தீர யோசித்தல் – இறுதிப் பாகம்

This entry is part 3 of 3 in the series தீர யோசித்தல்

பெய்ஸியச் சிந்தனை முறை என்பது சில ‘சிறந்த வழக்கங்களை’ உள்ளடக்கியது. ஒட்டு மொத்தத்தை முதலில் உருவகித்துக் கொள்ள வேண்டும், அதை புத்தியில் நிறுத்திக் கொள்ள வேண்டும். புதுத் தகவல்களைச் சேர்க்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், உடனே புது முடிவுகளுக்குத் தாவக் கூடாது. புதுத் தகவல் எங்கே சுட்டுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும், ஆனால் நம் ஆதார முடிபுகளைக் கைவிட்டு விடக் கூடாது (அனேக நேரம் புதுத்தகவல் அவற்றை மாற்றாது), ஆனால் எத்தனை முறைகள் புதுத்தகவல் நம் ஆதார முன் முடிபுகளை மறுதலிக்கின்றன என்பதைக் கவனித்தபடி இருக்க வேண்டும்.  அதிர்ச்சி தரும் செய்திகளின் சக்தியைப் பொறுத்து எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம், அவற்றைப் பரந்த நிஜ வாழ்வின் பின்புலத்தில் பொருத்திப் பார்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு நோக்கில், இதன் மையக் கோட்பாடு என்பது செயல்படுவதற்குத் தேவையான எல்லாத் தகவல்களையும் திரட்டி ஓரிடத்தில் சேர்த்து வைத்துக் கொள்வதுதான். (சமைக்கத் துவங்குவதற்கு முன் எல்லாப் பொருட்களையும், உபகரணங்களையும் சேர்த்து வைத்துக் கொள்வதை ஒத்தது இது.)

ஏற்கனவே அலசி அறியப்பட்ட தகவலை இங்கே வைக்க வேண்டும், இன்னும் அலசப்பட்டு அறியப்படாத கச்சா தகவல்களை அங்கே வைக்க வேண்டும், கச்சாப் பொருட்கள் சூடுபடுத்தப்பட்டால் அளவில் குறையும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். (சூடுபடுத்தல் என்பது சமையல் வேலைக்கான உபமானம். இங்கு அது தகவல் பிரித்து அலசி அறியப்படுவதைக் குறிக்கும்.) மாறாக பெய்ஸிய அணுகுமுறையின் நிஜமான சக்தி, அதன் வழிமுறைகளில் அடங்கியில்லை; அது நம் புத்தியில் உண்மைத் தகவல்களிருந்த இடத்தில் நிகழ்தகவுகளை (சாத்தியப்பாடுகளின் ஊக அளவுகளை) மாற்றிப் பொருத்துகிறது என்பதில்தான் இருக்கிறது. மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் தீயன என்பதையோ, அல்லது ஜாக் என்பவர் முழுதும் நம்பகமானவர் என்பதையோ, யூரேசியா ஒரு எதிரி என்பதையோ மற்றவர்கள் முழுதுமாக நம்பக்கூடும், ஆனால் பெய்ஸிய சிந்தனை உள்ளவர் ஒருவர், இந்த சாற்றுதல்களுக்கு அவற்றின் சாத்தியப்பாடுகள் என்ன என்று கணக்கிட்டு மதிப்பீடு வழங்குவார். அவர் மாற்றமில்லாத உலகம் ஒன்றைக் கட்டுவதில்லை; மாறாக, தொடர்ந்து நிகழ்தகவுகளைக் கணக்கிட்டு மாற்றிக் கொண்டு, எதார்த்தத்திற்கு மிக அருகில் செல்லப் பயனுள்ள வழியைக் காட்டுகிறார். அந்தச் சமையல் முழுதுமாக ஒருபோதும் நடந்து முடிவதில்லை.

குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு இதைப் பயன்படுத்தினால் – நாம் டெஸ்லாவில் முதலீடு செய்ய வேண்டுமா? டெல்டா வகைத் தொற்று என்பது எத்தனை மோசமானது? போன்றவை – ஆய்ந்தறிதல் முறைகள் பற்றி எழுதுவோரின் வழிமுறைகள் தெளிவுபடுத்துவனவாகவும், சக்தி வாய்ந்தனவாகவும் இருக்கின்றன. ஆனால் ஆய்ந்தறிதல் இயக்கம் என்பது அதே நேரம் ஒரு சமூக இயக்கமாகவும் உள்ளது; ஆய்ந்தறிவோர் இப்போது சில நேரம் “ஆய்ந்தறிவோர் சமூகம்” என்று அடையாளம் காட்டப்படுகிறார்கள், மதமாற்றும் தீவிரவாதிகளைப் போல இவர்களும் தம் சமூகத்தின் எண்ணிக்கையைப் பெரிதாக்க விரும்புகிறார்கள். ஆய்ந்தறிவோரின் சமூகம் தனக்கென்று ஒரு மொழியைக் கூடப் பயன்படுத்துகிறது. ஆய்ந்தறிதலைப் பின்பற்றும் ஒருவர், உங்களுக்குப் பெரிய பாராட்டு ஒன்றை அளிக்க முயன்றால், நீங்கள் அவருடைய ‘முன் தீர்மானங்களை’ மாற்றும்படி செய்தீர்கள் என்று சொல்வார்- அதாவது அவர் முன்பு நன்கு யோசித்து அடைந்த முடிவுகளை மாற்றும்படியான நிலைக்கு அவரை நகர்த்தினீர்கள் என்று பொருள். (அவருடைய மனதில் உள்ள வரைபடத்தில், சாத்தியப்பாடுகளால் ஆன மலைப் பகுதி எழுந்தது அல்லது அதன் உயரங்களை இழந்தது என்றாகும்.) அதே ஆய்ந்தறிவாளர் வேறு நேரத்தில், தான் “விளிம்பு நிலையில்” ஒரு கருத்தை வைத்திருப்பதாகச் சொல்லக் கூடும் – இதன் பொருள், அடுத்த முறை ஒரு புதுத் தகவலோ, கருத்தோ கிட்டினால் அது கணக்கிலெடுத்துக் கொள்ளப்படும், ஆனால் ஏற்கனவே கைவசம் உள்ள முந்தைய நிலைப்பாடுகளுக்குச் சேர்க்கப்பட்டதாகத்தான் எடுத்துக் கொள்ளப்படும். (பொருளாதாரத் துறையாளர்கள், ’விளிம்புநிலைப் பயன்பாடு’ என்ற ஒரு பதத்தைப் பயன்படுத்துகிறார்கள், தொடர்ந்து கிட்டும் பொருட்களை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதை விளக்க அது பயன்படுத்தப்படுகிறது; முதல் வறுவல் கிளர்ச்சியூட்டுகிறது, ஆனால் அடுத்தடுத்த வறுவல் துண்டுகள் அளிக்கும் மகிழ்ச்சி, அல்லது அதன் விளிம்புப் பயன்பாடு ஒரு வறுத்த மாமிசத்துண்டோடு ஒப்பிட்டால் குறைந்தே காணப்படும் என்று பொருள்.) அவர் தன் அபிப்பிராயங்களை நிகழ்காலத்துக்கு முற்படுத்துகிறார் என்று சொல்லக் கூடும் – அது உற்சாகமானதும், எதிர்காலத்தை நோக்குகிறதுமான உரை,  ‘பெய்ஸிய நிகழ்நிலைப்படுத்தல்’ என்கிற புள்ளியியல் பயன்பாட்டிலிருந்து கடன் வாங்கப்பட்ட சொல்பிரயோகம். இதை ஆய்ந்தறிவோர் ஒரு தவறைத் திருத்தும் செயலுக்கு இருக்கும் (அவப்பெயரை, அதன் மீது இடப்படும்) கரும்புள்ளியை அகற்றப் பயன்படுத்துகிறார்கள்.  இந்த விதமான சொல்லை பயன்படுத்துகையில் கவனமாக நடந்து கொள்ளும்போது கிட்டும் உற்சாகம் எழும், நல்ல கட்டுமானத்தை எழுப்புகிறோம் என்ற உணர்வு தோன்றும். பொருளாதாரச் சிந்தனையாளர் டைலர் கோவென் 2019 ஆம் ஆண்டில், ஜெஃப்ரி எப்ஸ்டைன் வழக்கு பற்றி எழுதுகிறார், “சில நேரங்களில் ஒரு நிகழ்ச்சி நடந்து, என் முந்தைய கருத்துகளை எல்லாம் மாற்றி, நிகழ்நிலைக்குப் பொருத்தி அமைக்கும்படி செய்கிறது.

விளிம்பு நிலைக்கு வந்து நான் இப்போது நினைப்பது என்னவென்றால், நிறைய மனிதர்களை நல்ல நடத்தை உள்ளவர்களாக இருக்க வைப்பது அவர்களின் செயலூக்கம் இல்லாத தன்மைதான்.”

சிலிகன் பள்ளத்தாக்கில், ”உங்கள் முன் நிலைப்பாடுகளை நிகழ்நிலைக்குக் கொணருங்கள்” என்ற வாசகம் உள்ள டி-சட்டைகளை அணிந்து கொள்கிறவர்களை நாம் காணலாம், ஆனால் ஆய்ந்தறிவோர் போலப் பேசுவது மட்டுமே ஒருவரை அப்படிச் சிந்திப்பவராக்கி விடாது. தனக்கு மசமசப்பாக மட்டுமெ புலப்பட்டிருக்கும் தன் துவக்கநிலைப்பாடுகளைப் பற்றி ஒருவர் தொணதொணப்பாகப் பேசலாம், அல்லது தன் முன்நிலைப்பாடுகளைத் தான் மறு வார்ப்பு செய்வதாகப் பேசலாம், ஆனால் நிஜத்தில் அவர் சாதாரணமான, நன்கு வார்ப்பாக்கப்பட்ட கருத்துகளையே கொண்டவராக இருக்கக் கூடும். இப்படி ஒரு  போலி உருவை நம்மிடம் காட்டுவதை அவர் போன்றவர்களுக்கு கூகிள் எளிதாக்கி விடுகிறது. ஒரு பல்கலை ஆய்வுத்துறையில் தனியொரு பிரிவில் ஆழப் படித்துத் தேர்ந்து விட்டதான, ஒரே வாரத்தில் ஒரு முனைவர் பட்டத்தைப் பெற்று விட்டதான பிரமையைப் பிறருக்கும், தனக்குமே கூட அவர் கட்டியெழுப்பிக் கொள்ள கூகிள் உதவுகிறது; எந்த ஆய்வாளரை இதர ஆய்வாளர்கள் நம்பகமானவராகக் கருதுகிறார்கள், எவரை கவனிக்காமல் விலக்குகிறார்கள் என்பதையோ, சென்ற வருடத்து மாநாட்டில் அமர்வுகள் முடிந்த பின் என்ன பேச்சு நடந்தது என்பதையோ அவர் அறிந்திருக்க மாட்டார். அறுவை சிகிச்சையைப் பற்றிப் படித்துத் தெரிந்து கொள்வதற்கும், அறுவை சிகிச்சையாளராக இருப்பதற்கும் இடையே வேறுபாடு உண்டு, சிகிச்சையாளரின் முன் தீர்மானங்கள் பற்றித்தான் உண்மையில் நாம் அக்கறை கொள்கிறோம். சமீபத்திய பேட்டி ஒன்றில், கோவென் – வாசிப்பில் ஒரு மீமனிதர் போன்றவர், அவருடைய ப்ளாக், மார்ஜினல் ரெவொல்யூஷன் என்பது தகவல் பசி கொண்ட ஆய்ந்தறிவோர்களுக்குத் தினசரி போய்ப் படிக்க வேண்டிய தளம் – எஸ்ரா க்ளைன் என்பாரிடம் சொன்னதன்படி, ஆய்ந்தறிவோர் இயக்கம் ‘அதீதமாகத் தனிப்பட்டதொரு பண்பாட்டுப் பார்வையை கைக்கொண்டிருக்கிறது.’ அது, அனேகமாக வலைத் தளக் குழுமங்களில் வாதங்களை வெல்வது என்ற பண்பாட்டு முனைப்பு. மாறாக, ஆய்ந்தறிதல் என்பதைப் புரிந்து கொள்ள அதைப் பற்றிப் படித்தால் மட்டும் போதாது, அதை முதல் கை அனுபவமாகப் பெற வேண்டும் என்கிறார் கோவென்; சுமார் நூறு நாடுகளுக்குச் சென்று வந்ததில் அடித்தளமிட்டவை அவரது முன் தீர்மானங்கள், அவற்றில் ஒரு தடவை ப்ராஸிலிய போதை மருந்து விற்கும் கும்பலுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையின் இடையில் அவர் சிக்கிக் கொண்டிருக்கிறார்.

அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆய்ந்தறிவோராக இருக்க வேண்டும் என்பதைத் தெளிவாகவே நாம் விரும்புகிறோம். ஆனால் ஆய்ந்தறிவோர் நடைமுறை வாழ்வின் அனுபவங்களோடு சம்பந்தமற்று அலைகிறவர்கள் என்றதொரு தோற்றம், அதிகாரத்தில் ஆய்ந்தறிவோர் இருப்பதைக் குறித்து அச்சமெழுப்புகிறது. அப்படி ஒரு ஆட்சியாளர், தகவல்களின் அணிவகுப்பில் அலைந்து திரிந்து, எதார்த்தம் பற்றித் தனக்குக் கிட்டும் மனச் சித்திரத்தையே பெரிதும் நம்பி, அந்த எதார்த்தத்தில் வாழும் மக்களை உதாசீனம் செய்பவராக இருப்பாரா? பிரிட்டிஷ் நகைச்சுவையாளர்கள் மிச்செல் மற்றும் வெப் நிகழ்த்திய ஒரு காட்சியில், பொருளாதாரச் சரிவைச் சரி செய்யும்படி பணிக்கப்பட்ட ஒரு மந்திரி, தன் ஆய்வாளர்களிடம், அவர்கள் “எல்லா வறியோரையும் தீர்த்துக் கட்டுவதை” ஒரு தீர்வாக யோசித்துப் பார்த்தார்களா என்று கேட்பார். “அதைச் செய்யுங்கள் என்று நான் சொல்லவில்லை- அதை ஒரு தீர்வாகக் கணினியில் சேர்த்து, அது வேலை செய்யுமா என்று சோதித்துப் பாருங்கள் என்கிறேன்,” என்பார். (அவர்கள் அது வேலை செய்யாது என்று சொன்னபின், அவர் (இருண்ட வானை) ‘நீல வானமாக்குவது’ என்ற பெயரில், முன்பு சொன்னதையும் விட அறிவில்லாத ஒரு தீர்வை முன்வைப்பார்: “வால்யு ஆடட் டாக்ஸ் (விஏடி) என்பதை உயர்த்தி, எல்லா ஏழைகளையும் கொல்வது” என்ற தீர்வு.) இந்தக் கேலிச் சித்திரம் ஆய்ந்தறிவதை மையமாகக் கொண்ட மதிப்பீடுகளின் கட்டமைப்பு குறித்து எத்தனை பரவலான நம்பிக்கையின்மை இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.  கட்டுப்படியாகும் மருத்துவப் பராமரிப்பு (அஃபொர்டபிள் கேர்) சட்டம் அமெரிக்கப் பாராளுமன்றத்தின் முன் வைக்கப்படும் நாட்களில், மரபுப் பராமரிப்பு வாதிகள் தம் கவலைகளாக முன்வைத்தவற்றில் ஒன்று இது. மேலே பார்த்த யோசனைகள் போன்றவை ‘சாவு பற்றி முடிவெடுக்கும் குழுக்கள்’ முன்பு வைக்கப்படும், அதன் மீது முடிவெடுப்பவர்கள் ஆய்ந்து அறிபவர்களாக இருப்பார்கள், அவர்கள் மருத்துவச் செலவினங்களைக் குறைப்பதற்கு ஒரு வழியாக, முதியவர்களைத் தீர்த்துக் கட்டுவதைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பது அவர்கள் கவலையாக இருந்தது. இந்த அச்சம், நாம் (அமெரிக்கர்களைப் பற்றி இக்கட்டுரை பேசுகிறது) நமது கடைசி காலங்களில், மருத்துவப் பராமரிப்புக்காக எக்கச் சக்கமாக செலவு செய்கிறோம் என்ற எதார்த்தத்தால் கூர்மைப்பட்டிருக்கிறது. தீர யோசிப்பதைப் பழகுபவர்கள், சங்கடமான உண்மைகளைச் சுட்டிக் காட்டுவது என்ற சங்கடமான வேலையைச் செய்தே ஆகவேண்டும்; சில நேரம் இப்படிச் செய்யும்போது அவர்கள் சிறிதும் துன்பமில்லாமல் சௌகர்யமாக இருந்து தீர்வு சொல்கிறார்கள் என்பது போலத் தோற்றம் எழவே செய்கிறது.

நம் சொந்த வாழ்வில், இயக்கம் என்பது வித்தியாசமானது. நம் நண்பர்களுக்கு நம் மீது அதிகாரம் செலுத்துவது முடியாது; அவர்கள் அதிக பட்சம் செய்யக் கூடியது என்னவென்றால், மேலான வழிகளை நோக்கி நம்மைத் திருப்ப முயல்வது மட்டுமே. ’ப்ரைட் அண்ட் ப்ரிஜுடிஸ்’  நாவலின் நாயகியான எலிஸபெத் பென்னெட், புத்திசாலி, கற்பனைவளமிக்கவர், சிந்தாபூர்வமானவர், ஆனால் அவருடைய உற்ற நண்பரான ஷார்லட் லூகஸ்தான் தீர யோசிப்பவர். ஷார்லட் பெய்ஸியத் தர்க்கத்தைப் பயன்படுத்துபவர். அவர்களுக்குப் புதிதாய் அறிமுகமாகும் மி-ர். டார்ஸி, செருக்குடனும், உதாசீனத்துடனும் நடந்து கொள்கையில், ஷார்லட் லிஸ்ஸியிடம் (எலிஸபெத்) ஒட்டு மொத்தச் சூழலையும் கணக்கிலெடுக்கச் சொல்லி மென்மையாக அறிவுறுத்துவார்: டார்ஸி “நேர்த்தியான இளம் ஆண், நல்ல குடும்பம், செல்வம், மேலும் எல்லாமே அவருக்குச் சாதகமாக உள்ளன” என்று சுட்டுவார்; அவரைச் சந்திக்கையில், ஒருவர் ஏற்கனவே எதிர்பார்க்கக் கூடியது அத்தகைய செல்வமும், தோற்றப் பொலிவும் கொண்டவர்கள் விருந்துகளில் மிடுக்குடன் உலவுவார்கள் என்பதே; அத்தகைய நடத்தையே அவரைப் பற்றி எல்லாவற்றையும் காட்டி விடாது என்பார். நம்பகமான வருமானம் உள்ளவரும், எரிச்சலூட்டும் குணமுள்ளவருமான மி-ர்.காலின்ஸ் எனும் பாதிரியாரை ஷார்லட் திருமணம் செய்து கொள்ளும்போது, லிஸ்ஸி அந்த இணைப்பைப் பார்த்து திக்கிட்டுப் போகிறார்- ஆனால் ஒரு திருமணத்தின் வெற்றி என்பது பல காரணிகளை நம்பியது, அவற்றில் வருமானமும் ஒன்று, தனக்குத் திருமண வாழ்வில் வெற்றி கிட்டுவதற்கான வாய்ப்புகள், “திருமண வாழ்வை ஏற்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு என்ன வாய்ப்பு உண்டோ அதற்கிணையானதே.” என்று ஷார்லட் சுட்டுகிறார். (தற்காலத்தில் (திருமணங்களில்) அடிநிலை வீதங்கள் ஷார்லட்டின் கருத்துக்குத் துணை நிற்கும்: கிட்டத்தட்ட ஐம்பது சதவீதம் திருமணங்கள் முறிவில் முடிகின்றன, மேல்நிலை வருமானம் உள்ளவர்களிடையே இந்த முறிவு வீதம் குறைவாகவே உள்ளது.) ஷார்லட்டின் உதாரணம் லிஸ்ஸி டார்ஸியை உற்று நோக்கிப் பரிசீலிக்க ஒரு காரணமாக அமைகிறது. அந்தப் பரிசீலிப்பில் டார்ஸி எதிர்பார்க்கக் கூடிய விதங்களில் குறையுள்ளவராக இருந்த போதிலும், அசாதாரணமான விதங்களில் சிறப்புள்ளவராக இருப்பதைக் காண்கிறார். இன்பச்சுவை கதைகளில் பாத்திரங்களின் நண்பர்களில் தீவிர உணர்ச்சியுள்ளவர்கள், ஆலோசனை சொல்கையில், பாத்திரங்களைத் தமது இதய உந்துதல்களைப் பின்பற்றி முடிவெடுக்குமாறு உந்துவார்கள், ஆனால் நமக்கு நிஜ வாழ்வில் தேவையானவர்கள், தீர யோசித்து முடிவெடுக்கும் நண்பர்களே என்று, ஜேன் ஆஸ்டனுக்குத் தெரிந்திருந்தது.

ஷார்லட் காட்டுவது போல, கனிவுள்ள ஆய்ந்தறிவாளர்கள், மிக்க மரியாதை காட்டுபவர்களாக இருப்பார்கள், அது ஆழ்ந்த குணநலன்களைச் சுட்டுகிறது. இப்போது இயங்காத ஒரு வலைத் தளமான சேஞ்ச் எ வ்யூ (ChangeAView) என்பதில் நடந்த ஒரு கருத்துப் பரிமாற்றத்தை நல்ல நடத்தையுள்ளதாக காலெஃப் வர்ணிக்கிறார். ஒரு பதிவில் அவருடைய கருத்துகள் பாலினச் சாய்வுள்ள கருத்துகள் என்று சுட்டப்பட்ட போது, ப்ளாக் பதிவிடும் ஒரு ஆண், தன் கருத்துகளை மிக முயன்று காபந்து செய்கிறார். பிறகு அந்தப் பதிவுக்கு அடுத்து,“நான் பிழை செய்தேன் என்பதற்கான சாத்தியப்பாடுகள்,” என்று தலைப்பிட்ட  ஒரு பதிவில், அவர் தனக்கெதிரான வாதங்களில் சிறந்தவற்றைப் பட்டியலிடுகிறார்; இறுதியாக, தன் வழியில் தவறு இருப்பதாக ஏற்றுக் கொண்டு அறிவிக்கும் அவர், தன் வாதத்தால் மனம் புண்பட்டவர்களிடம் வருத்தம் தெரிவிப்பதோடு, தனக்கு ஆதரவாக வாதிட்டவர்களிடமும் வருத்தம் தெரிவிக்கிறார். அதற்கான காரணங்களை முன்வைக்கிறார். அவருடைய உண்மையான மற்றும் திறந்த மனதுள்ள அணுகலைப் பார்த்து அதன் மீது மதிப்புக் கூடியதால், தான் அவருக்கு ஒரு தனி மடல் அனுப்பியதாக காலெஃப் குறிப்பிடுகிறார். வாசகரே, பிறகு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்தார்கள்.

தீர யோசிப்பவர்களின் சமூகம் 2021 இல் எழுதப்படக் கூடிய ஒரு ஆஸ்டன் நாவலுக்குத் தகுந்த களமாக இருக்கும்.  ஆனாலும், காலெஃப்ஃபையும், அவரது கணவரையும் சேர்த்து வைக்க, தீர யோசித்தல் எத்தனை தூரம் காரணமாக இருந்ததாக நாம் கணக்கெடுக்க முடியும்? அதற்கு ஒரு பங்கிருந்தது, ஆனால் அவர் தனக்குகந்தவை என்று கருதிய குணங்களைப் புரிந்து கொள்ள தீர யோசித்தல் என்பது மட்டுமே ஒரே வழியாக எடுத்துக் கொள்ள முடியாது. நான் என் நண்பர் க்ரெக்கை அவரது தீர யோசிக்கும் அணுகலுக்காக வெகுநாட்களாகப் பாராட்டி நோக்கி வருகிறேன், ஆனால் இப்போது என் கருத்துகளைத் திருத்தி முன்னே கொணர்ந்திருக்கிறேன். அவர் அறியும் ஆர்வமுள்ளவராக, உண்மையானவராக, நேர்மையாளராக, கவனமாக நடப்பவராக, நுட்பமாக அறிபவராக, நியாயமானவராக இருப்பதற்குக் காரணம் இந்த ஆய்ந்தறியும் அணுகல் இல்லை, மாறாக, அவைதான் அந்த அணுகலைச் சாத்தியமாக்கியுள்ளன என்று நினைக்கிறேன்.

 “ரேஷனாலி” மற்றும் “த ஸ்கௌட் மைண்ட்செட்” ஆகியவற்றிலும் அது போன்ற இதர புத்தகங்களிலும், தீர யோசியாமை என்பது ஒரு வகை கெடு நடத்தை என்பது போலவும், அதை கல்வியாலும், சமூகப் பழக்கங்களாலும் சரி செய்து விடலாம் என்பது போலவும் முன்வைக்கப்படுகிறது.  இது சில சமயங்களில் சரியாக இருக்கலாம், ஆனால் எல்லாவற்றிலும் சரியாக இராது. நான் உயர்நிலைப்பள்ளியில் படித்த போது ஒரு வசந்த காலத்தில் என் வசிப்பறை ஜன்னல் மீது வந்து மோதுவதை ஒரு கார்டினல் பறவை தன் வழக்கமாகக் கொண்டிருந்தது. என் அம்மா- நுட்பமாக யோசிப்பவர், நகைச்சுவை உள்ளவர், புத்திசாலி, ஆனால் குறிப்பிடும்படி ஆய்ந்தறிபவர் இல்லை – அது நடக்கப் போகும் எதற்கோ முன்னறிகுறி என்று எடுத்துக் கொண்டார். சில சமயம் ஒரு கை வைத்த நாற்காலியில் அமர்ந்து அந்தச் சம்பவத்திற்காகக் காத்திருக்கத் துவங்கினார், அப்போது மிக உன்னிப்பாகக் கவனிப்பவராகவும், ஓரளவு வெலவெலத்துப் போனவராகவும் இருந்தார். அதே போன்ற வேறு வகை சம்பவங்கள் – தரையில் கிடந்த கிழிந்த டாலர் நோட்டு, காரின் இடது புறச் சக்கரம் ஓட்டையாகி காற்றிழப்பது, (வலது புறச் சக்கரத்தை விட அது அதிகமாக பாதிக்கும்), போன்றன அவருடைய மனநிலையின் மீது பல நாட்களுக்கு இருளைக் கொணரும், சில சமயம் வாரக் கணக்கில் கூட அந்த இறக்கம் நீடிக்கும். ஒரு வாக்காளராக, பெற்றோராக, வேலை செய்பவராக, மற்றும் நண்பராக அவர் எல்லா இடங்களிலும் உணர்ச்சிகளால் உந்தப்பட்டவராகவே இருந்தார். அவருக்கு புயல் வீச்சுப் போன்ற, கவித்துவ உணர்வுள்ள, அதிகம் பாதிக்கப்படும் ஆளுமை இருந்தது. தீர யோசிப்பதைப் பற்றிய ஒரு புத்தகத்தால் அவருக்கு அதிகம் பலனிருக்குமென்று நான் நினைக்கவில்லை. ஒரு நோக்கில், இத்தகைய புத்தகங்கள், ஏற்கனவே தீர யோசிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கே எழுதப்படுகின்றன என்பது என் கருத்து.

என் அப்பா தன் வேலையாலும், இயல்பாலும் ஒரு மருத்துவராகவும், விஞ்ஞானியாகவும் இருக்கிறவர். நான் சிறுவனாக இருந்த போது, நானே புரிந்து கொள்வதற்கு முன்பே சாண்டா க்ளாஸ் என்பவர் நிஜம் அல்ல என்று என்னிடம் சொன்னவர்; நாங்கள் பௌதீகம், கணினிகள், உயிரியல், மற்றும் “ஸ்டார் ட்ரெக்” ஆகியனவற்றைப் பற்றிப் பேசுவோம், நாங்கள் ஸ்பாக்குகள்தான், (காப்டன்) கிர்க்குகள் இல்லை என்பதில் ஒத்துப் போனோம். என் பெற்றோர்கள் பல பத்தாண்டுகள் முன்பே விவாஹ ரத்து செய்தவர்கள். ஆனால் சமீபத்தில், என் அம்மா ஒரு மருத்துவ மனையிலிருந்து புனரமைப்புச் சிகிச்சைக்கான மையத்திற்கு அனுப்பப்படவிருந்த போது, அவர் எங்கே போய் இருப்பது என்பதன் மீது முடிவெடுக்க இயலாமல், நான் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்பதைத் தீர்மானிப்பதில் குழம்பிப்போய் செய்வதறியாமல் நான் இருந்த போது, தொலைபேசியில் என்னோடு பேசிய என் அப்பா, பொறுமையாக, திட்டமிட்ட வகையில், மதியூகத்தோடு எனக்கு இருந்த தேர்வுகளில் பிரிந்து போகும் பாதைகளில் ஒவ்வொரு கிளையையும் அலசி நோக்கி, எவை தவிர்க்க முடியாதவை, எவை சாத்தியமானவை என்பதைப் பிரித்துக் காட்டி, எல்லாவற்றையும் தன் புத்தியில் ஒருங்கே சேர்த்துக் கட்டி வைத்துக் கொண்டதோடு என்னிடம் உணர்ச்சி வசப்படாமல் விளக்கவும் செய்தார். அவை எல்லாம் அவருடைய குணநலன்களைச் சார்ந்திருந்தன.

நான் ஆய்ந்தறிபவனாக இருக்கப் பழகுவதில் பல பத்தாண்டுகளைக் கழித்திருக்கிறேன். இருந்தும் என் அம்மாவின் பராமரிப்பைத் தீர்மானிப்பதில் நான் ஏன் செயலற்றுப் போனேன்? க்ரெக் தன் தொழில் நிறுவனம் பற்றிப் பேசுகையில், அதில் ஆய்ந்தறிந்த சிந்தனை மட்டும் இருந்தால் போதாது என்று என்னிடம் தெரிவித்தார். கேள்விகளைப் பற்றி நிதானமாக யோசித்து முடிவுகளை அடையும் ஒருவர், கடிகாரம் ஏன் டிக்கிடுகிறது என்பதைக் கற்கவும், அதைப் பற்றி தீர யோசிக்கவும் இயலாதவராக இருக்கக் கூடும்; தீர யோசித்து முடிவுகளை எட்டும் பழக்கமுள்ள ஒருவர், நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போடு என்றால் அதற்கான ஒரு நேரம் வந்தாலும் அப்படி முடிவெடுக்க விரும்ப மாட்டார். க்ரெக் நடத்தும் ஹெட்ஜ்-ஃபண்ட் நிறுவனத்தில் சக ஊழியர்கள், தீர யோசிப்பதோடு நிற்காமல், நேரத்தில், தீர்மானமாக முடிவெடுக்கும் நபரை ’வியாபாரி’ என்று வர்ணிக்கிறார்கள், அது பாராட்டு. செயல்திறனுள்ள ஒரு ஆய்ந்தறிவாளர், நாம் இன்று பெய்ஸிய நிகழ்தகவு ஆளும் உலகில்தான் வாழ்கிறோம் என்ற போதும், வீட்டுக் கடன் சந்தையில் இன்றைய கட்டத்தில் முதலீட்டை விற்க முடிபவராக இருக்க வேண்டும் [1] அல்லது புனர் அமைப்பு சிகிச்சை மையம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து உடனே ஒப்புக் கொள்பவராக இருக்க வேண்டும். தீர யோசிப்பதன்படி, கொரொனா நுண்கிருமி சிறுவனான என் மகனுக்கு கொணரக் கூடிய ஆபத்து குறைவு என்று எனக்குத் தெரிந்த போதும், அவனை பகல் நேரப் பராமரிப்பு மையம் ஒன்றில் சேர்ப்பதற்கு நான் தயங்குகிறேன், அப்படிச் சேர்ப்பது அவனுக்கு நண்பர்களைக் கொடுக்கும் என்பது எனக்குத் தெரிந்திருக்கிறது என்றாலும் தயக்கம் இருக்கிறது. நமக்கு எது சரி என்று தெரிந்திருக்கலாம், ஆனாலும் அதை மேற்கொண்டு செய்ய நாம் போராட வேண்டி இருக்கலாம்.

நம் முடிவுகளைப் பின் தொடர்ந்து செயல்படுத்துவது என்பது ஒரு சவால். ஆனால் ஆய்ந்தறிபவர் ஒருவர், வேறொருவர் தன்னை விட மேம்பட்ட தகவலறிவு கொண்டவராக இருந்தாலோ, அல்லது மேம்பட்ட பயிற்சி உள்ளவராக இருந்தாலோ, அவரிடம் சிந்தனைக்கான சாவிகளைக் கொடுத்து விடத் தயாராக இருக்க வேண்டும், அதாவது அவர் ஆய்ந்தறிவது என்பதைத் தாண்டிய மீநிலைக்குப் போக முடிய வேண்டும்.  இதுவும் கேட்க நன்றாக இருக்கிறதென்றாலும், செயல்படுத்த மிகச் சிரமமானது. புத்திபூர்வமாக, நம் இன்றைய சிக்கலான சமூகத்திற்கு சிந்திப்பது, எதார்த்தத்தில் செயல்படுவது ஆகிய இரண்டுக்குமான உழைப்பில் தக்க வேலைப் பிரிவினை இருப்பது அவசியம் என்பது நமக்குப் புரிந்துதான் இருக்கிறது. நம் அறிதிறன் களத் திரட்டுகள் நம் அறிவுத் திறனின் நிறைகுறைகளால் மட்டும் வரம்புக்குட்படுவதில்லை, நமக்கிருக்கும் அவகாசம் மற்றும் நம் ஈடுபாடுகளாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் குர்ரியைச் சார்ந்த ஜனக் கிளர்ச்சி அரசியலாளர்களைப் போல, ஆய்ந்தறிவாளர்களும் தங்களுக்கான எதிர்மாறான போராட்டங்களை நடத்தக் கூடும், தங்கள் கருத்துகளைத் தவிர வேறு யாருடைய கருத்துகளும் ஏற்கத்தக்கனவாக இல்லை என்று மறுபடி மறுபடி காணக் கூடும். விட்டு விடுதலில், அதாவது முடிவானதைப் பின் தொடர்ந்து பார்த்து அறிதலில், நம்முடைய மொத்த ஆளுமை ஈடுபட்டு விடுகிறது. என் அப்பாவுடன் உரையாடுகையில் என்னால் ஆய்ந்தறிதலை மீறிய மீநிலைக்குப் போக முடிந்ததற்குக் காரணம், நான் அவருடைய புத்தியை மெச்சி நோக்குகிறேன் என்பது மட்டுமில்லை, அவர் நல்லவர், ஜாக்கிரதையோடு இயங்கும் மனிதர், அவர் என்னுடைய மற்றும் என் அம்மாவுடைய நன்மையையே தன் மனதில் வைத்திருக்கிறவர் என்பவை எனக்குத் தெரிந்திருந்ததும்தான். மிச்செல் மற்றும் வெப்பின் நகைச்சுவை நிகழ்ச்சியில் வரும் மந்திரியைப் போல இல்லாமல், அவர் என் பிரச்சனையைப் பற்றி ஆழமாக யோசிக்குமளவு கரிசனம் உள்ளவர் என்று நான் நம்பினேன். கரிசனம் இருப்பது மட்டும் போதுமானதில்லைதான், அது தெளிவு. ஆனால், எங்களிருவரிடையே சரியான மூலப்பொருட்கள் இருந்தன – பரஸ்பரம் நம்பகத்தன்மை, பரஸ்பரம் அக்கறை, மற்றும் சரியாக யோசிப்பதிலும், அதன் வழி நடப்பதிலும் இருவருக்கும் ஒப்புதல் இருந்தமை ஆகியன அவை.

தீர யோசிப்பதின் எதார்த்தங்கள் நமக்கு அடக்கத்தை ஊட்டுவன. விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்; எதையாவது அடைய விருப்பம் கொள்ள வேண்டும்; நாம் விரும்புவதை அடைய நமக்கு என்ன தெரியுமோ அதைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், நிஜத்தில், இந்த அணுகல் படிப்படியாக மேலெழும் சவால்களைத்தான் தொடராக நம் முன் நிறுத்துகிறது. நிஜத் தகவல்களைத் தேடுவதில், நாம் நிகழ்தகவுகளையே (கணக்கிடப்பட்ட சாத்தியப்பாடுகள்) கைக்கொள்ள வேண்டி வருகிறது. எல்லாவற்றையும் நாமே தெரிந்து கொள்ள முடியாததால், நாம் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஈடுபாடுள்ளவர்களை நம்பவேண்டி இருக்கிறது. இன்னும் நமக்கு உறுதியான முடிவு எட்டாத போதிலும், நாம் நேரத்தோடு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சில நேரம் தனியாக, ஆனால் அனேக நேரம் கூட்டாக. இதெல்லாம் நடக்க, தீர யோசித்தல் அவசியம், ஆனால் போதுமானதில்லை. நேராகச் சிந்திப்பது என்பது செய்யப்பட வேண்டிய வேலையில் ஒரு பகுதிதான்.

***

மூலம்: ஜாஷுவா ராத்மான் எழுதிய ‘திங்கிங் இட் த்ரூ’ என்ற கட்டுரை. நியூயார்க்கர் பத்திரிகையில் ஆகஸ்ட் 23, 2021 தேதியிட்ட இதழில் வெளியானது. இக்கட்டுரையின் மற்ற இரு பாகங்கள் வெளியான சொல்வனம் இதழ்கள் –

தமிழாக்கம்: மைத்ரேயன்

—————

[1] கட்டுரை வந்த சமயத்தில் வீட்டுக் கடன் விகிதங்கள் மிகத் தாழ்ந்த நிலையில் இருந்தன. ஆனால் வீட்டு விலைகள் உச்சத்தில் இருந்தன. 2008 இல் வீட்டுக் கடன் சந்தை திடீரென்று சரிந்தது, ஏராளமான பெரு நிதி நிறுவனங்கள் ஓட்டாண்டியாகின. சில பெரும் நிதியைக் குவித்தன. வீடு என்பது மத்திய நிலை மக்களுக்கு நம்பகமான முதலீடு என்று நம்பியவர்களுக்கு இந்தச் சரிவு பெரும் அதிர்ச்சியாக, நஷ்டமாக அமைந்தது. பத்தாண்டுகளுக்குப் பிறகு வீட்டுக் கடன் சந்தை மறுபடி இப்போது முன் போன்ற ஒரு கட்டத்தில் இருப்பது போலத் தெரிகிறது. அதனால் கட்டுரையாசிரியர், தீர ஆய்பவர்களாக இருப்பவர்கள், இப்போது முன்கூட்டி தம் கையில் இருக்கும் கடன்களை சந்தையில் விற்று விட்டு வெளியேறுவார்கள், சரிவை எதிர்பார்த்து அதில் தாம் நஷ்டமடையாமல் பாதுகாத்துக் கொள்வர் என்று கருதுகிறார் போலும். மேலும் தகவல்களுக்கு, https://www.millionacres.com/real-estate-investing/real-estate-stocks/shorting-housing-market-how-does-it-work/

Series Navigation<< சாரணர் மனோபாவமும் போர்வீர மனோபாவமும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.