
உங்கள் நிலங்களில்
நீர்நிலைகள் நிறைந்தேயிருக்கின்றன
சுரந்து பெருகும்
மீனுண்ணும் பறவைகளின்
அழைப்பினிசையால்
உங்கள் முகங்கள் மலர்ந்திருக்கின்றன
கரங்களாலல்ல
கணப்பார்வைகளால்
முகமன் கூறி வாழ்த்திக்கொள்கிறீர்கள்
முன்னிரவுகளில்
கலன்களில் கொதிக்கும்
குழம்பின் சுவை எங்ஙனம்
வாசத்தின் நுட்பமென்று
மெல்லிய மதுக்குப்பிகளை
கைகளேந்திய உறவுகளுடன்
பேசிச் சிரிக்கிறீர்கள்
கதைகேட்டும் உறங்கா மகளின்
கண்மயங்கும் வரை
மனைவியிடம் புன்னகைத்து
காத்திருக்க நேரமிருக்கிறது
பகலின் இதர சலனங்கள்
இரவின் முயங்குதல்வழி
கரைத்துக்கொள்ளும்
அன்பும் காமமும்
வாய்க்கப் பெற்றிருக்கிறீர்கள்
விடியும் நாளை
வரமென எதிர்நோக்கி
உறங்கும் உங்கள் நல்லூழ்
பரவட்டும் இந்த நானிலமெங்கும்