மிளகு அத்தியாயம் பதின்மூன்று

1999 லண்டன்

”நீங்க எல்லாரும் ஏதோ விதத்திலே ஒருத்தருக்கு ஒருத்தர் உறவு அல்லது நட்பு வளையத்தில் இருக்கப் பட்டவர்கள். இந்த விடுமுறை நாள் உங்களுக்கு அருமையாகக் கழியட்டும். இந்தியாவில் இருந்து, இங்கே படிக்கவும், எடின்பரோ பல்கலைக் கழகத்தில் வகுப்பெடுக்கவும் வந்திருக்கற  சின்னப் பெண் கல்பாவுக்கு மிக நன்றாகச் செல்லட்டும். நான் வர்றேன்”.

பிஷாரடி வைத்தியர் இருகை குவித்துப் பொதுவாக வணங்கி வாசல் பக்கம் நகர முற்பட்டார். முசாபர் அவரைத் தடுத்துச் சொன்னார் –

”கல்பாவுக்கு நீங்க தகப்பனாரோட சிநேகிதர். அவளுக்கும் ஆகவே சிநேகிதர். கல்பாவுக்கு நண்பர் என்றால் எங்க எல்லோருக்கும் நண்பர். ஆகவே நீங்கள் இருந்தால் எல்லோரும் சந்தோஷப்படுவாங்க.”

பிஷாரடி வைத்தியர் உபசாரமாக நாலு நல்ல வார்த்தை சொல்லி முசாபர் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்ள முடியாததற்காக வருந்தி வெளியே நடந்தார். கல்பா வாசல் வரை வந்து வழியனுப்பினாள்.

”மதியம் லஞ்ச். அப்புறம் அரட்டை. ராத்திரி மீந்து போன பகல் சாப்பாடு, போதாததுக்கு பிட்ஸா டின்னர். சீக்கிரம் பார்ட்டி முடிச்சு வந்துடறேன் ப்ரபசர் சார். நாளை ஒரு நாள் லண்டன். நாளை மறுநாள்  உத்தியோகத்தைத் தொடங்க எடின்பரோ போகறேன். அதுக்குள்ளே உங்க கிட்டே நிறையப் பேசணும். எங்க அப்பா திலீப் ராவ்ஜியும் நீங்களும் எப்போ சிநேகிதரானீங்க, என் அம்மா அகல்யா உங்க வீட்டம்மாவுக்கு எவ்வளவு நட்பு எல்லாம் தெரிஞ்சுக்க ஆவல்,” என்றாள் கல்பா. 

”பேசலாம். நிறையப் பேசலாம். இப்போ எக்ஸ்டெண்டட் கெட் டுகெதர் (extended get together) உனக்குக் காத்துக்கிட்டிருக்கு. ஜாக்கிரதையா இருந்து யாராவது இங்கே இருக்கப்பட்டவங்க உன்னை வால்தம்ஸ்டவ் (Walthamstow) கொண்டு விட்டா வா. இல்லே, எனக்கு ஃபோன் பண்ணு நான் வந்து அழைச்சுப் போறேன்”.

அவரே எதிர்பார்க்காததாக அவரை அணைத்து தோளில் தட்டி விடை கொடுத்தாள் கல்பா. இந்தியாவில் இருந்து வந்த பெண்ணுக்கு தைரியம் அதிகம் தான் என்று அவருக்குப் பட்டபோது மற்றவர்கள் கைதட்டி கல்பாவுக்கு தங்கள் உடன்படலையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்கள். 

சாரதா தெரிசா அந்தக் கரகோஷத்தில் கலந்து கொள்ளவில்லை. வெற்றுப் பார்வையோடு அவள் முசாபரைப் பார்த்தபடி இருந்தாள். முசாபர் அவளைப் பார்த்துப் புன்னகைத்தார்.  

அவளது பக்கத்து நாற்காலியில் யாரும் இல்லாததைக் கவனித்து முசாபர் அங்கே போய் அமர்ந்தார். 

“சங்கரன் சார் எப்படி இருக்கார்?” முசாபர் கேட்க, “பார்த்து ஒரு வருஷம் ஆச்சு. நல்லாத்தான் இருக்கார்னு நினைக்கறேன்” என்றாள் தெரிசா.

 “ஹாலிவுட் நடிகை பேசற மாதிரி இருக்குதா, முசாபர்? முந்தைய கணவன் கிட்டே இப்போதைய கணவர் பற்றி பேசற மாதிரி”, 

புன்னகைத்தாள் சாரதா தெரிசா.

”நீ எப்படி இருக்கே தெரசா?”

“ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கேன். ரொம்பவே,” தெரிசா குரலில் உற்சாகம் இல்லாததை முசாபர் கவனித்தார். “இருபத்தைந்து வருடம் பின்னால் போக முடியும்னா,” அவள் சொல்லி நிறுத்தி முசாபரைப் பார்த்தாள்.

“தெரிசா சந்தோஷமா இரு. நான் இருக்கேன் இல்லே?. எல்லாத்தையும், உன்னையும் இழந்து இன்னும் சந்தோஷம் குறையலே. இழக்க இனி  என் உசிர் தான் இருக்குன்னு இருக்கற நேரத்திலே ஆமி வந்தா. நீ அவளைப் பார்த்திருக்க மாட்டே. வரப் போறா பாத்துட்டு சொல்லு என் புதுத் தோழி எப்படி இருக்கான்னு.” 

சாரதாவின் கையை அன்போடு வருடி விட்டு எழுந்தார் முசாபர். தெரிசா அந்த ஸ்பரிசத்தில் முகம் மலர்ந்தாள். முசாபருக்கு  அந்த முகம் பிடித்திருந்தது.

அப்புறம் அவளை நீளமாக சாரதா தெரிசா என்று அழைக்க நேரம் எடுத்ததால், ஒரு தடவை சாரதா என்று கூப்பிட்டால் மறுமுறை தெரிசா என விளிக்கிறதாகச் சொன்னார் முசாபர். சரி தான் என்று சொல்லி விட்டாள் சாரதா. மற்ற எல்லோருக்கும் அவள் சாரதம்மாதான்.

”கல்பா எங்கள் எலிமெண்டரி ஸ்கூல் காலத்தில் இருந்து தோழி. அவள் அம்மாவும் அப்பாவும் என் அம்மா சாரதம்மாளும் நல்ல நண்பர்கள், ஹோட்டல் தொழில், வாசனை திரவிய வர்த்தகம் இப்படி இன்னும் நல்ல பிசினஸ் பார்ட்னர்கள்.  அமெரிக்கா ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்திலே நியூக்ளியர் ஃபிசிக்ஸ் டாக்டரேட் வாங்கிய கல்பாவுக்கு இங்கே எடின்பரோ பல்கலைக்கழகத்திலே அசிஸ்டண்ட் ப்ரபசராக உத்தியோகம் ஆகியிருக்கு. அடுத்த வாரம் பணியிலே சேரப்போறா.  எடின்பரோ போகிற வரைக்கும் இங்கே லண்டனில் இருக்க வந்திருக்கிறாள். இப்போது வந்துவிட்டுப் போன பெரியவர் ப்ரபசர் பிஷாரடி கல்பாவின் அப்பாவுடைய ரொம்பநாள் தோழர். ஒரே ஊர். அம்பலப்புழை. அவர் வீட்டிலே தான் கல்பா இங்கே தங்கியிருக்கா.”

கல்பாவை மருது அறிமுகப்படுத்தி வைக்க எல்லோரும் கை தட்டினார்கள்.  

”கல்பா இன்னிக்கு முழுக்க நான்-வெஜிடேரியனாக சாப்பாடு செஞ்சிருக்கு. உனக்கு வேணும்னா, கறித்துண்டை எடுத்துப் போட்டுட்டு பிரியாணி சாப்பிடு.” 

மருது சொல்ல, ”என்னத்தைத் தின்னக் கொடுத்தாலும் என் கிட்டே என்னன்னு நீ சொல்லாதவரை எல்லாமே எனக்கு ஒண்ணு தான்,” என்றாள் கல்பா.

 மருதுவின் நான்கு நண்பர்கள், இந்தியர்கள் எப்படி காய்கறிகளை மட்டும் சாப்பிட்டு சீவிக்கிறார்கள் என்ற ஐந்து நூற்றாண்டு சந்தேகத்தைத் தூசி தட்டி எடுத்துப் புதுசாகக் கைக்கொண்டார்கள்.

”மருது அவளுக்கு நான்-வெஜ் ஒத்துக்காதுன்னு தெரிஞ்சும் ஏன் அதை ஆர்டர் பண்ணியிருக்கே. அதை உங்க ஆபீஸ் கேண்டீன்காரங்க செஞ்சு தராங்க, அசல் ஆந்திரா சாப்பாடு. சரிதான். ஆனால் எதுக்கு ஆந்திரக் காரத்தோடு கூட ஆந்திரா ஸ்பெஷல் தம் பிரியாணியும் சிக்கன் சிக்ஸ்டிஃபைவும்?” 

சாரதா தெரிசா தன் மகனைப் பார்த்துக் கேட்க அவன் வெறுமனே சிரித்தான்.

 ”ஏம்மா, உங்களுக்கும் அதெல்லாம் பிடிக்காது தானே?” 

அவன் சாரதாவைக் கேட்டபோது அவள் அப்படி இல்லை என்று தலையை ஆட்டினாள். 

”இருபத்தைந்து வருஷம் வறுத்த மீனும் உருளைக்கிழங்கு வறுவலும் வித்துக்கிட்டிருந்தவ. வாடை பிடிக்காமலா வியாபாரம் பண்ணி பணத்தை எண்ணி வாங்கிப் போட்டிருப்பேன். அது இப்போ கூட அப்பப்ப வர்ற ஆசை. நியூஸ் பேப்பர்லே சுடச்சுட வறுத்த மீனும் விரல் மாதிரி நீளநீளமா உருளைக்கிழங்கு மாதிரி வறுவலும் சேர்த்து சாப்பிடணும்னு தோணும். ஆனா உடனே அந்த வாடை கற்பனையிலேயே குமட்ட ஆரம்பிச்சுடும். வேண்டாம்னு தோணிச்சுன்னா அப்புறம் வேண்டாம் தான்.”

அவள் பேசிக்கொண்டிருந்தபோதே வாசலில் அழைப்பு மணி ஒலித்தது.  அமி வந்திருப்பாள் என்றார் முசாபர். கல்பா வாசல் கதவைத் திறக்க விரைந்தாள்.

” ஹலோ எல்லோரும் எப்படி இருக்கீங்க?” 

ஸ்காட்லாந்து  கொச்சை இங்க்லிஷில் விசாரித்தபடி சிரித்த முகத்தோடு உள்ளே வரத் தயாராக நின்ற பெண்ணுக்கு நாற்பது வயதாவது இருக்கும்.  ஆறடி உயரம், கிரேக்க பெண் தெய்வம் அஃப்ரொடைட் Aphrodite போன்ற அழகான முகம். இரண்டரை சராசரி வெள்ளைக்காரப் பெண்களைச் சேர்த்துக் குழைத்துப் பிடித்தது போல் வாளிப்பும், பளபளப்புமான உடல், பளிச்சென்ற கத்தரிப்பூ நிறத்தில் ஸ்கர்ட், வெள்ளை ப்ளவுஸ். பார்த்தால் கண்ணை எடுக்க முடியாத வனப்பான பெரும் பெண் அவள்.

”அமி உள்ளே வா. வா.” 

முசாபர் எழுந்து நின்று வரவேற்றார். அப்போது தான் சாரதா அவர் வலது பாதத்தில் நடு விரல் இல்லாததைக் கவனித்தாள். முசாபரின் இந்த உடலை, அவர் மனதை விரும்பி அன்பு செய்த முப்பது வருடத்துக்கு முந்திய நினைவு அவளுக்குள் எழ, அடக்கி வைத்து அமியை வரவேற்க எழுந்து நின்றாள்.

”சரதம்ம. நீங்க தானே? முசாபிர் சொல்லியிருக்கான். நல்லா இருக்கீங்களா உங்க மகன் மார்ட் இதிலே யார்?” என்று கேட்டபடி மருதுவின் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஆப்பிரிக்க இளைஞனைச் சுட்டிக் காட்டினாள் அவள்.

”அமி, நான் தான் மருது”. 

மருது சொல்லியபடி முன்னால் வந்து கை குலுக்கினான். 

”நான் சாரதா. இதற்கு முன்னால் தெரிசாவாக இருந்தவள்”. 

சாரதா  இருகை கூப்பி வணங்கினாள். வினோதமான சமிக்ஞை எதையோ பகிர்கிறதுபோல் கைகளைக் கூப்பி நெஞ்சில் அணைத்தபடி வைத்து வணங்கி அது போதாது என்றுபட குனிந்து வணங்கி நிமிர்ந்தாள் அமி . 

“உள்ளே வா அமி,” மறுபடியும் சொன்னார் முசாபர். 

“அது தானே பிரச்சனை. வாசலுக்குப் பக்கமா அடுத்த ஃப்ளாட் கதவு பாதி திறந்து இருக்கு. இருக்கப்பட்ட இடம் உங்க எல்லோருக்கும் கடந்து வரப் போதும். எனக்கு நுழைய முடியாது. உடம்பு ஊதிப் போச்சு பாருங்க, அதான் காரணம்”.

அமி கலகலவென்று சிரித்தபடி சொன்னாள். உடம்பு வாகு அல்லது ஏதாவது சுரப்பி சம்பந்தப்பட்ட கோளாறாக இருக்கும் என்று நினைத்தபடி சாரதா உபசாரமாகச் சொன்னது இது – ”அந்த உயரத்துக்கு உடம்பு இன்னும் கூட கொஞ்சம் சதை போட்டிருக்கலாம். அமிக்கு என்ன கவலை? முசாபர் நல்லா கவனிச்சுப்பான். அவன் இல்லேன்னாலும் நீயே கவனிச்சுக்க மாட்டியா என்ன?”

”நானாக என்னை கவனிச்சு கவனிச்சுத்தான் இப்படி சதை போட்டுடுத்து. அதுக்கு மேலே சுரப்பி சரியா வேலை செய்யாம சாப்பிடறது எல்லாம் சதையாகிட்டிருக்கு.” 

முசாபர் அடுத்த ஃப்ளாட் கதவை அவர்களிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டுச் சார்த்தினார். இங்கே முழுக் கதவும் திறந்து இருக்க, அமி உள்ளே நுழைந்தாள். பெரிய ஜோல்னா பை ஒன்றை மாலை போல தோளில் மாட்டியிருந்தாள் அவள். அதிலிருந்து சிறு பொதி ஒன்றை எடுத்து வெளியே வைத்தவள், கூடவே ஒரு யாஷிகா கேமராவையும் எடுத்து வைத்தாள்.

”மருது, உனக்கு மார்ஷ்மெலோ பிடிக்கும்னு முசாபர் சொன்னான். இந்தா உனக்காக ஸ்பெஷலா வாங்கி வந்தேன்”

”அப்பா இதையும் சொல்லிட்டீங்களா உங்க புதுப் பொண்டாட்டி கிட்டே?”

 மருது முசாபரை முகவாயைப் பிடித்து தலை திருப்பிச் சொன்னபடி ஒரு மார்ஷ்மெலோவை முசாபர் வாயில் போட்டான். சாரதா முகத்தில் உணர்ச்சி காட்டாமல் பார்த்தபடி நின்றாள். மருது முசாபரை அப்பா என்று அழைத்ததில் அவளுக்கு மகிழ்ச்சியும் துக்கமும் மாறி மாறி வந்தது. அவன் தன் சொந்தத் தந்தை சங்கரனிடத்தில் இந்த அந்நியோன்யம் காட்டியதே இல்லை என்று நினைவும் வந்தது. அம்மா என்று சாரதாவிடம் காட்டுவதும் ஆழமில்லாத பிரியம் தானோ.

உள்ளே சமையல்கட்டுக்குப் போகும்போது கல்பாவைப் பார்த்தாள் சாரதா தெரிசா. ”கல்பு, கொஞ்சம் உதவி செய்யேன். டீயை நீ எடுத்து வா. மிக்சர் தட்டுகளை நான் எடுத்து வரேன். சாப்பிட்டுட்டு இருக்கறபோதே லஞ்ச்   வந்துடும்”. 

கல்பா உடனே ”ஓ, மை ப்ளஷர் சாரதா ஆண்ட்டி” என்றபடி அவளோடு சமையல்கட்டுக்குப் போனாள். அவர்கள் தட்டுக்களில் மிக்சரும்,  கோப்பைகளில் தேநீருமாக வந்து எல்லோருக்கும் அளித்தபோது அமீ பொதுக் கூட்டத்தில் பேசுவது போல் முன்னால் நின்று பேசத் தொடங்கினாள்

”நான் அமி அதாவது அமிதா ஜோசபைன் அதாவது அமி முசாபர் அதாவது எப்போதும் வேறே எதுவும் சேர்க்காமல் அமி. போன வாரம் நானும் முசாபரும் கல்யாணம் செய்து கொண்டோம். நான் நாற்பது வயதுக்காரி. முசாபர் அறுபத்திரெண்டுக்காரன். இரண்டு பேரும் இதற்கு முன் நான்கு தடவை ஒவ்வொருத்தரும் கல்யாணம் செய்து கொண்டவங்களாக இருந்தோம்”.

”உங்கள் சற்றே முந்திய கணவர் பற்றிச் சொல்ல முடியுமா?” 

மருதுவின் நண்பரான ஆப்பிரிக்கப் பெண் தயங்கித் தயங்கிக் கேட்டாள். 

“இதைக் கேட்கக் கூடாதுன்னா நீங்கள் பதில் சொல்ல வேண்டாம்” என்றாள் அமியிடம் கேட்கக் கூடாததைக் கேட்ட சங்கடத்தோடு.

”அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லே. நிச்சயமா பதில் சொல்றேன். என் வாழ்க்கை மற்றப் பலர் வாழ்க்கை போல திறந்த புத்தகம். ஆனா இதிலே ஒண்ணுமே எழுதலே. முசாபருக்கு முந்திய என் கணவர் ஒரு மருத்துவராக இருந்தார்.  ஐம்பது வயதில் திடீரென்று மாரடைப்பு வந்து காலமானார். அவர் மிக்க நல்லவர். சன்னமான குரலில் ஐரீஷ் நாட்டுப் பாடல்கள் பாடக் கூடியவர்.  சமையல் செய்வதில் மிகுந்த ஆர்வம். ஆம்லட்டும் கோழிக் கறியும் அப்படி சுவையாக சமைப்பார்”. 

”முசாபர் உங்களை எங்கே சந்தித்தார்?” அந்தப் பெண் விடாமல் கேட்டாள்.  

”என் முந்தைய கணவரின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது என்னை அழைத்து தன் பிரியத்தைச் சொன்னார். இருபது வருடம் வயது வித்தியாசத்தைக் கடப்போம் உனக்கு ஆட்சேபணை இல்லையே என்று அவர் கேட்டார். வேறு பதில் தெரியவில்லை” அமி சொன்னாள்.

அவள் சொல்லி முடிப்பதற்கும் சாரதா தெரிசா தன்னை அறியாமல் ஈர்ப்போடு கூறினாள் – உன்னிடமுமா சாவு வீட்டில் கல்யாணம் பேசினான்?

மருதுவும் கல்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நிற்க, முசாபர் சொன்னது இது – ”நாமெல்லாம் வளர்ந்தவர்கள். அமி கூடுதல் வளர்ச்சியுடையவள். திருமணம் என்பது ஒரு வாழ்க்கை சௌகரியம் என்பதை நான் நம்புகிறேன். மற்றவர்கள் எப்படியோ. என் முதல் மனைவி, வீட்டில் நிச்சயித்த நூருன்னிஸா. அடுத்த மனைவி இந்த ஆருயிர்த் தோழி தெரிசா அதாவது சாரதா.” 

நிறுத்தி சாரதாவைப் பார்த்தார் முசாபர்.

”ஆம், என் முதல் கணவர் மெட்காஃப்பின் இறுதிச் சடங்குகளின் போது தான் நானும் முசாபரும் சந்தித்தோம். என் முன் மண்டியிட்டுக் காதலைச் சொன்னான் முசாபர். ஏற்றுக் கொள்ளக்கூட அவகாசம் தரவில்லை. இறுதிச் சடங்குகள் தடையின்றி நடந்தேற அவனுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டேன்.”

”யாசிப்பை என்று சொல்லலாமே தெரிசா ஐமீன் சாரதா”.

”ஆம் அவனுடைய யாசிப்புக்கு கல்யாணத்தை பிச்சையிட்டேன்”.

சாரதாவும் முசாபரும் சிரிக்க மற்றவர்கள் சற்றுப் பொறுத்து நகைப்பில் கலந்து கொண்டார்கள். மருது சிரித்தபடி முசாபரைத் தோளில் தட்டினான். கல்பா சாரதாவைக் கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

”கல்பா, நீ அமெரிக்காவிலே படிச்சுக்கிட்டு இருந்திருக்கே. இங்கே அசிஸ்டெண்ட் ப்ரபசரா வகுப்பு எடுக்க வந்திருக்கே. ரெண்டு கலாசாரமும் என்ன என்ன வேறுபாடு காட்டுது?” 

சாரதா கேட்க, கல்பா கொஞ்சம் யோசித்து விட்டுச் சொன்னாள் – ”இங்கே இங்கிலாந்தில் இன்னும் பல விஷயத்திலே பழமைவாதிகளாக, கன்சர்வேடிவ் ஆகத்தான் இருக்கறதைப் பார்க்கறேன். கல்யாணம், விவாக ரத்து எல்லாம் நிறைய பொறுப்போடு செயலாக்க எடுத்துக்கிட்டு மெல்லத்தான் நடந்தேறுது. ஆனா அமெரிக்காவில்  அது வேகமாக நடக்கும்னு தோணுது. அடுத்தது, அங்கே எல்லோருமே வந்தேறிகளோ, வந்தேறிகளோட குடும்பங்களோட ஏழாவது, எட்டாவது தலைமுறைங்கறதாலே எல்லோருக்கும் ஒரே மாதிரி வாய்ப்பு கிடைக்குது. இது படிப்பு, உத்தியோகம், வீடு வாங்கறதுக்கு கடன், கார் வாங்கி, வீடு வாங்கி கிடைக்கற சம்பளத்துலே கல்யாணம் செஞ்சுக்கிட்டு செட்டில ஆறது ரொம்ப ஈசி. இங்கே அது கொஞ்சம் மந்தமாகத்தான் போகுதுன்னு தெரியுது” என்றாள் கல்பா.

”அமெரிக்காவில் இப்படி ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய ஒரு வாரமாவது மெனக்கெடனும். ஒவ்வொருத்தரும் மற்றவங்க கிட்டே இருந்து குறைந்தது நூறு கிலோமீட்டர் தூரத்திலே இருக்காங்க. இங்கே இங்கிலாந்துலே, நடந்து போய் சந்திக்கற தூரத்திலே பலரும் உண்டு. அங்கே கார் இல்லாட்ட நகர முடியாது. இங்கே பொது போக்குவரத்து பஸ், தரை ரயில், பாதாள ரயில் இப்படி ராத்திரி பனிரெண்டு வரை சர்வீஸ் உண்டு”. 

”நான் அமெரிக்கா போனதே இல்லை. ரெண்டு வருஷம் முந்தி போக ஏற்பாடு செஞ்சிருந்தேன். என் அப்போதைய கணவர் இறந்து போக, ஒத்தி வச்சுட்டேன்,” அமி சொன்னாள்.

அமி கல்பாவிடம், கலிபோர்னியா போக ஆசை என்றாள். அங்கே தான் மூணு வருஷம் படிச்சேன் என்றாள் கல்பா.

வாசலில் சத்தம். யாரோ போய்க் கதவைத் திறந்தார்கள்.

உணவு விடுதி சீருடை அணிந்த இரண்டு ஊழியர்கள் கையில்  கூடைகளோடு நின்று கொண்டிருந்தார்கள். 

சாரதா நினைத்துப் பார்த்தாள் – உணவைப் பார்த்தால் சந்தோஷம். உணவை முகர்ந்தால் பெருமகிழ்ச்சி. உணவு வந்திருக்கிறது என்று கேட்டால் ஆனந்தம். உணவை உண்டால் சொர்க்கம். எல்லா வயதிலும், எல்லா தரத்திலும், ஆணோ பெண்ணோ இருபாலரோ ஆக இருந்தும், உணவைக் கொண்டாடுவது அதை உண்டு களித்தும், உண்ணக் கொடுத்துக் கண்டு களித்தும் தான்.

மருது ஃப்ளாட் வாசலில் நின்ற மூன்று பேரும் லண்டன் ஈஸ்ட் ஹாம் பகுதியில் தென்னிந்திய சைவ உணவகத்தில் பணி புரிகிறவர்கள் என்று அவர்களின் சீருடை சொன்னது.

”என்ன கொண்டு வந்திருக்கீங்க?” 

கல்பா ஆவலை அடக்க முடியாமல் கேட்டாள்.

”இட்டலி, சாம்பார் சாதம், அடை, அவியல், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சப்பாத்தி, குருமா, குலோப்ஜாமுன், பிஸ்தா ஐஸ்க்ரீம்”. 

“வாவ் ஒரு கட்டு கட்டிட வேண்டியதுதான். ரெண்டு வாரம் ஆச்சு சாம்பார் சாதம் சாப்பிட்டு”. 

கல்பா சின்னக் குழந்தை போல் உற்சாகத்தோடு சொன்னாள். மருது நான்- வெஜிடேரியன் உணவு வரப் போகிறது என்று சொன்னது சும்மா அவளைச் சீண்டிப் பார்க்க என்று புரிந்தபோது மருது மேல் கல்புவின் அபிமானம் கூடியது. 

அவன் உரிமை எடுத்துக் கொள்கிறான். பிடித்ததால். மருதுவின் அம்மா சாரதா உரிமை எடுத்துக் கொள்கிறாள். அவளைப் பிடித்ததால். மருதுவோடு கல்பாவுக்கு இருக்கும் சிநேகிதம் அடுத்த கட்டத்துக்குப் போகும் காலம் வந்திருக்கிறது என்று கல்பாவுக்குத் தோன்றியது.

 உணவை மட்டும் நேசிக்கிறது இல்லை. அதைக் கொண்டு வந்து தருகிறவர்களும், தர ஏற்பாடு செய்பவர்களும் பிரியத்துக்கு உரியவர்களே. வேட்டையாடிக் கூட்டத்துக்கு இரை தேடித்தரும், கொண்டுவரும் விலங்குகள் போல் தான் எங்கும்   நடக்கிறது. தெரிசா உணவு நினவுகளில் இன்னும் அமிழ்ந்து இருந்தாள்.

கல்பா ஆகாரத்தை வேனில் இருந்து இறக்க உதவி செய்ய உணவக ஊழியர்களோடு கீழ்த் தளத்துக்குப் போனாள். அவளோடு மருதுவும் கீழே வந்தான். ஆப்பிரிக்கப் பெண்ணும்.

”அசைவ உணவு கிடையாதா?” 

மருதுவின் ஆப்பிரிக்க நண்பர்களில் அந்தப் பெண் முகத்தில் வருத்தம் காட்டினாள்.  

“ஜூலியட், நீ இதை சாப்பிட்டுப் பாரு, நிச்சயம் ரொம்பப் பிடிச்சிருக்கும். உப்பு, மிளகாய், மிளகு, காரசாரமான மசாலா, அதைத் தணிக்கிற மாதிரி வித்தை காட்டி சுவையை உணர்த்தி நெற்றியில் குப்பென்ற வியர்வையால் உடல் நன்றி சொல்ல இன்னும் கொஞ்சம் உணவுக்காக எதிர்பார்க்கும் ஆவல். ஒண்ணொண்ணும் சாப்பிட்டு உணர வேண்டும், ஜுலியட்”. 

அந்தப் பெண் ”சரி சாப்பிட்டு விட்டுச் சொல்கிறேன்” என்றாள். ஐந்து பேர் இறக்கியதால் கொண்டு வந்த உணவு சுடச்சுட எல்லா நல்வாடைகளோடும் அடுத்த சில நிமிடங்களில் மருதுவின் ஃப்ளாட்டுக்குள் வந்து சேர்ந்தது. 

 சாப்பிடலாமா? ஆப்பிரிக்கத் தோழி அவசரம் குரலில் வரக் கேட்க, கல்பா மௌனமாக அவளுக்கு ஆதரவு தெரிவித்தாள்.

தேநீர் பருகி ஒரு மணி நேரம் தானே ஆகிறது. பசிக்குமா என்று சாரதா நியாயமான சந்தேகத்தைக் கேட்க, அதெல்லாம் வயிறு வழிவிட்டுடுத்து என்றாள் கல்பா. சாரதா மருதுவை ”வாடா செர்வ் பண்ணலாம்” என்று கூப்பிட்டாள். வந்தாச்சு என்று எழுந்தார் முசாபர்.

யாரும் பிகு பண்ணிக் கொள்ளாமல் சாப்பிட ஆர்வம் காட்டினார்கள்.

மருது, நான்-வெஜ் எங்கே என்று கல்பா கேட்டாள். நீ கேட்கப் போறேன்னு தெரிஞ்சிருந்தா ஆர்டர் பண்ணியிருப்பேனே என்றான் மருது. வேண்டாம் வேண்டாம் இதுவே போதும் என்று சிரித்தாள் கல்பா. 

ஆமா என்னமோ பெரிசா சாப்பிடப் போற மாதிரித்தான் என்று மருது அவள் தோளில் தட்டும்போது பக்கத்தில் நின்ற தெரசா மனதில் இரண்டு பேரையும் சேர்த்துப் பார்த்து வாழ்த்தினாள். 

ஆப்பிரிக்கத் தோழர்களுக்கு இந்தச் சைவ இந்திய உணவு ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. இவ்வளவுக்கும் சாம்பாரும், சட்னியும் சப்பாத்தியோடு வந்த குருமாவும் நல்ல காரமாக இருந்தது அவர்களையோ வேறு யாரையுமோ தொல்லைப் படுத்தவில்லை.

 அப்புறம் அரட்டை அரட்டை அரட்டை. ஒரு மணி நேரம் தூக்கம். எழுந்தபோது ராத்திரி ஏழு மணி.

பார்ட்டி பார்ட் டூ ஆரம்பிக்கலாமா? கல்பா ஆர்வத்தோடு கேட்டாள். பிட்ஸா வந்தாச்சா? மதியம் மீந்து போன சாப்பாடை எப்போ சுட வைக்கணும்? அவள் கேள்விகள் மயமாக சுற்றிச் சுற்றி வந்ததை சாரதா ரசித்தாள்.

பிட்ஸா வந்து சேர்ந்து, பிட்ஸாவுக்குத் தொட்டுக்கொள்ள அவியல், பர்கருக்கு சாம்பார் துணை, மிஞ்சிய இட்டலிகளைப் பிய்த்துப் போட்டு செய்த இட்டலி ரோஸ்ட், எல்லா சாதத்தையும் கலந்து ரைஸ் ஃப்ரை என்று இரவு விருந்து கட்டமைக்கப்பட்டது.  ராத்திரி ஒன்பது மணி என்று கடியாரம் சொன்னது.

கல்பா திரும்ப வால்தம்ஸ்டாவுக்கு பாதாள ரயில் சேவை இருக்கும்போதே போய்ச்சேர வேண்டும். ஆப்பிரிக்க நண்பர்களுக்கும் க்ரேய்டன், Craydon இன்னும் கொஞ்சம் அதிக தூரம் போக வேண்டியிருந்தது. சாரதா கல்பாவைக் காட்டி மருதுவிடம் ஏதோ சொல்ல, ’அவள் கேட்டால் நான் ஏற்பாடு பண்ணுவேன்’ என்றான் மருது. 

”ஒரு வேனை எடுத்து முதலில் வால்தம்ஸ்டவ் போய் கல்பாவை இறக்கிவிட்டு க்ரேய்டனுக்குப் போகும் பஸ் ஸ்டாண்டில் ஆப்பிரிக்கத் தோழர்களைக் கொண்டுபோய் விடலாமே” என்று சாரதா யோசனை சொன்னாள். 

மருது உடனே தொலைபேசித் தொடர்பு கொண்டு, ஒரு ஃபோர்ட் ட்ரான்ஸிட் கஸ்டம் பிக்-அப் வேனை, ஆறு மணி நேர வாடகைக்கு எடுத்துவிட்டான். திரும்பப் போவது குறித்த மன அழுத்தம் வெகுவாகக் குறைய, எல்லோரும் விருந்தை ரசித்து உண்டார்கள்.

வேன் நேரே க்ரைய்டன் போகட்டும் என்றான் மருது. 

”அப்போ நான் எப்படி போறது?” 

கல்பா கவலையோடு கேட்க, நான் கொண்டு போய் விடறேன் என்று சுருக்கமாகச் சொல்லி விட்டு சாப்பாட்டுத் தட்டோடு முசாபரிடம் நகர்ந்தான் மருது. 

காரம் அதிகமோ என்று மருது கேட்க, ”நான் ருசி பார்த்து சாப்பிடறதை விட்டு எவ்வளவோ நாளாச்சு மருது. நாலு கவளம் சோறு, இல்லையா, ரெண்டு வெறும் ரொட்டி, ஒரு வெங்காயமும் பச்சை மிளகாயும் அரிஞ்சு கடிச்சுக்க வச்சு, இப்படியே பழக்கப் படுத்திக்கிட்டேன்” என்றார் முசாபர். 

மருதுவின் மொபைல் ஃபோன் மெதுவாக ஒலித்தது. கையில் பிடித்த சாப்பாட்டுத் தட்டில் இருந்து ஃப்ரைட் இட்டலிகளை விரலால் எடுத்து உண்டு கொண்டிருந்த மருது தட்டை சாரதாவிடம் கொடுத்து விட்டு மொபைலில் ஹலோ சொன்னான்.  கை தவறுதலாக ஃபோனின் ஒலிபெருக்கி உயிர்பெற எல்லாரும் கேட்டார்கள் –

”மருது, நான் பகவதி பேசறேன்”.

ஒலிபெருக்கியை நிறுத்தி, ”சொல்லு பகவதி நல்லா இருக்கியா?”  என்றான் மருது. 

“அப்பா, நம் அப்பா,” 

“சின்னச் சங்கரன் சார்  எப்படி இருக்கார்” என்று மெல்லிய குரலில் கேட்டபடி வீட்டு சமையலறைக்குள் உணவுப் பாத்திரங்களைக் கடந்து போனான். 

அடடா அப்படியா என்று அவன் திரும்பத் திரும்பச் சொல்லியபடி இருக்க, ”அழாதே சரியாகிடும் அம்மா கிட்டே ஃபோன் கொடு உங்க அம்மா கிட்டே கொடுன்னு சொன்னேன்” என்று அடுத்து சொன்னபோது மொபைல் இணைப்பு இல்லாமல் போனது.

வெளியே வந்து சாரதாவிடம் சொன்னான் – ”அம்மா, அவர் போன ஃப்ளேன் ஹைஜாக் ஆயிடுத்தாம். பகவதி சொல்றா, my half sister”. அவன் குரல் நடுங்கியது.

சாரதாவுக்கு ஒன்றும் புரியவில்லை. 

”யார் போன ஃப்ளேன் ஹைஜாக் ஆச்சு?”

“சங்கரன் போன ஃப்ளேன். சங்கரன். எங்கப்பா.. உங்க … உங்க”

***

Series Navigation<< மிளகு – அத்தியாயம் பனிரெண்டுமிளகு அத்தியாயம் பதினான்கு >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.