இவர்கள் இல்லையேல் அத்தியாயம்-11

சில சமயம், வீட்டு வேலைகளைச் செய்ய, எவருமே இல்லாது போன காலங்களும் உண்டு. அப்படி ஒரு நாள், நான் தனியாக சமையல் அறையில் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருக்கையில், என் தம்பி ஆசுதோஷ், ஜம்முவிலிருந்து வந்தான். அந்நாட்களில், நான் தோள்பட்டை வலிக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தேன். கூட பிறந்தவன் அல்லவா, நான் படுகிற கஷ்டம் தாங்காமல், தன் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த, மதன் என்கிற இளைஞனை தில்லிக்கு அனுப்பி வைத்தான்.

மதன் பிரமாதமாக சமைப்பான். சமைத்தது தெரியாமல் சமையல் அறையை, கையோடு சுத்தம் செய்து விடுவான். இதர மேல் வேலைகளையும் அவன் தனியாகவே சமாளித்துக் கொண்டிருந்தான்.

மதனிடம் ஒரே ஒரு கெட்ட குணம் தான். உடல் தில்லியில் இருந்தாலும் மனதை மட்டும் ஜம்முவில் வைத்துவிட்டு வாழ்ந்து கொண்டிருந்தான். என் தம்பியின் குழந்தைகளுக்கு நான் அத்தை என்பதால், மதனும் என்னை அத்தை என்றே அழைத்தான். “ஜம்முவில் தயிர் எப்படி இருக்கும் தெரியுமா, பாத்திரத்தை தலைகீழாக கவிழ்த்தால் கூட கீழே விழாது.தில்லித் தயிரெல்லாம் ஒரு தயிரா? இந்நேரம் கிராமத்தில் அறுவடை முடிந்திருக்கும். நான் இங்கு சிக்கிக்கொண்டு விட்டேன். அதனால் எவ்வளவு பணம் நஷ்டம் ஏற்பட்டிருக்கும் தெரியுமா,” இப்படி எல்லாம் சதா புலம்பிக் கொண்டே இருப்பான். என்னேரமும் ஒரு காலை ஜம்முவில் வைத்துவிட்டு வந்தவன் போல “கிளம்பத் தயார்” மன நிலையில் இருப்பான்.

வேலைப்பளு காரணமாகத் தான் இப்படி புலம்புகிறான் என எண்ணி, அவனுக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்ய மரியம் என்கிற பெண்ணை வேலைக்கு அமர்த்தினேன். இந்த மரியம் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவள். எதைச் சொன்னாலும், புடவைத் தலைப்பால் வாயைப் பொத்திக் கொண்டு சிரிப்பாள். மதனுக்கு இப்போது சமைக்கிற வேலை மட்டுமே. வீட்டில் அவனது தனித்துவத்தை நிலை நாட்டிக் கொள்ளும் வகையில், நாள் முழுவதும் “அத்தை அத்தை” என்று என் பின்னாலேயே சுற்றி வருவான்.

மதனுக்கு மரியத்தை ஏனோ பிடிக்கவில்லை. வீட்டில் என்ன அசம்பாவிதம் நடந்தாலும், அவனைப் பொறுத்தவரையில், மரியம் தான் அதற்கு காரணம். கண்ணாடி டம்ளர் உடைந்ததா, காய்கறியில் உப்பு கூடிவிட்டதா, துணிமணிகள் இஸ்திரி செய்யப்படவில்லையா, கேட்பதற்கு முன்பாகவே, தேர்ந்த ஒற்றனைப்போல, மதன், தனது கண்க ளை விரித்து, நெற்றிக்கு ஏற்றிக்கொண்டு, மரியத்தின் மீது பழி சுமத்துவான்.

மரியம் கருப்பு தான். ஆனால் கருப்பானவர்களிடம் ஒரு வகையான வசீகரத் தன்மை இருக்கும். அதை வார்த்தைகளில் விவரிப்பது கடினம்.மரியமும் வசீகரமானவள்.

நாங்கள் தோடர்மல் ரோட்டில் வசித்து வந்த காலத்தில், அவசரத் தேவைக்காக ஒரு டிரைவரை அமர்த்திக் கொண்டோம். அவன் பஞ்சாபைச் சேர்ந்தவன். அழகானவன். சொன்ன பேச்சைக் கேட்பவன். அதிகம் பேசாதவன். எங்களோடு சித்தரஞ்சன் பார்க்கிலும் அவனே தொடர்ந்தான். இப்போது, ஆபத்து என்னவென்றால், அவனுக்கு மரியத்தின் மீது, தற்காலிகமாக காதல் ஏற்பட்டுவிட்டது. இந்தத் தகவலும், ரகசியபோலிஸ் மதன் மூலமாகத்தான் எனக்கு தெரியவந்தது.

நான் மரியத்தைக் கூப்பிட்டு விசாரித்தேன் “அவன் என்னை திருமணம் செய்து கொள்ள சித்தமாய் இருக்கிறானாம் பீஜி” என்று சிரித்தவாறே கூறினாள். “ஒருவேளை உன்னை அவன் திருமணம் செய்து கொண்டு, பஞ்சாபுக்கு அழைத்துச் சென்று, தன் வீட்டினருக்கு அறிமுகம் செய்து வைத்தாலும், அவனுடைய குடும்பத்தார் உன்னை உள்ளே நுழையவே அனுமதிக்கமாட்டார்கள்.இரண்டாவது, அங்கிருக்கும் ஜாட் இன பெண்களை பார்த்ததும், நீ தானாகவே திரும்ப வந்து விடுவாய். மூன்றாவது, அவன் உன்னை கட்டாயம் திருமணம் செய்து கொள்ள மாட்டான்” என்றேன் “எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது பீஜி” என்று மரியம் புன்னகை மாறாமல் கூறினாள்.

கிராமத்திலி ருந்து மரியத்தின் சகோதர சகோதரிகள் அல்லது பெற்றோரின் கடிதம் வருகையில், நான் அதை அவளுக்கு படித்துக் காட்டுவேன். அதற்கு, அவள் சொற்படி பதிலையும் எழுதித் தருவேன். எல்லாக் கடிதங்களிலும் அனேகமாக ஏதாவது ஒரு விருப்பம் அல்லது தேவை தெரிவிக்கப்பட்டிருக்கும். விருப்பங்கள், தேவைக்கு ஏற்ப தொடர்ந்து கொண்டே இருக்கும். ஒரு முறை, அவளுடைய தம்பி, ” நீ என் உண்மையான சகோதரியாக இருந்தால், எனக்கு ஒரு சைக்கிள் வாங்கி அனுப்பு. என் அக்கா எனக்கு சைக்கிள் வாங்கி தந்தி ருக்கிறாள் பாருங்கள் என்று நான் இங்கு எல்லோரிடமும் பெருமையடித்து க்கொள்ள முடியும்” என்று எழுதினான். மரியத்துக்கு இதைக்கேட்டு, சந்தோஷத்தில் சிரித்து மாளவில்லை. அவளுடைய பெற்றோரும் “உன் பெயரில் பசு வாங்குகிறோம். ஐநூறு ரூபாய் அனுப்பு”என்று கட்டளை இடுவார்கள். சம்பளம் கிடைப்பதற்கு முன்பாகவே, செலவுகள் வரிசை கட்டி நின்று கொண்டிருக்கும்.

இது ஒன்றும் புதிய விஷயமில்லை. எத்தனையோ அக்காக்கள், தங்கைகள் மற்றும் அத்தைகள் தங்கள் சகோதர சகோதரிகளுக்காகவும், மருமகள்/ மருமகன் களுக்காகவும், உயிரைக்கூட கொடுக்கத் தயாராக இருக்கிறார்க.ள்ஆனால், பதிலுக்கு அவர்களுக்கு என்ன கிடைக்கிறது? மரியம் சந்தோஷமாக, குடும்பத்தினரின், ஒருபோதும் தீராத ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டுருப்பதை பார்க்கையில் எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கும்.

மரியத்தின் கிராமத்திலிருந்து வேலை தேடி வரும் பெண்கள், என் வீட்டில் தான் தங்குவார்கள். வேலை கிடைத்ததும், ஒருவர் பின் ஒருவராக போய்விடுவார்கள். வீட்டு வாசலில் நான் ஒரு பெரிய தட்டைக் கட்டி தொங்கவிட்டு, அதில் தானியங்களைப் போட்டு வைப்பேன். அணில்கள், மைனாக்கள், கிளிகள், புறாக்கள் போன்ற விதவிதமான பறவைகள், நாள் முழுவதும் கீச் கீச் என்று கத்திக்கொண்டு, தானியத்தை கொத்திக் கொண்டு பறக்கும். அதைப் போலவே, இந்தப் பெண்கள் எந்நேரமும் சளம்பிக் கொண்டிருப்பார்கள்.

என் தயாள குணத்தை மரியம் துருபயோகப்படுத்துகிறாள் என்பது, எனக்கு மெல்ல மெல்ல தெரிய வந்ததும் நான் அவளை அனுப்பிவிட முடிவு செய்தேன். பிரபல ஹிந்துஸ்தானி பாடகி சுபா முத்கலுக்கு வேலைக்கு ஆள் தேவைப்பட்டதால், நான் அவளை அங்கு அனுப்பினேன்.

சில மாதங்கள் கழித்து மரியத்திடமிருந்து எனக்கு கடிதம் வந்தது. “எனக்கு டிபி நோய் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்” என எழுதி இருந்தாள். நான் மரியம் குறிப்பிட்டி ருந்த மருத்துவமனைக்கு ஃபோன் செய்து விசாரித்ததில், அவள் டிஸ்சார்ஜ் ஆகி போய் விட்டதாகத் தெரியவந்தது.

இம்மாதிரியான மரியம்கள், தங்கள் உடலில் நோயைச்சுமந்து வளையவரும் போதிலும், புன்னகையைத் தவறவிடுவதில்லை. தங்கள் ஆழ்மன காயங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை. மரியம், கடிதத்தில் தனக்கு திருமணம் ஆகிவிட்டதெனத் தெரிவித்திருந்தாள். கணவனுக்கு அவனுடைய சிற்றன்னையுடன் தகாத உறவு இருக்கிறது, தன்னைச் சற்றும் கவனிப் பதில்லை; இருப்பினும், உடல் நிலை சரியானதும், கணவனிடம் திரும்பி விடுவேன் என்று எழுதி இருந்தாள்.

மரியம், நோய்வாய்ப்பட்டிருக்கையில், உன்னை கவனித்துக் கொள்ள எவரும் முன்வர மாட்டார்கள். நீ குடும்பத்தினரின் விருப்பங்களை பூர்த்தி செய்கிற ஒரு இயந்திரம் மட்டுமே!

மரியம் சென்ற பிறகு, வீட்டில் துணி எடுக்க வரும் பெண்ணிடம் “என் வீட்டில் வீடு பெருக்கி சுத்தம் செய்கிற வேலையை செய்து தர முடியுமா?” எனக் கேட்டேன் அதற்கு அவள், “பீஜி , பொதுவாக, வண்ணாரக் குடும்பத்து பெண்கள், இம்மாதிரியான வேலைகளையெல்லாம் செய்ய மாட்டார்கள். ஆனால், பரவாயில்லை, உங்களுக்கு நான் செய்து தருகிறேன். வெளியே எவரிடமும் சொல்லி விடாதீர்கள்” என்றாள்.

இவளும், என் வீட்டில் வேலை செய்த மற்ற பெண்களைப் போல, மிகவும் அழகானவள். கணவன் மனப்பிறழ்வுநோயால் பாதிக்கப்பட்டவன். எத்தனையோ வைத்தியம் பார்த்தும் குணமாகவில்லை. போராததற்கு மூன்று குழந்தைகள் வேறு. சொல்லிக் கொள்ள மாமியார், பெரிய மைத்துனர், நாத்தனார், சிறிய மைத்துனர் என பெரிய குடும்பம் இருந்தபோதிலும், உதவி செய்ய எவரும் முன்வரவில்லை. கணவன் மறைந்த பிறகு, பல காலம் அவள் என் வீட்டில் வேலை செய்தாள். என் வீட்டிற்கு வந்த பிரபல இலக்கியவாதி ஒருவருக்கு அவளைத் தெரிந்திருந்தது. ‘திருமணமாகி வந்த புதிதில், அவள் மிகவும் அழகாக இருப்பாள். அந்நாட்களில் அவளது அழகு, பேசு பொருளாக இருந்தது. ஆனாலும், வண்ணான்களிடம் ஒரு ஒழுக்கம் உண்டு. அவர்கள் பிறன்மனை நோக்காப் பேராண்மக்கள். அதனால்தான் இவளால் இதுவரையிலும் சமாளிக்க முடிந்திருக்கிறது” என்றார். தன் மகளின் திருமணத்திற்கு அவள் என்னை அழைத்தபோது நான் சென்றுருந்தேன். நான் போனதில் எனக்கு அதிகம் மகிழ்ச்சி ஏற்பட்டதா அல்லது அவளுக்கா என்பதைத் தீர்மானிப்பது கடினம்.

யார் கீழ்மக்கள் என நாம் நினைக்கிறோமோ, பெரும்பாலும் அவர்களே தங்கள் குணங்களால், மேன் மக்களுக்கும் மேலாக பரிமளிக்கிறார்கள். பொருளாதார ரீதியாக, அவர்கள் வறுமையானவர்களாக இருந்தபோதிலும், நற்பண்புகள் அவர்களிடம் மிக செறிவாக இருந்தன என்பது நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்த உண்மை.

[டோக்ரி மொழி நாவலின் தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி]
[அடுத்த இதழில் இந்த நாவல் தொடர் முடிவடையும்.]

Series Navigation<< இவர்கள் இல்லையேல் அத்தியாயம்-10பிருஹன்னளை >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.