வேணி

வேணியின் நிச்சயதார்த்தத்துக்கு சென்ற போது இருந்த பதட்டத்தை இப்போது நினைத்தால், எல்லாம் எவ்வளவு வெட்டி பதட்டம் என்று தோன்றுகிறது. அவளின் நிச்சயத்தன்று தான் நான் முதல்முறையாக  பொதுத்துறை வங்கிகளின் தேர்வு எழுத சென்றேன். அவசர அவசரமாக நிச்சயம் நடந்த சரவணா கார்டனிலிருந்து வசுமதியிடம் சொல்லிவிட்டு பரீட்சை நடக்கும் சென்டருக்கு சென்றேன். வேணியின் மாப்பிளையை பார்க்கவில்லை என்ற குறை பரீட்சைக்கு நடுவில் ஏதோ ஒரு கேள்விக்கு கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் எதை குறிப்பது என்று யோசிக்கையில் வந்து மறைந்தது. தூரத்தில் வேணியை பார்த்தது தான். நான்கு நாள் கழித்து பாவனியிலிருந்து வசுமதி என் வீட்டுக்கு வந்திருந்தாள். பாதி நேரம் வேணியின் மாப்பிள்ளை நல்ல கருப்பு என்று அங்கலாய்த்தாள். ஆனால் பெரிய இடம் என்று சமாதானமும் சொல்லிக்கொண்டாள். அதன்பின் ஒரு மாதத்திலேயே வேணி கல்யாண பத்திரிக்கை வைக்க எங்கள் வீட்டுக்கு அவள் அண்ணனுடன் வந்திருந்தாள்.

“எங்க ஊரு மருமகளாயிட்ட” என்று என் அம்மா சொன்ன போது வேணிக்கு ஒரே பூரிப்பு.

எங்க ஊரு என்று என் அம்மா சொன்னது கிராமமும்  இல்லாத நகரமும் இல்லாத எங்கள் டௌனை தான்.

அவளை முந்திக்கொண்டு சங்கர் அண்ணன் தான் “அம்மாங்க அம்மா இப்போ தான் எங்க குடும்பத்துல  இருந்து ஒரு ஆள் டவுனுக்கு வருது,” என்று சொல்லி புன்னகைத்தார்.

“புது சொந்தமா கண்ணு” என்று என் அம்மா கேட்டவுடன், “அம்மாங்க அம்மா” என்று ஆரம்பித்து மாப்பிள்ளை வீட்டின் மாமன் மச்சான் வரை சங்கர் அண்ணன் விளக்கினார்.

பின்னாடி நமக்கு உதவும் என்ற எண்ணத்தில் என் அம்மாவும் எல்லா விவரமும் கேட்டுக்கொண்டார்.

அதன் பின்னரும் பத்திரிகையை கொடுத்தபாடில்லை. அவர்கள் ஊர் வரலாற்றிலேயே இவர்கள் தான் மாமன் வீட்டு விருந்தை மண்டபத்தில் வைத்தது, மாப்பிள்ளைக்கு வாங்கி கொடுக்கும் ஹோண்டா கார் , எங்கள் ஊரிலேயே ஒரே காம்புண்டுக்குள் ஒரு பெரிய மண்டபமும் இன்னோர் சிறிய மண்டபமுமாக ரெட்டை மண்டபம் என்று சொல்லும் வீணா மண்டபத்தில்தான் கல்யாணம், என்று பேச்சு நீண்டது. 

கல்யாணப் புடவை நாற்பதாயிரத்துக்கு எடுத்தது, இவர்கள் மாப்பிள்ளைக்கு கொடுக்கப்போகும் பொட்டி பணம் என்று தனியாக வேணி என்னிடம் சொல்லும்போது அவள் வேறு உலகத்தில் இருப்பதாக  எனக்கு தோன்றியது.

கல்யாணக் கதை எல்லாம் பேசியாகிவிட்டபடியால் பத்திரிகையை சங்கர் அண்ணன் அப்பாவின் கையில் கொடுத்தபோது  வேறு என்ன சொல்வது என்று தெரியாமல் அப்பா ” என்ன சங்கரு நீயும் மருதாணி வச்சுக்கிட்ட” என்று சகஜமாக கேட்டார். “அம்மாங்க வேணிக்கு வச்சுவிட்டானுங்களா, பாதி செவந்திருச்சுங்க  அப்புறம் நானும் விரலுக்கு கொப்பி வச்சுக்கிட்டங்க” என்று சற்றும் விகல்பமில்லாமல் சிரித்தார் . சங்கர் அண்ணன் எப்பவும் அப்படித்தான் அவ்வளவு வசதி இருந்தாலும் எங்களுடன் சப்பணக்கால் போட்டு உட்கார்ந்துகொண்டு ஊர் கதை எல்லாம் பேசுவார். 

அம்மா அப்பாவை கும்பிட்ட வேணிக்கு “மகராசியா இரு”என்று சொல்லி அம்மா மல்லிகைச் சரத்தைத் தந்தார்.

அடுத்த வாரம் கொலுசு எடுக்க இங்கு டவுனுக்கு வருவதாக சொல்லி என்னையும் வேணி வரச்சொன்னாள்.

வேணியும் சங்கர் அண்ணனும் சென்ற பின்னர் நாங்கள் வெகுநேரம் வேணியை பற்றி தான் பேசிக்கொண்டிருந்தோம். வேணியின் நிறம், பதவிசு, ஒரு மாதிரி நேர்த்தி,  தூய்மையாக எப்போதும் இருப்பது என்று என் அம்மாவிற்கு வேணியிடம் பிடித்தது நிறைய இருந்தது.

என் அப்பா தான் மாப்பிள்ளை  வீட்டை பற்றி சொன்னார். “வேணிய கட்டுற மாப்பிளையோட தாத்தா அந்த காலத்திலேயே மலேயால வட்டித் தொழில் பண்ணுனவரு. அங்க இருந்து வரும்போது ஒரு மலேயாக்காரியும் தான் அவரோட வந்துச்சு. இங்க வந்த ஆறே மாசத்துல வலிப்புல செத்துபோச்சு. மாப்பிள்ளையோட பாட்டி தான் அடிச்சு மலேயாக்காரிய கொண்ணு போட்டுச்சுனும் செவலையான் சொல்லிக்கிட்டு திரியுவான். அந்த மலேயாக்காரி காசு தான் இப்ப இவங்க வட்டிக்கு விட்டு சம்பாதிக்கறதுனு அப்போவே பேச்சு உண்டு” என்றார்.  மாப்பிள்ளை வீடு காய்கறி மார்க்கெட்டில் வட்டிக்கு விடுவது, நகை அடமானம் வாங்குவது என்று எங்கள் டவுனில் பிரசித்தம்.

உள்ளடங்கிய ஒரு கிராமத்தில் இருந்துதான் வேணி இளநிலை பட்டப்படிப்பு வகுப்புக்கு எங்கள் கல்லூரிக்கு வந்தாள். 

அது எங்கள் ஊரில் இருந்த சுமாரான ஒரு கல்லூரி. வேறு பெரிய நகரங்களுக்கு சென்று படிக்க வசதி இல்லாத என்னைப் போன்றவர்களுக்கும், வசதி இருந்தாலும் வேணியை போல கல்யாணம் முடிக்கும் வரை ஒரு பட்டப்படிப்பு படித்தால் போதும் என்பவர்களுக்கும் ஏற்ற கல்லூரி.

பஸ் வசதி இருந்தாலும் தினமும் நாற்பது கிலோமீட்டர் போய் வர சௌகரியப்படாது என்பதால் வேணி கல்லூரி விடுதியில் தான் தங்கி இருந்து படித்தாள்

கல்லூரியின் விடுதிக்கு விண்ணப்பிக்கும்போதே சங்கர் அண்ணன் “பீஸ் அதிகமென்றாலும் பரவாயில்லை கூட ஒரு பொண்ணு மட்டும் போடுங்க” என்று சொல்லித்தான் அட்மிஷன் போட்டார். அதேபோல அனைத்து வெள்ளிக்கிழமையும், அதிசயமாக சனிக்கிழமையும் தவறாமல் வேணியை ஊருக்கு அழைத்துச்செல்வார். திங்கள்கிழமை வேணி வகுப்புக்கு வரும்போது வகுப்பே மணக்கும். ராமபாண பூவை கோர்த்து இடுப்பு வரை வைத்து வருவாள். 

அவர்கள் தோட்டத்தில் வேலை செய்யும் தவமணி அக்காவிற்கு வேணிக்கு பூ கோர்ப்பது, மருதாணி அரைத்து கொடுப்பது, அரப்பு இடிப்பது எல்லாம் தோட்டவேலையைவிட முக்கியமானவை. பண்ணையத்திலிருக்கும் மற்ற ஆள்காரர்களைவிட தான் ஒரு படி மேலே என்ற எண்ணம் அவரின் உடல்மொழியில் வெளிப்பட நடமாடுவார்.

எப்படியும் மாதம் ஒருமுறை எங்களுக்கு சீம்பால், எள்ளு உருண்டை, கோணப்புளியங்காய் என்று ஏதாவது வேணி எடுத்து வருவாள்.

வாரநாட்களில் நாங்கள் எவ்வளவு வற்புறுத்தினாலும் மதிய உணவின்போது ஒரு வாய்கூட எங்கள் டிபன் பாக்ஸில் எடுத்து  சாப்பிடமாட்டாள், “அவளுக்கு பிடிக்காதுப்பா” என்று வசுமதி தான் சொல்வாள்.

விடுதியில் வேணியும் வசுமதியும் தான் ஒரு அறையில் இருந்தார்கள்.

வசுமதி யாருடனும் உடனே ஒட்டிக்கொள்ளும் சுபாவம் கொண்டவள். வேணியை யாருக்கும் பிடிக்கும். என்ன கொஞ்சம் கட்டுப்பெட்டி, யாருடனும் ஒரு எல்லைக்கு மேல் நெருங்க மாட்டாள். தனக்கு பிடித்தது பிடிக்காதது என்று கறாராக வகுத்துக்கொண்டதை மாற்றிக்கொள்ளாதவள்.

வசுமதி தான் வேணியைப் பற்றி விதவிதமாக எங்களுக்கு தகவல் தருவாள். 

ரசம் சாப்பாட்டை நிறைய நேரம் பிசைவது வேணிக்கு பிடிக்காது, படுக்கை விரிப்பு ஓரத்தில் சுருங்கி இருந்தால் கூட சரி செய்து தான் படுப்பாள், இரவு தூங்கும் முன் பாதத்தை சோப்புப்போட்டு கழுவிட்டு தான் கட்டில் மேல் கால் வைப்பாள், அதிக சத்தம் கேட்டால் காதுகளை பொத்திக்கொள்வாள்  என்று நிறைய  சொல்லுவாள்

ஆனால் யாராவது “அவளுக்கு என்ன தங்கத் தட்ல தாங்கறதுக்கு ஒரு அண்ணன் இருக்கிறான் அத விட  வசதி இருக்குது, அப்ப இப்படி எல்லா விசித்ரமும் பண்ணலாம்,” என்று பொறாமையில் பொருமினாலும், வசுமதிதான், “ஏய் அவ ரொம்ப நல்லவ,” என்பதோடு நிறுத்திக்கொள்வாள். மேலே ஏதேனும் விளக்கினால் ஆளாளுக்கு வேணியைப் பற்றி பேசுவார்கள்.

நல்லவதான் ஆனா கொஞ்சம் வித்தியாசமானவ என்று கிண்டலடிக்கும் கோகிலாவுக்கு வேணியை கண்டாலே ஆகாது. அதற்கும் காரணம் இல்லாமலில்லை.

வகுப்பில் உட்காரும் போது  ஒரு சிறு டர்கி துண்டு ஒன்றை விரித்து தான் பெஞ்சில் வேணி அமருவாள். 

யாரும் அவளை உரசினாலோ தொட்டு பேசினாலோ உடலை குறுக்கிக்கொள்வாள். தினமும் பஸ்சில் வரும் வாணி, கவிதா, ரூபா இவர்களுக்கு பஸ்சில் பார்த்த பசங்களைப்பற்றிப் பேசாவிட்டால் தலைவெடித்துவிடும். பேச்சை ஆர்வமாக நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கும்போதே அங்கிருந்து வேணி நகர்ந்துபோய்விடுவாள்.

விபூதி இல்லாமல் அவளை பார்க்கமுடியாது. இப்படி ஒரு மாதிரி கட்டத்துக்குள் தான் இருப்பாள்.

சிலநேரம் தேவையில்லாமல் கிழவி மாதிரி இருக்கிறாளோ என்று தோன்றும். ஆனால் எங்களுக்கு எந்த அறிவுரையோ, ஏன் அதிகமாக ஒரு வார்த்தையோ கூட ஒரு நாளும் சொன்னதுமில்லை, கேட்டதுமில்லை.

கல்லூரி முடியும் போது எல்லோரும் ஒன்றாக எடுத்த வாடாமல்லி நிற புடவையில் தான் ஐந்து மாதம் கழித்து பட்டமளிப்பு விழாவிற்கு சென்றோம். அன்று மட்டும் தான் கோகிலா வேணியிடம் நன்றாக பேசினாள் .

அதன் பின் வேணிக்கு மாப்பிளை பார்க்கும் கதை, அவள் ஊருக்கு சென்று ஒரு வாரம் தங்கிவிட்டு வந்த கதை என்று வசுமதிதான் எனக்கு வீட்டுக்கு வந்தே சொல்லிவிட்டு போவாள்.

வேணியின் கல்யாணத்துக்கு வசுமதி இரண்டு நாள் முன்பே சென்றுவிட்டாள். நானும் அம்மாவும் முஹூர்த்தத்துக்கு தான் சென்றோம்.

உண்மையிலேயே மாப்பிளையை பார்த்தவுடன் எனக்கு திக் என்று இருந்தது. நல்ல உயரம், கருப்பு, ஒரு தெனாவெட்டு தோரணை, வேணி அவர் பக்கத்தில் நகைக்கடை பொம்மை மாதிரி நின்றாள்.

கல்யாணம் முடிந்தவுடன் வசுமதி தான் என்னையும் அம்மாவையும் தேடிக்கொண்டு வந்தாள். நான் குசுகுசுவென்று வசுமதியிடம் கேட்டேன் ” என்ன வசு மாப்பிள்ளை பையன் மாதிரி இல்ல, பெரிய ஆள் மாதிரி இருக்காரு.” ” ஆமா நான்தான் சொன்னேன்ல,” என்றாள். பொண்ணு பாக்க வந்த அன்னிக்கே தன் கழுத்துல போட்டிருந்த ரெட்டை வட சங்கிலிய போட்டு இந்த பொண்ணைத்தான் கட்டணும்னு மாப்பிள்ளையும் அந்த பாட்டியும் சொல்லிட்டு போய்ட்டாங்களாம், வேணி தான் சொன்னாள்ல    என்று அந்த பெருமையையும் ஞாபகப்படுத்தினாள். இதை  இப்போது பெருமையாக சொல்கிறாளா, அவ்ளோதான் மாத்தமுடியாது என்று அப்போவே தெரியும் என்று சொல்கிறாளா என்றே எனக்கு புரியவில்லை. மேடையில் போய்  வேணியை பார்த்துவிட்டு சாப்பிட சென்றோம்.

அப்போது தான் வசுமதி “நேத்திக்கு இன்னோரு கூத்து நடந்துச்சு,” என்றாள்.

 ” நைட்டு மாப்பிள்ளையோட ப்ரெண்ட்ஸ் தண்ணிய போட்டுட்டு ஒரே சத்தம். அவங்க எல்லாம் சின்ன மண்டபத்துல தான் இருந்தாங்க ஆனா சத்தம் இங்க வரைக்கும் வந்து, வேணியோட மாமா போய் கொஞ்சம் சத்தம் போடவேண்டாம்னு சொன்னதுக்கு அவர ஏதோ சொல்லி,  அவரு நைட்டே வேணியோட அண்ணன்கிட்டயும் அப்பாகிட்டயும் ரொம்பநேரம் தனியா கூட்டிக்கிட்டுப்போய் பேசுனாரு,” என்று திகில் கதை மாதிரி சொன்னாள். 

“கூட்டத்தை பார்த்தாலே தெரியும் வேணியோட சொந்தக்காரர்களுக்கும் மாப்பிளையோட சொந்தக்காரங்களுக்கும் சம்பந்தமே இல்ல, நீயே சொல்லு,” என்று என்னிடம் கேட்டாள். அப்படி தான் இருந்தது.

வேணியின் கல்யாணம் முடிந்த இரண்டு மாதத்தில் வசுமதியும் அவளின் அத்தை பையனையே கட்டிக்கொண்டாள். நான் தான் அப்போதும் வங்கி பரீட்சை எழுதிக்கொண்டிருந்தேன்.

வசுமதியே ஆறு மாதம் கழித்து தொலைபேசியில் அழைத்தாள். பேச்சு வேணியைபற்றி திரும்பியது.

” பேசுனா, நல்லா இருக்கா, ஆனா அவங்க அம்மாவீட்ல இருக்கா” என்றாள். ஏதோ விசேஷமா என்று கேட்பதற்குள் வசுமதியே தொடர்ந்தாள் ” அவ திரும்பி வந்துட்டா. பெரிய கத அது, நான் நேர்ல சொல்றேன்” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தாள். 

வசுமதியை அடுத்து சந்திக்கும் வரை நானும் அம்மாவும் மாய்ந்து மாய்ந்து வேணியை பற்றி பேசினோம்.

என் அப்பா தான் அந்த குடும்பத்திலயெல்லாம் வேணி குப்பைகொட்ட முடியுமா என்றார். வேணி தான் ஒரு மாதிரி தினுசா நடந்துக்குதுன்னு மாப்பிளையோட அப்பா, மார்க்கெட் பக்கம் மண்டிகாரங்ககிட்ட சொல்லி இருக்கார்.

பத்து நாள் கழித்து வசுமதி வந்தாள்.

“வேணியோட மாப்பிள்ளை வீட்டிலேயே அவரின் அப்பாவுடன் குடிப்பாராம். நைட் ரூம்ல போதைல கொஞ்சம் முரட்டுதனமா இவளை தொட்டுட்டாரோ என்னவோ, வேணி இவருக்கு பயந்துகிட்டு நைட்டு பாத்ரூம்ல போய் கதவ சாத்திக்கிட்டு அவரு தூங்கற வரைக்கும் உள்ளேயே இருந்திருக்கா. அதோட விட்ருக்கலாம், காலைல மாப்பிள்ளை அவரோட பாட்டி எல்லாம் சேர்ந்து வேணிய கொஞ்சம் கிண்டலா ஏதோ பேசி இருக்காங்க. அடுத்த நாள் நைட் பாத்ரூம்க்குள்ள அவ ஓடறதுக்குள்ள அடிச்சு அவளை கட்டாயப்படுத்திருக்கார்” என்று வசுமதி சொல்ல சொல்ல கண்களில் கண்ணீர் வந்துவிட்டது அவளுக்கு. எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. “வேணி வீட்ல சொல்லுலயா” என்றேன். “சொல்லியிருக்கா, சங்கர் அண்ணன் , அவங்க மாமா எல்லாரும் போய் ரொம்ப சமாதானமா  தான் சொல்லியிருக்காங்க, பொண்ணு கொஞ்சம் பயந்தவனு. அதுக்கு சங்கர் அண்ணன மட்டமா பேசி, பெரிய வாக்குவாதம் ஆகியிருக்கு. வேணி நம்ம காலேஜ்ல இருந்த மாதிரி தான் இங்கயும் இருந்திருக்கா, தனி டவல், பக்கத்துல யார் உக்காந்தாலும் நகர்ந்து உக்காந்திருக்கா, அவங்க பாட்டி சாப்ட தட்டுலேயே கை கழுவி கட்டிலுக்கு கீழ வைக்கறது, சமையல் கட்டு பக்கத்துலேயே சேவலை பொசுக்கரதுன்னு அவங்க பழக்க வழக்கமெல்லாம் இவ அருவருப்பா இருக்குனு சொன்னதுக்கு எல்லாரும் வேணிய தான் லூஸுன்னு சொல்லி, பெரிய மஹாராணியான்னு கேட்டு கல்யாணத்துக்கு லாயக்கு இல்லாதவ அப்டி இப்படின்னு சொல்லி வேணிய கூட்டிகிட்டு போக சொல்லிட்டாங்க. பழக்க வழக்கமெல்லாம் கூட மாத்திக்கலாம்னு தான் வேணியோட மாமா மொதல்ல வேணிக்கு சொல்லி இருக்கார்.

ஆனா  துணிமணிய உருவிட்டு நைட்டு முழுக்க உக்கார வச்சிருந்தாங்கனு வேணி சொன்னதுக்கு அப்புறம் தான் அவங்க மாமா இந்த குடும்பம் நமக்கு ஆகாதுன்னு இப்போ விவாகரத்துக்கு போட்டிருக்காங்க. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இன்னிக்கே கூட விவாகரத்து தருகிறோம், நகை பணம் ஒண்ணும் வேண்டாம்னு எழுதி குடுங்கன்னு எழுதி வாங்கிக்கிட்டாங்க. 

வேணி இன்னும் நிறைய சொன்னா, ” உங்க அண்ணன் ஏன் பொம்பள மாதிரி நடக்கிறார்னு,” சங்கர் அண்ணனைப் பத்தி இவகிட்ட கிண்டல் பண்றது, கெட்டவார்த்தை சொல்லி இவள கூப்பிடறதுனு, அந்த பாட்டியோட சேர்ந்துக்கிட்டு மாப்ள போதைல மோசமா பேசறதுன்னு  நிறைய, வேணியால சகிக்க முடியல. இதுல இன்னோர் கொடுமை, அவ வீட்டுக்கு வந்த அப்புறம் தான் ஒன்னரை மாசம் கர்பம்ன்னு தெரிஞ்சு, அபார்ஷன் பண்ணிக்கிட்டா.  பரவால்ல அவங்க மாமா ரொம்ப ஆதரவா இருந்ததுனால மாப்பிள்ளை வீட்டுகாரங்ககிட்ட இருந்து தப்பிச்சாங்க இல்லனா அவ்ளோதான் என்றாள்.

எனக்கு வேணியை பார்க்க வேண்டும்போல இருந்தது.

வசுமதிதான் அவளை பார்த்து வந்து தகவல் சொல்லுவாள்.

கொஞ்ச மாதம் கழித்து வசுமதி வந்திருந்தபோது வேணி எம்.கா,ம் படிக்கச் சேர்ந்திருப்பதாக சொன்னாள். அவளின் மாமா தான் படித்து வேலைக்கு போகட்டும் என்றும், அவளுக்கு விவாகரத்து வந்தவுடனேயே, இன்னோர் கல்யாணம் பண்ணுவதற்கு ஏற்பாடு செய்வதாகவும் பேச்சு ஓடுது என்றாள்.

அடுத்த முறை வரும்போது என்னை அழைத்து வரும்படி வேணி சொன்னதால் நானும் சென்றேன்.

அப்போது தான் தெரிந்தது வேணி வீட்டில் அம்மா, அப்பா, சங்கர் அண்ணன் யாரிடமும் பேசுவதில்லை.  அவள் அம்மா சமையலைச் சாப்பிடுவதில்லை. மாமா வாங்கி தரும் பொருட்களில் தவமணி அக்கா தான் வேணிக்கு சமையல் செய்து தருகிறார். அவர்கள் இருந்தது உள்ளடங்கிய தோட்டம் என்பதால் ஊர்க்காரர்களுக்கு வீட்டில் நடப்பது ஒன்றும் தெரியவில்லை.

தவமணி அக்காவிடம் மட்டும் தான் பேச்செல்லாம்.

நாங்கள் வாங்கிக்கொண்டு போன முறுக்கு, பொரிஉருண்டை இவற்றை சாப்பிடும்போது வேணியின் அம்மா கண்ணீருடன் பார்த்துக்கொண்டே இருந்தார். மல்லிகைப் பூவை, “நீயே எடுத்துக்கிட்டு போ” என்று வேணி திருப்பிக் கொடுத்துவிட்டாள். நாங்கள் உட்கார்ந்திருந்தற்கு எதிர் புறம் அமர்ந்திருந்த வேணியின் அம்மா “என்னய சுத்தமா வெறுத்துட்டா கண்ணு,” என்று சொல்லி அழுதார்.

திடீரென்று ஆக்ரோஷம் வந்தவள் போல வேணி எழுந்து போய், கல்யாண ஆல்பத்தை அவள் அம்மா முன்னாடி வீசினாள். ” நான்தான நாசமா போய்ட்டேன்,” என்று கத்தினாள். சத்தம் கேட்டு வேணியின் அப்பா உள்ளே வந்தார். யாரும் ஒரு வார்த்தை பேசவில்லை. வேணி அவள் அம்மா மடியில் முகத்தை புதைத்து “அம்மா” என்று வீடே அதிர கத்தினாள். “நம்ம தலையெழுத்து கண்ணு” என்று அவள் அம்மாவும் அழுதார். விருட்டென்று வேணி எழுந்து  “ரெண்டு வாரம் கழிச்சு வாரீங்களா”என்று எங்களை பார்த்து கேட்டாள். 

மூச்சுமுட்டும் அளவு அந்த வீட்டினுள் குற்றவுணர்வு நிரம்பி வெளியேற வழி இல்லாமல் எங்களைத் திணறடித்தது.

எங்களுக்கு அங்கிருந்து கிளம்பவே மனசில்லை. “விடு வேணி, வாழ்க்கைல இன்னும் நிறைய இருக்கு. நீ படி வேற நல்ல மாப்பிள்ளை கிடைப்பார்” என்று வசுமதி சமாதானம் சொன்னாள். வேணியின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. வெடுக்கென்று “உனக்கு என்ன ரமேஷ் அண்ணன் கெடச்சுட்டார்” என்று சொன்னதை நான் எதிர்பார்க்கவில்லை. அதற்கெல்லாம் வசுமதி கோவிக்கவே இல்லை. ” சண்டை போடாத அம்மாகிட்ட” என்று மட்டும் சொன்னாள். வேணி பல்லை கடித்துக்கொண்டே “யாராவது சிரிச்சு சந்தோசமா இருக்கறத பாத்தாலே வெறியா வருது” என்று மறுபடியும் கத்தினாள்.

வேணியின் அப்பா எங்களிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை, நாங்கள் திரும்பி வரும்வரை சங்கர் அண்ணன் வரவில்லை.

தான் திருச்செந்தூர் சென்று வந்தபின் அழைப்பதாக சொல்லிவிட்டு சென்ற வசுமதி , இரு வாரம் கழித்து ஒரு வெள்ளிக்கிழமை மாலை தொலைபேசியில் அழைத்தாள். சங்கர் அண்ணன் அழைத்ததாகவும் அழுதுகொண்டே உடனே கிளம்பி வரச் சொன்னதாகவும் சொன்னாள். அப்பா வீட்டிலிருந்தால் “நீ நேரா வேணி வீட்டுக்கு வந்துரு எனக்கு தெரிஞ்சுருச்சு “என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள். என் அப்பாவும் நானும் வீட்டிலிருந்து கிளம்பவே கொஞ்சம் நேரமாகிவிட்டது. வேணியின் வீட்டுக்கு முன் தோட்டத்தில் நுழையும்போதே எனக்கு புரிந்துவிட்டது. இங்கிருந்து பார்த்தபோதே ஆளுயரத்துக்கு நெருப்பு தெரிந்தது. அருகில் செல்ல செல்ல அந்த நெருப்பை பார்க்க எனக்கு தலை சுற்றியது. வேணியின் அம்மா ” என் தங்கம் எரியுதே என் தங்கம் எரியுதே” என்று கத்தி கதறியது காற்றில் அதிர்நதது. வசுமதி வீட்டின் முன்னாலேயே நின்றுகொண்டிருந்தாள். என்னை பார்த்ததும் தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். யாரிடமும் அன்று எங்களால் பேச முடியவில்லை. இருட்டிக்கொண்டு வந்ததால்  அப்பா என்னையும் வசுமதியையும் கிளப்பிக்கொண்டு வந்தார்.

அன்று வசுமதி எங்கள் வீட்டிலேயே தங்கிவிட்டாள். அவள் தான் சொன்னாள், அன்று காலையில் தான் அந்த வேணி மாப்பிள்ளைக்கும் அவரின் சொந்த அக்கா பொண்ணுக்கும் கல்யாணம் நடந்த விஷயத்தை வேணியின் மாமா வந்து இவர்களிடம் சொல்லி இருக்கிறார் .

சங்கர் அண்ணனும் அவள் மாமாவும் சமாதானம் சொல்லி நாமும் அவங்க முன்னாடி வாழ்ந்து காட்டலாம் என்று சொல்ல, எழுந்துபோய் முகம் கழுவிவிட்டு வந்தவள், சமையற்கட்டில் தட்டப்பயற்றை அடுப்பில் வேக வைத்துவிட்டு தன் அறைக்கு சென்றவள் வெளியே வரவில்லை. பத்தே நிமிடம் தான். ஒருக்களித்து சாத்தியிருந்த கதவை சங்கர் அண்ணன் தள்ளியபோது வாடாமல்லி நிற புடவையில் சுருக்கிட்டுக்கொண்டு தோட்டத்தை பார்த்தவாறு தொங்கியிருக்கிறாள்.

இதை சொல்லிவிட்டு வசுமதி தான் சொன்னாள் ” வேணி தங்கமானவ தான், சுத்த தங்கமா இருக்க கூடாது, இருக்க முடியாது. கொஞ்சம் செம்பு கலந்து தான் இருக்கணும், இல்லனா வேணி யாரோடையுமே வாழ்ந்திருக்க முடியாது.” 

வசுமதி சொல்லிமுடித்தபின் நான் வேணியுடன் கொலுசு வாங்க சென்ற அன்று  கடையில் அவள் கொலுசை போட்டு பார்த்தபோது மிக அருகில் நான் பார்த்த அவளின் மென்மையான வெளிர் சிவப்பு பாதம் என் கண் முன்னே வந்தது.

“யார ஜெயிக்கறதா நெனச்சு இப்டி பண்ணினாளோ” என்று சொல்லிவிட்டு, வெகுநேரம் அமைதியாக பட்டமளிப்பு முடிந்து நாங்கள் மூன்றுபேரும் எடுத்துக்கொண்ட அந்த புகைப்படத்தையே வசுமதி பார்த்துக்கொண்டிருந்தாள்.

அப்படித் தானா என்று இன்றும்  எனக்கு விடை தெரியவில்லை.

***

One Reply to “வேணி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.