ப வடிவங்கள் ஆகியனவற்றைத் தயாரிப்பதற்காகவே 3GPP உருவாக்கப்பட்டது. இதன் பயனாக UMTS தரநிலை உருவாக்கப் பணிகள் அதிவேகமாக முன்னேறின.
1999-ல் Release99 என்ற பெயரில் 3GPP யின் முதல் வெளியீடு வெளிவந்தது. பின்னர் தர நிலைக்கான கூடுதல் மாற்றங்கள் மற்றும் சேர்க்கைகள் குறித்த வெளியீடுகள் குறித்த காலங்களில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. அவை High Speed Downlink Packet Access (HSDPA), High Speed Uplink Packet Access (HSUPA) மற்றும் Long Term Evolution (LTE) ஆகிய முக்கிய சேர்க்கைகளையும் உள்ளடக்கி இருந்தன. 3GPP யின் வெற்றியே, பின்னர் அது GSM, GPRS, and EDGE தொழில்நுட்ப விவரக் குறிப்பீடுகளின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு வேலைகளைத் தானாக முன்வந்து எடுத்துக்கொண்டதிற்கான காரணம். அண்மையில் அது 3G LTE மற்றும் முன்னேற்றமடைந்த LTE (LTE Advanced) தொழில் நுட்ப விவரக் குறிப்பீடுகள் மற்றும் அறிக்கைகள் உருவாக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
இதேபோல் CDMA2000 செல்லுலர் தொலைத்தொடர்பு அமைப்புக்கான தரநிலைகள் மற்றும் அறிக்கைகளின் நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை 3GPP2 (மூன்றாவது தலைமுறை பார்ட்னர்ஷிப் ப்ரோஜெக்ட் ) என்னும் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதில் பங்கேற்ற அமைப்புகள் ஜப்பானின் ARIB/TTC, அமெரிக்காவின் TIA, கொரியாவின் TTA மற்றும் China Communications Standards Association.
1.4.8.3G வளர்ச்சிப் பாதை:
2004- 3.5 G-3GPP தரவு வேக அதிகரிப்புக்காக HSDPA மற்றும் HSUPA என்னும் இரு தொழில் நுட்ப மேம்பாடுகளை அறிமுகப் படுத்தியது. மேம்படுத்தப்பட்ட நெட்வொர்க்கள் 3.5 G எனக் கருதப் பட்டன. 3.5G நெட்ஒர்க் 14.4 Mbps(இறக்கம் ) 5.8 Mbps (ஏற்றம் ) வரை தரவு வேகம் அளிக்க வல்லது.
2007-3.75G – 3GPP அடுத்த தொழில் நுட்ப மேம்பாடு High Speed Packet Access plus (HSPA+) என்பதாகும். தரவு வேகம் 42Mbps வரை தர வல்லது.
அடுத்த பரிணாம வளர்ச்சி 3.9G எனக் குறிப்பிடப் படுகிறது . இதையே LTE (Long Term Evolution ) என்றும் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இதை 4G LTE அல்லது மேம்பட்ட 4G என்று குறிப்பிடுவது தவறு,ஏனெனில் இது 4G யின் தொழில்நுட்ப திட்ட அளவுகளை எட்டவில்லை.
1.4.9. 3G தொழில் நுட்பப் பந்தய இறுதி முடிவுகள்:
1.UMTS/WCDMA: முதலில் யூரோப் நாடுகளில் சேவையைத் தொடங்கி உலகெங்கும் பரவிப் பெரு வெற்றியடைந்த GSM (2G)-யின் வாரிசு என்று சொல்லக்கூடிய அகலப் பட்டை CDMA தொழில் நுட்பம் கொண்ட (WCDMA) அனைவர்க்குமான மொபைல் டெலிபோன் அமைப்பு (UMTS),
2.CDMA2000: இத்திட்டம் IS-95 என்னும் இடைக்கால தரநிலைப் படி CDMA தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப் பட்ட முதல் மொபைல் அமைப்பான cdmaOne (2G) அமைப்பின் 3G வாரிசாக இருக்கிறது
3. TD-SCDMA – இது சீனாவின் Time Division Synchronous CDMA திட்டம். GSM/UMTS தொழில் நுட்பத்தின் அநேக ஆதாரக் கொள்கைகளை ஏற்றிருந்தாலும் சீனாவால் TDD (Time Division Duplex)-ல் மேம்படுத்தப்பட்டு பெரும்பாலும் உள்நாட்டில் அமர்த்தப் பட்டுள்ளது.
4.பொதுவாக 2.75G என்று குறிப்பிடப்பட்டாலும், GSM(2G) பரிணமிப்பான EDGE-ம் IMTS-2000 வரையறுத்த 3G தரநிலைக்கு ஒத்துப் போகிறது.
மேற்காணும் முக்கிய IMTS-2000 அமைப்புகளில், மிக விரிந்த பரப்பில் அமர்த்தப் பட்ட 3G அமைப்பு UMTS தான் என்று வரலாறு காட்டுகிறது. பன்னாட்டுத் திரிகை வசதி அளிப்பதோடு, தன் போட்டியாளர்களை விட அதிக அளவில் பயன் முறைகளை உருவாக்கிக் கொள்ளும் சாத்தியங்களைத் தரும்படியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் மாபெரும் வெற்றியடைந்த GSM டெக்னாலஜி வழிவந்திருப்பதால் இதன் பெரிய அளவு பயன்படுத்தலுக்கு ஏற்ற மிகப் பெரிய அடித்தளம் ஏற்கனவே அமைந்திருந்தது.
1.4.10. 3G அலைக்கற்றை ஏலம்:
யூரோப்பிய நாடுகளில் 3G உரிமங்களுக்கு அலைக்கற்றையை ஏல முறையில் விற்றதுவே தொலைத்தொடர்பு தொழிலையே பாதித்த முக்கிய விபரீத சம்பவங்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது. 2000களின் ஆரம்பத்தில் யூரோப் முழுதும் 3G அலைக்கற்றை ஏலமுறை விற்பனை ஆரம்பிக்கப் பட்டது. அலைக்கற்றை விலை இயக்குனர்களால் (operators) தாங்க முடியாத அளவில் இருக்கும் என்று கருதப் பட்டதால் இதற்கு முன்பே இதே போன்ற 3G அலைக்கற்றை ஏல விற்பனை அமெரிக்காவில் கைவிடப் பட்டிருந்தது. இருப்பினும் யூரோப் அரசாங்கங்கள், குறிப்பாக U. K மற்றும் ஜெர்மனி, அலைக்கற்றை விற்பனை, அரசாங்கத்தின் எதிர்பாராத ஆதாயக் குவிப்புக்கு உதவும் நல்வாய்ப்பாகக் கருதித் தயங்காமல் முன்னேறினார்கள். 3G அலைக்கற்றை ஏலம் சீலிட்ட ஏலம் கேட்பு அடிப்படையில் அளிக்கப் பட்டது. 3G அலைக்கற்றை உரிமம் கிடைத்தால் மட்டுமே செல்லுலார் இயக்கங்களை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்றுணர்ந்த செல்லுலார் இயக்குனர்கள், அதிக விலைக்கு ஏலம் கோரியதால் அலைக்கற்றை விலை உயர்ந்தது. இதனால் நெட்ஒர்க் இயக்குனர்கள் இடர் ஏற்று, U. K யில் 22.5 பில்லியன் மற்றும் ஜெர்மனியில் 30 பில்லியன் BP(British pounds) என்ற அளவுகளில் கடன் பெற்று பெரும் கடனாளிகள் ஆனார்கள். அதாவது 3G ஒரு மாபெரும் வெற்றி என்று நினைத்துக் கொண்டாலும் கடன்களைக் கட்டித் தீர்க்க பல ஆண்டுகள் ஆகும் என்ற அளவில் இயக்குனர்களுக்கு கடன் சுமை ஏறி இருந்தது.
அலைக்கற்றைக்காக முடக்கும் கடனில் வீழ்ந்தது மட்டுமல்லாமல், நெட்ஒர்க் ஆபரேட்டர்ஸ் 3G கட்டமைப்பு மற்றும் அதைப் பயன்படுத்தல் ஆகியவற்றிலும் முதலீடு செய்ய வேண்டி இருந்தது. அதனால் நெட்ஒர்க் ஆபரேட்டர்கள் 3G வளர்ச்சிகள் விரைவு ப டுத்தப் படுவதைக் காண பேரார்வம் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அவர்களின் முதலீடு மற்றும் வட்டித் தொகையை ஓரளவு ஈடு செய்யும் அளவுக்கு ஆதாயம் பார்க்க முடியும். ஆனால் 3G திறன்பேசிகள் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதங்கள் பெரும் தடைகளாக இருந்தன.உலகின் பிற நாடுகளில் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஏலங்கள் குறைவான விலை கேட்புகளையே எதிர் கொண்டன. Europe-ல் நெட்ஒர்க் ஆபரேட்டர்கள் சக்திக்கு மீறிய தொகையை அலைக்கற்றை வாங்குவதில் செலவிட நேர்ந்தது. குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஏலங்கள் மிகக் குறைவான தொகையே வசூலிக்க முடிந்தது. பிற நாடுகள் அனைவரும் ஏற்கக் கூடிய பிசினஸ் மாடல்களைப் பயன்படுத்தினார்கள். உதாரணமாக, ஹாங்காங்-ல் லாபப் பகிர்வு அணுகுமுறை பின்பற்றப்பட்டது. இதனால் மற்றெங்கும் ஏலங்களில் மிகப் பெரிய முன்பணங்கட்டல் தவிர்க்கப் பட்டது.
1.4.11. UMTS முதல் மூன்று 3G செயலாக்கங்கள் :
- 2001-அக்டோபர் .NTT DoCoMo உலகின் முதல் வணிகப் பயன்பாட்டு 3G மொபைல் நெட்ஒர்க்கைத் துவங்கியது.
- 2001-டிசம்பர் – யூரோப்பின் முதல் வணிகப் பயன்பாட்டு 3G நெட்ஒர்க் Telenor கம்பெனி -யால் நார்வேயில் துவங்கப் பட்டது. ஆனால் UMTS திறன்பேசிகள் 2002 இறுதிவரை கிடைக்க வாய்ப்பில்லை.
- 2003 மார்ச் – 3-ஆம் தேதி (03-03-03) UK-ஆபரேட்டர் 3 UK-யின் முதல் 3G சேவையைத் தொடங்கியது .
2003 இறுதிக்குள் அனைத்து முக்கிய நாடுகளிலும் 3G தொடங்கி விட்ட போதிலும் 2007-ல் 3G அமைப்பில் பயன்படுத்தக் கூடிய அலைபேசிகள் வர ஆரம்பித்தன. இதே போல் 2009-ல் தொடங்கிய 4Gயின் 4G-ரெடி போன் கிடைக்க 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது. இருப்பினும் 4G,2013-லேயே பயனர் எண்ணிக்கையில் 3 G யை முந்திவிட்டது.
அத்தியாயம் 2. 3G செயல்படுத்துகை
2.1. 3G யின் ஏற்பு நிலை (adoptability)
3G மொபைல் போன் அமைப்பு அனைத்துலக ஒப்பளவில் பிற தலை முறை போன் அமைப்புகளை விட குறைவான பின்பற்றுவோரையே கொண்டிருந்தது.
சில நாடுகளில் 3G நெட்ஒர்க்கள் பயன்படுத்தும் ரேடியோ அலைவெண்களும் 2G அலைவெண்களும் வெவ்வேறாக இருந்தன அந்த நாடுகளின் மொபைல் ஆப்பரேட்டர்கள் முற்றிலும் புதிதான நெட்ஒர்க் கட்டமைப்பு உருவாக்க வேண்டி இருந்தது. அதிக தரவு வேகம் பெற புதிய அலைக்கற்றைகள் தேவைப்பட்டன. ஏல முறையில் புதிய அலைக்கற்றைக்கான உரிமம் பெறுவதற்கு பெருஞ்செலவிட நேர்ந்தது. மேலும் UMTS தொழில் நுட்ப செயல்படுத்தலுக்காக, பரப்புகை வன்பொருட்களின் மேம்படுத்தலிலும் அதிக அளவில் புதிய பரப்புகை கோபுரங்கள் எழுப்புதலிலும் கால தாமதமும் பெரும் செலவும் நேரிடும் அபாயம் இருந்தது. இது போன்ற பிரச்சனை மற்றும் சங்கடங்களால்.
பல ஆபரேட்டர்கள் பின்வாங்க நேர்ந்தது; சிலர் செலவைக் குறைப்பதற்காக மேம்படுத்தப்பட்ட செயலாற்றல் தருவித்துக் கொள்வதைத் தள்ளிப் போட்டனர் குளோபல் மொபைல் சப்ளையர் அஸோஸியேஷன் (GMSA ) புள்ளி விவரத்தின்படி, டிசம்பர் 2007-ல் 40 நாடுகளில் 190 3G நெட்ஒர்க்கள் செயல்பட்டன, மேலும் 71 நாடுகளில் 154 மேம்படுத்தப்பட்ட 3G (3.5G) செயல் பட்டன.
2.2 .குறைவான 3G ஏற்பின் காரணங்கள் :
- அதிக பட்ச விலையில் 3G சேவை மற்றும் சாதனங்கள்
- பல்லூடக சேவைகளில் போதாமை
- செயல் எல்லை மற்றும் செயல்திறன் குறைபாடுகள்
- நியாயமற்ற அலைக்கற்றை ஏலம் கேட்பு
- அலைபேசி மானியம் ஏற்படுத்தும் நெட்ஒர்க் பாதிப்புகள்
அத்தியாயம் .3 .3G அந்திமம் :
3G(UMTS,HSPA,EVDO ) தொழில் நுட்ப அடிப்படையில் அமைந்த தொடர்பாடல் சாதனங்களை இயக்கத் தேவையான செல்லுலார் உள்கட்டமைப்பை மொபைல் நெட்ஒர்க் ஆபரேட்டர் சில காரணங்களுக்காக செயலிழக்கச் செய்வது 3G அஸ்தமனம் (sunsetting) எனக் கூறப்படுகிறது. 3G யைப் பொறுத்தவரை முழுமுதிர்வுக்கு யாருமே காத்திருக்க விரும்பவில்லை. . இதற்கான பொதுவான காரணங்கள்:
- 3G நெட்ஒர்க்குகள், அதே அலைக்கற்றைகளைப் பயன்படுத்தும் 4G மற்றும் 5G நெட்ஒர்க்குகளைவிட குறைவான வேகமும் செயல்திறனும் கொண்டவை. LTE (Long Term Evolution ) தொழில் நுட்ப அடிப்படையைக் கொண்ட 4G மற்றும் 5G நெட்வொர்க்குகள் தொலை நோக்குப் பார்வையுடன் கட்டமைக்கப் பட்டுள்ளன. அடுத்த 10 ஆண்டுகள் நீடிக்கக் கூடியவை.
- நெட்ஒர்க் ஆபரேட்டர்கள் 3G நெட்ஒர்க்கை விட்டு இடம் பெயர்வதன் காரணம், 3G அலைக்கற்றையை லாபகரமாக 4G /5G நெட்ஒர்க்கில் மறு பயன்பாடு செய்வதற்காகத் தான்.
- 4G/5G யில் மறுபயன்பாடு செய்வதால் நெட்ஒர்க் இயக்கச்செலவு குறைவதோடு அலைக்கற்றை அதிகரிப்புக்கு ஏற்ப அதிக மொபைல் சாதனங்களை இணைத்துக்கொள்ள முடியும்.
3G மூடல்:அமெரிக்க நிகழ் நிலை அறிக்கை:
- அமெரிக்காவின் Verizon தன்னுடைய 3G CDMA அமைப்புகளை இவ்வாண்டு(2022) கடைசிக்குள் மூடிவிடும்.
- AT&T தன் 3G நெட்ஒர்க் களை பிப்ரவரி 2022க்குள் மூடிவிடும்.
- T-மொபைல் தன் 3G நெட்ஒர்க் களை ஏப்ரல் 2022க்குள் மூடிவிடும்.
- Sprint-ன் கடைசி 3G நெட்ஒர்க் April 2019-ல் வணிகப் பயன்பாட்டுக்கு வந்தது. இருந்த போதிலும் அனைத்து Sprint நெட்ஒர்க்களையும் December 2022க்குள் மூடப் பட்டுவிடும்.
இந்தியா உட்பட்ட அனைத்து நாடுகளின் முடிவும் இதுவே. 2G தவிர பிற அனைத்து நெட்ஒர்க்களையும் 4G/5G ஆக மாற்றும் திட்டம் இந்த ஓராண்டு காலத்தில் நிறைவேறும்.
***