இருள் 

வாசல் கதவைத் திறந்த அம்மா வியப்புடன் என்னைப் பார்த்து  “என்னடி இன்னிக்கி இவ்வளவு சீக்கிரம் வந்துட்டே?” என்று கேட்டாள். 

அப்போது மணி மாலை நாலு மணி. தினமும் ஆறு, ஆறரைக்கு மணி வருபவள் நாலு மணிக்கு வந்தால்?

“அக்கா எங்கேம்மா?” என்று கைப்பையை ஹாலில் இருந்த மேஜையின் மீது வைத்தேன்.  

“இன்னிக்கு ஆபிஸ் லீவுன்னு கார்த்தால பதினோரு மணி வரைக்கும் படுக்கையிலே புரண்டு புரண்டு ராயசம் பண்ணிண்டு இருந்தா. குளிக்காம டிபன்  லஞ்ச் எல்லாம் ஆச்சு. இப்ப குளிச்சிட்டு வரேன்னு போயிருக்கா. உனக்கு காப்பி போடட்டுமா?” என்று சமையலறைப் பக்கம் திரும்பினாள். அவள் கேள்விக்கு நான் பதில் ஒன்றும் தராததைச் சட்டை செய்யாமல் போகும்  அவளைப் பின் தொடர்ந்தேன். 

சமையல் உள் கால்வாசி வெளிச்சமும் முக்கால்வாசி இருட்டுமாக இருந்தது.

“லைட்டைப் போட்டுக்கோயேம்மா” என்று சுவிட்சைத் தட்டினேன்.

“அதான் வெளிச்சமா இருக்கே. ஆறு மணிக்குத்தான இருட்டறது? கரண்டுக்குப் பிடிச்ச கேடு” என்றாள் அம்மா.  

“கார்த்தாலே நான் ஆபீசுக்குக் கிளம்பிண்டு இருக்கறச்சே அக்காதான் சாயந்திரம் கடைக்குப் போகணும். சீக்கிரம் வரியான்னு கேட்டா” என்றேன். 

“எந்தக் கடைக்கு?” என்றபடி அம்மா டிகாஷனைப் பாலில் ஊற்றினாள்.  

“நகைக் கடைக்குப் போகணும்னா” என்றேன். 

அம்மா ‘விருட்’டென்று என்னைத் திரும்பிப் பார்த்தாள் . விளக்குப் போடாமல் இருந்திருந்தால் அவள் முகத்தில் தென்பட்ட அதிர்ச்சி எனக்குத் தெரியாமல் போயிருக்கும். 

“நகைக் கடைக்கா? புதுசா நகை பண்ணிப் போட்டுக்கப் போறாளா?” இப்போது அவள் குரலில் லேசான கேலி தென்பட்டது.

“ஏம்மா நீயா ஏதாவது கற்பனை பண்ணிண்டு?” என்று சற்றுக் கடுமையாக அவளைப் பார்த்தேன்.

“பின்னே என்ன கல்யாணம்னு நகைக் கடைக்குப் போறா?”

“கல்யாணம்தான். அவள் ஆபீஸ் சிநேகிதி மாலதிக்குக் கல்யாணம் ஆகப் போறது. அதனாலே அவா ஆபீசிலே எல்லோருமா பணம் போட்டு நகை வாங்கிக் கொடுக்கறா. அதை வாங்கத்தான் அக்கா கடைக்குப் போறா” என்றேன்.

“மாலதிக்கா? சாலியை விட அவ நாலஞ்சு வயசு சின்னவளாச்சேடி.  ஊர் உலகத்திலே எல்லாருக்கும் கல்யாணம் கார்த்தின்னு நடந்துண்டு இருக்கு. இங்கதான் ஒண்ணுத்துக்கும் வழியைக் காணம்” என்றபடி காப்பித் தம்ளரை என்னிடம் கொடுத்தாள். 

அம்மா வேறு பிளேட்டை எடுத்து விட்டாள். 

“ஷ். அம்மா. சித்த பேசாமே இரேன். அக்கா வந்துடப் போறா. அவ காதிலே விழுந்தா அவ்வளவுதான்…”

“எல்லாத்துக்கும் என்னை அடக்கி வை” என்றபடி அம்மா காய் நறுக்க அருவாள் மனையை எடுத்துக் கொண்டு தரையில் உட்கார்ந்தாள்.

நான் கையில் காப்பித் தம்ளரை எடுத்துக் கொண்டு ஹாலுக்குச் சென்றேன். அம்மாவின் ஆதங்கமும் ஏக்கமும் எனக்குப் புரிந்தன. ஏழு வருஷமாகக் கைகூடாத இந்தக் கல்யாண விஷயம் அம்மாவைப் பாதி ஆளாக்கி விட்டது. சாலி அக்காவுக்கு இப்போது இருபத்தியெட்டு.

வயதாகிறது. அவள் முகத்தைப் பார்த்தால் அது அந்த வயதை உறுதிப் படுத்தியது. ‘வெட வெட’ வென்று உயரம். அதுவும் சில சமயம் எதிரியாய் இருந்தது; இருக்கிறது.  அழகென்று சொல்ல முடியாவிட்டாலும் அசிங்கம் என்று தள்ளி விட முடியாது. ஆனால் வருகிறவன்கள்  அவளிடம் ஒரு ரவி வர்மா பெண்ணைத் தேடுகிறான்கள், அவன்கள் துவாரபாலகர்களில் ஒருவனாக இருந்த போதிலும்.

அழகை ஆராதிப்பவனில்லை என்று சொல்லிக் கொண்டு வருபவனும் அவனது பெற்றோரும் வீடு வாசல் தாவர சொத்துக்களை மதிப்பிடும் அலுவலர்களாக இருக்கிறார்கள். ஆரம்பத்தில் ஜாதகத்தில் கொஞ்ச தோஷம் என்று கழிக்கப்பட்டாள். எரிச்சலுற்ற அவள் வருகிற வரன்களைக் கழித்துக் கட்ட ஆரம்பித்தாள்.காலம் அவளிடம் ஏற்படுத்திய வடுக்களின் வலி அவ்வப்போது வாய் வழியே வந்து சீறும்.

 நாங்கள் இருவரும் வேலை பார்ப்பதால் கௌரவமாக வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் அம்மாவின் கவலையைத் தீர்க்க இன்னும் வழி பிறக்கவில்லை என்பது உறுத்தலாகத்தான் இருந்தது.  

சுப்பிரமணியபுரம் மாலைக் கூட்டத்தில் திணறிக் கொண்டிருந்தது. வழக்கம் போலத் தெருவில் நடக்கும் மனிதர்களுக்குப் போட்டியாக நாய்களும் மாடுகளும் குறுக்கும் நெடுக்குமாக ஓடின; நடந்தன. நானும் அக்காவும் நடந்து வந்த தெரு திருப்பரங்குன்றம் சாலையில் சேர்ந்த இடத்தில் திரும்பி நகரத்தைப் பார்க்க நடந்தோம். பிளாட்பாரங்கள் இல்லாத சாலையின் ஓரங்களில் பூக்கடைகளைப் போட்டுப் பெண்கள் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். மதுரை மல்லிகையின் மணமும், ஜாதிப் பூவின் வாசனையும் தெருப் புழுதியில் கலந்து நடப்பவர்கள் நாசியை நிறைத்தன.

“பூ வாங்கலாமா?” என்று அக்கா ஒரு கடையின் முன் நின்றாள். கடைக்காரி அவளைப் பாத்து “சாலி அம்மாவா? வாங்க தாயி!” என்று வெத்திலையால் சிவந்த ஈறுகள் தெரியச் சிரித்து வரவேற்றாள்.

“என்ன மீனா குண்டாயிருக்கே? சாப்பாடு ஊட்டமா, இல்லே ஆஸ்பத்திரி…”

“ஆமா ஆஸ்பத்திரி ஒண்ணுதா கொறச்ச. இருக்குற அஞ்சு வாய்க்கே கஞ்சி ஊத்த முடியலே, நீ வேறே” என்று அலுத்துக் கொண்டாள்.

“ஒரு மொழம் மல்லி குடு. இங்கேயே வச்சுக்கறோம். நாலு மொழம் கதம்பமும் ரெண்டு மொழம் ஜாதியும் வீட்டுக்குக் கட்டிக் கொடுத்துடு” என்றாள் அக்கா.

மல்லிகைப் பூவை இரண்டு சம பாகமாகக் கத்தரித்து எங்களிடம் நீட்டினாள். மற்ற பூக்களை இலையில் வைத்துக் கட்டிக் கொண்டே “சாலிம்மா, நா பாக்க வளந்த கொழந்த நீ. சீக்கிரம் கலியாணச் சாப்பாடு போடு கண்ணு” என்றாள்.

அக்கா”எவ்வளவு ஆச்சு?” என்று கேட்டாள். 

“பதினாறு ரூபா” என்றாள் மீனா. அக்கா பர்சைத் திறந்து அவளிடம் இரண்டு பத்து ரூபாய்த் தாள்களை நீட்டி “வச்சுக்க” என்றாள். அவள் தெருவில் வியாபாரம் செய்யும் எவரிடமும் பேரம் பேசுவதில்லை.

மீனா சும்மா இருக்காமல் “சீக்கிரம் கலியாணச் சாப்பாடு போடு கண்ணு” என்று மீண்டும் சொன்னாள்.

அக்கா அவளை நிதானமாகப் பார்த்து “எதுக்கு? அவனும் உன் புருஷன் மாதிரி தினமும் குடிச்சிட்டு வீட்டுக்கு வந்து பொண்டாட்டியைப் போட்டு அடிக்கிறதுக்கா?” என்றாள். 

மீனா திகைத்து விட்டாள். பக்கத்தில் பூ தொடுத்துக் கொண்டிருந்த இரண்டு கடைக்காரிகளும் கைவேலையை நிறுத்தி விட்டு அக்காவையும் மீனாவையும் மாறி மாறிப் பார்த்தார்கள். நானும் கூட. 

“என்னா கண்ணு இப்படிச் சொல்லிப் போட்டே?” என்றாள் மீனா.

“என்னது? குடிச்சிட்டு பொண்டாட்டியை தினமும் அடிக்கிறது உண்மையில்லையா?”

“இல்ல. எங்க சனம் அப்பிடித்தான். ஆனா அய்யமாருங்க?”

இப்போது சாலி அக்கா திகைத்து விட்டாள். மீனாவைப் பாத்து “நீ எழுந்து இந்தப் பக்கம் வா, உன்னையைக் கட்டிக்கணும் போல இருக்கு” என்றாள் கண்கள் பளபளக்க. மீனா அக்காவின் பேச்சைக் கேட்டு ஆச்சரியத்தில் வாயைப் பொத்திக் கொண்டாள். 

“மீனா, நீ ரொம்ப நல்லவ” என்றாள் அக்கா. “அய்யமாராவது அய்யனாராவது? ரெண்டுக்கும் ரெண்டு கால், ரெண்டு கை, ரெண்டு காது, ஒரு வாய், ஒரு மூக்கு மட்டும் கடவுள் கொடுக்கலை. ரெண்டுக்கும் ஒரே மாதிரி கறுப்பு மனசு, ஒடஞ்ச மூளையை வச்சுத் தச்சுதான் அனுப்பிருக்கான். உன் புருஷன் மார்க்கெட்டுல வாங்கிக் குடிச்சிட்டு உன்னைத் தெருவிலே போட்டு அடிக்கறான்னா எனக்கு வர்றவன் வீட்லே குடிச்சிட்டு வீட்டிலேயே போட்டு அடிப்பான். அவ்வளவுதான் வித்தியாசம்.”

மீனா எதுவும் பதில் சொல்வதற்குள் அக்கா அங்கிருந்து கிளம்பி நடந்தாள். கூட நடந்த நான் பொறுக்க முடியாமல் “என்னக்கா இப்படிப் பேசிட்டே?” என்றேன்.

அக்கா திரும்பிப் பார்த்து “நான் சொன்னதில் என்ன தப்புடி?” என்றாள்.

“நீ சொன்னதுலே தப்பு ஒண்ணும் இல்லே. ஆனா மீனாவைப் போய் எதுக்கு அடிச்சுத் துவைச்சேன்னுதான் எனக்குப் புரியலே.” 

அக்கா நின்று விட்டாள். சில வினாடிகள் அவள் ஒன்றும் பேசவில்லை. எங்களைத் தாண்டிக் கொண்டு ஜட்கா வண்டிகளும் ரிக் ஷா க்களும் டி வி எஸ் பஸ்களும் சாலையில் விரைந்து சென்றன. அந்த சப்தங்களை விட அக்காவின் மௌனம் எனக்குப் பெரிதாக ஒலித்தது.    

அக்கா என் கையைப் பற்றிக் கொண்டாள்.

“என்னோட இந்தத் தப்புலே உனக்கும் அம்மாவுக்கும் பங்கு இருக்கு.”

நான் புரியாமல் அவளைப் பார்த்தேன். 

“நீங்க ரெண்டு பேரும் என்னைப் பத்தி, என் கல்யாணத்தைப் பத்திப் பேசறப்போவே நான் குளிச்சிட்டு வெளியே வந்துட்டேன்.  உங்க ரெண்டு பேர் மேலேயும் எனக்கு கோபம் வந்தது. அடக்கிண்டுட்டேன். வெளியிலே கிளம்பறச்சே சண்டை எதுக்குன்னு. அது ஊவா முள் போல என் மனசைக் குத்திண்டு இருந்ததை மீனா மேலே காமிச்சிட்டேன்” என்றாள் வருத்தத்துடன்.

“சாரி அக்கா” என்றேன் நான்.

“எனக்கு யாராச்சும் அனுதாபமா பேசினா அப்படியே பத்திண்டு வரது. கேலியாப் பேசினா, குத்தலாப்  பேசினாக் கூட ஐ டோன்ட் கேர்.  இந்த அனுதாபத்தை வச்சுண்டு சொல்றவாளோட  பிள்ளையோ இல்லே அவ சொந்தக்காரனோ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வந்துடப் போறானா?”

எனக்கு இந்தப் பேச்சு நின்று விட்டால் போதுமென்றிருந்தது. விரக்திதான் கோபத்தை உண்டாக்குகிறது. அக்கா பேசப் பேச எனக்கு அவள் மேல் பரிதாபம் ஏற்பட்டு விடுமோ என்று தோன்றியது. இதை அவள் உணர்ந்தால் என்னைக் கொன்று போட்டு விடுவாள்.

நயினார் கண் ஆஸ்பத்திரி வாசலில் மாலதி நின்று கொண்டிருந்தாள்.

அவள் வீடு அதை ஒட்டிய சந்தில்தான் இருந்தது. அவளையும் அழைத்துக் கொண்டு நகைக்கடைக்குச் சென்றோம்.  

நகைக் கடையில் தேர்வு முடிந்து நகையை வாங்கிக் கொண்ட போது ஆறரை மணியாகி விட்டது. மாலதி டவுன் ஹால் அருகே தன்னுடைய பெரியம்மா வீட்டுக்குப் போவதாகச் சொல்லி விடை பெற்றுக் கொண்டாள். காலேஜ் ஹவுஸ் அருகே போகும் போது “அக்கா பசிக்கிறது. ஏதாவது லைட்டா டிபன் சாப்பிடலாமா?” என்று கேட்டேன். இருவரும் உள்ளே நுழைந்து கூட்டமில்லாத ஒரு மூலையில் எதிரெதிரே உட்கார்ந்து கொண்டோம்.

தூள் பஜ்ஜியும் காப்பியும் ஆர்டர் பண்ணினோம்.

அப்போது சற்றுத் தொலைவில் ஒரு சர்வரிடம் ஏதோ கேட்டுக் கொண்டு நின்ற  ஆளைப் பார்த்துக் கையை அசைத்தேன். அவன் கவனிக்கவில்லை.

அக்கா திரும்பிப் பார்த்து விட்டு “யாரைக் கூப்பிடறே?” என்று கேட்டாள்.

“என் பிரெண்டு பத்ரின்னு பேர்.”

“ரொம்ப நாளாத் தெரியுமோ?” என்று கேட்டாள்.

“ஆபீஸ் கலீக்.”

அப்போது நாங்கள் இருந்த பக்கம் அவன் வந்தான். என்னைப் பார்த்ததும் “ஹாய்!” என்றான்.

“வா வா. இங்கேயே உட்காரு” என்று என் பக்கத்து சீட்டைக்  காண்பித்தேன். உட்கார்ந்து கொண்டான். என்னிடம் “நாலு மணிக்கு இன்னிக்குத் தப்பிச்சிட்டேனேன்னு பாத்தேன்” என்றான்.

“உதை வாங்குவே!” என்று நான் சிரித்தேன். அக்காவைப் பார்த்து “இவன் ரொம்பப் பொல்லாதவன்” என்றேன். அக்கா பதில் எதுவும் அளிக்காமல் தலையை அசைத்தாள்.

“ஆஃபீசிலிருந்து சீக்கிரம் கிளம்பிட்டியே இன்னிக்கி? ஏதோ இப்பதான் வீட்லேந்து வந்தவன் போல ஃப்ரெஷ் ஆக இருக்கியே!” என்று சிரித்தேன். “நன்னா ஓபி அடிச்சிண்டே ரொம்ப வேலை பாக்கறவன் மாதிரியும் காமிச்சிண்டு…” 

“அடுத்த பிரமோஷன் கிடைக்கணும்னா நல்லா வேலை பார்க்கறான்னு பேர் வாங்க வேண்டாமா?” என்றான் அவன் சிரித்தபடி. 

“அக்கா, இவன் பத்ரி. எங்க ஆபீஸ்” என்று சொல்லி விட்டு அக்காவை அவனுக்கு அறிமுகப்படுத்தினேன். 

அக்கா அவனைப் பார்த்துக் கைகூப்பினாள்.

“அப்படியெல்லாம் கைகூப்பாதீங்கோ. அப்புறம் ஹோட்டல்னு கூடப் பாக்காம நான் தரையிலே விழுந்து உங்களை நமஸ்காரம் பண்ணணும்” என்றான். 

“ஏன், இப்பவும் என்ன கெட்டுப் போச்சு?” என்றேன் நான். “தரையும் நீட்டாதான் இருக்கு.”

“சீ, சும்மாக் கிட” என்றாள்  அக்கா.

“பேண்ட் போட்டிருக்கேனேன்னு பாக்கறேன்” என்றான் பத்ரி. 

“அதானே. ஆபீஸ்னாதான் இப்ப சொல்லிண்டிருந்த மாதிரி மஸ்கா அடிக்கணும். இங்க என்னத்துக்கு அதெல்லாம்?” என்றாள் அக்கா.

அவன் ஜோவியலாக சொன்னதை அக்கா சீரியஸாக எடுத்துக் கொண்டிருக்கிறாளோ என்று சந்தேகத்துடன் அவளைப் பார்த்தேன். அவள் தன் புடவையில் ஒட்டிக் கொண்டிருந்த ஒரு நூலை எடுத்துக் கொண்டிருந்தாள்.

“நீங்க நான் கேள்விப்பட்ட மாதிரி இல்லியே” என்றான் பத்ரி அக்காவிடம்.

“என் காலை வாரப் பாக்கறான். என்ன விஷமம்!” 

“என்ன கேள்விப்பட்டே?” என்று அக்கா கேட்டாள். 

“சொல்றேன். ஆனா அதுக்கு முன்னாலே நீங்க வாங்கன்னுல்லாம் என்னைக் கூப்பிட வேண்டாம்” என்றான் பத்ரி. “நான் ரொம்பச் சின்னவன்.”

“ஆமா. இப்பதான் வயசு பத்து ஆறது” என்றேன் நான்.

“சரி, நீ என்னைப் பத்தி என்ன கேள்விப்பட்டே?” என்று அக்கா கேட்டாள்.

“உங்களைப் பாத்து உங்க ஏஜிஸ் ஆபீஸ்லே எல்லாரும் பயப்படுவாங்களாம்.”

அக்கா என்னைப் பார்த்தாள். பிறகு பத்ரியிடம் “நான் என்ன சிங்கமா, புலியா பாத்துப் பயப்படறதுக்கு?” என்றாள்.

“புலி. சிங்கம்னா கட்டிப் போட்டுடலாமே!”

அக்கா அவனை உற்றுப் பார்த்தாள். சில நொடிகள் கழித்து அவள் முகத்தில் புன்னகை தோன்றியது.

நான் “அக்கா. இவன்தான் எங்க ஆபீஸ் ஆடிட் இன் சார்ஜ்” என்றேன். “சி.ஏ.”

“பாத்தாத் தெரியலையே” என்று அக்கா ஆச்சரியத்துடன் கூறினாள்.

“நான்தான் அப்பவே சொன்னேனே நான் ரொம்பச் சின்னப் பையன்னு.”

என்னால் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியவில்லை. “இவன் கூடப் பேசி ஜெயிக்க முடியாது” என்றேன். அக்கா ஒன்றும் சொல்லாமல் என்னைப் பார்த்தாள்.   

“உனக்கு இதுதான் ஊரா?” என்று அக்கா கேட்டாள்.

“எங்கப்பா இங்க வந்து ஐம்பது வருஷம் ஆச்சு. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இங்கேதான். அதனாலே இதுதான் என் பிறந்த மண்.”

“அப்பா என்ன பண்றார்?”    

அவன் ஒரு விரலை உயர்த்தி மேலே காட்டினான்.

“ஓ, ஐ’ம் சாரி” என்றாள் அக்கா. 

“எனக்கு எட்டு வயசாறப்பவே போயிட்டார். எங்கம்மாதான் கஷ்டப்பட்டு வளர்த்தா.”

“ஆனா நீ ஸ்மார்ட்டா லைஃப்லே மேலே வந்திட்டியே” என்றேன் நான்.  

“தாங்க்ஸ்” என்றான். பிறகு அக்காவைப் பார்த்து “ஒண்ணு சொல்லட்டுமா? எனக்கு உங்க ஆபீஸ்னா ரொம்ப மரியாதை” என்றான்.

“இப்ப எதுக்கு எங்க அக்கா காலை வார்றே?”

“இல்லே. நிஜமாத்தான் சொல்றேன். ஒரு விஷயம் பாருங்கோ. என்னை மாதிரி ஒரு கம்பனியில் வேலை பார்க்கறவனுக்கு ஒரு இடத்து அனுபவம் மட்டும்தான். ஆனா உங்களுக்கு? இந்த ஸ்டேட்ல ஒரு ஐம்பது அறுபது கவர்மெண்ட் கம்பனி ஆடிட் இருக்காது? எவ்வளவு எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும்? அதுவும் வித்தியாசமான அனுபவங்கள் வேறே.”

“ஆனா அக்கா ஆபீஸ்லே நீ இருந்தா உனக்கு நீ இப்ப வாங்கற சம்பளத்தில் பாதிதான் கிடைக்கும்” என்றேன் நான்.

“அதனாலதான் நான் ப்ரைவேட்லே வேலைக்குப் போனேன்” என்றான் பத்ரி.

“ஸோ, ஏஜீஸ் ஆபீஸ் மரியாதை, எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் சும்மா வெறும் பேச்சுக்குத்தானா?”  என்று அக்கா கேட்டாள். 

பத்ரி அவள் முகத்தில் புன்னகையைத் தேடினான். பிறகு காயமுற்றவன் போலத் தன் வயிற்றைத் தட்டிக் காண்பித்து “என் அம்மா பட்ட கஷ்டத்துக்கு நான் திரும்பிச் செய்யணும்னா நன்னா சம்பாதித்தாதான் நடக்கும்னு அங்க போயிட்டேன்.”       

நான் அக்காவின் முகத்தைப் பார்த்தேன். அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் காணப்படவில்லை. 

“நீங்க என்ன ஆர்டர் பண்ணினீங்க? தூள் பஜ்ஜிதானே?” என்று சிரித்தான் பத்ரி.

அவன் பேச்சை  மாற்றுகிறான்.

“அது எப்படி உனக்குத் தெரியும்?” என்று அக்கா கேட்டாள். “நீங்க ரெண்டு பேரும் இதுக்கு முன்னாலே இங்கே வந்திருக்கீங்களா?”

“அவ்வளவு கஷ்டமெல்லாம் பட வேண்டியதில்லே. எங்க ஆபீஸ்லே மாசம் நடக்கற மூணு மீட்டிங்குக்கு மேடம்தான்  காப்பி டீ அரேஞ் பண்றது. அட்லீஸ்ட் மூணுல ரெண்டு மீட்டிங்குக்காவது  தூள் பஜ்ஜிதான் ஸ்னாக்ஸ்.  எங்க ஆஃபீஸ்லே தூள் பஜ்ஜிக்குத் துர்க்கா பஜ்ஜின்னுதான் பேர்.”

“ஆபீசெல்லாம் இல்லே. நீதான் அவளுக்கு இந்தப் பேரை வச்சிருக்கே” என்றாள் அக்கா.

அவன் திகைத்து விட்டான். 

அப்போது சர்வர் தூள் பஜ்ஜியும் காப்பியும் கொண்டு வந்து வைத்தார்.

“எனக்கு ஒரு காப்பி மட்டும்” என்றான் பத்ரி. 

“நீயும் கொஞ்சம் பஜ்ஜி எடுத்துக்கோயேன் ” என்றாள் அக்கா.

“சரி, கையலம்பிண்டு வரேன்” என்று கை கழுவும் இடத்தை நோக்கிச் சென்றான்.

“நீதான் துர்க்கா பஜ்ஜின்னு பேர் வச்சேன்னு நான் சொன்னதும் அசந்துட்டான் இல்லே. மூஞ்சிலே தெரிஞ்சது” என்று சிரித்தாள் அக்கா.

“ஆனா அக்கா. அவன் வைக்கலே” என்றேன் நான்.

“என்னது?”

“ஆமா. அது என் சிநேகிதி பிரபா வச்ச பேர்.”

“அப்போ ஏன் அவன் நான் சொன்னதைக் கேட்டுண்டு பேசாம இருந்தான்?”

“இது ஒரு பெரிய விஷயமில்லேன்னு நினைச்சிருப்பான்” என்றேன் நான். “ஹீ இஸ் எ ஜென்டில்மேன்.” 

அவள் முகத்தில் லேசான கோபம் தோன்றியதைக் கவனித்தேன்.

“அவன் வந்ததும் மன்னிப்பு கேட்டுடறேன்” என்றாள். “நீ வேறே அவனுக்கு பெரிய பெரிய சர்டிபிகேட்லாம் கொடுக்கறியே.”

“ஐயோ அக்கா. இது ஒரு பெரிய விஷயமா. வி வில் லீவிட்” என்று கெஞ்சலாகச் சொன்னேன்.   

பத்ரி திரும்பி வந்த போது அவனுக்கான காப்பியும் வந்திருந்தது. தூள் பஜ்ஜியை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.

என்னைப் பார்த்து “என்னதான் ஜோக்கெல்லாம் அடித்தாலும் இந்த டேஸ்டை அடிச்சுக்க யாராலும் முடியாது இல்லே?” என்றான். காப்பி தம்ளரை எடுத்துக் கொண்டே கைக் கடிகாரத்தைப் பார்த்தான்.

“கிளம்பணும். லேட்டாயிடுத்து” என்று எங்கள் இருவரையும் பார்த்துச் சொன்னான்.

“எங்க இருக்கு உங்க வீடு?” என்று அக்கா கேட்டாள்.

“திருநகர் தாண்டி” என்றான்.

“நல்ல டிஸ்டன்ஸ் ஆச்சே? ஏழெட்டு மைல் இருக்குமே?” என்றாள்.

“ஆமா. இருபத்திரண்டு பிடிச்சுப் போனா அரை மணி முக்கா மணி ஆயிடும்.”

“உங்கம்மா உன்கூடத்தானே இருக்கா? அவளை எதுக்கு இவ்வளவு தூரம் தள்ளி இருக்கற வீட்டிலே கொண்டு போய் வச்சிருக்கே? இங்கயே உன் ஆபீசுக்குப் பக்கத்திலே இருந்தா நல்லதில்லையா?” என்றாள் அக்கா.

“மலிவா அங்கதான் கிடைக்கிறதுன்னு வீடு வாங்கிட்டேன். கோ ஆப்ரேட்டிவ் பேங்லேந்து லோன் வாங்கி” என்றபடி எழுந்தான்.  “தாங்க்ஸ் ஃபார் தி பஜ்ஜி அண்ட் காப்பி அப்படீன்னு எல்லாம் சொல்லிண்டு கிளம்பப் போறதில்லே. ஆனா உங்களைப் பாத்ததிலே ரொம்ப சந்தோஷம்.” 

“ஏய் பில்தான் கொடுக்காம ஓடறேன்னு பாத்தா தாங்க்ஸ் கூடக் கிடையாதா?” என்று அவன் தோளில் குத்தினேன்.

“இல்லையா அக்கா?” என்று அக்காவைப் பார்த்துக் கேட்டேன்.

அக்காவின் உதட்டில் ஒரு சிறிய புன்னகை தோன்றி மறைந்தது.

நாங்கள் ஹோட்டலை வீட்டுக் கிளம்பி வீட்டை நோக்கி நடந்தோம். சாலையில் இருந்த பாதி விளக்குக் கம்பங்களில்  விளக்குகள் எரியவில்லை. இருட்டும் வெளிச்சமும் மாறி மாறிப் பாதையில் பதிந்திருந்தன. 

“உனக்கு அவனை ரொம்பப் பிடிச்சிருக்கு போல. தோள்ல குத்தறே!” என்றாள் அக்கா.

“பிரெண்ட்ஸ்தானே அக்கா?” என்றேன் நான். 

“அவனுக்கு இப்போ என்ன வயசிருக்கும்?” என்று கேட்டாள்.

“என்னை விட நாலஞ்சு வயசு பெரியவனா இருப்பானா இருக்கும்” என்றேன். “எதுக்குக் கேக்கறே? இவ்வளவு சின்ன வயசிலே வீடெல்லாம் வாங்கி கட்டிருக்கானேன்னா?” என்று கேட்டேன்.    

“இல்லே சும்மாதான்” என்றாள்.

“ரொம்ப ஸ்மார்ட் ஃபெல்லோதான். இல்லையா அக்கா?” என்றேன் நான்.

“ம். ஹீ’ஸ் ஓகே” என்றாள் சாலி. 

நான் அவளைப் பார்த்தேன். விளக்கு எரியாத ஒரு கம்பத்தை அப்போது நாங்கள் கடந்து கொண்டிருந்தோம். இருட்டில் அவள் முகம் சரியாகத் தெரியவில்லை.

————————– 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.