- கோன்ராட் எல்ஸ்ட்டின் ‘இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்’
- இந்துக்கள் கோழைகளா?
- யோகாப்பியாசம் இந்துக்களுடையதா?
- ராமகிருஷ்ணர் முகம்மதியரா அல்லது கிருத்துவரா?
- ராமகிருஷ்ணர் பல மதங்களைக் கையாண்டவரா?
- சர்வதேச யோகா நாளில் ‘ஓம்’ சின்னம் இடம்பெற்றதா? வெளியேற்றப்பட்டதா?
- யோகம் இந்துக்களுடையதா எனும் கேள்வியின் முகமதிப்பு என்ன?
- கோன்ராட் எல்ஸ்ட்டின் இந்து மதமும் அதன் கலாசாரப் போர்களும் – ஏழாம் அத்தியாயம்
- கொன்ராட் எல்ஸ்ட்டின் ’இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்’
- புனித தாமஸின் மரணம்: ஓர் இட்டுக்கட்டல்
- இலா நகரில் பன்மைத்துவம்
- சதி எனும் சதி
- தார்மீக விழிப்புணர்வு யாருக்குத் தேவை – ஹிந்துக்களுக்கா? பா.ஜ.க.வினருக்கா?
- “கல்வித் துறையின் ஹிந்து வெறுப்பு” புத்தக விமர்சனம்
- ஔரங்கசீப்பைப் பற்றிய சர்ச்சை
- அயோத்தி: ரொமிலா தாப்பருடன் பாதி வழி சந்திப்பு
- குஹாவின் கோல்வால்கர் – கோன்ராட் எல்ஸ்ட்
- குஹாவின் கோல்வால்கர் – 2ம் பகுதி
- ஆர்.எஸ்.எஸ் பற்றி ஊடகத் திரிப்புகள்
- கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக…..
- மெக்காலேயின் வாழ்க்கையும் காலமும்
- ‘இந்திரப்ரஸ்தா’ – வகுப்புவாதப் பெயரல்ல
- கல்வித் துறைக் கொடுமையாளர்கள்
- மேற்கத்திய மீட்பாளர்களின் பன்முகத்துவம்
- மேற்கத்திய மீட்பாளர்களின் பன்முகத்துவம் (இரண்டாம் பகுதி)
ஆசிரியரின் முன்னுரை
முதற் பாகத்தில், கோல்வால்கரின் 50 வருடங்களுக்கு முந்தைய “Bunch of Thoughts” (எண்ணக் குவியல் – எ . கு. ) என்ற புத்தகம் ஆளும் கட்சியிடம் ஏற்படுத்தியுள்ள செல்வாக்கைப் பற்றியும், அதன் பயங்கர விளைவுகளையும் பற்றி ராமச்சந்திர குஹா அவர்கள் எழுதியுள்ளதை பார்த்தோம். இப்பகுதியில், அவருடைய கோல்வால்கரின் பார்வை கவலைக்கிடமளிக்கிறது எனும் புரிதலை விவாதிப்போம்.
லோக குரு (World Teacher):
குஹாவின் சொற்படி , ‘ கோல்வால்கரின் மற்றொரு அனுமானம் தற்போது வீழ்ந்து கிடைக்கும் ஹிந்துக்களின் தலையில்தான் உலகத்தினரை நல்வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது’. இதற்கு, கோல்வால்கர் கூறிய ‘ஹிந்துக்களின் உலகத்தை ஒன்றிணைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மானுட சகோதரத்துவம் நிலைத்து நிற்பதற்கான அடிப்படை’ என்று வலியுறுத்தியுள்ளதை சுட்டிக் காட்டுகிறார். அதாவது உலகத்திற்கே ஹிந்துக்கள்தான் தலைமை தாங்க வேண்டும் என்பது தெய்வத்தின் நம்பிக்கை என்பதால் அப்பொறுப்பு ஹிந்துக்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது என்பதாகும்.
மற்ற நாடுகள் இந்தியாவின் இந்த காணிக்கைக்காக காத்திருப்பது போல் தெரியவில்லை. ஆனால் பிற நாடுகள் இந்தியாவிடமிருந்து வலிய எடுத்துக் கொண்ட தும் பெற்றுக் கொண்டதுமான அன்பளிப்புகள் விலைமதிப்பற்றதாகும். சீனா தன் மண்ணின் சித்தாந்தங்கள் குறைவற்றதாக இருந்தபோதும் புத்த மதக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டதுமல்லாமல் தன்னுடன் இணைத்துக் கொண்டது. பிதாகரஸ் பிளேட்டோ வழி வந்த அறிவாளிகள் நேரடியாகவே இந்திய கருத்துக்களையும் பயிற்சிகளையும் நகலெடுத்துக் கொண்டனர். இவர்களுடைய கருத்துகள் ஐரோப்பிய சித்தாந்தத்திலும் சில கிருத்துவ இறையியலிலும் ஊடுருவியுள்ளன. பிற்காலத்திய யூரோப்பிய சித்தாந்த புரட்சியை உண்டுபண்ணிய இம்மானுவேல் காண்ட் எவ்வாறு டேவிட் ஹ்யும் அவர்களின் புத்த மதக் கண்ணோட்டம் தன்னை வறட்டுப் பிடிவாத தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பியது என்று எழுதியுள்ளார். ஹ்யும் புத்த மதத்தை பற்றி எங்குமே பேசவில்லை. அவ்வாறு பேசியிருந்தால் அவையோர்கள் கேலி செய்திருப்பார்கள். ஆனால், அவருடைய சித்தாந்த விழிப்பை, கத்தோலிக்க மத போதகர்கள் திபெத்திலிருந்தோ தைவானிலிருந்தோ அனுப்பிய இரண்டு புத்த மதக் கோட்பாடுகளைப் பற்றிய விரிவான விளக்கவுரைகள்தான் தூண்டியது என்பது சமீபத்தில் தெரிய வந்துள்ளது. ஏ .என். வைட்ஹெட் , கார்ல் யுங், கென் வில்பர் போன்ற நவீன சித்தாந்தவாதிகள் இந்தியக் கருத்துக்களையும் பயிற்சிகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் மூலத்தை சொல்லாமலேயே உபயோகப்படுத்தியுள்ளனர். இம்முறையை ராஜிவ் மல்ஹோத்ரா அவர்கள் “ யு வளைவு “என்ற புதிய ஆய்வுக் கருத்தின் மூலம் விவரித்துள்ளார்.
அதே சமயம், இந்திய பாரம்பரியங்களின் கவர்ச்சியை வெளி உலகிற்கு மதபோதக உணர்வுடன் எடுத்துச் செல்வதும் ஹிந்துத்தனம் அல்ல. ஒரு மதபோதகர் மற்றொரு மதத்தினரை பார்த்த மாத்திரத்திலேயே அவரது உணர்வு மட்டுமல்லாமல், முகபாவமும், உடற்வாகும் மாறிவிடும். இவரை எந்த இடத்தில் தட்டினால் நான் சொல்லப் போவதை உடனே ஏற்றுக் கொள்வார் என்பதைதான் சிந்திப்பார். ஹிந்துக்கள் இவ்வாறு சிந்திக்கக் கற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் பிற மதத்தினர் ஒருவரை சந்திக்க நேர்ந்தால் அவர்கள் வாயிலிருந்து வருவதை கேட்பதில்தான் ஆர்வமுள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்களுடைய மத உணர்வை அழித்து அவ்விடத்தில் ஹிந்து மதத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்ற தேவை அவர்களுக்கில்லை. பிற மதங்களின் சாராம்சமும் இந்து மதத்தினுடையது போல் உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவர்களது அனுமானம்தான் இதற்கு காரணம்.
கோல்வால்கரின் தேசியவாதத்துடன் இந்தியாதான் லோக குரு என்ற அவரது சர்வதேச முறையீடு பொருந்தாத ஒன்று. ஆனால், இந்தியாவின் அன்பளிப்புகள் இந்தியர்களுடதுதான்; சில விதங்களில் இந்தியா மற்ற நாடுகளுக்கு குருவாகத்தான் இருந்துள்ளது என்பதை சொல்லும் நேரம் வந்து விட்டது. ஏனென்றால் அமெரிக்கர்கள் உதாரணத்திற்கு , யோகத்தில் உள்ள சம்ஸ்க்ருத சொற்களையும் இந்திய மேற்கோட்களையும் இருட்டடிப்பதில் தீவிரமாக முனைந்துள்ளனர் . பிற நாடுகளில் இந்திய அன்பளிப்புகளை பரப்புதலும் இந்தியாவில் பிற நாடுகளின் அன்பளிப்பை பரப்புதலும் சில காலங்களுக்கு தொடரத்தான்செய்யும். பள்ளிப் புத்தகங்களில் அடிக்குறிப்புகளை படிக்கும் புத்திசாலி சீன, ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க மாணவர்கள் யோகம் இந்தியாவிலிருந்துதான் வந்தது என்பதை அறிந்து கொள்வார்கள். விண்கல விஞ்ஞானம் ஜெர்மனியிலிருந்தும், வெடிமருந்து சீனாவிலிருந்தும் மனித இனம் ஆப்பிரிக்காவிலிருந்தும் வந்தது என்பது போலத்தான் இதுவும். அதை தவிர அவர்கள் கற்பதெல்லாம் அவர்களுக்கே உரித்தானதாகும். லோக குருக்கள் பன்னாட்டினர். ஒரு நாட்டினர் மட்டும் அல்ல என்பதுதான் உண்மை.

புத்தரின் உலகக் குடிமைக் கோட்பாடு (The Buddha’s Cosmopolitanism):
கோல்வால்கர் புத்தரை புகழ்ந்தாலும், புத்த மதத்தினர் இந்தியாவின் தேசிய பாரம்பரியங்களை வேருடன் பிடுங்குகிறார்கள் எனக் குற்றம் சாட்டுகிறார். “நம் சமூகம் வளர்த்த சிறந்த கலாச்சார பண்புகளை தகர்க்கப் பார்க்கிறார்கள் “ என்கிறார். ஹிந்துக்களின் சில நற்பண்புகளை அவர்கள் உதாசீனம் செய்ததற்கு காரணம் வேறு நற்பண்புகளை வலியுறுத்தியதுதான். கோல்வால்காருக்கு சிறிது முந்தைய ஹிந்து தேசியவாதி, வீர் சாவர்க்கர் ஏற்கனவே புத்தமதத்தினரின் அஹிம்சாவாதம் இந்தியர்களின் பாதுகாப்பிற்கு தீமை விளைவிக்கிறது எனக் கூறியுள்ளார். ஆனால் எந்த நற்பண்பையும் சிதைப்பதென்பது புத்த மதத்திற்கு உகந்ததல்ல. புத்த வரலாற்றில், மெனாண்டர், மிலிண்டா போன்ற கிரேக்கர்களையும் , கனிஷ்கார் போன்ற குஷான வம்சத்தை சேர்ந்த அந்நியர்களின் செல்வாக்கையும் மறுக்க இயலாது. ஆனால் கோல்வால்கரின் கூற்று ,’” புத்த வெறியர்கள் நாட்டின் மீதும் அதன் பரம்பரையின் மீதும் வைத்திருந்த பக்தி மிகக் கீழிறங்கி விட்டதால், புத்த மத முகக் கவசத்தை அணிந்த அயல்நாட்டு ஆதிக்கக்காரர்களை அழைத்து வந்ததுமல்லாமல் அவர்களுக்கு வேண்டிய உதவியையும் செய்துள்ளனர். புத்த மதப் பிரிவு தன்னுடைய தாய் சமூகத்திற்கும் சமயத்திற்கும் துரோகம் இழைத்து விட்டனர்” என்று கூறுவது மிகவும் ஆச்சரியகரமானது.
இந்திய புத்த மதத்தினரைப் பற்றிய இந்த வரலாற்றுக் குறிப்பு மோசமானது. புத்த மதம் எல்லை பாதுகாப்பில் அக்கறை காட்டவில்லை என்பது ஒப்புக்கொள்ள வேண்டியதே. ஆனால் புத்தர் வாழ்ந்த போதித்த வடக்குப் பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் அசச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை. வடமேற்குப் பகுதியையும் அதன் கலாச்சாரத்தையும் அவர் நன்கு அறிந்து வைத்திருந்தார். அவருடைய நண்பர்களான ப்ரச்னஜித்தும் பந்துலாவும் அங்கிருந்த தக்ஷசீல பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்.( ஆம்! இப்பல்கலைக்கழகம் நேருவியர்கள் கூறுவதை போல் புத்தர் காலத்தை சேர்ந்ததல்ல. வேத கால கல்வி நிலையம்). அப்பகுதியைப் பாதுகாக்கும் வேலை அவருக்கில்லை; அதற்கான தேவையும் அங்கில்லை. மேலும், அதை விட முக்கியமான வேலைகள் அவருக்கிருந்தன. மேலும், அவரோ அவரைப் பின்பற்றியவர்களோ எதிரிகளுடன் சண்டையிட்ட எவரையும் பின்னிருந்து சுடவில்லை.
மற்ற இந்தியப் பிரிவுகளும் இவ்வாறுதான் இருந்தன. வேதங்களும் இதிகாசங்களும் பல யுத்தங்களைப் பற்றிப் பேசுகின்றன. அவை எதுவுமே அன்னியர்களை எதிர்த்து நடத்திய போரல்ல. அத்தகைய அன்னியத் தாக்குதல் முகம்மது கோரியுடையதுதான். அவரை எதிர்த்த பிருதிவிராஜ் சௌஹானைக் காட்டிக் கொடுத்தவர் ஜெயச்சந்திரன் என்ற மற்றொரு ஹிந்து.. அவர்களிருவருமே அட்டோக்கிலிருந்து கட்டாக் வரை கலாச்சாரம் ஒன்றுதான் என்பதை நன்கு அறிந்தவர்கள். ஆனால் அரசாட்சியைப் பொறுத்தவரை, இந்திய துணைக்கண்டத்தில் அவர்களது பகுதியை கட்டிக்காப்பதில் மட்டும்தான் ஆர்வம் கொண்டிருந்தார்களே தவிர அண்டை வீட்டுக்காரர்கள் எக்கேடு கெட்டு போனாலும் போகட்டும் என்ற எண்ணமுடையவர்களாகத்தான் இருந்தனர். ஆர்.எஸ்.எஸின் கருத்தாகிய தேச பக்தி, அதாவது, இந்திய துணைக்கண்டத்தின் மேலுள்ள பற்று, பண்டைய ஹிந்து மதத்தினருக்கில்லை.
ஆன்மீக இலக்கை உடைய சமயப் பிரிவுகளுக்கு தேசியம் ஒரு குறிக்கோளாக இல்லை. சம்சாரத்திலிருந்து விடுதலை, ஆத்ம ஞானம், தன்னையறிதல், உணர்வுடன் ஒன்றுதல் போன்ற குறிக்கோள்களைதான் கொண்டிருந்தன. முக்தியை நாடுபவர்களின் தொன்மையான பயிற்சிப் புத்தகங்கள் இந்தியாவை எங்குமே குறிப்பிடவில்லை. சில நூற்றாண்டுகளாக, சில புத்தகங்கள் இந்திய நிலப்பரப்பை சுட்டிக் காட்டுகின்றன. ஆனால், முக்திக்கான முக்கியத்துவம் அதற்கு தரப்படவில்லை. தாய் நாடு என்பது பிறந்த நாடு. அவ்வளவுதான். அது அடையப்படும் இடம் அல்ல. ஆசைப்பட்டு முடிவில் சேரும் இடமும் அல்ல.
அதே சமயம், இந்தியர்கள் இதை புண்ணிய பூமியாகவே கருதினர். அதாவது, நற்காரியங்களை செய்து அதன் மூலம் கிடைக்கும் பலனை பெறுவதற்கான இடம். வெளிநாட்டிற்கு சென்று திரும்பி வந்தால் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இருந்த இடம். ஆன்மீகத்திற்கும் தேசியத்திற்கும் உள்ள பாலத்தை இதன் மூலம் அறியலாம். இக்கட்டுரையாசியர், இதைச் சரியானதாக கருத்தாவிட்டாலும், அவர் இந்தியரல்லாததால் , ஹிந்துக்கள் எதைச் செய்ய வேண்டும் எதை நம்ப வேண்டும் என்று சொல்வதற்கு தனக்கு தகுதியில்லை என்கிறார். ஆனால், கோல்வால்கர், இந்தியா ஒரு தனித்தன்மை வாய்ந்த நாடு என்று பாரம்பரிய அடிப்படையை வைத்துதான் கூறியுள்ளார் என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.
ஜாதி (Caste)
புத்த மதம் 1956ல் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்த காரணம் டாக்டர். பி. ஆர்.அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவியதாகும். கோல்வால்கரின் புத்தகம் அப்போது இன்னும் வெளிவரவில்லை. இதை குஹா உபயோகித்துள்ள கிருத்துவக் கட்டமைப்புச் சொல்லான மாற்றம் என கூற முடியாது. அம்பேத்கர் ஹிந்து மதத்திற்கு கைமுட்டியை உயர்த்திக் காட்டினாலும் அவர் சமூகத்திற்கோ ஹிந்து மதத்திற்கோ துரோகம் செய்யவில்லை. அவரே, வெளிநாட்டு மதத்திற்கு மாறினால் அது நாட்டிற்கு பெரும் கேடாக அமையும். அதை நான் விரும்பவில்லை. அதனால்தான் இந்தியாவில் பிறந்த ஒரு மதப் பிரிவை தழுவியுள்ளேன் எனக் கூறியுள்ளார். சாவர்க்கர் சொன்னது போல் அம்பேத்கரின் புத்த மத அடைக்கலம் ஹிந்துக்கள் பக்கம் தாண்டி விட்டார் என்பதைத்தான் காட்டுகிறது. ஆர்.எஸ்.எஸ்ஸும் அதன் நுண்ணறிவு வளர வளர அம்பேத்கரை கொஞ்சம் கொஞ்சமாக தனது கட்சியில் வழிபடும் ஒரு விக்கிரகமாக ஏற்றுக் கொண்டு விட்டது. கோல்வால்கர் இருந்தபோது இது நடைபெறவில்லை. குஹா சொல்வது போல் கோல்வால்கர் தலித்துக்களி ன் சமூகத்தளைகளை உடைத்தெறிந்த ஒரு மிக முக்கியமான மனிதரை எங்குமே குறிப்பிடவில்லை.
நேருவிய சமயச்சார்பற்றவர்களை போல் இந்து மதத்தை எதிர்க்கும் சிலுவைப் போர்வீரர்கள், ஓர் ஹிந்துத் தலைவர் எத்தகையவர் என்பதை அவர் ஜாதியைப் பற்றி என்ன கூறியுள்ளார் என்பதை வைத்தே தீர்வு செய்வார்கள் என்பது எல்லோரும் அறிந்ததே. அத்தீர்ப்பும் அவருக்கு எதிராகவே அமையும் என்பதும் அறியப்பட்ட முடிவுதான். இவர்களை பொறுத்தவரை ஹிந்து மதம் என்றாலே, ‘ஜாதி, அனைத்தும் ஜாதி, ஜாதியைத் தவிர வேறொன்றுமில்லை’ என்பதுதான்.ஜாதியைப் பற்றி சமநோக்கு உடையவர்கள் எல்லாம் ஹிந்து மதத்தை புறக்கணிப்பவர்கள்; எனவே நல்லவர்கள். தாய் மேல் காரி துப்பினால் இவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி. கோல்வால்கரை போல் ஹிந்து மதத்திற்கு பரிந்து பேசினால், அவரது எல்லா நிலைப்பாடுகளுமே ஜாதிப் பிரிவினையின் அடிப்படையில்தான் ஏற்பட்டது என்பார்கள். அனைவருக்கும் சமத்துவம் வேண்டும் என்று அறைகூவினால், பிற ஜாதியினரை கீழாகப் பார்க்கிறான் அல்லது பிராம்மணத் திமிரினால் இவ்வாறு பேசுகிறான் என ஒரு ஜாதியை மட்டும் சாடுவர்.
குஹாவின் சொற்களில்,” கோல்வால்கர் ஜாதிப் பிரிவுதான் ஹிந்துக்களை பல நூற்றாண்டுகளாக சீராக இணைத்து வைத்துள்ளது எனக் கூறியதன் மூலன் ஜாதி அமைப்பை தீவிரமாக ஆதரித்துள்ளார்” என்கிறார். ஆனால் இதற்கான கோல்வால்கரின் வரலாற்று விளக்கம், எவ்வாறு சமூகங்களை ஒருமைப்படுத்துவதாகக் கூறப்படும் நவீன தேசியத்திற்கு புறம்பான ஜாதிப் பிரிவு என்ற ஒரு சமூகத் திட்டம், சில நற்பயன்களை நல்கியது என்பதாகும். “பல்வேறு ஜாதிகளால் திணறும் இந்து சமூகம், 2000 வருடங்களுக்கு மேல் கிரேக்கர்கள், ஷாகா, ஹூனா, இஸ்லாமியர், ஐரோப்பியர்கள் ஆகிய அனைவரின் சூறையாடலுக்கு பிறகும் அழியாமலும் வெல்லமுடியாததாகவும் நின்று கொண்டிருக்கிறது. ஆனால், இனப்பிரிவற்ற சமூகங்கள் இவர்களுடைய ஒரே அடியில் மீண்டும் எழமுடியாதவாறு தவிடுபொடியாகி விட்டன” என்கிறார். ஜாதிப் பிரிவிற்கும் இந்து மதம் நிலைத்திருப்பதற்கும் காரண உறவு உள்ளதா என்பது புலனாய்வு செய்ய வேண்டிய ஒன்று. இருந்தாலும் கோல்வால்கரின் அனுமானம் வாதத்திற்கு ஒத்ததாகும். குஹாவின் அப்பட்டமான கண்டனத்திற்கு உரியதல்ல.
“எ .கு. இந்து சமூகம் தலித்துகளையும் பெண்களையும் ஒடுக்குவதை முழுவதுமாக புறக்கணித்து விட்டது.”(குஹா). குஹா! அவர்களே! தயவு செய்து உங்களால் காலம் காலமாக இஸ்லாம், பெண்களுக்கு இழைத்து வரும் கொடுமைகளை விவரிக்கும் ஒரு புத்தகத்தை காண்பிக்க முடியுமா? அவ்வாறு செய்த பின் நீங்கள் இந்த கேள்வியை எழுப்பலாம். பல புத்தகங்களை எழுதியுள்ள நீங்கள் கிருத்துவ மதத்தில் பெண்களின் ஒடுக்குதலைப் பற்றி எங்கேயாவது எழுதியுள்ளீர்களா? பெண்ணுரிமையை முதன் முதலாக நிலைநாட்டிய பெண்கள்தான் இக்கண்டனத்தை செய்துள்ளனர் என்பது உங்களுக்கு தெரியாதா?. ஏன் ஹிந்து மதத்தை மட்டும் பழிக்கிறீர்கள்? பெண்ணுரிமை கோரும் ஆசிரியைகள் யாரிடமும் ஏன் நீங்கள் ஒருவருமே ஹிந்து மதம் பல எதிரிகளிடமிருந்து சுய மரியாதையை காப்பாற்றிக் கொள்ள பட்ட அவதிகளை பற்றி எழுதவில்லை என்று கேட்டதாக தெரியவில்லையே? பின் ஏன் இந்த திடீர் திருப்பம்? மேலும் பெண்களின் கஷ்டங்கள் ஆண்களை மட்டுமே கொண்ட ஒரு அமைப்பின் தலைவரான கட்டை பிரம்மச்சாரியான கோல்வால்கருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. மற்றும், 1960களில் இந்தியாவில் பெண்களின் பிரச்சினைகளும் இப்போது போல் முக்கியமான இடத்தை வகிக்கவில்லை.
இதற்கு மாறாக, ஜாதி சமமின்மை இந்தியக் குடியரசின் செய்பணி நிரலில் (Agenda) தொடர்ந்து இருந்து வருகிறது. கோல்வால்கரும் இதைப் பற்றி பேசாமல் இல்லை. ஆனால் இந்து மதம் என்றாலே ஜாதி மட்டும்தான் என்று இந்து மதத்தை எதிர்க்கும் நூலாசிரியர்கள் அளவிற்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கோல்வால்கருடன் நேரடியாக பழகிய ஆர்.எஸ்.எஸ். கட்சியினர் ஆசிரியரிடம் சொன்னது; ‘கோல்வால்கர் ஜாதிப் பிரச்சினையை தேசியவாதியின் நோக்கிலிருந்துதான் பார்த்தார். அதை தனி முரண்பாடாகக் கருதவில்லை. அவர் ஹிந்து தேசியவாதியாக இருந்ததால் பிரிவினையை உண்டுபண்ணும் விஷயங்களை சிறிதுபடுத்தவேண்டும்; ஹிந்து ராஜ்யத்தில் ஹிந்துக்கள் எல்லோரும் சமவுரிமை உடையவர்களாகத்தான் இருப்பார்கள் என்ற கருத்தை கொண்டிருந்தார். ஆனால் ஒதுக்கீடு முறை, நலிந்தோர் நலத்திட்டம் போன்ற சமூக சீர்திருத்தங்களில் அவருக்கு நம்பிக்கையில்லை. எனவே, ஆர்.எஸ்.எஸ்ஸில் புதிதாக சேர்ந்த ஒரு பிராம்மண இளைஞன் மற்ற ஜாதியினருடன் சேர்ந்து உண்ண மறுத்தபோது அவனிஷ்டப்படியே தனியாக உணவருந்த அனுமதிக்கப்பட்டான். நாளடைவில், ஆர்.எஸ்.எஸ். நியதிகளை அறிந்துகொண்ட பின் தானாகவே மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டான். இவ்வழியில், மற்ற ஜாதியினருடன் சேர்ந்து உண்ணுதலை அவன் மீது திணிக்காததால் அதன் அருமையை இன்னும் நன்றாகவே புரிந்து கொண்டான்.எங்கள் அமைப்பு மட்டும்தான் இந்தியாவிலேயே ஜாதியற்ற அமைப்பு என ஆர்.எஸ்.எஸ். பெருமைப்படுகிறது. மாறாக, அனைத்து அரசியல் கட்சிகளும் நாங்கள் ஜாதிக்கு எதிரி என்று .அறைகூவினாலும், குறிப்பிட்ட ஜாதிகளுக்கு பரிந்து பேசுபவைதான். எல்லா அரசியல் கட்சிகளுமே நேரடியாக கூறாவிட்டாலும் ஜாதி அடிப்படையில் அமைந்த தன்னலக் குழுக்கள்தான்.
இனவாதம் (Communalism):
குஹா, கோல்வால்கர் இந்திய கிருத்துவர்களும் முஸ்லிம்களையும் பொறுத்தவரை சித்தபிரமை கொண்டுள்ளார் என குற்றம் சாட்டுகிறார். இதற்கு அவர் மேற்கோள் காட்டுவது கோல்வால்கரின் “கிருத்துவத்திற்கும் இஸ்லாமிற்கும் மதம் மாறியவர்களின் மனப்பாங்கு என்ன? அவர்கள் இந்நாட்டில் பிறந்தவர்கள்தான். சந்தேகமேயில்லை. ஆனால் இந்நாட்டிற்கு பணி செய்வதை கடமையாக கருதுகிறார்களா? அவர்கள் மதம் மாறியவுடனேயே இந்நாட்டின் மேலுள்ள அன்பும் பக்தியும் அவர்களிடமிருந்து போய் விட்டது” என்பதுதான். இதை இவர் எழுதிய சமயம், நாட்டின் பிளவு மக்களின் நினைவை விட்டு விலகாத நேரம்.. இதற்கு பெரும்பான்மையான முஸ்லீம்கள் வாக்களித்தனர் என்ற உண்மையும் ஹிந்துக்கள் மனதில் பதிந்திருந்தது. கிருத்துவ மதபோதகர்களும் சுதந்திரத்திற்கு பிறகு இந்தியா பெருங்குழப்பத்தில் ஆழ்ந்து விடும்.அச்சமயத்தில் கிருத்துவர்கள் அதிகமாயுள்ள கேரளாவும் வடகிழக்கு பகுதிகளும் தங்களை சுதந்திர நாடாக பிரகடனம் செய்யலாம் என நினைத்தனர். வடகிழக்கு பகுதியில் நடந்த மக்கட்கணிப்பில் கிருத்துவரல்லாத பழங்குடி மக்கள் இந்தியர்களோ டு இனப்படுத்திக் கொண்டனர். ஆனால் கிருத்துவ பழங்குடி மக்கள் தங்களை பழங்குடியாக மட்டுமே அடையாளப்படுத்திக் கொண்டனர் என்பதையும் மக்கள் கவனித்திருந்தனர். எனவே அவருடைய சந்தேகத்தில் சிறிதளவு உண்மை இருந்தது என்பதை மறுக்க முடியாது.
அடுத்து, குஹா தன்னுடைய வார்த்தைகளாலேயே கோல்வால்கரை கொல்லப் பார்க்கிறார். “கோல்வால்கர் இங்கு எழுப்பும் கேள்விக்கும் ஐரோப்பியர்களும் யூத எதிர்ப்பாளர்களும் எழுப்பிய கேள்விக்கும் ஒற்றுமை உள்ளது. பிரெஞ்சு, ஜெர்மானிய, பிரிட்டிஷ் தேசியவாதிகள் அவர்களது நாட்டிலுள்ள யூதர்கள் தங்கள் தாய் நாட்டிடம் விசுவாசமானவர்களாக இல்லை என்ற சந்தேகத்தை கொண்டிருந்தார்கள் “ ஆஹா ! கோல்வால்கரும் ஒரு நாஜிதான்!
ஆனால் இது முறையானதல்ல. யூதர்கள் சதித் திட்டங்களில் இறங்கியுள்ளார்கள் என்ற சந்தேகத்திற்கு ஆளாகுமுன், வெளிநாட்டினரிடோ, சர்வதேச அளவிலோ விசுவாசம் கொண்டுள்ளார்கள் என்ற சந்தேகம் கத்தோலிக்கர்கள் மேல் தான் இருந்தது. ஜேசுவைட் குழுவினரை அவர்கள் மற்ற நாடுகளை கவிழ்ப்பதற்கு ஆயுதமாக பயன்படுத்தினர். பிராடஸ்டண்ட் கிருத்துவர்கள் அவரவரது தேசத்திலேயே கூட்டு சேர்ந்து கொண்டனர். கொள்கை வேறுபாடுகளையும் ஏற்றுக்கொண்டனர். ஆனால், கத்தோலிக்க மதம் உலகளாவியதாக இருந்ததால் உலகு முழுதும் ஆதிக்கம் செலுத்துவதை லட்சியமாக கொண்டிருந்தது. ஆசிரியரின் சொந்த நாடான பெல்ஜியம் இதில் முன்னணி நாடாக விளங்கியது. அயர்லாந்து, இங்கிலாந்து, நெதர்லாந்து நாடுகளில் வசிக்கும் கத்தோலிக்கர்களுக்கான அமைப்பை ஏற்படுத்தி அவ்வமைப்புகள் அந்நாட்டு பிராடஸ்டண்ட் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டிய உதவிகளை செய்வதற்கு தயாராக இருந்தது. நிஜ சம்பவங்கள் போப்பின் குழித்தோண்டல் (Popish Plot) என்ற ஐயத்தை ஊர்ஜிதப்படுத்துவது போல் நடந்தது.
அவைகளில் ஜேசுவைட் Guy Fawks பிரிட்டிஷ் பாராளுமன்றத்தை வெடி வைத்து தகர்ப்பதாக இருந்த “வெடிகுண்டு சதி” (Gunpowder Plot) பிரபலமானதாகும். எனவே, இந்த சந்தேகங்களிலும் உண்மை இருக்கத்தான் செய்தது. மேற்சொன்ன நாடுகளும் ஆதாரமுள்ளவையே. 1950களில் கூட, நெதர்லாந்து ப்ராட்டஸ்டண்ட் மக்கள் கத்தோலிக்கர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லையெனில் பெரிய குடும்பங்களுடைய அவர்களின் எண்ணிக்கை நம்மைத் தாண்டி விடும் என்பார்கள். கத்தோலிக்கரின் எண்ணிக்கை ப்ராட்டஸ்டண்ட் எண்ணிக்கையை விட அதிகம்தான். ஆனால் இரு தரத்தினருமே பெரும்பான்மையினரல்ல. சொல்லப் போனால், கத்தோலிக்க- பிராடஸ்டண்ட் எனும் பிளவே முக்கியமற்றதாக ஆகி விட்டது. மேலும், கத்தோலிக்க பிறப்பு வீதமும் தேச சதவீதத்தளவிற்கு குறைந்து விட்டது.
மாறாக, யூதர்கள் கூட்டுச்சதி செய்கிறார்கள் என்பது Czar அவர்களின் ரகசிய போலீஸ் தயாரித்த The Protocols of the Elders of Zion என்ற போலி ஆவணம். இந்த ஆவணத்தை Czar அவர்களே ஏற்க மறுத்து விட்டார். மேற்கத்திய இஸ்லாமிய விமரிசகர்கள் இஸ்லாம் உலகம் முழுவதிலும் ஆதிக்கம் செலுத்துவதை லட்சியமாக கொண்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டும்போது, நம்மிடையே உள்ள குஹாக்கள் இது நகைப்புக்கிடமானது என்றும் இவர்கள் Protocols of Mecca என ஓன்று இருப்பதாக கற்பனை செய்து கொள்கிறார்கள் என்றும் கூறுகின்றனர். இல்லவே இல்லை! Zion Protocol போல் மெக்கா புரோட்டோகால் போலியல்ல. உண்மையானதுதான். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அதிகாரபூர்வமான குரான் சொல்கிறது “நீங்கள் அல்லாவை மட்டுமே நம்பத் தொடங்காத வரை நம்மிடையே பகையும் போரும்தான் தலை தூக்கி நிற்கும்” (60.4)1 அல்லது சிலை வழிபாடு அழிந்து அல்லாவின் மதம் உலகு முழுவதும் ஆட்சி புரியும் வரை போர் புரியுங்கள் (2:139 மீண்டும் 8:39). யூதர்களின் விவிலியமும் ஆளுமை என்ற கோட்பாட்டை கொண்டுள்ளது. ஆனால் அந்த ஆளுமை வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலத்திற்கு மட்டும்தான் (Promised Land). ஆனால், குரான் பேசுவது,’ உலக ஆளுமை’ .
எனவே, யூதர்களுக்கு எதிரான ஐயத்திற்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான ஐயத்திற்கும் உள்ள வித்தியாசம் போலிக்கும் அசலுக்கும் அல்லது பொய்க்கும் உண்மைக்கும் உள்ள வித்தியாசம்தான்.
கொள்கை பரப்பாளர்களுக்கு உண்மை முக்கியமல்ல.அவர்களுடைய பார்வைதான் முக்கியம்.. எதையுமே மேலெழுந்தவாரியாக பார்ப்பதை கலையாகப் பயின்றுள்ள, அதிலும் முக்கியமாக, நமது நேருவிய சமயச்சார்பற்றவர்களுக்கு யூத எதிர்ப்பும் இஸ்லாமின் எதிர்ப்பும் ஒன்றுதான். ஏனென்றால் இவர்கள் பார்வையில் சந்தேகம் ஒன்றே போதும். அந்த சந்தேகத்திற்கு பின்னால் உள்ள காரணம் என்ன? அது உண்மையா பொய்யா என்பதெல்லாம் அனாவசியம். சந்தேகத்தை வைத்தே அந்த குற்றச்சாட்டை, இங்கு குஹா செய்வது போல், யார் மேல் வேண்டுமானுலும் எறிய முடியும். யாரும் உள்ளே புகுந்து அதை திருத்த மாட்டார்கள் எனும் அசாத்திய நம்பிக்கை.
சமயச்சார்பற்றவர்களின் முடிவேயில்லாத பொய்த்தனத்திற்கு பெருமளவில் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும் அதை எதிர்த்து அதிலுள்ள பொய்த்தனத்தை கண்டறிந்து பதில் சொல்லத் திறமையுள்ள ஒரு எதிர்பிரிவு இருந்தால். ஹிந்து தேசியவாதிகளை கொண்ட அப்பிரிவை, கோல்வால்கரே வாதிடத் திறனற்ற மலட்டுத்தன்மையில் இறுகுமாறு செய்து விட்டார்.
கிருத்துவ மதமும் உலகை ஆள வேண்டும் என்ற கோட்பாட்டை கொண்டிருந்தது. ஆனால் இஸ்லாம் அளவிற்கு உலகத்துடன் மோதவில்லை. முதல் நூறு வருடங்களில் கிருத்துவம் ரோம சாம்ராஜ்யத்தில் சிறுபான்மையாக இருந்தது. எனவே இஸ்லாமை போலல்லாமல் தேச விதிகளுக்கு கட்டுப்பட்டதாக இருந்தது. இதனால் புனித பால் அவர்களால் விவிலிய விதிகளை மறுக்க முடிந்தது. சொற்களை விட அதன் சாரம்தான் முக்கியம் என்பதால் மதப் பகுதியை கிருத்துவரல்லாதவர்கள் ஆட்சி செய்த உலக, அரசியல் பகுதிகளிலிருந்து தனிப்படுத்த முடிந்தது. கிருத்துவம் கோலோச்சிய உச்சகால கட்டத்தில் அரசியல் பகுதியின் மேல் மோதியது. ஆனால், நவீன காலத்தில், அரசியல் வட்டாரத்திலிருந்து மதத்தை மறுபடியும் தனியாக பிரிப்பது கடினமாக இல்லை. இதில் ஒரு முக்கியமான அளவுகோல், அரசியல் மதப் பிரிவு போராட்டங்களில் இறந்த நபர்களின் எண்ணிக்கை, 20ம் நூற்றாண்டில் மதச்சார்பற்றவர்களிடையே நடந்த சண்டைகளில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட மிகக் குறைவேயாகும். கிருத்துவ படையினரை விட சமயச்சார்பற்றவர்கள் வன்முறைக்காரர்களாக இருந்தனர். வென்டீ எனும் இடத்தில் பிரெஞ்சுப் புரட்சிக்காரர்களின் இனப்படுகொலைகளும் சோவியத் ரஷ்யாவில் கிருத்துவர்களின் சித்திரவதையும் இதற்கான சான்றுகள்.
இருந்தாலும், கிருத்துவம் மிதமாகவும் அதிநவீன முறையிலும் உலகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என்ற தனது பேராவலை வெளிப்படுத்துகிறது. இஸ்லாம் போலவே கிருத்துவமும் நம்பிக்கையற்றவர்கள் நரகத்திற்கு செல்வார்கள் என்று கூறினாலும் இதை தீவிரமாக நம்பும் கிருத்துவர்கள் நம்மிடையே அதிகமில்லை. இயேசு கிறிஸ்துவும் அனைத்து நாடுகளுக்கும் சென்று போதனை செய்யுங்கள் என கூறியுள்ளதால் இந்தியாவும் கிருத்துவத்தின் மதமாற்ற பட்டியலில் உள்ளது என்றுதான் கொள்ள வேண்டும். போப்பாண்டவர் 1999ல் இந்தியாவிற்கு வந்தபோது, வெளிப்படையாகவே அவரது தேவாலயம் ஆசியாவில் ஒரு பெரிய அறுவடையை விரும்புகிறது என்ற அவரது கூற்று , ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருந்த பூர்வீக மதங்களை அழித்தது போல் இந்து மதமும் அழிய வேண்டும் என்ற அவரது உட்கிடக்கையைதான் வெளிப்படுத்துகிறது. இவ்வாறு கூறியதன் மூலம் போப் அவர்கள் அவருடைய சமயச்சார்பல்லாத சகாக்களை கைவிட்டு விட்டார். ஏனென்றால் இவர்கள் கிருத்துவம் ஹிந்து மதத்தை அழிக்க விரும்புகிறது எனும் இந்து தேசியவாதிகளின் ஐயத்தை சதா காலமும் கேலி செய்து கொண்டு இருந்தவர்கள். இவர்களுடைய தவறு அப்பட்டமான பிறகும், சமயச்சார்பற்ற குஹா வெட்கமின்றி கோல்வால்கர் கிருத்துவத்தின் மேல் கொண்டிருந்த ஐயத்தை கேலி செய்கிறார்.
கோல்வால்கரின் ஒரு குறிப்பு தவறானது. கிருத்துவம் இந்தியாவை அழிக்க விரும்பவில்லை. இந்து மதத்தைதான் அழிக்க விரும்புகிறது. இங்கேயும், தேசியத்தில்தான் ஹிந்துக்கள் அக்கறை காட்ட வேண்டும் என்பது தவறான கணிப்பு. தேசம் அல்ல மதம்தான் கிருத்துவத்தின் இலக்கு. கிருத்துவர்கள் ரோமானியப் பேரரசிற்கு விசுவாசமாக இருந்தார்கள். ஆனால் அவர்களுடைய முதல் விசுவாசம் மதத்திற்குதான். எனவே, விஸிகோதிக் ஸ்பெயினிலோ, ஒஸ்ட்ரோகோதிக் இத்தாலியிலோ, பிரான்சிலோ நாட்டின் மேல் விசுவாசம் காட்டுவது கிருத்துவர்களுக்கு சுலபமாயிருந்தது. ஏனென்றால் இது அவர்களது தவிர்க்க முடியாத இரண்டாம் நிலை விசுவாசம். முதலாவதாக,அவர்கள் தேச பக்தர்கள் அல்ல. இயேசு பக்தர்கள். அவர்கள் இந்திய தேசிய கீதத்தை மற்ற இந்தியர்களை போலவே நம்பிக்கையுடன் பாடுவார்கள். இந்துக்களுக்கு பிறகுள்ள இந்தியாவில் (காஞ்ச இளையா கனவு காண்பது போல்) உற்சாகம் பல மடங்கு பெருகும். இந்திய குடியரசிற்கு பதிலாக வேறொரு அரசியல் கட்டமைப்பு வந்தால் அதற்கேற்றவாறு சுலபமாக தங்களை மாற்றிக் கொள்வார்கள். தேசத்தை கிருத்துவர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்று எண்ணும் ஹிந்துக்கள் அவர்களுடைய ஒரே இலக்கான இந்துமதத்தைப் பாதுகாக்கத் தவறி விடுவார்கள்.
காந்தி:
“புனிதமான, கருணையுள்ள, வெல்லமுடியாத தீரத்தை ஹிந்துக்களிடம் நீண்டகால உண்மையான ஹிந்து தேசியத்தை ஆதரிப்பதற்காக வளர்த்துக் கொள்வது ஒவ்வொரு ஹிந்துவின் தலையாய கடமை” என கோல்வால்கர் அடித்துக் கூறுகிறார் என்று குஹா சொல்கிறார். இவ்வாறு உபநிடதங்களில் கூறப்படவில்லை. அது ஹிந்து ஆன்மீகத்தை சேர்ந்ததும் அல்ல. ஆனால், ஹிந்து மதம் நிலைத்து நிற்பதற்கான காரணங்கள் ஆன்மீகத்திற்கு அப்பாற்பட்டவை. கோல்வால்கரின் கூற்றில் என்ன தவறு உள்ளது? மாறாக, புத்த மதம் ஆன்மிகத்தை முழுவதுமாக தழுவியதால் சுய பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படவில்லை. எனவே, முஸ்லீம் படைகளால் தாக்கப்பட்டபோது, ஒரே அடியில் மத்திய ஆசியாவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் துடைத்தெறியப்பட்டு விட்டது. கோல்வால்கரின் ஹிந்து தேசியம் வரலாற்றில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர் வெல்லமுடியாத தீரம் என்ற ஒரு திட்டத்தை புகழ்ந்துகூறியது தவறாகாது.
குஹா, கோல்வால்கரின் “மேலாதிக்கவாத பார்வை(Supremacist View) “யை காந்தி ஹிந்துக்களின் கடமையாக கருதிய தீண்டாமை, பெண்களின் ஒடுக்கலுக்கு முடிவு, மதங்களுக்கிடையே சமரசம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுள்ளார். குஹா அவர்களே! ஒருவர் ஹிந்துவாகவோ இந்தியராகவோ கருதப்படுவற்கு என்ன செய்யவேண்டும் என்பதில் காந்தியும் கோல்வால்கரும் மிகுந்த கருத்து வேறுபாடு உடையவர்கள்.
இந்த ஒப்பீட்டிலேயே தவறுகள் உள்ளன. காந்தி பெண்களின் ஒடுக்கலை எதிர்த்தார் என்பது உண்மையல்ல. மாறாக, இதை அவருடைய வாழ்க்கையில் பழக்கமாகவே கொண்டிருந்தார். அவருடைய மனைவி, கஸ்தூரிபாய் ஒருவேளை காந்தி அவர்களுடைய இல்லற வாழ்வில் திணித்த ஏற்பாடுகளுக்கு இடமளித்திருக்கலாம். ஆனால், அவர்களுடைய உறவு சமத்துவமாக இருந்தது என்பது ஒரு மாயை. மனைவியிடமும் குழந்தைகளிடமும் எப்போதுமே கொடுங்கோலராகத்தான் நடந்து கொண்திருக்கிறார். ராதா ராஜன் அவருடைய Eclipse of the Hindu Nation: Gandhi and his Freedom Struggle புத்தகத்தில் எழுதியுள்ளது போல் அவர் தனது கற்புத்தன்மையை சோதிப்பதற்காக இளவயது பெண்களுடன் ஏற்படுத்திக் கொண்ட உறவு விபரீதமானதும் தவறான பயன்பாடும் ஆகும்.
தீண்டாமையைப் பொறுத்தவரை, காந்தி முக்கியமான ஒன்றாக ஏற்றுக்க்கொண்டாலும், அக்காலகட்டத்தில், அது தேவையானதாகவும் இருந்தது. ஆனால் அது இந்து மதம் வரையறுக்கும் பண்பு எனக் கூறுவது தவறு. ஆயிரக்கணக்கான வருடங்களாக ஹிந்து சமூகம், “பரம்பரை தீண்டாமை” (Hereditary Untouchability) என்ற ஒன்றை அறியாததாகவே இருந்தது. ரிக் வேதம் இதை குறிப்பிடவில்லை. (எதிர்த்து கூக்குரலிடுபவர்களும் கேளுங்கள் ! புருஷ சூக்தத்திலும் இல்லை.) பிற்காலத்தில், இப்பழக்கத்தை மேற்கொண்டதுமல்லாமல் வசதியாகவும் அமைத்துக் கொண்டது. இரண்டு எதிர்மறை காரணங்களால், ஹிந்துக்கள் தீண்டாமையை ஒழிப்பதில் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. முதலாவதாக, அப்பழக்கம் புழக்கத்தில் இல்லை என்பது. பிற்பாடு, அது சரியானதுதான் என ஏற்றுக்கொண்டதினாலாகும். தீண்டாமையை கடைபிடிக்காதவரும் ஹிந்துதான்; தீண்டாமையை ஒழித்தே தீருவேன் எனும் அளவிற்கு செல்லாதவரும் ஹிந்துதான். தற்போது ஹாலண்டில் எனக்கு தெரிந்த ஹிந்து சமூகங்களுக்கு (சூரினாமிலிருந்து குடிபெயர்ந்த போஜ்புரி மொழி பேசும் ராமரை வழிபடுபவர்கள்) ஜாதி, தீண்டாமை என்ற வார்த்தைகள் புரிபடாதவை. அவர்களும் ஹிந்துக்கள்தான். இக்கருத்தில், ஆர்.எஸ்.எஸ்ஸினரையும் தீண்டாமை தொடவில்லை. கோல்வால்கரின் பார்வை காந்தியிடமிருந்து வேறுபட்டிருந்தது. முற்றிலும் எதிரானது எனக் கூற முடியாது. .
தீண்டாமை ஒழிப்பு நன்மை பயக்கக் கூடியதுதான். ஆனால் அது ஹிந்து மதத்தின் சாரமல்ல; ஹிந்து மதத்திற்கு எதிரான சாரமும் அல்ல. ஹிந்து மதம் ஜாதிக்கு மேலானதும் மிகப் பெரியதுமாகும். அறியாமையில் திளைக்கும் நேருவிய அறிவாளிகள் மட்டுமே ஜாதியை நுழைக்காமல் ஹிந்து என்ற சொல்லை பிரயோகிக்கத் தெரியாதவர்கள். காந்தி இதற்கு அசாதாரண வலியுறுத்தல் காட்டினார் என்றால் முன்கூறியது போல் அக்காலத்திற்கு அது தேவையானதாக இருந்தது. அதற்காக அவரை குற்றம் சொல்ல விரும்பவில்லை. அவருடைய தவறு, ஜாதி என்ற கருத்தை தள்ளி வைத்து பார்த்தாலும் கூட, ஹிந்து மதத்தைப் பற்றிய அவருடைய திசைமாறான கண்ணோட்டம்தான்.
அதனால், காந்தி ஹிந்து மதத்தை அஹிம்சாவாதத்துடன் சமன்படுத்துவது மற்றொரு தவறு. ஆன்மீகப் பாதையில் செல்லுபவர்களிடம் அது புகழ்ந்து பேசப்படுகிறது; ஆனால் அது போராளிகளுக்கு நல்லொழுக்கமாக விதிக்கப்படவில்லை. படை வீரர்கள் எவ்வாறு பணியில் அமர்த்தப்படுகிறார்கள் என்பது முக்கியமல்ல. போரிடும் மனப்பான்மை இவ்வுலகில் அத்தியாவசியமான குணம். ஹிந்து மதம் ஒரு முழு அமைப்பு. ஆன்மீகப் பாதைக்கு தேவையான விவரங்களை சொல்வதோடு நிற்காமல் சமூகத்தின் தேவைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது. காந்தியின் ஹிந்து மதத்தைப் பற்றிய பதிப்பு சமநிலையற்றதும் ஆரோக்கியமற்ற அறநெறிகளையும் கொண்டதாகும். சமயச்சார்பற்றவர்கள், காந்தியை தங்கள் முகத்திற்கெதிரே விடாமல் ஊசலாட்டுவதை ஹிந்துக்கள் கட்டாயமாக ஒரு எச்சரிக்கை அறிகுறியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இது போலவே, மதங்களுக்கிடையே சமரசம் என்ற கொள்கை ஹிந்து மதப்பிரிவுகளுக்கு இடையே இயற்கையாகவே இருந்தது. கிருத்துவர்களிடமும் முஸ்லிம்களிடமும் ஹிந்து மதம் சமரசத்துடன்தான் இருந்து வருகிறது. முஸ்லிம்கள் ஒரு மசூதியை பார்த்தால் மட்டுமே தலை வணங்குவார்கள். ஹிந்துக்கள் மட்டுமே மற்றவர்கள் புனிதமாக கருதும் கட்டிடத்தையோ பொருளையோ பார்த்தால் தலை வணங்குகிறார்கள். ஆனால் இந்த ஹிந்துக்களும், முக்கியமாக அறிவார்ந்த முன்னோடிகளும் தங்களுடைய மதப் பிரிவிகளுக்கிடையே அடிக்கடி நடத்திய விவாதங்களின் மூலம் பாகுபடுத்தும் தன்மையை கூராகவும் சீராகவும் வைத்துள்ளனர். முஸ்லிம்களிடம் நேர்த்தியாகவும் அவர்களுடைய பக்தி உணர்வை மதித்து அவர்களோடு வழிபடுதல், உண்ணாதிருத்தல், போன்றவற்றை செய்தாலும் நபிகள் நாயகம் ஒருவர்தான் கடவுளின் பிரதிநிதி போன்ற வேடிக்கையான கொள்கைகளுக்கு தலையாட்டுவதில்லை.
காந்தி காலத்தில், கிருத்துவத்திற்கும், (பல கொலைகளை விலை கொடுத்து) இஸ்லாத்திற்கும் எதிராக நின்ற, கடுமையாக காந்தியினால் இகழப்பட்ட ஒரு ஸ்தாபனம், ஆரிய சமாஜம். இதில் காந்தியின் பங்கு, ஹிந்துக்களின் பகுத்தறியும் திறமையை முற்றிலும் அழித்த எதிர்மறையான ஒன்று. நேருவியர்களின் தன்னிச்சைப்படி எதையும் மேலோட்டமாக நோக்கும் தளத்தை சமன் செய்து கொடுத்தவர் காந்தி. அது மட்டுமல்லாமல், ஹிந்துக்களுக்கிடையே பரவலாக அவருக்கிருந்த செல்வாக்கினால், கோல்வால்கருக்கு இணையாக ஆர். எஸ்.எஸ். கட்சியினரின் கருத்தியல் கல்லாமைக்கும் தளத்தை சீர் செய்தவர் காந்தி.
காந்திக்கும் கோல்வால்கருக்கும் உள்ள வேற்றுமைகளையெல்லாம் வாமன ரூபத்திற்கு குறுக்குவது இருவரிடையேயும் ஒரு கருத்தில் இருந்த ஒற்றுமை; இவர்கள் இருவருமே இதனால் சமகாலத்தவரிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தனர். அது என்னவென்றால், இருவருமே மேலை நாட்டில் பிரபலமாயிருந்த கருத்துக்களை இறக்குமதி செய்து அவற்றை மிகச் சிறந்த ஹிந்துக் கருத்துகளாக விற்றவர்கள். காந்தியின் அஹிம்சைவாதம் அமைதியை நாடும் சில கிருத்துவ மதப் பிரிவுகளிடமிருந்து வந்ததாகும். கலவரக்காரர்கள் மேலே கை வைத்தாலும் அடித்தாலும் கூட நின்ற இடத்திலிருந்து அசையாமல் அவர்களுடன் சண்டையிடாமல் இருப்பவர்கள் கிருத்துவ ஆமிஷ் உட்பிரிவினரும் மற்றும் சில அமைதி காக்கும் உட்பிரிவினரும் ஆவர். டால்ஸ்டாய் போன்ற மேன்மைமிகு கிருத்துவர்கள் கூறிய பல கிருத்துவ போதனைகளை ஹிந்துக்களிடம் காந்தி நுழைத்து விட்டார். இது போலவே, கோல்வால்கரின் தேசியம் 19ம் நூற்றாண்டு இத்தாலிய தேசியவாதி Giuseppe Mazzini என்பவரிடமிருந்து தாமதமாக இறக்குமதி செய்யப்பட்டதாகும். இவருடைய அரசியல் கொள்கை அறிக்கையை பின்னர் சாவர்க்கர் மொழியாக்கம் செய்துள்ளார். மேற்கத்திய நாடுகளில் தேசியம் வழக்கிலிருந்து மறைந்து பல காலமாகி விட்டது. இந்தியாவில் எதுவுமே மறைவதில்லை. எனவே தேசியம் ஹிந்துக்களின் சுய பாதுகாப்பு இயக்கத்த்தில் தேவையற்ற பங்கை வகிக்கிறது.
ஹிந்துக்கள் உடனடியாக செய்ய வேண்டியது காந்தி, கோல்வால்கர் இருவரையும் மறப்பதாகும். ( மோடி அவர்களின் தொழுகை மேடையில் 2 சிலைகள் குறையும்). காந்தியைஉயிருடன் வைத்திருப்பவர்கள் சமயச்சார்பற்றவர்களும், ஹிந்துக்களை திருப்திப்படுத்த விரும்பும் சில உணர்ச்சிவயப்பட்ட ஹிந்துக்கள் மட்டுமே.( இவர்கள் யாருமே முஸ்லிம்களிடம், காந்தி அவர்களுக்காகவும் வாழ்ந்தார் என்றோ, ஒரு கன்னத்தில் அறைபட்டால் மற்றொரு கன்னத்தை திருப்பிக் காட்டு போன்ற அவருடைய கிருத்துவ போதனைகள்படி நடக்குமாறோ, கூறியதாக தெரியவில்லை). இவர்கள் இக்கருத்துகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தார்கள் என்பது பிரச்சினை அல்ல. மறைந்த பால் தாக்கரே சொன்னது போல் “இந்த சுதேசித்தனத்தை வெகு தூரம் கொண்டு செல்ல முடியாது. அவ்வாறு செய்தால் மின்சார விளக்கு இல்லாமல் வாழ வேண்டி வரும்.” காந்தியின் ஒழுக்கம் சார்ந்த உணர்ச்சிப் பாங்கு (Moralistic Sentimentalism), வேண்டுமென்றே பாகுபடுத்துவதை தவிர்த்தல், போன்றவை பயனுள்ளதாக இருந்தால் கிருத்துவ மூலத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். கோல்வால்கரின் தேசியம் ஹிந்து சமூகத்தினுடைய பிரச்சினைகளை கண்டறிய உதவுமானால் அது இத்தாலியிலிருந்து வந்தது என்பது முக்கியமல்ல. ஆனால் இவைகளால் ஒரு நலனும் இல்லை. ஒரு காலத்தில் இவை தேவையாக இருந்திருக்கலாம். ஆனால் அதன் தேவை, பயன்கள் எல்லாம் காலாவதி ஆகி விட்டது.
மேலும், இவையெல்லாமே உணர்ச்சிக்குத்தான் அழுத்தம் கொடுக்கிறது; சிந்தனைக்கு அல்ல. ஆர்.எஸ்.எஸ். நபர்கள் அடிக்கடி கூறுவது,’ அன்னையை நேசிக்க புத்தகத்தைப் படிக்க வேண்டுமா’ என்பதாகும். உணர்ச்சிகளைக் கையாளுவதன் மூலம் மக்களிடம் முறையீடுகளை வேகமாக கொண்டு சேர்க்க முடியும். காந்தி, கோல்வால்கர் இருவருமே கூட்டத்தை அணிவகுக்க வைப்பதில் மிக்க வெற்றியடைந்தவர்கள். மார்க்சியவாதிகள் மக்களிடம் பிரபலமாக இல்லை. ஆனால் கொள்கைகளை நிர்ணயிப்பதில் அவர்கள்தான் வெற்றியடைகின்றனர். இதன் காரணம், அவர்கள் சொல்வது மக்களின் மூளையில் வேலை செய்வதால் அதன் தாக்கம் மூளையில் ஊடுருவிச் செல்வதுடன் நீடித்தும் நிற்கிறது.
காந்தி, கோல்வால்கர் போன்ற போலி தீர்க்கதரிசிகளின் பின்செல்லாமல், ஹிந்துக்கள் உண்மையான முன்னோடிகளான தீர்க்கதமஸ், வசிஷ்டர், ராமர், கிருஷ்ணர், சாணக்கியர், திருவள்ளுவர், விஷ்ணு சர்மா, அபினவகுப்தா, ராமதாஸ், சிவாஜி போன்றவர்களை நோக்கித் திரும்ப வேண்டும். அவர்களது கருத்தியல் பங்களிப்புகளையும், வாழ்வியல் முறைகளையும், இன்றைய வாழ்விற்கு பொருத்தமானதாக செய்து கொள்ள வேண்டும். நமக்கு வேண்டியதெல்லாம் இவர்களிடம் இருந்தன. ஹிந்துக்கள் மேற்கத்திய தேசியம், தேசத் துரோகம், இடதுசாரி, வலதுசாரி, போன்ற வகைகளை பின்தொடர வேண்டிய அவசியமில்லை. இவை இறக்குமதிசெய்யப்பட்ட சரக்கு என்பதால் அல்ல. இவையெல்லாமே நீண்ட கால பரீட்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னும் தேர்வு பெறவில்லை என்பதால்தான்.
ஹிந்து சமூக முன்னணி (Vanguard of Hindu Society)
குஹாவின் பிரகாரம், ஆர்.எஸ்.எஸ். தன்னை ஹிந்து சமூகத்தின் முன்னணியாக நினைக்கிறது. “ கோல்வால்கரின் அனுமானம் ஹிந்துக்கள் உலகத்திற்கு தலைமை தாங்குவது அவர்களது விதியென்றால், ஆர்.எஸ்.எஸ். ஹிந்துக்களுக்கு தலைமை தாங்கவேண்டும் என்பது அதன் விதி”
இதைவிட சிறந்த காலத்திலும், ஏன் சமீபத்திலும் கூட மற்ற உலக நாடுகளெல்லாம் அன்னை இந்தியாவின் முலைப்பாலை ஆர்வமாக அருந்தியவை. பல குறைகளை கொண்டிருந்தாலும், அந்த அன்னை பழங்காலத்திலிருந்தே நிறையவே செய்யவும் செய்தாள். இதை யாரும் மறுக்க முடியாது. மாறாக, ஆர்.எஸ்.எஸ். ஹிந்துக்களுக்கும், சமீப காலமாக இந்தியர்களுக்கும் தலைமை தாங்கும் உரிமையை கோருகிறார்கள் என்பதை சோதனைக்கு உட்படுத்தியே ஆக வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். அடிப்படை நிலையில் பல நல்ல பணிகளை செய்கிறார்கள். பேரிடர் பகுதிகளில் இவர்களுடைய நிவாரணப் பணிகள் இந்தியாவில் நன்கு அறியப்பட்டிருந்தாலும், உலக ஊடகங்கள் இந்தியாவிலுள்ள ஆங்கில ஊடகங்களை போலவே மௌனம் சாதிக்கின்றன. இதை புகழ்ந்து பேசினால், குஹாவின் கட்டுரை போல் இந்துத்துவத்திற்கு எதிரான கட்டுரைகள் இதைப் பற்றி எழுதாத குற்றத்திற்கு ஈடுகட்ட முடியும். வெள்ளமோ பூகம்பமோ எங்கு தாக்கினாலும் ஆர்.எஸ்.எஸ். நபர்கள் அவ்விடத்திற்கு விரைந்து சென்று மதச் சார்பற்றவர்கள் தாங்கள் அணிந்துள்ள சலவை சட்டையுடன் செய்யவொண்ணாத மீட்பு வேலைகளில் யாருடைய நன்றிக்கும் காத்திராமல் இறங்குகின்றனர்.
இதில் என்ன வேதனை என்றால், லட்சக்கணக்கான சாதாரண தன்னார்வ நபர்களின் இந்த ஆக்கபூர்வமான சக்தியை மேலும் உயர்ந்த ஒரு இலக்கை நோக்கிச் செல்லும் வடிகால் இவர்களுக்கு இல்லையே என்பதுதான். ஒரு காலத்தில், ஆர்.எஸ்.எஸ். ஹிந்து சமூகத்திற்கு பணி செய்வதில் ஆர்வமுள்ளதாக இருந்தது. இப்போதோ தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்குதான் நேரம் போதுமானதாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.ஆளுமை, ஹிந்து சமூகத்திற்கு உபயோகமுள்ள, அடையக்கூடிய இலக்குகளை அமைப்பதில் தோல்வி அடைந்து விட்டது. களத்தில் இறங்கியுள்ள குழுக்களைப் பற்றிய குருக்ஷேத்ரம் போன்ற ஒரு வரைபடத்தையோ, SWOT (Strength, Weakness, Opportunities and Threats) பகுப்பாய்வையும் செய்யத் தவறிவிட்டது. சீன உத்திசாலி (Strategist) சுன்ஜி(Sunzi) சொன்னது,’”தன்னையும் எதிராளியையும் நன்கு அறிதல் தொடர்ந்து வெற்றியை தரும். இருவரில் ஒருவரைப் பற்றிய அறிவு, சிலசமயம் வெற்றியையும் சிலசமயம் தோல்வியையும் தரும். இருவரையுமே அறியாதிருத்தல் பழிப்புடன் கூடிய தோல்வியையே தரும் என்பது நிச்சயம்” என்கிறார். இக்கருத்துப் பிரகாரம், ஆர்.எஸ்.எஸ்., அளவில் பெரியதாயிருந்தாலும், முழுத் தோல்வியை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். ஹிந்துக்களின் முன்னணி என்று தன்னைத்தானே அங்கு நிறுத்திக் கொள்வதற்கு சொல்லக் கூடியதாக எதை சாதித்து விட்டது? இப்போதைய இந்தியா 1925ல் இருந்ததை விட உயரிய ஹிந்து ராஜ்ஜியமாக மாறியுள்ளதா? பல வரைக்கூறுகள் நிச்சயமாக சரிந்துள்ளது; ஹிந்துக்கள் விழுக்காடு, ஹிந்துக்கள் நடத்தும் பள்ளிகளின் எண்ணிக்கை ( எத்தகைய ஹிந்துத்தனம் இப்பள்ளிகளில் நிலவுகிறது என்பதை அளவிடுவது கடினம்), இந்திய துணைக்கண்டத்தில், ஹிந்துக்கள் மதிப்புடன் வாழக்கூடிய நிலப்பரப்பின் விழுக்காடு, நிலம், சொத்து இவற்றில் பாத்தியதை கொண்டாடக் கூடிய கோயில்களின் எண்ணிக்கை, வெளியிடங்களில் வேட்டியுடுத்திய ஆண்கள், சேலையுடுத்திய பெண்மணிகள், ஒரு இடத்தின் மக்கட்தொகைக்கும் அவ்விடத்தில் நடக்கும் மதமாற்றத்திற்குமுள்ள விகிதம் ஆகியவற்றை கூறலாம்.
ஆஹா ! ஆர்.எஸ்.எஸ். எங்களுடைய அரசியல் கட்சியை ஒருவாறு ஆட்சிக்குக் கொண்டுவந்து விட்டோம் என்று வெற்றி புன்னகையுடன் சொல்லக்கூடும். ஆம்! அது உண்மைதான்! ஆனால் அங்குதான் அதன் பெருந்தோல்வியை பார்க்கிறோம். 1951ல் பா.ஜ. க. ஆரம்ப கட்சி நிரலையும் ஆட்சியில் அமர்ந்துள்ள பா.ஜ .க.வின் கொள்கைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் விளங்கும். மதச்சார்பற்ற இந்தியாவை ஹிந்து இந்தியாவாக மாற்றுவதற்கு மாறாக ஹிந்துக் கட்சியே மதச்சார்பற்ற கட்சியாக மாறிவிட்டது. 1947ல் ஹிந்து சக்திகள், மூவர்ணக் கொடியில் பச்சை நிறத்தை சேர்ப்பதற்கு எதிராக குரலெழுப்பின. ஆனால் 1980ல் ஆர்.எஸ்.எஸ். தன் கொடியிலேயே பச்சை நிறத்தை சேர்த்து விட்டது. ஒரு காலத்தில் “சிறுபான்மையினரை திருப்திப்படுத்தல்” என்று கண்டனம் செய்ததை தற்போது முழு மனத்துடன் ஆதரிக்கிறார்கள் என்பதற்கு இது கண்கூடான அடையாளம்.
இத்தருணத்தில், இக்கட்டுரையை எழுதியதற்கான காரணத்தை சொல்ல வேண்டும். ஆர்.எஸ்.எஸ். பின்னணியையுடைய பா.ஜ .கட்சியை சேர்ந்த ஒருவர் குஹாவின் கட்டுரைக்கு பதிலுரை எழுதுமாறு கேட்டபோது கோல்வால்கரின் எண்ணக்குவியல் புத்தகத்தை லாயக்கில்லாத ஒன்று என்று புறக்கணித்து விட்டேன். குஹாவின் விமரிசனத்தை ஆமோதிக்காவிட்டாலும் கோல்வால்கரின் உலகநோக்கில் எனக்குள்ள ஐயத்தை வெளிப்படையாக கூறியதால் அவர் என்னிடம் கடுஞ்சினம் கொண்டார். ஒரு நல்ல மனிதரை, அவரது நல்லெண்ணத்தையும் புரிதலையும் நம்பி நான் சொன்ன வார்த்தைகள் கோபக்காரராக மாற்றி விட்டதை எண்ணி வருந்தினேன். இவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டவன். சிந்திக்காமல் நயமில்லாத வார்த்தைகளால் அவரது குருவை சிறுமைப்படுத்தியதற்காக அவர் மன்னிக்க வேண்டும்.. இதை ஓரளவு செப்பனிடுவதற்காகத்தான் இந்த எதிர்விமரிசனத்தை எழுதியுள்ளேன்.
அதே சமயம், தனிப்பட்ட இச்சம்பவம், ஆர்.எஸ்.எஸ்.சின் தலைமையும் கோல்வால்கரும் பல பத்தாண்டுகளாக கட்சியினருக்கு விளைவித்த துன்பத்தோடு ஒப்பிடும்போது மிகச் சிறியது. ஆர்.எஸ்.எஸ். நபர்களுடைய கருத்துக் கொள்கைகளை பற்றியோ விசுவாசத்தைப் பற்றியோ இரண்டு வேறுபட்ட கருத்துக்களுக்கு இடமேயில்லை. ஆனால், கட்சித் தலைமை உருப்படியான சக்தி அனைத்தையுமே கட்சியை வளர்ப்பதில் மட்டுமே பாய்ச்சி விரயமாக்கி விட்டது. இந்து நாகரீகத்திற்காக உழைப்பதாக நினைத்திருந்த கட்சியின் அடிமட்ட அங்கத்தினர்களை அந்த இலக்கிலிருந்தே விலக்கி விட்டது. ஆர்.எஸ்.எஸ். என்ற ஒன்று இல்லாமலிருந்தால், செயலாற்றல் படைத்த கட்சியினரில் பெரும்பாலோருக்கு, இந்துக் காரணங்களுக்காக உழைப்பதற்கான வடிகால் இருந்திருக்காது. ஆனால், அவர்களில் பலர் புதிய முனைவுகளில் தாமாகவே இறங்கியிருப்பார்கள். அதன் கூட்டுவிளைவினால், இந்துத்துவம் ஆர்.எஸ்.எஸ்.சின் போஷணையில் வளர்ந்ததை விட பன்மடங்கு முன்னேறியிருக்கும்.
இந்தியாவின் ஒன்றிய கட்டமைப்பு(India’s Unitary Structure):
குஹா தேசியவாதிகளின் திட்டத்தில் இந்திய அரசியலமைப்பின் இடத்தைப் பற்றிய கேள்வியை எழுப்புகிறார். “ நரேந்திர மோடி இந்திய அரசியலமைப்புதான் புனிதப் புத்தகம் என்று சத்தியம் செய்யலாம். ஆனால் அவரது குரு கோல்வால்கர் அப்புத்தகம் நிறைய குறைபாடுகளை கொண்டுள்ளதால் அதை முழுவதுமாக நிராகரிக்க வேண்டும் அல்லது மாற்றியெழுதப்பட வேண்டும்,” என்கிறார். 50 வருடங்களுக்கு பிறகு, கோல்வால்கரின் கருத்துக்கள் இருந்த இடத்தில் புதிய கருத்துக்கள் இடம் பெறுவதுதான் தர்க்கரீதியாக எதிர்பார்க்கக்கூடிய முடிவு. எனவே, மோடி தன குருவிடம் பெருமதிப்பு வைத்திருந்தாலும் அவரது பழைய கருத்துக்களை தள்ளிவைத்து விட்டு புதிய கருத்துக்களுக்கு இடம் கொடுத்துள்ளார். ஆனால் குஹா, தீவிர முஸ்லிம்கள் தாங்கள் என்னவோ 7ம் நூற்றாண்டு அரேபியாவில் வாழ்வதாக நினைத்துக்கொண்டு திரும்பத் திரும்ப குரானில் அடைக்கலமாவது போல், மோடியும் கோல்வால்கர் புத்தகத்தின் வழிப்படி ஒரு மாற்றமும் இல்லாமல் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா?
குஹா எ .கு. லிருந்து மேற்கோள் காட்டுகிறார்,” அரசியல் சட்ட அமைப்பை உருவாக்கியவர்கள் இந்தியா ஓரினத்தையுடைய ஒரே நாடு என்ற திடநம்பிக்கை உடையவர்களாக இல்லை”. “கோல்வால்கர் இந்தியா பல மாநிலங்களை கொண்ட கூட்டரசாக அமைக்கப்பட்டுள்ளதால் அந்த கூட்டாட்சி கட்டமைப்பு தேசத்தின் சிதைவுக்கும் தோல்விக்கும் வித்திட்டுள்ளது என்ற நோக்கத்தால் சினமடைந்தார்” என குஹா நினைக்கிறார்.
சட்ட அமைப்பை உருவாக்கியவர்கள் பிராந்திய ஆர்வலர்களின் பிரிவினை அரசியலுக்கு வித்திட்டார்கள் என்பது உண்மையே. ஆனால் அவர்களுடைய பொறுப்பை மிகைப்படுத்தக் கூடாது. ஒரு நல்ல அரசியல் கட்டமைப்பு பிரிவினை மனப்போக்கு வெடித்தெழுவதை காலமெல்லாம் தவிர்க்க முடியாது. கோல்வால்கரின் ஓரினத்தையுடைய ஒரே நாடு எனும பிடிவாதமான கருத்து வரலாற்று நோக்கில் சரியானதல்ல. அது போல், சட்ட அமைப்பு இந்தியா ஒரு மாநிலக் கூட்டரசு என்று கோருவதும் சரியல்ல. மாநிலக் கூட்டரசிற்கு சிறந்த உதாரணம் பல நாடுகள் தன்னிச்சையாக சேர்ந்து உருவாக்கிய ஐரோப்பிய கூட்டரசு. அது போல், அமெரிக்காவிலும் 13 தனித்த ஆங்கிலேய காலனிகள் சுதந்திரத்திற்கு பிறகு கூட்டரசாக தங்களை இணைத்துக் கொண்டது. ஆனால், இந்தியாவில் பெயரளவில் சுயேச்சையான ராஜாக்கள் ஆண்ட மாநிலங்களெல்லாமே பிரிட்டிஷ் இந்தியாவின் பகுதிகளாகத்தான் இருந்தன. எனவே சுதந்திர இந்தியா முன்னரே ஒரே நாடாக இருந்த ஒன்றின் தொடர்ச்சியாகும்.
குஹா சொற்பிரகாரம் “ கோல்வால்கர் மத்திய அரசாங்கம் சக்தி வாய்ந்ததாக இயங்க வேண்டும் என விரும்பினார் . மோடி இன்றைய இந்தியாவை ஒத்துழைக்கும் கூட்டாட்சி முறை எனப் பேசலாம். ஆனால் அவரது குரு, அரசியல் சட்ட அமைப்பில் உள்ள கூட்டாட்சிக் கட்டமைப்பை ஆழமாக புதைக்க வேண்டிய தேவையுள்ளது என்கிறார். ” இங்கேயும் மோடி கோல்வால்கரின் கோட்பாட்டை இயல்பாகவே பின்பற்றவில்லை என்பதை பார்க்கிறோம். மோடியின் நம்பிக்கையும் நடத்தையும் ஹிந்து பாரம்பரியத்தையும் பா.ஜ .க. பாரம்பரியத்தையும் ஒத்துள்ளது. கோல்வால்கர்தான் ஹிந்து பாரம்பரியத்தை விட்டு விலகுகிறார். தொன்மையான ஹிந்து சாம்ராஜ்யங்கள் அதன் குத்தகை கீழுள்ள மாநிலங்களின் சுயதர்மத்திற்கு மதிப்பளித்தன. இம்மாநிலங்கள் அதற்கே உரிய வழிமுறைகளை கடைபிடித்தன. ஒரு பெரிய அரசியல் கட்டமைப்புக்குள் இருந்தாலும், அக்கட்டமைப்பு மாநிலங்களுக்கே உரித்தான வழிமுறைகளின் பற்றுதலில் தலையிடவில்லை.
நவீன இந்தியாவில், பா.ஜ. க. வின் வாஜ்பாயி அரசாங்கம், பீஹார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மூன்றையும் பிரித்து ஜார்கண்ட், சட்டிஸ்கர், உத்தர்கண்ட் என்ற மூன்று புதிய மாநிலங்களை அம்மக்களின் அரசியல் உணர்ச்சிகளை மதித்து ஏற்படுத்தியது. பல பழங்குடிமக்களின் மொழிகளை பொது அலுவலக மொழிகளாக ஏற்றுக் கொண்டது. இங்கேயும், கோல்வால்கர், ஆர்..எஸ்.எஸ். பார்வை, ஆயிரக்கணக்கான வருடங்களாக இருந்துவரும் மதிநுட்பத்தை ஒரு சிமிழியில் காட்டும் இந்த மனப்போக்கிற்கு மாறாகத்தான் உள்ளது. மோடி அவர்கள், ஆர். எஸ்.எஸ்ஸை பின்பற்றுவர்களுக்கு, கோல்வால்கரின் பாறையாக இறுகியுள்ள கருத்துக்களை கைவிட்டு, இந்தியாவின் பாரம்பரியமான பன்மைக் கோட்பாடுகளையும், பிரித்தறிதலையும் மீண்டும் தழுவுவதற்கு ஒரு சிறந்த உதாரணமாக விளங்குகிறார்.
கோல்வால்கருடைய நிலையின் எதிர்பாராத பக்கம், மோடி அல்லது மற்றவர்களின் அரசியலமைப்பு சட்டத்தின் மேலுள்ள பக்தி போலல்லாமல் உள்ள அவரது ஜனநாயக மனநிலை. “ அரசியலமைப்பு சட்டத்தை நாம் மீண்டும் பரிசீலனை செய்து ஒன்றிய அரசாங்கத்தை நிறுவுவதற்காக மாற்றியெழுத வேண்டும்” என்கிறார். அத்தகைய அரசாங்கம் சாத்தியமா எனபது அவருக்கு சந்தேகமாயிருந்தாலும் அரசியல் சட்ட அமைப்பிற்கு முன் தலைவணங்கி நிற்க அவர் தயாராக இல்லை என்பது நிச்சயம். ஜனநாயகத்தில், சட்டங்கள் மனிதர்கள் உற்பத்தி செய்தவை. அதை மாற்றாமல் இருப்பதும் மாற்றுவதும் அவர்களது இஷ்டம். சட்டங்கள் நமக்கும் மேலானதுஎன்று அவற்றை தலை மேல் வைத்துக் கூத்தாடக் கூடாது. உருவாக்குவதும் மாற்றுவதும் நம் கையில்தான் உள்ளது. மோடி, அரசியல் சட்ட அமைப்பை கல்லில் செதுக்கியதாக நினைப்பதை ஒழித்து அந்த அமைப்பிலுள்ள விரும்பத்தகாத சில விதிமுறைகளை மாற்றியமைப்பதற்கு சீரிய நோக்கத்துடன் முயல வேண்டும்.
முடிவு:
குஹா அவரது கட்டுரையை இவ்வாறு முடிக்கிறார், “ எ .கு. புத்தகத்தை படிப்பவர் எவருமே இப்புத்தகத்தின் லட்சணத்திற்கு அடையாளமாக நான் சொன்ன மேற்கோள்கள் எடுத்துரைப்பது போல் இப்புத்தகத்தின் ஆசிரியர் பிற்போக்கு சிந்தனையில் வைராக்கியமுள்ளவர். இவரது கருத்துக்களுக்கும், காழ்ப்புணர்ச்சிகளுக்கும் நவீன தாராளவாத ஜனநாயகத்தில் இடமேயில்லை என்ற முடிவை தவிர வேறெந்த முடிவிற்கும் வரமாட்டார்கள். பிரதம மந்திரி, முன்னரே எழுதிப் படிக்காத, விதிமுறைகளற்ற, தடைகளற்ற பத்திரிகையாளர் கூட்டத்தை நடத்தும் தைரியமிருந்தால் ஒரு நேர்மையான இதழாளர் கேட்க வேண்டிய முதற்கேள்வி இதுவாகத்தான் இருக்க வேண்டும்,” ஐயா! கோல்வால்கரிடம் தங்களுக்குள்ள போற்றுதலையும் அம்பேத்கர், காந்தி அவர்களிடம் புதிதாக தங்களிடம் காணப்படும் மரியாதையையும் மதிப்பையும் எவ்வாறு ஒருமைப்படுத்துகிறீர்கள்?”
எ .கு. புத்தகத்தின் கருப்பொருளை சுட்டிக்காட்டும் அடையாளங்கள் என்று குஹா அளிக்கும் வாக்குறுதி பொய்யானது. கோல்வால்கரின் புத்தகமான “நாம்” என்ற புத்தகத்திலிருந்து சில பகுதிகளை மட்டும் உருவி எடுத்தது போல், குஹா அவர்களும் கோல்வால்கரை ஒரு கெட்ட மனிதராக சித்தரிப்பதற்கு தனக்கு வசதியாக உள்ள பகுதிகளை மட்டும் பழுத்த பழங்களை மட்டுமே பறிப்பது போல் பயன்படுத்திக் கொண்டுள்ளார். எ .கு. சொன்னதையே திரும்பச் சொல்லும் சாதாரண புத்தகம். வாசிப்பாளர்களை ஆவேசமூட்டும் தீய புத்தகமல்ல. இப்புத்தகம் குஹா கூறுமளவிற்கு தீயதாக இருந்தால், அக்குற்றச்சாட்டு , புத்தக வாசிப்பாளர்களையும் சில ஆர்.எஸ்.எஸ். செயல்திறனார்களையும் மட்டுமல்லாமல், நரேந்திர மோடி போன்ற கோல்வால்கருக்கு கீழ்ப்படிந்த வாசகர்களையும் தீண்டும் என்றே கொள்ள வேண்டும்.
குஹா மோடிக்கு அளிக்கும் அறிவுரைகளை பார்ப்போம். மாறுபட்ட இருவரை ஒன்றுபடுத்துவது இந்துத்தன்மை என்பது சந்தேகத்திற்குரியது. ஒருவேளை இந்நபர்களுக்கிடையே பொதுவான வெளி ஒன்று உளதா எனக் கண்டறிய முயலாம். அவ்வாறு செய்வதும் அவர்களுக்கிடையேயுள்ள உண்மையான முரண்பாடுகளை பூசி மெழுகுவதாகத்தான் அமையும். அது போல்தான், மோடி எவ்வாறு தனது பூஜை மேடையில் வைத்துள்ள மூவரது வேறுபட்ட உலகநோக்கை சரிக்கட்ட இயலும் எனும் குஹாவின் கேள்வியும் சந்தேகமும். கோல்வால்கர், காந்தி இருவருடன் இணங்கிச் செல்வது இயற்கைக்கு மாறானதல்ல. இருவரது அடிப்படை பண்புகள் முன் கூறியது போல் பொதுவானதுதான். ஆனால், அம்பேத்கரையும் காந்தியையும் ஒருங்கிணைப்பதுதான் கடினம். இவர்கள் இருவரும் ஒன்றுபட்ட சிந்தனையுடைவர்கள் எனும் குஹாவின் நன்கு விசாரணை செய்யப்படாத அனுமானம் தவறு. இவ்விருவருக்கிடையே இருந்த முரண்பாடுகள் இவர்களிருவருக்குமே கோல்வால்கரிடமில்லை. அம்பேத்கருக்கும் காந்திக்குமிடையே மதம், நவீன மயமாக்குதல் பற்றிய முரண்பாடுகள்(பகுத்தறிவுக்கும் அதற்கெதிரான உணர்திறனற்ற உணர்ச்சிவயத்திற்கும் உள்ள முரண்பாடு) மிகக் கூரானவை. ஆனால், அவர்கள் இருவரும் மோதிக் கொண்டது இந்த பிரபஞ்சத்திலேயே குஹா மிக முக்கியமாக கருதும் ஒன்று, ஜாதி. எனவே, அம்பேத்கரையும் கோல்வால்கரையும் ஒருமைப்படுத்துவதுதான் நமக்கான பெரிய சவால்.
முதலாவதாக, இருவருமே தீவிர தேசியவாதிகள். ராஜப்பிரதிநிதியின் ஆட்சிக்குழுவில் பணி புரிந்ததின் மூலம் அம்பேத்கர் ஆங்கிலேய ஆதிக்கத்துடன் கூட்டுசேர்ந்து கொண்டதற்கான காரணம் ஆங்கிலேய ஆட்சிதான் தேசத்திற்கும் , முக்கியமாக, அவரது தாழ்த்தப்பட்ட ஜாதி தொகுதிகளுக்கும் சிறந்தது என்ற அவரது மதிப்பீடுதான். சுதந்திர போராட்டத்தில் எதிரியாக இருந்தாலும் தனது முதல் மந்திரிசபையில் இடமளித்து அவரது சேவையை பயன்படுத்திக் கொண்ட ஜவஹர்லால் நேருவிற்குத்தான் அதற்கான மதிப்பு சேர வேண்டும். அந்நிய கிருத்துவ மதபோதகர்கள் அவர்கள் பக்கம் வலிய இழுப்பதைத் தவிர்த்து தன்னாட்டில் பிறந்து வளர்ந்த புத்த மதத்தை தழுவியது அவரது மிகச் சிறந்த தேசிய உணர்விற்கு ஒரு எடுத்துக்காட்டு. அது, இவரை கோல்வால்கருக்கு பிரியமானவராக செய்யாவிட்டாலும், பின்பு வந்த ஆர். எஸ்.எஸ்.சினருடைய, குறிப்பாக, நரேந்திர மோடியின் அனுதாபத்தை பெற்று தந்தது. சிலருக்கு இத்தேசிய விவரம் முக்கியமற்றதாகத் தெரியலாம். ஆனால். ஆர்.எஸ்.எஸ். நபர்களுக்கு இது மிக முக்கியமானது.
இரண்டாவதாக, அம்பேத்கர் கோல்வால்கரை விடத் திடமான சமநோக்காளராக இருந்தாலும், கோல்வால்கரின் தேசியமும் சமநோக்கைதான் உட்கோளாக கொண்டிருந்தது. நில பிரபுத்துவ அமைப்பில்(Feudal System) நிலச்சுவான்தார்கள் தேசத்துடன் இணையவில்லை. இன்றும் கூட, ஐரோப்பிய அரச பரம்பரை உறுப்பினர்கள், பல ஐரோப்பிய குடும்ப வம்சங்களை சேர்ந்தவர்கள். மாறாக, சாதாரண மக்கள் பெரும்பாலாக தங்களுடைய தேசத்தை கட்டிப் பிடித்துக் கொள்வதால் அம்மக்களை தேசமென்ற பதாகையின் கீழ் திரட்டுவது சுலபம். மேலும், தேசியவாதம் சாதாரண மக்களை நாட்டின் மேல் மட்டத்தினருடன் சரிசமமாக உணர்வதற்கு உதவியது. வரலாற்று நோக்கிலும், தேசியம்தான், முதன் முறையாக ஆட்டோ வான் பிஸ்மார்க்கின் புது முயற்சியினால், சமூகப் பாதுகாப்பு திட்டத்தையும் அதன் விளைவாக பொதுமக்களை அவர்களுடைய தன்னலத்திற்காக தேசத்துடன் பிணைத்தது. இது போன்று, கோல்வால்கர் ஒரு பிராம்மணராக இருந்தாலும் (இந்த காரணத்திற்காகவே அம்பேத்காரர்களாலும் அவர்களது கைக்குள் போட்டுக் கொண்ட வெளிநாட்டு இந்திய கண்காணிப்பாளர்களாலும் எப்போதுமே வெறுக்கத்தக்கவர் என்ற நியதி அவரது தலைவிதி) ஜாதி என்ற பேச்சையே எடுக்காமல் அனைவருமே தங்களை இந்தியர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற கொள்கையை வெளிப்படையாக ஆதரித்தார்.
மதச்சார்பற்றவர்களின் மங்கலான ஊகத்திற்கு மாறாக, ஹிந்து தேசியவாதத்திற்கும் பாரம்பரியத்திற்குமான பரஸ்பர வித்தியாசம் ஜாதி. மரபு வழிப்படி, 1920களில் இந்து சீர்திருத்தவாதத்தின் அவதாரமாகிய ஆரிய சமாஜத்திலிருந்து ஊற்றாக பாய்ந்ததுதான் ஹிந்து தேசியவாதம். வேதங்களுக்கு திரும்புவோம் என முழங்கிய தீரம் மிகுந்த இந்து இயக்கமான ஆரிய சமாஜம் ஜாதிக்கு எதிரி. வேத சமத்துவத்தைப் பற்றிய இதன் நுண்ணறிவிற்கு அடிப்படை வேத சமூகத்தில் ஜாதி இல்லை என்பதாகும். இந்த துல்லிய விவரம் ரிக் வேத காலத்தைப் பற்றிய குடும்ப நூல்களில் உள்ளது. பல பிரபல ஹிந்து தேசியவாதிகள் ஆரிய சமாஜிகள். ஹிந்து மஹா சபா ஆர்.எஸ்.எஸ். இரண்டுமே சுயமாக ஏற்றுக்கொண்ட பணி சுய ஒருங்கமைப்பு அல்லது சங்கதான் என்று ஹிந்தியில் மொழியப்பட்டதாகும். இது, சுவாமி ஸ்ரத்தானந்தா எழுதிய,” Hindu Sangathan, Savior of the Dying Race (1924) என்ற புத்தகத்தின் நடைமுறை பயன்பாடாகும். ஹிந்து தேசியவாதம், அதை விட பலசாலியான ஆர்.எஸ்.எஸ். என்ற நீரோட்டங்களுக்கு காரணமான நவீன ஹிந்து செயல் முனைவை(Hindu Activism)ப் பற்றிய பொது அறிவை தரும் ஒரே நூல் இதுதான். எ .கு. விட பல மடங்கு உயர்த்தியானது. ஒரு முஸ்லிம் கொன்ற (அம்பேத்கரின் புத்தகம் “Thoughts on Pakistan” இச்சம்பவத்தை விவரிக்கிறது) சுவாமி ஸ்ரத்தானந்தா ஜாதியை தீவிரமாக எதிர்த்த ஆரிய சமாஜி.
குஹாவின் கருத்துரைகள் சந்தேகத்திற்கிடமின்றி குரு கோல்வால்கரின் அரசியல் கொள்கை அறிக்கைக்கு நம் கவனத்தை இட்டுச் செல்கிறது. ஆனால், நேருவியர்களின் தேசியவாத உருவகத்தில் காணப்படும் குறைகள் மிதமான அளவில் இதிலும் வெட்டவெளிச்சமாயுள்ளது. ஹிந்து இயக்கத்தின் அடிமட்ட உண்மைகளை பற்றிய மங்கலான அறிவை ஆதாரமாகக் கொண்டு எல்லோரும் அறிந்த எதிரி உருவத்தை வாசகர்களின் மனதில் பயிரிடுகிறது. மேலும் தனி இழைகளான ஹிந்து பாரம்பரியத்தையும், சீர்திருத்தவாதத்தையும் ஒன்றாகக் கலப்பதுடன் மட்டுமல்லாமல் இக்காலத்திற்கு ஒவ்வாத, என்றோ முடிந்துபோன பழங்கால விவகாரங்களை இன்று நடப்பது போல் சித்தரிக்கிறது. குஹா, ஹிந்து இயக்கத்தின் பலவீனங்களை உணராமல் அது ஒரு அனல் மின்நிலையம் என்ற தவறான கற்பனையில் மிதக்கிறார்.
(Published on Pragyata.com, 25,October 2016)
1 திருக் குரானின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலில் உள்ள வாசகம்: “அல்லாஹ் ஒருவனையே நீங்கள் விசுவாசம் கொள்ளும் வரையில் எங்களுக்கும் உங்களுக்குமிடையில் விரோதமும் குரோதமும் ஏற்பட்டுவிட்டது” என்று கூறினார்கள்.” என்றிருக்கிறது. (60:4) இங்கிலிஷ் மொழிபெயர்ப்புகளுக்கும், தமிழ் மொழி பெயர்ப்புகளுக்கும் இடையில் வேறுபாடு இருப்பதைத் தவிர்க்கவியலாது. கட்டுரையில் உள்ளது இங்கிலிஷ் வாக்கியத்தின் மொழி பெயர்ப்பு.