நடுவில் பல வேலையாட்கள் வந்து போன பிறகு, புதிதாக ஒரு இளைஞன் வேலைக்கு வந்தான். வேலையில் குறை ஏதும் சொல்ல முடியாதென்றாலும், பெண்களைப் போல, இடுப்பை ஒசித்து நடப்பது, பெண்களைப் போலவே கைகளை ஆட்டிப் பேசுவது போன்றவை எல்லாம் எனக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தின. அவனது பெயர் கூட மறந்து விட்டது. எனவே அவனை பிருஹன்னளை என்றே அழைக்கப் போகிறேன். கம்புக்கு கால் முளைத்த மாதிரி, ஹாங்கரில் சட்டையை மாட்டி விட்டது போல பிருஹன்னளை மிகவும் ஒல்லி. என் வீட்டு வேலைகள் ஒழுங்காக நடந்து கொண்டிருந்ததால், நான் அவ்வளவாக கவலைப்படவில்லை. ருசியான சாப்பாடு கிடைப்பதால் கணவருக்கும் மகிழ்ச்சி. கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு உடம்பு தேற ஆரம்பித்ததும், அவன் முதலில் கவனம் செலுத்தியது தன்னுடைய முடியில் தான். பெண்களைப்போல நடுவகிடு எடுத்து, எண்ணெய் தடவி வழவழவென வாரி இருப்பான். வகிட்டில் கொஞ்சம் சிந்தூரம் மட்டும் இட்டுக்கொண்டிருப்பானேயானால், புதிதாக திருமணம் ஆகி வந்திருக்கும் மணமகள் என்றுதான் நினைக்கத் தோன்றும்.

எனக்கு அவனால் மிகுந்த ஆசுவாசமும் அமைதியும் கிட்டியது. நாள் முழுவதும் ‘மாதாஜி மாதாஜி’என்று தொண்டை வறண்டு விடும் அளவுக்கு பேசிக்கொண்டே இருப்பான். என் கணவருக்கு ருசியான சாப்பாடு சமைத்து தருவான். எங்கள் செல்ல நாயை குழந்தையைப் போல பராமரிப்பான். வெளியே நடக்க அழைத்துச் செல்வான். கொஞ்ச காலமேனும் இவன் என்னோடு தங்கிவிட்டால், காற்றில் படபடப்பதைப் போன்ற வாழ்க்கையில், ஒரு ஸ்திரத் தன்மை வரும் என்று எனக்கு தோன்றியது. என் மனமும் அதையே விழைந்தது.
பெரிய அக்கா (லதா மங்கேஷ்கர்)பெடர் ரோட்டில் குடியேறிய புதிதில், அவரிடமும் யாரோ ஒரு பிருஹன்னளையை வேலைக்கு அனுப்பி வைத்ததாகச் சொன்னது எனக்கு நினைவு வந்தது. ” பத்மா, அவன் மிகவும் விசுவாசமானவன். நான் ரெக்கார்டிங் முடிந்து வரும்வரை எனக்காக உறங்காமல் காத்திருப்பான். உடை மாற்றிக்கொள்ள துணிகளை தந்துவிட்டு, சாப்பாட்டை சூடு செய்து பரிமாறுவான். வேலையிலிருந்து திரும்பும் கணவனிடம், மனைவி, அந்த நாள் முழுவதும் நடந்த நிகழ்ச்சிகளை ஒன்றுவிடாமல் பகிர்ந்து கொள்வதைப் போல, வீட்டில் நடந்த எல்லாவற்றையும் என்னோடு பகிர்ந்து கொள்வான்.

“தீதி, என்னை தயவுசெய்து வெளியே அனுப்பாதீர்கள். இங்குதான் இத்தனை ஆண்கள் இருக்கிறார்களே, அவர்களில் எவரையேனும் அனுப்புங்கள். வெளியே சென்றால், வேலையற்ற வெட்டிப்பயல்கள் என்னை கேலி செய்து வம்பிழுக்கிறார்கள்” என்பான்.
அவனில்லாமல் வீடு எப்படி இருந்திருக்கும் என என்னால் கற்பனைகூட செய்ய முடியாது. அவ்வளவு விசுவாசமானவன். ஆனால், ஒரு நாள் நான் ரெக்கார்டிங் முடிந்து வீடு திரும்புகையில் அவன் போய் விட்டிருந்தான்” என்றார் லதா தீதி.
இந்த விஷயம் நினைவுக்கு வரும் போதெல்லாம் எனக்கு என் பிருஹன்னளையும் ஒருநாள் போய்விடுவானோ என்று அச்சம் ஏற்படும். நான் சில சமயம், சில மணி நேரங்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதுண்டு. திரும்ப வந்து பார்க்கையில், அனைத்தும் விட்டுச்சென்ற மாதிரியே இருக்குமா என்ற அச்சம், கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது. இனிமேல் அவன் எங்கும் போக மாட்டான் என நான் நினைக்கத் தொடங்கினேன்.
ஒருநாள், நான் படியேறி, வீட்டுக்குள் நுழைகையில், ஒரு பெண், எனக்கு முன்னதாக கீழே இறங்கிக் கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும், எனக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, மார்க்கெட் இருக்கும் திசையில் நடக்கத் தொடங்கினாள். காவல்காரனிடம் “இந்தப் பெண் யார் ?”எனக் கேட்டதற்கு, அவன், ‘இந்தப் பெண், கமலோடு உங்கள் வீட்டு மாடியில் தான் தங்கி இருக்கிறாள்’ என்றான். கமலா? அது யார் எனக் கேட்டேன் உங்கள் வீட்டில் வேலை செய்யும் இளைஞனின் பெயர் தான் கமல் என்றான். எனக்கு ஏன் இதைப்பற்றி முன்னமே சொல்லவில்லை என காவல்காரனி டம் கேட்டேன். ‘அவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களாம்’ என காவல்காரன் பதிலளித்தான்.
திருமணமா? நான் வாயை மூடிக்கொண்டு வீட்டுக்குள் சென்றேன். இவன் என் கணவருடன் ஹாலில், தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் அமர்ந்து கொண்டிருந்தான். இப்போது கணவருக்கு முன்பாக வைத்து கேட்டால், கணவர் அவனை தோளில் தட்டி பாராட்டுவதோடு நிற்காமல், என்னை திருமணத்திற்கான ஏற்பாடுகளை ஆரம்பிக்க சொல்வார். எதற்கு வீண் வம்பு என்று நான் என் படுக்கை அறைக்குள் சென்றேன்.
இவன் என் பின்னாலேயே தண்ணீரை எடுத்துக்கொண்டு வந்தான். எனக்கும் அப்போது தண்ணீர் தேவையாக இருந்தது. குடித்துவிட்டு, ” நீ இப்படி செய்வாய் என நான் எதிர்பார்க்கவே இல்லை. அந்தப் பெண் உன்னோடு உன் அறையில் தங்கியிருக்கிறாளாமே! நீ என்னிடம் ஒரு வார்த்தை கேட்பது அவசியம் என நினைக்கவில்லையே! இது என்ன வீடா அல்லது சத்திரமா? என கோபத்துடன் கேட்டேன்.
அவன் மௌனமாக நின்றுக் கொண்டிருந்தான். என் கணவர், சூழ்நிலையின் அழுத்தத்தை உணர்ந்து, அவர் பாடல்களை பயிற்சி செய்யும் அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டார்.
“உன் மீது நான் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன் என்பது உனக்கு நன்றாக தெரியும். இந்தப் பெண் கடந்த பத்து பதினைந்து நாட்களாக உன்னுடன் தங்கியிருக்கிறாளாமே! நீ என்னிடம் அனுமதி கேட்பது ஒரு புறம் இருக்கட்டும், என்னிடம் சொல்ல வேண்டியது அவசியம் என்று கூட நினைக்கவில்லையே, அது ஏன்? என்று கேட்டேன்.
“மாதாஜி, இவள் நேபாளத்திலிருந்து வந்தபோது தங்க இடம் இல்லை. அதனால் என் அறையிலேயே தங்கிக் கொண்டாள். நாங்கள் இந்த ஞாயிறு திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். நான் உங்களிடம் சொல்லலாம் என்றுதான் இருந்தேன். அன்று எனக்கு விடுமுறை தேவைப்படும் இல்லையா” என்றான்.
நான் பீரோவிலிருந்து மணமகளுக்கு புதுப் புடவையும் சல்வார் கமீஸும் தேர்ந்தெடுத்து, ஒரு பையில் இட்டு அவனிடம் கொடுத்தேன். மறுநாள் திருமணம் நடந்தேறியது. அன்று காவல்காரன், டிரைவர் என யாரும் வேலைக்கு வர வில்லை. வீட்டுக்கு அருகில் இருந்த ஆரிய சமாஜ் கோவிலில் திருமணம் முடித்து, காவற்காரனின் வீட்டில் விருந்து சமைத்து உண்டு களித்து, மறுநாள் சாவகாசமாக எல்லோரும் வந்தார்கள். பிருஹன்னளையும் புது மணப்பெண்ணும் என் பாதம் தொட்டு வணங்கினர். நானும் ஆசியளித்தேன். இப்படியாக, இதுவும் நடந்தேறியது.
இனி மறுபடியும், பழைய குருடி கதவைத் திறடி என வேலைக்காரர் வேட்டை ஆரம்பிக்கவேண்டும். என் வீடு இவர்களுக்கு ஒரு பயிற்சிக்கூடம் போல ஆகிப்போனது என்று நினைக்கையில் எனக்கு சிரிப்பு வந்தது.
ரஹீமை நான் முன்பே படித்திருக்க வேண்டும்.
ஹே ரஹீம்! திருமணம் என்பது வியாதி. முடியுமென்றால் தப்பித்துக் கொள்!
என்கிறார் ரஹீம்.
என்ன செய்யலாம் ஐயன்மீர்! தான் விரித்த வலையில், தானே சிக்கி உழல்வதே ருசிக்கிறது. காலையும் மாலையும் இந்த வலையின் காரணமாகவே சந்திப்பதும் ஆரத்தழுவிக் கொள்வதும் நடைபெறுகிறதல்லவா!
***