
“என்றெம தின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்?” என்று பாடிய பாரதியின் துன்பமிகு கேள்வியை கடந்த இரு வருடங்களுக்கும் மேலாக உலக மனிதர்கள் கேட்கிறார்கள். சார்ஸ் (SARS-COVID VIRUS) தீ நுண்மியானது, ஆல்ஃபா, பீட்டா, டெல்டா, ஒமிக்ரான் என்று பல உருவெடுத்து உலகளவில் தொழில், கல்வி, வர்த்தகம், பொருளாதாரம், உடல் நலம், மன நலம், சமுதாயக் கூடல்கள் போன்றவற்றைப் பாதித்துள்ளது; பாதித்தும் வருகிறது. அந்தக் கிருமியை வெல்வதற்கு ஊசிகள், மாத்திரைகள், முகக் கவசம், இடைவெளி, இணையத்தின் மூலம் கல்வி பயிலுதல், வீட்டிலிருந்தே வேலை செய்தல் என்று மனித குலம் தன்னையும் வடிவமைத்துக் கொண்டே வருகிறது.
இதைப் பற்றியும், சென்ற ஆண்டின் சில இதர அறிவியல் நிகழ்வுகளையும் நாம் இக்கட்டுரையில் பார்ப்போம்.
மருத்துவம்
2020ல் கருவமிலத் (mNRA) தடுப்பூசிகள் மருத்துவ அறிவியலில் கவனத்தைக் கவர்ந்தன. 2021-ல் டிசம்பர் 21 தேதி வரையான விவரங்களின் படி சுமார் பத்தில் ஏழு அமெரிக்கர்கள் முதல் தவணை தடுப்பூசியும், சுமார் பத்தில் ஆறு அமெரிக்கர்கள் இரு தவணைகளும் போட்டுக்கொண்டுள்ளார்கள். தடுப்பூசிகளைப் பற்றிய சரியான தெளிவின்மையும், தவறுதலான புரிதல்களும் காரணமென வல்லுனர்கள் சொல்கிறார்கள். கால்பந்து விளையாட்டில் முக்கிய நாயகரான (Quarter Back) ஏரன் ராட்ஜர்ஸ், (Aaron Rodgers) இசை நிபுணர் நிக்கி மினாஜ், (Nick Minaj) வலையொலியாளரான ஜோ ரோகன் (Joe Rogan) போன்ற பிரபலங்கள் தடுப்பூசிகளை எதிர்த்ததும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயினும், மனம் தளராத அரசு, ஃபைசரின் (Pfizer) தடுப்பூசிகளை ஐந்து வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் அனுமதித்தது; இதனால் தீக்கிருமியின் தாக்கம் சற்றுக் குறைந்தது. இந்தச் சூழலில் ஒமிக்ரான் பரவலாகத் தொற்றத் தொடங்கியவுடன், மூன்றாவது தவணை தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுமாறு அரசுகள் அறிவுறுத்துகின்றன. வளர்ந்த நாட்டின் நிலை இது என்றால், ஆப்பிரிக்க உலக சுகாதார அமைப்பு, சொல்கிறது ‘இங்கே நூறில் எட்டு பேர் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்; வருட முடிவிற்குள் இக்கண்டத்திலுள்ள ஐம்பத்தி நாலு நாடுகளில், சுமார் ஆறு நாடுகளில் வசிப்பவர்களில் 40% மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்வார்கள்.’
உலகில் 60%க்கும் குறைவானவர்களே தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளார்கள். முன்நடவடிக்கை இந்தக் கிருமியின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் என்பது நினைவில் நிறுத்த வேண்டிய ஒன்று. அது மட்டுமல்ல, அது எடுக்கும் பல உருவங்களின் பாதிப்புகளைச் சமாளிக்கும் வண்ணம் உடலில் எதிர்ப்புச் சக்தியும் உண்டாகும் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். அதாவது, ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, ஓமிக்ரான் போன்ற தொற்றின் வகைமைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் இந்த தடுப்பூசிகளுக்கு இருக்கிறது என்றும், அப்படியே தொற்று ஏற்பட்டாலும் வீர்யம் அதிகமில்லாத ஒன்றாக அது வந்து போய்விடும் என்றும் அறிஞர்கள் சொல்கிறார்கள். ஆனால், மிகப் பெரிய மருந்துக் குழுமங்களின் வணிகப் பேராசையால் உலகம் தடுப்பூசிகளின் பிடியில் சிக்கியிருப்பதாகச் சொல்பவர்களும் இருக்கிறார்கள். கனடாவின் ‘சுபீரியர் கோர்ட்டில்’, ஜெர்மன்-அமெரிக்க வழக்கறிஞரான ரெய்னர் ஃபூயல்மிச், (Reiner Fuellmich) உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலகப் பொருளாதார அமைப்பு ஆகிய நிறுவனங்கள் ‘மனித இனத்திற்கெதிரான குற்ற நடவடிக்கைகளை’ மேற்கொண்டுள்ளதாகக் கூறி குற்றவியலின் கீழ் அவைகளின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விண்ணப்பித்துள்ளார். முக்கியமாக, நோய்த் தொற்றை கண்டறிவதற்கான சோதனைக் கருவிகளைப் பற்றியும், குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டு, சோதிக்கப்பட்டு, சந்தைக்கு வந்துள்ள தடுப்பூசியின் பின்னே இயங்கும் ‘பெரு மருந்து நிறுவனங்களின்’ உள் நோக்கம் பற்றியும் அவர் கேள்விகள் கேட்டுள்ளார். ஃபைசர் கடந்த வருடம் ஈட்டிய இலாபம் $19 பில்லியன், மாடெ(ர்)னா, $8 பில்லியன் என்பதை நினைவில் கொண்டால் ரெய்னர் சொல்வதிலும் உண்மை இருக்கலாமெனத் தோன்றுகிறதல்லவா?
தடுப்பூசிகளைத் தவிர வாய் வழி உட்கொள்ளும் மாத்திரையான ‘மோல்னுபிராவரை’ (Molnupiravir) ‘மெர்க்’ (Merck) அறிமுகம் செய்தது. அக்டோபரில் (2021) அது தாக்கல் செய்த அறிக்கையில், இந்த நோயின் தாக்கத்தால் மருத்துவமனையில் உள் நோயாளியாகச் சேர்ந்து சிகிட்சைப் பெற வேண்டிய அவசியம் பாதியாகக் குறையும் என்று சொன்னது. பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்த பத்தே நாட்களில், இம்மருந்தை அவசர சிகிச்சைக்காக பயன்படுத்த அனுமதி கோரி அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறைக்கு (FDA) விண்ணப்பித்தது. நவம்பர் மாத நடுவில், அமெரிக்காவை முந்திக் கொண்டு பிரிட்டிஷ் கூட்டரசு (U K) இந்த மருந்திற்கு அனுமதி வழங்கியது. நவம்பர் இறுதியில் FDA இந்த மாத்திரைக்கு அவசர உபயோக அனுமதி வழங்கியது.
முன்னர் ‘மெர்க்’ அழுத்திச் சொன்னது போல். கிருமியோ, இறப்போ, சரி பாதியாகக் குறையவில்லை எனத் தரவுகள் சொல்கின்றன. ஆனால், 30% கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அதாவது மிதமான தொற்றுக்கு உள்ளானவர்கள், நோய் அறிகுறி தெரிந்த முதல் ஐந்து நாட்களுக்குள் தினம் 4 மாத்திரை என்ற வீதத்தில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இந்த மாத்திரைகளை எடுத்துக் கொண்டார்கள். இந்த வாய்வழி மருந்தால் மருத்துவ மனையில் உள் நோயாளிகளாகும் அவசியமில்லாமல் வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவ மனைச் செலவுகளையும் குறைத்துக் கொண்டார்கள். மனித திசுக்களில் பல்கிப் பெருகும் கொரோனா வைரசின் ஆற்றலைக் குறிவைத்து இந்தக் குளிகை செயல்படுகிறது. ‘மெர்க்’ பன்னாடுகளில் மருந்தகத் துறையில் செயல்படும் ஒரு நிறுவனம். இந்தியாவிலும் இது இயங்குகிறது. புற்று நோய்க்கு எதிரான அதன் ‘Keytruda’ உலகெங்கும் அதிக அளவில் விற்பனையாகிறது. (மெர்க்கின் வருமானத்தில், இந்தப் புற்று நோய்க்கான மருந்து முதலிடம் வகிக்கிறது என்பதால் இங்கே குறிப்பிடுகிறேன்.)
ஃபைசர் தானும் பேக்ஸ்லொவிட் (Paxlovid) என்ற மாத்திரையை சென்ற நவம்பரில் அறிமுகப்படுத்தியது. 88% மருத்துவமனையில் உள் நோயாளியாக இருக்க வேண்டிய தேவையையும், இறப்பு விகிதத்தையும் இக்குளிகை குறைப்பதாக ஒரு குறிப்பிட்ட குழுவினரை பரிசோதனை செய்து ஆய்வறிக்கை தாக்கல் செய்தது. ஒமிக்ரான் உட்பட அனைத்து சார்ஸ் கிருமிகளுக்கெதிராக இவ்விரண்டும் செயல்படும் என்பதால் இந்த மாத்திரைகள் வரவேற்கப்படுகின்றன. ஏழை நாடுகளுக்கு இந்த மாத்திரைகள் கிடைப்பதற்காக ‘கேட்ஸ் ஃப்வுண்டேஷன்’ $120 மில்லியன் நிதி ஒதுக்கியுள்ளது. பல செழிப்பான நாடுகள் இந்த மாத்திரைகளைப் பெறுவதற்கு ஒப்பந்தங்கள் போட்டுள்ளன. வெகு விரைவில் அந்தக் குளிகைகள் ஏற்கப்பட்டு அவை விரைந்து விநியோகம் செய்யப்பட முடிந்தால், ஆப்பிரிக்கா போன்ற குறைந்த தடுப்பூசிகள் போடப்படும் நாடுகளுக்கு உதவியாக அமையும்.
இங்கே சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்.
ஜனவரி 19-ம் தேதி வரையிலான உலக நிலவரம்:
பாதிக்கப்பட்டவர்கள் : 335,423,967
நலமடைந்தவர்கள் : 271,074,211 (81%)
நோய்த் தொற்றில் இருப்பவர்கள் :58,775,969 (18%)
இறந்தவர்கள் : 55,73, 787(1%) (https://www.worldometers.info/coronavirus/)
சில நாடுகளின் புள்ளி விவரங்கள் கீழ்வருமாறு:
# | Country, Other | Total Cases | New Cases | Total Deaths | New Deaths | Total Recovered | New Recovered | Active Cases | Serious, Critical | Tot Cases/ 1M pop | Deaths/ 1M pop | Total Tests | Tests/ 1M pop | Population |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
World | 335,423,967 | +297,104 | 5,573,787 | +845 | 271,074,211 | +125,082 | 58,775,969 | 96,821 | 43,032 | 715.1 | ||||
1 | USA | 68,767,004 | 877,240 | 43,528,110 | 24,361,654 | 25,810 | 205,887 | 2,626 | 867,857,475 | 2,598,348 | 334,003,597 | |||
2 | India | 37,901,241 | 487,226 | 35,583,039 | 1,830,976 | 8,944 | 27,053 | 348 | 707,421,650 | 504,949 | 1,400,976,358 | |||
3 | Brazil | 23,215,551 | 621,578 | 21,773,085 | 820,888 | 8,318 | 108,032 | 2,892 | 63,776,166 | 296,778 | 214,895,351 | |||
4 | UK | 15,399,300 | 152,513 | 11,617,031 | 3,629,756 | 713 | 225,013 | 2,229 | 435,557,723 | 6,364,326 | 68,437,373 | |||
5 | France | 14,739,297 | 127,638 | 9,406,719 | 5,204,940 | 3,895 | 225,038 | 1,949 | 211,520,605 | 3,229,477 | 65,496,857 | |||
6 | Russia | 10,865,512 | 322,678 | 9,902,935 | 639,899 | 2,300 | 74,405 | 2,210 | 247,200,000 | 1,692,789 | 146,031,231 | |||
7 | Turkey | 10,591,757 | 85,077 | 9,815,222 | 691,458 | 1,128 | 123,531 | 992 | 125,851,743 | 1,467,800 | 85,741,779 |
இந்தியாவில் பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்களில் 64.2% இரு தவணை ஊசிகளும், 89.2% முதல் தவணை ஊசியும் போட்டுக் கொண்டுள்ளார்கள். தமிழ் நாட்டின் கள நிலவரம் கீழே தரப்பட்டுள்ளது
இந்தியப் பொருளாதாரம் ஒவ்வொரு கொரோனா அலைகளாலும் பாதிக்கப்படுகிறது. நுகர்வோர்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். இந்தத் தொற்றிற்கு முன்பாக வேலை வாய்ப்புகள் மற்றும் விலைவாசியைக் குறித்தே பொதுக் கவலைகள் நிலவின. இப்போதோ குடும்ப வருமானக் கவலையும் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக மூத்த குடிமக்கள் அச்சமடைந்துள்ளனர். ரிசர்வ் வங்கி நடத்திய சமூக கருத்தாய்வு விவரங்கள் ‘த ஹிந்து’ ஆங்கில நாளிதழில் (19 ஜனவரி) வெளி வந்துள்ளது. அதிலிருந்து சில விவரங்கள்
தற்போதைய பொதுப்பொருளாதார நிலைமையைப் பற்றிய பொது மக்களின் கண்ணோட்டம்:
தலைப்பு (பொதுக் கவலைகள்) | தொற்றிற்கு முன் | தொற்று நிலவுகையில் |
வேலை வாய்ப்பு | 59.4 | 73 |
விலைவாசி | 48.1 | 71.7 |
வருமானம் | 39.5 | 59.7 |
செலவினம் | 30.1 | 25.3 |
வேலை வாய்ப்புகளைப் போல, விலைவாசியைப் போல, குடும்ப வருமானம் குறைவதும் வாழ்க்கையைப் பாதிக்கிறது என்றும், அப்படி வருமானம் குறைவதற்கு தீ நுண்மியும் அதன் விளைவான பல்தொழில் தேக்கமும் காரணம் என்றும் மேற்கூறிய புள்ளி விவரம் சொல்கிறது. இரண்டு எண்ணிக்கைகளையும் ஒப்பிடுகையில் அதிக எண்ணாக இருக்கும் வலது ஓர எண், துணைத்தலைப்பு கேள்விகளுடன் பெரிதும் ஒத்துப் போகும் மனநிலையைக் காட்டுகிறது.
செவ்வாய்க்கு ஒரு பயணச் சீட்டு
பூமியின் சகோதரக் கோள் என்று செவ்வாயை முத்துஸ்வாமி தீக்ஷதர் பாடுகிறார். அந்தக் கிரகத்தில் தன் ‘பர்சிவியரன்ஸ்’ (Perseverance) என்ற சுற்று (Rover) வாகனத்தைச் சென்ற பிப்ரவரியில் இறக்கி ‘நாசா’ சாதனை செய்துள்ளது. இதில் முன்னரே பொருத்தப் பட்ட கனமற்ற ஹெலிகாப்டர், மெலிதான செவ்வாய் வளிமண்டலத்தைப் படமெடுக்கவும், அதன் நிலச் சிறு கட்டிகளைச் சேகரித்து அனுப்பவும் டோஸ்டர் (Toaster) அளவிலான ‘மோக்ஸி’ (MOXIE) என்றக் கருவியை பயன்படுத்தியது. இந்த மோக்ஸி கரிவாயுவை பிராண வாயுவாக மாற்றும் திறன் கொண்டது. செவ்வாயைப் புரிந்து கொள்வதற்கும், மேலும் ஆய்வுகள் மேற்கொள்வதற்கும் இது உதவும். மோக்ஸி என்ற பெயர் பிரபலமான நகைச்சுவை படத்தில் இடம் பெற்ற, ‘போராடும் தன்மை கொண்ட’ ஒரு பாத்திரம். இந்த வெற்றி மேலும் பெரிய வடிவிலான ஹெலிகாப்டர்களை அனுப்புவதற்கும், உயிர்வாயு உற்பத்தி செய்ய முடிந்துள்ளதால், சிறந்த சில மேம்பட்ட பரிசோதனைகள் மற்றும் செயல்பாடுகளுக்கும், சேகரிக்கப்பட்ட பாறைகளை (எதிர்காலத்தில் அங்கு செல்லும் பயண ஊர்திகள் மூலம்) பூமிக்குக் கொணர்ந்து ஆய்வுகள் மேற்கொள்வதற்கும் திறப்பாக அமைந்துள்ளது. அமெரிக்காவின் ரோவர் மட்டுமல்ல, ஐக்கிய அமீரகத்தின் ‘ஹோப்’, (Hope) செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையை வெற்றிகரமாக அடைந்து, அதன் தட்பவெப்ப நிலையையும், வளிமண்டலச் சூழலையும் கவனித்து வருகிறது. சீனாவின் (ழ்)ஜூ ராங் (Zhurong) மே மாதத்தில் செவ்வாயில் இறங்கி அதன் புவியியலையும், அங்கே தண்ணீர் உள்ளதா என்பதையும் ஆய்கிறது. மேலும் மேலும் நடக்கும் ஆய்வுகள் ஆவலைத் தூண்டுகின்றன. நாமும் கூட நேரில் செவ்வாயைச் சந்தித்து நலம் விசாரிக்கலாம்.
இந்தியாவின் ‘மங்கள்யான்’ பூமியின் சுற்று வட்டப்பாதையைத் தாண்டி செவ்வாயின் சுற்று வட்டப் பாதைக்குச் சென்ற, முதல் முறையிலேயே வெற்றி பெற்ற ஒன்று என்று சொல்ல வேண்டும். செப்டம்பர் 24, 2014-லில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம் ஏழு பூமி ஆண்டுகளாக செவ்வாயைச் சுற்றி படங்கள் எடுத்து அனுப்புகிறது. (செவ்வாயின் காலக் கணக்கில் மூன்று ஆண்டுகள்) ஆறேழு மாதங்கள் மட்டுமே நிலைக்கும் என்று கருதப்பட்ட இது ஏழு ஆண்டுகள் நீடிப்பது சிறப்பான ஒன்றாகும். இது அனுப்பிவரும் தகவல்களின் அடிப்படையில் மிகச் சிறந்த வானியல், கோளியல் இதழ்களில் கட்டுரைகள் வெளியாகிவருகின்றன. அந்தக் கோளில் உண்டாகும் புழுதிப்புயல் பல நூறு கி மீ உயரத்தில் எழும்புகிறது என்பதையும் மங்கள்யான் படம்பிடித்துள்ளது.
‘ட்ரேகன் மனிதன்’ (Dragon Man) மனித இனத்தின் ஒரு வகையா?
நியாண்டர்தால், ஹோமோ சேபியன் போன்ற மனித இன வகைகளில், பிற்காலத்தைச் சேர்ந்த ப்ளைஸ்டொசீன் (Pleistocene) மனிதனாக ‘ட்ரேகன் மனிதன்’ இருந்திருக்கக்கூடும் என்று, (சீனாவில், கட்டுமானப் பணி நடைபெற்ற இடத்தில் 90 ஆண்டுகளுக்கு முன்னர் காணப்பட்டு, பின்னர் அந்தக் குடியானவர்களால் மறைத்து வைக்கப்பட்ட) 2018ல் வெளி உலகம் கண்ட மண்டைஒட்டின் மூலம் அறிவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். யுரேனியத் தொடர் காலக் கணக்கீடு, (Uranium Series Dating) ஊடுகதிரின் ஒளித்தன்மையின் (Fluorescence X Ray) உதவியுடன் மற்ற தொல்லெச்சப் பொருட்களுடான ஒப்பீடு, ஆகிய முறைகளைக் கொண்டு ஆய்ந்த பிறகே தொன்மையான மனித இனம் ‘ட்ரேகன் மனிதன்- ஹோமோ லாங்கி’ (Homo –Longi) என்ற முடிவிற்கு வந்ததாக அவர்கள் சொல்கிறார்கள். மிகப் பெரிய மூளையை உள்ளே கொள்ளும் விதமான பெரிய மண்டை ஓடு, கிட்டத்தட்ட சதுர வடிவிலான விழிப்பள்ளங்கள், அடர்ந்த புருவங்கள் போன்றவை மற்ற ‘ஹோமோ’விடமிருந்து, ‘ட்ரேகன் மனிதனை’ வேறுபடுத்துவதாகச் சொல்கின்றனர். ஒரு புது இனமாகக் கருதும் வகையிலா இந்தக் கண்டுபிடிப்பு இருக்கிறது என்று சில அறிவியலாளர்கள் கேள்விகள் கேட்கிறார்கள். ‘இது அரிதான மண்டை ஓடு, அதன் அமைப்பு ஆர்வம் கிளரும் ஒன்று, ஆசியாவில் என்ன நடந்தது என்பதை அறிய ஒரு வாய்ப்பு, மனித இனம் தோன்றியதை அறியும் ஒரு வழியாக இதைப் பார்க்கிறோம். என்ன ஒன்று, 90 ஆண்டுகளுக்கு பின்னர் தான் இது பல்கலைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.(ஒருக்கால் படிக்க வந்ததோ?) அதுவும் ஒன்றே ஒன்று. ஆனால், எத்தனைக் காலத்திற்கு முந்தியது, எதனுடன் இதைப் பொருத்திப் பார்க்க முடியும் என்ற கேள்விகள் இருக்கின்றன’ என்று ‘மனித இனம் தோன்றிய ஆய்வு முயற்சி’ (Human Evolution Initiatives) யில் ஈடுபட்டு வரும் ஸ்மித்சோனியன் அமைப்பிலுள்ள (Smithsonian Institute) மைக்கேல் பெட்ராக்லியா (Michael Petraglia) சொல்கிறார். ஸ்மித்சோனியன் அமைப்பில் உலகின் மிகப் பெரிய அருங்காட்சியகம் உள்ளது. கல்வி, ஆராய்ச்சி, போன்ற துறைகளில் இயங்கும் இது வாஷிங்டனில் உள்ளது.
பவழங்களும், பருவக்கால சீர் கேடுகளும்
‘விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்’ என்று பாடித்தான் இனி பவழத்தைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. சூடேறும் புவியால் கடந்த 50 ஆண்டுகளில், காட்டுத் தீ, பெரு வெள்ளம், கடும் வறட்சி போன்ற இயற்கைச் சீற்ற பாதிப்புகள் ஐந்து மடங்கு பெருகியிருப்பதாக 2021ம் ஆண்டு அறிக்கையில் உலக வானிலையியல் அமைப்பு தெரிவித்திருக்கிறது. சூழல் சீர்கேடுகள், நீர் நிலைகளை பெருமளவில் பாதித்துள்ளன. அதிகரிக்கும் வெப்பத்தால் தங்களுக்கு ஆதரவான சக உயிரிகளான பாசிகளை நிராகரித்து பவளப்பாறைகள் வெளுத்து மடிகின்றன. பெரும்பாலும் சூழல் சீர்கேடுகளால், 2009கிற்குப் பின்னான பத்தாண்டுகளில் 14% பவழப் பாறைகள் கடல்களில் அழிந்துவிட்டதாக உலகப் பவழப் பாறைகள் கண்காணிப்புக் குழு அறிவிக்கிறது. உலகின் பெரும் பவழப் பாறைத் தொகுதியான ‘க்ரேட் பேரியர் ரீஃப்’, 1998-ம் ஆண்டு தொடங்கி இன்று வரை சுமார் 98% இழந்துள்ளது என்று நவம்பரில் வெளியான அறிக்கை சொல்கிறது. 1950களில் தொடங்கி பாதிக்கும் மேலான பவழப் பாறைகளின் அழிவில் சூழல் சீர்கேடுகளும் பங்கு வகிப்பதாக மற்றோர் அறிக்கை சொல்கிறது. பவழப் பாறைகளின் அழிவு, அது இல்லாமல் போவதை மட்டும் குறிக்கவில்லை. குறைந்து வரும் கடல் வாழ் உயிர் வளத்தை, கடல் சார்ந்த சுற்றுலா மற்றும் கேளிக்கை மையங்கள் செயல்பட முடியாத வணிகச் சிக்கலை, புயல் தடுப்பில் முக்கிய பங்காற்றி கடற்கரைகளை காப்பாற்றிய பாறைகள் இல்லாமல் போவதால் ஏற்படும் இயற்கைச் சீற்ற நட்டங்களை என்று தொடர் அழிவுகளையும் காட்டுகிறது. கரிவாயுவினால் ஏற்படும் காற்று மாசினைக் குறைத்தால் பவழம் காப்பாற்றப்படும்.
வான்வெளிப் பயணத்தில் ஓட்டப்பந்தயம்.
பல கோடீஸ்வரர்கள் தங்கள் பெருமிதத்தை காட்டிக் கொண்டாலும், சாதாரண மனிதர்களும் வான்வெளியில் உலவும் வகைகளையும் செய்தார்கள். கோடீஸ்வரரான ரிச்சர்ட் ப்ரேன்சன், (Richard Branson) தன் பணியாளர்களுடன், முழு விமான இயக்கக் குழுவினர்களுடன் தானும் இணைந்து ‘வர்ஜின் கேலக்டிக்கில்’ (Virgin Galactic) துணை சுற்றுப் பாதையில் (sub orbital) வான்வெளி எல்லைக்கு சற்று மேலே பயணித்தார். அவர் 40 துறைகளில், 400 கம்பெனிகளில் பல நாடுகளில் முதலீடு செய்துள்ளவர். சிறு வர்த்தகராக இருந்தவர், ‘பிரிட்டிஷ் பேங்க் வர்ஜின் மனி, யு. கே, பி எல் சியின்’ (British Bank Virgin Money U K PLC) உடமையாளராக வளர்ந்தவர். அவர் சொத்துக்களின் நிகர மதிப்பு $65 பில்லியன். அவர் வணிக வான்வெளிப் பயணங்களை இவ்வருட இறுதிக்கு ஒத்திப் போட்டுள்ளார். இவரது பயணத்திற்கு ஒரு வாரம் கழித்து, உலகின் மிகப் பணக்காரரான ஜெஃப் பிஸோஸ், (Jeff Bezos) இளையவரோடும், முதியோரோடும் துணைப்பாதையில் ‘ப்ளூ ஒரிஜனில்’ (Blue Origin) வான்வெளிக்குப் பயணம் செய்தார். அவரே, இந்த அக்டோபரில், ‘ஸ்டார் ட்ரெக்’கில் (Star Trek) கேப்டன் ஜேம்ஸ் கிர்க்காக (Captain James Kirk) நடித்த கனடாவைச் சேர்ந்த நடிகர், எழுத்தாளர், இயக்குனர் வில்லியம் ஷேட்னரை (William Shatner) வான்வெளிப் பயணத்தில் அனுப்பி வைத்தார். இதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர், ஈலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் (Space Exploration), விண்வெளி வீரர்களாக முறையான பயிற்சி பெறாத சாதாரண குடிமக்களை, பூமியைச் சுற்றி வரும் வண்ணம் ‘ரெசிலியன்ஸ்’ (Resillience) கப்பலில் விண்வெளிக்கு பயணிக்க வைத்து சாதனை படைத்தது. சாதாரண மக்களுக்கும் விண்வெளி பயண அனுபவத்தைத் தரும் பொருட்டு பல திட்டங்கள் இங்கே உருவாகி வருகின்றன. இவ்வருடத்தில் ஒரு ஓய்வு பெற்ற விண்வெளி வீரருடன், கட்டணம் செலுத்தும் மூன்று பயணிகளை அகில உலக விண்வெளிக் கூடத்திற்கு (International Space Station) அனுப்பும் திட்டம் இருக்கிறது. 2025-2030க்குள் பத்து நபர்கள் தங்கும் விதமாக ‘ஆர்பிடல் ரீஃப்’ (Orbital Reef) என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு தனியார் விண்கூடம் அமைக்கும் திட்டமும் உள்ளதாம்.

மலேரியாவைத் தடுக்க ஊசி
ஒரு சிறு கொசு கடித்து பெரு உயிர் போகும் இடர் மனித குலம் எதிர் கொண்டு வந்துள்ள ஒன்று. 1987லிருந்து சுமார் $750 மில்லியன்கள் செலவு செய்து உருவாக்கப்பட்டுள்ள மஸ்க்யூரிக்ஸ் (Mosquirix) என்ற தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனம் மலேரியா போன்ற ஒட்டுண்ணி நோய்களுக்கெதிராக பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஐந்து இலட்சம் நபர்கள் மலேரியாவால் இறக்கிறார்கள்- இதில் சரி பாதிக்கும் மேலானவர்கள் ஐந்து வயதிற்கும் குறைவான குழந்தைகள். ஆப்பிரிக்காவில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு நான்கு தவணைகளாக இது செலுத்தப்படுகிறது. அங்கே மலேரியாவின் தாக்கம் அதிகம். இந்த ஊசி முற்றிலுமாக மலேரியாவைப் போக்கி விடும் என்று சொல்ல முடியாது. கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களில் 30% தான் இதனால் குணமடைந்திருக்கிறார்கள். ஆனால், ‘மாதிரி ஆய்வு’ நம்பிக்கை தருகிறது- ஒவ்வொரு வருடமும் சுமார் ஐந்து மில்லியன் பாதிப்புகளைத் தவிர்க்கவும், ஐந்து வயதிற்குட்பட்ட 23,000 குழந்தைகள் இறப்பதைத் தவிர்ப்பதற்கும் இந்த தடுப்பூசி செயலாற்றும் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இப்போது பயன்படுத்தப்படும் வழிமுறைகளான மருந்துகள், கொசு வலைகள் போன்றவற்றுடன் இந்தத் தடுப்பூசியையும் சேர்த்து பயன்படுத்தினால் இந்த ஆபத்தான நோயிலிருந்து தப்பலாம் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். தமிழகத்தில் ஒரு ‘மாதிரி கிராமத்தில்’ (Model Village) மரபு சார் மருத்துவர் ஒரு ஆய்வு செய்து எளிய வழி ஒன்றைத் தெரிவித்திருக்கிறார். அது திறந்திருக்கும் ‘கழிவுத் தூண் காற்று போக்கி’ வாயில்களை சிறு கொசு வலையால் கட்டி மூடி வைப்பதாகும். இதனால் அந்தக் கிராமத்தில் கொசுக்களின் தொல்லை பெரும்பாலும் இல்லை என்று அந்தக் குறிப்பு மேலும் சொல்கிறது. இதில் முக்கியமாக கவனத்தில் இருத்த வேண்டியது ஒன்றுதான்- தெரு முழுதும், ஊர் முழுதும் இப்படி கழிவுத் தூண் வாயில்களை சிறு வலைகளால் மூட வேண்டும். இவரது காணொலியை எத்தனைப் பேர் பார்த்தார்கள், எந்தக் கிராம சபையிலாவது, நகர மன்றத்திலாவது இதைப் பற்றி பேச்சு நடந்ததா என்பதெல்லாம் ‘நானறியேன் பராபரமே’.
அமெரிக்காவில் எப்போதிருந்து மனிதர்கள் வசிக்கிறார்கள்?
ஒயிட் சேன்ட்ஸ் நேஷனல் பார்க்கில் தென்பட்ட ‘பேய்த் தடங்கள்’ (Ghost Prints) என்றழைக்கப்படும் உலர் பதிவுகளில் (Dried Prints) காணப்பட்ட உலர் அகழிப் புல் விதைகளை (dried ditch grass seeds) ‘ரேடியோ கார்பன்’ (Radio Carbon) முறையில் ஆராய்ந்த நிபுணர்கள் 21,000 முதல், 23,000 ஆண்டுகளுக்குள்ளாக மனிதர்கள் அங்கே வசித்திருந்தார்கள் என்று செப்டம்பர் ‘சைன்ஸ்’ (Science) இதழில் கட்டுரை வெளியிட்டார்கள்.. முந்தைய அகழ்வாராய்ச்சி இதை கிட்டத்தட்ட 13,000 ஆண்டுகள் என்று குறிப்பிட்டிருந்தது. ரேடியோ கார்பன் டேடிங் என்பது கரிம உயிரினங்களின் வயதை ரேடியோ கார்பன் முறையில் கண்டுபிடிப்பதாகும். சூழலிலிருந்தும், உணவிலிருந்தும் உயிரிகள் கரிமத்தைப் பெற்று சேகரிக்கின்றன. அதில் ‘கார்பன்-14’ என்ற கதிரியக்கக் கரிமமும் சிறிதளவில் உண்டு. உயிரிகள் மரணம் அடைந்த பிறகு இந்தக் கரிமங்கள் மக்கத் தொடங்கும். அந்த அடிப்படையில் கால நிர்ணயங்கள் செய்யப்படுகின்றன. இதை வில்லியர்ட் லிப்பி (Williard Libby) என்ற விஞ்ஞானி தன் குழுவினருடன் கண்டுபிடித்து நோபல் பரிசும் பெற்றார்.
‘சைன்ஸ்’ வெளியிட்ட தகவலை மேலே பார்த்தோம். ‘நேச்சர்’ (Nature) வெளியிட்டுள்ளதோ மாறான ஒன்று. பொ.யு.993-ல் நடந்த அண்டக் கதிர் வீச்சு (Cosmic rays) மாதிரிகளை அடிப்படையெனக் கொண்டு, முன்னர் நினைத்தற்கும் வெகு முன்பாகவே வட அமெரிக்காவில் ‘வைகிங்க்ஸ்’ (Vikings) வாழ்ந்தார்கள் என்று இக்கட்டுரை பேசுகிறது. நியுஃபவுன்ட்லேன்ட்டில் (Newfoundland) வெட்டுண்ட மரத்தின் வளையங்களை எண்ணிய விஞ்ஞானிகள், அதை வைத்து “பொ யு 1021-ல் இது வெட்டப்பட்டுள்ளது; யுரோப்பிலிருந்து அமெரிக்காவை அடைய அட்லாண்டிக் கடலைத் தாண்டிய முதல் நபர்கள் புது நிலம் தேடும் ஆர்வலர்களான நார்வீஜியர்கள்.” என்று சொல்கிறார்கள்.
மானிடன் பாதிக்கும் மற்ற உயிர்கள்
விலங்குகளின் வளர்ச்சியை நேரடியாகவும், மறைமுகமாகவும் மனிதன் பாதிக்கிறான் என்று ஆய்வுகள் சொல்கின்றன. அதிர்ச்சி அளிக்கும் ஒரு ஆய்வின்படி, கடுமையான வேட்டையாடல்களால் ஆப்பிரிக்காவில் தந்தமில்லா யானைகள் பெருகிவிட்டனவாம். 1977 முதல் 1992 வரை நடந்த மொஜாம்பியின் (Mozambican Civil War) உள் நாட்டுப் போரில் யானைகள், அதுவும், நீள் தந்தமுள்ள ஆண் யானைகள் கொல்லப்பட்டதால் அவற்றின் மரபணுக்கள் அனேகமாக அந்த இனத்திற்குக் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் போருக்கு முன்னர் 20% தந்தமில்லாமல் அல்லது சிறிய தந்தங்களுடன் இருந்த பெண்யானைகளின் எண்ணிக்கை (ஆண்யானைகள் அழிவுற்றதால்) மொத்த யானைகளின் தொகையில் பாதியாகும் அளவிற்கு அதிகரித்துள்ளது. தந்தமில்லா ஆண் யானைகள் பிறப்பதற்கு முன்னரே அழிக்கப்படுகின்றன. கொல்வது, அழிப்பதில் ஒரு வழி; ‘மாறிவரும் சூழலும், வளர்ச்சியும்’ (Trends in Ecology and Evolution) என்பதைப் பற்றி ஒரு பெரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏறி வரும் வெப்பத்தை எதிர்கொள்வதற்கேற்ற வகையில் விலங்குகள் தங்கள் உருவப் பகுதிகளை மாற்றி வருகின்றன. வௌவால்கள் தங்கள் சிறகுகளை காலப் போக்கில் பெரிதாக்கியுள்ளன; முயல்கள் தங்கள் காதுகளை. சுற்றியிருக்கும் காற்றில் இதன் மூலம் வெப்பம் சிதறடிக்கப்படும். இதைப் போன்ற பல சான்றுகள் ‘சைன்ஸ் அட்வான்சஸ்’ (Science Advances) இதழில் வெளிவந்துள்ளது. அமெசான் மழைக்காடுகளில் அமைப்பு கெடாத, எவரும் அணுகாத சூழல் நிலவும் இடத்தில் செய்யப்பட்ட ஆய்வு, 77% பறவைகள் சராசரியாக உடல் எடை இழந்து, முன்னர் இருந்ததைவிட நீள் சிறகுகளை வளர்த்துள்ளன என்று சொல்கிறது. அதிகரிக்கும் வெப்பமும், மாறுதல் அடையும் மழைப் பொழிவும் இதற்கான காரணங்களாக இருக்கலாமென அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
‘ப்ரும்ம ஸ்வரூப உதயே, மத்யாஹ்னேது சதா சிவ: அஸ்தகாலே ஸ்வயம் விஷ்ணு, த்ரயீமூர்த்தி திவாகர:’ (வால்மீகி இராமாயணத்தில் வரும் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தின் தொடக்கம்)
சனாதன தர்மத்தில் மும்மூர்த்திகளின் வடிவாக நிதர்சனமாக காட்சி தரும் ஒற்றை வான் விளக்கு என்று சூரியனைத் துதிப்பார்கள். ஒரே ஒரு ஆதவனை மட்டும் சொல்லாமல் 16 ஆதித்யர்களைச் சொல்பவர்கள் நாம். உயிர்கள் வாழ அருளும் தேவன் என்ற எண்ணம் பலரிடம் உண்டு. அந்தச் சூரியனை ஆராய்வதை நிலத்தில் இல்லாமல் வான் வெளியில் செய்தால், அகிலம் தோன்றியதின் மர்மத்தையும் அறிந்து கொள்ளலாம் என்ற சிந்தனை 20- 25 ஆண்டுகளாக உருப்பெற்று வடிவடைந்து இன்று செயல்பாட்டைக் கண்டுள்ளது. ‘ஜேம்ஸ் வெப் டெலெஸ்கோப்’ என்ற இது மூன்று அமைப்புகளின்- நாசா, கனடாவின் விண்துறை, யுரோப்பிய விண் அமைப்பு ஆகியவற்றின் கூட்டு முயற்சியில், சுமார் $10 பில்லியன் செலவில், சென்ற ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி விண்ணில் ஏவுகணையின் மூலம் செலுத்தப்பட்டது. ஹப்பிள் தொலை நோக்கி செய்ய இயலாதவற்றை இது செய்யும்- பெரு வெடிப்பிற்குப் பின் விண்மீன் கோளங்கள் எவ்விதம் உருவாயின, மற்றக் கோள்களில் உயிரினங்கள் உள்ளனவா, ஒரு விண்மீன் எவ்வாறு பிறக்கிறது என்ற கேள்விகளுக்கு விடை காண உதவும் வகையில் இது வானியில் ஆய்வாளர்களுக்குத் தரவுகளைத் தரும்.
ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி, (James Webb Telescope) டிசம்பர் 25-ம் தேதி ஏரியான் 5 விண்கலத்தில் ப்ரெஞ்ச் கயானாவிலிருந்து விண்ணை நோக்கிச் சென்றது. இது ஒரு மாத காலம் பயணித்து பூமிக்குப் பின்புறத்தில் சூர்ய, சந்திர, பூமி வெப்பத் தாக்குதலில்லாத எல் 2-ல் (L 2) தன் விண் தொலை நோக்கியைச் செயல்படுத்தும். முக்கிய நோக்கம் என்பது அகச் சிவப்புக் கதிர்களைப் (Infra Red) பதிவு செய்து அதன் மூலம் ப்ரபஞ்ச இரகசியத்தைத் தெரிந்து கொள்வது தான். ஆரம்பங்களில் புற ஊதாக் கதிர்களாக (Ultraviolet Rays) இருப்பவை டாப்ளர் எஃபெக்டால் (Doppler Effect) அகச் சிவப்புக் கதிர்களாக மாறுவது ‘ரெட் ஷிப்ட்’ என அழைக்கப்படுகிறது. அதில் இருக்கும் விவரங்கள், விண்மீன் வரலாற்றைச் சொல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், சூர்யக் கதிர்களும், அதன் வெப்பமும் பெரும்பாலும் அகச்சிவப்புக் கதிர்களை அழித்துவிடும். அதனால், பூமிக்குப் பின்னே, சுமார் 15 இலட்சம் கி மீ தொலைவில், லாக்ரானஞ் 2 (Lagrange 2) என்ற புள்ளிக்கு இது எடுத்துச் செல்லப்படுகிறது. இந்தப் புள்ளியில் சூரியனின் ஈர்ப்பு சக்தியும், பூமியின் ஈர்ப்பும் சமமாக இருப்பதால் குறைந்த எரி பொருள் செலவில் தொலை நோக்கி செயல்படும். மேலும், இதன் இறுதி வடிவை பூமியிலேயே அமைத்து விண்ணில் செலுத்துவதில் பல சிக்கல்கள் உண்டு. எனவே, விரியும் பனையோலை வடிவில் அமைத்து அங்கங்கே அவை விரிந்து இறுதி வடிவை அடைந்து செயல்படுமாறு வடிவமைத்துள்ளனர். பொறியியலின் மேம்பட்ட சாதனை இது.
இந்த நோக்கியின் பாகங்கள் என்னென்ன, அவற்றின் தனிச் சிறப்பு என்ன என்பதையும் சுருக்கமாகப் பார்க்கலாம். கப்தான் இழைகளால் வெளிப்பகுதி அமைக்கப்பட்டு. அதில் அலுமினியம் பூசப்பட்டுள்ளது. எடை குறைவாக இருப்பதற்கும், வலுவாக இருப்பதற்கும், வெப்பத்தை வெளி மண்டலத்திற்கே திருப்புவதற்குமான ஏற்பாடு இது. அடுக்கிதழ்களாக அதிகக்கனமில்லாமல் செய்யப்பட்டுள்ளது. தொலை நோக்குக் கண்ணாடிகள் அறுகோணத்தில் வார்க்கப்பட்டுள்ளன. சிலிக்கான் மற்றும் எடை குறைவாக உள்ள பெரிலியம் என்ற தனிமத்தால் ஆனவை இக் கண்ணாடிகள். அகச் சிவப்புக் கதிர்களைத் திறம்பட பதிவு செய்வதற்காக தங்க முலாம் பூசப்பட்ட கண்ணாடிகள் இவை. அகச் சிவப்பு கதிர்களுக்கும், தங்கத்திற்கும் புரிதல் அதிகம். மொத்தமாக 48.2 கிராம் தங்கம் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்கண்ணாடிகளின் வளைபரப்பை நுட்பமாகவும், நுணுக்கமாகவும் மாற்றம் செய்யும் விதத்தில் அவைகளின் பின்புறத்தில் சிறிய இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வெகு தொலைவில் இருக்கும் விண்ணகப் பொருட்களின் ஒளிக்கதிரிலிருந்து அதன் தோற்றுவாயைத் தெரிந்து கொள்ள உதவும் ஒரு அறிவியல் கருவி இது. ஹப்பிள் மற்றும் பூமியிலிருக்கும் மற்ற தொலை நோக்கிகளுடன் இணைத்து இதன் செயல்பாடுகளை ஆய்ந்து தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இதன் ஆயுள் ஐந்து முதல் பத்தாண்டுகள் என நாசா சொல்லியிருக்கிறது. இதன் செயல்பாடுகளில் குறைகள் ஏற்பட்டால் ஹப்பிளைப் போல அவ்விடத்திற்கே சென்று சீர் செய்ய முடியாது. அனைத்தும் பூமியிலிருந்தே நேர் செய்யப்பட வேண்டும். அதற்கான அத்தனை கணக்குகளும், அமைப்புகளும், எரி பொருளும், அதிகரிக்கும் மற்றும் குறையும் வெப்ப நிலை சீராக்குதல்களும், எதிர்பாரா விண் கற்கள் போன்றவற்றால் எதிர்கொள்ள நேரிடும் அபாயங்களிலிருந்து தற்காத்துக் கொள்ளத் தேவையான கருவிகளும், அத்தனையும் உள்ளடக்கிய இங்கே சிறுத்து வானில் பெருக்கும் இந்த அற்புதம், பல சுவையான கேள்விகளுக்கும், வேறு உயிரினங்கள் விண் கோள்கள் எதிலும் உள்ளனவா என்ற ஆவலுக்கும், பெரு வெடிப்பிற்குப் பின் நிகழ்ந்தது இதுதான் என்ற துல்லியப் புரிதலுக்குமான விடைகளை அளிக்கும் என வானியலாளர்கள் காத்திருக்கிறார்கள். கண்ணாடிகள் செயல்படத் துவங்கியிருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்தியாவிலும் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ‘ஆதித்யா-எல்-1’ என்று பெயரிடப்பட்டுள்ள இது எல்1 என்ற லாக்ரானஞ் புள்ளியில் நிறுத்தப்படும். அதில் முக்கிய ஆறு பரிசோதனை உபகரணங்களிருக்கும். சூர்ய ஒளிவட்டம், துல்லிய காந்தப்புல அளவீடு, புற ஊதாக் கதிர்களின் ஊடான இடைவெளிகளில் ஒளிக் கோள, மற்றும் நிற மண்டலங்களில் தென்படும் விவரங்கள், சூர்யக் காற்றின் துகள் தன்மையை ஆராய்தல், அந்தக் காற்றில் அடங்கியுள்ளவை எவை, அது எப்படிப் பரவுகிறது, அதன் சிறப்புத் தன்மை என்ன, சூரிய ஒளிக்கோள் வெப்பம் எப்படி உருவாகிறது, ஒளிக்கோளத்தில் நடைபெறும் துடிப்பான செயல்கள் மற்றும் வெடிப்பு நிகழ்கையில் துகள்களை இயக்கும் சக்தியின் அளவீடுகள், கோள்களுக்கிடையேயான காந்தப் புலத்தினை அளத்தல், அதன் தன்மையை அறிதல் ஆகியவற்றிற்கான கருவிகள் இருக்கும். இவ்வருடம் மூன்றாம் காலாண்டில் விண்ணில் ஆதித்யா எல்-1 செலுத்தப்படும் என இஸ்ரோ சொல்கிறது. (https://www.isro.gov.in/aditya-l1-first-indian-mission-to-study-sun)
உசாவிகள்:
The Ten Most Significant Science Stories of 2021
Joe Spring Associate Editor, Science December 23, 2021