
(1) கிடைமட்டமாய்க் கிளைக்கும் தரு
கிடைமட்டமாய்
வேர் விட்டு
கிளை பரத்தித்
தழைக்கும்
தரு போல்
ஊரின்
பாதைகள்
உருக் கொண்டிருக்கின்றன.
அவை
தம் மீது பயணப்பட
பறவைகளை
எதிர்பார்க்கின்றன.
யாருக்கும் தெரியவில்லை
இது.
யாரும்
அவசரப்படுவதைத் தவிர
பறவையாவதைத் தேர்வதில்லை.
அவசரப்படுவதையும்
பறத்தலென்று
குழப்பிக் கொள்கிறார்கள்.
தங்களின்
இழுத்த இழுப்புகளுக்கு
பாதைகளை இழுத்துப் போகிறார்கள்.
பாதைகளிடம்
அவர்களின் நிழல்களின் நெருக்கம் கூட
அவர்களிடம் இல்லை
ஆனால்
கிடைமட்டமாய்த்
தரு உருக்கொண்ட பாதைகள்
தம் மீது பயணப்பட
இன்னும்
காத்திருக்கின்றன
ஒரு
பறவைக்கு-
ஒரு
புத்தனுக்கு.
(2) ஒடுங்கிய அ(க)ண்டம்
ககனவெளி-கால*
வலை
வளைய,
கணையெனக்
கடுகி
மேலுயர்ந்து
வானில்
மிதந்து
வளைந்து
வாகாய்க்
கீழ் சறுக்கும்
பறவையின்
பறத்தலின்
ஓசைமணி** வடிவில்
நீள் நோக்கி,
என் பார்வையின்
நேர் கோடு
தொடும் புள்ளியில்
ஒன்றும்
ஒரு கணத்தில்
இருத்தல்
ஒன்றன்றி
நானென்ன?
பறவையென்ன?
ஒடுங்கிய
அ(க)ண்டம்
ஒரு
புள்ளி.
குறிப்பு:
*Space-Time Continuum
** Bell Curve
3) அந்திமம்
உண்ண வெறுமையும்
தின்னத் தனிமையும்
கேட்க மவுனமும்
நோக்க அத்துவானமும்
நினைக்க நோய்மையும்
சுகிக்க சூன்யமும்
தகிக்கத் தணியா மோகமும்
தியானிக்க அநித்தியமும்
திரும்பிப் பார்க்க மண் மூடிப் போன
கால நடைவழியும்
தவிக்க, தவிர்க்க முடியா அந்திமமும்
நெருங்கும் காலத்தில்,
சிரிக்காமல் நொந்து என் செய்ய – என்
ஏழை நெஞ்சே?
சிரி!
(4) செம்புலப்பெயல் நீர் போலல்ல
நீ நோக்கிய
நட்சத்திரம் எதுவோ?
நான் நோக்கிய
நட்சத்திரம் எதுவோ?
நீ நோக்கிய
மேகம் எதுவோ?
நான் நோக்கிய
மேகம் எதுவோ?
ஒரே
ஒளி நிலவாயினும்-
நீ நோக்கிய நிலவு
உன் நிலவு.
நான் நோக்கிய நிலவு
என் நிலவு.
ஒரே சூரியனின்
வெயிலாயினும்-
உன் நிழல்
வேறு.
என் நிழல்
வேறு.
ஆனால்
உன் நிழலில் என் வெயிலும்
என் நிழலில் உன் வெயிலும்
ஒதுங்க அனுசரிக்கின்றோம்.
உன் வெளியில் எனக்கிடமும்
என் வெளியில் உனக்கிடமும்
ஒதுக்கி அனுமதிக்கின்றோம்.
நீ நானாகவும்
நான் நீயாகவும்
முடியாதென்று,
முடிந்ததால்
நாமாகிறோம்.
இப்படித் தான்
நெஞ்சங் கலக்கின்றோம் நாம்
நரை எய்திய காலத்திலும்,
குழந்தைகளாய் நாம்
கலைந்த துண்டுச் சித்திரங்களைப்
பல்விதமாய்ப் பொருத்தி
கடைசியில் ஓர் முழுச் சித்திரத்தைக்
கண்டுபிடித்த சித்திரப் புதிர் போல.
கு.அழகர்சாமியின் கவிதைகள் காதலையும் அவரவர் தனித்துவத்தையும் கவித்துவமாய் வெளிப்படுத்துகின்றன.. முதுமை குறித்த கவிதை சற்று விரக்தியை வெளிப்படுத்தினாலும் இறுதி வரிகள் சிறப்பு.