தனியாய் ஒரு போராட்டம்

கலா ஷஹானி

கோட்டோவியம்: இரீனா ஸாக்கியான்
©
Sound & Picture Archives for Research on Women

கலா ஷஹானி 1919ல் கராச்சியில் பிறந்தாள். ஏழு பெண்கள் இரண்டு பையன்களுக்கிடையே அவள் நான்காமவள். தந்தை லீலாராம் ரேம்சந்த் வாத்வானி கல்விக்காகத் தம்மை அர்ப்பணம் செய்தவர். அவருக்கு நிலபுலன்கள் இருந்த போதிலும் ஆசிரியர் தொழிலையே அவர் பெரிதும் விரும்பினார். அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என்ற நிலையில் அவர் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஷிகார்புர், ஹைதராபாத், கராச்சி, லார்கானா போன்ற இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பிரம்ம ஞானக் கொள்கைகளில் உண்மையான பிடிப்புக் கொண்டிருந்த அவர், மனிதர்கள் யாவரும் சமமே எனக் கருதினார். சில சமயங்களில் கலாவைத் தம்முடன் பிரம்மஞான சபைக் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வார். அங்கு அவள் பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்க முடிந்தது. பிரம்மஞான சபையைச் சேர்ந்த சில பார்சி பெண்கள் நீங்கள் பெண்ணாக பிறந்திருக்க வேண்டியவர்” என்று அவரை அடிக்கடி சீண்டுவார்கள்; அந்த அளவுக்கு லீலாராம் மென்மையான மனிதராக இருந்தார். தந்தையின் இனிய சுபாவமும்  மனிதர்களிடம் அவர் பழகிய விதமும்  அவருடைய வாழ்க்கையும் குழந்தைப் பருவத்திலேயே கலாவின் மனத்தில் ஓர் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. அவர்களுடையது எல்லோரையும் வரவேற்கும் வீடு. அந்த வீட்டில் வளர்ந்ததால் கலாவுக்கு அங்கு வரும் கிறிஸ்தவர், முஸ்லிம், பார்சி போன்ற பல இன மக்களோடு பழக முடிந்தது. அதுவும் மேலை சிந்த் பகுதி, கீழை சிந்த் பகுதி குடும்பங்களுக்கிடையேகூடத் திருமணம் நடை பெறாது என்று இருந்த நாட்களில்!

கலாவின் தந்தை அன்னிபெசன்டிடம் மிக மதிப்பு வைத்திருப்பவர். அப்பாவைப் பின்பற்றி கலாவும் ஒரு தியாசபிஸ்ட் ஆகி,  மெஸானிக் லாட்ஜ் என்ற அவர்கள் உள்வட்டத்தில் சேர்ந்தாள். அங்கே காந்தியை பற்றி விமர்சனங்கள் எழும். காங்கிரஸ்காரர்களுக்குக் கோஷங்கள் முழங்கத்தான் தெரியும், நாட்டை ஆளத்தெரியாது என்ற கருத்து இருந்தது. அன்னிபெசன்டும் காங்கிரசைப் பற்றி அவ்வளவு உயர்வாக பேசவில்லை. காந்திஜியின் மேல் ஆழமான மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த கலாவால் காந்திஜியின் செயல்பாடுகள் குறித்த இந்தப் பேச்சுக்களைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அப்பாவிடம் எவ்வளவோ மரியாதை இருந்தபோதிலும், காந்திஜி குறித்த அவரது அபிப்பிராயங்களைத் தான் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டாள். அவள் கருத்தைக்கூற அவளுக்குச் சகல உரிமையும் இருக்கிறது என்றும் தன்னோடு கருத்து வேறுபாடு கொள்ளவும் குழுவிலிருந்து விலகவும் அவளுக்கு முழு உரிமை இருப்பதாகவும் அவர் கூறினார்.

கலா ஷஹானி,1990
©
Sound & Picture Archives for Research on Women

கலாவின் அம்மா பூலிபாய்க்கு அரபி லிபியிலுள்ள சிந்தி மொழியைப்   படிக்கத் தெரியும், எழுதத் தெரியாது. அவர் கணவருக்கோ குர்முகி தெரியாது. மனைவியிடம் அரபி லிபியை எழுதக் கற்றுக்கொள்ளச் சொன்னார். ஒன்பது பிள்ளைகளை வைத்துக் கொண்டு புதிதாக ஒரு மொழியை படிக்கவா என்று மறுத்துவிட்டார். எனவே கலாவின் அப்பா தான் குர்முகி கற்றுக்கொண்டு, வெளியூரிலிருக்கும் சமயங்களில் மனைவிக்குக் குர்முகியில் கடிதம் எழுதுவார்.

கலா ஷஹானியின் தாய் பூலிபாய் வேறுவிதமான பெண்மணி. பெரிய ஜமீன்தார் குடும்பத்திலிருந்து வந்தவர். ஆனால் முறையான படிப்பு எதுவும் கிடையாது. பெண்களுக்குப் படிப்பெதற்கு என்றிருந்த காலத்தில் வளர்ந்தவர். பெண்களுக்குக் கல்வி அவசியம் என்று அவர் வீட்டார் நினைக்கவில்லை. அவருடைய அப்பாவைப் பொறுத்தமட்டில் ஒரு பெண் தன் கணவனுக்கு நாலைந்து வரி கடிதம் எழுதத் தெரிந்திருந்தால் போதும்; அதுவே பெரிய படிப்பு என்று நினைப்பவர். ஒரு பெண்ணுக்குச் சமைத்துப் போடவும் மற்ற வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொள்ளவும் தெரிந்தால் போதாதா? இந்த மாதிரியான சூழலில் வளர்ந்த கலாவின் தாயாருக்குத் திறந்த மனது இல்லை. தன் வீட்டுக்கு வேறு சாதி மக்கள் வருவது அவருக்கு விருப்பமில்லை. தன் ஏழு பெண்களின் வாழ்க்கையை அது பாதிக்கும் என்றும் மற்றவர்கள் இந்த வழக்கத்தை ஒப்புக் கொள்ளமாட்டார்கள் என்றும் அவர் நம்பினார். கலாவின் தந்தையும், பின்னாட்களில் கலாவும், `கோவில், மசூதி இரண்டிலும் ஒளியூட்ட ஒரே விளக்கு; பின் உலகை இருளடிக்கும் குழப்பமும், அழிவும் ஏன்’ என்று கூறி பூலிபாயை அமைதிப்படுத்துவார்கள்.

அப்பாவின் வேலை மாற்றம் காரணமாக ஷிகார்புர் மற்றும் கராச்சியில் பல பள்ளிகளில் அவள் படிக்க நேர்ந்தது. அவளுடைய பத்தாவது வயதில் காந்திஜி கராச்சியில் ராம்பாக் என்ற இடத்தில் ஓரு கூட்டத்தில் பேசினார். அவருடைய எழுத்துக்களை கலா ஏற்கனவே படித்திருந்தாள். “என் மனத்தில் காந்திஜியை எப்போதுமே வணங்கி வந்திருக்கிறேன்” என்று கூறுகிறார் கலா ஷஹானி. காந்திஜியின் பேச்சைக் கேட்பதற்காக ராம்பாக் சென்றாள் சிறுமி கலா. அன்றைய தமது பேச்சில் காந்திஜி, “ஒருவரின் வாழ்க்கை தன்னைச் சுற்றி மட்டுமே இராமல் மனித இனத்தையே அரவணைக்கக்கூடியதாக இருக்கவேண்டும்” என்று கூறினார். எளிமை பற்றி பேசினார். “உங்களை விட்டு வெளியே வாருங்கள்” என்றார் அவர் கூட்டத்தினரிடம். காந்திஜியின் உரையும் மொழியும் மக்களை நெகிழ வைத்தன. பெண்கள் சிலர் உணர்ச்சி மேலீட்டால் தாங்கள் அணிந்திருந்த நகைகளைக் கழற்றி காந்திஜியிடம் தங்களின் பங்களிப்பாக அளித்தனர். பத்து வயது கலாவும் அந்தக் கூட்டத்தில் இருந்தாள். காந்திஜியின் பேச்சும் தன்னை பற்றி மட்டும் கவலைப்படாமல் வெளியே வரவேண்டும் என்ற அழைப்பும் பெண்கள் தங்கள் நகைகளை அளித்ததும் அவள் உள்ளத்தில் ஆழமாக பதிந்தன. அவரிடம் கொடுப்பதற்கு அவளிடம் நகைகள் ஏதும் இல்லை. அவளது பத்து வயது உள்ளம் தான் என்ன செய்யவேண்டுமென்பதைத் தீர்மானித்து விட்டது. அவள் கதர் அணிய முடிவு செய்தாள். அம்மாவிடம் கதர்த் துணி வாங்கித்தரக் கேட்டாள். “வேறு எதையும் உடுத்த மாட்டேன்” என்றாள் உறுதியாக. சிறு பெண்கள் முரட்டு வெள்ளைத் துணி அணிவது சரியல்ல என்று அவள் அம்மாவுக்குப் பட்டது. வாங்கித் தர முடியாது என்று சொல்லிவிட்டார். சிறுமி கலா அம்மாவை வற்புறுத்தினாள். அம்மா செவிசாய்க்கவில்லை. உடனே கலா, பிறரைச் சம்மதிக்க வைக்க காந்திஜி கையாளும் வழியைப் பின்பற்றினாள்— மூன்று நாள் உ ண்ணாவிரதம். அப்போது அவளுக்கு வயது பத்துதான் என்பது நினைவிருக்கட்டும். தன் சோனி மகள் உணவை ஒதுக்கிவைப்பதைப் பார்த்து தாயார் கண் கலங்கினார். மனம் இரங்கி இரண்டு செட் கதர் உடைகளை வாங்கிக் கொடுத்தார். குழந்தைதானே, பிறகு இதையெல்லாம் மறந்து விடுவாள் என்று நினைத்தார். ஆனால் தன் வாழ்க்கையின் லட்சியங்களை ஏற்கனவே வகுத்துவிட்ட திட சித்தம் உள்ள பெண் அவள் என்று அம்மா அறியவில்லை. அந்த இரண்டு உடைகளையும் மாற்றி மாற்றித் துவைத்து உடுத்திக்கொண்டாளே தவிர வேறு உடைகளை உடுத்தவில்லை. வேறு வழியின்றி அம்மா மேலும் சில கதராடைகளை வாங்கிக் கொடுத்தார்.

கலாவுக்குக் கணக்குப் பாடம் வராது, மொழிகளில் அதிக ஆர்வமிருந்தது. தந்தை ஆசிரியர் ஒருவரைப்  பாடம் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தார். அவர் ஒரு முஸ்லிம். கணிதத்தில் புலி. பாடம் நடந்தது. கலாவின் அம்மா தனது கசப்பை வெளிப்படையாகவே காட்டினார். “என் மகளுக்கு எப்படி ஒரு முஸ்லிம் பாடம் சொல்லிக் கொடுக்கலாம்? அவர் வீட்டுக்குள் வருகிறார்.  நீங்கள் அவருக்கு டீ கொடுக்கிறீர்கள். அவர் என் பெண்ணுடன் பேசுகிறார்!” என்று தன் கணவரிடம் கூறினார். ஆனால் அவர் தம் முடிவில் உறுதியாக இருந்தார். “அவருக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். அவளுடைய அப்பா மாதிரி… .  உன்னைப்போல் அவரும் ஒரு மனிதர்தான்… . என்னிடம் இதுமாதிரிப் பேசாதே. என்னால் பொறுக்க முடியாது” என்றார் மனைவியிடம். நாளடைவில் கலாவின் அம்மா கணவரின் கருத்தை ஏற்றுக் கொண்டார். அவர் சொல்வதில் உள்ள நியாயத்தை உணர்ந்து கொண்டார்.

பள்ளிப்படிப்பு முடிந்தபோதே கலா விடுதலை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டிருந்தாள். ஆனால் அவள் தந்தை அரசு பணியில் இருந்ததால், அவளால் நேரடியாக இயக்கத்தில் பங்குபெற இயலவில்லை. கலாவின் மூத்த சகோதரி எம்.ஏ. (ஆனர்ஸ்) முடித்துவிட்டு, மேல் படிப்புக்காக வெளிநாடு சென்றுவிட்ட போதிலும், கலா கல்லூரி செல்லவில்லை. சாந்திநிகேதன் செல்லலாமா என யோசித்தாள். ஆனால் ஏனோ அது கைகூடவில்லை. பதினைந்தாவது வயதில் ஜேதானந்த ஷஹானியை சந்தித்திருந்தாள். அவர் அவளைவிட பன்னிரண்டு வயது மூத்தவர். விடுதலை இயக்கத்தில் முழுமையாக ஈடுபட்டிருந்தார். எல்லோரும் அவரை `சாந்தி’ என்றே அழைத்தனர்—- அவருடைய எளிய, அமைதியான சுபாவத்திற்காக சாது வாஸ்வானி அளித்த பெயர் அது. கலாவுக்கு சாந்தியிடம் மதிப்பும் மரியாதையும் இருந்தது. எதிர்காலத்தில் என்ன செய்யவேண்டும் என்று சில திட்டங்கள் அவள் மனத்திலிருந்தாலும் திருமணம் பற்றி அவள் யோசிக்கவில்லை. திருமணத் தளையில் கட்டுப்படாமலிருந்தால்தான் மக்களுக்குத் தன்னால் சேவை செய்யவும், ஏழைகளுக்கு உதவவும் முடியும் என்று உணர்ந்தாள். அவளுக்கு பத்தொன்பது வயதானபோது, சாந்தி அவளிடம் தன்னுடன் வாழ்க்கை நடத்த விருப்பமிருக்கிறதா என்று கேட்டார். அவரிடம் அவளுக்கு பெரிய மதிப்பு இருந்தாலும், மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற தான் வரிந்துகொண்ட பாதையிலிருந்து திருமணம் தன்னை அகற்றிச் சென்றுவிடுமோ என்ற நினைப்பில் `ஆம் ‘ என்று பதிலளிக்கத் தயங்கினாள். பிறகு மனம் எப்படி மாறியதோ தெரியவில்லை, சாந்தியை மணக்க ஒப்புக்கொண்டாள். அவள் விருப்பத்தை அப்பா முழு மனத்துடன் ஏற்றுக் கொண்டார். அம்மாதான் கவலைப்பட்டார் மேலைச் சிந்தியர்கள் – கீழைச் சிந்தியர்களிடையே திருமணம் நடைபெற்றால் எல்லோரும் ஒரு தினுசாகப் பேசுவார்களே என்று. சாந்தி லர்கானாவைச் சேர்ந்தவர். எனினும் அம்மாவின் எதிர்ப்பையும் மீறி கலா – சாந்தியின் திருமணம் நடந்தேறியது.

தன் வாழ்க்கையைப் பற்றிப் பேசும்பொழுது, கலா மீண்டும் மீண்டும் சாந்தியுடனான தன் நாட்களையே நினைவுகூர்ந்தார். தந்தைக்குப் பிறகு சாந்திதான் அவர் வாழ்க்கைச் சக்கரத்தின் அச்சாணி. அதைச் சுற்றி தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். சர்க்கா வகுப்புகளுக்குச் செல்லத் தொடங்கினார். தேசிய மொழியின் முக்கியத்துவத்தை காந்திஜி வற்புறுத்தியதற்கிணங்க ஹிந்தி வகுப்புகள் நடத்தினார். சாந்தி மதர்லேண்ட் பிரஸ் என்ற  அச்சுக்கூடத்தை நடத்திவந்தார். அதுதான் அவருக்குச் சோறு போட்டது. சர்வன்ட் ஆப் சிந்த் என்றொரு பத்திரிகை நடத்தினார். ஆனால், தன் கொள்கைக்கு எதிரானது என்பதால் மதுபான விளம்பரங்களை வெளியிட மறுத்துவிடவே, பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த முடியாமல், அது நிறுத்தப்பட்டது. பின்னர் குவிட் இண்டியா என்ற பத்திரிகையைத் தொடங்கினார். ஆங்கிலேயருக்கு எதிராக சத்தியாக்கிரகத்திற்கு மக்களைத் தூண்டிய ஒரு ரகசியப் பத்திரிகை அது. ஷஹானியின் வீட்டிலிருந்த அச்சகத்தில் அது அச்சிடப்பட்டு வெளிவந்தது. அழுக்குத் துணி மூட்டைபோல பத்திரிகை வெளியே கடத்திச் செல்லப்படும். சலவைத் தொழிலாளிபோல ஒருவர் பாவனை செய்து, மூட்டையை முதுகில் வைத்துக் கொண்டு பத்திரிகையை வீடுவீடாகச் சென்று வினியோகிப்பார். இந்த `ராஜத்துரோக’ குற்றத்திற்காகத் தான் சாந்தி ஷஹானி பின்னர் கைது செய்யப்பட்டார்.

கலா ஷஹானியின் அக்கா தாகுரி எம். ஏ. ஆனர்ஸ் படித்த பிறகு அவருக்கு வெளிநாடு சென்று படிக்க உதவித் தொகை கிடைத்தது. ஆனால் நிறையபேர் அவர் வெளிநாடு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அம்மாவுக்கும் விருப்பமில்லை. பிள்ளை குட்டி பெற்றுக் கொண்டு இருக்க வேண்டியவள்தானே, வெளிநாடு எதற்குச் செல்லவேண்டும் என்றார் அம்மாவழி தாத்தா. `உனக்கு ஏழு பெண்கள் இருக்கிறார்கள், ஜாக்கிரதை’ என்று அப்பாவிடம்  பயமுறுத்தினார். ஆனால் அப்பா எப்போதும்போல் உறுதியாக இருந்து, அக்காவை வெளிநாடு அனுப்பினார். அக்கா பின்னர் பதான் கோட்டில் முஜபர் கல்லூரியின் பிரின்சிபல் ஆனார். அம்மாவுக்கும் மிக்க மகிழ்ச்சி. பிரின்சிபாலின் அம்மா என்று அழைக்கப்படுவதில்  நிரம்பப் பெருமை.

ஸ்பாரோ பயிலரங்கில் கலா ஷஹானி, ஜூலை 27, 1997
©
Sound & Picture Archives for Research on Women

தீரத் சபானியையும் சாந்தி ஷஹானியையும் பெரிய அண்ணா சின்ன அண்ணா என்று மற்றவர்கள் அழைத்தனர். அவர்களுடன் மிகுந்த மகிழ்ச்சியுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் வேலை பார்த்தவர் குஷி ஹஸாரி. கலாவின் அப்பா அவரிடம் “மகிழ்ச்சியாயிருப்பதற்கே பிறந்தவன். துன்பப்படுவதற்கல்ல. நமது பணியில் சோர்வின்றி சந்தோஷத்துடன் பணியாற்ற உதவியதற்காக உன் பெயரும் வாழ்க்கையும் என்றும் நினைவுகூரப்படும்” என்பார். சாந்தியும் அவர் குழுவினரும் பிறருக்காக உதவிக்கரம் நீட்ட முன்னிற்பவர்கள். சேவாதாரிகள் என அவர்கள் அழைக்கப்பட்டனர்.  அவர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் ஒருவர் பின்வருமாறு கூறினார்:`தேவைப்படுகிற ஒவ்வொரு மனிதருக்கும் உதவ ஒரு சேவாதாரி இருக்கிறார்.

கலாவின் வீடு எப்போதும் பரபரப்பாயிருக்கும். விடுதலைப் போரில் ஈடு பட்டிருந்த பலரை கலா ஷஹானி அங்கே சந்தித்தார். விவாதங்கள், வழக்கமாக வரும் நண்பர்களோடு கருத்துப்  பரிமாற்றம் எல்லாம் அவர் தினசரி வாழ்க்கையாயிற்று. பெரும்பாலான நண்பர்கள் சாந்தி ஷஹானியை விட இளைஞர்கள். ஆனால் ஹிந்துஸ்தான் என்ற சிந்தி பத்திரிகை ஆசிரியர் தீரத் சபானிக்கு  சாந்தியின் வயதிருக்கும். நாற்பது பேர் கொண்ட இளைஞர் பட்டாளம் அவர்களோடு உழைத்தது. சபானியின் மனைவி ஓரு காங்கிரஸ் தொண்டர். ஹிந்துஸ்தான் உதவி ஆசிரியர் தேவி மகிஜானியும் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டவர். மோகினி லால்சந்த், பிரேமி குல்ரஜானி போன்றவர்களுடன் இணைந்து சர்க்கா வகுப்புகள் நடத்துவதிலும், ஹிந்தி பாடங்கள் போதிப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டார் கலா. ஊர்வலத்தில் கலந்து கொண்டு `பாரத் ஹமாரா தேஷ் ஹை’ என்றோ `லேகே ரஹேங்கே, லேகே ரஹேங்கே, ஹமாரா தேஷ் லேகே ரஹேங்கே’ என்றோ அவர் முழக்கமிட்டிருக்கிறார். அதே சமயம், சில ஊர்வலங்களில் ஆங்கிலேயர்களின் உருவ பொம்மைகள் எரிக்கப் பட்டபோது, கலாவின் அஹிம்சை நிரம்பிய இளகிய உள்ளம் அந்த வேடிக்கையான வன்மத்தைக்கூட ஏற்றுக் கொள்ள மறுத்தது. ஒரு தடவை பகிரங்கமாக சுதந்திர உறுதிமொழி எடுத்தார் என்பதற்காகப் போலிஸ் லாக் அப்பில் அவர் அடைக்கப்பட்டார்.

அவர் கணவர் கைது செய்யப்பட்டபோதுதான் அவருக்கு உண்மையான சோதனைகள் ஏற்பட்டன. `வெள்ளையனே வெளியேறு’ துண்டுப் பிரசுரங்கள் அவர்கள் வீட்டு அச்சகத்தில் அச்சிடப்பட்டவை என்று கண்டுபிடிக்கப்பட்டதால் சாந்தி கைது செய்யப்பட்டார். இதுதான் கலாவின் முதல் தனிமை அனுபவம். 1942ம் ஆண்டு அது. இந்த ஆண்டை வெள்ளையனே வெளியேறு இயக்க ஆண்டாக மட்டுமின்றி தனது தனிமை நிறைந்த ஆண்டாகவும் அவர் நினைவு கூர்கிறார். சாந்தி  ஷஹானி ஆறுமாதம் சிறையில் இருந்தார்.

சாந்தியைச் சுற்றியுள்ள கூட்டத்தில் பலதர பட்ட சுவாரசியமான மனிதர்கள் இருந்தனர். அவர்களில் ஹர்கோபிந்த் ராம் சந்தானி ஒருவர். அவரை `போகஸ்’ (Bogus) என்று அழைத்தனர். விடுதலை இயக்கம் மிக மும்முரமாக இருந்த நாட்களில் அவர் அரசு `லெட்டர் பேட்’ களை பயன்படுத்தி, பெரிய அதிகாரிகளின் கையொப்பமிட்டு ஆங்கில ஆபீசர்களை இடத்துக்கு இடம் மாற்றி ஆட்சியில் பெரும் குழப்பத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தினார். அதற்காக மூன்றாண்டு சிறைத் தண்டனை கிடைத்தது. தன் நண்பர்களுக்குக் கடிதம் எழுதம்போதெல்லாம் `போகஸ்’ என்ற தனக்குக் கிடைத்த  பட்டப்பெயரையே பயன்படுத்தினார்.

லீலாராம் பிரேம்சந்த் வாதாவனி, கலா ஷஹானியின் தந்தை, 1956
©
Sound & Picture Archives for Research on Women

அந்தச் சிரமமான நாட்களில் கலாவைத் தங்களோடு இருக்குமாறு தாய் வீட்டாரும் மாமனார் வீட்டாரும் வற்புறுத்தினர். ஆனால் கலா தன் வீட்டிலிருந்துகொண்டே அச்சகத்தைக் கவனித்துவந்தார். சாந்தி மற்றும் கலாவின் நண்பர்கள் அவரைச் சுற்றி அன்பும் ஆதரவும் அளித்து அரணாக நின்று பாதுகாத்தனர். இருப்பினும் இளம் பெண்ணான கலா அடிக்கடி தனிமைத் துயரில் வாடினார். “வெறுமையை உணர்ந்தேன். அதை மறுக்க முடியாது” என்று அந்நாட்களை நினைவுகூர்கிறார். ஆனால் தன் தாயின் முன் தான் மிகத் தைரியமாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளவேண்டியிருந்தது என்பதையும் அவர் ஒப்புக்கொள்கிறார். தன் தாய் எப்படி நடந்து கொள்வார் என்பதுதான் கலாவுக்குக் கவலையாக இருந்தது. தன் கணவர் ஒரு நல்ல காரியத்துக்காகத்தான் சிறைக்குப் போயிருக்கிறார் என்று அவரை நம்ப வைக்க வேண்டியிருந்தது. நாட்டுக்காக சாந்தி சிறைக்கு போயிருக்கிறார் என்பதைப் பற்றி பெருமையும் மகிழ்ச்சியும் அடைய வேண்டும் என்று அம்மாவிடம் கூறினார் கலா. கணவன் பேரிலிருந்த கலாவின் அளப்பரிய அன்பும் அவர் மேற்கொண்ட கடமையைத் தனதாக ஏற்றுக் கொண்ட துமே தனிமையான நாட்களைக் கடந்து செல்ல உதவியது. `காதல் இது போன்ற அற்புதங்களை நிகழ்த்தவல்லது’ என்கிறார் கலா.

சாந்தி ஷஹானி இறந்ததும் கலாவுக்கு நிறைய இரங்கல் கடிதங்கள் வந்தன. அதில் ஒரு கடிதத்தை 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரமாக வைத்திருக்கிறார். அவருடைய தந்தையின் முன்னாள் முஸ்லிம் மாணவர் ஒருவர் எழுதிய கடிதம் அது. “அன்புள்ள சகோதரி, நான் உங்கள் தந்தையின் பழைய மாணவன். அவரைப் போன்ற கனிவான ஒரு மனிதரை இனிமேல்தான் காணவேண்டும். எங்களை எவ்வளவோ அன்புடன் நடத்தினார். நாம் சகோதர சகோதரிகளாக பழகினோம். என் சொந்தச் சகோதரியின் இந்தத் துயரக் கணத்தில் அவளுடன் இருந்து ஆறுதல் கூறவே விரும்புகிறேன். கொடுங்கோல் அரசு நம்மை பிரித்துவிட்டது.”

ஷாந்தி எல். ஷஹானி, கலாவின் கணவர், 1936
©
Sound & Picture Archives for Research on Women

மனித குலத்தின் மீது அவருக்கிருந்த அளப்பரிய நம்பிக்கையால்தான், பிரிவினை காலத்தில் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் ஏற்பட்ட அதிர்ச்சிகளை கலா ஷஹானியால் தாக்குப்பிடித்துக் கடந்து செல்ல முடிந்தது.

அந்த நாட்களையும் அவரது கணவரின் அகால மரணத்திற்குப் பிந்தைய நாட்களையும் அவர் எதிர்கொண்ட விதம், அவரை ஆன்ம உறுதி கொண்டவராகக் காட்டுகிறது. தனது சொந்த மண்ணை இழந்தது பற்றி அவர் குறிப்பிட்டபோது சோகம் இழையோடினாலும், அதில் துளிக்கூட வெறுப்புணர்வு தென்படவில்லை. கலா ஷஹானியின் சொந்த அனுபவம், தாங்கள் நிர்ணயித்திராத, ஒரு போதும் நிர்ணயிக்க விரும்பாத எல்லைகளைக் கடந்து வந்த பத்து லட்சம் மக்களின் அனுபவமாகவே இருந்திருக்கும்.

1948 ஜனவரி 6ஆம் தேதி கராச்சியில் வன்முறை வெடித்தது. அந்த நாட்களை நினைவுகூர்கையில், “திடீரென அங்கே அப்படி ஒரு குரோதம், வெறுப்பு, ஆவேசம் தோன்றியது” என்றார் கலா. வீட்டைவிட்டு வெளியே வரவோ, பால்கனியில் நிற்கவோகூட யாருக்கும் முடியவில்லை. கராச்சி காங்கிரஸ் அலுவலகக் காரியதரிசியாக இருந்த சாந்தி ஷஹானி காலை பத்து மணிக்கு வீட்டைவிட்டுக் கிளம்பியவர், திரும்பி வரவில்லை.

1948ல் கோவிந்த் கடுமையாக நோய்வாய்ப்பட்டபோது டாக்டர் யாரும் வந்து பார்க்கவில்லை. எல்லா டாக்டர்களும் ஊரைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். ஒரு முஸ்லிம் டாக்டர் வந்து ஊசிபோட்டார். ஏனோ அது பயனளிக்கவில்லை. இது அந்த முஸ்லிம் வேண்டுமென்றே செய்தது என்று ஜனங்கள் பழிசுமத்தினார்கள். அந்த அளவுக்கு இன வெறி முற்றியிருந்தது. ஆனால் கலாவுக்கும் அவள் கணவருக்கும் அத்தகைய எண்ணம் சிறிதுகூட இல்லை.

கலக்கத்திலிருந்த கலாவிடம் காங்கிரஸ் அலுவலகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதாகவும், அங்கிருந்தவர்கள் அனைவரும் கொல்லப்பட்ட தாகவும் சிலர் தெரிவித்தார்கள். அவள் மகன், இரண்டு வயதேயான கோவிந்துக்கு காய்ச்சல்; உடல் நெருப்பாய்க் கொதித்துக் கொண்டிருந்தது. டாக்டர்கள் யாரையும் அழைக்க முடியவில்லை. இருபத்தேழு வயதான கலா செய்வதறியாது நடுக்கத்துடன் உட்கார்ந்திருந்தபோது அண்மையிலுள்ள முஸ்லிம்கள் உதவிக்கு வந்தனர். அவளை அணைத்தபடி, அவள் கணவரை பற்றிய நல்ல செய்தி கிடைக்கும் என்று உறுதி கூறினர். அவளைத் தங்களுடைய புர்காவை அணியும்படி  செய்தனர். கோவிந்தின் கைகளில் கறுப்பு வளையல்களை மாட்டி அவன் இந்து என்று தெரியாதபடி மறைத்தனர். முதலில் கலா தான் கதர் மட்டுமே அணிவதாகக் கூறி புர்காவை அணிய மறுத்தாள். ஆனால் அவர்கள் வீதியில் நிலவும் அரசியலை விளக்கினர். “ஒரு வார்த்தை பேசாதே. உன் குழந்தையின் நன்மைக்காக இந்த உடையை உடுத்தித்தானாக வேண்டும்” என்றனர். இதற்கிடையில் தீயணைப்பு படையினர் காங்கிரஸ் அலுவலகத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் செய்தி வந்தது. கலாவுக்குச் சிறிது நிம்மதி. எனினும் இரவு காத்திருந்தது. அவளுடன் அண்டை வீட்டாரும் இரவு முழுவதும் இருந்தனர். முஸ்லிம் நண்பர்கள் குரான் ஓதிக் கொண்டிருந்தனர். கலாவும் மற்றவர்களும் கீதை ஸ்லோகங்களையும் பஜனைப் பாடல்களை ம் பாடினர். கடைசியில் ஒரு வழியாக அதிகாலை இரண்டரை மணிக்கு சாந்தி வீடு வந்துசேர்ந்தார்.

முஸ்லிம்கள் தனக்கு அளித்த உதவிகளை பற்றிச் சொல்லிக் கொண்டு வருகையில் கலா அவர்கள் தன்னிடம் கேட்ட பல கேள்விகளையும் பற்றி நினைவுகூர்ந்தார்.  "நீங்கள்—ஹிந்துக்கள்— ஏன் எங்களை வெறுக்கிறீர்கள்? உங்கள்மேல் எங்களுக்கு எந்தவித வெறுப்பும் இல்லையே?" அவர் அதற்கு முன்பும் அதன் பின்பும் அளித்த—-அவரது இதயத்தின் ஆழத்திலிருந்து எழுந்த— பதிலைத்தான் அப்போதும் அளித்தார். ``நாங்கள் உங்களை வெறுக்கவில்லை. மத வேறுபாடுகள் பாராட்டாத குடும்பத்திலிருந்து வந்தவள் நான். நாமெல்லாம் ஒன்று. மனிதர்கள் என்ற நிலையில் நாமெல்லாம் சகோதர சகோதரிகள்."]

கராச்சியை விட்டுக் கிளம்பிய கடைசிக் குடும்பங்களில் மூன்று நபர்கள் கொண்ட ஷஹானியின் குடும்பமும் ஒன்று. காந்திஜியின் அடிச்சுவட்டைப் பின்பற்றிய பலரைப்போலவே சாந்தி ஷஹானியும் தேசப் பிரிவினையை அடியோடு வெறுத்தார். கராச்சியை விட்டுவர அவருக்கு விருப்பமில்லை. “இந்த ஊரை விட்டுவரவே மாட்டேன். என்னுடைய இன மக்களுக்காகவும் காங்கிரஸுக்காக உழைத்தவர்களுக்காகவும் நான் பாடுபடுவேன்” என்றார் அவர். ஆனால் அவருடைய குழந்தை நோய்வாய்ப்பட்டிருந்தது. நண்பர்கள் குழந்தையைக் காட்டி அதற்காகவாவது ஊரைவிட்டுச் சென்றுவிட வேண்டுமென்று வேண்டிக்கொண்டபோது அவர் மனம் இளகியது. அவருடைய உறவினர் அனைவரும் சென்று விட்டனர். கலாவின் தாய்வீடு காலியாக இருந்தது. அது போலவே சாந்தியின் சகோதரர் வீடும்.

அந்தச் சமயம்தான் காந்திஜி சுட்டுக் கொல்ல பட்டார்.

“பார் இந்த கோட்சேயை! தன்னுடைய குருவையே கொன்றுவிட்டான். இந்த இந்துக்கள் எல்லோருமே இப்படித் தான்” என்ற விமர்சனங்கள் ஒலிக்கத் தொடங்கின. எங்கும் ஒரு விரோத சூழ்நிலை விஷமாகப் பரவியது. கனத்த உள்ளத்துடன் சாந்தியின் குடும்பம் இந்தத் தவிர்க்கமுடியாத நிலைமைக்கு தலைசாய்க்க வேண்டியிருந்தது. 1948 பிப்ரவரி 3ஆம் தேதி அவர்கள் கராச்சியை விட்டுக் கிளம்பினர். பிப்ரவரி 4ஆம் தேதி கோவிந்தின் இரண்டாவது பிறந்தநாள்; அன்று அவர்கள் ஒரு கப்பலில், தங்களின் புதிய அடைக்கலமாகப்  போகும் இந்தியாவின் ஏதோ அன்னியமான நகரத்தை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

போப்பட்டி ஹீரானந்தானி கலா ஷஹானியின் நெருங்கிய நண்பர்.  எழுத்தாளர். கே. சி. கல்லூரியில் சிந்தி பேராசிரியர். அவர் நன்கு படித்த ஒரு பையனை மணக்க இருந்தார். ஆனால் அவர் பத்தாயிரம் ரூபாய் சீதனமாகக் கேட்டார். அப்படிக் கேட்பதில் என்ன தப்பு என்று எண்ணிய போப்பட்டியின் அம்மா அந்தத் தொகையைக் கொடுக்கத் தயாராக இருந்தார். பணம் கொடுக்க வேண்டாம் என்று தாயாரை வற்புறுத்தினார் போப்பட்டி. ஆனால் தாயார் பிடிவாதமாக இருந்தார். அவரிடமிருந்து பையனின் முகவரியைச் சாமர்த்தியமாக பெற்றுக் கொண்டு அந்த நபரை போய்ப் பார்த்தார் போப்பட்டி. ``என்னிடமிருந்து எப்படி வரதட்சணை எதிர்பார்க்கலாம்? நானும் உங்களைப் போலவே படித்திருக்கிறேன். வேலை பார்க்கிறேன். சுதந்திரமாயிருக்கிறேன். என்னைவிட நீங்கள் எப்படி உயர்ந்தவர் என்று எனக்குப்  புரியவில்லை. பணத்தைக் கொடுத்து உங்களை நான் ஏன் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்?" என்றார் போப்பட்டி. அதற்கு அவர், ``நான் என்ன செய்யட்டும்? என் அம்மாவின் ஆசை அது" என்றார். ``அப்படியானால் நீங்கள் உங்கள் அம்மாவுடனேயே இருங்கள், நான் என் அம்மாவுடன் இருந்து கொள்கிறேன். குட் பை" என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார் போப்பட்டி. அதன் பிறகு அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. தந்தை இறந்தபின் குடும்பத்தை அவரே கவனித்துவந்தார். அவருடைய சகோதரி ஒருத்தி விதவையானபோது, அவளுக்கு எந்த வகையில் உதவ வேண்டும் என்பதில் போப்பட்டி தெளிவாக இருந்தார். சகோதரியிடம் ``உனக்கு ஆதரவு தருகிறேன். ஆனால் உனக்காக நான் வாழ முடியாது. உன் காலிலேயே நிற்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் சுயமரியாதையுடனும் வாழவேண்டும்" என்றார். கலா ஷஹானியின் தலைமுறையினருக்கு மதிப்புடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதும் தம் சொந்தக் காலிலே நிற்பதுமே மிக முக்கியமான விஷயங்களாக இருந்தன.

கலா ஷஹானி தன் சொந்த ஊரான கராச்சியைப்  பிறகு பார்க்கவேயில்லை.

வேரிழந்து வந்த அதிர்ச்சியைவிட `அகதி’ என்று முத்திரை குத்தப்பட்டதே பெரிய அவமானமாக இருந்தது. அவரைப் போன்றவர்களால் ஜீரணிக்க முடியாத ஒரு சொல் அது. “அந்த வார்த்தையை நாங்கள் எப்படி வெறுத்தோம்!” என்றார் கலா. இங்கு தங்களுக்கு வரவேற்பில்லை என்பதை உணர்ந்தனர். “எங்களுக்கு வேதனையாக இருந்தது. பிரிவால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறோம். அதற்கும் மேல் இந்த அவமானம். . .” அகதி என அழைக்கப்படுவதற்கு அவர்கள் கூறிய பதில், “நாங்கள் அகதிகள் அல்ல. உங்களில் ஒருவர்தான் நாங்களும். எங்கள் சொந்தக் கால்களிலேயே நாங்கள் நின்றுகொள்வோம்.”

“அப்படியே செய்தோம்,” என்றார் கலா ஷஹானி. “எங்களை நாங்களே கவனித்துக் கொள்ளமுடியும் என்பதை இந்திய மக்களுக்கு நிரூபித்துக் காட்டிவிட்டோம்.”

அரசியலில் ஈடுபட்டு முதலெடுக்க நிறையபேர் அவர்கள் மத்தியில் இருந்தனர். அற்பத்தனமும் பேராசையும் மக்கள் மனத்தை ஆட்டுவிப்பதைக் கண்டு கலாவும் சாந்தியும் கோபமுற்றனர். வீட்டுக்காகவும் நிலத்துக்காகவும் சண்டை போட்டுக்கொள்ளும் ஆட்கள் ஒருபுறம், ஜெயிலுக்குப் போனதையும் கதர் அணிவதையும் சொல்லி மார்தட்டிக் கொள்ளும் ஆட்கள் இன்னொரு புறம். கலாவுக்கு ஒரே ஏமாற்றமாக இருந்தது. ஒருவன் தன் தாய்நாட்டுக்காக பாடுபடுவது தன் தியாகத்தையோ உயிரையோ விலை பேச அல்ல. 1947இல் தங்கள் அரசியல் பணி முற்றுப்பெற்றதாக அவர்கள் உணர்ந்துகொண்டனர். பதவி அரசியலில் நுழைய அவர்கள் விரும்ப வில்லை. கலாவும் அவள் கணவரும் மலாடில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தனர். ஷஹானி ஹிந்துஸ்தான் என்ற சிந்தி தினசரியில் வேலை பார்க்கத் தொடங்கினார். கலாவின் தந்தை ஆக்ராவில் குடியேறினார். கலாவின்  வாழ்க்கை இப்போது சோதனையும் வேதனையும் நிரம்பிய ஒரு கட்டத்தில்  நுழைந்தது. இந்தியாவுக்கு வந்த பத்தாண்டுகளில் அவர் நிறையவே துயரங்களை எதிர்கொண்டுவிட்டார். அவர் கணவர் எதிர்பாராமல் இளம் வயதிலேயே மரணம் அடைந்தார். பின் அவர் அம்மா காலமானார். அதைத் தொடர்ந்து, உள்ளத்தை உலுக்கும் நிகழ்ச்சியாக அவருடைய ஆறுவயது மகளையும் இழக்க நேர்ந்தது. அப்போது கலாவுக்கு வயது முப்பத்தேழுதான். கீதையிலும் கிரந்த் சாகிபிலும் தனக்கிருந்த நம்பிக்கையே வாழ்வின் இந்தச் சோதனையான காலகட்டத்தைக் கடக்க உதவியதாக உணர்கிறார் கலா.

கலா ஷஹானி, மகன் கோவிந்த், அவர் மனைவி ரோஷன், டிச.25, 1971
©
Sound & Picture Archives for Research on Women

இந்த உரையாடலின் இடையில் பேசிய கோவிந்த ஷஹானி பிரிவினைக்குப் பிந்தைய சிந்தி இலக்கியம், பழைய தாய் நாட்டின் மீதான பிரிவாற்றாமையையும் அளப்பரிய காதலையும் வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டார். கோவிந்த் ஷஹானியின் தலைமுறையைச் சேர்ந்தவர்களால், தமக்கு முந்தையைத் தலைமுறையினர் பிரிவினையின் போது எம்மாதிரியான அனுபவத்திற்கு ஆளாகியிருப்பார்கள் என்பதை உணர முடிந்தாலும் அந்த அனுபவங்கள் அவர்களிடம் ஏற்படுத்தியிருந்த பாதிப்பை முழுமையாக உள்வாங்க முடியவில்லை.

கலா ஷஹானி, மகன், மருமகள், பேத்தி கீதாஞ்சலி, 1974
©
Sound & Picture Archives for Research on Women

பிரிவினைக்கு முன் டி. ஜே. சிந்து கல்லூரியில் பணியாற்றிய சில துணிச்சலான ஆசிரியர்கள் பம்பாயில் ஜெய்ஹிந்த் கல்லூரியை நிறுவினர். பம்பாயின் அந்நாள் முதலமைச்சர் மொரார்ஜி தேசாய், பிரசித்தி பெற்ற எல்பின்ஸ்டன் கல்லூரி வளாகத்தில், தினசரி வகுப்புகள் நடை பெறுவதற்கு முன்பாக, அதிகாலையில் வந்து அந்த ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்க ஏற்பாடு செய்தார். ஆனால் அந்தக் கல்லூரியின் ஒரு சில ஆசிரியர்கள் இந்த மாதிரி `அகதி' ஆசிரியர்களும் மாணவர்களும் எல்பின்ஸ்டன் கல்லூரியின் பாரம்பரிய பெருமையை மாசுபடுத்துவதாக முணுமுணுத்தனர். பின்னர், செல்வாக்கும் தர்மசிந்தனை ம் கொண்ட பல சிந்தியினரின் ஆதரவாலும், மொரார்ஜி தேசாய் மற்றும் சில அமைச்சர்களின் உதவியாலும் மரின் டிரைவில் இப் போதைய ஜெய் ஹிந்த் கல்லூரி உருவானது.

இளம் வயது மகனுடன் வாழ்வைத் தனியாக எதிர்கொள்ளும் அளப்பரிய வலிமை அவரது தந்தையிடமிருந்து கிடைத்திருந்தது. “உன் சொந்தக் காலிலே நில். அப்போதுதான்  சுயமரியாதை உள்ளவளாவாய்.  உனது மகனுக்கு நல்ல எதிர்காலம் உண்டாகும். ஒரு சுதந்திர மனிதனாவான்” என்று அவர் சொல்லியிருந்தார். அப்பாவின் இந்த வார்த்தைகளை கலா அன்புடனும் நன்றியுடனும் நினைவுகூர்கிறார். கலாவின் மூத்த சகோ தரனுக்கு அவர் வேலை பார்ப்பதில் இஷ்டமில்லை. அவர்களுக்கு நிறையச் சொத்து இருந்தது. பதினேழு அறைகள் கொண்ட வீடு இருந்தது. வேலை பார்ப்பது என்பது குடும்ப கௌரவத்துக்கு இழுக்கென்று அவர் நினைத்தார். ஆனால் கலாவின் தந்தை உறுதியாக இருந்தார். “அவள் விடைபெறும் போது என் கண்களில் கண்ணீர் நிரம்புகிறது. ஆனால் அவள் கண்களில் கண்ணீர் நிரம்புவதைக் காண நான் விரும்பவில்லை. வேறு யாரையும் சார்ந்திருக்க முடியாது என்று அவளுக்குப் புரியும்போது தன்னையே சார்ந்திருக்கும் வலிமையை அவள் பெற்று விடுவாள்” என்றார் அவர்.

ஆக்ராவிற்குச் சென்று அவரைச் சந்தித்துவிட்டு கலா விடைபெற்றுக் கொள்ளும்போதேல்லாம் அவர்

அவர்கள் போகிறார்கள்
என்னை விட்டுவிட்டு
நெஞ்சம் கனக்கிறது
விழிகளில் கண்ணீர்
தெய்வமே
எனக்கு வலிமைகொடு
மனவுறுதி கொடு

என்ற சிந்திக் கவிஞர் ஷா அ துல் லத்தீஃபின் வரிகளைச் சொல்வார்.

இவ்வாறுதான், தன்னை `சாமர்த்தியமற்றவள்’, `தகுதியற்றவள்’, `படிப்பு இல்லாதவள்’ என்றெல்லாம் கூறிய இந்த பெண்மணி, வாழ்க்கையைக் கையில் எடுத்துக்கொள்ளும் துணிவு தன்னிடம் இருப்பதைக் கண்டுகொண்டார். தனக்கென  ஓர் இடத்தை உருவாக்கிக் கொண்டார். படித்த சகோதரிகளிடையே இவர் ஒருவர்தான் தொடர்ந்து வேலைக்குச் சென்றவர். வேலைக்குச் செல்லும் பெண்கள் பற்றிய பார்வையை பெண்கள் இயக்கம் அடியோடு மாற்றுவதற்கு வெகுகாலம் முன்பே அந்தப் பெண்கள் வரிசையில் தன்னை இணைத்துக் கொண்டார். கணவன் மறைந்து இரண்டாண்டுகளுக்கு பின்,

கலாவின் சகோதரர் ஒரு பிரெஞ்சுப்  பெண்ணை மணக்க விரும்பி, தந்தையின் அனுமதிக்காகக் கடிதம் எழுதினார். அவர் ``என் வீட்டுக் கதவுகள் அவள் வருகையைத் தடுக்குமளவுக்கு குறுகியவை அல்ல; அவளை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்" என்று பதில் எழுதினார். ஆனால் மருமகளுக்கு அவரைச் சந்திக்கும் பாக்கியம் கிட்டவில்லை. ஆனால் அந்தக் கடிதத்தை இன்றைக்கும் பத்திரமாக வைத்திருக்கிறாள். கலாவின் மருமகளின் மகள் (சகோதரியின் பெண்ணின் மகள்) ஒரு பாகிஸ்தான் முஸ்லிமை மணந்திருக்கிறாள். கலாவின் சகோதரி தன் அப்பா என்ன செய்திருப்பாரோ அதைப்போல் தன் மகளின் மருமகனுக்கு ஒரு அழகிய கடிதம் அனுப்பினாள். கலாவின் மகன் கோவிந்த் ஒரு பார்சிப் பெண்ணை மணம் செய்திருக்கிறார். எல்லோரும் ஒரே வீட்டில்தான் வசிக்கிறார்கள். கலாவுக்குத் தன் மருமகள் ரோஷன் வேலைக்குச் செல்கிறாள் என்பதில் மிகவும் பெருமை. அத்துடன் ரோஷனின் அம்மாவுக்கும் கலாவுக்கும் இடையே மிக அன்யோன்யமான உறவு நிலவுகிறது.

1958 மார்ச் 13ஆம்தேதி ஹிந்துஸ்தான் பத்திரிகையில் `கிதாப் கர்’ (புத்தக உலகம்) பகுதியில் சேர்ந்தார். தொடர்ந்து வேலை பார்த்து வருகிறார். இந்தப் பணி அவரது வாழ்க்கைப் பார்வையை மாற்றியிருக்கிறதா? இந்த முரட்டு உலகத்தோடு மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறதே என்று என்றாவது உணர்ந்ததுண்டா? ஆரம்பத்தில் கவலைப்பட்டதை அவர் ஒப்புக்கொண்டபோதிலும், வீட்டில் இருப்பதைவிட வேலைக்குச் செல்வது தனக்கு மிக நன்றாக இருந்தது என்றார். ஒரு விதத்தில் அது அவருக்குத் தன்னம்பிக்கையை அளித்தது. மற்றொரு விதத்தில் தாய்க்கும் மகனுக்கும் இடையே ஒரு வித்தியாசமான பாசத்தை உருவாக்கியது. அந்த இளம் சிறுவன் அம்மா வேலைக்குச் செல்லும் போது தன்னைக் கவனித்துக்கொள்ளக் கற்றுக் கொண்டு விட்டான். பாதகமான சூழ்நிலைகள் தாயும் மகனும் இது போன்ற வாழ்க்கையை நடத்த நிர்ப்பந்தித்தன. தனிமையும் துயரமும் இருவரையுமே பாதித்தது.

பிடிவாதமும் பொறுமையும் கலாவுக்கு நிறையவே பலனை அளித்திருக்கிறது. சுதந்திரமாக இருப்பதற்கும் சொந்தக் காலில் நிற்பதற்கும் அவர் கற்றுக்கொண்டார். வீட்டு வேலைகளைத் தானும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வை தன் மகனிடம் ஏற்படுத்தினார். சுதந்திரமாக வாழும் எண்ணத்தை காந்திஜியிடமிருந்தே தான் பெற்றுக் கொண்டதாக கலா கூறுகிறார். காந்திஜி விடுத்த அழைப்புதான் பெண்கள் தங்கள் வீடுகளின் நான்கு சுவர்களை விட்டு வெளியேறி வெளி உலகைச் சந்திக்கும் தைரியத்தை அளித்தது என்பது அவர் எண்ணம்.

உறுதிமிக்க காந்தியவாதியாக இருப்பினும், கலா ஷஹானி காந்திஜியை சந்தித்ததே இல்லை. கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு யாரையும் சந்திக்க அவர் விரும்புவதில்லை. “பின்னால் நின்றுகொள்வதே போதும்” என்கிறார் அவர். அதிகார அமைப்புகளில் முன்னிறுத்திக்கொள்ள போட்டி போடாமல் பின்னணியில் நின்று பணியாற்றுவோம் என்ற முடிவை அவரே விரும்பித் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அவரும் வரலாறு படைத்திருக்கிறார் என்ற உண்மை இதனால் மறைந்து போய்விடாது.

கலா ஷஹானியின் ஸ்பாரோ பயிலரங்கில், ஜூலை 27, 1997 பங்கேற்றவர்களில் ஒரு பகுதி
©
Sound & Picture Archives for Research on Women

குறிப்பு:

கலா ஷஹானியின் வாழ்க்கையைக் கூறும் ‘தனியாய் ஒரு போராட்டம்’ பிரதியும் ஓவியங்களும், புகைப்படங்களும் ஸ்பாரோ அமைப்பின் காப்புரிமைக்கு உட்பட்டவை. இவற்றை யாரும் எந்தத் தளத்திலும் வேறு எந்தப் பதிப்பிலும் உபயோகிக்க அனுமதி இல்லை.

*******

தொடர்புள்ள பதிவு:

Series Navigation<< சொல்லாத கதைகள்பிரபஞ்சமே சோதனைக்கூடமாய்: சாந்தூ குர்னானி >>

One Reply to “தனியாய் ஒரு போராட்டம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.