மறுசுழற்சி விவசாயம்

This entry is part 11 of 23 in the series புவிச் சூடேற்றம்

இந்தப் பகுதியில், இந்தப் பிரச்சனைக்கு விஞ்ஞானிகள் மேலும் என்ன பரிந்துரைகளை முன் வைக்கிறார்கள் என்று பார்ப்போம்.

விவசாயப் பரிந்துரைகள்

கரியமில வாயுவின் ஒரு பகுதி, விவசாயத்திலிருந்து காற்றுமண்டலத்தில் கலக்கிறது. பயிர் மற்றும் கால்நடை யாவும் புவி சூடேற்ற வாயுக்களை காற்றுமண்டலத்தில் கலக்கின்றனச். உடனே, உணர்ச்சிவசப்பட்டு, ’சேற்றில் கால் வைக்காவிட்டால், மக்கள் சோற்றில் கை வைக்க முடியாது’, என்று டயலாக் எல்லாம் தேவையில்லை. விவசாயத்திலும், புவி சூடேற்ற வாயுக்களை குறைக்கும் முறைகள் உள்ளன. இது கரிக்குறைப்பு விவசாயம் (carbon farming) என்று அழைக்கப்படுகிறது.

  • கரிக்குறைப்பு விவசாயம் என்பது, உருவாகும் கரியமில வாயுவைக் காற்றில் கலக்காமல் பார்த்துக் கொள்வது. இந்த முறை, சில நாடுகளில் மட்டுமே சாத்தியம். ஆனால், இன்னும் வேறு வழிகள் உள்ளன
  • இன்னொரு முறை, மண்ணில் ஈரத்தை அதிகம் பாதுகாக்கும் பயிர்களை விளைவிப்பது
  • இன்னொரு கரிக்குறைப்பு முறை, மண்ணில் உழுதலைக் குறைத்தல். ஒவ்வொரு பயிருக்கும் உழுவது, மண்ணில் உள்ள சத்துக்களைக் குறைப்பதுடன், மண்ணிலிருந்து, கரியமில வாயுவையும் வெளியேற்றுகிறது.
  • கால்நடைகளின் உணவான புல்லிலும் கரிக்குறைப்பு முறைகள் உள்ளன. நீண்ட வேருடைய புல்வகைகள், முழுவதும் கால்நடைகளால் புல்லை உண்ண முடியாமல் பார்த்துக் கொள்கின்றன. மேலும், ஆழமான வேர், மண்ணை அரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

இங்கு சொல்லியுள்ள முறைகள் அனைத்தும் எல்லா நாடுகளிலும் சாத்தியம் இல்லை. ஆனாலும், விவசாயிகளுக்கும் இதில் பங்குண்டு. அந்தந்த ஊருக்கு தகுந்த முறைகளில் கரியமில வாயுவைக் குறைக்கும் முறைகளை விவசாயத் துறை உருவாக்க வேண்டும்.

இந்திய விவசாயிகளுக்கு சில நல்ல மற்றும் கெட்ட செய்திகள் இதில் அடங்கியுள்ளது. பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்த குழந்தைக்கு, ‘ஏ’ என்ற எழுத்திற்கு நாம் சொல்லிக் கொடுக்கும் சொல், ‘ஏர்’ அல்லது ‘ஏர் உழவன்’. தமிழ் படித்த அனைவர் மனதிலும் பதிந்த ஒரு சொல் ஏர். நல்ல வேளையாக ‘உ’ என்பதற்கு ‘உரம்’ என்ற சொல் ஆரம்பத்தில் சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை. எப்படி ஏர் கொண்டு, உழவர்கள் நிலத்தை உழுதார்கள்? இன்று எப்படி உழுகிறார்கள்? சற்று விரிவாகப் பார்ப்போம். ஏரை உழும் காலத்தில், அந்த மண்ணில் எதுவுமே இருப்பதில்லை. நீரைக் கொண்டு, நிலத்தைச் சுரண்டி, பிறகு விதை விதைக்கிறார்கள். உடனே 3 மாதத்தில் விளைச்சல் வேண்டும் என்று ரசாயன உரத்தையும் கொட்டுகிறார்கள். இதெல்லாம் நமக்கு பழக்கப்பட்டுவிட்டது. மேலும், பாரதிராஜா படத்தில் வரும் காட்சி போல, புழுதி பறக்க, பேருந்துகளும், கிராமங்களுக்கு வந்து போகின்றன.

இந்தக் காட்சியில் என்ன குறை? பல்லாயிரம் ஆண்டுகளாக விவசாயம் செய்தும், ஒன்றை நாம் உணரவில்லை. விதை விதைக்க, நிலப்பரப்பு முழுவதையும் உழத் தேவையில்லை. சிறிய அளவு இடைவெளி போதும் விதைக்கு. இதை regenerative farming என்று அழைக்கிறார்கள். உலகம் முழுவதும் நாம் செய்து வருவது destructive farming. இதில் மண் வளம் முழுவதும் பாதிக்கப்படுகிறது. உலகெங்கும் மண்ணரிப்பிற்குக் காரணம், நம்முடைய பழைய விவசாய முறைகள். இது அமெரிக்காவிற்கு அதிகமாகவே பொருந்தும். மிகவும் எந்திர மயமாக்கப்பட்ட அமெரிக்கா மற்றும் கனேடிய விவசாயம், பல்லாயிரம் ஹெக்டேர் நிலத்தை, இப்படி எந்திரம் மூலம் உழுது, மண்ணின் வளத்தை பாழடிப்பதோடு, உரத்தையும் கொட்டி, அந்த நிலத்தின் உயிர் சங்கிலியைக் கொன்று, பல இடங்களை பாலைவனமாக்கியுள்ளது. இதுவே தென்மேற்கு அமெரிக்கப் பகுதியின் மிகப் பெரிய பொருளாதாரப் பிரச்சனை.

மறுபயன்பாட்டு விவசாயத்தில், சில நல்ல இந்திய முறைகள், மற்றும் புதிய அணுகுமுறைகள் அடங்கும்.

  • அறுவடைக்குப் பின், நிலத்தை தரைமட்டம் ஆக்கத் தேவையில்லை
  • ஒரு பயிரை அறுவடை செய்த பின், இன்னொரு பயிரை விதைக்க வேண்டும்
  • விவசாய நிலம் சிறியதாக இருந்தால், பக்கத்து நிலச் சொந்தக்கார்ர்கள், தங்களுக்குள் ஒரு பயிர் ஏற்பாட்டைச் செய்து கொண்டால், அது மண் வளத்திற்கு நல்லது
  • கால்நடைகள் அவசியம். கால்நடைகள், இயற்கை உரத்திற்கு உதவுவதோடு, அவற்றின் கால்கள் மூலம், நிலத்தில் வாழும் சின்ன உயிரினங்களுக்கு பலவகைகளில் உதவுகின்றன.
  • இயற்கை கழிவுகளை வயல்களில் பயன்படுத்த வேண்டும்.
  • ஒரு இடத்தில் கால்நடைகள் மேய்ந்த பிறகு, அதே இடத்தில் மேய்ச்சல் நடக்க விடக் கூடாது. ஒரு மாதம் அல்லது இரு மாதம் இடைவெளி தேவை.
  • இவ்வாறு விவசாயம் செய்தால், மண்ணின் வளம் குறையாது. அத்துடன், மண்ணரிப்பு அதிகமில்லாததால், மழைநீர் மண்ணில் தங்கும். மண்ணரித்த நிலத்தில், மழை நீர் தங்குவதில்லை. அமெரிக்காவின் மிகப் பெரிய வயல்வரப்புகளின் நிலை இது.
  • புவி சூடேற்றத்தின் ஒரு பெரிய பகுதி, செழிப்பான நிலம், பாலைவனமாகுதல். இது desertification என்று அழைக்கப்படுகிறது. விவசாய நிலங்களில் இவ்வாறு பாலைவனமாதலுக்கு முக்கிய காரணம், நம்முடைய விவசாய முறைகள்.
  • இந்திய விவசாயிகள், தங்கள் நிலங்களை இவ்வாறு பாலைவனமாதலிலிருந்து காத்துக்கொள்ள, தங்களுடைய பாரம்பரிய கால்நடை முறைகள், மற்றும் மறுபயன்பாட்டு விவசாயத்தில் ஈடுபட்டால், புவி சூடேற்றத்தைக் குறைக்கலாம்.
  • பயிர்கள், எப்பொழுதும் நிலத்தில் இருப்பதால், கரியமில வாயு, நிலத்திற்குள் சென்றுவிடும். இல்லையேல், அது காற்று மண்டலத்தில் கலந்து, இன்னும் வெப்பமேற்றும்.
  • அமெரிக்காவில் 5% விவசாயமே, இந்த மறுபயன்பாட்டு முறையை பின்பற்றுகிறது. இது, 75% உயர்ந்தால், அமெரிக்காவின் கரியமில வாயு வெளியேற்றம் பெரிதும் குறைக்கப்படும். மேலும், உலகெங்கும் இந்த முறை பின்பற்றப்பட்டால், 2040 –க்குள், புவி சூடேற்றத்தின் முதல் குறைப்பை பார்க்க முடியும் என்று ஒரு ஆய்வு சொல்லுகிறது

உற்பத்தித்துறை பரிந்துரைகள்

அனல்மின் நிலையங்கள், கார், இரும்பு மற்றும் எஃகு, உலோகம், ராட்சச எண்ணெய் சுத்திகரிப்பு மையங்கள், சிமெண்ட் மற்றும் ப்ளாஸ்டிக் உற்பத்தியாளார்கள், உலகின் மிகப் பெரிய தொல்லெச்சப் பயனாளர்கள் மற்றும் உமிழ்வாளர்கள். இதற்கு அடுத்தபடியாக, மிகப் பெரிய உமிழ்வு, போக்குவரத்துத் தொழில் மற்றும் பயனாளர்களால் உருவாகும் கரியமில வாயு வெளியேற்றம்.

  • பெரும்பாலும், அரசாங்கங்கள், கரிவரி (carbon tax) மூலம், இதைச் சரிக்கட்ட முயன்று வருகின்றன. கனடாவில் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலின் விலையில், கரிவரி உண்டு. இது ட்ரூடோ அரசாங்கத்தின் ஈர்ப்பைப் பெருவாரியாக குறைத்துள்ளது. பக்கத்தில் உள்ள அமெரிக்காவில், எதற்கும் கரிவரி கிடையாது. இதனால், கனேடிய தொழில்களுக்கு இது ஒரு மிகப் பெரிய பாரம் என்ற ஒரு வாதம் தொடற்கிறது.
  • வரி என்பது, முதலில் கடினமாக இருந்தாலும், பெரும்பாலும் வியாபாரங்கள், அதை எப்படியாவது நுகர்வோரிடம் வசூலிப்பதால், கரியமில வாயு குறைவதில்லை. இதை உற்பத்தியாளர்களுக்கு, தங்களது லாபத்தை அதிகரிக்கும் வழியாக அரசாங்கம் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்பது இன்னொரு வாதம்.
  • மின் போக்குவரத்திற்கு அரசாங்கங்கள் சரியான ஊக்கம் அளிப்பதில்லை என்பதும் இன்னொரு குறை.
  • நீர்வளம் குறைவான நாடுகளான இந்தியா போன்றவை, நீரைச் சேமிக்கும் புது முயற்சிகளில் ஈடுபட வேண்டும். குறைந்த நீரில் உணவு, கழிவு, விவசாயம், உற்பத்தி போன்ற முயற்சிகள் அவசியம்.
  • இதுவரை உலகின் 50 நாடுகள், ஏதோ ஒரு வகையில் உமிழுக்கு விலை வைக்க முயன்றுள்ளன. பல வளர்ந்த நாடுகளில், அரசாங்கங்கள் இன்னும் தொல்லெச்ச எரிபொருள் தயாரிப்பாளர்களுக்கு மானியம் வழங்கி வருகின்றன. புவி சூடேற்றத்திற்கு எதிரான விஷயம் இது. இதை உடனே நிறுத்த வேண்டும். கட்சி நிதிக்காக தொலெச்ச எரிபொருள் தயாரிப்பாளர்களை எதிர்த்து இயங்குவதில் அரசாங்கங்கள் தயக்கம் காட்டுகின்றன.
  • கரியால் இயங்கும் அனல்மின் நிலையங்கள் யாவும் மூடப்பட வேண்டும். பல அரசாங்கங்கள் இதில் ஆமை வேகத்தில் செயல்பட்டு வருகின்றன. யூரோப்பிய அரசாங்கங்கள் இந்த விஷயத்தில் அமெரிக்கா, சீனா, இந்தியாவை விட அதிக வேகம் காட்டுகின்றன.
  • வட அமெரிக்காவின் ரயில்கள் பெரும்பாலும் டீசலில் இயங்குகின்றன. ரயில் தொழில் சோர்வடையத் தொடங்கிய காலத்திலிருந்து (1950), ரயில் போக்குவரத்து மின்சாரமயமாக்கப்படவில்லை. இந்தியா போன்ற வளரும் நாடுகள், இந்த விஷயத்தில், வளர்ந்த அமெரிக்கா, கனடாவை விட முன்னேறியுள்ளது.

பல மில்லியன் பெட்ரோல் கார்களை இன்று தயாரிப்பதில் வளரும் நாடுகளான இந்தியா, சைனா ஆர்வம் காட்டுகின்றன. சைனா, 2030 –க்குள் பெட்ரோலிலிருந்து விடுபட திட்டமிட்டுள்ளது. இந்தியாவிற்கு இவ்வகைத் திட்டம் எதுவும் இல்லை.

  • தயாரிப்பில் ஈடுபடாத நிறுவன்ங்கள், புவி சூடேற்ற போராட்டத்திற்கு உதவலாம். உதாரணத்திற்கு, இன்ஃபோஸிஸ், கூகிள், போன்ற நிறுவனங்கள், தொழிற்சாலைகளை இயக்குவதில்லை. ஆனாலும், பெருவாரியான ஊழியர்கள் புழங்கும் இவ்வகை நிறுவனங்கள், ஒரு கரியமில மதிப்பீடு செய்து, எங்கெல்லாம், அதைக் குறைக்கலாம் என்று நடவடிக்கை எடுத்தால், நல்லது. அதிகம் காகிதம், தண்ணீர், மின்சாரம், எரிபொருள் இவற்றைப் பயன்படுத்தும் இவ்வகை நிறுவனங்கள், தங்களது கரியமில கால்பதிவை (carbon footprint) குறைத்தால், சமூகத்திற்குப் பயனாக இருக்கும். ஆப்பிள் நிறுவனம், தன்னுடைய புதிய தலைமையகத்தை, முற்றிலும் சூரிய ஒளியில் இயங்கும் ஒரு கட்டிடமாக மாற்றியுள்ளது பாராட்டத்தக்கது.
  • இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் போன்ற இந்திய நிறுவனங்கள், ஏராளமான பேருந்துகளில் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லுகிறார்கள். இவ்வகை பேருந்துகள் ஹைபிரிட் அல்லது மின்னூர்த்திகளாக மாற்றுவதும் இவ்வகை நிறுவனங்கள், தங்களது கரியமில கால்பதிவை (carbon footprint) குறைக்க உதவும்.
  • பெரும் அளவில் பொருட்களை வாங்கும் நிறுவனங்கள், இவ்வகை ராட்சச சேவை நிறுவனங்கள். இவை, தங்களது வழங்கும் நிறுவனங்கள் சரியான பேணியலுகை சான்றிதழ் பெற்றிருந்தாலே (sustainability certification of vendors) பொருட்களை இந்நிறுவனங்களுக்கு விற்க முடியும் என்று திட்டங்கள் கொண்டு வர வேண்டும்.
  • அப்படியே பல ஆவணங்களை அச்சடிக்கத்தான் வேண்டும் என்றால், தகுந்த எழுத்துருக்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சில எழுத்துருக்கள், மற்றவற்றை விட, குறைவாக, அச்சடிக்கும் எந்திரத்தில், மையைப் பயன்படுத்தும்.

கிராமப்புறத்திற்கான பரிந்துரைகள்

  • 70% இந்திய கிராமங்களில் (ஆப்பிரிக்காவிலும் இதே நிலைதான்), அடுப்பு என்பது மரத்தை எரிப்பது. அடுப்புக்கரியை எரிக்கையில் வெளியாகும் கரியமில வாயு மற்றும் புகை புவி சூடேற்றம் மற்றும் பல மனித நோய்களுக்கு வழி வகுக்கும் ஒரு பழைய முறை.
  • கிராமங்களில், அங்கே கிடைக்கும் கால்நடைகள் மற்றும் மனிதக் கழிவுப் பொருட்களைக் கொண்டு உருவாகும் உடற்கழிவுவாயு எந்திரம், இந்த கரியமில வாயு மற்றும் புகையைக் குறைக்கும்.
  • தெருவிளக்குகள் சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகளாக மாற்றுவது. இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற இடங்களில், சூரிய ஒளிக்கு பஞ்சமில்லை
  • இவ்வகை வசதிகள் மற்றும் புதிய விவசாய முறைகள், கிராமங்களைத் துறந்து, நகரை நோக்கிப் பயணிக்கும் ஜனத்தொகையைக் குறைக்க உதவும்.

இந்தப் பரிந்துரைகள் எல்லாவற்றையும் நிறைவேற்றினால், புவி சூடேற்றத்திற்கு ஒரு தீர்வு கிடைத்து விடுமா? நிச்சயமாகச் சொல்ல முடியாது. மேலும், இந்த பரிந்துரைகளில் சிலவற்றை, பல நாடுகள் இன்று பின்பற்றி வருவதும் உண்மை. அப்படி இருக்கையில், இந்தப் பிரச்சனையின் மூலத்தை நாம் கண்டு கொண்டுவிட்டோமா? அல்லது, பிரச்சனையின் மையத்தை விட்டு விட்டு, வேறு எதையோ இங்கு அலசிக் கொண்டிருக்கிறோமா?

எல்லாம் நியாயமான கேள்விகள். முதலில், இந்தப் பிர்ச்சினையின் பெரும் காரணங்களை அலசுவோம். அதிலிருந்தே, இந்தப் பிர்ச்சினை ஏன் இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்று உடனே தெரிந்து விடும்.

  1. உலகின் பணக்கார 10% மக்கள், பூமியின் 50% கரியமில வாயுவிற்கு காரணமாக உள்ளார்கள். இதனால், எந்த ஒரு மாற்றமும் இவர்களிடமிருந்துதான் தொடங்க வேண்டும்.
  2. உலகின் மிக ஏழையான 3.5 பில்லியன் மக்கள் உருவாக்கும் கரியமில வாயு, பூமி அளவில் வெறும் 10% தான்.
  3. வெறும் 100 நிறுவன்ங்கள் உலகின் கரியமில வாயுவில் 71% உமிழ்கிறார்கள். இந்த நிறுவன்ங்கள் உலகெங்கும் உள்ளன. இவற்றின் பட்டியல் இதோ:
    https://www.activesustainability.com/climate-change/100-companies-responsible-71-ghg-emissions/
  4. மேலே உள்ள பட்டியலில், பெரும்பாலும் தொல்லெச்ச எரிபொருள் நிறுவனங்கள் என்றால், உங்களுக்கு எந்த ஒரு வியப்பும் இருக்க நியாயமில்லை. இதில் கோல் இந்தியாவும் அடக்கம்.

தீர்வுகள் என்று தொடங்கிவிட்டு, இவற்றை இங்கே சொல்ல என்ன காரணம்? சில சக்திகள், பூதாகாரமான சில பிர்ச்சினைகளுக்கு தீர்வு காண தடுப்பு முயற்சிகளை தங்களது, அரசியல், பணபலத்தால், சாதித்து வருவதை, இந்தத் தொடரில் நீங்கள் படித்திருப்பீர்கள். இவ்வகை சக்தி வாய்ந்த நிறுவனங்கள், தங்களுடைய லாபத்தைக் காக்க, இந்தப் பிர்ச்சினையைத் திசை திருப்ப, கடந்த 50 ஆண்டுகளாக, பல முயற்சிகளில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்று வந்துள்ளார்கள். இவர்களது சுயநோக்கு மற்றும் குறுகிய பார்வை, நம் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது.

விஞ்ஞானத்தில் எந்த சந்தேகமும் இல்லை. விஞ்ஞான திரித்தல், பல அபத்த கேள்விகளை எழுப்பியதோடு, டிரம்ப் போன்ற விஞ்ஞான பின்புலம் இல்லாதவர்களையும் நம்ப வைத்து, தங்களுடைய சுயநலத்திற்காக, உலகை ஒரு அபாயப் பாதையில் தள்ளிவிட்டு, வேடிக்கை பார்ப்பது வேதனைக்குரியது. இதுவரை நாம் பார்த்த விஞ்ஞான திரித்தலில் முடிசூடா மன்னன், பருவநிலை மாற்றம் சார்ந்த திரித்தல்தான். ஏனென்றால், பழைய சிகரெட், பெட்ரோலில் ஈயம், ஜி.எம்.ஓ., ஓஸோன் அடுக்கு, என்று பட்டை தீட்டிய பல அணுகுமுறைகளின் ஒட்டுமொத்த திரித்தல் இது.

அடுத்த சில பகுதிகளில், இந்தப் பிர்ச்சினையைத் தீர்க்க விடாமல் தடுக்கும், விஞ்ஞான திரித்தல்களை விவரமாகப் பார்ப்போம்.

Series Navigation<< விஞ்ஞானத் திரித்தல்கள் – புவிச் சூடேற்றம் –பகுதி 10புவி சூடேற்றம் பற்றிய திரிபுகள் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.