மிளகு: அத்தியாயம் பதினைந்து

1596 ஹொன்னாவர்

எந்தத் தலைப்பு என்றாலும் அதைப் பற்றி நொடியில் எழுதி நீட்ட, மாதச் சம்பளத்துக்கு யாராவது கிடைப்பார்களா? பெத்ரோ துரைக்கு வேண்டும்.

பல விதமாக லிகிதம் எழுத வேண்டும். கூடிய மட்டும் நடந்தது நடந்தபடி, தினம் நாட்குறிப்பு எழுத வேண்டும். மாதா கோவிலில் சிறப்புப் பிரசங்கம் செய்ய பாதிரியார் வந்து அழைக்கும் போது, அங்கே இங்கே பைபிளிலும், பழைய கவிதை, காவியங்களிலும் பீராய்ந்து எடுத்துப் போட்டு, ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டுக்கு வந்த எல்லோரையும் ஒரு மணி நேரம் நிம்மதியாக உறங்கும்படியாக நிகழ்த்த, உபந்நியாசம் எழுத வேண்டும். ஊருக்குப் போன பெண்டாட்டி மரியாவுக்கு கடிதம் எழுத வேண்டும் – அது வேண்டாம், கொஞ்சம் அசங்கியமாக, ரசாபாசமாக பெத்ரோ பெண்டாட்டிக்கு எழுதி அனுப்புவது, பிரத்தியேகமாகவே இருக்கட்டும். இப்படிப் பலவிதத்தில் பேச வேண்டியடதை எழுதித்தர, கொடுத்த குறிப்பை வைத்துக்கொண்டு விவரித்து விஸ்தரித்து கடிதமாக்க, பெத்ரோ விலாவாரியாகச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்காமல் தானே எழுத மாதச் சம்பளத்துக்கு யாராவது கிடைப்பார்களா? பெத்ரோ யோசித்தார்.

இதைத் தவிர இன்னொரு வேலை உண்டு. அதை மட்டும் இன்னொருத்தருக்குத் தர மாட்டார் பெத்ரோ. ராஜாங்க ரகசியக் கடிதம் லிஸ்பனில் பேரரசருக்கு எழுதுவதும், அவரிடமிருந்து பெற்று நடவடிக்கை எடுப்பதும், அதை அறிவிப்பதும் அவர் தான் செய்தாக வேண்டும். அவர் மட்டும்தான் செய்யணும்.

கைகால் என்றைக்காவது வலித்து வழங்காமல் போய் முக்கிய ரகசியத் தகவலை லிஸ்பனுக்கு, போர்த்துகீஸ் அரசர் நேரடிப் பார்வைக்கு அனுப்ப வேண்டியிருந்தால், அதை முழுக்க எழுத்து மறைத்து அனுப்ப உதவி தேவைப்படலாம். லிஸ்பனில் இருந்து வந்த எழுத்து மறைத்த லிகிதத்தைப் படிக்கவும் வெளியார் உதவி கோர வேண்டி வரலாம்.

பெத்ரோ எல்லாம் கவனித்துக் கொள்வார் தான். என்றாலும் வெறும் மனுஷர் தானே. கைகால் ஓயாமல் சதா சர்வ காலமும் வேலை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? அப்படி அவதி நேரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று அந்த யோசனையைத் தள்ளிப் போட்டார் பெத்ரோ.

இப்போது வயிறு கனக்க, விருந்து சாப்பாடு போல் கஸாண்ட்ரா உண்டாக்கிய ஆகாரத்தை முழுக்க ருசித்து அருந்தியாகி விட்டது. கண்ணில் உறக்கம் வந்தேன் வந்தேன் என்று எட்டிப் பார்க்கிறது.

முக்கியமான செய்திகளை அவை கிட்டிய நாளில் தானே, எந்தத் தாமதமும் ஏற்படாமல் எழுதி அனுப்பவேண்டும் என்று போர்த்துகீஸ் அரசரின் தாக்கீது சொல்கிறது. வந்த கடிதத்தையும் கையில் கிடைத்த ஒரு மணி நேரத்தில் படித்திருக்க வேண்டும், செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

சென்னபைரதேவி மகாராணி லிஸ்பன் பயணம் போக ஏற்பாடு செய்யச் சொன்னாரே. அதை விட முக்கியமான தகவல் வேறேதும் இருக்க முடியுமா?

உறக்கம் இருக்கட்டும். அரசருக்கான சிறப்பு லிகிதத்தை எழுதலாம் என்று முடிவு செய்தார் பெத்ரோ. முதல் காரியமாகத் தன் தனியறையின் கதவுகளை உள்ளே இரட்டைத் தாழ்ப்பாள் போட்டுச் சார்த்தினார். பூட்டிய அலமாரியைத் திறந்து நீல நிறத்தில் ஓர் உலோகப் பெட்டியை உள்ளே இருந்து எடுத்தார். அலமாரியை அறைந்து மூடினார்.

சாவி கொண்டு பேழையைத் திறக்க, உள்ளே இருந்தவை எழுதுபொருட்களான உலர்ந்த உயர்தர மரப்பட்டைச் சுருள்கள். கூடவே பெரிய போத்தல் ஒன்றில் மரப்பட்டைச் சுருளில் எழுத கடுக்காய் மை. புது வருடம் பிறந்ததிலிருந்து லிகிதப் போக்குவரத்துக்கு காகிதம் பயன்படுத்தப் போவதாக லிஸ்பனில் இருந்து செய்தி வந்திருக்கிறது.

பெட்டியில் இருந்த ஒரு பொதியை அவிழ்க்க, கடுக்காய் மசியால் மரப்பட்டைகளில் எழுதிய பின் அவற்றின் மேல் பூச, எழுத்து மறையச் செய்யும் காடி மாதிரியான திரவம், தக்கை அடைத்த ஒரு கண்ணாடிக் கல் போத்தலில், அடர் கறுப்பில் இருந்தது.

மறைந்த எழுத்து திரும்பத் தெரிய வைக்க இன்னொரு திரவம் பேழைக்குள் வேறொரு சற்றே சிறு பஞ்சுப் பொதியில் அடைத்த போத்தலாக இருந்தது.

எதுவும் எழுதாத மரப்பட்டை ஒன்றை எடுத்து விரித்து கடுக்காய் மசிப் போத்தலில் மயிலிறகை அமிழ்த்தி மரப்பட்டையில் எழுதலானார்.

போர்த்துகீஸ் பேரரசர் ‘விவேகன்’ பிலிப்பு பேரரசருக்கு இந்துஸ்தானத்தில் அரசப் பிரதிநிதியாகப் பணி புரியும் இமானுவெல் பெத்ரோ எழுதிய கடிதம்-

பிலிப்பைன் பெருவம்சத்தில் சூரியன் போல நற்பிறப்பு எய்தியவரும், எத்திசையும் புகழ அரசாண்ட மானுவேல் சக்கரவர்த்திகளின் நற்பேரனும், போர்த்துகீஸ் பேரரசரும், ஸ்பெயின் சக்கரவர்த்தியும், நேபிள்ஸ் மாமன்னரும், சிசிலி மாநிலத்தின் மன்னர் பெருமானும் ஆன, எங்கள் போர்த்துகீசிய வம்சத்தைத் தாயினும் சாலப் பரிந்து பாதுகாத்து வளர்த்து பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, கலை, இலக்கியச் செழிப்பு, மேன்மையான உணவு, சிறப்பான உடை, நோயற்ற வாழ்வு என்பன எம் மக்கள் அனைவரும் பெற உத்தரவாதம் அளித்தவரும், என்றும் எமக்குப் பேரரசரும், வழிகாட்டியுமான ’விவேகன்’ என்ற நற்பெயர் பெற்ற பிலிப்பு மகா சக்கரவர்த்தி அவர்களுக்குத் தாள் பணிந்து அனுப்புவித்த லிகிதம் இது.

வேறு யாரும் இது தற்செயலாகக் கூடக் கிடைத்து இதைப் படிப்பது தடை செய்யப்பட்டதும் ராஜத்துரோகத்துக்கு ஒப்பான குற்றமுமாகும். சக்கரவர்த்திகளின் தூசியிலும் தூசியான, ஊழியருக்கு ஊழியரான இம்மானுவல் பெத்ரோவாகிய நான், பேரரசரின் முன் மண்டியிட்டு, மரியாதையோடு விடுக்கும் லிகிதம் இது. விடுத்த ஆண்டு ஓ அனோ 1596 மாதம் ஓ மீஸ் அகஸ்டோ தேதி 28 (28/08/1596)

பரத கண்டம் என வழங்கப்படும் இந்துஸ்தானத்தில் உயர்ஜாதி மிளகு விளைவித்துச் சிறந்த உத்தரகன்னடப் பகுதியின் மிளகு மகாராணி என்ற சென்னபைரதேவி அவர்களின் அரசவைக்கு போர்ச்சுகல் அரசப் பிரதிநிதியாகப் போயிருந்து பணியாற்றுகிறவனான நான் ஆயிரம் தெண்டனிட்டு இந்த லிகிதத்தை எழுதலானேன். எழுத்துப் பிழை, சொற்பிழை, தெளிவின்மை இவை இந்த லிகிதத்தில் தென்பட்டால் தயைகூர்ந்து அடியேனை மன்னர் பிரான் மன்னிக்க வேண்டுகிறேன்.

இந்தியாவில் விஜய நகர சாம்ராஜ்யத்தின் பாதுகாப்புக்கு உட்பட்ட தென்னிந்திய சிற்றரசுகளில், வடக்கு கன்னட கொங்கணி பிரதேசத்து அரசுகள் வாசனை திரவியங்களும், வெல்லமும், சாயம் தோய்த்த துணியும், வெடியுப்பும் ஏற்றுமதி செய்து பெரும் வருமானம் சம்பாதித்து வருவது மன்னர் பெருந்தகை அறிந்ததே.

இந்தச் சிற்றரசர்களோடு நல்லிணக்கம் பூண்டு கடல் கடந்து ஏலமும், மிளகும், கிராம்பும் மிகக் குறைந்த விலைக்குக் கொள்முதல் செய்து ஐரோப்பா கொண்டு போவது நமக்குச் சாதகமான, நல்ல வருமானம் விளைவிக்கும் செயல் என்பதும் தாங்கள் எமக்கு சொல்லி விளக்கியிருப்பது.

அதிலும் மிளகு ராணி என்று போர்த்துகீசியர்களான நாம் நேசத்தோடு அழைக்கும் ஜெருஸோப்பா நகர் சார்ந்த நிலப்பரப்பின் அரசி சென்னபைரதேவி கடந்த பல ஆண்டுகளாக நம்மோடு நல்ல உறவு வைத்திருப்பவர். நமக்கு ஜன்மப் பகைவர்களான அரபியர்களை அவர்கள் இந்துஸ்தானத்தின் மேற்குக் கரையான கொங்கணத்துக்கு நாடு பிடிக்க வந்தபோது எதிர்த்த அரசுகளில் ஜெருஸோப்பாவும் அடக்கம்.

அரசியவர்கள் திருமுகம் காண வாய்ப்பு வரும்போதெல்லாம் இந்த லிகிதத்தை எழுதும் உங்கள் ஊழியன் இம்மானுவல் பெத்ரோ சென்று மரியாதை செலுத்தத் தவறுவதில்லை. அரசியார் ஆணைப்படி மிளகும், ஏலமும் அவர்கள் தர, நாம் வெங்காயம் என்ற சபோலாவும் மிளகாயும் பண்டமாற்றாகத் தரவும் ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்பட இருக்கிறதும் தெரிந்ததே.

இந்த ஒப்பந்தம் தொடர்பாகவும் அண்மையில் அறுபது வயது பூர்த்தியான மகாராணி சென்னபைரதேவியை வாழ்த்தி பரிசு சமர்ப்பிக்கவுமாக அடியேன் இந்த வாரத்தில் இரு தடவை அரசியார் வசித்து அரசாளும் மிர்ஜான் கோட்டைக்குச் சென்றிருந்தேன்.

முதல் பயணம் வாழ்த்தி விருந்துண்டு வர. மிக அற்புதமான விருந்து அது. அதற்கு இரண்டு நாள் கழித்து இன்று தனியாக அரசவைக் காரியாலயத்தில் சந்தித்தபோது பேரரசர் இங்கிருந்து அனுப்பிவைத்த தொழில் நுட்பம் மிகச் சிறந்ததும் நேர்த்தியான வடிவம்சம் கொண்டதுமான ஹெல்வெட்டியா இடுப்புவார் கடியாரத்தை நான் பேரரசர் சார்பில் பரிசளித்தபோது அரசியார் மனமுவந்து அதைப் பிரியமாக ஏற்றுக்கொண்டார்.

கடியாரம் இயக்குவது, சாவி கொடுப்பது போன்ற அடிப்படைக் காரியங்களை தனக்குக் கற்றுத்தர எனக்கு ஒரு நல்ல வாய்ப்பையும் தந்தார் மகாராணி.

அந்த மகிழ்ச்சியான பொழுதில் அவர் என்னிடம் குறிப்பிட்டது மிகுந்த நன்னம்பிக்கையை எமக்கெல்லாம் அளிக்கக் கூடிய ஒன்றாகும்.

மகாராணியார் கடல் கடந்து ஐரோப்பாவுக்கு அதுவும் நம் லிஸ்பன் நகருக்கு வந்து இருந்து கண்டு போக விருப்பம் தெரிவித்தார். அடியேன் இங்கே வந்து போர்ச்சுகல் அரசப் பிரதிநிதியாகப் பதவி ஏற்றது முதலான கடந்த ஒன்றரை ஆண்டில் முதல் முறையாக மிளகு ராணி இப்படி ஒரு விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.

இரண்டு மாதம் முன் ஸ்பெயின் நாட்டு மாட்ரிட் பெருநகரம் லண்டன் மாநகரை விடப் பெரியதா என்று ஒரு முறை கேட்டார். அது தெரிந்து கொள்ள முனையும் அறிவு சார்ந்ததே தவிர மாட்ரிடுக்கோ லண்டனுக்கோ போய் வர விருப்பத்தின் காரணமல்ல என்று நான் பணிவோடு சொல்ல முடியும்.

அவருக்குத் தங்களின் பேரரசு மிக்க மரியாதைக்கு உரியதாகும். ஒன்றுக்கு மேற்பட்ட மாபெரும் நிலப்பரப்புகளைத் திறம்படத் தாங்கள் அன்பும் அருளுமாகப் பேராட்சி செய்யும் ஆற்றலும், விவேகமானவர் என்ற பட்டமும் அவரைக் கவர்ந்திருக்கின்றன என்று சொல்லாமலே விளங்கும்.

இந்த வருகை பற்றி என்னோடும் என் மூலம் தங்களோடும் பேச அவர் விழைந்தது போல், மற்று எங்கும், எந்த நாட்டுக்கும், எந்த நகருக்கும் போக அவர் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதுவரை கடல் கடக்காத, நிலப் பரப்பிலேயே வடக்கு, கிழக்கு இந்தியப் பகுதிகளுக்குச் சென்று வந்திருக்காதவர் மகாராணி.

விஜயநகரப் பேரரசின் பாதுகாப்புக்குட்பட்ட குறுநில ஆட்சி என்றாலும் விஜயநகரத் தற்போதைய தலைநகர் பெனுகொண்டாவுக்கு மகாராணி ஓரிரண்டு முறை மட்டும் போனார் என்று மிர்ஜான் கோட்டை மேலதிகாரி ஒருவர் கூறினார். நட்பு நிலப் பிரதேசமான மலையாள பூமியில், சாமுத்ரி பேரரசர் அரசாளும் கோழிக்கோட்டுக்கு மகாராணி போனதே இல்லையாம்.

இதன் காரணம் ஒரு வாரத்துக்கு மேற்படும் பயணங்கள் எல்லாம் இங்கே குறுநில மன்னர், அரசியர்களால் அவர்களுடைய ஸ்திரத் தன்மையை அசைத்துப் பார்க்க வாய்ப்புத் தரும் நிகழ்ச்சிகளாகக் கூடுமென்ற பயமும் தயக்கமும் தான்.

விஜயநகரப் பேரரசு அளிக்கும் முழு முதல் பாதுகாப்பு ஓரளவு இதைக் கட்டுப்படுத்தலாம் தான். என்றாலும் எந்தப் பக்கம் வலுவாகிறது என்பதைப் பொறுத்து அந்தப் பாதுகாப்பும் இடம் மாறக்கூடும்.

பத்து நாள் இந்திய நிலப்பரப்பில் பயணம் போக இங்கே சிற்றரசர்கள் தங்களுக்கு யார் மூலம் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகும் என்ற அவதானிப்பு இருக்கிறதோ அவர்களையும் கூடவே கூட்டிப் போவது வழக்கம்.

எனினும் இது ஒன்றிரண்டு பேராக இருந்தால் நடக்கக் கூடும். இருபது முப்பது ஜன்ம சத்ருக்கள் இப்படி என்றால் பெரிய கூட்டமாக எல்லோரும் பயணம் போய்வருவது நடக்கக் கூடிய காரியமில்லையே. இது காரணமே இங்கே அரசர்களும் அரசியர்களும் ’கிரீடம் பறிபோகாமல் இருப்பது முக்கியம்; ஊர் கண்டு வருவது வேண்டாம்’ என்று அகற்றி வைக்கக் காரணம்.

என்றால், மிளகு ராணியோ கிட்டத்தட்ட ஐந்து, ஆறு வாரம் கடல் பயணமாகப் போகவும் அதே கால அளவு, திரும்ப வரவும் பிடிக்கும் நீண்ட கப்பல் பயணத்தை மேற்கொள்ளச் சித்தமாக இருப்பது வியப்புக்குரியது.

அது மட்டுமில்லை, இங்கே லிஸ்பனில் தங்களின் விருந்தினராகக் குறைந்தது மூன்று அல்லது நான்கு வாரமாவது இருந்து போக அழைப்பு அளிக்கப்படும் என்று கருதுவது நடக்கக்கூடியதல்லவா?

அவர் இங்கே இருக்கும் காலத்தில் உபசரிப்போடு நாம் வைக்கக் கூடிய கோரிக்கைகளாகப் பேரரசர் கருத இந்த எளியோனின் சிறு பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. சென்னபைரதேவி அரசியாரிடம் இதைப் பற்றிப் பேச தயவாக நேரம் ஒதுக்கினால் நல்ல விளைவுகள் கிடைக்கும் என்பது உறுதி.

மிளகு உற்பத்தியை அதிகரிக்க கொங்கண மற்றும் மலையாள விவசாயிகளோடு புது சாகுபடி முறைகளை மேற்கொள்ளுதல்

மிளகு விவசாயம் செய்யும் விவசாயிகள்

(இந்தப் பட்டியலை இங்கே நிறுத்திக்கொள்ள அனுமதி வேண்டுகிறேன். நேரில் அரச பிரானைத் தரிசிக்க வரும்போது எடுத்துரைக்கிறேன். மேலதிகப் பாதுகாப்பு கருதி நான் இந்த லிகிதத்தில் இதைக் குறிப்பிடுவதைத் தவிர்க்கிறேன்)

-உணவு விஷயத்தில் இந்துஸ்தானியர்கள் பெரும்பாலும் புல் பூண்டுகளை உண்ணும் சைவ உணவுக்காரர்கள். அரசியாரும் சுத்த சைவம். . அவரைச் சார்ந்து இயங்குகிறவர்களும் அதேபோல்தான். அவருடைய குழுவில் சமையல்காரர்களும் இருப்பார்கள் என்பதால் ராணியின் உணவு பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அன்றாடம் லிஸ்பனில் கிடைக்கும் காய், கனி, வெண்ணெய், பால் இவற்றைத் தடையின்றி அளித்தாலே போதுமானது.

கிட்டத்தட்ட பத்து நபர்கள் கொண்ட ஒரு குழுவோடு அவர் பிரயாணப்படுவார் என்று எண்ண இடமிருக்கிறது.

அறுபது வயதைத் தொட்டவர் மகாராணி அவர்கள். பேரரசரை விட எட்டு வயது பெரியவர். இருவரும் சந்திக்கும்போது அரசர் ராணியாருக்கு முன் கால் மண்டியிட்டோ ராணி அவர்கள் அரசர் முன் அப்படி இருந்து மரியாதை செலுத்துவதோ தேவை இல்லை. இந்திய வணக்கப்படி இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துச் சிரித்து இருகையும் கூப்பி சில வினாடிகள் நிற்பதே சரியான மரியாதை செலுத்தலாக இருக்கக் கூடும்.

அரசகுருக்களிடமும் இங்கும் அங்கும் கேட்டு இதைத் தீர்மானம் செய்து கொள்ளலாம்.

அரசியார் தங்கி இருக்க, நம் அரண்மனையில் இடம் ஒதுக்க முடிந்தால் நன்றாக இருக்கும். அல்லது லிஸ்பன் மாநகரில் பெனா அரண்மனையிலோ அஜுரா அரண்மனையிலோ தங்க வைக்கலாம். அல்லது அரசின் முக்கிய விருந்தாளியின் தகுதிக்குத் தகுந்த நல்ல விடுதி ஒன்றை, முக்கிய வீதிகளில் இருப்பதாகத் தேர்ந்தெடுத்து அவரை சகல சௌகரியங்களோடும் அங்கே தங்க வைக்கலாம். வெளியிடத்தில் தங்கினால் அதிகப் பாதுகாப்பு அளிக்க வேண்டி வரலாம்.

மருத்துவ உதவி அவருக்குத் தேவைப்படாது என்றே நினைக்கிறேன். அரண்மனை வைத்தியர் என்ற உள்நாட்டு மூலிகை பிழிந்து மருந்து கலக்கித் தரும் ஒரு நபர் அரசியின் உடல் நலத்தைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்கிறார். அவரும் இங்கே அரசியாரோடு கூட வருவார் என்று தோன்றுகிறது. அவருக்கான மூலிகைகள் இங்கே கிடைக்காது என்பதால் அவற்றை மூட்டை கட்டிப் பாதுகாப்பாக எடுத்து வரச் சொல்லி யோசனை கூறலாம்.

அரசியார் தினசரி நீராடும் பழக்கமுடையவர். ஆற்று நீரோ, சுனை நீரோ அல்லது நல்ல கிணற்று நீரோ, பெரிய கடகங்களில் பிடித்து வைத்து மிதமாகச் சூடாக்கி குளியலுக்குப் பயன்படுத்துவார் என்று கேள்வி. வாசனை நிரப்பும் மூலிகைப் பொடிகளைக் குழைத்து வைத்துப் பூசி நீராடுவார் என்றும் அறிகிறோம்.

அவருக்கு குளித்துவிடுவது, தலைமுடியை மூலிகைப் பொடி கொளுத்திய புகை கொண்டு உலர்த்துவது என்று கவனித்துக்கொள்ள ஒரு தாதியை ஏற்பாடு செய்வது முக்கியமானது– தாதி மகாராணியின் குழுவில் இல்லாத பட்சத்தில். இந்துஸ்தானத்துப் பெண்கள் பெரும்பாலும் நிதமும் கூந்தல் நனையக் குளிக்கும் வழக்கம் கொண்டவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.

அரசியார் இந்தியாவில் பெரிய அளவில் கடைப்பிடிக்கப் படும் வைதீக சமயம் என்ற இந்து மதத்தைச் சார்ந்தவர் இல்லை. இந்து மதத்திலிருந்து கிளை விட்ட சமண மதத்தினர் ஆவார் அவர். தினசரி தியானம் மற்றும் சிலாரூபங்களை வைத்து பூஜை செய்ய தனியாக இடம் தேவைப்படலாம்.

இந்த சிலாரூபங்களில் சில உடையேதும் உடுத்தாததாகவும் இருக்கக் கூடும். தியானத்துக்கான இடம் பரவலாகப் பலர் கண்ணில் படாமல் இருந்தால் இது ஒரு பிரச்சனையாகாது என்பது நிச்சயம்.

சமணர்கள் ஒரு பூச்சி புழுவுக்குக்கூடத் துன்பம் உண்டாவதைப் பார்க்கவும் சகியார். இரவில் ஊரும் ஜந்துக்கள், பறக்கும் பூச்சிகள் நிறைய இருக்கும், ஆகாரம் பண்ண வாயைத் திறந்தால் உள்ளே போய் இறந்துவிடக் கூடும் என்பதால் சூரிய அஸ்தமனத்துக்கு அப்புறம் எதுவும் சாப்பிட மாட்டார்கள்.

மாதம் ஒரு முறை வெறும் கட்டிலில் மூட்டைப் பூச்சி அடைய விட்டு அதை வீட்டு வாசலில் இட்டு வைப்பார்கள். ராத்திரி அந்தக் கட்டிலில் உறங்கி மூட்டைப் பூச்சிகளின் உணவான ரத்தத்தைத் தானம் செய்யச் சமணர்களில் செல்வந்தர்கள் கூலிக்கு ஆள் பிடிப்பதுண்டு. சென்னபைரதேவி அந்த மாதிரி எல்லாம் வேண்டுமெனக் கோர மாட்டார். அதுவும் லிஸ்பனில் கட்டிலில் படுக்க ஒருவேளை ஆள் கிடைத்தாலும், மூட்டைப்பூச்சிக்கு எங்கே போவது என்று பேரரசர் சொல்ல உத்தேசித்திருக்கலாம்.

சென்னபைரதேவி சமணர் வழக்கப்படி ராத்திரி உணவை சாயந்திரமே உண்டு விடுவார் என்றாலும் வழக்கமான ராஜாங்க விருந்துகளில், வேகவைத்த காய்கறிச் சாறு அல்லது பழச் சாறு மட்டும் பருகியபடி கலந்து கொள்ளக்கூடும்.

சமணர்களில் புழு பூச்சிகளுக்கும் உணவு அளிக்க வேண்டும் என்று விதியைக் கடைப்பிடிக்கும் பேர்களில் சென்னபைரதேவியின் வளர்ப்பு மகன் நேமிநாதனும் உண்டு எனக் கேள்விப்பட்டேன் . நேமிநாதன் மகாராணிக்குத் தந்தையாரின் மூத்த சகோதரனின் பேரன். முப்பத்தைந்து வயது. இருபத்தெட்டு வயதில் அவன் மனைவி ரஞ்சனாதேவி.

சென்னா பார்த்து ஜாக்கிரதையாகத் தேர்ந்தெடுத்த மணப்பெண் அவள். நேமிநாதனும் ரஞ்சனா தேவியும் சென்னபைரதேவி மேல் எல்லையில்லாத அன்பைப் பொழிகிறது நம் ஐரோப்பிய நாகரிகப்படி மிக அதிகப்படியாகவும், கொஞ்சம் போலியானதாகவும் தெரிந்தால் அது பற்றி நான் பின்னர் விளக்குகிறேன். மிகைப்படுத்துதல் இந்தியக் கலாசார அடையாளம் என்பதைப் பேரரசர் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ராணியின் பயண கோஷ்டியில் நேமிநாதனும் ரஞ்சனா தேவியும் கட்டாயம் இருப்பார்கள். இது அன்பால் அழைத்துப் போவதா அல்லது நேமிநாதன் சென்னபைரதேவி இல்லாத நேரத்தில் ஜெருஸோப்பாவில் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதால் அதைத் தவிர்க்கவா என்பது பின்னால் தெரிய வரும். எங்ஙனம் இந்த விஷயத்தைக் கையாள வேண்டும் என்ற பேரரசரின் வழிகாட்டுதலின்படி பேச்சு வார்த்தைகள் நடைபெறும்.

அப்படி நேமிநாதன் வர முடியாமல் ஜெருஸோப்பாவிலேயே இருந்தால் அது நாம் சென்னபைரதேவியை விருந்தாளியாக அழைத்து வர்த்தகமும் பிறவும் சிறக்கப் பேச்சு வார்த்தை நடத்துவதை ஒன்றுமில்லாமல் ஆக்கி விடலாம். அதற்கு சென்னபைரதேவி எங்கும் வராமல் ஜெருஸோப்பாவிலேயே இருப்பது நல்லது. சென்னபைரதேவி இதை யோசித்து வழி கண்டு தான் ஐரோப்பியப் பயணம் செல்ல தயாராக இருப்பதாக நம்மிடம் அறிவித்திருப்பார்.

சென்னபைரதேவியோடு யார்யார் வரக்கூடுமென்று ஊகிப்பது கடினமான விஷயமாகும். வரவும் திரும்பவும் கப்பல் பயணம், தங்கி இருப்பது, உணவு, பாதுகாப்பு இப்படி அரசாங்கச் செலவில் ஒரு பெருந்தொகை செலவாகும். அதற்குப் பேரரசரின் முன்கூட்டிய அனுமதி வேண்டியிருக்கும். இங்கே வந்த பிறகு ஸ்பெயின் மற்றும் அண்டையில் உள்ள ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வரவும் அரசியார் விருப்பப்படலாம். ஏன், லண்டன் போய் வரக்கூட அவருக்கு விருப்பம் இருக்கக்கூடும். அழைப்பு விடுக்கும்போது இதை எல்லாம் கருத்தில் கொண்டு தகுந்த விதமாக, அரசரின் பெருமைக்கும் கௌரவத்துக்கும் மிளகு ராணியின் கௌரவத்துக்கும் பெருமைக்கும் தகுந்தபடி அழைப்பு அமைக்கப்பட்டிருந்தால் நன்றாக இருக்கும்.

இந்த விஷயத்தில் உடனே அரசாங்கம் செயல்பட அரசரவர்கள் தகுந்த ஆணை பிறப்பிக்கக் கோருகிறேன்.

பேரரசர் பிலிப்பு அவர்கள் நீடு வாழவும், போர்த்துகல் நாடு சகல விதமான முன்னேற்றம் அடையவும் பிரார்த்தனைகளோடு, இந்துஸ்தானத்துக்கு போர்த்துகல் அரசரின் சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு பணியாற்றும் இம்மானுவல் பெத்ரோ.

லிகிதம் முடிவடைந்து கையெழுத்திட்டு, குழலில் வைத்து அரக்கு அடைப்பிக்கும் நாள் – பொழுது

எழுத்து மறைய வைக்கும் திரவத்தை அந்த மரப்பட்டை மேல் மெல்லப் பூச, அவர் எழுதிய கடிதம் உடனடியாக எழுத்து தெரியாமல் மறைந்து போனது.

’அடுத்து கப்பல் வருவது இரண்டு நாள் கழித்து. சனிக்கிழமை ’.

’கப்பல் கப்பித்தானை இங்கே வரவழைத்துக் கொடுக்கணும்’.

’கஸாண்ட்ராவை சனிக்கிழமை வரவேண்டாம் என்று சொல்ல வேணும். இரண்டு மாதம் கப்பலில் சுகம் அனுபவிக்காமல் காய்ந்து கிடப்பான். அந்த மாலுமி. கஸாண்ட்ரா என்ன, கஸாண்ட்ராவின் பாட்டி கிடைத்தால் கூட விடமாட்டான்.’

***

Series Navigation<< மிளகு அத்தியாயம் பதினான்குமிளகு -அத்தியாயம் பதினாறு  >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.