அகோரம்

ந்தப் பிரத்தியேக மருத்துவப் பாதுகாப்பு உடையில், எதிர்மறைக் காற்றழுத்த வார்டிலிருந்து 1(Negative Pressure room) வந்த டாக்டர் ஈஸ்வரைப் பார்க்க, ஒரு வேற்றுக் கிரகவாசியைப் போல் தோன்றினார். தலையிலிருந்து கால் வரை ‘ரெயின்கோர்ட்’ போன்ற வெள்ளைநிற பிளாஸ்டிக் உடை, உயிர்நிலையிலிருந்து கழுத்துவரை ‘ஜிப்’ செய்யப்பட்டிருந்தது!. தலையில் அணிந்துகொள்ளப்பட்டு முகம் மட்டுமே தெரியும் கவசம், தலையில் கவிழ்த்துப் போட்டதுபோல் தோள்பட்டை வரை நீண்டு, படர்ந்து கிடந்தது. அந்தத் தலைக்கவசத்திற்கு உள்ளே நாசியையும் வாயையும் மூடிக்கொண்டு இன்னும் ஒரு சுவாசக் கவசம்! விரல்கள் விறைத்துப் போனது போன்றத் தோற்றத்தைக் கொடுத்துக்கொண்டு கைகளில் நீலநிறக் கையுறைகள். ஆனால், இத்தனை நவீனக் கவசங்களுக்கிடையே சம்பாஷணை மட்டும் பழமைப் பட்டுபோனது போல், பாஷைகள் அறியாத ஆதிகாலத்திற்குப் போயிருந்தது.

ஒரு மருத்துவருக்கே உரிய எல்லா உந்துதலும், உத்வேகமும் முற்றாக வடிந்து போனதுபோல் டாக்டர் ஈஸ்வர், வற்றிப் போன முகத்துடன், காலியாகி வீசப்பட்ட ‘ஸ்சிரிஞ்’ஜைப் போல் தனது ஆபீஸ் இருக்கையில் வந்து ‘பொத்’தென்று விழுந்தார். அந்த எதிர்மறைக் காற்றழுத்த அறைக்குள் போகும் போதெல்லாம் அணிய வேண்டி வந்த அந்தப் பிரத்தியேக ஆடைகள், மிகுந்த அசௌகரியத்தைக் கொடுத்ததால் உடம்பு ஒரேடியாக ஓய்ந்து போனது. அவ்வுடைகளை அணிவதிலும், களைவதிலும்கூட சமரசத்திற்கு இடமே இல்லாத ஒரு ‘எஸ் ஓ பி’ இருந்து மிகுந்த ஆயாசத்தைக் கொடுத்தது!

ஒரு பெருமூச்சுடன் எழுந்து சென்று, டாக்டர் தனது அறைக் கண்ணாடி வழியாக அந்த பிரத்தியேகச் கிச்சை வார்டைப் பார்த்தார், நினைவெல்லாம் லீயின் மேலேயே இருந்தது. ‘கோமா’விலிருந்து லீக்கு நினைவு திரும்பியிருந்த போது ஏழு நாட்களாகியிருந்தன. அவர், ஏதோ சொல்லவோ, கேட்கவோ எத்தனித்துத் தவிப்பது தெரிந்தது. ஒரு வாரச் செயற்கைச் சுவாசச் சிகிச்சையில் வாய் உலர்ந்து போயிருந்ததால், ஈரம் சொட்டும் வார்த்தைகளைப் பேச அதனால் முடியவில்லை. அதரங்கள் ஒட்டிக்கொண்டன! உணர்விழந்த மயக்கத்தில் வார்த்தைகளின் ஒலி, மங்கிப் போனதுபோல் சுவாசத்தில் பெருமூச்செறிந்தன. அந்த அவஸ்தையுடனேயே அவர் கேள்வியைச் சுவாசித்தார். அவரைப் புரிந்துகொள்ள டாக்டரும், தாதியரும் மிகவும் சிரமப் பட்டனர். தன்னை உணர்த்த முடியாதத் தவிப்பில் லீயின் கண்கள் கண்ணீரை வடித்தபோது, கூடியிருந்த தாதியரும் நெகிழ்ந்துபோய் கண்ணீர் உகுத்தனர். கடைசியில், ஒரு வழியாக லீயின் அன்பின் அவஸ்தைப் புரிந்த போது, அவர்கள் நிலைக்குழைந்து போயினர்.

‘என் மனைவிக்கு எப்படி இருக்கு டாக்டர்?..’

* * *

போன மாதத்தில் ஒரு நாள், மைக்கல் லீயும் அவரின் மனைவி எமியும் தமது நெருங்கிய உறவினர் இருவருடன் ஜப்பானிய உணவகம் ஒன்றிற்குச் சாப்பிடப் போயிருக்கின்றனர். ‘எங்களைத் தவிர, மற்ற எல்லோருமே கோவிட் கிருமி ஏந்திகளே..’ என்ற சந்தேகத்துடனேயே அவர்கள், மற்றவர்களிடமிருந்து உரிய தூரம் காத்துத் தம்மைப் பாதுகாத்துக்கொண்டனர். உணவு விடுதிக்குள் நுழையும் போது, மறக்காமல் MySejahtera என்ற அரசாங்க மின்னியல் நடமாட்டக் கண்காணிப்புச் செயலியில் தமது நடமாட்டத்தைப் பதிந்துகொண்டனர். நெற்றியைச் சுட்டு, அனுமதிக்கப்பட்ட உடல் வெப்பத்தையும் பதிவில் ஏற்றினர். மேசையில் வைக்கப்பட்டிருந்த கிருமி நாசினியை மணிக்கட்டு வரைப் பூசி, அக்கிருமி நாசினி செய்த விளம்பரக் கூற்றுப்படி 99.9 சதவிகித கிருமிகளையும் கொன்றொழித்ததாக நிம்மதி கொண்டனர். ஒதுக்குப் புறமாக இருந்த ஒரு மேசையைத் தேர்ந்தெடுத்து, மற்ற வாடிக்கையாளர்களிடமிருந்து தூர விலகி, தமது பாதுகாப்பை மேலும் உறுதி செய்துகொண்டனர். திடீரென்று ஒரு சந்தேகம்!. உட்காருவதற்கு முன்னர், கையோடு கொண்டு வந்திருந்த ஈரமான கிருமி நாசினித் துணியால் மேசை, நாற்காலிகளைத் துடைத்து, அதில் ஒளிந்திருக்கக்கூடியக் கிருமிகளையும் 99.9 சதவிகிதம் நாசம் செய்துவிட்டத் திருப்தி அவர்களுக்குத் தேவைப்பட்டது. பின்னர், தமது கைகளுக்கு மேலும் ஓர் அடுக்கு கிருமி நாசினியைப் பூசி, பாதுகாப்பை உறுதி செய்துக்கொண்டனர். மேசையிலிருந்த கரண்டி, தட்டுகளைப் பார்க்கவும் கூட, ஒரு சந்தேகம் வந்தது. லீ, அவற்றையும் ஈரமான கிருமி நாசினித் துணியால் துடைத்தெடுத்து, ஒரு கிண்ணத்தில் சுடுநீர் வரவழைத்து நன்றாக கழுவி எடுத்துக்கொண்டார். எல்லா வகையிலும் பாதுகாப்பை உறுதிச் செய்துகொண்ட திருப்தியில் பயம் தணிந்தபோது, திருப்தியாகச் சாப்பிட்டு எழுந்தனர். பில்லுக்கு கொடுத்த முன்னூறு வெள்ளியில் திருப்பித் தரப்பட்டச் சில்லறை வெள்ளிகளிலும் கொரோனாத் தொற்று ஏதும் இருக்குமோ என்ற சந்தேகம் வந்தபோது லீ, வாகனத்தில் உட்கார்ந்து கிருமி நாசினித் திரவத்தால் அவ்வெள்ளிகளையும் ஒவ்வொன்றாகத் துடைத்தெடுத்தப் பின்னரே பர்ஸ்சில் வைத்துக்கொண்டார். சந்தேகத்திற்கு இடமே இல்லை! எல்லா வகையிலும் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுவிட்ட நிம்மதியில் மனம் சாந்தியடைந்தது.! ஆனால், அந்த நிம்மதி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை! கிருமி நாசினித் தயாரிப்பாளர்கள் உத்திரவாதம் தந்திராத அந்த 0.1 சதவிகித கிருமிகளால் அவர்கள் நோயுற்றுப் போனதுபோல், பத்தே நாட்களில் நால்வரும் சுகவீனம் அடைந்தனர்.

நாசித்துவாரத் துடைப்புப் பரிசோதனையில் லீக்கும், மனைவி எமிக்கும் கோவிட் தொற்று உறுதிச் செய்யப்பட்டது. பாவம், தொற்றுக்கு ஆளானால் எளிதில் இறந்துப்போகும் அடைப்புக் குறிக்குள் இருந்த வயதினர் அவர்கள்! மரணமே உறுதிச் செய்யப்பட்டுவிட்டதுபோல் பீதியுற்று நடுங்கினர். உடனே, அவர்களிருவரையும் வீட்டிலேயே தனிமைப் படுத்திக்கொள்ளும்படி அரசாங்க மருத்துவ ஆலோசனை உத்தரவிட்டது. அப்படியும், ஒரே வாரத்தில் எமியின் நிலை, – அவளுக்கு ஏற்கனவே ஆஸ்துமா இருந்ததால் – மிகவும் மோசமானது. உடனே செர்டாங் அரசாங்க மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். ஒரு மாதத்திற்கு முன்னர்தான் அவசர சிகிச்சை வார்டிலிருந்து டாக்டர் ஈஸ்வர், அந்தக் கொரோனா வார்டிற்கு மாற்றப்பட்டிருந்தார். தொற்றின் தீவிரத்தைச் சமாளிக்க பல மருத்துவர்கள் அப்படி அவசரமாக இட மாற்றம் செய்யப்பட்டிருந்தனர். வெளி நோயாளிகள் சிகிச்சை மையமெல்லாம் தற்காலிகமாக மூடப்பட்டு, அந்த மருத்துவமனை பிரத்தியேகமாக கொரோனா சிகிச்சைக்கென்றே ஒதுக்கப்பட்டது. மூன்று வார பயிற்சிக்குப் பின்னர், டாக்டர் ஈஸ்வர் தலைமையின் கீழ் ஒரு தலைமைத் தாதி, மூன்று பணிவிடை தாதியர்கள் என்று ஒரு மருத்துவ அணி அமைக்கப்பட்டது. கொரோனாத் தொற்று நாடெங்கும் தீவிரமாக பரவ ஆரம்பித்து, நோய்க் குணமாகி வெளியாகிக் கொண்டிருந்தவர்களைவிட, தொற்றுக்கு ஆளான புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருந்ததால் தீவிரச் சிகிச்சைப் பிரிவின் இட வசதியும், சேவையும் பாதிப்புக்கு உள்ளாகித் திணறிக்கொண்டிருந்தது.

இந்த நெருக்கடியானச் சூழ்நிலையில்தான் எமிக்கு, கொரோனாத் தொற்று மோசமாகி, ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவரப்பட்டாள். வரும்போதே சுவாசத்தை தொலைத்துவிட்டது போல் காற்றைத் தேடித் திணறிக்கொண்டிருந்தாள். உடனே தாதி ஒருத்தி, ‘பல்ஸ் ஆக்சிமீட்டர்’கருவியை விரலில் பொருத்தி, இரத்தத்திலுள்ள பிராணவாயுவைச் சோதித்து, அதன் அளவை பதிவேட்டில் குறித்து, கவலையுடன் டாக்டரின் உடனடிக் கவனத்திற்குக் கொண்டு சென்றாள். டாக்டர் ஈஸ்வர், நோயாளின் பதிவேட்டைப் படித்துப் பார்த்தார். தாதி எழுதாமல் விட்ட,(2)‘Hypoxemia’ என்ற பதத்தை பதிவேட்டில் எழுதி, நோயாளியின் இரத்தத்திலுள்ள ஆக்ஸிஜன் அளவு 70 ஆக குறிப்பிட்டிருப்பதைப் பார்த்தார். 95-ஆக இருக்க வேண்டியது குறைந்தபட்ச அளவு! மிகவும் பலஹீனமான உடல்! உயிர்ப் பிழைப்பது அவளின் கையிலிருந்து நழுவிப் போய்க்கொண்டிருந்ததால் இனி, உடனடிச் சிகிச்சையிலேயே அது இருந்தது பதற்றத்தைக் கொடுத்தது. ஆனால், அச்சிகிச்சையை அளிக்க எதிர்மறைக் காற்றழுத்த வார்டிலோ ஒரு கட்டிலும் காலியாக இருக்கவில்லை! பொதுஜன வார்டு போலில்லாமல். அந்தப் பிரத்தியேக வார்ட்டில் ஒரு கூடுதல் கட்டில் என்பது, அதற்கானப் பிரத்தியேக இடம்; (3)Ventilator என்ற ‘சுவாசக் கருவி’; இதயத் துடிப்பின் வேகம், அதன் சீர்ப்பிரமாணம், இரத்த அழுத்தம் மற்றும் சுவாச விகிதம் போன்றவற்றைக் காட்டும் ‘டிஜிடல் மானிட்டர்’ என பல முக்கியமான கருவிகளும் சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்ததால் மருத்துவமனை அப்போதிருந்த நெருக்கடியில் உடனடியாக ஒரு கட்டிலையும், அந்த அத்தியாவசிய உபகரணங்களையும் பெறுவது மிகவும் சிரம சாத்தியமாக இருந்தது.

கட்டிலுக்குக் காத்திருக்கும் நேரத்தில் டாக்டர் ஈஸ்வர், உடனடியாக ஆக்ஸிஜன் சிலிண்டர் வழி தற்காலிகச் சுவாசச் சிகிச்சைக்கு உத்தரவிட்டார்.

நல்ல வேளையாக, ஆமாம்… நல்ல வேளையாகத்தான், கொஞ்ச நேரத்திலேயே ஒரு நோயாளியின் மரணத்தில் எமிக்கு அந்த எதிர்மறைக் காற்றழுத்த வார்ட்டில் ஒரு கட்டில் கிடைத்தது! அவளின் நிலைமை கொஞ்சம் சீர் பெற்றவுடன் மார்பு மற்றும் நுரையீரலின் பாதிப்பைத் தெரிந்துகொள்ளத் தேவையான ஸ்கென்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. மற்ற நிபுணத்துவ டாக்டர்களுடன் கலந்தாலோசித்ததில், செயற்கைச் சுவாசச் சிகிச்சைத் தீர்மானிக்கப்பட்டது. மயக்க மருந்து நிபுணரால் செயற்கையாகத் தூண்டப்பட்ட ‘கோமா’விற்குள் எமி கிடத்தப்பட்டாள். வாய் வழியாக குழாய் ஒன்று தொண்டைக்குள் செருகப்பட்டு, அந்தக் குழாயுடன் செயற்கைச் சுவாசக் கருவி பொருத்தப்பட்டது. உடனடியாக, சுவாசப் பணியை அந்தக் கருவி எடுத்துக்கொள்ள, சிகிச்சை ஆரம்பமானது.

எமி, நினைவு தப்பிய நிலையில் கருவியின் உதவியில் உயிரைச் சுவாசித்துக்கொண்டிருந்தாள். ஏழு நாட்களுக்கு அவள், தற்காலிகமாகச் செத்துக் கிடந்தாள்! சுவாசத்தைத் தவிர மற்ற எல்லாமே மரணத்தைத் தழுவிய நிலை! ஐந்தாவது நாள், மைக்கல் லீயும், – நாற்பது வருட துணைவியைப் பிரிந்து இருக்க முடியாதது போல் – சுய நினைவு இழந்த நிலையில் அந்தப் பிரத்தியேக சிகிச்சை வார்ட்டிற்குள் அனுமதிக்கப்பட்டார்.

ஒரே வார்டில் சில கட்டில்களின் இடைவெளியில் அந்தத் தம்பதியர் ‘கோமாவில்’, மரணித்துக் கிடந்தனர். கணவன், மனைவி இருவருமே அங்கு அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதை டாக்டர் ஈஸ்வரின் அணி முற்றாகவே உணரவில்லை! மொத்த அவசரச் சிகிச்சை வார்டின் இயல்பான செயல்முறைகள்கூட மிகுந்த சமரசத்திற்குள்ளான நிலையில், சில தகவல்களைக் கண்காணிப்பதில் கவனக்குறைவு ஏற்பட்டுப் போவதை அவர்களால் தடுக்க முடியவில்லை.

ஏழாவது நாள், லீ மயக்கத்திலிருந்து மீண்ட சில மணி நேரத்திற்குப் பின்னர் மனைவியைப் பற்றிக் கேட்டபோது, டாக்டர் ஈஸ்வரின் அணி நிலைகுலைந்து போனது. தடுமாற்றத்தில் அவரின் மனைவி யாரென்றுத் தெரியாமல் திகைத்தனர். உடனே கம்ப்யூட்டரில் தேடிப் பார்த்து, ஒரே முகவரியிலிருந்து, அவரின் மனைவி யாரென்பதைக் கண்டுப் பிடித்தபோது, எமியின் மரணம் அவர்களுக்கு என்றோ மறந்து போயிருந்தது. உடனே டாக்டர், ஒரு ஃபைலைப் பார்க்கும் பாவனையில் அருகிலிருந்த தாதியிடம் ‘எமி நலமுடன் இருப்பதாக’ எழுதிக் காட்டச் சொல்லி முணுமுணுத்தார். அந்தத் தாதி, ஒரு வெள்ளைத்தாளில்,‘Dia sihat. Dah balik rumah..’ (அவர் நலமாக இருக்கிறார். வீட்டிற்கு போய்விட்டார்) என்று மலாய் மொழியில் எழுதிக் காட்டினாள். ஒரு வார செயற்கைச் சுவாசத்தில் லீயின் முகம் வெளுத்து, மரத்துப் போய், சவத்தின் களையில் இருந்தது. ஆனால், வெளிறிப் போனக் கண்கள், கண்ணீரை மட்டும் நிறையவே வடித்தன!. டாக்டர் ஈஸ்வர், நன்றியுணர்ச்சியில் லீ ஆனந்த கண்ணீர் வடிப்பதாகப் புரிந்துகொண்டு, தாதி வெள்ளைத்தாளில் எழுதிக் காட்டிய பொய், ‘White Lie’ என்ற பதத்தை டாக்டருக்கு நினைவூட்டியதால், லீயைப் பார்க்கப் பொறுக்காமல் கண்கள் கலங்க, அங்கிருந்து விலகிப் போனார்.. அவரின் இதயம், மிகுந்த வேதனையை நிரப்பிக்கொண்டுத் திணறியது.

* * *

டாக்டர்!..

ஈஸ்வர், சிறுவயது முதலே படிப்பில் ஆர்வமுள்ள சிறுவனாக இருப்பதைக் கண்டதும், ‘நீ நல்லா படிச்சி பெரிய டாக்டரா வரனும்..’என்பதே அம்மாவும், உறவினர்களும் அவனிடம் பரிந்துரைத்த ஒரே உத்தியோகமாக இருந்தது. அதிலும் குறிப்பாக அம்மாவிற்கு அது இலட்சியமாகவே இருந்தது. அம்மாவின் அக்கா வீட்டுப் பிள்ளைகளில் ஒருத்தி டாக்டராகியிருந்தாள். அது அம்மாவிற்கு மிகுந்த பொறாமையைக் கொடுத்தது. அதற்கேற்றார் போல் அம்மாவைப் பார்க்கும் போதெல்லாம் பெரியம்மா, தன் டாக்டர் மகளின் பெருமையைப் பேசி, அந்தப் பொறாமையைத் தூண்டிவிட்டுக்கொண்டே இருந்தாள். அதனாலேயே அவளின் வரவை அம்மா வெறுத்தாள். பெரியம்மா வந்து போன போதெல்லாம் அம்மா ஈஸ்வரைக் கட்டி அணைத்துக்கொண்டு, ‘தானும் அப்படி பெரியம்மாவிடம் பெருமை பேசும்படி அவன் டாக்டராக வேண்டும்’ என்று, வேண்டிக்கொண்டாள். அதற்கேற்றார் போல் ஈஸ்வரும் டாக்டரானப் போது, பெரியம்மாவின் குடும்பத்தை வீட்டிற்கு அழைத்து, விருந்து வைத்து அந்தப் பெருமையைக் கொண்டாடித் தீர்த்தப் போதே அம்மாவின் பொறாமைக் குணம், திருப்தியில் தணிந்தது.

ஈஸ்வருக்கு, ஐந்து வருட குத்தகையில் தற்காலிக டாக்டராகவே செர்டாங்க அரசாங்க மருத்துவமனையில் வேலைக் கிடைத்தது. எனினும் அந்தத் தற்காலிக ஒப்பந்தத்தைப் பற்றியெல்லாம் ஈஸ்வர், பெரிதாய்க் கவனத்தில் கொள்ளவேயில்லை. ‘வெறும் ஊதியத்திற்கு செய்யும் உத்தியோகமா அது? அம்மா, தன் ஆசீர்வாதத்தால் தூவிய அட்சதையல்லவா!.’ அந்த உத்தியோகத்திற்கென்றே அம்மா செதுக்கிய சிலை அவர்!. ஈஸ்வரும், அச்சேவைக்கு தன்னையே அர்ப்பணித்து , அம்மாவை பெருமையில் ஆழ்த்தி மகிழ்ந்தார். ஈஸ்வரைப் பொறுத்தவரை அணிந்துக்கொண்ட மருத்துவ அங்கியின் வெள்ளை நிறத்தின் அர்த்தம், அர்ப்பணிப்பு; தூய்மை; பிறர்நலம் பேணுதல் என்பதாகவே இருந்ததால் அங்கியை அணிந்துகொண்ட அடுத்தக் கணமே அவர், நேரத்தை; தன்னை; தனது தேவைகளை; குடும்பத்தை மறந்தார். அந்தச் சேவைக்கும் ஒரு நேரக் கணக்கீடு இருந்தாலும் அது, அவருக்குத் தேவைப் படவில்லை! அவர் நோயாளிகளுடன் இருக்க விரும்பினார். தனது கனிவானப் பேச்சும், தான் எழுதிக் கொடுக்காத ஒரு மருத்துவ சிகிச்சையே என்பதில் தீவிர நம்பிக்கை கொண்டிருந்தார். மருத்துவப் பயிற்ச்சியின் போது, தனது சுயத்தேடலில் Dr. Bruce H. Lipton எழுதிய The Biology Of Belief போன்ற மாற்று மருத்துவச் சிகிச்சை வழிமுறைகளையும் படித்துத் தன்னை வித்தியாசப்படுத்திக் கொண்டிருந்தார். அதனால், கடிகாரம் காட்டும் நேரம் அவருக்கு அநாவசியமாகிப் போனது. அவருக்கு கல்யாணமாகாமல் இருந்தது அதற்கு இன்னும் உதவிகரமாய் இருந்தது. தாயும்; தம்பியும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே ஞாபகத்திற்கு வந்த உறவுகளாய் இருந்தனர்.

ஆனால், அவசரச் சிகிச்சைப் பிரிவிலிருந்து கொரோனா வார்ட்டிற்கு மாற்றப்பட்ட இந்த ஒரு வருஷத்திற்குள்ளேயே மருத்துவப் பணிமேல் தனக்கிருந்த லட்சிய வேட்கையும்; அர்ப்பணிப்பும், குறைப்பட்டுக்கொண்டு வருவதைக் கலக்கத்துடன் உணர்ந்து, கலவரமுற்றார் டாக்டர் ஈஸ்வர்! தனது பணியில் மரணங்களைச் சந்திப்பது ஒன்றும் அவருக்குப் புதியதல்ல!. அவசரச் சிகிச்சைப் பிரிவில் அவற்றை நிறையவே பார்த்துவிட்டார். ஆனால், போதுமான உபகரணங்கள் மற்றும் உடனடி சிகிச்சை அளிப்பதற்கு வேண்டிய உரிய இடம் இல்லாததால் சம்பவித்த மரணங்களைப் பார்ப்பது புதிதாக இருந்தது. தான் கற்ற மருத்துவ சாஸ்திரத்திலே அத்தகைய மரணங்களுக்கெல்லாம் நியாயமே இல்லையே என்று சுயவிமர்சனம் செய்துக்கொண்டு வருந்தினார்!. அந்தப் புதிய கொரோனாத் தொற்று மருத்துவமனையிலிருந்த பல பற்றாக்குறைகளையும்; பலவீனங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்து காட்டியது.

கொரோனா வார்ட்டிலே பணியிலிருந்த சிலரோ, அடிக்கடி மரணங்களைப் பார்க்கும் அழுத்தம் தாங்க முடியாமல் உடனடியாக வேலையை ராஜினாமா செய்துக்கொண்டிருந்தனர். அதனால், எஞ்சிய மருத்துவ ஊழியர்களின் நிலைமை இன்னும் அதிக அழுத்தத்திற்குள்ளானது. வேலை முடிந்து வீட்டிற்குப் போவது போய், வேலை முடியாமல் வேலைக்கிடையிலேயே தூங்கி எழும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். நோயின் தீவிரத் தொற்றுத் தன்மையால் பலர், வீட்டிற்குப் போவதையும் அவர்களாகவே தவிர்த்துக் கொண்டனர். திருமணமாகிக் குழந்தைகளிருந்த பல தாதியர், பல வாரங்களாகக் கைப்பேசி வாயிலாகவே வீட்டிலிருந்த கணவன் மற்றும் குழந்தைகளுடன் கலந்துறவாடிக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டனர். கைப்பேசித் திரையில் தெரிந்த அம்மாவின் உருவத்தைப் பார்த்தக் குழந்தைகள், “அம்மா!..” என்று கைகளை விரித்து, அணைத்துக்கொள்ள ஓடி வந்தபோது, அவர்களை ஏந்தி கொஞ்ச முடியாமல் தாயுள்ளங்கள், கண்ணீரில் உடைந்து தேம்பின. குடும்பப் பாசத்தின் ஏக்கத்தில், வேலையில் அவர்களுக்கிருந்த ஊக்கமும்; மன உறுதியும் தளர்ந்துக் கொண்டிருப்பதைப் பார்த்த டாக்டர் ஈஸ்வர், மிகுந்த மனச்சங்கடத்திற்குள்ளாகிக் கலங்கினார்.

நோய்க்குச் சிகிச்சைப் பெற்றுக் குணமாகி, வீட்டிற்குப் போக வந்தவர்கள், அந்த நினைப்பிலேயே கொத்துக் கொத்தாகச் செத்துக்கொண்டிருந்தனர். நாடளவில் இறப்பு விகிதம் ஆயிரங்களைக் கடந்திருந்தது. ஈஸ்வரின் தீவிரச் சிகிச்சை வார்டில் மட்டுமே ஐந்திற்கும் குறையாத மரணங்கள் இப்போது, வாரமும் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. முன்பெல்லாம் எப்போதோ நிகழ்ந்து, தாங்கவொண்ணாத் துயரத்தைக் கொடுத்த மரணங்கள் இப்போது, நிகழ்ந்த அடுத்தக் கணமே இன்னொரு நோயாளிக்கு இடம் கிடைத்த ஆசுவாசத்தை கொடுக்கும் அவலத்திற்கு நிலைமைச் சீர்கெட்டுப் போனது. எல்லா இறப்புச் சாங்கியங்களும் மின்சுடலை வளாகத்திலேயே செய்துமுடிக்கப்பட்டு, உடல் சாம்பலாக்கப்பட்டது. வாழ்ந்த வீட்டிலிருந்து மாயானத்திற்கு செல்லும் மரியாதையெல்லாம் பலருக்கு வாய்க்கவில்லை!

தொற்று மோசமாகி சிகிச்சைக்கு வரும் புதிய நோயாளிகள், தீவிரச் சிகிச்சை வார்ட்டில் படுக்கை காலி இல்லாத நிலையில் வரந்தாவிலேயே தள்ளு வண்டிகளிலும், சக்கர நாற்காலிகளிலும் படுத்துக் கிடந்தனர். யாராவது நோயாளிகள் செத்துப்போயோ அல்லது குணமாகியோ காலியாகும் கட்டில்களுக்காக அவர்கள் காத்திருந்ததைப் பார்த்த போதெல்லாம் டாக்டர் ஈஸ்வர், நெஞ்சம் பதறித் துடித்தார். வசதியுள்ள சிலர், கட்டில் கிடைக்கும் சாத்தியமே இல்லையென்பது உறுதியானபோது, உடனே தனியார் மருத்துவமனைகளைத் தேடி, ஓடினர். நோயின் தீவிரத்தைவிட உடனடிச் சிகிச்சை அளிக்கமுடியாத போதாமையிலேயே, காப்பாற்றியிருக்கக்கூடிய பல உயிர்களைப் பரிதாபமாக இழக்கவேண்டி வந்தது ஈஸ்வரை மிகவும் சஞ்சலப்படுத்தியது. அவரின் கண்ணெதிரே நிகழ்ந்த மரணங்கள் பின்னர், வெறும் புள்ளிவிபரத்திற்கு தேவைப்படும் தகவல்களாய் மலினப்பட்டுப் போனது அதிர்ச்சியைத் தந்தது.

ஆனால், அதில் சில மரணங்கள் குடும்பத்தில் எஞ்சிய மற்றவர்களின் ஜீவிதத்தையே கேள்விக்குள்ளாக்கியதை பலரும் உணரவேயில்லை. தாய், தந்தை இருவரையுமே இழந்தக் குழந்தைகள்: அடுத்த வேளை உணவிற்கு உத்தரவாதம் அளிக்க சம்பாதித்துக்கொண்டிருந்த ஒரே ஜீவனையும் பலிகொடுத்தக் குடும்பங்கள்; கணவனுக்குத் தெரியாமல் இறந்த மனைவி; மனைவியாவது இருக்கிறாளே என்ற நம்பிக்கையுடனேயே இறந்துப் போன கணவன்; பிள்ளை இறந்தது தெரியாத பெற்றோர் என்று மரணங்கள் கொடுத்த அடி, கடவுள் எழுதிவைத்த தலைவிதியையே அழித்துப் போட்டது!.

* * *

நேற்று!..

அது ஒரு பாழாய்ப்போன நாள் என்பதுபோல் கொரோனா சிகிச்சைக்குப் பேர்போன செலாயாங் அரசாங்க மருத்துவமனையில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று, நாட்டின் எல்லா ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாய் பற்றிக்கொண்டு எரிந்தது.

மிகவும் மோசமான நிலையில் ஒரு 65 வயது முதியவர் செலாயாங் அரசாங்க மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டிருக்கிறார். அவருக்கு ஆயுள் கெட்டி என்பதுபோல் அவர் வந்த நேரம், தீவிரச் சிகிச்சை வார்ட்டில் ஒரு கட்டில் காலியாக இருந்தது. பணியிலிருந்த டாக்டர், அந்த முதியவரை சிகிச்சைக்கு ஆயத்தம் செய்துக்கொண்டிருக்கும் போதே, இளம் தாயொருத்தியும் சுவாசத்திற்குப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் அதே மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டாள். சில நிமிடங்கள் முன்னனியில் அந்த முதியவர் வந்திருந்ததால் அவருக்கு முதலில் சிகிச்சை ஆரம்பமானது. அந்த இளம் தாய், கொஞ்ச நேரம் காத்திருப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. சிறிது நேரத்தில் அத்தாயின் பதிவேட்டைப் பார்த்த டாக்டர், திடுக்கிட்டுப் போனார். அவளுக்கு வயது இருபத்தெட்டுதான் ஆகியிருந்தது!. ஆனால் அதற்குள் அவள், நான்கு; மூன்று; இரண்டு என்ற வயதுகளில் மூன்று பிள்ளைகளுக்குத் தாய்!, முதியவருக்கு பதில், அந்த இளம் தாயை முதலில் சிகிச்சைக்கு அனுமதித்திருக்க வேண்டுமோ என்று டாக்டர் சஞ்சலம் கொண்டார். பதற்றம் அவரைப் பற்றிக்கொண்டது. சற்று முன்னர், ஆயுள் கெட்டி என்பதுபோல் வந்த உடனேயே கட்டில் கிடைத்த முதியவர், அவருக்கிருந்தப் பிற மருத்துவச் சிக்கல்களால் அரைமணி நேரத்திற்குப் பின்னர், சிகிச்சைப் பலனளிக்காமலேயே இறந்து போனார். அந்த மரணத்தில் அந்த இளம் தாய் ஆசீர்வதிக்கப்பட்டதுபோல், உடனே, அந்தக் கட்டிலுக்கு அவள் ஆயத்தம் செய்யப்பட்டாள். ஆனால் பாவம், வாழ்வதில் அவளுக்கு அப்படி என்ன வெறுப்போ? சிகிச்சை அளிப்பதற்குள்ளாகவே அவளும் அவசரமாய்ச் செத்துப் போனாள். பணியிலிருந்த டாக்டர் மிகுந்த விமர்சனத்திற்குள்ளானார். சம்பந்தப்பட்ட டாக்டர், இந்தியராகவும் ; முதலில் சிகிச்சையளிக்கப்பட்ட முதியவர் சீனராகவும்; இறந்துப் போன இளம் தாய் மலாய்க்காரியாகவும் இருந்ததால் அது ஓர் இனப் பிரச்சினை ஆக்கப்பட்டு கொந்தளித்தது. அந்த டாக்டர் இனவாதக் கட்சியினரால் அச்சுறுத்தலுக்காளானார்.

மறுநாளே, சுகாதாரத் தலைமை இயக்குநரிடமிருந்து ஒரு செய்தி, பொது ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகவும், எல்லா அரசாங்க மருத்துவர்களுக்கு மின்னஞ்சல் சுற்றறிக்கையாகவும் வெளியானது.

‘டாக்டர்கள், கொரோனா நோயாளிகளை அவசரச் சிகிச்சைக்கு அனுமதிக்கும் முன்னர், அவர்களின் வயது, நோயின் தீவிரம், சிகிச்சையைத் தாங்கிக்கொள்ளும் பலம், உயிர்ப் பிழைக்கும் சாத்தியம் போன்ற பிற தகவல்களையும் கவனத்தில் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். முதிய வயதினர் கொரோனாவிலிருந்து உயிர்ப் பிழைக்கும் சாத்தியம் குறைவாக இருக்கும் பட்சத்தில், இட நெருக்கடி உள்ள மருத்துவமனைகளிலுள்ள டாக்டர்கள், இளம் வயதினருக்கு முன்னுரிமைக் கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். .’

தனது பதில் அஞ்சல் மூலம் அந்தச் சுற்றறிக்கையைப் பெற்றுக்கொண்ட ஒப்புதலைத் தெரிவித்துவிட்டு டாக்டர் ஈஸ்வர், அதைப் படித்துப் பார்த்ததும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகித் தவித்தார். அவர் கற்ற மருத்துவக் கல்வியிலே மனித உயிர்களுக்கிடையே பாராபட்சம் கற்பிக்கப்பட்டதில்லை. ஒவ்வொரு உயிரும் எப்படியாவது காப்பாற்றப்பட வேண்டியது என்றே போதிக்கப்பட்டிருந்தது! அங்கே தேர்வுக்கு இடமே இருந்ததில்லை!

அவரின் கண்கள் தாமாகவே எதிரிலிருந்தச் சுவரை நோக்கின. கண்களில் தெரிந்த காட்சி, கருத்தில் பதிந்தது. அது வெறும் சுலோகம் அல்ல! 2015 -ல் அவருக்கு மருத்துவப் பட்டம் கிடைத்ததும், மிகவும் இலட்சிய வேட்கையுடன் வாங்கி, கண்ணாடிப் பிரேம் போட்டு, வேலைக் கிடைக்கும்வரை வீட்டு ஹாலிலும், வேலைக் கிடைத்தப் பின்னர் இந்த அலுவலகச் சுவரிலும் மாட்டி வைத்த இருமொழி மருத்துவ நன்னெறிக் கோட்பாடு!. ஒவ்வொரு நாளும் வேலையைத் தொடங்கும் முன், அவர் ஓதிய வேதம்!..

‘CODE OF ETHICS FOR DOCTORS – மருத்துவர்களுக்கான நன்னெறிக் கோட்பாடு

AUTONOMY – சுயமாக முடிவெடுத்தல்

BENEFICENCE – பிறர் நலம் பேணுதல்

NON-MALEFICENCE – தீங்கு செய்யாமை

JUSTICE – நியாயத்தை பரிபாலித்தல்’

ஒரு நோயைக் குணப்படுத்தும் ஆற்றல், டாக்டரின் கையில் இருக்கும் அறுவைச் சிகிச்சைக் கருவியிலோ, கொடுக்கும் மருந்து, மாத்திரையிலோ மட்டுமே இல்லாமல் அது, அவர் காட்டும் அன்பு; அரவணைப்பு; பரிவு மற்றும் விவேகத்திலும்கூட இருக்கிறது என்பதே ‘Biology of belief’ என்ற மாற்று மருத்துவக் கொள்கை, டாக்டர் ஈஸ்வருக்குக் கற்றுக்கொடுத்திருந்த பாடம்.

ஒரு நோயாளி என்பது அவர் காலடியில் மாட்டப்பட்டு பெயர்; வயது; நோய் விபரம்; நாடித்துடிப்பு; ரத்த அழுத்தம்; உடல் உஸ்ணம் ஆகியவை குறிக்கப்பட்ட வெறும் மருத்துவ அட்டவணையல்ல, ஒரு ஜீவன்!.. அதற்கென்று ஒரு வாழ்க்கை! அதனை மட்டுமே நம்பியிருக்கும் சில உறவுகள்! அது இல்லாது போகும் பட்சத்தில் சின்னாபின்னாமாகிப் போகும் குடும்பம் என்று ஒரு பெரிய கூட்டமைப்பே அதனைச் சுற்றி இருக்கையில் வெறும் வயது, ஒருவரின் உயிர் வாழ்தலை நிர்ணயிக்கும் அளவுகோலான அவலத்தை நினைத்து டாக்டர் ஈஸ்வரின் மருத்துவ இதயம், நிம்மதியிழந்து அரற்றியது. அதிலும், அந்தக் கொடுமையை, உயிரைக் காக்கப் படித்த ஒரு மருத்துவரிடமே விட்டதை நினைத்து ஆத்மவிசாரம் கொண்டு கலங்கினார். அந்த ஆத்ம துரோகத்தைச் செய்ய அவருக்கு மனம் ஒப்பவில்லை. மன அழுத்தத்தில் உடல் பதறத் தொடங்கியது.

அப்போது, நர்ஸ் ஒருத்தி ஓடி வந்தாள்.

“ டாக்டர், ஒரு (4)Warga Emas பேஷண்ட்.. வந்து அரைமணி நேரமாச்சி!. ஆக்ஸிஜன் சிலிண்டர்ல இமேர்ஜன்சி தெராபி போயிட்டுருக்கு. ஆனா, நெலமய பாக்க பயமா இருக்கு! இப்பதான் கட்டில் ஒன்னு காலியாச்சி. ஆனா, இளம் வயசு தாய் ஒருத்தியும் அதே கண்டிஷன்ல ஆக்ஸிஜன் சிலிண்டர் தெராபில இருக்காங்க. அவுங்க நெலமையும் அவ்ளோ நல்லா இல்ல! நீங்க என்ன சொல்றீங்க்? யார அட்மிட் பண்ணட்டும்?..” என்று பதற்றத்தில் தவித்தாள்.

ஆபத்து என்று வரும் எல்லா உயிர்களையும் பாராபட்சமில்லாமல் காப்பாற்ற வேண்டிய டாக்டரிடம், யாரைச் சாக விடுவது என்ற தேர்வு வைக்கப்பட்ட கொடூரம் நெஞ்சை அடைத்தது. டாக்டர் ஈஸ்வர், தாதியையே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டு நின்றார். அவரின் கண்கள் தாமாகவே சுவரில் தொங்கிய நன்னெறிக் கோட்பாட்டைப் பார்த்தன.

யாருடைய உயிர் பிரதானம்! யாருக்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகம் என்று சோதனைச் செய்துப் பார்க்கவெல்லாம் டாக்டர் ஈஸ்வர் தயாராக இல்ல!. அந்த முதிய நோயாளியே முதலில் வந்ததாகவும், கடந்த அரைமணி நேரமாகவே பேசக்கூட முடியாத மயக்கத்தில் அட்மிஷனுக்குக் காத்திருப்பதாக நர்ஸ் சொன்னாள். டாக்டரைப் பொருத்தவரை இருவருமே உடனடியாக அனுமதிக்கப்பட வேண்டியவர்களே! ஆனால், மருத்துவமனையில் இடம் பற்றாக்குறையாக இருந்ததால் நிர்வாகம் ஒரு தேர்வைப் பரிந்துரைத்தது!. முடிவு டாக்டர் ஈஸ்வரின் கையில்!. நர்ஸ், அவரின் பதிலுக்காக தவித்துக் கொண்டிருந்தாள்.

“பிளீஸ், மேனேஜ்மண்ட் சொல்றாப்ல அந்த இளம் பேஷண்டையே மொதல்ல அட்மிட் பண்ணுங்க.”

அவள் உடனடியாக அட்மிஷன் அறைப் பக்கம் ஓடினாள்.

தாதி, போகும்போது டாக்டரின் நிம்மதியையும் உருவிக்கொண்டு போனதுபோல் அவர் அமைதியிழந்து தவித்தார். முதிய நோயாளியே ஆனாலும் இன்னும் வாழ வேண்டிய ஆசையில் அவர், டாக்டரிடம் உயிர்பிச்சைக் கேட்டுக் கெஞ்சுவதுபோல் ஒரு பிரம்மை!. வீட்டில், முதுமையில் தளர்ந்துபோன அவளின் அரவணைப்பையும் வேண்டி கணவன், மகள், மகன், பேரப்பிள்ளைகள் என்று எத்தனை உயிர்கள் காத்திருக்கின்றனவோ! பாட்டி என்றால் பேரப்பிள்ளைகள் உயிரையே வைத்திருப்பார்களே!.. ‘அந்தப் பாட்டிக்கு ஏதாவது அசம்பாவிதம் என்றால்…’ நினைத்துப் பார்க்கவே சகிக்காமல் டாக்டர் தலையைச் சிலிர்த்துக்கொண்டார். தனது இரண்டு கரங்களையும் பார்த்தார். சிசுஹத்தி செய்தக் கரங்களைப் போல் அவை நடுங்கிப் பதறின.

அவர் மிகுந்த பதற்றத்திற்குள்ளாகித் துடித்தார். உடைந்து நொருங்கிப்போகும் விளிம்பில் அவர் தத்தளித்துக்கொண்டிருந்தார். நினைவெல்லாம் அந்த முதிய தாயே, உயிர்ப் பிச்சைப் போடச்சொல்லி மன்றாடிக்கொண்டிருந்தாள்! உயிரைத் தேர்வு செய்து காப்பாற்றும் அநியாயத்திற்கு தான் கீழ்ப்படிந்துப்போன சங்கடத்தை எண்ணிக் கலங்கினார். அந்தப் பரிந்துரைக்குப் பணிந்து, உத்தியோகம் என்ற பெயரில் தினமும் செய்யவேண்டி வரும் அகோரம், ஒரு பிரம்மஹத்தி தோஷம்!.

‘ஐயோ அம்மா, இதற்காகவா என்னை டாக்டருக்குப் படிக்கச் சொன்னாய்?..’

டாக்டர் ஈஸ்வர், நேராகக் கழிப்பறைக்குப் போனார். முதலில், சிறுநீர் கழித்து, நீண்ட நேரச் சங்கடத்தைத் தணித்தார். கொஞ்ச நேரம், தன் பிம்பத்தையே கண்ணாடியில் பார்த்துக்கொண்டு நின்றார். தனது சேவா சொரூபத்தைக் கண்ணாடியில் தேடினார். ‘நானா இது?..’ ஒரு முடிவின் தீர்மானம் மட்டுமே கண்ணாடியில் தீர்க்கமாய்த் தெரிந்தது. கடைசித் தடவையாகத் தனது மருத்துவ உடைகளைக் களைவதுபோல் நிதானமாக அவற்றைக் களைந்தார்; கைகளில் ஏந்திக்கொண்டு அப்படியே நின்றார். அந்த உடைகளை ஏந்தக் கைகள் நடுங்கின. அந்த உடைகளுக்குப் பெருமைச் சேர்க்க முடியாத தோல்வியில் கண்கள் கலங்கின. தனது இலட்சிய வேட்கையின் சுவடு தெரியாமல் அடியோடு துடைத்தெடுப்பதுபோல், முகத்தை நன்றாகச் சோப்புப் போட்டுக் கழுவிக்கொண்டார். கழிப்பறையின் டெட்டால் வாசம் நாசியில் எரிந்தது. வெறும் உடலாய்த் தன் அலுவலகத்திற்குத் திரும்பினார். எதிரே, சுவரில் நன்னெறிக் கோட்பாட்டுப் போஸ்டர், சமநிலை நழுவி, சற்றே சாய்ந்துக் கிடந்தது. அந்தப் பிசகு, இவ்வளவு நாட்களாகத் தன் கண்களுக்குத் தெரியாததை நினைத்துக் குழம்பினார். அதைச் சுவரிலிருந்து அகற்றிக் கொண்டிருந்தபோது, அந்த நர்ஸ் இன்னும்கூடப் பதற்றம் குறையாமல் மீண்டும் வந்து நின்றாள்..

“டாக்டர், ஆக்ஸிஜன் தெராபி போயிட்டு இருக்கும்போதே அந்த ‘வார்கா ஏமாஸ்’ பேஷண்டோட உசுரு போச்சு டாக்டர். பாடிய மார்ச்சரிக்கு அனுப்பி வெச்சிட்டோம். மேட்ரன், அந்த இளம் தாய வென்டிலேஷன் தெராபிக்கு தயார் பண்ணிட்டாங்க.. உங்களுக்காகத்தான்…” சொல்லிக்கொண்டிருந்தவள், டாக்டர் மருத்துவ உடையில் இல்லாததும், போஸ்டரை நீக்கிக் கொண்டிருப்பதையும் உணர்ந்து அப்படியே ஸ்தம்பித்து நின்றாள்.

ஈஸ்வர், நர்ஸிடம் தலைமைத் தாதியை அழைக்கும்படி சொல்லிவிட்டு, அந்த மூத்தப் பேஷண்டுக்கு உடனடியாக உரிய சிகிச்சை அளிக்கமுடியாத மருத்துவமனை நெருக்கடியை நினைத்து மனம் வெதும்பிக் கசந்தார். வெறுப்புடன் தன் கைகளைப் பார்த்தார்… அந்த முதியவரின் தலைவிதியை முடித்து வைத்தப் பாவத்தின் கிறுக்கல்களைப் போல் அவரின் உள்ளங்கை ரேகைகள் பின்னிக் கிடந்தன!. தலைமைத் தாதி, கலவரத்துடன் விரைந்து வந்தாள்.

“சாரி மேட்ரன். என்னால இந்தக் ‘பிரஸ்ஸரை’ தாங்க முடியில. நான் இப்பியே வேலைய ‘ரிசைய்ன்’ பண்ணறேன். எமேர்ஜன்சீன்னு வர்றவங்களுக்கு ஒடனே டிரீட்மண்ட் கொடுத்து அவுங்க உயிர காப்பாத்தனும். அதுதான் நான் படிச்ச படிப்பு. வயசானவங்களா, இள வயசுகாரங்களா; பொழைப்பாங்களா.. மாட்டாங்களான்னு செக் பண்ணிப் பாத்துட்டு, அப்புறமா டிரீட்மண்ட் பண்ணறதெல்லாம் எப்படீன்னு எனக்குத் தெரியில. 60 வயசுக்கு மேல உள்ளவங்க உயிர ரெண்டாம் பட்சமாக பார்க்குற பாவத்தை எல்லாம் என்னால செய்யமுடியாது. கடவுள போல வந்து காப்பாத்துனிங்கன்னு கையெடுத்து கும்புடுவாங்களே! அப்படிப்பட்ட உத்தியோகமாச்சே இது!.. ஐயோ கடவுளே!. வீணா ஒரு உயிர பலி வாங்கிட்டனே!. அந்தக் குடும்பத்துல உள்ளவங்க மொகத்த எப்படி பார்ப்பேன்?.. மேனேஜ்மெண்ட் சொல்றபடி டியூட்டிய செய்ய முடியாட்டி, பேசாம நின்னுக்கிறதுதானே நல்லது. இந்தாங்க, என்னோட ‘ரெசினேஷன்’ லெட்டரு. தயவு செஞ்சி இத பெரிய டாக்டர் கிட்ட குடுத்துருங்க. உங்களயெல்லாம் இப்பிடி ‘அம்போ’ன்னு உட்டுட்டு போறதுக்கு என்ன மன்னிச்சிடுங்க.. இதுக்கு மேலயும் நான் இங்க வேல செஞ்சன்னா, எனக்கு பையித்திமே புடிச்சிரும்…”

இடது கையால் வாயைப் பொத்தியபடி, கலங்கிய கண்களுடன் தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு ஈஸ்வர், கார் பார்க்கிலிருந்த தன் வாகனத்திற்குப் போனார். கொஞ்ச நேரம் காரிலேயே உட்கார்ந்துகொண்டு யோசித்தார். அந்த இளம் தாயின் உயிரையும் தான் பணயம் வைத்துவிட்டதுபோல் நெஞ்சு வலித்தது. ஆயினும், தான் அப்போதிருந்தப் பதற்றத்தில் தன்னால் ஒரு நல்ல சிகிச்சையை அளிக்க முடியாதென்று தேற்றிக்கொண்டார். ஈஸ்வர், நிதானமாக வாகனத்தை ஓட்டிக்கொண்டு பார்க்கிங்கிலிருந்து வெளியே வந்தார். எதிரே, மேட்ரன், தன்னை நோக்கி விரைந்து வருவதைப் சலிப்புடன் பார்த்தார். அவள், பெரிய டாக்டரிடமிருந்து ஏதோ ஓர் எச்சரிக்கையுடன் வருவதுபோல் ஈஸ்வருக்குத் தோன்றியது. வாகனத்தை ஓர் ஓரமாக நிறுத்தினார்.

“டாக்டர், உங்களுடைய ஹெண்ட் போன் என்ன ஆச்சி?”

“ஏன், என்ன விஷயம்? கொரோனா பெண்டமிக் ஆரம்பிச்சதிலேர்ந்தே வேல நேரத்துல ஹெண்ட் போன நான் ஆன் பன்றது இல்லியே!. ஏன், பெரிய டாக்டர் என்ன வரச்சொன்னாரா? இல்ல மேட்ரன். நான் வர்றதா இல்ல. நான் முடிவு பன்னிட்டேன். பிளீஸ், என்ன விட்டுருங்க!. ஐம் லீவிங் ஃபார் குட்”

“அது இல்ல டாக்டர்!.. மார்ச்சரிலேர்ந்து ஒரு கால் வந்துச்சி. கொஞ்ச நேரத்துக்கு முந்தி செத்துப்போன ‘வார்கா எமாஸ்’ ரெக்கார்டில I C E (Incase of emergency) எடத்துல உங்க ஹெண்ட் போன் நம்பருதான் எழுதியிருக்குறதா மார்ச்சரிலேர்ந்து போன் பன்னுனவங்க சொன்னாங்க..”

“ஆமாவா!.. அந்தப் பேஷண்டோட பேரு என்ன மேட்ரன்?..” அதைக் கேட்கும்போதே அவரின் குரலில் ஒருவித நடுக்கம் பற்றிக்கொண்டது..

“ மணிமேகலை A/P குமாரவேல், டாக்டர்..” – ஈஸ்வரின் நடுக்கம் நிலைக்குத்தி நின்றது.

“ ஐயோ.. அம்மா!.” – காரின் இருக்கையில் சாய்ந்துகொண்டு இரண்டு உள்ளங்கைகளாலும் முகத்தில் அறைந்துகொண்டு அழுதார்.

மேட்ரன், அங்கே நிற்கமுடியாத தர்மசங்கடத்தில் நெளிந்தாள். உடனடியாக வார்டிற்கு திரும்ப வேண்டும்.

“டாக்டர், பிளீஸ் தைரியமா இருங்க. ஐ எம் வெரி சாரி.” என்று சொல்லி, அவரின் தோளை மெல்லப் பற்றித், தன் அனுதாபத்தைத் தெரிவித்துவிட்டு நகர்ந்தார்.

ஈஸ்வர், உடனடியாகத் தன் கைப்பேசியை ஆன் செய்துப் பார்த்தார். பல மிஸ் கால்கள், தம்பியின் கைப்பேசியிலிருந்தும் வீட்டிலிருந்தும் வந்திருந்தன. கூடவே வரிசையாக பல வாட்ஸ் ஆப் குறுஞ்செய்திகள், மணியோசையுடன் பதிவாகிக்கொண்டிருந்தன. தம்பியின் ஆங்கிலமும் தமிழும் கலந்த குறுஞ்செய்திகளைத் திறந்தார்.

– ‘அண்ணா, அம்மாவுக்கு கொரோனா பாசிடீவ்? (5)Asymtomatic Case! கண்டிஷன் ரொம்ப மோசம். ஆம்புலன்ஸ்காக காத்திருக்கேன். உன்னோட ஹெண்ட் போன் என்ன ஆச்சி? கிடைக்கவே மாட்டீங்குது. ஆஸ்பிட்டலுக்கு போன் செஞ்ஜாலும் யாரும் எடுக்க மாட்றாங்க!.. ’

– ‘ஆம்புலன்ஸ் 2.30 மணிக்கு வந்துச்சு. செர்டாங் ஆஸ்பிட்டலுக்கு கொண்டு போறாங்க! பிளீஸ், உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு பண்ணு. 2.50 -க்குள் அங்கு வந்துருவாங்க… என்னைக் கூட வர்றதுக்கு உடமாட்டேன்னுடாங்க!.’

– ‘அண்ணா, உன் போன் இன்னுங்கூட கிடைக்கமாட்டீங்குது.!. அம்மா எப்படி இருக்காங்க? ஒன்றும் ஆபத்தில்லையே? சீக்கிரமா போன் பண்ணேன். பிளீஸ்!..’

ஈஸ்வர், தம்பிக்கு போன் செய்யும் தைரியம் இல்லாமல் அழுதுகொண்டே சவக்கிடங்கிற்கு ஓடினார்.

(முற்றும்)

எழுத்து,

மலேசியா ஸ்ரீகாந்தன்

012 754 6418

பின் குறிப்பு – ஈஸ்வர கடவுளின் ஐந்து முகங்களில் ஒரு முகம்

அகோரம் – அழித்தல்

மருத்துவச் சொல் விளக்கம்

  1. Negative Pressure room : எதிர்மறக் காற்றழுத்த அறை. எளிதில் தொற்றக்கூடிய நோய்க்கு ஆளானவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படும் விசேச அறை.
  2. – Hypoxemia : இரத்தத்தில் ஆக்சிஜன் குறைப்பாடு நிலை
  3. – Ventilator : செயற்கைச் சுவாசச் சிகிச்சைக் கருவி
  4. – Warga Emas (மலாய் வார்த்தை) : 55 வயதிற்கு மேற்பட்ட முதியோர்
  5. Asymtomatic Case : நோய் அறிகுறி ஏதுமற்ற நபர்

கதைக்கான விஷயங்கள் பெறப்பட்ட பத்திரிக்கைச் செய்திகள்

– “The Health Ministry has warned of possible scenarios in which doctors would have to make the difficult choice to prioritise ICU beds for patients with a high recovery potential, over patients with low recovery potential (poor prognosis),” Noor Hisham said in a press conference, as quoted by The Straits Times

– I would like to relate what happened to my brother who was a senior citizen. He, unfortunately, caught Covid three weeks ago and was hospitalised in Sg Buloh Hospital. His condition worsened after a few days and he developed breathing difficulties.

– Now comes the sad part. As the ICU was near full capacity, the doctors in Sg Buloh Hospital made the choice to prioritise the ICU beds for patients with a high recovery potential over patients with low recovery potential (poor prognosis). My brother, due to his age, was categorised in the latter group. He could not be admitted to ICU because of this. He passed away last week

Link as below.

https://www.freemalaysiatoday.com/category/nation/2021/07/08/beds-outside-hospital-a-temporary-solution-says-official/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.