- மிளகு
- மிளகு – அத்தியாயம் இரண்டு (1596)
- மிளகு – மிர்ஜான் கோட்டை
- மிளகு -அத்தியாயம் நான்கு
- மிளகு: அத்தியாயம் ஐந்து
- மிளகு – அத்தியாயம் 6
- மிளகு
- மிளகு: அத்தியாயம் எட்டு – 1999: லண்டன்
- மிளகு – அத்தியாயம் ஒன்பது – 1999 லண்டன்
- மிளகு – அத்தியாயம் பத்து – 1596 மிர்ஜான் கோட்டை
- மிளகு – அத்தியாயம் பதினொன்று
- மிளகு – அத்தியாயம் பனிரெண்டு
- மிளகு அத்தியாயம் பதின்மூன்று
- மிளகு அத்தியாயம் பதினான்கு
- மிளகு: அத்தியாயம் பதினைந்து
- மிளகு -அத்தியாயம் பதினாறு
- மிளகு – அத்தியாயம் பதினேழு
- மிளகு அத்தியாயம் பதினெட்டு
- மிளகு அத்தியாயம் பத்தொன்பது
- மிளகு – அத்தியாயம் இருபது
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்று
- மிளகு அத்தியாயம் இருபத்திரண்டு
- மிளகு அத்தியாயம் இருபத்திமூன்று
- மிளகு – அத்தியாயம் இருபத்துநான்கு
- மிளகு அத்தியாயம் இருபத்தைந்து
- மிளகு அத்தியாயம் இருபத்தாறு
- மிளகு – அத்தியாயம் இருபத்தேழு
- மிளகு – அத்தியாயம் இருபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் முப்பது
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்தி நான்கு
- மிளகு அத்தியாயம் முப்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் முப்பத்தாறு
- மிளகு அத்தியாயம் முப்பத்தேழு
- மிளகு அத்தியாயம் முப்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் நாற்பது
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்று
- மிளகு-அத்தியாயம் நாற்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் நாற்பத்திநான்கு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் நாற்பத்தாறு
- மிளகு – அத்தியாயம் நாற்பத்தேழு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தொன்று
- மிளகு – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு
- மிளகு-அத்தியாயம் ஐம்பத்திமூன்று
- மிளகு -அத்தியாயம் ஐம்பத்திநான்கு
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தாறு
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தேழு
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தெட்டு
கந்தஹார் -1999
சங்கரன் உள்ளாடைக்குள் மூத்திரம் போய் விட்டார். இந்த அறுபத்தைந்து வயசில் அவருக்கு இது நேர்ந்திருக்க வேண்டாம்.
ஐந்து வயதில் பள்ளிக்கூடத்தில் முதல் நாளன்று பகவதி பாட்டி கொண்டு போய் விட்டுவிட்டு வாசலுக்குப் போக, அவளை தீனமான குரலில் அழைத்துக் கொண்டிருந்தபோது, ’அவள் இனி திரும்ப வரவே மாட்டாள், சங்கரனை வீட்டுக்குக் கூட்டிப்போக யாரும் வரப்போவதில்லை. இந்த மர பெஞ்சில் தான் இனி எப்போதும் உட்கார்ந்தும் தூங்கியும் இருக்க வேண்டும்’ என்று பயம் எழ, அவர் தன்னை அறியாமல் டிராயரை நனைத்து வெளியே சொட்டச் சொட்ட மூத்திரம் பெய்தது அப்போதுதான்.
”பகவதி மாமி, பகவதி மாமி”.
சங்கரனைப் பார்த்து விட்டு ஆமினா டீச்சர் பாட்டியை அவசரமாகக் கூப்பிட அவள் என்னமோ ஏதோ என்று அடித்துப் பிடித்துக்கொண்டு திரும்பி ”டீச்சரம்மா என்ன?” என்று ஆரம்பிப்பதற்குள் பேரனின் இருப்பு கண்டு தலையில் அடித்துக் கொண்டு, ”எனக்குன்னு வாய்ச்சிருக்கே” என்று ஆமினாவிடம் புகார் சொல்ல டீச்சரம்மா சிரித்துவிட்டுச் சொன்னது –
“அதை ஏன் கேக்கறேள் பகவதி மாமி. ஒவ்வொரு வருஷம் விஜயதசமி நேரத்திலேயும் பசங்களை அரிஸ்ரீ எழுதி ஒண்ணாங்கிளாஸ்லே போடறச்சே குறைஞ்சது பத்து குட்டிகளாவது டிராயரை நனைச்சுக்கும், கேட்டேளா. இன்னிக்கு உங்க பேரன் ஆரம்பிச்சு வச்சுட்டான் மாமி”.
சகஜமான பிராமணக் கொச்சை ஆமினா டீச்சருக்கு எப்படி சாத்தியமானது என்று நினைப்பு எங்கேயோ போக, பிடித்து இழுத்து நேரே பார்க்க, உயர்ந்து மெலிந்த முகமூடிக்காரன் துப்பாக்கியை அவரை நோக்கி நீட்டினான்.
பயத்தில் உறைந்தார் ஓய்வு பெற்ற இந்திய அரசாங்க மூத்த காரியதிரிசி அரசூர் சாமிநாதன் சங்கரன்.
மன்னிப்பு கேட்டு அவசரமாகப் பார்வையால் இரைஞ்சினார் அவனை. இனிமேல் பகவதி பாட்டி பற்றியும் ஆமினா டீச்சர் பற்றியும் சத்தியமாக நினைக்க மாட்டார் சங்கரன்.
அரையில் மூத்திரம் நனைந்து அசௌகரியமாக இருக்கிறது. விமான நடைப்பாதைக்கு ஒட்டிய ஆசனத்தில் இருப்பதால் நொடிக்கொரு தடவை யாராவது ஒரு முகமூடிக்காரன் துப்பாக்கியைப் பிடித்துக்கொண்டு நடைபோட்டு வர, அவனுடைய மிலிட்டரி உடுப்பு சங்கரன் மேல் உராய்கிறது. அவன் சங்கரன் பேண்டை நனைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து முகம் சுளிப்பான். முகம் சுளித்தபடி துப்பாக்கியை நெற்றிப் பொட்டில் வைத்துச் சுட்டு விடுவான்.
முகமூடி அணிந்த ஐந்து பேர். அவர்களுக்குள் அரபியில் பேசியபடி விமானத்தைக் கடத்திக்கொண்டு போகிறார்கள். சங்கரன் அடங்கலாக நூற்று எழுபது பிரயாணிகள் அடுத்த நிமிஷம் உயிருக்கு உத்திரவாதம் இல்லாமல் பறந்து கொண்டிருக்கிறார்கள். நேபாளத்தில் காட்மாண்டு நகரில் தொடங்கிய பயணம். டில்லிக்குப் போகிற விமானம். இப்போது எங்கே போகிறதோ தெரியாது.

”மணி என்ன”?
எதோடும் சம்பந்தம் இல்லாததுபோல், சங்கரனுக்கு அடுத்த இருக்கையில் உட்கார்ந்து இருமலோடு துளசி மணி உருட்டி ஜபித்துக் கொண்டிருந்த முதியவர், சங்கரனைக் கேட்டார். பக்கத்து இருக்கைகளில் இருந்தவர்கள் சங்கரனையும் அவரையும் பார்த்துவிட்டு உயிர்ப் பயம் மேலெழ நேரே பார்த்தபடி திரும்ப வெறிக்க ஆரம்பித்தார்கள்,
சங்கரன் கடியாரத்தில் தன்னிச்சையாக நேரம் பார்த்தார். சாயந்திரம் ஏழு மணிக்கு பத்து நிமிடம் பாக்கி இருக்கிறது. விமானம் சாயந்திரம் ஐந்தரைக்கு காட்மாண்டுவில் புறப்பட்டது. ராத்திரி எட்டுக்கு தில்லியில் இறங்க வேண்டியது. அதை ஒவ்வொரு தடவை நினைக்கும்போதும் பகீர் என்று அடி வயிற்றில் ஒரு பயம் ஊடூறி உடம்பை நடுங்க வைக்கிறது.
”டைம் என்னன்னு கேட்டேன்”.
பக்கத்து சீட்காரர் அவருடைய கடியாரமில்லாத உலகத்தில் இருந்து பொறுமை இழந்து கேட்கும்போது ஒரு பயங்கரவாதி சங்கரனைப் பார்த்து சத்தம் போட்டான் –
“கேட்டா சொல்லேன். இந்தி தெரியாதா உனக்கு?”
சங்கரன் பரிதாபமாகப் பார்த்தபடி சொல்றேன் சார் என்றார்.
“எட்டு மணி ராத்திரி”.
வயசானவர் யாருக்கோ சங்கரன் தகவல் சொல்வதைக் காதில் போட்டுக்கொள்கிறது போல் போகுது போ என்று கையை ஆட்டிப் புறக்கணித்தார்.
“சாப்பாடு எப்போ வரும்?”
அடுத்த கேள்வி. சங்கரன் எல்லாக் கேள்விகளுக்கும் விடை உருவாக்கிய கடவுளைப் பார்ப்பது போல் துப்பாக்கி பிடித்த பயங்கரவாதியைப் பார்த்தார். பதிலே தேவையில்லாமல் உணவுப் பாக்கெட்கள் வைத்த சிறு வண்டிகளைத் தள்ளிக்கொண்டு இறுகிய முகங்களும், நடுங்கும் கைகளுமான விமான உபசரிணி பெண்கள் விமான நடைபாதையில் நடக்க ஆரம்பித்தார்கள்.
மூத்திர ஈரத்தை உறிஞ்ச முன் இருக்கைக்குப் பின் செருகி வைத்திருந்த, காலையில் வந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா தினசரியின் இணைப்பை இடுப்புக்குக் கீழே இறக்கி உள்ளாடையின் ஈரத்தை உறிஞ்சும்படி வைத்துக் கொண்டார். நல்ல வேளை. அந்த தீவிரவாதிகள் யாரும் பார்க்கவில்லை.
”எனக்கு வெங்காயம் இல்லாத மசாலாவும் சப்பாத்தியும் ராத்திரி சாப்பாடாக வேண்டும் என்று கோலாலம்பூரில் இருந்து வரும்போதே பதிந்து கொடுத்திருந்தேன். வைத்திருக்கிறார்களா கேள்”.
அறிவு கெட்ட கிழவா, அவனவன் உசிரு போகப் போகுதுன்னு பயந்து போய் இருக்கோம். நீ வெங்காயம் இல்லாம மசாலா கேட்கறே. நாசமாப் போறவனே
முன் வரிசையில் மூன்று புதுமணத் தம்பதிகள் தேன்நிலவு நேப்பாளத்தில் முடித்து தில்லிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள். அதில் ஒரு பையன் எழுந்து நின்று ஹலோ என்று கூப்பிட சங்கரன் பீதியோடு அவனைப் பார்த்தார்.
“லேடீஸ் வாண்ட் பாத்ரூம் யூஸ்”.
அரைகுறை இங்கிலீஷில் அவன் சொல்ல, ”நாங்க சொன்னதுக்கு அப்புறம் போனா போதும்” என்று எரிந்து விழுந்தான் ஐந்து முரடர்களில் ஒருத்தன், நல்ல உச்சரிப்பு இங்க்லீஷில்.
’யாருக்கும் சாப்பாடு பரிமாறக் கூடாது”. இன்னொருவன் சத்தம் போட்டான்.
கடைசி வரிசை இருக்கைகளுக்கு முன்னால் அதற்கு முந்திய இருக்கைகளின் பின் இருந்த பலகைகளை நீட்டி பூரியும், பிரியாணியும் நிறைந்த பாக்கெட்களை வைத்துக் கொண்டிருந்த ஏர் ஹோஸ்டஸ்கள் பயந்து போய் அப்படியே நின்றார்கள்.
ஒரு பயங்கவாதி முன்னால் வந்து உணவு எடுத்து வரும் சிறு வண்டியைக் காலால் உதைத்தான். சாப்பிட ஆரம்பித்தவர்கள் முன்னால் இருந்து சாப்பாட்டைப் பறித்து கடைக்கோடிப் பகுதியை நோக்கி வீசினானன் அவன்.
சிறு குழந்தை ஒன்று ஃபீடிங் பாட்டில் வைத்துப் பால் கொடுத்தபடி இருக்க பாட்டிலைப் பறித்தான். குழந்தையின் அம்மா இருகை கூப்பி குரல் நடுங்க ’எஜமான், பசிக்குது குழந்தைக்கு. கொஞ்சம் அது மட்டுமாவது பால் குடிக்க விடுங்க நீங்க நல்ல இருப்பீங்க’ என்று பிச்சைக்காரியாகக் கெஞ்சினாள். நிறைய நகை அணிந்து உயர்தரப் பட்டாடை தரித்திருந்தாள் அந்தப் பெண்.
ஒழிந்து போ என்கிற மாதிரி அவளை நோக்கி பாட்டிலை விட்டெறிய அது தரையில் விழுந்து ஆசனங்களுக்கு அடியில் உருண்டது. அந்தப்பெண் வேகமாகக் கீழே குழந்தையோடு சரிந்து கை துழாவி அதை எடுத்தாள். மேலே ஒட்டிய தூசியை முந்தானையில் துடைத்து சுத்தப்படுத்தத் தன் வாயிலிட்டு சுவைத்து குழந்தைக்கு நீட்டினாள். அழுகை நிறுத்திய குழந்தை குடிக்க ஆரம்பித்தது.
சங்கரனுக்கு நிமிடத்துக்கு நிமிடம் உயிர்ப் பயம் அதிகரித்துக் கொண்டே போனது. பசியாக இருந்தது. ஆனைப் பசி. அவருக்குக் காலம் முடியப் போகிறது. அதனால் தான் யமப் பசியாக இப்போது வாட்டுகிறது.
வீட்டில் வசந்தி என்ன செய்து கொண்டிருப்பாள்? ராத்திரி எட்டு மணிக்கு யாராவது சொல்லி தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி அறிக்கை பார்த்துப் பதறிக் கொண்டிருப்பாள். அல்லது மூர்ச்சித்துத் தரையில் விழுந்திருப்பாள். மகள் பகவதி நெருங்கிய நண்பர்கள் யாருக்காவது தொலைபேசி உதவிக்கு அழைத்திருப்பாள். வசந்தியையும் பகவதியையும் இனி பார்க்க முடியாது போய்விடுமோ.
நினைக்கையில் சங்கரனுக்கு அழுகை வெடித்துக் கொண்டு வந்தது. துப்பாக்கிகளுக்குப் பயந்து அடக்கிக் கொண்டான். இங்கிலாந்தில் இருக்கும் மகன் மருதுவுக்கும், அங்கே தற்போது அம்பலப்புழையில் இருந்து போயிருக்கும் சங்கரனின் இன்னொரு பெண்டாட்டி சாரதா தெரிசாவுக்கும், சங்கரன் துப்பாக்கிகளால் சுட்டுத் துளைக்கப்பட்டு ஒரு விமானத்துக்குள் இறந்து போவது தெரிந்திருக்குமா?
அல்லது இந்த பயங்கரவாதிகள் பயமுறுத்தும்படி குண்டு வெடித்து விமானம் முழுவதையும் நாசமாக்கும்போது சங்கரனும் சில்லுச் சில்லாகச் சிதறிப் போயிருப்பானா? அரசூருக்கு இந்தச் செய்தி போயிருக்குமா? டெலிவிஷன் இந்தியில் சொல்லும் செய்திகள் ஆருயிர் நண்பர் தியாகராஜ சாஸ்திரிகளுக்குப் புரியுமோ? புரிந்து யாரிடம் சொல்ல?
முன்வரிசைப் பையன் திரும்பத் தீவிரவாதிகளைப் பார்த்து ஹலோ என்றான். அவன் பக்கம் வந்த ஒரு தீவிரவாதி பையிலிருந்து இமைக்கும் நேரத்தில் ஒரு சுருள் கத்தியை எடுத்து அந்தப் பையனின் புஜத்தில் ஆழப் பாய்ச்சினான். அவனுடைய புது மனைவி வீறிட்டு அழ, தரையில் ரத்தம் கசிந்து போனது.
”சொல்லச் சொல்ல கேட்காம திமிர் பிடிச்சு நடக்கற எல்லா காஃபிர்களுக்கும் இதான் நடக்கும். இதைவிட அதிகமும் நடக்கும். ஹோஷியார்”.
ஜாக்கிரதைப் படுத்தியபடி சுருள் கத்தியை அந்தப் பையனின் சட்டையில் துடைத்து தன் பாக்கெட்டில் திரும்ப வைத்தபோது சங்கரனுக்கு அருகில் குமட்டும் ரத்த வாடை அடிக்க ஆரம்பித்திருந்தது. ஃபீடிங் பாட்டில் குழந்தையும் தாயும் ஒரே நேரத்தில் அழ ஆரம்பித்திருந்தார்கள்.
காது கேட்கும் கருவியை மாட்டிக் கொண்டு “சாப்பாடு எடுத்து வந்தாங்களே ஏன் எனக்கு வர்ல்லே? வெங்காயம் இல்லாம மசாலா வேணும்னு கே.எல்லே டிக்கெட் போடும்போதே எழுதிக் கொடுத்திருக்கு” என்று சங்கரனின் தோளில் தட்டிச் சொன்னார் அடுத்த இருக்கை முதியவர்.
அரே சுப் என்று நாலு வரிசை இருக்கைகளுக்கு அருகே நடைபாதையில் நின்ற பயங்கரவாதி இரைந்தான்.
”பெரியவருக்குக் காது கேட்காது. மனநிலையும் சரி இல்லை” என்று அருகில் வந்த அவனிடம் தட்டுத் தடுமாறிச் சொன்னார் சங்கரன்.
”விட்டுத் தொலை” என்றபடி தீவிரவாதி நடந்தான். உயிர் இப்போதைக்குப் போகாது என்று ஏனோ அசட்டு நம்பிக்கை வந்தது சங்கரனுக்கு.
வசந்திக்கு தான் செய்தது துரோகமில்லையா? தெரசாவோடு உறவு வைத்துக் கொண்டு பிள்ளையும் பெற அவனுக்கு எப்படி மனது வந்தது? இன்று வரை தான் சொல்லாததால் வசந்திக்கு அது தெரியாது என்றே சங்கரன் நினைத்துக் கொண்டிருக்கிறார். அது வசதியான நெருப்புக்கோழி நினைப்பு.
அறுபத்தைந்து வயதில் காமம் ஒடுங்கிப் போனாலும், சாரதா தெரிசா அவரை இன்னும் காது குறுகுறுக்கக் காதல் வசமாக்குகிறாள். சாரதா தன் மகன் மருதுவுக்கு சங்கரன் தான் அப்பா என்று சொல்லிக் கொடுத்திருப்பதை அவன் ஒரு மரியாதை கருதி, அப்படியா என்று கேட்டுக் கொண்டிருக்கிறான்.
தந்தை மகன் உறவு இல்லாவிட்டாலும் வசந்திக்குப் பிறந்த மகள் பகவதி எப்படி மருதுவோடு அன்பும் பாசமும் இழையும் சகோதர உறவு கொண்டாடுகிறாள்!
இதையெல்லாம் இனிப் பார்த்து மனதுக்குள் பரவசப்பட முடியாது. வசந்தியிடம் தான் செய்த மாபெரும் குற்றத்தைச் சொல்ல இனிக் காலம் கடந்து போய் விட்டது. அடுத்து என்ன? இறக்கை முளைத்துப் பறக்கும் இந்தப் பெரிய அலுமினிய டப்பாவுக்குள் உயிர் போகும் என்று தெரிந்திருந்தால் சங்கரன் வசந்தியிடம் தான் தெரிசாவை கௌரவமான வைப்பாட்டியாக தன் வாழ்க்கைப் பயணத்தில் சேர்த்துக் கொண்டதைச் சொல்லியிருப்பார்.
எல்லாரும் எல்லாமும் இருந்தும் அநாதையாக இந்த விமானத்தில் எந்த நிமிடமும் சங்கரனின் உயிர் போக இருக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் சாவை எதிர்நோக்கி அவருடைய கடைசி நிமிடம், மணி, நாள் கடந்து போகும்.
அம்பலப்புழைக்குப் போக வேண்டும் என்றாள் வசந்தி. சங்கரன் போன பிறகு ஒரு வருடம் கோவில் எதுவும் போகமுடியாது அவளுக்கு. அப்புறம் பகவதி அழைத்துப் போகட்டும். தெரிசாவும் திலீப்பும் கவனித்துக் கொள்வார்கள்.
பகவதிக்கு எப்படி கல்யாணம் நடக்கும்? ஏற்கனவே முப்பது வயசாகி விட்டதே. ‘என் வாழ்க்கை. என் கல்யாணம். Leave me alone.’ என்று சீறுகிறாள்.
பணம் இருந்தால் போதுமா? மாப்பிள்ளை தேடி அவளே கல்யாணம் பண்ணிக் கொள்வாளா? சம்பிரதாயப்படி பிள்ளை பார்க்க உடனே வசந்தி நடவடிக்கை எடுப்பாளா? கல்யாணத்துக்கு தியாகராஜ சாஸ்திரிகளைக் கூப்பிடுவார்களா? விருந்துக்கு என்ன போடுவார்கள்? பசிக்கிறது சங்கரனுக்கு. தாகம் எடுக்கிறது. வியர்த்துக் கொட்டுகிறது.
விமானம் தரை இறங்கிக் கொண்டிருந்தது. மாலை 6:44 என்றது சங்கரன் கடியாரம்.
அமிர்தசரஸ் ஏர்போர்ட் என்று முன்வரிசையில் யாரோ ஜன்னல் வழியாகப் பார்த்து முணுமுணுத்தார்கள்.
“எல்லா ஜன்னல்களும் அடைச்சிருக்கணும்னு சொன்னதை கேட்கலேன்னா வருத்தப்பட வேண்டி வரும். சாவு நிச்சயம். இங்கே ஏவியேஷன் ஃப்யூயெல் நிரம்பியதும் நாம் போக வேண்டிய இடத்துக்குப் போவோம். புரியுதா?”
ஜன்னலை அவசரமாக அடைத்து இருக்கையில் இருந்தவரைப் பார்த்துச் சொன்னான் முகமூடித் தீவிரவாதி.
விமானத்தில் வெளிச்சம் கம்மியாகிக் கொண்டிருந்தது. மின்சாரம் குறைந்து வருவதன் அறிகுறியாக இருக்கும் என சங்கரன் யோசித்தார். இருட்டில் சுட்டுக் கொல்லப் பிரயத்தனப்பட வேண்டும்.
சங்கரன் தப்பி ஓட முயற்சி செய்ய மாட்டார். சாவதற்காக நேர்ந்து விட்ட ஆடுபோல் திருதிருவென்று விழித்துக்கொண்டு உள்ளாடையில் மூத்திரம் போய், காயக் காத்திருப்பது தவிர வேறெதுவும் செய்ய மாட்டார்.
மூத்த அரசாங்க அதிகாரியாக தில்லியில் வலம்வந்து ஓய்வு பெற்ற பின்னர் பாட்டு, பேச்சு, இலக்கியம், சினிமா என்று அததுக்கென்று உருவான ஏகப்பட்ட சங்கங்களில் சங்கரன் கௌரவ நிர்வாகிப் பதவி பெற்று விருந்தாடச் செல்லும் நாட்கள் முடிவுக்கு வந்து விட்டன.
ஏற்றுமதி இறக்குமதி, எஃகு உற்பத்தி, சிறு பாசன ஆலோசகர், தொழில் முனைவோருக்கும் பெரிய கம்பெனிகளுக்கும் மூத்த வழிகாட்டி என்ற கௌரவங்களோடு சங்கரன் இனி சுவாசித்திருக்கப் போவதில்லை.
இதோ இந்த அமிர்தசரஸ் விமான நிலையத்தில் எத்தனை தடவை அரசாங்கக் காரியதரிசியாக வந்திறங்கி, மாநில அதிகாரிகள் காத்திருந்து கூட்டிப் போனார்கள். அது நடக்காது இனி.
இந்த ஏர்போட்டுக்குள் இறங்கி நடக்கவே தீவிரவாதிகள் தடை சொல்லியிருக்கிறார்கள். டாய்லெட் போகத் தடை விதித்து பயணிகள் எல்லோரும் வயிறு வீர்த்துப் போய் அந்த அடிப்படை காரியத்துக்கு அனுமதி கோரிக் கெஞ்சும் பார்வையால் விண்ணப்பித்துக் காத்திருக்கிறார்கள்.
இடுப்பு நனைந்தாலும் அடுத்தபடி சிறுநீர் வரத் தயாராக இருக்கிறது சங்கரனுக்கு. சுத்தமில்லாமல் இடுப்பு நிறைய சிறுநீர் கசிந்து சொட்டச் சொட்ட சங்கரன் நடக்கும்போது போ நாயே என்று அவரைச் சுட்டுக்கொல்ல ஐந்து துப்பாக்கிகள் சேர்ந்து உயரும். எங்கே முதல் குண்டு படும்? காலுக்கு இடையே தான் இருக்கும்.
விமானம் தரை இறங்கி விட்டிருந்தது. சில ஜன்னல்களை மட்டும் திறக்க தீவிரவாதிகள் அனுமதி கொடுத்திருந்தார்கள். கழிவறை போய் விரசாக வரவும் அனுமதி கொடுக்கப் பட்டிருந்தது. அங்கே பீங்கான் கழிவுப் பாத்திரத்தில் டாய்லெட் காகிதம் அடைத்து நிரம்பி வழிவதாக பக்கத்தில் யாரோ கிசுகிசுத்தார்கள். தீவிரவாதிகள் விமானத்துக்கு வெளியிலும் விமானி இருக்குமிடத்திலும் நின்று வாக்கிடாக்கியில் பேச ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். பஞ்சாப் மாநில அமைச்சர் ஒருவரும் போலீஸ் உயர் உத்தியோகஸ்தரும் பேச வந்தபோது சர்வதேச அளவில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நேரத்தில் ஒரு மாநில அரசாங்கத்தின் பிரதிநிதிகளோடு பேசி நேரத்தை வீணாக்கத் தாங்கள் விரும்பவில்லை என்றார்கள் தீவிரவாதிகள்.
ஏவியேஷன் ஃப்யூயல் என்று எழுதிய மாபெரும் ட்ரக் ஒன்று வேகமாக வந்து விமானத்தை மறிக்கிறது போல் நின்றது. அதிலிருந்து வெளிப்பட்டவர்கள் மெதுவாக அசைந்து இறங்கி வந்தது, அவர்கள் வேண்டுமென்றே நிதானத்தோடு செயல்படுவதாகக் காட்டியது.
ஐந்து வாக்கிடாக்கிகள் அணைக்கப்பட்டன. ஐந்து துப்பாக்கிகள் உயர்ந்து வானம் பார்த்து விமான நிலையப் பாதி இருட்டில் முழங்கின. ஐந்து குரல்கள் பொறுமை இழந்து உச்சத்தில் ஒலித்தன.
”முதல் ஐந்து ஹோஸ்டேஜ்களை இப்போது கொல்லப் போகிறோம். நீங்கள் வேண்டுமென்றே எரிபொருள் தரத் தாமதப் படுத்துகிறீர்கள். இன்னும் பத்து நிமிடத்தில் விமானத்தில் எரிபொருள் நிறைக்காவிட்டால் இந்த முதல் ஐந்து பிணைக்கைதிகளும் உடனடியாகச் சுட்டுத் தள்ளப்படுவார்கள்”.
விமானத்துக்கு உள்ளேயும் கேட்கும் அறிவிப்பு.
”பெண்களும் குழந்தைகளும் எழுந்திருங்கள்”. கண்டிப்பான அறிவிப்பு.
”எழுந்து வலது பக்க இருக்கைகளில் வரிசையாக உட்காருங்கள். இரண்டு நிமிடம் தான் நேரம்”.
குழந்தைகளைத் தூக்கிச் சுமந்தபடி அந்தப்பெண்கள் உயிருக்குப் பயந்து ஓடினார்கள். எல்லோருக்கும் ஆளுக்கொரு துணி கண்ணை மறைத்துக் கட்டப்பட்டது.
ஆண்கள் வலது புற இருக்கைகளில் உட்காரச்சொல்லிப் பிடித்துத் தள்ளப்பட்டார்கள். வரிசையாக உட்காரும்படி அவர்கள் வேகப்படுத்தப்பட்டார்கள். கண்களில் கருப்புத் துணிக்கட்டு ஏறியது.
தீவிரவாதிகளில் இருவர் விமானத்தின் உள்ளே வந்து வரிசையாக நான்கு பயணிகளை, எல்லோரும் ஆண்கள், பிடித்து கைகளைக் கட்டி, வாய் மூடித் துணி அடைத்து இழுத்துப் போய் முதல் வரிசையில் உட்கார வைத்தார்கள்.
ஐந்தாவதாக தரையில் விழுந்து வணங்கியபடி, பூட்ஸ் கால்களால் உதை வாங்கியபடி சங்கரன் முன்வரிசை இருக்கைகளுக்கு எத்தி விடப்பட்டு உட்கார வைக்கப் பட்டார். அவர் உடுப்பில் இன்னொரு தடவை சிறுநீர் கழித்தார். பின் மயக்கத்தில் ஆழ்ந்து விட்டார்.