குல தெய்வம்

இந்த ஊருக்கும் அதன் மனிதர்களுக்கும் அவன் செய்வதற்கென்று ஒன்றுமில்லை. ஆனால் நேற்றிரவு கால்களிலிருந்து எடுத்துவிட்ட நெளியும் அட்டைகளை கைகளில் ஏந்தி தூர எறிந்து பின் காத்திருந்து பஸ்ஸில் ஏறியது அதற்கான காரணம் ஒன்று இருந்ததினால் மட்டுமே. அவனுடைய பூர்வீக வீட்டின் இடிந்து போன திண்ணையும் மங்களாவையும் கடந்து இறுதியாக இருந்த வென்னிப்பிறையில் கைகால் இழுத்து மரக்கட்டை போல செத்துக்கிடக்கும் அம்மாவை எரித்துவிட்டு அமைதியாக மீண்டும் அட்டைகளுடன் குடும்பம் நடத்த தொடங்க வேண்டும். எஸ்டேட் மேனேஜர் இரவு அவனறைக்கு வந்து கதவைத்தட்டும் போது அவன் தூங்கியிருக்கவில்லை. அடுத்த வீட்டின் ஒலிபுகும் சுவரின் வழி மனிதர்கள் புணரும் ஒலியடங்கி அதன் முடிவில் அவர்கள் அடுத்த நாள் சமையலைப்பற்றி விவாதித்து கொஞ்சும் போது கதவைத்தட்டும் சத்தம் கேட்டது. பொழிந்துகொண்டிருந்த மழையில் ஊறிய பழைய துணிப்பொதியைப்போல மேனேஜர் அந்த விசயத்தை ஒருவித வலிந்து திணிக்கப்பட்ட பதற்றத்துடன் கூறினான்.

“சுந்தரம் , ஊருல உங்க அம்மா தவறிட்டாங்கப்போல. வருத்தந்தான். கெளம்பிரீங்களா ? வண்டியொண்ணும் இருக்காது. மொத வண்டி காலைல கெளம்பிருங்க. லீவொண்ணும் யோசிக்காண்டாம்” எனும் போது சுழன்றடித்த காற்று மழையின் பிசுறுகளை வீட்டினுள் வாரியிறைத்தது.

“செரிங்க சார். உள்ள வாரீங்களா ? டீ போட்டுத்தாரேன்” என்ற சுந்தரத்தின் நிதானம் மேனேஜரை பதற்றப்படுத்தியது. எதும் பேசாமல் வருத்தமான முகத்தைக்காட்டி விதியின் மீது பழி போடுவதைப்போல ஒரு சிறு புன்னகையை விட்டபடி மழையின் மறைப்பில் நனைந்து கண்காணாமல் போயிருந்தான்

விடியும் முன் ஊரின் பஸ் ஸ்டாண்டில் இறங்கி நடக்கும் போது வேற்று கிரகமொன்றின் வாசலில் அடியெடுத்துவைப்பதை போல் உணர்ந்தவன் அங்கு வந்திருக்கவே கூடாதெனெ முடிவெடுத்தவனாய் வந்த வண்டியிலேயே மீண்டும் எஸ்டெட்டுக்கு கிளம்ப முயன்றான். ஆனால் இருளில் அலைந்த ஒரு உருவம் அவனை நோக்கி வந்து கைகளைப்பிடித்து குலுங்கி அழ ஆரம்பித்தது. அந்த உருவம் அவன் முன்பு பார்த்ததை விட வயதாகி மெலிந்த்து குறுகி சட்டையில்லாமல் தலையில் உறுமால் கட்டி அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்தது. சுந்தரம் முனங்கும் குரலில் “மாமா , எப்போ வந்தீங்க” என புன்னகைத்தான். மாமா அழுகையை நிப்பாட்டிவிட்டு அவனை துளாவிப்பார்த்தார். அந்த மாமா சுந்தரம் பிறப்பதற்கும் முன்பே அம்மாவை அடித்து விரட்டி தேவிடியாள் என முத்திரை குத்தி பேச்சை அப்போதே விட்டிருந்தார். அம்மாவும் அப்பாவும் சேர்ந்து கல்யாணமென்று ஒன்றும் நடக்காமல் ஊரின் ஓரமாய் வாழ ஆரம்பித்து ஒரு வருடத்திற்கு முன்பே அவன் பிறந்திருந்தான்.

இருவரும் நடந்தே வீட்டிற்கு செல்லும் வழியெல்லாம் இருளில் மாமா இடைக்கிடை விசும்பி அழ முயன்றதை சுந்தரம் கவனித்தபடி நடந்தான். அம்மாவின் முகம் சுத்தமாக ஞாபகமில்லை , அதனை மாமாவின் முகத்திலிருந்து உருவாக்க முயன்றான்.

மாமா “உனக்க அம்மைய எல்லாரும் கைவிட்டுட்டோம். நானும். அப்பொவே சமாதனமா போயிருந்தா இந்த கொழப்பமெல்லாம் உண்டா. எனக்கு முடியலையே. உனக்க அப்பன் எந்த சாதியா இருந்தா எங்களுக்கென்ன. எங்க புத்தியச் சொல்லணும்” என பெண்களைப் போல புலம்ப ஆரம்பித்தபோது நாங்கள் புதர் மண்டிய எங்கள் பூர்வீக வீட்டின் முன் வாசலில் வந்து நின்றோம். அம்மாவின் சொந்தக்காரர்கள் அந்த வீட்டின் நீள அகலங்களை கண்களால் அளந்து சைகையால் அருகிலிருக்கும் இன்னொருவருக்குச் சொல்லிக்கொண்டிருந்தனர்.

விடிய ஆரம்பித்ததும் தெருவின் கடைசியாயிருந்த மாடன் கோவில் வாசலில் கட்டியிருந்த குழாய் ஒலிபெருக்கியிலிருந்து வந்த வில்லுப்பாட்டு சுந்தரத்தை நிலையிழக்கச் செய்தது. வென்னிப்பிறையில் அம்மாவின் கால்மாட்டில் இடுக்காஞ்சட்டியில் எழுந்து ஒளிகொடுத்த சுடரை ஒருகணம் பார்த்துவிட்டு வில்லுப்பாட்டு வந்த திசைநோக்கி ஓடினான்.

மூட்டத்தை பிரித்துவிட்டான்…..ஆமா

முண்டன் அந்த மாயாண்டி…

மூட்டத்தை பிரித்துவிட்டான்…..முண்டன் அந்த மாயாண்டி…

கால்மாடு வேகுமுன்னே….தலைமாட்டை பிடித்திழுத்தான் , ஆமா

தலைமாடு வேகுமுன்னே….கால்மாட்டை பிடித்திழுத்தான் , சபாஷ்

கையதிலே சிலது பிணம் , வாயதிலே சிலது பிணம்

பேய்களுக்கு விருந்தளித்தான்….ஆமா

பேயாண்டி சுடலையீசன்….

வாய்களெல்லாம் ஊன் வடிய , ஆமா

வாய்களெல்லாம் ஊன் வடிய…..பிணத்..தை வாரி வாரி திங்கலுற்றா…ன்

***

சுந்தரம் கண்களை இறுக்க மூடியபடி வெளியில் கேட்கும் சத்தங்களுக்கு உருகொடுத்து காட்சியை தனக்குள் விரித்தபடி நடுவீட்டில் பாய்விரித்து அம்மையை இறுக அணைத்தபடி படுத்திருந்தான்.

ஒரு கையில் சலங்கை கட்டிய காவல் கம்பை மேலும் கீழும் ஆட்டி , நிலத்தில் மோதி. மறுகையில் எழுந்தெரியும் தனித்து ஆடும் தீப்பந்ததை உயர்த்திப்பிடித்தபடி குதித்து , எழுந்து , முன்னும் பின்னும் ஓடி , கோவிலின் பீடத்திலிருந்து எழுந்த சாமியாடி சுடுகாடு நோக்கி கடிவாளமற்ற காட்டு குதிரையென மயான கொள்ளை சடங்கிற்கு இருளில் பறந்தோடும் மின்மினியென ஓட ஆரம்பித்தான். அடக்குவார் யாருமில்லாத அவனை பின் தொடர்ந்து ஓடிய கூட்டத்தில் தானில்லை என்பது சோகமான மனநிலையை சுந்தரத்திற்கு கொடுத்தது. அம்மையின் காதுகளில் மெல்ல பூச்சையைப்போல நக்கி “அம்மா , நானும் போறம்மா , பயக்க எல்லாவனும் என்ன பயந்தோணி பக்கடா பண்ணிப்பீய நக்குடான்னு சொல்லுவானுங்க நாளைக்கி. இன்னைக்கு ஒரு நாள் மட்டும்மா. கூட்டத்தோட போயிட்டு கூட்டாத்தோட வந்துருவேம்மா” என்று அவளை மேலும் நெருங்கி அணைத்துகொண்டான்.

பிணம் போல் , அவன் பேசியது கேட்டதாக்காட்டிக் கொள்ளாமல் கண்மூடிக் கிடந்தாள். அவள் மேல் காலைப்போட்டு வளைத்து அவள் முகத்தில் ஈரமாய் பிசுபிசுப்புடனிருந்த நீரைத்தொட்டு கண்களை துடைத்துவிட்ட போதுதான் தெரிந்தது அவள் அழுதுகொண்டிருப்பது. “அழாதம்மா , நான் போகல்ல. அழாதம்மா” என்றதற்கும் அவள் பதில் சொல்லாமலிருக்க அணத்தி அவனும் அழுதபடியே உறங்கிப்போனான்.

நடுச்சாமம் வௌவால்கள் சில் சில் சத்தத்துடன் , மரங்கள் உறக்கம் உதறி எழுந்தாடும் சத்தமும் கேட்க தான் ஈரம்மாக்கிய போர்வையை உதறியபடி சுந்தரம் எழுந்தமர்ந்தான். உறங்கும் பறவைகள் கனவில் பயந்து இறக்கைகளை அடித்து பின் சமாதானமாகின. சலங்கைகள் அதிரும் ஒலி விடாமல் கேட்க , வாசல் கதவிற்கு அருகிலிருக்கும் தாழ்ந்த ஜன்னல் கம்பிகளுகிடையில் முகத்தை வைத்து வெளியில் பார்த்தான். இடுப்புக்கு கீழே தார்ப்பாய்ச்சிக் கட்டிய வெள்ளை வேட்டியின் நுனிகளில் சிறு மணிகள் குலுங்கின. நிலத்தை அறைந்த படி நின்றது காவற்கம்பு. மயிரடர்ந்த கால்களில் உருண்ட தண்டையிலிருந்த சலங்கைகள் ஒவ்வொரு நடைக்கும் ஓவென்று சிரித்தன. தன்னை அந்த உருவம் கவனிக்கவில்லை என்பதை அறிந்த பின் பயமின்றி அதனை பார்த்துக்கொண்டிருந்தான். மூளையை கலங்கடித்த கணமொன்றில் அந்த உருவம் தலையில் மாட்டிய துணிக்கிரீடத்தின் மணிகள் குலுங்கும் ஒலியுடன் ஜன்னலில் முகம் வைத்து அவனை பார்த்தது. அது சிரித்ததாக நினைத்தவன் தானும் சிரிக்க நினைத்ததும் அதன் முகம் இறுகி கோபம் கொண்டு தன்னை தண்டிக்க காத்திருப்பது போல் தோன்றியது. அங்கிருந்த ஓட நினைத்தான். மன்ணில் புதைந்த கால்கள் நகராமல் அகிரமம் செய்தன. அதன் முகம் ஜன்னலிலேயே தங்கி கதவை திறந்து வெளியே வருமாறு எச்சரித்தது. உறக்கம் கலைந்தவனாய் கதவை திறக்கும் போது கால்கள் இலகுவாக நகர்ந்தன. அவையிரண்டையும் சபித்தபடி இருள் சூழ்ந்த தெருவில் முழுநிலவின் ஒளியில் அந்த உருவத்தின் முன் நின்றான். அவன் வலக்கையை தன் இடக்கையால பிடித்திழுத்தபடி அந்த உருவம் முன்னோக்கி நடக்க ஆரம்பித்தது. சில இடங்களில் அவன் அதன் பிடியில் பறந்தான்.

தெரு தாண்டி ஆற்றுப்பாலம் தொட்ட வண்டிகளோடும் மண் சாலையில் அவனை இழுத்தபடி அது சென்றது. அவன் எந்த எதிர்ப்புமின்றி அதனுடன் இசைந்து செல்ல பழக்கப்பட்டிருந்தான். பொன்னிற கலங்கல் நீராக எழுந்து சுழித்து அமிழ்ந்து ஓடிய ஆறு ஒருபுறமும் , நீண்டு வளர்ந்த தென்னைகளால் நிலவின் ஒளிபடாத தோப்புகள் மறுபுறமிமிருக்க அவர்கள் எங்கோ ஓரிடம் நோக்கி நடந்தனர். மண் சாலை முட்டி நின்ற இடத்திலிருந்த சுற்றுச்சுவர் கொண்ட மேடையில் மாடனின் பீடமிருந்தது. ஆற்றங்கரையோரம் , ஐந்தாறு சிதைகளில் ஒன்றுமட்டும் தழல் அதன் கூரையை தொட்டபடி எரிந்துகொண்டிருந்தது. சிதையைப்பார்த்ததும் அவன் கைகளை விட்டுவிட்டு அந்த உருவம் ஓடோடிச்சென்று எரிந்த பிணத்தின் கால்களை தன்னிருகைகளால் பிடித்திழுத்தும் வரமறுத்ததால் , தலையை காலால் அமுக்கிப்பிடித்து பலம்கொண்டு கால்களை இன்னும் வேகமாக இழுத்ததில் இரண்டும் அதன் கைகளில் வந்தது.

அரவமற்ற அந்த சுடுகாட்டில் நீரின் நெருப்பின் சத்தத்தை தடுத்து , ஒதுக்கி கனத்த ஒற்றைக்குரலில் “கால்மாடு , கால்மாடு” என்று ராகம்போட்டு பாடி , ஆடி மணிகள் சலங்கைகள் குலுங்க அந்த உருவம் அவனுருகில் வந்து ஒற்றைக்காலை பிடிக்கும்படி கட்டளையிட்டதும் அவன் இருகைகளால் அதை பணிவாக ஏந்தி பிடித்துக்கொண்டான். சூடடங்கிய கால் வெந்து தணிந்திருந்தது.

மீண்டும் அந்த உருவம் “கால் மாடு , கால்மாடு” என்று ராகம் போட்டப்படி படியேறி மற்றொரு காலை வாயில் வைத்து கடித்து வடியும் ஊனை நாவால் நக்கியபடி பீடத்திலமர்ந்து இருளில் இருண்டு போனது. தூரமாய் கூட்டமொன்று தீப்பந்தகளுடன் சுடுகாட்டை நோக்கி இரைச்சலுடன் கூச்சலிட்டபடி வருவது கேட்டதும் சுந்தரம் பதறி அங்கிருந்து ஓட நினைத்தான். ஆனால் பழையபடி கால்கள் மணலில் புதைந்து நகரவிடாமல் செய்தன. “யம்மா!” என அலறியடி தப்பமுடியா நிலைமையை எண்ணி அழ ஆரம்பித்தான். அந்த பிணத்தின் முகம் அவன் இதுவரை நேரில் பார்த்திராத அப்பாவின் கண் காது மூக்கு நெற்றியென அனைத்தும் ஒத்திருந்தது. அதன் எரிந்து பாதி கருகிய உதட்டோரம் புன்னகையொன்று விரிந்தது.

எழுந்தமர்ந்த போது கண்கள் எரிந்தன. எலும்புக் கணுக்களில் வலித்தது. நெற்றியில் போடப்பட்டிருந்த பற்று நெருநெருக்க மேலெதிரில் தொங்கிய அப்பாவின் மாலையிடப்பட்டு சந்தனக்குறியிடப்பட்ட படத்தை பார்த்தான். அந்த மாலை மாற்றப்பட்டு மாதங்கள் ஆகியிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அந்த கனவை உண்மையாக நடந்த ஒன்றாக நண்பர்களிடன் சொல்வதற்காக அவனுள் சொற்கள் கொண்டு ஆயத்தமானான்.

****

அன்று விடியற்காலையில் கோவில் கொடைக்காக மஞ்சணை , களபம் , கமுகம்ப்பூ , குங்குமம் , பத்தி , திருநீறு என சில்லறை பொருட்களை வாங்கிவிட்டு வந்த சுந்தரத்தின் அப்பா கோவிலின் முன் நின்றபடி குழாய் ஒலிபெருக்கியை ஏற்றிக்கட்டுமாறு சொல்லிக்கொண்டிருந்தான். சுற்றி நின்ற பெண்கள் குழாயடி , கோல வேலைகளை விட்டுவிட்டு ஒலிப்பெருக்கி கட்டப்படுவதையும் அதை கட்டச்சொன்னவனையும் பார்த்துக்கொண்டு நின்றனர். கார்த்திகை மாதப்பனி விலகாத அதிகாலையில் அவன் திருவட்டாரு கோவிலில் கரும்புடன் நிற்கும் மன்மதனின் முகம் மற்றும் உடல்வாகுடனிருந்தான். ஏற்றிகட்டிய வேட்டியின் கீழ் தெரிந்த கடினமான தொடைச்சதைகளை குதிரைச்சதைகளை பார்த்தபடி நின்ற பெண்களில் ஒருத்தி “ஏட்டீ மீனா , இவன் நம்ம நல்லதம்பியா பிள்ளைக்கு மகள இழுத்துட்டு ஓடுன குழுவப்பய தான” என்றதுக்கு வாயில் கைவடித்தபடி “ஆமாட்டீ , இவனுக்க வீட்டு கோவிலு கணக்கால்ல வந்து நிக்கான் சவம்” என்றவள் அவன் திறந்த மார்பை பார்த்து சட்டென திரும்பிக்கொண்டாள்.

“லேய் குழுவப்பயலே , எனக்க தங்கச்சிய ஏய்ச்சி தூக்கிட்டு போயிட்டா எல்லா உரிமையும் வந்துருமா , போல தள்ளி. தேவிடியாவுள்ள. அம்மைக்க கூதிக்குள்ள போயி சொருகு நீ கொண்டு வந்த சாமானத்த” என்றான் அங்கு ஓடி வந்த சுந்தரத்தின் மாமா. மூச்சுவாங்கியதில் சொற்கள் கோர்வையாக வராமல் தத்தளித்தான்.

“சாமி , நம்ம ஒண்ணுக்குள்ள ஒண்ணு. மதிச்சி போவோம். எனக்க கோயிலுன்னு வரல , எனக்க பெண்ணுக்கு கோவிலுன்னாக்கும் வந்தது. பாலத்துக்கு அடீல இருக்க பண்ணி மாடந்தான் இனி அவளுக்கும் , அத சாமி மன்சிலாக்கிக்கிடணும்”

கூட்டமாக நின்ற பெண்களிலொருத்தி “ஏட்டி , சவம் என்னமாம் பேசுகு பாத்தியா” என்று மற்றவர்களிடன் கண்காட்டினாள்.

“பண்ணி மாடனுக்கு சமானத்தை புடிச்சி தொங்குல , எரப்பாளி நாயெ” என்று கை ஓங்கினான் மாமா.

அதற்குள் யாரோ சொல்லி சுந்தரத்தின் அம்மா குளித்து வாராத தலையுடன் அங்கு வந்திருந்தாள் “ஏண்ணே அந்தாளு எனக்காக வந்து நிண்ணுப்போட்டாரு , மன்னிச்சி விட்டுரு” என அழுதாள்.

“சாமியாம் பெரிய சாமி , இது வெறும் மண்ணாங்கட்டியாக்கும்” என கைதூண்டி மாடனின் பீடத்தை காட்டி பின் “எனக்க குண்ணைக்கி சமானம் இது” என சாறத்தை தூக்கிக்காட்டி சுற்றியிருந்தவர்களை பார்த்தபடி சிரித்தான்.

அவள் , அழுகை நின்று வெறியேற அவனை தள்ளிவிட்டு என்னசெய்வதென தெரியாமல் கோவில் முன் கழட்டி வைக்கப்பட்டிருந்த வெண்கல மணியை எடுத்து அவன் தலையில் அடித்ததில் சூடு ரத்தம் வெளிவர சரிந்து விழுந்தான். நல்லத்தம்பியா பிள்ளை வரும்போது அங்கு பெண்களற்ற கூட்டத்தின் நடுவில் குழுவன் இறந்து கிடந்தான். அங்கிருந்து விலகி செல்வதற்கு முன் அவன் குறியை ஒருமுறை யாரும் பார்க்காமல் பார்த்த ஒருத்தி “குஞ்சாமணிய பாத்துதான் போயிருப்பா போலவே” என இன்னொருத்தியிடன் சொன்னாள்.

குழுவர் குழுவும் அவன் உடலை வாங்க மறுத்துவிட்டனர். அப்படிச்செய்தால் பண்ணி மாடன் காவு வாங்கிவிடுவான் என நினைத்ததால் அவனுடல் அரசாங்கத்தால் யாருக்கும் தெரியாமல் எரிக்கப்பட்டு , சாம்பல் தென்னமூட்டில் கொட்டப்பட்டது.

*****

முப்பத்தைந்து வயதாகிப்போன சுந்தரம் தனக்கு வந்த வரன்களெல்லாம் தட்டிப்போக அவனாக காதலித்து வந்த வேறொரு சாதிப்பெண்ணுடன் தீவண்டி ஆபீஸின் பின்னாலிருந்த பழைய சத்திரத்தில் ஒதுங்கியிருந்தான். அவள் அவனை புணரவிடாமல் அவளே அனைத்தையும் செய்து முடித்து அவனை ஓர் அடிமை போல பாவனை செய்யச்சொன்னாள். அந்த பாவனை முடிந்த சோர்வில் இருவரும் புற்களில் படுத்திருந்தனர். அதற்கான சமயமென அவனே பேச்சை ஆரம்பித்தான்.

“எனக்க அம்மைட்ட சொல்லி உங்க வீட்டுக்கு வரச்சொல்லவா ? அடுத்த ஞாயிறுன்னா எனக்கும் லீவு”

“அதிருக்கட்டும் , உனக்க அப்பாவ எங்கம்ம பாத்துருக்காளாம். அப்புடியெ உன்ன மாரிதான் இருப்பாராம் ?” எனச் சிரித்தாள்

“என்ன மாரியேவா ?”

“ஆமா , பெரிய மன்மதக்குஞ்சா இருந்தாராமாம். நீயும் அப்புடித்தான” என்று அவன் கன்னத்தை கிள்ளினாள்.

“களியாக்காத , விசயத்த சொல்லு , உங்க வீட்டுக்கு அம்மைய வரச்சொல்லவா ?”

“அதெல்லாம் வேண்டாம் , அது நடக்காது சுந்தரம்” என எழுந்து தாவணியை சரிசெய்து கொண்டாள்.

“ஏன் , என்னத்துக்கு , நானே வந்து பேசுகேன்”

“வந்து அடிவாங்கிட்டு போயிராத கேட்டயா. உன்ன என்னன்னு சொல்லி வீட்டுல காட்ட. உங்க அப்பாவ பத்திதான் ஊரு முழுக்க நாறில்லா கெடக்கு”

“அப்போ , நீயும் என்ன சாதி கெட்டவன்னு சொல்லுதியா ?”

“நான் தங்கத்த அப்புடிலாம் சொல்லுவனா , எனக்க வீட்டுல இது தெரிஞ்சா அம்ம என்னைய அடிச்சே கொன்னு போடுவா”

“நாளைக்கி நேரமாக்காத , எட்டு மணிக்கு வந்துரு” என்று தோள் பையொன்றை எடுத்து இருளிலிருந்து வெளிச்சத்திற்கு சென்றாள்.

அன்றிரவு தூங்கி அடுத்த நாள் எழுந்தவுடன் “உனக்க சந்தோசத்த மட்டும் பாத்து அப்பனுக்கூட ஓடுன , என்ன பத்தி என்னமாம் நெசச்சியா நீ ? என்ன ஒரு பய மனுசனாக்கூட மதிக்க மாட்டுக்கான். வேலைக்கு போகப்போன பெருச்சாளி புடிப்பியான்னு கேட்டு சிரிக்கான். உனக்கு அரிப்பெடுத்தா என்னைய பெக்காம இருந்திருக்கலாம். பெத்துப்போட்டு எனக்க வாழ்க்கைய நாசப்பொட்டையா ஆக்கியாச்சு. சந்தோசமா ? செத்துப்போயேன்” என கத்தி கையில் கிடைத்த அப்பாவின் படத்தை தூக்கி எறிந்தான். அதன் கண்ணாடி சில்லுகள் தெறித்து எதிரில் நின்றிருந்த அவள் கால்களுக்கடியில் சிதறி கிடந்தது.

அமைதியாக நின்றவளின் உருவம் ஓர் உருக்குலைந்து மண்ணுக்குள் பதுங்கி நிற்கும் பழைய கல் மண்டபம் போலிருந்தது. அந்த இடிய ஆரம்பித்த ஓட்டு வீட்டில் அவர்கள் குடும்பம் நடத்திய வென்னிப்பறை மழைக்கு ஒழுகிக்கொண்டிருந்தது. நீர் விழுந்து தெறித்த தடம் அதனைச்சுற்றி வட்டமாக தெரிந்தது. பிரம்மை பிடித்தவள் போல அவள் காலடியில் கிடந்த உடைந்த படத்தை கையிலெடுத்து தன்னையொத்த மகனின் நிலையை நினைத்து அழ முயன்றாள். ஆனால் அந்தப்படத்திலிருந்து வெளிவந்து அவளுக்கு மட்டும் கேட்ட சொற்களால் அழவும் முடியாமல் உடலை அசைத்து மனத்தின் வெம்மையை தணிக்க முயன்றாள்.

“ஒரு பொட்ட நாயி எனக்க மூஞ்சப்பாத்தே இருசாதி , குழுவன் , சாதி கெட்டவன்னு கூசாம சொல்லுகா.அப்பன கொண்ணாச்சி , என்னையும் கொண்ணு போடு , வா , வந்து கொல்லு” என தன் நெஞ்சிலறைந்து அழுதான்.

கதவைத்திறந்து மழையில் நனைந்த படி வெளியே ஆட்டுரலில் ஓட்டின் ஓவிலிருந்து வழிந்த நீரின் கீழ் அமர்ந்தான். அவள் கதவடைத்து உள்ளே பாத்திரத்தை உருட்டி தள்ளிவிட்டு நாற்காலியைப்போட்டு அதில் ஏறும் சத்தம் கேட்டது. அவன் எதும் செய்யாமல் அமைதியாக அந்த நாடகத்தை கேட்டபடி அமர்ந்திருந்தான். எதோ முறிந்து விழ எல்லாம் நிலையின்றி கீழே விழும் சத்தம் கேட்டு முடித்தவுடன் வீட்டுக்கதை தள்ளித்திறந்தான்.

அவள் கழுத்தை சுற்றியிருந்த இழுத்தால் அறுபடும் துணியை அவன் எடுத்துவிட்டபடி போணியிலிருந்து தண்ணீர் எடுத்துகுடித்தான். ஈரமில்லாத இடமொன்றை கண்டுபிடித்து அதில் போய் ஒடுங்கி படுத்துக்கொண்டான்.

****

அம்மாவின் பிணம் அடக்கம் செய்யப்பட்ட இரவில் குளிருக்கு இதமாக ஊர் சுருண்டு படுத்தபின் எழுந்து சுடுகாட்டுப்பாதையில் நடக்க ஆரம்பித்தான். எரியாத சிதைகளின் ஓரமாய் நின்றிருந்த மாடனையும் அவனையும் சுற்றியிருந்த நதியும் , தோப்பும் , கூகையும் , வௌவாலும் மௌமாக அவர்களை கவனித்திருந்தன. பீடமேறி மாடனுக்கு பொருத்தியிருந்த கருவிழி கொண்ட பொன் கண் மலர்களை நேருக்கு நேர் பார்த்தபடி மூலையில் கிடந்த கடப்பாறையொன்றால் மாடனின் கால்மாட்டில் இடித்தான். வலி தாங்காமல் மாடனின் கண்களிலிருந்து ரத்தம் வடிந்தது. பெயர்த்து எடுத்த மாடனை காலால் எட்டி உதைத்து சரித்தான். சரிந்து கிடந்த மாடனை ஒருகணம் மூச்சுவாங்க பார்த்துவிட்டு முதுகில் தூக்கி வைத்து மேடையிலிருந்து இறங்கி சிதையொன்றை நோக்கி நடக்கும் பொழுது அது தன்னை விட்டுவிடுமாறு அரற்றி அழுதது.

தூக்கி எறியப்பட்ட மாடன் அபயக்குரலிட்டபடி சிதையில் கிடந்தது. அவன் கடப்பாறையால் ஓங்கி அதன் நெஞ்சில் குத்தி இறக்கியதும் மூச்சு நின்ற மாடன் பொடி மண்ணாகி சிதையில் நிரம்பியது. இடுப்பில் சொருகி வைத்திருந்த குப்புயிலிருந்து மண்ணெண்ணையை மாடனைச் சுற்றி ஊற்றி , சூடத்தை பற்ற வைத்து அதில் எறிந்ததும் சிதை பற்றி ஏரிந்தது.

சுந்தரம் “கால்மாடு…கால்மாடு” என ராகம் பாடியபடி சிதையைச்சுற்றி வந்தான். ஊர் மக்கள் கூட்டமொன்று இரைச்சலுடன் கூச்சலிட்டபடி அவனை நோக்கி வருவது அங்கிருந்து தெரிந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.