வெப் -3 (Web-3)

வலசைப் பறவைகள், துணிகர முதலீடுகள், வலைகள், வாய்ப்புகள்

‘குமரிஅம் பெருந்துறை ஆயிரை மாந்தி வடமலை பெயர்குவையாயின், இடையது சோழ நன்னாட்டுப் படினே, கோழி, உயர் நிலை மாடத்துக் குறும்பறை அசைஇ வாயில் விடாது கோயில் புக்கெம் பெருங்கோக்கிள்ளி கேட்க இரும்பிசிர் ஆந்தை அடியுறை என்னே மாண்ட நின் இன்புறு பேடை அணியத்தன் அன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே’

குமரியில் மீனை உண்டுவிட்டு, வடமலைக்குச் செல்லும் பூ நாரையை, இடையில் உறையூரில் தங்கி, கோப்பெரும் சோழனிடம் தன் பெயர் சொல்லி, அதன் துணைவிக்கு நல்ல மாலையைப் பெற்றுச் செல்லுமாறு சொல்லும் பிசிராந்தையாரின் புற நானூற்றுப் பாடல் (67) மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் வலசை போகும் நாரை தான் நம் கவனத்தை முதலில் ஈர்ப்பது.

மாபெரும் தொழில் நுட்ப இணைய அமைப்புகளான கூகுள், அமெசான், மெடா (ஃபேஸ்புக்) ஆகியவற்றில் பணிபுரிந்து வந்த பெரும்பான்மையான தொழில் நுட்ப வல்லுனர்கள், இன்று க்ரிப்டோவினால் ஈர்க்கப்பட்டு தங்கள் தளத்திலிருந்து புலம் பெயர்கிறார்கள். புலம் பெயர்வது என்றென்றும் நடப்பதுதான். மலை, குகை, சமவெளி, புல்வெளி, நிலம், ஆறு, கடல், அயல் நாடுகள் என்று மனிதர்களின் புலம் பெயர் வரலாற்றை நாம் அறிவோம். இத்தகைய நிகழ்வுகள் ஒன்றே ஒன்றைத்தான் சொல்கின்றன. அது உலகம் முழுவதும் உயிர்களுக்கானது. அதில் தேச, நிற, இன பேதங்களில்லை.

அமெசானின் மேகக்கணினி பிரிவில் உப தலைமை பதவியில் இருந்த சேன்டி கார்ட்டர் (Sandy Carter) அந்தப் பதவியை விட்டு விலகி, தன்  ‘லிங்க்ட் இன்’ (Linkedin) செய்தியில் தான் ஒரு க்ரிப்டோ தொழில் நுட்பக் குழுமத்தில் இணைந்ததாக அறிவித்தார். அந்தத் தொழில் தொடங்கு நிறுவனத்தில் இருக்கும் வேலை வாய்ப்புகளையும் பகிர்ந்தார். மிகப் பெரும் இணையக் குழுமங்களிலிருந்து 350க்கும் மேற்பட்டவர்கள் இரு நாட்களுக்குள்ளாக ‘அன்ஸ்டாப்பபில் டொமைன்’ (Unstoppable Domain) என்ற இந்தப் புதுக் கம்பெனியில் பணியாற்ற விண்ணப்பத்திருக்கிறார்கள். இந்தக் குழுமம், க்ரிப்டோ நாணயங்கள் தரும் பரவலாக்கப்பட்ட பதிவேடுகள் கொண்ட தொடரேட்டுத் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும் தளங்களின் முகவரிகளைத் தருகிறது. ‘புயலின் வேகம் நிகர்த்த ஒன்று. வீச்சு அதிகமாக உள்ளது’ என்று சொல்கிறார் அவர். ஆண்டு தோறும் பல இலட்சக்கணக்கான டாலர்களை அள்ளித் தரும் பெரும் நிறுவனங்களான கூகுள், ஆப்பிள், மெடா (முகநூல்), அமெசான் ஆகியவற்றை விட்டு விட்டு, இவர்கள் இத்தகைய புதுக் கம்பெனிகளுக்கு ஏன் செல்கிறார்கள்? ‘தலைமுறையில் கிடைக்கும் ஒரே வாய்ப்பு’ என்பதுதான் இவர்களின் பதிலாக இருக்கிறது. பிட்காயின், மாற்ற முடியா முத்திரை (NFT) போன்ற இலக்க நாணயங்கள் அனைத்துமே க்ரிப்டோ என்று குறிக்கப்படுகிறது. சிலிக்கான் பள்ளத்தாக்கில் நீங்கள் கேள்விப்படுவதெல்லாம், க்ரிப்டோ உங்களைச் செல்வந்தராக்குகிறது என்பதுதான். ஒரு நாயின் மீமை (Meme) அடிப்படையாகக் கொண்ட ‘டோஜ்காயின்’ (Dogecoin) கதாபாத்திரங்கள், முதலீட்டாளர்களின் அதி ஆர்வமாக இருக்கிறது. பிட்காயினின் மதிப்பு 60% ஏறியிருக்கிறதென்றால், ஈதர் (ETH) ஐந்து மடங்கு உயர்ந்திருக்கிறது.

90 களில் கணினி மென்பொருள் புதிதாக வளர்ந்து பலரையும் அதை நோக்கி இழுத்தது. 2000களிலோ இணையத்தின் ஆட்சி. 2010-ல் சமூக ஊடகம், நேரடி வணிகம். 2020-ல் மெய் நிகர் உலகம், களங்கமில்லா இலச்சினைகள், இலக்க நாணயங்கள். இந்த வரலாறு சொல்வது என்ன? ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் ஏற்படும் மாற்றங்கள், அவற்றைப் பயன்படுத்துவோரை செல்வவளம் மிக்கவர்களாகவோ அல்லது அவர்களின் விருப்பத் தேர்வுகளுக்கு பாதை வகுப்பதாகவோ அமைகிறது என்பதே. அப்படிப்பட்ட ஒன்றாக க்ரிப்டோவை பார்ப்பவர்கள், அதிக ஊதியம், மற்றும் பிற சலுகைகளை அளிக்கும் பெரு நிறுவனங்களிலிருந்து விலகி, இலக்க நாணயங்கள் மற்றும் பணம் பெருக வாய்ப்பளிக்கும் இந்தத் துறைக்கு ஆர்வத்துடன் வருகிறார்கள். நில அதிர்ச்சி ஏற்படப்போகிறது என்று முன்னரே உணரும் சில உயிரினங்களைப் போல, தங்கள் களத்தை விட்டு புது தளத்தின் சவாலிற்காகவும், பொருளீட்டும் ஆர்வத்திலும் இவர்கள் புலம் பெயர்கிறார்கள். 

90களிலிருந்து ஏற்பட்டுள்ள தொழில் நுட்பப் புரட்சியும், மேம்பாடுகளும் பல கோடீஸ்வரர்களை உண்டாக்கியுள்ளதை நாம் அறிவோம். அதைப் போன்ற அலை வீசுகிறது இப்போது.

க்ரிப்டோவில் முதலீடு செய்பவர்களும் பெருகியுள்ளனர். பிட்ச்புக்கின் (Pitchbook) தகவலின் படி 2020-ம் ஆண்டில் செய்யப்பட்ட முதலீட்டைவிட நான்கு மடங்கு, அதாவது $28 பில்லியன்கள், க்ரிப்டோவிலும், தொடரேட்டுத் தொழிலில் ஈடுபடும் துவக்க நிறுவனங்களிலும், முதலீடுகள் வந்துள்ளன. இதில் களங்கமில்லா இலச்சினைகள் துறை மட்டுமே $3பில்லியன் பெற்றிருக்கிறது.

‘தேடல் இயந்திரம்- நீவா’ (Search Engine-Neeva) என்ற தொழில் துவக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும், கூகுளில் முன்பு பணிபுரிந்தவருமான ஸ்ரீதர் ராமசாமி, ‘க்ரிப்டோ என்னும் இந்தத் துறை எல்லா நிறுவனங்களிடமிருந்தும் பலரையும் பலமாக உறிஞ்சுவது கேட்கிறது. 90களில் கணினி, இணையம் வந்த போது இருந்த வியப்பும், பரவசமும், குழப்பமும், சந்தர்ப்பங்களும், இப்போது க்ரிப்டோவிலும் நிலவுகின்றன’ என்று சொல்கிறார்.

க்ரிப்டோவை சற்று நாகரீகமாக வெப் 3 (Web3) என்று அழைத்தாலும், அதில் சூதும், ஊகமும் நிறைந்திருக்கிறது என்று அதன் எதிர்ப்பாளர்கள் சொல்கிறார்கள். இணைய உலகில் உலாவரும் அபத்த நகைச்சுவைகளை அடிப்படையாகக் கொண்டு அமையப்பெறும் சொத்துக்களின் மூலம், குறுகிய காலத்தில் பெரும் பணம் செய்யும் பேராசை என்று வெப்3 (Web3) எதிர்ப்பாளர்கள் சொல்கிறார்கள். ஒரு சிலரின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கி, அவர்களுக்கு மட்டுமே வாரி வழங்கும் செயல்பாடு மாற்றப்பட்டு, பரவலாக்கப்பட்ட இணையத்தின் மூலம் அனைவரும் பயன் பெற க்ரிப்டோ உதவும் என்று ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். (மிகச் சமீபத்தில் வணிக தர்மங்களை மீறி செயல்பட்டதற்காக ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்திய காம்படீஷன் ஆணையம் தண்டனை விதித்துள்ளது.) 

90களிலிருந்து ஏற்பட்டுள்ள தொழில் நுட்பப் புரட்சியும், மேம்பாடுகளும் பல கோடீஸ்வரர்களை உண்டாகியுள்ளதை நாம் அறிவோம். அதைப் போன்ற அலை வீசுகிறது இப்போது.

2009-ல் பிட்காயின் வந்த போதே இதற்கான சூழல் அமைந்திருந்தாலும், களங்கமில்லா இலச்சினைகளின் வரவு க்ரிப்டோ சந்தையை மேம்படுத்தியிருக்கிறது. இது அதிக அளவில் தளப் புலம் பெயர்தலை ஊக்குவித்திருக்கிறது.

‘லிஃப்ட்’ (Lyft) என்ற பயனர் ஊர்தி மகிழுந்துகளை சவாரிகளுக்குத் தரும் நிறுவனத்தில், முதன்மை நிதி நிர்வாகியாகப் பணிபுரிந்த ப்ரெயன் ராபர்ட்ஸ், (Brian Roberts) அந்த வேலையைத் துறந்து புகழ் பெற்ற ‘ஓபன் சீ’ (Open Sea) என்ற க்ரிப்டோ நிறுவனத்தில் சேர்ந்துள்ளார். ‘எத்தனையோ சுழற்சிகளையும், முன்னுதாரணங்களையும் பார்த்த நான் இந்த ‘ஜோதியில் ஐக்கியமாகும்’ சந்தர்ப்பத்தை நழுவ விடுவேனா?’ என்று கேட்கிறார். களங்கமில்லா இலச்சினைகளிலும், அதன் தாக்கத்திலும் ‘பேர் சொல்லும் ஒரு பிள்ளை’ நாங்கள்’ என்று மேலும் சொல்கிறார்.

ட்விட்டரின் முதன்மை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜேக் டோர்ஸி, (Jack Dorsey) ‘ஸ்கொயர்’ (Square) என்ற தனது மற்றக் குழுமத்தில், ‘க்ரிப்டோ’ மற்றும் வெப்3 வளர்ச்சிக்கு அதிக நேரம் செலவிடப்போவதாகச் சொல்லி, தான் துவக்கி பத்தாண்டுகளுக்கும் மேலாகக் கண்ணும் கருத்துமாக வளர்த்த டிவிட்டரை விட்டு சமீபத்தில் வெளிப்போந்தவர். (இந்தியரான பராக் அகர்வால்-Parag Agarwal) இப்போது ‘டிவிட்டரின்’ தலைமை நிர்வாகி.) தொடரேட்டின் பெருமையைக் குறிக்க தன் கம்பெனியின் பெயரை ‘ப்ளாக்’ (Block) என்று மாற்றினார் ஜேக். ‘ப்ளாக்’ நிர்வாகிகளின் புகைப்படங்களை ‘ப்ளாக் தலை’ அணிந்த அவதாரங்களாக (Block headed Avatar) மாற்றியுள்ள அவர், ஏனைய மற்றவர்களும் தங்களை ‘ப்ளாக் தலையின அவதாரங்களாக’ மாற்ற உதவும் மென்பொருளையும் வெளியிட்டுள்ளார். ஆமாம், அதென்ன ‘ப்ளாக்’ தலை? கனசதுரத்தில் உங்களின் புகைப்படத்தை, (அனேகமாக முகம் முழுவதும்) வித்தியாசமான கோணத்தில் ஏற்றி, சதுரத்தின் பக்கங்களிலும் கலவையான வண்ணங்களைக் கொட்டி, உங்களின் அவதாரத்தை உலகம் மகிழக் காட்டுவது அது. கார்ட்டூனில் நகைச்சுவையும், செய்தியும் இருக்கும். (ஆர் கே லக்ஷ்மன் போல).  கேலிச் சித்திரத்தில் ஒரு முகத்தின் எடுப்பான உறுப்பை பெரிதாக்கி  கிண்டலுடன் வரைவார்கள். (கேஷவ் போல). ‘ப்ளாக்’ தலைக்காரர்கள்  தங்களைத் தாங்களே கேலியும், கிண்டலும் செய்து மூன்றடுக்கில் ஏற்றி நம் கவனத்தைக் கவர்கிறார்கள். குணா என்றொரு படத்தில் கமலஹாசன் மருத்துவரின் அறையில் சுற்றிச் சுற்றி நடந்து கொண்டே சொல்வார் “என்னோட இந்த முகத்த, எங்கப்பன் கொடுத்த முகத்த அழிக்கணும்.” அந்த சினிமாவில் கமல் அசாதாரணமான ஒரு கதாபாத்திரம்.

மெடாவில் (முகநூல்) க்ரிப்டோ நாணயத் திட்டத்தில் தலைமைப் பொறுப்பில் பணியாற்றிய 48 வயதான டேவிட் மார்கஸ், (David Marcus) வருட முடிவில், (2021) தன் கனவான ‘தொழிலதிபர்’ நிலையை அடைவதற்காக வேலையை விடப்போவதாகச் சொல்லியுள்ளார். அவர் ‘க்ரிப்டோ நாணயத் திட்டம்’ ஒன்றை சொந்தமாகக் தொடங்கக்கூடும் என்று அதை அறிந்த இருவர் சொல்கிறார்கள். 

க்ரிப்டோவின் கவர்ச்சியால் ஈர்க்கப்படும் தொழில் நுட்ப வல்லுனர்களைத் தக்க வைப்பது பல பெரும் இணைய நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கிறது. அத்தகைய வல்லுனர்களை இருத்தி வைப்பதற்கும் அவர்கள் இலக்க நாணயக் குழுமங்களில் வேலை தேடிச் செல்லாமல் இருப்பதற்கும், கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை ஒவ்வொரு திங்களன்றும் தன் உதவியாளர்களான பல நிர்வாகிகளுடன் விவாதிக்கிறாராம். கூகுளின் எந்தப் பிரிவில் பணியாற்றுபவர்கள் இந்தக் கவர்ச்சிக்கு உள்ளாவார்கள் என அறிந்து அவர்களுக்கு கம்பெனியின் பங்குகள் சற்று அதிகமாக வழங்கப்படுகிறதாம். மெடா (ஃபேஸ்புக்) ‘க்ரிப்டோவை’ ஆறத் தழுவ விரும்புவது போல், கூகுளுக்கு எண்ணமில்லை. ஆனால், அதில், உபத்தலைமை நிர்வாகியாக இருந்த சுரோஜித் சட்டர்ஜி, (Surojit Chatterjee) சென்ற வருடம், ‘காயின் பேஸ்’ (Coin Base) என்ற இலக்க நாணயப் பரிமாற்றச் சந்தையின், தலைமை உற்பத்திப் பொருள் நிர்வாகியாகி (Chief Product Executive) செல்வத்தில் திளைப்பதை கூகுளின் மற்ற அலுவலகர்கள் கவனித்துவிட்டார்கள். ஏப்ரலில் காயின்பேஸ் பொதுப் பங்கு நிறுவனமான போது, இந்த சுரோஜித்தின் பங்கு மதிப்பு $600 மில்லியன்களையும் தாண்டியது. இத்தனைக்கும் அவர் அதில் சேர்ந்து 14 மாதங்கள்தான் ஆகியிருந்தது.

பெருமளவில் பணம் வருவதால் அதைச் சம்பாதிக்கும் வாய்ப்பை ‘நாம் இழந்துவிட்டோமோ’ என்ற எண்ணம் தொழில் நுட்ப வல்லுனர்களிடம் ஏற்பட்டுள்ளது. மனித மனம், தான் அறிந்தவர்கள், தன் நண்பர்கள், முன்னரே பிட்காயினில் முதலீடு செய்து இன்று பெரும் செல்வந்தவர்களாக இருப்பவர்கள் ஆகியோரைப் பார்த்து ‘தவற விடுகிறோம்’ என்ற பதட்டத்தில் ஆழ்ந்து விடுகிறது.

‘மிஸ்ட்டென் ஆராய்ச்சி’ (Mysten Labs) என்னும் ஒரு துவக்க நிலை நிறுவனம் தொடரேடுகளுக்கான கட்டமைப்புகளில் ஈடுபட்டுள்ளது. அதன் இணை முதலீட்டாளரும், முதன்மை நிர்வாகியுமான எவென் செங் (Evan Cheng) சொல்கிறார்: ‘2019-ல் இந்தத்துறையை முதலீடுகளுக்கான வாய்ப்பாகப் பார்த்தார்கள்; இன்று அந்த நிலை மாறி,  அனைவரும் அதன் அமைப்பாளராக விரும்புகிறார்கள்.’ இவர் முகநூலில் அதன் க்ரிப்டோ திட்டமான ‘நோவி’ (Novi) யில் பணியாற்றியவர். 50 வயதான இவர் முகநூலில் ஆறு வருடங்கள் பணியாற்றியிருக்கிறார்.   சான்பிரான்சிஸ்கோ, லண்டன், நியு யார்க் போன்ற பல இடங்களில், இக் குழுமத்தில் பணியாற்றுபவர்கள் கிட்டத்தட்ட இருபது நபர்கள் உள்ளனர்; அவர்களில் 80% முகநூல், நெட்ஃப்ளிக்ஸ், கூகுள் போன்ற தொழில் நுட்பக் குழுமங்களிலிருந்து வந்தவர்களே. வலசைப் பறவைகள்.

தொடரேட்டுத் தொழில் நுட்பக் குழுமங்கள் அதீத வளர்ச்சி பெற்று வருகின்றன. இலக்க நாணய பரிவர்த்தனை அமைப்புகளான பிட் பாண்டா (Bit Panda), ஜெமினி, காயின்லிஸ்ட் போன்றவைகளும், இலக்கக் கலை சேகரிப்புக் குழுமங்களான ஓபன் சீ, டேப்பர் ஆய்வகம் (Dapper Labs), கட்டமைப்புக் குழுமங்களான டெஃபினிடி (Difinity), அல்கெமி (Alchemy) ஆகியவைகளும் கண்டுள்ள வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. இப்படி வலசை போகும் பறவைகள் முக்கியக் காரணி ஒன்றையும் உணர்த்துகின்றன. அது பெரிய அண்ணாவைப் போன்ற தொழில் நுட்பக் குழுமங்களின் நடவடிக்கைகள்! ஆயிரம் கனவுகளுடன், புதிதாகச் சாதிக்கும் விருப்பத்துடன் உள் நுழையும் ஊழியர்கள், அதன் சிவப்பு நாடா செயல் முறையால் அதிர்ச்சியும், விலக்கமும் அடைகிறார்கள்.

க்ரிப்டோ துவக்க நிலை நிறுவனங்களில் இணைவோருக்கு, முன்னர் தொழில் நுட்பக் குழுமங்களில் ஆரம்பத்தில் கிடைத்த  குறைந்த ஊதியம் போன்ற நிலையில்லை. அதாவது, அவர்கள் ஈட்டிய சம்பளத்தை வெகு விரைவில், ஏன், அதை விட அதிக மடங்கில் க்ரிப்டோ துவக்க நிலை நிறுவனங்களால் தர முடிகிறது. க்ரிப்டோ துவக்க நிலைக் குழுமங்களில், ஊழியர்கள் பெறும் பங்குகளை வெகு விரைவில் பணமாக மாற்ற முடிவதால், கைகளில் பணம் புரள்கிறது. ‘பாரடைம்’ (Paradigam) என்ற முதலீட்டு நிறுவனத்திற்கு பணியாளர்களை அமர்த்தும் டேன் மெக்கார்த்தி (Dan McCarthy), ‘இத்தகைய துவக்க நிலை நிறுவனங்களின் இலக்க நாணயங்களை விற்றே மனிதர்கள் தங்கள் மத்தியில் அதிகப் பணப்புழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். பெரும் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு நிகராக இந்தத் தொடக்க நிலை க்ரிப்டோ குழுமங்கள், தங்கள் ஊழியர்கள், எளிதாக தங்கள் கம்பெனியின் இலக்க நாணயத்தை செலாவணியாக்கும் வழிமுறைகளை அனுமதித்து அதன் மூலம் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துகிறார்கள். இவைகளின் மூலதனம் இவற்றின் மிகப் பெரிய பலமாக இருப்பதால், முன்னர் பெற்றுக் கொண்டிருந்த ஊதியத்தில் மூன்றில் ஒரு பாகம்தான் இப்போது கிடைக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை.’ என்று பதிவிட்டிருக்கிறார்.

தொழில் நுட்ப வல்லுனர்கள் க்ரிப்டோவின் பால் ஈர்க்கப்படுவதற்கு பணம் மட்டும் காரணமில்லை என்று கார்ட்டர், அமெசானின் முன்னாள் உப தலைவர், சொல்கிறார். பரவலாக்கப்பட்ட அதன் தன்மை, மைய அதிகாரமின்மை, அதன் நெறிமுறைகள், அதன் புதுமை ஆகியவையும் காரணங்களே. பயனர்களின் தரவுகளை அவர்கள் அறியாமலே பெற்று, வணிகக் குழுமங்களிடம் விற்று, மிகப் பெரும் பொருள் ஈட்டிய பெரிய இணைய தொழில் நுட்பக் குழுமங்களின் சந்தை ஆக்ரமிப்பினை இந்தத் தொழில் நுட்பம் தகர்த்தெறியும் என க்ரிப்டோ, தொடரேட்டு ஆதரவாளர்கள் திடமாக நம்புகிறார்கள். ‘வெப்3 யில் ஆர்வமுடைய அனேகர் அமெசானில் இருந்தாலும், தான் தன் முந்தைய கம்பெனிக்குக் கொடுத்த வாக்கின்படி அவர்களை க்ரிப்டோ துவக்க நிலைக் கம்பெனியான அன்ஸ்டாப்பபிலுக்கு அழைக்கவில்லை’ என அவர் சொல்கிறார். ‘சரியான காலமிது; தொழில் நுட்பக் கம்பெனிகளிலிருந்து க்ரிப்டோவிற்கு மாற நேரம் கனிந்து வந்திருக்கிறது’ என்றும் சொல்கிறார் அவர்.

துணிகர முதலீட்டாளர்கள்

நிதி, வணிகம், தொலைத் தொடர்பு, பொழுது போக்கு ஆகியவற்றில் பெரும் அற்புத மாற்றங்களைக் கொண்டு வரும் தேவ தூதனாக வெப்3 ஐ முதலீட்டாளர்கள் கணித்து கோடி கோடியாய் முதலீடு செய்கிறார்கள். உலகப் பொருளாதாரத்தின் முக்கிய அம்சங்களாக தொடரேட்டுத் தொழில் நுட்பத்தில் அமைந்துள்ள பிட்காயின்கள் செயல்படும் என்று உறுதியாகச் சொல்கிறார்கள் இவர்கள். சந்தைத் தரவுகளைச் சொல்லும் பிட்ச்புக் (Pitchbook), சொல்கிறது:1196 ஒப்பந்தங்களில், 2021-ன் முதல் மூன்று காலாண்டுகளில், க்ரிப்டோ நாணயம் மற்றும் தொடரேட்டு நுட்பம் சார்ந்த கம்பெனிகளில், $21.4 பில்லியன்கள் துணிகர முதலீடுகளாக வந்துள்ளன. 

A16Z என்று செல்லமாக அழைக்கப்படும் ஆன்ட்ரெஸ்ஸன் ஹோரோவிட்ஸ் (Andreessen Horowitz) இன்றைய இணையத்தை அமைக்கவும், அதற்குத் தேவையான நிதி உதவிகளையும் செய்ததுமான சிலிக்கான் பள்ளத்தாக்குக் குழுமத்தில் இருப்பவர். அவர் சொல்வது “எண்மச் சந்தையின் ஏகபோகம் முடிவுற்றது. சிலப் பெரும் தொழில் நுட்ப நிறுவனங்கள், மற்றவரின் ஆற்றலைக் கொண்டு தாம் மட்டுமே ஈட்டிய அதிகப் பொருள் இனி அவர்கள் வசம் மட்டுமே இருக்காது.”

துணிகர முதலீடுகள் எந்த உபத் துறையில் செய்யப்படுகின்றன?

‘ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது’.  கழனியில் நம்மவர்கள் பாடாத பாடல்களா? இலட்சக்கணக்கில் விளையாடுவோரின் களத்தில் உங்கள் நிகர் நிலை செல்லப் பிராணிகள் உங்களுக்கென கடுமையாக உழைத்து க்ரிப்டோக்களை குவிக்கின்றன.

போக்கிமான் (Pokeman) எனப்படும் கார்ட்டூன் சித்திரத்தினால் தூண்டப்பட்ட ஆக்ஸி இன்ஃபினிடி (Axie Infinity) யில் அசுர வாரிசுகளைக் கொண்டு நிகழ் நிலையில் கதாபாத்திரங்கள், நடத்தும் போரும் ஒரு விளையாட்டே. இது, உங்களுக்கு எதிர்கால வரவிற்கு உதவும் வகையில் ’சம்பாதிப்பதற்காக விளையாடு’ (Play to Earn-P2E) என்ற தூண்டிலைப் போடுகிறது. சில நூறு டாலர்கள் செலவிட்டு நீங்கள் புதிய கதாபாத்திரங்களை வாங்க வேண்டும். A16Z முன்னின்று நிகழ்த்திய நிதி கோரும் நிகழ்ச்சியில் வியட்நாமைச் சேர்ந்த மெய் நிகர் விளையாட்டு அமைப்பாளர் $150 மில்லியன் முதலீட்டைப் பெற்றுள்ளார். நிதி கோரும் அந்த நிகழ்ச்சியில் $3 பில்லியனுக்கும் மேலான தொகைக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு, எதீரியம் தொடரேட்டு நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளதால், ஆப்பிள், கூகுள் போன்ற தொழில் நுட்ப நிறுவனங்களின் விளையாட்டு விண்ணப்பங்களைத் தரவிறக்கத் தேவையில்லாமல், பரவலாக்கப்பட்ட விளையாடுதல்கள் சாத்தியமாகியுள்ளன. இங்கே ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பார்ப்போம். 2022 தொடக்கத்தில் ஆப்பிளின் சந்தை மூலதனம் $2.869 ட்ரில்லியன்; கூகுளின் சந்தை மூலதனம் $1.827 ட்ரில்லியன். ஆண்டு வருமானம் முறையே $366 பில்லியன் மற்றும் $240 பில்லியன். இவர்கள் பல விளையாட்டு விண்ணப்பங்களை (97%) இலவசமாகத் தருகிறார்கள் என்ற போதிலும், கூகுள் விளையாடல் விண்ணப்பங்கள் 15%  கட்டணத்திலும், ‘ஆப்பிள் ஆர்கேட்’ மாதம் $5 கட்டணத்திலும் பெரும் இலாபம் பார்க்கின்றன. கூகுளில் விளையாட்டுக்களை உருவாக்குபவர்கள்  பதிவுக் கட்டணமும் ஒரு முறை செலுத்த வேண்டும். இங்கே இதைப் பொதுப்படுத்திச் சொன்னாலும், வேறு சில காரணிகளும் உள்ளன. பல விளையாடல்களைத் தரவிறக்க முடிவதில்லை; வயது, தணிக்கை, கருத்து சுதந்திரமின்மை போன்ற அகழிகள் சூழ்ந்துள்ளதாக ‘ஆப்பிள் கடை’ இருக்கிறது.

கலைப் பொருட்களின் களங்கமில்லா இலச்சினைகளிலும் A16Z நிறுவனம் ஆர்வம் காட்டுகிறது. ‘ஓபன் சீ’ போன்றவற்றில் இலக்கக் கலை படைப்பாளிகள் தாங்களே நேராகத் தங்கள் படைப்புகளை (கலையரங்கம் மற்றும் முகவர்களின் தேவை இல்லாமல்) இரசிகரிடம் சேர்ப்பிக்க முடிகிறது.

தன்னை ‘சுப்ரீமேடிக்’ (Suprematic) என்று சொல்லிக் கொள்ளும் ஒரு கலைஞர், செவ்வாய் #2225 க்ரிப்டோ ஹீரோ என்ற களங்கமில்லா இலச்சினையை ‘இப்பொழுதே வாங்குங்கள் .04 ஈதர் விலையில்’ என்று வெளியிட்டார். அது எதீரியத்தின் இலக்க நாணயம்; டாலரில் கிட்டத்தட்ட 175. (வியாழன் அன்று நடந்த ஏலத்தில் அது விற்பனையாகவில்லை.) இந்தத் தளங்களில் விற்பனை செய்வதற்கு விலையின் மதிப்பில் 2.5% தொகை செலுத்தினால் போதும். கலையரங்கங்களின் தரகுத் தொகையோ பன்மடங்கு அதிகம்.

கனடாவின் டேப்பர் ஆய்வகம் (Dapper Labs) 2017-ல் அறிமுகப்படுத்திய க்ரிப்டோ பூனைகள், சேகரிப்புக் களஞ்சியங்கள். ந்யூயார்க் டைம்ஸ் அதைப் பற்றிக் கட்டுரை வெளியிட்டதென்றால் அதன் வீச்சைப் பார்த்துக் கொள்ளுங்கள். 2018-ல் க்ரிப்டோ பூனைகள் $1,40,000க்கு விற்பனை ஆயின. அரிது, அழகு, பயன் இவற்றைப் பொறுத்து க்ரிப்டோ பூனைகள் விலையாகின்றன. 2018-ல் A16Z இதில் $12 மில்லியன் முதலீடு செய்துள்ளார்கள். 

விளையாட்டுத் துறையின் ஈர்ப்பு உலகில் மிகவும் அதிகம். அதில் நினைவில் நிற்பவற்றை இரசிகர்கள் இலக்கங்களில் வணிகம் செய்கிறார்கள். இத்தகைய சேகரிப்புகள் $780 மில்லியன்கள் எனும்போது A16Z வாளாவிருக்குமா? அது கனடாவின் டேப்பர் ஆய்வகத்தை ஊக்குவிக்கிறது. தேசிய கால்பந்து குழுக்கள், விளையாட்டு வீர்ர்கள், மற்றைய விளையாட்டுக் குழுக்கள் இந்த மாற்றமுடியா இலச்சினைகளில் தங்கள் விளையாட்டுக்களும் இடம்பெற வேண்டி பேரங்களில் ஈடுபட்டுள்ளனர்.

துணிகர முதலீடுகள் எந்த உபத் துறையில் செய்யப்படுகின்றன?

பரவலாக்கப்பட்ட நிதியும், செயற்கை அறிவும் (1)

இது ஏதோ அறிவியல் புனைவு இல்லை. இணையம் முழுதும் ‘யூனிஸ்வாப்‘ (Uniswap) போன்ற பரவலாக்கப்பட்ட நிதி வர்த்தகத்தில் மனிதர்கள் கடன் கொடுக்கிறார்கள், கடன் பெறுகிறார்கள், இலக்கச் சொத்துக்களைச் சேமிக்கிறார்கள். இந்த டெஃபை (DEFI) யில் $325 பில்லியன் முதலீடு வந்திருப்பதாக தகவல் வருகிறது. நுகர்வோருக்கான உறுதிக்காகவும், நிதிப் பரிமாற்றங்களை மோப்பம் பிடிக்கும் இடைத்தரகர்களை குழப்புவதற்காகவும் ‘காம்பௌன்ட்’ (Compound) என்ற ஒரு செயலியையும் டெஃபை கொண்டுள்ளது. செயலியின் மேம்பாட்டின் போது ஒரு தீ நுண்மி அறிமுகப்படுத்தப்பட்டு $160 மில்லியன் மதிப்பிலான க்ரிப்டோ நாணயங்கள் முறையற்ற விநியோக ஆபத்திற்கு உட்படுத்தப்பட்டன. அதில் சுமார் $90 மில்லியன் தவறாகத்தான் கொடுக்கப்பட்டது. ‘காம்பௌன்ட்’ வணிகத் தரகு அல்ல; அது இணைய இலக்க வணிக நிதிக்கான செயலியைக் கட்டமைக்கும் ஒன்று. ஆனாலும், அதன் நிறுவனரான ராபர்ட் லேஷ்னர் (Robert Leshner) நியுயார்க் டைம்சிற்கு அளித்த பேட்டியில் ‘காம்பௌன்ட் தொடங்கிய முதல் இரு வருடங்களில், ஒவ்வொரு காலையிலும் குளிர் வியர்வையில் தான் எழுவேன்; சிறு தவறு, பெரும் நஷ்டமாகி விடுமே.’ என்று சொல்கிறார். 2017-ல் தொடங்கப்பட்ட இதில் தற்சமயம் $18 பில்லியன் க்ரிப்டோ நாணயங்கள் உள்ளனவாம். ‘இந்தச் செயலியில் ஒரு தவறான குறியீடு, ஒரு சிறு பிழையைக் கண்டுபிடித்தார்களானால் ஒரு நுண்மியை அனுப்பி அனைத்தையுமே ஆபத்திற்கு உள்ளாக்கமுடியும்,’ என்பது எனது கெட்ட கனவாகவே இருக்கிறது என்றும் சொல்கிறார் அவர். இதிலும் கொந்தல்களுக்கு இடம் ஏற்படும், பெரு நஷ்டம் உண்டாகும் என்பதுதான் நாம் அறிய வேண்டிய செய்தி.

சமுதாய தொலைத் தொடர்புகள்

A16Z ‘ஹீலியம்’ என்ற வலைத்தளத்தை ஊக்குவிக்கிறது. குடிமைப் பகுதிகளில் வசிப்போர் தங்கள் அருகாமைகளில் சிறப்புக் கருவி கொண்டு ‘ஹாட்ஸ்பாட்’ (Hotspot) அமைத்து, தரவுகள் சேகரித்துத் தந்தால், அவர்களுக்கு ‘ஹீலியம்’ இலச்சினைகளை இது வழங்கும். இது ஏடி&டி (AT&T) மற்றும் வெரைசனின் (Verizon) சந்தையை வென்றெடுத்து 5ஜி கொண்டு வர உதவும் ஏற்பாடு. இங்கே இந்தியாவின் தொலைத் தொடர்பு நிலையைச் சற்று பார்ப்போம். பல வருடங்களாக இத் துறையில் கோலோச்சிய பிஎஸ்என்எல் இன்று மாதச் சம்பளத்தை 45 நாட்களுக்கொரு முறை தான் தன் நிரந்தரப் பணியாளர்களுக்குக் கொடுக்கிறது. பல ஊழியர்கள் விருப்ப ஓய்வில் சென்றுவிட அவ்விடங்களில் ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான ஊதியம் ஏழு மாதங்களாக வழங்கப்படவில்லை. கிட்டத்தட்ட பதினாறு பேர் வறுமை தாளாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். (பிஎஸ்என்எல் அகில இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்களின் செயலாளர் பேசிய கூட்டத்தில் பெற்ற தகவல்) 100% அரசு நிறுவனமான இதன் கோபுரங்கள், தனியார்களுக்கு குறைந்த வாடகைக்கு விடப்பட்டுள்ளன. பாரதி ஏர்டெல் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக இருக்கிறது. அலைபேசி, தொலைபேசி, விரிவலை, தொலைக்காட்சி என்று 4ஜி அலைக்கற்றையுடன், தனித்தனி துணைக் குழுமங்கள் கொண்ட மாபெரும் நிறுவனம் இது.  சென்னையில், கடல் வழியே கம்பி வடம் அமைத்து மறுமுனையில் சிங்கப்பூருடன் இணையும் தொழில் நுட்பமும் இதன் பெருமைகளில் ஒன்று. பிஎஸ்என்எல்லுக்கு 4ஜி அலைக்கற்றை சேவை இன்னமும் கிடைக்கவில்லை. ஆனால், ரிலை(ல)யன்ஸ் ஜியோ இந்தியாவின் 22 வட்டங்களில் அரசாட்சி செய்கிறது. அதன் வசம் 850 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 1200 மெகா ஹெர்ட்ஸ் கற்றைகளுக்கான அகில இந்திய உரிமம் உள்ளது. 2035 வரை நீடிக்கும் 2300 மெகா ஹெர்ட்ஸ் அதன் வசத்தில் உள்ளது. கடன் பத்திரத்தின் மூலம் ரிலை(ல)யன்ஸ் குழுமம் $4 பில்லியன் நேற்று பன்னாட்டுச் சந்தையில் பெற்றுள்ளது.

சமூகத்தில் உங்கள் இடம்

உங்களை நீங்களே இலச்சினைகளாக மாற்றுங்கள், உங்கள் க்ரிப்டோ உங்களின் பொருளாதாரம்! ‘பிட்க்லவுட்’டில் (Bitclout) ஒவ்வொருவரும் பெறும் நாணயத்தின் மதிப்பு, இணையம் அவர்களை எவ்வாறு மதிப்பிடுகிறது என்பதைப் பொறுத்திருக்கிறது! இதன் பின்புலமாக எந்தக் குழுமமும் இல்லை. குறியீடுகளும், நாணயங்களும் மட்டுமே. ஈலான் மஸ்க் (Elon Musk) என்ற ஒரு கணக்கிற்கு அதிக மதிப்பு – $175!  பெரும் நிறுவனமான ‘டிவிட்டர்’ சேகரிக்கும் தரவுகளின் அடிப்படையைச் சார்ந்து இந்த சமூக மதிப்பீட்டுத் தளம் அமைந்துள்ளதாக இதன் விமர்சகர்கள் சொல்கிறார்கள். 

‘டிசோ’ (Deso) என்ற பரவலாக்கப்பட்ட தொடரேட்டுத் தளம், சமூக ஊடக நிகழ்ச்சிகளை வளர்ப்போருக்காகச் செயல்படுகிறது. இயக்க உலகிலும், நிகர் நிலையிலும் உறுப்பினர்களுக்கான  க்ரிப்டோ சார்ந்த கலை மற்றும் சமூக நிகழ்ச்சிகளை நடத்தும் ஓர் அமைப்பான ‘பயனுள்ள நண்பன்’ (Friend for Benefit) அமைப்பிலும் நீங்கள் இணைந்து கொள்ளலாம். நீங்கள் உறுப்பினராக இருந்தால் அந்தக் குழுவின் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம். ஜூன் மாதம் மியாமியில் நடந்த பிட்காயின் மாநாட்டில் ஆர்வம் கொப்பளிக்க ஆரவாரமாக நண்பர்கள் இணைய ஆசைப்படும் க்ரிப்டோ தளங்களுக்கான வரவேற்பில், A16Zஐ அசத்தியுள்ளது. தன் குழுமத்தின் சார்பாக ஒரு இளைய சாரணரை வேவு பார்க்க அது அங்கே அனுப்பி வைத்தது. இந்தக் குழுவினை இது ஊக்கப்படுத்துவதால் ‘பயனுள்ள நண்பன்’ குழு  பிரபலமாகி வருகிறது. அதன் இலக்க மதிப்பும் உயர்கிறது; உறுப்பினர் தொகையும் அதிகரிக்கிறது! செல்வம் சேர்ப்பதற்கு எத்தனை வழிகள்!

பேபி ரூத் (Babe Ruth) தத்துவம்

பாஞ்சாலியையும் வைத்து சூதாடிய தர்மனின் செயல் தான் இது. “பெரிதாக அடையலாம் அல்லது பெரிய இழப்பு ஏற்படலாம்.” இதுதான் ஹோவர்ட்சின் மந்திரச் சொல்லாக இருக்கிறது. அவர்கள் ஈடுபடும் அனைத்திலும் அவர்களுக்கு மிகப் பெரும் செல்வம் கிடைப்பது அரிதென்றாலும், சில செயல்பாடுகள் செல்வ மழையைக் கொண்டு வரலாம்.

பரவலாக்கப்பட்ட நிதியும், தொடரேட்டுத் தொழில் நுட்பமும் ‘அனைத்தும் அனைவருக்குமே’ என்ற கொள்கையில் செயல்படுவதானத் தோற்றம் இருக்கிறது. பிட்காயின் மற்றும் க்ரிப்டோக்களின் ஆதரவாளரான ஜேக் டோர்ஸி, ‘வெப்3 என்பது பயனர்களின் உடமை போலத் தோன்றலாம்; உண்மையில் அவை துணிகர முதலீட்டாளர்கள் மற்றும் குறைந்த எண்ணிகையிலான பங்குதாரர்களின் வசம் தான் உள்ளது’ என்று பதிவிட்ட செய்தி டிவிட்டரில் அவருக்கும் A16Zக்கும் இடையில் பனிப்போரை உருவாக்கியுள்ளது. அவர் தன்னைத் தொழில் நுட்பக் காதலனாகவும், A16Zஐ  அதிகப் பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் உள்ளவராகவும் சித்தரித்துள்ளார். இவருமே துணிகர முதலீடுகள் பெற்றவர், பெற்றுக் கொண்டுமிருப்பவர். ‘தான் பெற்றுக் கொள்கையில் அத்தகைய முதலீடுகள் சிறப்பு வாய்ந்தவை, மற்றவர்கள் பெறும் போதோ அது பரவலான உரிமைகளைப் பயனர்களுக்குத் தருவதான மாயத் தோற்றத்தின் மையச் சொத்துக் குவிப்பு’ எனக் கருதுகிறார் போலும். இதற்கான பதிலை A16Zம் கொடுத்துள்ளது. ‘மாமியார் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் பொன் சட்டி’ என்ற மனப்பான்மை இது. முதலில் கண் விழித்து வேட்டைக்குச் செல்லும் பறவைக்கு அதிகப் புழுக்கள் கிடைக்கும். அதைப் போலத்தான் இதுவும்- நம்மிடம் பணம் இருந்தால் தானே முதலீடு என்ற பேச்சுக்கே இடமிருக்கும்? காசிருந்தால் தானே சுண்டச் சொல்லும்! அப்படிப் பணம் உள்ளவர்கள் சரியான முதலீடுகளைச் செய்கையில் அது பல மடங்காக வளரும். இல்லையெனில், காலை வாரிவிடும். ஜேக் சொல்வதில் ஒரு உண்மையும் இருக்கிறது. உலகில், 27% பிட்காயின் சுழல்வது 0.01% நபர்களிடத்தில் தான் என்றால், பரவலாக்கப்பட்ட நிதியில் பொருளாதாரச் சமநிலையை எப்படி எதிர்பார்ப்பது? ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘விலங்குப் பண்ணை’ தான் நினைவிற்கு வருகிறது. ‘எல்லா விலங்குகளும் சமம்தான். ஆனால், சில விலங்குகள், மற்ற விலங்குகளைக் காட்டிலும் மேம்பாடு கொண்ட சமத்துவமானவை.’

சில க்ரிப்டோ சொற்களைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

க்ரிப்டோ கரன்ஸி: இலக்க நாணயங்கள்

பிட்காயின்: சுரங்கத் தங்கம்; வணிக வர்த்தக பணப் பரிமாற்ற நாணயம்.

ப்ளாக் செயின்: ஏட்டுத் தொடர்ச்சி, நம்பிக்கை, பரவலாகும் கடவுள். (கடவுள் அவரவர்களுக்கென்று தனித்தனியாகவும் இருக்கிறார், எல்லா இடத்திலும் பரவியும் இருக்கிறார். இத்தகைய ஒப்பீட்டிற்காக ஆண்டவன் மன்னித்து அருள்வாராக!)

ஈதர், டாக்காயின், டீதர்:  தொடரேட்டுத் தொழில் நுட்பத்தில் புழங்கும் சில நாணயங்கள்.

காயின்பேஸ்: அமெரிக்கப் பங்கு வர்த்தகச் சபையில், இலக்க நாணயப் பரிவர்த்தனைக்கானப் பட்டியலில் இடம் பெற்றுள்ள அமைப்பு.

க்ரிப்டோ நிதி: இலக்க வங்கி. நடுவண் வங்கிகளை நடுங்க வைக்கும் எண்மச் செயல்பாடுகள்.

என் எஃப் டி- அகல்யா- களங்கமில்லாத ஒன்று. உடமையாளரின் பெருமிதம்; உருவாக்கியவரின் அறிவுச் சொத்துக் காப்பு.

  1. இந்தியர்களின் க்ரிப்டோ ஆர்வத்தை, முதலீடுகளை முன்னர் இடம் பெற்ற கட்டுரைகளில் பார்த்தோம். நம் நாட்டில் நடுவழி என்று கலப்புகளைக் கையாள்வதில் ஆர்வம் மிகுதி என்று தோன்றுகிறது. நம்முடைய ‘செகுலரிசம்’, ஒரு காலத்திய ‘அணி சேரா நாடுகளின் கூட்டணி’, ‘சோஷலிசம்’ போன்றவை நினைவில் எழுகின்றன. இந்தக் கொள்கைகளில் குறைபாடுகள் இல்லை. ஆனால், செயல்முறையில் இவைகள் முழு வெற்றி பெற்றிருப்பதாகச் சொல்ல முடியவில்லை என்ற வருத்தம் வருகிறது.
  2. இவற்றைப் போலவே ‘க்ரிப்டோ’ விலும் நம் செயல்முறைகள் அமையக்கூடுமோ என நினைக்கத் தோன்றும் விதமாக அறிவிப்புகள் வருகின்றன. தொழில் நுட்பத்தை தேவையற்றது என நாம் வெறுக்கவில்லை எனக் காட்டுவதற்காக, க்ரிப்டோ நாணயங்களைத் தடை செய்ய வேண்டுமென்றும், க்ரிப்டோ சொத்துக்களை  சட்டபூர்வமாக்கி, அதை முறைப்படுத்த வேண்டுமென்றும் அரசு சொல்கிறது. ‘கரன்ஸி’ என்பது சொத்தாகவும் இருக்கலாமல்லவா? அதன் நிழல் உலகப் பயன்பாட்டை எவ்வாறு கண்காணிக்க முடியும்? உலகெங்கும் பணத்தை தம்முடைய தனிப்பட்ட பெட்டகங்களில் ‘கரன்ஸி’யாகவே வைத்திருப்போர் பலர் இருக்கிறார்கள். இன்றைய பொருளாதாரச் சூழலில் இந்தியா சற்று கவனத்துடன் செயல்படவேண்டும். அது தன் செலாவணியான ரூபாயை இலக்க நாணயமாகக் கொண்டு வர முதல் முயற்சி எடுக்கலாம். இணையப் பயன்பாடுகள், தொழில் வளர்ச்சி, உலக சந்தையில் மேன்மையான இடம், பொது மக்களுக்கான கல்வி, மருத்துவம் ஆகியவற்றை இதன் மூலம் அதிக செலவின்றி, அதிக முறைப்படுத்துதல் தேவையில்லாமல் சாதிக்கலாம்.

மற்றொரு விஷயமும் இங்கே கவனிக்கத் தக்கது. வளர்ந்து வரும் பல நாடுகளின் மைய வங்கிகள் அதிக அளவில் தங்கம் வாங்கத் தொடங்கியுள்ளன. டாலரின் மதிப்பு குறைந்து வருவதும், அமெரிக்காவின் பொருளாதாரச் சூழல்கள் அதன் மதிப்பை பாதிப்பதும், சீனா வலுவான வளர்ச்சியில் நிலை பெற்றிருப்பதும், தங்கம் எந்த ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் ஏற்ற இறக்கங்களுடன் தொடர்பற்று இருப்பதும், அன்னியச் செலாவணியின் கையிருப்பும் காரணிகளாகச் சொல்லப்படுகின்றன. ஹங்கேரியும், போலாந்தும் அதிக அளவில் தங்கத்தைக் கொள்முதல் செய்துள்ளன. (சுமாராக 100 டன்கள்) தாய்லாந்து 90 டன்னும், இந்தியா 70 டன் தங்கமும் இந்த நிதியாண்டில் வாங்கியுள்ளன, தங்கத்தை, பாதுகாப்பு அரணாக பல்வேறு நாட்டின் அரசுகள் கருதும் இந்தச் சூழலில் எந்த அடிப்படைச் சொத்துக்களையும், அரண்களையும் கொண்டிராத இலக்க நாணயங்கள் தங்களுக்கான சந்தையை விரிவாக்கி வருகின்றன.

****

[ஜனவரி 10 ஆம் தேதி அன்று, கட்டுரையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.]

உசாவிகள்:

1.How Venture Capitalists Think Crypto Will Reshape Commerce  By Ephrat Livni and Eric Lipton  Published Oct. 29, 2021Updated Nov. 2, 2021

2. By Daisuke Wakabayashi and Mike Isaac

Dec. 20, 2021Updated 2:11 p.m. ET

3. இதர இதழ்கள்

இக்கட்டுரை மேலே குறிப்பிட்டுள்ள ஆக்கத்தைத் தழுவி எழுதப்பட்டுள்ளது.

  • Daisuke Wakabayashi covers technology from San Francisco, including Google and other companies. 
  • Mike Isaac is a technology correspondent and the author of Super Pumped: The Battle for Uber
  • Livni reports on the intersection of business and policy for DealBook. 
  • Eric Lipton is a Washington-based investigative reporter. 

***

Series Navigation<< கோழி சிலம்ப, சிலம்பும் குருகெங்கும்யாயும் ஞாயும் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.