பள்ளி ஆய்வாளர்

தமிழில்: முனைவர்.வீ.மணி

ஏரைத் தூக்கிக்கொண்டு, தெரு முனையிலிருந்த தச்சு ஆசாரியின் வீட்டிற்குப் போய்க்கொண்டிருந்த கிராமத்து ஆளை நிறுத்தி, பள்ளிக்கூடம் எங்கேயிருக்கிறது என்று பள்ளி ஆய்வாளர் விசாரித்தார்.

“ஆமா, ஒரு பள்ளிக்கூடம் இருக்கு. இங்கதான் எங்கியோ… ஊருக்கு வெளியேன்னு நெனைக்கிறேன்.”

வெடிப்பேறி, அதில் மண்தங்கிக் கிடந்த விரலை நீட்டி, ஊருக்கு வெளியே செல்லும் பாதையைக் காட்டினான்.

குண்டும் குழியுமாகவும், இருபக்கங்களிலும் இருந்த மண் வீடுகளிலிருந்து கசிந்துவரும் தண்ணீர் ஆங்காங்கே ஊறி சேறும் சகதியுமாகவும், மற்ற இடங்கள் புழுதி மண்டியும் கிடந்த பாதை திடீரென்று முடிந்து, விளை நிலங்கள் ஆரம்பித்தன.

இரண்டு நிலங்களுக்கு நடுவில் ஈரமாயிருந்த பாதையில் நடந்தார். தூரத்தில் ஒரு ஆள் மிதிவண்டியில் வருவதைப் பார்த்தார். அவன் அவரின் அருகில் வந்ததும், மிதிவண்டியிலிருந்து இறங்கி மரியாதையுடன் ஓரமாக ஒதுங்கி நின்றான்.

“பள்ளிக்கூடம் எங்கேயிருக்கு?”

“பள்ளிக்கூடமா?”

“ஆமாப்பா.”

“அதோ, அரசமரம் தெரியுதா?” நிறைய நிலங்களைத் தாண்டி தூரத்தில் தெரிந்த பெரிய மரமொன்றைக் காட்டினான். “அதுக்கு அடியில இருக்கு.”

“என்கூட வந்து கொஞ்சம் காட்டுவியா?”

நகரத்து பெரியமனிதருக்கு உதவ நேர்ந்ததில் அந்த விவசாயிக்கு ரொம்ப சந்தோஷம். உடனே சம்மதித்தான். மாணவர்களோ, வாத்தியாரோ, ஊர்க்காரன் எவனோ தன்னை இந்த பெரிய மனிதரோடு பார்த்தால், ஊரில் தன்னுடைய மதிப்பு நிச்சயம் கூடிப்போகும். அந்த நினைப்பில் அவன் நெஞ்சு பூரித்தது. ஒன்றாக நடந்தார்கள்.

”ரொம்ப நல்ல மனுசன் சார், அந்த வாத்தியாரு. கஷ்டப்பட்டு வேல செய்யிராரு.”

பள்ளி ஆய்வாளர் பதில் பேசவில்லை. இந்த மாதிரி பள்ளிகளை மாவட்டம் முழுவதும் துரத்தித் திரிவது அயர்ச்சியான வேலையாக இருந்தது. அழுக்கடைந்த நகரங்களில், சிதிலமான பகுதிகளில், அவருடைய வாகனம் செல்லமுடியாத தூரத்து மூலைகளில் கிடக்கும் கிராமங்களில். அப்புறம் அந்த பள்ளிக்கூடங்கள் இருக்கும் அவலமான நிலை. இவை எல்லாம் அவருடைய மனதை அழுத்தின. இந்த மூன்று ஆண்டுகளில் இவையெல்லாம் அவருக்குப் பழகிப்போயிருக்க வேண்டும். ஆனால் இல்லை. ஒவ்வொரு பள்ளிக்கூடமும் இப்போதும் வலியேற்படுத்தத்தான் செய்கிறது. தேவையான பொருள்களில்லை, மக்களுக்கு அக்கறையில்லை, மாணவர்களுக்கு ஆர்வமில்லை, ஆசிரியர்களுக்குப் பொறுப்பில்லை. இவையெல்லாம் பெரும் சுமை. அவரால் என்ன செய்ய முடியும்? சிபாரிசு, சிபாரிசுதான். ஆனால், அவர் அனுப்பும் ஒவ்வொரு சிபாரிசையும் அடித்துத் தள்ளி விடுகிறது, கொஞ்சமாய் திட்டமும் குறைவாக வளர்ச்சியும் செய்யும் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை.

உழுது போட்ட நிலங்களையும், இளம் கோதுமைப் பயிர்கள் பசுமையாக நிற்கும் நிலங்களையும் தாண்டிப் போனார்கள். ஒரு இடத்தில் தரை பள்ளமாகி, அதில் குளமாகத் தண்ணீர் தேங்கியிருந்தது. தண்ணீரின் மேல் சுள்ளான்கள் பறந்தும் அமர்ந்தும் நிறைந்திருந்தன. அவர்கள் அருகில் நெருங்கியதும் மொத்தமாக மேலெழும்பிப் பறந்தன. ஆய்வாளர் கைகளை வீசி அவை முகத்தில் மோதாமல் விரட்டினார். விவசாயி நடையை நீட்டியும் சுறுசுறுப்பாகவும் போட்டான். மிதிவண்டியில் தளர்ந்து கிடந்த மணி கடகடத்தது. அவனது வெளுத்துப்போன செருப்பு பல இடங்களில் தைக்கப்பட்டிருந்தது. குதிகாலின் தையல் பிரிந்து போயிருந்தது. அவனுக்கு ஈடாக நடப்பது கடினமாக இருந்தது. சோளக்கொல்லையை கடந்தார்கள். அரசமரம் அதைத் தாண்டி இருந்தது. நிழலடர்ந்த அந்த மரம், உழுதுப்போட்டு விதைப்புக்குத் தயாராக இருந்த நிலத்தின் எல்லையில் இருந்தது. மரத்தின் அருகில் எதையும் காணோம். விவசாயிக்கு ஏமாற்றமாக போய்விட்டது.

”எனக்கு நிச்சயமாத் தெரியும், இங்கதான் இருந்தது. உழவுக்கு முன்னால இங்கதான் இருந்துது…”

“அப்போ?”

“வேற எங்கியாவது மாறி போயிருக்கனும்.”

“மாறிபோயிருக்குமா? அப்போ, கட்டிடம் என்னாச்சு?”

“கட்டடமா?”

”பள்ளிக்கூடக் கட்டிடம், இல்லியா?”

” இல்ல, சார். கட்டடமெல்லாம் இல்ல. வாத்தியாரு பள்ளிக்கூடத்த கூடவே கொண்டுகிட்டு போவாரு. அவரு எங்க போறாரோ பள்ளிக்கூடமும் அங்க போவும்.”

அவர்களுக்கு மேலே என்ன செய்வது என்று புரியாமல் நின்றபோது, தூரத்தில் மண்வெட்டியுடன் ஒரு ஆள் தெரிந்தான்.

“ஓ… மீதியா…” அவனை நோக்கி விவசாயி கூவினான். குனிந்திருந்த உருவம், கொத்துவதை நிறுத்திவிட்டு நிமிர்ந்தது. சூரியன் நேராகக் கண்களில் அடித்தது. புருவத்துக்கு மேலே கையைவைத்து மறைத்துக்கொண்டு அவர்களை பார்த்தான்.

“மீதியா, பள்ளிகூடம் எங்க போச்சி? பாக்குனும்னு டவுன்ல இருந்து சார் வந்திருக்காரு.”

“பள்ளிக்கூடமா? பசங்க எல்லாம் கரும்புக்கொல்லைக்கிட்ட இருக்காங்க. அந்த பக்கமா போறதத்தான் காலைல பாத்தேன்.” அவன் திருப்பிக் கூவினான்.

கரும்புக்கொல்லை அடர்ந்தும் வளமையாகவும் இருந்தது. வெளிர்பச்சையில் கருஞ்சிவப்புப் புள்ளிகள் தெளித்த கரும்பங்கழிகளின் கரும்பச்சை மேற்தோகைள் காற்றில் ஆடிக் கொண்டிருந்தன. கரும்புக்கொல்லைக்கு பக்கத்தில், உழுதுப்போட்டு விதைப்புக்குத் தயாராக நிறைய நிலங்கள் கிடந்தன. சுற்றும் முற்றும் பார்த்தார்கள். அங்கு எதையும் காணோம்.

“கரும்புக் கொல்லைன்னுதானே சொன்னான்?” விவசாயிக்குப் புரியவில்லை.

“ஆமா.” ஆய்வாளருக்கு இது இழுத்துக்கொண்டே போகிற வேலையாக மாறிக்கொண்டிருந்தது.

“அனேகமா கொல்லைக்கு அந்த பக்கம் இருக்கும்.”

“நீ போய் பாரு. அங்க இருந்தா எனக்குச் சொல்லு.” ஆய்வாளர் வியர்த்திருந்த புருவத்தைத் துடைத்துக் கொண்டார்.

மிதிவண்டியை பக்கத்தில் கிடத்திவிட்டு, விவசாயி வேகமாக நடந்தான். பள்ளிஆய்வாளர் வரப்பிலேயே உட்கார்ந்துக்கொண்டு பழுப்புநிற மண்ணையும் தெளிந்த நீலநிற வானத்தின் எல்லைவரை பச்சைநிற நிழலாகப் படர்ந்துநின்ற பயிர்களையும் பார்த்தார். வானத்தில் மேகத்தையே காணவில்லை. தூரத்து மரங்களில் சில காகங்கள் கரைந்தன. மெதுவாக நகரும் புள்ளிகளாக பட்டங்கள் சில வானின் உயரத்தில் நீந்தின. பறவைகள் சத்தமிட்டபடி விரைந்து பறந்தன.

சீக்கிரமே ஒரு கூவல் வந்தது. சைகைக் காட்டிக்கொண்டே அவரை நோக்கி விவசாயி ஓடிவந்தான். அவர் எழுந்தார். தசைகள் இறுகிப்போயிருந்தன. அவருடைய உடம்பு பழைய மாதிரி இல்லை, அவருக்கே தெரிந்தது. அலுவலகங்களிலும், வாகனத்திலும், பள்ளிகூடங்களில் இருக்கும் ஒரே நாற்காலியிலும் எப்போதும் உட்கார்ந்தே இருக்கவேண்டியிருப்பதைப் பற்றி அவர் அவசியம் ஏதாவது செய்தே ஆகவேண்டும்.

“கண்டுபுடிச்சிட்டேன்.” விவசாயி பெருமிதமாகச் சொன்னான். அவரை கரும்புக்கொல்லைக்குள் அழைத்துப் போனான்.

பள்ளி ஆய்வாளர் தயங்கிக்கொண்டே போனார். அவரை அங்கே வழிப்பறி செய்தால், அந்த புதர்காட்டில் சாட்சிக்குக்கூட ஆளில்லை. கரும்பின் பச்சை தோகைகள் முகத்திலும் கைகளிலும் கீறின. கைகளை முகத்துக்கு முன்னால் வைத்து மறைத்துக்கொண்டு எங்கே போய்க்கொண்டிருக்கிறார் என்று பார்த்தார். தரை கரடுமுரடாக இருந்தது. பல இடங்களில் தடுமாறினார். சத்தம்போட்டு ஆடிக்கொண்டிருந்த கரும்புகளுக்கிடையே நடந்து கொல்லையின் மையத்துக்கு வந்துசேர்ந்தார். கரும்புகளுக்கு நடுவில் கொஞ்ச இடம் சுத்தம் செய்யப்பட்டிருந்தது. அதில் சுமார் நாற்பது மாணவர்கள் கட்டாந்தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தார்கள். ஒரு சணல்பாய்கூட இல்லை. கொல்லையின் இரைச்சலுக்கு நடுவில் வந்தபிறகு, இங்கே மிகவும் அமைதியாகத் தெரிந்தது. வாய்ப்பாட்டை மனப்பாடம் செய்வதில் ஆழ்ந்திருந்த தலைகள் முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருந்தன. மற்றவர்கள் சிலேட்டிலும், அட்டையிலும் எழுதிக்கொண்டிருந்தார்கள். பல அட்டைகள் சூரியனின் வெயில் படும்படி கரும்புகளில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் மை இன்னும் காயாமல் ஈரமாக இருந்தது. நடுவில் ஒரு வயதான ஆள் கையில் குச்சியை வைத்துக்கொண்டு, தள்ளாடுகின்ற நாற்காலியில் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தார். நாற்காலி பலமுறை சீர் செய்யப்பட்டிருந்தது. அதன் இணைப்புகளில் எல்லாம் இரும்புப்பட்டை வைத்து ஆணியால் அடித்திருந்தது. சாய்கிற பின்பக்கம், மரத்துண்டுகளை வைத்து ஆணி அடித்து பலப்படுத்தியிருந்தது. உட்காரும் இடத்திலும் முதுகிலும் இருந்த பிரம்புப் பின்னல்கள் சிதைந்துபோய், மரக்குச்சிகளை வைத்து குறுக்கும் நெடுக்குமாக அடித்திருந்தது. வாத்தியார் எழுந்து நின்றார். வெறும் கால்கள் செருப்பைத் தேடின.

“வகுப்பு எழுக.” தலைமை மாணவன் ஆங்கிலத்தில் ஓங்கி கட்டளையிட்டான். உடைகளில் படிந்திருந்த புழுதியைத் தட்டிக்கொண்டே எல்லா மாணவர்களும் இடித்துப்பிடித்துக்கொண்டு எழுந்தார்கள். பள்ளி ஆய்வாளர் வந்ததில் அதிர்ந்து போயிருந்த வாத்தியாருக்கு, நிதானப்படுத்திக்கொள்ள சிறிது நேரமாயிற்று. அவருடைய தோளிலிருந்த துண்டை எடுத்து, நாற்காலியைத் தூசி தட்டி, ஆய்வாளர் அமருவதற்காக சுத்தம் செய்தார். உடன் வந்த விவசாயி ஆய்வாளரின் சைகைக்காக காத்திருந்தான். ஆய்வாளர் அவனுக்கு நன்றி கூறினார். அவன் விரைந்து மறைந்தான்.

“ரொம்ப பெருமையா இருக்குங்க, ஐயா.”

“அப்போ, இதுதான் பள்ளிக்கூடமா?” சுற்றிலும் பார்த்த ஆய்வாளரின் நெற்றி சுருங்கியது. எச்சிலைச் சத்தமாக விழுங்கினார் வாத்தியார்.

“ஆமா, சார்.”

“இவங்களுக்கு என்ன சொல்லித்தரீங்க?” வாத்தியார் மீண்டும் விழுங்கிகொள்ளும் சத்தம் ஆய்வாளருக்குக் கேட்டது.

“உருது, கணக்கு அப்புறம் எழுத்துப் பயிற்சி, சார்.”

“அதுக்குன்னு குடுத்திருக்கிற புத்தகத்தில இருந்துதான?”

“அந்த புத்தகத்தில இருந்துதான், சார்.” நாற்காலிக்கு அருகில் இருந்த அழுக்கடைந்து நைந்துப்போயிருந்த புத்தகக்கட்டை எடுத்து ஆய்வாளரிடம் கொடுத்தார்.

ஆய்வாளர் உருது புத்தகத்தைப் புரட்டினார். ஒரு அத்தியாயத்தில் நிறுத்தி, ஒரு மாணவனை படிக்கச் சொன்னார். திகைப்புடன் எழுந்த மாணவன் மௌனமாக நின்றான்.

“சார், இது நாலாம் வகுப்பு புத்தகம். அவன் ரெண்டாம் வகுப்பு பையன், சார்.

“இங்க எத்தன வகுப்புகள் வச்சிருக்கீங்க?”

“ஆறு சார். ஒன்னாம் வகுப்புல இருந்து ஆறு வரைக்கும்.”

எல்லா மாணவர்களையும் ஒரே கும்பலாக பார்த்த ஆய்வாளருக்கு, இப்போது தனித்தனி பகுதியாக தெரிந்தது.

“ அது நாலாம் வகுப்பு, சார்.” வாத்தியார் குச்சியால் காட்டினார்.

”நீ படி”ஆய்வாளர் ஒரு மாணவனுக்குக் கட்டளையிட்டார்.

அந்த பையன் எழுந்து நின்று படிக்க ஆரம்பித்தான். அவன் படித்தது தெளிவாகவும், கணீரென்றும் இருந்தது. ஒரு தவறும் இல்லை. ஒரு தடுமாற்றமும் இல்லை. இதைப் பார்த்த வாத்தியாருக்கு தைரியம் மெல்ல திரும்பியது.

“இன்னொரு வகுப்பக் கேளுங்க சார்” வாத்தியார் ஊக்கப்படுத்தினார்.

இரண்டாம் வகுப்பு மாணவர்களிடம் சில கணக்குகளை செய்யச் சொன்னார் ஆய்வாளர். பெரும்பாலான மாணவர்கள் சரியாகச் செய்தார்கள். ஒன்றாம் வகுப்பின் இரு மாணவர்கள், ஆங்கில அகரவரிசை எழுத்துக்களை மனப்பாடம் செய்ய இலகுவான பாடல் பாணியில், முன்னும் பின்னும் அசைந்தபடி, ஒரு தவறும் இல்லாமல் ஒப்புவித்தார்கள். ஆறாம் வகுப்பு மாணவன் சிறார்களுக்கான பாடல் ஒன்றை படித்தான். “வா… வா… கரும் ஆடே…”, இசைப்பாடலாக ஆரம்பித்து அதே பாணியில் முடித்தான். அவன் அந்த பாடலை ஏற்கனவே மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டுதான் படித்தான் என்றாலும்கூட நன்றாகவே படித்தான். அப்படியில்லாமல், நேரடியாக புத்தகத்திலிருந்தேதான் படித்தான் என்றால், அப்படியிருக்காது என்று ஆய்வாளருக்கு சந்தேகந்தான், மிக மிக அருமையாகப் படித்தான். எப்படியிருந்தாலும், அவருடைய கட்டுப்பாட்டில் இருந்த எல்லா ஆரம்பப்பள்ளிகளைக் காட்டிலும், இந்த பள்ளியின் தரம் மிகவும் உயர்ந்ததாக இருந்தது. வாத்தியார் அங்கே பெற்றிருந்த மரியாதைக்கு மிகவும் தகுதியுடைவராக இருந்தார். மாணவர்களின் திறமையில் திருப்தியடைந்தவராக ஆய்வாளர் நாற்காலியிலிருந்து எழுந்தார். நாற்காலி கிறீச்சிட்டது. வாத்தியாரின் மகிழ்ச்சி வெளிப்படையாகத் தெரிந்தது.

“வகுப்பு எழுக”, தலைமை மாணவன் கட்டளையிட்டான். முன்பைவிடவும் இப்போது அவனது குரல் இன்னும் ஓங்கி ஒலித்தது. ஆய்வாளர் கிளம்ப எத்தனித்தார். கையில் குச்சியோடு வாத்தியாரும் பின்னாலேயே போனார். ஆய்வாளரின் வருகை அவர்களுடைய கிராமத்திலும் பக்கத்து ஊர்களிலும் இன்னும் பல நாட்களுக்கு பேசப்படும். கொல்லையிலிருந்து வெளியே வந்த பிறகுதான் ஆய்வாளருக்கு சிறிது நிம்மதியாயிற்று.

“பள்ளிக்கூடத்த ஏன் மாத்திக்கிட்டேயிருக்கீங்க? வாடகைக்கு எடுக்க இங்கே இடம் ஏதும் இல்லையா?”

“வாடகைக்கா, சார்?”

“ஆமா, எடுங்க.”

“இல்லை, சார். எங்களுக்கு யாரும் இடமெல்லாம் குடுக்க மாட்டாங்க. அவுங்களுக்கு இங்க பள்ளிக்கூடமே வேண்டாமுன்னு இருக்கு. அதை பலமுறை சொல்லிட்டாங்க. பலமுறை! பிள்ளைங்க எல்லாம் நேரத்தை வீணாக்கறதா அவங்களுக்கு எண்ணம். வேலைக்குப்போயி சம்பாதிக்கலாம், நெலத்தில பெத்தவங்களுக்கு உதவி பண்ணலாம், ஆடு மாடு மேய்க்கலாம். இதெல்லாம் விட்டுட்டு பிள்ளைங்க கும்மாளம் போட்றதா நெனைக்கிறாங்க. கிராமத்து பண்ணையாரு அலி மொகமது தான் கொஞ்சம் அனுசரனையா இருக்காரு, சார். படிப்பு ரொம்ப முக்கியம்னு நெனைக்கிறாரு. அவராலேயும் ஒரு இடம் கொடுக்க முடியல. ஒரு அறையக் கட்டிக்கிற மாதிரி கொஞ்சநிலம்கூட தர முடியல. ஆனா, போன பருவத்தில அவரோட நிலத்த உழுவுர வரைக்கும் அங்கேயிருந்த அரச மரத்தடியில நடத்திகிறத்துக்கு அனுமதி குடுத்தாரு. இந்த பருவத்தில அவரோட கரும்புக்கொல்லையில நடத்துறோம்.

“அவருக்கு நல்ல மனசு. கரும்புக்கொல்லைக்கு நடுவுல உங்களுக்கு எடம் சுத்தம் பண்ணி குடுத்திருக்காரு.”

“ஆமாங்க, சார். நடு எடத்த நாங்க சுத்தம் பண்ணிக்கிறத்துக்கு அனுமதி குடுத்தாரு. ரொம்ப நல்ல மனசு அவருக்கு. பையன்களும் நானும்தான் கரும்பெல்லாம் வெட்டி சுத்தம் பண்ணினோம், சார். முடிக்கறத்துக்கு மூனு நாளாச்சு எங்களுக்கு. ஒன்னாம் வகுப்பு பிள்ளைங்ககூட செஞ்சாங்க. காலைல எட்டு மணியில இருந்து சாயங்காலம் தொழுகை நேரம் வரைக்கும். அப்புறம் இருட்டி போயிடும். கரும்பெல்லாம் கட்டி, பண்ணையாரோட மாட்டுவண்டியில ஏத்தினோம். படிப்போட அருமைய இப்பிடித்தான் காட்டனும்னு பண்ணையாரு சொன்னாரு.” வாத்தியார் தலையிலிருந்த தலைப்பாகையை கழட்டி தலையின் உச்சியைக் காட்டினார். கருவண்ணம் பூசிய முடிகளுக்கு நடுவில் வட்டமாக ஒரு பகுதி வழுக்கையாக இருந்தது. வாத்தியாரின் கண்களில் கண்ணீர் தளும்பியது. குரல் தழுதழுத்தது.

“கரும்புக்கட்டுகள தூக்கிகிட்டு போனதில முடியெல்லாம் கொட்டிப்போச்சு, சார்.” தலைப்பாகையை மீண்டும் அணிந்து கொண்டு முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டார். இருவரும் மேலே நடந்தார்கள். ஆய்வாளர் வரப்பிலும், வாத்தியார் மரியாதையோடு பக்கத்தில் வரப்புக்குக் கீழேயுமாக நடந்தார்கள்.

“சார், எங்களுக்கு மட்டும் ஒரு சின்ன அறை இருந்தால்…. ஓரே ஒரு அறை போதும்.” வாத்தியார் மெதுவாக பேசினார். அறை கெடைக்காதுன்னா, கொஞ்சம் நிலமாவது கெடைச்சா போதும். நானும் பிள்ளைங்களும் நாங்களே அங்க ஒரு அறையக் கட்டிக்கிவோம். ஒரு பருவம்பூரா ஆகும் சார். ஆனா எப்படியாவது கட்டிக்கிவோம்.”

ஆய்வாளர் மௌனமாக நடந்தார்.

“நெலம்னா ரொம்ப செலவான விஷயம்னு தெரியிது, சார். அதோட யாரும் இங்க பள்ளிக்கூடம் வேணும்னு நெனைக்கில. ஆனா, ஒரு சின்ன நிலம், எங்க கெடச்சாலும் பரவாயில்ல. கிராமத்துல சேரிக்கு பக்கத்தில கொஞ்ச நெலம் இருக்கு. பள்ளிக்கூடத்த அங்கக்கூட கொண்டுபோயி நடத்திக்கிவேன், சார். ஒன்னுமே இல்லாதத்துக்கு எங்கேயாவது ஒரு எடம்…”

ஆய்வாளர் பேசாமல் இருந்தார். வாத்தியாரின் விண்ணப்பம் மறுக்கப்படுமென்று ஆய்வாளருக்கு ஏற்கனவே புரிந்திருந்தது. அரசாங்கம் ஆரம்பப்பள்ளிக்காக நிலமோ, கட்டிடமோ கொடுப்பதில்லை. உள்ளூர்காரர்கள்தான் அதைத் தரவேண்டும். அந்த விதி இப்போது ஏன் மாறவேண்டும். விதி என்றால் விதி தான். நூறாண்டுகளுக்கும் மேலாக அப்படியே கடைபிடிக்கப்பட்டுவரும் விதிகள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன. விடுதலை எந்த மாற்றத்தையும் செய்துவிடவில்லை. அப்போது எது சரியென்று பட்டதோ, அதுவே இப்போதும் சரியென்று நடக்கிறது. அதுவுமல்லாமல் இந்த நிதி குறைப்புகள் வேறு. ஆய்வாளருக்கு எல்லாம் காதில் கேட்டது. பெருமூச்செறிந்தார். ஒரு சின்ன நிலம். அவ்வளவுதான். இவரைப்போல தங்களையே அர்ப்பணித்துக்கொண்ட ஆசிரியர்கள் எத்தனை பேரைப் பார்த்துவிட முடியும். உண்மையிலேயே அக்கறைகொண்ட எத்தனை ஆசிரியர்களால் இப்படிபட்ட உதாசீனத்தையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியும். ஆய்வாளருடைய மூன்று ஆண்டுகால பணியில் அப்படிப்பட்ட ஒருவரைக்கூட நினைவுபடுத்திக் கொள்ள முடியவில்லை. ஆய்வாளர் அவருடைய வாகனத்தில் ஏறிக்கொண்டார். வாத்தியாரின் தாழ்மையான வணக்கத்தை ஒரு சிறு தலையசைவோடு குனிந்தபடியே ஏற்றுக்கொண்டு போய்விட்டார்.

அவரால் அந்த மனிதனின் பார்வையை நேர்கொள்ள முடியவில்லை.

*******

The story “The Inspector of Schools” was selected and translated from the book “Pakistani short stories”.edited by Waqas Ahmad Khwaja. UBS.1992.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.