மிதக்காமல் நிலத்தில் விழுந்த இலைகள்

“சாம்பனின் பாடல்” 

சாம்பனின் பாடல்

தன்ராஜ் மணி சிறுகதைகள்

தன்ராஜ் மணி இங்கிலாந்தின் கோல்செஸ்டர் பகுதியில் வாழ்பவர். பூர்விகம் சேலம். சேலத்தை மையமாகக் கொண்டு ஒரு சில கதைகளை முதலில் எழுதியவர். கடந்த சில வருடங்களாக அவர் எழுதும் கதைகளின் முதல் வாசகனாக இருந்து வருகிறேன். கதை எழுதுவது பற்றியும் அதைப் பற்றிய பின் கதைகள் குறித்து பேசுவதிலும் மிகவும் ஆர்வமுள்ளவர். பதாகை – யாவரும் பதிப்பகம் வழியாக 2021 ஆம் ஆண்டு வெளியான அவரது “சாம்பனின் பாடல்” தொகுப்பு அவர் கடந்த சில வருடங்களாக எழுதி வரும் சிறுகதைகளின் தொகுப்பு. அவர் ஆரம்ப காலத்தில் எழுதிய கதை முதல் அரூ அறிபுனை இலக்கிய போட்டியில் வென்ற கதை வரை பல விதமான கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.

தன்ராஜ் மணியின் கதையில் முதலில் நம்மைக் கவர்வது அவர் கதைகள் நடக்கும் தனித்துவமான இடங்கள். திருமலை மணவாள மாமுனிகளின் சபை, சேலம் புறநகர், மகிழம் எனும் கற்பனைக் கோள் என அவர் தேர்ந்தெடுக்கும் இடங்கள் ஒரு கதாபாத்திரமாகக் கதை நெடுக வலம் வரும். ரெண்டாவது, அவர் சுற்றி வளைக்காமல் சொல்ல வரும் கதைகளன். பெரிய இலக்கிய பீடிகைகளோ, கதை சொல்லும் உத்திகளோ இல்லாமல் மிக இயல்பாகக் கதைக்குள் நுழைந்து சொல்ல வேண்டியவற்றை காட்டிவிடும் திறமை மிக்கவர். தனித்தன்மை மிக்க அவரது தொகுப்பிலிருந்து சில கதைகளைப் பற்றி சில குறிப்புகள் பார்க்கலாம்.

குளிர் உறையும் கனல் – இத்தொகுப்பின் முழுமையான சிறுகதை என இக்கதையைக் கூறமுடியும். முடிவுக்கு அருகே தொடங்கும் கதை ஒரு சிறிய சம்பவம் வழியாக இரு இளைஞர்களின் வாழ்க்கையை வாசகர் முன் வைக்கிறது. பூடகமான சொல்முறை, கதை நெடுக வரும் மையப்படிமத்தின் குறிப்புகள், கச்சிதமான முடிவு என சிறுகதையின் இலக்கணத்தை மீறாமல் எழுதப்பட்டிருக்கு. சிறு நகர் இளைஞர்களின் கதை என்றாலும் இன்று பெரும்பான்மையான இந்திய இளைஞர்களின் குழப்பங்களை மையமாகக் கொண்டு கதை சொல்லப்பட்டுள்ளதால் கதாபாத்திரங்களின் வாழ்க்கை மீறிய ஒரு தரிசனத்தை கதை அடைய முற்பட்டிருக்கிறது. குருவி, செல்லு எனும் இரு நண்பர்கள் ஒரே வாழ்க்கையை வாழுகிறார்கள்.  இரு வேறு குணாதிசயங்களாகத் தொடங்கும் அவர்களது உறவு மெல்ல ஒருவர் மற்றொருவரை நிரப்பும் அதிசயத்தை அடைகிறது.  அதிகம் பேசாமல் ஆனால் திடமாக முடிவு எடுக்கும் செல்லு ஒரு புறம். குருவி அதிகம் பேசுவதோடு துரிதமாகச் செயலாக்கும் திறன் கொண்டவன். மிக இயல்பாக அவர்களாக கதைசொல்லியின் கடைக்குள் புதியவர்களாக நுழைந்து நீண்ட கால நண்பர்களாக மாற முடிகிறது. ஒருவரின் விதி மற்றொருவன் கையில் இருப்பது போல அவர்கள் ரெட்டையர்களாகச் செயல்படுகிறார்கள். வளரிளம் பருவத்தில் இருவரும் வழக்கமான இளைஞர்களாக இருக்கின்றனர். கேஸட் கடை வைத்திருக்கும் கதைசொல்லி மெல்ல கேபிள் சேனல் தொடங்கும் அளவுக்கு வளர்கிறார் – அதோடு தொடர்புடைய வளர்ச்சி இருவரின் மன இயைபில் வெளிப்படுகிறது.  ஒன்றாகப் படம் பார்க்கத் தொடங்குவது முதல் பீர் குடிப்பது வரை அவர்களுக்குள் இருக்கும் இயைபு கதையில் மிக நிதானமாகச் சொல்லப்பட்டிருக்கு. செல்லின் இறப்பை பிறர் இழப்பாகப் பார்த்தாலும், குருவியைப் பொருத்தவரை அது அவனில் ஒரு பகுதி இறந்தது போலத்தான். அதை மீட்டுக்கொண்டு வருவது அவனையே உயிறொடு தக்க வைப்பது போன்றொரு விஷயம். கதை சொல்லி இதை அறிந்திருந்தாலும் பிறரைப் போல நம்ப மறுக்கிறான். போதைப் பொருளின் மயக்கத்தினால் அடிமைப்பட்டுக் கிடப்பதாக எண்ணுவதில் கதை ஒரு திறந்த முடிவை எட்டுகிறது. மனிதனின் விழைவும் அவனது செயல்களுக்கும் இருக்கும் ஆழமான தொடர்பு இங்கு கேள்விக்குட்படுகிறது. செல்லு கூடவே இருப்பதான உணர்வை அடைவதால் குருவி போதைப்பொருளில் ஈடுபடுகிறான். அவனே சொல்வதைக் கூட பிறர் நம்புவதில்லை. குருவி விழைவது போதை தரும் சுகமா செல்லுடன் கழிக்கும் இனிமையா எனத் தெரியாத இடத்துக்கு வாசகரை கதை இட்டுச் செல்கிறது.

இத்தொகுப்பின் மற்றொரு நல்ல கதையாக ‘’அவன்” எனும் அறிவியல் புனைவு அமைந்துள்ளது. மனிதர்களை குணாதிசயம் படி பிரொபைல் செய்து அவர்கள் செய்ய நினைக்கும் குற்றங்களிலிருந்து சமூகத்தைக் காப்பாற்றும் எதிர்காலத்தில் கதை நடக்கிறது. உளவியல் ரீதியாக மனிதனின் குண மாதிரிகளைக் கொண்டு எதிர்காலத்தை வகைப்படுத்துவது என்பது மேற்கத்திய கணிப்பு முறை. லிண்டா குட்மேன் போல சூரிய கோள்களைக் கொண்டு மனிதர்களின் பல குணாதிசயங்களைப் பிரித்து அவர்களின் எதிர்காலத்தைக் கணிப்பது உளவியலுடன் நேரடியாகச் சம்பந்தப்படாத ஒன்று என்றாலும் இரு துறையிலும் நிரூபணம் ஆகாத பல இடைவெளிகள் உள்ளன. நவீன அறிவியல் தொடர்ந்து இந்த இடத்தைக் குறிவைத்து பல ஆய்வுத்துறைகளை உருவாக்கி வருகிறது. செயற்கை அறிவும் இயந்திரம் வழி கற்றலும் (Machine Learning) இன்று பல கணிப்பு மாதிரிகளை உருவாக்கி வருகின்றன. இந்த மாதிரிகள் எதிர்காலத்தைக் கணிக்க உதவும். அவற்றுக்குத் தேவையான பல கோடி தகவல்களைச் சரியாகத் தரும் போது இப்படிப்பட்ட செயலிகள் தங்களைப் புதுப்பித்து கொள்கின்றன. பரந்துபட்ட தகவல்கள், நுண் தகவல்கள் என ஆழவும் அகலவும் தரப்படும் தகவல் பொதுமூட்டை செயலிகளை புத்திசாலி ஆக்குகின்றன. இப்படிப்பட்ட செயலிகளை உருவாக்கி மனிதர்களின் எதிர்கால நடவடிக்கைகளை கணிக்கும் செயலியை சோதிக்கும் இருவரின் கதையாக ‘’அவன்’ எழுதப்பட்டுள்ளது. அவர்கள் பின் தொடரும் ஒருவர் கூடிய விரைவில் ஒருவரை குத்திக் கொலை செய்ய முயல்வார் என செயலி கணித்திருக்கிறது. ஒரு வாரத்துக்கும் மேலாக அம்மனிதரை அவர்கள் கேமிரா மூலம் கண்காணிக்கிறார்கள். சந்தர்ப்பம் அமைந்தும் அவன் கோபத்தை வெளிக்காட்டாதவனாக இருப்பதை இவர்களால் நம்ப முடியவில்லை. இதுவரை அவனது ப்ரொஃபைலை கணித்து வந்தபடி அவன் நடந்து கொள்ளாதது அவர்களது செயலியின் கோளாறு என நினைக்கிறார்கள். இதனால் அவர்களது ஆய்வு கூட ரத்தாகும் சூழல். இந்நிலையில் மனிதனின் கூட்டு நனவிலி எப்படி ஒரு சூழலைப் புரிந்து அதற்கு ஏற்ப புது அறிவைக் கற்றுக்கொள்கிறது எனும் நிலையில் அவனது மனம் கண்காணிப்பை அறிந்துகொண்டு விடும் சாத்தியத்தை கதை சென்று அடைகிறது. அறிவியல் சென்று சேராத ஒரு இடத்தில் நம் கான்சியஸ்னஸ் சென்று சேருவதைக் காட்டும் மிக நல்ல கதை. கூட்டு மனம் செயல்படும் விதம் குறித்த போதிய ஆய்வுகள் நடந்து வரும் வேளையில் எப்படி மனித மனம் அதையும் மீறிய ஒன்றாகவே எப்போதும் இருக்கிறது என்பதை கச்சிதமாகக் காட்டிய கதை. 

தன்ராஜ் மணியின் கதைகளில் காமமும் அது தொடர்பாகச் சமூகத்தில் நிறுவபடும் அடையாளங்களும் ஒரு முக்கிய பங்கு வகுக்கின்றன. “அணங்கும் பிணியும் அன்றே” எனும் கதை அத்தளத்தை மிக மெலிதாகச் சுட்டிக்காட்டுகிறது. சுதந்திர சிந்தனையாளராக இருக்கும் ஒரு பெண், தன் காம சுதந்திரத்தின் எல்லைகளையும் அசூயையும் கண்டு கொள்ளும் இடமாக கதை அமைந்துள்ளது. ஆண் பெண் உறவு என்பது கொடுக்கல் வாங்கல் மற்றும் அதிகாரத்தின் அழுத்தங்கள் நிறைந்த ஒன்றாக இருப்பதைப் பேசும் கதை.  காம சுகத்திற்காக பல ஆண்களுடன் பழகும் பெண் ஒருத்தி முதல் முறையாக அதில் ஒட்டியிருக்கும் அதிகாரத் துளியை ஸ்பரிசிக்கிறாள். இந்தியாவிலிருந்து தன்னுடன் வேலை பார்க்க வந்திருக்கும் ஒருவனைக் கைகொள்ள நினைக்கும் அவள் மீது மிகக கடுமையான வார்த்தையை வீசிச் செல்வதோடு அதன் தாக்கத்தை அறியாமல் கடக்கிறான் ஒரு ஆண். சட்டென இவளை ஒரு குமிழிக்குள் அடைத்துப் பார்த்து லேபிள் ஒட்டிவிட்டதை உணர்கிறாள். ஆண் – பெண் உறவில் இருக்கும் வெளிப்படையான அதிகாரம் இரு வேறு கலாசாரப் பின்னணி கொண்டவர்கள் சந்திக்கும் போது கவிழ்ப்பாக்கத்துக்கு உண்டாவது மிகவும் நன்றாகக் கையாளப்பட்டுள்ளது. அவசரமாக முடிக்கப்பட்ட கதையாக இருந்தாலும் இந்த உறவின் முக்கியமான பக்கத்தைக் காட்டிய நல்லதொரு ஆக்கம்.

“அன்னை” கதை குடும்ப சூழலில் அதிகாரமும் அன்பெனும் கடிவாளமும் எப்படி இணைந்து சிக்கல்களை உருவாக்குகின்றன என்பதைத் தொட்டுப்பேசுகிறது. பிரசவிக்க இருக்கும் பெண்ணைப் பார்த்துக்கொள்வதற்காக இங்கிலாந்து வரும் ஒரு தாயின் ஊசலாட்டத்தைப் பேசும் கதை. சிறு வயதிலிருந்து குடும்பத்தின் மீது அதிகாரத்தைக் காட்டிவரும் பாட்டி தன் மகள் வெளிநாடு சென்றதிலிருந்து சாப்பிட மறுக்கிறாள். தன் பெண்ணின் பிரசவத்துக்குத் துணையாக இருக்க முடியாமல் தனது அம்மா செய்யும் குழப்பங்கள் அவளுக்குப் புரியாமல் இல்லை என்றாலும் பெற்றவளைத் தவிக்க விடும்படியான திட மனசும் அற்றவளாக இருக்கிறாள். இத்தொகுப்பின் பலகீனமானக் கதையாக ஆகியிருக்க வேண்டிய ஒன்று பாவண்ணன்  மற்றும் அசோகமித்திரன் கதைகளில் மட்டுமே இருக்கும் குறிப்பமைதி மற்றும் சமநிலையான கூறுமுறையால் தப்பிக்கிறது.

அரூ போட்டியில் அறிபுனைப் பரிசை வென்ற “ஒழிவில் காலெமெல்லாம் உடனாய் மன்னி” இத்தொகுப்பின் முக்கியமான கதைகளில் ஒன்று. அறிவியல் புனைவுகள் தமிழுக்குப் புதிய வகை எழுத்தாகும். சுஜாதா, இரா.முருகன், ஜெயமோகன் எனும் தீவிர புனைவு எழுத்தாளர்களும் ஆர்னிகா நாசர் போன்ற வெகுஜன எழுத்தாளர்களும் அறிவியல் புனைவில் பல பாணிகளை முயன்றுள்ளனர். பொதுவாக நாம் அறியாத எதிர்கால உலகை வடிவமைத்து அதில் மனிதர்களின் சமூகக் கட்டமைப்பை சித்தரிப்பது அறிபுனையின் ஒரு வகை மாதிரி. அதே போல, எதிர்காலத்தில் மனிதர்கள் வேறு கோள்களுக்கு இடம் பெறும்போது அச்சூழல்களுக்கு ஏற்ப தங்களையும் சமூகத்தையும் தகவமைத்துக்கொள்ளும் கதைகளும் சுவாரஸ்யமானவை. இவ்விரு பாணிகளிலும் நாம் அறிந்த அறிவியலுக்கு நெருக்கமான தர்க்கங்கள் இயங்க வேண்டுவது மட்டுமன்றி நம் சமூக அமைப்பின் எதிர்கால சாத்தியங்களும் திறம்பட கையாளப்பட்டிருக்க வேண்டியது அவசியமாகும். 

தன்ராஜின் இக்கதையில் மகிழம் எனும் புது கோளில் மனிதர்கள் குடியேறி முன்னேறிய சமூகாக தங்களை வடிவமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இச்சமூகத்தில் பெண்களே முதன்மையானவர்கள். சமூகத்தின் தலைவர்கள். ஆண்கள் விந்து தானம் கொடுப்பதற்காக மட்டுமே வாழ்பவர்கள். தங்களுக்கு வேண்டிய ஆண்களுடன் இணைந்துகொண்டு விந்து பெறும் உரிமை பெண்களுக்கு உண்டு. அவர்களது கர்பப்பை கூட வெளியே தனியாக இருக்கும் அமைப்பாக உருவாக்கியுள்ளனர். பல காலத்துக்கு முன்னர் இவர்களது முன்னோர்களின் காலத்தில் ஆண் மைய சமூகம் இருந்திருக்கிறது. அதனால் ஏற்பட்ட சண்டைகள், பிளவுகளிலிருந்து விடுபட்ட சமூகமாக மகிழம் உருவாகி இருக்கிறது. அமுதனும் கனியும் ஒன்றாக வாழும் ஜோடி. அமுதன் ஏற்கனவே மணவிலக்கு ஆகி தனது மகனைப் பிரிந்து வாழ்பவன். அமுதனின் விந்து ஆண் மகனைத் தரிக்கும் என்பதால் வேறொருவரின் விந்தைக் கொண்டு பெண் குழந்தையை முதலில் பெற்றுக்கொள்ள வேண்டும் என கனி விரும்பகிறாள். காவல் கோட்டத்தின் மூத்த அதிகாரியான கனி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண் மகவைத் தரிக்கும் விந்துக்குச் சொந்தக்காரனை சந்திக்கும் ஏற்பாட்டை செய்திருக்கிறாள். மகிழத்தில் ஆண் இணையர்களுக்கு இதில் சொல்லும்படியான உரிமை இல்லை.  கனி விந்தளிக்க வருபவனின் பேச்சுக்கு மயங்குகிறள். அவர்கள் சந்திக்கும் நேரம் அங்கே ஆண்களுக்கு சம உரிமை வேண்டும் எனும் போராட்டத்தைக் காண நேர்கிறது. அப்போது முழு ஆண்கள் எனும் பாலினத்தைச் பற்றி பேசுகிறார்கள். கதை ஆண் பெண் சமமாக இருக்க இயலா சாத்தியத்தைப் பற்றிப் பேசுகிறது. விந்து அளிக்க வந்தவன் எழுபரிதி எனும் பழைய கால முழு ஆண்களின் அமைப்பிலிருந்து வந்தவன் என கனி அறிந்துகொள்ளும்போது அவளது எண்ணம் முழுவதும் அவன் எப்படி தான் ரசிக்கும்படி பேசினான் என்பதில் அமைந்திருக்கிறது. ஒரு வகையில் இம்முடிவினாலேயே கதை முழுமையாக வெற்றி பெறாதது போலத் தோன்றுகிறது. முழு ஆண் எனும் இனத்துக்கான ஏக்கம் பெண்களின் ஆழ்மனதில் இருக்கிறதா எனும் கேலள்வியை எழுப்பி ஆம் எனும் பதிலை சென்று சேர்த்திருக்கும் சாத்தியத்தை கதை திறந்து வைத்துள்ளது. இது ஒரு வகையில் குழப்பமான முடிவு தான்.  கதாசிரியர் ஏன் இப்படி ஒரு முடிவில் இக்கதையை நிறுத்திவிட்டார்? ஒரு வேளை, ஆண் மற்றும் பெண் எனும் இரு அழகியல் கொண்ட பாலினத்தவர்கள் எச்சமூக அமைப்பிலும் சமமாகப் பாவிக்க முடியாதவர்கள் எனும் முடிவுக்கு வந்திருக்கிறாரா? அப்படியே அது உண்மை என்றாலும் சமநிலைக்கான விழைவு தான் ஒரு சமூகத்தின் வடதுருவ நட்சத்திரம் இல்லையா?

ஒரு சமூக அமைப்பு ஆண் மையமாகவோ பெண் மையமாகவோ இருப்பதற்கும் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறுவதற்கும் ஒரு அழுத்தமான காரணம் இருக்கும். அது பெரும்பாலும் சமூகப்பாதுகாப்பு பொருளியல் தொடர்பானதாக இருக்கக்கூடும். கேரளாவில் ஒரு காலத்தில் பெண் மையச் சமூகமாக இருந்து இன்று ஆண் மையமாக மாறியதற்கு விக்டோரியக் காலனிய சிந்தனை ஒரு காரணமாக இருக்கலாம் இதே விதியை நாம் பழங்குடிச் சமூகத்தின் மீது போட்டுப்பார்க்க முடியாது. அங்கே ஒரு சமூகம் தழைப்பதற்கான காரணிகளும் அடிப்படைகளும் வேறாக இருக்கும். இப்படிப்பட்ட ஒரு திசையை நோக்கி கதை நகர்ந்திருந்தால் மகிழம் காட்டும் உலகம் வாசகர் மனதில் இன்னும் விரிவடைந்திருக்கும்.

தொகுப்பின் தலைப்புக்கதையான “சாம்பனின் பாடல்” ஒரு நாட்டார் பாடலுடன் தொடங்குகிறது. ஒரு மரபான நாட்டார் பாடலைப் போல வீரம், காதல், மண் வேட்கை, இயற்கை துதி எனத் தொடங்கி மிக விரிவான குலச்சாமியின் கதையைப் பேசுகிறது. இதுவும் எழுத்தாளர் எழுதிய பாடல் எனும்போது அவரது பல்சுவை ரசனை நமக்குப் புரியவருகிறது.  எளிமையான கதையாக இருந்தாலும் நம் மண்ணும் மரமும் மெல்ல நம் கண் முன் மறைந்து தேவைமுதல் வாதத்தை நோக்கிச் செல்லும் சித்திரத்தை கதை அளிக்கிறது. குலச்சாமி எனக் கொண்டாடப்பட்ட சிறு மர நிழல் கல் பல வீரப் போராட்டத்துக்குப் பின்னர் கிடைத்த இடம். குலத்தின் மூத்த குடி எனும் நிலையிலிருந்து இறங்கி அதன் தேவை மெல்ல மறைந்து வருடம் ஒரு முறை படையல் செய்தால் போதும் எனும் இடத்துக்கு வரும்போது மெல்ல அனைவரின் நினவிலிருந்தும் அது மறைந்துவிடுகிறது. உணர்வு நிலையில் மறைந்தபின்னர் தூல வடிவிலும் காணாமல் போய் ஒரு அகலச்சாலையாக மாறிவிடும் அவலத்தைப் பேசும் கதை. இது சாம்பனின் பாடல் மட்டுமல்ல அவனைப் போன்றவர்களின் ஓலம்.

ஒரு அழகான காதல் “வடிவாய் நின் வலமார்பினில்”. நரேன் யாமினியின் அத்தை மகன். சிறு வயதில் அவளது அத்தை யாமினியை மருமகள் எனக் கூப்பிடும்போதெல்லாம் அவளுக்குப் பிடிக்காது. ஆனால் நரேன் யாமினி காதலிக்கத் தொடங்கி வரதட்சணை காரணமாக யாமினி விலகிச் சென்றுவிடுகிறாள். உறவு முறைக்குள் திருமணம் என்பது குறைந்துகொண்டிருக்கும் காலத்தில் சிறு வயதிலிருந்து அப்படி திருமண சம்பந்தத்தை முன் வைத்துப் பேசுவதால் விளையும் சிக்கல்களை கதை அழகாககச் சுட்டிக்காட்டுகிறது.  இது நம் இந்திய சமூகத்தின் ஒரு பகுதி தான் என்றாலும் உறவுகளை வலுப்படுத்தும் வழியாகப் பலரும் இதைக் கைகொள்கிறார்கள். லட்சுமி இருக்குமிடத்தில் வரும் எந்த ஆணும் பெருமாள் தான் எனும் இடத்திற்கு கதை நகரும் போது ஒரு புது புதிறப்பு ஏற்படுகிறது. கதை வாசகர் மனதில் விரிவடைவதற்கும் இந்தப் பார்வையே காரணம். 

முதல் தொகுப்பு எனப் பார்க்கும்போது பெரும்பாலான கதைகள் நல்ல சிறுகதைகளுக்கான அடையாளமாக அமைந்திருப்பதை நிச்சயம் நாம் உணர முடிகிறது. சுவாரஸ்யமான கதைகளத்தை இலகுவான மொழியில் சொல்வது தன்ராஜுக்கு இயல்பாக வருகிறது. கதையின் கச்சிதத்தன்மை மீதும் அவர் அதிகம் ஆர்வம் கொள்பவராக இருக்கிறார். அதனால் கதை தானாகச் செல்லக்கூடிய இடங்களை அவரே தடை போடுகிறாரோ எனும் எண்ணமும் வராமல் இல்லை. சுதந்திரமாக அவர் எழுதும் கதைகள் தமிழில் தனித்த அடையாளத்தொடு அமையும் எனும் நம்பிக்கை இந்தத் தொகுப்பு வாசகர்களுக்கு நிச்சயம் அளிக்கும்.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.