பிற மொழி இலக்கியம் மற்றும் ஈழ இலக்கியம்

பங்கிம் சந்திர சட்டோபாதியாயர்

தமிழில்: தா. நா. குமாரசுவாமி பி ஏ

சந்தியா பதிப்பக வெளியீடாக இந்த நூலை சிங்கப்பூர் பொது நூலகத்திலிருந்து எடுத்து வந்தேன்.

பங்கிம் சந்திர சட்டோபாத்யாயரை வந்தே மாதரம் பாடலை எழுதிய கவிஞராக நாம் எல்லாரும் அறிவோம். தாகூர், மஹாத்மா காந்தியடிகள், அரவிந்தர் என பலரோடு சுதந்திரபோராட்ட காலத்தில் ஒன்றாக உழைத்தவர் பங்கிம் சந்திரர்.

கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, கலெக்டர், மாஜிஸ்திரேட் போன்ற பதவிகளில் பணியாற்றி, ராய் பகதூர் பட்டம், CMEOIE பட்டம் போன்றவற்றை பெற்றிருந்தாலும், தான் பணியாற்றிய காலத்தில் சந்தித்த அனுபவங்கள் இவரை வெள்ளையருக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட வைத்தன.

தாகூர் பங்கிம் சந்திரருக்கு செலுத்திய புகழ் அஞ்சலியில், பங்கிம் தம் இரு கைகளில் ஒன்றை அவர் நல்ல இலக்கியம் எழுத பயன்படுத்தினார். மற்றொன்றை இலக்கியம் படைக்க ஆசைப்படும் இளைஞர்களை வழிநடத்த பயன்படுத்தினார் என்று எழுதினார்.

1891இல் மறைந்தவர் பங்கிம் சந்திரர். 160 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட நாவல் எப்படி இருக்கும் என்ற முனைப்போடு வாசிக்க ஆரம்பித்தேன்.

ஒரு நல்ல இலக்கியம் நம்மை பாதிப்பதோடு நிற்காமல், அதன் தொடர்பில் நம்மை செலுத்துவதாக இருக்க வேண்டும். கபாலகுண்டலா என்ற கதை, காபாலிகனால் வளர்க்கப்பட்ட நல்ல மனம் கொண்ட பெண் ஒருத்தியைப் பற்றியது. கிளைக்கதையாக ஜஹாங்கீரின் அரசை நடத்திய நூர் ஜஹான் என்ற மெஹருன்னிசா பற்றியும் நீள்கிறது. 1866 இல் பதிப்பிக்கப்பட்ட இந்த கதையைக்கொண்டு, அதே பெயரில் நான்கு திரைப்படங்கள், பல தொலைக்காட்சித் தொடர்கள் இருக்கின்றன.

தா.நா.குமாரசுவாமி வங்காள மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். அவர் மொழிபெயர்த்தபோது கூகிள் போன்ற இந்நாளைய வசதிகள் எதுவுமில்லை. எல்லா அத்தியாயத்திலும் பரிபாடல், திருக்குறள், தேவாரம், பெருங்கதை, திருக்கோவையார், சூளாமணி, கம்பராமாயணம், குறுந்தொகை, பெரியாதிருமொழி போன்றவற்றிலிருந்து ஓரிரு பொருத்தமான வரிகளைச் சேர்த்திருக்கிறார். ஒரு மொழிபெயர்ப்பாளரின் வேலை, வெறும் மொழிமாற்றம் மட்டுமல்ல, பிறமொழி வாசகனுக்கும், ரசனை கெடாமல் அந்த படைப்பைக் கொண்டு சேர்ப்பது என்பதை சொல்லாமல் சொல்கிறது இந்த புத்தகம்.

எனக்கு இந்த புத்தகத்தில் வருணனைகள் நிறைய இடங்களில் தத்துவங்களாக நீண்டது பிடித்திருந்தது. இந்தக்கதையில் வரும் மதி பிபி கதாபாத்திரத்தின் மன அமைதியின்மை, காமத்தினால் எழுந்த உணர்ச்சியை விவரிக்கும் இடத்தில், ஒரு சிறு விதை முளைப்பதை யாரும் பார்க்கமாட்டார்கள்; அந்த விதை செடியாகி, பெரு விருட்சமாகிவிட்டால், அதன் கீழே முளைத்த பல சிறுசெடிகள் பிழைக்க முடியாது என்று அவளின் தீய எண்ணத்தோடு கூடிய காம உணர்வை விவரித்திருந்தது மனதில் நின்றது.

இப்போதெல்லாம் உலகெங்கும் ஷாம்பூ விளம்பரங்கள் அலையாய் விரித்த கூந்ததலைக் கொண்டாடித் தீர்க்கின்றன. பங்கிம் சந்திரர் காலத்தில் யோகினிகள் மட்டுமே தலைவிரி கோலமாய் இருப்பார்களாம். நிகழ்காலத்தில் எல்லாரும் யோகினிகள் தானோ? 🙂

சரஸ்வதி நதியின் கரையில் தான் இந்தக்கதையை சொல்லப்படும் சப்தக்ராம் இருந்திருக்கிறது. ஒரு ஆறு தன் போக்கை மாற்றிக்கொண்டால், அதை சுற்றியுள்ள ஊர்களின் போக்கும் மாறிவிடும் தானே. பாகீரதி நதி தன் கிளையாக சரஸ்வதி நதியாக ஓடிக்கொண்டிருந்த நாட்களில் சப்தகிராமம், பல கப்பல்கள் வர்த்தகத்திற்காக வந்து சென்ற துறைமுக நகரம். பதினாறாம் நூற்றாண்டு அளவில், அந்த இடத்தை கொல்கொத்தா பெற்றுவிட்டது.

ஒரு ஓவியர் தான் வரையும் ஓவியத்தை முதலில் கோடுகளாக தீற்றி பின்னரே நிறைவு செய்வதைப்போல, பல கதாபாத்திரங்களை சுவைபட முடிச்சிட்டு நிறைவு செய்கிறார் பங்கிம் சந்திரர்.

இன்றைக்கு பெண்களில் பலரும் பெருநிறுவனங்களில் உயர் பதவிகளில் இருக்கின்றனர். ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால், பல்மொழித் திறன்களோடு, நாட்டியக்கலை, ஓவியம் போன்றவற்றில் சிறந்தவராக, ஜஹாங்கீரின் ஆட்சியில் வல்லமை பெற்ற ஒருவராக, முகலாய அரசியலில்,தன் பெயர் பதித்த நாணயம் வெளியிட்ட ஒருவராக மெஹர் உன்னிசா என்ற நூர்ஜஹான் காட்டப்பட்டிருக்கிறார். நூர் ஜஹான்- சலீம் என்ற ஜஹாங்கீரின் காதல் இன்றளவும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஆராயும் ஒன்று தான்.

பட்டாணியர்கள் படையெடுப்பு, போர்த்துகீசிய மாலுமிகள் கொள்ளை, முகலாயர்களின் ஆட்சி போன்றவற்றைப் பின்புலமாக கொண்டிருக்கிறது. தமிழில் நூற்றுநாற்பது பக்கங்களுக்குள் இருக்கும் இந்த புத்தகம்.

இந்திய தேசம் தன் எழுபத்தைந்தாவது குடியரசு தினத்தைப் போற்றும் வேளையில், எனக்குள் இந்த புத்தகம் எத்தனை விரிந்த நிலப்பரப்பும், வித்யாசமான மனிதர்களும், பல உயர் மொழிகளும் கொண்டது இந்த தேசம் என்ற பெருமிதத்தை தந்தது.

முற்றும்

02. ஈழ இலக்கியம்- வலசைப்பறவைகள்

ஈழப்போர், இலங்கை வாழ் தமிழின மக்களுக்கு எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும், என்றும் மாறாத வலியை உண்டாக்கி வைத்திருக்கிறது. அந்த வலியையும், வாழ்வியல் சிக்கல்களையும் முன்வைத்து பல இலக்கிய படைப்புகள் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன.

அவ்வகையில் சாமானிய மக்களின் வாழ்க்கை சிக்கல்களைச் சொல்லும் மற்றுமொரு படைப்பு, வலசைப் பறவைகள் (2019 வெளியீடு)

இலங்கை என்னும் அழகான, வளமான தேசத்திலிருந்து உலகின் பல நாடுகளுக்கு,ம் புலம் பெயர்ந்து தமிழ் மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இந்த புத்தகத்தில் வரும் கதாபாத்திரங்கள், அற வழியில் அமைதியான வாழ்க்கை நடத்தும் சராசரிக் குடும்பத்தினர்.

1987 முதல் 1990 வரை, இலங்கையில் இந்திய அமைதி படையினரால் பல சாமானிய மக்கள் கொல்லப்பட்டும்; பல பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுமிருந்திருக்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை இந்த வலசைப்பறவைகள்.

பல ஆண்டுகளுக்கு முன்னால், தொலைத்தொடர்பு துறையில் வேலை நிமித்தமாக,பெல்ஜியம் நாட்டில், பிரசெல்ஸ் நகரத்தில், புதிதாய் வந்து சேர்ந்த வாரத்தில், வழிதெரியாமல், ஒரு கடையின் அருகில் நடந்துகொண்டிருந்தேன். “என்ன வேணும் சகோதரி?” என்ற சொல்லாடலால், என் கன்னங்களில் கண்ணீர் வழிந்தது. கடை நடத்துபவர், இலங்கைத்தமிழர், என்பதை அப்போது தான் கவனித்தேன்.

இந்த புத்தகம் எனக்கு இலங்கைத்தமிழர்களின் வாழ்வியலை அறிமுகப்படுத்தியது.

வலசை பறவைகளின் ஆசிரியர் சிவ ஆரூரன் தமிழ், ஆங்கிலம் என்று இருமொழிகளிலும் தன் படைப்புகளைப் படைத்து வருகிறார்.

தமிழ்நாட்டில் திருமணத்துக்காக பெண் பார்க்க வருவார்கள். ஆனால் யாழ் பகுதியில் மாப்பிள்ளை கேட்டு, பெண் வீட்டார் அணுகுவார்கள் என்பது எனக்கு புதியதாய், வரவேற்கும்படி இருந்தது.

திருமணத்துக்குப் பெண் பார்க்கும்போது, பெரும்பாலான தமிழ்நாட்டுச் சைவக்குடும்பங்களில், பெண் சைவ உணவுப்பழக்கம் உள்ளவளாக இருக்க வேண்டும் என்பது ஒரு கட்டாயம். ஆனால் ஆணின் நாவிற்கு இந்த கட்டாயச்சட்டம் எதுவுமில்லை.

உரும்பிராய் பகுதியில் வசிப்பவர்களாக கதையின் முக்கிய மாந்தர்கள் இருக்கிறார்கள்.இந்தக் கதையின் நாயகன், தன் மனைவிக்காக மரக்கறி உணவு உண்பவராகிறார்.

பல சொற்றொடர்கள், தமிழ்நாட்டுக்கும், இலங்கைக்கும் பயன்பாட்டில் கண்ட வேறுபாட்டால், முகத்தில் புன்னகையை வரவழைத்தன.

உதாரணத்திற்கு, புகழ் பெற்ற சோதிடர் என்று தமிழ்நாட்டில் சொல்லப்படுவது, யாழ்மொழியில், புகழ் பூத்த சோதிடர் என்பதாகக் கண்டேன்.

இதைப்போல, பாதி படித்து முடித்த புத்தகத்தை, குறையாக வைத்திருந்த புத்தகம் என்று எழுதியிருந்தார்.

தமிழ்நாட்டு பயன்பாட்டில், மார்பை நிமிர்த்தி நடந்தான் என்பதை, இந்தக்கதையில் மார்பை மலர்த்தி நடந்தான் என்றிருக்கக் கண்டேன்.

பனங்கிழங்கு மாவைக்கொண்டு தயாரிக்கப்படும் ஒடியல் கூழ் என்ற ஒரு வகையான யாழ்ப்பாண உணவைப்பற்றித் தெரிந்துகொண்டேன்.

இது பெரும்பாலும் காலை உணவாம். பெண்களுக்கான கருப்பை சம்பந்தமான பிரச்சனைகளுக்குப் பனங்கிழங்கு ஒரு சிறந்த மருந்தும் கூட.

யாழ்ப்பாணப்பகுதியில் நீர்பாளையம் என்பதை தமிழ்நாட்டில் கூட்டாஞ்சோறு என்கிறார்கள்.

கதிரை என்றால் நாற்காலி; மூக்குமின்னி என்பது மூக்குத்தி; மணிவாழை என்பது கல்வாழை.தேசிக்காய் தண்ணீர் என்பது எலுமிச்சை சாறு.

இப்படிப் பலவற்றை அறிந்து கொள்ள இந்த வாசிப்பு உதவியாக இருந்தது.

பாஞ்சாலி சபதம்: திரௌபதி துரியோதனன் சபையில் துகிலுரியப்பட்ட காட்சி, பல எழுத்தாளர்களால் வெவ்வேறு இடங்களில் கையாளப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் படித்த, திருமதி ஜெயந்தி சங்கரின் ஆங்கிலப் புனைவான தபூலா ரசா (Tabula Rasa) என்ற புத்தகத்திலும், அதன் நீட்சியைக் கண்டேன்.

வலசைப் பறவைகளில், வன்கொடுமை செய்யப்பட்ட நாயகி, தனக்கு ஏன் கடவுள், திரௌபதிக்கு புடவை தந்ததைப்போல தரவில்லை என்று கேட்கும் இடத்தில், திரு சிவ ஆரூரன் அவர்களின் சிந்தனைத்தெளிவு மெச்சும்படியாக இருந்தது.

நிர்வாணமே சத்தியம்; ஆடைகளை உருவாக்கியவர்கள் மனிதர்கள்; கை கால் என்று என்ன போனாலும் இறைவன் அதை மீட்டுக்கொடுக்க மாட்டார் என்று தேற்றுவதைப்படித்து, இவர் போல ஆண்கள் இன்னும் அதிகமாக வேண்டும் என்று தோன்றியது.

உலகில் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்கு என்று சரிக்கு சமமான பாதுகாப்பு கிடைக்குமோ தெரியவில்லை.

கொரோனா காலத்தில் பிள்ளைகளை நோய்க்கு பயந்து வீட்டில் இருக்கச்செய்தாலும், பெண்குழந்தைகளின் பாதுகாப்பு இப்போது முன்பை விட கேள்விக்குறியாகி வருகிறது.

“தமிழ் வருடப் பிறப்பிற்குப் பிறகு காண்டாவனம்” என்று ஒரு வரி இருந்தது.

தமிழ் வருடப்பிறப்பு, தை ஒன்றுக்கும், சித்திரை ஒன்றுக்குமாக அரசியலாகிவிட்ட இந்நாளில், காண்டாவனம் என்றால் என்ன என்று அறிய ஆவல் கொண்டேன்.

காண்டாவனம் என்பது அக்னி நட்சத்திரம். இந்த சொல் ஒரு காட்டைக் குறிக்கிறது. இந்திரனுக்கு சொந்தமான காடு, அவன் கண்முன்னே அக்னி தேவனால் அழிக்கப்பட்டது, என்று பெரிய திருமொழியில் வரும் பாசுரம் ஒன்றையும் கண்டேன்.

காண்டாவன மென்பதொர் காடமரர்க் கரையனது கண்டவன் நிற்க,முனே
மூண்டாரழ லுண்ணமு னிந்ததுவும்அதுவன்றியும் முன்னுல கம்பொறைதீர்த்
தாண்டான்,அ வுணனவன் மார்வகலம் உகிரால்வகி ராகமு னிந்து, அரியாய்
நீண்டான்குற ளாகிநி மிர்ந்தவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே. (1079)

நூலாசிரியர் தற்போது சிறையிலிருந்து தான் எழுதுகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உணவுப்பழக்கம், திருமணம் சார்ந்த வழமைகள், தெளிவான நீரோட்டம் போன்ற வாழ்க்கை, புறவாழ்வு சார்ந்த சிக்கல்களால் அடையும் பெருமாற்றம், உறவுகளுக்கிடையே இருக்கும் பாசம் என்று பலவற்றைக் கண்முன்னர் கொண்டு வரும் மாயத்தைச் செய்திருக்கிறார்.

இலங்கை வாழ்க்கையை அறிய ஆசைப்படுபபவர்களுக்கு ஒரு நல்ல வாசிப்பு அனுபவம், இந்த புத்தகம்.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.