சாவைப் படைத்த எழுத்தாளன்

[இங்கிலிஷ் மூலத்திலிருந்து தமிழாக்கம்: மைத்ரேயன்]

ஆனதெல்லாம் போதும், இதற்குமேல் நான் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை, இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டுமென்று தீர்மானித்தேன். அவருடைய நல்ல நாளிலேயே என் அப்பா இன்னதென்று சொல்லமுடியாத ஆள், ஆனால் ஒரு விதத்தில் நான் அவரைப் போலத்தான் இருந்தேனென்பது தெளிவாகத் தெரிந்தது. அவர் ஏதாவது ஒன்றைச் செய்வதாக முடிவெடுத்தாரானால், அது அவ்வளவுதானாம். அது நடந்தே தீரும், அதுவும் உடனடியாக நடந்தாக வேண்டும். இருக்கும் நிலைமை மீது எனக்கு சுத்தமாக வெறுப்பு வந்து விட்டதென்று நான் உணர்ந்த போது, எனக்குக் கடுமையான வினைச் சொற்கள் தேவைப்பட்டன – மேலும் ஒரே ஒரு நடவடிக்கையைத்தான் என்னால் யோசிக்க முடிந்தது.

என் மேலங்கியை அள்ளிக் கொண்டேன், என் துப்பாக்கி எங்கே என்று துழாவினேன், ஆனால் என்னால் அதைக் கண்டு பிடிக்க முடியவில்லை. சில நேரம் அது இங்கே காணும், சில நேரம் இராது, ஒருகால் அதை எடுத்துப் போவது அத்தனை புத்திசாலித்தனமும் இல்லை. எனக்கு ஒரு நோக்கம் இருந்தது, எளிமையானதொரு இலக்கு. எனக்கு ஆயுதம் தேவைப்படவில்லை.

குவிமையம்தான் எனக்குத் தேவை.

ஓர் எழுத்தாளனைத் தேடிப் பிடிப்பது என்பது சுலபமான வேலையாக இராது என்று எனக்குத் தெரிந்திருந்தது. அவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள், ஆனால் எந்த ஓரிடத்திலும் இருக்க மாட்டார்கள்- இறைவனின் ஒரு வர்ணனை போல இது இருக்கிறதென்று சிலருக்குத் தோன்றலாம். (அதை ’சர்வேஸ்வர வழிபாடு’ என்பார்களோ? எனக்கு நினைவில்லை. ஒருகால் எனக்கு அது தெரிந்திருக்கக் கூடாதோ என்னவோ.) நான் எப்போதுமே நியூயார்க்கில்தான் இருந்திருக்கிறேன், ஒரு சில சிறு அத்தியாயங்களில் மட்டும் அருகில் இருக்கிற வெஸ்டர்ஃபோர்ட் என்ற சிற்றூரில் இருந்திருக்கிறேன். நான் எப்படி வெஸ்டர்ஃபோர்டில் போய்ச் சேர்ந்தேன் என்பது எனக்குக் கொஞ்சமும் புரியவில்லை, ஆனால் – அத்தியாயங்கள் பிரியும்போது நான் அங்கேயும் பிறகு இங்கேயும் என்று மாற்றிப் பொருத்தப்பட்டிருந்தேன் – எனவே அந்த எண்ணம் எதற்கும் பயன்படவில்லை, உண்மையாகச் சொல்வதானால், அவர் அப்படி ஒரு இடத்தைக் கற்பனையாக உருவாக்கி இருந்தார் என்று நான் ஐயப்படுகிறேன்.

அடிப்படையில், இந்த மாநகரத்தில் அவரைத் தேடுவது எனக்கு நேர்ந்திருக்கிறது. இந்த நகரை அவருக்கு நன்றாகத் தெரியும் என்று நான் நினைத்தால், அவரை இங்கே தேடுவது மிகவும் சவாலான விஷயமாக இருந்திருக்கும் – நியூயார்க் நகர் பிரம்மாண்டமான இடம், இந்தத் தீவை மட்டுமே கணக்கிலெடுத்துக் கொண்டு, இதில் இணைந்த சிற்றூர்களில் எல்லாம் போகவில்லை என்றாலுமே இது மிக விசாலமான இடம். அவருக்கு மான்ஹாட்டன் பகுதி ஒன்றைத்தான் தெரியும் என்று சந்தேகப்பட எனக்கு காரணம் இருந்தது, ஆனால் அப்படி விவரமாக இதைப் பற்றியும் தெரிந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

பல இடங்களின் பட்டியல் ஒன்றை நான் தயாரித்தேன், எனக்கு நன்கு தெரிந்த இடங்கள் அவை, பிறகு தெருக்களில் இறங்கினேன்.

ஆறு மணி நேரத்துக்குப் பிறகு என் கால்கள் வலிக்க ஆரம்பித்தன, எனக்கு எரிச்சலுண்டாகத் தொடங்கி இருந்தது. எல்லா இடங்களிலும் நான் பார்த்து விட்டிருந்தேன். நான் எங்கெல்லாம் போயிருக்கிறதாகவோ, மற்ற பாத்திரங்களோடு நான் தோன்றியிருந்ததாகவோ, அல்லது மற்றவர்கள் வருணித்ததாக நான் கேட்டிருந்ததாகவோ எனக்கு நினைவிருந்த இடங்களிலெல்லாம் தேடி விட்டேன் – கடைசியாக க்ராண்ட் சென்ட்ரல் ஸ்டேஷனில் இருக்கும் காம்ப்பெல் அடுக்ககத்தில் வந்து சேர்ந்தேன். இந்த மதுபானக் கடை பற்றி கொஞ்சம் பேருக்குத்தான் தெரிகிறது என்பது ஓர் ஆச்சரியம். இந்த இடத்திற்கு முன்பொரு தடவை நான் வந்திருந்தேன், வேலை ஒன்று தேடுகையில் அதற்கு இங்கே ஒரு சந்திப்பு நேர்ந்தது, அந்த வேலை வாய்ப்பு தடம் புரண்டு போய் விட்டிருந்தது. அந்த சந்திப்பு சும்மா கண் துடைப்பு என்றுதான் எப்போதும் எனக்கு நினைப்பு, ஆனால் அந்த இடம் எனக்குப் பிடித்திருந்தது. இருளாக, தரையடி நிலவறை போல உணர்வைக் கொடுத்தது, வண்ணக் கண்ணாடி பொருத்திய பெரிய ஜன்னல் வழியே வடிகட்டப்பட்ட, அழுக்கான ஒளி உள்ளே விழுந்தது. முன்பு வர்ணிக்கப்பட்டிருந்தபடிதான் அந்த இடம் இருந்தது, அப்படியே என்னாலும் உணரப்பட்டது, அதனால் அந்த ஆள் இங்கே நிஜமாக இருந்திருப்பார், எங்கோ படித்ததை வைத்து எழுதவில்லை என்பது என் ஊகமாகவிருந்தது. இப்போது அவர் இங்கேயும் இல்லை.

என்னவானாலும் இருக்கட்டுமென்று, நான் ஒரு வாய் மது அருந்தினேன். சலிப்போடு ஐந்தாம் அவென்யூ வழியே நடக்க ஆரம்பித்தேன். கையில் சிகரெட் இருந்தது. நேரம் நடுப் பிற்பகல், குளிர் கூடிவர ஆரம்பித்திருந்தது. நான் செய்வது நல்ல வேலையா என்று யோசிக்க எனக்கு நிறைய நேரம் இருந்திருந்தது, (மெய்ப்பொருள் மூலாதாரம் தேடும் நோக்கில் நான் செய்வதற்கு ஏதேனும் அர்த்தமிருக்கிறதா என்றும் யோசித்தேன்), ஆனால் நான் என் அம்மாவிடம் இருந்து ஏதோ சுவீகரித்துக் கொண்டிருக்கிறேன் என்றால், (அவளுடைய பாத்திரம், என் அப்பாவுடைய பாத்திரத்தை விட, அதிகமான தகவல்களால் நிரப்பி உருவாக்கப்பட்டிருந்தது, கிராமியச் சூழலை நினைவுபடுத்தும் வர்ணனையுள்ள இரண்டு நீண்ட சம்பவங்கள், சில கடைசிக் கட்ட உச்ச நிலைக் காட்சியில் வரும் பின்னோக்கல் தொடர்கள் ஆகியவற்றில் அவள் சித்திரிக்கப்பட்டாள்.) அது இந்த முனைப்புதான், ஒரு செயல்திட்டத்தில் நான் இறங்கினால், அது எப்படியாவது பூர்த்தி செய்யப்பட்டு விடும்.

அதனால் நான் நடந்தேன், இன்னும் கொஞ்ச தூரம் நடந்தேன். குறுக்கே போய் மூன்றாம் அவென்யூவுக்குச் செல்லாமல், கிழக்கு கிராமத்துக்குள் போகாமல்- அது நல்லதுக்கோ, கெட்டதுக்கோ எதானாலும் அங்கேதான் நான் வசிக்கிறேன் – இன்னொரு வழியாகச் சென்றேன், 6ஆவது, 7ஆவது, மேலும் 8ஆவது அவென்யூக்களிடையே மாறி மாறிப் போனேன், செல்ஸீ தெரு வழியே கீழ்த் திசையில் சென்றேன், மறுபடி யூனியன் சதுக்கத்திற்கு வந்தேன். மாமிசத்தை மொத்த விலைக்கு விற்கும் (மீட் பாக்கிங்) பகுதிக்குள் சென்று, அதன் வழியேயும் நடந்து போனேன். ஆனால் கொஞ்ச நேரம்தான் அங்கே சென்றேன். ஏனெனில் எனக்கு அந்தப் பகுதி அத்தனை பரிச்சயமாக இல்லை.

எங்கேயும் அவரின் தடயமே இல்லை. நான் என்ன எதிர்பார்த்தேன், ஏதாவது ஒரு தெரு முனையில் அவரை எதிர் கொள்வேன் என்று நினைத்தேனா என்று எனக்குப் புலனாகவில்லை, ஆனால் அதெதுவும் நடக்கவில்லை.

அவருக்கே அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதோ, என்னை எப்படி அடுத்த தொடரான சம்பவங்களுக்கு இட்டுச் செல்வது என்பதோ தெரிந்திருக்கவில்லை என்று புரிந்தது.

சிறு சிறு பத்திகளாக எழுதி இருப்பதே அதைச் சுட்டியது.

அவர் தண்ணீரில், தரை எட்டாமல், மூழ்காமல் இருக்க முயன்று தத்தளித்துக் கொண்டிருந்தார்.

அது ஏதும் நடக்காத ஸ்தம்பித நிலை.

அதனால் நான் ஒரு தேர்வைச் செய்தேன்.

ஸோஹோ பகுதியின் எல்லைப்பகுதிகளில் இருந்தேன், அப்போது இன்னொரு ஸ்டார்பக்ஸ் கடையைப் பார்த்தேன். இதுவரை அந்தக் கடையின் பத்து கிளைகளுக்குள் போய் வந்திருந்தேன். அவர் எப்போது பார்த்தாலும் ஸ்டார்பக்ஸ் கடைக்குள் போய் வந்து கொண்டே இருக்கிறார். கதை நடக்கும்போதெல்லாம் – சம்பவங்களை அங்கே நடப்பதாக அமைத்து, நினைவு கூர்வதை எல்லாம் அங்கே நடத்தி, வீட்டுக்குக் கொண்டு போகும் ‘டேக் அவுட்’ உண்டிகளை யாராவது அங்கிருந்து எடுத்துப் போவதாக அமைத்து – நிஜ வாழ்க்கை போலத் தோற்றம் தர அவற்றைப் பயன்படுத்தி இருக்கிறார். ஒவ்வொரு தடவையும் அந்த இடங்கள் நன்கு வர்ணிக்கப்பட்டிருந்தன, அவர் நிஜமாகவே அங்கே போயிருக்கிற மாதிரி தெரிந்தன. நானும் அவற்றைத் தேடிப் போய்ப் பார்த்து வரும் வேலையைச் செய்திருக்கிறேன். ஆனாலும், இந்தக் கடை எனக்குப் புதியது.

அதன் உள்புறம் மூன்று தனியான அமரும் பகுதிகளைக் கொள்ளும் அளவு பெரியது, சௌகரியமாகவும், வரவேற்பதாகவும் தெரிந்தது. அவற்றில் எப்போதும் வீசும் வாசம் இங்கும் இருந்தது. இன்னொரு பங்கு எஸ்ப்ரஸ்ஸோ காஃபிக்காக, அதில் பீய்ச்சப்படும் நீராவியின் கடுமையான இருமல் சப்தம் கேட்டது. மெதுவான சத்தங்களோடு உரையாடல்கள். வெண்ணையாய் இசை ஒலி. லீதெமையும், ஃப்ரான்ட்ஸெனையுமோ அல்லது டெரிடாவையோ, பார்த்தையோ படித்துக் கொண்டிருக்கிறவர்கள்.

வினோதமாக என்ன இருந்ததென்றால், இவை எல்லாம் பழகியதாகத் தெரிந்தன.

எனக்குப் பழக்கமாகி இருக்கவில்லை, ஆனாலும்… பழகியது போலவிருந்தது. இது கொஞ்சம் விசித்திரமாக ஒலிக்கிறதென்பது எனக்குத் தெரியும். இந்த இடம் எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரிந்திருக்கவில்லை என்று எனக்குத் தெரியும், ஆனால் எனக்கு இந்த இடத்தைத் தெரிந்திருக்கக் கூடும் என்பது போல இருந்தது. இன்னொரு அமெரிகானோ காஃபியை அருந்தலாம் என்று நான் தீர்மானித்தேன், அதை வாங்க, அங்கிருந்த வரிசையில் சேர நடந்து கொண்டிருந்தேன், அப்போது அங்கே என்னை ஒரு நபர் உற்று நோக்குவதாக அறிந்தேன்.

திரும்பி அவரைப் பார்த்தேன். அவர் ஜன்னலருகே இருந்த,கை வைத்த இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்தார். இருபதுகளின் கடைசியில் இருக்கிறவர், கூர்மையான தோற்றம், நன்றாகச் செதுக்கிய முகவெட்டு. அவர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் பழக்கமுள்ளவர் என்பது போல ஏதோ சங்கேதம் அவரிடம் இருந்தது, ஆனால் அது அவரிடம் கவனிக்கத்தக்க அம்சமாக எனக்குப் படவில்லை.

நான் எப்படி உணர்கிறேனோ அதுபோல அவர் இருந்தார். களைத்துப் போனவராகத் தெரிந்தார்.

ஓரிடத்தில் சிக்கிக் கொண்டவராகத் தெரிந்தார்.

அவரை நோக்கி ஓரடி எடுத்து வைத்தேன். ‘நீங்கள் எனக்குத் தெரிந்தவரா?’

‘அதெப்படி சாத்தியம் என்று எனக்குத் தெரியவில்லை.’

‘அதான் பார்த்தேன். பின்னே என்னை ஏன் முறைச்சுப் பார்க்கிறீங்க?’

‘ஏதோ தெரிஞ்ச முகமா இருந்தது,” அவர் சொன்னார். ‘ஆனா… எனக்குத் தெரியலை.’

‘இருக்க முடியாது. நான் இதுக்கு முன்னே இங்கே வந்ததே கிடையாது.’

‘நிச்சயமா சொல்றீங்களா?’

‘ஆமாம். 42 ஆவது தெருவும், 6 ஆவது அவென்யூவும் சந்திக்கிற முனையிலே இருக்கறது, அப்புறம் 6ஆவது அவென்யூவும் 46ஆவது தெருவும் சந்திக்கிற முனையில் இருக்கறது, அப்புறம் கொலம்பஸ் சர்க்கிளுக்குக் கிட்டே ஒரு பெயர் தெரியாத தெருவுல இருக்கறது, இந்த ஸ்டார்பக்ஸ் கடையிலெல்லாம் நான் ஏதோ செய்திருக்கேன். இன்னக்கி, வெளிப் பகுதியில இருக்கற பல ஸ்டார்பக்ஸ் கடைகளிலேயும் தலையைக் காட்டினேன், இங்கே வர வழியில இருக்கிற சிலதுலயும் நொழைஞ்சேன். ஆனா இந்தக் கடைக்குள்ளே முன்னாடி வந்ததே இல்லை. எனக்கு நிச்சயமாத் தெரியும்.’

அவர் தலையை அசைத்தார், தன் நாற்காலியில் உள்ளே தள்ளி அமர்ந்தார், விட்டு விடலாம் என்பவரைப் போல இருந்தார். ‘உங்களைத் தொந்தரவு செய்ததற்கு வருந்துகிறேன்,’ என்றார்.

எனக்கு ஒரு பைத்தியக்கார எண்ணம் எழுந்தது.

‘உங்களை எழுதறவர் யார்?’

’மைக்கெல் மார்ஷல் ஸ்மித்,’ என்றார் அவர், அந்தப் பெயர் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று நிச்சயமாக இருப்பவர் போலத் தெரிந்தார்.

நான் அவரை உற்றுப் பார்த்தேன். ‘இருக்கவே முடியாது.’

‘என்னது?’ என்றார். அவர் தன் நாற்காலியின் முனைக்கு வந்து அமர்ந்தார், எச்சரிக்கையோடு இருப்பவராகத் தெரிந்தார். ‘நீங்க… நீங்களும் அவரோட ஆள்தானா?’

‘என்ன சொல்ல, ஆமாம், ஆனா இல்லை. நான் மைகெல் மார்ஷல் ஸ்மித்தோட நாவல் ஒண்ணுல இருக்கேன் – வேற பேரு, வேற வகை நாவல், ஆனா அதே ஆள்தான்.’

‘நம்பவே முடியல்லியே.’ வாயடைத்துப் போனவராக அவர் என்னைப் பார்த்தார். ‘இது ஒரு வகையிலும் சேராதது, நான் இதுக்கு முன்னாடி யாரையுமே சந்தித்ததில்லை. நான் சொல்றது வேற ஏதோ கதையிலேருந்து வர ஆட்களைப் பத்தி, இந்த இடத்திலெ இருக்கறவங்களைப் பத்தி இல்லைங்கறது தெளிவு.’

‘நான் கூடத்தான்,’ நான் சொன்னேன். ஒரு நாற்காலியை இழுத்து மேஜைக்கருகில் போட்டேன். ‘நான் இங்க உட்காரலாமா, பரவாயில்லையா?’

’தாராளமா,’ என்றார், நான் உட்கார்ந்தேன்.

நாங்கள் ஒருவரை ஒருவர் ஒரு முழு நிமிடம் பார்த்துக் கொண்டோம். அது விசித்திரமாக இருந்தது. நான் இதற்கு முன் வேறு சில பாத்திரங்களைப் பார்த்திருக்கிறேன், உண்மைதான் – ஆனால் என் கதையிலிருந்து வருகிறவர்களைத்தான் பார்த்தேன், அவர் சொல்கிற மாதிரியேதான். அவர்களுக்கென்று இடங்களிருந்தன, அவை எல்லாம் அந்த ககன வெளியின் மையத்திலிருந்த நட்சத்திரத்தைச் சுற்றி உறவுகளுக்கேற்ப அமைந்திருந்தன, அந்த நட்சத்திரம் நான் தான்.

இந்த நபர் அப்படி ஒருவர் இல்லை. அவர் முற்றிலும் வேறொருவராக இருந்தார். அவர் எதைச் சேர்ந்தவர் என்று எனக்குத் தெரியவில்லை.

‘நீங்க எப்படி இங்கே வந்தீங்க?’ கடைசியில் அவர் கேட்டார். ‘என்னன்னு சொன்னா, திடீர்னு, எப்படி. இந்த இடத்துக்கு முன்னே நீங்க வந்ததே இல்லை. ஆனா இப்ப இங்கே வந்திருக்கீங்க.’

‘சும்மா காத்திருந்து எனக்கு சலிச்சுப் போச்சு,’ நான் சொன்னேன். ‘ஈஸ்ட் வில்லேஜ்ல ஒரு மோசமான அடுக்ககத்துல இருந்து போரடிச்சுப் போச்சு. அவருக்கு அந்தப் பேட்டையைப் பத்தி ஒண்ணுமே தெரியல்லை. அஞ்சு வருசம் முன்னாடி, காலை வேளைல அரை நாள் அங்கே கழிச்சிருப்பார் போலருக்கு. அவ்வளவுதான். ரெண்டு தெருவைப் பத்திச் சொன்னதெல்லாம் நம்பும்படி இருக்கு, சில கடைகளைப் பத்தி எழுதினது சரியா இருக்கு- ஒரு சாண்ட்விச் கடை, ஒரு மதுக்கடை, நல்லவேளை அதை எழுதினார்- அதைத் தவிர பாக்கி எல்லாம் சும்மா பில்டப், சூழ்நிலை, அப்புறம் கொஞ்சம் வர்ணனை, அவ்வளவுதான்.’

’உங்களுக்கு எத்தனை நீளம் கெடச்சுது?’

‘ஒரு லட்சத்துப் பதினஞ்சாயிரம் வார்த்தைகள் இருக்கும்.’

அவர் என்னை அதிசயித்துப் பார்த்தார். ’நீங்க என்ன ஒரு நாவல்லெ இருக்கீங்களா?’

’நான் தான் முக்கியப் பாத்திரம், ஐயா!’

‘தொலைஞ்சது போங்க.’

நான் தோளைக் குலுக்கினேன். அவர் பொறாமைக்கும், வெறுப்புக்கும் இடையே ஊசலாடியபடி நாற்காலியில் பின்னே தள்ளி அமர்ந்தார். ‘ஏசுவே! அப்ப நீங்க பொறந்தாச்சுங்கறது உங்களுக்குத் தெரியல்லை. நான் ஒரு சிறுகதையிலதான் இருக்கேன், சிறுகதைங்களோட வடிவத்தோட அளவை வைச்சுப் பார்த்தாக் கூட, அது எழவெடுத்தது ரொம்பச் சின்னது. மூவாயிரம் வார்த்தைங்கதான். மொத்தக் கதையும் இந்த ஸ்டார்பக்ஸுக்குள்ளேயே நடக்கிறது. நான் அந்தக் கதவைத் தாண்டி வெளியில கூடப் போகக் கொடுத்து வைக்கல்லை. எனக்கு இந்த நகரத்தைப் பத்தியே தெரியாது. இந்த ஜன்னல் வழியா அதை நான் பார்க்கலாம், அது மட்டும்தான் எனக்குக் கிடைக்குது.’

‘நரகம்தான்,’ நான் சொன்னேன். ‘அது பெரிய சிக்கலாச்சே.’

‘சிக்கல்னுதான் சொல்லணும். நான் என்ன உடுத்திருக்கேன்னு கொஞ்சம் பாருங்க.’

அவர் ஆடைகள் சொல்லும்படி ஏதும் இல்லை என்று நான் ஏற்கனவே கவனித்திருந்தேன். ஜீன்ஸ். இன்னதென்று தெரியாத நிறத்தில் ஒரு சட்டை. காலணிகளை நான் பார்க்கக் கூட முடியவில்லை. ‘ரொம்ப மசமசன்னு இருக்கே.’

’சரியாச் சொன்னீங்க.’ என்றார். ‘எனக்கு ஒரு மேலங்கி கூடக் கிடையாது, ஏன்னாக்க நான் இங்கே இருக்கறதைத் தவிர வேறெதையும் செய்யறதே இல்லை, அதனால அவர் ஒரு மேல் ஆடையை வருணிக்கக் கூட எத்தனிக்கலை, என்னோட நாற்காலில் தொங்கறதா ஒரு மெல்லிய மேலங்கியைக் கூடத் தரல்லை, கடவுளே!’

‘அதை நாம் புரிஞ்சிக்கிட முடியும்,’ நான் சொன்னேன். ‘ஏகப்பட்ட விவரங்களைக் கொடுக்கிறதுல அவர் சிக்கிக்கிட முடியாதில்லையா, அதுவும் உங்களுக்கு இருக்கிற வார்த்தைச் சுருக்கத்தில முடியுமா. அதோட அவர் ஒரு மேலங்கியைச் சொன்னார்னு வையுங்க, மக்கள் அந்த மேலங்கி பின்னால எங்கயோ முக்கியமா இருக்கப் போறதுன்னு நினைச்சுப்பாங்க, அப்படி நடக்கல்லைன்னா எரிச்சல்படுவாங்க. ஒரு எடிட்டர் அவரை இந்தப் புள்ளியில பிடிச்சுப்பாரு, அது மேல ஒரு கோடு இழுத்து வெட்டிடுவாரு.’

’ஆமா, அப்படி இருக்கலாம். ஆனா இங்கே குளிரா இருக்கு, அதுவும் நடுராத்திரி ஆனா ரொம்பக் குளிருது.’

அதைப் பற்றி நான் யோசித்தேன், ஒரே ஒரு இடத்தில் மொத்த வாழ்க்கைக்கும் அகப்பட்டுக் கொள்வது என்பதை, காலம் முழுதும் அங்கேயே மாட்டிக் கொள்வதைப் பற்றி யோசித்தேன். அது எனக்கும் நடுக்கத்தைக் கொடுத்தது.

’நான் அந்த ஆளைக் கண்டு பிடிக்கப் போகிறேன்,’ நான் சொன்னேன். ‘எனக்குப் பல கொடுமைகள் நேர்ந்திருக்குன்னாலும், அதுவும் பின் கதையில் அதெல்லாம் இருக்குன்னாலும்- நான் உயிரோடு இருக்கேனே, அதுக்கு நன்றியோடு இருக்கேன்னு சொல்வேன் – இப்ப எனக்கு கூடுதலா, விரிவான தொடுவானங்கள் தேவைன்னு சொல்வேன்.’

‘அவரைக் கண்டு பிடிப்பதா? என்ன பாடு இது, அதை எப்படிச் செய்ய முடியும்னு நம்பறீங்க?’

நான் கை விரித்தேன். நான் இப்படிக் கை விரிப்பதை நிறையவே செய்கிறேன். ‘நகரத்தில தேடப் போறேன் – குறைஞ்சது அவருக்குத் தெரிஞ்ச பகுதிகளை எல்லாம் தேடுவேன். அதைத்தான் நான் இப்ப செஞ்சுகிட்டிருக்கேன். அப்படித்தான் உங்களைப் பார்த்தேன். இது எனக்கு முன்னெ எப்பவும் நேர்ந்ததில்லை, இப்படி நேரறது நான் எதையோ சாதிக்கிறேன்னு நினைக்க வைக்கிறது.’

’அவர் மேல இப்படி மோதிக்க என்ன வாய்ப்பு இருக்கு?’

‘ஒண்ணும் இல்லை. எனக்கும் அது தெரியும். ஆனால் உங்க கதைல தற்செயலா ஒத்தமாதிரி நிகழ்ச்சி ஏதும் இல்லையா?’

‘என்ன மாதிரி?’

‘எனக்குத் தெரியல்லை. அந்த மாதிரி சமாசாரங்கள் ஒரு வகைல வசதியானவை, கதையின் திட்டத்தை முன்னே நகர்த்த உதவும், அதிகமாக வேலை வாங்காது.’

அவர் அதைப் பற்றி யோசித்தார். ‘அப்படி ஏதுமில்லை.’

‘என் கதையில் அப்படி உண்டு. சின்ன விஷயங்கள்தான், அவர் அதை வச்சு ஒண்ணுக்கிருக்கல்லை, ஆனால்-’

‘”ஒண்ணுக்கிருக்கல்லையா”? அதுக்கென்ன அர்த்தம்?’

‘பாத்தீங்களா, இது சுவாரசியமானது. நாம இங்கே அதைப் பேசற வழக்கமில்லை இல்லியா? அது ஒரு பிரிட்டிஷ் வழக்குன்னு நான் நினைக்கிறேன். நானோ அமெரிக்கால பொறந்து இங்கே வளர்ந்தவன்னு இருக்கு, ஆனால் அப்பப்ப இப்படி ஏதாவது பொருந்தாம சொல்லிடறேன்.’

‘ஒருகால் அவர் பிரிட்டிஷ்காரரோ, ஆனால் தான் எழுதறதை இங்க நடக்கிறதா வைக்கிறார். பிரதியைச் சோதிக்கற காப்பி எடிட்டரைத்தான் இதைக் கண்டு பிடிக்காதததுக்குக் குறை சொல்லணும்.’

‘இருக்கலாம். ஆனால் நான் சொல்றது என்னன்னா, அவர் தற்செயலா நடக்கிற சம்பவங்களைப் பெரிய அளவில் நம்பி எதையும் செய்யல்லைன்னாலும் சந்தர்ப்ப வசமா நடக்கறதுங்கற வசதியைப் பயன்படுத்தித் தன் பாதையைச் சுலபமாக்கிக்கறதை அப்பப்ப செய்றவர், அந்த சந்தர்ப்ப வச சம்பவமெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே தேவைப்பட்டப்பல்லாம் நடக்கும்.’

‘ஒருவேளை ஒரு நாவல்ல இப்படிச் செய்றது தேவையாயிடுமோன்னு ஊகிக்கறேன். என் விஷயம், நிஜ வாழ்வோட கால ஓட்டத்தோட நடக்கறது, அதனாலெ அவர் அந்த மாதிரி குப்பை உத்திகளை எல்லாம் நம்பத் தேவையிருக்கல்லை.’

‘சரி. நான் இந்தக் கதையை முன்னே கொண்டு போறவன்னு இருக்கறதால, என்னுடைய விதிகள் இதுல செல்லுபடியாகும்னு நான் நம்பறேன். அதனால நான் தொடர்ந்து நடந்துகிட்டே இருந்தா, அங்கே தற்செயலை ஒத்த நிகழ்ச்சி ஒன்று நடக்கக் காத்திருக்குன்னு நான் எதிர்பார்க்கறேன். உங்களைச் சந்தித்த மாதிரி.’

அவர் இதைப் பற்றி யோசிக்கட்டும் என்று காத்திருந்தேன். அது விசித்திரமாக இருந்தது, ஆனால் கிளர்ச்சியூட்டுவதாகவும் இருந்தது, புதிதாக ஒருவரோடு பழகுவது என்பது, அதுவும் முற்றிலும் புதிய நபரோடு, அவரும் என்னுடைய கதையின் மையப் பாத்திரம் என்ற நிலைக்கு அடிபணியாதவராக இருந்ததும், விறுவிறுப்பூட்டின. கதவுகள் திறக்கலாம் என்று எனக்கு இருந்தது. அவை எங்கே கொண்டு விடும் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை, ஆனால் அவற்றை என்னால் கண்டு பிடிக்க முடியும் என்று நினைக்கத் தொடங்கி இருந்தேன். நான் அதைப் போதுமான அளவு நம்பினால் நடக்கும். ஒருகால் நான் வெஸ்டர்ஃபோர்டுக்குத் திரும்பிப் போக முடியலாம், அந்த மாநிலத்தின் பசுமையான மேற்குப் பகுதியில், மரங்களடர்ந்த ஒரு நகரில்தான் நான் சில சுருக்கமான அத்தியாயங்களில் இருந்திருக்கிறேன். நான் ஒரு புது வாழ்வைத் துவங்க முடியும், புது விஷயங்களைச் செய்ய முடியும். ஒருகால் கதையின் ஒரு சுருக்கமான பின்னோக்கு காட்டிய, ஃப்ளாரிடா மாநிலத்தில் இருந்த அந்த கடற்கரைப் பகுதியிலிருந்த நகருக்குக் கூடப் போக முடியலாம். அது பிரமாதமாக இருக்கும், ஆனால் உண்மையில் எந்த ஊருமே, இடமுமே போதுமானது. எங்காவது புதியதொரு இடம். என் சிறகுகளை நான் விரிக்கவும், வேறு விதமாக வாழவும் ஓர் இடம் கிட்டினால் போதும்.

அந்த மனிதர் முகத்தைச் சுளுக்கியபடி என்னை நோக்கினார். ‘நீங்க நல்லபடியா இருக்கீங்களா?’

‘ஏன் அப்படிக் கேட்கிறீங்க?’

‘நீங்க பேசறதை நிறுத்தினீங்க. சும்மா உக்காந்திருக்கீங்க, தீவிரமா பார்க்கிறீங்க.’

’மன்னிச்சுக்குங்க. நான் எனக்குள்ளே பேசிக்கிறது கொஞ்ச நேரம் நடந்தது. கொஞ்சம் கவித்துவத்தோட இருந்தது. அதை முடிக்க நேரம் ஆயிடுத்து.’

‘உங்களை மாதிரி தன்மையமாக் கதையை நடத்தறவங்களுக்கு இப்படி எல்லாம் நிறையக் கிட்டும்னு நான் ஊகிக்கிறேன். நான் பாருங்க, மூணாவது கையாத்தான் கதைல வரேன். படர்க்கைலதான் கதை. நான் ஏதோ வேலையைச் செய்யறவன், அதோட சரி.’

‘அப்ப நாமளும் ஏதோ செய்வோம்,’ நான் சொன்னேன். ‘இந்த சாமானியமான காஃபிக் கடையை விட்டுப் போவோம், அவரைத் தேடுவோம்.’

‘என்னால முடியாது.’

‘ஏன்?’

அவர் கொஞ்சம் அசடு வழிந்தார். ‘இந்த இடத்தை விட்டு நான் போகமுடியும்னு நினைக்கலை. அந்தக் கதவைத் தாண்டி நான் போனதேயில்லை. என் மொத்த வாழ்க்கையிலயும், இங்கேயேதான் நான் இருந்திருக்கேன். இவ்வளவுதான் எனக்குன்னு நான் நெனைக்கறேன்.’

‘நீங்க எப்பவாவது முயற்சி பண்ணியிருக்கீங்களா? அந்தக் கதவு கிட்டெ போயி, கைப்பிடியைப் பிடிச்சு இழுத்து, அப்ப என்ன ஆகிறதுன்னு பாத்திருக்கீங்களா?’

அவர் தன் பாதங்களை நோக்கிக் கொண்டிருந்தார். ‘அதாவது,… இல்லை. நான் என்ன செய்யறேனோ அதையேதான் நான் தொடர்ந்து செய்யணும், இல்லையா?’

‘அப்படி ஏதும் அவசியமில்லை,’ நான் சொன்னேன். ‘உங்களை விட அதிக காலம் அவரோட நான் கழிச்சிருக்கேன், அது நினைவு இருக்கா? நம் ஆட்கள்ல யாராவது தானா ஏதாவது எப்பவாவது செய்தா அது அவருக்கு ஒரு விதத்துல பிடிக்கிறதுன்னு நான் நினைக்கிறேன். என் புத்தகத்தில, அங்கே ஒரு சிறு பாத்திரம் இருந்தார், அவர் கடெசில செத்துப் போகிறார், ஆனா சில நேரம் அவருக்குத் தானா ஏதாவது செய்ய வாய்ப்பு கிட்டி இருந்தது, அந்த எழுத்தாளர் அப்படி நடக்கறதை எப்படியோ சுத்தி வளைச்சுத் தாண்டி, கதையை மேல கொண்டு போவார். ஒருவேளை நீங்களும் அப்படி இருக்கலாமில்லையா.’

‘எனக்குக் கடைசில செத்துப் போக வேண்டாம்.’

‘அது சரிதான், வேண்டாமே. அதுதான் நடக்கப் போறதுன்னு நான் சொல்ல வரல்லை. இப்ப… நீங்க என்னை மாதிரி இருந்தீங்கன்னா, நீங்கதான் கதையைச் சொல்றவரா இருந்தா, வாசகருங்களுக்கு நீங்க எப்படியும் உசிரோட இருப்பீங்கன்னு தெரியும் – அந்த ஆளு ஏதாவது தந்திரமா செஞ்சு வச்சு, நீங்க நம்ப முடியாத கதை சொல்லியாக கடேசில ஆகிப் போனாலொழிய. அதனால ஒரு வரையப்பட்ட பாதை, எனக்கு நிலையா இருக்கு, நான் அதை ஒட்டித்தான் போகணும், ஏன்னா கதையை நான் தான் காட்டறேன், என்னைக் கதைதான் காட்டறது, அவர் அதுல ஏதும் திரிசமன் செய்ய முடியாது. ஆனா, உங்களை மாதிரி சிறு பாத்திரங்களைப் பொறுத்து- அவமதிக்கிறேன்னு நெனைக்காதீங்க – அவர் இன்னும் கொஞ்சம் உங்களை சுதந்திரமாத் திரிய விடலாம், எங்கே போய் முடியறீங்கன்னு பார்க்கலாம்.’

’“நம்ப முடியாத கதை சொல்லியா?” அதென்ன கோரம்?’

‘அது ஒரு இலக்கியச் சொல். அது எனக்கு எப்படித் தெரியுதுன்னு எனக்குப் புரியல்லை, நானோ ஒரு பொலீஸ்காரன்,… ஆனா..’

அந்த நபர் கொஞ்சம் சங்கடப்பட்ட மாதிரி இருந்தது. ‘நீங்க ஒரு பொலீஸ்காரரா?’

‘இல்லை. முன்னாள் பொலீஸ். இப்படி ஆக்கிறதால அந்த ஆள் என்னை ஒரு முரடனாக் காட்டலாம், எனக்குக் கொஞ்சம் தனித் திறமைகளெல்லாம் உண்டு, ஆனா ஏதோ கடந்த காலத்தில தொல்லை இருந்ததுன்னு பூடகமாச் சொல்லி, அதே நேரம் இதை எழுத தகவலெல்லாம் அதிகம் குடைஞ்சு தேடவும் வேண்டாம், அதே மாதிரி பொலீஸ் நடைமுறையைப் பத்தின கதையாவும் எழுத வேண்டாம்.’

‘இது கொஞ்சம் ஆறுதலா இருக்கு. என்னோட பாத்திரம் ஒண்ணும் நல்ல ஆளு இல்லைன்னு நான் நெனைக்கறேன். முழுக்கவும் ஏதோ குற்ற உணர்வு மூட்டமாக் கவிஞ்சு இருக்கு, ஆனா அது எதனாலெங்கறது புரியற மாதிரி இல்லை.’

‘அதெல்லாம் பிரச்சனையே இல்லை. என்னால முடியும்னாக் கூட, நான் உங்களைக் கைது செய்யப் போறதில்லை. வாங்க, நாம் போகலாம்.’

நான் எழுந்து நின்றேன், அவரும் கூட வருவதற்காகக் காத்து நின்றேன்.

‘என்னால வர முடியும்னு தோணலைப்பா!’ அவர் சன்னமாகச் சொன்னார், சிறுமையைத் தரித்தவராகத் தெரிந்தார். ‘அந்த ஜன்னல் வழியே நான் பார்த்தால், எனக்குத் தெரியறதெல்லாம் இரண்டு பரிமாணத்தில்தான் இருக்கிறது.’

நாங்கள் திரும்பி, இருவருமாக அங்கே பார்த்தோம். வெளியே ஒளி மங்கிக் கொண்டிருந்தது. ‘அது கூட அத்தனை கிடையாது,’ என்றார் அவர். ‘எனக்கு ரெண்டே வாக்கியங்கள் தான் கிடைக்கிறது. “வெளியே குளிராக, சாம்பல் நிறமாக, தட்டையாகத் தெரிந்தது.” அடுத்து, “சில இலைகள் ஆடி அசைந்து அந்த மரத்திலிருந்து மெதுவாகக் கீழே அந்த நடைபாதை மீது விழுந்தன, அவை பழுப்பாகவும், தங்க நிறமாகவும், செத்துப் போனதாகவும் இருந்தன.” அவ்வளவுதான்.’

‘பாருங்க,’ நான் சுட்டினேன். இரண்டு இலைகள் அவர் சொன்னதையே செய்து கொண்டிருந்தன, வெளியே குளிராகத்தான் தெரிந்தது, ஒளியும் சாம்பல் நிறத்தில் தட்டையாகவே இருந்தது.

‘ஒவ்வொரு நாளும் இப்படி,’ அவர் சொன்னார். ‘ஒவ்வொரு நாளும் இதையேதான் அதுங்க செய்யறது.’

‘அதனாலெ வெளியில என்ன நடக்கிறதோ, அது ஓரளவாவது, உங்களோட கட்டுப்பாட்டுல இருக்கிற இடம். நீங்க நினைச்சா –’

அவர் தலையசைத்து மறுத்தார். ‘என்னால செய்ய முடியாது. மன்னியுங்க.’

அவருக்காக நான் வருத்தப்பட்டேன், நான் எத்தனை அதிர்ஷ்டசாலி என்று உணர்ந்தேன். ‘நான் திரும்பி வருவேன்,’ என்றேன். ‘நான் தேடிக்கிட்டேதான் இருக்கணும், ஆனால் திரும்பி வருவேன்.’

‘நிஜமாகவா?’

‘நிச்சயமா. நீங்க எங்கே இருக்கப் போறீங்கன்னு எனக்குத் தெரிஞ்சுடுத்து இல்லையா? நீங்க இப்ப இந்தப் புதுக் கதையிலயும் இருக்கீங்க. அது ஏதோ கொஞ்சமாவது புதுசு. நீங்க இப்ப வேற பாதைல போறீங்க. மறுபடி வந்து இருக்கீங்களே.’

‘ஆமாம், அது இருக்கு. ஆனாக்க நான் இன்னும் ஒரே இடத்துலதான் சிக்கிக் கிட்டிருக்கேன்.’

‘நான் நாளைக்கு மறுபடி வர்றேன்.’

‘ஓகே,’ என்று சற்று கூச்சத்தோடு சொன்னார். ‘அது… அது ரொம்ப நல்லா இருக்கும்.’

நாங்கள் கை குலுக்கினோம். ‘என் பேரு ஜான்.’

‘ஓ,’ என்றார். ‘என் பேரும் அதேதான்.’

நான் சிரித்தேன். ‘நாம் ரெண்டு பேரும் ஒரே பக்கத்தில் வந்திருக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன். போனாப் போகட்டும். நாம சமாளிச்சுடலாம். அந்த ஆளை நான் கண்டு பிடிக்கப் போறேன், பிடிச்சப்புறம், நாம பேசலாம்.’

‘அதிர்ஷ்டமடிக்கட்டும் உங்களுக்கு,’ அவர் சிரித்தார்.

நான் பொறாமைப் பட்டேன். எனக்கு அது அனுமதிக்கப்பட்டதே இல்லை. நான் எதையாவது சொல்லணும், அல்லது செய்யணும். எப்போதாவது ஒரு சமயம், உரக்கக் கூவக் கூடச் செய்யலாம். ஆனால் நான் ’சிரித்து’ எதையும் செய்ய முடியாது. நாவல்களைத் திருத்தறது சிறுகதைகளைத் திருத்தறதை விடக் கடுமையாக இருக்கும் போல. பிரசுர நிறுவனத்துக்கு ஒரு நடை, தேர்வு இருக்கும்போல. ஆனா… நானும் இப்ப ஒரு சிறுகதையிலதான் இருக்கேன், இல்லையா?

‘நன்றி,’ நான் சிரித்தேன், என் மேலங்கியைக் கழற்றினேன். ‘இந்தாங்க.’

‘உங்களுக்கு வேண்டாமா இது?’

‘எனக்கு ஒரு அடுக்ககம் இருக்கு. அதுல துணி அலமாரிங்க உண்டு. நான் அதுங்களுக்குள்ளே தேடிப் பார்த்ததே இல்லை, ஆனால் அங்கே ஏதாவது இருக்கணும். குளிர் ரொம்ப மோசமா இருந்தா, நான் ஒரு ஸ்வெட்டரையாவது இல்லே இன்னொரு சட்டையையாவது போட்டுப்பேன்.’

‘நன்றிப்பா.’

நான் கதவருகே சென்ற போது, அவர் எனக்கு நல்லதிர்ஷ்டம் வாய்க்கட்டும் என்று மறுபடி ஒருதரம் வாழ்த்துவதைக் கேட்டேன்.

திரும்பி நோக்கி, கண்ணைச் சிமிட்டினேன். ‘நன்றி. நம்பிக்கையோட இருங்க, நண்பரே.’

ஆனால், வெளியே தெருவோர நடைபாதையில் காலெடுத்து வைத்தபோது, எல்லாம் மாறி விட்டது. அப்போதே எனக்குத் தெரிந்து விட்டது, ஏதோ முடிவெடுக்கப்பட்டு விட்டதென்று. இது முன்னேயும் எனக்கு நேர்ந்திருந்தது. ஒரு அத்தியாயம் பூராவும் இலக்கில்லாமல் திரிந்திருப்பேன், நிறைய யோசனைகளெல்லாம் செய்வேன், ஆனால் அதிகம் எதுவும் செய்திருக்க மாட்டேன், அப்போது திடீரென்று ஒரு வெற்று வரி இடைவெளியாக விழும், அடுத்த நிகழ்ச்சி வந்து விடும்.

தெருவின் மறுபக்கம் ஒரு நபரை நான் கவனித்தேன். அவர் குறிப்பேதும் இல்லாமல், ஒரு சிகரெட்டைப் புகைத்தபடி, சும்மா திரிந்து கொண்டிருந்தார். நான் அப்போது வெளியே வந்த ஸ்டார்பக்ஸ் கடையை, அவர் தெருவுக்கு எதிரே நோக்கிக் கவனித்தார். தான் இன்னொரு காஃபியை ஏற்க முடியுமா என்று அவர் யோசிப்பதை நான் பார்க்க முடிந்தது. அங்கு அப்படி ஏதும் போக்குவரத்து இல்லை, ஆனால் இருந்த கொஞ்சமும் வேகமாகப் போனதால், அவர் தெரு முக்கிற்குப் போய் அங்கேதான் தெருவைக் குறுக்கே கடக்க முடியும் என்றிருந்தது. அது ஒன்றே அப்படி நடப்பது அவசியமில்லை என்று முடிவெடுக்க அவருக்குப் போதுமானதாக இருந்தது.

நான் அந்த மனிதரை முன்னால் ஒருபோதும் பார்த்திருக்கவில்லை, ஆனால் அவர் யார் என்று எனக்குத் தெரிந்திருந்தது. அவரைக் கண்டு பிடிப்பேன் என்று எனக்கு முன்பே தெரிந்திருந்தது.

அழுத்தமாக இருக்கட்டும் என்று, நான் அதையே மறுபடி யோசித்தேன்.

எனக்குத் தெரிந்திருந்தது.

அவர் ஓரளவு என்னைப் போலவே இருந்தார், கொஞ்சம் நான் அந்த ஸ்டார்பக்ஸின் உள்புறம் விட்டு விட்டு வந்தேனே, இன்னொரு ஜான், அவரைப் போலவும் இருந்தார். கொஞ்சம் இன்னமுமே குள்ளம், வயதும் கூடுதல், நெற்றிப் பொட்டுகளில் முடி நரைத்திருந்தது. மொத்தமாகப் பார்த்தால் அத்தனை கவனிக்கும்படியானவராகத் தெரியவில்லை. களைத்துப் போனவராகவும் இருந்தார். ஜெட்-லாக் வந்திருக்கும், என்று நான் ஊகித்தேன். தன் பிரசுரகரைப் பார்க்க லண்டனில் இருந்து வந்திருக்க வேண்டும், நகரில் தான் இருக்கும் முதல் நாளில் தெருக்களில் சுற்றி ஏதோ எழுதத் தேவையான ஆராய்ச்சியைச் செய்கிறவராக இருக்கலாம். மணிக்கணக்காகப் படிப்பது, அல்லது இண்டர்நெட்டில் தேடுவது மற்றும் கூகிள் தெருக் காட்சியில் தேடுவது போன்ற வழிகள் அவருக்கு ஒத்து வராதவை என்பது எனக்குத் தெரியும். அவர் தானே நடை பழகி ஆய்வு செய்பவர், நகரத்தினூடே நடந்து போய் மைல்களைத் தாண்டி அதை அறிவதை வேண்டுபவர்.

சட்டென்று எனக்குப் புரிந்தது, இது என்னவாகலாம் என்பது.

அந்த எழுத்தாளர் தன் விடுதியின் அறையில் ஒடுங்கி இருப்பதை விட, இந்தத் தெருக்களை மறுபடி நினைவூட்டிக் கொள்வதை, அந்த ஒரு காரணத்துக்காகவே செய்கிறவராக இருக்கலாம், அதைத்தான் அவர் எப்போதுமே செய்திருக்கிறார். அல்லது இது அவரது இன்னொரு சிறுகதையில் பின்புலமாக ஆவதில் முடியலாம்.

ஆனால்.. இது இன்னொரு தொடர் நாவல் எழுதப்படுவதில் சென்று முடியலாம். என் புத்தகத்தின் தொடர்ச்சியாக.

குறைந்தது, அவர் அதை எழுதுவதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கலாம். பொதுவாக அவர் அப்படிச் செய்ததில்லை. வழக்கமாக ஒவ்வொரு நாவலுக்கும் புது பாத்திரங்களை உருவாக்குவார், அதனால்தான் நாங்கள் குறுகிப் போன, வார்க்கப்பட்ட உலகுகளுக்குள் சிக்கிக் கொண்டு, எதிர்காலமில்லாமல் போனோம் போலிருக்கிறது. ஒருகால் வாசகர்கள் ஒவ்வொரு புத்தகத்திலும் ஒரு உலகத்தை மறுபடி மறுபடி துவக்கத்திலிருந்து வாசிக்க விரும்பமாட்டார்கள், மாறாக பழகிய வசதியான இருக்கையில் அமர்வதைப் போல், ஏற்கனவே அறிமுகமான பாத்திரங்களின் உலகுக்குள் நுழைந்து புதுப்புது சம்பவங்களைப் படிப்பதையே விரும்புகிறார்கள் என்பதை ஒருவாறாக அறிந்து கொண்டாரோ?

அதைப் பற்றி மேலும் நான் யோசிக்க யோசிக்க, அப்படி நேர்ந்திருப்பது சாத்தியம் என்று எனக்குத் தோன்றியது. என் கதையில் திருப்தி தரும் வகையில் தீர்வு காணப்படாத பல கூறுகள் இருப்பதாக நான் எப்போதுமே நினைத்து வந்திருக்கிறேன். நான் சிறிது எச்சரிக்கையோடு உற்சாகமான மனநிலையிலேயே நிறுத்தப்பட்டிருந்தேன், ஆனால் என் கதையில் மேலும் சொல்வதற்கு நிறைய இருந்தது.

ஒருகால் அதை அவர் செய்யப் போகிறார் போல இருந்தது.

ஒருகால் இன்னும் சேர்ப்பதற்கு ஏதோ இருக்கலாம்.

நான் புன்னகைப்பதாக உணர்ந்தேன். இதற்கிடையில் அந்த எழுத்தாளர் அப்படியே நின்று விட்டிருந்தார், தெருவின் மேலும் கீழும் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கண்கள் இதையும் அதையும் கவனிப்பதை- கடை முகப்புகள், தீ விபத்தின் போது தப்பிக்க கட்டடங்களில் இருந்த மாற்றுப் பாதைகள், வழிப்போக்கர்கள்- நேரடியாக உற்று நோக்காமல் எல்லாவற்றையும் உள்ளிழுத்துக் கொள்வதை, அவருடைய புத்தியில் பிற்பாடு பயன்படுத்திக் கொள்வதற்காக தகவல்கள், விவரங்களைச் சேமிக்கும் இடத்திற்கு அவற்றை அனுப்புவதைச் செய்கிறார் என்பதைப் பார்த்தேன்.

நான் திரும்பிக் கொண்டேன், என் முகத்தை அவர் பார்ப்பதை நான் விரும்பவில்லை. என் அடுக்ககத்தை விட்டு வெளியேறியபோது, அவரை இப்படிச் சந்திப்பதைத்தான் நான் விரும்பியிருந்தேன். இப்போது அதில் எனக்கு விருப்பமில்லை. அவரைத் தடம் புரள வைக்க நான் விரும்பவில்லை. அவர் தலைக்குள் என்ன ஓடிக் கொண்டிருந்ததோ அது தன் போக்கில் ஓடி முடிக்கட்டும் என்று நினைத்தேன், ஒருகால் நான் நினைப்பது சரியாக இருக்கலாம் என்பது என் எதிர்பார்ப்பு.

என் பின்னால் ஒரு சப்தம் கேட்டது.

நான் திரும்பிப் பார்த்தால் அங்கே அந்த ஸ்டார்பக்ஸ் ஆள், அந்த இன்னொரு ஜான். அவர் அந்தக் காஃபிக் கடையின் நுழைவாசலில் நின்றிருந்தார், அவர் எழுப்பிய ஒலி நம்ப முடியாததைப் பார்த்த போது எழும்பும் ஒலி.

அவர் அதைச் செய்து விட்டார், அந்தக் கதவைத் திறக்க அவர் முயன்று, அதைத் திறந்தும் விட்டார்.

அவர் தெருவின் நடைபாதையில் ஜாக்கிரதையாக காலடி எடுத்து வைத்தார். ‘கொலைதான், ஜான்,’ என்றார் என்னைப் பார்த்து. ‘பாருங்க!’

‘என்ன ஆளு, செய்திட்டீங்களே!’

நான் உணர்ந்த குதூகலத்தில் ஒரு பகுதி அவருக்காக, ஆனால் முக்கியமாக எனக்காகத்தான். கடைசியாக அவர் வெளியே வந்தது என்னால்தான். நான் அவரைச் சந்தித்தேன், பல விஷயங்களை மாற்றி விட்டேன். இத்தனை சாத்தியம் என்றால், மற்றதெல்லாத்தையும் கூட மாற்ற முடிய வேண்டும். ஒருகால் நான் தன்னிச்சையாக இயங்கக் கூடியவன் என்பதை, அதனால் மேலும் வளர இடம் கொடுக்கலாம் என்பதை அந்த எழுத்தாளர் உணர்ந்ததால் இன்னொரு தொடர் நாவலை எழுத முன்வந்திருக்கிறார் போலிருக்கிறது.

ஒருகால் நான் ஒரு தொடராக ஆவேன் போல.

இன்னொரு ஜான் சுற்றிமுற்றி ஏதோ ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். நடைபாதையில் சில எட்டுகள் எடுத்து வைத்தார். அவர் திரும்பி, பின்னே மறுபுறத்தை நோக்கினார். மரத்திலிருந்து இன்னொரு ஜோடி இலைகள் அசைந்தாடி மெல்லக் கீழே இறங்கி விழுந்தன, பழுப்பாகவும், தங்கமாகவும் இருந்தன.

அவர் கை நீட்டி, ஒன்றைப் பிடித்தார், அதைத் தன் கைகளில் கசக்கினார். ‘நான் செஞ்சுட்டேன்,’ அவர் கத்தினார். ‘நான் அதைச் செஞ்சேன்!’

‘அப்படிப் போடுங்க, பிரமாதம்,’ நான் சொன்னேன்.

வெற்றியுணர்வோடு தன் கைகளை உயர்த்தி ஆட்டினார், இன்னும் கத்திக் கொண்டிருந்தார், இப்போது அவர் நிறைய சப்தமிட்டார். அவர் போட்ட சத்தம் தெருவைத் தாண்டி மறுபக்கம் கேட்டது என்பது தெளிவு….

… ஏனெனில் அந்த சமயம், எழுத்தாளர் மேலே நோக்கினார்.

அவர் ஜானைப் பார்த்தார், அது தெளிவு. ஜான் தான் எல்லா சத்தத்தையும் எழுப்பிக் கொண்டிருந்தார், தன் கையில் கசக்கப்பட்ட இலையை ஆட்டியபடி நடைபாதையில் நடனமாடினார்.

எழுத்தாளர் முகத்தைச் சுருக்கினார், வாயை நோக்கிச் சென்ற சிகரெட் பாதி வழியில் நின்றது, ஜானைப் பற்றிய எதுவோ அப்போது அவருக்கு உறைத்தது என்பது போலிருந்தது, ஆனால் அது என்ன என்பது அவருக்கு இன்னும் புரியவில்லை போல. அந்த நபரை எங்காவது பயன்படுத்தலாமா என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கலாம், தான் ஏற்கனவே பயன்படுத்தியதை இன்னும் அவர் உணரவில்லை போல.

அப்போது அவர் பார்வை ஜானைத் தாண்டிச் சறுக்கி ஓடி, என் மீது விழுந்தது. அவர் அப்படியே உறைந்தார்.

நான் யாராக இருந்தேன் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது.

அவருக்கு அது தெரிவது நடக்க வேண்டிய ஒன்று, என்று நான் ஊகித்தேன். அவரை நான் உடனே புரிந்து கொண்டிருந்தேனே, ஒவ்வொரு நாளும், அவர் வேலை செய்த ஒவ்வொரு மணி நேரமும் அவருடைய தலைக்குள் நான் இருந்தபடி, அவர் ஒரு வருடத்தைக் கழித்திருந்தார். ஒருவேளை, சில கணங்கள் முன்பு, அவர் ஏற்கனவே என்னைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாரோ, நான் அப்படி நடக்கலாம் என்று வேண்டுகிற மாதிரி, பாத்திரங்களின் பட்டியலில் பின்னால் ஒதுக்கப்பட்டிருந்த என்னை உருவி எடுத்து, இன்னொரு முறை ஒளியில் நிறுத்த எண்ணிக் கொண்டிருந்தாரோ.

அவர் என்னை உற்று நோக்கிய வண்ணம் இருந்தார். கண்களைக் கொட்டினார்.

‘ஐயா,’ நான் கூப்பிட்டேன். ‘நீங்கதான் மைக்கெல், சரிதானே?’

அவர் தெருவில் பின்புறம் போக ஆரம்பித்தார்.

நான் குழப்பமடைந்தேன் – நான் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை – ஆனால் நான் புரிந்து கொண்டேன். அவர் அச்சமடைந்திருந்தார். எல்லாம் எப்படி வேலை செய்கின்றன என்பது அவருக்குத் தெரியும் என்று நான் நினைத்திருந்தேன், ஆனால் அப்படி இல்லை போல. இந்த ஆட்கள் தோன்றத் தோன்ற சொற்களை வரிசையாக எழுதி விடுகிறார்கள், கெடுவைப் பிடிக்க விரைகிறார்கள், அந்தச் சொற்கள் அவர்களுடைய தலைகளுக்குள்ளிருந்து பீறிட்டு ஓடியோ, அல்லது விட்டு விட்டு அவ்வப்போது விரைந்தோ வருவன, அவை உயிர் பெற்று எழுந்து விடுகின்றன என்பதை அறிந்திருக்கவில்லை போலிருக்கிறது.

அவர் தான் தன் புத்தியை இழப்பதாக உணர்ந்தார் போலிருந்தது.

‘ஒண்ணுமில்லை, சரியாத்தான் இருக்கு,’ நான் சொன்னேன், தெருவில் என் பக்கம் விரைந்து போய், அவரை அடைய முயன்றேன். அங்கே நிறைய ஜனங்கள் இருந்தார்கள், அதனால் தெருவின் குறுக்கே திடீரென்று ஓடிக் கடந்தேன்.

‘நீ போயிடு,’ பல்லைக் கடித்தபடி அவர் சொன்னார், பின்புறமாகச் சென்றபடி இருந்தார். அவர் கண்கள் அகன்று விரிந்திருந்தன. ‘போயிடு.’

‘ஒண்ணும் ஆகிடலை, எல்லாம் சரியா இருக்கு,’ அவரைச் சாந்தப்படுத்துவதற்காகச் சொன்னேன். ‘உங்க கிட்டே எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. இப்ப ஏதுமில்லை…. நீங்க இங்கே ஏன் வந்தீங்கன்னு எனக்குத் தெரியும்னு நினைக்கிறேன். அது ரொம்ப ஜோர். உண்மையாவே பிரமாதம். உங்களைப் பதட்டப்படுத்த நான் விரும்பலை. உங்க கிட்டே ‘ஹலோ’ சொல்லத்தான் விரும்பினேன், தெரியறதா, உங்களுக்கு நல்லது நடக்கணும்னுதான் நான் விரும்பறேன்.’

‘நீ நிஜமில்லை,’ அவர் சீறினார், பின்னால் பதுங்கிப் போனபடி இருந்தார்- ஆனால் தான் ஒரு குறுக்குச் சாலைக்கருகில் இருப்பதை உணர்ந்தார், அதனால் நின்றார். ‘நான் ரொம்பக் களைச்சிருக்கேன், அவ்வளவுதான்.’

“முழு உண்மை,’ நான் சொன்னேன். ‘அவ்ளோதான். நான் பார்க்கறதுக்குக் கொஞ்சம் நீங்க எழுதின ஒரு பாத்திரத்தைப் போல இருக்கேன். இங்கே பாருங்க, நாம ரெண்டு பேரும் நம்ம வழியைப் பார்த்துப் பிரிஞ்சு போகப் போறோம். அப்படித்தான் அதெல்லாம் இருக்கணும். ஆனால் நாம ஒரு தரம் கை குலுக்கி விடலாம், சரியா? ஒண்ணும் மனசுல வச்சுக்காதீங்க. எனக்கு நீங்க எழுதறதெல்லாம் ரொம்பப் பிடிக்குங்கறது தெளிவாத் தெரியறது, இல்லையா?’

நான் என் வலது கையை உயர்த்தினேன். அவர் கண்கள் இன்னும் கூட விரிந்து கொண்டன.

என் கை குளிர்ந்து கனமாகத் தோன்றுவதாக உணர்ந்தேன், அதைப் பூராவும் பார்த்த போது, உண்மையில், நான் அடுக்ககத்தை விட்டுக் கிளம்பும்போது என் கைத் துப்பாக்கியைக் கண்டு பிடித்திருந்தேன் என்பது நினைவுக்கு வந்தது. ஓ, அவர் கடைசியில் என்னை இப்படி நம்ப லாயக்கில்லாத கதை சொல்லிப் பாத்திரம் என்று ஆக்குவதை முயலப்போகிறார் போல என்று தோன்றியது. நான் ஆபத்தானவன் இல்லை என்று நிரூபிக்க, அதைத் தூர எறிந்து விட முயன்றேன், ஆனால் அது என் கையை விட்டுப் போக மறுத்தது.

‘மைக்கெல்,’ நான் அழைத்தேன், அவரைச் சமாதானப்படுத்த முயன்றேன். ‘எதுவும் மோசமில்லெ. உங்களுக்கு என்னைத் தெரியும் – நான் ஒரு கொலைகாரனில்லை. அடிப்படைலெ நான் நல்ல மனுசன். எனக்குக் கெடுதல் செய்யப்பட்டிருக்கு, ஆனா நான் கெடுதல் செய்ததில்லை, உங்களோட எல்லா கதாநாயகர்களும் அப்படித்தானே. இந்தத் துப்பாக்கியை லட்சியம் செய்யாதீங்க, சரியா?’

ஆனால் அவர் பின்னால் போக முயன்றபடி இருந்தார், தான் எங்கே நிற்கிறோம் என்பதை மறக்குமளவு அவருக்கு அச்சம் வந்திருந்தது, அவர் சாலையில் இறங்கி விட்டிருந்தார், தன் சமநிலையை இழந்து தடுமாறினார், அப்போது ஒரு டாக்ஸி தெருமுனையில் திரும்பி வந்தது, அவர் மீது நேராக இடித்துத் தள்ளி விட்டது.

ஸோஹோவில் இருக்கிற ஸ்டார்பக்ஸுக்கு நான் மறுபடி போகவில்லை. நான் போவேன் என்று சொல்லி இருந்தேன், போகத்தான் போகிறேன், ஆனால் இன்னும் போகவில்லை. ஜானிடம் என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. என்ன நடந்தது என்று எப்படி விளக்குவது என்று எனக்குத் தெரியவில்லை. தெருவில் கிடந்த எழுத்தாளரின் தலையிலிருந்து ரத்தம் எப்படி ஓடியது என்பதையோ, எல்லா ரத்தமும் ஓடி வெளியே போனதையோ, அல்லது அவருடைய கண்கள் தெளிவாக இருந்த நிலையிலிருந்து கண்ணாடி போல பளபளத்து, பனி மூடியது போல ஆனதையோ வருணிக்க எனக்கு விருப்பமில்லை. அந்த சம்பவத்தைப் படைத்தவன் நான் தான் என்று ஒத்துக் கொள்ள எனக்கு இயலவில்லை.

அந்த எழுத்தாளரின் கதைத் தொகுப்பு ஒன்றைத் தேடிப் பிடித்த பின் இன்னொரு ஜானைப் பார்க்க எனக்கு விருப்பம் இல்லாமல் போயிற்று. அதை பார்டர்ஸ் புத்தகக் கடை ஒன்றில் தள்ளுபடி விலைப் பகுதியில் கண்டு எடுத்தேன். பார்டர்ஸ் புத்தகக் கடை நிஜ வாழ்வில் மூடப்பட்டிருக்கலாம் – அது வருந்தத் தக்கதுதான் – ஆனால் என் நாவல் 2006 இல் நடப்பதாக எழுதப்பட்டது, அதனால் எனக்கு அந்தக் கடை இன்னமும் இருக்கிறது. ஜான் இருந்த அந்தக் கதையை நான் பார்த்தேன், அதைப் படித்தேன். அது நன்றாக இருந்தது, ஆனால் ஒரளவு பீதியைத் தந்தது, இருண்ட முடிவுக்குப் போகிறது, மோசமான முடிவு. அதை ஜானுக்கு விளக்க எனக்கு மனமில்லை, கடைசியில் அவர் இறக்கிறார் என்பதையோ, அல்லது அப்படி இறப்பது என்னைப் போல இருப்பதை விட மேல் என்பதையோ விளக்க எனக்கு விருப்பமில்லை.

ஏனெனில்… நான் இறப்பதில்லை.

நான் இறப்பதேயில்லை. இந்தப் பக்கங்களிலும், தெருக்களிலும் என்றென்றும் நான் நடந்து கொண்டிருக்கிறேன். இனிமேல் ஒரு தொடர்ச்சிப் புத்தகமும் வரப் போவதில்லை.

என் பாதை எங்கே போக இருந்ததோ அதோடே நான் போயிருக்க வேண்டும், என் கதையைத் தொடர்ந்திருக்க வேண்டும், எனக்கு என்ன கிட்டியதோ அதோடு திருப்தி அடைந்திருக்க வேண்டும். இப்போது இந்தப் பாழில் சிக்கிக் கொண்டேன்.

இந்தத் தடித்த அடைசலான வார்த்தைகளில் சிக்கியிருக்கிறேன்.

இது ஒழுங்கான ஒரு முடிவுக்குக் கூட வருவதில்லை.

வெறுமனே முடிகிறது.

***

மூலக் கதையாசிரியர் மைக்கெல் மார்ஷல் ஸ்மித் 1990 இல் தன் முதல் சிறுகதையைப் பிரசுரம் செய்தார். இவர் ஒரு பிரிட்டிஷ் எழுத்தாளர். 30 ஆண்டுகளில் நூறு சிறுகதைகள் போல எழுதி இருக்கிறார். பத்திற்கு மேற்பட்ட நாவல்களையும் பிரசுரித்திருக்கிறார். அவற்றில் பல ஏராளமான பிரதிகள் விற்றவை. பல திரைப்படங்கள், தொலைகாட்சித் தொடர்கள் ஆகியவற்றிற்கும் கதை-வசனம் எழுதியுள்ளார்.

இந்தக் கதை அவருடைய சிறந்த கதைகளின் தொகுப்பான ‘த பெஸ்ட் ஆஃப் மைக்கெல் மார்ஷல் ஸ்மித்’ என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. சப்டெர்ரேனியன் பிரஸ் என்ற பிரசுர நிறுவனத்தார் இதை 2020 இல் பிரசுரித்தார்கள்.  முதலில் இந்தக் கதை ‘எவெரிதிங் யூ நீட்’ என்ற புத்தகத்தில், 2013 ஆம் வருடம் பிரசுரமானது.

தமிழாக்கம்: மைத்ரேயன்/ ஜனவரி 2022

One Reply to “சாவைப் படைத்த எழுத்தாளன்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.