ஒரு நாள்

வெளிக்கதவு சாத்தும் சத்தம் அவளுக்குக் கேட்டது. பிரச்சினைகள் என்று வந்துவிட்டால் எங்காவது போய் நேரத்தைக் கடத்திவிட்டு வருவதுதான் கேசவனின் வழக்கம் என்பது அவளுக்குத் தெரிந்ததுதான். அழுதுஅழுது அவளுக்குக் கண்கள் எரிந்தன. தலை வேறு விண்விண் என்று இடித்துக்கொண்டிருந்தது, நெஞ்சு வலித்தது. “நான் எங்கை பிழைவிட்டன், எதைச் செய்யத் தவறினன்?” மீளவும் மீளவும் தன்னைத் தானே கேட்டுக்கேட்டு அவள் மறுகினாள்.
பூவரசம் கம்பால் கோபம் தீரும்வரை அடித்துப்போட்டு, ஒழுங்கையிலை கொண்டுபோய் இருட்டுக்குள் அவளை அவளின் அப்பா விட்டிருந்த தருணங்கள் மனசில் கோட்டோவியமாக அவளுக்குள் இன்னும் படிந்திருக்கின்றன. தன் பிள்ளையைத் தான் அப்படி அடிக்கக்கூடாது, தன் மனம் பட்ட வேதனைகளை அவன் உணரக்கூடாது என்றெல்லாம் அவள் கவனமாகத்தான் இருந்தாள். ஆனால், ஆனாலும், நேற்று…

X X X

மெய்நிகர் கற்றலில் பங்குகொள்வதற்கென பாடசாலை வழங்கியிருந்த கொம்பியூட்டரில் வேலைசெய்து செய்து பிரவீனுக்குப் பழகிப்போயிருந்தது. கொரோனா கொஞ்சம் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின்னர், பாடசாலையில் நேரில் கற்றலை அவன் ஆரம்பித்திருந்தால் கொம்பியூட்டரைத் திருப்பிக்கொடுக்க வேண்டியிருந்தது. அது அவனுக்கு மிகவும் கவலையாக இருந்தது. இருப்பினும், தனக்கு ஒன்று வாங்கித்தரும்படி அவன் அடம்பிடிக்கவில்லை. அவள்தான், அவனுக்கென ஒரு கொம்பியூட்டர் இருந்தால் நல்லாயிருக்குமென நினைத்தாள். அப்படி ஒன்றை வாங்கிக்கொடுத்து அவனை ஆச்சரியப்படுத்த வேண்டுமென அவள் திட்டமிட்டிருந்தாள். அதன்படி சீட்டெடுத்து கொம்பியூட்டர் ஒன்றை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தவள், அவனின் மேசையில் அதனை வைப்பதற்காக அவனின் மேசையை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தபோது அவளின் தொலைபேசி சிணுங்கியது.

“மிசிஸ். கேசவன், லோறன்ஸ் அவென்யூ பாடசாலையிலிருந்து பிரின்சிப்பல் மிசிஸ் பீரிஸ் கதைக்கிறன். நான் சொல்லப்போற செய்தி உங்களுக்கு அதிர்ச்சியைத் தரலாம்…”

“என்ன நடந்தது, என்ன நடந்தது?” அவள் அவசரப்பட்டாள். ஒரு செக்கனுக்குள் அவளின் மனம் எதையெல்லாமோ எண்ணிப் பரிதவித்தது.


“உங்கட மகன் பிரவீன் அவற்ரை சினேகிதர் ஒருத்தரோடை சேர்ந்து கடை ஒண்டிலிருந்து சாப்பாட்டுப் பார்சல் ஒண்டைத் திருடப் பாத்திருக்கிறார் … பிரவீனின்ரை செயலுக்கான பின்விளைவாக ஒரு கிழமைக்கு அவரைப் பாடசாலையிலிருந்து இடைநிறுத்தம் செய்திருக்கிறம்… ம், இந்தச் செய்தியைச் சொல்றதுக்கு எனக்கும் கஷ்டமாத்தானிருக்கு …”

திருடப் பாத்திருக்கினம், திருடப் பாத்திருக்கினம் … அந்த வசனம் மீள மீள அவளில் வந்துமோதியது. அவளின் உடல் நடுங்கியது, அடுத்த பத்து நிமிடத்துக்கு அவளால் எதுவும் செய்யமுடியவில்லை. ‘காலைமை எழும்பி நூடில்ஸ் செய்தல்லா குடுத்தனான். என்னத்துக்காண்டி களவெடுத்தவன்? களவெடுக்கிறதுக்கான துணிவு அவனுக்கு எங்கையிருந்து வந்தது? நான் அவனை வளத்தவிதம் சரியில்லையா?’ அவளின் இதயம் நொறுங்கிப்போனது. இனி என்ன செய்கிறது என அவளுக்குக் குழப்பமாக இருந்தது. பன்னிரண்டு வயசிலை இப்பிடியென்றால் … அவளின் மனதைப் பயம் கெளவிக்கொண்டது.

வாசல்கதவைப் பிரவீன் திறக்கும் சத்தம் அவளுக்குள் பூகம்பத்தை உருவாக்கியது. அந்த அதிர்வின் வேகத்துடன் கதவருகே சென்றவள் கதவைத் திறந்தவனின் கன்னத்தில் பலம்கொண்ட மட்டும் ஓங்கி அறைந்தாள்.

“எவ்வளவு கஷ்டப்பட்டு உன்னை வளக்கிறம், விரும்பின எல்லாத்தையும் வாங்கித்தாறம், நீ என்னடா எண்டால், களவெடுக்கிறியா, நாயே! பள்ளிக்கூடத்துக்கும் வரவேண்டாம் எண்டிட்டினம், இனி என்ன, களவெடுத்துத்தான் சீவிக்கப்போறியோ?” உச்சஸ்தாயில் கத்தினாள்.

அவன் அலற அலற, அவன் புயத்தில், முதுகில் என மாறி மாறி தன் கை வலிக்கும்வரை அடித்தாள். ஏதோ சொல்ல முயன்றவனை “வாயை மூடு நாயே” என அடக்கினாள். அங்குமிங்குமாக நடந்தபடி சத்தமிட்டு அழுதாள், அவனைப் பிடித்து உலுப்பினாள். ஏற்கனவே வாங்கிய அடிகளால் சிவந்துபோயிருந்த அவனின் கன்னத்தில் மீளவும் அறைந்தாள். யாராவது சத்தம்போட்டு பேசினாலே பயந்துபோகும் அவனின் உடல் வெலவெலத்துப் போனது. அதன் பின்பும் அவளால் ஆறமுடியவில்லை.

இறுதியில் ஆத்திரத்திலும் அதிகமாக கவலை அவளின் மனதை அரித்தெடுத்தது. போய்ப் படுத்துக்கொண்டாள். அரை மணித்தியாலம் கூட ஆகியிருக்காது. வாசல் மணி அடித்தது. ஏனோதானோ என எழும்பிச்சென்று கதவைத் திறந்தவளின் முன்னே இரண்டு பொலிஸ்காரர் நின்றிருந்தனர். பிரவீனைக் கைதுசெய்ய வந்திருக்கிறார்களா… அவளின் இதயம் ஒரு நிமிடம் துடிக்க மறந்தது. ஆனால், அவர்கள் வந்திருப்பது அவளை விசாரிக்கவே என அவர்கள் கூறியபோதுதான், வேலையால் வீட்டுக்கு வந்திருந்த சேசவனுக்கு என்ன நிகழ்ந்திருக்கிறதென்பது விளங்கியது.

X X X

“உன்ரை பிள்ளை வளர்ப்புத்தான் இது,” என எடுத்ததற்கெல்லாம் எரிந்து விழுபவன், “பொலிஸ் இப்பிடிப் பேசாமல் விட்டிட்டுப் போனதே பெரிய விஷயம், வீட்டிலை நீ இருக்கேலாது எண்டு சொல்லியிருந்தால் அல்லது உன்னைக் கைதுகொண்டு போயிருந்தா என்ன நடந்திருக்கும், நல்ல காலம்!” என்பதுடன் மெளனமாகி விட்டான்.

தன்னை அவன் ஆசுவாசப்படுத்துவான் என எதிர்பார்த்தவளுக்கு மூன்றாம் நபர்போல அவன் விலகிக்கொண்டதில் மிகுந்த ஏமாற்றமாகவும் கோபமாகவும் இருந்தது. பிரவீனைப் பார்க்கக்கூட அவளுக்குப் பிடிக்கவில்லை. ‘தாயைப் பொலிசில பிடிச்சுக்குடுக்கிற பிள்ளையோடை இனி எனக்கு என்ன கதை? அவளின் மனம் முழுவதையும் விரக்தியும் ஆத்திரமும் ஆக்கிரமித்துக் கொண்டன. அவனுக்கு நல்லதொரு வழிகாட்டியாக இருக்கவேண்டும், சிறந்த வாழ்க்கைப் பெறுமானங்களை அவனுக்குள் விதைக்க வேண்டுமென்ற அவளின் கனவெல்லாம் அந்த நிமிடத்தில் கரைந்துபோயிற்று. அவனிடமிருந்து தான் நெடுந்தூரம் போய்விட்டதுபோல அவள் உணர்ந்தாள். இரவு முழுவதும் படுக்கையில் ஆற்றாமையுடன் உழன்றாள்.

X X X

விறாந்தையில் தமிழ்க் குரல்கள் கேட்டன. பக்கத்து வீட்டுக்காரர் எல்லோரும் தமிழர்கள். பொலிஸ் வந்ததை யாராவது பார்த்திருக்கலாம் என்ற நினைவு அவளுக்கு மிகுந்த அவமானத்தை உணரவைத்தது. உலகமே இருண்டுபோன மாதிரியும், நடுக்கடலில் வைத்து அவளை யாரோ தண்ணீருக்குள் அமுக்குவது மாதிரியும் இருந்தது. மூச்சடைத்தது. கட்டிலை விட்டு எழும்ப மனம்வரவில்லை. போர்வையை இழுத்துமூடியபடி மீளவும் அதற்குள் சுருண்டுகொண்டாள்.
மீளவும் அவளின் கைத்தொலைபேசி அலறியது. வேண்டாவெறுப்பாக அதை அவள் எடுத்தாள். “என்ரை பெயர் சாரா. சிறுவர் உதவிச் சபையிலிருந்து கதைக்கிறன், உங்கட மகன் பொலிசைக் கூப்பிட்டதாக எங்களுக்குத் தகவல் வந்திருக்கு, என்ன நடந்தது எண்டதைப் பற்றிக் கதைக்கிறதுக்கும், பிள்ளையின்ரை பாதுகாப்பை உறுதிப்படுத்துறதுக்கும் உங்கட வீட்டுக்கு நான் வரவேணும். பின்னேரம் நாலு மணிக்கு வரலாமோ?”

 “போனில கதைக்கேலாதா?”

“உங்கட மகனோடும் நான் கதைக்கோணும். எல்லாரோடையும் தனித்தனியக் கதைக்கிறதுக்கு வீட்டுக்கு வந்தால்தான் வசதியாயிருக்கும்.”


சரி எனச் சொன்னவளிடம் வீட்டு முகவரியை உறுதிப்படுத்திக்கொண்டு, சேசவனையும் வீட்டில் நிற்கும்படி சொல்லச் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார் சாரா.


‘ஓ, கடவுளே! இனி என்ன நடக்கப்போகுதோ… சீ, என்ன வாழ்க்கை இது. சாரா வாறதுக்கிடையில் நான் தற்கொலை செய்திட்டன் எண்டால்… இந்தத் துன்பத்திலிருந்து ஒரு விடிவாவது கிடைக்கும்,’ அவளின் மனம் மீள மீள அதையே நினைத்தது. ஆயினும், பிரவீனின் செயலுக்கான தண்டனையாகவும் அது இருக்கும் என்ற யதார்த்தம் அவளுக்கு உறைத்ததும் தொடர்ந்து அப்படிச் சிந்திக்க அவளால் முடியவில்லை.

கேசவனை அழைத்துப் பேசவும் அவளுக்குப் பிடிக்கவில்லை. நான்கு மணிக்கு முன் அவன் வராவிடில் பிறகு பார்ப்போம் என நினைத்தாள். நெஞ்சடைத்தது. பெரிதாகக் கதறி அழவேண்டும் போலிருந்தது, குரலெடுத்து அழுதாள். அவளின் அழுகைச் சத்தம் கேட்ட பிரவீன் அவளின் அறைக் கதவைத் மெல்லத் திறந்து எட்டிப்பார்த்தான். “கிட்டவராதை, இனி நீ யாரோ நான் யாரோ, நான் செத்திட்டனெண்டு நினைச்சுக்கொள்,” கத்தினாள் அவள். அவளின் உடல் கூனிக் குறுகிப்போனது போலிருந்தது.

X X X

சரியாக நான்கு மணிக்கு வீட்டின் அழைப்பு மணி அலறியது. அவர்கள் ஒவ்வொருவருடனும் தனித்தனியாகக் கதைத்த சாரா முடிவில் மூவரையும் ஒன்றாகக் கூப்பிட்டார். பிரவீனின் நண்பன் சாப்பாடு கொண்டுவர மறந்துவிட்டானாம், பிரவீனின் சாப்பாடு இருவருக்கும் போதவில்லையாம், பசி தாங்கமுடியவில்லையாம், அவர்களிடம் காசிருக்காததால் கடையிலிருந்து சாப்பாட்டை எடுத்துச் சாப்பிட்டிட்டு அடுத்த நாள் அந்தக் காசைக் கொண்டுபோய்க் கொடுப்பமென நினைத்தார்களாம் எனப் பிரவீன் அவருக்குக் கூறிய விளக்கத்தைச் சொன்ன சாரா, நடந்தவற்றை அவள் எப்படி அமைதியாகக் கேட்டறிந்திருக்க வேண்டும், பிரவீனின் அந்த நடத்தைக்கு அவள் என்ன பின்விளைவைக் கொடுத்திருக்கலாம், அந்தச் செயல் பிழையானது என்பதையும் வேறென்ன வழிகளில் அந்தப் பிரச்சினையைத் தீர்த்திருக்கலாம் என்பதையும் கற்பிக்கும் ஒரு வாய்ப்பாக அதை அவள் எப்படிப் பயன்படுத்தியிருக்கலாம் – என்றெல்லாம் அவளுடனும் கேசவனுடனும் பேசிக் கொண்டிருந்தபோது அவளின் மனதுக்குள் அலைமோதிய உணர்ச்சிகளை அவளால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அவளுக்குத் தலை சுற்றியது.

அடுத்த இரண்டு கிழமைகளில் மீளச் சந்திக்க விரும்புவதாகச் சொன்ன சாரா அதற்கான நேரத்தை அவர்களுடன் உறுதிப்படுத்திக் கொண்டதுடன், பிரவீனைப் பாடசாலையில் போய்ச் சந்திப்பதற்கான அனுமதியையும் அவர்களிடம் பெற்றுக்கொண்டு விடைபெற்றார்.

கேசவன் எதுவும் பேசத் தோன்றாமல் ரீவியை ஓன் பண்ணினான். அவள் மீளவும் போய்க் கட்டிலில் விழுந்தாள். கண்ணீர் அவளின் கன்னங்களில் வழிந்தோடியது. மனம் விம்மியது.

கை ஒன்று அவளின் தலையை ஆதரவாகத் தடவியதை உணர்ந்த அவள் திரும்பிப்பார்த்தாள். “சொறி அம்மா. பிளீஸ், பிளீஸ் என்னோடை கதையுங்கோ… என்ரை கதையைக் கேட்காமல் நீங்க அடிச்சதிலை எனக்குக் கோவமாயிருந்துது. கோவத்திலை கோல் பண்ணியிட்டன்… ஆனா, ஆனா, இப்பிடியெல்லாம் நடக்குமெண்டு எனக்குத் தெரியாதம்மா. பிளீஸ் அம்மா, பிளீஸ் அம்மா, என்னோடை கதையுங்கோ. இனிமேல் நான் இப்பிடியெல்லாம் செய்யமாட்டன், என்னை மன்னிச்சிடுங்கோ… பிளீஸ் அம்மா” பிரவீன் விம்மினான்.

அவனைக் கட்டிக்கொண்டு அவளும் அழுதாள். சொற்களற்ற அந்த மெளனமும் பெருக்கெடுத்து ஓடிய இருவரின் கண்ணீரும் இருவரினதும் மனங்களுக்குச் சற்று ஆறுதலைக் கொடுத்தன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.